Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 4

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
இதுவரை..

நெஞ்சம் படபடக்க நின்றிருந்தவளோ,

"நான் போக.." போகணும் என்று முழுவதும் சொல்லி முடிப்பதற்குள், அவளை ஜன்னல் அருகே அழைத்து வந்த ஆரி, தன்னையே மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவளின் வதனத்தை பிடித்து திருப்பி, அவள் எதிரே இருந்த, இருண்ட வானில், ஒளிர்ந்து கொண்டு இருக்கும் முழுநிலவை பார்க்க செய்தவன், அப்படியே யாத்ராவை, பின்னால் இருந்து தன்னுடன் நெருக்கி அணைத்திருந்தான்.

இனி..

ஜன்னல் வழி வந்த மெல்லிய காற்று, அர்ஜுனனின் தேகம் தொட்டு குளிரூட்ட, அவனவளின் ஆடை தாண்டி வந்த வெப்பமோ ஆணவனுக்கு காதல் தீயை பற்றவைத்ததில், தன் இளமை தள்ளாட உலகம் மறந்து நின்றிருந்தான் ஆரி அர்ஜுனன்.



நொடிகள் நிமிடங்களாக கடந்திருக்க, சில நொடிகள் கழித்து, மெல்ல தன்னவளின் விரிந்திருந்த கூந்தலை அவளது காதுக்கு பின்னால் ஒதுக்கிய ஆரி மெல்ல குனிந்து அவளின் காதில் தன் மூச்சு காற்றின் வெப்பம் பட,



"ரொம்ப நேரமா நானும் வேண்டாம்னு தான் பார்த்துட்டு இருக்கேன், ஆனா சத்தியமா முடியல டா மா" என ரகசிய குரலில் கூறினான்.



ஆரி கூறியதை கேட்டு சுயம் பெற்றவள், அவனிடம் இருந்து விலக எத்தனிக்க, யாத்ரா விலகவும் அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துக்கொண்டவன்,



"நோ நாட் நவ் போகாத" என்று அவளது கழுத்தில் தன் இதழை வைத்து உரசியபடி கிறக்கமாக கூறினான்.



யாத்ராவோ, "விடுங்க நான் போகணும் அர்ஜுனன்" என கண்டிப்பான குரலில் கூற, அவனை தள்ளி நிறுத்திய அவளது அர்ஜுனன் என்ற விழிப்பில் தன் பிடியை தளர்த்திய ஆரி, யாத்ராவை தன் முகம் பார்க்க திருப்பி நிறுத்தி, "ஆரி சொல்லு விடுறேன்" என்றான் அவளை அணைத்தபடி.



யாத்ராவோ, "முடியாது! நீங்க கேட்டா நான் சொல்லனுமா, ஆம்பளை திமிரை காட்டுறீங்களா? சரியான ஆண் ஆதிக்கம் புடிச்சவரு" என்றவள் 'ஆண் ஆதிக்கம்' என்று சொல்லும் பொழுது இன்னும் ஆக்ரோஷமாக சொல்ல, ஆரிக்கு சிரிப்பு தான் வந்தது.



"ஆரின்னு என் பேர் சொல்ல சொன்னா அது ஆண் ஆதிக்கமா?" என்று சிரித்தபடி ஆரி வினவினான்.



அவன் சிரிக்கவும் கோபம் கொண்டவள், "ஆமா ஆண் ஆதிக்கவாதி தான் நீங்க, இதுல மட்டும் இல்லை எல்லா விஷயத்துலையும், பிடிக்கலைனு நான் சொல்லியும் கல்யாணத்துல தொடங்கி, இதோ இப்போ என்கிட்ட நீங்க இப்படி நடந்துக்குறீங்க பார்த்தீங்களா, இதுவும் ஆண் ஆதிக்கம் தான்." என்று ஏதோ ஆரி தான் ஆண் ஆதிக்கத்தின் மொத்த உருவம் என்பது போல அவள் பேச, ஆரி அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.



இத்துடன் அவள் நிறுத்தவில்லை, இன்னும் ஏதேதோ கூறினாள், சுற்றம் உணராது பேசினாள், சுயம் மறந்து பேசினாள், ஏன் மூச்சு கூட விட மறந்து பேசிக்கொண்டே இருந்தாள்.



காரணம் இல்லாமல் கண்ணீர் விழிகளில் இருந்து வழிந்து கொண்டே இருக்க, முகம் முழுவதும் வியர்வை முத்துக்கள் அரும்ப துவங்கியது.



யாத்ராவின் உடலில் ஏற்படும் மாற்றத்தை அவதானித்து கொண்ட ஆரி, எந்த உணர்வையும் தன் முகத்தில் காட்டவில்லை. அவளின் ஆவேசமான பேச்சுக்கு தடை சொல்லாது, அவளது விழிகளை பார்த்தபடியே மற்றொரு ஜன்னலை மட்டும் திறந்து விட்டான்.



சட்டென்று வந்த குளுமையான தென்றல் காற்று, யாத்ராவின் முகத்தில் பட்டதும், கண்களை மூடி திறந்தவளுக்கு வேகமாக மூச்சு வாங்கியது.



அப்பொழுதான் யாத்ராவுக்கு தான் இத்தனை நேரமும், மூச்சை விட மறந்து பேசிக்கொண்டிருந்திருக்கின்றோம் என்பதே புரிய நிமிர்ந்து ஆரியை தான் பார்த்தாள். அவனும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.



'ஏன் இப்படி பார்க்கிறான், கோபத்துல எதை சொன்னோம் எதை விட்டோம்னு எதுவுமே புரியலையே' என்று எண்ணியவளுக்கு இப்பொழுது தலை பயங்கரமாக வலிக்க துவங்கியது.



மனதையும் தலையையும் யாரோ பிடித்து பயங்கரமாக அழுத்துவது போல தலையும் இதயமும் வலித்தது. ஒரு கையால் தன் தலையை பிடித்தவள், மறுகையால் தன் நெஞ்சை அழுத்தி பிடித்தாள்.



யாத்ராவின் ஒவ்வொரு செய்கையையும் பார்த்து கொண்டே இருந்தவன், தன்னவளை இயல்புக்கு கொண்டு வரும் பொருட்டு,



"ஆமா ஆண் ஆதிக்கவாதி தான் நான். ஆரி சொல்லு விடுறேன்" அவளது மென் இடையை, தன் இரு கரங்களால் பற்றி, தன் பக்கம் இழுத்தபடி கூறினான். ஆரி அவ்வாறு செய்யவும், அவனது பிடியில் இருந்து விடுபட முனைத்தவள்,



"விடுங்க" என்றாள் தன் பல்லை கடித்தபடி, அவனோ மறுப்பாக தலையசைத்தவன்,



"ஆரி சொல்லு விடுறேன்" என்று சொன்னபடி அவளை அப்படியே திருப்பி, அவள் பின்னால் இருந்து தன் நெஞ்சோடு அணைத்து கொண்டான்.



இப்பொழுது அவனது வலிமையான கரங்கள் இரண்டும், அவளது நெற்றியை மிகவும் மென்மையாக அழுத்தி அழுத்தி விடுவித்தான்.



ஆரி அவ்வாறு செய்யவும், அவள் இதுவரை கொண்ட அழுத்தம் அத்தனையும், மெல்ல மெல்ல அவளை விட்டு நீங்கியது போல மிகவும் லேசாக உணர்ந்தவள், தன்னை மறந்து அவன் மார்பில் சாய்ந்து, தன் பின்னந்தலை அழுத்தமாக பதிந்திருக்க நின்றிருந்தாள்.



நொடிகள் நிமிடங்களாக நீடித்து கொண்டிருக்க, மிக துல்லியமாக கேட்ட அவனது இதயத்துடிப்பில் சுயம் பெற்றவள், வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அவன் அருகாமைக்கும், அவனது தொடுகைக்கும் உருகிவிடும் தன் மீதே கோபம் கொண்டு, வேகமாக அவனை விட்டு விலக, அதே வேகத்தில் அவளது கரத்தை பிடித்தவன், 'ம்ஹூம்' விலகாதே என்பது போல தன் தலையை அசைத்தவன்,



"நான் கேட்டதை சொல்லாம போனா எப்படி? ஆரி சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம்" என்று புன்னகைத்தபடி வம்பாக கூறினான்.



"ம்ம் ஆரி சொல்லனுமா, நான் செத்தாலும் சொல்ல மாட்டேன் விடுங்க" என பட்டென்று கூறிய யாத்ரா, அவனது பிடி தளரவும் அவனிடம் இருந்து விலகினாள்.



யாத்ரா கூறியதை கேட்ட அர்ஜுனனுக்கு, அதுவரை மனதில் இருந்த இதமான எண்ணம் அத்தனையும், இருந்த இடம் தெரியாது மறைந்துவிட, இப்பொழுது அவனுக்குள் உண்டான கோபமோ அவன் கொண்ட கட்டுப்பாட்டை உடைத்தெறிய செய்ததில், எட்டி யாத்ராவின் கரத்தை பிடித்து இழுத்தவன், அவளை சுவற்றுடன் சாய்த்தான்.



காய்ச்சல் காரனின் மூச்சு காற்று போல, அவனது மூச்சு காற்று, அவளது முகத்தில் பட்டு அனல் வீச, கோபத்துடன் அவளை பார்த்த ஆரி, "என்ன வார்த்தை பேசுற, நானும் பார்த்துட்டே இருக்கேன், சின்ன பொண்ணுனு பார்த்தா, ஓவரா பேசுற. அதென்னடி எப்ப பாரு செத்துருவேன் செத்துருவேனு சொல்லிட்டு இருக்க, அன்னைக்கே அப்படி பேசாதனு சொன்னேன்ல" கண்டிப்புடன் வினவினான்.



ஆரி அவ்வாறு கேட்கவும் அவனது விழிகளை நேருக்கு நேராக சந்தித்து, "நான் இப்படி பேசுறது உங்களுக்கு புடிக்கலைல, அப்போ அப்படி தான் பேசுவேன், உங்களால முடிஞ்சதை பண்ணிக்கோங்க. இப்போ என்னை விடுங்க" என்றாள் வீம்பாக.



"அப்படியா அப்போ நானும் உன்னை விடுறதா இல்லை. அன்னைக்கே உன்னை வார்ன் பண்ணினேன். இப்படி பேச கூடாதுனு" என்றான் கோபமாக.



அதற்கு அவளோ, "நீங்க சொன்னா நான் கேட்கணுமா? முடியாது. நான் அப்படி தான் பேசுவேன்" என்று வீம்பாக கூறியவள் அதே வீம்புடன், "உயிரே போனாலு.." என்று ஆரம்பிக்க,



ஆரியோ, "இனிமே உன் வாழ்க்கையில இப்படி பேசவே நீ யோசிக்கணும். என்ன சொன்ன? முடிஞ்சத பண்ணிக்கணுமா. என்னால என்ன முடியும்னு நான் காட்றேன்" என்றவன் யாத்ரா எதிர்பார்க்காத சமையத்தில், சட்டென்று குனிந்து அவளது உதடுகளை தன் இதழ் கொண்டு சிறைபிடிக்க, யாத்ராவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்துகொண்டது.



சில நொடிகளில் சிறப்பட்டிருந்த அவளது அதரத்தை விடுவித்தவன், அதிர்ச்சியில் விழி விரித்து நின்றிருந்தவளிடம், "அம்மா தாயே நீ பேசினதெல்லாம் போதும், இனிமே நீ வாய திறந்து பாரு, இப்போ போல உடனே எல்லாம் விடமாட்டேன்" என்று கூற, அவன் பேச்சில் அதிர்ச்சியிலிருந்து மீண்டவள் கோபத்தில் அவனை முறைத்தபடி,



"என்ன நெனச்சிட்டு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க. உங்களை.." என்று ஆவேசமாக ஆரம்பித்தவளின் மீதி வார்த்தைகளுடன் சேர்ந்து இதழ்களும் அவனது இதழ்களுக்குள் சிறைப்பட்டன.



பெண்ணவளின் இதழில் தன் இதழ் கொண்டு போர் தொடுத்தவன், சொன்னது போலவே முத்த யுத்தத்தை நீடித்து கொண்டே சென்றான்.



ஆரி மேல் கோபம் வந்தாலும் அதை தாண்டிய ஏதோ அவனை நோக்கி தன்னை ஈர்க்கவும், அவனது தீண்டலில் பனி சிற்பம் போல உறைந்துவிட்டவள், ஆரி கொடுத்த முத்தத்தை வாங்கிக்கொண்டு விழிகள் படபடக்க அப்படியே நின்றிருந்தாள்.



தன்னவளின் இதழ்களை மேலும் மேலும் திகட்ட திகட்ட சுவைத்த ஆரி, நொடிகள் கடக்க கடக்க அவள் உயிரையே தனக்குள் இழுப்பது போல, அவளது ஆதரங்களை மென்மை கலந்த அழுத்ததுடன் ஆக்கிரமித்திருந்தான் அர்ஜுனன்.



தன்னவள் மூச்சு காற்றுக்கு ஏங்கவும் முத்த போரை முடித்து கொண்டவன், "கடைசி வார்னிங் எவ்வளவு வேணும்னாலும் பேசிக்கோ ஆனா பேசின ஒவ்வொரு வார்த்தைக்கும் சேர்த்து வச்சு முத்தம் கொடுப்பேன்" என்ற ஆரிக்கு, எப்பொழுதும் தன்னுடன் வார்த்தைக்கு வார்த்தை வாயாடுபவள், இப்பொழுது அமைதியாக தலை கவிழ்ந்த நிலையில் நிற்கவும், என்னவோ போல் ஆகிவிட்டது.



வெளியேறுவதற்காக வாசல் வரை சென்றவன், தன் கண்களை அழுத்தமாக மூடி திறந்து, அப்படியே திரும்பி வேகமாக யாதிராவிடம் வந்து, அவளை அப்படியே தன் மார்போடு அழுத்தமாக அணைத்துக்கொள்ள, அவளது விழிகளில் இருந்து கண்ணீர் இறங்கியது.



அழுகிறாள் நன்றாகவே தெரிந்தது ஆனாலும் அவன் ஏன் அழுகிறாய் என்று கேட்கவும் இல்லை, அழாதே என்று தடுக்கவும் இல்லை, அவளை விலக்கவும் இல்லை ஏன் வார்த்தைக்கு வார்த்தை வேண்டாம் என்று சொல்லுபவள் கூட அவனிடமிருந்து விலகவில்லை.



ஆரியின் ஆத்மார்த்தமான அணைப்பு, அவளது ஆழ் மனதின் அழுத்தங்களை தட்டி எழுப்பியதோ என்னவோ, அவள் அழுது கொண்டே இருக்க, இப்பொழுது மெதுவாக அவளது கேசத்தை ஆரி தடவிக்கொடுத்தது தான் தாமதம், யாதிராவிடம் இருந்து விசும்பல் இன்னும் அதிகமானது.



அப்பொழுது பார்த்து ஆரிக்கு அவனது அலைப்பேசி சிணுங்கவும், யாத்ராவை விலக்கிவிட்டு, அலைபேசியை எடுத்து பார்த்தான்.



அவனது மேல் அதிகாரி தான் அழைத்துக்கொண்டே இருந்தார். முக்கியமான அழைப்பு, எடுத்து பேசியே ஆக வேண்டிய கட்டாயம். ஆனால் தன் முன்னே, கண்கள் மூடிய நிலையில், ஏங்கி ஏங்கி அழுபவளை பார்க்க பார்க்க, அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட, அப்படியே அவளை அங்கே விட்டு செல்ல ஆரிக்கு மனம் வரவில்லை.



அலைபேசியை சைலன்டில் போட்டவன்,



"யாத்ரா" மென்மையாக அழைத்தான்.



கண்களை கூட திறக்காது அப்படியே நின்றிருந்தாள். நீண்ட பெருமூச்சை வெளியிட்டவன்,



"கண்ணை மூடிட்டு என் கையை புடிச்சிக்கோ, நான் பார்த்துக்குவேன் யாத்ரா." என்றபடி தன்னவளை நெருங்கி வந்து, அவளது விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரை, தன் இதழ் கொண்டு ஒற்றியெடுத்த அர்ஜுனன், மீண்டும் தன்னவளது இதழை தன் அதரம் கொண்டு சிறைபிடித்தான்.



ஆண்மைக்கும் மென்மை உண்டு என்பது போல, மிகவும் மென்மையாக தன்னவளின் செவ்விதழை ஆட்கொண்டவன், சிறிது நேரம் கழித்து யாத்ராவை தன்னிடம் இருந்து விலக்கி, அவளது வலது கரத்தை பிடித்து,



"எந்த பயமும் வேண்டாம், சந்தோஷமா லைஃப் ஸ்டார்ட் பண்ணலாம்" என்றுக்கூறி அவளின் மென்கரத்தை மென்மையாக வருடியபடி அவளது உச்சந்தலையில் முத்தமிட்டவன், யாத்ராவுக்கு தனிமை கொடுத்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டான்.



ஆரி தன் உச்சந்தலையில் முத்தமிட்ட கணம், கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டவள், அவன் அங்கிருந்து சென்ற பிறகு, மெதுவாக கண் திறந்த பொழுது, சுகமான ஏதோ ஒன்று கடினப்பட்டு கிடந்த அவளது மனதை இதமாய் வருடி சென்றது.



இத்தனை நேரம் அவன் கொடுத்த இதழ் முத்தங்களை தாண்டி, அவன் கொடுத்த உச்சந்தலை முத்தமும், ஆத்மார்த்தமான அணைப்பும் பெண்ணவளை என்னென்னவோ செய்தது.



ஐயர் நல்ல முகூர்த்த நேரத்தில் மணவோலையை படிக்க, அனைவரின் முன்னிலையிலும், சாவித்ரி ஆரியிடம்,



"தம்பி இந்தாங்க யாத்ரா விரல்ல இந்த மோதிரத்தை போடுங்க" என மோதிரத்தை நீட்டினார்.



சாவித்ரி கொடுத்த மோதிரத்தை வாங்கி கொண்ட ஆரி அர்ஜுனன், யாத்ராவின் விரலில் மோதிரத்தை அணுவிக்க, முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இன்றி, மறந்தும் கூட புன்னகைக்காது, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி, எந்திரம் போல நின்றிருந்த யாதிராவை பார்த்து சாவித்ரிக்கு தான் சங்கடமாக இருந்தது.



பின் ஜானகி தான் கொண்டு வந்த மோதிரத்தை யாத்ராவிடம் கொடுக்க, மறுக்காமல் வாங்கியவள், ஆரியின் கரத்தை பட்டும் படாமலும் பற்றினாள்.



முகமெல்லாம் மகிழ்ச்சியின் ரேகை படர்ந்திருக்க, புன்னகையுடன் நின்றிருந்த ஆரியின் முகத்தை, கரத்தைப் பற்றிய படி நிமிர்ந்து ஒருகணம் பார்த்தவள், கனத்த மனதுடன், கடமைக்காக அவனது விரலில் மோதிரம் அணிவித்தாள்.



ஒருவழியாக ஆரி யாத்ராவின் நிச்சயதார்த்தம் சிறப்பாக முடிய, திருமண நாளும் அழகாக சீக்கிரமே விடிந்தது.



ஆனால் விடிய விடிய எதை நினைத்தோ உறங்காமல் விழித்திருந்த யாத்ராவோ, அப்பொழுது தான் தூங்க ஆரம்பித்திருக்க, அவளை எழுப்பி கிளப்புவதற்குள், சாவித்ரிக்கு தான் போதும் போதும் என்றாகிவிட்டது.



ஆனால் அர்ஜுனனோ சீக்கிரமே எழுந்து குளித்து முடித்திருக்க, அதை கண்ட அவனது நண்பர்கள் அகரன் மற்றும் அழலன் தான் ஒட்டி தள்ளிவிட்டனர்.



"டேய் முஹுர்த்தத்துக்கு இன்னும் டைம் இருக்கு டா, உன் ஆர்வத்துக்கு ஒரு அளவில்லையா? விட்டா இப்போவே கல்யாணம் பண்ணுவான் போலையே" என அழலனுடன் சேர்ந்து கொண்டு, ஆரியை பார்த்து இன்னும் ஏதோ கூறி, சத்தமாக சிரித்து, ஆரியின் கரத்தால், நான்கு அடியையும் இலவசமாக பெற்று கொண்டான் அகரன்.



இங்கே மணமகள் அறையில்,



"ஏய் அம்மு என்ன இது? ஒழுங்கா நில்லு" என தூங்கி வழிந்த யாத்ராவின் தலையில், நறுக்கென்று கொட்டிய சாவித்ரி, தங்க ஜரிகையில் நெய்த பிங்க் நிற பட்டுப்புடவையை மடிப்பெடுத்து அழகாக கட்டி விட்டார்.



பின்பு யாத்ராவை அமர வைத்து வந்திருந்த பியூட்டி பார்லர் பெண் சிகை அலங்காரம் செய்து விடவும், சாவித்ரி யாத்ராக்கென்று மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்த நகைகளை கொண்டு வந்து கொடுத்தார்.



நகை பெட்டியை பார்த்ததும், திறந்து பார்த்த யாத்ரா, அதில் இருந்த நகைகள் அனைத்தையும் ஒரு கணம் பார்த்துவிட்டு தன் தாயிடம் ,



"ம்மா நீங்க எனக்கு வாங்கிக்கொடுத்தது இது இல்லையே!" என்று யோசனையாக கேட்க அவரோ,



"இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுல இருந்து உனக்காக வாங்கிட்டு வந்தது. ஒவ்வொன்னும் உனக்காக பார்த்து பார்த்து வாங்கிருக்காங்க, உன் மேல அவங்களுக்கு அவ்வளவு பிரியம் டா. எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. அர்ஜுனன் தம்பி நகை பணம்னு எதுவும் வாங்க கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாராம். அவரு கிடைக்க, நீ நிஜமாவே கொடுத்து வச்சிருக்கணும்டா" என்றார் பூரிப்பாக.



"உங்களை விட வசதியில நாங்க கூடன்னு, அவங்க சொல்லாம சொல்லிருக்காங்க, அது புரியாம நீங்க வேற" என யாத்ரா சலித்துக்கொள்ள.



"ஏய் ஏன்டி நீ இப்படி இருக்க? எல்லா விஷயத்திலயும் குறை கண்டுபுடிச்சிட்டே இருக்க, கல்யாண பொண்ணு நீ, கொஞ்சமாவது சந்தோஷமா இருக்கியா? மூஞ்சை பாரு" என்றார் சாவித்திரி கோபமாக.



"நான் வேண்டாம்ன்னு சொல்ற அத்தனையும் வற்புறுத்தி செய்ய வைக்கிறீங்க. இதில் சிரிக்க இதுல சிரிக்க வேற செய்யனும்னா எப்படி? நீ கோபத்துக்கு காரணமே நீங்கதான். உங்களுக்காக தான் இங்கே வந்து, இப்படி உட்கார்ந்து இருக்கேன்."



"என்னால என்னாலன்னு சொல்ற, இதெல்லாம் உனக்காக தான் பண்ணிட்டு இருக்கோம் அது உனக்கு புரியுதா டி"



"உங்களுக்கு முதல்ல என் வலி புரியுதா" காட்டமாக வினவினாள்.



"அதையே எத்தனை நாளைக்கு சொல்லிட்டு இருக்க போற"



"மறக்கக் கூடிய விஷயமா அது"



"அது எல்லாத்தையும் மறந்துட்டு நீ சந்தோஷமா இருக்கிறதுக்காக தான் இதெல்லாம்"



"சந்தோஷமா" என்று கூறி விரக்தியாக சிரித்தவள், "அது இனி என் வாழ்க்கையிலும் இருக்கப் போறதில்லை, அவன் வாழ்க்கையிலும் இருக்க போறது இல்ல.



உங்க வாழ்க்கையிலும் இருக்க போறதில்லை." என்று அவள் சொல்லவும், யாத்ரா என்று சீறினார் சாவித்திரி.



"நீங்க என்கிட்ட கோபப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை. மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு தலையில தூக்கி வச்சு கொண்டாடிட்டு இருக்கீங்களே மிஸ்டர் ஆரி அர்ஜுனன், என்னை பத்தி எல்லாம் உண்மையும் ஒரு நாள் தெரியவரும் பொழுது, என்னை குப்பை போல தூக்கி வீசிட்டு போயிட்டே இருக்க போறான். அப்ப தெரியும் உங்களுக்கு அவனோட சுயரூபம்"



"சொல்லக்கூடாதுன்னு கட்டளையா சொன்னது நீ தான்" கோபமாக கூறினார் சாவித்திரி.



"ஏன் சொல்லணும்? உண்மைய சொல்லி, அவன் முன்னாடி கூனிக்குறுகி நிக்கிறதுக்கு, நானா அவன் வேணும்னு சொன்னேன். வேண்டாம்னு அவ்வளவு சொல்லியும், வேணும்னு பிடிவாதம் பிடிக்கிறது அவன். கட்டாயப்படுத்துறது நீங்க. சோ இனி வரப்போற, பின்விளைவுகள் எதுக்குமே நான் பொறுப்பு இல்ல.



நான் சொல்றதை எழுதி வச்சிக்கோங்க குப்பைய விட மோசமா என்னை தூக்கி போட்டுட்டு போக தான் போறான்" என்று கண்கள் சிவக்க யாத்ரா கூற, அவளை வருத்தத்துடன் பார்த்த சாவித்திரி, நான்கு ஐந்து வார்த்தைகள் அடங்கிய ஒரு வரி தான் கூறினார்.



அதைக் கேட்டதும் நாற்காலியில் தோய்ந்து அமர்ந்த, தன் மகளின் தலையை சாவித்திரி மென்மையாக வருட, தனது தாயின் வயிற்றில் முகம் பதித்து, அவரை இடையோடு கட்டிக்கொண்டாள் யாத்ரா.



கோபம், வெறுப்பு, வேண்டாம், பயம் என்று மனதிற்குள் யாத்ராவுக்கு, இந்த திருமணத்தை குறித்தும், அர்ஜுனனை குறித்தும் பல கருத்துக்கள் இருந்தாலும்.



வெளியில் அர்ஜுனனை அவ்வளவு திட்டினாலும், அர்ஜுனனை எண்ணி யாத்ராவுக்கு ஒரு கணம் மலைப்பாக தான் இருந்தது.



ஏனெனில் அர்ஜுனனை பற்றி அவள் ஒன்று எண்ணியிருக்க, ஆனால் அவனது செயல் எல்லாம் வேறு மாதிரியாக அல்லவா இருந்தது.



ஏற்கனவே அவன் காட்டிய மென் காதலில், அவள் மனம் ஒருபக்கம் அவனிடம் வீழத் துடித்துக் கொண்டிருக்க, இப்பொழுது திருமணத்தில் அவளுக்காக அவன் பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு காரியமும், யாத்ராவை பிரமிக்க வைத்தது.



இந்த மாதிரி நிகழ்வையெல்லாம் இதுவரை படங்களிலும், புத்தகங்களிலும் மட்டுமே பார்த்து படித்திருந்தவளுக்கு. தனக்காகவே ஒருவன் இவ்வளவு செய்யவும், தான் இதற்கெல்லாம் தகுதியானவள்தானா என்று அவளுக்குத் ஒரு கணம் தோன்றினாலும், மறுகணமே இதெல்லாம் ஏன் நடிப்பாக இருக்கக் கூடாது என்கிற எண்ணமும் அவளுள் தோன்றுவதை, அவளால் தவிர்க்கவே முடியவில்லை.



வேண்டாம் வேண்டும் என்பதற்கு இடையே சிக்கிக் கொண்டவளுக்கோ தன் நிலையை எண்ணி கோபமாக வர, "எல்லாம் மறந்து நிம்மதியா இருந்தேன், அத்தனையும் கெடுத்துட்டான்" என்று பல்லை கடித்தவளோ, அவன் கொடுத்த அனைத்து நகைகளையும் தவிர்த்து விட தான் எண்ணினாள்.



பின்பு தன் பெற்றோரையும், ஆரியின் பெற்றோரையும் காயப்படுத்த விரும்பாதவள், விருப்பமே இல்லாமல் அவற்றை அணிந்து கொண்டாள்.



@@@@@@



மனமே இல்லாமல் தயாராகி இருந்தாலும், மணக்கோலத்தில் பெண்களுக்கே உரிய இயற்கையான அழகுடன், செயற்கை அழகும் இணைந்துகொள்ள, வேறு என்ன வேண்டும்? விண்ணில் இருந்து மண்ணுக்கு வந்த தேவதையை போல அர்ஜுனனை குளிர வைக்கும் குளிர் நிலவாய் படியிறங்கி வந்தாள் அவனது யாத்ரா .



வெள்ளை நிற பட்டு வேஷ்டி மற்றும் சட்டையில் ஆண்மையின் திருவுளமாய் கம்பீரத்துடன், தன்னவளை பற்றிய சிந்தனையில் மணமகனுக்கே உரிய எதிர்பார்ப்புடன், அமர்ந்து ஐயர் கூறிய மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருந்தான் ஆரி அர்ஜுனன்.



பட்டு புடவையில் நகைகள் மேனியை அலங்கரிக்க, மணப்பெண்ணுக்குரிய அழகுடன் தோழியர் சூழ நடந்து வந்தாள் யாத்ரா.



யாத்ராவின் வரவை அடிக்கடி எதிர் நோக்கியிருந்த ஆரிக்கோ, அவளை கண்டதும் அவனது இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது.



அந்தநேரம் பார்த்து அகரனின் அலைபேசி சினுங்க அட்டென்ட் செய்தவன் ,



"சரி விட்றாதீங்க நான் உடனே வரேன்" என்றவன், அர்ஜுனனின் காதருகில் வந்து விஷயத்தை கூற, அப்பொழுது அர்ஜுனனின் முகம் கடுகடுவென மாறியதை யாரும் கவனிக்க வில்லை.



"டேய் ரிலாக்ஸ், கல்யாணத்தை முடி அப்புறம் பார்த்துக்கலாம்" என்று ஆரிக்கு சமாதானம் சொல்லிய அகரன், அழலனை ஆரியுடன் இருக்கும் படி சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட, தன்னை சமன் செய்த ஆரி நினைவு வந்தவனாக பக்கவாட்டாக திரும்பி தன்னவளை பார்த்தான்.



கோபம் நொடியில் மறைத்து மனதில் இதம் பரவியது. இதழில் மெல்லிய புன்னகை ஒன்று ஒட்டிக்கொள்ள, யாத்ராவை மணக்க போகும் ஆவலில், ஒருவித எதிர்பார்ப்புடன் அமர்த்திருந்தவன், முகூர்த்த நேரம் நெருங்கவும் ஐயர் கொடுத்த திருமாங்கல்யத்தை வாங்கி காதலாட யாத்ராவின் கழுத்தில் கட்டினான்.



முதல் இரெண்டு முடிச்சை போட்டவன், மூன்றாவது முடிச்சையும் யாருக்கும் விட்டு கொடுக்காமல் தானே போட்டு, பிறர் கவனம் கவராது அவளது செவி மடலை தன் வார்த்தைகள் உரச,



"ஐ லவ் யூ கண்ணம்மா" என ஆத்மார்த்தமான குரலில் தன் காதலை உரைத்து விட்டு, திரும்பி நேராக அமர்ந்தான்.



வெறும் வார்த்தைகள் உணர்வுகளை தூண்டுமா? தேகத்தை சிலிர்க்கவைக்குமா? வாடிய மனதை துளிர்க்க செய்யுமா என்ன? இதோ இங்கே நடக்கிறதே ஆரி கூறிய 'ஐ லவ் யு கண்ணம்மா' என்ற நான்கே வார்த்தைகள் யாத்ராவின் மரித்த உணர்வுகளை தூண்டி, வாடிய மனதை துளிர்க்க செய்து தேகத்தை சிலிர்க்க வைக்கின்றதே.



ஆணவனின் வார்த்தைகள் செவி மடலை உரசவும் பெண்ணவளுக்கு முதுகுத்தண்டு சிலிர்த்தது, கூடவே அவனது குரலில் தெரிந்த மென்மை அவளுக்குள் ஏதேதோ செய்தது.



ஆரியின் தீண்டல் ஒன்றும் அவளுக்கு புதிதல்ல. ஆனால் அவனது வார்த்தைகள் எதையோ அவளுக்கு வெளிப்படுத்த அது யாத்ராவின் மனதில் ஒரு வித கலவையான உணர்வை தோற்றுவித்தது. ஆனால் அதெல்லாம் சில நொடிகளுக்கு தான், பின்பு எதையோ எண்ணி மீண்டும் அர்ஜுனன் மீது உள்ள கோபத்தை இழுத்து பிடித்துக்கொண்டவள், இறுக்கமாகவே அமர்ந்திருந்தாள்.



அனைத்து சடங்குகளும் முடிந்து, பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் போது, யாத்ராவின் கண்களில் கண்ணீர் திரண்டு கொண்டு வந்தது.



இப்படி ஒரு நிகழ்வு இனி தன் வாழ்வில் நடக்கவே நடக்காது என்றிருந்த யாத்ராவுக்கு, இப்போது தன் வீட்டினரை பிரிய வேண்டுமே என்ற நினைப்பு கவலையை கொடுத்தது .



தன்னவளின் மனநிலையை உணரந்தவனாக அர்ஜுனன் அவளது கரம் பிடித்து தைரியம் கூற, அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது .



மகளை தனியாக அழைத்த சாவித்ரி அவளின் தலையை வருடி,



"உன்னை பாரமா நினைச்சு, நாங்க கல்யாணம் பண்ணிக் குடுக்குறோம்னு தயவு செஞ்சு தப்பா நினைக்காத பா.



நீ எங்களுக்கு பாரம் கிடையாது எங்களுக்கு கிடைச்ச வரம். எங்க காலத்துக்குப் பிறகு உனக்கு பாதுகாப்பான ஒரு நல்ல துணை அவசியம். அந்த பாதுகாப்பை நம்ம மாப்பிள்ளை அர்ஜுனனை தவிர வேற யாரும் கொடுக்க முடியாது. அதை நீ புரிஞ்சிக்கணும்" என மகள் தன்னை புரிந்துக் கொள்ள வேண்டுமே என்ற தவிப்பில் தன் மனதில் உள்ளதை கூற, அவள் கண்ணீர் வடித்தாள் .



அப்பொழுது அங்கே வந்த அர்ஜுனன்,



"கவலைப்படாத யாத்ரா, நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால, உன் லைஃப்ல எதுவும் பெருசா மாறிட போறதில்ல. நீ நீயாத்தான் இருக்கப் போற." என்று வெளிப்படையாகவே தன் மனைவியை தேற்றி விட்டு, அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு சென்றுவிட, ஆனால் அவன் கூறியதை எதையும் தன் கருத்தில் கொள்ளாத யாத்ரா, அர்ஜுனனின் பக்கம் கூட திரும்பாமல் அவனை அலட்சியப்படுத்தினாள்.



அதைக் கண்டு சாவித்ரிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது,



'நல்ல வாழ்க்கைய இவளே கெடுத்துவிடுவா போலையே' என மனதிற்குள் பயந்தவர் அவளிடம்,



"என்னடி? நானும் பாத்துக்கிட்டே இருக்கேன். மாப்பிள்ளைக்கிட்ட மூஞ்ச காட்டிட்டே இருக்க. சரி இல்லை பார்த்துக்கோ " என்று சீறியவர்,



"மாப்பிள்ளை மனம் கோணாம நடந்துக்கணும், அதை விட்டுட்டு கண்டதையும் நினைச்சிட்டு இருந்த, அவ்வளவு தான் சொல்லிட்டேன். ஒழுங்கா அவர் கூட இணக்கமா வாழ்ற வழிய பாரு" என்று சாவித்ரி கூற யாத்ராவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது .



"அம்மா" என்று கலக்கத்துடன் பார்த்தவளை,



"நம்பு டி உன் வாழ்கை நல்லா இருக்கும். வாழ்ந்து பார்த்தா தானே தெரியும், நம்பிக்கையோட போ, எல்லாமே சரியாகிடும்." என்ற சாவித்ரி இன்னும் பல அறிவுரைகளை சொல்லியவர், மறைமுகமாய் மகளுக்கு நிதர்சனத்தை புரியவைக்க முயற்சித்தார்.



ஆனால் பேசிய பின்பு யாத்ராவின் மனமோ இன்னும் இருளடைந்து காணப்பட, வைத்தீஸ்வரனும், ஜானகியும் தாய் தந்தையை பிரிய போகும் சோகத்தில், இருக்கும் தங்களின் மருமகளை ஆறுதல் படுத்தினர்.



இப்படியே ஆரி அர்ஜுனன் மற்றும் யாத்ராவின் திருமணம் இனிதாய் அன்றைக்குரிய கொண்டாட்டத்திலும், பரபரப்பிலும் நல்லபடியாக முடிந்தது.


அடுத்த அத்தியாயத்தை
படிக்க கீழே உள்ள திரியை
கிளிக் செய்யவும்.

அத்தியாயம் 5
 
Last edited:

Author: Naemira
Article Title: அத்தியாயம் 4
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Joined
Dec 16, 2024
Messages
5
யாத்ரா வாழ்க்கைல அப்படி என்ன நடந்தது விரக்தியா இருக்க 🤔🤔🤔🤔🤔
 
Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
யாத்ரா வாழ்க்கைல அப்படி என்ன நடந்தது விரக்தியா இருக்க 🤔🤔🤔🤔🤔
சீக்கிரம் தெரிஞ்சிக்கலாம் டியர் ❤️
 
Top