- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
ஆதவன் 4
"தேங்க யு சார்" என்று முணுமுணுத்துவிட்டு திரும்பி நின்றதுடன் சரி அதன் பிறகு வர்ஷா ஆதித்தை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு ரசிகையாக அவனிடம் பேச அவளுக்கும் ஆசை தான் ஆனால் எதைச்சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்வது? சொல்லவேண்டும் என்றால் அனைத்தையும் சொல்லவேண்டுமே.
பலவருட போராட்டத்திற்கு பிறகு எதை மறந்தாளோ அதை மீண்டும் நினைக்க வேண்டும் என்கின்ற எண்ணமே அவளது தேகத்தில் நடுக்கத்தை கொடுக்க தனது கரங்களை பிசைந்தபடிநின்றிருந்தவள், ஒருவித தயக்கத்துடனே அலைபேசியிலே கவனமாய் இருந்தவனை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
பார்த்தவுடனே,
"தேங்க்யு சார் நீங்க மட்டும் சரியான நேரத்துக்கு அன்னைக்கு எனக்கு ஹெல்ப் பண்ணலைன்னா, நான் என்ன ஆகிருப்பேன்னு எனக்கே தெரியாது.
என்னோடு சேர்ந்து என் கனவுகளும் நாலு சுவற்றுக்குள்ளையே முடங்கிப்போயிருக்கும். தேங்க்ஸ் ஃபார் எவெரிதிங்"
என எப்பொழுதும் போல இன்றும் அவனிடம் நேரடியாக சொல்ல நினைத்ததை சொல்ல முடியாது தன் மனதிற்குள் மட்டும் சொல்லிக்கொண்டிருக்க, அந்நேரம் பார்த்து அலைபேசியை தன் கோட்டின் பாக்கெட்டிற்குள் போட்டுவிட்டு, நிமிர்ந்த ஆதித் வார்ஷாவை எதற்சையாக பார்க்க, ஏற்கனவே இவனை பார்த்துக்கொண்டிருந்த வர்ஷாவின் பார்வையும் இவனது பார்வையும் இப்பொழுது நேர்கோட்டில் சந்தித்துக்கொண்டது.
ஆனால் இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பெண்ணவளோ திடிரென்று அவன் பார்த்ததால் ஏற்பட்ட பதற்றத்தில் அப்படியே நின்றுவிட அவளது முகத்திற்கு நேராக சொடக்கிட்டவனோ, அவளது மிரட்சியான பார்வையை உள்வாங்கியபடி தன் கரம் நீட்டி வாசலை காட்டி தாங்கள் செல்ல வேண்டிய தளம் வந்துவிட்டதை அவளுக்கு உணர்த்தினான்.
அவன் சற்றென்று நிமிர்ந்து பார்த்து சொடக்கிட்டதில் முதலில் என்னவோ ஏதோ என்று பயந்தவள், பின்பு தான் அவன் சொல்ல வந்ததை புரிந்துகொண்டு மீண்டும்,
"தேங்க் யு சார்" என முணுமுணுத்தபடி தலைகுனிந்து கொண்டு வேகமாக வெளியேறி போன நேரம் மின்தூக்கியின் கதவு தானாக மூடி கொள்ள முனைந்தது.
அப்பொழுது அதை கண்ட ஆதித்,
"ஏய் கேர்ஃபுள்" என்றபடி தன் கரத்தை கதவுகளுக்கு இடையே நீட்டவும் மின்தூக்கியின் கதவு மீண்டும் திறந்துகொள்ள, அவனை சங்கடத்துடன் பார்த்து நன்றி சொல்லும் விதமாய் தலையை மட்டும் லேசாக அசைத்துவிட்டு வேகமாக அங்கிருந்து வர்ஷா சென்றுவிட, அவளது செய்கையில் லேசாக இதழ் பிரித்து சிரித்து கொண்ட ஆதித் அங்கிருந்து வருணிகாவை காணச் சென்றான்.
@@@@@@@@@
முகம் சிடுசிடுவென இருக்க, குறுக்கும் நெடுக்குமாக தனது காரின் அருகே நின்றபடி நடந்து கொண்டிருந்த வருணிகாவின் சிந்தனையை கலைக்கும் விதமாய் அவளது அலைபேசி சிணுங்க, எடுத்து பார்த்தவளுக்கு அலைபேசியை தூக்கி எறியும் அளவுக்கு ஆத்திரம் வந்தது.
இருந்தும் கண்களை மூடி திறந்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டவள் பற்களை கடித்தபடி அழைப்பை ஏற்று,
"என்னம்மா வேணும்" கிட்டத்தட்ட கத்தினாள்.
"கத்தாதடி ஆதியை பார்க்க உனக்கு இப்போ தான் போகணுமா என்ன? உன் பாட்டி திட்டுறாங்கடி சீக்கிரம் வா"
"பாட்டி தானே சமாளி நான் வந்திடுறேன்"
"ஏய் ஃபோனை வச்சிடாத, உனக்கும் ஆதிக்கும் ஏதும் சண்டையா என்ன?"
"அம்மா உன்கிட்ட எத்தனை தடவை தான் சொல்றது, அதெல்லாம் ஒன்னும் இல்லை, நீ ஃபோனை வை நான் வரேன்" என்று எரிச்சலாக தன் தாயிடம் கத்திக்கொண்டிருந்தாள்.
அப்பொழுது,"வருணிகா" என்று தன் பின்னால் கேட்ட குரலில்,
"ஆதி" என்று புன்னகைத்தபடி திரும்பியவளின் வதனம் மீண்டும் கோபத்தில் சிவந்தது.
@@@@@@@@@@@@
ஹோட்டலின் வரவேற்பு அறையில்,
"அச்சோ வேண்டாம்" என்று தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட வர்ஷாவின் கரம் பற்றிய ப்ரஜன்,
"ப்ச் இப்போ ஏன் எழுந்த உட்கார்" என்று அதட்டலாக கூறினான்.
"ப்ரஜன் ப்ளீஸ் நீங்க முதல்ல கீழ இருந்து எழுந்துக்கோங்க உங்க தங்கச்சி இல்லை அம்மா யாரவது வந்திட போறாங்க" சிறு பதற்றத்துடன் கூறியவளின் விழியசைவுகளை புன்னகையுடன் ரசித்தவன்,
"அதெல்லாம் வரமாட்டாங்க நீ முதல்ல உட்காரு" என்று கண்களைக் காட்டி அமருமாறு கூறினான்.
"ப்ளீஸ்" தன் கரிய விழிகளை சுருக்கி பெண்ணவள் கெஞ்சவும், தரையில் இருந்து எழுந்த ப்ரஜன், வர்ஷாவை இருக்கையில் அமரச்செய்து, மீண்டும் அவள் முன்பு ஒற்றை காலை மட்டும் தரையில் ஊன்றி மண்டியிட்டு அமர்ந்தவன், அவள் மறுக்க மறுக்க, அவளது பாதத்தைப் பற்றி தன் தொடை மீது வைத்து அவளுக்காகத் தான் பார்த்துப் பார்த்து வாங்கி கொண்டுவந்த தங்கக் கொலுசை அணிவித்தான்.
பின்பு,
"இப்போ தான் இந்த கொலுசுக்கே மதிப்பு வந்திருக்கு" என்று கூறி அவளது கண்களை பார்த்துப் புன்னகைத்து அப்படியே குனிந்து அதில் முத்தம் பதிக்க முனைந்த நேரம்,
"வீட்டில பேசிட்டிங்களா?" என்று கேட்ட வர்ஷாவின் குரலில் நிமிர்ந்து அவளை பார்த்தான்.
ஒருவித எதிர்பார்ப்புடன் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளது பார்வையை எதிர்கொள்ள முடியாது முதலில் தயங்கியவன், பிறகு சிலநொடிகளில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவள் முகம் பார்த்தவன் அவளது மென்மையான கரங்களைப் பற்றி,
"அன்னைக்குச் சொன்னது தான் இப்பொழுதும் சொல்றேன், உன் கனவுக்கும் ஆசைக்கும் என்றைக்கும் நானோ என் குடும்பமோ தடையா இருக்க மாட்டோம்.
கல்யாணத்துக்கு முன்னாடி நீ எப்படி இருந்தியோ அப்படியே நீ எப்பவும் இருக்கலாம், இப்போ பிடிச்ச உன் கைய நான் எப்பொழுதும் விடமாட்டேன்." என்று சொன்ன மறுகணம்,
"என்னடா கிளம்பலாமா?" என்று தன் பின்னால் கேட்ட தனது தாயின் குரலில் சற்றென்று பற்றியிருந்த வர்ஷாவின் கரத்தை விட்ட ப்ரஜன் தரையில் இருந்து எழுந்து நிற்க, வர்ஷாவிடமும் வர்ஷாவின் தாய் தந்தையினரிடமும் சொல்லிவிட்டு ப்ரஜன் மட்டும் பிரஜனின் குடும்பத்தினர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.
அவர்கள் சென்றதும் வர்ஷாவிடம் வந்த அவளது தாயார்,
"அம்மு எல்லா திங்க்ஸையும் எடுத்தாச்சு, நீ எதுக்கும் ஒருதடவை ரூமை செக் பண்ணிட்டு நிரோஷா கூட வந்திரு" என்று சொல்ல, அவரிடம் சரியென்பதாய் தலையசைத்த வர்ஷாவின் எண்ணம் முழுவது ப்ரஜன் பேசிவிட்டு சென்ற வார்தைகளிலே நிலைத்து நிற்க, மகிழ்ச்சி பொங்க அவன் அணிவித்த கொலுசை பார்த்துப் புன்னகைத்தவளின் கரங்கள் அதை வருடிக்கொண்டது.
@@@@@@@@@@
பார்ட்டி ஹாலில்,
"மஹேந்திரன் சார் கிட்ட பேசுனியா ஆதி? என்ன சொன்னாரு?" என்று ஆர்வமாக ஆகாஷ் வினவினான்.
ஆதற்கு, "ரொம்ப டீடைலா பேச முடியல டா, நெக்ஸ்ட் ஒரு பெரிய பட்ஜெட் படம் பண்ணனும்ன்னு மட்டும் சொன்னேன்" என்ற ஆதித்திடம்,
"அதுக்கு அவர் என்ன டா சொன்னாரு?" என்று ஆகாஷ் மீண்டும் அதே ஆர்வத்துடன் கேட்க,
"ஆபிஸ்க்கு வர சொல்லிருக்காரு, ஸ்க்ரிப்ர்ட் பார்த்துட்டு பண்ணலாம்ன்னு சொன்னாரு டா" என புன்னகையுடன் ஆதித் கூறினான்.
இதைக்கேட்டதும் துள்ளி குதிக்காத குறையாக அவனது கரத்தை பற்றிக்கொண்ட ஆகாஷ்,
"கங்கிராட்ஸ் டா இண்டஸ்ட்ரிளையே ரொம்ப டீசெண்டான ப்ரொட்யூசர்ஸ்ன்னா அது மஹேந்திரன் சார் தான். நம்ம வொர்க் சூப்பரா போகும்" என்று கூறினான்.
அதை கேட்ட ஆதித்,
"டேய் அவரு பார்ப்போம்ன்னு தான் சொல்லிருக்காரு, இன்னும் ஸ்க்ரிப்ட்ல துவங்கி எவ்வளவு இருக்கு, அதுக்குள்ள ஏதோ அவரு ஓகே சொன்னதுபோல சந்தோஷப்படுற" என்று சொல்ல, உடனே ஆகாஷ்,
"உன் மேல நல்ல அபிப்ராயம் இருந்ததுனால தான் இவ்வளவு தூரம் வந்திருக்காரு, அதெல்லாம் கண்டிப்பா ஓகே சொல்லுவாரு, நீ வேணும்ன்னா பாரு இந்த படத்துக்கு அப்புறம் உன் லெவெள்ளே மாற போகுது ஆதி"என்று மனதார பாராட்டினான்.
"தேங்க்ஸ் டா. நீ சொல்றது போல நடந்தா நல்லா தான் இருக்கும் பார்க்கலாம்" என்ற ஆதித்,
"சரி வரு கிளம்பிட்டாளா? என்ன சொன்னா? நான் வரலைன்னு கோபப்பட்டாளா?" என்று கேட்க,
"நீன்னு நினைச்சா என்னை பார்த்ததும் கோபப்பட்டா அப்புறம் நீ அவளை பார்க்க தான் வந்த, அப்போ தான் மஹேந்திரன் சாரும் வந்தாரு. அவரு பெரிய ப்ரொடியூசர் அவரு பார்ட்யில இருக்கும் பொழுது நீ இல்லைன்னா நல்லா இருக்காதுன்னு கொஞ்சம் எடுத்து சொன்னேன் புரிஞ்சிகிட்டா டா" என்றான் ஆகாஷ்.
"ம்ம் அன்பா எடுத்து சொன்னா புரிஞ்சிக்கிற டைப் தான், சில நேரம் பேச தெரியாம பேசுவா மத்தபடி என்னை அம்மாக்கு அப்புறம் நல்லா புரிஞ்சி வச்சிருக்கிறது வரு தான்.
நான் தான் கொஞ்சம் அதிகமாவே அவகிட்ட கோபப்பட்டுட்டேன்." என்று ஆதித் வருத்தத்துடன் கூறினான்.
அதற்கு "விடு டா உங்க ஹனிமூன் ட்ரிப்ல நீ பட்ட கோபத்துக்கு எல்லாம் சேர்த்து வச்சு சமாதானம் பண்ணு" என்ற நண்பனை பார்த்து புன்னகைத்த ஆதித் ஆகாஷுடன் இணைந்து பார்ட்டிக்கு வந்திருந்தவர்களை கவனிக்க சென்றான்.
@@@@@@
இதே சமயம் வேகமாக வீட்டிற்குள் நுழைந்த வருணிகாவை பிடித்துக்கொண்ட அவளது தாய் ஊர்மிளா,
"எப்ப போனவடி இப்போ வந்திருக்க எல்லாரும் உன்னை தான் தேடிட்டு இருந்தாங்க தெரியுமா?" என்று கூறினார்.
"ஒ வந்ததுல ரொம்ப வருத்தம் போல, வேணும்ன்னா போய்ட்டு நாளைக்கு வரவா?" என்று கடுப்புடன் கூறியவளை எரித்துவிடுவது போல பார்த்த ஊர்மிளா,
"அப்படியே போட்டேன்னா. உனக்கு என்ன டி நீ உன் இஷ்டத்துக்கு கிளம்பிட்ட, எல்லாரையும் சமாளிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?" என்று கூறினார்.
அதற்கு,
"முடிச்சிடீங்களா நான் என் ரூம்க்கு போகவா" என்றாள் வருணிகா.
"வரு எங்க போற ஊர்ல இருந்து சித்தி சித்தப்பா எல்லாரும் வந்திருக்காங்க வந்து நாலு வார்த்தை பேசிட்டு போ"
"மா என் நிலைமை தெரியாம கடுப்படிக்காத, என்னை ஃப்ரீயா விடு" என்ற தன் மகளை கலவரத்துடன் பார்த்தவர்.
"என்னடி நீ நாளைக்கு கல்யாணம் உன் முகத்துல கல்யாண கலை கொஞ்சம் கூட இல்லை. எனக்கு பயமா இருக்கு வரு. ஏதும் பிரச்சனைன்னா சொல்லு, உன் மாமாகிட்ட வேணும்ன்னா நான் பேசவா" என்று கேட்டார்.
"அம்மா அம்மா எத்தனை தடவை சொல்றது நீ பயப்படுறது போல ஒன்னும் இல்லை. ஸோ நீ ஒன்னும் பண்ண வேண்டாம், என்னை கொஞ்சம் நேரம் தொல்லை பண்ணாம விடு நான் பார்த்துக்கறேன்" என்றவள் விறுவிறுவென்று மாடிப்படி ஏற, வருணிகாவை பார்த்தபடி ஊர்மிளாவின் அருகே வந்த அவரது கணவன் ராஜேந்திரன்,
"என்ன ஊர்மிளா ஏதும் பிரச்சனையா ஏன் வரு உன்கிட்ட கத்திட்டு போறா" என்று கேட்க,
"உங்க செல்ல பொண்ணுக்கு கத்துறதுக்கு சொல்லியா தரணும்.
இன்னைக்கு பார்த்து வெளிய போனதுமட்டும் இல்லாம லேட்டா வேற வந்தாள்ல அதான் கொஞ்சம் கோபப்பட்டேன் கத்திட்டு போறா.
இப்போ கொஞ்சநாளா எதுக்கு எடுத்தாலும் ரொம்ப தான் கோபப்படுறா" என்று கூறிய தன் மனைவியிடம்,
"கல்யாண டென்ஷன் அவளுக்கும் இருக்கும்ல இதெல்லாம் சகஜம் தான். சொல்லிட்டு தானே போனா நீ ஏன் கோபப்படுற அவளை அவ இஷ்டத்துக்கு இருக்க விடு" என்று ராஜேந்திரனும் சொல்ல, ஊர்மிளாவும் அதன் பிறகு வருணிகாவை எதுவும் தொந்தரவு செய்யவில்லை.
இதற்கிடையில் கடுமையான கோபத்துடன் தன் அறைக்குள் வந்த வருணிகாவிடம்,
"மச்சி நாளைக்கு தேவையானது எல்லாம் தனியா எடுத்து வச்சிட்டேன். நீ போன காரியம் என்னாச்சு? உன் ஆளு மெஹெந்தி பார்த்துட்டு என்ன சொன்னாரு? பெயரை கண்டு புடிச்சாரா இல்லையா" என்று அவளது தோழி அவளிடம் வினவ,
"அரைமணிநேரமா அவனுக்காக வெயிட் பண்ணினேன் ஆனா அவன் வரவே இல்லை." ஆத்திரம் தொண்டையை அடைக்க நடந்த அனைத்தையும் வருணிக்கா ஆத்திரத்துடன் கூற,
"மெதுவா பேசுடி"என்ற அவளது தோழி ஓடி சென்று கதவை பூட்டிவிட்டு அவள் அருகே வந்து,
"அவன் வேணும்ன்னு வராம இல்லைல. பெரிய ப்ரோட்யுசர், அவரை காக்க வைக்க முடியாதுல." நிதானமாக எடுத்து கூறினாள்.
"அப்போ நான்? என்னை தவிர அவனுக்கு எல்லாரும் முக்கியமா இருக்காங்க. என்கிட்ட யாருமே குரலை உயர்த்தி பேசினது இல்லை ஆனா அவன், அவங்க அம்மாவை பேசிட்டேன்னு அன்னைக்கு எவ்வளவு கோபப்பட்டான் தெரியுமா? அதுக்கப்புறம் என்னை அவாய்ட் பண்ணிட்டே இருக்கான். லவ் பண்ணி தொலைச்சதுனால பின்னாடியே போய்ட்டு இருக்கேன். எனக்கே என்னை நினைச்சா எரிச்சலா இருக்கு."
"எத்தனையோ தடவை நீ கோபப்பட்டப்போ அவன் பின்னாடியே வந்தது இல்லையா. விடு டி லவ்ல இதெல்லாம் சகஜம் தான். தேவை இல்லாம டென்ஷன் ஆகாம கல்யாணத்துக்கு ஹபியா ரெடியாகு. கல்யாணம் முடியிற வரைக்கும் தான் இந்த அம்மா பாசம் எல்லாம் அப்புறம் தானா உன் வழிக்கு வருவான்"
"வந்து தான் ஆகணும் வராம எப்படி? கல்யாணம் முடியட்டும் அப்புறம் இருக்கு" என்று கோபம் கொஞ்சமும் குறையாமல் சிடுசிடுத்துக்கொண்டே இருந்தவளை அவளது தோழி தான் சமாதானம் செய்ய பெரும்பாடு பட்டுப்போனாள்.
@@@@@
"ரெடியா தான் சார் இருக்கேன், இதோ வந்திடுறேன்" என அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த நிரோஷா,
"ரெடியாகி எங்க போகப்போற?" என்று தன் அருகே கேட்ட வர்ஷாவின் கேள்வியில் பதறியவள் சட்டென்று அலைபேசியை அணைத்துவிட்டு, வர்ஷாவை பார்த்து வலுக்கட்டாயமாக புன்னகைத்தாள்.
"அது ஒரு சின்ன வேலை வர்ஷா முடிச்சிட்டு முடிஞ்சளவு சீக்கிரம் வந்திடுவேன்" அதே புன்னகையுடன் நிரோஷா கூறினாள்.
"ராத்திரியிலே அப்படி எங்க போற?"
"முக்கியமான ஃப்ரண்டு அவங்க சொந்தக்காரங்க சினிமால தான் இருக்காங்களாம் என்னை அவங்களுக்கு இண்ட்ரோடியுஸ் பண்றேன்னு சொல்லிருந்தா. காலையிலேயே வர சொன்னா கல்யாண வேலை இருந்துச்சுல அதான் போக முடியல இப்போ போறேன்"
"அம்மா திட்டுவாங்க டி எதுவா இருந்தாலும் காலையில போக வேண்டியது தான?"
"புருஞ்சிக்கோ வர்ஷா இது எனக்கு ரொம்ப முக்கியம், என் கரீயருக்கு இப்போ தான் ஒரு டர்னிங் பாயிண்ட் கிடைச்சிருக்கு, நீ அம்மாவை சமாளி நான் வந்திடுவேன்." கரீயருக்கு என்று சொல்லவும் வர்ஷாவால் எதுவும் சொல்ல முடியவில்லை.
மெளனமாக ஒரு நொடி தன் சகோதரியை பார்த்தவள்,
"ஏதும் பிரச்சனையா? என்கிட்ட ஏதும் மறைக்கிறீயா?" என்று கேட்க, நிரோஷாவுக்கு தூக்கிவாரி போட்டது, மிகவும் சிரமப்பட்டு பதற்றத்தை மறைத்துக்கொண்டவள்,
"என்ன பிரச்சனை இருக்க போகுது அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை, காலையில இருந்து ஓடிட்டே இருக்கேன்ல அதான் கொஞ்சம் டயர்ட் அவ்வளவு தான்" என்று கூறி சமாளித்தாள்.
மனதிற்குள் நெருடலாக இருந்தாலும் அதை வெளிகாட்டிகொள்ளாத வர்ஷா,
"பத்திரமா போய்ட்டு பத்திரமா வா நிரோ, கண்டிப்பா சான்ஸ் கிடைக்கும் ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துக்காத. உனக்கு எப்பவும் நான் இருக்கேன்" என்று நிரோஷாவின் கண்களை பார்த்து கூறிவிட்டு அங்கிருந்து செல்ல, நிரோஷாவுக்கு தான் இப்பொழுது ஒருமாதிரி ஆகிவிட்டது மனதோரம் ஏதோ ஒன்று அழுத்த கண்களை மூடி திறந்தவள்,
"வர்ஷா ஒரு நிமிஷம்" என்று சத்தமாக அழைத்து, வர்ஷா திரும்பி பார்க்கவும் ஓடி சென்று தன் சகோதரியை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.
சில நொடிகள் நீடித்த அணைப்பின் முடிவில் முதலில் விலகிய நிரோஷா தன்னை விசித்திரமாக பார்த்துக்கொண்டிருந்த தன் சகோரியை பார்த்து,
"என்னை பத்தி கவலைப்படாத, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நான் நல்லா இருக்கேன் சீக்கிரம் வந்துருவேன்" என்று புன்னகையுடன் கூற,
"சீக்கிரமா வந்திரு நிரோ உன்கிட்ட நிறையா சொல்லணும்" என்ற வர்ஷா தன் தங்கையின் கன்னத்தில் முத்தம் பதிக்க,
"உன் ஆளுக்கு தர வேண்டியதெல்லாம் எனக்கு தந்துட்டு இருக்க" என்ற நிரோஷாவின் கேலியில் முறைக்க முயன்று தோற்ற வர்ஷா புன்னகையுடன்,
"ஓவரா பேசாம சீக்கிரம் வந்து சேரு டி"என்று தன் தங்கையால் தனக்கு நடக்க போகும் விளைவுகள் பற்றிய அறியாது அவளிடம் விடைபெற்றுக்கொண்டு முகம் மலர அங்கிருந்து செல்ல, அதே முக மலர்ச்சியுடன் தன் தமக்கைக்கு விடை கொடுத்த நிரோஷாவின் வதனம் தன் முன்னே வந்து நின்ற விநாயக்கை பார்த்து வெளிறிவிட்டது.
விநாயக்கை அங்கே கொஞ்சமும் எதிர்பார்க்காத நிரோஷா பதற்றத்துடன் அவனை பார்க்க, தன்னை பின்தொடருமாறு கண்ணசைத்தவன் லிஃப்ட்டிற்குள் நுழைய, அவனை தொடர்ந்து அவளும் நுழைந்தாள்.
@@@@@@@
பார்ட்டிக்கு வருகை தந்த அனைவரும் ஆதித்திடம் சொல்லிவிட்டு விடைபெற, சற்று அதிகமான போதையில் தள்ளாடியவர்களை மட்டும் அவர்களின் கார் வரை சென்று வழியனுப்பி வைக்க ஆகாஷ் சென்றுவிட, அனைவரும் கிளம்பியதை உறுதி படுத்திக்கொண்ட ஆதித் பார்ட்டி ஹாலை விட்டு வெளியேற போன நேரம் தன்னை நோக்கி வந்த நிரோஷாவை நொடிப்பொழுதில் அடையாளம் கண்டு கொண்டவன் சிறு புன்னகையுடன் அவளை எதிர்கொண்டான்.
"ஆதித் சார் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" தயக்கத்துடன் நிரோஷா தன் உரையாடலை ஆரம்பித்தாள்.
"எஸ் சொல்லுங்க" என்றான் ஆதித் நிதானமாக.
"இங்க வேண்டாம் சார்" என்று ஆங்காங்கே நின்றிந்த வெயிட்டர்களை பார்த்து கூறியவள்,
"உள்ள போய் பேசுவோமா?" என்று சிறு பதற்றத்துடன் கேட்க, அவளது பதற்றத்தை உள்வாங்கியவன்,
"என்னாச்சுங்க யாரும் எதுவும் பிரச்சனை பண்றாங்களா?" என்று உதவும் பொருட்டு ஆதித் வினவினான்.
"ப்ளீஸ் சார் உள்ள போய் பேசுவோம்" என்று நிரோஷா மீண்டும் சொல்லவும், பார்ட்டி ஹாலில் ஒதுக்கமாக இருந்த அறைக்குள் நிரோஷாவுடன் சென்றவன்,
"இப்போ சொல்லுங்க நீங்க யாரு உங்க பேர் என்ன? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க. எதுவா இருந்தாலும் சொல்லுங்க என்னால முடிஞ்ச ஹெல்ப்பை நான் கண்டிப்பா பண்ணுவேன்" என்று பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவளது முகத்தில் வியர்வை துளிர்க்க துவங்க,
"ஆர் யு ஓகே" என்றான் ஆதித்.
அப்பொழுது அவளது பார்வை அவன் பின்னால் செல்வதை கவனித்த ஆதித் திரும்பி பார்க்க முனைந்த நேரம் அவனை திரும்ப விடாமல் ஒருவன் பிடித்துக்கொள்ள, மற்றொருவன் ஆதித் சுதாரிப்பதற்குள் அவனது முகத்தில் மயக்கத்தை ஏற்படுத்தும் ஸ்பிரேவை அடித்தான்.
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
ஆதவன் 5
Last edited:
Author: Naemira
Article Title: ஆதவன் 4
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ஆதவன் 4
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.