Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நாயகன்

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
eiSIT8T91037.jpg

"பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ”பண்டிதரின் குரல் கேட்கவில்லை, மங்கள வாத்தியங்கள் முழங்கவில்லை. ஆனால் கழுத்தில் அவன் கட்டிய புத்தம் புதிய மஞ்சள் தாலியுடன் கண்களை மூடிய நிலையில் நிற்காமல் கண்ணீர் வடிய சுவற்றில் சாய்ந்து நின்றாள் திருமதி. மஹிமா ஆதித்தன் .

பெண்ணவளின் மனதிற்குள் ஆயிரம் வலிகள்! இனி என்ன, என்ன அவமானங்கள் தனக்காக காத்திருக்கின்றதோ என்று எண்ணிக்கொண்டிருக்கும் பொழுதே, கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த திரு. ஆதித்தன் மஹிமா, அழும் மனைவியை பார்த்தபடி அவள் அருகில் வந்தான்.

அவனை வெறித்து பார்த்த மஹிமாவோ, “எதுக்கு தாலி கட்டுனீங்க?” என்றாள் மூக்கை உறுஞ்சியபடி.

"குடும்பம் நடத்தத்தான்” என அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறிய ரிதனை எரித்துவிடும் பார்வை பார்க்க, தன் பார்வையாலேயே தன்னவளை பருகியபடி நெருங்கியவன் அவள் இமைக்கும் நொடிக்குள் தன் கரங்களுக்குள் சிறைவைத்து,

"என்னடி அப்போ குடும்பம் நடத்திருவோமா!” என குறும்பாக கேட்க,

"இந்த பேச்செல்லாம் என்கிட்ட வேண்டாம் என் சம்பந்தம் இல்லாம உங்க கை என் மேல பட்டுச்சு அவ்வளவு தான்” என விரல் நீட்டி எச்சரித்தவளின் விரல் நுனியில் இதழ் பதித்தவன், இலவசமாக கன்னத்திலும் இதழ் பதிக்க, அவளது கண்ணீர் அவனது கன்னத்தை நனைத்த மறுநொடி அவளை விட்டு விலகியவன்,

"உன்னை ரொம்ப லவ் பண்றேன் மஹி, நீயும் என்னை லவ் பண்றன்னு தெரியும் சீக்கிரம் பழசை மறந்துட்டு என் கூட வாழற வழிய பாரு. உனக்கு கொஞ்சம் நாள் தான் டைம் சொல்லிட்டேன்.”என்றான், அவளது இமைகளில் ஒட்டிக்கொண்டு விழவா என காத்திருந்த கண்ணீரை தன் உள்ளங்கையில் ஏந்தியபடி.

ரணம்பட்டு கிடக்கும் காயத்தின் மேல் உப்புத்தூவி அந்த காயத்தை நினைவுபடுத்துவது போல அடுத்த நாள் நாளிதழில் வெளியான செய்தி மஹிமாவை நிலைகுலைய செய்ய,

குளிர்கண்ணாடியை போட்டப்படி, காக்கிசட்டையில் கம்பீரமாக ஜீப்பில் இருந்து இறங்கிய ஆதித்தன் ஸ்டேஷனுக்குள் நுழையவும்,

"என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் இன்ஸ்பெக்டர் ஆரிதன் ஹோட்டலில் விபசாரம் செய்து பிடிபட்டபின்னணி பாடகி மஹிமாவுடன் ரகசிய திருமணம்.” என்று யாரோ சத்தமாக பேச,

அதை கேட்டதுமே கழுத்து நரம்பு புடைக்க, கை முஷ்டி இறுக அந்த செய்தியை வாசித்து கொண்டிருந்தவரை நோக்கி அழுத்தமான காலடிகளுடன் சென்றான்.

தன்னை நோக்கி அசுர பார்வை பார்த்தபடி வரும் ரிதனை கண்டு உடல் நடுங்க தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட அந்த நபரை விழிகள் இடுங்க பார்த்தவன், அவரது கைகளில் இருந்த நாளிதழை வெடுக்கென்று பறித்து அதில் இருந்த தலைப்பு செய்தி மீது ஒரு பார்வை வீசிவிட்டு,

சற்றும் யோசிக்காமல் செய்தித்தாளை எடுத்து கொண்டு சம்பந்த பட்ட பத்திரிக்கை அலுவலகத்திற்கு சென்றவன் எதிரில் தன்னை கேள்வி கேட்ட யாரையும் சட்டை செய்யாமல் நேரடியாக எடிட்டரின் அறைக்குள் நுழைந்தான்.

ஆஜானுபாகுவான தோற்றத்தில் அவன் வந்த தோரணையையும்,அவன் பார்வையில் இருந்த கனல் வீச்சையும் கண்ட எடிட்டர் தொண்டை குழியில் நீர் வற்ற எழுந்து நிற்க, பத்திரிகையை அவர் முன்பிருந்த டேபிளில் வீசியவன்,

"இந்த நியூஸ் கொடுத்த ரிப்போர்ட்டரை நான் பார்க்கணும்.” தன்னையும் தன்னவளையும் பற்றி வந்த செய்தியையே சுட்டிக்காட்டியபடி கூறினான்.

"நீங்க யாரு சார்?” என்றவரிடம்,

"ம்ம்ம் மஹிமாவோட புருஷன் ஆதித்தன்.” என சொன்ன மறுகணமே பதறியவர்.

"ப்ளீஸ் வாங்க உட்காருங்க என்ன சாப்பிடுறீங்க?” என கேட்க,

"நான் என்ன விருந்துகா வந்திருக்கேன் வர சொல்லுய்யா அவனை.”என்றவனது கோபத்தின் அளவு அவனது வார்த்தையில் தெரிந்தது.

நொடிகள் கழித்து உள்ளே நுழைந்த ரிப்போர்ட்டர் ஆரியை ஒருகணம் பார்த்து விட்டு எடிட்டரிடம் என்னவென்று கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே,

“அங்க என்னடா? இங்க கேளு.” என்ற ரிதனின் சிம்மக்குரலில் அவன் பக்கம் திரும்பி,

"நீங்க யாரு சார்?” என தெனாவட்டாக கேட்க, “தப்பாச்சே” என தன் தாடையை நீவியபடி அவனை ஒரு பார்வை பார்த்த ஆதித்தன், “தெரியலைன்னா தெரிய வச்சிருவோம்” என்று சொல்ல, அன்று மாலையே பத்திரிக்கையில்,

மஹிமாவின் கேஸ் இன்னும் முடிந்து தீர்ப்பு வராமல் இருக்கும் பட்சத்தில் அவரை பற்றி இழிவான செய்தியை வெளியிட்டதிற்காக மன்னிப்பு கேட்டுவந்த செய்தியை தொடர்ந்து, ரிப்போர்ட்டர் சரண் விபத்தில் சிக்கி கை உடைந்த நிலையில் மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் செய்தியும் வர, இதை வாசித்து கொண்டிருந்த மஹிமாவின் விழிகள் நனைந்தது.

ஏற்கனவே இந்த திருமண விடயத்தில் ஆதி lயின் வீட்டினருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கும் இந்த சமயத்தில் வந்த, இந்த செய்தி ஆதியின் குடும்பத்தினரின் மனதில் சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், ஆதிக்கு பயந்து ஒருவரும் வாய் திறக்கவில்லை. அன்று இரவு உணவை முடித்துக்கொண்டு தன் அறைக்கு வந்த ஆதியிடம்,

"இப்படி எத்தனை பேர்கிட்ட எனக்காக சண்டைக்கு போக போறீங்க ரிதன்?” என ஆக்ரோஷமாக ஆரம்பித்த மஹிமா ஆதித்தனின் முகத்தை பார்த்த கணம் ஏங்கி ஏங்கி அழ, அவள் அழுது முடியும் வரை காத்திருந்தவன்,

"உன்னை காயப்படுத்த நினைக்கிற அத்தனை பேர் கிட்டயும்.” தன் விழிகளை அவளது விழிகளுடன் உறவாட விட்டப்படி அழுத்தமாக கூறினான். அதற்கு மேல் மஹிமாவால் ஒருவார்த்தை கூட பேச முடியவில்லை.

அந்த பார்வையில் தான் எத்தனை உறுதி? எத்தனை காதல்? என்ன அதை ரசித்து ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் தான் பெண்ணவள் இல்லை.

கிட்டத்தட்ட இரண்டு வார காலமாக தன் அறைக்குள்ளே அடைந்து கிடந்த மஹிமாவை, அவனது அண்ணி மைதிலி தான் மிகவும் நட்பாக பேசி வெளியே கொண்டு வந்தார்.

முதலில் தயங்கியவள் பின்பு இயல்புடன் இருக்க ஆரம்பித்தாள். அதற்கு முக்கிய காரணம் மைதிலியின் நான்கு வயது பெண் குழந்தை. மைதிலி மீண்டும் கருவுற்றிருப்பதால் அவர் ஓய்வெடுக்கும் நேரத்தில் அந்த குழந்தைக்கு தேவையான அனைத்தையும் மஹிமாவே செய்ய, குழந்தையும் சித்தி, சித்தி என மஹிமாவையே சுற்றி வர,மழலையின் அன்பு மஹிமாவின் மனதிற்கு கொஞ்சம் நிம்மதியை தந்தது.

அன்று ஒருநாள் சாயங்கால வேளையில் ஸ்டேஷனில் இருந்து வீடு திரும்பிய ஆதித்தன் தன் ஜீப்பில் இருந்து இறங்கி வீட்டிற்குள் நுழையும் பொழுது தோட்டத்தில் சிரிப்பொலி கேட்கவும் அங்கே சென்றவன் கண்களில் துணியை கட்டிக்கொண்டு, “ஏய் குட்டி எங்க இருக்க?” என காற்றில் கைகளை துழாவிக்கொண்டிருக்கும் மனைவியும்,அவளை ஏமாற்றிக்கொண்டிருக்கும் குழந்தையும் பட, மென்சிரிப்புடன் அவர்கள் அருகில் வந்து, குழந்தையிடம் எப்பொழுதும் தான் பணிமுடித்து வரும் பொழுது வாங்கி வரும் மிட்டாயை கொடுத்து அனுப்பிவிட்டு மஹிமாவின் இடையில் கிள்ளினான்.

அவளோ, “ஆ” என பயத்தில் அலறியவள் கால் தடுமாறி விழ போக, “ கத்தாதடி”என்றபடி தன்னவளை வளைத்து தன்னோடு பிடித்துக்கொள்ள, கண்ணில் இருக்கும் கட்டை அவிழ்த்தபடி அவனை பார்த்து மஹிமா இறுக்கமாக முறைக்கவும்,

"இப்படியெல்லாம் பாசமா பார்க்காத,அப்புறம் நான் மோசமானவனா ஆகிடுவேன்.” என்றவன் அவளது இதழ் நோக்கி குனிய,

"என் சம்பந்தம் இல்லாம இந்த மாதிரி பண்ண மாட்டேன்னு சொல்லிருக்கீங்க.” என தன் உள்ளங்கையால் இருவரின் இதழுக்கும் இடையே தடை போட்டபடி கூறியவளை குறும்பாக பார்த்தவன்,

"இந்த மாதிரின்னா எந்த மாதிரி” என அவளை அணைத்தபடி வம்பிழுத்துக்கொண்டிருக்க, மஹிமா தான் அவனது அருகாமையிலும் அவன் கண்கள் பேசிய காதல் மொழியிலும் நிலை தடுமாறி போனாள்.

அந்நேரம் மைதிலியின் தங்கை நிலா தாய் கொடுத்துவிட்ட பலகாரங்களை கொடுப்பதற்க்காக விருப்பமே இல்லாமல் அவர்கள் வீட்டிற்குள் வந்தாள்.

அப்பொழுது கணவன் மனைவி இருவரின் நெருக்கத்தை கண்டவள் எரிச்சலுடன் நின்றிருக்க, அவளை கண்டதும் முதலில் விலகிய மஹிமா சங்கடத்துடன் நிற்க, நிலாவை பார்த்து சம்பிரதாயமாக புன்னகைத்துவிட்டு ஆதித்தன் அங்கிருந்து சென்று விட,

அவர்களின் நெருக்கம் நிலாவின் மனதை நெருஞ்சி முள்ளாய் குத்தவும் தன் உணர்வுகளை வெளிக்காட்டாதவள் பேருக்கு புன்னகைக்க, அதை ஆதி வேண்டுமானால் கண்டு கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், மஹிமா நிலாவின் முக மாற்றத்தை தவறாமல் படித்துவிட்டாள்.

ஏற்கனவே நிலாவுக்கு ஆதித்தனை பிடிக்கும் என்ற செய்தியை அறிந்திருந்த மஹிமா நிலா வேறு எதுவும் பேசாமல் திரும்பி வீட்டை நோக்கி நடக்கவும் அவளிடம், “ நிலா கொஞ்சம் பேசணும்.” என்று தடுத்தாள்.

"என்னடி நினைச்சிட்டு இருக்க, நிலாகிட்ட நமக்கு டிவோர்ஸ் ஆக போகுதுன்னு சொன்னியா?” தோட்டத்துப்பக்கம் மனைவியை தனியாக அழைத்து காட்டுக்கத்து கத்தினான் ஆதி. அவனது கண்களில் அத்தனை கோபம் தெரிந்தது.

"ஆமா ஆதித்தன் என்னால உங்க கூட வாழ முடியாது எனக்கு டிவோர்ஸ் வேணும்.” என்று மஹிமா கேட்க,

"தப்பாச்சே” என தன் நாடியை நீவியவன் அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்து,

"டிவோர்ஸ் எல்லாம் தர முடியாது வேணும்ன்னா குழந்தை தரேன்.” என்று வெளிப்படையாகவே கூறியவனை ஆக்ரோஷமாக பார்த்தவள்,

"ச்ச இந்த மாதிரி பேச்செல்லாம் என்கிட்ட வேண்டாம்.” என்று சிடுசிடுக்க, அவனோ,

"நீ தான் என் பொண்டாட்டி, இதை உன்கிட்ட தான் பேச முடியும். வேற யார்கிட்டையும் பேசினா தப்பாகிடாது.” என கண்ணடித்து கூறவும் அவனை பார்த்து முறைத்துவிட்டு விலகப்பார்த்த,

மனைவியின் கரத்தை சட்டென்று இழுத்து பின்னால் திருப்பி கையை மடக்கிய ஆரி தன்னவளை பின்னிருந்து இறுக்கி அணைத்திருந்தான்.

அவனது மூச்சு காற்றின் வெப்பம் அவளது கழுத்து வளைவை தீண்ட தேகம் சிலிர்த்தவள், “ கைய விடுங்க ஆதி” என்றாள் காற்றில் கரையும் குரலில்.

"மாட்டேன்டி” தன் ஈர இதழ்கள் அவள் செவி மடலை தாராளமாக உரச கூறினான்.

"ப்ளீஸ்” இதயம் ட்ரம்ஸ் வாசிக்க மெல்லமாய் கெஞ்சினாள்.

"இனிமே டைவர்ஸ் வேணும்ன்னு கேட்க மாட்டேன்னு சொல்லு விடுறேன்.” இதழ் குவித்து காற்றை அவளது வியர்வை வழிந்த கழுத்து பக்கம் ஊதியபடி கூற, அவளுக்கு தான் அவஸ்தையாக இருந்தது.

"விடுங்க ஆதித்தன் ப்ளீஸ்.” தன்னவனிடம் தன் சுயத்தை இழப்பதை சுதாரித்துக்கொண்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள் கோபமாக கூறினாள்.

"மாட்டேன்” என்று புன்னகைத்தவன் நிலாவின் பார்வை தங்கள் மீது இருப்பதை கண்டு சட்டென்று தன்னவளின் வதனத்தை தன் கையால் பிடித்து அவளின் இதழை சிறை செய்து விடுவித்தவன், “இனிமே இந்த வாய் தேவையில்லாததெல்லாம் பேசிச்சு இந்த தண்டனையோட எண்ணிக்கை கூடிட்டே போகும்.” என்று கூறி அதிர்ச்சியில் நிற்கும் மனைவியை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தபடி வீட்டிற்குள் நுழைய போனவன், வாசலில் கண்ணீருடன் நிற்கும் நிலாவை பார்த்து,

"முடிஞ்சா என்னை மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ, இல்லைன்னா என் வாழ்க்கைக்குள்ள இனிமே வராத.” என்றவன் தன்னை நோக்கி வரும் மைதிலியை இயலாமையுடன் பார்க்க,


'நான் பார்த்துகிறேன்.' என்பதாய் கண்ணசைத்த மைதிலி, அழும் தங்கையை அணைத்து கொண்டு ஆறுதல் படுத்தினாள்.

இப்படியே நாட்கள் கழிய மஹிமாவின் மனநிலையை புரிந்து கொண்ட ஆதியும் அந்த நிகழ்வுக்கு பிறகு அவளை தொந்தரவு செய்யாமல் விலகி இருந்த சமயம் மஹிமாவின் விசாரணைக்கான அழைப்பு வந்திருக்க, அவளை அழைத்து கொண்டு சென்ற ஆதி, படபடவென நடுங்கும் தன்னவளின் கரங்களை பிடித்துக்கொண்டு,

"என்கிட்ட தான் உன் பிரச்சனைய சொல்லல, இந்த விசாரணையிலாவது தயவு செஞ்சு உண்மைய சொல்லு மகி அப்போ தான் என்னால ஏதாவது செய்ய முடியும்.” என்றவன் விசாரணைக்கு வந்த ஆஃபிசரிடம் நட்பாக புன்னகைத்துவிட்டு வெளியே சென்று ஜீப்பில் காத்திருக்க,

"சொல்லுங்க மிஸஸ். மஹிமா ஆதித்தன், முதல் கட்ட விசாரணையில நீங்களா அந்த ஹோட்டலுக்கு போகலைன்னு சொல்லிருந்தீங்க. அதுக்கப்புறம் விருப்பப்பட்டு தான் போயிருந்தேன்னு சொல்லிருக்கீங்க, ஏன் இந்த முரண்? எக்ஸ்சாக்ட்டா அன்னைக்கு என்ன நடந்தது?” என கேட்கும் பொழுதே மஹிமாவுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வர, அதை சங்கடமாக பார்த்த அந்த அதிகாரி,

“நான் வேணும்ன்னா ஆதிய வர சொல்லவா”என்றார். அவளோ மறுப்பாக தலையசைத்தவள்,

"நான்” என ஆரம்பிக்கவும் மீண்டும் மீண்டும் தேம்பி தேம்பி அழ,

"நான் கொஞ்சம் நேரம் வெளிய இருக்கேன் நீங்க முதல்ல ரிலாக்ஸ்சா இருங்க.” என்றவன் வெளியேறிய தருணம், மஹிமா முகத்தை மூடி கொண்டு தேம்பி தேம்பி அழ,

அந்த நேரம், “மஹி டியர்.” என தன் காதருகே கேட்ட குரலில் கண்கள் வெளியே தெறித்து விழுந்துவிடும் அளவுக்கு திகைத்து விழித்தவள், பயம் மற்றும் கோபம் கலந்த உணர்வுடன் திரும்பி பார்க்க அங்கே காக்கி சீருடையில் மாமிச மலைபோல மீசையை முறுக்கிக்கொண்டு நின்றிருந்தான் கெளதம் கார்த்திக்.

"கௌ. . .”அதற்கு மேல் மஹிமாவால் பேச முடியவில்லை அடிவயிற்றில் உருண்டுவந்த பயப்பந்து அவளது தொண்டைக்குள் சிக்கிக்கொள்ள சுவாசம் தடைப்பட்டது போல மூச்சை உள்ளே இழுத்து போராடினாள்.

"ரிலாக்ஸ். . .” என ராகம் போட்டபடி அவள் முன்னே வந்தவன் யாரையோ பார்த்து இரண்டு விரல்களை ஒன்றோடு ஒன்று அடித்து காட்ட அறையில் இருந்த சீசீடிவி கேமரா தற்காலிகமாக தடைபடுத்தப்பட்டது.

வெளியே, “ஏதாவது சொன்னாளா?” என கேட்ட ஆதியிடம், “இல்லை சார். இன்னைக்கும் அவங்க எதுவும் சொல்லலைன்னா கேஸை க்ளோஸ் பண்ணி ரீமான்ட் பண்ணிருவாங்க உங்களுக்கு வேண்டாதவங்க எல்லாரும் இந்த கேஸ்ல இன்ட்ரெஸ்ட்டா இருக்காங்க. பயங்கர ப்ரஷாரா இருக்கு.” என்று மஹிமாவை விசாரித்து கொண்டு இருந்த அதிகாரி சொல்லி கொண்டிருக்கும் பொழுதே விசாரணை அறையில் இருந்து கௌதம் வெளியே வருவதை புருவம் சுருக்கி பார்த்த ஆதி,

"அவன் ஏன் உள்ள போனான்?” என கேட்க, ”தெரியல சார்.” என்று அவர் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே மஹிமா உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்துடன் வெளியே வர, ஏற்கனவே மனப்போராட்டத்தில் இருக்கும் இவளிடம் இதையும் கேட்டு கஷ்டப்படுத்த விரும்பாத ஆதித்தன், முடிக்க வேண்டிய சம்பிரதாயங்களை முடித்துவிட்டு மஹிமாவை வீட்டில் கொண்டு வந்து விட்டவன், தன் ஜீப்பில் ஸ்டேஷனுக்கு கிளம்பியிருந்தான்.

குளியல் அறையில் டேப்பை திறந்துவைத்தபடி கண்களில் நீர் வற்றி போகும் அளவிற்கு அழுகையில் கரைந்து கொண்டிருக்கும் மஹிமாவின் அலைபேசி தொடர்ந்து சினுங்க, அதை எடுத்து காதில் வைத்தவள்,

"ஏய் மறுபடியும் சொல்றேன் உண்மைய மட்டும் உன் புருஷன் கிட்ட சொல்லலாம்ன்னு நினைச்ச, உன் புருஷன் தினமும் போற ஜீப் வெடிச்சு சிதறும். என் கையில இருக்கிற வீடீயோ வைரல் ஆகும். உன் அக்கா வாழாவெட்டியா வீட்டுக்கு வருவா. என்னை ஏமாற்ற நினைச்ச இதையெல்லாத்தையும் கண்டிப்பா செய்வேன். அதனால ஒழுங்கா எட்டு மணிக்கு கெஸ்ட் ஹவுஸ் வந்திரு, வரணும் நீ வருவ, என்னையா அடிக்கிற இருக்குடி உனக்கு.” என்ற கௌதமின் வார்த்தைகள் அமிலமாக அவளது காதில் பாய, காதை மூடி கொண்டு கத்தினாள்.

"ஐயோ இதுக்கு தான், நான் உங்களுக்கு வேண்டாம்ன்னு ஒதுங்கி ஒதுங்கி போனேன். கேட்டீங்களா? இதுவரை என் மேல விழுந்த அவமானத்தை நான் மட்டும் தான் சுமந்தேன் ஆனா இனிமே அந்த அவமானம் உங்களுக்கும் வருமே.” என வாய்விட்டு கத்தியவள் தன் கையால் தலையில் அடித்துக்கொண்டு கதறினாள்.

மஹிமா நடந்த உண்மையை மட்டும் கூறாவிட்டால், நாளைக்கு சிறைக்கு செல்ல வேண்டும் அதன் பிறகு விபச்சாரி என்னும் பட்டத்துடன் காலத்துக்கும் வாழ வேண்டும். சொன்னால் அவள் நேசிக்கும் ஆதியின் உயிருக்கு ஆபத்து வருவது உறுதி, அரசியல் செல்வாக்கு கொண்ட கெளதம் நிச்சயம் சொன்னதை செய்வான். அதன் பிறகு அவளது அப்பாவி அக்காவின் வாழ்க்கை, தன்னால் கெட்டுவிடுமே.

அதுமட்டுமல்ல இன்று இரவு அவன் இடத்திற்கு, அதை நினைக்கும் பொழுதே உடலில் ஒருவித நடுக்கம் பரவ துடித்து போனவள், “ என் உயிரே போனாலும் இது மட்டும் என்றும் நடக்காது என் உடலும் உள்ளமும் என் ஆதிக்கு மட்டுமே.” என்றவள்,

இப்பொழுது என்ன செய்வது? என தவித்துக்கொண்டிருக்க அப்பொழுது அவளுக்கு அவளது மரணம் ஒன்று தான் சரியான தீர்வாக தெரிய, சிறிதும் யோசிக்காமல் தன் உயிரையே மாய்த்து கொள்ள முடிவெடுத்தாள்.

அப்பொழுது அவளது அறையின் கதவு தட்டப்பட முகத்தை துடைத்து கொண்டு கதவை திறக்க, வாசலில் இருந்த அவளது மாமியார்,

"பொழுது சாய்ஞ்ச நேரம் ஒரு பொண்ணு இப்படியா இருப்பா? அழுது வடிஞ்ச மூஞ்சோட,

வந்து இப்படி கிழக்கை பார்த்து நில்லுடி.” என்று சொல்லி அவளுக்கு திருஷ்டி கழித்து,

"இன்னையோட உன்னை பிடிச்ச பீடையெல்லாம் ஒளிஞ்சு போகட்டும் அழுததெல்லாம் போதும் சீக்கிரம் என் கையில பேரப்பிள்ளை வரணும் சொல்லிட்டேன்.” என பட படவென பொரிந்து தள்ளவிட்டு சென்றுவிட,

மஹிமா ஆச்சரியத்துடன் அருகே நின்ற மைதிலியை பார்க்க, “தப்பு செஞ்சவங்க குற்றத்தை ஒத்துக்கிட்டாங்கடா, உன் மேல தப்பு இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சுமா. டிவில அதான் போய்ட்டு இருக்கு.” என்ற மைதிலி ஆனந்த கண்ணீருடன் அவளை அணைத்துக்கொண்டவர் எதிரே ஆதி வரவும் இருவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு கிளம்பினார்.

அரசியல் செல்வாக்கு கொண்ட கெளதம் ஏற்கனவே பெண்கள் விடயத்தில் மோசம் என்பதை அறிந்திருந்த ஆதிக்கு அவன் விசாரணை அறையில் இருந்து வெளியே வந்ததும் அந்த அறையில் அவன் வந்து போன காட்சிகள் எதுவும் சீசீடிவியில் பதிவாகவில்லை என்பதும் சந்தேகத்தை கொடுக்க, சைபர் கிரைமில் இருக்கும் தன் நண்பன் மூலமாக தன் மனைவி மற்றும் கௌதமின் அலைபேசியை ட்ராக் செய்து ஓரளவு உண்மையை கண்டறிந்தவன்.

ஒரு கணவனாக, ஒரு போலீசாக ஒரு ஆணாக, தன் கடமையை செய்தான். அறைக்குள் ஆரி வந்த மறுகணம்,

"எனக்காக எல்லாம் பண்ணின உங்களுக்கு நான் இதுவரை எதுவுமே பண்ணலையே ஆதி. சொன்ன மாதிரியே என் மேல பட்ட களங்கத்தை ஒன்னும் இல்லாம ஆகிட்டிங்களே. இப்பவும் உங்க காதல் என் காதலவிட ஒரு படி மேல தான் ஆதித்தன். உங்க கூட வாழனும் ஆதி. என்கிட்ட இருக்கிற மொத்த காதலையும் உங்களுக்கு மட்டுமே கொடுக்கணும்.” என்றவள் அவனை இறுக்கமாக அணைத்து கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து அழ,

"இனி இந்த கண்ணீரை நான் பார்க்கவே கூடாது மஹி.” என்றவனின் முகத்தை தாங்கி கன்னம் தொடங்கி முகம் மொத்தமும் தன் இதழ் கொண்டு ஊர்வலம் வந்தவள், அவன் இதழ் நோக்கி வரவும்

அவனோ, “டைம் எடுத்துக்கோ டி ஒன்னும் அவசரம் இல்லை.” என்று கூற, உடனே தலையசைத்து மறுத்தவள்,

"உங்க அளவுக்கு என்னால உங்களை நேசிக்க முடியுமான்னு தெரியல ஆனா ஐ லவ் யு ரிதன் ப்ளீஸ் என்னை தடுக்காதீங்க. எனக்கு நீங்க இப்பவவே வேணும்” என்றவள் அவனது இதழில் அழுத்தமாக முத்தமிட, அவனோ தன்னவள் தரும் முதல் முத்தத்தை காதலோடு தன் இதழில் வாங்கி கொண்டவன், மூச்சு முட்ட பதில் முத்தத்தை வழங்கி, முத்தமிட்டபடியே அவளை கையில் ஏந்தி கொண்டு அவளில் தன் தேடலை துவங்க, மகிழ்ச்சி என்னும் இன்ப கடலில் இருவரும் ஆனந்தமாக தத்தளித்தனர்.

மாதங்கள் பல கடந்திருக்க,

“அடுத்து என்ன பண்ணலாம்ன்னு இருக்க மஹி? எப்போ மறுபடியும் பாட போற?” ஏழு மாத கருவை வயிற்றில் சுமந்திருக்கும் மனைவியின் வீங்கிய பாதத்தில் எண்ணெய் தடவியபடி வினவினான் ஆதித்தன்.

“மறுபடியும் பாடுறதா இல்லை பா, பாட்டுப்பாடி நான் அனுபவிச்சது எல்லாம் போதும்” என்ற மனைவியின் காலில் முத்தம் பதித்தபடி எழுந்து அவள் அருகில் வந்து தன்னோடு அணைத்து கொண்டவன்,

“இந்த உலகத்துக்காக உன் விருப்பத்தை ஏன் நீ விட்டுக்கொடுக்குற, நீ மறுபடியும் பாடுற, அவ்வளவு தான்” என்றான் உறுதியாக.

“கெளதம் மாதிரி வேற யாரும் என்கிட்ட பிரச்சனை செஞ்சா” என்று பயத்தில் கலங்கிய மஹிஷாவின் முகத்தை பிடித்து தன் பக்கம் திருப்பியவன் அவளது கண் பார்த்து,

"அப்படி ஒன்னு நடக்க விட்டா,உன் புருஷன் நான் எதுக்குடி ஆம்பளைன்னு இருக்கேன். துணிவோட உனக்கு புடிச்சதை பண்ணு மஹி, நான் உனக்கு அரணா இருப்பேன். ஓடி மட்டும் ஒழியாத,இந்த உலகத்துல பெண்மைய விட பெரிய சக்தி வேற எதுவும் இல்லை. தைரியமா போராடு, ஓநாய் கூட்டத்தை பார்த்து பயப்படாத, எதிர்த்து நில்லு வெற்றி உனக்கு தான்” என்ற ரிதனின் கண்களை ஒரு கணம் பார்த்தவள் ”ஐ லவ் யு ஆதித்தன்” என்று உணர்ச்சி பொங்க கூறி அவனது மார்பில் சாய்ந்துகொள்ள, அவனும் தன்னவளை காதலோடு அணைத்துக்கொண்டான்.

இது போல மனைவியை நேசித்து, அவளது கனவுகளை தன் கண்ணில் காணும் கணவன் கிடைத்தால் வாழ்வே சொர்க்கம் தான்.

கதை முடிந்தாலும் இவர்கள் காதல் தொடரும் ❤️❤️❤️
 
Last edited:
Top