- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
வெள்ளை நிற சட்டையும், காக்கி நிற பேண்ட்டும் கச்சிதமாய் பொருந்திருக்க, இயல்பாகவே அவனுடன் இருக்கும் கம்பீரத்துடன், தன் மனம் கவர்ந்த தன்னவளை பெண் பார்க்க போகிறோம் என்கின்ற பூரிப்பில் அழகு கூடி ஆணழகனாய் திகழ்ந்தான் ஆரி அர்ஜுனன்.வாசலிலேயே ஆரி அர்ஜுனன், அவனது தாய் தந்தை மற்றும் அவனின் நண்பனை எதிர் கொண்டு,
"எல்லாரும் வாங்க" என்று வரவேற்றது ஆரி அர்ஜுனனின் வருங்கால மாமியார் சாவித்ரி மற்றும் மாமனார் வைகுண்டராஜன் தான்.
இது கீழறையில் இருந்த யாத்ராவுக்கு தெளிவாகக் கேட்க,
"நான் பிடிக்கலைன்னு அவ்வளவு சொல்லியும் வந்திருக்கான்" என்று பல்லை கடித்தவளுக்கு ஆரி அர்ஜுனன் மீது என்ன தான் கோபமும், அவனை பற்றி என்னும் பொழுது ஒருசில கசப்பான நினைவுகள் வந்தாலும், கூடவே பெண்ணவளின் மனதின் ஓரம் அவளையும் அறியாமல், அவன் மீது விளங்க முடியாத ஒருவித உணர்வு சில நொடி வந்து போகும் மின்னலை போல, நொடி பொழுது வந்து, மின்னி மறைந்தது.
அறிமுகப்படலம் மற்றும் பேச்சு வார்த்தையெல்லாம் நல்ல படியாக முடிந்திருக்க, அனைவரும் சபைக்கு பெண்ணை அழைத்தனர்.
யாத்ராவின் வருகைக்காக மிக ஆர்வமாக காத்திருந்த ஆரி அர்ஜுனனுக்கு, அறைக்கதவை திறந்துகொண்டு தேவதை போல நடந்துவந்த தன்னவளை கண்டதும் இதயம் வேகமாக துடிக்க துவங்க, விழிகளில் காதல் வழிந்தோட பார்வையாலே பெண்ணவளை பருகினான்.
நீல நிறத்திலான புடவையில் புடவைக்கு ஏற்ப நகைகள் அணிந்து, அழகு பதுமையாக வந்தவளை கண்டும் அந்த காவலனின் இரும்பு இதயம் துடிக்காமல் இருக்குமா என்ன?? துடித்தது! காவலனும் காதலன் ஆனான் ! இரும்பிலும் மலர் மலர்ந்தது!
பாவையவளின் பிறை நுதலில் அழகாய் துயில் கொண்டிருந்த முடிக்கற்றை, சுண்டி இழுக்கும் காந்த விழிகள், விழிகளை சிங்காரித்த மயிலின் விரிந்த தோகைகளை போல அகன்று நீண்டிருந்த இமைகள், நுனியில் சிவந்திருந்த அளவான நாசி, ஆரி அர்ஜுனனின் இரும்பு இதயத்தை திருடிய ஒற்றைக்கல் பதித்த வெள்ளை நிற மூக்குத்தி, ஆணவனின் திமிரை அடக்கும் அமிர்தம் சிந்தும் செவ்விதழ்கள் என அழகுச் சிலையென காட்சியளித்த தன்னவளை, உச்சி முதல் பாதம் வரை அர்ஜுனனின் விழிகள் தனக்கே தனக்கான உரிமையுடன் தழுவிச் சென்றன.
ஆரி அர்ஜுனன் தன்னை வைத்த கண் வாங்காது, பார்த்து கொண்டிருந்ததை கண்டு முதலில் மிரட்சியுடன் அவனை பார்த்த யாத்ரா, பின்பு அவனை பார்த்து முறைக்கவும், ஆரி அர்ஜுனனோ யாரும் பார்க்காது அவளை பார்த்து கண் சிமிட்ட, மிரண்டு போனவள், சட்டென்று தலை குனித்துக்கொண்டாள்.
"காதல், கல்யாணமே வேண்டாம்னு இருந்த நீ, எப்படி லவ் பண்ணினனு இப்போ புரியுது அர்ஜுனா அண்ணா.
பொண்ணு அழகா இருந்தா யாருக்கு தான் புடிக்காது. உண்மையாவே அண்ணி ரொம்ப க்யூட்டா இருக்காங்க" என அர்ஜுனனின் சித்தப்பா மகள் காயத்ரி அவனது காதில் கூறி முடிக்கவும்,
"நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணை தான் பார்த்திருக்க அர்ஜுனா, ரொம்ப நல்ல பொண்ணா தெரியுறா. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு" என்று ஆரியின் தாய் ஜானகியும் தன் மகனிடம் தனது வருங்கால மருமகளை பற்றி புகழ்ந்தார்.
அர்ஜுனன், அவனின் சித்தப்பா மற்றும் அவனது தந்தை வைத்தீஸ்வரன், யாத்ராவின் தந்தை வைகுண்டராஜனுடன் நட்பாக பேசிக்கொண்டிருக்க, ஜானகி தனது வருங்கால மருமகளை தன் அருகில் அழைத்து அமரவைத்து, அன்பாக பேசிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு வந்திருந்த ஆரியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவனான அகரன் அனைவரின் சம்பாஷணைக்கிடையில் சிறு செருமலுடன்,
"பெரியவங்க நீங்களே பேசிட்டு இருந்தா எப்படி? மாப்பிளைக்கு பொண்ணு கூட ஏதோ கொஞ்சம் தனியா பேசணுமாம். வீட்ல இருந்து கிளம்பும் பொழுதே சொல்லிட்டான்" என கூறி ஆரியை பார்த்து கண்ணடிக்க,
இதைக் கேட்ட ஆரி அர்ஜுனனோ, 'நான் எப்போடா சொன்னேன்' என்பது போல நண்பனை பார்க்க, தன் நண்பனின் பார்வையை புரிந்து கொண்ட அகரனோ ஆரியின் தோளை தட்டி, "நடிக்காத டா போ போ" என்று ஆரிக்கு மட்டும் கேட்கும் குரலில் அவனை பார்த்து கேலியாக சிரித்தான்.
இதுக்காக தான் காத்திருந்த யாத்ராவோ 'ஹப்பா நல்ல வேலை இவனே சொல்லிட்டான். இப்போ தான் இவன் உருப்படியா ஒரு காரியம் பண்ணியிருக்கான். இதுக்காக தான் நான் காத்துகிட்டு இருந்தேன். அவன் வாயாலையே என்னை வேண்டாம்னு சொல்ல வைக்கிறேன், எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி காட்டுறேன்' என தனக்குள் எண்ணியவள், தன் தாய் தந்தை ஆரியை அழைத்து செல்ல கூறியதும் நமட்டு சிரிப்புடன் எழுந்து மாடியில் இருக்கும் தன் அறைக்குள் சென்றாள்.
ஆரியோ, "நண்பேன்டா" என யாருமறியாமல் தன் நண்பனை பார்த்து கண்சிமிட்டிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றான்.
பெண்ணவளின் மென்னடையில் சற்று விலகிய சேலை, மறைந்திருந்த அவளது பொன்னிடையை தெளிவாய் காட்டி, பின்னிருந்து வந்தவனின் உணர்வகளை தன் பக்கம் இழுக்க, தன்னை மறந்து தன்னவளின் அழகை ரசித்த அர்ஜுனன், யாத்ரா அறையின் கதவை திறப்பதற்குள் பின்னால் இருந்து அவளது இடையில் தன் ஐவிரல் பதித்தபடி அவளை அப்படியே தன் மார்போடு சாய்த்து, இறுக்கமாக அணைத்தவன் அதிர்ச்சியில் உறைந்திருந்தவளின் காதில் தன் மூச்சு காற்று தீண்ட,
"அழகி டி நீ" என கிசுகிசுத்தபடி அவள் இடையில் விலகி இருந்த சேலையை சரி செய்து அவளை தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தினான்.
அவளோ அவனது இந்த திடீர் செய்கையில் சர்வமும் அடங்கிப்போக முகத்தில் புது ரெத்தம் பாய பேச்சு மூச்சின்றி நிற்க அவனோ,
"நான் அழகா இருக்கேன்னு எனக்கு தெரியும் கண்ணம்மா, உனக்கு வேணும்ன்னா நான் இங்கையே இப்படியே நிக்கிறேன் நீ என்னை பார்த்துட்டே இரு, எனக்கு ஓகே தான் அம்முக்குட்டி" என்று விஷமமாக சிரித்தபடி தன் மார்புக்கு குறுக்கே கைகட்டிகொண்டு நிற்க,
முதலில் அவனது பேச்சு புரியாமல் விழித்தவள், பின்பு அவனது கேலி உணர்ந்து அவனை தீப்பார்வை பார்த்து,
"அம்முக்குட்டி ஆமை குட்டின்னு சரியான லூசு" என்று முணுமுணுத்தவள், கதவை திருந்து உள்ளே செல்ல ஆரியோ அவளது தீப்பார்வையை தனது சிறு புன்னகையால் தட்டிவிட்டுவிட்டு தன்னவளின் அழகை தன் விழிகளினாலே அள்ளிப் அள்ளிப்பருகினான், ஆனால் அவனது காந்த விழிகளில் கொட்டிக்கிடந்த காதலில் தவறாய் கூட சிறு கபடம் தெரியவில்லை .
அர்ஜுனன் உள்ளே நுழைந்ததும் அவனை முறைத்தபடி யாத்ரா கதவுக்கு தாழிட, பெண்ணவளே கதவை சாற்றி தாழிட்டதில் குழப்பமடைந்த அர்ஜுனன்,
'கதவை லாக் பண்ணிட்டு இருக்கா இவளுக்கு என்னை பார்த்தாலே புடிக்காதுனு புலம்புவா இப்போ ஏன் லாக் எல்லாம் பண்ணிட்டு இருக்கா, இவ பார்வையே சரியில்லையே' என்று தன் மனதிற்குள் எண்ணியவன், யாத்ராவை புருவம் சுருக்கி பார்க்க அவளோ,
"டார்லிங் மறைஞ்சி இருந்தது போதும் வெளிய வா" என ஆரியை பார்த்து ஏளனமாக நகைத்தபடி கூறினாள்.
அப்பொழுது அறைக்கு உள்ளே இருந்து ஒருவன் தயங்கியபடி வெளியே வர, வேகமாக சென்று அவனது கையை பிடித்து தன் பக்கம் இழுத்தவள்,
"வாங்க கார்த்திக், ஏன் வெட்கப்படுறீங்க?" என்று வலுக்கட்டாயமாக அந்த புதியவன் கார்த்திக்குடன் கரம்கோர்த்து,
"நான் அவ்வளவு சொல்லியும் நீங்க நம்பலைல, பாருங்க அதான் என் காதலனை நான் கூட்டிட்டு வந்துட்டேன், இப்பவாவது நம்புறீங்களா, தயவு செஞ்சி கல்யாணத்தை நிப்பாட்டுங்க ஆரி. எனக்கு உங்க மேல கொஞ்சம் கூட விருப்பம் இல்லை" என்றாள் திடமாக.
ஆனால் இதற்கெல்லாம் கொஞ்சமும் அசராத அர்ஜுனனோ,
"ஓ இது தான் உன் காதலனா" என நாடியை நீவியபடி அவர்களை பார்க்க, ஆரியின் பார்வை கார்த்திக்குடன் கை கோர்த்தபடி நின்ற யாத்ரா மேல் படிந்து மீண்டும் கார்த்திக்கிடம் மீண்டது.
"ஆமா" என யாத்ராவும் விடாமல் அழுத்தமாக கூறினாள்.
"ஏன் உன் காதலன் சார் பேச மாட்டாங்களா" என்ற அர்ஜுனனின் பார்வை கார்த்திகை துளைத்தெடுக்க, கார்த்திக்கின் கால்கள் தானாக நடுங்கவும், கார்த்திக்கை முறைத்தவள் ஆரியிடம்,
"இப்படி நீங்க முறைச்சு முறைச்சு பார்த்தா யார் தான் உங்க கிட்ட பேசுவா" என்றாள் வெடுக்கென்று.
அப்பொழுது அர்ஜுனனோ,
"ஓ அப்போ பாசமா பேசிட்டா போச்சு" என்றவன் தன் முதுகில் சொருகி இருந்த பிஸ்டலை எடுத்தது தான் தாமதம் அதற்குள் யாத்ராவின் தற்காலிக காதலன் சட்டென்று கீழே விழுந்து ஆரியின் கால்களை பற்றி,
"சார் எனக்கு எதுவும் தெரியாது, எனக்கும் என் அத்தை பொண்ணு மதனாவுக்கும் கல்யாணம்ன்னு சின்ன வயசுலே முடிவு பண்ணிட்டாங்க, நான் அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். நான் யாத்ராவோட ஃப்ரண்ட் மட்டும் தான். அன்னைக்கு எங்க கூட இன்னொரு பொண்ணு இருந்தாளே மதனா அவ கூட தான் கல்யாணம், மதனா கூட உள்ள தான் ஒளிஞ்சிட்டு இருக்கா" என்றதும் யாத்ரா கோபத்தில் பல்லை கடிக்க உள்ளே இருந்து யாத்ராவின் தோழி கார்த்திக்கை எண்ணி தலையில் அடித்தபடி வெளியே வர, ஆரியின் பார்வை பெண்கள் இருவரையும் பார்த்துவிட்டு கீழே தன் கால்களை பிடித்து கொண்டு கிடந்த கார்த்திக்கிடம் மீளவும் பதறியன்,
"சார் சத்தியமா தான் சொல்றேன். யாத்ரா தான் நடிக்க கூப்பிட்டா உதவி பண்ணலாம்னு வந்தேன். ஆனா நீங்க தான் மாப்பிள்ளைனு அவங்க ரெண்டு பேரும் என்கிட்டே சொல்லவே இல்லை, மத்தபடி நான் அவளை லவ் எல்லாம் பண்ணல, என்னை எதுவும் பண்ணிடாதீங்க" என கார்த்திக் அனைத்தையும் உளறி கொட்ட, இவர்களின் சிறுபிள்ளை தனமான விளையாட்டையும், பயத்தில் அவர்கள் முகம் வியர்க்க நின்றிருந்த விதத்தையும் பார்த்த அர்ஜுனன் உள்ளுக்குள் சிரித்துவிட்டு வெளியே கோபமாக முகத்தை வைத்து கொண்டு,
"என் மூடு மாறுறதுக்குள்ள கிளம்புடா" என போலியாக மிரட்ட, கார்த்திக் மதனாவை அழைத்து கொண்டு தப்பித்தால் போதும் வெளியேற, மதனாவோ போக வேண்டாம் என பாவமாக கண்களாலே செய்கை செய்யும் தன் தோழியை பார்த்து ‘பயப்படாதே' என செய்கை செய்தவள் வேறு வழியின்றி கீழே சென்றாள்.
தயங்கி தயங்கி கீழே வந்தர்வர்களை பார்த்து சாவித்ரி,
"ஏய் நீங்க மேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க உங்களை காணும்னு நான் தேடிட்டு இருந்தேன்" என்று கேட்டார்.
தங்களையே பார்த்து கொண்டிருக்கும் அனைவரையும் பார்த்து அசடு வழிந்த கார்த்திக்,
"அது ஒன்னும் இல்லை ஆன்டி எப்படியும் ரெண்டு பேரும் தனியா பேசிக்க மாடிக்கு வருவாங்கனு தெரியும் அதான் சின்னதா பிரான்க் பண்ணலாம்னு" என்று சிரித்தான்.
"உனக்கு எல்லா விஷயத்துலையும் விளையாட்டு தான் டா, வாங்க ரெண்டு பேரும் வந்து உக்காருங்க" என்ற சாவித்ரி அனைவரையும் பார்த்து,
"இவன் கார்த்திக், இவ மதனா ரெண்டு பேரும் பக்கத்து வீடு தான். நாங்க சென்னைக்கு வந்ததுல இருந்து இவங்க குடும்பம் எங்களுக்கு ரொம்ப க்ளோஸ். கார்த்திக், மதனா, யாத்ரா மூணு பேரும் அவ்வளவு தோஸ்து சம்பந்தி. மதனாவும் கார்த்திக்கும் முக்கால்வாசி நேரம் இங்க தான் இருப்பாங்க. இவங்களும் என் பிள்ளைங்க தான்" என்று கூறி அவர்களை ஆரியின் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தினார்.
யாத்ராவோ அர்ஜுனனிடம் சிக்கிக்கொண்டதில் தன் திட்டம் எல்லாம் வீணாய் போன கவலையுடன் அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்தபடி நிற்க,
"அவன் உன் லவ்வரா" யாத்ராவின் முகத்தை ஆழ்ந்து பார்த்தபடி கேட்டான் அர்ஜுனன் .
"ஆமா" அவளோ வேண்டுமென்றே தன் பற்களை கடித்தபடி கூறினாள்.
"ஓ அப்படியா?" என தன் புருவத்தை உயர்த்தியவன், அவளை நோக்கி அடியெடுத்து வந்தபடி கேட்டான் .
Last edited:
Author: Naemira
Article Title: அத்தியாயம் 1
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் 1
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.