- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
ஆதவன் 2
தொடர் அலைபேசியின் அழைப்பால் விழிகளை திறந்து முதலில் சுயம்பெற்ற ஆதி, தங்கள் இருவரின் நெருக்கத்தையும், சட்டை பொத்தான்கள் திறந்திருக்க வெற்று மேனி தெரிய நான் இருந்த கோலத்தையும் கண்டு நிஜமாகவே திடுக்கிட்டான்.
பின்பு கண் மூடிய நிலையில் தனது கைவளைவில் நின்றிருந்த பெண்ணவளை தன் அணைப்பில் இருந்து விடுவித்தவன், அலைபேசியை எடுத்து பார்க்க, தொடுதிரையில் தெரிந்த அவனது தாயின் புகைப்படம் ஏதேதோ நியாபகங்களை அவனுக்கு கொடுக்க, தன்னை கேள்வியாக பார்த்துக்கொண்டிருந்த பெண்ணவளை பார்த்து,
"அம்மா" என்று கூறி அலைபேசியை மட்டும் உயர்த்தி காட்டியவன், சட்டை பொத்தான்களை மாட்டிக்கொண்டே சற்று தள்ளி சென்று தன் தாயிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்றான்.
"அம்மா" என்று அவன் சொன்ன மறுகணமே காதல், மோகம் என அதுவரை இருந்த அத்தனை பரவச உணர்வும் பெண்ணவளின் மனதில் இருந்து காணாமல் போய்விட, கோபத்தில் கண்கள் சிவக்க நின்றிருந்தாள்.
"என்னை பார்க்க வந்தா மட்டும், இவன் அம்மாக்கு மூக்குல வியர்த்திரும்" பற்களை கடித்தபடி அவள் முணுமுணுக்க,
"என்ன?" என்றபடி அவள் அருகே வந்தவனின் கழுத்தில் தன் இரு கரங்களையும் கோர்த்து மாலையாக போட்டவள்,
"ஒன்னும் இல்லை" என்றாள் தன் கோபத்தை மறைத்துக்கொண்டு மிகவும் இயல்பாக, ஏனோ தனது கோபத்தை காட்டி அவனுடனான இந்த அழகான தருணத்தை கெடுக்க அவளுக்கு மனமில்லை.
"சரி கேப் சொல்லவா" புன்னகைத்தபடி அவன் கேட்க,
"எங்க போறதுக்கு?" என்று கேட்டாள் அவன் விழிகளை பார்த்தபடி.
"நான் என் வீட்டுக்கு, நீ உன் வீட்டுக்கு, அத்தை வேற தேடிட்டு இருப்பாங்களே வா சீக்கிரம் கிளம்பலாம்" துரிதப்படுத்தினான்.
"ம்ஹூம்" அவனது தாடி அடர்ந்த முகத்தை தன் ஆள்காட்டி விரலால் வருடியபடி மறுப்பாக தலையசைத்தாள்.
"ப்ளீஸ் வரு ரொம்ப லேட் ஆகிடுச்சு" தன் மீது இருந்த பெண்ணவளின் கரங்களை மெதுவாக நீக்கியபடி சற்று விலகி நின்றான்.
"இது நமக்கான நேரம், அதை ஸ்பாயில் பண்ணாதன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ தான் இதை சொன்ன. ஆனா இப்போ நீயே அதை ஸ்பாயில் பண்ணிட்டு இருக்க" கோபத்துடன் கேட்டாள்.
"என் வீட்டுலையும், உன் வீட்டுலையும் என்னை நம்புறாங்க" நிலைமையை எடுத்து கூறினான்.
"கிட்டத்தட்ட நாலு வருஷமா உன்னை லவ் பண்றேன். எனக்கும் எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்கும். வெளில போய் பாரு எல்லாரும் எப்படி இருக்காங்கன்னு"
"மத்தவங்க மாதிரி நான் கிடையாது, ஐ ஹவ் சம் ப்ரின்சிபிள்ஸ்"
"மண்ணாங்கட்டி" சொல்லும் பொழுதே அவளுக்கு கண்களில் நீர் கோர்க்க அதை பார்த்த அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட அவளை நெருங்கியவன்,
"இன்னும் ஒரு வாரம் தான் ஜஸ்ட் செவென் டேஸ், அப்புறம் நீயே சொன்னாலும் நான் விலகமாட்டேன்" என அவளது கரம் பற்றியபடி கூறினான்.
"ம்ஹூம்" மறுப்பாக தலையசைத்தவள், "நீ என்னை கல்யாணம் பண்ணுவியான்னு சந்தேகமா இருக்கு" என்று கூறவும் கோபம் கொண்டவன்,
"வருணிக்கா என்ன பேசிட்டு இருக்க?" என சற்று அதட்டலாக கேட்க,
"நீ என்கிட்ட காட்டுற டிஸ்டன்ஸை பார்த்தா எனக்கு அப்படி தான் இருக்கு ஆதி, உன் லைஃப்ல வேற யாரோ இருக்காங்கன்னு தோணுது அந்த பாலிவுட் ஹீரோயின் உன்னை பார்த்தாலே வளிவாலே அவளா" என்றதும் அனல் தெறிக்க அவளை பார்த்தவன்,
"நீ என் கரெக்டரையே கொச்ச படுத்திட்டு இருக்க நான் அப்படி பட்டவனா?" என்றவன் அவள் பதில் பேசாமல் இருக்கவும், வேகமாக தன் சட்டையில் உள்ள மூன்று பொத்தான்களை மட்டும் கழட்டி தனது இடது பக்க மார்பில் இருந்த டாட்டூவை காட்டி,
"வேற யாரோ என் மனசுல இருந்தா நான் ஏன் இன்னும் உன் பெயர் போட்ட டாட்டூவை அப்படியே வச்சிட்டு இருக்க போறேன். உன்னை வேண்டாம்ன்னு நினைச்சிருந்தா என்னைக்கோ அழிச்சிருக்க மாட்டேன்" என்று ஒருவித ஆதங்கத்துடன் கேட்கவும், பதில் ஏதும் சொல்லாது முகத்தை மட்டும் வருணிக்கா திருப்பி கொள்ள,
உடனே தன் அலைபேசியை எடுத்த ஆதி அதில் ஸ்கேன் வடிவில் இருந்த சில முன்பதிவு ரசீது மற்றும் புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் அவளிடம் காட்டி,
"மால்தீவ்ஸ்க்கு ரெண்டு டிக்கெட், அப்புறம் இது நம்ம ஹனிமூன்க்கு நம்ம பேர்ல நான் புக் பண்ணிருக்கிற பிரைவேட் ஐலன்ட், உன்னை கல்யாணம் பண்ண வேண்டாம்ன்னு நினைச்சிருந்தா நம்ம பேர்ல ஏன் புக் பண்ண போறேன்" என்றவனின் ஆக்ரோஷமான கேள்விக்கு, ஒருகணம் அவனது அலைபேசியையும் அவனையும் மாறி மாறி பார்த வருணிக்கா,
"ஹனிமூன், மால்தீவ்ஸ், பிரைவேட் ஐலன்ட், வாவ், இம்ப்ரெஸிவ், ம்ம்ம் ஆனா ஏதுக்கும் உன் அம்மாகிட்ட கேட்டுட்டியா? இல்லை நீ தான் உன் அம்மா பெர்மிஷன் குடுக்காம என்னை தொட மாட்டியே அதான் கேட்டேன்" என்று சொன்ன மறுகணம்,
"ஷட் அப், ஜஸ்ட் ஷட் அப். என்ன பேசிட்டு இருக்க ஹான்? என் அம்மாவை பத்தி எப்படி நீ பேசலாம் ம்ம், இன்னைக்குன்னு இல்லை என்னைக்கும் இந்த மாதிரி பேசிறாத. அப்புறம் நம்மள பத்தி நிஜமாவே நீ சொன்ன மாதிரி நான் யோசிக்க வேண்டியிருக்கும்" என்று விரல் நீட்டி அவளை எச்சரித்தவன், அவளது அதிர்ந்த முகத்தை பார்த்து,
"அப்புறம் இன்னைக்கு நீ பேசினத்துக்கு என் இடத்துல வேற ஒருத்தன் இருந்திருந்தா குறைஞ்ச பட்சம் உன்னை அடிச்சிருப்பான், ஆனா நான் அப்படி செய்யல ஏன் தெரியுமா? கல்யாணத்துக்கு முன்னாடி உன்கிட்ட வரம்பு மீறி சாரி சாரி உனக்கு இப்படியெல்லாம் சொன்னா புரியாதே. சரி உன் பாஷைல சொல்லணும்ன்னா கல்யாணத்துக்கு முன்னாடி உன்னை தொட வேண்டாம்ன்னு சொன்ன என் அம்மா தான் எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் உன்கிட்ட மரியாதையோட நடந்துக்க சொல்லி கொடுத்தாங்க" என்று கூறி அவள் மீது அழுத்தமான பார்வை ஒன்றை வீசிவிட்டு அங்கிருந்து ஆதி கிளம்பிவிட, ஏற்கனவே அவன் மீது கோபத்தில் இருந்த வருணிக்காவோ அவன் வீசிய வார்த்தையிலும் அவனது நிராகரிப்பிலும் இன்னும் ஆத்திரம் கொண்டு அங்கு அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த அத்தனை பொருட்களையும் தள்ளிவிட்டு, முகம் சிவக்க பயங்கரமாக கத்தினாள்.
வாடை காற்று முகத்தில் வீச சாலையை வெறித்தபடி தன் காரில் அமர்ந்திருந்த ஆதியால் எவ்வளவோ முயன்றும் கோபத்தை மட்டும் குறைக்க முடியவில்லை, இதே கோபத்துடன் தன் வீட்டிற்கு செல்ல விரும்பாது அப்படியே சீட்டில் தலைசாய்த்து தன் கண்களை மூடி அமர்ந்திருக்க, மனமோ உன்னை விடமாட்டேன் என்பது போல இன்று நடந்த சம்வத்திலே சுத்தி சுத்தி வந்து அவனை மேலும் மேலும் எரிச்சல் படுத்தியது.
'சிறிது நேரத்தில் என்னவெல்லாம் கூறிவிட்டாள்? அவளை காதலிக்கவில்லையாம், வேறொருத்தியை நினைத்துக்கொண்டிருகிறேனாம் ச்ச எப்படி அவளால் பேச முடிந்தது? அதுவும் அம்மாவை பற்றி எப்படி அவள் அவ்வாறு பேசலாம்?' ஆதியின் மனம் ஆறவே இல்லை.
'காதலிக்கவில்லையாம் ஹம் காதலிக்காமலா அவள் அழைத்ததும் அத்தனை வேலைகளையும் அப்படியே விட்டுவிட்டு ஓடோடி வந்தேன் ச்ச' என ஆத்திரத்துடன் தன் கரத்தை ஸ்டீயரிங் மீது ஓங்கி குத்தியவனின் காதில் மீண்டும் மீண்டும் தன் தாயின் வார்த்தைகளே எதிரொலிக்க அவன் கண்முன்னே கடந்த கால காட்சிகள் விரிந்தது,
அந்நேரம் ஆதி மற்றும் வருணிக்கா இருவரும் குடும்பத்தினர் அறிய காதல் பறவைகளாக சுற்றி வந்துகொண்டிருந்தார்கள். தன் மகள் வழி சொந்தம் விட்டு போய்விட கூடாது என்பதற்காக தனது மகளுக்கு வருணிக்கா பிறந்தவுடனே தன் பேரன் ஆதிக்கு இவள் தான் என்று அவனது பாட்டி வேதவல்லி முடிவெடுத்திருக்க, இருவரின் காதல் வாழ்க்கையும் எந்த வித தடையுமின்றி மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தது. என்ன அவன் படப்பிடிப்பிலும் அவள் தனது மேற்படிப்பிலும் ஓய்வில்லாது சுற்றிக்கொண்டிருந்ததால் இருவரும் சந்தித்துக்கொள்வதே அபூர்வமாகி போக, அலைபேசியிலே தங்களின் காதலை வளர்த்து கொண்டனர்.
இப்படியிருக்க ஒவ்வொரு வருடமும் ஆதியின் தாத்தா பாட்டியான சத்திய பாலன் மற்றும் வேதவல்லியின் திருமணநாள் அன்று அவனது சித்தி சித்தப்பா அத்தை மாமா அவர்களின் பிள்ளைகள் என அனைவரும் ஆதியின் வீட்டில் கூடி ஒன்றாக இணைந்து கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம்.
அன்றும் குடும்பம் மொத்தமும் அவன் வீட்டில் குழும்பியிருக்க, வெகுநாட்கள் கழித்து ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததில் ஆதிக்கும் வருணிகாவிற்கும் மிகுந்த சந்தோஷம்.
காதல், நீண்ட நாள் தனிமை, தவிப்பு, இளமை, வயதுக்கே உரிய வேகம் என அனைத்தும் சேர்ந்து இருவரையும் ஆட்கொள்ள அவர்கள் இருவரும் சற்று எல்லை மீறியதை அவனது தாய் மஹாலக்ஷ்மி பார்த்துவிட்டார்.
ஒருபக்கம் தன் தாய் பார்த்ததில் ஆதிக்கு தர்மசங்கடமாக இருக்க, மகாலட்சுமிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
முக்கியமாக சிறுவயதிலே இந்த எண்ணத்தை அவர்களின் மனதில் விதைத்த தன் மாமியார் மீது ஆத்திரமாக வந்தது.
'இதற்காக தான் இதுபோன்ற பேச்சல்லாம் இப்பொழுதே வேண்டாம் என்று கூறினேன் பாருங்கள் இப்பொழுது' என கேட்க மஹாலக்ஷ்மியின் மனம் துடித்தாலும், ஒருவேளை கேட்டு அப்போ இருவருக்கும் உடனே திருமணம் செய்துவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டால் என்ன செய்வது? வாழ்க்கை குறித்து பக்குவமே படாத வயதில் திருமணம் முடித்து வேறு விதமான பிரச்சனைகள் வந்தால் அது இன்னும் ஆபத்தே என்று பதறியவருக்கு, 'திருமணம் வரை இவ்வளவு நெருக்கமாக பழக வேண்டாம்' என்று வருணிகாவிடம் சென்று சொல்லவும் தயக்கம் தான்.
'என் மகளையே தப்பாக பேசுறீங்களா? அண்ணி' என்று அவளது தாய் சண்டைக்கு வந்தால் அது இன்னும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஆக என்ன செய்வது? இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது என்று மிகவும் யோசித்தவர். வேறுவழியின்றி தன் மகனிடம் தனிமையில் உரையாடினார்.
கோபமெல்லாம் படவில்லை மிகவும் நிதானமாக பேசினார்,
"காதலியாகவே இருக்கட்டும், ஏன் நீ கல்யாணம் பண்ணிக்க போறவளாகவே இருக்கட்டும். எல்லையை தாண்டாம அவளோட மானத்தையும் மரியாதையும் காப்பாத்துறது தான் ஒரு நல்லா ஆணுக்கு இலக்கணம். உன்னால அவளுக்கு எந்த வித இழுக்கும் வந்திற கூடாது. பார்த்து இருந்துக்கோடா, அம்மா உன்னை நம்புறேன் யாரும் உன்னை ஏதும் சொல்றது போல நடந்துக்காத" என்று மட்டும் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட, மறுநாள், "சாரி மா இனிமே நீங்க சொன்னது போல சரியா இருப்பேன், உங்களை வருத்தப்படுத்துறது போல நடந்துக்க மாட்டேன்" என்றவன், அதன் பிறகு வருணிகாவை சந்திப்பதை குறைத்துக்கொண்டான்.
எப்பொழுதாவது பார்க்கும் பொழுது, சிறிய சிறிய அணைப்பு குட்டி குட்டி முத்தங்கள் என்று இந்த நொடி வரை தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி, எல்லை மீறாது அவளின் கண்ணியத்தை காத்துகொண்டு இருக்கின்றான்.
நேரம் ஆக ஆக அதுவரை அவன் கொண்ட இறுக்கமும் கோபமும் ஓரளவு குறைந்திருக்க தனது இல்லம் நோக்கி புறப்பட்டான் ஆதி.
@@@@@@@
அணிந்திருந்த ஹீல்ஸ்கள் அவள் தன் காலை உதறிய வேகத்தில் ஒவ்வொன்றும் திசைக்கு வேறாக பறந்து சென்று விழ, காலிங் பெல்லை கூட அழுத்த பொறுமை இல்லது,
"அம்மா" என்று பற்களை கடித்தபடி அவள் தட்டிய வேகம், உள்ளே இருந்த கிருஷ்ணவேணியின் காதில் அது இடியென விழுந்தது.
"வரேன் டி" என்று குரல் கொடுத்தபடி வந்து கதவை திறந்தவர், வாசலில் நீலி போல கண்களை உருட்டி கொண்டு நின்ற இளையமகளை பார்த்து பயங்கரமாக முறைத்தார்.
"நேரம் என்னடி ஆகுது? இது தான் நீ வீட்டுக்கு வர்ற நேரமா? அப்புறம் என்ன ட்ரெஸ் டி இது? ஏன் முட்டிக்கு மேல இன்னும் ஏத்தி போட வேண்டியது தானே. எரும எரும மானதை வாங்குறதுக்குன்னே பொறந்திருக்க" என்று கிருஷ்ணவேணி திட்டிக்கொண்டிருக்கும் பொழுதே வாசலில் ஆட்டோ வந்து நிற்க, அதில் இருந்து வந்திறங்கிய தன் அக்காவை தலையை திருப்பி பார்த்த இளையவளின் பார்வை இப்பொழுது தாயை பார்த்து, 'அவ மட்டும் எவ்வளவு லேட்டா வேணும்னாலும் வரலாம் ஆனா நான் வந்தா மட்டும் வாசல்லையே நிக்க வச்சு கேள்வி கேக்குறீங்க' என்று கேட்காமல் கேட்க,
"அவ பகல் ராத்திரின்னு பார்க்காம நம்ம குடும்பத்துக்காக ஓடுறா" என்று மகளின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு வேணி பதில் கூற தன் கரம் உயர்த்தி போதும் என்பதை போல செய்கை செய்த பெண்ணவள்,
"அவ பணம் கொண்டு வாரா, நான் வரல அதானே" என்று கூறிவிட்டு எதுவும் பேசாமல் உள்ளே செல்ல போகவும்,
"ஏய் நிரோ நில்லு டி ஒழுங்கு மரியாதையா உன் சப்பல ஸ்டேண்ட்ல எடுத்து வச்சுட்டு போ" என்று அவர் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே,
"நானே வச்சிட்டேன்" என்ற தன் தமக்கையை லேசாக திரும்பி ஒரக்கண்ணால் பார்த்தவள் தன் தாயிடம்,
"உங்க அம்முகுட்டி வந்துட்டா இடுப்புல தூக்கிவச்சு சோறு வூட்டுங்க" என்று கூறிவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கதவுக்கு தாளிட்டாள்.
"எகத்தாளத்தை பார்த்தியா?" என்று தன் மூத்தமகளிடம் வேணி இளையவளை பற்றி குறைபட,
"ம்ம் விடுமா பாவம்" என்று தன் தங்கைக்காக அவள் பரிந்து பேசவும்,
"வர்ஷா கோபத்துல ஏதாவது சொல்லிட போறேன் போயிடு, எல்லாம் நீயும் உன் அப்பாவும் குடுக்குற இடத்துல தான் இவ என் பேச்சை கேட்க மாட்டிக்கிறா" என்ற தாயின் கன்னத்தில் முத்தம் பதித்து கண்சிமிட்டியவள், "பசிக்குது மா" என்று கண்ணைசுருக்கி கெஞ்சவும், அவளை முறைத்துக்கொண்டே,
"ட்ரெஸ் மாத்திட்டு அவளையும் கூட்டிட்டு வா அம்மு, நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்ற வேணி சமையல் அறைக்குள் நுழைந்துகொண்டார்.
@@@@@@@
காரை பார்க் செய்துவிட்டு வந்தவன், காலிங் பெல்லில் கரம் வைத்த அடுத்த கணம் கதவை திறந்து கொண்டு புன்னகை முகமாக வாசலில் நின்ற தன் தாயை பார்த்து சிரித்தவன்,
"சாரி மா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு" என்று சொல்ல,
"அதான் லேட் ஆகிடுச்சே, உள்ள வா" என்றவர், "ஆதி போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா, நான் தோசை சுடுரேன்" என்று சொல்ல,
தன் தாயின் கரம் பிடித்து சமயலறைக்கு அழைத்து சென்று ஒரு நாற்காலி போட்டு அமருமாறு கண்ணை காட்டியவன்,
"நாள் முழுக்க நீங்க சமையல்கட்டுல நின்னு சமைச்சது போதும் இப்போ உட்காருங்க" என்று வலுக்கட்டாயமாக நாற்காலியில் தன் தாயை அமரவைத்தான்.
பின்பு தன் முழுக்கைச்சட்டையை முட்டி வரை மடக்கிவிட்டு தோசை கல்லை எடுத்து அடுப்பில் வைத்தவன், மாவையெடுத்து சரியாக கலீல் ஊற்றி சில நிமிடத்தில் தான் சுட்ட முறுகல் தோசையை பிளேட்டில் வைத்து தாயிடம் கொடுக்க,
"நீ சாப்பிடு டா, அம்மா செய்யிறேன்" என்று தன் இருக்கையில் இருந்து எழும்ப போன தாயை, "அம்மா உட்காருங்க நான் சொல்ற வர எந்திரிக்க கூடாது" என்று அதட்டியவன்,
"நீங்க இன்னும் சாப்பிட்டுருக்க மாடீங்கன்னு எனக்கு தெரியும், முதல்ல நீங்க சாப்பிடுங்க" என்று சொல்லவும் அவன் காதை திருகியவர்,
"படவா என்னையே மிரட்டி பார்க்கிறியா ம்ம், நீ சாப்பிடாமா நான் சாப்பிட மாட்டேன்னு உனக்கு தெரியும்ல இந்தா சாப்பிடு" என்று அவனுக்கு ஊட்டவும், "ம்மா" என்று முறைத்தபடி வாங்கிகொண்டவன்,
"மாத்திரையெல்லாம் போடனும்ல ஏன் இப்படி சாப்பிடாம இருக்க? எத்தனை தடவை சொல்லிட்டேன் சீக்கிரம் சாப்பிடுன்னு ஏன் மா இப்படி பண்ற" என்ற மகனிடம்,
"அப்போ நீங்க சீக்கிரம் வாங்க சார்" என்றார் இன்னொரு வாய் ஊட்டிவிட்டபடி.
உடனே தன் தாயை முறைத்தவன், "அம்மா உனக்கு தான் என் வேலைய பத்தி தெரியும்ல அப்புறம் ஏன் மா இப்படி பண்ற"
"சரி டா சரி இனிமே சாப்பிட்டுருவேன் ஓகே வா" என்ற தன் தாயிடம்,
"ம்மா இனிமே நீ நேரத்துக்கு சாப்பிடல அப்புறம் நான் என் கெஸ்ட் ஹவுசலையே தங்கிக்குவேன்" என்றதும் ஆதியின் முதுகில் ஒரு அடி போட்ட மஹாலக்ஷ்மி,
"டேய் உதை படுவ, அதான் இனி ஒழுங்கா சாப்பிடுறேன்னு சொன்னேன்ல அப்புறம் என்னடா" என்றவரிடம்,
"சரி சரி எங்கையும் போக மாட்டேன் கோபப்படாத" என்று புன்னகையுடன் ஆதி கூறவும் பதிலுக்கு புன்னகைத்தபடி அவனுக்கு அவர் ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தார்.
அப்பொழுது, "இன்னைக்கும் லேட்டா தான் வந்தியாடா" என்று தன் மகனிடம் கேட்டபடி சமயலறைக்குள் காலி தண்ணீர் பாட்டிலுடன் தேவராஜ் நுழைந்தார்.
"தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் பண்ணனும்ன்னு ப்ரொட்யூசர் கேட்டாரு அதான் ஒர்க் கொஞ்சம் டைட்டா போகுது" என்ற ஆதியிடம்,
"கல்யாணத்துக்கு அப்புறமாவது கொஞ்சம் சீக்கிரம் வர ட்ரை பண்ணு இல்லைனா உன் அத்தை உன் அம்மா தலைய தான் உருட்டுவா" என ஃபில்ட்டரில் தண்ணீர் பிடித்தபடி புன்னகையுடன் கூறியவர்,
பாட்டிலை மூடியபடி அவன் அருகில் வந்து, "அப்புறம் ஆதி நாளைக்கு புடவை எடுக்க எல்லாரும் ஷாப்பிங் போறாங்க, நீயும் வரணும்ன்னு வருணிக்கா ஆசைப்படுறா ஸோ கண்டிப்பா நீ போயிட்டு வந்திடு" என்றவர், தான் தூங்க செல்வதாக தன் மனைவியை பார்த்து கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட
"என்ன மா இது ஷாப்பிங்க்கு நான் வந்து என்ன பண்ண போறேன்?" என்றான் எரிச்சலாக,
"ஷாப்பிங் வர்றதுக்கு என்ன ம்ம்? இப்பவே இதெல்லாம் பழகிக்கோ" ஏன் மஹாலக்ஷ்மி சீண்டலுடன் சொல்ல,
"நீங்க நாள் முழுக்க பண்ணுவீங்க சத்தியமா கஷ்டம்மா. நாளைக்கு ஷூட் வேற இருக்கு, அப்புறம் வர்ற வெள்ளி கிழமை சக்ஸஸ் பார்ட்டி வேற அரேஞ் பண்ணிருக்கேன் அந்த வேலை வேற பார்க்கணும்"
"டேய் சனி கிழமை உனக்கு கல்யாணம், நீ பேசறதை பார்த்தா தாலி கட்டுற முந்தின செகண்ட் வர வேலை பார்ப்ப போல. எனக்கு தெரியாது டா நாளைக்கு நீ கண்டிப்பா வர்ற அவ்வளவு தான்"
"ப்ளீஸ் மா புரிஞ்சிக்கோ"
"நீ என்னை கொஞ்சம் புரிஞ்சிக்கோ டா. உன் அப்பா சொன்னதை கேட்ட தானே நீ வரலைனா உன் அத்தை என்கிட்ட சண்டைக்கு வருவா, அப்புறம் உன் பாட்டி ஒருபக்கம் என்கிட்ட கத்துவாங்க தேவையில்லாத பிரச்சனை வரும்."
"நீ இருக்கியே மா" என்று சலித்துக்கொண்டவன், இறுதியில்,
"சரி உனக்காக வரேன். ஆனா முழு நாள் இருக்க மாட்டேன் கொஞ்சம் நேரம் தான்" என்று ஆதி சொல்ல,
"நீங்க வந்தா போதும் சார், வந்தா மட்டும் போதும்" என்று புன்னகைத்தபடி அவனது தாய் சொல்லவும் வாய்விட்டு சிரித்தவன், "பாருடா ஹான் முன்னேறிட்ட மஹாலக்ஷ்மி" என்ற மகனிடம், "பின்ன யாரோட அம்மா நானு" என்று அவர் இல்லாத காலரை தூக்கிவிட்டு கண்ணடிக்க தன் தாயை பார்த்து சிரித்தவன், அவரை உணவு உன்ன வைத்து, அவர்சாப்பிட வேண்டிய மாத்திரையை எடுத்து கொடுத்து,
வழக்கமாக அவன் வீட்டில் இருந்தால் செய்வது போல அவரது வீங்கிய பாதத்தை தன் மடியில் தூக்கி வைத்து எண்ணெய் தேய்த்து விட,
"போதும் டா நான் பார்த்துகிறேன் நீ போய் தூங்கு" என்ற தன் தாயிடம்,
"பரவாயில்லமா நீ சும்மா இரு" என்றவன் அவர் பாதத்தை மெதுவாக அழுத்திவிட்டு கொண்டிருக்க, தன் மகனின் தலையை வாஞ்சையுடன் வருடினார் மஹாலக்ஷ்மி.
"ஆடிஷன் எப்படி போச்சு?" நிரோஷாவின் தட்டில் ஒரு சப்பாத்தியை வைத்தபடி வர்ஷா கேட்கவும் கண்களை மூடி திறந்த பெண்ணவள்,
"ம்ஹூம்” எதுவும் அமையவில்லை என்பது போல குறுக்காக தலையசைத்து, "என்ன எதிர்பார்க்குறாங்கன்னே புரியல" என சலிப்புடன் கூறியபடி சுவற்றை வெறித்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க,
"மனசை தளரவிட்டுறாத, இன்னும் நிறைய ஆடிஷன்ஸ் ட்ரை பண்ணு நிச்சயம் கிடைக்கும், இந்த கஷ்டம் எல்லாமே உன் திறமை மத்தவங்களுக்கு தெரியுற வரைக்கும் தான், ஒன்ஸ் தெரிஞ்சிட்டா அப்புறம் நீ ஸ்டார் ஆகுறதை யாரும் தடுக்க முடியாது" என்ற வர்ஷாவிடம் ஆமோதிப்பதாக நிரோஷா தலையசைக்கவும் அவள் தட்டில் கிரேவியை ஊற்றிய வர்ஷா,
"சாப்டுட்டு சீக்கிரம் தூங்கு" என்று கூற தலையை உயர்த்தி தன் அக்காவை ஒருகணம் பார்த்தவள்,
"உன் விருப்பத்தை பத்தி ப்ரஜன் கிட்ட பேசிட்டியா" என்று கேட்க,
"ம்ம் அவருக்கு எந்த ப்ராபளமும் இல்லைன்னு சொல்லிட்டாரு" என வர்ஷா புன்னகையுடன் கூறவும்,
"ம்ம் அவன் வீட்ல இருந்து நாளைக்கு எந்த பிரச்சனையும் வராதுல" என்ற தன் தங்கையிடம்,
"அது ஏன் வரப்போகுது" என வர்ஷா கேட்க,
"எனக்கு அவங்களையெல்லாம் பார்த்தா பிராட் மைண்டெட்டா தோனல எதுக்கும் ப்ரஜன்கிட்ட பேசிடு" என்ற தன் தங்கையிடம் சரியென்பதாய் தலையசைத்த வர்ஷா புன்னகையுடன் அவளிடம் விடைபெற்றுக்கொண்டு தன் அறைக்குள் நுழைய, இப்பொழுது அவளது மனம் அவள் தங்கை நிரோஷா கூறியதை பற்றி தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருக்க, அந்நேரம் பார்த்து அவளுக்கு பிரஜனிடம் இருந்து வழக்கம் போல குட் நைட் மெசேஜ் வர, அதற்கு பதில் அனுப்பிய வர்ஷா நீண்ட நேர யோசனைக்கு பிறகு அப்படியே உறங்கிப்போக,
இங்கே வர்ஷினியோ உறக்கத்தை பறிகொடுத்தபடி தன் அலைபேசியையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். வீட்டிற்கு வந்ததும் கிட்டத்தட்ட ஒரு இருபது சாரி மெஸேஜாவது அனுப்பியிருப்பாள் ஆனால் இந்த நொடி முதல் ஆதியிடம் இருந்து ஒரு பதில் கூட வரவில்லை. இதான் அவன் எளிதில் கோபம் வராது ஆனால் வந்துவிட்டால் கட்டுப்படுத்துவது அவ்வளவு சிரமம். அதைவிட அவனை சமாதானம் செய்வது இன்னுமே கடினம்.
"அவனை பற்றி தெரிந்தும் அத்தைய பற்றி பேசி தவறு செய்துவிட்டோமோ?" பெண்ணவளின் மனம் இப்பொழுது மிகவும் வருந்தியது.
"ச்ச" என்று எரிச்சலில் நெற்றியை தேய்த்த வர்ஷினிக்கு மஹாலக்ஷ்மியை எண்ணி கோபமாக வந்தது.
"அவன் சரியா தான் இருக்கான் இவங்க தான் அவனை குழப்பிவிடுறாங்க, இருக்கட்டும் கல்யாணம் முடியட்டும் எல்லாத்துக்கும் முடிவு கட்டுறேன்" என்று வாய்விட்டே கூறியவள் மீண்டும் அலைபேசியை பார்க்க, அவனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவும் கோபத்தில் அதை தூக்கி கட்டிலின் மறுபக்கத்தில் எறிந்தவள், அப்படியே குப்புற படுத்து கண்மூடினாள்.
அடுத்த அத்தியாயம் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க.
ஆதவன் 3
Last edited:
Author: Naemira
Article Title: ஆதவன் 2
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ஆதவன் 2
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.