Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

ஆதவன் 5

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
ஆதவன் 5
"உன்னை அட்டாக் பண்ணினவங்க ஃபேஸ் எதுவும் நியாபகம் இருக்கா" என்ற ஆகாஷின் கேள்விக்கு,

"---" பதில் எதுவும் சொல்லாது இல்லை என்பதாய் தலையை மட்டும் அசைத்த ஆதித், தனது இரு கரங்களால் நெற்றியை பற்றியபடி அப்படியே கட்டிலில் தோய்ந்து அமர்ந்தான்.

இருவர் அவனை பின்னால் இருந்து தாக்கியது தவிர அதன் பின் நடந்த காட்சிகள் எல்லாம் மங்கலாய் ஆதித்தின் கண்கள் முன் தோன்றி மறைகின்றதே தவிர அவனால் எதையும் தெளிவாக நினைவு கூற முடியவில்லை.

ஆழமாய் யோசிக்க யோசிக்க தலை வேறு கனக்க துவங்க, அப்படியே இருக்கரங்களால் தனது தலையை பிடித்துக்கொண்ட ஆதித்க்கு அடுத்து எதுவும் யோசிக்க முடியாமல் போகவும் கண்களை மூடிக்கொள்ள, இப்பொழுது மீண்டும் நிரோஷாவின் நினைவுகள் அவனை தொற்றிக்கொண்டது.

"அந்த பொண்ணு" என்றபடி தன் கண்களை திறந்த ஆதித் ஆகாஷை பார்த்து,

"நல்லா பார்த்தியா டா ரூம்ல நான் மட்டும் தான் இருந்தேனா," என்று கேட்டான் அதற்கு,

"ப்ச் எத்தனை தடவை சொல்றது நீ மட்டும் தான் டா இருந்த. உன் நம்பர்ல இருந்து மெசேஜ் வந்ததும்" என்று ஆகாஷ் சொல்லவும் அவனை குறுக்கிட்ட ஆதித்,

"நான் எந்த மெசேஜும் அனுப்பல டா" என்று கூறினான்.

"ம்ம் புரியுது உன்னை அட்டாக் பண்ணினவங்க தான் உன் ஃபோன்ல இருந்து நீ அனுப்புறது போல அனுப்பியிருக்கணும்.

ரெண்டு மெசேஜும் அவனுங்க தான் அனுப்பியிருக்கானுங்க.
ஹோட்டல் விட்டு கிளம்பிட்டன்னு உன்கிட்ட இருந்து மெசேஜ் வந்ததும் நானும் கிளம்பிட்டேன்.
அப்புறம் அம்மா தான் நைட் கால் பண்ணி நீ இன்னும் வீட்டுக்கு வரலைன்னு சொன்னாங்க, நான் உனக்கு கால் பண்ணினேன் லைனே போகல, கெஸ்ட் ஹவுஸ் போய் பார்த்தேன் நீ இல்லை, ஸ்டுடியோ போய் பார்த்தேன் அங்கையும் நீ இல்லை, பிறகு ரொம்ப நேரம் கழிச்சு மறுபடியும் நீ பார்ட்டி ஹால் ரூம்ல இருக்கன்னு உன்கிட்ட இருந்து மெசேஜ் வந்துச்சு கால் பண்ணினா யாரும் அட்டென்ட் பண்ணல, அப்புறம் நான் வந்தேன் ரூம்ல நீ தெளிவு இல்லாம இருந்த, தலை வலிக்குதுன்னு சொன்ன நான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். வேற யாரும் அங்க இல்லை டா" என்று ஆகாஷ் உறுதியாக சொல்ல,


"அந்த பொண்ணு பதற்றமாவே இருந்தா டா, என்னை அடிச்சிட்டு அவளை ஏதும் பண்ணிட்டாங்கன்னு தோணுது, பாவம் டா" என்று வருத்தத்துடன் கூறிய ஆதித்திடம்,

"ஆதி லுக் இது எதையும் நாம ஈஸியா விட போறதில்லை பட் இப்போதைக்கு இதை மறந்துட்டு நீ ரெடியாகு.

கல்யாணம் முடியட்டும். நம்ம மாதவன் கிட்ட பேசுறேன் அவன் மூலமா அன் அஃபிஷியலா மூவ் பண்ணலாம். உன்னை அட்டாக் பண்ணினவங்க யாரு? அந்த பொண்ணுக்கு என்னாச்சு? இப்படி எல்லாமே கண்டுபுடிக்கலாம். ஸோ நீ முதல்ல ரிலாக்ஸ்சா ரெடியாகு டைம் ஆச்சு" என்றான் ஆகாஷ்.

ஆகாஷ் கூறியதை சில நொடிகள் யோசித்து பார்த்து பிறகு அரைமனத்துடன் ஆமோதிப்பதாக தலையசைத்த ஆதித்தின் எண்ணம் முழுவதும் நேற்று இரவு நடந்தவற்றை பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தது.

"என்னாச்சு ஆகாஷ்? ஆதி எங்க? ரெடியாகிட்டானா? அவன் ஏன் ஒருமாதிரி இருந்தான். நைட்டெல்லாம் எங்க இருந்தானாம்." ஆதித்தை தயாராக சொல்லிவிட்டு அவன் அறையில் இருந்து வெளியே வந்த ஆகாஷை பிடித்துக்கொண்ட மஹாலக்ஷ்மி ஒருவித பதற்றத்துடன் அனைத்து கேள்வியையும் வினவ, அவரது கரங்களை ஆதரவாக பிடித்துக்கொண்ட ஆகாஷ்,

"ஒன்னும் இல்லை மா, ஒரு எடிட்டிங் வேலை முடிக்க லேட் ஆகியிருக்கு, நைட் சரியா தூங்கலைல அதான் ஒருமாதிரி இருந்தான் இப்போ ஓகே ரெடியாகிட்டு இருக்கான்." ஒருவழியாக சமாளித்தான்.

"கல்யாணத்தன்னைக்கும் வேலை பார்க்கணுமா என்ன? ஏண்டா இப்படி? சரி வேற எதுவும் இல்லைல. அவன் ஒருமாதிரி இருந்ததும் கொஞ்சம் பயந்துட்டேன்" என மஹாலக்ஷ்மி பேசி கொண்டிருக்கும் பொழுதே,

"பெரியம்மா பெரியப்பா அண்ணனை கூப்பிட்டாங்க" என்றபடி அங்கே வந்த ஆதித்தின் சித்தப்பா மகள் அனன்யா, ஆதித்தின் அறையின் கதவு திறக்கப்படவும்,

"வாவ் செம ஆதி அண்ணா ஹீரோ மாதிரி இருக்க" என புன்னகை நிறைந்த முகத்துடன் கூறி உடனே அவனுடன் இணைந்து தன் அலைபேசியில் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டாள்.

உடனே ஆதி, "ஏய் அனு இப்போதைக்கு நோ சோஷியல் மீடியா" என்று சொல்லவும்,

"சரி சரி ஓகே அண்ணா போஸ்ட் பண்ண மாட்டேன். நீ அனௌன்ஸ் பண்ணினதும் பண்ணிக்கிறேன். நீ சீக்கிரம் வா பெரியப்பா கூப்பிட்டாங்க" என்றவள் அங்கிருந்து சென்றுவிட, மனம் முழுவதும் மகிழ்ச்சி ததும்ப தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தன் அன்னையிடம்,

"என்ன அம்மா அப்படி பார்க்குற" என்று ஆதித் வினவினான்.

அதற்கு "அனு சொன்னது போல வேஷ்டி சட்டையில ராஜா மாதிரி இருக்க டா" என்றவரை பார்த்து சிரித்தவன், அவர் காலில் விழ,


"எப்பவும் சந்தோஷமா இரு" என்று தன் மகனை வாழ்த்தியவர்,

"சீக்கிரம் கீழ வா நல்ல நேரம் போறதுக்குள்ள நாம வரு வீட்டுக்கு கிளம்பனும்" என்றவர் ஆகாஷை பார்த்து,

"கூட்டிட்டு வந்திருப்பா" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

தன் அன்னை அகன்றதும் ஆகாஷை அறைக்குள் அழைத்து தாழ்ப்பாள் போட்ட ஆதித் ஆகாஷிடம்,

"டேய் மாதவ் கிட்ட பேசுனியா" என்று கேட்க,

"டேய் முதல்ல உன் கல்யாணம் முடியட்டும் நேரடியாவே அவனை மீட் பண்ணி பேசுறேன். இப்போ நீ எதையும் யோசிக்காம வா" என்று கூறினான்.

அதற்கு "ம்ம்" என்று தலையசைத்த ஆதித்,

"மனசே சரி இல்லை எதோ போல இருக்கு" என்று கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தபடி சொல்ல,

"ஒன்னும் இல்லை டா. நீ அதை நினைக்காத, கல்யாணத்துல மட்டும் ஃபோகஸ் பண்ணு நான் எல்லாத்தையும் பார்த்துகிறேன். இதை பண்ணினது யாருன்னு கண்டுபுடிச்சிடலாம்" என்று ஆகாஷ் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அவனது அலைபேசி சிணுங்க அதை எடுத்து பார்த்தவன் அழைப்பை சைலென்டில் போட்டு விட,

அதை பார்த்து "யாருடா அது எடுத்து பேச வேண்டியது தானே" என்று தன் தலையை சீவியபடி கூறினான் ஆதித்.

"நம்ம விக்கி தான் டா வேலை விஷயமா கூப்ட்டிருப்பான் அப்புறம் பேசிக்கலாம் நீ கிளம்பு" என்று ஆகாஷ் சொல்லும் பொழுதே ஆகாஷின் அலைபேசிக்கு மாறி மாறி விக்கியிடம் இருந்து அழைப்புகள் வந்துகொண்டே இருக்க,

'இன்னைக்கு என்னாச்சு இவனுக்கு? கட் பண்ண பண்ண கூப்பிடுறான்' என்று எண்ணிய ஆகாஷ் சற்று தள்ளி சென்று அழைப்பை ஏற்கவும்,

"சார்" என்று பதற்றத்துடன் பேசினான் விக்கி.

"என்னாச்சு டா" என்ற ஆகாஷிடம் தட்டுத்தடுமாறி தான் அழைத்ததின் காரணம் கூற,

"என்ன சொல்ற என்ன வீடியோ டா வைரல் ஆகியிருக்கு ஒன்னும் புரியல தெளிவா சொல்லு" என்றான் ஆகாஷ்.

"ஆதி சார் வீடியோ. நான் உங்களுக்கு வாட்சப்ல அனுப்பிருக்கேன்"

"ம்ம் சரி நான் கூப்பிடுறேன்" என்ற ஆகாஷ் தனது வாட்ஸப்பை ஓபன் செய்து விக்கி அனுப்பிய விடீயோவை பார்க்க அவனுக்கு அதை பார்த்ததும் தூக்கிவாரி போட,

"இப்போ ஓகே வாடா?" என தன் சிகையை லேசாக சரி செய்தபடி தன்னிடம் கேட்ட ஆதித்திடம் பதில் சொல்ல முடியாது ஒருவித அதிர்ச்சியுடன் ஆகாஷ் நின்றிருக்கும் பொழுதே,
வெளியே அனைவரும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க மணக்கோலத்தில் முகம் சிவக்க வேகமாக ஆதித்தின் வீட்டிற்குள் நுழைந்த வருணிக்கா,

"ஆதி வெளிய வா" என நடு ஹாலில் நின்று கத்தினாள்.

வருணிகாவின் குரலை கேட்கவும் அவளை அங்கே சற்றும் எதிர்பார்க்காத ஆதித்,


‘வரு இங்க என்ன பண்ணிட்டு இருக்கா?’ என எண்ணியபடி தன் நண்பனை யோசனையுடன் பார்த்தவன் அவள் மீண்டும் அழைக்கவும் ஆகாஷை அழைத்துக்கொண்டு கீழே வர, வருணிகாவின் குரலில் இருந்த ஆக்ரோஷத்தை வைத்தே ஓரளவு யூகித்த ஆகாஷோ விடீயோ விடயத்தை ஆதித்திடம் எப்படி சொல்லவது என்று புரியாமல் மிகவும் திணறினான்.

"என்னாச்சு ஏன் கத்திட்டு இருக்க" என்று நிதானமாக கேட்டபடி கீழே வந்த ஆதித்தை வருணிக்கா அனல் தெறிக்க பார்க்க,

"வரு நான் பேசிக்கிறேன் நீ கொஞ்சம் பொறுமையா இரு" என்ற அவளது தாயை பார்த்து தீயாய் முறைத்தவள்.

ஆதியை பார்த்து "உன்கிட்ட இவ்வளவு பெரிய பிரச்சனைய வச்சிட்டு தான் என்கிட்ட அவ்வளவு ஆட்டிட்டியூட் காட்டுனியா?" பற்களை கடித்தபடி வருணிக்கா கேட்டாள்.

அதித்தோ எதுவும் புரியாமல் அவளை பார்த்தவன்,

"எனக்கு என்ன பிரச்சனை? என்ன சொல்லிட்டு இருக்க எனக்கு ஒன்னும் புரியல" என்றான்.

"புரியாது உனக்கு ஒன்னுமே புரியாது. போதும் போதும் உன் ஸ்டேடஸ்க்காகவும் உன் குடும்பத்துக்காகவும் என் வாழ்க்கையே அழிக்க பார்த்துட்டு ஒன்னும் தெரியாதுன்னு டிராமா வேற. கல்யாணத்துக்கு அப்புறம் கல்யாணத்துக்கு அப்புறம்ன்னு நீ சொன்னதுக்கு அர்த்தம் எனக்கு இப்போ புரியுது, ச்ச" என்று வருணிக்கா முகத்தை சுளிக்கவும் இப்பொழுது கோபம் கொண்ட ஆதித்,

"தேவையில்லாத பேச்சு வேண்டாம். விஷயத்தை மட்டும் சொல்லு" என்று சொல்ல,

"இந்த அட்டிட்டுயுட் எல்லாம் இனிமே என்கிட்ட காட்டாத சரியா?" என்று வருணிக்கா தன் ஒற்றை விரலை நீட்டி எச்சரிப்பது போல பேசினாள்.

அவள் அவ்வாறு பேசவும் இன்னும் கோபம் கொண்ட ஆதித் அவளது கரத்தை பிடித்து,

"என்ன விஷயம்ன்னு கேட்டேன்" என்று அவளது விழிகளை பார்த்து அழுத்தமாக கேட்க, தன் கரத்தை பற்றியிருந்த அவனது கரத்தை அலட்சியமாக தட்டிவிட்ட வருணிக்கா,

"சொல்றேன்" என்று தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்தபடி ஆதித்தை பார்த்துவிட்டு ஒருநொடி அனைவரையும் பார்த்தவள் மீண்டும் ஆதித்தை பார்த்து

"ஆண்மையே இல்லாத உனக்கு எதுக்கு கல்யாணம்" என்று தன் உதடு துடிக்க கேட்டாள்.

அவள் அப்படி பேசவும் சுத்தி இருந்த அனைவரும் அதிர்ச்சியுடன்,

"ஏய் வரு என்ன பேசிட்டு இருக்க" என்று சத்தமிட, தனது கை முஷ்டி இறுக,

"வாட் என்ன சொன்ன கம் அகைன்" என்ற ஆதித்தின் முகம் கன்றி சிவந்துவிட்டது.

"நீ ஒரு ஆம்பளை இல்லைன்னு சொல்றேன் நீ ஒரு கேன்னு சொல்றேன்" என்று அவன் கண்களை பார்த்து கூறிய வருணிக்கா தன் விழிகளை மூடி திறந்து,

"போதும் ஆதி எல்லாம் வெட்டவெளிச்சம் ஆகிடுச்சு, வேஷத்தை கலைச்சிடு" என்றபடி தன் அலைபேசியில் இருந்த வீடியோவை ஆன் செய்து அவன் முகத்திற்கு நேராக உயர்த்தி காட்டினாள்.

ஒருபுறம் காலி மதுபான கோப்பைகள் படுக்கையின் ஓரம் இருக்க, மறுபுறம் ரோஜா இதழ்கள் சிதறி கிடக்க வெற்று மார்புடன் கண்கள் சொருக நின்றிருந்த ஆதித்தும் அதே போல பின்னந்தலை மட்டும் தெரிய வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்திருந்த இன்னொரு ஆடவனும் நெருக்கமாக நின்றபடி இதழை கவ்விக்கொள்ளும் காட்சி ஓடிக்கொண்டிருக்க அதை பார்த்த மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் பேச முடியாது உறைந்து நிற்க,

"என்ன அசிங்கம் அண்ணி இது? உங்க புள்ள என்ன காரியம் பண்ணிவச்சிருக்கான். என் புள்ளை ரொம்ப உத்தமன்னு சொல்லுவீங்க என்ன இது? இந்த விடீயோ வரட்டா என் பொண்ணோட வாழ்க்கையே கேள்வி குறியாகிருக்குமே" என்று ஊர்மிளா மஹாலக்ஷ்மியை பிடித்து இன்னும் தனது நாவிற்கு வந்த கேள்வியெல்லாம் கேட்க, கண்களில் கண்ணீர் வடிய தன் மகனை பார்த்தபடி நின்ற மஹாலக்ஷ்மியால் ஊர்மிளாவின் எந்த கேள்விக்குமே பதில் சொல்ல முடியவில்லை, இதயத்தில் ஒருவித வலி பரவ கனத்தமனத்துடன் நின்றிருந்தார்.

"என்ன ஆதி இது பதில் சொல்லு?" என்ற தேவ்ராஜ்க்கு மகன் மீது அத்தனை ஆத்திரம் வந்தது.

சத்திய பாலனுக்கும் வேதவல்லிக்கும் ஒன்றுமே புரியவில்லை மகனுக்கு ஆதரவு சொல்லவா இல்லை தன் ஒற்றை மகளுடன் கண்ணீர் மல்க சண்டையிட்டு கொண்டிருக்கும் தனது மகளுக்காக பேசவா, இல்லை தன் உயிருக்கு உயிரான பேரனுக்காக பேசவா என்று புரியாது மூத்த தம்பதியினர் தவித்துக்கொண்டிருக்க,

நடந்து கொண்டிருக்கும் கலவரத்திற்கும் அனைவரின் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டியவனோ முகம் இறுக வருணிக்காவை தான் பார்த்து கொண்டிருந்தான்.

"எப்பவும் அவ்வளவு பேசுவ இப்போ என்ன அப்படியே சைலன்ட் ஆகிட்ட, இந்த வீடியோவுக்கு என்ன விளக்கம் கொடுக்க போற" என்ற வருணிகாவின் குரலில் கோபம் வலி ஏமாற்றம் நிறைந்திருக்க,

"அப்போ நீ என்னை நம்பலையா வரு?" தனது குரல் உடைந்துவிடாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டான் ஆதித்.

"இல்லை" நம்பவில்லை என்றபடி மறுப்பாக தலையசைத்தாள்.

"நாலுவருஷமா லவ் பண்ணிட்டு இருக்கோம் அவ்வளவு தான் நம்ம காதல் மேல உள்ள நம்பிக்கையா?"

"உன் மேல உள்ள நம்பிக்கை அவ்வளவு தான் ஆதித்" மேலும் மேலும் காயத்தை தனது வார்த்தைகளால் அவனுக்கு கொடுத்து கொண்டே இருந்தாள்.

"உன் முடிவு என்ன" கண்ணீர் வருவது போல இருக்கவும் அதை உள்ளிழுத்து கொண்டபடி கேட்டான்.

"இந்த விடீயோ பொய்ன்னு நிரூபிச்சு காட்டு நான் நம்புறேன். நாம கல்யாணமும் பண்ணிக்கலாம்" கரங்களை குறுக்கே கட்டிக்கொண்டு அலட்சியமாக கூறினாள்.

அவள் பார்வையில் இருந்த அலட்சியம் அவன் தன்மானத்தை தூண்டி விட, ஆழமான மூச்சை இழுத்துவெளியிட்டு கரங்களை குறுக்கே கட்டியபடி நிமிர்ந்து அவளை பார்த்தவன்,

"இது தான் உன் முடிவா" என்றான்.

"ஆமா" என்று கூறியவளை வலியுடன் பார்த்தவன்,

"ஒன்ஸ் என் லைஃபை விட்டு போயிட்டன்னா திரும்ப நீ வரவே முடியாது" என்று அழுத்தமாக கூறினான்.

"உன் பின்னாடியே வருவேன்னு நம்பிக்கை வேற உனக்கு இருக்கா?" எள்ளலுடன் கேட்டாள்.

"அவுட்" சிவந்த விழிகள் இடுங்க கத்தினான்.

"ஆதி" என்ற ஊர்மிளாவை ஒரே பார்வையில் அடக்கியவன்,

"என்னை நம்பாத யாருக்கும் நான் எந்த விளக்கமும் குடுக்க போறதில்லை" என்று கூறி,

"ஏய்" என வருணிக்காவை சொடக்கிட்டு அழைத்தவன்,

"உன் ஆளுங்களை கூட்டிட்டு கிளம்பு" என்று அலட்சியாக சொல்ல, ஆக்ரோஷமாக அவனை முறைத்துவிட்டு கொஞ்ச தூரம் சென்றவள் ஒருகணம் நின்று அனன்யாவின் கரத்தில் உள்ள தாம்பூல தட்டில் இருந்த தாலியை எடுத்து வந்து அவன் முகத்தில் தூக்கி எறிந்து,

"இவ்வளவு நடந்தும் இந்த ஆட்டிட்யூட்க்கு மட்டும் குறைவு இல்லை போ போய் உன் கள்ளக்காதலன் கழுத்துல கட்டு" என்றுவிட்டு அவள் சென்றுவிட,
ஆதித்தை பார்த்தபடி தலையை பிடித்துக்கொண்ட மஹாலக்ஷ்மி அப்படியே தரையில் சரிந்தார்.

தன் அன்னையை தான் அதுவரை பார்த்து கொண்டிருந்த ஆதித் அவர் மயங்கவும்,

"அம்மா" என்றபடி அவரை நெருங்கினான்.

@@@@@@@@@

மருத்துவமனையில் சில மணிநேர சிகிச்சைக்கு பிறகு ஆழ்ந்த நித்திரையில் மஹாலக்ஷ்மி ஓய்வெடுத்துக்கொண்டிருக்க அவரை பரிசோதித்த மருத்துவர் அறையில் இருந்து வெளியே வந்து,

"பயப்பட ஒன்னும் இல்லை தேவராஜ், பிபி தான் ஹை ஆகிடுச்சு. இப்போ நார்மலா இருக்காங்க யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம் அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்" என்று சொல்லிவிட்டு செல்லவும், கண்களை துடைத்து கொண்டு தன் தாயை காண்பதற்காக ஆதி வேகமாக அவர் இருக்கும் அறையின் கதவில் தன் கரங்களை வைத்தமறுநொடி,

"இவன் இங்க என்ன பண்ணிட்டு இருக்கான் ரவி, முதல்ல இவனை வெளிய போக சொல்லு" என்றார் தேவராஜ்.

மகன் மீதுள்ள கோபத்தால், வீடியோ விவகாரத்தில் உள்ள உண்மை மற்றும் பொய்யை பிரித்து அறிய தவறியவர் அவன் மீது ஆத்திரத்தை கொட்டினார்.

"அப்பா ப்ளீஸ்" என்ற ஆதித்திடம்,

"ஷட் அப் ஒருவார்த்தை பேசாத. உன் பேச்சை கேட்டு தான் இங்க ஒருத்தி இப்படி படுத்திருக்கா. உன்னை நம்பினதுக்கு எவ்வளவு பெரிய அவமானத்தை எங்க எல்லாருக்கும் தேடி தந்திருக்க ஆதி. ச்ச இதுக்கு தான் சினிமா வேண்டாம்ன்னு சொன்னேன் யாரு கேட்டா, இப்போ மொத்த குடும்பமும் அவமானப்பட்டு நிக்கிறோம். அசிங்கப்படுத்திட்டியே டா" என்ற தேவராஜை நெருங்கிய ஆதி,

"நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க அப்பா" என்று ஆரம்பிக்கவும் அவர் அவன் முகத்தை கூட பார்க்காது அங்கிருந்து நகர்ந்துவிட, அவனோ மீண்டும் தன் அன்னையை காண உள்ளே நுழைய போகவும்,

"அவளை மொத்தமா சாகடிச்சிடலாம்ன்னு இருக்கியா டா" என்று ஆத்திரத்துடன் கேட்க,

"அப்பா" என்று கத்தியவன் பின்பு தன்னை நிலைப்படுத்திக்கொண்டு,

"நான் அம்மாவை பார்க்கணும்" என்று விடாப்பிடியாக நின்றான்.

"உன்னால தான் டா அவ இப்படி இருக்கா, பார்க்கணுமாம் பார்க்கணும் முதல்ல இங்க இருந்து கிளம்பு. பார்க்கிறேன் அது இதுன்னு சொல்லி மறுபடியும் அவளுக்கு எதுவும் ஆச்சு என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என்றவர் ஆதிக்காக பரிந்து பேச வந்த தன் தமையனிடம்,

"அவனுக்காக எதுவும் என்கிட்ட பேசாத ரவி முதல்ல அவனை இங்க இருந்து போக சொல்லு பார்க்க பார்க்க கோபமா வருது.

கண்டவெல்லாம் கால் பண்ணி விசாரிக்கிறான்"என்றவரை அடிபட்ட பார்வை பார்த்த ஆதி, தன் தாய் இருந்த அறையை வலி நிறைந்த கண்களுடன் பார்த்தவன் அங்கிருந்து வேகமாக சென்றுவிட, ரவிக்கு தான் ஆதியை பார்க்க பாவமாக இருந்தது இருந்தும் தமயன் முன்பு எதுவும் செய்ய முடியாததால் அமைதியாக நின்றவர், ஆகாஷை அவனுடன் இருக்க சொல்லி அனுப்பிவைத்தார்.

மருத்துவமனையில் ஆதியின் கார் இல்லாமல் போகவும், 'இந்த நிலைமையில எங்க போனான்' என்று எண்ணிய ஆகாஷிற்கு ஆதித்தை நினைத்து கவலையாக இருக்க எங்கே சென்றிருப்பான் என்று ஓரளவு யூகித்தபடி ஆதித்தின் கெஸ்ட் ஹவுஸை நோக்கி விரைந்தான்.

கெஸ்ட் ஹவுஸ் வாசலில் ஆதியின் காரை பார்த்த பிறகே நிம்மதி அடைந்த ஆகாஷ் வேகமாக வீட்டிற்குள் நுழைந்து நண்பனை தேட,

"பிரபல இளம் டைரக்டரின் காதல் லீலைகள்! அப்படியென்றால் இவ்வளவு நாள் திருமணம் ஆகாததற்கு இது தான் காரணமா?"என்று தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் ஆதித்தின் வீடியோவுடன் செய்தி ஓடிக்கொண்டிருக்க, தனது கரங்களை குறுக்கே கட்டியபடி முகம் இறுக தொலைக்காட்சியை தான் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதித்.

அவமானம், கோபம், வலி என்று அனைத்தும் சேர்ந்துகொள்ள கன்றி சிவந்திருந்த ஆதித்தின் வதனம் அவனுக்குள் நெருப்பாய் தகித்து கொண்டிருக்கும் கோபத்தின் அளவை தெளிவாக காட்டியது.

நேற்று வரை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தான் இன்று அனைத்தும் மாறிவிட்டதே! நடந்ததை நினைக்க நினைக்க ஆகாஷுக்கு நண்பனை எண்ணி வருத்தமாக இருந்தது. இனி இதை எப்படி ஆதித் எதிர்கொள்ள போகின்றான் என்று எண்ணிய ஆகாஷிற்கு இந்த கேவலமான செயலை செய்தவர்களை அழித்துவிடும் ஆத்திரம் வந்தாலும், இந்த விடயத்தை நிதானமாக கையாள வேண்டும் என்று எண்ணியவன் ஒருவித தயக்கத்துடன் நண்பனை அணுகினான்.

ஆகாஷின் அழைப்பில் கண்களை மூடி திறந்த ஆதித்,

"ப்ளீஸ் ஆகாஷ் எதுவும் பேசுற மூட்ல நான் இல்லை" என்று சொல்லும் பொழுதே ஆகாஷின் அலைபேசி சிணுங்க அழைப்பை பார்ததும் அழைப்பு வந்ததற்கான காரணம் அறிந்த ஆகாஷ் "ப்ச்" என்று சலித்தபடி அதை சைலென்டில் போட,

"யாரு டா" என்று கேட்ட ஆதித்தின் குரலில் அவ்வளவு அழுத்தம்.

"நம்ம கூட காலேஜ் படிச்சான்ல சந்தோஷ் அவன் தான்" என்றான் ஆகாஷ்.

"ம்ம் ஸ்பீக்கர்ல போடு" ஆதித் நிதானமாக தான் கூறினான் ஆனால் அவன் விழிகளில் கோபத்தின் அனல் வீசியது.

"இருக்கட்டும் டா அப்புறம் பேசிக்கலாம்" என்ற ஆகாஷை கரம் நீட்டி தடுத்தவன் போடு என்பது போல செய்கை செய்தான்.

"என்னடா ஆதியோட விடீயோ வந்திருக்கு, என்னடா நடக்குது அங்க, இவன்கிட்ட பொண்ணுங்க சேஃபா இருக்கலாம்ன்னு எல்லாரும் சொன்னாங்க ஆனா அதுக்கான அர்த்தம் எனக்கு இப்போ தான் புரியுது. உன்கிட்ட அவன் எப்படி டா?" அழைப்பு ஏற்கப்பட்டதும் எதிர் தரப்பில் இருந்தவன் நக்கல் சிரிப்புடன் கொஞ்சமும் நாகரிகம் இன்றி பேச.

"டேய் நேர்ல வந்தேன் பல்லை உடைச்சிருவேன் பார்த்துகோ ஃபோனை வை" என்று திட்டியபடி ஆகாஷ் அழைப்பை துண்டிக்கவும் அடுத்த அழைப்பு வர, ஆதித்தை ஒருகணம் பார்த்துவிட்டு பிறகு பேசுவதாக சொல்லி ஆகாஷ் அழைப்பை அணைக்கவும், தன் முன்னால் இருந்த கண்ணாடி டேபிளை தன் கரம் கொண்டு ஆதித் வேகமாக குத்தி இருந்தான்.

விரிசல் விழுந்திருந்த கண்ணாடி டேபிளை ஒருநொடி பார்த்த ஆகாஷ் அடுத்த அடி ஆதித் அடிப்பதற்குள் அவனது கரத்தை தடுத்து பிடித்துக்கொண்டவன்,

"உன்னை நீயே காயப்படுத்திக்காத ஆதி ப்ளீஸ், உன் நிதானத்தை இழந்துடாத சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்" என்று நண்பனுக்கு ஆறுதல் சொல்ல, அவனது பிடியில் இருந்த தனது கரத்தை உருவிக்கொண்டு ஆதித்,

"சரி பண்ணி, சரி பண்ணி என்ன பண்றது? அதான் என்னை மொத்தமா முடிச்சிட்டாங்களே. என் முன்னாடி நிக்க பயந்தவன் கூட இப்போ திமிரா பேசுறான். எல்லாம் போச்சு இனிமே என்ன இருக்கு. வருணிக்கா பேசினதை கேட்டல்ல, அப்பா என்ன சொன்னாரு பார்த்தியா. இதெல்லாத்தையும் விடு என் அம்மா கடைசியா என்ன பார்த்த பார்வை இருக்கே. வலிக்குது டா. என் குடும்பம் இந்த சொஸைட்டின்னு மொத்த உலகத்துக்கு முன்னாடியும் என்னை நிர்வாணமா நிக்கவிட்டது போல இருக்கு. யோசிக்க யோசிக்க தலையெல்லாம் வெடிக்குது" என்ற ஆதித் டேபிளை தன் காலால் உதைத்தபடி பயங்கரமாக கத்தினான்.

"உன் மனநிலை எனக்கு புரியுது ஆதி பட் வேற வழியில்லை. இதை நாம சரி பண்ணணும்ன்னா நீ மனசு வைக்கணும். எவனோ ஒருத்தன் உன் வளர்ச்சி பிடிக்காம, உன்னை முடக்கி போடணும்ன்னு இப்படி பண்ணிருக்கான். நீயும் அவன் நினைக்கிறது போல நடந்துக்காத ஆதி. நடந்தது நடந்து முடிஞ்சிருச்சு அதை மாற்ற முடியாது இனிமே இதை எப்படி சரி பண்றதுன்னு தான் யோசிக்கணும். புரிஞ்சிக்கோ கொஞ்சம் பொறுமையா இரு" என்ற ஆகாஷ், ஆதித்தின் மவுனத்தை உள்வாங்கியபடி,

“உன்கிட்ட பேச வந்த பொண்ணை எங்கையாவது பார்த்திருக்கியா. கொஞ்சம் நியாபக படுத்தி பாருடா" என்று நிதானமாக கேட்டான்.

அதை கேட்டு, "டேய்" என்று பல்லை கடித்த ஆதித், ஆகாஷை அனல் தெறிக்க பார்த்து,

"அதான் சொன்னேன்ல அவ யாருனே எனக்கு தெரியாது டா, பரிச்சயமான முகம் தான், ஆனா பார்த்த நியாபகம் சுத்தமா இல்ல டா, நேத்து தான் முதல் தடவ லிஃப்ட்ல பார்த்தேன் அப்புறம் அவளே என்னை பார்க்க வந்தா. பதற்றமா இருந்தா ஏதோ ப்ராப்ளம்ன்னு தோணுச்சு ஹெல்ப் பண்ற எண்ணத்துல தான் பேச போனேன் ஆனா அவ" என்று அதற்கு மேல் பேச முடியாது தன் நாவின் நுனி வரை வந்த கெட்ட வார்த்தையை அப்படியே தனக்குள்ளே புதைத்து கொண்டவன்,

"அவ யாரா வேணும்ன்னாலும் இருக்கட்டும் டா. ஆனா அவளுக்கு எமன் நான் தான். விட மாட்டேன். ஆதித்ன்னா யாருன்னு காட்டுறேன்" என்று கொன்று விடும் ஆத்திரத்தில் கூறினான்.
அப்பொழுது தொலைக்காட்சியில் மீண்டும் ஆதித்தின் செய்தியே வர,

"ப்ச் இவனுங்க வேற" என்று டிவி சேனல்களை திட்டியபடி தொலைக்காட்சியை அணைக்க ரிமோட்டை எடுத்த நண்பனை தன் கரம் உயர்த்தி வேண்டாம் என்பது போல தடுத்த ஆதித்,

"உனக்கு ஒருமணிநேரம் டைம் அதுக்குள்ள அவ யாருன்னு எனக்கு தெரியணும்" என அழுத்தமாக கூறியவன் அப்படியே தொலைக்காட்சியை வெறித்தபடி அமர்ந்துவிட, சரி என்பதாய் தன் நண்பனுக்கு உறுதியளித்த ஆகாஷ் தொலைக்காட்சியையும் அதில் நிலை குத்தியிருந்த ஆதித்தின் விழிகளையும் ஒருநொடி பார்த்தவன் கொஞ்சமும் தாமதிக்காமல் உடனே காவல் துறையில் பணியாற்றும் தனது பள்ளிப்பருவ நண்பனான மாதவ்க்கு தான் அழைப்பு விடுத்தான்.

@@@@@@@

நலங்கு ஆட்டம் பாட்டம் என இன்று ஏற்பாடு செய்யப்பட்ட சடங்குகள் அனைத்தும் மண்டபமே களைகட்ட நன்றாக நடந்து முடிய, நிச்சயம் வந்துவிடுவேன் என்று கூறிவிட்டு இந்த நொடி வரை வராத தன் தங்கையை எண்ணி கவலையுற்ற வர்ஷாவை அவளது தந்தை கேசவன் சமாதானம் செய்து கொண்டிருக்க,

"அவ போறது என்ன புதுசா என்னைக்கு நம்மளை மதிச்சிருக்கா? என் உயிரை வாங்குறதுக்குன்னே வந்து பிறந்திருக்கா. எது சொன்னாலும் கேக்கறது கிடையாது. அவளை எங்க எங்கன்னு கேட்ட சொந்தக்காரங்களுக்கெல்லாம் என்னால பதில் சொல்லி முடியல. அவளுக்கு போறதுக்கு நேரமே கிடைக்கலையா உன் கல்யாணத்தன்னைக்கு பார்த்து போயிருக்கா பாரு அதான் ஆத்திரமா வருது. அவகிட்ட சொல்லிடு இனி ஒழுங்கா இருக்கிறதா இருந்தா மட்டும் வீட்டுக்கு வர சொல்லு இல்லாட்டா அப்படியே அவ சிநேகிதி வீட்டுலையே இருக்க சொல்லிடு." என்று கத்தியவர்.

தன் கணவனை பார்த்து, "நான் திட்டும் பொழுதெல்லாம் சப்போர்ட்க்கு வந்தீங்கள்ல இப்போ நல்லா அனுபவிங்க"

"என்ன பண்றது வேணி வளர வளர அவ பிடிவாதம் குறைஞ்சிரும்ன்னு நினைச்சேன். ஆனா நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது. தோளுக்கு மேல வந்துட்டா அடிக்கவா முடியும், அவ தான் நல்லது கெட்டது புரிஞ்சி நடந்துக்கணும்" என்ற கேசவனுக்கு இளைய மகளை எண்ணி மிகவும் வருத்தமாக இருந்தது.

தந்தையும் தாயும் வேதனை படுவதை பார்த்த வர்ஷா,


"நீங்க ரெண்டு பேரும் தேவையில்லாம கவலை பட்டுட்டு இருக்கீங்க, அவளுக்கு எல்லாம் தெரியும் நீங்க வேணும்ன்னா பாருங்க ஒருநாள் இல்லை ஒருநாள் எல்லாரும் பாராட்டுறபடி என் நிரோ பெரிய ஆளா வருவா" என்று சொல்லவும் அவளது முதுகில் ஒரு அடி போட்ட வேணி,

"அவளை கெடுக்குறதே நீதான்" என்றவர்,

"மணியாச்சி எல்லாரும் தூங்கியாச்சு, கொஞ்சம் நேரம் தான் இருக்கு இந்த நகையெல்லாம் கழட்டி வச்சிட்டு நீயும் போய் தூங்கு அப்போ தான் ஃபோட்டோக்கு ஃபிரெஷா இருப்ப" என்று சொல்ல சரியென்பதாய் தலையசைத்தவள் அவர்களையும் தங்கள் அறைக்கு சென்று ஓய்வெடுக்க கூறிவிட்டு, தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றாள்.


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.


ஆதவன் 6
 
Last edited:

Author: Naemira
Article Title: ஆதவன் 5
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top