Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நிலவே 23 & 24

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
நிலவே 23

அஸாத்தின் முதல் மனைவி ஹாஜராவின் மகன்தான் ஆஷிக். அவருக்குத் தன் மனைவியைத் தவிர மற்ற பெண்கள் மீது நாட்டம் அதிகம். இதுவே ஆஷிக் இவரை அதிகமாக வெறுக்கக் காரணமாகியது. இதை அறிந்தும் ஆஷிக்கின் தாய் இந்தச் சமூகத்திற்காகவும், தன் இரு குழந்தைகளுக்காகவும் தாங்கிக்கொண்டிருக்கிறார்.

மறுநாள் காலையில் ஆதர்ஷ் நேற்று இரவு தான் நடாஷாவிடம் நடந்துகொண்டது, ஆஷிக் கூறியது என்று அனைத்தையும் நினைத்து பார்த்து நேராக ஏர்போர்ட்டிற்கு வர, அப்பொழுது அவள் இன்று வேலைக்கு வரவில்லை என்பது தெரிய, நேராக அவளது இல்லத்திற்கு வந்தான்.

கதவை பலமுறை தட்டியவனுக்கு எந்தப் பதிலும் வராமல் போக, "வெளியில பூட்டு போடலை, உள்ள ஒருத்தர் கூடவா இல்லை. யாரும் என்னனு கூடக் கேக்கல ஸ்ட்ரேஞ்...” என்றவன் அங்கிருந்து கிளம்ப,

அப்பொழுது உள்ளே எதோ விழுவது போன்ற சத்தம் கேட்க, மேலும் கதவைத் தட்டியவன், "நடாஷா!” என்று அழைக்க, யாரோ முனங்குவது போல் தோன்ற ஜன்னல் வழியாகப் பார்த்தவன், உள்ளே ஒரு வயதான பெண்மணி மயங்கி கிடப்பது தெரிய, உடனே அக்கம் பக்கத்தினரை அழைத்தவன் அவர்களது உதவியுடன் கதவைத் திறந்துவிட்டு, ஆம்புலன்ஸை வரவழைத்து மயக்க நிலையில் இருந்த நடாஷாவின் தாயை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் சென்றான்.

நடாஷாவிற்கு எவ்வளவோ முறை ஆதர்ஷ் ஃபோன் செய்யக் கட் செய்தவள், பிறகு சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டாள். தன் தாயின் ஹார்ட் ட்ரீட்மெண்ட்டிற்காக ஒருவரிடம் பணம் கேட்டிருந்தாள். அவர் கடைசி நேரத்தில் கையை விரிக்கவே கலங்கிய கண்களுடன் தன் இல்லம் திரும்பியவளுக்கு நடந்த அனைத்தும் புரிய, ஆதர்ஷ்க்கு கால் செய்ய ஃபோனை ஆன் செய்தவளுக்கு அவன் அனுப்பிய மெசேஜ் வர, ‘கம் டு சிட்டி ஹாஸ்பிடல் எமெர்ஜென்சி' என்று இருந்ததைப் பார்த்து, பதறியவாறே ஹாஸ்பிடலுக்கு வந்தாள். ஆதர்ஷ் அவசர சிகிச்சை பிரிவிற்கு முன்னால் இருந்த நாற்காலியில் கண்களை மூடியவாறு அமர்ந்திருந்ததைப் பார்த்து அவனது அருகில் வந்து,

"அம்மா எப்படி இருக்காங்க?” என்று உடைந்து போன குரலில் கேட்க,

"ஏய் வந்துட்டியா? இப்போ ஓகே, நாளைக்கு ரூம்க்கு ஷிப்ட் பண்ணுவாங்க. எவ்வளவு நேரம் ட்ரை பண்ணினேன், எத்தனை மெசேஜ், ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ற? என்ன நினைச்சுட்டு இருக்க?” என்ற அவனது எந்தக் கேள்விக்கும் பதில் கூறாதவள், கண்ணாடியின் வழியாகத் தன் தாயையேப் பார்க்க, அவளது நிலையைப் புரிந்துகொண்டவன் அவளுக்குத் தண்ணீர் கொடுத்து,

"குடி, இங்க பாரு எல்லாம் சரியாகிரும். உங்க அம்மா சரியாகிருவாங்க. நான் கிளம்பட்டுமா, இல்லை நான் இருக்கணுமா?” என்று கூறி அவளது பதிலுக்காக ஆர்வமாய் எதிர்பார்த்திருந்த ஆதர்ஷ், அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக,

‘போகட்டா, இருக்கட்டுமானு கேட்குறேன். வேண்டாம் போகாதீங்கனு சொன்னா குறைஞ்சா போயிருவா? வேண்டாம்னு ஒரு வார்த்தை சொல்லுடி.’ என்று தன் மனதிற்குள் புலம்பியவாறு நடாஷாவையேப் பார்க்க அவளோ, "நீங்க கிளம்புங்க, நான் பார்த்துக்கிறேன்.” என்று சட்டென்று கூற,

கோபமுற்றவன், "சரி ஓகே, பார்த்துக்கோ. எதுவும் ஹெல்ப் வேணும்னா கால் பண்ணு, டேக் கேர்.” என்றவன் அவளை விட்டு வரவும் முடியாமல், வேறு வழியும் இல்லாமல் திரும்பி திரும்பி அவளைப் பார்த்தவாறே அங்கிருந்து சென்றான்.

நண்பகல் வேளையில் ஜியா உணவருந்திக் கொண்டிருக்கும் நேரத்தில், அவளது வீட்டில் இருந்து அழைப்பு வர அலைபேசியை அட்டென்ட் செய்தவள், "சொல்லுங்க சித்தி, எப்படி இருக்கீங்க, வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று கேட்க,

"இருக்காங்க... இருக்காங்க... மாசம் பிறந்துட்டே, சம்பளம் குடுத்திருப்பாங்கள்ல?" என்று பதில் வரவும், தன் இதழ் ஓரம் கவலை தொனிக்கச் ஒருவித வெறுமையோடு புன்னகைத்தவள்,

"ஆமா சித்தி...” என்று கூறி முடிப்பதற்குள் அவளது சித்தி, “அப்போ ஏன் இன்னும் நீ பேங்க்ல போடல?” என்று கொஞ்சம் அழுத்தமாய் கேட்க,

"சித்தி நான் நாளைக்கு ஊருக்கு வரேன், அதான் போடல.” என்று நிதானமாய் அவள் கூற,

"இத சொல்றதுக்கென்ன?” என்றவருக்கு, வெறும் வறட்டு புன்னகையை மட்டும் பதிலாய் கூறியவள், வேறெதுவும் பேசாமல் இருக்க அவளது சித்தி,

"சரண்யாக்கு காலேஜ் ஃபீஸ் கட்டணும், அதனாலதான் கேட்டேன்.” என்று தன் செயலுக்குக் காரணம் தேட,

ஜியாவோ, "சித்தி நான் காலேஜ் பீஸ், எலெக்ட்ரிக் பில், ஃபோன் பில், போஸ்டல் எல்ஐஸி அப்புறம் மத்த சேவிங்ஸ் எல்லாத்தையுமே ஆன்லைன்ல கட்டிட்டேன்.” என்றதும் அவளது சித்தியின் முகம் நெருப்பில் பட்ட சருகாய் கருத்து போக, அவரை மேலும் தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பாத ஜியா,

"சித்தி நான் நாளைக்கு ஊருக்கு வரேன், உங்களுக்கு எதுவும் வேணுமா?” என்று கேட்க, ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தவர்,

"இல்... லை... அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். என்ன திடீர்னு... போனவாரம் நம்ம சொந்தகாரங்க வீட்டு விசேஷத்துக்கு வரமுடியாது லீவ் கிடைக்காதுனு சொன்ன, இப்போ வரேன்னு சொல்ற?"

"அது ஆயிஷாவுக்கு என்கேஜ்மென்ட் அ... தான்...” என்று ஒருவழியாகத் தடுமாறியவாறே கூறி முடிக்க,

"ஆயிஷாவா?” என்று சில நொடிகள் யோசனைக்குப் பிறகு ஒருவித கோபத்தோடு,

"ஏய் ஆயிஷானா அந்த ஆஷிக்கோட தங்கச்சி தானே?” என்று கடுகடுத்தவரின் கேள்விக்கு,

"ம்ம்” என்று மட்டும் பதில் கூறியவள், வேறெதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க,

"அவனும் வருவான்ல. நீ ஒன்னும் வரவேண்டாம்."

"சித்தி நான் வரேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டேன்."

"ஆமா பொல்லாத ப்ராமிஸ்."

"இந்த ஒரு தடவை மட்டும் ப்ளீஸ் சித்தி...” என்று ஜியாவின் பலமுறை கெஞ்சலுக்குப் பிறகு,

"வந்தோமா, போனோமானு இருக்கணும் புரியுதா? ஏதாவது பிரச்சனை வந்துச்சு, அவ்வளவுதான் பார்த்துக்கோ. நீ மட்டும் என் வீட்ல இல்லை, எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா அதை மறந்திராத.” என்று எச்சரிக்கையோடு சம்மதம் தெரிவித்தார்.

அவரது கடினமான பேச்சு ஜியாவைப் பெரிதாய் பாதிக்கவில்லை. அவள் ஒன்றும் புதிதாய் இதைக் கேட்கவில்லையே. தன் சித்திக்கு தானும் ஆஷிக்கும் காதலித்த விஷயம் தெரிந்ததில் இருந்து அவர் இப்படித்தான் வாய்க்கு வந்தபடி ஏதாவது கூறுவார் என்பதால், அதைப் பெரிதாய் எடுத்து கொள்ளாதவள்,

‘இதுக்கே இப்படிச் சொல்றாங்க, நானும் அவனும் ஒரே இடத்துலதான் வேலை பார்க்குறோம், நான் அவன்கூடதான் ஊருக்கு வரப்போறேன்னு தெரிஞ்சா தேவையில்லாம கதை கட்டுவாங்க. இப்போதைக்கு இது எதை பத்தியும் சொல்ல வேண்டாம், அப்புறம் சொல்லிக்கலாம்.’ என்று தனக்குள் சிந்தித்துக்கொண்டிருக்க, அவளது சிந்தனையயைக் கலைக்கும் விதமாய்,

"என்னடி பதில் சொல்லாம இருக்க?” என்று அவரது சித்தி அரட்டியதில் தன்னிலைக்கு வந்தவள்,

"சரி சித்தி, நீங்க சொல்ற மாதிரியே நடந்துக்குறேன். எனக்கு நேரம் ஆச்சு, நான் வைக்கிறேன்."

"ம்ம் கவனமா வா, சரியா? உடம்பப் பார்த்துக்கோ."

"சரி" என்ற உரையாடலுக்குப் பிறகு, இருவரும் அலைபேசியில் இருந்து விடை பெற்றனர்.

இரவு ஒரு ஏழு மணியளவில்,

ஆதர்ஷ் காரை ஓட்டிக்கொண்டு வர, ஆஷிக் பின் சீட்டிலும் தியா அவனது அருகில் அமர்ந்துகொண்டு தாங்கள் சிறுவயதில் என்ன என்ன செய்தோம் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் சலிக்காமல் கூற, அவள் கூறிய எல்லாவற்றுக்கும் தங்களின் தலையைத் தாளம் தப்பாமல் ஆட்டிக்கொண்டே வந்தனர். சிறிது நேரம் கழித்து ஜியாவின் அப்பார்ட்மெண்ட் முன்னால் கார் வந்து நிற்க,

"ஆர் யு கைஸ் சீரியஸ்?” என்று தியா கோபமாகக் கேட்க,

"அபௌட் வாட்?” என்ற ஆஷிக்கைப் பார்த்து மேலும் கோபம் கொண்டவள்,

"நம்ம கூட இந்த ஜியா கண்டிப்பா வரணுமா என்ன? அவளுக்குத் தனியா வர தெரியாதா?"

"கார்ல சீட் இருக்கு, போகவேண்டிய இடமும் ஒரே இடம்தான். ஸோ அவளும் வந்தா என்ன தப்பு?"

"ஆஷிக் யு ஹேட் ஹெர். நீ அவளை வெறுக்குற தானே?” என்றவள் பதிலை எதிர்பார்த்து அவனையேப் பார்க்க,

"ஹே... ட்...” என்று ஒற்றை வார்த்தையோடு வேறு எதுவும் பேசாமல் அவன் அமைதியாய் இருக்க,

"நீ அவளை ஹேட் பண்ற தான ஆஷிக்? அவ உன்னை விட்டுட்டு போனவ, எல்லாத்தையும் மறந்துட்டியா?” என்ற தியாவை என்ன கூறியும் சமாதானம் செய்ய முடியாது என்பதை உணர்ந்தவன், அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க,

"இல்லை ஆதர்ஷ்... ஆதர்ஷ் லைக் ஜியா, ஐ லைக் ஆதர்ஷ்."

"ஸோ?"

"ஸோ ஜியா லைக்ஸ் மீ அண்ட் ஐ..."

"யு?"

"ஐயம் ஃபீல் ஸ்லீப்பி.” என்று ஆஷிக் தன் கண்களை மூட, ஆதர்ஷ் சிரித்தவாறு தியாவிடம், "விடு தியா, அவனுக்கு ஜியாவை புடிச்சுருக்குனா ஜஸ்ட் லீவ் இட்."

"ஆதர்ஷ், அவ ஏற்கனவே இவன் மனச உடைச்சது பத்தாதா? மறுபடியும் இவன கஷ்டபடுத்தணுமா என்ன?"

"ஓகே ஓகே... லீவ் இட். இப்போ இங்க இதைப்பத்தி பேச வேண்டாம்னு நினைக்கிறேன்.” என்ற ஆதர்ஷ், பிரச்சனையை வழக்காமல் சமாளிக்க, தன் தோளில் படுத்து உறங்குவது போல நடித்த ஆஷிக்கை நறுக்கென்று கிள்ளிய தியா அவனைப் பார்த்து முறைத்தவாறு, “நீ என்கிட்ட எதுவும் பொய் சொல்லுறியா?"

"இல்லை தியா."

"ஆஷிக் உன்னை விட்டுட்டு போனவளை நினைச்சு நீ உன் வாழ்க்கைய வீணாக்காத. அவகிட்ட கொஞ்சம் விலகியே இரு. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.” என்றவளிடம் ஆஷிக், “ஏய் லூசு அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஏற்கனவே சோர்வா இருக்கேன்டி, என்னைப் பார்த்தா பாவமா இல்லை? இப்படிச் சண்டை போடுறியே? ப்ளீஸ் தியா தூக்கமா வருது."

"நான் பேசுறது சண்டை போடுற மாதிரி இருக்கா?"

"தியா ப்ளீஸ்டா... என் தியால... உன்கிட்ட சொல்லாம எதுவும் பண்ணமாட்டேன்.” என்றவன் பாவமாய் பார்க்க, அந்த நேரத்துக்கு ஆஷிக்கின் முன்னால் சமாதானம் ஆனது போல நடித்தாலும், தியாவின் மனதிற்குள் பழிவாங்குதல் என்னும் தீ திபுதிபுவென அணையாமல் கொழுந்து விட்டு எரிந்துகொண்டுதான் இருந்தது.

தன் கை கடிகாரத்தைப் பார்த்தவாறு தியா, "எவ்வளவு நேரம் ஆஷிக், அந்த மகாராணிக்கு சீக்கிரமா வரமுடியாதா என்ன? நாம போய் வெத்தல, பாக்க வச்சு அழைச்சாதான் வருவாங்களா?"

"நான் வேணும்னா போய் பார்த்துட்டு வரேன்." என்ற ஆதர்ஷைத் தடுத்த ஆஷிக்,

"நான் போறேன்” என்று சட்டென்று காரின் கதவைத் திறக்க, அவனைத் தடுத்த தியா கோபப் பார்வையோடு, "என்ன? தூக்கம் வருதுனு சொன்ன..." என்று தன் கண்களை உருட்டி கேட்க,

"இப்போ வரல தியா." என்று முழித்தவனைப் பார்த்து முறைத்தவள்,

"நீங்க யாரும் போக வேண்டாம், நானே போறேன்.” என்று தியா, ஆஷிக்கைப் பார்த்தவாறு ஜியாவின் இல்லத்திற்குச் செல்லவும், ஜியா கதவைப் பூட்டிவிட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.

"ஹாய் ஜியா!” என்றவாறு ஜியாவின் அருகில் தன் இரு கைகளையும் குறுக்கே கட்டிக்கொண்டு நிற்க,

நிமிர்ந்து பார்த்தவள் பதிலுக்கு, “தியா ஹாய்! உனக்கு ஏன் சிரமம், நானே வந்திருப்பேனே? லிஃப்ட் வேற வொர்க் ஆகல.” என்று கூற, நக்கல் பார்வையோடு தியா "அக்கறை அதெல்லாம் இருக்கட்டும், ஏன் மும்பைக்குத் தனியா வரமாட்டீங்களோ?"

"அம்மாதான் சொன்னாங்க."

"அவங்க சொல்லுவாங்க, உனக்குப் புத்தி வேண்டாம். ஏற்கனவே ஏமாந்தது போதாதா? ஆஷிக் பத்தி எனக்கு நல்லாவே தெரியும், அவன் உன்னை லவ்லாம் பண்ணல, ஜஸ்ட் மத்த பொண்ணுங்ககிட்ட பழகுற மாதிரிதான் உன்கிட்டயும் பழகுறான். அவன் ஒரு சோஷியலிஸ்ட் பெர்சன். ஏற்கனவே அவனால ஏமாந்து போனல, அப்புறமும் அவனை ஓட்டிகிட்டே அலையுற?

அவன் உன் உயிரை காப்பாத்துனான்றதுக்காக மறுபடியும் ல்வ்னு தப்பான முடிவுக்கு வந்திராத, அப்புறம் நீதான் கஷ்டப்படுவ. ஒரு பொண்ணா இத நான் உனக்குச் சொல்றேன்.” என்று தியா எச்சரிக்கையாய் கூற,

ஜியா பதில் கூறுவதற்குள், "என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?” என்றவாறு ஆஷிக் அவர்களது அருகில் வர,

திடுக்கிட்ட தியா, “சும்மா கேர்லஸ் டாக். நான் கூட்டிட்டு வரேன்னு சொன்னேன்ல, நீயேன் வந்த?” என்று சமாளிக்க,

"டைம் ஆச்சே, அதான் என்னனு பார்க்க வந்தேன். ஏய் ஜியா குடு, நான் தூக்குறேன்.” என்று லக்கேஜை அவளது கையில் இருந்து வாங்க முற்பட,

"இல்லை நான் பார்த்துக்கிறேன்.” என்று ஜியா தடுக்க,

"என்னை பார்த்துக்குவ? லிஃப்ட் வேற வொர்க் ஆகல குடு நானே தூக்கிட்டு வரேன் "

"ஆஷிக்!"

"ஜியா...” என்று உரிமையாய் கண்டித்தவன், “ரெண்டு பேரும் முன்னாடி போங்க, நான் தூக்கிட்டு வரேன்.” என்றான்.

காரில் ஜியா, ஆதர்ஷின் அருகில் உட்கார, கார் மெல்ல மும்பையை நோக்கி நகர்ந்தது.

***

நிலவே 24

ஆஷிக், தியாவிடம், “எல்லாம் உன்னாலதான், ஃப்ளைட்ல மட்டும் இப்போ போயிருந்தோம்னா த்ரீ ஹவர்ஸ்ல மும்பை போயிருப்போம். கார்லதான் போணும்னு பிடிவாதம் பிடிச்சுட்ட."

"நான் என்ன பண்ணுவேன், நாம மூணு பேரும் மும்பையில எத்தனை நாள் இப்படி லாங் ட்ரைவ் போயிருப்போம். டெல்லி வந்ததுக்கப்புறம் அந்த சான்ஸ் கிடைக்கவே இல்லை. சரி ரொம்ப நாள் கழிச்சு நல்லா சான்ஸ் கிடைச்சுருக்கே, நல்லா கார்ல உங்ககூட என்ஜாய் பண்ணின மாதிரியும் இருக்கும், லாங் ட்ரைவ் போன மாதிரியும் இருக்கும்னு நினைச்சேன். எனக்கென்ன தெரியும் இப்படி நம்மகூட இன்னொரு ஆளும் வந்து இடைஞ்சலா இருப்பாங்கனு?” என்று ஜியாவைப் பார்த்து முறைத்தவாறே கூற,

"தியா!" என்று ஆஷிக் கடிந்துகொள்ள,

"ஐயம் சாரி தியா, என்னால உங்க...” என்ற ஜியாவிடம்,

"ஏய் ஜியா நத்திங் லைக் தட். தியா அப்படித்தான், பட் வீ ஆர் ரியலி ஹாப்பி.” என்று ஆதர்ஷ் சூழ்நிலையைச் சமாளித்தான்.

கண்ணாடி வழியாக ஆஷிக்கைப் பார்த்த ஜியாவின் கண்கள் நெருப்பாய் எரிய, 'ஏன் இவ என்னை இப்படிப் பார்த்து முறைக்கிறா? நாம என்ன பண்ணினோம்?' என்று எண்ணியவன் அவளது பார்வையின் திசையை நோக்கி பார்க்க, அப்பொழுது தியா தன் புஜத்தை இறுக்கி அணைத்தவாறு தன் தோளில் சாய்ந்திருப்பதைக் கவனிக்க, அப்பொழுதுதான் அவனுக்கு ஜியாவின் அனல் பார்வையின் அர்த்தம் விளங்கியது.

முன்பு இதைப் போல நடந்த ஒரு சம்பவத்தை அவனது மூளை அவனுக்கு நினைவுபடுத்த, அதை நினைத்துப் பார்க்க தொடங்கினான்.

***

ஜியாவும் ஆஷிக்கும் தங்களின் காதல் பயணத்தில் நான்காவது ஆண்டை வெற்றிக்கரமாகக் கடந்து, ஐந்தாவது ஆண்டின் அனிவர்சரியை தங்களின் நண்பர்களோடு கொண்டாடிக் கொண்டிருந்த நேரம்.

ஆஷிக், ஜியாவிற்குக் கேக் ஊட்ட போகும் பொழுது தியா இடையில் வந்து, அந்த கேக்கை தன் வாயில் கவ்விக்கொண்டு ஜியாவுக்கும் ஆஷிக்கிற்கும் இடையில் வந்து, ஆஷிக்கை இறுக்கக் கட்டி அணைத்துக்கொள்ள,

ஜியாவின் கண்களில் கண்ணீர் கொட்ட, கோபமாக அங்கிருந்து வெளியே சென்றாள்.

நண்பர்களுடன் ஆட்டம் போட்டதில் சிறிது நேரம் ஜியாவை மறந்து போன ஆதர்ஷ், “ஜியா எங்க, ஆளையே காணும்?” என்று கேட்டதுக்குப் பிறகு தன்னைத் திட்டிகொண்டவன்,

"ஆமா எங்க போனானு தெரியல, பார்த்துட்டு வரேன்.” என்றவாறு அவளைத் தேடி செல்ல,

பல நிமிடங்கள் தேடியதிற்கு பிறகு வெளியே ஸ்விம்மிங் பூலிற்கு அருகே ஜியா தனியே நின்று வானத்தையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவன், நிம்மதி பெருமூச்சு அடைந்தவனாய் அவளது பின்னால் வந்து இறுக்க அணைத்துக் கொண்டான்.

"வானத்திலும் நிலா, என் கண் முன்னும் நிலா. அந்த நிலா குளிருது, ஏன் இந்த நிலா சூடா இருக்கு?” என்று அவளது கன்னத்தை உரச,

"கவிதையா? எங்க இருந்து சுட்ட, கேவலமா இருக்கு.” என்றவள் அவனது கையைத் தட்டிவிட்டு தள்ளி சென்று நிற்க,

"என்னாச்சு?” என்று தன் அருகில் வந்தவனைப் பார்த்து நெருப்பாய் சுட்டவள்,

"இப்போதான் நான் உனக்கு ஞாபகத்துக்கு வந்தேன்ல, ரெண்டு மணிநேரமா நான் இங்கதான் இருக்கேன்."

"நானும் ரொம்ப நேரமா தேடிட்டு இருந்தேன்."

"ரெண்டு மணிநேரமா தேடுன?"

"இல்லை... ஃப்ரண்ட்ஸ் எல்லாரும்..."

"ஃப்ர... ண்... ட்ஸ் இருக்கும் போது நான் எப்படி ஞாபகத்துக்கு வருவேன்?" என்று அவள் ஃப்ரண்ட்ஸ் என்கின்ற வார்த்தைக்கு மட்டும் அழுத்தம் கொடுக்க,

"ஜியா எதோ ஒரு விஷயத்துக்காகக் கோபமா இருக்க, அது என்னனு சொல்லு."

"ஆமா நான் ஒன்னு கேக்குறேன், உன் உன் ஃப்ரண்ட் தியாக்கு அறிவே கிடையாதா? இல்லை வேணும்னே என்னை வெறுப்பேத்த இப்படி பண்ணிட்டு இருக்காளா?"

"அதுவா? அவ எப்பவுமே இப்படித்தான் சின்னப் புள்ள மாதிரி நடந்துக்குவா, ஆனா ரொம்ப நல்லவ."

"சின்ன புள்ளையா? ஆஷிக்..."

"அவ என் பெஸ்ட் ஃப்ரண்ட்மா, எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ."

"நீ ஃப்ரண்ட்னு சொல்ற ஓகே, அவ மனசுலயும் அதே எண்ணம்தான் இருக்கா?”

"ஜியா என்ன பேசுற?"

"எனக்கு அப்படித் தெரியலை ஆஷிக், சரி ஃப்ரண்டாவே இருக்கட்டும். அதுக்காக இப்படித்தான் இறுக்கி கட்டி புடிப்பாங்களா? அப்படியே என் உள்ளுக்குள்ள பத்தி எரியுது. எப்பவும் உன் கைய புடிச்சுட்டே இருக்கா. ஏன் தள்ளி இருந்தா ஃப்ரண்ட்ஸா இருக்க முடியாதா? எப்பவும் உன்னை உரசிட்டேதான் இருப்பாளா? அவ உன் கைய புடிக்கும் போது, உன்னை உரசிட்டு நிக்கும் போது, ஓடி வந்து கட்டி புடிக்கும் போது, எனக்கு அப்படியே ஜிவ்வுனு ஏறுது, தலை வெடிக்கிற மாதிரி இருக்கு.” என்றவள், ஆஷிக்கின் சட்டையைப் பற்றிக் கொண்டு,

"ஆஷிக் இன்னைக்கு ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, உயிரே உன் மேல வச்சுருக்கேன். யாருக்காகவும் உன்னை என்னால விட்டு தரமுடியாது. தியானு இல்ல இனிமே யாராவது ஒரு பொண்ணு உன்கிட்ட இப்படி நெருக்கமா இருக்கட்டும்... இப்படிப் பேசிட்டு இருக்கிற மாதிரி அப்போ நான் பேசிட்டு இருக்க மாட்டேன். ஏன் உன் கண் முன்னாடியே இருக்க மாட்டேன்.

நீ தேடுனா கூட நான் கிடைக்க மாட்டேன் இது என் மேல சத்தியம்.” என்றவள் அவனது மார்பில் சாய்ந்து அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் துளிகள், ஆறாய் பெருக்கெடுத்து ஓட தேம்பி தேம்பி அழ தொடங்கினாள். எவ்வளவோ முயற்சித்தும் அவள் சமாதானம் ஆகாமல் போக, அவளாகச் சமாதானம் அடைவதற்காகக் காத்திருந்தவன் ஆறுதலாய் அவளது தலையை மட்டும் தடவி கொடுத்துக்கொண்டிருந்தான்.

நிமிடங்கள் கடந்து போகத் தன்னவனின் மார்பை விட்டு விலகியவள் அழுதுகொண்டே இருக்க, ஆஷிக்கிற்கோ மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஜியா தன் மீது இவ்வளவு காதலை வைத்திருக்கிறாள் என்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியுற்றவன்,

மெல்ல அவளது அருகில் வந்து தன்னவளின் வதனத்தைத் தன் கையில் ஏந்தி, விழிகளில் வழிந்த நீரை தன் முத்தத்தால் துடைத்து, "உன் ஆஷிக் உனக்கு மட்டும்தான். என் ஜியா எனக்கு மட்டும்தான்.” என்று அழுத்தமாய் கூறி, தன் செவ்விதழ் கொண்டு தன்னவளின் நெற்றியை அலங்கரித்தவன்,

"இனிமே எந்தப் பொண்ணுகிட்டயும் ஒரு டிஸ்டன்ஸ் வச்சே பேசுறேன் சரியா? அது யாரா இருந்தாலும்... யாரா இருந்தாலும்...” என்று அவன் கூறி முடிக்கவும் சட்டென்று தன்னவனின் கன்னத்தில் தன் இதழ் பதித்தவள், உன்னைவிட்டு விலகமாட்டேன் என்பது போல ஆஷிக்கின் மார்போடு இறுக்கமாகச் சாய்ந்துகொள்ள, நானும் உன்னை விடாமட்டேன் என்பதாய் தன் மார்பில் சாய்ந்த அந்த மலரை தன் கரங்களால் வளைத்துக்கொண்டான்.

இந்த நிகழ்வை அவர்களுக்குத் தெரியாமல் தியா தன் கண்களில் கோபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவர்களின் அதீத நெருக்கம், தன் நண்பனை தன்னிடம் இருந்து பிரித்து விட்டாளே என்கிற கோபம், தியாவுக்குள் பொறாமை என்னும் தீயை எரிய வைத்துக்கொண்டிருந்தது.

***

நினைவுகள் மறைந்து போகத் தன்னிலைக்கு வந்தவன், தன்னைச் சுட்டெரித்துக் கொண்டிருந்த ஜியாவின் பார்வையைக் கண்டு மிரண்டு, விருட்டென்று தன் மீது இருந்த தியாவின் கரத்தை எடுத்துப்போட்டு, அவளை விட்டு சற்று தள்ளிவந்து அமர்ந்து நான் எதுவும் செய்யவில்லை என்பது போலத் திருத்திருவென விழித்தவாறு, அவன் ஜன்னல் பக்கம் பார்த்துக்கொண்டிருந்ததை விடப் பெரிய சாட்சி எதுவுமில்லை.

இப்படி அவ்வப்போது இருவரும் கண்ணாடி வழியாகப் பார்ப்பதும் முறைப்பதுமாய் நேரம் உருண்டோடியது.

இரவு வேளையில் தியா, ஜியா இருவரும் நன்றாகத் தூங்கிருந்தனர். ஜியா தூக்கத்தில் சரிந்து சரிந்து காரின் கதவில் மோத, இதைக் கவனித்த ஆஷிக் தன் இருக்கையில் இருந்து சற்று முன்னால் தள்ளிவந்து, தன் கரத்தை காரின் கண்ணாடிக்கும் அவளது தலைக்கும் இடையில் கொடுக்க, அசதியில் அவனது கையிலே அவள் உறங்கிப்போக, இதைக் கவனித்த ஆதர்ஷ், ஆஷிக்கைப் பார்த்து புன்னகைக்க,

ஆஷிக், ஆதர்ஷிடம், "டேய் ரொம்ப நேரமா ட்ரைவ் பண்ற, நான் கொஞ்சம் நேரம் பண்றேன்டா. நீ ரெஸ்ட் எடு."

"ட்ரைவிங்க விட பெரிய டூட்டி பார்த்துகிட்டு இருக்க, நீ அந்த டூட்டிய பாரு, நான் இந்த டூட்டிய பார்க்குறேன்." என்றவன் காரை செலுத்துவதில் கவனம் செலுத்த, ஆஷிக்கோ ஜியா தூங்கும் அழகை முன் கண்ணாடியில் பார்த்து ரசித்தவாறே வந்தான்.

சூரியனின் கதிர்கள் முகத்தில் பட, யாரோ தன்னை எழுப்புவது போல் தோன்றி மெல்ல பார்த்தவள், ஆஷிக்கின் கை மேல்தான் நாம் இவ்வளவு நேரம் தூங்கிருப்பது தெரிந்து அவனையே பார்க்க, ஆஷிக் தன் உதட்டுக்கு வலிக்காமல் சிரித்தவாறு, "எக்ஸ்க்யூஸ் மீ இது என்னோட கை, கொஞ்சம் தரீங்களா?” என்றதும், அவள் தன் தலையை எடுக்க வெகுநேரம் ஒரே இடத்தில் வைத்திருந்ததால், சிறு வலியோடு எடுத்தவன் தன் கையைச் சற்று நேரம் சுழற்ற,

யாரோ தன்னையே பார்ப்பது போலத் தோன்றி நிமிர்ந்து பார்த்தவன், ஜியா தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்து, "தேங்க்ஸ் சொல்லணும்னு அவசியம் இல்லை, பிகாஸ் ஹெல்ப் பண்றது என்கூடவே பிறந்தது.” என்று தன் காலரை தூக்கிவிட,

அவனைப் பார்த்து முறைத்தவள், "உன் கைய எதுக்கு என் தலைக்குள்ள வச்ச?"

"அது நீ..."

"என்ன? இப்படி யாரும் படுத்திருந்தா அவங்க தலைக்குள்ள கை வைக்கிறது உனக்குப் பின்னால பிறந்த குணமா இல்லை, இதுவும் சார் கூடவே பிறந்தது தானா?” என்று கேட்க,

"ஏய் மனசுல என்ன...” என்று அவன் தன் குரலை உயர்த்த, அவனது சத்தத்தில் விழித்த தியா, “என்ன ஆஷிக் காலையிலையே கத்திக்கிட்டு இருக்க?” என்றதும் அவன் அமைதியாக,

இதை அனைத்தையும் பார்த்து சிரித்தவாறு ஆதர்ஷ், “கைஸ் வீ ரீச்ட்.” என்றவன் மேலும் தொடர்ந்து, "டேய் ஆஷிக், இன்னும் உன் வீட்டு வாட்ச்மேன் அங்கிள் பகல்ல தூங்கிறத விடல போல?"

"ஆமாடா, கேட்டா அந்த மிலிட்டரி பாடர்ல நான் அப்படிச் சுட்டேன், இப்படிச் சுட்டேன்னு படம் மட்டும் நல்லா ஓட்டுவாரு. இவரு ரொட்டி கூடச் சுட்ருப்பாரானு எனக்குச் சந்தேகமாதான் இருக்குடா.” என்று சிரிக்க,

"அட நீ வேற, இவரு மிலிட்டரி சரக்க தவிர வேற எதையும் சுடல."

"என்ன இருந்தாலும் இவரு நம்ம ஃப்ரன்ட்டா. எத்தனை நாள் நம்ம ரெண்டு பேரையும் ஸ்கூல்ல பிரின்சிபால்கிட்ட இருந்து காப்பாத்திருப்பாரு?”

"மிலிட்டரி சித்தப்பா...” என்று இருவரும் கையடித்துச் சிரித்துக்கொள்ள,

"ஆனா மச்சான், இவரு லவ் ஸ்டோரி மட்டும் மறக்கவே முடியாதுடா.” என்ற ஆஷிக், ஆதர்ஷைப் பார்த்துக் கூற,

"ம்ம், செஞ்சிரலாமா?"

"செஞ்சிருவோம்.” என்றவாறு காரை விட்டு இறங்கியவர்கள் நேராகச் சென்று அவரது காதில், "திருடன்... திருடன்...” என்று கத்த சட்டென்று விழித்தவர், "எங்க? எங்க?” என்று பதற, அவர்கள் இருவரும் சிரித்தவாறே, "இங்க...” என்று அவர்களுக்குள் ஹைஃபை அடித்துக்கொள்ள, அவர்கள் இருவரையும் பார்த்தவர் மகிழ்ச்சியில், "தம்பிங்களா வந்துட்டீங்களா?” என்று கட்டி அணைத்துக்கொள்ள,

ஆஷிக், ஆதர்ஷ் இருவரும், “ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை

அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை

லல லால்ல லால்லலா லால்ல லால்லலா லால்ல லால்ல லா...”

என்று பாட, நன்கு வாய் விட்டு சிரித்தவாறே அவர்களோடு சேர்ந்து தன் கைகளை அசைத்தவாறே, அவர்களது மிலிட்டரி சித்தப்பாவும் பாடினார்.

பின் மூவரும் கட்டி அணைத்துக்கொள்ள, அவர் இருவரது காதில் எதோ கிசுகிசுக்க ஆதர்ஷ் அவரிடம், “அங்கிள் ஃபாரீன் சரக்கு ரெடியா இருக்கு, இன்னைக்கு நைட்டு மாடிக்கு வந்துருங்க. அப்புறம் என்ன ஒரே மஜாதான்.”

"ஓகே” என்றவர், கதவைத் திறந்துவிட இவர்கள் உள்ளே சென்றனர்.

ஆஷிக்கின் தாயும் அவனது தங்கையும் அவர்களை வரவேற்க, ஆயிஷா சென்று ஜியாவை இறுக்க அணைத்துக் கொண்டாள். இருவரும் கொஞ்ச நேரம் பேச ஜியா, ஹாஜராவிடம் நலம் விசாரிக்க அவர், "நா நல்லா இருக்கேன்டா, நீ எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன்."

"சரி உள்ள வா."

"இல்லமா, வீட்ல வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க, நான் போகணும்,” என்றவளைக் குறுக்கிட்ட ஆயிஷா,

"என்னடி போகணும்னு சொல்ற?"

"ஏய் என் வீடு என்ன லண்டன்லயா இருக்கு, பத்து நிமிஷ தூரம் தானே போயிட்டு வந்துருவேன்."

"எப்போ வருவ?"

"ஈவ்னிங் வரேன்."

"அம்மா பாருங்க, ஈவ்னிங் வரேன்னு சொல்றா..."

"என்னமா இது, நீ கொஞ்சம் சீக்கிரமா வந்தா அவளுக்கு நல்லா இருக்கும்ல?"

"சரி ஆன்ட்டி, நான் ஃப்ரெஷ் ஆகிட்டு சீக்கிரமா வந்திடுறேன்."

"சரிடா."

"சரிமா, நான் போயிட்டு வரேன், வரேன்டி.” என்று கிளம்பப் போனவளைத் தடுத்த ஹாஜரா, “டேய் ஆஷிக், போய் அவளை அவளோட வீட்ல விட்டுட்டு வா.” என்று கூற,

"போங்கமா, ட்ரைவரை விடச் சொல்லுங்க.” என்று அவன் பொய்யாக நடிக்க,

"டேய் சொன்னா கேட்க போறீயா, இல்லையா?"

"சரி போறேன்.” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு அவளது இல்லத்தை நோக்கி பயணிக்க, தூரம் சிறிதாக இருந்தாலும் நொடிகள் சற்று நீண்டன. பழைய நினைவுகள் இருவரது கண் முன்னும் வந்தோடியது. காதலிக்கும் போது ஜியா மாடியில் நிற்க, இவன் ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் ஒரு பத்து முறையாவது தனது ஸ்போர்ட்ஸ் பைக்கில், குறுக்கும் நெடுக்கும் பாய்ந்திருப்பான். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பைக்கின் ஹாரன். எத்தனை நாட்கள் அவளது கோபத்தைத் தனிக்க, கொட்டும் மாலையிலும் சுடும் வெயிலிலும், அவளது ஜன்னலின் நேர் எதிரே உள்ள மரத்தின் கீழ் புத்தன் போல தவம் கிடந்திருப்பான். இன்று நினைத்தாலும் அது இனிக்கின்ற பொற்காலம் அல்லவா!

அனைத்தையும் நினைத்து தங்களுக்குள் புன்னகைத்தவர்கள் அவர்களது பிரிவை நினைக்க, மனதில் பாரத்தோடு ஒருவரை ஒருவர் பார்க்க, எதுவும் பேசாமல் அப்படியே காரிலே உட்கார்ந்திருந்தனர். சில நொடிகளுக்குப் பிறகு காரை விட்டு இறங்கியவள், அவனைப் பார்த்து சின்னதாய் ஒரு நன்றி கூறிவிட்டு தன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவளைக் கண்ட அவளது தங்கை சரண்யா, "அம்மா, அக்கா வந்துட்டா.” என்றவாறு ஓடி வந்து கட்டி அணைத்துக்கொள்ள,

"அக்கா எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன்டா."

"நீ எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன் அக்கா."

"அக்கா எனக்காக என்னலாம் வாங்கிட்டு வந்திருக்க?” என்றவளுக்கு, ஜியா பதில் கூறும் முன்பே அவளைத் தடுத்த அவளது சித்தி திவ்யா,

"என்ன வாங்கணும், சும்மா அதை இதை வாங்கி பொருளை வீணாக்கிட்டு... ஜியா, நீ ஏதும் வாங்கிட்டு வரலையே?"

"இல்ல சித்தி."

"நல்லது, அன்னைக்கு கல்யாண வீட்டுக்கு போனப்ப ஒரு பொம்பளை போட்ருந்த ஆரம் எனக்கு ரொம்ப புடிச்சுருந்திச்சு. அதை மொபைல்ல போட்டோ எடுத்து வச்சுருக்கேன். நம்ம சரண்யாக்கு அப்படி ஒன்னு பண்ணிடலாம், சிறுக சிறுக சேர்த்தாதான் உண்டு. உன்னை லண்டன்ல படிக்க வச்சா, நீ கை நிறைய சம்பாதிப்ப இவ கல்யாணத்துக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காதுனு நினைச்சேன். அந்த ஆசையும் மண்ணா போச்சு, இப்படி எதாவது சேர்த்தாதான் உண்டு." என்று அவர் ஜியாவிடம் நலம் கூட விசாரிக்காமல் வசைபாட,

"ஏய், என்ன எதோ லண்டன்னுக்கு அனுப்பி நீ படிக்க வச்ச மாதிரி பேசுற? இவ நல்லா படிச்சு மெரிட்ல போனா. மத்த செலவுக்கு என் அண்ணன் சேர்த்து வச்ச பணத்துல பார்த்துக்கிட்டா. எதோ நீ பண்ணின மாதிரி பேசுற?” என்று அவரது கணவர் தன் மனைவியைக் கடிந்துகொள்ள,

"விடுங்க சித்தப்பா."

"ஆமாங்க, இவ பணம்தான் யாரு இல்லனு சொன்னா, அதுக்காக அந்தப் பணத்த மட்டும் வச்சே இந்த அம்மா வாழ்ந்துட்டாங்களா? பொறந்ததுமே இவங்க அம்மா மகராசி போய்ச் சேர்ந்துட்டா. அப்போ இருந்து தாய்க்கு தாயா இருந்து இவளை வளர்த்தது யாரு? பெரிய ஸ்கூல்ல படிக்க வச்சீங்க, சரண்யாவை சின்ன ஸ்கூல்ல படிக்க வச்சீங்க, நான் எதாவது சொன்னேன்? இவளை டாக்டர் படிக்க வச்சீங்க, அப்பவும் நான் எதுவும் சொல்லல.

இவ மட்டும் லண்டன்ல ஒழுங்கா வேலை பார்த்திருந்தா, நான் ஏன் இப்படிப் பேச போறேன்? அங்க இருந்து பெங்களூர் போனா, அங்கையாவது ஒழுங்கா பார்த்தாளா? நல்ல வேலையெல்லாம் விட்டுட்டு இப்போ இந்த வேலைக்குப் போறா. இதையாவது...” என்று அவர் கூறி முடிப்பதற்குள் திவ்யாவின் கணவர் ஷங்கர்,

"ஏய் திவ்யா என்ன பேசுற?” என்று தன் மனைவியைக் கடிந்துகொள்ள,

"நான் என்ன இல்லாததையா சொன்னேன்?” என்றவர் முணுமுணுத்தவாறே அங்கிருந்து கிளம்ப,

"உன் சித்தி பேச தெரியாம எதையாவது பேசுவா, நீ எதுவும் மனசுல வச்சுக்காதடா.” என்று ஜியாவை சமாதானம் செய்ய,

"பரவாயில்ல சித்தப்பா."

"ஏய் சரண்யா என்ன பார்த்துட்டு இருக்க, அக்காக்கு சாப்பிட எதாவது கொண்டு வந்து குடு.” என்றதும்,

"சரி அப்பா.” என்றவள் கிச்சனுக்குள் செல்ல,

"சரிமா, சித்தப்பாக்கு வெளியில வேலை இருக்கு போயிட்டு வரேன்.” என்று ஜியாவிடம் விடை பெற்றுக்கொண்டு செல்ல,

ஷங்கர் சென்ற பிறகு தன் அறைக்குள் சென்று கதவிற்குத் தாழ்பாள் போட்டவள், தன் சித்தியின் வார்த்தைகளை எண்ணி அழுது அழுது ஒடுங்கிபோனாள். பாவம், பிறக்கும் போது தாயையும் பள்ளிப்பருவத்தில் தந்தையையும், விடலை பருவத்தில் தன் காதலையும் பறிகொடுத்தவளுக்குக் கண்ணீர் மட்டும் தானே ஆறுதல்.

"எங்கடி கிளம்புற?"

"ஆயிஷா வீட்டுக்கு சித்தி.” என்றவளைக் கை பிடித்து அறைக்குள் இழுத்து வந்து தாழிட்டவர்,

"ஏன்டி உனக்குப் புத்தியே வராதா?"

"சித்தி ப்ளீஸ், நான் ஆயிஷாக்காகத்தான் இங்க வந்திருக்கேன், உங்க மனசுல இருக்கிற மாதிரி வேற எதுக்காகவும் இல்லை. நான் ஆஷிக்கை காதலிச்சேன், இப்போ இல்லை நம்புங்க."

"எல்லாம் சரிடி, மறுபடியும் காதல் கீதல்னு எதையும் இழுத்து வைக்காத. நீ மட்டும் இந்த வீட்ல இல்லை, என் பொண்ணும் இருக்கா. நீ ஏதும் பண்ணினா அது உன்னோட மட்டும் போனா பரவால்லை, என் பொண்ணு வாழ்க்கையும் போயிரும். அவன்தான் வேணும்னா உன் தங்கச்சிக்கு நல்ல வசதியான மாப்பிள்ளையா பார்த்து கட்டி வச்சுட்டு நீ எக்கேடும் கெட்டு போ."

"ஏன் சித்தி இப்படிப் பேசுறீங்க?"

"எப்போ நீ என் பேச்சை கேட்காம பெங்களூர்ல நல்ல சம்பளத்தை விட்டுட்டு வந்தியோ, அப்போவே உன் மேல உள்ள நம்பிக்கை எனக்கு உடைஞ்சி போச்சு. நீ சுயநலவாதி. உனக்கு என்ன தோனுதோ அதை மட்டும்தான் செய்வ.” என்று வார்த்தைகளை நெருப்பாய் கொட்டி அவளைப் பார்த்து முறைத்தவாறே அங்கிருந்து செல்ல,

ஜியாவோ தன் கண்ணீரை அடக்கிக்கொண்டு எப்பொழுது வேண்டுமானலும் வெடிக்கும் நிலையில் அங்கிருந்து கிளம்பினாள்.

ஆஷிக் தொலைபேசியில், "இங்க பாருங்க, எனக்கு எதைப் பத்தியும் கவலை இல்லை, ஆனா சீக்கிரம் நான் சொன்னதை ஏற்பாடு பண்ணுங்க சரியா?” என்று யாரிடமோ கடிந்து பேசிக்கொண்டிருக்க,

"என்னது ஏற்பாடு பண்ணணும்? யார்கிட்ட பேசிட்டு இருக்க?” என்றவாறு ஆதர்ஷ் உள்ளே வர,

ஆஷிக், "அப்புறமா பேசுறேன்.” என்று கூறி ஃபோனை வைத்தவன்,

ஆதர்ஷிடம், "ஒன்னும் இல்லடா, சும்மா பேசிட்டு இருந்தேன். சரி என்னை விடு, ரெஸ்ட் எடுக்கப் போறேன்னு சொன்ன இங்க வந்திருக்க?"

"அது ஒன்னும் இல்லடா, கொஞ்சம் டென்க்ஷன் ஆகிடுச்சு அதான்."

"என்னடா?"

"டேய் நடாஷா இருக்காள்ல..."

"ம்ம்..."

"அவகிட்ட அவங்க அம்மாக்கு எப்படி இருக்குனு வாட்சப்ல மெசேஜ் பண்ணினேன்டா."

"சரி"

"நல்லா இருக்கு, ஹெல்ப் பண்ணினதுக்குத் தேங்க்ஸ், நான் சீக்கிரமா பணத்தைத் திருப்பிக் குடுத்திருவேன்னு மெசேஜ் பண்ணிருக்காடா. எதோ நான் பணத்தாசை பிடிச்சவன் மாதிரி..."

"டேய் இத ஏன் அப்படிப் பார்க்குற? அவ ஒரு ஸெல்ப் ரெஸ்பெக்ட் உள்ள, ஒரு இன்டீபெண்டண்ட் ஆன பொண்ணா பாரு. பொண்ணுங்க இப்படி இருக்கிறது நல்லது தானடா."

"டேய் மத்தவங்ககிட்ட ஓகே, என்கிட்ட ஏன்டா?"

"ஏன் உங்கிட்ட மட்டும்? நீ என்ன அவளோட லவ்வரா, இல்லை ஹஸ்பெண்டா? சொல்லுடா?"

"ச்சீ நான் போய்..."

"அப்புறம் என்ன, ஃப்ரீயா விடு."

"ம்ம்..."

"மச்சான்..."

"ம்ம்..."

"நீ ஒன்னும் அவளை லவ் பண்ணிடலையே?"

"இல்லை... இல்லையே... நோ, நான் இல்லைடா... ஏன்?"

"எதுக்கு இத்தனை இல்லை?"

"ஏன் கேட்ட?"

"கேட்டேன்."

"சரி, நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்.” என்றவன் அங்கிருந்து கிளம்ப, அவன் சென்ற பிறகு ஆஷிக், "மை டியர் நண்பனே, சிக்கிட்டியா? என்ஜாய்!” என்று புன்னகைத்தவன்,

"நடாஷாவும் நல்ல பொண்ணுதான், ஒரு வழியா நீயும் காதல் வலையில சிக்கிட்டியேடா." என்று தன் இதழை இசைத்தவன், தன் அலமாரியில் குளித்துவிட்டு மாற்றுவதற்காக மாற்று உடையைப் பார்த்துக் கொண்டிருக்க, அப்பொழுது ஆஷிக்கின் கண்களுக்கு அடர் நீல நிறத்தில் ஒரு சட்டை தெரிய, அதை சிறு ஏக்கத்தோடு தொட்டு பார்த்தவன் தன் பழைய நினைவுக்குள் புகுந்தான்.

***


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்

நிலவே 25 & 26
 
Last edited:
Top