Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நிலவே 3

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89

வெளியில் எதோ சத்தம் கேட்கின்றது என்று உள்ளே இருந்து ஆயிஷாவும் ஆதர்ஷும் வர, ஆயிஷா அந்தப் பெண்ணைப் பார்த்து,

"ஜியா!” என்றழைத்தாள்.

அந்த அழைப்பில் தன்னை ஆசுவாசப்படுத்தியவள் தானிருக்கும் நிலையை அறிந்து, அவனிடமிருந்து விலக முயற்சிக்க எங்க முடிந்தது? ஆஷிக் விட்டால் தானே அவளால் விலக முடியும். அவனது பிடியில் இருந்து விலக முடியாமல் ஜியா நெளிந்து கொண்டிருக்க,

ஆதர்ஷும் ஆயிஷாவும், ஆஷிக்கை எவ்வளவோ முறை அழைத்தும், எதையும் காதில் வாங்காமல் ஜியாவின் இடையை வீணையாக்கி, தன் விரல்களால் மீட்டியவாறே அவளது வேல்விழியில் தொலைந்த தன்னையே தேடிக்கொண்டிருந்தான்.

ஆதர்ஷ், ஆஷிக்கை அடிக்காத குறையாய் தட்ட, எங்கே அதெல்லாம் ஆஷிக்கிற்கு உரைத்தால் தானே, தன் பிடியைத் தளர்த்திட?

பின் ஒரு வழியாக ஆதர்ஷின் அழைப்பில் தன்னிலைக்கு வந்தவன், அப்பொழுதும் அவளது இடையைப் பற்றியவாறே நிற்க, இதற்கு மேல் முடியாதவளாய் அவனிடம் இருந்து வெடுக்கென விலகிய ஜியா, ஆயிஷாவின் அருகில் சென்று நிற்க

ஆயிஷா, ஜியாவை கட்டி தழுவிக் கொள்ள, ஜியாவின் விழிகளோ ஆஷிக்கை நோக்கியே வட்டம் இட்டது.

ஆஷிக்கும் அப்படித்தான் பித்துப் பிடித்தவன் போல் அவளையே தன் பார்வையால் ரசித்துக் கொண்டிருந்தான்.

சிறிது நொடி கூட அயராது அவள் மீது தன் பார்வையைச் செலுத்தினான். அவளது இமை தட்டி முழிக்கும் ஒவ்வொரு நொடியிலும் புதிதாய் பிறந்தான்.

என் தேகத்தை வெண்பனி போல உறைய வைத்த, நெற்றி பொட்டை குளிர் நிலவென்பதா? இல்லை என் உள்ளத்தை உலை எனக் கொதிக்க வைத்த சூரியன் என்பதா என்று அவன் மனம் குழம்பி தவிக்க,

'அது உன் தூக்கத்தைத் தூக்கி செல்ல வந்த மேகம்' என்று அவன் மனம் வேறொன்று சொல்லியது.

மெல்ல நகர்ந்த அவனது கண்கள் புதிதாய் மலர்ந்த ரோஜா இதழைப் போன்ற அவளது உதட்டை நோக்கி வட்டமிட, சிறு வண்டை போல அதில் தேன் பருக துடித்தது அவனது இதழ்கள்.

அவனது மயக்கும் பார்வையில் மெல்ல கிறங்கியவள், ஆயிஷாவின் கரங்களை நன்கு பற்றிக்கொண்டாள்.

ஆயிஷா, "டேய் அண்ணா, இவதான் ஜியா. ஜியா, இவன்தான் ஆஷிக் என் அண்ணன்.” என்று கூற,


ஆஷிக் தன் கரங்களை நீட்டி அறிமுகப்படுத்த, வேறு வழியின்றிச் சிறு நடுக்கத்துடன் தயங்கி தயங்கி ஜியாவும் தன் கரங்களை நீட்ட, வன்மையாய் பற்றிகொண்டவன் அதை மென்மையாய் தீண்ட, அந்தத் தீண்டலின் ஸ்பரிசம் அவளது உயிர் வரை சென்று அவளது வாய்மையைக் கட்டிப்போட்டு, அவளது பெண்மையை நிலைகுலைய செய்தது.

இதைக் கவனித்த ஆதர்ஷ், ஆஷிக்கின் முதுகைத் தட்ட, மெல்ல மெல்ல தன் பிடியைத் தளர்த்தினான்.

ஜியாவை ஆதர்ஷ்க்கும் அறிமுகப்படுத்திவிட்டு, அவளுடன் பேசிக்கொண்டே வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள் ஆயிஷா.

"அப்புறம் சொல்லுடி அங்கிள், ஆன்ட்டி எல்லாரும் எப்படி இருக்காங்க?"

"எல்லாரும் நல்லா இருக்காங்க."

"சரி ஜியா, அண்ணாகிட்ட எல்லாம் சொல்லிட்டேன், அவன் உனக்கு ஹெல்ப் பண்ணுவான்."

"ஆயுஷு..."

"என்னடி வந்ததுல இருந்து ஒரு மாதிரியாவே இருக்க, என்னாச்சு?"

"ஒன்னும் இல்ல, நான் வீட்டுக்கு போறேன்டி."

"என்ன வீட்டுக்கு போறியா?"

"ஏன்?"

"எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு."

"பயமா? என் அண்ணனை பாத்தா?"

"ம்ம்..."

"அட... அவன் ஒரு லூசுடி."

"ப்ளீஸ் நான் போறேன், ப்ராஜெக்ட் எல்லாம் நானே பார்த்துக்கிறேன்."

"ஏய் நீ கேட்டேன்னு தான் வெளியில போறேன்னு சொன்னவனை, எங்கேயும் போக விடாம தடுத்து நிறுத்தி வச்சுருக்கேன். இப்போ வேண்டாம்னா கோபப்படுவான். என்னை அடிப்பான்டி, அப்புறம் என்ன ஹெல்ப் கேட்டாலும் செய்ய மாட்டான் ப்ளீஸ்டி."

"ஆயிஷா ப்ளீஸ்டி, நான் வீட்டுக்கு போறேன்."

"என்ன ஆச்சு? என்ன பேசிட்டு இருக்கீங்க?” என்று ஆஷிக், ஆதர்ஷுடன் அங்கே வர,

"டேய் அண்ணா உன் மூஞ்சை பாரு, ஏன் என் ஃப்ரெண்ட்ஸை பார்த்தா மட்டும் இப்படி வெறப்பா மூஞ்சை வச்சுருக்க? கொஞ்சம் சிரிடா, உன்னைப் பார்த்து பயந்து போய் ஜியா வீட்டுக்கு போறேன்னு சொல்றா."

"என்னை பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது?” என்று ஆஷிக் கோபப்படுவதைப் போல் நடிக்க,

"டேய் கோபப்படாத, அவளுக்கு ஒழுங்கா சொல்லிக்குடு."

"மேல மாடிக்கு வர சொல்லு." என்றவன் புன்னகைத்தவாறே மேல செல்ல,

ஆதர்ஷ், "மச்சான் அவளைப் பார்க்கிறதுக்கு முன்னாடி என்னலாமோ சொன்ன, இப்போ இப்படி வலியிற? ஆனா அவ நல்லாதான் இருக்கா, ஷீ இஸ் ஓகே."

"வாட் ஷீ இஸ் ஓகே? ஷி இஸ் ஆஸம் மேன்!” என்று கூறியவன், “டேய் அவங்க வராங்க, அப்புறம் பேசுறேன்.” என்று கூறிவிட்டு, ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்தான். அருகில் ஆதர்ஷும் வந்து அமர்ந்து கொண்டான்.

ஆயிஷா, ஜியாவோடு வர ஜியா, ஆஷிக்கைத் தன் பெரிய கண்களை உருட்டியவாறே பார்க்க, அவளது விழியில் மீண்டும் மயங்கியவன் அதை வெளிக்காட்டாமல்,

"ஹலோ உட்காருங்க.” என்று சற்று அதட்டலாகக் கூற, ஆயிஷா முறைக்க ஜியா பதற்றத்தோடு வந்து அமர்ந்தாள்.

"சொல்லுங்க ஜியா, என்ன சந்தேகம்?"

"அது வந்து...” என்று அவள் கூறுவதற்குள்,

"ஏய் ஆயிஷா உன் ஃப்ரெண்ட் வந்திருக்கா, இப்படியா சாப்பிட எதுவும் குடுக்காம இருப்ப? போ, போய் ஏதும் சாப்பிட எடுத்துட்டு வா." என்று அப்பொழுதுதான் ஜியாவின் அருகில் அமர வந்த தன் தங்கையைப் பார்த்து கூற, அவளோ ஆஷிக்கைப் பார்த்து முறைத்தவாறே சென்றாள்.

ஆயிஷா சென்றதும் ஜியாவின் உடல் லேசாய் நடுங்க, அதை ரசித்தவன்,

தன் அருகில் இருந்த ஆதர்ஷைப் பார்த்து, "என்னடா அப்படிப் பார்க்குற? ஆயிஷா சின்னப் பொண்ணு, போ அவளுக்கு ஹெல்ப் பண்ணு.” என்று கூறி கண்ணடிக்க,

ஆஷிக்கின் செயலைக் கண்டு எல்லாம் புரிந்தவனாய், அவனை ஏற இறங்க பார்த்தவாறு ஆதர்ஷ் கீழே சென்றான்.

அவர்கள் சென்ற பிறகு ஜியாவின் அருகில் வந்து ஆஷிக் அமர, மெல்ல அவளுக்குள் உதற ஆரம்பித்தது. கைகள் துவங்கி அவளது உடம்பெல்லாம் நடுங்க, மேலும் அவன் நெருங்கிவர,

பயத்தில் அங்கிருந்து எழும்பி கதவருகில் சென்று நின்றவளை, இருபக்கமும் தன் கைகளைக் கதவிற்குக் கொடுத்து தன் கரத்திற்குள் சிறை வைத்தான். காற்று கூட நுழையாத இடைவெளியில் அவள் முன்னால் நின்றான்.

அனலென அவன் சிந்தும் மூச்சுக் காற்று அவள் மேல பட, அவளது மேனியில் அவனது மூச்சு காற்று தீண்டிய இடமெல்லாம் செவ்வண்ணமாய்ச் சிவக்க, அவன் இவ்வாறு நடந்து கொள்வான் என்று எதிர்பாராத ஜியா, திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியில் செய்வதறியாமல் பயத்தில் கண்களை இறுக்க மூடிக்கொண்டு கதவோடு சாய்ந்து நின்றாள்.

பிறை போன்ற அவளது நெற்றி, ஒரே பார்வையில் தன்னைக் குத்தி கிழித்த வேல்விழிகள். பிடித்திழுக்கத் தோன்றும் மூக்கு, தன் உணர்ச்சியைச் சுண்டி இழுக்கும் இதழ்கள் என்று தன் இமை மூடாமல், அவளை அங்குலம் அங்குலமாய் ரசித்தான்.

மெல்ல அவளது காதருகில், “ஜியா!” என்று அழைக்க, சட்டென்று தன் கண்களைத் திறந்தவள், மீண்டும் அவனை விழுங்குவது போன்று தன் பெரிய பெரிய கண்களால் உருட்டி உருட்டி பார்க்க,

"ஏய் அப்படி பார்க்காதடி... சத்தியமா முடியல. என்ன கண்ணுடி இது? ஹப்பா! என்னை அப்படியே கொல்லுது.” என்று கூற,

"நான் போறேன்.” என்று தவிப்பாய் தயங்கியவளை,

"ஏன்?” என்று கெஞ்சலாய், அவளது விழிகளைத் தன் விழிகளால் தழுவியவாறே கெஞ்சியவன்,

"ஒத்த பார்வையாலே என்னை ரணமாக்கிட்டு போறேன்னு சொல்ற? எத்தனையோ பொண்ணுங்க கூட நான் பழகிருக்கேன், ஆனா அவங்க எல்லாராலையும் முடியாத ஒரு விஷயத்தை நீ செஞ்சிட்ட. அதான், மொத்தமா செஞ்சிடியே ராட்சஷி! ஏன்டி இவ்வளவு அழகா இருக்க? எதைடி நான் ரசிக்கிறது? என்னைக் குத்தி கொல்லத் துடிக்கிற உன் கண்ணையா? இல்லை என் திமிர கடத்திட்டுப் போகத் துடிக்கிற இந்த உதட்டையா?” என்று அவளது இதழை அவன் வருடியவாறே கூற, உடல், உள்ளம் என்று ரெண்டும் சேர்ந்து சிலிர்த்தவாறு, விழிகள் மூடி இதழ்கள் மலர்ந்தவாறு நின்றவளைக் கண்ட ஆஷிக், தன் கட்டுப்பாட்டையெல்லாம் இழந்து, துடிக்கும் அவளது இதழ்களைத் தன் இதழ்களுக்குள் மூட துணிய, இருந்தும் கட்டுப்படுத்திக் கொண்டவன் நெருக்கத்தைத் தவிர்த்து சற்று தள்ளி நிற்க,

சில நிமிடங்கள் கழித்துத் தனக்கு எதுவும் நேராததை உணர்ந்த ஜியா ஆச்சரியமாக அவனைப் பார்க்க,

கண்களும் உதடுகளும் சேர்ந்து மாயப் புன்னகையைச் சிந்த, விழிகளில் காதல் ததும்ப, அந்தக் கள்ள புன்னகையாலே தன் பெண்மையைக் கொள்ளையிடுபவன் போல், தன் முன்னால் நின்று கொண்டிருந்தவனின் சலனம் இல்லாத காதலில், அவளும் சில நொடி சரணடைந்தாள்.

அவளது காதில் ஆஷிக், "சொல்லியே ஆகணும், உன் இடுப்பு சும்மா ஜெல்லி மாதிரி சாஃப்டா அப்படியே கடிக்கணும் போல இருந்துச்சு.” என்று கூற, முகமெல்லாம் வியர்த்து கொட்டி அவளது கைகள் நடுங்குவதைப் பார்த்தவன்,

"ஏய் பயப்பட வேணாம், நான் ஒன்னும் உன்னைக் கடிச்சு எல்லாம் தின்ற மாட்டேன். ஜியா நான் நிறையா பேச விரும்பல, என் மனசுல பட்டதைச் சொல்லணும்.” என்று மீண்டும் அவளைப் பார்க்க, இந்தமுறை அவளோ தன் கண்கள் தரையை வட்டமிட பூமி நோக்கிருந்தாள்.

சிறிது நொடி யோசித்தவன், அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவளது இரு கரங்களையும் பற்றிக்கொண்டு, சட்டென்று அவளது கன்னத்தில் தன் இதழ் பதித்து, அவளது கண்களைப் பார்த்து தான் தேக்கிவைத்த காதலை, “ஐ லவ் யு!” என்று முத்தத்தோடு மூன்றே வார்த்தையில் கூற, அவளோ அதிர்ந்து போய் வார்த்தை வராமல் ஊமையாய் அவனைப் பார்க்க,

அவன், “பதிலுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன்.” என்று தாபமாய் கூறி தன் கரங்களைத் தகர்த்த, அவ்வளவு தான் ஜியாவிற்கு ஒன்றும் ஓடவில்லை. விட்டால் போதும் என்று கீழ செல்ல இல்லை ஓட, ஆதர்ஷும் ஆயிஷாவும் ஒன்றும் விளங்காமல் மேலே வந்தனர்.

"டேய் அண்ணா என்னடா சொன்ன? அவ அவசர அவசரமா ஓடுறா."

"ம்ம்... அதை ஏன் என்கிட்ட கேக்குற? அவகிட்ட கேளு.” என்று கூற, ஆயிஷா கோபத்தில் தன் கையில் கொண்டு வந்த ஜூஸை அவன் மீது ஊற்ற, ஆஷிக் வழக்கம் போல இந்தமுறை கோபப்படாமல்,

"ஜூஸ்ல சுகர் கொஞ்சம் கம்மியா இருக்கு.” என்று கூறி புன்னகைக்க,

தன் அண்ணனிற்கு எதோ ஆயிற்று என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு குழப்பத்தோடு ஆயிஷா கீழே சென்றாள்.

ஆதர்ஷ், ஆஷிக்கின் வினோதமான செயலைக் கண்டு, "என்ன மச்சான் ஜூஸை தலையில கொட்டிருக்கா, உனக்குக் கோபம் வரலை?"

இல்லை என்பதைப் போல் தலையை அசைத்தவன், ஆதர்ஷை கட்டிப்பிடித்து உற்சாகத்தில் சுற்றினான்.

"மச்சான் என்னடா?"

"ஜியா!" என்று பெருமூச்சு விட்டவன், "அவ பொண்ணு இல்லடா, தேவதை! அவ கண்ணைப் பார்த்த அந்த செகண்டே நான் சிலிர்த்துப் போய்ட்டேன்டா. அவ பேரை சொன்னாலே என் ஹார்ட் ஃபாஸ்ட்டா துடிக்குதுடா. உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுது. எத்தனை பொண்ணுங்க கூடப் பழகிருப்பேன், யார்கிட்டயும் எனக்கு இப்படித் தோனுனது இல்லடா.

என் மனசு சொல்லுதுடா, இவதான் எனக்கானவள்னு. மச்சான் ஐயம் இன் லவ் வித் ஹெர்டா. சரியா சொல்லணும்னா அவளைப் பார்த்தவுடனே நான் காதலிக்கலை, அவளைப் பார்க்கிறதுக்கு முன்னாடியே, கண்ணு கட்டிருக்கும் போதே எனக்குள்ள அப்படியே கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருந்துச்சுடா.” என்று துள்ளி குதித்தான்.

"அவளை ஒரு முப்பது நிமிஷம் பார்த்திருப்பியா?"

"இல்லடா, பத்து நிமிஷம் ஒன்பது செகண்ட்தான் நான் அவகூட இருந்த நேரம்."

"மச்சான் நீயாடா பேசுற?"

"லவர் பாய் எப்போ மஜ்னுவா ஆனாரு?"

"போடா..."

"ஆனா அவ கையைச் சப்பாத்திக்கு மாவு பிசையிற மாதிரி பிசைஞ்சியே, அப்பவே எனக்கு உன் மேல சந்தேகம்டா.” என்றவனைப் பார்த்து சிரித்தவன்,

"ஆதர்ஷ், அவ என்ன பதில் சொல்ல போறானு நினைக்கும் போது டென்க்ஷனா இருக்குடா."

"என்ன பதிலா? அப்போ நீ ப்ரொபோஸ் பண்ணிட்டியா?"

"ம்ம்... பண்ணிட்டேன்டா..."

"டேய் பத்து நிமிஷம் பேசுனதுல உனக்கு லவ் வந்துட்டாடா?"

"மச்சான் பத்து நிமிஷம் ஒன்பது செகண்ட்."

"சரி பத்து நிமிஷம் ஒன்பது செகண்ட் பேசுனதை வச்சு ப்ரொபோஸ் பண்ணின ஒரே ஆளு இந்த உலகத்துலயே நீதான்டா. யு ஆர் இம்பாஸிபிள்!” என்று ஆதர்ஷ் கூற,

"என்னவா வேணும்னாலும் இருந்துட்டு போறேன், அவ ஓகே சொல்லுவாளா?” என்றவாறு, தனது நண்பன் மடி மீது தலை வைத்து படுத்தவனுக்கு, அவளது இடையைப் பிடித்திருந்ததும் அவள் தன் நெஞ்சைப் பற்றிருந்ததும் நினைவு வர, அவளது ஸ்பரிசத்தை ரசித்தவாறு மீண்டும் கிறங்கினான் காதலாய்.

அடுத்தநாள் காலையில் என்றும் இல்லாமல் சீக்கிரமாகக் கிளம்பி கல்லூரிக்கு சென்றவன் ஜியாவிற்காகக் காத்துக் கொண்டிருக்க, அவள் வருவதைக் கண்டவன் அவளது அருகில் சென்று,

"ஹாய் நேத்து நல்லா யோசிச்சியா? உன்னைப் பார்த்தாலே தெரியுது, நேத்து முழுக்கத் தூங்காம என்னைப் பத்தியே நினைச்சுட்டு இருந்த போல? நானும்தான்... எனக்கு உன்னைப் பிடிச்சுருக்கு, உனக்குப் பிடிச்சுருக்கா?” என்றவனைப் பார்த்து,

"அண்ணா...” என்று ஜியா கூற,

"என்ன அண்ணனா?"

"ஆமா அண்ணா...” என்று தன் கையில் இருந்த போட்டோவை காட்டி,

"இந்த போட்டோவை பார்த்தா உங்களுக்கு எதுவும் ஞாபகம் இருக்கா? இது நீங்க ஏழாவது படிக்கும்போது ரக்ஷாபந்தன் அன்னைக்கு நான் உங்களுக்கு ராக்கி கட்டிவிடும் பொழுது எடுத்த போட்டோ இது. இப்போ ஞாபகம் வந்ததா அண்ணா?” என்று ஆஷிக்கின் வட்டமான முகத்தைக் கண்டு, தனக்கு மட்டும் தெரிந்தவாறு சிரித்தாள். அவளது சிரிப்பிலே அவள் அவனைச் சீண்டுவது தெரிந்தது.

"அண்ணா நாளைக்கு ரக்ஷாபந்தன், நான் நாளைக்கு வீட்டுக்கு வரேன். ஆயிஷாக்கு வாங்கும் பொழுது எனக்கும் சேர்த்துக் கிஃப்ட் வாங்கிருங்க.” என்றவள்,

அவனது கையில் அந்தப் புகைப்படத்தைக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து புன்னகைத்தவாறே சென்றாள்.

இரவு நேரம் ஆதர்ஷிடம் அந்த போட்டோவை காட்டி, "பெரிய தப்புப் பண்ணிட்டேன்டா... சத்தியமா ஜியாவ என்னால தங்கச்சியா ஏத்துக்க முடியாது. ஐயோ! என்ன பண்ணனே தெரியல. அவ வேற நாளைக்கு வரேன்னு சொன்னா, இன்னைக்கே வார்த்தைக்கு வார்த்தை அண்ணன்னு கூப்பிட்டா. நாளைக்கு ஃபாதர்னு சொன்னாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல. என்னடா எதாவது பேசு, அமைதியா இருக்க."

"நீ அவ்ளோ சீக்கிரமா யாரையும் தங்கச்சியா எல்லாம் ஏத்துக்க மாட்டியே?"

"அப்போ இவ சின்னப் பொண்ணுடா."

"நீ இதெல்லாம் பார்க்குற ஆளு, எல்கேஜி படிக்கும் போது டீச்சரை பார்த்து நீங்க அழகா இருக்கீங்கனு ஜொள்ளு விட்டவன் தானடா நீ?"

"சரி, அப்போ குட்டியா ஒருமாதிரியா இருந்தா. எல்லாத்துக்கும் மேல நான் அப்போ ரீமாவை டேட் பண்ணிட்டு இருந்தேன்ல. அதனால இவளை நான் பெருசா கண்டுக்கலை. இப்படி ஆறு வருஷத்துல பேபி டால் மாதிரி என் முன்னால வந்து நின்னு, என்னை இப்படி புலம்ப விடுவானு நான் என்ன கனவா கண்டேன்? தலை சுத்துதுடா...” என்றவன், அன்றிரவு தானும் தூங்காமல் ஆதர்ஷையும் தூங்க விடாமல் புலம்பிக்கொண்டே இருந்தான்.

மறுநாள் காலை விடிய, எல்லாம் நல்லா விதமாகச் சென்று கொண்டிருந்தது. ஆயிஷா, ஆதர்ஷ், ஆஷிக் இருவருக்கும் ராக்கி கட்ட, ஆஷிக் கவலையாகவே இருந்தான்.

அப்பொழுது ஜியா புன்னகைத்தவாறே உள்ளே வர, பகீரென்று எழுந்தவன் வேகமாக அங்கிருந்து மாடிக்கு சென்றுவிட, ஜியாவும் ஆயிஷாவும் சற்று நேரம் பேசிக்கொண்டிருக்க,

ஜியா, "ஆயுஷு, உங்க அண்ணாவை எங்க?"

"தெரில, இங்கதான் இருந்தான்."

"இல்லை, அவர்கிட்ட ப்ராஜெக்ட் பத்தி ஒன்னு கேட்கணும்."

"ஓ... அவன் மாடியில இருப்பான்னு நினைக்குறேன், நீ போய் பாரு."

"சரிடி." என்றவள் மேலே சென்று, “ஆஷிக்!” என்று அழைக்க, அவள் புறம் திரும்பியவன்,

"இங்க என்ன பண்ற? முதல்ல கிளம்பு."

"அன்னைக்குக் கேட்டிங்களே, அதைச் சொல்றதுக்காகத் தான் வந்திருக்கேன் அண்ணா...” என்று இழுக்க,

"ஏய் யாருக்கு யாரு அண்ணன்? நான் ஒன்னும் உனக்கு அண்ணன் இல்லை, கிளம்பு இங்க இருந்து."

"நான் சொல்லுறேன், அப்புறம் நீங்க வருத்தப்படுவீங்க." என்று கூறி அவன் அருகில் வர,

தன் கண்களை இறுக மூடியவன் கவலையோடு நிற்க, ஜியாவோ புன்னகைத்தவாறு அவனது மிக அருகில் வந்து சட்டென்று அவனது கன்னத்தில் இதழ் பதித்து, அந்த ஒற்றை முத்தத்தில் தன் மொத்த காதலையும் அவனிடம் கொட்டி தீர்த்தாள்.

***

பழைய நினைவிலே ஆஷிக் தன் கன்னத்தைத் தடவியவாறு ஜியாவையேப் பார்த்துக் கொண்டிருக்க,

சந்தீப், "ஆஷிக் என்னாச்சு? ஜியா ரொம்ப நேரமா கையை நீட்டிட்டு இருக்காங்க.” என்று கூற,

தன் கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தவன் ஜியாவைப் பார்க்க,

ஜியா, "ஹலோ ஆஷிக்!” என்று பேருக்கு தன் கரங்களை நீட்டினாள். ஆனால் ஆஷிக்கோ அவளது கரங்களை நன்கு பற்றிக் கொண்டவாறே, அவளைத் தன் தன் பக்கம் இழுத்து அவளது காதில் மெல்ல,

"இதை ஆரம்பிச்சது நான், அதனால இதை முடிக்கப் போறதும் நானாதான் இருப்பேன், ஸோ பீ பிரிப்பர் ஜியா!” என்று கூறி விஷமமாய் புன்னகைக்க, அவளோ கோபமாக அவனைப் பார்த்தாள்.

***


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்


நிலவே 4 & 5
 
Last edited:
Top