Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நிலவே 36 & 37

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
நிலவே 36

ஆழிப்பேரலையில் சிக்குண்ட படகை போலத் தியாவின் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஆஷிக், ஜியா தன்னைப் பற்றிக் கூறிய எதையும் நம்பவில்லை என்பதைக் குறித்த மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், இவ்வளவு விஷயம் நடந்தபிறகும் ஆஷிக், ஜியா மீது கொண்ட அளவில்லாத, குறைவில்லாத காதல் தியாவைப் பொறாமை தீயில் வெந்துருக செய்தது.

ஆஷிக்கிற்கு உண்மை தெரிந்தால் என்ன ஆகும் என்பதை நினைக்கும் பொழுதே, அவளது உள்ளம் படபடத்தது. முதன் முறையாக ஆஷிக்கை மொத்தமாகத் தன் வாழ்க்கையில் இருந்து இழந்துவிடுவோமோ என்கின்ற பயம் தியாவை தொத்திக்கொண்டது. அந்த பயம் ஜியா மீதுள்ள கோபத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தது.

"சின்ன வயசுல இருந்து கூட இருக்கேன், அவளுக்காக என்கிட்ட கோபப்படுறான்.” என்றவள் பொங்கி வந்த ஆத்திரத்தில் தன் கையில் இருந்த காரின் கீயை தூக்கி எறிய, அது சுவற்றில் பட்டு தெறித்து எங்கோ போய் விழுந்தது. மீண்டும் கோபம் தாளாமல் தன் முன்னால் இருந்த டேபிளில் உள்ள பொருட்களைத் தட்டிவிட்டவள், அதே கோபத்தோடு தன் அறைக்குள் செல்ல,

அதில் ஆங்காங்கே சுவற்றில் தானும் ஆஷிக்கும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் கண்டபிறகு, அவளது மனம் இன்னும் தவித்தது. ஒவ்வொரு படங்களையும் தொட்டு பார்த்தவளின் கண்கள் மிகவும் கலங்க கிளர்ந்தெழுந்த கோபத்தை அடக்கியவள்,

ஆஷிக்கின் காதை திருகுவது போலவும் ஆஷிக் பாவமாய் முழிப்பது போலவும் இருக்கும் புகைப்படத்தை, தன் கையில் ஏந்தி

"ஏன்டா ஏன் என்னைப் புரிஞ்சிக்கவே மாட்டிக்கிற? உன்னை நான் எவ்வளவு நேசிக்கிறேன். ஆனா நீ மறுபடியும் ஜியாகிட்டயே போற. அப்படி என்னடா என்கிட்ட இல்லாததை அவகிட்ட பார்த்த? அவ நம்ம லைஃப்ல வந்த நாள்ல இருந்து உன்னை என்கிட்ட இருந்து தூரமா கொண்டு போய்ட்டா. அது ஏன் உனக்குப் புரியமாட்டிக்குது.

உனக்கு நீ, எனக்கு நான்னு எப்படி எல்லாம் இருந்தோம். ஏன்டா நீ அவளைப் போய் காதலிச்ச?” என்றவள் தன் கண்களை இறுக்க மூட, பழைய நினைவுகள் அவளது எரிந்து கொண்டிருக்கும் இதயத்தின் மீது மேலும் தனலை அள்ளி போட்டது.

***

ஜியாவும் ஆஷிக்கும் காதலித்த தொடக்கத்தில் நடந்த நிகழ்விது. அன்று ஆதர்ஷின் கெஸ்ட் ஹவுசில் ஆதர்ஷ், தியா இருவரும் அமர்ந்திருக்க,

தியா ஆதர்ஷிடம், "என்னடா நம்மளை வர சொல்லிட்டு இந்த ஆஷிக் எங்க போனான், இன்னும் வரலை."

"வந்திருவான்டி."

"அப்படி என்ன சர்ப்ரைஸ் குடுக்கப் போறான்? உன்கிட்ட எதுவும் சொன்னானா?"

"இல்லையே, எதுவும் சொல்லல."

"உனக்குத் தெரியாம எதுவும் இருக்காதே?” என்றவளிடம்,

"என்கிட்ட எதுவும் கேட்காத, அவனே சொல்லுவான்."

"எப்போ வருவான்? ரொம்ப போர் அடிக்குதுடா." என்று தியா ஆதர்ஷிடம் புலம்பி கொண்டிருக்க,

"சர்ப்ரைஸ்!” என்று கத்திகொண்டே வந்த ஆஷிக்கைப் பார்த்து, "ஏய் ஆஷி..." என்று தியாவும் உற்சாகத்தில் துள்ளி அவனைக் கழுத்தை வளைத்து கட்டி அணைக்க, அவன் பின்னால் இருக்கும் ஜியாவைப் பார்த்த தியா அவனை விட்டு விலகி மெல்ல அவனது காதில், "யாருடா இது? என்ன மறுபடியும் கேர்ள் ஃப்ரண்ட மாத்திட்டியா?” என்று கண்ணடிக்க,

"வாய மூடுடி” என்று மெதுவாய் கடிந்தவன், தியாவிடம் இருந்து விலகி ஜியாவின் அருகில் சென்று, "ஜியா உள்ள வா.” என்று கூறி அவளது கையைப் புடித்துத் தன் பக்கம் அழைத்து, இடையோடு சேர்த்து அணைத்துக்கொள்ள, ஜியாவுக்கு ஆஷிக், தியா, ஆதர்ஷின் முன்பு இவ்வாறு செய்வது கொஞ்சம் கூச்சமாய் இருக்க, மெல்ல அவனது கையைத் தட்டிவிட, அவனோ தனது அணைப்பை மேலும் நெருக்கினான்.

ஆதர்ஷ், ஜியாவிடம் நலம் விசாரிக்க, ஜியாவும் பதிலுக்கு நலம் விசாரித்தாள். தியா எதுவும் பேசாமல் அமைதியாய் ஜியாவை ஆராய்ந்து கொண்டிருக்க,

ஆஷிக் தியாவிடம், "ஏய் என்ன அப்படிப் பாக்குற? திஸ் இஸ் ஜியா, நானும் ஜியாவும் உயிருக்கு உயிரா லவ் பண்றோம். இதுதான் நான் உனக்குக் குடுத்த சர்ப்ரைஸ்.” என்று ஆஷிக் கூறவும்,

"ஹாய் தியா!” என்று ஜியா, தியாவை நோக்கி நட்பு கரங்கள் நீட்ட வாய்விட்டு சிரித்த தியா ஆஷிக்கிடம்,

"இது எத்தனையாவது? எங்க இருந்துடா கரெக்ட் பண்ணின? எப்போல இருந்து நீ இப்படிச் சல்வார் போடுற பொண்ணுங்களைப் பார்க்க ஆரம்பிச்ச?” என்று கேட்க,

அவளைப் பார்த்து முறைத்த ஆஷிக், "ஷட் அப் தியா, என்ன பேசிட்டு இருக்க?” என்றவன்,

ஜியாவிடம், "நீ எதுவும் நினைச்சுக்காத ஜியா, அவ சும்மா சொல்றா.” என்று கோபமாய் இருந்தவளைப் பார்த்துச் சமாதனம் செய்ய,

"எதுவும் பேசாத” என்ற ஜியா அழுதுகொண்டே அங்கிருந்து செல்ல, அவளைத் தடுக்க ஆஷிக்கும் அவள் பின்னாலே சென்றான்.

ஆஷிக் கூறிய எந்தச் சமாதானத்தையும் கேட்காத ஜியா, அவசரத்தில் அங்கிருந்து செல்லும் பொழுது அவளது கால்கள் கதவில் மோத, இரும்பு வேகமாய் பட்டதில் ஜியாவின் கால் விரல்களில் இருந்து ரத்தம் கலகலவென வழிய தொடங்கின. அதைப் பார்த்து பதறிய ஆஷிக் ஜியாவின் கரத்தைப் பிடித்து,

“பார்த்து வர கூடாதா?" என்று அக்கறையாய் வினவ, அவனது கரத்தை சட்டென்று விலக்கியவள் என்ன ஆனாலும் அங்கிருந்து சென்றே தீருவேன் என்று அடம் பிடிக்க, ஜியாவைப் பார்த்து முறைத்த ஆஷிக்,

"இப்போ எங்கையும் போக முடியாது.” என்று உரிமையாய் முறைக்க வேறு வழியின்றி அமைதியானாள்.

வலியால் துடித்தவளை மெல்ல கைத்தாங்கலாய் சோபா மீது அமரவைத்தவன், அவளது பாதத்தைத் தூக்கி தன் மடி மீது வைக்க, விரல்கள் அவனது மார்பை தொட்டுக் கொண்டு இருந்தது. ஆஷிக், ஆதர்ஷ் கொடுத்த ஃபர்ஸ்ட் எயிட் கிட்டை வைத்து அடிபட்ட காயத்திற்கு மருந்து போட்டு மென்மையாய் வருடி விட, தியா முற்றிலுமாய் வாயடைத்து நின்றாள்.

அப்பொழுது ஆதர்ஷ் ஜியாவிடம், "ஜியா தப்பா எடுத்துக்காத, நாங்க எப்போதுமே இப்படித்தான் கிண்டலா பேசுவோம். தியாக்கு உன்னைப் பத்தி எதுவும் தெரியாதனால இப்படி விளையாட்டா எப்போதும் பேசுற மாதிரி பேசிட்டா, என்ன தியா?” என்று கூறி தியாவைப் பார்க்க, சில நொடிகளுக்குப் பிறகு தியா வேண்டா வெறுப்பாக, "ஆமா ஜியா, நான் சும்மா கிண்டலுக்குத்தான் சொன்னேன், உன்னைப் பத்தி ஆஷிக் என்கிட்ட எதுவும் சொல்லல, அதான் அப்படிச் சொல்லிட்டேன், ப்ளீஸ் மன்னிச்சுரு. ஆஷிக்கை எதுவும் சொல்லாத.” என்று கூற,

ஜியாவின் முகம் மட்டும் இன்னும் மாறாமல் அப்படியே இருக்க, தியா ஜியாவிடம், "உங்களோட முகத்தைப் பார்த்தா நான் சொன்னதை நீங்க இன்னும் நம்பலைனனு நல்லா தெரியுது.” என்றவள் ஆஷிக்கின் பக்கம் திரும்பி, "சாரி ஆஷிக், என்னால உங்க ரெண்டு பேருக்கும் சண்டையாகிடுச்சு, நான் கிளம்புறேன்.” என்று அங்கிருந்து செல்ல போக அவளைத் தடுத்த ஜியா,

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை தியா, நான் நம்புறேன்.” என்று கூறி அவளைத் தன் அருகில் அமர வைத்து அவளிடம் இயல்பாகப் பேசி கொண்டிருந்தாள்.

ஜியாவும் தியாவும் எதார்த்தமாகப் பேசிக்கொண்டிருக்க, ஒருமுறையாவது ஜியாவின் பார்வை தன் பக்கம் விழாதா என்று ஆஷிக், ஜியாவையே ஏக்கமாய்ப் பார்த்தான். ஜியாவோ ஓரக்கண்ணால் கூட அவனைப் பார்க்காமல் தியாவிடமே பேசிக் கொண்டிருந்தாள். இதில் இருந்தே ஜியாவுக்குத் தன் மீதுள்ள கோபம் இன்னும் போகவில்லை என்பது புரிய ஆஷிக் கவலையாக இருந்தான்.

இதை எல்லாம் கவனித்த ஆதர்ஷிற்கு அனைத்தும் புரிய, தன் நண்பனின் பிரச்சனையை எப்படித் தீர்க்க வேண்டும் என்று சிந்தித்தவனுக்கு, அவனது மூளை இன்ஸ்டண்டாக ஒரு ஐடியாவை கொடுக்க புன்னகைத்தவாறே ஆதர்ஷ் எல்லாருக்கும் கேட்குமாறு,

"அச்சோ உங்க எல்லாரையும் வர சொல்லிட்டு நான் சாப்பிட எதுவும் வாங்காம இருக்கேனே? தியா என் கூட வா, நாம வாங்கிட்டு வந்திடலாம்.” என்று அழைக்க,

உடனே ஆஷிக் தன் இருக்கையில் இருந்து சட்டென்று எழுந்து, "தியா எதுக்கு? வா நாம போய் வாங்கிட்டு வந்திடலாம்.” என்று கூற, ஆஷிக்கைப் பார்த்து முறைத்த ஆதர்ஷ் தனக்குள், ‘மாங்கா மாங்கா உனக்காக, நான் ஒரு ஐடியா பண்ணினா அது புரியாம சொதப்பிட்டு இருக்க, சரியான ட்யூப்லைட்டா நீ.’ என்று தன் நண்பனைக் கடிந்து கொண்டே,

"டேய் உக்காருடா, நான்தான் சொல்றேன்ல. நானும் தியாவும் போயிட்டு வரோம்.” என்று தியாவை அழைக்க,

அவளோ, "டேய் எரிச்சலா இருக்கு, நீயும் ஆஷிக்கும் போங்க.” என்று நெளிய, கடுப்பான ஆதர்ஷ், தியா அடுத்த வார்த்தை பேசுவதற்குள், "வான்னா வா.” என்றவாறு ஆஷிக்கைப் பார்த்து கண் சிமிட்டிவிட்டு தியாவின் கையைப் பற்றிக்கொண்டு வலுக்கட்டாயமாக அங்கே இருந்து அவளை இழுத்துச் சென்றான்.

ஆதர்ஷின் செய்கையைப் புரிந்துகொண்ட ஆஷிக் தன் நண்பனை எண்ணி சந்தோஷத்தில் புன்னகைக்க, ஜியாவோ அவனைப் பார்த்து முறைத்துவிட்டு தொலைக்காட்சியிலே மூழ்கிருந்தாள். அவளது செய்கை அவனுக்குக் கடுப்படிக்க எரிச்சல் அடைந்தவன்,

"கொஞ்சமாவது பார்க்கிறாளா? நான் ஒருத்தன் இங்க இருக்கேன், என்னை விட்டுட்டு டிவியையே பார்த்துட்டு இருக்கா. கோபமா வேற இருக்காளே, எல்லாம் தியாவால வந்தது. இப்போ எப்படிச் சமாதானம் பண்றதுனே தெரியலையே?" என்றவாறு தனக்குள்ளே முணுமுணுத்தான்.

அங்கே ஆதர்ஷ், ஒரு பாட்டில் கூல் ட்ரிங்க்சை மெதுவாக உறிந்து உறிந்து ஏதோ அமிர்த்ததைச் சாப்பிடுவது போல ரசித்து ரசித்துக் குடித்துக் கொண்டிருக்கக் கடுப்பான தியா,

"சாப்பாடு ஆர்டர் பண்ணணும்னு சொல்லிட்டு நீ இங்க உக்கார்ந்து இந்த கூல்ட்ரிங்சை அரை மணிநேரமா குடிச்சுட்டு இருக்க. இதுக்கா என்னைக் கூட்டிட்டு வந்த?"

"இன்னும் ஒரு மணிநேரம் இதைத்தான் குடிக்கணும்.” என்று கூறியவன் தன்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்த தியாவிடம்,

"என்ன முறைக்கிற? நீ பண்ணின தப்ப நான் சரி பண்ணிட்டு இருக்கேன். நீ நியாயப்படி என்கிட்ட தேங்க்ஸ் சொல்லணும்."

"ஏய் நான் என்ன தப்பு பண்ணினேன்?"

"ம்ம்... இப்போ ஜியாகிட்ட ஆஷிக்கை பத்தி சொன்னது தப்பில்லாம வேற என்னது?"

"அதான் சாரி சொல்லிட்டேன்ல?"

"ஆனாலும் ஜியா இன்னும் ஆஷிக் மேல கோபமா தானே இருக்கா, அதை நாம தானே சரி பண்ணணும். அதான் நான் அவங்களுக்குத் தனிமை குடுக்கிறதுக்குப் பொய் சொல்லிட்டு உன்னைக் கூட்டிட்டு வந்தேன்."

"இதெல்லாம் அவளுக்கு ஓவரா இல்லை, சாரி சொல்லியாச்சுல அப்புறம் என்ன அவளுக்குக் கோபம்? எனக்கு நீயும் ஆஷிக்கும் அவளுக்காக என்கிட்ட கோபப்படும் போது எரிச்சலா இருந்தது. ஆனாலும் போனா போகுதுனுதான் சாரி சொன்னேன். நான் மத்தவங்ககிட்டயும் இப்படிப் பேசியிருக்கேன் தானே, அப்போ எல்லாம் ஆஷிக் ஒன்னுமே சொன்னதில்லை. ஆனா இவ விஷயத்துல இவன் என்கிட்டயே ரொம்ப டென்ஷன் ஆகிட்டான்.

என்னைப் பார்த்து அப்படி முறைக்கிறான். எல்லாத்துக்கும் மேல அவளோட காலை தூக்கி தான் மேல வச்சுக்கிட்டான். கொஞ்சமா ரத்தம் வந்ததுக்கே அப்படித் துடிக்கிறான், அவன் இப்படி இருந்து நான் பார்த்ததே இல்லையே?” என்றவளின் தோள் மீது கை போட்ட ஆதர்ஷ்,

"செல்ல குட்டி இதுக்குப் பேருதான் இஷ்க், ப்ரேமம், காதல், லவ்..."

"லவ்வா?"

"என்ன லவ்வானு சட்டுன்னு சொல்லிட்ட, அதை அப்படிச் சொல்ல கூடாது. ல... வ்... இப்படி இழுத்து சொல்லணும்.” என்று கண்சிமிட்ட,

"இதுக்கு முன்னாடி அவன் மத்த பொண்ணுங்க கூடச் சுத்துவானே, அதையும் லவ்வுனுதான் சொல்லிருக்கான்."

"அது வேற, இது வேற... அது சும்மா. இது ரியல். உண்மையா ஃபீல் பண்ணி பண்றது. அது மாறும், இது என்னைக்கும் மாறாது."

"போயும் போய் இவளையா ஆஷிக் லவ் பண்றான்? சுத்த பட்டிக்காடு மாதிரி இருக்கா, எனக்கு அவளைச் சுத்தமா புடிக்கலை, அவளும் அவ மூஞ்சும்..."

"ஏன் அவளுக்கு என்ன, அழகா தானே இருக்கா. இதுல உனக்குப் புடிக்கிறதுல என்ன இருக்கு? ஆஷிக்குக்கு புடிச்சுருக்கே, எனக்கும் ஜியாவை ரொம்பப் புடிச்சுருக்கு ரொம்ப நல்ல பொண்ணு. ஜியா வந்ததுக்கு அப்புறம் ஆஷிக்கோட லைஃப்ல நிறைய மாற்றம் வந்திருக்கு. இப்போல்லாம் ஆஷிக் ட்ரிங்க் பண்றது இல்லை, எங்கையும் யார் கூடயும் அனாவசியமா வெளியில சுத்துறது இல்லை. ரொம்ப பொறுப்பா இருக்கான் தெரியுமா? இது எல்லாத்துக்கும் ஜியாதான் காரணம்.” என்றவனிடம் தியா,

"போதும்! எரிச்சலா இருக்கு. ரொம்பக் கனவு காணாத ஆஷிக் பத்தி எனக்குத் தெரியும், இவ இன்னும் ஒருநாள் கூடத் தாங்க மாட்டா. நாம வீட்டுக்கு போகும் போது அவ அங்கையே இருக்க மாட்டா. இவ்வளவு நாள் மாடர்ன் பொண்ணுங்க கூடச் சுத்துனான், இப்போ திடீர்னு அவன் பார்வை இந்தப் பட்டிக்காட்டு மேல விழுந்திருக்கு அவ்வளவுதான்... இதைப் போய் லவ்வு ஜவ்வுன்னு ஏதேதோ சொல்லிட்டு இருக்க."

"அப்படியா? அப்போ சரி பார்க்கலாம்.” என்ற ஆதர்ஷிடம்,

"பார்க்கலாம், பெட் ஆயிரம் இல்லை, ரெண்டாயிரம் இல்லை, ஐயாயிரம் ரூபாய்... என்ன உனக்கு ஓகேவா?” என்ற தியாவிடம் சாவல் விட்டவன், அவளுடன் தன் இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்தான்.

***

அங்கே இல்லத்தில் ஆஷிக் யாரோ ஒரு பெண்ணிற்கு ஃபோன் செய்வது போல நடித்து, "ஹாய் ப்ரீத்தா, எப்படி இருக்கச் செல்லம்? நானா? இன்னைக்குப் ஃப்ரீதான், நாம மூவிக்குப் போலாம்டா. அப்புறம்டா செல்லம்... என்ன இப்போவே தரணுமா? அதுக்கென்ன செல்லம், தந்துட்டா போச்சு. ஒன்னு என்ன நூறு தரேன்...” என்று ஜியாவிற்குக் கேட்குமாறு வேண்டும் என்றே அவளது முகப் பாவனையைக் கவனித்தவாறே சத்தமாகப் பேச, கோபம் கொண்ட ஜியா வேகமாக அவனது அருகில் வந்து அவனது கையில் இருந்த ஃபோனை வாங்கி,

"ஏய் என்னடி நினைச்சுட்டு இருக்க? இனிமே அவனுக்குப் ஃபோன் பண்ணின அவ்வளவுதான்!” என்று கோபமுற, எதிர்முனையில் இருந்து எந்தப் பதிலும் வராமல் போக, "வச்சுட்டாளா? அவளை விட மாட்டேன்.” என்றவள் டயல் லிஸ்டை பார்க்க, ஸ்க்ரீனில் கடைசியாகத் தனது பெயர் வர, குழப்பமாக ஆஷிக்கைப் பார்த்தவளுக்கு, அவனது கள்ள பார்வையிலையே அவன் தன்னை ஏமாற்றியது தெரியவர,

கோபமாய் அவனது நெஞ்சை அடித்தவாறே, "ஏன்டா ஏமாத்துன?” என்று கொஞ்சலாய் கேட்க,

அவளது கரத்தைப் பிடித்தவன், "மனசுக்குள்ள இவ்வளவு லவ் வச்சுட்டு அப்புறம் ஏன் கோபமா இருக்கிற மாதிரி நடிக்கிற?” என்றவாறு ஜியாவைத் தன்னோடு அணைத்துக் கொள்ள,

ஜியா தன் முகத்தைத் திருப்பியவாறே, "தியா ஏன் அப்படிச் சொன்னா?” என்று கேட்க,

"அவ மத்தவங்ககிட்ட சொல்ற மாதிரி சொல்லிட்டாடா, அதான் சாரி சொன்னாளே..."

"எனக்கு எவ்வளவு கஷ்டமாகிடுச்சு தெரியுமா? எனக்குத் தியா பண்ணினது சுத்தமா புடிக்கலை, எனக்குத் தியாவையும் புடிக்கல."

"தியா மனசுல பட்டத்தைப் பேசுவா, ஆனா ரொம்ப நல்ல பொண்ணுமா."

"எனக்கு ஆதர்ஷ்தான் புடிச்சுருக்கு, தியாவ ஆதர்ஷ் அளவுக்குப் புடிக்கல."

"ஆதர்ஷ் வேற, தியா வேற. ஆனா ரெண்டு பேருமே நல்லவங்க."

"எனக்குப் புடிக்கல, இனிமே இப்படி எல்லாம் பேச சொல்லாத." என்று கண்டிப்புடன் கூறியவள், இன்னும் கோபம் தணியாமல் அப்படியே இருக்க, தன்னவளை சமாதானம் செய்யும் பொருட்டு பின்னால் இருந்து அணைத்துக்கொண்டான்.

"ஓகே ஓகே, இனிமேல் தியா இப்படிப் பேசமாட்டா.” என்று உறுதி அளித்தவன், “ஏய் இப்போவாது சிரிடி...” என்றவாறு அவளுக்குக் கிச்சலம் காட்ட, தன் வாய்விட்டு சிரித்தவளைப் பின்புறமாய் தன்னோடு அணைத்துக்கொண்டு, "எவ்வளவு கோபம் வருதுடி உனக்கு? உன்னைச் சமாதானம் பண்ண என்னலாம் யோசிக்க வேண்டிருக்கு.” என்று கூறிக்கொண்டே அவளது கழுத்தில் தன் முகம் புதைத்தவன், மெல்ல அவளது காதுமடலை உரசியவாறே அவளது கன்னத்தில் தன் இதழை பதித்து, மெல்ல தன் பக்கம் ஜியாவைத் திருப்பியவன் அவளது இதழ் நோக்கி குனிய, தன் விரல் கொண்டு அவனது இதழ் ஒற்றலுக்குத் தடைவிதித்தவள்,

"ப்ரீத்தா யாரு? டிராமா பண்ணினாலும் சட்டுனு உனக்கு எப்படி அந்தப் பேரு சொல்ல தோனுச்சு?” என்று கேட்க, அதைக் கேட்டு மெல்ல புன்னகைத்தவன், சோபாவில் இருந்த பத்திரிக்கையை எடுத்து அதில் இருந்த நடிகையின் பெயரான ப்ரீத்தா சிங்கை சுட்டி காட்டினான்.

"இது தானா? நான் யாரோனு நினைச்சேன்.” என்றவள், அவனது கையில் இருந்த பத்திரிகையைச் சட்டென்று வாங்கி,

"சரி பார்த்தது போதும், அவளை அப்படிப் பார்த்துட்டு இருக்க, கண்ணு முன்னாடி நான் நின்னுகிட்டு இருக்கேன். நீ அவளையே பார்க்குற, கண்ணை நோண்டிருவேன்.” என்று கோபித்தவளைப் பார்த்து சிரித்தவன், சிவந்திருந்த அவளது மூக்கின் நுனியில் முத்தமிட்டு நெற்றியோடு நெற்றி முட்டி,

"பார்த்தத்துக்கே இப்படியா? அதுக்குமேல போனா...?” என்றவனின் சட்டையைப் இறுக்கப் பற்றித் தன் பக்கம் இழுத்தாள்.

"கொன்னுருவேன், முதல்ல அவளை அப்புறம்..."

"அப்புறம்...?” என்று விழிகளை ஊடுருவ பார்த்தவனைப் பார்த்து,

"என்னை... என்னை நானே கொன்னு போட்ருவேன்.” என்று அவள் அழுத்தமாய் கூறிய மறுநொடி உலர்ந்து போனவன், சிறு கோபம் கலந்த தவிப்புடன் அவளது இதழை தன் விரல் கொண்டு மூடி, அவளது கண்ணைப் பார்த்து, "இன்னைக்கு இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, சாகுறவரைக்கும் உன்னை என் மனசுல சுமப்பேன், உன்னைத் தவிர வேற எந்தப் பொண்ணுக்கும் என் மனசுல இடம் இல்லை.” என்றவனின் வார்த்தைகளில் தோன்றிய உறுதி, அவனது குரலின் அழுத்தத்தில் பிரதிபலிக்க, மனதின் உள்ள உறுதி அவனது கண்களில் மிளிரியது.

ஆஷிக் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் ஜியாவிற்குச் சந்தோஷத்தை அளிக்க, அவளது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது.

ஆஷிக் தன் மீது கோபமாக இருக்கிறான் என்பதை அவன் கண்களைப் பார்த்தே உணர்ந்தவள், தன்னவனைச் சமாதானம் செய்யும் நோக்குடன், “சாரி, தெரியாம அப்படிச் சொல்லிட்டேன், ப்ளீஸ்பா இனிமே இப்படிச் சொல்லமாட்டேன். சத்தியமா சொல்லமாட்டேன்... ப்ராமிஸ்! இனிமே செத்துப்போறது இல்லை, உன்னை விட்டு போகணும்னு கூட என்னைக்கும் சொல்ல மாட்டேன். நினைக்கவும் மாட்டேன்.” என்று சிறு குழந்தையைப் போலத் தன் கண்களை விரித்து, தலையைச் சரித்துக் கேட்க, கோபம் தணியாமல் அவன் அப்படியே நின்றான்.

அவனைச் சமாதானம் செய்ய வேறு வழியின்றி, “கால் வலிக்குது ஆஷிக்.” என்று கூற,

கோபத்தை மறந்து பதறியவன், "அடிபட்டுதே அங்கையா?” என்று வருத்தமாய் கேட்க,

"ம்ம், ரொம்பப்பா...” என்று சிணுங்கியவளை சோபா மீது அமர செய்தவன், தன்னவளது காலை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு, அடிபட்ட விரலை தன் ஐவிரல் கொண்டு நீவி விட, அந்த ஸ்பரிசத்தில் லயித்திருந்தவளிடம், "இன்னும் வலிக்குதா?” என்று கேட்க,

"கொஞ்சமா...” என்று தன் உதட்டை சுளித்தவாறே பதிலளித்தவளின் முகபாவனையைக் கண்டு ரசித்தவன், அடிபட்ட விரலில் ஒரு முத்தம் வைக்கவும் ஜியாவின் கண்கள் கலங்கி விட்டது. ஆஷிக் காதலாய் தனக்குப் பணிவிடை செய்ததை எண்ணி உள்ளம் நெகிழந்தவளுக்கு, அப்படியே அவனை அள்ளி எடுத்து தனக்குள் புதைத்துவிட வேண்டும் என்பது போல் இருந்தது.

"ஆஷிக்!” என்று மெலிந்த குரலில் ஜியா அழைக்கவும், ஆஷிக் அவள் புறம் நிமிர்ந்து அவளது முகத்தைப் பார்க்க, அவளது கண்கள் கலங்கியிருந்ததைக் கண்டதும் பதறியவன்,

"என்னாச்சு, ரொம்ப வலிக்குதா?” என்று கேட்க,

"சாரி ஆஷிக், என் மேல ரொம்ப நேரம் கோபமா இருக்காத.” என்று சிறு குழந்தையைப் போலத் தன் கண்களை உருட்டி உருட்டி முகபாவத்தோடு பேசியவளின் அழகில் சொக்கியே போனவன், தன் மேல் இருந்த ஜியாவின் பாதத்தை மெல்லமாய் கீழே வைத்துவிட்டு, அவளது அருகில் வந்து கலங்கிய அவளது கண்களைத் துடைத்தவாறே,

"அழாதடா, நீ அப்படிச் சொன்னதும் எனக்குக் கோபம் வந்திருச்சு. ஏன்டி உன்னை நான் எவ்வளவு விரும்புறேன்னு சொல்லிதான் உனக்குத் தெரியணுமா? ம்ம்...” என்று அவளது மூக்கோடு மூக்கை உரசினான்.

"சாரி ஆஷிக், தியா அப்படிச் சொன்னதும் எனக்கு ஒரு மாதிரியா ஆகிடுச்சு. ஆனா நீ என் மேல கோபப்பட்டாலும் எனக்கு ஒன்னுனு சொன்னதும் துடிச்சு போறத பார்த்ததும் கண்ணு கலங்கிடுச்சு."

"கோபப்படணும்னுதான் நினைக்கிறேன், ஆனா கண்ணைக் கண்ணை உருட்டி என்னை மயக்கிடுற. சில நேரம் சிரிச்சு மயக்குற, சில சமயம் என்னனே தெரியலை, அப்படி உன்கிட்ட எதைப் பார்த்து இப்படிக் கிறங்கி போயிருக்கேன்னு. ஆனா என்னை ஆட்டிப்படைக்குறடி நீ.

அப்படியே உன்னைக் கடிச்சு சாப்பிடணும் போல இருக்கு.” என்று அவளது நெற்றியை முட்டியவாறு கூற, அவனது சிகையைக் கோதியவாறே உச்சியில் முத்தமிட்டாள். அது போதாதெனத் தன்னவனது நெற்றியை மறைத்திருந்த முடியினை விலக்கிவிட்டு அங்கும் தன் இதழைக் காதலாய் பதித்தாள்.

மெல்ல கீழே இறங்கி அவனது கன்னங்களைத் தன் அதரங்களுக்கு விருந்தளிக்க, காதலாய் தன்னவள் தீண்டியதில் தன் கண்களை மூடியவன், சில நொடிகள் தன்னவளின் தாப தீண்டலில் சொக்கியே போனான்.

கண்களை மூடி இதழோரம் புன்னகையைத் தளும்ப விட்டிருந்தவனின் அழகில் மேலும் மூழ்கியவள், தன் உதட்டைக் கடித்துத் தன் உணர்வுகளை அடக்கப் போராட, அது முடியாது போகவும் அவனிடம் இருந்து விலக எத்தனித்தாள்.

விலகப் போனவளின் கைகளைப் பற்றியவன் அதை மெல்லமாய் தன் பக்கம் இழுக்க, அவளோ அவன் இழுத்த வேகத்தில் அவனது மடியில் வந்து அமர்ந்துகொள்ள, தன் இடக்கரம் கொண்டு வாரி இடையோடு சேர்த்து அணைத்துக்கொண்டவன், முகத்தைத் தன்னவளின் கழுத்தில் புதைத்துக்கொண்டு புதையல் எடுக்க, ஜியாவின் இடையை வளைத்துக்கொண்ட அவனது இடது கரத்தில் உள்ள ஐவிரல்களோ தங்களின் செல்ல தீண்டல்களைத் தொடங்கியது. செல்ல தீண்டலில் மேனி சிலிர்த்தவள் தன் கண்கள் கிறங்க, வெட்கத்தில் தன் விழிகளை மூடி, தன் இடக்கரத்தால் அவனது சிகையை நன்கு பற்றியவாறு அமர்ந்திருந்தாள்.

பின் மெதுவாக முன்னேறிய அவனது இதழ்கள், புதைந்திருந்த தன்னவளின் கழுத்தில் தன் அதரத்தைப் பதித்தது.

தன்னவனை ஏறிட்டு பார்க்க முடியாமல் வெட்கம் தடுக்க, அதற்கு மேல் தாங்க முடியாமல் ஆஷிக்கின் முகத்தைப் பற்றித் நிமிர்த்தியவள், சில நொடிகள் கூட அவனது காந்த பார்வையைத் தாங்க முடியாது, தானாகவே அவனது மார்பில் சாய்ந்து தன் முகத்தைப் புதைத்து கொண்டாள்.

வெட்கத்தில் தன் மார்புச் சட்டையைக் கசக்கியவாறு அதன் பொத்தானை திருகிக்கொண்டிருந்த, தன் காதலியின் ஐவிரல்களையும் பற்றி முத்தமிட்டவன் நிமிர்ந்து தன்னவளைப் பார்த்து,

அவளது நெற்றியில் படிந்திருந்த கேசத்தை விலக்கி மெதுவாகத் தன் இதழ் பதித்து, பின் மெல்ல கீழிறங்கி அலைபாய்ந்து கொண்டிருந்த விழிகளைத் தன் இதழ் ஒற்றலால் ஆசுவாசப்படுத்தினான். லேசாய் சிவந்திருந்த மூக்கின் நுனியை முத்தமிட்டு, கள்வெறியோடு துடித்துக் கொண்டிருந்த அவளது செந்நிற செவ்விதழை, தன் அதரத்தால் அதிகாரமாய் மூடி அதன் துடிப்பை நிறுத்தி தனக்குள் அடக்கினான்.

மென்மையாய் இதழை மூடியவன் தன்னையே மறந்து ஆனந்த களிப்பில் தன் முத்தத்தின் அழுத்தத்தைக் கூட்டினான். இதழின் துடிப்பு அடங்க இதயத்தின் துடிப்பு அதிகரித்தது. சுவாசத்தின் வேண்டுதலுக்காகத் தன் முத்தப் போரை ஒற்றி வைத்தவன், அவளது நெற்றியோடு தன் நெற்றி சாய்த்து மூச்சு வாங்கிக்கொண்டிருக்க, மீண்டும் அவளது இதழை வசப்படுத்த முயற்சிக்க அவனைத் தடுத்து நிறுத்தினாள்.

"ஆதர்ஷும் தியாவும் வந்திற போறாங்க.” என்று கெஞ்ச,

"அப்போ அவங்க வராட்டா உனக்கு ஓகேவா?” என்று தன் காதோடு உதடு உரச கேலி பேசிச் சிரித்தவனை, தன் முகத்தை விட்டு விலக்கியவள் அவனைச் செல்லமாய் முறைத்து, தன்னை கேலி செய்த தன்னவனின் உதட்டை சுண்டிவிட்டு, அவன் எதிர்பாராத நேரம் பார்த்து அவனது கன்னங்களை நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.

"ஆ... ராட்சஷி! ஏன்டி கிள்ளுன?” என்றவனைப் பார்த்து சிரித்தவள் அவனுக்கு அளவம் காட்டிவிட்டு ஓட,

"உன்னை...” என்றவாறு அவளைத் துரத்திக்கொண்டு பின்னால் வந்தவன், ஒருவழியாக அவளைப் பின்னால் இருந்து பிடித்து தன் முகத்தின் ரோமங்கள் கொண்டு அவளது கன்னத்தை உரச, தேகம் சிலிர்த்தவள் கூச்சத்தில், "ப்ளீஸ் ஆஷிக் கிச்சலமா இருக்கு...” என்று சிணுங்கியதும்,

"அது என்னைக் கிள்ளுறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும்.” என்று கூறி சிரித்தவன், பதிலுக்கு அவளது கன்னங்களை மென்மையாய் கிள்ள,

அந்த நேரம் பார்த்து தியா, "கதவை தட்டிட்டு போ." என ஆதர்ஷ் கூறியதை தன் காதில் வாங்காமல் சட்டென்று உள்ளே வர, ஆஷிக் ஜியாவை அணைத்துக்கொண்டு நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

"ஏய் கம் ஆன் தியா! நீ தோத்து போயிட்ட...” என்று உற்சாகத்தில் துள்ளி குதித்த ஆதர்ஷ், "பணத்தை எடு, நான்தான் சொன்னேன்ல நாம திரும்பிவரும் போது ரெண்டு பேரும் சேர்ந்திருவாங்கனு. இவங்க ரெண்டும் பேரும் மேட் ஃபார் ஈச் அதர்.” என்று மகிழ்ச்சி ததும்ப தியாவிடம் கூறினான்.

பல வருடங்களுக்கு முன்பு அவன் கூறிய வார்த்தைகள் இப்பொழுது தியாவின் காதில் ரீங்காரம் இட, தன் காதை இருக்கரங்களால் மூடியவள், "நோ...” என்று தன் அறையே அதிரும் அளவிற்குக் கத்தினாள்.

***

நிலவே 37

அந்த நேரம் பார்த்து தியாவின் மொபைல் சிணுங்க, தன்னை ஆசுவாசப்படுத்தியவள் மொபைலை எடுத்துப் பார்க்க, திரையில் மான்சி காலிங் என்ற பெயர் தெரிந்தது. கோபத்தில் மொபைலை தூக்கி எறிய போனவள், பின்பு தன் மனதை மாற்றிக்கொண்டு கடைசி ரிங்கில் அட்டென்ட் செய்து எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க,

எதிர்முனையில் மான்சி, "ஹாய் தியா டார்லிங், எப்படி இருக்க? பார்த்து ரொம்ப நாளாச்சு, மும்பை வந்திருக்க, ஆனா என்னைப் பார்க்க வரவே இல்லை?"

"நாளைக்கு மீட் பண்ணலாம்னு இருந்தேன்.” என்று தியா தாழ்ந்த குரலில் கூற,

"இட்ஸ் ஓகே டியர், உனக்கு ஒரு குட் நியூஸ். எனக்கு மானவ் கூட மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிருக்கு. நான் நாளைக்கு உன் வீட்டுக்கு உன்னை இன்வைட் பண்ண வருவேன் நீ எப்போ ஃப்ரீனு சொல்லு."

"ம்ம்..."

"என்ன ம்ம்னு சொல்ற, நான் குட் நியூஸ் சொல்லிருக்கேன் எனக்கு விஷ் பண்ணவே இல்லை?"

"ஆல் தி பெஸ்ட்!” வேண்டா வெறுப்பாக வெளி வந்தது வார்த்தைகள்.

"நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், உனக்கில்லையா?" என்ற மான்சியிடம் தன் பொறுமையை இழந்த தியா,

"கல்யாணம் உனக்குத் தானே?"

"ஆமா"

"மாப்பிள்ளை யாரு?"

"மானவ்டி"

"ரொம்பப் புடிக்குமோ?"

"என்ன இப்படிக் கேட்டுட்ட, என் லவ்வ அவன்கிட்ட சொல்லி என்னையும் அவனையும் சேர்த்து வச்சதே நீ தானே?"

"அப்போ நீ சந்தோஷப்படுறதில அர்த்தம் இருக்கு, ஆனா நான் ஏன் சந்தோஷப்படணும்?"

"தியா என்னாச்சு உனக்கு, எதுவும் பிரச்சனையா?" என்றவள் சில நொடிகள் கழித்து மேலும் தொடர்ந்து, "ஆஷிக் விஷயம் என்னாச்சு? நீ உன் மனசுல உள்ளதை அவன்கிட்ட சொல்லிட்டியா?"

"சொன்னா மட்டும் என்ன ஆகப் போகுது?"

"என்னடி இப்படிச் சொல்ற? உனக்காகத் தானே நாம ஜியாவை ஆஷிக்கிட்ட இருந்து பிரிச்சோம்."

"பிரிச்சு..."

"தியா இப்படி ஏட்டிக்குப் போட்டியா பேசாத, நீ ஆஷிக்கிட்ட பேசுனியா இல்லையா?"

"ஜியா மறுபடியும் வந்துட்டா.” என்று ஆரம்பித்தவள், ஜியா மறுபடியும் வந்ததில் ஆரம்பித்து இன்று நடந்த அனைத்தையும் பற்றிக் கூற, அதிர்ச்சியான மான்சி, தியாவை சமாதானம் செய்யும் நோக்குடன்,

"ஆனா ஆஷிக், ஜியாவ நம்பலைல? உன்னைத்தானே நம்பிருக்கான்."

"நம்பி என்ன பண்ண? அவன் அந்த ஜியாவ தானே கொஞ்சிட்டு இருக்கான். என்னை நம்புறான் அவ்வளவுதான், அவன் தெளிவா சொல்லிட்டான். அவனோட மனசுல ஜியாவ தவிர வேற எந்தப் பொண்ணுக்கும் இடம் இல்லையாம். ஜியா தன்னை வேண்டாம்னு சொன்னாலும் ஜியாவை நினைச்சுகிட்டே வாழ்ந்திருவானாம் அந்த இடியட்!

அவ இல்லாத இந்த ஆறு வருஷத்துல அவளை அப்படித் திட்டினான்டி. ஆனா அவளைப் பார்த்த மறு நிமிஷம் ஹட்ச் டாக் மாதிரி பின்னாடியே போறான். ஆதர்ஷ், ஜியாவும் ஆஷிக்கும் பிரியவே மாட்டாங்கனு சொன்னது இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு. எனக்கு இப்போ வர்ற கோபத்துக்கு அப்படியே அந்த ஜியாவை கொன்னு போடலாம் போல இருக்கு. கஷ்டப்பட்டு ஜியாவையும் ஆஷிக்கையும் பிரிச்சேன், அது எல்லாம் இன்னைக்கு வேஸ்ட்டா போச்சு."

என்று தன் தோழியிடம் தியா தன் மனதில் உள்ள பாரத்தைக் கொட்டி தீர்த்தாள்

"நீ எதுக்கும் வருத்தப்படாத தியா, நாம எதாவது யோசிக்கலாம்."

"எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு, நான் அப்புறம் பேசுறேன் மான்சி.” என்று கூறிவிட்டு தன் ஃபோனை துண்டித்தவள்,

மொபைலில் சார்ஜ் இல்லாததைப் பார்த்து, சார்ஜ் போடுவதற்காக ஸ்விட்ச் போர்ட் அருகில் சென்று மொபைலுக்கு சார்ஜ் போட்டுக் கொண்டிருக்கும் நேரம், தன் கதவின் அருகில் யாரோ நிற்பது போல் தெரிந்து யார் என்று பார்க்க, அங்கே ஆஷிக் தன் கண்கள் ஈரமாக, தன் அதரங்கள் துடிக்க, கைகளில் நரம்பு புடைக்க அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் செய்வதறியாது தன் கையில் இருந்த மொபைலை பதற்றத்தில் கீழே போட்டவாறு அவனையே பார்க்க, அவனது வதைந்து போன வதனமே அவன் தான் பேசியதை கேட்டுவிட்டான் என்பதை மிகத் தெளிவாகப் பிரதிபலித்தது.

தியாவின் முகத்தில் பயமும் பதற்றமும் குடிகொள்ள தன்னை ஆசுவாசப்படுத்தியவள், வழக்கம் போல ஆஷிக்கின் அருகில் வந்து ஒருவித குருட்டு நம்பிக்கையில்,

"வா ஆஷிக், என்ன அங்கையே...” என்று தட்டு தடுமாறி பாதி வார்த்தைகளை விழுங்கியவாறு தொடர்வதற்குள், அவளை விட்டு ரெண்டடி பின்னால் சென்றவன் தன் கையை உயர்த்தி வேண்டாம் என்பது போலக் காட்டி கலங்கிய கண்களுடன்,

"உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை.” என்று கூறியவன் அங்கிருந்து வேகமாகச் செல்ல,

அவனது கரம் பிடித்துத் தடுத்த தியா, "ஆஷிக் நீ எதோ தப்பா நினைச்சுட்டு இருக்க...” என்று சொல்ல,

"நான் எல்லாத்தையும் கேட்டுட்டேன் தியா.” என்று ஆவேசமாக உறுமினான்.

முதன் முதலில் ஆஷிக்கின் அதீத கோபத்தைப் பார்த்தவளின் கண்களில் கண்ணீர் தானாகக் குடிகொள்ள, "ஆஷிக் நான் சொல்றத புரிஞ்சிக்கோ.” என்றாள் நடுங்கும் குரலில்.

"இன்னும் என்ன புரிணும், உயிருக்கு உயிரா நேசிக்கிறவள விட்டுட்டு உன்னைச் சமாதானம் பண்ண வந்தேன். நம்புனனே? ஏன் எனக்கு இப்படி ஒரு துரோகத்தைப் பண்ணின? அப்போ நீ என்னை உன் நண்பனாவே நினைக்கல? உன்னை என் குடும்பத்துல ஒருத்தியா தானே பார்த்தேன்.” தளர்ந்த குரலில் கேட்டான்.

"ஜியா உனக்குச் சரி இல்லை, அவ உன்னை லவ் பண்ணல."

"ஷட் அப்!” என்று வெகுண்டெழுந்த எரிச்சலோடு கத்தியவன் அவளிடம் கண்கள் சிவக்க,

"இனிமே நீ ஜியாவ பத்தி ஒரு வார்த்தை பேசுனா கூட என்னால அதை ஏத்துக்க முடியாது. அந்தத் தகுதிய நீ என்னைக்கோ இழந்துட்ட. அப்போ அன்னைக்கு காலையில ஜியா என்னைத் தேடி வந்தது உண்மை. வேணும்னே ஜியா எனக்குக் குடுத்த ஷர்ட்ல ஜூசை கொட்டிருக்க. நான் எவ்வளவு பெரிய முட்டாள்ல? உன்னைப் போய் நம்பிருக்கேன்?"

"ஆஷிக் ஆனா இது எதையுமே நான் பிளான் பண்ணி எல்லாம் பண்ணல."

"கிடைச்ச சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணிருக்க, சரியா சொன்னேனா?” என்றவனுக்குப் பதில் கூறமுடியாமல் அமைதியாக நின்றவளிடம்,

"ரெண்டுக்கும் ரொம்பப் பெரிய வித்யாசம் இல்லை தியா. எனக்கு ஒரு விஷயம் புரியல, நான் ஜியாவை உயிருக்கு உயிரா நேசிக்கிறது தெரிஞ்சும் எப்படி உன்னால அப்படிப் பண்ண முடிஞ்சிது?"

"ஆஷிக் நான் இதெல்லாம் உனக்காகப் பண்ணினேன், நமக்காகப் பண்ணினேன். நான் உன்னை அந்த அளவுக்குக் காதலிக்கிறேன்."

"எனக்காக, மை புட்...” என்று முகம் சுளிக்கவும் அவளுக்குப் பளார் என்று அறைந்தது போல் இருந்தது.

"நீ நிஜமாவே என்னை உண்மையா நேசிச்சுருந்தனா கண்டிப்பா இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிருக்க மாட்ட. ஏன்னா காதல் என்னைக்கும் கெடுதல் நினைக்காது, காதல் துரோகம் பண்ண சொல்லாது, பொய் சொல்ல சொல்லாது. நாம நேசிக்கிறவங்க நம்மள நேசிக்காட்டாலும் அவங்களைக் கஷ்டப்படுத்த வைக்காது. நீ உண்மையாவே நேசிச்சுருந்தனா என் சந்தோஷத்தை உன் சந்தோஷமா நினைச்சுருப்ப."

"ஆஷிக் நான்..."

"நீ என்னை எப்படி நினைச்சனு எனக்குத் தெரியாது. ஆனா நான் உன்னை என் உயிர் தோழியாதான் நினைச்சேன். உங்கிட்ட இருந்து இப்படி ஒரு விஷயத்தை நான் எதிர்பார்க்கலை. நீ என் நம்பிக்கைய மட்டும் உடைக்கலை, என்னையும் சேர்த்து உடைச்சுட்ட."

"ஆஷிக் எனக்கு ஒரு வாய்ப்பு குடு..."

"ச்சீ... எந்த முகத்தை வச்சுட்டு என் பேரை சொல்ற? அப்படி மறுபடியும் கூப்பிடாத அறுவெறுப்பா இருக்கு. எப்படி உன்னால என்னை உன்கூட சேர்த்து வச்சு பார்க்க முடிஞ்சிது? ச்சீ... எரிச்சலா இருக்கு. இனிமே நாம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பார்க்காம இருக்கிறதுதான் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது.” என்று வார்த்தைகளை அமிலம் போலக் கொட்டியவன், திரும்பி கூடப் பார்க்காமல் அங்கிருந்து வேகமாய் கிளம்பி புயல் வேகத்தில் தன் காரை செலுத்தினான்.

தியா மட்டும் ஆஷிக், ஜியாவின் உண்மையான காதலைப் புரிந்து கொண்டிருந்தால், இன்று ஒரு நல்ல நண்பனை அவள் இழந்திருக்க மாட்டாள்.

தியா இன்று தன் நண்பனையும் இழந்து, தன் காதலையும் இழந்து தனியாய் இருப்பதற்குக் காரணம் 'நான்' என்றே செருக்கே. அவள் உண்மையாக ஆஷிக்கைக் காதலித்திருந்தால் கண்டிப்பா அவள் ஆஷிக்கின் காதலை மதித்திருப்பாள். தியாவுக்கு ஆஷிக் மீதுள்ள அன்பை விட ஜியா மீதுள்ள வெறுப்புதான் அதிகமாக இருந்தது.

அவனது நட்புக்கும் அவள் உண்மையாக இல்லை, அவன் காதலுக்கும் அவள் தகுதியாக இல்லை. இதை இனிமேல் அவள் உணர்ந்தாலும் பழைய நட்பு அவளுக்கு மீண்டும் கிடைக்குமா? காலம்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்!

காரில் வரும் வழியெல்லாம் ஆஷிக்கிற்குத் தியாவின் ஞாபகம்தான் வந்தது. தான், ஆதர்ஷ், தியா மூவரும் சிறுவயதில் முதன் முதலில் சந்தித்தது என்று, தங்களின் சிறுவயது முதலான பள்ளி பருவத்தை நினைத்தவனின் கண்களில் இருந்து, விழிநீர் அமிலம் போலக் கசிந்து அவனது இதயத்தைப் பொசுக்கியது.

தான் பள்ளியில் சேர்ந்த முதல் நாளில் இருந்தே தியா தன் தோழி என்பதால், அவனால் தியாவின் செய்கையை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. தனது எல்லாச் சுக துக்கத்திலும் ஆதர்ஷும் தியாவும் இருந்திருப்பதால், அவர்கள் என்றால் ஆஷிக்குக்கு மிகவும் பிடிக்கும்.

இன்று தியா செய்த காரியம் ஆஷிக்கின் உள்ளத்தை மிகவும் ரணப்படுத்திவிட்டது. தியா இல்லாததைத் தன் கண்களில் ஒன்றை இழந்தது போல உணர்ந்தான். இந்த உலகமே அவனுக்கு இருளாய் தெரிந்தது.

தந்தையைத் தொடங்கி இப்பொழுது தோழியும் தன்னை ஏமாற்றிவிட்டாளே, தன் மனதை காயப்படுத்திவிட்டாளே என்று மிகவும் வருந்தினான்.

சிறு வயது ஞாபகங்கள் அவன் முன் மின்னலைப் போல வந்து மறைய மிகவும் கவலையுற்றான். எது கிடைத்தாலும் மூவரும் சேர்ந்தே உண்பது, எங்குப் போனாலும் சேர்ந்தே செல்வது, எப்பொழுதும் 'ஆஷி ஆஷி' என்று தன் பின்னாலே வரும் தியாவின் மழலை குரல், திடீரென்று இப்பொழுது அவனது காதில் ஒலித்தது.

"ஆஷி ஆஷி...” என்று தியா யூனிஃபார்ம் அணிந்து கொண்டு தத்தையாக ஓடிவர,

"வா சீக்கிரம்” என்று ஆஷிக் தன் ஷூ லேஸை கூட ஒழுங்காக கட்டாமல் ஓட,

"ஆஷிக் சீக்கிரமா வா, சீக்கிரமா வா. ஐஸ்க்ரீம் மாமா போயிருவாங்க."

"வந்துட்டேன் ஆதர்ஷ், சீக்கிரம் வா தியா.” என்றவாறு அவன் கண் முன்னால் மூவரும் கை கோர்த்து செல்வது போலப் பிம்பம் தெரிய, கண்ணீருடன் சேர்த்து புன்னகையையும் சிந்தினான். அந்தப் பிம்பம் மறைந்து போக, அவனது புன்னகையும் மறைந்து போயின. தியா செய்ததை ஆஷிக்கால் ஜீரணிக்கவே முடியவில்லை.

"ஏன் தியா இதெல்லாம் பண்றதுக்கு முன்னாடி என்னைப் பத்தி ஒரு நிமிஷம் கூடவா நீ யோசிக்கலை?” என்று தேம்பி தேம்பி அழுதான். அனைத்தையும் சிந்தித்து வருந்தியவனுக்கு அடுத்ததாய் நினைவிற்கு வந்தது ஜியா. ‘இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளைச் சந்திக்கப் போகிறோம்?’ என்று அவனது உள்ளம் அவனைக் கேள்வி கேட்க மிகவும் வேதனை அடைந்தான்.

ஜியா தன் அறையின் கதவை தாழிட்டுக் கொண்டு, கதவில் சாய்ந்து அமர்ந்தவாறே ஆஷிக்கை நினைத்து,

"நீ என் மேல வச்சுருக்கிற காதலை நினைச்சு நான் சந்தோஷப்படவா, இல்லை அழவானு எனக்குத் தெரியலை ஆஷிக். என்னை மன்னிச்சுருடா, என்னோட சந்தேகப் புத்திக்கு நம்மளோட காதலை நான் இரையாக்கிட்டேன். ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்ல? ஒவ்வொரு தடவையும் துரோகி துரோகினு சொல்லி உன் மனசையே ரணமாகிட்டனே?

நீ என்னை மன்னிச்சு மறுபடியும் ஏத்துக்கணும், ரெண்டு பேரும் போட்டிபோட்டு ஒருத்தர ஒருத்தர் காதலிக்கனும். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும். உன்கூட வாழணும் ஆஷிக். ஆனா அது எதுவமே நடக்காதுனு நினைக்கும் போதே வலிக்குதுடா.

நீ என்கிட்ட கோபமாதான் இருக்கணும், அதுதான் எனக்கும் வேணும். என்னைக்கும் நீ என்னை வெறுக்கணும், என்னை விட ஆயிர மடங்கு பெட்டரான ஒரு பொண்ணை நீ கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கணும். அதுதான் எனக்கு வேணும் ஆஷிக்.

உனக்கும் உன் காதலுக்கும் கொஞ்சம் கூடத் தகுதியே இல்லாதவ நான். உன்னைப் புரிஞ்சிக்காம உன்னை விட்டு பிரிஞ்சப்ப அழுததை விட, இன்னைக்கு உன்னைப் புரிஞ்சதுக்கப்புறம் நான் அதிகமா அழுறேன்.

என் மொத்த வாழ்க்கையையும் உன்கூட வாழணும்னு ஆசைப்பட்டேன். ஆனா ஒரு நிமிஷம் கூட உன் கூட வாழுற தகுதிய இப்படி இழந்துட்டு நிற்பேன்னு நான் நினைச்சது இல்லை.” என்று மனம் உடைந்து வெடித்தெழுந்து கதறினாள். விழிகளில் கண்ணீர் திரண்டது.

ஒருவகையாகத் தன்னை ஆசுவாசபடுத்தியவள் சிணுங்கிய தன் அலைபேசியைப் பார்க்க, மொபைல் ஸ்க்ரீனில் ஆஷிக் காலிங் என்று வர, உடனே அட்டென்ட் செய்தவள் எதுவும் பேசுவதற்குள், "கீழ வா.” என்ற குரலில் இருந்த நடுக்கம், தளர்ச்சி அவளது மனதைப் பிசைய, தன் அறையின் ஜன்னல் வழியே வெட்டுண்ட கிளையைப் போலத் தளர்ந்து சோர்ந்து போய் இருந்தவனைக் கண்டவள், தன் சித்தி சித்தப்பா, தங்கை மூவரும் தூங்கியதை உறுதி செய்துவிட்டு யாரும் அறியாமல் கீழே சென்றாள்.

"என்ன ஆஷிக், இந்த நேரத்துல இங்க என்ன பண்ற?” என்று முடிப்பதற்குள் ஆஷிக், ஜியாவை மிக நெருக்கமாக மிக இறுக்கமாக மிகவும் உறுதியாக அணைத்திருந்தான்.

அவனது கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள் அவளது ஆடையையும் மீறி முதுகை நனைக்க, அவனைத் தன்னிடம் இருந்து விலக எத்தனித்தவளை விடமால் இறுக்கி அணைத்தவாறே,

"ப்ளீஸ் ஐ நீட் யு!” என்று ஆஷிக் தளர்ந்த குரலில் கூற, அவளையும் அறியாமல் அவள் அவனது சிகையை வருடி கொடுத்தாள்.

தன்னவளின் வருடல் அவனது காயப்பட்ட உள்ளத்திற்கு இதம் அளிக்க, மனதில் அடைத்திருந்த பாரம் சிறிது சிறிதாய் விலகுவதை உணர்ந்தவன், அணைப்பை விலக்காது அணைப்பின் இறுக்கத்தை மட்டும் சற்று தளர்த்தி அவளை அணைத்தவாறே,

"தியா இப்படிப் பண்ணுவானு நான் நினைக்கலை, உன்னை நான் நம்பிருக்கணும்.” என்ற மறுகணமே தியாவைப் பற்றிய உண்மை ஆஷிக்கிற்கு விளங்கிவிட்டது என்பதை அறிந்தவளின் மனம் ஒரு நொடி களிப்புற்றாலும் மறுநொடி மிக வேதனை அடைந்தது. சில நொடிகளில் ஜியாவிடம் இருந்து விலகியவன் அவளது கரங்களைப் பற்றியவாறே,

"என்னை ஏத்துக்குவியா?” என்று கேட்க,

"என்ன ஆஷிக் இப்படிச் சொல்ற? உன்னை நம்பாம நான்தான் உன்னை ரொம்பக் காயப்படுத்திட்டேன். உன்கிட்ட மன்னிப்பு கேக்குற தகுதி கூட எனக்கில்லை...” என்று அவள் தன் பதிலை முடிப்பதற்குள், அவளது முகத்தைத் தன் கையில் ஏந்தினான்.

"உன்னை நான் இப்போ மன்னிச்சா, என்னை மறுபடியும் விட்டுட்டு போக மாட்டல்ல?” என்று தவிப்புடன் கேட்க, ஊமையாய் கதறியவள் பதில் எதுவும் பேசாமல் இருந்தாள்.

அவளிடம் இருந்து எந்தவித பதிலும் வராமல் போகச் சட்டென்று தனது கரத்தை அவளது வதனத்தில் இருந்து எடுத்தவன், தவிப்புடன் அவளைப் பார்க்க,

அவனது தவிப்பினைக் கண்ட அவளது உள்ளம் தீப்பிழம்பில் விழுந்தது போல உருகி தவித்தது. ஏற்கனவே உடைந்து போய் இருந்தவனை மேலும் சிதைக்க விரும்பாதவள், வெடுக்கென விலகின அவனது கரங்களை எடுத்து தன் முகத்தின் மீது மீண்டும் வைத்து, அவனது கண்களில் வழிந்த கண்ணீரை தன் மென் கரத்தால் துடைத்தவள், கீழே மண் தரையில் அமர்ந்து அவனையும் தன் அருகில் அமரச்செய்தாள்.

தன் விழிகளில் தன் கேள்விக்கான பதிலை துளையிட்டுத் தேடிக்கொண்டிருந்த அவனது விழிகளைப் பார்த்ததுமே, அவனது மனதில் சுழன்று கொண்டிருக்கும் கேள்வி என்ன என்பது புரிய,

‘ஆஷிக் உன் காதலுக்கு எனக்குத் தகுதியே இல்லடா, ஆனா ஏற்கனவே உடைஞ்சி போயிருக்கிற உன்னை இன்னைக்கு என்னால உடைக்க முடியாது. உனக்குத் தகுதி ஆனவ நான் இல்லை.’ என்று தன் மனதிற்குள் அதற்கான பதிலைக் கூறினாள்.

கேள்வியாய் தன்னையேப் பார்த்தவனை மெதுவாய் தன் மடியில் கிடத்தி, மெல்ல தன் விரல்களால் அவனது தலையைக் கோத, தன்னவளின் பூ கரங்கள் பட்டதும் மெல்ல மெல்ல தன் கவலையை மறந்தவன், தியாவைப் பற்றிய உண்மையை ஜியாவிடம் கூறி மிகவும் ஆதங்கப்பட்டான்.

சில நொடிகள் கழித்து ஆஷிக் மீண்டும், "ஜியா இன்னும் நீ எனக்குப் பதில் சொல்லல?” என்று நிதானமாகவும் உறுதியாகவும் கேட்டான்.

ஜியா, ‘உன் கூடவே வாழணும்டா, அதுதான் என் ஒரே ஆசையும் கூட. ஆனா என் நிலைமைய நான் எப்படிடா உனக்குப் புரிய வைக்கப் போறேன்?’ என்று தன் மனதிற்கு மட்டும் கேட்குமாறு கூற, அவள் உள்ளத்தின் குமுறல்கள் வேண்டுமானால் ஆஷிக்கிற்குக் கேட்காமல் இருந்திருக்கலாம், ஆனால் அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள் அவனது முகத்தை நனைத்தது.

விருட்டென்று அவள் மடியில் இருந்து எழுந்திருந்த ஆஷிக் அவளது கண்ணீரை கண்டு பதறி, அவளது கண்களில் நிற்காமல் பாய்ந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்தவாறே,

"அழதாடா, நான்தான் தப்புப் பண்ணிட்டேன். உன்னை நம்பிருக்கணும், எல்லாத்துக்கும் மேல உனக்கு என் மேல சந்தேகம் வராத மாதிரி நான் நடந்திருக்கணும். எல்லாத் தப்பும் என் மேலதான். நீ அழாதடா, உன்கிட்ட நான் அப்படிக் கேட்ருக்கக் கூடாது. எல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம் எப்படி நீ இனிமே என்னை விட்டுட்டு போவ? நான்தான் லூசு மாதிரி பேசிட்டேன். தியா பண்ணின தப்புல நீ என்னைச் சந்தேகப்பட்டுட்ட. இதுல உன் தப்பும் எதுவும் இல்லை.

என்ன நீ அப்போவே என்கிட்ட பேசிருந்தனா ஆறு வருஷம் நாம பிரிஞ்சிருக்க வேண்டாம். சரி எல்லாம் முடிஞ்சிருச்சு, இனிமே அதைப் பத்தி நாம பேசவேண்டாம். புதுசா லைஃப் ஸ்டார்ட் பண்ணுவோம், இனிமே உன் கண்ல இருந்து கண்ணீரே வரக்கூடாது.” என்று கூறி வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு அவளது செந்நிற வதனத்தைத் தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டவனின் கண்களில், ஜியாவுடன் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டோம் என்கின்ற சந்தோஷ கண்ணீர் அமுதம் போலச் சுரந்தது.

ஆனால் ஜியாவோ அவனுக்கு எந்தப் பதிலும் கூற முடியாமல் தன் அழுகையை அடக்கியவாறு, அவனது அணைப்பில் தன் தொலைந்து போன சந்தோஷத்தை சில நொடிகளாவது மீட்டு எடுக்க முடியுமா என்று அற்பமாய் ஏங்கிக்கொண்டிருந்தாள்.

ஏக்கம் தீருமா...? காதல் கைகூடுமா...?


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்

நிலவே 38 & 39
 
Last edited:
Top