Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

ஆதவன் 3

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
ஆதவன் 3

காதில் தேன் ஊறும் மெல்லிய இன்ஸ்ட்ருமென்ட்டல் இசை! நாசியைச் சுகிக்கும் நறுமணம்! மிளிரும் அலங்கார மின் விளக்குகள்!
என மனதை வசீகரிக்கும் அழகுடன் ரம்மியமாகக் காட்சியளித்த அந்த ‘தி ராயல்’ ஹோட்டலின் மேல் தலத்தில் அமைந்திருக்கும் பார்ட்டி ஹாலுக்கு வந்திருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் கையில் மதுபானம் நிறைந்த கோப்பையுடன் மேடை மீது பார்வை பதித்தபடி நின்றனர்.
அப்பொழுது சாம்பல் நிற கோட் சூட்டில் குழுமியிருந்த அனைவரையும் பார்த்துப் புன்னகைத்து, தான் அணிந்திருந்த குளிர் கண்ணாடியைக் கழட்டியபடி, சமீபத்தில் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுப் பல கோடிகளை இன்று வரை குவித்துக் கொண்டிருக்கும் 'அக்னி சிறகே எழுந்துவா' என்னும் பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் கதாநாயகி மற்றும் கதாநாயகன் அக்னி மற்றும் ஸ்ரீதர் முன்னே செல்ல, அவளைத் தொடர்ந்து மேடை ஏறினான், இந்த மொத்த பாராட்டுகளுக்கு வெற்றிகளுக்கும் ஆதியும் அந்தமுமாய் இருக்கும் அந்த படத்தின் இயக்குநரும் ப்ரொட்யூசருமான, அனைவராலும் ஆதி என்று அழைக்கப்படும் "ஆதித் மஹாதேவ்".
ஒருகாலத்தில் பத்தோடு பதினொன்றாக இது போல ஒரு கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்று யாரோ ஒருவரின் வெற்றிக்காக தன் கரங்களைத் தட்டிக்கொண்டு நின்றவன் இன்று தனது திறமையாலும் கடின உழைப்பாலும் பல கோடி மக்களின் மனதில் இடம் பிடித்து அனைவரும் அண்ணாந்து பார்த்து பொறாமை கொள்ளும் அளவுக்குப் புகழின் உச்சத்தில் இருக்கின்றான்.
அவனை அறியாத திரைத்துறை பிரபலங்களே கிடையாது. "அன்புள்ள அப்பா" என்னும் தன் முதல் படம் மூலம் நம் தமிழ் இளைஞர்கள் துவங்கி பெரியவர்கள் வரை அனைவரின் மனதில் இடம் பெற்றவன். தனது இரண்டாவது படமான பிளாக் பஸ்டர் திரைப்படம் "பிளாக் மணி" என்கின்ற அரசியலை அடிப்படையாக வைத்த சோஷியல் க்ரைம் திரில்லர் படம் மூலம் மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்து மக்கள் மத்தியில் ஆதரவையும், சட்ட ரீதியாக சில சிக்கலையும் சந்தித்தும் சற்றும் பின்னடையாது 'இதெல்லாம் ஒரு ஸ்க்ரிப்டா, போட்டதை கூட எடுக்க முடியாது' எனப் பலரது எதிர் மறை கருத்துகள் அனைத்தையும் முறியடித்து "அ சிங்கள் டிராப்" என்னும் தனது அடுத்த படம் மூலம் ஒட்டு மொத்த உலகத்தையே வாயடைக்க வைத்துவிட்டான்.
"இவ்வளவு ஓவர் கான்ஃபிடென்ஸ் இருக்கக் கூடாது ஆதித்"
"இந்த பொண்ணு ஹீரோயின் மெட்ரியலே கிடையாது"
"ஒரு கிளாமர் ஸீன் கூட இல்லாமல் எப்படி? படம் கண்டிப்பா பிளாப் தான்" இப்படி கருத்துக்கள் சொன்னவர்கள் எல்லாம் அசந்து போகும் படி இன்று தனது "அக்னி சிறகே எழுந்துவா" என்னும் தனது நான்காவது திரைப்படம் மூலமாக பாலிவுட் ஹாலிவூட் என அனைவரையும் கைதட்ட வைத்துவிட்டான்.
வெள்ளை நிறம், வசீகர தோற்றம், சிக்ஸ் பேக், பிரம்மாண்டம், அப்பட்டமான காதல் காட்சிகள், இதெல்லாம் இருந்தால் படம், இது தான் மக்களுக்கும் பிடிக்கும், பணமும் கொட்டும் என்று இது போன்றவை பின்னால் நம் இந்திய சினிமா ஓடி கொண்டிருக்க, இது எதுவும் இல்லாமலே அழுத்தமான கதைக்களம், ஆத்மார்த்தமான நடிப்பு, சரியான ஸ்க்ரீன்பிளே மூலமாக படம் தயாரித்து, மக்களின் மனதில் இடமும் பிடிக்கலாம் பல கோடிகளையும் குவிக்கலாம் என சொல்லாமல் செயலில் காட்டினான், இப்பொழுது வரை காட்டிக்கொண்டும் இருக்கின்றான்.
ஐட்டம் சாங் என்கின்ற பெயரில் அரைகுறை ஆடையுடன் பெண்களை ஆட வைப்பது. காதல் என்கின்ற பெயரில் அப்பட்டமான படுக்கையறை காட்சிகள் வைப்பது ஆதித்க்கு பிடிக்காத ஒன்று. அதற்காகக் காதலே பிடிக்காது என்றெல்லாம் கிடையாது. அவன் படத்திலும் ஆத்மார்த்தமான காதல் காட்சிகள் வரும் ஆனால் அவை அனைத்தும் வரைமுறைக்கு உற்பட்டது. சில நொடிகள் வந்துபோகும் பார்வைகள் மட்டும் உரசிக்கொள்ளும் மென்மையான காதல் காட்சிகள், மனதைத் தொடும் வசனங்கள் மற்றும் கதையின் நாயகன் மற்றும் நாயகியின் தத்ரூபமான நடிப்பின் மூலமாகவே பார்ப்போரைக் காதலை உணரவைத்து, கண்ணீரில் கரைய வைத்து அவர்களின் நெஞ்சத்தில் நிறைவைக் கொடுத்துவிடுவான்.
தனது இருபது வயதில் இயக்குநராக ஆசைப்பட்டவன், எந்த சினிமா பின்புலமும் இல்லாது, தன் குடும்பத்தில் உள்ள அனைவரின் எதிர்ப்பையும் தாண்டி தன் தாய் கொடுத்த ஊக்கத்தில் வெறும் ஸ்மார்ட் ஃபோன் மூலமாக தன் நண்பர்களுடன் இணைந்து, பதினைந்து நிமிட குறும்படம் தயாரித்து யூடியூபில் வெளியிட்டுப் பிரபலமானான். என்ன அதற்கு வெறும் கைதட்டலும் யூட்யூப் மூலம் சிறிய தொகை மட்டும் தான் பரிசாகக் கிடைத்தது.
இருந்தும் சோர்வடையாது தொடர்ந்து சமூக சிந்தனை, பெண்மையைக் கருத்துக்கள், கொண்ட பல குறும்படங்களை வெளியிட்டவனைப் பெரிய பெரிய இயக்குநர்கள் துவங்கி அனைவரும் பாராட்டினார்களே தவிர அங்கீகாரம் யாரும் தரவில்லை. காரணம் அவனது ஸ்க்ரிப்ட்கள் அனைத்தும் சமூக சிந்தனை, சோஷியல் க்ரைம், என்று சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக இருக்கப் பல ப்ரொட்யூசர்கள் முதலீடு செய்ய மறுத்துவிடச் சிலரோ அவன் திறமையைக் கண்டு,
"ஆதித் இந்த ஸ்க்ரிப்ட்ல கொஞ்சம் சீன்ஸ் மட்டும் நான் சொல்றது போல வைங்க, நான் இன்வெஸ்ட் பண்றேன்" என்று முன்வர, தான் கொண்ட கொள்கையில் தீவிரமாக இருந்த ஆதித்கு அதில் உடன்பாடு இல்லாமல் போகவே, மறுத்துவிட்டவன், 'என்னடா இது' என்று தளர்ந்த அமர்ந்த பொழுது, தன் தந்தை தனது திருமணத்தின் பொழுது தனக்குக் கொடுத்த நகை மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் அனைவரின் எதிர்ப்பையும் மீறி தன் மகன் மீது கொண்ட நம்பிக்கையில் சற்றும் தயங்காமல் விற்று, "இந்தாடா இதில உனக்குத் தேவையான பணம் இருக்கு, இனி யார்கிட்டையும் போய் என் பையன் நீ கெஞ்ச வேண்டாம்" என்ற தன் தாய் என்றால் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும் . இப்பொழுது வேண்டுமானால் சொந்த பந்தங்கள் துவங்கி அனைவரும் அவனைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடலாம், நான் நீ என்று ப்ரொட்யூசர்கள் போட்டியிடலாம், ஆனால் அவனிடம் எதுவும் இல்லாத நேரத்தில் அவனுக்கு உதவியது அவன் தாய் தானே ஆகவே ஆதித் மஹாதேவ்க்கு அவனது அன்னை மஹாலக்ஷ்மி என்றால் அவ்வளவு உயிர்.
அவனது முதல் பட வெற்றி விழாவில் சற்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவனது கரத்தை பற்றி கொண்டு மஹாலக்ஷ்மி,
"ஒரு மனுஷன் வெற்றியோடு உச்சிக்கு போக போக கூடவே அதாள பாதாளத்துல தள்ளுறது போல பல தீய பழக்கவழக்கங்கள் அவனை ஈர்க்க பார்க்கும், அந்த மாதிரி விஷயங்கள்ல உன் கவனம் என்னைக்கும் போகவே கூடாது. எப்பொழுதும் உன்னுடைய கரீயர் மேல மட்டும் உன் முழு சிந்தனையும் வை" என்ற தன் தாய் சொன்ன ஒரு வார்த்தைக்காக அன்று துவங்கி இன்று வரை ஒழுக்கம் தவறாது இருக்கின்றான்.
ஆக மது மாது பிடிக்காது, சூது தெரியாது. பெண்கள் அவனிடம் மிகவும் பாதுகாப்பாக வேலை பார்க்கலாம். அது சாதாரண க்ரூப் டான்சரோ இல்லை பெயர் சொல்லும் ஹீரோயினா அவனுக்கு அனைவரும் சமம். செட்டில் இவர்கள் மீது ஆண்களின் பார்வை தவறாக விழுந்தால் கூட யாரென்றெல்லாம் வைத்து பார்க்க மாட்டான்.
இருபத்தியைந்து வயது தான்! தந்தை பெரிய மென்பொருள் நிறுவனத்தின் முதலாளி! ஐந்து வருடத்திற்குள் நான்கே படம் தான்! ஆனால் உலகளவில் புகழின் உச்சியில் இருக்கின்றான்! ஆக பணமும் புகழும் கொட்டிக் கிடக்கின்றது, இருந்தும் அதற்கான கர்வம் இவனிடம் கொஞ்சமும் கிடையாது.
சிறிய தவறுக்கும் மற்றவர்களிடம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாது முடிந்தளவு தன்னிடம் வேலை பார்ப்பவர்களை தட்டிக்கொடுத்தே வேலை வாங்குவான்.
வேலை என்று வந்துவிட்டால் வேகத்திற்கு இணையான ஒருவித நிதானம் அவனிடம் எப்பொழுதும் உண்டு. இஷ்டத்திற்கு படங்களை எடுத்து தள்ளமாட்டான் வருடத்திற்கு ஒரு படம் தான் ஆனால் அதை யாரும் மறக்காத படி நிறைவாக கொடுப்பான்.
ஆக நேர்மையானவன், கண்ணியமானவன், அன்பானவன், வேலையில் கெட்டிக்காரன் மிகவும் நல்லவன் ஆம் நல்லவன் தான் ஆனால் நல்லவர்களுக்கு மட்டும்.
"ஹலோ மிஸ்டர் ஆதித் மஹாதேவ் மறுபடியும் சாதிச்சிடீங்க." என்ற நிருபரிடம்,
"மக்களோட ஆதரவு இல்லைன்னா இது சாத்தியம் இல்லை" புன்னகை மாறா முகத்துடன் ஆதித் பதிலளித்தான்.
" 'தி விக்டிம்' படத்தோட ப்ரோடக்ஷ்ன் எப்படி போய்ட்டு இருக்கு சார்" என்று கேட்ட இன்னொருவருக்கு,
"கோயிங் குட், தீபாவளிக்கு எதிர் பார்க்கலாம்" என்றான் ஆதித்.
"இந்த முறை எந்த மாதிரியான கதைக்களம் உங்ககிட்ட இருந்து நாங்க எதிர்பார்க்கலாம் சார், படத்தை பத்தி சின்னதா ரெண்டு வரில சொல்லலாமே" என்ற நிருபரை பார்த்து,
"அது படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க" என்று அதே புன்னகையுடன் கூறினான்.
"சார் ஒரு பெர்சனல் குவஷ்ட்டின்" என்ற பெண் நிருபரிடம், "யஸ் கோ அஹட்" கேட்குமாறு ஆதித் தலையசைக்க,
"இப்போ சமீபமா வலைத்தளங்கள்ல உங்களுக்கும் உங்க நீண்ட நாள் காதலிக்கும் கல்யாணம் ஆக போறதா பல நியூஸ் போயிட்டு இருக்கு. அது உண்மையா? உங்க கல்யாணம் எப்போ? உங்க வருங்கால மனைவி
பேரு என்ன? கொஞ்ச சொன்னீங்கன்னா உங்க ரசிகர்கள் சந்தோஷ பாடுவாங்க" என்ற பெண்ணிடம்,
"சாரி என்னுடைய ஃபமிலி அண்ட் பெர்ஸனல் டீடைல்ஸை மீடியால ஷேர் பண்றது எனக்கு பிடிக்காது. பட் ரசிகர்களுக்கு ரெண்டு சர்ப்ரைஸ் இருக்கு, சீக்கிரம் அவங்களை சர்ப்ரைஸோட சந்திப்பேன்" என்றான்.
"அப்புறம் விநாயக் சார் கூட மறுபடியும் வொர்க் பண்ணுவீங்களா" என்ற கேள்வியில் சற்றென்று ஆதித்தின் இன்முகத்தில் ஒருவித இறுக்கம் தோன்ற,"நெவெர்" என்றான் மிக அழுத்தமாக.
"இந்த சக்ஸஸ் பார்ட்டிக்கு விநாயக் சாரும் வருவாரா" என்று இன்னொருவன் கேட்டான்.
அதற்கு, "நோ" என்று இன்னும் அழுத்தமாக கூறி, "ஐ திங்க் படத்தை பத்தி எல்லாம் பேசியாச்சுன்னு நினைக்கிறேன். ஆள் ஆஃப் யு ப்ளீஸ் என்ஜாய் தீ பார்ட்டி" என்று வலுக்கட்டாயமாக புன்னகைத்த ஆதித் தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட நேரம்,
"நான் வராம எப்படி?" என்று கேட்டபடி மேடையை நோக்கி நடந்து வந்த விநாயக்கை "சார் சார்" என்று பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொள்ள, ஆதித்தின் தணல் விழிகள் கோபத்தில் தகித்தது.
அதே நேரம் ஹோட்டலில் உள்ள மூன்றாம் தளத்தில் சொந்தங்கள், நண்பர்கள் அனைவரும் தங்களின் கரங்களை மகிழ்ச்சியுடன் தட்ட, பல வண்ண வாசனை மலர்களுக்கு நடுவே எழில் ஓவியம் போல நின்றிருந்த வர்ஷாவின் விரலில் நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்தான் ப்ரஜன்.
இதோ இதோ என்று நிச்சயதார்த்தம் எந்த வித தடையும் இன்றி நல்ல விதமாக நடந்து முடிந்ததில் பெரியவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் திருமணம் பற்றி பேசி கொண்டிருக்க, இந்த இன்பமான தருணத்தை எண்ணி மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய வர்ஷாவின் மனமோ அன்று நிரோஷா கூறியதை பற்றிய சிந்தனையில் உழன்று கொண்டிருந்தது,
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் என்ன கேட்டு என்ன பயன்? ஒருவேளை நிரோஷா கூறியதை போல அவளது வருங்கால மாமனாரும் மாமியாரும் இவள் நடனம் ஆட ஒத்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது?
தன் கனவு களைந்து விடுமோ என்கின்ற பயம் ஒரு புறம், திருமணத்திற்கு பின் தன் தாய் தந்தையருக்கு பொருளாதாரளவில் எந்த உதவியும் செய்ய முடியாமல் போய்விடுமோ என்கின்ற கவலை ஒருபுறம் என்று இதை பற்றி நினைக்க நினைக்க பெண்ணவளின் மனம் மிகவும் வலிக்க, மணப்பெண்ணிற்கு உரிய எந்த வித புத்துணர்ச்சியும் இல்லாமல் பெண்ணவள் பொலிவிழந்து காணப்பட்டாள்.
அப்பொழுது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ப்ரஜன் அவர்களிடம் இப்பொழுது வந்துவிடுவதாக கூறிவிட்டு வர்ஷாவின் அலைபேசிக்கு அழைத்தவன், அவளை தரைத்தளத்தில் உள்ள பார்க்கிங் ஏரியாவிற்கு வரும்படி கூறிவிட்டு அந்த ஹாலில் இருந்து வெளியேறினான்.
@@@@@@@@@@@
"இந்த பொறுக்கி இங்க என்ன பண்ணிட்டு இருக்கான்?" ஆத்திரத்தில் பற்களை கடித்தபடி கூறிய ஆதித்தை,
"ஆதி கொஞ்சம் பொறுமையா இரு, நீ எதுவும் ரியாக்ட் பண்ணாத, மீடியா பார்வையெல்லாம் இங்க தான் இருக்கு ப்ளீஸ் ரிலாஸ் டா" என்று அவனது நண்பனும் மனேஜருமான ஆகாஷ் சமாதானம் செய்தான்.
அப்பொழுது அங்கு வந்த விநாயக், "கங்கிராட்ஸ் மிஸ்டர் ஆதித் மஹாதேவ்" என்று கூறி ஆதித்தை அணைக்க போகவும், தன் ஆள்காட்டி விரலை விநாயகின் நெஞ்சில் வைத்து தள்ளியவன் அதே விரலை அசைத்து வெளியே போக சொல்லி செய்கை செய்து, "அவுட்" என்றான் கட்டளையாக.
"ஓகே ஓகே ரிலாக்ஸ்" என்று தன் இருக்கரங்களையும் உயர்த்திய விநாயக், "என் நண்பன் நீ உன் வெற்றியில் பங்கெடுத்துக்கலாம்ன்னு வந்தேன். உனக்கு பிடிக்கலைன்னா ஓகே நான் கிளம்புறேன். இட்ஸ் யுவர் டே, நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். எவ்வளவு விரும்புரியோ அவ்வளவு என்ஜாய் பண்ணிக்கோ" என்றவன், ஆதித்தின் தோள்களை தட்டி, "டேக் கேர் ப்ரோ" என்று கூறி விஷமமாய் சிரிக்க, அவன் கரம் வைத்த இடத்தை தனது கைக்குட்டை கொண்டு துடைத்து விட்டு விநாயக் பார்க்க, கைக்குட்டையை கீழே போட்டு மிதித்த ஆதித் அவனை பார்த்து தன் இதழ் வளைத்து ஏளனமாக சிரிக்க.
ஆதித்தை பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பிய விநாயக், தனது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தன்னுடன் ஓடி வந்த தனது பிஏ ரகுவிடம்,
"எல்லாம் ரெடியா இருக்குல்ல," என்று பற்களை கடித்தபடி கேட்டான்.
"பக்கா சார்" என்றான் ரகு பவ்வியமாக.
"அந்த பொண்ணு வந்துட்டாளான்னு செக் பண்ணு?" என்ற விநாயக், "மிஸ் ஆகக்கூடாது ரகு" என்று உறுதியாக கூறினான்.
அதற்கு, "ஆகாது சார்" என்று உறுதியளித்த ரகு, “நான் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு வரேன்" என்று சொல்லி கிளம்பிவிட,
"சிரி ஆதித் நல்லா சிரி, இது தான் நீ கடைசியா சிரிக்க போறது" என்றான் விநாயக் வன்மமாக.
@@@@@@@@
"அவன் தான் கிளம்பிட்டான்ல நீ விடு மச்சான்" இன்னும் கோபமாக இருந்த தன்னை சமாதானம் செய்த ஆகாஷிடம்,
"எவ்வளவு திமிரு இருந்தா நான் கூப்பிடாம என் பார்ட்டிக்கு வந்திருப்பான்" என்று இன்னும் கோபம் ஆறாது இறுகிய முகத்துடன் இருந்த தன் நண்பனை மிகவும் சிரமப்பட்டு சமாதானம் செய்த ஆகாஷ், தன் அலைபேசி அழைக்கவும் நினைவு வந்தவனாக, "ச்ச" என்று நெற்றியை தேய்த்தான். அப்பொழுது அதை கவனித்த ஆதித், "என்னாச்சு?" ஸ்ட்ராபெரி மோஜிடோவை சுவைத்தபடி வினவினான்.
"விநாயக் வந்ததுல நான் உன்கிட்ட சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டேன் டா" என்றவன் வருணிகா வந்திருப்பதை கூறினான்.
"வரு இங்கையா ப்ச்" என்று சலித்துக்கொண்ட ஆதித், "அவளை அனுப்பி வைக்க வேண்டியது தானே" என்றான்.
"ஆமா நான் சொன்னா அப்படியே கேட்ருவா பாரு. உனக்கு கால் பண்ண ட்ரை பண்ணினாளாம் நீ நேத்துல இருந்து காலே அட்டென்ட் பண்ண மாட்டேங்கறியாம்"
"அது ஒரு சின்ன பிரச்சனை டா" என்ற ஆதித்திடம்,
"எதுவா வேணும்னாலும் இருக்கட்டும், நாளைக்கு கல்யாணம் வச்சிட்டு நீ பேசாம இருக்கிறது ரொம்ப ஓவர் டா போய் பேசு அவளை பார்த்தா பாவமா இருக்கு" என்ற ஆகாஷிடம்,
"எனக்கும் தான்" என்ற ஆதித், "சரி நீ பார்ட்டியை பார்த்துகோ நான் அவளை அனுப்பி வச்சிட்டு வரேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
@@@@@
"அப்பவே கிளம்பிட்டேன், வெளிய வரும்பொழுது சித்தி பேசிட்டு இருந்தாங்க அதான் லேட் ப்ரஜன், இதோ வந்துட்டேன்" என்று ப்ரஜனிடம் அலைபேசியில் பேசியபடி வர்ஷா லிஃப்ட்டை நோக்கி வரவும் அது மூடி கொள்ள,
"ச்ச" என்று உச்சு கொட்டியவள் பேசாமல் மாடிப்படிகளில் இறங்கிவிடலாமா? என்று படிகளை பார்த்து கொண்டிருந்த நேரம் லிஃப்ட்டின் கதவு திறந்துகொண்டது.
அப்பொழுது உள்ளே இருந்து, "வாங்க" என்று கேட்ட கணீர் குரலில் சிந்தனை களைந்து குரல் வந்த திசையை பெண்ணவள் பார்த்தாள். லிஃப்ட்டின் கதவு மூடிவிடாமல் இருக்க பொத்தானை அழுத்தியபடி நின்றிருந்த ஆதித் வர்ஷாவை பார்த்து உள்ளே வருமாறு செய்கை செய்ய, புன்னகையுடன் உள்ளே வந்தவள் ஆதித்தை பார்த்து,

"தேங்க் யு சார்" என்று சொல்ல, பதிலுக்கு சிறு தலையசைப்புடன் நாகரிகமாக புன்னகைத்தான்.

அடுத்த அத்தியாயம் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


ஆதவன் 4
 
Last edited:

Author: Naemira
Article Title: ஆதவன் 3
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top