Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 10

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
தன் ஜீப்பில் இருந்து இறங்கிய ஆரி வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான்.

அப்பொழுது, "வா டா வா, இப்போ சந்தோஷமா உனக்கு" என்று ஆரி வந்ததும் ஜானகி அவனிடம் கோபமாக கேட்க, 'யாத்ரா காணாம போனதில எனக்கு என்ன சந்தோஷம்?' என்று எண்ணியவன் தாயின் குற்றச்சாட்டில் குழப்பமுற்று,

"ம்மா என்னாச்சு? யாத்ரா எங்க?" என்று வினவினான்.

"ஒன்னும் தெரியாத மாதிரி கேட்காத டா, எல்லாத்துக்கும் நீ தான் காரணம், அவ கிட்ட நீ தான் ஏதோ பேசி சண்டை போட்ருக்க" என்று மகனிடம் சீறிய ஜானகி, தன் கணவரை ஏறிட்டு,

"அவ முகமே சரியில்லைங்க, ஃப்ரண்ட்ஸ தான் பார்த்துட்டு வரேன்னு சொன்னா, முகம் வாட்டமா இருந்துச்சு அதான் அனுப்பி வச்சேன், கடைசியா பேசும் பொழுது கூட கோவில் வந்தேன் கிளம்பிடுறேன்னு சொன்னா, அவ சொன்ன நேரத்துக்கு கிளம்பியிருந்தா கூட அப்பவே வந்திருக்கணும், ஃபோன் வேற ஸ்விச் ஆஃப்ன்னு வருது" என்று யாத்ரா பற்றிய கவலையை பதற்றத்துடன் கணவரிடம் முறையிட்டார்.

மனைவியின் பயத்தை உள்வாங்கிக்கொண்ட வைத்தீஸ்வரன்,

"சரி நீ கொஞ்சம் பொறுமையா இரு ஜானு, இந்த விஷயத்தை அப்புறம் பேசிக்கலாம், முதல்ல யாத்ராக்கு என்னாச்சுன்னு பார்ப்போம்" என்றவர் அழும் மனைவியை சமாதானம் செய்தபடி ஆரியை பார்க்க,

"அம்மா நீ பயப்படாத, யாத்ரா தைரியமான பொண்ணு, ஃபோன்ல பேட்டரி இருந்திருக்காது அதான் ஸ்விச் ஆப் ஆகியிருக்கும், இப்போ வந்திருவா நான் பார்த்துகிறேன்" என்ற ஆரி தன் தந்தையிடம்,

"அம்மாவ பார்த்துக்கோங்க ப்பா, நான் என்னன்னு பார்த்துக்கிறேன்" என்று கூறிவிட்டு தன் ஜீப்பில் ஏறி, உடனே தன் டெக்கினிகள் டீமிற்கு அழைத்து, யாத்ராவின் அலைபேசியின் எண்ணை கொடுத்து, இறுதியாக எந்த டவரின் கீழ் அலைபேசி செயலில் இருந்தது, என்பதை கண்டறிய சொல்லி கேட்டுக்கொண்டு, அந்த இடத்தை நோக்கி விரைந்தான்.

'பயப்பட வேண்டாம், நான் பார்த்துக்கொள்வேன்' என்று வீட்டினர் முன்பு கூறியவனின் மனம் இப்பொழுது தனிமையில், ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது.

உடனடியாக தன்னவளை பார்த்துவிட வேண்டும் என்று மனம் பேயாட்டம் போட, தனது ஜீப்பை அதிவேகத்தில் செலுத்தியப்படி, உடனே மதனாவுக்கு அழைத்து அவள் அட்டென்ட் செய்வதற்காக காத்திருந்தவன்,

'ஒன்னும் இல்லை வந்திட்டு தான் இருப்பா, தேவையில்லாம டென்ஷன் ஆகாத ஆரி' என்று தனக்கு தானே சமாதானம் கூறி கொண்டிருக்கும் பொழுதே, ஆரியின் இதயம் வேகமாக துடிக்க, ஏன் இப்படி மனம் அடித்து கொள்கிறது? என்று அவன் பதறி கொண்டிருக்கும் பொழுதே, அழைப்பை ஏற்ற மதனாவிடம், யாத்ரா எப்பொழுது வந்தாள்? எப்பொழுது கிளம்பினாள்? என்பதை ஆரி கேட்க, அவனுக்கு பதில் கூறிய மதனா, ஆரி அழைப்பை துண்டிக்க போகவும்,

"என்னாச்சு அண்ணா? யாத்ரா நல்லா இருக்காள்ல" என ஆரியின் குரலில் தெரிந்த பரிதவிப்பை உள்வாங்கியபடி கேட்டாள்.

ஆனால் அவளுக்கு இப்பொழுது பதில் சொல்லும் நிலையிலா அவன் இருக்கிறான்? மதனாவுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாது நெற்றியை நீவியவன்,

"மதனா கொஞ்சம் எமெர்ஜென்சி யாத்ரா இன்னும் வீட்டுக்கு வரல, அதான் தேடிட்டு இருக்கேன் இப்போ பேச முடியாது" என்றான்.

அதை கேட்டு பதறிய மதனா,

"அண்ணா அவ என் வீட்டை விட்டு போகும் பொழுது கொஞ்சம் கோபமான தான் போனா" என்றவள், ஆரி காரணம் கேட்கவும், தயங்கியபடி யாத்ரா நந்தினியிடம் பேசியது, அதற்கு ஆரி அவளை அடித்தது, இதற்காக தானும் யாதரவிடம் சண்டை போட்டது, என நடந்தவற்றை கூற, அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, நேற்று இரவை எண்ணி பார்த்தவன்,

'கூட இருந்து எவ்ளோ சண்டையும் போட்டு தொலைச்சிருக்க வேண்டியது தான, இப்போ எங்கடி போன பைத்தியக்காரி, படுத்துற டி' என்று மனதிற்குள் தன்னவளை திட்டிவிட்டு, "உன் ஃப்ரண்ட என்ன பண்றதுனே தெரியல மா" என்று மதனாவிடம் வாய்விட்டே புலம்பியவன், பின்பு தன்னை நிலைப்படுத்திக்கொண்டு,

"மதனா, யாத்ரா கால் பண்ணினா உடனே எனக்கு கூப்பிட" என்று கூறினான்.

அப்பொழுது ஆரி தன் அழைப்பை அணைக்கவும், அவன் இதயத்தில் ஒருவித வலி மோசமாக தாக்க, ஆரி முதன் முதலாக பயம் கொண்டு தன்னவளுக்கு ஏதும் ஆகிருக்குமோ?தவறான முடிவு ஏதும் எடுத்திருப்பாளோ? என்று கலங்கி தவித்தான்.

அந்நேரம் ஆரியின் கண்கள் லேசாக கலங்கும் பொழுதே, அவனது அலைபேசிக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வர, புருவம் சுருக்கி சிந்தித்தவன், அடுத்த நொடி அழைப்பை ஏற்க, எதிர்முனையில் பேசிய ஒரு ஆண்,

"அர்ஜுனன் சார்ங்களா"

"ஆமா நீங்க"

"வணக்கம் சார், s8 ஆதம்பாக்கம் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் பேசுறேன் சார், மேடம GHல அட்மிட் பண்ணிருக்கோம் கொஞ்சம் சீக்கிரமா வர்றீங்களா" என்று அவர் சொல்லி முடிக்கவும் பயந்து போன ஆரி,

"என்னாச்சு??" என்று கேட்க, ஆரி அர்ஜுனனின் குரலில், அவன் முயன்று மறைத்தும், ஒரு வித பதற்றம் எட்டி பார்த்தது.

"சார் நீங்க பயப்பட வேண்டாம். அவங்க ஆட்டோவுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும் பொழுது திருடன் ஒருத்தன் அவங்க கழுத்துல கடந்த தாலிய பிடிங்கியிருக்கான், மேடம் போராடியிருக்காங்க, அந்த ஆளு மேடமை கீழ தள்ளிவிட்டுட்டு பைக்ல எஸ்கேப் ஆக பாத்திருக்கான். பொதுமக்கள் தான் புடிச்சி வச்சி, எங்களுக்கு தகவல் கொடுத்தாங்க, நாங்க அங்க வந்தோம்.

கீழ விழுந்ததுல தலையிலையும் கைலையும் காயம் கொஞ்சம் அதிகமா பட்டிருந்ததுல மயங்கிருந்தாங்க அதான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கோம். இப்போ மேடம் கண் முழிச்சிட்டாங்க" என அவர் மூச்சு விடாமல் கூறி முடிக்க, அவர் GH யில் அட்மிட் பண்ணிருப்பதாக கூறிய மறுநிமிடமே தனது ஜீப்பை ஹாஸ்பிடல் நோக்கி செலுத்தியிருந்த ஆரி, பத்தே நிமிடங்களில் மருத்துவமனை வந்தடைந்தான் .

தன் மனைவிக்காக ஆரி துடிப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. 'எவனோ ஒருவன் அவள் தாலியை பிடுங்க வந்தானாம், இவள் போராடினாளாம், பைத்தியக்காரி!' என மனதிற்குள் மனைவியை எண்ணி பல்லை கடித்தவன், அடக்கப்பட்ட கோபத்துடன் உள்ளே நுழைந்தான்.

அவன் வந்த வேகத்தை பார்த்து ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் ஓடி வந்து சல்யூட் அடித்துவிட்டு,

"சார் மேடம்க்கு உள்ள ட்ரீர்ட்மெண்ட் நடக்குது" என்று கூற,

"யாரு? எத்தனை பேர்?? என்ன மோட்டிவ்??" என ஆரி நடந்தபடியே கேள்விகளை அடுக்க,

"ரெண்டு பேர் சார், காலேஜ் பசங்க பெருசா மோட்டிவ் எதுவும் இருக்கிறது போல இல்லை, காசுக்காக பண்ணிருக்காங்க, மூணு ஏரியால இதுல போல பண்ணிருக்காங்க" என அவர் கூறவும் ஆரி அவரிடம்,

"FIR போட்டாச்சா" என்று கேட்க, "ஆமா சார்" என்று சொல்ல,

"சரி" என்றவன் அவருக்கு விடை கொடுக்க,

"யஸ் சார்" என சல்யூட் அடித்தபடி அந்த சப் இன்ஸ்பெக்டர் அங்கிருந்து சென்றார்.

ஆரி யாத்ரா இருக்கும் அறையை நெருங்கிய பொழுது அவள் ரத்த கரை படிந்த ஆடையுடன் தலையில் மற்றும் கையில் போட்ட கட்டோடு உடல் லேசாக வெடவெடக்க அமர்ந்திருந்தாள்.

அப்பொழுது செவிலிய பெண் ஒருவள் யாத்ராவின் காலில் உள்ள காயத்தை சுத்தப்படுத்த, வலி பொருக்காது, "ஆ" என்று அவள் கத்தியே விட்டாள்.

வலியில் கத்தியவளை கண்டு துடித்து போன ஆரி, "ஹெலோ மெதுவா பண்ணுங்க மா" என்றபடி விரைந்து வந்து தன்னவளின் முகத்தை தன் கையில் ஏந்தியவன்,

"வலிக்குதா?" என்று கேட்டான்.

"ம்ம்" என அவள் வலியில் முகத்தை சுளித்தபடி சொல்லவும், தன்னவளின் முகத்தை நிமிர்த்தி தன் நெஞ்சோடு அழுத்தியவன், அவளது உச்சந்தலையில் தன் தாடையை அழுத்தமாக பதித்து தன்னவளை தன்னோடு நெருக்கமாக அணைத்து வைத்துக்கொண்டான் ஆரி.

வேகமாக துடிக்கும் அவனது இதயத்துடிப்பு அவனது மார்போடு புதைந்திருந்தவளது செவிகளுக்கு தெளிவாக கேட்க, 'இவன் தனக்காக துடிக்கிறானா என்ன?!' அந்த நிலையிலும் யாத்ராவுக்கு தன்னவனை எண்ணி ஆச்சரியமாக இருந்தது.

சில நிமிடங்களுக்கு பின்பு கட்டு போட்டு முடிந்ததும் யாத்ராவை அழைத்துக்கொண்டு ஆரி அவன் வீட்டிற்குள் நுழைய, அவர்களுக்காக ஏற்கனவே காத்திருந்த யாத்ரா மற்றும் ஆரியின் பெற்றோர்கள் அனைவரும் அவர்களிடம் வந்து நடந்ததை பற்றி விசாரித்தனர்.

அவள் அணிந்திருந்த உடை ரத்தத்தால் நனைந்து காய்ந்து போய் இருக்க, தன் மகளை அப்படி கண்டதில் சாவித்ரியின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது. ஜானகியும் தன் மருமகளை அப்படி பார்த்ததில் மிகுந்த வருத்தம் கொண்டார்.

பிறகு துவண்டு போய் இருந்தவளை ஹாலில் இருந்த சோபாவில் மெல்ல அமரவைத்த ஆரி, அவள் குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்க, அதை மறுக்காமல் வாங்கி பருகியவளை மெல்ல கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு தங்களின் அறைக்கு கொண்டு சென்று படுக்கவைத்த ஆரி,

"கொஞ்ச நேரத்துக்கு எழுந்து நிற்காத, மயக்கம் வரும். நீ படுத்து ரெஸ்ட் எடு. நான் உனக்கு சாப்பாடு கொண்டு வரேன்" என்றவன் வேறு எதுவும் பேசாமல் கீழே வந்தான்.

மகளுக்கு இப்படி நடந்துவிட்டது என்று அறிந்ததும் பதறி கொண்டு இங்கு வந்த சாவித்திரியும் வைகுண்டராஜனும், அவளை இந்த நிலையில் பார்த்ததும் மிகவும் துடித்து, யாத்ராவை எண்ணி வருத்தப்பட்டவர்கள் ஜானகியிடம்,

"அண்ணி கொஞ்ச நாளைக்கு யாத்துவை நாங்க எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா?? காயம் சரியாகுற வரைக்கும் அவ அங்க இருக்கட்டுமே" என சிறு தயக்கத்துடன் கேட்ட்டனர்.

அதற்கு, "அட இதை நீங்க கேட்கணுமா, தாராளமா கூட்டிட்டு போங்க" என்று ஜானகி கூறி கொண்டிருக்கும் பொழுதே அங்கே வந்த ஆரி,

"அதெல்லாம் எதுவும் வேண்டாம்" என்று உடனே மறுத்தவன் சாவித்ரியிடம்,

"அத்தை நானே யாத்ராவை பார்த்துகிறேன்" என ஒருவித கண்டிப்புடன் கூறினான்.

சாவித்திரியோ, "ஆனா மாப்பிள்ளை" என்று தயங்கவும்,

"இப்படியான நேரத்துல அவளை உங்ககிட்ட அனுப்புறதுல எனக்கு விருப்பம் இல்லை அத்தை. நானே அவளை பார்த்துக்குவேன் நீங்க கவலை படாதீங்க" என்று ஆரி உறுதியுடன் கூற, தன் மகள் மேல் ஆரி கொண்டுள்ள அன்பை எண்ணி உள்ளம் நெகிழந்த சாவித்ரி, அதன் பிறகு மறுப்பாக எதுவும் கூறவில்லை.

ஆரியும் மென்னகையுடன் அவர்களை கடந்தவன், உணவு தட்டுடன் மாடிக்கு செல்ல ஜானகி சாவித்ரியிடம்,

"விடுங்க அண்ணி அவன் சொல்றதும் சரி தானே, நானும் கூட இருக்கேன்ல, நாங்க பார்த்துக்குறோம் நீங்க பதற்ற பட வேண்டாம்" என்று சொல்ல யாத்ராவின் பெற்றோர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

அவர்களை பொறுத்தவரை தங்களின் மகள் மருமகனுடம் சேர்ந்து பழையதை மறந்து சந்தோஷமாக வாழவேண்டும், எனவே ஆரியும் அவனது வீட்டினரும் யாத்ரா மீது காட்டும் அன்பில் நிம்மதி அடைந்தவர்கள், யாத்ராவிடம் சொல்லிவிட்டு நிம்மதியாக வீட்டிற்கு கிளம்பினார்கள்.

கதவை சாற்றிவிட்டு உள்ளே வந்த ஆரி, கட்டிலில் உலர்ந்த கொடி போல படுத்திருந்த தன் மனைவியை தான் கண்டான். கண்கள் மூடியிருக்க மிகவும் சோர்ந்து போய் படுத்திருந்தாள். வேகமாக யாத்ராவை நெருங்கியவனுக்கு அவளை பார்க்க பரிதாபமாக இருந்தாலும், கோபம் தான் வந்தது முயன்று முயன்று பார்த்தவன் தன் ஆத்திரத்தை அடக்க இயலாது,

"யாத்ரா" என சத்தத்துடன் அழைக்கவும் திடுக்கிட்டு நிமிர்த்தவள் அவனை மிரட்சியுடன் பார்த்தாள்.

'ஆரி கண்ட்ரோல், பயப்படுறா ப்ளீஸ் கோபப்படாத டா' என தனக்குள்ளே மந்திரம் போல சொல்லிக்கொண்டவனுக்கு எவ்வளவு முயற்சித்தும் கோபம் மட்டும் மட்டுப்படவில்லை, அவளை பார்க்க பார்க்க வரும் சினத்தை கட்டுப்படுத்த முடியாதவன்,

"தாலிய பிடுங்கினா கழட்டி அவன் மூஞ்சுலயே போட வேண்டியது தானே, அத விட்டுட்டு இந்த சாகசம் ரொம்ப அவசியமா??" கோபமாக தான் வினவினான், ஆனால் அதில் கணக்கிட முடியாத காதல் இருந்தது.

"தாலிய எப்படி கழட்ட முடியும் ??" சோர்வுடன் ஆரியின் விழிகளை நோக்கி கேட்டாள். சில நொடிகள் தான் ஆனாலும் இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்றாய் பின்னிக்கொண்டன.

"நான் உயிரோட தான இருக்கேன், படிச்சிருந்தும் ஏன் முட்டாளா இருக்க, உயிர் போனா திரும்ப வருமா" அவளது முட்டாள்தனமான பதிலில் கத்திய ஆரி, அவளது உடலில் தெரிந்த அதிர்வை கண்டு 'நான் வேண்டாம் நான் கட்டின தாலி மட்டும் வேண்டுமோ' என்று தான் சொல்லவந்த வார்த்தைகளை மிகவும் சிரமப்பட்டு சொல்லாமல் கட்டுப்படுத்திகொண்டவன், தன் சிகையை கோதி நீண்ட பெருமூச்சை வெளியிட்டு அவளை பார்த்தான்.

அவளோ " --------------- " பேசாமல் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

"இங்க பார்" என்று அவளது அருகில் வந்தவன் அவள் கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தை தன் கையில் எடுத்து,

"இது ஜஸ்ட் ஒரு செயின் அவ்வளவு தான், திருமண உறவை முடிவு பண்றது இந்த செயின் கிடையாது, ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க காதலும் நம்பிக்கையும். நீ எனக்கு தான் என்பதை இந்த செயின் முடிவு பண்ணல, நான் முடிவு பண்ணினேன். இந்த செயின் இல்லா விட்டாலும் நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள உறவை யாராலும் மாற்ற முடியாது. இனிமே இந்த தப்ப பண்ணாத, ஒருவேளை ஏதாவது ஆகிருந்தா" என்றவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை கண்கள் கலங்கி கொண்டு வர சற்றென்று முகத்தை திருப்பி கொண்டவன், 'நடை பிணமா ஆகிருப்பேன் டி' என்று தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

ஏனோ அவளிடம் ஆரியால், 'நீ இல்லை என்றால் நான் இல்லையடி' என நேருக்கு நேர் சொல்ல முடியவில்லை எங்கே சொன்னால், காதலாக பேசி உன் ஆசையை தீர்த்து கொள்ள பார்க்கிறாயா? என அவள் கேட்டு தன் காதலை கொச்சை படுத்திவிட்டால்? தன்னால் தாங்கி கொள்ள முடியாது என்று எண்ணியவன் அவள் முகத்தை பார்க்காது அமைதியாக அப்படியே நின்றவிட, இப்பொழுது யாத்ரா அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை கிளிக் செய்யவும்.

அத்தியாயம் 11


@@@@@@@@@@@@@@@



என் கதையின் பதிவுகள் உடனுக்கு உடன் உங்களுக்கு கிடைத்திட கீழ் உள்ள எனது முக புத்தக குழு மற்றும் எனது வாட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



Facebook group லிங்க்



நெமிரா நாவல்கள் குழு (Naemira Novels Group)



Whatsapp Link



Naemira Novels "நெமிரா நாவலிஸ்ட்🖋️"



உங்களது கருத்துக்களுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்!

நட்புடன்❤️

நெமிரா நாவல்ஸ்
 
Last edited:

Author: Naemira
Article Title: அத்தியாயம் 10
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top