Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

ஆதவன் 6

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
ஆதவன் 6

மிகவும் சிரமப்பட்டு மாதவ்வின் உதவியுடன் ஆகாஷ் வாங்கி வந்திருந்த பார்ட்டி ஹாலின் சிசிடிவி ஃபுட்டேஜை பார்த்துக்கொண்டிருந்த ஆதித் ஆகாஷை பார்த்து,"இவ தான்" என்றான் அழுத்தமாக.

ஆதித் கூறியதும் ஸ்க்ரீனை பார்த்த ஆகாஷோ ஒருவித அதிர்த்தியுடன், "இது வர்ஷா டா உனக்கு தெரியலையா.?" என்று ஆதித்தை பார்த்து கேட்க அதற்கு ஆதித்தோ,

"இல்லை" என்றபடி தலையசைத்து, ஸ்க்ரீனில் தெரிந்த அவள் மீது பார்வை பதித்தபடி,

"யாரு இவ?" என்று கேட்டான்.

"டான்சர் தான் டா மீராவோட அசிஸ்டன்ட். அவ டான்ஸ் அகடெமில தான் வொர்க் பண்ணிட்டு இருக்கா மீராவை பார்க்க போகும் பொழுது ரெண்டு மூணு தடவை பார்த்திருக்கேன்" வர்ஷாவுக்கு தங்கை உண்டு மற்றும் இருவரும் ஒரே ஜாடையில் பிறந்த இரட்டையர்கள் என இப்படி வர்ஷாவை பற்றி முழுமையாக எதையும் அறிந்திராத ஆகாஷ், வீடீயோவில் தெரிந்த நிரோஷாவை தவறுதலாக வர்ஷா என்று எண்ணி அவளை பற்றி தனக்கு தெரிந்ததை ஆதித்திடம் கூறினான்.

அதை கேட்ட ஆதித், "மீராவோட அசிஸ்டன்ட் அந்த சுஜி பொண்ணு தானே" என்று கேள்வியாக ஆகாஷிடம் வினவினான்.

அதற்கு, "சுஜி தான் அசிஸ்டன்ட். ஆனா ஒன் இயர் முன்னாடி ‘அக்னி சிறகே’ ஷூட்டிங்காக ஒன் வீக் பாம்பே போயிருந்தோம்ல" என்ற ஆகாஷிடம்,

"ம்ம் ஆமாம்" என்றான் ஆதித்.

"அப்போ சுஜிக்கு உடம்பு சரியில்லைன்னு அவளுக்கு பதிலா இவ தான் வந்தா.

அங்க வச்சி தானே விநாயக் இந்த பொண்ணுகிட்ட தப்பா நடக்க பார்த்து நீ அவனை அடிச்சு, அவனை படத்தை விட்டே தூக்கினியே எப்படி இவளை மறந்த" என்று ஆகாஷ் ஆச்சரியத்துடன் ஆதித்தை பார்த்து கேட்டான்.

ஆகாஷ் சொல்லவும் அந்த நிகழ்வை எண்ணி பார்த்த ஆதித் ஆகாஷிடம்,

"அந்த இன்சிடென்ட் நைட்ல நடந்துச்சு ஒரு தடவை பார்த்தேன் பட் முகம் பெருசா மனுசுல பதியில. நான் விநாயகை கவனிக்கிறதுல இருந்தேன். மோர் ஓவர் இவ நெஸ்ட் டே மார்னிங்கே ஊருக்கு கிளம்பிட்டா. சென்னை வந்ததும் நேர்ல பார்த்து கம்ப்ளெயிண்ட் கொடுக்கிறதை பத்தி பேசலாம்ன்னு நினைச்சேன். ஆனா மீரா அவ ரொம்ப பயந்து போய் இருக்கா வீட்ல தெரிஞ்சா பிரச்சனை இதை அப்படியே விட்டுட சொன்னா, நானும் மூவியை மறுபடியும் ரீஷூட்டிங் பண்ற டென்ஷன்ல அப்படியே விட்டுட்டேன். தட்ஸ் ஆள்" என்றான்.

"நான் கூட பழிவாங்குறதுக்காக தான் யாரோ இப்படி பண்ணிருக்காங்கன்னு நினைச்சேன். ஆனா நீ இவளுக்கு எவ்வளவு பெரிய நல்லது பண்ணிருக்க, அப்புறம் ஏண்டா இப்படி ஒரு காரியத்தை பண்ணினா? இவளுக்காக விநாயக்கை படத்துல இருந்து தூக்கி வேற ஹீரோ போட்டு ரீஷூட்டிங் செஞ்சி எவ்வளவு பணம் அண்ட் டைம் வேஸ்ட் ஆச்சு. ஆனா இந்த பொண்ணு கொஞ்சம் கூட நன்றியே இல்லாம இப்படி பண்ணிருக்கு? நான் கூட இந்த பொண்ணை நல்லவன்னு நினைச்சேன்." என்று ஆகாஷ் ஆதங்கத்துடன் சொல்ல, ஆதித்தின் மனதிலும் இதே தான் ஓடிக்கொண்டிருக்க, அவனுக்கு வர்ஷா மீது இருந்த கோபம் இப்பொழுது இன்னும் பல மடங்கு அதிகமானது.

"அவ எதுக்காக வேணும்ன்னாலும் இதை பண்ணிருக்கட்டும் ஆனா நான் விடப்போறதில்லை" திரையில் தெரிந்த அவளது பிம்பம் மீது பார்வை பதித்தபடி கூறிய ஆதித் ஆகாஷை பார்த்து,

"மீராவுக்கு கால் பண்ணு, அவகிட்ட வேற எதுவும் பேசிக்க வேண்டாம். இப்போ இவ எங்க இருக்கான்னு மட்டும் கேளு. நான் இவளை பார்க்கணும்" என்றான் ஆதித் பார்த்தே தீர வேண்டும் என்கின்ற ஆவேசத்தில்.

"ஆதி நீ ஏன் போற, இதை வேற மாதிரி டீல் பண்ணுவோமே" என்ற ஆகாஷை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன்,

"சொன்னதை மட்டும் செய் ஆகாஷ்" என்று கட்டளையாக கூற, ஆதித்தின் ரௌத்திர விழிகள் ரெண்டும் வர்ஷாவை போல உருவ ஒற்றுமையுடன் இருக்கும் நிரோஷாவின் பிம்பம் மீது நிலைகுத்தியிருந்தது.

@@@@@

தான் அணிந்திருந்த அணிகலன்கள் அனைத்தையும் கழற்றிவிட்டு இறுதியாக தன் கழுத்தில் இருந்த பெரிய மாலையை தன் அறையில் உள்ள கண்ணாடியின் முன்பு அமர்ந்து கழற்றிக் கொண்டிருந்த வர்ஷாவின் விழிகள், கண்ணாடியில் தெரிந்தவனைப் பார்த்து அதிர்ந்து விரிய, அவளது அறையின் கதவை அடித்துச் சாற்றியபடி உள்ளே வந்த ஆதித்தோ அவளை அனல் தெறிக்கப் பார்க்க, மிகவும் குழம்பிப் போன பெண்ணவளோ தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள்.

ஆதித்தின் விடயத்தை அறிந்ததில் இருந்தே அவனுக்காக மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தவளுக்கு அவனை இங்கே அதுவும் இந்த நேரத்தில் பார்த்ததும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

"சார் என்னாச்சு? நீங்க இங்க என்ன பண்றீங்க?" தயக்கத்துடன் கேட்டாள்.

"நான் இங்க வருவேன்னு எதிர்பார்க்கலைல, என் வாழ்க்கையையே அழிச்சிட்டு, இங்க வந்து உட்கார்ந்துட்டா உன்னை நான் விட்டுடுவேன்னு நினைச்சியா?" விழிகள் கனலை கக்க பற்களை கடித்தபடி கேட்டான்.

அவளுக்கு ஒன்றுமே புரியாமல் போகவும்,
"நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல" என்று பெண்ணவள் சொல்ல,

"புரியலையா? என்னடி புரியல" என்று அவன் சத்தமிடவும் பதறியவள்,

"சார் ப்ளீஸ் கத்தாதீங்க யாரும் பார்த்தா தப்பா நினைப்பாங்க. நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு நிஜமாவே புரியல ப்ளீஸ் வெளில போறீங்களா?" என்று அவள் கேட்ட மறுநொடி,
வேகமாக வர்ஷாவை நெருங்கி அவளது இரு கரங்களையும் தன் நகங்கள் பதிய அழுத்திப் பிடித்த ஆதித், தனது வெப்பமான மூச்சு காற்று அவள் முகத்தில் மோத அவளது அதிர்ந்த விழிகளைப் பார்த்து,

"ஐ டோன்ட் கேர்" என்று இன்னும் பயங்கரமாகக் கத்தினான்.

அவனது குரல் உயரவும் பயந்து போன வர்ஷா,
"ப்ளீஸ் கத்தி பேசாதீங்க" கோபத்தில் தகித்து கொண்டிருக்கும் அவனது விழிகளை பார்த்து கெஞ்சினாள்.

ஒருநொடி அவளது அஞ்சிய அஞ்சன விழிகளை பார்த்த ஆதித் என்ன நினைத்தானோ இறுக்கமாக பிடித்திருந்த அவளது கரத்தை தன் பிடியில் இருந்து விடுவித்து அவளை விட்டு சற்று தள்ளி வந்து அவளது விழிகளை அழுத்தமாக பார்த்துக்கொண்டிருந்தான்.

கிட்ட தட்ட பார்த்தே அவளை நடுங்க வித்துக்கொண்டிருந்தான். ஏன் இங்கு வந்தான்?எதற்கு கோபம் கொள்கின்றான்? இப்படி எதையும் அறிந்திராத பெண்ணவளோ, தன்னை பஸ்மமாக்க காத்துக்கொண்டிருக்கும் அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாது தடுமாற்றத்துடன்,

"சத்தியமா நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல, ஆனா எனக்கு தெரிஞ்சு நான் எதுவுமே பண்ணல" என்றாள்.

இதை கேட்ட ஆதித்தோ வர்ஷாவை பார்த்து இகழ்ச்சியாக தன் இதழை வளைத்தவன், தனது அலைபேசியை எடுத்து நிரோஷா நேற்று இரவு பார்ட்டியில் தன்னை தேடி வந்து பேசியது, பின்பு அறைக்குள் சென்றது அவளுடன் ஆதித் சென்றதும் மாஸ்க் அணிந்தபடி இரெண்டு ஆண்கள் அறைக்குள் வந்தது பிறகு பல மணிநேரம் கழித்து முகக்கவசம் அணிந்தபடி அந்த ரெண்டு ஆண்களும் நிரோஷாவை தொடர்ந்து வெளியேறிய வீடியோவை அவளிடம் காட்டி,
"இது நீதானே" பற்களை கடித்தபடி வினவினான்.

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை நாம் எப்பொழுது இவனை சந்தித்து பேசினோம் என்று குழம்பியவள் மீண்டும் திரையை கவனமாக பார்த்தாள்.

வலது பக்கத்து புருவத்தின் ஓரம் இருந்த மச்சம் அது யார் என்பதை அவளுக்கு உணர்த்த அதிர்ந்த பெண்ணவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வர, 'என் வாழ்க்கையையே அழிச்சிட்டு, இங்க வந்து உட்கார்ந்துட்டா உன்னை நான் விட்டுடுவேன்னு நினைச்சியா?' என்று ஆதித் இப்பொழுது கூறியதையும்,

'என் கரீயருக்கு இப்போ தான் ஒரு டர்னிங் பாயிண்ட் கிடைச்சிருக்கு' என நிரோஷா இறுதியாக தன்னிடம் பேசியதையும் எண்ணிப்பார்த்தாள்.

இப்பொழுது ஆதித்தின் ஆக்ரோஷத்திற்கான காரணத்தை அவன் முழுவதும் சொல்லாமலே யூகித்தாள்.

'அப்படியென்றால் இன்று வெளியான ஆதித்தின் வீடியோவோவுக்கும் நிரோஷாவுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா என்ன?' என்று நினைக்கும் பொழுதே வர்ஷாவுக்கு தலை சுற்றுவது போல இருக்க, அவளது இதயமோ இப்பொழுது பாறாங்கல்லை சுமப்பது போல கனக்க துவங்க, ஒன்றும் பேச முடியாது மெளனமாக நின்றாள்.

வர்ஷாவின் மௌனத்தையும் அவளின் முகமாற்றத்தையும் உள்வாங்கியபடி, அவளை நூலளவு இடைவெளியில் நெருங்கி நின்ற ஆதித் கவிழ்ந்து இருந்த அவளது வதனத்திற்கு முன்பு குனிந்து,

"ஒன் இயர் முன்னாடி பாம்பே ட்ரிப் உனக்கு நியாபகம் இருக்கா" ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அழுத்தம் கொடுத்தபடி கேட்டான்.

எதை சொல்கிறான் என்பதை புரிந்து கொண்ட பெண்ணவளுக்கு உடம்பெல்லாம் நடுங்கிவிட விழுக்கென்று நிமிர்ந்து ஆதித்தின் விழிகளை ஒரே ஒரு நொடி தான் பார்த்தாள்.

ஆனால் அதற்கு மேல் பார்க்க முடியாது தலை கவிழ்ந்தவள் நெஞ்சம் முட்டிக்கொள்ள, "…" பதில் சொல்ல முடியாமல் ஆம் என்பதாய் தலையை மட்டும் அசைக்க,

"நிமிர்ந்து என் கண்ணை பார்த்து பதில் சொல்லு" பல்லை கடித்தபடி கூறினான். தயக்கத்துடன் பார்த்தாள். அவளது விழிகளை பார்த்துக்கொண்டிருந்த ஆதித்தும்,

"அப்புறம் எப்படி எனக்கு துரோகம் பண்ண முடிஞ்சிது? என் வாழ்க்கையையே அழிச்சிட்டியே. இதை பண்றதுக்கு உன் உன் உடம்பு கூசலை" முகத்தை சுளித்தபடி வினவினான்.

கண்ணீர் வடிய மெளனமாக நின்றாள்.

"சொல்லு பதில் சொல்லு, நான் உனக்கு என்ன செஞ்சேன்? ஏன் இப்படி பண்ணின? சொல்லு" தன் முகத்தை அவளது முகத்திற்கு நேராக கொண்டு சென்று மீண்டும் மீண்டும் கத்தினான்.

'ஏன்? யார்?' என்றால் அவள் எப்படி கூறுவாள். அவள் அறிந்தால் தானே கூறமுடியும்.

தன் தங்கை செய்த காரியத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்த வர்ஷவால், அதே நேரம் வெட்டி போடும் ஆத்திரத்தில் தன் முன் ருத்ரமூர்த்தியாக நிற்கும் ஆதித்திடம் நிரோஷாவை காட்டிக்கொடுக்கவும் முடியவில்லை.

எனவே அவனது எந்த கேள்விக்கும் பதில் கூற முடியாமல் பெண்ணவள் மெளனமாக கண்ணீர் சிந்தியபடி நிற்க, அவனது கோபம் ரெட்டிப்பானது.

"உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் பதில் சொல்லு ஏன் இப்படி பண்ணின" அடிக்குரலில் ஆதித் கத்தவும், ஒரு முடிவுடன் அவனை நிமிர்ந்து பார்த்த வர்ஷா,

"பணத்துக்காக" என்றாள் உணர்வுளை தொலைத்த குரலில்.

"கேவலம் பணத்துக்காக என் வாழ்க்கையையே அழிச்சிருக்க ச்ச யு '....' " வாய் வரை வந்த கெட்ட வார்த்தையை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டவன் தன் முகத்தை அழுத்தமாக தேய்த்து,

"யார் சொல்லி பண்ணின?" கோபத்தை அடக்கியபடி அடுத்த கேள்வி கேட்கவும் முதலில் திணறியவள் பின்பு,

"தெரியாது கால் பண்ணினாங்க, முதல்ல மாட்டேன் சொன்னேன், பணம் தரேன்னு சொன்னாங்க போதாக்குறைக்கு இதை செய்யலைன்னா அம்மா அப்பாவை கொலை பண்ணிருவேன்னு சொன்னாங்க அதான் செஞ்சேன்" விசும்பலுக்கு இடையே வார்த்தைகள் தடைபட ஒருவாறு தன் தங்கைக்காக கண பொழுதில் தான் சிந்தித்த பொய்யை கூறி முடித்தாள்.

அடுத்த நொடி அருகில் இருந்த மர நாற்காலி ஆதித் உதைத்ததில் சத்தத்துடன் தரையில் விழவும் உடனே ஆதித்தின் காலில் விழுந்தவள்,

"ப்ளீஸ் சார் தெரியாம தப்பு பண்ணிட்டேன், தயவு செஞ்சி இங்க இருந்து போய்டுங்க வெளிய ஆளுங்க இருக்காங்க, சத்தம் கேட்டு முழிச்சு வந்தாங்கன்னா ரொம்ப தப்பாகிடும். இன்னைக்கு என் கல்யாணம், இது நடக்கலைன்னா என் அம்மா அப்பாவுக்கு பெரிய அவமானமாகிடும் ப்ளீஸ்" என்று கெஞ்ச,


'அங்க என் கல்யாணத்தை கெடுத்துட்டு, இங்க உனக்கு கல்யாணம் கேட்குதா' என்று மனதிற்குள் எண்ணிக்கொண்ட ஆதித்,
"கல்யாணம் தானே தாராளமா பண்ணிடலாம்" முகத்தில் வஞ்சனை தாண்டவமாட, புயலை உள்ளடக்கிய அமைதியுடன் அவளை பார்த்து, மிக மிக நிதானமாக கூறினான்.


அடுத்த அத்தியாயம் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


ஆதவன் 7
 
Last edited:

Author: Naemira
Article Title: ஆதவன் 6
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top