Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நிலவே 32 & 33

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
நிலவே 32

அவசர சிகிச்சை பிரிவில் இருந்து டாக்டர் வந்ததும் அனைவரும் என்னவோ ஏதோ என்று அவரின் அருகில் சென்றனர். பதற்றத்துடன் டாக்டரின் அருகில் வந்த ஆஷிக் அவரிடம் எதுவும் கேட்கும் முன்பே அவர்,

"பேஷண்ட் இப்போ நல்லா இருக்காங்க, உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனா இப்போதைக்கு அவங்க மயக்கத்துலதான் இருப்பாங்க. அவங்களை டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துட்டு வாங்க. மயக்கம் தெளிய ரெண்டு, மூணு மணிநேரம் ஆகும். ரொம்ப நேரம் உள்ள இருக்காதீங்க. நைட் பேஷண்ட் கூட யாராவது ஒருத்தங்க ஸ்டே பண்ணுங்க.” என்றவர் ஆஷிக்கைத் தனியாக அழைத்து,

"அவங்க ஏற்கனவே மெண்டலி டிஸ்டர்பா இருக்காங்க, அதனால அவங்ககிட்ட பேசும்போது பார்த்து பேசுங்க."

"ஓகே டாக்டர், நான் டிஸ்டர்ப் ஆகாம பார்த்துக்கிறேன். வேற ஹெல்த்துக்கு எதுவும் பிரச்சனை இல்லையே?” என்று தவிப்புடன் கேட்க,

"இல்லை மிஸ்டர் ஆஷிக், ஷீ இஸ் ஃபைன், டேக் கேர்.” என்றார்.

'ஷீ இஸ் ஃபைன்' என்று மருத்துவர் கூறிய பிறகுதான் ஆஷிக், போன உயிர் மீண்டும் தன்னிடம் வந்தது போல நிம்மதி அடைந்தான்.

வேகமாக உள்ளே சென்று மயக்க நிலையில் இருக்கும் ஜியாவைத் தன் கண்களில் நீர் வழிய பார்த்து மகிழ்ந்தான். அவனது கால்கள் அவளது அருகில் மெல்ல அவனை அழைத்துச் செல்ல, நேராக இருந்த அவளது இருகால்களையும் தன் நெஞ்சோடு பற்றிக்கொண்டு முத்தமிட்டான். அவனது கரங்கள் மெல்ல அவளது நெற்றியை மெலிதாய் வருடியது. அவனது கண்களோ அவளது கையின் நரம்பின் வழியே ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்து மெல்ல கசிந்தது.

அவனது இதழின் தீண்டலிலும் சரி, அவனது விரல்களின் வருடலிலும் சரி, அவனது பார்வையின் தீண்டலிலும் சரி காமம் கலக்காத அதீத காதல் வெளிப்பட்டது. ஆஷிக், ஜியா மீது கொண்டுள்ள கலப்படமற்ற காதல் வெளிப்பட்டது. அவனது முத்தத்தின் அழுத்தம் அவனது அழுத்தமான காதலை வெளிப்படுத்தியது. அவனது ஐவிரலின் வருடல் ஜியா தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வெளிப்படுத்தியது. ஆஷிக்கின் பார்வையில் தீண்டலைத் தாண்டி ஒருவித தவிப்பு. கணப்பொழுதும் இனி உன்னை நான் நீங்கமாட்டேன் என்று அவன் உள்ளம் ஏங்கியதை வெளிப்படுத்தியது.

இதை அனைத்தையும் வெளியில் இருந்து பார்த்த திவ்யாவின் கண்கள் தன்னையும் மீறிக் கசிந்தது. தனது சுயநலத்துக்காக ஜியாவின் வாழ்க்கையைப் பலி கொடுக்கப் பார்த்தோமே என்று அவரது உள்ளம் குமுறியது.

அவரது வேதனையை உணர்ந்துகொண்ட ஹாஜரா, "நீங்க அழாதீங்க, அதான் ஜியா ஆபத்துல இருந்து மீண்டு வந்துட்டாள்ல. வாங்க, உள்ள போய் ஜியாவை பார்ப்போம்.” என்றவர் சரண்யா, ஆயிஷா, ஆதர்ஷுடன் உள்ளே சென்றார்.

ஆதர்ஷ், ஆஷிக்கின் கைகளை ஆறுதலாய் பற்றிக் கொண்டு, "ஃபீல் பண்ணாத, எல்லாம் சரியாகிரும்.” என்று ஒரு நண்பனாய் ஆறுதல் கூறினான்.

சில நொடிகள் கழித்து அங்கு வந்த நர்ஸ், "ரொம்பக் கூட்டம் கூடாதீங்க, பார்துடீங்கனா கிளம்புங்க. யாராவது ஒருத்தர் பேஷண்ட் கூட இருந்தா போதும். யார் இருக்கப் போறீங்க?” என்று சிறு கண்டிப்புடன் கேட்க,

"நான்தான் இருக்கப் போறேன்.” என்று தன் கண்களைத் துடைத்தவாறே திவ்யா கூற, சட்டென்று அவரைக் குறுக்கிட்ட ஆஷிக்,

"சித்தி, அதுவந்து ஆன்ட்டி... நீங்க எதுக்கு சிரமப்பட்டுக்கிட்டு... ஜியா கூட நான் ஸ்டே பண்றேன். சரண்யா தனியா இருப்பாள்ல?” என்றவன், ஒருவித பதற்றத்துடன் திவ்யா என்ன கூறுவார் என்று அவரையேப் பார்க்க, திவ்யா வழக்கத்துக்கு மாறாக ஆஷிக் மீது எந்தவித கோபமும் கொள்ளாமல்,

"இல்லை தம்பி, நான் பார்த்துக்கிறேன். சரண்யா பத்தி பிரச்சனை இல்லை.” என்று தயக்கத்தை மறைத்தவாறு கூற,

"நான் பார்த்துகுறேன்னே...” என்று ஆஷிக் மீண்டும் கூற,

கண்களில் தொனித்த தயக்கத்துடன் அவர், “சரியா இருக்காதுபா.” என்றதும்,

"இல்லை ஆன்ட்டி..." என்று ஆஷிக் மீண்டும் ஆரம்பிக்க, அவனை இடைமறித்த ஹாஜரா திவ்யாவின் சங்கடத்தைப் புரிந்து கொண்டவராய், “அதான் அவங்க சொல்றாங்கள்ள ஆஷிக், காலையில ஜியாவை பார்க்க வரலாம்.” என்று மகனின் நிலையையும் புரிந்து கொண்டவராய் தன்மையோடு அவனுக்கு நிதர்சனத்தைப் புரிய வைக்க முற்பட, ஆஷிக் வந்த கோபத்தை உள்ளடக்கியவாறு இருவரையும் பார்த்தான்.

"நீங்க என்னை உங்க பையன் ஆஷிக்கா பார்க்காதீங்க, ஜியாவோட ஹஸ்பண்டா பாருங்க தப்பா தெரியாது. அவளைப் பாருங்க, இந்த நிலைமையில எப்படி என்னால அவளை விட்டுட்டு வர முடியும்? ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணும் பொழுது பேஷண்ட் உங்களுக்கு யாருனு கேட்டாங்க, வைஃப்னு சொன்னேன். என் மனசை புரிஞ்சிக்கோங்க.” என்றவன் தளர்ந்த குரலில், “ப்ளீஸ்...” என்று பரிதாபமாய் கேட்க,

"சரி தம்பி, ஆனா எதுவும் தேவைனா எனக்கு...” என்பதற்குள் ஆஷிக்,

"நானே பார்த்துகிறேன்.” என்று அவசரமாய் கூறியவன் பின்பு தன் பதற்றத்தைக் குறைத்துக்கொண்டு, "நான் பார்த்துகிறேன், அதை மீறி எதுவும் தேவைனா நான் உங்களுக்கு ஃபோன் பண்றேன்.” என்று கூறியவனிடம்,

"பத்திரமா பார்த்துக்கோபா.” என்றவர் ஜியாவை கலக்கத்துடன் பார்க்க, திவ்யாவின் கைகளைப் பற்றிக் கொண்ட ஹாஜரா,

"நீங்க கவலைப்படாதீங்க ஆஷிக் பார்த்துக்குவான். ராத்திரி ஆகிடுச்சு, நானே உங்களை வீட்ல டிராப் பண்ணிடுறேன்.” என்றவர் ஆஷிக்கிடம், "ஜியாவை பார்த்துக்கோ." என்றவாறு அவனது தலையைப் பாசமாய் தடவிக் கொடுத்துவிட்டு மூவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து செல்ல, ஆதர்ஷ் அவர்களுக்குத் துணையாக அவர்களோடு சென்றான்.

அனைவரும் சென்ற பிறகு ஜியாவையே வைத்த கண்கள் வாங்காமல் பார்த்துக் கொண்டே, அவளோடு தான் பயணித்த அந்த அழகான தருணத்தை எண்ணி எறும்பாய் நகர்ந்த இந்த நொடிகளைச் சுகமாய் கடந்துகொண்டிருந்தான்.

பொழுது புலர சூரிய கதிர்களின் ஒளி பட மெல்ல மெல்ல மயக்கத்தில் இருந்து தன் கண்களைத் திறந்த ஜியா, மெல்ல தன் கைகளை அசைக்க, கையின் மேல் நரம்பில் போட்ட ஊசியின் வலியால், “ஆ...” என்று கத்த, அவளது சத்தத்தால் தன் தூக்கத்தில் இருந்து விழித்தவன், ஜியா தன் படுக்கையில் இருந்து எழும்ப முயற்சி செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, சட்டென்று தன் நாற்காலியில் இருந்து எழுந்தவன் ஜியாவின் அருகில் வந்து,

"ஜியா என்ன பண்ற? நீ மெதுவா படு, உனக்கு என்ன வேணும்னு சொல்லு நான் செய்றேன்." என்றவனிடம், “இல்லை, நான் பார்த்துக்கிறேன்.” என்றவள் அங்கிருந்து எழும்ப முயற்சி செய்ய,

"இப்போதான் முழுசா என் உயிர் என்கிட்ட வந்த மாதிரி இருக்கு.” என்றவனை, தன் கண் கொட்டாமல் பார்த்தவளைக் கண்டவனின் கண்கள் தானாய் கலங்கியது. அவளது உள்ளமோ மறைவாய் கலங்கியது.

கண்கள் தொட்டு அவனது கன்னத்தின் வழியே வடிந்த கண்ணீரைத் தன் உள்ளங்கையில் அவள் ஏந்த, இருவரது விழியும் ஒருவரோடு ஒருவரில் மூழ்க அங்கே மௌனமே வார்த்தையாகி போனது.

அவர்களது மோன நிலையைக் கலைக்கும் விதமாய் வேகமாகக் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்த அவளது சித்தப்பா ஷங்கர், ஜியாவிடம் சென்று தன் கண்கள் கலங்க,

"ஏன்டா இப்படிப் பண்ணின? உன் சித்தி சொன்னதும் எனக்குக் கையும் ஓடல, காலும் ஓடல. நான் இல்லாத நேரம் பார்த்து உனக்கு இப்படி ஒரு காரியம் பண்ணுவானு நான் நினைக்கவே இல்லடா. அவளுக்காக நான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்."

"சித்தப்பா ப்ளீஸ், அப்படியெல்லாம் சொல்லாதீங்க. அவங்க மேல எந்தத் தப்பும் இல்லை, சித்தி மேல கோபப்படாதீங்க."

"இல்லடா, அவ அப்படிப் பண்ணிருக்கக் கூடாது. சரி, நீயாவது சித்தப்பாக்கு ஒரு ஃபோன் பண்ணிருக்கலாம்ல? ஏன்டா இப்படி ஒரு காரியம் பண்ணின? இதைப் பண்றதுக்கு முன்னாடி ஒருமுறை கூடவா என்னைப் பத்தி நீ யோசிக்கல? என் அண்ணன் உன்னை என் கையில புடிச்சு குடுத்த அந்த நாள்ல இருந்து, இந்த நாள் வரை உன்னை என் பெத்த பொண்ணா தானே பார்த்துட்டு இருக்கிறேன். அப்புறம் ஏன்டா இப்படிப் பண்ணின? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிருக்கலாமே?” என்று கதறி அழுத்தவரை பார்த்து ஜியாவும் சேர்ந்து அழுதாள்.

ஆஷிக், ஷங்கரின் தோளைப் பற்றி, "அங்கிள் ப்ளீஸ், எமோஷனல் ஆகாதீங்க, அதான் ஜியா நமக்கு உயிரோட கிடைச்சுட்டாளே அதுவே பெரிய விஷயம். நடந்த எல்லாத்தையும் கெட்ட கனவா நினைச்சு மறந்திருங்க, ஜியாகிட்ட இப்போதைக்கு இதைப் பத்தி பேச வேண்டாம். அவள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும்."

என்ற ஆஷிக்கின் வார்த்தையிலும் அவனது கண்களிலும் ஜியா மீது எவ்வளவு அக்கறை வைத்துள்ளான் என்பது அவருக்குப் புரிய, மெல்ல ஜியாவின் தலையைக் கோதிவிட்டவாறே அவளிடம்,

"நீ அழாதடா, எதை நினைச்சும் மனசை போட்டு குழப்பிக்காத, எல்லாம் சரியாகும்.” என்றவர்,

ஆஷிக்கின் கரம்பிடித்து, "ரொம்ப நன்றி, என் பொண்ணோட உயிரை காப்பாத்தினத்துக்கு. சரியான நேரத்துக்கு அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்திருக்கீங்க, இதுக்கு என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு எனக்கே தெரியலை.” என்று கண்ணீர் ததும்பக் கூற, அவரது கரத்தை நன்கு பற்றியவன் உதட்டில் சிறு புன்னகையுடன்,

"நன்றி சொல்லி என்னை மூணாவது மனுஷனா ஆக்காதீங்க. இது என்னோட கடமை. ஜியா இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால கற்பனை கூடப் பண்ணி பார்க்க முடியலை.” என்றவனின் கண்களும் கலங்கியது.

அவனுக்குப் பதிலாய் தன் தலையை மட்டும் லேசாய் அசைத்து அவனது தோளைத் தட்டியவர், "ராத்திரி முழுக்க நீங்கதான் இருந்திருக்கீங்க, அதான் நான் வந்துட்டேன்ல நான் பார்த்துகிறேன். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க, நீங்க ரொம்பச் சோர்வா இருக்கிறீங்க.” என்று அவர் கூற,

"அதெல்லாம் எனக்கு..." என்று துவங்குவதற்குள் உள்ளே வந்த ஆதர்ஷ்,

ஜியாவிடம் நலம் விசாரதித்துவிட்டு ஆஷிக்கிடம், "வாடா, அதான் அங்கிள் வந்துட்டாங்கல்ல, நாம கிளம்பலாம்.” என்றவன், அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு ஆஷிக்கின் பதிலை கூடக் கேட்காமல், அவனை அங்கிருந்து அழைத்துக்கொண்டு வெளியே வந்தான். வெளியே வந்ததும் ஆஷிக், "டேய் ஏன்டா என்னைக் கூட்டிட்டு வர?"

"ஏன்டான்னா என்ன அர்த்தம்? அவங்க வீட்ல எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் உனக்கு என்னடா அங்க வேலை?"

"ஜியா ஹாஸ்பிடல்ல இருக்கும் போது நான் அங்க இருக்க வேண்டாமா?"

"என்னன்னு சொல்லி அங்க இருப்ப? என்ன உரிமையில இருப்ப? அவருக்கு என்ன பதில் சொல்லுவ? நேத்து நைட் சொன்னீயே, ஐஞ்சி வருஷம் லவ் பண்ணிருக்கேன். ஜியாவை நான் என் மனைவியாதான் பார்க்கிறேன்னு, அதைச் சொல்ல போறியா? சொல்லுடா..."

"ஆமாடா, அதுதான் உண்மை. அவ என்னை விரும்புறா, எனக்காகச் சூசைட் வர போயிருக்கா. இன்னும் என்னடா உரிமை வேண்டிருக்கு. ஏற்கனவே அவங்க சித்திக்கு தெரியும், இப்போ அவ சித்தப்பாவுக்குப் புரிஞ்சிருக்கும். எல்லாரும் பெரியவங்க, இது கூடவா புரிஞ்சிக்காம இருப்பாங்க. நான் ஜியா கூட இருக்கேன், நீ கிளம்பு.” என்று கிளம்பியவனைத் தடுத்த ஆதர்ஷ்,

"ஆஷிக், புரியாம பேசாத. என்னதான் அவங்களுக்கு உன்னோட லவ் மேட்டர் தெரிஞ்சாலும், உன் வீட்ல இருந்து பெரியவங்க போய் பேசுற வரைக்கும் அவங்க நீ ஜியாகிட்ட க்ளோஸ் ஆகுறத அனுமதிக்க மாட்டாங்க. முதல்ல உன் வீட்ல பேசு, உன் அம்மா, அப்பாவை அவங்க வீட்ல போய் பேச சொல்லி ஒரு முடிவு எடுக்கச் சொல்லு. அதுதான் நல்லதுனு எனக்கு தோனுது. ஒரு உறுதி பண்ற வரைக்கும் நீ கொஞ்சம் அடங்கி இரு."

"அப்போ இன்னைக்கே பண்ணிறலாம்.” என்று எந்தவித சலனமும் இல்லாமல் கூறிய ஆஷிக்கை அடிப்பதா, முறைப்பதா? என்று கடுப்பானவன் கோபத்தில் சீறியவாறே,

"நீ என்ன மடபயலா? சொல்லிகிட்டே இருக்கேன், கொஞ்சம் கூடப் புரிஞ்சிக்காம ஜியா ஜியானு கடுப்ப கிளப்பிட்டு இருக்க. எல்லா விஷயத்துலையும் ஏன்டா அவசரப்படுற? ஜியா முதல்ல வீட்டுக்கு வரட்டும், அப்புறம் மத்த விஷயங்களைப் பத்தி பேசிக்கலாம். ஆனா இதெல்லாத்துக்கும் முன்னாடி நீ ஜியாகிட்ட பழைய விஷயங்கள் எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வா. அவ மனசுல உள்ள எல்லாச் சந்தேகத்தையும் க்ளீயர் பண்ணிரு. ஜியா உன்னை விரும்புறது கன்ஃபார்ம் ஆகிடுச்சு, ஆனா ஏன் அவ உன்னை விட்டு போனா? அது இன்னும் கேள்வியா தானே இருக்கு. எல்லாத்தையும் சால்வ் பண்ணு, இனிமே உங்களுக்குள்ள பிரிவே வர கூடாது அதுக்குத்தான் சொல்றேன்." என்று ஆதர்ஷ் அனைத்தையும் தெளிவாக எடுத்து கூற,

அதற்கு ஆஷிக் பதில் ஏதும் கூறாமல் இருக்க, "என்ன பதிலே வரல?” என்ற ஆதர்ஷிற்கு, அவன் கூறியதிற்கு ஒப்புதல் கூறுபவன் போலத் தன் தலையை அசைத்தவன், "நீ சொல்ற மாதிரியே பண்றேன்டா.” என்று கூறிவிட்டு ஆதர்ஷுடன் தன் இல்லம் திரும்பினான் ஆஷிக்.

நாட்கள் உருண்டோட ஒருநாள் ஹாஜரா மெல்ல தயங்கி தயங்கி தன் லேப்டாப்பில் மூழ்கிருந்த, தன் கணவன் அருந்துவதற்குத் தேநீர் கொடுத்தவாறே, "என்னங்க வேலையா இருக்கீங்களா?” என்று ஆரம்பிக்க,

"இல்ல தூங்கிட்டு இருக்கேன், பார்த்தா எப்படி இருக்கு? வேலையாதான் இருக்கேன், பின்ன நான் என்ன உன்னையும் உன் புள்ளையும் மாதிரி வெட்டி வேலை பார்த்துட்டு, அதை சாதனையா சொல்றவன்னு நினைச்சியா? நான் ஒரு மணிநேரத்துல லட்சத்தை சம்பாதிக்கிறவன். அதெல்லாம் உனக்கெங்க தெரிய போகுது?” என்று அவர் ஒருவரி கேள்விக்கு ஐந்து வரியில் விடையை நெருப்பாய் அள்ளி தெளிக்க,

'இதுக்கே இப்படிப் பேசுறாரு, ஆஷிக் விஷயத்தை எப்படிச் சொல்றது?' என்று தன் மனதிற்குள் புலம்பிய ஹாஜரா, இனிமேல் வேலைக்காகாது என்றவராய் அங்கிருந்து செல்ல போக,

"ஏய் நில்லு, உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று தடுத்த அஸாத் தன் லேப்டாப்பில் மூழ்கியவாறே,

"அந்தப் பொண்ணு யாருடி” என்று மிரட்டும் தோரணையில் கேட்க,

திடுக்கிட்ட ஹாஜரா தயங்கியவாறே, "யாரை கேட்குறீங்க?” என்று கேட்க, லேப்டாப்பை சட்டென்று மூடியவர் தன் நாற்காலியில் இருந்து எழும்பி,

"என்ன யாரை கேட்குறீங்களாவா? ஓங்கி விட்டேன், அவ்வளவுதான் பார்த்துக்கோ! உனக்கு நான் யாரை கேட்குறேன்னு தெரியாது? எதுவும் கேட்காம இருக்கேன்னு எனக்கு எதுவும் தெரியாதுனு நினைக்காத."

"எனக்கு நீங்க சொல்றது புரியலை."

"ஏய், உன் பையன் எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்குனானே, அவளைப் பத்திதான் சொல்றேன்."

"ஜியா பத்தி சொல்றீங்களா?"

"என்ன ரொம்பச் சந்தோஷமா சொல்ற மாதிரி இருக்கு?"

"அப்படி இல்லங்க..."

"என்ன மாதிரியான பொண்ணு கூடலாம் உன் பையனை பழக விட்ருக்கடி?"

"ஜியா நல்ல பொண்ணுங்க."

"சர்டிபிகேட் குடுக்கிற, அப்போ உனக்கு ஏற்கனவே அவன் விஷயம் தெரிஞ்சிருக்கு?"

"இல்லங்க..."

"இங்க பாரு, உன் பையன்கிட்ட அவளை விட்டு தள்ளியே இருக்கச் சொல்லு. அவங்க ஸ்டேட்டஸ் எங்க? நம்ம ஸ்டேட்டஸ் எங்க?” என்று கடுமையாகக் கேட்க,

"ஆஷிக் அவளை ரொம்ப விரும்புறான்ங்க.” என்று மெல்லமாய் முணுமுணுத்தார்.

"உன் பையன் நான் செத்து போணும்னு ரொம்பவே விரும்புறான், என்ன செத்து போட்டா?" என்று இறுகிய குரலில் அழுத்தத்தோடு கேட்க,

"என்னங்க இப்படியெல்லாம் சொல்றீங்க?"

"இங்க பாரு, உன்கிட்ட பேச எனக்கு நேரம் இல்லை. ஆஷிக்கோட கல்யாணம் இந்தியாலையே பெரிய பணக்கார வீட்டு பொண்ணு கூடத்தான் நடக்கும். அதனால எவ்வளவு காதலிக்கணுமோ அதெல்லாம் ஆயிஷாவோட கல்யாணத்துக்கு முன்னாடியே காதலிச்சுக்கச் சொல்லு. ஆயிஷா கல்யாணம் முடிஞ்சதும் அவனுக்குத்தான், பொண்ணு கூடப் பார்த்துட்டேன்.” என்று அஸாத் கூறிய மறுநொடி எதிர்முனையில் இருந்து,

"முடியாது!” என்ற வார்த்தை துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டாவைப் போல அழுத்தமாய் வர, வார்த்தை வந்த திசையை நோக்கி எட்டிப்பார்த்தவர், அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த ஆஷிக்கைப் பார்த்து முறைத்தார்.

அவன் தன் பேண்டின் இரு பாக்கெட்டிற்குள் கையை விட்டவாறே உள்ளே நடந்து வந்து, அவர் முன்னால் இருந்த படுக்கையின் மேல் அமர்ந்து கால் மீது கால் போட்டவாறு,

"முடியாதுனு சொன்னேன்.” என்ன பண்ணுவீங்க என்பது போல தன் புருவம் உயர்த்திப் பார்க்க,

அவனை வெறித்துப் பார்த்தவாறு, “இதுக்கு என்ன அர்த்தம்?" என்று அஸாத் கேட்க,

"முடியாதுனு அர்த்தம்.” என்று ஏளனமாய் புன்னகைத்தான்.

"நமக்கு நிகரான ஸ்டேட்டஸ்ல உள்ள பொண்ணு, நீ பாரு உனக்குக் கண்டிப்பா புடிக்கும்."

"உங்களையே எனக்குப் புடிக்கல, ஏன் உங்க பேரை என் பேருக்கு பின்னாடி சேர்த்துகிறதே எனக்கு எரிச்சலா இருக்கு. இதுல நீங்க பார்க்கிற பொண்ண எனக்கு எப்படி பிடிக்கும்னு நம்புறீங்க?" என்று ஏளனமாய் சிரிக்க,

"ஆஷிக்!" என்று கர்ஜித்தவரை மீண்டும் எரிச்சல் ஊட்டும் விதமாய்,

"அவ்வளவு தானா? ஐ வாண்ட் மோர்!” என்று நக்கலடிக்க,

"ஹாஜரா, உன் பையனை அமைதியா இருக்கச் சொல்லு.” என்று தன் மனைவியைப் பார்த்து கடிந்துகொள்ள,

ஹாஜரா ஆஷிக்கிடம், "அப்படியெல்லாம் பேசாத ஆஷிக்."

"ம்மா” என்று ஒற்றை வரி கூறியவன் அஸாத்திடம் அவரைப் போலப் பாவனைச் செய்து,

"ஹாஜரா உன் பையனை அமைதியா இருக்கச் சொல்லு, இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” என்று சிரித்தவன்,

"அம்மா உண்மையாவே இவருக்கு என்ன பண்ணணும்னு தெரியாது, என்னை ஒன்னும் பண்ண முடியலை. அதனால உங்ககிட்ட கோபத்தைக் காட்டுறாரு."

"ஆஷிக் நீ கொஞ்சம் சும்மா இரு.” என்றவர் தன் கணவரிடம்,

"ஏங்க, அவன் சொல்றத மனசுல வச்சுக்காதீங்க, ஜியா ரொம்ப நல்ல பொண்ணு, இவனும் விரும்புறான் பேசாம...” என்று அவர் கூறி முடிப்பதற்குள்,

"என்னடி சொல்ற?” என்று அவர் தன் மனைவியின் மீது கை ஓங்க, ஓங்கிய கையைக் குறுக்கே வந்து பிடித்த ஆஷிக்,

"இனிமே என் அம்மா மேல கையை நீட்டுனீங்க அவ்வளவுதான் பார்த்துக்கோங்க.” என்றவனிடம்,

"உனக்கு ஏன்டா புரிய மாட்டிக்குது? நான் பண்றது எல்லாமே உன் நல்லதுக்குத்தான். நம்ம தகுதிக்குப் பொருத்தமான பொண்ணை நீ சொல்லிருந்தீனா நானே உன் கல்யாணத்தை நடத்திருப்பேன். நீ சொல்ற பொண்ணு நம்ம கால் தூசிக்கு வருவாளா? என் மேல உள்ள கோபத்தைத் தூக்கி போட்டுட்டுக் கொஞ்சம் பொறுமையா யோசி. உனக்கே புரியும், நான் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்னு. நான் நீயும் ஆயிஷாவும் நல்லா இருக்கணும்னுதான் இதெல்லாம் பண்றேன், ஒரு பொறுப்புள்ள அப்பா என்ன பண்ணுவாரோ அததான் நான் பண்றேன்."

"பொறுப்புள்ள அப்பா... நீங்க?" என்று வாய்விட்டு சிரித்தவன்,

"ஆயிஷாவுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்களே, இததான் பொறுப்புள்ள அப்பானு சொல்றீங்களா? ஒன்னு சொல்லட்டா, நீங்க பண்ண போறதுக்குப் பேரு கல்யாணம் இல்லை. உங்க பொண்ணை வச்சு பண்ற பிஸ்னஸ் டீல். ஆயிஷாவுக்கு மட்டும் அந்தப் பையனை புடிக்காம இருந்திருக்கட்டும், அவங்களை வீட்டுக்கே வர விட்ருக்க மாட்டேன். அவளுக்குப் புடிச்சுருக்குனு சொன்ன ஒரே காரணத்துக்காகத்தான் நான் அவங்ககிட்ட போய் பேசுனேன்.” என்று கடுமையுடன் கூற,

"ஆமா பிஸ்னஸ் டீல்தான், ஆனாலும் நான் ஒன்னும் ஏதோ பிச்சைகாரனுக்கு என் பொண்ணைப் பேசலை. நல்ல வசதியான வீட்லதான் அவளுக்கு ஃபிக்ஸ் பண்ணிருக்கேன். இங்க என் பொண்ணு ராஜகுமாரினா அங்க அவ மகாராணியா இருப்பா. டெல்லி, பெங்களூர் சென்னைனு பெரிய பெரிய சிட்டில சமீரோட அப்பா ஹோட்டல் பிஸ்னஸ் பண்றாரு. சமீர் ரொம்ப நல்லவன், அவன் அப்பா பேச்சை தட்ட மாட்டான். டெல்லில சொந்தமா ஹாஸ்பிடல் நடத்திட்டு வரான். உன்னை மாதிரி பெத்த தகப்பனை மதிக்காம என் பேச்ச கேட்காம மாசத்துக்கு இன்னொருத்தன் கையை எதிர்பார்க்கல."

"ஆமா நான் மாசத்துக்கு இன்னொருத்தர் கையை எதிர்பார்க்கிறவன்தான், ஆனா நான் யாரையும் ஏமாத்தல. சொந்தமா உழைச்சு அதுல நிம்மதியா வாழ்றேன், என் வாழ்க்கைய எனக்குப் புடிச்ச மாதிரி வாழ்றேன். எனக்கு உங்க அளவுக்குப் பிசினஸ் பண்ண தெரியாம இருக்கலாம், ஆனா ஒரு அம்மாவுக்கு நல்ல புள்ளையா இருக்கத் தெரியும். ஒரு தங்கச்சிக்கு நல்ல அண்ணனா இருக்கத் தெரியும். எல்லாத்துக்கும் மேல எனக்கு வரபோற மனைவிக்கு நேர்மையா இருக்கத் தெரியும். அவளை மரியாதையை நடத்த தெரியும். என் குழந்தைங்களுக்கு நல்ல அன்புள்ள அப்பாவா இருக்கத் தெரியும்.

அப்புறம் என்ன சொன்னீங்க, சமீர் அவன் அப்பாக்குக் கீழ் படியிறான், அவன் அப்பா கட்டுன மனைவி கூட இருக்கும் போது இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலையே? கல்யாண வயசுல புள்ளைங்க இருக்கும் பொழுது, அவங்க வயசுல உள்ளே பொண்ணு கூடப் பிஸ்னஸ் ட்ரிப்னு சொல்லிட்டு, ஊர சுத்தலையே?” என்றவுடன் கோபமுற்ற அஸாத், ஆஷிக்கின் சட்டை காலரை பற்றி இழுக்க, கோபமுற்ற ஆஷிக் அவரது இரு தோள்களையும் பிடித்துத் தள்ளிவிட, தடுமாறியவரை ஹாஜரா தங்கி புடிக்க அவரைத் தட்டிவிட்டவர்,

"பார்த்தியாடி, உன் புள்ளை பண்ற வேலைய?"

"ஆஷிக் இதோட விடுடா."

"அம்மா நீங்க சும்மா இருங்க."

"புள்ளை பண்ற வேலையாவா? முதல்ல நீங்க என்னைக்காவது நல்ல அப்பனா எனக்கு இருந்திருக்கீங்களா? இல்லை, என் அம்மாக்கு நல்ல கணவனாவாவது இருந்திருக்கீங்களா? இல்லை... அப்போ நான் மட்டும் ஏன் உங்களுக்குப் புள்ளையா இருக்கணும்? என் உடம்புல உங்க ரத்தம் ஓடுதுனு நினைக்கும் போதே எனக்கு அருவருப்பா இருக்கு. நான் சொல்றத நல்லா கேட்டுக்கோங்க,

என் அம்மா மேல இனிமே கை வச்சீங்க, வச்ச கைய உடைச்சு இன்னொரு கையில குடுத்துட்டு போயிட்டே இருப்பேன். கல்யாணம் பண்றது, காது குத்துறதெல்லாம் ஆயிஷாவோட நிப்பாட்டிக்கோங்க. என் வாழ்க்கையில ஏதாவது மூக்கை நுழைச்சிங்க, அவ்வளவுதான்.

அப்புறம் ஜியாவை நான் லவ் பண்றேன், அவளைத்தான் நான் கல்யாணம் பண்ணுவேன். இதுல உங்க முடிவெல்லாம் எனக்குத் தேவையே இல்லை புரியுதா? அப்புறம் இந்த மேல கை வைக்கிற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம் சரியா? முதல்ல நல்ல புருஷனா, நல்ல அப்பாவா, நல்ல குடும்பத் தலைவனா, நல்ல மனுஷனா நீங்க மாறுங்க. அப்போ வந்து நான் எப்படிப்பட்ட புள்ளைனு சொல்லுங்க.” என்றவன் அங்கிருந்து செல்ல,

"அவன் கோபத்துல சொல்றான், நான் அவனை மன்னிப்பு கேட்க சொல்றேன்.” என்ற ஹாஜராவிடம்,

"அவனை நல்லா எனக்கெதிரா பேச வச்சுட்டு, இப்போ நடிச்சுட்டு இருக்கியா? நான் நல்ல புருஷன் இல்லையா? உனக்கு, எனக்கு மனைவியா இருக்கவே தகுதி இல்லை.” என்றவர் இறுக்கமாக அவரைப் பார்த்து, "வெளியிலே போ” என்று அறையே அலறும் அளவிற்குக் கத்த, ஹாஜரா அழுதுகொண்டே அங்கிருந்து சென்றார்.

ஹாஜரா அழுது கொண்டிருக்க, மனம் கேளாமல் ஆஷிக் அவரிடம் வந்து, "நேரம் ஆச்சு, இன்னுமா சாப்பிடாம இருப்பீங்க? சாப்பிடுங்க."

"என்ன இருந்தாலும் நீ அவரைத் தள்ளிவிட்ருக்கக் கூடாதுடா."

"ஏன்மா இன்னும் எத்தனை நாளைக்கு அவருக்கு அடிமையா இருக்கப் போற? அவரு உலகத்துக்காக உன் கூட வாழுற மாதிரி நடிச்சுட்டு இருக்காரு. அது ஏன்மா உனக்குப் புரியலை? இன்னும் ஏன்மா அவரைச் சகிச்சுக்கிட்டு இருக்க?"

"அதே உலகத்துக்காகத்தான்... நீ பொறந்த அப்போ எனக்கு வயசு இருபது. மூணு மாசம் கழிச்சு என் வீட்ல இருந்து உன்னை என் கையில தூக்கிட்டு இங்க வந்தேன், என் பெட்ரூம்ல என் புருஷன் கூட வேற ஒரு பொண்ண பார்த்தேன். அதைப் பார்த்த அப்போ எனக்கு அவ்வளவு கோபம் வந்துச்சு. என் அம்மா வீட்டுக்கு போனேன், என் அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா?

ஆம்பளைங்க அப்படித்தான் இருப்பாங்க, நீதான் சகிச்சுட்டு போகணும். வீட்டுல சாப்பாடு நல்லா இருந்தா ஏன் ஹோட்டலுக்குப் போறாங்கனு என் சொந்தக்காரங்க சொன்னாங்க. அப்போ நானும் அதே தப்ப பண்ணலாமானு கேட்டேன், என் கன்னத்துல பளார்னு அடிச்ச என் அப்பா, ஒரு ஆம்பளை தப்பு பண்ணினா வீட்ல உள்ள பொண்ட்டாடி சரியில்லைனு சொல்லுவாங்க. அதே ஒரு பொண்ணு பண்ணினா அவ நடத்தை சரியில்லனு சொல்லுவாங்கனு சொன்னாரு.

என்னால அவர் கூட வாழ முடியாதுனு சொன்னேன், அப்போ இங்க வராத, நம்ம குடும்பத்துக்குனு ஒரு மரியாதை இருக்குனு சொன்னாங்க. செத்துரலாம்னு போனேன், நான் செத்ததுக்கப்புறம் உன் நிலைமை என்ன ஆகும்னு யோசிச்சு பயந்தேன். தனியா போய் வாழ படிப்பும் இல்லை, வேலையும் இல்லை.

மனசை கல்லாக்கிட்டு உன்னை மட்டும் நம்பி மறுபடியும் இங்க வந்தேன். உன் அப்பா அவரோட கால்ல நான் விழுந்து மன்னிப்புக் கேட்டதுக்கு அப்புறம்தான் உள்ளையே விட்டாரு. அன்னையில இருந்து இப்போ வரை இந்த வீட்ல ஒரு உயிர் இல்லாத ஜடமாதான் இருக்கேன். எப்போ எல்லாம் கவலை வருமோ, அப்போ எல்லாம் உன் முகத்தைப் பார்த்து ஆறுதல் அடஞ்சிக்குவேன். உனக்கு அவரைப் பத்தின எந்த உண்மையும் தெரியாம இருக்கணும்னு நான் எவ்வளவோ முயற்சி பண்ணினேன்.

ஒரு கட்டத்துல உனக்கும் தெரிஞ்சிது. அவரு ரெண்டாவது கல்யாணம் பண்ணி அவருக்கு ஆயிஷா பொறந்து, அவரோட ரெண்டாவது மனைவி இறந்து போய் ஆயிஷா இங்க வந்தது எல்லாம், அப்படிக் கண் மூடி திறக்குறதுக்குள்ள நடந்துட்டு. ஆயிஷாவும் உன்னை மாதிரிதான், உனக்கு எப்படி அவருக்கு ரெண்டாவது மனைவி இருந்தது கஷ்டமா இருந்ததோ, அதே மாதிரி தானே அவளுக்கு என்னை பார்க்கும் போது, தன் அம்மாவோட வாழ்க்கையைப் பங்கு போட வந்தவனு தோன்றிருக்கும்.

ஆனா ஆயிஷா அப்படியில்ல, என்னை அவளோட அம்மாவாவே பார்த்தா. நம்மகிட்ட வந்த கொஞ்ச நாள்லையே நல்லா ஒட்டிகிட்டா. உனக்கு அவளைத் தங்கச்சியா ஏத்துக்கக் கஷ்டமா இருந்துச்சு.” என்று கண்ணீர் வழிய இருந்த தாயின் கண்ணீரைத் துடைத்தவன்,

"அதான் ஆயிஷாவை நான் என் தங்கச்சியா ஏத்துக்கிட்டேனேமா?"

"ஆமாடா, ஆனா அன்னைக்கு நீ ஜியாகிட்ட நடந்ததைப் பார்த்ததும் ரொம்ப வருத்தப்பட்டேன். எங்க நீயும் உன் அப்பா மாதிரி ஆகிருவியோன்னு...” என்றவரை இறுக்க அணைத்து கொண்டவன்,

"இல்லை, என்னைக்கும் நான் அவரை மாதிரி ஆக மாட்டேன். எந்தச் சூழ்நிலையிலும் நான் உன் புள்ளையாதான் இருப்பேன்மா."

"தெரியும்டா.” என்று அவனது நெற்றியில் இதழ் பதித்தவரிடம்,

"அதான் நான் வளர்ந்துட்டேனே, ஆயிஷா கல்யாணம் முடிஞ்சதும் நீங்க என் கூடவே வந்திடலாமே?"

"என் வாழ்க்கை இதுதான்னு ஆகிப்போச்சு, உன் அப்பாக் கூட இணைஞ்சது, அவர் கூடாதான் முடியணும். ஆனா நீ நல்லபடியா ஜியாவை கல்யாணம் பண்ணி, அவளுக்கு நல்ல கணவனா இருந்து உன் குழந்தைங்களுக்கு நல்லா தகப்பனா ரொம்பச் சந்தோஷமா வாழணும். ஆயிஷாவும் போற இடத்துல ரொம்பச் சந்தோஷமா வாழணும். அப்போதான் இத்தனை வருஷம் நான் வாழ்ந்ததுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.” என்று அவர் கூறி முடிக்க, ஆயிஷா வந்து பின்னால் இருந்து அவரைக் கட்டி அணைத்து, "கண்டிப்பா வாழ்வோம்மா...” என்று கூற, ஆஷிக் தன் தாயையும் தன் தங்கையையும் தன் கைகளுக்குள் அணைத்துகொண்டவாறு,

"ஆயிஷா சந்தோஷமா இருப்பா, நானும் சந்தோஷமா இருப்பேன்.” என்றவன், தன் தாய், தங்கை இருவரது நெற்றியிலும் தன் இதழ் பதித்து, "உங்க ரெண்டு பேரையும் சந்தோஷமா நான் பார்த்துக்குவேன்.” என்று கூறினான்.

"ஜியாவையும் சேர்த்துக்கோங்க ப்ரோ.” என்று ஆயிஷா கண்சிமிட்ட, புன்னகை புரிந்த ஆஷிக்கை, "டேய் வெக்கப்படுறியாடா? அண்ணா வேண்டாம்டா, பூமி தாங்காது.” என்று வம்பிழுக்க, பதிலுக்கு ஆஷிக் அவளைத் துரத்த, அதைப் பார்த்த ஹாஜராவுக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

***

நிலவே 33

ஆஷிக் தனது இரு கன்னத்தில் கை வைத்தவாறு கட்டில் மீது சம்பலம் போட்டு அமர்ந்துகொண்டு, வேண்டா வெறுப்பாய் டிவி சேனலை மாற்றிக் கொண்டிருக்க, விசில் அடித்தவாறே அவனது அறைக்குள் வந்த ஆதர்ஷ்,

"டேய் ஆஷிக் என்னடா இன்னும் ரெடி ஆகல?" என்று கேட்க, அவனிடம் எதையோ பறிகொடுத்தவன் போல, “ஏன் ஆகணும்?” என்று ஆஷிக் கேட்க, கடுப்பானவன் ஆஷிக் மீது தலையணையை எடுத்து அடித்தவாறே,

"ஏன்னா என்னடா அர்த்தம்? காலையிலே சொன்னேன்ல, மத்தியானம் ரெடியா இரு, ஷாப்பிங் பண்ண மாலுக்குப் போகணும்னு. அப்போ சரி சரினு சொல்லிட்டு இப்போ என்னனு கேட்குற?"

"சொன்னேனா?” என்றவன், ஆதர்ஷின் கையில் இருந்த தலையணையை வாங்கி அதன் மேல் குப்புற படுத்துக்கொள்ள, எரிச்சல் அடைந்த ஆதர்ஷ், ஆஷிக்கின் கரம் பிடித்து வலுக்கட்டாயமாக எழுப்பி,

"இப்போ என் கூட ஷாப்பிங் வர போறியா, இல்லையா?” என்று முரண்டு பிடிக்க,

"மூடே இல்லடா, நீ போய்ட்டு வாயேன்..."

"டேய் தனியா போக எனக்கு மூட் இல்லைடா."

"அப்போ வா, ரெண்டு பேரும் சேர்ந்து தூங்கலாம்.” என்று கரம் பிடித்தவனை அடித்தவன்,

"உனக்கு என்னடா ஆச்சு?"

"எரிச்சலா இருக்குடா, ஜியாவ பார்க்கணும் போல இருக்கு. அவ கூடவே இருக்கணும் போல இருக்கு. ஆனா அம்மா அவங்க போய் ஜியா வீட்ல பேசுற வரைக்கும் என்னை அவளை மீட் பண்ணாதனு சொல்லிட்டாங்க. நீயும் ஜியாவை இப்போதைக்குப் பார்க்க போகாதனு சொல்லிட்ட. எனக்கு என்னவோ மாதிரி இருக்கு, எந்த ஒரு விஷயம் மேலயும் எனக்கு ஒரு விருப்பமே இல்லைடா. சரி பார்க்கதான் முடியலை, ஃபோன் பண்ணலாம்னா அவ எடுக்கவே மாட்டிக்கிறா."

"ஹாஸ்பிடல்ல இருந்து இப்போதான் டிஸ்சார்ஜ் ஆகிருப்பாடா, ரெஸ்ட்ல இருக்கலாம்ல? ரெண்டு, மூணு நாள் கழிச்சு அவளே உன்கிட்ட பேசுவா. ஜியா உனக்குத்தான்னு முடிவாகிடுச்சு, உங்க வீட்ல எந்தப் பிரச்சனையும் இல்லை. ஜியா வீட்லையும் உங்க கல்யாண விஷயத்துக்கு ரொம்ப ஒன்னும் எதிர்ப்பு வரும்னு எனக்குத் தோனலை. ஸோ, நான் சொன்ன மாதிரி நீ கொஞ்சம் பொறுமையா இரு. எதுவும் கிறுக்குத்தனம் பண்ணி, எல்லாம் கூடி வரும் போது கெடுத்து விட்றாத.” என்ற ஆதர்ஷைப் பார்த்து ஆஷிக் முறைக்க,

"முறைச்சாலும் என் பதில் அதுதான்.” என்று கூற, சரி என்பதைப் போல் தலையை அசைத்தவன் மீண்டும், "அப்போ இதெல்லாத்தையும் சீக்கிரமா பண்ணினா என்ன? எதுக்குத் தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்ணிட்டு...” என்று ஆரம்பித்தவனிடம், என்ன செய்வது என்று புரியாமல் ஆதர்ஷ்,

“உன்னை... இல்லை நான் தான்டா சுவற்றுல போய் முட்டிக்கணும்.” என்று கூற அதைக் கண்டு சிரித்த ஆஷிக், "டேய் டென்ஷன் ஆகிட்டியா என்ன? சும்மா உன்னைக் கடுப்பேத்த அப்படிச் சொன்னேன்.” என்றவாறு அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டான்.

"டேய் போடா, சீக்கிரமா கிளம்பு.” என்ற ஆதர்ஷின் கன்னத்தைக் கிள்ளியவாறே, "மூஞ்ச தூக்காத, பத்து நிமிஷத்துல ரெடி ஆகிருவேன்.” என்று அவன் கூறிய சில மணிநேரத்தில் இருவரும் தங்களின் காரில் மாலுக்குச் சென்றனர்.

தங்களுக்குள் தேவையான பொருட்களை வாங்கியபிறகு அவர்கள் அங்கிருந்து கிளம்ப அப்பொழுது ஆஷிக்,

"டேய் பார்த்தியா இவ்வளவு பெரிய மால்ல ஆம்பளைங்களுக்கு மூணே மூணு ஷாப்தான் இருக்கு. ஆனா இந்தப் பொண்ணுங்களுக்கு மட்டும் வெரைட்டி வெரைட்டியா இருக்குல? சல்வார்க்கு தனி ஷாப்பு, பார்லர்லக்கு தனி, மேக் அப் ஐட்டம்ஸ்க்கு தனி, ஏன் செருப்புக்கு கூடத் தனியா?” என்றவன், தனக்கு எதிரே இருக்கும் ஒரு துணிக்கடையில் ஜியாவைக் கண்டு, "டேய் ஆதர்ஷ், அது ஜியா தானே?"

"ஆமா"

"ரெஸ்ட் எடுக்காம இங்க என்ன பண்ணிட்டு இருக்கா? நீ நில்லு, நான் போய் பார்த்துட்டு வரேன்.” என்று ஆதர்ஷிடம் கூறிவிட்டு அவளை நோக்கி நடந்தான்.

அங்கே ஜியா பிங்க் நிற சல்வார் ஒன்றை எடுத்து தன் மேல் வைத்து பார்த்து, "இது என்ன சைஸ்?” என்று விற்பனை பிரிவில் உள்ள பெண் ஊழியரிடம் தன் கண்கள் மிளிர வினவ,

அவர், "இது எல் சைஸ் மேம்.” என்றதும் முகம் சுருங்கியவளாய்,

"ஓ...” என்றவள் தனக்கு மட்டும் கேட்குமாறு, “எனக்கு இது செட் ஆகுமா ஆகாதானு தெரியலையே? இது எனக்கு ரொம்பப் புடிச்சுருக்கு, ஆனா கண்டிப்பா செட் ஆகாது. ம்ம்... கடவுளே எல் சைஸ்னா சின்னதாதான் இருக்கணுமா? ஏன் என் சைஸ்க்குச் செட் ஆகுற மாதிரி எல் சைஸ டிசைன் பண்ண கூடாதா?” என்று அந்த ஆடையைத் தன் மேல் வைத்தவாறு, கண்ணாடியின் முன்பு நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் பின்னால் வந்து நின்ற ஆஷிக் தன் நாடியை அவளது தோளில் வைத்தவாறு, "பேபி இது உனக்குச் செட் ஆகாதுடா, ஹிப் பக்கம் கொஞ்சம் வெயிட் போட்ருக்கடா.” என்று கூறி கண்ணடிக்க, அருகில் உள்ள பெண் ஊழியர் அவன் கூறியதைக் கேட்டு சிரிக்க, கோபமுற்ற ஜியா, ஆஷிக்கை பார்த்து முறைத்தவாறே அந்தப் பெண்ணையும் பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்து செல்ல,

"ஜியா நில்லு, எங்க போற?” என்றவாறு பின்னாலே ஆஷிக் செல்ல, எரிச்சல் அடைந்த ஜியா அவன் புறம் திரும்பி,

"எதுக்கு இப்போ ஜியா ஜியானு ஏலம் விடுற?"

"முதல் தடவ கூப்பிடும் பொழுதே நீ என்னனு கேட்ருக்கலாம்ல?"

"என்ன?” என்று கோபமாய் கூறியவளைப் பார்த்து ஆஷிக்,

"ஷப்பா! என்ன கோபம்? சரி ரெஸ்ட் எடுக்காம இங்க என்ன பண்ற?"

"ம்ம் தூங்கிட்டு இருக்கேன்."

"ஓ தூங்கிட்டியா?” என்ற ஆஷிக்கைப் பார்த்து முறைத்த ஜியா அங்கிருந்து கிளம்பப் போக, "ஏய் ஜியா சாரி சாரி...” என்றவன்,

"ஹெல்த் எப்படி இருக்கு?” என்பதற்குள்,

"அக்கா!” என்று அழைத்துக் கொண்டே வந்த சரண்யா,

"எனக்கு அந்தக் கடையில உள்ள மேக் அப் கிட் வேணும்.” என்று கேட்க, “அதெல்லாம் ஏதும் வேண்டாம் ஜியா, ஏற்கனவே வீட்ல இருக்கிறத யூஸ் பண்ணினா அதுவே போதும்.” என்று சரண்யாவின் பின்னால் வந்த ஜியாவின் சித்தி ஆஷிக்கைப் பார்த்ததும் புன்னகைக்க,

பதிலுக்குப் புன்னகைத்தவன், "வணக்கம் சித்தி, எப்படி இருக்கீங்க?” என்ற ஆஷிக் சரண்யாவிடம், "ஹாய் சரண்யா, எப்படி இருக்க?"

"நான் நல்லா இருக்கேன்” என்று பதிலுக்குப் புன்னகையோடு கூறியவளிடம்,

"ஏய் உனக்கு அந்த மேக் அப் கிட் வேணுமா? நாம போய் வாங்கலாமா?” என்று கூறி யாருடைய சம்மதமும் கிடைக்கும் முன்பே சரண்யாவை அழைத்துக் கொண்டு கடைக்குள் செல்ல, சரண்யாவோ ஆஷிக்கிற்கு எந்த மறுப்பும் கூற முடியாமல் தன் தாயும் அக்காவும் என்ன கூறுவார்களோ என்ற பயத்தில் விழித்துக் கொண்டிருக்க, சடசடவென்று மேக் அப் பாக்ஸை வாங்கியவன், அதற்கான காசை கொடுத்துவிட்டு பொருளை சரண்யாவிடம் கொடுக்க, அவளோ பாதித் தூரம் கையை நீட்டிவிட்டு அவனிடம் இருந்து வாங்க தயங்கிக் கொண்டிருந்தாள்.

"வாங்கிக்கோ சரண்யா.” என்று ஆஷிக் கூற, சரண்யாவை கரம் பற்றித் தன் பக்கம் இழுத்த ஜியா, "சரண்யா வாங்க மாட்டா.” என்று கூற,

"ஏன் வாங்க மாட்டா, சரண்யா வாங்குவா.” என்றவன் புன்னகையுடன் சரண்யாவிடம் கொடுக்க, ஜியா முறைப்பதை பார்த்துச் சரண்யா பயப்பட ஆஷிக் ஜியாவிடம், "ஏய் ஏன்டி இப்படிக் கண்ணை உருட்டிட்டு இருக்க, எனக்கே பயமா இருக்கு. சின்னப் பொண்ணு, பயப்பட மாட்டா?” என்றவனைப் பார்த்து சரண்யாவும் சித்தியும் சிரிக்க,

"வாவ்! சரண்யா உங்க ஸ்மைல் ரொம்ப அழகா இருக்கே?” என்றவன் அவளிடம் மேக் அப் கிட்டை கொடுக்க,

"இதெல்லாம் வேண்டாம்பா” என்ற திவ்யாவிடம்,

"இப்போ நீங்களா? இதுல என்ன இருக்கு, நான் குடுக்கக் கூடாதா?” என்றவனைப் பார்த்து ஜியா, "குடுக்கக் கூடாது” என்று கூற,

"உனக்கு என்ன ஆச்சு ஜியா? ஏன் இப்படிப் பேசுற? உன் தங்கச்சி எனக்கும் தங்கச்சி மாதிரி தானே, அவளுக்கு வாங்கிக் கொடுக்கிற உரிமை எனக்கில்லையா?"

"இல்லை, உனக்கு எந்த உரிமையும் இல்லை.” என்று ஜியா கோபமுற தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஆதர்ஷுக்கு எதோ பிரச்சனை என்று மட்டும் புரிய அவனும் அங்கே வந்தான்.

ஜியாவின் சித்தி, "ஜியா விடுடா, ஏன் கோபமா பேசுற?"

"சித்தி ப்ளீஸ், நீங்க இதுல தலையிடாதீங்க.” என்றவள்,

"என்ன அப்படிப் பார்த்துட்டு இருக்க, பதில் கிடைச்சுருச்சா? இங்க இருந்து கிளம்பு” என்று கூற கோபமுற்ற ஆஷிக்,

"என்னடி பதில் கிடைச்சுருச்சா?” என்று ஜியாவின் கரத்தை கோபமாகப் பற்றிகொள்ள, அவனைத் தடுத்த ஆதர்ஷைப் பார்த்து உரிமையாய் முறைத்தவன் ஜியாவை நோக்கி,

"உரிமை இல்லாமதான் எனக்காக விஷம் சாப்ட்டியா?” என்று கேட்க,

"உனக்காக யாரு விஷம் சாப்பிட்டா? நீயா எதாவது நினைச்சுகிட்டா என்னால எதுவும் பண்ணமுடியாது.” என்று தனலாய் வார்த்தைகளைக் கொட்ட, வெடுக்கென்று பற்றிய கரத்தை விடுவித்தான்.

***


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்

நிலவே 34 & 35
 
Last edited:
Top