Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

ஆதவன் 8

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
ஆதவன் 8

பழிவாங்க வேண்டும் அவள் செய்ததை விட பல மடங்கு அதிகமான வலியை அவளுக்கு கொடுக்க வேண்டும். அவள் கற்பனை கூட செய்திடாத அளவு அவளை வதைக்க வேண்டும் என்கின்ற கொடூரமான எண்ணத்துடன் தான் ஆதித் வர்ஷாவை மிரட்டி திருமணம் செய்து கொண்டான்.

ஏன் இப்பொழுதும் வர்ஷாவை வெட்டி போடும் அளவிற்கான ஆத்திரம் அவன் மனதிற்குள் இருக்கத்தான் செய்கின்றது. இருந்தும் அவளது விழிகளும் அதில் இருக்கும் வெகுளித்தனமும், அவளின் கண்ணீரும் அவள் மீது பரிதாபத்தை ஏற்படுத்த, முழுமையாக தனது கோபத்தை வர்ஷாவிடம் காட்ட முடியாது தனக்குள்ளே அடக்கி வைத்தவனின் தலை ஏதோ இப்பொழுதே வெடித்து விடும் என்னும் அளவுக்கு கனக்க துவங்க தனிமையை விரும்பி, காரை எடுத்துக்கொண்டு நேராகத் தன் அலுவலகத்திற்கு வந்து தனது அறைக்குள் நுழைந்து கொண்ட ஆதித் தனது இரு கரங்களால் தன் தலையை பிடித்துபடி அப்படியே நாற்காலில் தலை சாய்த்து அமர்ந்தான்.

அப்பொழுது பார்த்து அவனது அலைபேசி சிணுங்கவும் ஒருவித சலிப்புடன் அதை எடுத்துப் பார்த்தான். ஆகாஷிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டிருக்க, அவன் ஏன் தன்னை அழைத்து இருக்கின்றான் என்பதை யூகித்த ஆதித்தோ நீண்ட பெருமூச்சை வெளியிட்டபடி அழைப்பை ஏற்றான்.

"என்ன காரியம் பண்ணி இருக்க ஆதி" அழைப்பு ஏற்கப்பட்டதும் ஆதங்கத்துடன் வினவினான் ஆகாஷ்.

"எதையும் பிளான் பண்ணி பண்ணல ஆகாஷ். ஹீட் ஆப் தி மொமென்ட்ல எடுத்த முடிவு அது"

"இவ்வளவு பெரிய முடிவு எடுத்துட்டு ஈஸியா சொல்லிட்டு இருக்க. உங்க வீட்ல எல்லாரும் கொந்தளிச்சுப் போய் இருக்காங்க டா, உன் பாட்டி தாத்தா தொடங்கி எல்லாரும் என் தலைய போட்டு உருட்டிட்டு இருக்காங்க, எல்லாருக்கும் பதில் சொல்லி முடியல, அட்லீஸ்ட் என்கிட்டயாவது சொல்லிட்டு செஞ்சிருக்கலாம்ல" என்று கவலை தொனித்த குரலில் ஆகாஷ் வினவினான்.

"அந்த நேரம் எனக்கு எதுவுமே தோணல ஆகாஷ்."

"இதெல்லாம் உனக்கு தேவையாடா?" ஆதங்கமாக ஆகாஷ் வினவினான்.

"எனக்கு இன்னைக்கு கல்யாணம், ப்ளீஸ் என்னை மன்னிச்சு விட்டுடுங்கன்னு என்கிட்டையே வந்து சொல்றா, அவளை எதுவும் பண்ணாம அப்படியே விட சொல்றியா" என கோபமாக கேட்ட ஆதித்திடம்,

"அதுக்காக கல்யாணமாடா பண்ணிக்குவ" என்றான் ஆகாஷ்.

அதற்கு ஆதித், "அவமானப்பட்டது நான், அதோட வலிய நான் தான் அனுபவிச்சிட்டு இருக்கேன். உனக்கு என் பெயின் புரியாது" என்றதும் நண்பனுக்காக வருத்தப்பட்ட ஆகாஷ்,

"உன் வலி புரியாம இல்லை ஆதி, ஆனா அவ உனக்கு துரோகம் பண்ணின பொண்ணுடா அவளை போய் கல்யாணம் பண்ணி இருக்க, உன்னால எப்படி அவ கூட சந்தோஷமா வாழ முடியும்" என்று ஆகாஷ் ஆதங்கத்துடன் வினவினான்.

"அவ கூட சந்தோஷமா வாழுறதுக்கு ஒன்னும் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கல. குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் நான் அவளை டிவோர்ஸ் பண்ணிடுவேன்." என்று ஆதித் ஆகாஷின் தலையில் சத்தம் இல்லாத இடி ஒன்றை இறக்க.

இதைக் கேட்ட ஆகாஷோ என்ன சொல்வதென்று புரியாமல் திணறிப் போனான்.

ஆதி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆகாஷ்,
"டேய் நீ என்ன பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசுறியா" என்று கேட்கவும்,

"ஆகாஷ் ப்ளீஸ் தெரிஞ்சு பண்ணினேனா, தெரியாம பண்ணினேனா இது சரியா தப்பா? இப்படி பட்ட எந்த கேள்விக்கும் என்கிட்ட விளக்கம் இல்லை. இது எனக்காக நான் எடுத்த சுய முடிவு சரியோ தப்போ நான் பார்த்துகிறேன் டா. இனிமே இதை பத்தி பேச வேண்டாம். பேசுற சிட்டுவேஷன்லையும் நான் இல்ல ப்ளீஸ் புரிஞ்சுக்கோ" என்ற தன் நண்பனின் குரலில் இருந்த சோர்வு ஆகாஷுக்கு வருத்தத்தை கொடுக்க ஆதித்தின் மனநிலையை புரிந்து கொண்ட ஆகாஷ் அதன் பிறகு இதை பற்றி எதுவும் பேசவில்லை.

"என் கல்யாண விஷயம் அம்மாக்கு தெரியுமாடா" என்று கேட்ட ஆதித்திடம்,

"இல்லடா அங்கிள் இப்போதைக்கு சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு, அவங்களுக்கா தெரியும் போது பாத்துக்கலாம்ன்னு சொன்னாரு" என்று கூறிய ஆகாஷ்,


"அம்மாக்கு நாளைக்கு டிஸ்சார்ஜ் தெரியும் தான மார்னிங்கே வந்திடு" என்றான்.

அதற்கு, "தெரியும் சீஃப் டாக்டர் கிட்ட பேசிட்டு தான் இருக்கேன், ஆனா நான் வர்றதா இல்ல. நீ கொஞ்சம் இன்னைக்கு போல நாளைக்கும் கூட இருந்து டிஸ்சார்ஜ் ப்ரொசீஜர்ஸ் எல்லாம் பாத்துக்கோ." என்றான் ஆதித்.

"என்னது வரமாட்டியா! கண் முழிச்சதும் உன் அம்மா உன்னை எவ்வளவு தேடினாங்க தெரியுமா? நீ ஊருக்கு போய் இருக்க நாளைக்கு வருவன்னு பொய் சொல்லி, கஷ்டப்பட்டு சமாளிச்சு வச்சிருக்கேன் இப்போ வர மாட்டேன்னு சொல்ற"

"எனக்கும் தான் அவங்களை தேடுது ஆனா என்னால அவங்கள ஃபேஸ் பண்ண முடியும்னு தோணுலடா" என்றான் ஆதித் கவலையுடன்.

"அவங்களுக்கு தான் உன் கல்யாண விஷயம் தெரியாதே அப்புறம் என்ன?"

"தெரியாது தான் ஆனா என்னால அவங்களோட கண்ண பாத்து பேச முடியாது ஆகாஷ். கல்யாணம் பண்ணினது கூட அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க, ஆனா பழிவாங்குறதுக்காக கல்யாணம் பண்ணினேன்னு தெரிஞ்சா அவ்வளவு தாண்டா ரொம்ப வருத்தப்படுவாங்க சோ ப்ளீஸ் டா ஏதாவது பொய் சொல்லி சமாளி" என்றான் ஆதித்.

"எவ்வளவு நாள் சமாளிக்க முடியும்ன்னு நினைக்கிற?"

"சத்தியமா எனக்கு தெரியல ஆகாஷ். இப்போதைக்கு அவங்க உடம்பு சரியாகுற வரைக்கும் சமாளிப்போம் அப்புறமா நானே அவங்க கிட்ட இதை பத்தி பேசுறேன். நீ அங்க போனதும் விடீயோ மட்டும் போடு நான் அம்மாவை பார்க்கணும்" என்றான் ஆதித்.

ஆதித் கூறியதிற்கு,
"சரிடா" என்ற ஆகாஷ், "நீ இப்ப எங்க இருக்க?" என்று வினவினான்.

"ஆபீஸ்ல தான் டா" என்று கூறினான் ஆதித்.

"சரி ஆதி இங்க கொஞ்சம் வொர்க் இருக்கு முடிச்சிட்டு நான் ஆபீஸ் வரேன் நேர்ல பார்க்கலாம்" என்ற ஆகாஷுக்கு விடை கொடுத்த ஆதித் தனது அலைபேசியின் தொடுத்தறையில் தெரிந்த வர்ணிக்காவின் புகைப்படத்தை பார்த்தவன் அவளுடன் கழித்த அனைத்து பொழுதுகளையும் எண்ணியபடி கண்களை மூடி அமர்ந்திருந்தான்.

@@@@

ஆதித்தின் கெஸ்ட் ஹவுசில்,

"ஏன் நிரோஷா இப்படி பண்ணின? இது எல்லாத்தையும் நான் எப்படி சரி பண்ண போறேன் கடவுளே" என்று முழங்காலில் முகம் புதைத்தபடி கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த வர்ஷாவின் மனமோ ஆதித் தன்னை வந்து சந்தித்தது துவங்கி நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் எண்ணி மருகிக் கொண்டிருந்தது.

"கல்யாணம் தானே தாராளமா பண்ணிக்கலாம்" என ஆதித் கூறிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் இருக்கும் அறையின் கதவு தட்டப்பட வர்ஷாவின் பதற்றம் இன்னும் அதிகமானது.

"ப்ளீஸ் இங்க வந்து கொஞ்சம் மறைஞ்சுக்கோங்க" ஆதித்தை பார்த்து வர்ஷா கெஞ்சுதலாக கேட்டாள்.

"ஏன் போகணும்? அதெல்லாம் முடியாது இங்க தான் இருப்பேன்" என்றபடி கட்டிலில் அமர போனவன ஆதித்தின் வலுவான கரங்களை இறுக்கமாக பிடித்துக் கொண்ட வர்ஷா,

"ப்ளீஸ்" என்று காற்று குரலில் கெஞ்ச அவளது விழிகளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித் பின் என்ன நினைத்தானோ எதுவும் பேசாமல் பாத்ரூமில் சென்று மறைந்து கொண்டான்.

அவன் மறைந்து கொண்டதும் ஓடி வந்து கதவை திறந்தவள் வாசலில் நின்றிருந்த தன் சித்தியை பார்த்து,
"என்ன ஆச்சு சித்தி, ஒரு மாதிரி இருக்கீங்க" என்று கேட்க அவரோ,

"நீ உன் அம்மா ரூமுக்கு வா" கொஞ்சம் பேசணும் என்றார்.

அவர் திடீரென்று வர சொல்லவும் பதறிய வர்ஷா,


"என்ன ஆச்சு" என்று மீண்டும் கேட்க, "நீ முதல்ல வா, நான் சொல்றேன்" என்றவர் வர்ஷாவை தன் கையோடு அழைத்துச் சென்றார்.

அங்கே முக வாட்டதுடன் நின்றிருந்த தன் தந்தையை பார்த்தபடி அழுது கொண்டிருக்கும் தன் தாயின் அருகே வந்த வர்ஷா,


"என்னாச்சும்மா?" என்று பதற்றத்துடன் கேட்டாள்.

"உன் தங்கச்சி என்ன காரியம் பண்ணி இருக்கான்னு பாரு" என்ற வர்ஷாவின் சித்தி வாட்ஸ் அப்பை பார்க்குமாறு கூறி அலைபேசி அவளிடம் நீட்டினார்.

அனைவரையும் பார்த்தபடி அலைபேசியை வாங்கியவள் அதில் இருக்கும் வீடியோவை பார்வையிட்டாள்,

"அப்பா அம்மா எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க, நான் சொல்ல போற விஷயம் உங்க எல்லாரையும் காயப்படுத்தும்ன்னு எனக்கு தெரியும். ஆனாலும் எனக்கு வேற வழி தெரியல, நான் என் எதிர்காலத்தை நோக்கி போறேன். வாழ்க்கையில எல்லாரும் ஆச்சரியப்படுற அளவுக்கு சாதிச்ச பிறகு நானே உங்கள தேடி வருவேன். அதுவரைக்கும் என்னை தேடாதீங்க, என்னை மன்னிச்சிடு வர்ஷா, ஐ லவ் யூ ஆல்" என்று நிரோஷா பேசி அனுப்பியிருந்த வீடியோ ரெக்கார்டிங்கை பார்த்தவர்களுக்கு மனம் எல்லாம் கனத்து போக தங்கையின் செயலை எண்ணி வர்ஷா மிகவும் வருத்தப்பட்டாள்.

துயரத்தில் துவண்டு கொண்டிருக்கும் தன் தாய் தந்தையை தேற்றுவதா இல்லை தீர்க்க முடியாத சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் தன்னை தேற்றுவதா என்று புரியாமல் திணறிக் கொண்டிருந்த வர்ஷாவை,
"இப்ப என்னடி பண்றது?" தாயின் தவிப்பான குரல் இன்னும் வேதனைப்படுத்தியது.

"கவலைப்படாதம்மா அவ எங்கேயும் போயிருக்க மாட்டா அவ பிரண்ட்ஸ் மூலமா எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சிடலாம்" தாய்க்கு ஆறுதல் கூறினாள்.

"அவளுக்கு என்னடி குறை வச்சோம், அவ விருப்பப்படிதானே எல்லாம் பண்ணிட்டு இருக்கா, அப்புறம் ஏன் டி இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருக்கா? வீட்டை விட்டு வெளியே போறதுன்னா அவ்ளோ ஈசின்னு நினைச்சிட்டாளா. வயசு பொண்ணு ஏடாகூடமா ஏதாவது ஆயிட்டா, நினைக்கவே என் மனசெல்லாம் பதறுது. அவளால என்னைக்குமே எனக்கு நிம்மதி கிடையாது" என்று தலையில் அடித்தபடி கதறியவரின் கரத்தை பிடித்துக் கொண்ட வர்ஷா,

"அம்மா ப்ளீஸ் நீ கவலைப்படாத எப்படியாவது கண்டுபிடிச்சிடலாம்" என்று கூறினாள்.

நிரோஷா மனம் மாறி பத்திரமாக வீட்டிற்கு வந்துவிட வேண்டும், அவளுக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது என மனதிற்குள் வேண்டியபடி தாயை தேற்றிக்கொண்டிருந்த வர்ஷாவின் மனமோ இப்பொழுது ஆதித்தை எப்படி சமாதானம் செய்து இங்கிருந்து அனுப்பி வைப்பது என்பதைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது,
"அக்கா இப்ப அழுது எந்த பிரயோஜனமும் இல்லை, இதுக்கு தான் ஆரம்பத்திலேயே பொம்பள பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்க்கணும்னு சொல்றது. நான் சொல்லும்போது நீயும், அத்தானும் கேட்கவே இல்லை. இப்ப இதை பத்தி பேசி எந்த யூஸும் இல்ல, போனவளை பத்தி யோசிக்காம கூட இருக்கிறவளை பாரு. நேரம் ஆயிட்டே இருக்கு எல்லாரும் வர ஆரம்பிச்சிடுவாங்க, போ போய் ஃப்ரஷ் ஆகிட்டு வா, வேலைய பார்க்கலாம்" என்று தன் அக்காவை தேற்றிய வர்ஷாவின் சித்தி அவளை பார்த்து,


"நிரோஷா ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கொஞ்சம் பேசி பாரு வர்ஷா, அவ எங்க இருக்கான்னு ஏதாவது நியூஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கு" என்றார்.

"கண்டிப்பா சித்தி பேசி பார்க்கிறேன்"

"சரி வர்ஷா நீ போய் கிளம்ப ஆரம்பி, அப்புறம் அப்படியே பார்லர் ஆளுங்க எல்லாம் எங்க வந்துட்டு இருக்காங்கன்னு விசாரிச்சுக்கோ, உன் அம்மாவ நான் பார்த்துக்கிறேன்" என்றவர் வர்ஷாவின் தந்தையை பார்த்து,

"அத்தான் போங்க போய் சமையல் வேலை எல்லாம் எப்படி நடக்குதுன்னு பாருங்க" என்றார்.
பின்பு,

"சரி சித்தி" என்ற வர்ஷா அங்கே வேதனையோடு நின்றிருந்த தன் தந்தைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்று கதவுக்கு தாளிட்டுவிட்டு, ஆதித்தை அழைக்க, கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவனோ அவளை பார்த்து,

"சரி வா" கிளம்பலாம் என்றான்.

"எங்க சார்?" புரியாமல் கேட்டாள்.

"ஏன் சொன்னா தான் மேடம் வருவீங்களோ" புருவங்கள் இடுங்க அவளை முறைத்தபடி வினவினான்.

"புரிஞ்சுக்கோங்க சார், இன்னைக்கு எனக்கு கல்யாணம். இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் வர ஆரம்பிச்சிடுவாங்க ஏற்கனவே அப்பா அம்மா ரொம்ப மனசு வேதனையில இருக்காங்க. இந்த கல்யாணம் மட்டும் நடக்கலைன்னா ரொம்ப உடைஞ்சு போய்டுவாங்க"

"ஓ ஆனா இந்த கல்யாணம் நடந்தா நிச்சயம் அவங்களுக்கு ஏதாவது ஆகும். முதல்ல உன் அப்பா அப்புறம் உன் அம்மா. ஆள வச்சு சத்தமே இல்லாம காரியத்தை முடிப்பேன். நிச்சயமா செய்வேன். பரவாயில்லையா?" புருவம் உயர்த்தி அவன் கேட்ட விதமும் சொன்ன செய்தியும் அவளுக்குள் கிலியை பரப்பியது.

"சார் ப்ளீஸ்" என்று கெஞ்சியவளை, "ஏய்" என அதட்டியபடி அனல் தெறிக்க பார்த்தவன்.


"இந்த பேரோட காலத்துக்கும் என்னால வாழ முடியாது. நீதான தப்பு பண்ணின, சோ நீதான் சரி பண்ண போற" என்றவன், ஒரு கணம் நிறுத்தி அவள் விழிகளை கூர்மையாக பார்த்து,

"எனக்கு ஒரு குழந்தை வேணும் அதுவும் நேச்சுரலா, பெத்து கொடுத்துட்டு நீ போயிட்டே இருக்கலாம்" என்றவனின் பேச்சில் மூளை வேலை நிறுத்தம் செய்ய,

"சார்" என்று அழைத்த வர்ஷாவால் அதற்கு மேல் பேச முடியவில்லை, வார்த்தைகள் எல்லாம் தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள கண்கள் கலங்க பரிதாபமாக அவனைப் பார்த்தாள்.

அவனும் அவளை தான் பார்த்தான். வெளிறிய முகமும், மிரண்ட விழிகளுமாய் தேகம் அதிர நின்றிருந்தாள்.

சில நொடிகள் தனது இமை தட்டாமல் அவளை பார்த்த ஆதித், பின்பு அழுத்தமான காலடிகளுடன் அவள் அருகே நெருங்கி வந்து, அவளது விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரை தன் பெரு விரலால் துடைத்தபடி,

"அழுது எந்த யூஸும் இல்லை. இப்போ கீழ போறேன், பார்க்கிங்ல தான் நிப்பேன். உனக்கு அஞ்சு நிமிஷம் டைம். நீயா என்னை தேடி வரணும், இல்லை தேடி வர வைப்பேன். என்ன உன் அப்பா அம்மா தான் உயிரோட இருக்க மாட்டாங்க" என்று மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றுவிட, அவனது பார்வையும் அவனது பேச்சும் பெண்ணவளை நிலை குழைய செய்திருக்க, நெஞ்சில் நீர் வற்றி போனது போல உணர்ந்தாள் வர்ஷா.

தன்னைத் தாண்டி செல்லும் ஆதித்தின் முதுகை வெறித்தபடி தரையில் தோய்ந்து அமர்ந்தவளின் கண்ணீர் நிற்கவே இல்லை.

அவளால் கண்ணீரை மட்டும் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஒருபுறம் அவள் காதில் மீண்டும் மீண்டும் அவன் இறுதியாக மிரட்டி விட்டு சென்றதே கேட்டு கொண்டு இருக்க, இன்னொருபுறம் அவளது மனம் தன் குடும்பம் மற்றும் ப்ரஜனை எண்ணிப் பார்த்து துன்பமடைய வர்ஷாவுக்கு தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது.

முடிவெடுக்க முடியாமல் மிகவும் தவித்தவள், அப்படியே கண்களை மூடி சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்திருந்தாள். மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க, சில நிமிடங்கள் கழித்து கண்களைத் திறந்தவள் ஒரு முடிவுடன் கதவை திறந்து கொண்டு வெளியேறினாள்.

தனது தாய் தந்தையின் உயிர், முன்னொரு காலத்தில் ஆதித் செய்த உதவி என்று அனைத்தையும் எண்ணிப் பார்த்தவள், தன் தங்கைக்காக பழியை ஏற்றதுடன் இப்பொழுது பிராயச்சித்தம் செய்யவும் முடிவெடுத்திருந்தவள், ஆதித்தின் காரில் ஏறியதுடன் சரி அதன் பிறகு அவன் சொன்னதை இயந்திரம் போல செய்தவள், அவன் தன் கழுத்தில் தாலி கட்டிய பொழுது முதல் அவனுடன் மாலை கழுத்துமாக மண்டபத்திற்கு வந்து அனைவரும் இழிவு படுத்திய நேரம் கூட, பிரஜன் மற்றும் தன் குடும்பத்தினரிடம் மனதிற்குள் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுக் கொண்டவள் வாயை திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. அந்தநேரம் கூட கண்களில் கண்ணீர் வடிய அமைதியாகவே நின்றிருந்தாள்.

'எங்களுக்கு பிள்ளைங்கன்னு யாரும் கிடையாது, யார் யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்களுக்கு என்ன?' என்று பத்திரிகையாளர்களுக்கு தாய் கூறியதை எண்ணிப் பார்த்த வர்ஷாவுக்கு இப்பொழுது மனம் எல்லாம் ரணமாக வலிக்க,

"என்னை மன்னிக்க மாட்டியா அம்மா, சாரி எனக்கு வேற வழி தெரியல. என்னை மன்னிச்சிடுங்க அப்பா" என வாய்விட்டே கூறி மீண்டும் கண்ணீரில் கரைந்தாள்.

@@@@@@

அதே நேரம் ஆதித் வர்ஷாவின் திருமண செய்தி, விநாயக்கின் கோபத்தை மேலும் அதிகமாக்கியது.

மக்கள் மத்தியில் ஆதிக்கு இருக்கும் மரியாதையை கெடுத்து அவனை அப்படியே முடக்கி போட்டு விட வேண்டும், எந்த வர்ஷாவுக்காக தன்னை அடித்து ஆதித் அவமானப்படுத்தினானோ, அவளையும் இதில் சிக்க வைத்து பழி தீர்த்துக்கொள்ள எண்ணிய விநாயக் என்ன செய்வதென்று யோசித்து கொண்டிருந்த நேரம் நிரோஷா நடிக்க வாய்ப்பு கேட்டு அவன் அலுவலகத்திற்கு வர உருவ ஒற்றுமையில் வர்ஷாவை போல இருக்கும் நிரோஷாவை பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்தவன், பின்பு ரகு மூலமாக விசாரித்து இருவரும் ட்வின்ஸ் என்பதை உறுதி செய்து தன் ஆட்டத்தை துவங்கினான்.

பின்பு தான் போட்டுவைத்த திட்டத்தின்படி நைசாக பேசி நிரோஷாவை மூளை சலவை செய்து அவளுக்கு ஆசை வார்த்தை காட்டி தன் வலையில் விழவைத்து, சிரமப்பட்டு திட்டம் தீட்டி, வீடியோ வெளியிட்டு இருந்தான்.

அவன் திட்டப்படி அனைத்தும் நன்றாக போய் கொண்டிருந்த நேரம் அவன் கொஞ்சமும் எதிர்பாராத, ஆதித் வர்ஷாவின் திருமணம், தான் வகுத்த திட்டத்தை மொத்தமாக குழி தோண்டி புதைத்திருக்க, இந்த திருமணத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரும், ஆதித்தின் பெயரை கெடுப்பதற்காகவே யாரோ அவரைப் பற்றிய தவறான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று கூறி, விடீயோ வெளியிட்டவர்களை திட்டியவர்கள், புதுமண தம்பதிகளை கொண்டாட துவங்கினர்.

வீடியோ வெளியிட்டதற்கு வர்ஷா தான் காரணம் என்று எண்ணி, ஆதித் நிச்சயம் அவளைப் பழி வாங்குவான். மேலும் வர்ஷாவின் மென்மையான குணத்தை பற்றி நன்கு அறிந்திருந்தவன், நிச்சயம் அவள் தன் தங்கையை காட்டிக் கொடுக்க மாட்டாள். பழியை தானே ஏற்றுக் கொள்வாள் என்கின்ற எண்ணத்தில் தான் நிரோஷாவை வைத்து இவ்வளவும் செய்தான்.

ஆனால் தான் நினைத்ததிற்கு மாறாக வேறு ஒன்று ஆதித்திற்கு சாதகமாக நடக்கவும் விநாயக்கால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

போதா குறைக்கு பத்திரிக்கைக்கு அவர்கள் இருவரும் கொடுத்துள்ள பேட்டி வேறு அவனது ரத்த அழுத்தத்தை ஏகத்துக்கும் அதிகரிக்க செய்ய, வெறி பிடித்தவன் போல தன் கண்ணில் பட்டதை எல்லாம் எடுத்து உடைக்க துவங்கினான்.

அப்பொழுது அங்கே வந்த அவனது பி.ஏ ரகு, "சார்" என்று மெதுவாக அழைக்க,

"என்ன" என்றான் விநாயக் சீற்றமாக.

"அந்த பொண்ணு எதுவுமே சாப்பிட மாட்டேங்குது சார். கிட்ட போன நம்ம ஆளுங்களையும் அடிச்சிருக்கு, ரொம்ப கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுது. இப்ப என்ன சார் பண்றது" என பவ்யமாக கேட்டான்.

"தடிமாடு மாதிரி உடம்பு வளர்த்து வச்சிக்கிட்டு பொம்பளை கிட்ட அடி வாங்கிட்டு இருக்கானுங்க 4 அடி போட்டு மூளையில் உட்கார வைங்க, சாப்பிட்டா சாப்பிடுறா இல்லைனா பட்டினியா கிடந்து சாகுறா" என்றான் கண்கள் சிவக்க.

நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் எண்ணிப் பார்த்தபடி அலுவலகத்தில் அமர்ந்திருந்த ஆதித்தின் மனம் இப்பொழுது வர்ஷாவிடம் வந்து நின்றது.

அவளது அஞ்சன விழிகளும் அதில் எப்பொழுதும் இருக்கும் ஒருவித அப்பாவித்தனமும் அவன் கண் முன்னேவந்து போக, இன்று அவளிடம் நடந்துகொண்டதை பற்றி எண்ணிப் பார்த்தான். சற்று அதிகப்படியோ என தனக்குள் தோன்றவும் இப்பொழுது ஆதித்தின் மனதிற்குள் நெருடலாய் இருந்தது.

ஆனால் அடுத்த நிமிடமே,
"அவ செஞ்சதுக்கு முன்னாடி நான் செஞ்சது எல்லாம் ஒண்ணுமே இல்ல" என்று தனக்கு சாதகமான காரணத்தை தேடி கண்டுபிடித்தவன் நீண்ட பெருமூச்சை வெளியிட்டு, சமநிலை இன்றி தவித்த தன் மனதை நிலைப்படுத்தி, கார் கீ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

@@@@@

நடந்த கலவரத்தில் உடலும் மனமும் சோர்வடைந்ததால் சற்று நேரம் கண்யர்ந்த வர்ஷாவுக்கு திடீரென்று ஒருவித அசௌகரிய உணர்வு ஏற்பட மிகவும் சிரமப்பட்டு, மூடி இருந்த இமைகளை பிரித்து, கட்டிலை விட்டு கீழே இறங்கியவள் கட்டில் இருந்த கோலம் கண்டு அதிர்ந்தாள்.

கடவுளே என்று தலையில் அடித்துக் கொண்ட வர்ஷாவுக்கு தான் இருந்த கோலத்தை பார்க்க பார்க்க கண்கள் கரித்துக்கொண்டு வந்தது. என்ன செய்வது என்று புரியாமல் விழித்தவள் உடனே கட்டிலில் இருந்த மேல் விரிப்பை வாரி தன்னோடு சுருட்டி கொண்ட நேரம், ஆதித் கதவை திறந்து உள்ளே வந்துவிட வர்ஷாவின் பதற்றம் இன்னும் அதிகமானது.
தான் வந்ததும் திடீரென்று அவள் பதற்றம் ஆனதை புருவம் சுருக்கி பார்த்தவன்,

"என்னாச்சு" என்று கேட்டபடி அவள் அருகே வர. சட்டென்று தன் கையில் இருந்த போர்வையை தன் முதுகுக்கு பின்னால் கொண்டு சென்று மறைத்த வர்ஷாவுக்கு அழுகை தான் வந்தது.

ஆனால் உண்மை எதுவும் அறிந்திராத ஆதித்தோ அவள் ஏதோ தன்னிடம் இருந்து மறைப்பதாக எண்ணியவன்,
"ஏய் என்ன மறைக்கிற? போர்வைக்குள்ள என்ன இருக்கு? என்று அதட்டியவன் அவளை இன்னும் நெருங்கி போர்வையை அவள் கையில் இருந்து பறிக்க பார்க்கவும், பதறிய வர்ஷா,

"ப்ளீஸ் சார்" என்று கெஞ்சினாள்.
அவளது கெஞ்சலில் எரிச்சல் அடைந்தவன், "அத குடு" என்றான் பற்களை கடித்த படி.

அவளோ அழுது கொண்டே முடியாது என்று மறுத்து விட,
அவள் மறுத்ததில் ஆத்திரம் அடைந்தவன், ஆவேசமாக அவள் கையில் இருந்த போர்வையை பறித்துப் பார்த்த நொடி,

"ஐ காட் மை பீரியட்ஸ் போதுமா" என அழுகை வெடிக்க தேகம் அதிர கத்தியவள், அவன் கையில் இருந்த போர்வையை வேகமாக பறித்து தன் உடலோடு அழுத்தி பிடித்து தரையில் மடிந்தமர்ந்து கதறி விட, அவள் சொன்னதின் அர்த்தம் புரியாமல் முதலில் யோசித்த ஆதித், பின்பு தன் காலில் ஏதோ ஈரம் படவும் குனிந்து பார்க்க, இப்பொழுது அவனது மூளை அவள் இருக்கும் நிலையே அவனுக்கு இடித்துரைக்க,

"இதுக்கெல்லாம் முன்னாடியே ரெடியா இருக்க மாட்டியா" என்று ஆதித் வர்ஷாவை பார்த்து கேட்டான்.

அவன் அவ்வாறு கேட்கவும் நிமிர்ந்த வர்ஷா அவனை அடிபட்ட பார்வை பார்க்க, அவளது கண்ணீர் நிரம்பிய பார்வையை பார்த்த ஆதித்திற்கு இப்பொழுது ஒரு மாதிரி ஆகிவிட, தான் கேட்ட கேள்வி எவ்வளவு அபத்தமானது என்பதை புரிந்து கொண்டவனுக்கு என்ன செய்வதென்று ஒன்றுமே புரியவில்லை.

சில நொடிகளுக்கு மூளை வேலை நிறுத்தம் செய்ய அவளை பார்த்தபடி அப்படியே நின்று விட்டவன். பின்பு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான்.
ஆதித்தை தன் அருகே கண்டதும் வர்ஷா அவனை மிரட்சியுடன் பார்க்க,
அவளது பார்வையில் இருந்த பயத்தை உள்வாங்கிக் கொண்ட ஆதித்,

"ரிலாக்ஸ் இட்ஸ் ஓகே பார்த்துக்கலாம்" என மிக மிக நிதானமாக அவளது கண்களைப் பார்த்து கூறியவன்,

"பாத்ரூம் போய் ஃப்ரஷ் ஆகு, ஐ வில் மேனேஜ் சம்திங் ஃபார் யூ" என்றான் தன்மையாக.
என்னதான் அவன் ஒன்றுமில்லை என்று ஆறுதல் அளிப்பது போல தன்மையாக பேசினாலும், அவன் முன்பு தான் இருக்கும் நிலையை எண்ணி கூனிக்குறுகிப்போன பெண்ணவளால் அவ்வளவு எளிதில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

சில நொடிகள் அப்படியே தலை கவிழ்ந்த நிலையில் அமர்ந்திருந்தவள் பின்பு மிகச் சிரமப்பட்டு எழுந்து நின்று போர்வையை கையில் எடுத்துக்கொண்டு, தான் இதுவரை அமர்ந்திருந்த இடத்தை சங்கடத்துடன் பார்த்தாள்.

அப்பொழுது வர்ஷாவின் பார்வையை வைத்தே அவளது சங்கடத்தை புரிந்து கொண்ட ஆதித்,
"அதெல்லாம் பார்க்காத, போர்வையை கீழ போட்டுட்டு போ" என்றான். குரலில் சிறுதுளி அளவு கோபம் கூட இல்லை, நிமிர்ந்து தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள். மிகவும் சாதாரணமாக இருந்தான் முகத்தில் கொஞ்சம் கூட அருவருப்பின் சாயல் இல்லை.

அந்த நிலையிலும் வர்ஷாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. "போப்பா" இன்னும் மென்மையாக அவளது விழிகளை பார்த்து கூறினான்.

"இது எல்லாத்தையும் நானே கிளீன் பண்ணிடுவேன்" தயங்கி தயங்கி அவனைப் பார்த்து விசும்பலுடன் கூறினாள்.

"ம்" என்றவன் தன் கண்களை அசைத்து போகுமாறு செய்கை செய்தான். திரும்பித் திரும்பி பார்த்தபடி கால்கள் பின்ன குளியல் அறைக்குள் நுழைந்தவளை பார்க்க ஆதித்துக்கு தான் பரிதாபமாக இருந்தது.

அவள் சென்றதும் மணியை பார்த்தவன் மனதிற்குள் எதையோ எண்ணியபடி தன் அலைபேசி எடுத்து சில நொடிகள் யுடியூபை ஆராய்ந்து விட்டு மேசையில் இருந்த கத்திரி கோல் மற்றும் ஸ்டேப்ளர் பின்னை தன் கையில் எடுத்துக் கொண்டு, கபோர்டை திறந்து ஒரு துண்டையும் எடுத்துக் கொண்டவன், நேராக கிச்சன் சென்று ஒரு புதிய கார்பேஜ் கவரை கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் யூடியூபை ஆன் செய்தபடி நாற்காலியில் வந்து அமர்ந்தான்.

சில நிமிடங்கள் போராட்டத்திற்கு பிறகு தான் எண்ணியதை செய்து முடித்தவன். நீண்ட பெருமூச்சை வெளியிட்டு சிறு தயக்கத்துடன் பாத்ரூமின் கதவை தட்டி,


"கப்போர்ட்ல அம்மாவோட ட்ரெஸ் கொஞ்சம் இருக்கு, உனக்கு என்ன வேணுமோ பார்த்து எடுத்துக்கோ. நான் வெளியில போயிட்டு வரேன்" என்றவன் வேகமாக அறையை விட்டு வெளியேற, சில நொடிகளில் குளியல் அறையின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த வர்ஷா சுத்தம் செய்யப்பட்டிருந்த தளத்தையும், கட்டிலில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக துணி நாப்கினையும் வியப்புடன் பார்த்தாள்.

பார்த்ததுமே ஆதித்தின் முகம் தான் அவளது மனக்கண் முன் வந்து போக, இதுவரை அவன் மீது அவள் கொண்டிருந்த மரியாதை இப்பொழுது இருமடங்காக உயர்ந்திருக்க, இவனுக்கு போய் தன் தங்கை இப்படி ஒரு துரோகத்தை செய்து விட்டாளே என்று மனதிற்குள் வெம்பியவள் ஆதித்தை எண்ணி மிகவும் வருத்தப்பட்டாள்.


அடுத்த அத்தியாயம் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


ஆதவன் 9
 
Last edited:

Author: Naemira
Article Title: ஆதவன் 8
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top