Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 2

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
ஆரி அர்ஜுனன் அங்கிருந்து சென்ற பிறகு விழிகளை இறுக்கமாக மூடி திறந்த யாத்ரா, அவனது நெருக்கத்தில் உருகி விடும் தன்னை எண்ணி மிகுந்த வேதனை அடைந்தாள்.



அவன் முத்தம் கொடுத்தது, அதை எதிர்க்க முடியாமல் அவன் முன்பு பலவீனமாக இருந்தது என அனைத்தையும் எண்ணிப்பார்த்தவள்,



ஏன் நம் உணர்வுகள் அவன் முன்பு மட்டும் கட்டுக்குள் இருப்பதில்லை? அவனை ஏன் நம்மால் எதிர்க்க முடியவில்லை? என்று தனக்குத்தானே கேட்டுக்கொள்ள, அவளது நிலையை எண்ணி அவளுக்கே மிகவும் சங்கடமாக இருந்தது.



'ச்ச அவன் நம்மளை எவ்வளவு சீப்பா நினைச்சிருப்பான்' என்று எண்ணியவளுக்கு ஒரு வித அவமான உணர்வில் கண்களில் நீர் கோர்த்தது.



எவ்வளவு தான் முயற்சித்தாலும் யாத்ராவால் ஆரியை ஒரேடியாக ஒதுக்க முடியவில்லை. ஆக தானும் ஒதுங்க முடியாமல் அவனையும் ஒதுக்க முடியாமல் உணர்வு சிக்களுக்குள் மாட்டிக்கொண்டு மிகவும் திணறினாள்.



பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று கூறினாலும் அவனின் அருகாமையிலும், அவனது தீண்டலிலும் குலையும் தன்னை எண்ணி வெறுப்படைந்த யாத்ராவுக்கு, தனக்கு கொஞ்சமும் பிடிக்காத திருமணத்தை அதுவும் தான் வெறுக்கும் காவல்துறை பணியில் இருக்கும், தான் விரும்பவில்லை என்று சொல்லியும் தன்னிடம் அத்து மீறும் ஒருவனோடு செய்யப்போகிறோம் என்கின்ற எண்ணமே நெஞ்சை பதறவைத்தது.



ஆரி அர்ஜுனன் என்னும் அவனது பெயரை கேட்டாலே அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க,



"ஈஷ்வரா இவனை ஏன் நான் சந்திச்சேன்? அவன் கண்ணுல ஏன் என்னை காட்டின? உனக்கு தான் என் மனசு புரியும்ல அப்புறம் ஏன்?" என அழுதவளின் மனம் எதை எதையோ நினைத்து பதற்றமடைய முகத்தில் சற்றென்று துளிர்த்த வியர்வை முத்துக்களை தன் புறங்கையால் துடைத்தவளுக்கு பயத்தில் இதயம் தாறுமாறாக துடிக்க துவங்கவும் கண்களை இறுக்கமாக மூடி மூச்சை இழுத்து இழுத்து வெளியிட்டவள்,



'ஓம் நமசிவாய' என்னும் மந்திரத்தை விடாமல் உச்சரித்து கொண்டிருக்கும் நொடி, தனது ஒற்றை கண்ணை அடித்து வசிகரமாக சிரித்தபடி ஆரியின் முகம் வந்து போகவும் திட்டுகிட்டவள், அதுவரை தனது உடலில் இருந்த இறுக்கமும், மனதில் ஏற்பட்ட பாரம் கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதை உணர்ந்து தன்னை எண்ணி மிகவும் ஆச்சரியப்பட்டாள்.



இப்பொழுது ஆரியுடனான சந்திப்புகளை பற்றிய நினைவில், பெண்ணவளின் மனம் அவளையும் அறியாமல் முழுவதும் மூழ்கிவிட, ஆணவனை பற்றிய யோசனையுடன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தாள்.



அப்பொழுது முதுகலை கணினி அறிவியல் துறையில் இறுதி ஆண்டு படித்து கொண்டிருந்த யாத்ரா, அன்று தன் கல்லூரியில் நடந்த கலை விழாவை முடித்து விட்டு நேரம் கடந்து, தனது தோழி மதனா மற்றும் தன் நண்பன் கார்த்திக்குடன் அவனது காரில் இல்லம் நோக்கி வந்து கொண்டிருந்தாள்.



கார்த்திக், மதனாவின் சொந்த மாமா மகன். இருவருக்கும் இரெண்டு மாதங்கள் தான் வித்யாசம் வரும், மேலும் கூட்டு குடும்பம் என்பதால் இருவரும் ஒரே வீட்டில் தான் வசிக்கின்றனர்.



அவர்கள் வீட்டிற்கு பக்கத்தில் தான் யாத்ராவின் வீடும் இருப்பதால் மூவரும் கல்லூரி முதலாம் ஆண்டில் இருந்தே நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். எனவே ஒன்றாகவே கல்லூரிக்குச் செல்வர்.



கார்த்திக் காரை ஒட்டிக்கொண்டு வர, பெண்கள் இருவரும் சத்தமாக பாட்டு பாடி சிரித்து கொண்டே வந்தனர். அப்பொழுது யாத்ராவின் அலைபேசி ஒலித்தது. அவளது தாய் சாவித்ரியிடமிருந்து அழைப்பு விந்திருக்க அலைபேசியை காதுக்குள் கொடுத்த யாத்ரா,



"வந்துட்டு இருக்கோம்மா" என்றாள்.



"அதான் கார்த்திக், மதனா என் கூட இருக்காங்கள்ல அப்புறம் ஏன் பயப்படுற? இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவோம்" என்றவள் பயந்த தாய்க்கு தைரியத்தை கொடுத்துவிட்டு அழைப்பை துண்டித்தாள்.



அப்பொழுது அந்த சத்தம் கேட்டது, நிசப்தமான அந்த இரவை கிழித்து கொண்டு வந்த அந்த சத்தத்தில் அவர்கள் மூவரும் பயந்து காரை நிப்பாட்டினர்.



"கார்த்தி என்ன சத்தம் டா அது" என்ற யாத்ராவிடம்,



"ஏதோ சரியா படல வாங்க போய்டலாம்" என்ற கார்த்திக் வண்டியை கிளப்பிக்கொண்டு செல்லவும் ஒரு மனித உருவம் காரில் மோதி கீழே விழுந்தது.



திடிரென்று ஏற்பட்ட இந்த விபத்தில் பெண்கள் இருவரும் திகைப்படைந்தனர். அப்பொழுது மதனா,



"என்னடா பார்த்து ஓட்ட மாட்டியா” என்று கார்த்திக்கை திட்டிக்கொண்டிருக்க, வேகமாக காரில் இருந்து இறங்கிய யாத்ராவுக்கோ ரெத்த வெள்ளத்தில் கிடந்தவனை பார்த்ததும் கண்ணீரே வந்துவிட்டது.



ஒரு உயிரை அந்த நிலையில் பார்த்ததும், எதை பற்றியும் சிந்திகாத யாத்ரா அடிபட்டவனின் அருகில் சென்று அவனை பார்த்தாள், அவனோ எழ முயற்சிப்பதும் பின் விழுவதுமாக இருக்கவும், அவன் அருகே இன்னும் நெருங்கி சென்று அவள் பார்த்த பொழுது தான் அவனின் காலில் குண்டடி பட்டிருப்பது தெரிய வந்தது.



அவன் காலில் இருந்து வழிந்தோடி செங்குருதி யாத்ராவின் நெஞ்சை உலுக்கியது. உடனே தன் நண்பர்கள் பக்கம் சென்றவள் விடயத்தை கூற, கார்த்திக் மதனா இருவரும் அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.



"தப்பா இருக்கு கிளம்பலாம் யாத்து உன்னை யாரு கீழ இறங்க சொன்னா வந்து வண்டியில ஏறு" என்ற கார்த்திக் வலுக்கட்டாயமாக யாத்ராவை அழைக்க அவளுக்கோ இப்படி உயிருக்கு போராடும் ஒருவரை பாதியிலே விட்டு செல்ல மனம் வரவில்லை.



“பாவம் டா” என்றவளை பார்த்து முறைத்த கார்த்திக்,



“வீட்டுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும் டி" என்றான்.



"அதெல்லாம் மாட்ட மாட்டோம் டா, பாவமா இருக்கு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு வந்திடலாம்" என்று யாத்ரா தன் முடிவில் இருந்து மாறாமல் இருக்கவும், இரக்க மனம் கொண்ட மதனாவும் யாத்ராவுக்கு துணை நின்றாள்.



காதலி தோழி என இரு பெண்களும் ஒன்று சேரவும், வேறு வழியின்றி சம்மதம் சொன்ன கார்த்திக், அந்த புதியவனை அழைத்து கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு விரைந்தான்.



அவர்கள் அந்த புதியவனை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, கிளம்பி விடலாம் என்று நினைத்திருக்க, மருத்துவரோ காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கின்றோம், போலீஸ் வந்ததும் தாங்கள் கிளம்பலாம் என்று கூறுவிட,



இப்பொழுது வீட்டிற்கு தெரிந்தால் என்னாகுமோ ஏதாகுமோ என மூவரும் மிகவும் பயந்துவிட்டனர்.



அதுவும் யாத்ராவுக்கு போலீஸ் என்றதும் உள்ளுக்குள் சிறு பதற்றம் ஏற்பட, கண்களை இறுக்கமாக மூடி திறந்து தனக்கு தானே தைரியம் சொல்லிக்கொண்டவள் ஒருவித கலக்கத்துடன் முகத்தில் அரும்பிய வியர்வையை துடைத்தப்படி நின்றிருந்தாள்.



ஆனால் அவளது நிலையை கவனிக்காத கார்த்திக் பதற்றத்தில் யாத்ராவை திட்டவும், அவனிடம் யாத்ராவை பார்க்கும் படி கண்ணை காட்டின மதனா,



"இப்போ என்ன கார்த்திக் போலீஸ் தானே வர்ராங்க பார்த்துக்கலாம், நாம நல்லது தான் பண்ணிருக்கோம். யாருக்கும் பயப்பட தேவை இல்லை. நீ யாத்ராவை திட்டாத" என்று கூறி அவர்கள் இருவரையும் தைரியப்பப்படுத்தினாள்.



கார்த்திக்குமே யாத்ராவின் நிலை உணர்ந்து, அவளிடம் கடிந்து கொண்டதற்காக தன்னை தானே மனதிற்குள் திட்டிக்கொண்டவன், ஒன்றும் ஆகாது எது வந்தாலும் சமாளித்து கொள்ளலாம் என்றான்.



அப்பொழுது அந்நேரம் அகரன் மற்றும் அமரனுடன் இன்னும் சில காவலாளிகள் வந்தனர். வந்தவர்கள் நேராக தலைமை மருத்துவரை பார்த்துவிட்டு அவருடன் இவர்களிடம் வந்து விசாரணை நடத்தி கொண்டிருக்கும் பொழுது,



"அவனை எங்க?" என்ற கோபம் கலந்த அழுத்தமான குரலில் அனைவரும் திரும்பி பார்க்க, காக்கி சீருடையில் ஆக்ரோஷமாக நின்றிருந்தான் ஆரி அர்ஜுனன்.



காக்கி சீருடையில் அவனது ஆக்ரோஷமான முகத்தை பார்த்த யாத்ராவுக்கு, பயத்துடன் சேர்த்து ஒருவித வெறுப்பு தோன்ற, தன் முகத்தை திருப்பி கொண்டவள் மறந்தும் அவன் பக்கம் பார்க்கவில்லை.



அப்பொழுது ஆரியிடம் சென்ற அகரன், "உயிரோட தான் இருக்கான் உள்ள ட்ரீட்மெண்ட் நடக்குது"என்றான்.



அதை கேட்டு சீற்றம் அடைந்த ஆரி, "அவனுக்கு அது ஒன்னு தான் கேடு" என சத்தமாக பல்லை கடிக்க, அது யாத்ராவின் காதில் தெளிவாக கேட்டது.



யாத்ராவுக்கோ ஆரியின் பேச்சு கோபத்தை கொடுக்க,



'ச்ச ஒருத்தன் உயிரோட போராடிட்டு இருக்கான், இவன் இப்படி பேசுறான் ஆளும் மூஞ்சும்’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டாள்.



அப்பொழுது அங்கு வந்த மருத்துவர், ட்ரீட்மெண்ட் முடிந்து விட்டதாகவும் ஒரு மணிநேரத்தில் கண்முழிப்பான் என்று கூறிவிட்டு செல்லவும், ஆரி எதையோ சொல்லி அகரனிடம் கத்தி கொண்டிருக்க, அவர்களிடம் வந்த கார்த்திக் தாங்கள் செல்லலாமா என்று கேட்டான்.



உடனே நடந்த அனைத்தையும் ஆரியிடம் கூறிய அகரன், அவர்களை கைகாட்டவும் திரும்பி அவர்கள் மூவரையும் ஒரு பார்வை பார்த்த ஆரி,



"அனுப்பி விடுடா" என்று கூறிவிட்டு ஆதித்தனுடன் அடிபட்டு கிடந்தவன் இருந்த அறைக்குள் நுழைந்தான்.



"ஏய் வாங்க நம்மள போக சொல்லிட்டாங்க" என்ற கார்த்திக் பெண்களை அழைத்துக்கொண்டு செல்ல, யாத்ராவுக்கு ஆரி பல்லை கடித்தபடி கோபத்துடன் அந்த அறைக்குள் நுழைந்தது, ஏதோ தவறாக பட்டது.



அவளுக்கோ மனம் கேட்கவே இல்லை அதே சிந்தனையோடு, நண்பர்களுடன் பாதி தூரம் சென்றவள், அலைபேசியை தான் அமர்ந்திருந்த நாற்காலியில் வைத்துவிட்டதாகவும், தான் எடுத்துவிட்டு வருவதாக கூறி அங்கு சென்றாள்.



ஐசியுவின் வாசல் வரை வந்தவளுக்கு உள்ளே செல்ல கொஞ்சம் பயமாக இருந்தாலும் தைரியத்தை வரவழைத்து கொண்டு, அறைக்கதவை வேகமாக திறந்து, உள்ளே நுழைந்தவள் அங்கே படுக்கையில் குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் உயிர் வேண்டி துடித்து கொண்டு கிடந்தவனை கண்டு அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.



யாத்ராவை அங்கே எதிர் பாராத அகரன் மற்றும் ஆதித்தன் திகைப்புடன் அவளை பார்க்க, அர்ஜுனனை பார்த்து முறைத்தவள், சற்று நேரத்திற்கு முன்பு மருத்துவர் பிழைத்துவிட்டதாக கூறிய உயிர் இப்பொழுது தன் கண் முன்னால் உயிருக்கு போராடி கொண்டு கிடப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல்,



"அநியாயமா கொலை பண்ணிடீங்களே நீங்க எல்லாம் ஒரு போலீசா" என்று கண்களில் நீர் கோர்க்க கேட்க, அழுத்தமான பார்வையை அவள் மீது செலுத்திய ஆரி அவள் பார்க்க அவனுக்கு இருந்த குறை உயிரையும் தன் சைலென்ஸர் பொருத்தப்பட்ட துப்பாக்கியின் தோட்டாவால் பறித்து விட, பெண்ணவளோ அதிர்ச்சியில் கத்திவிட்டாள்.



"என்ன ஆரி இது" என்ற ஆதித்தனை பார்த்து முறைத்த ஆரி,



"ப்ரோஸிஜர்ஸ ப்ரோசீட் பண்ணு" என்றவன் யாத்ராவை நோக்கி வரவும், 'தடக் தடக்' என அவளது இதயம் வேகமாக அடித்து கொண்டது.



இதோ அருகில் நெருங்கிவிட்டான் என அவளது மூளை தகவல் அனுப்ப இதயம் 'தடக் தடக்' என்று இன்னும் வேகமாக துடிக்க உடலில் நடுக்கம் பிறந்தது.



"உன் பேர் என்ன?" சாதாரண கேள்வி தான், மிகவும் நிதானமாக தான் கேட்டான், ஆனால் யாத்ராவுக்கு பேச்சே வரவில்லை.



திக்கி திணறி, "யா..யாத்ரா" என்று மிரண்டு விழித்தபடி கூறினாள்.



"அப்பவே என்ன சொன்ன?" எதை கேட்கிறான் என்பதை புரிந்து கொண்டவளுக்கு மூச்சு முட்டி கொண்டு வந்தது.



மௌனமாக நின்றிருந்தாள்.



"நான் உன்கிட்ட ஒன்னு கேட்டேன்" என கரங்களை குறுக்கே கட்டியபடி ஆரி வினவினான், ‘பதில் சொல்’ என்றது அவனது முகபாவனை.



"அநியாயமா கொலை பண்ணிடீங்களே நீங்க எல்லாம் ஒரு போலீசா" திணறி திணறி ஒருவழியாக கூறிவிட்டாள்.



"ம்ம்ம் அந்த ஆராய்ச்சியெல்லாம் உனக்கு தேவை இல்லை" என அவளை ஒருகணம் பார்த்தவன்,



"இனி அந்த ரூட்ல எல்லாம் வர கூடாது சரியா" என்று சொல்ல பெண்ணவளின் தலை தானாக ஆடியது.



ஆரிக்கு அந்த நிலையிலும் அவளை பார்த்து சிரிப்பு தான் வந்தது, வராமல் எப்படி? உள்ளே நுழைந்த பொழுது அவள் கண்களில் இருந்த ஆக்ரோஷம் இப்பொழுது இல்லை அல்லவா. மருண்ட விழிகளையும் நடுங்கும் கால்களையும் பார்த்தவன் மேலும் அவளை கலவரப்படுத்த விரும்பாது,



"சரி போ" என சொன்னது தான் தாமதம் விட்டால் போதும் என்று அவனை திரும்பி பார்க்காமல் யாத்ரா ஓடிவிட்டாள்.



அன்று துவங்கி கிட்டத்தட்ட ஒருவாரம் அவள் உறங்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். நடந்த சம்பவம் அவளை வெகுவாக பாதித்திருந்தது. அவள் இயல்பு நிலைக்கு வரவே நாட்கள் பல ஆக, ஆரி மீது அவள் மனதில் பயத்தையும் தாண்டி ஒருவித தவறான எண்ணம் பதிந்துவிட்டது.



‘போலீஸ் என்றால் எதுவென்றாலும் செய்வானா?’ ஆரியின் செயலை அவளால் மன்னிக்க முடியவில்லை. ஒரு உயிர் போய்விட்டதே என்ற ஆற்றாமை அவளது எண்ணம் விட்டு நீங்க மறுத்தது. போலீஸ் உடையில் யாரை பார்த்தாலும் ஆரியின் முகம் தான் தோன்றியது.



அந்த நிகழ்வு நடந்து ஒரு இரெண்டு மாதங்கள் கழிந்திருக்க, யாத்ராவும் ஆரியை மறந்திருந்ந்தாள்.



அது ஒரு சாயங்கால வேளை, எப்பொழுதும் தன்னுடன் வரும் தனது இரு நண்பர்களும் அன்று கல்லூரிக்கு வராததால், தன் கல்லூரியில் நடைபெற்ற ஃபேர்வெல் பார்ட்டியில் முழுவதும் பங்கெடுத்தால், நேரம் ஆகிவிடும் என்பதற்காக கொஞ்ச நேரம் மட்டும் பார்ட்டியில் பங்கெடுத்துவிட்டு அங்கிருந்து பாதியிலே வெளியேறிய யாத்ரா, ஹைவேயில் வேகமாக தன் பிங்க் நிற வெஸ்பாவில் வீட்டுக்கு விரைந்து கொண்டிருந்தாள்.



ஹைவே தாண்டி சிட்டிக்குள் செல்லும் பாதையில், ஆள் அரவம் அதிகம் இல்லாத அந்த பகுதியில், அவள் வந்து கொண்டிருந்த பொழுது திடிரென்று அவளது செவிக்கு ஒரு அழுகுரல் கேட்டது.



முதலில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாதவள் பின்பு என்ன நினைத்தாளோ சில அடி தள்ளி தன் வண்டியை நிப்பாட்டி தனது செவியை கூர்மையாக்கினாள்.



அது ஒரு குழந்தையின் அழுகை சத்தம் என அவளது உள்ளம் அடித்து கூறியது.



நொடிகள் கடக்க கடக்க குழந்தையின் கதறல் அவளது மனதை பிசைய, சிறு தயக்கத்துடன் வண்டியில் இருந்து இறங்கியவள், பக்கத்தில் வீடு எதுவும் இருக்கிறதா என ஆராய, கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு குடிசை கூட இல்லாமல் இருக்கவும், ஆள்நடமாட்டம் ஏதும் இருக்கிறதா என பார்த்தாள்.



தெருவே நிசப்தமாக இருக்க, குழந்தை அழும் சத்தம் எங்கிருந்து கேட்கிறது என சிந்தித்தபடி கொஞ்சம் தூரம் நடந்தவள், சுற்றி சுற்றி பார்க்க, சிறிய தூரம் தள்ளி ஒரு குப்பை தொட்டிக்கு அருகே இருந்து சத்தம் வருவதை யாத்ரா கண்டறிந்தாள்.



அங்கே செல்ல தயக்கமாக தான் இருந்தது ஆனாலும் குழந்தையின் அழு குரல் ஏதோ செய்ய, பயத்தையும் தயக்கத்தையும் விடுத்தவள், உடனே அங்கு சென்று பார்க்க, அவளது கண்களில் ஈரம் சுரந்தது.



இரெண்டு மாதங்கள் கூட கடந்திறாத பச்சை ஆண் குழந்தை ஒன்று குப்பையோடு குப்பையாக தரையில் கிடந்து கதறி கொண்டிருந்தது.



"இங்க போய் குழந்தையை விட்டுட்டு போயிருக்காங்களே, மனுஷ ஜென்மங்களா அவங்க?" என வாய்விட்டே திட்டியவளுக்கு குழந்தையின் கதறல் மனதில் பாரத்தை கொடுக்க, ஓடி சென்று குழந்தையை தன் கைகளில் தூக்கி கொள்ள, அதன் பிறகு குழந்தையின் அழுகைக்கான காரணம் அவளுக்கு நன்றாக புரிந்தது.



பூச்சுகள் ஏதும் கடித்திருக்கும் போல, பிஞ்சு குழந்தையின் பாதங்கள், கரங்கள் என சில இடங்கள் எல்லாம் சிவந்து போய் தடுப்பு தடுப்பாக இருக்க, பெண்ணவளின் மென் மனம் பதறியது.



முதலில் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தவள், பின்பு குழந்தையை தன் கையில் வைத்தபடி மெதுவாக ஆட்டிக்கொண்டே, அக்கம் பக்கம் சுற்றி பார்த்தாள்.



அவளுக்கு கோபம் தான் வந்தது, "வேண்டாம் என்றால் ஏன் பெற்று எடுக்க வேண்டும், இப்படி குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றுவிட்டார்களே இரக்கமற்றவர்கள்!" என குழந்தையை தோளில் போட்டு தட்டி கொடுத்து கொண்டே திட்டிய யாத்ராவுக்கு, குழந்தையை அங்கே விட்டு செல்ல மனம் வர வில்லை, எனவே என்ன ஆனாலும் குழந்தையை பாதுகாப்பாக தனக்கு தெரிந்த விடுதியில் சேர்த்துவிட வேண்டும் என முடிவு செய்தாள்.



அழுது அழுது குழந்தைக்கு ஏதும் வந்துவிட கூடாது என அஞ்சியவள், முதலில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்து வேகமாக தன் ஸ்கூட்டியின் அருகில் வர, அப்பொழுது தான் குழந்தையை வைத்து கொண்டு வண்டியை ஓட்ட முடியாது என்பதே அவளது மூளைக்கு உரைத்தது.



இப்பொழுது என்ன செய்வதென்று யோசித்தவள், வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, கொஞ்சம் தூரம் நடந்து மீண்டும் ஹைவேக்கு வந்து, வேறு வண்டி ஏதும் வருகிறதா என எதிர்பார்ப்புடன், சாலையை எதிர் நோக்கி காத்திருந்தாள்.



அழும் குழந்தையை தோளில் போட்டு, “சரி டா மா சரியாகிடும் ஒன்னும் இல்ல டா” என ஆட்டிக்கொண்டே, எட்டி எட்டி ரோட்டை பார்த்தவளுக்கு சில நேரம் கழித்து, தூரத்தில் ஒரு வண்டி வருவது தெரிய, வேகமாக ரோட்டுக்கு வந்தவள், ஒரு கையில் குழந்தையை அணைத்துப்பிடித்தபடி, மறுகரம் நீட்டி வண்டியை நிறுத்த முயற்சிக்க, வண்டி நின்றதும் வேகமாக குழந்தையுடன் ட்ரைவர் சீட்டுக்கு அருகே சென்றாள்.



ஜீப்பின் ட்ரைவர் சீட்டின் ஜன்னல் இறக்கப்படவும், அங்கே அமர்ந்திருந்த ஆரி அர்ஜுனனை கண்டவளுக்கு உடல் தூக்கி வாரி போட சில நிமிடங்களுக்கு அவளுக்கு பேச்சே வரவில்லை.



'இவனா' என எண்ணியபடி வண்டியை உற்று கவனித்தவளுக்கு அப்பொழுது தான் போலீஸ் ஜீப்பை நிறுத்தி உள்ளோம் என்பது புரிய, காக்கி உடையில் கண்களில் நைட் விஷன் கிளாஸோடு அமர்ந்திருந்தவனை காண காண பெண்ணவளுக்கு இதயம் வெளியே வந்துவிடும் அளவிற்கு வேகமாக துடிக்க, அவனையே வெறித்து பார்த்தவள்,



'இந்த ரவுடியா! யாரை இனி பார்க்கவே கூடாதுன்னு நினைச்சோமோ அவனே கண்ணு முன்னாடி இருக்கானே, இவன் எங்க நம்மளுக்கு உதவி செய்ய போறான் துப்பாக்கியை எடுத்து சுடாம இருந்தா சரி கொலைகாரன்' என்று எண்ணியவள் பின்பு,



'லஞ்சம் கொடுத்தா உதவி செஞ்சாலும் செய்வான், போலீஸ் புத்தியே அதானே' என எண்ணி அவனை தன் பற்களை கடித்தபடி பார்த்தாள்.



"என்னாச்சு குழந்தையோட இங்க என்ன பண்ற? இது யார் குழந்தை?" என ஆரி தீவிர முகபாவத்துடன் யாத்ராவிடம் கேட்டான்.



அவனது அழுத்தமான குரலிலும், குழந்தையின் அழுகையிலும் சுயம் பெற்றவளுக்கு அவனிடம் உதவி கேட்கவே ஐயமாக இருந்தது.



'முன்பின் தெரியாதவனிடம் கூட உதவி கேட்கலாம், ஆனால் இவனை பற்றி அறிந்தும் எப்படி கேட்பது?' என மீண்டும் தன் மனதுடன் கதை பேசியவள், அவனை தாண்டி வேறு வண்டி ஏதும் வருகிறதா என எட்டி எட்டி பார்க்க, குழந்தையும் விடாமல் அழ, என்ன செய்வது என்று குழம்பினாள்.



சில நொடிகள் அப்படியே நின்றவள், வேறு வாகனம் ஏதும் வரவில்லை என்றதும், தன் பயத்தையும், வெறுப்பையும் மறைத்து கொண்டு குழந்தைக்காக அவனிடம் உதவி கேட்க முடிவு செய்தாள்.



அப்பொழுது,



"ஹலோ மிஸ் நியாய தேவதை கையில குழந்தையோட இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என யாத்ராவின் முகத்துக்கு நேராக சொடக்கிட்டு அவளது தன் பக்கம் ஈர்த்தபடி அர்ஜுனன் வினவ, அவனது செய்கையில் திடுக்கிட்டவள், ஆரியின் நக்கல் பொதிந்த, மிஸ் நியாய தேவதை என்னும் விழிப்பில் அவனை தன் மூக்கு நுனி சிவக்க முறைத்தவள், 'யாத்ரா கன்ரோல் பண்ணிக்கோ இவன் கிட்ட வம்பு வச்சிக்காத' என தனக்குள்ளே சொல்லி கொண்டு,



"யார் குழந்தைன்னு தெரியல சார், போகுற வழியில குப்பைத்தொட்டி பக்கம் அழுதுட்டு இருந்துச்சு, பூச்சு கடிச்சு உடம்பெல்லாம் தடுப்பு தடுப்பா இருக்கு, ஹாஸ்ப்பிட்டல் போகணும்" என்று 'ஒன்னும் இல்லடா ஒன்னும் இல்லடா' என இடை இடையே அழும் குழந்தையை சமாதானம் செய்தபடி, அவனது முகத்தை கூட பார்க்காது கூறி முடிக்க, அவளையே வெறித்து பார்த்த ஆரி அர்ஜுனன்,



"எந்த பக்கம்" என்று கேட்டு அவளிடம் விபரம் வாங்கி கொண்டு, "சரி வா வந்து வண்டியில ஏறு" என்றான்.



அவன் பார்த்த பார்வையும், அவனது அழுத்தமான குரலும் யாத்ராவுக்கு கிலியை உண்டாக்கவும், தயக்கத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தபடி நின்றாள்.



அவளின் செய்கையில் பொறுமையை இழந்தவன்,



"ப்ச் உன்னைத்தான் வண்டியில ஏறு" என சற்று சத்தமாக கூறவும், குழந்தை வேறு விடாமல் அழுது கொண்டிருக்க, தெய்வத்தை வேண்டி கொண்டு அச்சத்தை மறைத்தபடி ஆரியின் காரில் யாத்ரா ஏறினாள்.



அவள் சொன்ன இடம் வந்ததும்,



"இந்த இடமா" என்று ஆரி கேட்க, அவள் ஆமாம் என்று சொன்னதும், அலைபேசியில் யாருக்கோ அழைப்பு விடுத்து விபரத்தை கூறிய அர்ஜுனன், அடுத்தநொடி தன் ஜீப்பை எடுத்திருந்தான்.



யாத்ராவோ வரும் வழியெல்லாம் குழந்தையை சமாதானம் செய்வதிலே கவனமாக இருக்க, இடை இடையே கண்ணாடி வழியாக அவளை பார்த்தபடி வண்டியை செலுத்தி வந்த ஆரியின், இதழில் கண்டறிய முடியா புன்னகை எட்டிப்பார்க்க, அடிக்கடி கண்ணாடியினூடே யாத்ராவை பார்த்தபடி வாகனத்தை செலுத்தினான்.



மருத்துவமனை வந்ததும் அவளுடன் அவனும் இறங்கிக்கொள்ள, அவனை கண்ட மருத்துவர் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று புன்னகையுடன் அவனை வரவேற்றார்.



பின்பு விபரத்தை கேட்டு தெரிந்து கொண்டவர், உடனே குழந்தையை பரிசோதித்து குழந்தைக்கு மருந்து கொடுக்கவும், மருந்தின் வீரியத்தில் குழந்தை நிம்மதியாக உறங்கியது.



குழந்தை அழுவதை நிறுத்தி விட்டு நிம்மதியாக உறங்கிய பின்பே ஆசுவாசம் அடைந்த யாத்ரா, ஆரி அர்ஜுனனையும் அங்கே அவனுக்கு கிடைக்கும் மரியாதையையும் பார்த்தாள்.



"இவன் பெரிய யோக்கியன் போல அவ்வளவு மரியாதை கொடுக்குறாங்க" என யாத்ரா முணுமுணுக்கும் பொழுதே மருத்துவரிடம் இருந்து விடைபெற்ற அர்ஜுனன், அவளை திரும்பி பார்த்து என்ன என்று புருவம் உயர்த்தினான்.



அவன் திடிரென்று அப்படி கேட்டவும், ஒன்னும் இல்லை என்பதாய் தன் தலையை மறுப்பாக அசைத்து, சட்டென்று குனிந்து கொண்டவள், குழந்தையை கரங்களில் ஏந்தியபடி அவனுடன் வெளியே நடந்து வந்தாள்.



அப்பொழுது ஆரியின் முன்னே சலுயூட் அடித்தபடி பெண் போலீஸ் ஒருவரரும், ஆண் போலீஸ் ஒருவரும், ஏற்கனவே அவன் சொன்னதன் பெயரில் அங்கே வந்திருந்தனர்.



உறங்கும் குழந்தையை மெதுவாக யாத்ராவின் கரங்களில் இருந்து வாங்கிய ஆரி, குழந்தையை பெண் போலீசிடம் கொடுத்து விட்டு, அங்கே இருந்த ஆண் போலீசிடம் யாத்ராவிடம் விபரத்தை கேட்டு எழுதி கொள்ளுமாறு கட்டளையிட, அவனது உத்தரவின் படி அவரும் விபரத்தை குறித்து கொள்ள, அவர்களை தனியாக அழைத்து ஏதோ கூறி அனுப்பி வைத்தவன் யாத்ராவிடம்,



"நேரம் ஆகிடுச்சே வீட்ல தேடமாட்டங்களா?" என வினவினான்.



அவளோ, "லேட் ஆகும்னு சொல்லிட்டு தான் வந்தேன்" காற்று குரலில் சிறு தயக்கத்துடன் கூறினாள்.



"ஓ, எப்பவும் உன் ஃப்ரண்ட்ஸ் கூட தானே வருவ அவங்க.வரல?" என்ற அவனது கேள்வியில் திகைப்படைந்தவள், 'இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரியும்' என எண்ணியபடி அவனிடம்,



"இல்லை" என ஒற்றை வார்த்தையை பதிலாக கூறினாள், ஆனால் அதற்கே அவளுக்கு மூச்சு முட்டி கொண்டு வந்தது.



"ம்ம் ஹைவே ரூட் எடுக்க கூடாது, அது சேஃப் இல்லைனு அன்னைக்கே சொன்னேன்ல, மறுபடியும் அதே ரூட்ல வந்திருக்க" ஆரியின் குரலில் உரிமை கோபம் எட்டிப்பார்த்தது.



அதற்கு யாத்ரா, 'அந்த ரூட்டெல்லாம் சேஃப் தான், உன்னை மாதிரி நாட்டை காப்பாத்துற போலிஸ்ன்னு சொல்லிட்டு அயோக்கிய தனம் பண்றவங்களால தான் ஆபத்து' என முணுமுணுக்க ஆரி,



"ஹலோ என்ன?" என்று புருவம் உயர்த்தவும்,



"ஒன்னும் இல்லை சார் அந்த ரூட்ல கொஞ்சம் சீக்கிரமா போய்டலாம் அதான்" என்று யாத்ரா சமாளித்தாள்.



"இனிமே அப்படி வர கூடாது சரியா" அக்கறையுடன் கூடிய கண்டிப்புடன் ஆரி கூற, 'நான் எப்படி வந்தா இவனுக்கு என்ன' என மனதிற்குள் எரிச்சல் பட்டுக்கொண்டவள் அவன் முன்பு சரி என்று தலையாட்ட்டினாள்.



அதன் பிறகு, "சரி வா நானே உன்னை டிராப் பண்றேன்" என ஆரி அவளது விழிகளை ஆழ்ந்து பார்த்து கொண்டே சொல்லவும், யாத்ரா திகைப்படைந்தாள்.



அவ்வளவு நேரம் குழந்தை இருந்ததால், யாத்ராவின் கவனம் குழந்தையை பற்றிய கவலையில் இருந்திருக்க, ஆரியுடன் தனியாக வந்ததை அவள் பெரிதாக பொருப்படுத்தவில்லை.



ஆனால் இப்பொழுது இவன் சொன்னதில் யாத்ராவின் மனம் கலங்கி போக, 'நிச்சயம் நம்மளை ஏதோ செய்ய போறான் இவன் பார்வையே சரியில்லை' என்று எண்ணியவள் உடனே



“வேண்டாம் சார் என் அப்பா வருவார்" என்றாள் உறுதியாக, அர்ஜுனனும் அதன் பிறகு அவளை வற்புறுத்தவில்லை.



"சரி உன் அப்பாக்கு கால் பண்ணி வர சொல்லு, அவர் வந்ததும் நான் கிளம்புறேன்” என்றவன் மறுத்துப்பேசாதே என்பது போல தீர்க்கமாக சொல்லிவிட, அவளுக்கும் அதுவே சரியாகபட்டது.



உடனே தந்தைக்கு தொடர்புகொண்ட யாத்ரா கொஞ்சம் தூரம் அவனை விட்டு தள்ளி சென்று, தந்தையிடம் அலைபேசியில் விடயத்தை கூற அவர் பதறிவிட்டார்.



"என்ன அம்மு இது? எனக்கு நீ அப்பவே ஃபோன் பண்ண வேண்டியது தானே, உனக்கு ஒன்னும் இல்லையே, நீ நல்லா இருக்க தானே" தந்தைக்குரிய பதற்றம் அவரது குரலில் தெரிந்தது.



"பயப்பட ஏதும் இல்லைப்பா, நான் நல்லா இருக்கேன்" என்றவள் தான் இருக்கும் இடத்தை கூறினாள்.



தன்னை பார்த்து பார்த்து அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவளை விசித்திரமாக பார்த்த அர்ஜுனன், சலிப்புடன் தன் அலைபேசியை ஆராய்ந்து கொண்டிருக்க, பத்து நிமிடத்தில் காரில் வந்து இறங்கிய வைகுண்டராஜனை ஓடி சென்று யாத்ரா அணைத்துக்கொண்டாள்.



வைகுண்டராஜனும் மகளின் தலையை வருடியபடி ஆரியை கண்டவர், புன்னகையுடன் அவனை நோக்கி வர, முதலில் யோசித்த அர்ஜுனன் பின்பு அவரை கண்டுகொண்டு, பதிலுக்கு சிறு புன்னகையுடன் அவரை நெருங்கினான்.



"எப்படி இருக்கீங்க சார்? மறுபடி அவனுங்களால எந்த பிரச்சனையும் இல்லையே" என்றான் ஆரி.



"இல்லை தம்பி இப்போ எந்த பிரச்சனையும் இல்லை. அவனுங்க இப்போ ஹோட்டல் பக்கம் வர்றதே இல்லை. அப்புறம் பாப்பாவுக்கு நல்ல நேரத்துல உதவி பண்ணிருக்கீங்க, ரொம்ப நன்றி தம்பி" என்றவரிடம், ஆரி சிறு தலையசைப்பை மட்டும் பதிலாக கொடுத்தான்.



உடனே அவர் யாத்ராவை அவனுக்கு அறிமுகப்படுத்திவிட்டு, தனது விசிட்டிங் கார்டை கொடுத்து, வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்க, அதற்கும் புன்னகையுடன் தலையசைத்தவன் யாத்ராவை ஒருகணம் பார்த்துவிட்டு வைங்குண்டராஜனிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றவிட்டான்.



யாத்ராவோ செல்லும் ஆரியை பார்த்துக்கொண்டே வாய்க்குள் எதையோ சொல்லி திட்ட, அது தெரியாத வைகுண்டராஜனோ புன்னகையுடன்,



"தம்பி ரொம்ப நல்லவர்ல" என மகளிடம் சொல்லவும் அவரை நிமிர்ந்து பார்த்தவள்,



"எனக்கு அப்படி தோனல பா, போலீசையே நம்ப கூடாது" என பட்டென்று சொல்லிவிட்டாள்.



யாத்ரா அவ்வாறு சொல்லவும், அவளது தலையை வாஞ்சையுடன் வருடியவர்,



"இல்லமா அர்ஜுனன் தம்பி அப்படி இல்லை, நம்ம ஹோட்டல்ல கொஞ்ச பசங்க குடிச்சிட்டு ரெண்டு நாளா தொடர்ந்து கலாட்டா பண்ணினாங்கள்ல, தம்பி கிட்ட ஒரு வார்த்தை தான் சொன்னேன், நேரடியா அவரே வந்து அந்த பசங்களை வார்ன் பண்ணினாரு, இப்போ எந்த தொல்லையும் இல்லை" என காரை ஒட்டியபடி கூறினார்.



அதற்கு, "அதுக்கு தான் உங்க கிட்ட லஞ்சம் வாங்கிருப்பான்ல" என யாத்ரா சலுகையாக தன் தந்தையின் தோளில் சாய்ந்தபடி சொல்லவும் லேசாக சிரித்தவர்,



"இல்லை டா, நான் கொடுத்தேன் ஆனா அந்த தம்பி, 'நான் வேலை பார்க்கிறதுக்கு எனக்கு சம்பளம் கவர்மன்ட்ல இருந்து கொடுக்குறாங்கனு’ கம்பீரமா சொல்லிட்டு போய்ட்டாரு டா, எனக்கு ஆச்சரியமா இருந்தது எல்லாரும் கெட்டவங்க இல்லை யாத்து" என வைகுண்டராஜன் ஆரிக்கு ஆதரவாக இன்னும் பல புகழ் கடிதங்கள் வாசிங்க, அவரது செல்ல மகளோ ஏசி காற்றில் அப்படியே அவரது தோளில் தலைவைத்தபடி உறங்கி கொண்டிருந்தாள்.



யாத்ராவிடம் இருந்து எந்த பதிலும் வராததால், "என்ன யாத்து எதுவும் பேச மாட்டிக்கிற" என்று வைகுண்டராஜன் திரும்பி மகளை பார்க்க, யாத்ராவோ தூங்கி கொண்டிருக்கவும் அவளை பார்த்து பெருமூச்சு விட்டார் வைகுண்டராஜன்.



வீட்டிற்கு வந்ததும் அன்று இரவு மட்டும் ஆரியை பற்றி யோசித்த யாத்ரா அதன் பிறகு இயல்பாக செயல்பட தொடங்க,



ஆரி தான் திண்டாடி போனான். ஏற்கனவே ஆபத்தில் இருக்கும் ஒரு உயிருக்காக வருந்திய அவளது குணம் ஆரிக்கு மிகவும் பிடித்து போயிருக்க, அப்படியான நேரத்தில் யாரோ ஒரு குழந்தைக்கு இரக்கப்பட்டு, கண்களில் ஒருவித தவிப்புடன், தன் பாதுகாப்பை பற்றி கூட கவலைப்படாது, ஆள் அரவம் இல்லாத அந்த இடத்தில், குழந்தையை தன் மார்போடு அணைத்து வைத்தபடி, தன் வண்டியை நிப்பாட்டி மருண்ட விழிகளுடன் நின்றிருந்தவளை கண்டதும் ஆரி தன் சுயம் தொலைத்தான்.



முதல் சந்திப்பில் ஈர்க்கப்பட்டவன், இரண்டாம் சந்திப்பில் காதலில் விழ, இனி இவள் தான் தன்னுடைய சரி பாதி என நொடியில் உணர்ந்தவன், ஒவ்வொரு நொடியும் யாத்ராவை மட்டுமே நினைக்க துவங்கினான்.



பெண்ணவளின் பேசும் விழிகள், நித்தமும் அவன் முன் தோன்றி, அவனது மனதை கொஞ்சம் கொஞ்சமாக சிறைவைக்க, காவலன் அவனோ அவளது கைது செய்யும் விழிகளிடம், விரும்பியே ஆயுள் கைதியாகும் சித்தம்கொண்டு, அதை அவர்கள் வீட்டில் சொல்லவும் தாமதிக்க வில்லை.



நேரடியாக யாத்ராவின் வீட்டிற்கு சென்றவன், அவளது தாய் தந்தையை பார்த்து வெளிப்படையாகவே தன் விருப்பத்தை சொல்ல, வைகுண்டராஜனுக்கும், சாவித்திரிக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.



அர்ஜுனனை பார்த்த வரை நல்லவனாக தான் தெரிகிறான், கேள்விப்பட்டவரையும் அனைவரும் அவனை நல்லவிதமாக தான் கூறுகின்றனர். ஆனால் யாத்ரா, அவளை எண்ணி பெரியவர்கள் தயங்க, அவர்களின் தயக்கத்தை உணர்ந்தவன், சற்றும் தாமதிக்காமல் தனது தாய் தந்தை வைத்து அவர்களிடம் பேசினான்.



யாத்ராவின் பெற்றோருக்கு அர்ஜுனனையும் அவனது குடும்பத்தையும் மிகவும் பிடித்து விட்டது.



வைகுண்டராஜன் முதல் வேலையாக யாத்ராவுக்கு மருத்துவம் பார்த்த மனோதத்துவ மருத்துவரும் தனது நண்பருமான விஜய பிரகாஷை சந்தித்தவர், அர்ஜுனனை பற்றி சொல்ல, அவரும் நல்ல வரன் என்றால் தாமதிக்க வேண்டாம், நிச்சயம் சரி வரும் என்று கூறிவிட, அடுத்த வேலையாக தம்பதியர் மகளிடம் மெதுவாக விடயத்தை கூறினார்கள். ஆனால் யாத்ரா விடாப்பிடியாக மறுத்துவிட்டாள்.



சாவித்ரிக்கு எங்கே மகள் காலம் முழுவதும் இப்படியே திருமணம் முடிக்காமலே இருந்து விடுவாளோ என்று பயம் தோன்ற,



"நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லலைனா நான் சாப்பிட மாட்டேன்" என பிடிவாதமாக அறைக்குள்ளே அடைந்து கிடந்தார்.



கெஞ்சி கெஞ்சி பார்த்த யாத்ரா உதவிக்கு தந்தையை அழைக்க, அவருக்கும் விருப்பம் இல்லாத யாத்ராவை வற்புறுத்துவது சங்கடமாக இருக்க, மனைவியிடம் எடுத்து கூறி பார்த்தார்.



ஆனால் சாவித்ரி பிடிவாதமாக இருக்கவும், அவரால் எதுவும் செய்ய முடியாமல் போக, யாத்ராவுக்கு தாய் கஷ்டப்படுவதை பார்த்து சங்கடமாக இருந்தது.



பல விதமாக சிந்தித்து பார்த்தவள், வேறு வழியில்லாமல், ஒரு நிபந்தனையுடன் சம்மதம் சொன்னாள்.



"அப்படி என்னடி நிபந்தனை" என ஆத்திரமாக கேட்ட தாயிடம்,



"அவனை கல்யாணம் பண்ணிக்குவேன், ஆனா புடிக்கலைனா வீட்டுக்கு வந்திடுவேன், ஒன்னும் சொல்ல கூடாது" என்று கூறி அவளது தாய் தந்தையரின் தலையில் ஆர்ப்பாட்டம் இல்லாது இடியை இறக்கினாள்.



"இதை அவன் கிட்டையும் நான் சொல்லணும்" என்று வேறு சொல்ல, சாவித்ரி அவளை அடிக்க கையே ஓங்கிவிட்டார்.



"என்னடி நினைச்சிட்டு இருக்க?" ஆத்திரத்தில் மூச்சு வாங்க வினவினார்.



"அப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்" என்றவள் தன் அறைக்குள் சென்றுவிட, வைகுண்டராஜனை விட சாவித்ரி தான் மனதளவில் நொந்து போனார்.



"என்னங்க இது" என்று வருத்தத்துடன் கேட்ட மனைவிக்கு ஆறுதல் அளித்தவர்,



"இது சரிவராது சாவித்ரி, நான் அந்த தம்பிகிட்ட சொல்லிடுறேன், தேவையில்லாம எல்லாருக்கும் மன கஷ்டம் வரும்"



"நல்ல வரன் பா, இப்படி ஒரு வரன் எங்க தேடினாலும் கிடைக்காது" சாவித்ரிக்கு கண்ணீர் வந்தது.



"யாத்ராவுக்கு கொடுத்து வைக்கல" விரக்தியுடன் கூறினார்.



"நம்ம காலத்துக்கு அப்பறம் கஷ்ட்ட பட்டிருவா பா" மகளை நினைத்து சாவித்ரிக்கு நெஞ்சம் அடித்து கொண்டது.



"எல்லாம் கடவுள் பார்த்துக்குவார், நாம என்ன செய்ய முடியும்" என்றவர் ஆரியிடம் விடயத்தை கூறினார்.



அவன் பெரிதாகவெல்லாம் அதிரவில்லை லேசாக சிரித்தவன்,



"யாத்ராவை இன்னைக்கு ஈவினிங் ஐந்து மணிக்கு, எங்க ஸ்டேஷனுக்கு பக்கத்துல இருக்கிற, பார்க்கல வந்து என்னை பார்க்க சொல்லுங்க அங்கிள்" என்று கூறி,



"நீங்களும் ஆண்ட்டியும் கவலை படாதீங்க, இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்" என்று உறுதியளித்தான்.



ஆரி கூறியதை மனைவியிடம் அப்படியே கூறியவர், மகளிடம் ஆரி பார்க்கிற்கு வர சொன்னதை சொல்ல, அதை கேட்டதும்,



"ஏன் அவ்வளவு தூரம் நான் போகணும்? இங்க உள்ள பார்க்கிற்கு அவன் வர மாட்டானா என்ன? அப்படி இல்லைனா ரெண்டு பேருக்கும் பொதுவா இருக்கிற இடத்தை சொல்லிருக்கணும், அதை விட்டுட்டு நான் போகணுமா" என பொரிந்து தள்ளியவள், தனது பெற்றோர்களை பார்த்து,



"நீங்க நல்லவனு கொண்டாடுறீங்களே, அவனுக்கு எவ்வளவு திமிர் பார்த்தீங்கள்ல, ஏன் தான் பிடிவாதம் பிடிக்கிறீங்கனே தெரியல" என்றவள் தன் தாயையும் தந்தையையும் ஒருகணம் பார்த்துவிட்டு சென்றுவிட, அவளது பேச்சை கேட்ட சாவித்ரிக்கு மகள் மீது அவ்வளவு ஆத்திரம் வந்தது. ஆனாலும் கணவருக்காக அடக்கிக்கொண்டார்.



#####



பார்க்கினுள் ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் யாத்ராவும் ஆரியும் எதிரே எதிரே ஒருவர் விழிகளை ஒருவர் பார்த்தபடி நின்றனர்.



"என்னுடைய கண்டிஷனை பத்தி உங்ககிட்ட அப்பா சொன்னேன்னு சொன்னாரு பதிலை என்கிட்ட சொல்றேன்னு சொன்னீங்களாம், உங்க பதில் என்ன?" ஆரியின் விழிகளை நேருக்கு நேராக பார்த்து கேட்டாள்.



"எனக்கு ஓகே" என்றான் பட்டென்று, இந்த பதிலை அவள் எதிர் பார்க்கவே இல்லை அதிர்ச்சியுடன் அவனை பார்த்தவள்,



"நான் விளையாட்டுக்கெல்லாம் சொல்லலை, நிச்சயம் பிடிக்கலைனா போயிட்டே இருப்பேன்" 'மிரட்டுகிறாளாம் ஹ்ம்' மனதிற்குள் எண்ணியபடி தன் இதழை வளைத்த ஆரி, "ம்ம் ஓகே" என்றவன், சாதாரணமாக தன் தோள்களை குலுக்க, எரிச்சலுடன் தன் கண்களை மூடி திறந்தவள்,



"எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை ஆரி" அது இது என்று சமாளிக்க வில்லை, நேரடியாக விடயத்தை கூறினாள். ஆரியும் பெரிதாக அதிர்ச்சியெல்லாம் அடையவில்லை,



"ஓ" ஒற்றை வார்த்தையில் அலட்டிக்கொள்ளாமல் பதிலளித்தவன், அவளது பார்வையை எதிர்நோக்கியபடி நிற்க, யாத்ரா தான் அவனது பதிலில் நொந்து விட்டாள். என்ன பதில் இது? இதை என்னவென்று எடுத்து கொள்வது? என்று குழம்பியவள்,



"இந்த கல்யாணம் நடக்காது" என்று மீண்டும் கூறினாள்.



"ஓகே" மீண்டும் ஒற்றை வார்த்தையில் அவன் பதில் கொடுக்க, "ஷப்பா" என பெருமூச்சு விட்டவள்,



"இப்பவாது உங்களுக்கு புரிஞ்சிதே, தயவு செஞ்சு எங்க அம்மா அப்பா கிட்ட இந்த கல்யாணம் புடிக்கலைனு சொல்லிடுங்க" என்றவள் அங்கிருந்து செல்வதற்காக ஒரே ஓர் அடி தான் எடுத்து வைத்திருப்பாள் அடுத்த கணமே அவன் பேசிய வார்த்தையில் கால்கள் வேரூன்ற அப்படியே நின்றுவிட்டாள்.



"பட் ஐ லவ் யு" என மிக தெளிவான உறுதியான குரலில் நான்கே வார்த்தையில் ஆரி கூற, அதிர்ச்சியடைந்தவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.



உனக்கு பிடிக்காவிட்டால் இருந்துவிட்டு போகட்டும், எனக்கு உன்னை பிடித்திருக்கின்றது. அதாவது என்ன ஆனாலும் இந்த திருமணம் நடக்கும் என்பதை அவன் சொல்லாமல் சொல்ல, அவளுக்கு கோபமாக வந்தது.



"இந்த கல்யாணம் நடக்காது ஆரி" கொஞ்சமும் அசராமல் அவனது முகத்தை பார்த்து கூறினாள்.



"ஏன்" சொல் என்றது அவனது சொல்.



"பிடிக்கல" காரணம் எல்லாம் சொல்ல மாட்டேன் என விடாப்பிடியாக மறுத்தாள் நேரடியாக.



"அதான் ஏன்" உச்சரிப்பில் இருந்த அழுத்தம் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று சொல்ல, தன் கண்களை மூடி நீண்ட பெருமூச்சை வெளியிட்ட யாத்ரா,



"ஒரு கொலைகார, கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாத, நியாயம் நீதி பார்க்காத, ஒரு போலீஸ்காரனை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது, ஆரி" தேக்கி வைத்த ஆத்திரங்கள் அனைத்தும் வார்த்தையில் தெரிய அழுத்தமாக கூறினாள்.



அவள் ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தம் கொடுத்து சொல்ல சொல்ல, ஆரியின் முகம் விகாரமாக மாறிக் கொண்டிருக்க, இறுதியில் ஆரி என்ற அவளது விழிப்பில் மீண்டும் அவளிடமே விழுந்தவனின் மொத்த கோபமும், நீரில் விழுந்த உப்பை போல கரைந்துபோனது.



யாத்ராவோ அவனை அசராமல் பார்த்து முறைக்க, அவளது விழிகளை பார்த்து கொண்டே அவளை நெருங்கிய அர்ஜுனன்,



"உன்னால என்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெறுத்துக்கோ" என்று யாத்ராவை இன்னும் நெருங்கி வந்தபடி கூறியவன், அவனது நெருக்கம் கண்டு நடுங்கிய தன்னவளின் செவ்விதழை ஒருகணம் பார்த்துவிட்டு அவளது காதோரத்தில் தன் மீசை ரோமங்கள் உரச,



"முடிஞ்சா!" என்னும் சொல்லோடு நிப்பாட்டியவன்,



"இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் யாத்ரா" என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல போக,



"கல்யாணம் பண்ணினாலும் பிடிக்கலைனா என் அம்மா வீட்டுக்கு, கண்டிப்பா போய்டுவேன்" என அவனை பார்த்து கடுமையாக முறைத்துக்கொண்டே கூறினாள்.



அவனோ அவளை புன்னகையுடன் நெருங்கியவன்,



"புடிக்கலைனா தானே" என்றான் அதே புன்னகையுடன்.



"எனக்கு புடிக்காது" அதரங்கள் துடிக்க கூறினாள்.



"அதையும் பார்ப்போம்" என்றவன் தன்னவளின் துடிக்கும் செவ்விதழிலே முகாமிட்டிருந்த தன் விழிகளைக் கடினப்பட்டு அகற்றி, பதற்றத்தில் அவளது நெற்றியில் துளிர்ந்திருந்த வியர்வை முத்துக்களை சட்டென்று தன் இதழ் முத்தம் கொண்டு ஒற்றையெடுத்தவன், அவளது சிவந்த மூக்கின் நுனியை தட்டிவிட, அவனது இந்த அதிரடி செயலில் செயலற்று போன யாத்ரா சிலநொடிகள் கழித்து சுயம் பெற்று, எதுவும் பேசாமல் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியவள், இன்று இந்த நொடி வரை அவனிடம் இருந்து ஓடுகிறாள்.



அவனும் விடாமல் துரத்துகிறான். அவள் விலக விலக அவன் அவளிடம் இன்னமும் அதிகமாக நெருங்கி வருகிறான். அவள் அவனை வேண்டாம் என்று விலகினால், நீ தான் எனக்கு வேண்டும் என்று தன்னுடன் நெருக்கமாக பிணைத்துக்கொள்கிறான்.



ஆரியை விலக்கவும் முடியாமல், அவனிடம் நெருங்கவும் முடியாமல் அவள் படும் அவஸ்தை என்னவென்று அவளுக்கு மட்டும் தான் புரியும்.



"உள்ள போகும் போது இருந்ததை விட வெளிய வரும்பொழுது முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரியுதே மச்சான், என்னடா நடந்துச்சு” என அகரன் ஆரியின் காதை கடித்தான்.



பதிலுக்கு ஆரி,



"என்னை பார்த்தா உனக்கு என்ன தோனுது, நான் ஏதோ அந்த பொண்ணுகிட்ட வம்பு பண்ணின மாதிரியே கேட்குற” என்று சொல்ல,



"டேய் அர்ஜுனா உன்னை எனக்கு நல்லாவே தெரியும் டா, நடிக்காத டா டேய் அந்த பொண்ணை கொஞ்சம் யோசிக்க விடு சும்மா நோண்டிகிட்டே இருக்காத”



"நான் சத்தியமா எதுவும் பண்ணலப்பா, என் காதலோட ஆழத்தை என் ஸ்டைல்ல புரிய வைச்சேன், அவ்வளவு தான்” என்று கண்ணடித்த அர்ஜுனன், தன்னை முறைத்த தன் நண்பனை பார்த்து மனம் விட்டு மகிழ்ச்சியாக சிரித்தான்.



அர்ஜுனனின் மனம் நிறைந்த பூரிப்பைக் கண்டு அகரனுக்கு மனம் நிறைவாக இருந்தது.



"எத்தனை வருஷம் ஆச்சு உன் சிரிப்பை பார்த்து, என்னைக்கு அந்த காக்கிசட்டைய மாட்டினியோ அன்றோடு உன் சிரிப்பும் போச்சு, ரொம்ப ஓடிட்ட இனிமேலாவது நீ கொஞ்சம் உனக்காக வாழனும், எப்பவும் நீ சந்தோஷமா இருக்கணும் டா” என அகரன் மனதார கூறினான்.



சிறிது நேரம் கழித்து பதுமை போல கீழே இறங்கி வந்த யாத்ராவை எல்லோரும் ஒருவித எதிர்பார்ப்புடன் நோக்க, தன்னையும் அறியாமல் ஜானகியின் அருகில் சென்று அமர்ந்தவள்,



"எனக்கு சம்மதம்" என தலையைக் குனிந்துக் கொண்டே கூறவும், மருமகளை ஆசையாக அணைத்து நெற்றியில் முத்தம் வைத்தார் ஜானகி.



யாத்ரா சம்மதம் என்று கூறவும் சாவித்ரிக்கு அதிர்ச்சியில் மயக்கமே வருவது போல இருக்க, வைகுண்டராஜனுக்கோ குழப்பமாய் இருந்தது.



இந்த திருமணம் வேண்டாம் என்று, மாப்பிளை வீட்டார் வருவதற்கு சில நொடிகள் இருக்கும் வரை, தன்னிடம் அவ்வளவு கெஞ்சியவள், இப்பொழுது சரி என்கிறாளே! என்று வைகுண்டராஜன் மனைவியை பார்க்க, தன் கணவரின் பார்வையை புரிந்து கொண்டு,



"இந்த வயசுலயே யாருடைய சிபாரிசும் இல்லாம, தன்னுடைய சொந்த முயற்சியில முன்னேறி இருக்கிறவருக்கு, எவ்வளவு அனுபவமும் பக்குவமும் இருக்கும்.



அதான் பேசுற விதமா பேசி, நம்ம யாத்து குட்டியை சம்மதிக்க வச்சிருப்பாரு. அவரு தான் சொன்னாரே எல்லாம் அவரே பார்த்துக்குவாருனு.



இனி நாம நம்ம பொண்ணைப் பத்தி எந்த கவலையும் இல்லாம இருக்கலாம். எல்லாம் நம்ம மாப்பிள்ளையே பார்த்துக்குவாரு" என்று சாவித்ரி கூற வைகுண்டராஜனுக்கும் மனைவி கூறியதில், மனம் நிறைவாக இருந்தது.


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை கிளிக் செய்யவும்.


அத்தியாயம் 3
 
Last edited:

Author: Naemira
Article Title: அத்தியாயம் 2
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Joined
Dec 16, 2024
Messages
5
ஆத்தாடி ஆத்தி இந்த பிள்ளைய விரும்புனதுக்கு ஆரிய தலைகீழா தண்ணிக்குடிக்க வைப்பா போல 😄😄😄😄😄😄😄
 
Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
ஆத்தாடி ஆத்தி இந்த பிள்ளைய விரும்புனதுக்கு ஆரிய தலைகீழா தண்ணிக்குடிக்க வைப்பா போல 😄😄😄😄😄😄😄
நம்ம ஆளு கொஞ்சம் அப்டி தான் டியர்.
Thank u for your comment pa
 
Top