Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 8

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
யாத்ராவை அடித்த பிறகும் அர்ஜுனனின் மனக்கொதிப்பு மட்டும் அடங்கவேயில்லை, 'அவளுக்கு ஒரு அறையெல்லாம் பத்தவே பத்தாது' என்று அவனுக்குள் இருக்கும் அரக்கன் அவனை தூண்டிவிட, கோபத்தில் தன்னவளை மீண்டும் ஏதாவது செய்து விட கூடாது என்று எண்ணியவன், தனது அறையின் சுவரில் தன் வலிய கரத்தால், ஓங்கி குத்தி தன் ஆதித்தரத்தை அடக்க முயன்றான்.



ஆரி அவ்வாறு செய்தும் அவன் கோபம் அடங்காமல் போகவும், வேகமாக வீட்டைவிட்டு கிளம்பினான் .



இங்கு அவன் கொடுத்த ஒற்றை அறையில் தரையில் விழுந்து கிடந்த யாத்ராவோ, அவனை விட அதீத கோபத்தில் இருந்தாள்.



"ரௌடி ரௌடி எந்த உரிமையில, என்னை அடிச்சிட்டு போறான் ராஸ்கல், ஆம்பளைன்னா என்ன வேணும்னாலும் பண்ணுவானா? போலீஸ்காரன் புத்திய காட்டிட்டான். ஆனா அதை பொறுத்துட்டு போறதுக்கு நான் ஒன்னும் கோழை இல்ல.

இப்படி தான் பேசுவேன் என்ன செய்வான்னு நானும் பார்க்கிறேன்" என்று தனக்கு தானே கூறியவளுக்கு அவன் அடித்தது மட்டுமே பிரதானமாக இருக்க, அவள் விட்ட வார்த்தையை மட்டும் வகையாக மறந்து போனாள்.



ஒரு சொல் வெல்லும்! ஒரு சொல் கொல்லும்! என்பதை போல் வார்த்தைகளை வாள் போல வீசி ஆரியின் மனதை குத்தி கிழித்து ரணமாக்கிய யாத்ரா, அவள் வீசிய வார்த்தைகள், தன் மீதான கணவன் கொண்டுள்ள அன்பையே பறித்துவிட கூடும் என்பதை உணரத் தவறி விட்டாள்.



தரையில் இருந்து கோபத்துடன் எழுந்தவள், கண்களில் இருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்தபடியே எதை பற்றியும் யோசிக்காமல் ஒய்யாரமாக சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள்.



திருமணம் காரணமாக ஆரி விடுமுறையில் இருந்ததால், அவனுக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு சற்று நிம்மதியாக தான் இருந்தது. ஸ்டேஷனில், கான்ஸ்டபிளோ தன்சட்டையை கழற்றி போட்டுவிட்டு உறங்கிக்கொண்டிருக்க, தலைமை கான்ஸ்டபிளோ யாருக்கோ வந்த விதி போல கால்களை டேபிள் மீது நீட்டிக்கொண்டு 'அன்று வந்ததும் அதே நிலா' என்னும் பழைய பாடலை தனது கணீர் குரலில், வெற்றிலை போட்டபடி பாடுகிறேன் என்று உளறிக்கொண்டிருந்தார்.



அப்பொழுது ஒரு பெண்ணுடன் அங்கு வந்திருந்த ஒரு வாலிபன்,



"சார் ப்ளீஸ் சார் விட்டுடுங்க சார், நாங்க நிஜமாவே ஃப்ரண்ட்ஸ் தான்." என்று சப் இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சி கொண்டு இருந்தான்.



"ப்ச் சும்மா நடிக்காத டா, சரி குட்டி என்ன ரேட்டு? எங்க இருந்து தள்ளிட்டு வந்த?" என்று அந்த சப்இன்ஸ்பெக்டர் தன் தாடையை தடவியபடி கேட்க .



"சார் தப்பா பேசாதீங்க, அந்த மாதிரி எல்லாம் கிடையாது, வீ ஆர் ஃப்ரண்ட்ஸ் சினிமாக்கு வந்தோம் அவ்வளவு தான், உங்களுக்கு சந்தேகமா இருந்தா வீட்டுக்கு ஃபோன் பண்ணுங்க சார் இப்படியெல்லாம் பேசாதீங்க " என அந்த வாலிபன் சப் இன்ஸ்பெக்டர் தவறாக பேசவும் கோபத்துடன் அவரிடம் வாதித்தான்.



அதற்கு அந்த சப் இன்ஸ்பெக்டர்,



"டேய் என்ன சவுண்ட் ஏறுது? இனி மறுபடியும் குரலை உயர்த்தின கஞ்சா கேஸ்ல உள்ள வச்சிருவேன்" என்று மிரட்டியவர்,



"போ டா போய் அங்க நில்லு, விசாரணை முடிச்சிட்டு அனுப்புறேன் அப்புறமா கூட்டிட்டு போ, யம்மா ஏய் ப்ளூ சல்வார் இங்க வா" என்று போகும் நண்பனை பார்த்து அழும் பெண்ணை சொடக்கிட்டு அழைத்தார்.



அந்தப் பெண்ணோ அழுது கொண்டே இருக்க,



"இங்க பாருமா" என்று மீண்டும் அழைத்தார், இந்த முறை அவரை திரும்பிப் பார்த்த அந்தப் பெண் அவரை பயத்துடன் பார்க்கவும்,



"கொஞ்சம் கிட்ட வாமா" என்றழைத்து, அவள் தன் அருகே வந்ததும் சற்று குனிந்து அவள் காதில்,



"எத்தனை வருஷமா இந்த தொழில்ல இருக்க" என தன் பற்களை குச்சியால் குத்தியபடி கேட்டு கோணலாய் சிரிக்க, அந்த பெண்ணிற்கு கோபமும் அழுகையும் போட்டி போட்டு கொண்டு வந்தது.



அப்பொழுது, "என்ன துரைகண்ணு விசாரணையெல்லாம் பயங்கரமா நடக்குது" என அர்ஜுனன் சப்இன்ஸ்பெக்டரின் தோள் மீது கைபோட்டபடி கேட்க, அடிக்கும் மழையிலும் துரைகண்ணின் முகம் வியர்த்து கொட்டியது.



ஆரி அர்ஜுனனை அங்கு கொஞ்சமும் எதிர்பார்த்திராத துறைக்கண்ணோ அவனது பிடியில் இருந்து விலகப்பார்க்க, "எங்க போறீங்க துரைகண்ணு சார். சும்மா கிட்ட வாங்க, ஏன் பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் நெருக்கமா நிப்பீங்களோ சும்மா என்கிட்டையும் நெருங்கி வாங்க" என அவரது கழுத்தை தன் உறுதியான கரம் கொண்டு வளைத்து லேசாக இறுக்கியபடி தன் அருகில் இழுத்து நிறுத்திக்கொண்ட ஆரி அர்ஜுனன்.



தன் பார்வையை சுழல விட்ட ஆரி அர்ஜுனன், "டேய் இங்க வா டா" என ஸ்டேஷனின் முக்கில் கலவரத்துடன் நின்று கொண்டிருந்த அந்த வாலிபனை பார்த்து அழைக்க, அவன் அருகே வந்ததும், "எந்த காலேஜ் டா" என்று ஆரி கேட்டான்.



"அமெரிக்கன் காலேஜ் சார் " என்றான் அவன் தயங்கியபடி.



"என்ன பண்ணுனீங்க" சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணுவை வளைத்து பிடித்திருந்த ஆரியின் பிடி இறுகியது.



"ஃப்ரண்டுக்கு பர்த்டே சார், அதான் மூவி போய்ட்டு ரோட்ல வைச்சு கேக் கட் பண்ணினோம் கூடவந்தவங்க எல்லாரும் போலீசை பார்த்ததும் போய்ட்டாங்க" என திக்கி திணறி அவன் கூறினான்.



"நைட் பன்னிரண்டு மணிக்கு நடு ரோட்ல என்ன..." என்று தன் வாய்வரை வந்த கெட்ட வார்த்தையை கூறாது, ஆரி கோபத்தில் தன் பல்லை கடிக்க, துரைக்கண்ணின் முகம் வெளிற துவங்கியது.



"பொண்ணு கூட சுத்துறது விஷயம் கிடையாது, அதே நேரம் அவங்களை பாதுகாப்பா பார்த்துக்கவும் தெரியனும், இல்லைன்னா இப்படி தான் கண்டவனும் பேசுவான்" என்று அவர்கள் இருவரையும் பார்த்து முறைத்தவன், "ஐடி கொடுங்க" என கேட்டு இருவரின் ஐடியையும் வாங்கி சரி பார்த்துவிட்டு,



"ஐடி என்கிட்டையே இருக்கட்டும் இப்போ ஒழுங்கா இந்த பொண்ணை அவங்க வீட்ல பத்திரமா விட்டுட்டு நாளைக்கு நீ மட்டும்" என்று அந்த வாலிபனை பார்த்து கைகாட்டிய ஆரி,



"வந்து ஐடிய வாங்கிட்டு போ" என்றவன் கூடுதலாக,



"இனிமே இந்த மாதிரி சுத்துறத, பார்த்தேன் தொலைச்சிடுவேன், கூட்டிட்டு போ" என அவர்கள் இருவரையும் எச்சரித்து விட்டு வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பிவைத்தவன்,



டேபிள் மீது தன் ஒற்றை காலை தொங்கவிட்டபடி ஏறி உக்கார்ந்து,



"என்ன துரைக்கண்ணு ப்ளூ சல்வாரா ம்ம் வயசானாலும் ஆசை விடல" என துரைக்கண்ணுவை பார்த்து சிரித்தான், தன் பிடியின் அழுத்தத்தை அதிகரித்தபடி, அது சாதாரண சிரிப்பல்ல எதிரியை சிதைக்கும் கொடூரமான சிரிப்பு.



ஆரி கேட்ட கேள்வியிலும், சிரித்த சிரிப்பிலும் துரைகண்ணுவின் கால்கள் ஒரு பக்கம் தானாக நடுங்க, மறுபக்கம் அவனது வலிய கரம் கொடுத்த அழுத்தத்தில் வெளிறிய முகத்துடன் வலியில் துடித்தவர்,



"சார்" என்று பயத்தில் அழைத்தார்.



"சொல்லுங்க சார்" என்ற ஆரியோ தன் பிடியை தளர்த்தாமல், கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி இன்னும் ஏதேதோ துறைகண்ணுவிடம் கொடூரமாகக் பேச, துரைக்கண்ணுவின் காதால் அதைக் கேட்க முடியவில்லை.



வலி பாதி அவமானம் மீதி, என சுத்தியிருந்த அனைவர் முன்பும் கூனி குறுகி நின்றிருந்தார்.



"மன்னிச்சிருங்க சார்" என்ற துரைக்கண்ணு வலி பொறுக்காமல் துடித்துவிட, சில நொடிகள் அவனது கழுத்தை நன்கு அழுத்திவிட்டு, அவரை தன் பிடியில் இருந்து விடுவித்தவன், அவர் பயந்து காலில் விழ வரவும்,



"ச்ச எழுந்து நில்லு யா, ஸ்டேஷனுக்கு நைட் லேடி போலீஸ் இல்லாம பொண்ணுங்கள அரெஸ்ட் பண்றதே தப்பு. இதுல உனக்கு" என்று எதையோ சொல்ல ஆரம்பித்தவன் தன் வாய் வர வந்த வார்த்தைகளை முழுங்கி கொண்டு,



"உங்களையெல்லாம் போலீஸுன்னு சொல்றதுக்கே கேவலமா இருக்கு. உங்க கண்ணு முன்னாடி ஒரு அநியாயம் நடக்கு தட்டி கேட்காம வேடிக்கை பாக்குறீங்க" என அனைவரையும் பார்த்து முறைத்தவன்,



"ஒரு விஷயம் நல்லா கேட்டுக்கோங்க மத்த ஸ்டேஷன் எப்படியோ, ஆனா நான் இருக்கிற இடத்துல இனிமே இப்படி எதாவது கேள்வி பட்டேன். யோசிக்கவே மாட்டேன் மொத்தமா முடிச்சிடுவேன்" என்று தீயாய் அனைவரையும் பார்த்தான்.



பின்பு கான்ஸ்டபிளிடம்



"ஏன் மொத்தமா கழட்டி போட்டுட்டு தூங்க வேண்டியது தானே, ரொம்ப வசதியா இருக்கும், சட்டைய போடுயா" என அதட்ட ,



"சாரி சார்" என்றவன் வேகமாக சட்டையை சரி செய்ய, தலைமை கான்ஸ்டபிளை நோக்கி வந்த ஆரி,



"எப்படி எப்படி அன்று வந்ததும் அதே நிலா, ம்ம்ம் இருக்கு உங்களுக்கெல்லாம்" என்று கூறி தங்களின் கைகள் நடுங்க நின்றிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றான்.



அர்ஜுனனை அங்கே எதிர்பார்க்காததால் அனைவரும் பயத்தில் இருக்க, அவன் தன் அறைக்குள் செல்லும் வரை அமைதியாக இருந்தவர்கள், அவன் உள்ளே நுழைந்ததும் தங்களின் நெஞ்சில் கைவைத்து நிம்மதி பெருமூச்சு விட்டவர்களாய்,



"என்னய்யா சைக்கோ இந்த நேரத்துல வந்திருக்கான்!" என ஒருவர் சொல்ல மற்றொருவரோ,



"இதை மனசில வச்சிட்டு நம்மளை வச்சி செய்ய போறான்" என வாய்விட்டு புலம்பினார்.



"கல்யாணம் ஆனா மாறிடுவான்னு நினைச்சா முன்னாடியவிட கோபத்துல வீரியம் ஜாஸ்தியா இருக்கேயா"



"மனுஷனுக்கு என்ன பிரச்சனையோ" என்றவர்கள் புலம்பிவிட்டு தங்களின் பணியை ஒழுங்காக பார்க்க துவங்கினர்.



இங்கே ஆரியின் நிலைதான் மிகவும் மோசமாக இருந்தது. இதோ ஸ்டேஷன் வந்து ஒரு மணிநேரத்திற்கு மேல் கடந்துவிட்டது, வேலையில் கவனம் செலுத்தினால் கோபம் கொஞ்சம் குறையும் என்று எண்ணி தான் வந்தான். ஆனால் ஆத்திரம் கொஞ்சம் கூட குறையவில்லை.



"ச்ச என்ன வார்த்தை சொல்லிட்டா" என தன்னவள் மேல் பொங்கி வரும் கோபத்தை அணைக்கட்ட முடியாமல் தவித்தவனுக்கு, வாய்விட்டே கத்த வேண்டும் போல இருக்க, கண்களை இறுக்கமாக மூடி தன்னை தானே கட்டுப்படுத்திக்கொண்டவன், இத்தனை கோபத்துடன் வீட்டிற்கு செல்ல விரும்பாமல் , கடினப்பட்டு தன் மனதை ஒருநிலை படுத்தி, நிலுவையில் உள்ள சில கோப்புகளை புரட்டிக்கொண்டிருந்தான் .



நேரம் ஆக ஆக கொந்தளித்துக்கொண்டிருந்த மனம் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி அடைந்த பொழுது, மணி மூன்றை தொட்டிருக்க, மனம் கொஞ்சம் அமைதியடைந்த பிறகே அரி தன் வீட்டிற்கு சென்றான்.



அங்கே தனது அறையில் தன் கட்டிலில் எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நன்றாக படுத்து யாத்ரா உறங்கிக்கொண்டிருந்தாள்.



அதுவரை கொஞ்சம் அமைதியாக இருந்தவன் படுக்கையில் தன்னவளைக் கண்டதும் சினம் கொண்டான்.



"நான் வேண்டாம். ஆனா என் கட்டில் மட்டும் வேணும் ம்ம். தூக்கத்துல கூட என் மேல தான் படுத்துக்குவா, ஆனா மேடம்க்கு நான் வேண்டாம்" என மனதிற்குள் பொறுமியவன்,



"ராட்சசி என்னைப் பார்த்து என்னவெல்லாம் பேசிட்ட, அது எப்படி என் மனசை குத்தி ரணமாக்கிட்டு உன்னால மட்டும் இப்படி நிம்மதியா தூங்க முடியுது." என்று தூங்கும் அவளிடம் சண்டையிட்டவனின் கோபம் இப்பொழுது தளர்ந்து சோர்வடைந்து வருத்தமாக உருவெடுக்க, அவள் அவ்வாறு பேசிய பின்பு இனி அவளருகில் சென்று படுக்க விரும்பாதவனாக, பாரமான மனதுடன் சோஃபாவில் சென்று படுக்க போனவன், ஒருகணம் நின்று தன் கண்களை அழுத்தமாக மூடி திறந்து அவள் அருகில் வந்து, விலகி இருந்த அவளது ஆடையை சரி செய்து, போர்வையை நன்கு அவளுக்கு போர்த்திவிட்டு தன் கரங்களை குறுக்கே கட்டிக்கொண்டு அவளது சலனம் இல்லாத முகத்தை பார்த்துக் கொண்டிருந்த ஆரிக்கு, யாத்ரா பெரிய சவாலாக தெரிந்தாள்.



திருமணம் முடிந்தால் தான் காட்டும் அன்பில் தன்னுடன் இணக்கமாகிவிடுவாள், என்று எண்ணயிருந்தவனின் நம்பிக்கை இன்று நடந்த நிகழ்வால் உடைந்து போயிருக்க, அவளது நிர்மலமான வதனத்தை பார்த்து பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன், சோஃபாவில் வந்து படுத்துகொண்டான்.



காலையில் கண்விழித்ததும் யாத்ராவின் கண்களில் முதலில் பட்டது ஆரி தான். சோஃபாவில் புரண்டு புரண்டு படுத்திருந்தான்.



"என்ன சோஃபாவுக்கு போய்ட்டான், ரோஷம் வந்திருச்சா என்ன? இவன் அப்படி பட்ட ஆள் இல்லையே. என்னவோ நம்மளை தொல்லை பண்ணாம இப்படியே விலகி இருந்தா சரி. பிடிக்கலைன்னு சொல்லியும் வலுக்கட்டாயம என்னை கல்யாணம் பண்ணி, வலுக்கட்டாயமா எல்லாம் பண்ணிட்டு இப்போ நல்லவன் மாதிரி சோஃபாவுல தூங்குறதை பாரு, போ எனக்கென்ன" என்று எண்ணியவளை பார்த்து, 'வலுக்கட்டாயமா கல்யாணம் சரி அதென்ன எல்லாம் பண்ணிட்டு, ஓ நடந்த எதுக்கும் உனக்குச் சம்பந்தம் கிடையாது, உனக்கு ஒரு துளி கூட விருப்பம் இல்லாம தான் எல்லாம் நடந்துச்சா யாத்ரா' என அவளது மனசாட்சி அவளைக் கேள்வி கேட்கக் கண்களை இறுக்கமாக மூடித் திறந்தவளின் பார்வை, சோஃபாவில் தன் உடலை குறுக்கிக்கொண்டு மிகச் சிரமப்பட்டு உறங்கும் அர்ஜுனனை வெறித்து கொண்டிருந்தது.



அந்த வெறித்து கொண்டிருந்த பார்வையில் ஒருவித தவிப்பு நன்றாகவே தெரிந்தது. அவனது உயரத்திற்கு சற்றும் பொருந்தாத சோஃபாவில் அவன் உடலை குறுக்கிக்கொண்டு படுத்திருப்பதை பார்க்க சங்கடமாக இருக்கவும் தன்னை மறந்து அவன் அருகில் சென்று அவனது சிகையை வருட போனவளை பார்த்து அவளது இன்னொரு மனம்,

'என்ன பண்ணிட்டு இருக்க யாத்ரா? யாரையும் நம்பாத, அவன் கிட்ட கல்யாணம் வேண்டாம்ன்னு எவ்வளவு கெஞ்சிருப்ப, கேட்டானா? இல்லைல அப்புறம் ஏன் அவனுக்காக இறக்கப்படுற போ' எனக் கட்டளையிடவும்,



"என்னை எவ்வளவு படுத்திருப்ப கிட டா" என்று வீண் காரணங்களைச் சொல்லி தன் மனதை தேற்றியவள். குளியல் அறைக்குள் நுழைந்தாள்.



தன் மனதிற்குள் அர்ஜுனன் என்றோ நுழைந்துவிட்டான் என்பதை மட்டும் பெண்ணவள் உணர்ந்திருந்தாள் என்றால், இன்று அவளது வாழ்க்கையில் இப்படி ஒரு சிக்கல் நிகழ்ந்தே இருக்காது. ஆனால் காதலை புகுத்த முடியாது, அதை உணர வேண்டும் அப்படி உணர்ந்தால் தான் அது காலத்திற்கும் நீடிக்கும்.





குளித்து முடித்தவள் தன் உடையை தேடும்பொழுது அது கிடைக்காமல் போகவும்,



"ச்ச இவனைப் பத்தி யோசிச்சு சேஞ் பண்ண டிரஸ் எடுத்துட்டு வரலையே. அவன் வேற இருக்கானே எப்படி டவளோட அவன் முன்னாடி போறது" என தன் நகத்தை கடித்தவள் பின்பு யோசித்தவளாய்,



"அவன் தூங்கிட்டு தான இருக்கான். இல்லை இல்லை அவனை நம்ப முடியாது. சரி அவன் என்ன பண்றான்னு பார்ப்போம்" என்று வாய்விட்டே கூறியவள், லேசாக பாத்ரூம் கதவைத் திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டி பார்த்தாள்.



அறை முழுவதும் தன் விழிகளால் துழாவியவளுக்கு, ஆரி அங்கு இல்லாதது உறுதியாக,



"ஓ போய்ட்டானா சரி நாம போய் டிரஸ் எடுத்துக்கலாம்" என்றவள் தன் உடலில் சுற்றியிருந்த டவலுடன் பாத்ரூமில் இருந்து வெளியே வந்து, வேகமாக சென்று அறைக்கு உள் தாழ்ப்பாள் போட தாழில் தன் கையை வைத்தாள்.



சோபாவில் படுத்ததால் ஆரிக்கு உறக்கம் சரி வர வராமல் போக, உடல் வலி வந்தது தான் மிச்சம். இதற்கு மேல் உறங்க முடியாது, அசதியோடு எழுந்து அமர்ந்தவன், தன்னவளை தேடினான்.



குளியல் அறையில் இருந்து சத்தம் கேட்கவும், காஃபி குடிக்க கீழே சென்று குடித்து முடித்து விட்டு, மேலே தன் அறை வாசலில் வந்து நின்றான்.



அப்பொழுது கதவை பூட்டுவதற்காக உள் தாளின் மீது யாத்ரா கை வைக்கவும், கதவைத் திறப்பதற்காக வெளியே இருந்து கதவை உள் நோக்கி ஆரி தள்ளவும் சரியாக இருந்தது.



அதன் விளைவு! அர்ஜுனன் கதவை தள்ளிய வேகத்தில் கதவு யாத்ரா மீது மோதியது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத யாத்ராவோ கதவில் மோதி கீழே விழப் போகவும், சுதாரித்து கொண்ட ஆரி தன் இடக்கரத்தால் அவளின் இடையில் கைக் கொடுத்து, அவள் கீழே விழாமல் தாங்கிக் கொண்டான் .



ஒப்பனையற்ற வதனத்தில் ஆங்காங்கே காயாமல் இருந்த ஈரம், ட்வலுக்குள் மொத்தமாக அடக்கப்பட்டிருந்த ஈரமான கேசம், கழுத்தை தாண்டி டவலின் மேல் தவிழ்ந்த தாலி, என்று புதிதாய் மலர்ந்த மலர் போல விழிகளுக்கு குளிர்ச்சியாக, நீர் சொட்ட, விழுந்துவிடுவோமோ என்ற பயத்துடன், தனது விழிகளை மூடிகொண்டு தன் கரங்களில், கிடந்த தன்னவளை கண்டு சொக்கி தான் போனான் ஆரி அர்ஜுனன்.



அவனது மனமோ ,'என்னடா இது இம்சையா இருக்கு, நானே சும்மா இருக்கணும்ன்னு நினைச்சாலும் என்னை இப்படி டெம்ப்ட் பண்ணிகிட்டே இருக்காளே, சும்மாவே இவளை பார்த்தா என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது. இதுல இந்த கோலத்துல வந்து இப்படி என்னை படுத்துறாளே. அவ அவ்வளவு பண்ணியும் நம்ம மனசு அவகிட்டையே போய் தொலையுது ச்ச மானம்கெட்ட மனசு' என்று தன்னை தானே திட்டிகொண்டான்.



சில நிமிடங்கள் கழித்து, கண் திறந்து பார்த்த யாத்ரா தன்னவனின் ஊடுருவும் பார்வையை கண்டு 'முத்தம் குடுக்க போறான், அவன் பார்வையே சரி இல்லை' எனத் தனக்குள் புலம்பியவள் தன் இதழைக் கடித்து தன் விழியை மீண்டும் மூடிக்கொண்டது தான் தாமதம்,



தன் கைகளில் கிடந்த தன்னவளை தூக்கி நேராகக் கூட நிறுத்தாமல், சட்டென்று தன் கரங்களை அவள் மென் இடையில் எடுத்து விட்டான் ஆரி அர்ஜுனன்.



அர்ஜுனனிடம் இருந்து வேறொன்றை எதிர்பார்த்த யாத்ரா, இவ்வாறு அவன் சட்டென்று விட்டதும். பொத்தென்று தரையில் விழுந்தாள்.



கீழே கிடந்தபடி தன்னை கோபத்துடன் பார்த்த மனைவியிடம் ஆரி,



"சாரி பொண்டாட்டி தெரியாம தொட்டு புடிச்சிட்டேன். உங்களுக்கு தான் நான் தொட்டா புடிக்காதே, சாரி சாரி உனக்கு தான் என்னையே புடிக்காதே, இனிமே தொடமாட்டேன்" என்றவன் தன்னவளால் தனக்குள் எழுந்த உணர்ச்சிகளைத் அழுத்தமாக துடைத்து விட்டு, வெற்று பார்வை ஒன்றை அவளை நோக்கி வீசிவிட்டு அங்கிருந்து சென்றான்.



இதை சற்றும் எதிர்பாராத யாத்ரா சில நொடிகள் திகைப்பிற்கு பிறகு,



"ரவுடி ரவுடி, இப்படியா கீழ போடுவான், நல்லா வலிக்குதே" என்று அவனை திட்டியவள், தட்டி தடுமாறி எழுந்து நின்று, அடிப்பட்ட தன் பின்னந்தலையைத் தடவிக்கொண்டே, உணர்வுகள் துடைக்கப்பட்ட முகத்துடன் தன்னை கொஞ்சமும் கண்டுகொள்ளாது கடந்து செல்லும், தன்னவனை திகைப்புடன் பார்த்தாள்.


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை கிளிக் செய்யவும்.

அத்தியாயம் 9
 
Last edited:

Author: Naemira
Article Title: அத்தியாயம் 8
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top