- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
ஆதவன் 11
திகைப்புடன் கன்னத்தை பொத்தியபடி தன்னைப் பார்த்த தனது மகனை எரித்து விடுவது போல பார்த்த மகாலட்சுமி,
"கல்யாணம்ன்னா என்ன உனக்கு அவ்ளோ விளையாட்டா போச்சா" சுற்றி எல்லாம் வளைக்கவில்லை நேரடியாகவே விடயத்தை கேட்டுவிட, குறையாத திகைப்புடன் தாயைப் பார்த்தவன் சமாளிக்கும் எண்ணத்துடன்,
"நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு..." என அவன் சொல்லி முடிப்பதற்குள், தனது அலைபேசியை உயர்த்தி வர்ஷாவும் ஆதித்தும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை காட்டிய மஹாலக்ஷ்மி,
"எனக்கு எல்லாம் தெரியும் ஆதி, உன் அப்பாவும் ஆகாஷும் எல்லாம் சொல்லிட்டாங்க" என்றார் அழுத்தமாக.
இதைக் கேட்ட ஆதித்திற்கு பேச்சே வரவில்லை சொல்லப்போனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. கால்கள் வேரூன்று அப்படியே நின்று இருந்தான்.
பின்பு, "பதில் சொல்லு ஆதி இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்" என்ற தன் தாயின் பிடிவாதத்தில்,
"அதான் உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கே அப்புறம் நான் என்ன பதில் சொல்றது" என்று வாய் திறந்து பேசினான்.
"இது என்ன சினிமாவா இல்லை சீரியலா பழிவாங்குறதுக்காக அந்த பொண்ண கல்யாணம் பண்ணி இருக்க. ஆயிரம் தான் அந்த பொண்ணு தப்பு பண்ணி இருக்கட்டும் அதுக்காக இன்னொருத்தனுக்கு கல்யாணம் ஆக இருந்த பொண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி இருக்கிறது ரொம்ப பெரிய தப்பு டா, இப்ப பாரு உன் வாழ்க்கையும் கெடுத்து அந்த பொண்ணோட வாழ்க்கையையும் கெடுத்துட்டு இருக்க ஆதி" என்று மஹாலக்ஷ்மி ஆதங்கத்துடன் கூறினார்.
"அதுக்காக அவ பண்ணின தப்ப அப்படியே மறந்திட சொல்லுறீங்களா?" என்று சற்று கோபமாக தனது அன்னையிடம் வினவினான்.
"அதுக்காக பழிவாங்குறேன் என்கிற பெயர்ல அவளைக் காலம் முழுக்க சித்ரவதை பண்ணிட்டு
இருக்க போறியா? தப்பு ஆதி அது" என்ற மகாலட்சுமியிடம்,
"நான் உன் புள்ள மா" என்று அவரது விழிகளை பார்த்து நேருக்கு நேராக ஆதித் சொல்ல மகாலட்சுமிக்கு உள்ளமெல்லாம் கனத்து போனது.
மகன் மீது உயிரே வைத்திருக்கிறார் அல்லவா அவரால் மகன் வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
மேலும் அவனது திருமணம் விடயத்தில், ஆத்திரத்தில் தன் மகன் தவறான முடிவு எடுத்து விட்டானே இனி அவன் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று எண்ணி மிகவும் கவலைப்பட்டார்.
ஆகாஷ் மற்றும் தன் கணவர் மூலம் அனைத்தையும் அறிந்து கொண்ட மகாலட்சுமி தனது மகனை கன்னம் கன்னமாக அறையும் கோபத்தில் தான் இங்கே வந்தார். அதே கோபத்தில் தான் ஒரு அறையும் கொடுத்தார்.
ஆனால் நேரம் ஆக ஆக வெகு நேரத்திற்கு கோபத்தை இழுத்து பிடிக்க வைக்க முடியாத மகாலட்சுமி
மகனின் இந்த பதிலில் மொத்தமாக உடைந்து போனவர்,
"எப்படி இருக்க வேண்டியவன் டா நீ, உனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கணும், சரி நடந்தது தான் நடந்துடுச்சு கொஞ்ச பொறுமையா இருந்திருக்கலாம்ல இப்படி ஆத்திரப்பட்டு உன் கோபத்தால லைஃப்ப சிக்கல் ஆக்கிட்டு நிக்கிறியேடா" என்று கூறி ஆதங்கப்பட்டவர் மகன் கரத்தைப் பற்றிக் கொண்டு ஓவென்று அழுது விட, தன் அன்னை அடித்த பொழுது கூட திடமாக நின்றிருந்த ஆதித்தால் அவரது கண்ணீர் முன்பு அவ்வாறு இருக்க முடியாமல் போக,
"சாரிமா என்னை மன்னிச்சிடு" என்றான் ஆதித் குரல் தழுதழுக்க.
@@@@@@@
கண்களை இறுக்கமாக மூடிக்கொண்ட வர்ஷா கொஞ்ச நேரத்திற்கு முன்பு நடந்ததைப் பற்றி சிந்தித்தபடி ஆதித் விட்டுச்சென்ற இடத்திலே நின்றிருந்தவள், ஒருவித படபடப்பில் விடாமல் வேகமாக துடித்துக் கொண்டிருக்கும் தன் இதயத்தை சமநிலைப்படுத்த மிகவும் சிரமப்பட்டவள், மேலும் சில மணி நிமிடங்கள் கழித்து தான் குளியல் அறையில் இருந்து வெளியே வர, இப்பொழுது அவளுக்கு அவன் தன் அன்னை தன்னைக் காண வந்திருப்பதாக கூறியது நினைவிற்கு வரவும், தன் அன்னையைப் பற்றி எண்ணிப் பார்த்தவள் அவரிடம் பேசும் ஆவலில் அவரது அலைபேசிக்கு அழைப்பு விடுக்க அதை யாரும் எடுக்காமல் போகவும் தன் தந்தைக்கு அழைத்தாள்.
"வர்ஷாமா" என்ற தன் தந்தையின் விழிப்பில் கண்கள் எல்லாம் கலங்கிவிட வர்ஷாவுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது.
ஆனாலும் அழாமல் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள், "அப்பா" என்றாள் குரல் தழுதழுக்க.
"எப்படிடா இருக்க?" என்ற தன் தந்தையிடம், "நான் நல்லா.." என வர்ஷா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,
"அவ எப்படி இருந்தா நமக்கு என்ன, அதான் நம்மளை வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போய்ட்டால்ல அப்படியே போக வேண்டியது தானே" என்ற தன் அன்னையின் குரலை தொடர்ந்து அலைபேசி சட்டென்று அணைக்கப்பட்டு இருக்க,
"என்னை மன்னிக்கவே மாட்டியாமா" என்ற வர்ஷாவின் குரல் உடைந்து ஒலித்த சில நொடிகளில் அவளது கன்னங்கள் ஈரம் ஆகின.
@@@@@@@@@
"என்னை பத்தி கவலைப்படாதம்மா நான் எல்லாத்தையுமே சரி பண்ணிடுவேன், எல்லாமே மாறிடும்" தளர்ந்து அமர்ந்திருந்த மகாலட்சுமின் கரத்தை பற்றி கொண்டு கூறினான் ஆதித்.
"என்னடா மாறிடும் பணத்துக்காக அவ செஞ்ச காரியத்தை உன்னால மாத்த முடியுமா? சொல்லு அதை சரி பண்ணிடுவியா? வீட்ல யாருமே அந்த பொண்ணை ஏத்துக்க மாட்டாங்க டா அப்படியே ஏத்துக்கிட்டாலும் எல்லார் மனசுலயும் இந்த ஒரு விஷயம் ஊசியா காலத்துக்கும் குத்திக்கிட்டே தான் இருக்கும். சரி எங்க எல்லாரையும் விடு, உன்னை பத்தி சொல்லு உன் மனசுக்கு அது காலம் முழுக்க உருத்திக்கிட்டே இருக்காது. மனசுல வெறுப்போட எப்படி டா அந்த பொண்ணு கூட உன்னால மேரேஜ் லைஃபை லீட் பண்ண முடியும்?" என்றார் மஹாலக்ஷ்மி.
"அம்மா வர்ஷாவ கல்யாணம் பண்ணிக்கணும் முடிவு பண்ணினது நான், இப்ப இந்த கல்யாண லைஃப் வேணும்னு சொல்றதும் நான் தான். அதுக்காக அவ மேல கோபம் இல்லையான்னு கேட்டா, அது நிறையவே இருக்கு. காலப்போக்குல இந்த கோபம் எல்லாம் போயிடுமான்னு கேட்டா, சத்தியமா என்கிட்ட அதுக்கு பதில் இல்லம்மா.
நீ கேட்கிற எந்த கேள்விக்குமே எனக்கு பதில் தெரியல" என்ற ஆதித் நீண்ட பெருமூச்சை வெளியிட்டு,
"அவ செஞ்சதை மன்னிச்சு, மறந்து காலம் முழுக்க சந்தோஷமா அவ கூட வாழ முடியுமான்னு தெரியலமா ஆனாலும் அவள என்னால விட முடியாது" தன் தாயின் விழிகளை நேருக்கு நேராக பார்த்து உறுதியாக கூறினான்.
ஆதித்தின் கண்களில் இருந்த உறுதி மகாலட்சுமிக்கு அதிர்ச்சியை கொடுக்க
"இப்படி ஒரு கல்யாணம் கண்டிப்பா வேணுமா? நீயும் கஷ்டப்பட்டு அந்த பொண்ணையும் கஷ்டப்படுத்தி ஏன்டா" என்றார் கலக்கமாக.
"நம்ம சொந்தக்காரங்க எல்லாம் பார்த்த பார்வை, வருணிக்கா பேசினது, சோஷியல் மீடியால வந்த கமெண்ட்ஸ் அத்தனையும் இன்னும் என் மனசுல ஓடிட்டே தான் இருக்கு, யாரோ செஞ்ச தப்புக்கு நா ஏன் சிலுவை சுமக்கணும். தப்பு செஞ்சது அவ அதை சரி பண்ண போறதும் அவதான் சோ இந்த கல்யாணம் அவசியமான்னு கேட்டா ரொம்பவே அவசியம்" என்றான் ஆதித் இன்னும் உறுதியாக.
அதன் பிறகு மகாலட்சுமி எதுவுமே பேசவில்லை. அவனிடம் இருந்த உறுதியை கண்டவருக்கு இனி தான் பேசினாலும் அவன் கேட்பான் என்ற தோன்றவில்லை.
ஆதித்தும் எதுவும் பேசவில்லை ஆக இருவருக்கு நடுவிலும் அப்படி ஒரு நீண்ட மௌனம்,
நொடிகள் நிமிடங்களாக மாறிய பின்பும் தொடர்ந்து கொண்டிருந்த மௌனத்தை கலைக்கும் விதமாய் தனது இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட மகாலட்சுமி தன்னைக் கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்த தன் மகனை பார்த்து,
"உன் வைஃபை கூட்டிட்டு வீட்டுக்கு வாடா" என்று சொல்ல அதற்கு ஆதித்,
"அந்த வீட்டுக்கு என்னால வர முடியாது" என்றான்.
"வரமாட்டன்னா என்ன அர்த்தம் ஆதி?"
"அப்பா நீ உடம்பு சரியில்லாம இருக்கும்போது என்னை பார்த்து என்ன சொன்னாருன்னு தெரியுமா? மூஞ்சிலேயே முழிக்க கூடாதுன்னு சொல்லி இருக்காரு, என்னால எப்படி அங்க வர முடியும்" என்று ஆதங்கம் கலந்த கோபத்துடன் தாயிடம் வினவினான் ஆதித்.
"அப்பான்னா ஆயிரம் பேசுவாங்க டா, அதையெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு வர மாட்டேன்னு சொல்லுவியா நீ"
"உனக்கு புரியாது மா அவர் என்னை எவ்வளவு ஹட் பண்ணிட்டாரு தெரியுமா, என்னை அவர் நம்பவே இல்லமா என்கிட்ட விளக்கம் கேட்க கூட ரெடியா இல்லை. மத்தவங்க என்னை நம்பாட்டாலும் அப்பா என்னை நம்பியிருக்கணும் தானே"
"நம்பாம இல்ல ஆதி, இந்த மாதிரி ஆகிடுச்சே உன் வாழ்க்கை என்ன ஆகுமோன்னு ஒரு பதற்றம், போதா குறைக்கு வரு நடந்துக்கிட்டது, மத்த சொந்தக்காரங்க, ஃப்ரண்ட்ஸ் எல்லாம் பேசுனது, எனக்கு உடம்பு சரியில்லாம போனது எல்லாம் சேர்ந்து அந்த மாதிரி பேசிட்டாரு. உன் அப்பாக்கு நம்ம குடும்பத்து ஆளுங்க எல்லாருக்குமே இந்த விஷயம் புதுசு டா, நீ மீடியால இருக்க தான் பேரு ஆனா நாங்க எல்லாரும் அத விட்டு ஒதுங்கி தானே இருக்கும்.
வாழ்க்கையில யாரோட சப்போர்ட்டும் இல்லாம தனி மனுஷனா தம்பி, தங்கச்சி, அப்பா, அம்மான்னு மொத்த குடும்பத்துக்காகவும் தன்னையே வருத்தி கிட்டவரு உன் அப்பா. அந்தந்த வயசுக்குரிய எதையுமே அனுபவிச்சது கிடையாதுன்னு என்கிட்ட அடிக்கடி சொல்லி இருக்காரு. எதுக்கு நீங்க இவ்வளவு கஷ்டப்படுறீங்க உங்களுக்காக நேரம் ஒதுக்கிக்கோங்கன்னு நான் எவ்வளவோ சொல்லுவேன். ஆனா அதுக்கு அவர் என்ன தெரியுமா சொல்லுவாரு நான் தான் யாரோட சப்போர்ட்டும் இல்லாம, வாழ்க்கையில அந்தந்த வயசுல எதையும் அனுபவிக்காம ரொம்ப ஓடிட்டேன். ஆனா என் பையனுக்கு அந்த மாதிரி ஒரு நிலைமை வரக்கூடாது நாளைக்கு அவன் யார்கிட்டயும் போய் உதவின்னு நிக்க கூடாது. அவன் வளர்ந்து வரும் போது அவனுக்கா ஒரு ராஜ்ஜியம் இருக்கணும்னு சொல்லி தான் ராத்திரி பகல்ன்னு பார்க்காம கஷ்டப்பட்டு அந்த கம்பெனியை உருவாக்கினார்.
ஆனா நீ எனக்கு சினிமா தான் வேணும்ன்னு சொன்ன, அவருக்கு கோபம் வருமா வராதா நீ கம்பெனிய பார்த்துக்கல என்கிற கோபமே அவருக்கு இப்ப நான் கொஞ்சம் கொஞ்சமா போயிட்டு இருந்துச்சு, அதுக்கு இடையில இந்த மாதிரி ஒரு பிரச்சனை வந்ததை அவரால ஏத்துக்க முடியல. நீ சினிமா லைன்குள்ள போனனாலதான் இந்த மாதிரி பிராப்ளம்ஸ் எல்லாம் வந்துச்சுன்னு அவருக்கு எண்ணம். மத்தபடி உன் மேல நம்பிக்கை இல்லாம இல்லை டா. உன் மேல நிறைய அன்பு வச்சிருக்காரு. அப்பாவோட கோபம் அப்படித்தான் இருக்கும் ஆதி அதையெல்லாம் தூக்கி பிடிச்சிட்டு இருக்க கூடாது, அப்பா தானே சொன்னாரு விடு, நீ இப்பவே உன் வைஃப்பை கூட்டிட்டு வீட்டுக்கு வர அவ்வளவுதான்" என்ற மகாலட்சுமி ஒருகணம் சிந்தித்து,
"அந்தப் பொண்ணை எங்க? மாடிலதான இருக்கா? நான் போய் பார்க்கிறேன்? என்று கேட்டவரிடம் ஆம் என்றவன் அவருடன் தானும் சென்றான்.
அறைக்குள் தன் தங்கையை பற்றிய யோசனையுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த வர்ஷாவுக்கு கதவுக்கு அருகே ஆதித்தின் குரலை தொடர்ந்து வேறு ஒரு பெண்மணியின் குரலும் கேட்கவும் குளியலறை அறையில் அவன் சொல்லி விட்டு சென்றது அவளுக்கு இப்பொழுது நினைவுக்கு வர,
"அச்சோ இங்க வராங்க, இப்ப எங்க போய் மறஞ்சுகிறது" உண்மை நிலவரம் புரியாது பதறியவள் பதட்டத்துடன் வேறுவழி தெரியாது கட்டிலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொள்ளவும், நாகரிகம் கருதி கதவை தட்டி விட்டு மகாலட்சுமி உள்ளே வரவும் சரியாக இருந்தது.
வர்ஷாவை எதிர்பார்த்து உள்ளே வந்த மகாலட்சுமி அங்கே வர்ஷா இல்லாததும்,
"எங்கடா" என்று தன் மகனை பார்த்து கேட்க, இவ்வளவு நேரம் தாயுடன் நடந்த வாக்குவாதத்தில் வர்ஷாவிடம் தான் கூறிய அனைத்தையுமே மறந்து விட்ட ஆதித்,
"வாஷ் ரூம்ல இருப்பா மா" என்றவன் தற்செயலாக கட்டில் பக்கம் பார்க்கும் பொழுது கைவிரல்களின் நுனி பகுதி தெரியவும், முதலில் குழம்பிய ஆதித்துக்கு பிறகு, தன் தாய் வந்திருப்பதாகவும் அவர் முன்பு வரவேண்டாம் என்று தான் குளியல் அறையில் வைத்து அவளிடம் கூறியது நினைவுக்கு வர, தன்னை நினைத்து வெளிப்படையாகவே. நெற்றியில் அடித்துக் கொண்டவன் முதலில் தன் தாயை எப்படியாவது வெளியே அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணியவன் சமாளிக்கும் பொருட்டு அவரைப் பார்க்க, அவரோ அதிர்ச்சியுடன் கட்டில் பக்கம் தான் பார்த்துக் கொண்டிருக்க, இனி சமாளித்து ஒரு பயனும் இல்லை என்கிற நிலையில் தனது அன்னையை ஒரு கணம் பார்த்துவிட்டு கட்டில் அருகே சென்றான் ஆதித்.
பின்பு தன் நெற்றியை தேய்த்தபடி, முறைக்கும் தன் தாயை பார்த்துவிட்டு முட்டியிட்டவன், குனிந்து தன்னை படபடப்புடன் பார்த்துக் கொண்டிருந்த வர்ஷாவை பார்த்து வெளியே வருமாறு கண் அசைக்க, அவனை திடிரென்று தன் அருகே பார்த்ததும் பதற்றத்தில் தலையை கட்டிலில் முட்டி கொண்டவள் வெளியே வர சிரமப்பட்டு கொண்டிருக்க,
"ஏய் பார்த்து" என்றவன், வர்ஷாவின் மருண்ட விழிகளை பார்த்து,
"வலிக்குதா" என்று கேட்க அவளோ இல்லை என்பதாய் தலையை அசைக்கவும் அவளின் கரம் பிடித்து அவள் எழ உதவி செய்தவன் என்னடா இது என்பது போல் தன்னை பார்த்த தன் அன்னையிடம்,
"இவ தான் வர்ஷா" தயக்கத்துடன் அறிமுகப்படுத்தினான்.
ஆக அறிமுக படலமே ஜோராக நடந்திருக்கும் நிலையில் மகாலட்சுமிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை பெருமுச்சுடன் ஆதித்தை பார்த்துவிட்டு வர்ஷாவை பார்த்தார்.
பார்த்ததுமே வர்ஷா அணிந்திருப்பது தனது புடவை என்று தெரிந்து கொண்டார்.
தனது உடல்வாக்கிற்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாது, எப்பொழுது வேண்டுமானாலும் நழுவி விடுவேன் என்பது போல தொளதொளவென இருந்த மேல் சட்டையை அடிக்கடி தனது தோள் பட்டையில் இருந்து நழுவ விடாமல் இழுத்து விட்டபடி பதற்றத்துடன் நின்றிருந்தவளின் பதற்றத்தை உள்வாங்கியபடி அவள் அருகே வந்த மகாலட்சுமிக்கு அப்பாவியான அவளது முகத்தை பார்க்க பார்க்க திட்ட கூட தோன்றவில்லை, சில நொடிகள் அவளை பார்த்தபடி நின்றிருந்தவர், கட்டிலுக்கு அடியில் இருந்து அவள் வந்ததால் அவளது தலையில் ஒட்டி இருந்த ஒட்டடையை லேசாக தட்டி விட்டு, புன்னகையுடன் அவளை பார்த்து,
"நான் வீட்ல பெரியவங்க கிட்ட பேசிடுறேன் நீங்க ரெண்டு பேரும் எதை பத்தியும் யோசிக்காம இன்னைக்கே வீட்டுக்கு வந்துருங்க" என்றவர், ஆதித்தை பார்த்து,
"நான் உன் அப்பா கூட முன்னாடி போறேன், நீ வர்ஷாவை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வந்துரு" என கண்டிப்புடன் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
@@@@
கார் சீட்டில் கண்களை மூடியபடி அமர்ந்திருந்த தன் மனைவியை காரை ஓட்டிக்கொண்டே ஒரு நொடி பார்த்த தேவராஜ்,
"முடிவே பண்ணிட்டியா" என்றார் சாலையை வெரித்தபடி.
"வேற வழியும் இல்லப்பா நம்ம ஆதி இந்த கல்யாணம் வேணும்கிறதுல ரொம்ப உறுதியா இருக்கான்."
"அவனுக்கு என்னடி தெரியும் நாம தான் எடுத்து சொல்லி புரிய வைக்கணும்" பல்லை கடித்தார்.
"அவனுக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்றதுக்கும், எடுத்து சொல்லி புரிய வைக்கிறதுக்கும் அவன் ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது அவன் முடிவுல அவன் ரொம்பவே தெளிவா இருக்கான்" என்ற தன் மனைவியை முறைத்த தேவராஜ்,
"அப்போ அவங்க இங்க வர வேண்டாம் அங்கேயே இருக்கட்டும்" என்றார் கோபமாக.
"என்னங்க சொல்றீங்க அவன் பண்ணின விஷயம் நமக்கு பிடிக்கல தான் அதுக்காக அவனை அப்படியே விட்டுட முடியுமா? அவன் வாழ்க்கைய சரி பண்ணி பெத்தவங்க நாம செய்ய வேண்டிய கடமையை செஞ்சுதான் ஆகணும்" மகாலக்ஷ்மி சற்று கோபமாக தன் கணவரை பார்த்து கூற,
"பணத்துக்காக அவன் பெயரையே கெடுத்த பொண்ணுடி, அவளை எப்படி நம்ம மருமகளா ஏத்துக்க முடியும்
என்னால அந்த பொண்ணை மருமகளா ஏத்துக்க முடியாது"
"வேற வழியே இல்லை. பிரச்சனை நடந்த போ மட்டும் நீங்க அவன நம்பி இருந்தீங்கன்னா அவன் இப்படி ஒரு விஷயத்தை பண்ணிருக்கவே மாட்டான். உங்க தங்கச்சி பொண்ணு பேசினது, நீங்க திட்டினது இது எல்லாம் தான் இவ்வளவு பெரிய முடிவு நமக்கு தெரியாம அவன் எடுத்ததுக்கே காரணம்." என்ற மனைவியிடம்,
"அவன் மேல நம்பிக்கை இல்லாம இல்லடி" என்ற தேவராஜின் குரலில் வருத்தம் தெரிய, அதை உணர்ந்த மஹாலக்ஷ்மி,
"எனக்கு புரியுதுங்க ஆனா அவன் நிலமையும் கொஞ்சம் பாருங்க, நம்மளோட ஆதரவு அவனுக்கு தேவைப்பட்ட நேரம் யாருமே இல்லாம நிற்கதையா நின்றிருக்கான். அந்த நேரம் அவன் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில நம்ம பிள்ளையை நாம தானங்க அரவணைச்சிருக்கணும். நீங்க மட்டும் அந்த நேரம் கொஞ்சம் பொறுமையா ஹேண்டில் பண்ணி இருந்தீங்கன்னா இதெல்லாம் நடந்திருக்கவே செய்யாது" என்ற மனைவிடம்,
"தப்புதான் மகா நான் செஞ்சது ரொம்ப பெரிய தப்பு அவன் கிட்ட நான் பொறுமையா பேசி இருக்கணும் உன்னை பாக்க கூட விடாம முகத்திலும் முழிக்காதன்னு சொல்லி அவனை ரொம்ப ஹட் பண்ணிட்டேன். இப்போ அவன் வாழ்க்கையை நினைச்சா பயமா இருக்கு டி"
"கவலைப்படாதீங்க நம்ம புள்ள நல்லவங்க அவன் மனசுக்கு அவன் நல்லா இருப்பான்." தன் கணவனை சமாதானம் செய்தார் மஹாலக்ஷ்மி.
சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு,
"அந்த பொண்ண பத்தி உன் ஒபினியன் என்ன? நீ என்ன நினைக்கிற?" என்று தேவராஜ் வினவ,
"இதுல நினைக்க என்னங்க இருக்கு வருணிக்கா நாம பார்த்து வளர்ந்த பொண்ணு நம்மகிட்ட அன்பா இருக்கிற பொண்ணு, ஆனா ஒரே நாள்ல என்னவெல்லாம் பேசிட்டு போயிட்டா இதெல்லாம் நாம எதிர்பார்த்தமா என்ன? வெளி தோற்றத்தை வச்சும், சில செயல்களை வச்சும் நாம ஒருத்தரை முழுசா ஜட்ஜ் பண்ண முடியாது, ஜட்ஜ் பண்ணவும் கூடாது. நடந்து முடிஞ்சது முடிஞ்சது தான் அத மட்டும் வச்சு நான் வர்ஷாவை ஜட்ஜ் பண்ண கூடாதுன்னு மட்டும் முடிவு பண்ணி இருக்கேன். மத்தபடி நான் கடவுளை தான் நம்புறேன் அவர் எல்லாத்தையும் சரி பண்ணி தருவாரு நீங்களும் நம்புங்க."
"சரி அம்மா அப்பாவை எப்படி சமாளிக்கிறது அவங்க ஒத்துக்குவாங்களா?"
"நான் முதல்ல பேசுறேன் அப்புறம் தேவைப்பட்டா நீங்க பேசுங்க, ஒத்துக்குவாங்க வேற வழியும் இல்லை, அத்தை மாமாட்ட பேசிட்டு ஜோசியர் கிட்ட பேசுறேன் நல்ல நாள் பார்த்து ரிசெப்ஷனுக்கு ஏற்பாடு பண்ணிடலாம்" என்ற தன் மனைவியை பெருமூச்சுடன் பார்த்த தேவராஜ் ஆமோதிப்பதாக தலையசைத்தார்.
@@@@@@@@@@@
சில மணி நேரம் கழித்து வர்ஷாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்த ஆதித்தை,
"ரெண்டு பேரும் கொஞ்சம் நில்லுங்க" என்று வாசலிலே நிற்க வைத்த மகாலட்சுமி,
"ஜானகி அக்கா கொண்டு வாங்க" என வீட்டிற்குள் எட்டிப் பார்த்து குரல் கொடுக்க, அங்கே வீட்டு வேலை செய்யும் ஜானகி கையில் ஆரத்தி தட்டுடன் மகாலட்சுமியை நோக்கி வந்தார்.
ஜானகியின் கையில் இருந்த ஆர்த்தி தட்டை வாங்கிக் கொண்ட மகாலட்சுமி வர்ஷாவையும் ஆதித்தையும் ஒரு கணம் பார்த்துவிட்டு, இருவரும் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டபடி ஆரத்தி எடுத்தவர் தட்டை ஜானகியிடம் கொடுத்து விட்டு இருவரையும் வீட்டிற்குள் அழைத்து வந்தார்.
மருத்துவமனையில் இருந்து கோபமாக கிளம்பிய ஊர்மிளா நேரடியாகவே இங்கே தன் அன்னையிடம் பேச வந்திருந்தவர், மஹாலக்ஷ்மி இங்க வந்ததும் வர்ஷா தான் தன் மருமகள் என தன் தாய் தந்தையிடம் சொன்னது முதல் இப்பொழுது ஆதித் வர்ஷா இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தது என அனைத்தையும் பல்லை கடித்த படி பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ஏற்கனவே வருணிக்கா மீது கோபமாக இருக்கும் ஆதித், தன்னை வைத்து ஊர்மிளா தன் தாயிடம் நடந்து கொண்டதை பற்றி ஆகாஷ் மூலமாக தெரிந்து கொண்டதில் இருந்து இப்பொழுது ஊர்மிளா மீதும் கோபமாக இருந்தவன், வேண்டுமென்றே ஊர்மிளா பார்க்க வர்ஷாவின் கரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நக்கலாக அவரை பார்த்துவிட்டு ஆசிர்வாதம் வாங்குவதற்காக தனது தாத்தா பாட்டியின் கால்களில் விழ, பேரனை கண்டதும்,
"இப்படி ஆகிடுச்சே டா" என்ற வேதவல்லிக்கு கண்கள் எல்லாம் கலங்கிவிட,
"என்ன பாட்டி நீங்க, எனக்கு என்ன ஆச்சு நான் நல்லா தான் இருக்கேன்" என்ற ஆதித்தை தொடர்ந்து,
"முதல் முதலல்ல ஆசீர்வாதம் வாங்க வரும் போது ஏன் பழசை பேசி அழுதுட்டு இருக்க ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணு வள்ளி" என சத்தியபாலன் சொல்லவும் கண்களைத் துடைத்துக்கொண்ட வேதவல்லி ஆதித்தை மனதார ஆசீர்வதித்தவர், சில மணி நேரத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்த மஹாலக்ஷ்மியும் தேவராஜும் வர்ஷா மற்றும் ஆதித்திடம் நடந்து முடிந்தவற்றை பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று கேட்டு கொண்டதை மனதில் கொண்டு, விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழியின்றி வர்ஷாவையும் ஆசீர்வதிக்க, இதை பார்த்த ஊர்மிளாவோ தான் இதுவரை பிடித்து வைத்திருந்த பொறுமை அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டபடி,
"நான் என்ன சொன்னேன் நீ என்னம்மா பண்ணிட்டு இருக்க" என்றார் சீற்றமாக.
ஊர்மிளாவின் குரலில் இருந்த சீற்றமே அவர் சண்டையிட போகிறார் என்பதை உறுதிப்படுத்த, வர்ஷாவை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவள் மனதை எந்த ஒரு சூழ்நிலையிலும் வீட்டில் உள்ள யாரும் காயப்படுத்திவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்த மஹாலக்ஷ்மி ஊர்மிளாவின் குணத்தையும் அவரது வார்த்தையில் இருக்கும் வீரியத்தையும் முன்பே அறிந்துவைத்திருப்பதால், நிச்சயம் அவர் வர்ஷாவை தாக்கி பேசுவார் என்பதை கணித்தவர்,
"ஆதி வர்ஷாவை கூட்டிட்டு மேல போ" என்றார்.
ஆதித்தும் தாய் சொன்னதை கேட்டு வர்ஷாவை அழைத்துக் கொண்டு மாடியில் இருக்கும் தன் அறைக்கு சென்றுவிட, அவர்கள் செல்லும் வரை மஹாலக்ஷ்மியை கோபமாக பார்த்தபடி நின்றிருந்த ஊர்மிளா அவர்கள் சென்றதும்,
"என்னமா உன் மருமக அவங்க இஷ்டத்துக்கு முடிவு எடுத்துட்டு இருக்காங்க அண்ணனும் எதுவும் வாய திறக்க மாட்டிக்கிறான், நீயும் அப்பாவும் கூட எதுவும் கேக்க மாட்டிக்கிறீங்க" என்று தன் தந்தையை பார்த்துவிட்டு தாயிடம் முறையிட,
தன் மகளிடம் எதையோ பேச வந்த தன் மாமியாரிடம்,
"அத்தை ஒரு நிமிஷம்" என்ற மஹாலக்ஷ்மி ,
"நான் கொஞ்சம் பேசணும்ன்னு நினைக்கிறேன் அத்தை, குறுக்க பேசுறதுக்கு மன்னிச்சிருங்க" என்றவர் அங்கே இருந்தவர்களை பார்த்து,
"ஆதிக்கு வருணிக்கான்னு நீங்க சபைல சொல்லும் போது அவன் சின்ன பையன். பெத்த அம்மா நான் உயிரோட தான் இருந்தேன் ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம, நீங்க அந்த முடிவு எடுத்தீங்க நான் எதுவுமே சொல்லல ஆனா என்ன ஆச்சு? ஒரு பிரச்சனைன்னு வந்ததும் அத்தனை பேருக்கும் முன்னாடி என் புள்ளைய பேசக்கூடாது எல்லாம் அவ பேசி அவமானப்படுத்திட்டு போயிட்டா, நான் இப்பவும் உங்களை எதுவும் சொல்லல அத்தை நீங்க நல்லது நினைச்சு தான் அந்த முடிவு எடுத்தீங்க ஆனா, அது தப்பா போயிடுச்சு. இப்போ என் பிள்ளையோட வாழ்க்கையில நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன், தயவு செஞ்சு அத பத்தி யாரும் எதுவும் கேட்காதீங்க. பிடிக்குதோ பிடிக்கலையோ வர்ஷா தான் இந்த வீட்டுக்கு மருமக என்கிறத நான் ஏத்துக்கிட்டேன், அவரும் ஏத்துக்கிட்டாரு தயவுசெஞ்சு எல்லாரும் ஏத்துக்க பழகிக்கோங்க. நான் மறுபடியும் சொல்றேன் வேண்டாம்ன்னு விட்டுட்டு போனவங்க போனது தான் திரும்ப என்னைக்கும் வர முடியாது" என்று இறுதி வாக்கியத்தை ஊர்மிளாவை பார்த்தபடியே கூறிய மகாலட்சுமி பின்பு தனது மாமியாரையும் மாமனாரையும் பார்த்து,
"தயவு செஞ்சு உங்க பொண்ணுக்கு அதை புரியவைங்க. நான் பேசினது எதுவும் உங்களை காயப்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சிருங்க அத்தை, மன்னிச்சிருங்க மாமா" என்றவர் அங்கிருந்து சென்றுவிட,
வாயடைத்து போன ஊர்மிளா செல்லும் மஹாலக்ஷ்மியை எரிச்சலுடன் பார்த்துவிட்டு தன் அன்னையிடம்,
"என்னம்மா அண்ணி அவங்க இஷ்டத்துக்கு பேசிட்டு போறாங்க நீயும் அப்பாவும் ஏதும் பேசாம அமைதியா இருக்கீங்க, இப்போ என் பொண்ணுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க" என்றார் ஆதங்கமாக.
"இதுல இதுக்கு மேல பேச என்ன இருக்கு ஊர்மி, வருக்கு நல்ல மாப்பிள்ளையா தேவராஜ் பார்ப்பான். நீ வரு வாழ்க்கைய நினைச்சு கவலைப்படாத" என்ற தன் அன்னையிடம்,
"ஐயோ அம்மா அவ ஆதி கூட தான் வாழ்வேன்னு சொல்லிட்டு இருக்கா" என்று சொல்லவும்,
"என்ன பேச்சு பேசிட்டு இருக்க ஊர்மி, ஆதிக்கு கல்யாணம் ஆயிட்டு புது மருமகளும் வீட்டுக்கு வந்துட்டா இப்போ போய் இதெல்லாம் என்ன பேச்சு, பிள்ளைங்க ஆசைப்பட்டு ஏதாவது சொல்ல தான் செய்வாங்க நாம தான் அவங்களுக்கு புத்திமதி சொல்லணும், இனிமே இத பத்தி எல்லாம் பேசாத ஊர்மி, கேட்கவே ஒரு மாதிரி இருக்கு" என்று மகளிடம் கோபமாக கூறிய சத்தியபாலன் அங்கிருந்து சென்றுவிட, அனைவரது பேச்சும் சரி என்று தோன்றினாலும் தன் மகளை எண்ணி வருந்திய வேதவல்லி,
"நாம ஒன்னு நினைச்சோம் ஆனா வேற ஒன்னு நடந்துருச்சு இனிமே எதையும் மாத்த முடியாது ஊர்மி, வரு கிட்ட பேசி அவ மனச மாத்துவோம் அதுதான் நம்ம எல்லாருக்குமே நல்லது என்று சொல்ல" மகளின் பிடிவாத குணத்தை பற்றி நன்கு அறிந்திருந்த ஊர்மிளா, இதில் இருந்து தன் மகள் எப்படி மீண்டு வர போகிறாள் என்பதை எண்ணி ஒரு தாயக வருணிகாவுக்காக வருந்தினார்.
அடுத்த அத்தியாயம் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
ஆதவன் 12
Last edited:
Author: Naemira
Article Title: ஆதவன் 11
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ஆதவன் 11
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.