Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நிலவே 40 & 41

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
நிலவே 40

எப்படிக் கூறியும் புரிந்து கொள்ளாதவளுக்குத் தன் ஒற்றை முத்தத்தால் உணர்த்திவிட்டான் தன் காதலை!

வன்மை, மென்மை என்று தனது பெண்மையை ஆதிக்கம் செய்த அவனது ஆண்மையில் மெல்ல இளகினாள் ஜியா.

கண்களை மூடி லயித்திருந்தவளைப் பார்த்து, "போகலையா?” என்று கூற, விழிமலர்ந்தவள் அவனது உயிர் வரை சென்று ஊடுருவி பார்க்க,

"ஏன்டி? கண்ணுல என்மேல அவ்வளவு காதலை வச்சுருக்க, அப்புறமும் ஏன்டி இப்படி என்னைக் கஷ்டப்படுத்துற? என்னை நீ வேண்டாம்னு சொல்லும் பொழுது என்னை விட அதிகமா கஷ்டப்படுறது நீதான். செத்து போயிருவேன்னு சொல்ற, ஆனா ஒவ்வொரு தடவையும் என்னை நீ கண்மூடாம பார்க்கும் பொழுது, உன்னை நெருங்கவும் முடியாம விலகவும் முடியாம செத்து செத்துப் பிழைக்கிறது நான்தான்டி.

ஜியா என்னால நீ இல்லாத ஒரு வாழ்க்கைய வாழ்றது கஷ்டம்னா, உன்னால நான் இல்லாம வாழவே முடியாது.” என்றவன் அவளது முகத்தைத் தன் கையில் ஏந்தி,

"வாழணும்டி உன்கூட, நம்பி வா, நெஞ்சுக்குள்ள வச்சுப் பார்த்துகிறேன். நீ இல்லனா நான்...” என்பதற்குள் ஆஷிக்கின் நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள் ஜியா.

"இந்த டிசைன் எப்படி இருக்கு சம்பந்தி?” என்றவாறு ரஸ்மின் ஒரு மோதிரத்தை எடுத்து வந்து ஹாஜராவிடம் காண்பிக்க,

பதிலுக்கு ஹாஜரா, "நல்லா இருக்கு” என்று எதோ ஒப்புக்காகக் கூற,

அவர், "வந்ததுல இருந்தே ஆயிஷாவோட முகமும் உங்க முகமும் சரியே இல்லை. இன்னும் நேற்று நடந்ததைப் பத்தியே நினைச்சுகிட்டு இருக்கீங்களா?"

"ஆமா, ஆஷிக்கை நினைச்சா கவலையா இருக்கு."

"எங்களுக்கும் இல்லாம இல்லை, ஆனாலும் ஆயிஷாவ பாருங்க. நாளைக்கு என்கேஜ்மென்ட், ஆனா அவ முகத்துல அதுக்கான சந்தோஷம் கொஞ்சம் கூட இல்லையே? நீங்க கவலையா இருந்தா அவளும் கவலையா தானே இருப்பா. நீங்க கவலைப்படாதீங்க, எல்லாம் சரியாகும்.” என்றவரின் வார்த்தையில் உள்ள நியாயத்தை உணர்ந்த ஹாஜரா, சரி என்பதாய் அவருக்குப் புன்னகைத்துவிட்டு சோகமாக யாருக்கோ என்று அமர்ந்திருந்த ஆயிஷாவை சமாதானம் செய்தார்.

அப்பொழுது, “அண்ணி, மம்மிஸ் எல்லாரும் ரிங் பார்க்கட்டும், நாம லெஹங்கா பார்க்கலாம். வந்ததுல இருந்து இப்படி அமைதியாவே உட்கார்ந்துட்டு இருக்கீங்க, என்கூட வாங்க.” என்று தாஹிரா ஆயிஷாவை அழைக்க,

ரஸ்மீன், "ஆமா ஆயிஷா, போ உனக்கு என்ன புடிச்சுருக்கோ அதையே வாங்கிக்கோ. எங்க டேஸ்ட் எல்லாம் பழைய மாதிரி இருக்கும், என்ன சொல்றீங்க சம்பந்தி?"

"ஆமா, ரொம்ப சரியா சொன்னீங்க போயிட்டு வாமா.” என்று அவர் இதழோரம் புன்னகைக்க, தாய் புன்னகைத்ததில் மகிழ்ச்சி அடைந்தவள் தாஹிராவுடன் சென்றாள்.

ஆடை வாங்கிய பின்பு தாஹிரா தன் அலைபேசிக்கு அழைப்பு வரவும், தான் இப்பொழுது வந்துவிடுவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல,

பொழுது போக்கிற்காகக் கடையை வலம் வந்த ஆயிஷாவின் கண்களில் ஒரு இளம் ஜோடி புலப்பட, அவர்களின் செய்கைகளைத் தான் இருக்கும் இடத்தில இருந்தே ரசித்துக் கொண்டிருந்தாள்.

அந்தப் பெண் தன் கணவனுக்கு ஷர்ட் தேர்வு செய்வதும் அதற்கு அவன் கேலி செய்வதும் என்று, அவர்களின் சம்பாஷணைகளை ரசித்த ஆயிஷாவின் உதடுகள் புன்னகைக்க மறக்கவில்லை. தன்னையும் சமீரையும் அவர்களின் இடத்தில் வைத்து பார்த்தவளின் கண்களில் அப்படி ஒரு சந்தோஷம்.

"நான் இப்போ யோசிக்கிற மாதிரிதான் சமீரும் யோசிப்பாருல? நாளைக்கு அவருக்கு எதாவது கிஃப்ட் பண்ணினா நல்லா இருக்கும்ல, என்ன வாங்கலாம்?” என்று யோசித்தவளின் கண்களில் வாட்ச் ஷோரூம் தென்பட புன்னகையோடு அங்கே சென்றாள்.

அவளது கண்கள் மொத்த கடையையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்க, திடீரென்று ஒரு கண்ணாடி பெட்டகத்துக்குள் இருந்த ப்ளாக் மெட்டல் வாட்ச் அவளது கண்ணில் பட, அங்கிருந்த அனைத்திலும் தனித்துவமாய் விளங்கிய அந்தக் கைக்கடிகாரம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது.

விற்பனையாளர் அவளிடம், "இது ரொம்ப ரேர் கலெக்ஸன், இந்தியால கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம், யு ஆர் லக்கி.” என்று கூறவும் புன்னகை தளும்ப ஆயிஷா,

"அப்போ என் செலெக்ஸன் சரியாதான் இருந்திருக்கு.” என்று கூறி காதலாய் தனக்குள், ‘சமீர் இது உங்களுக்குப் புடிக்கும்னு நம்புறேன்.’ என்று யோசிக்கும் பொழுதே முகம் கும்குமமாய் சிவந்திருந்தது.

தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிய பிறகு இருவீட்டாரும் கடையை விட்டு கிளம்பும் பொழுது, ஆயிஷாவின் அலைபேசிக்கு வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்த, அலைபேசி வந்த அடுத்த நிமிடம் அனைவரும் ஆதர்ஷின் இல்லத்திற்குச் சென்றனர்.

அவர்கள் அங்கே வரவும் ஜியாவின் சித்தப்பாவும் சித்தியும் அங்கே வந்துவிட, மாலையும் கழுத்துமாய் இருந்த ஆஷிக்கையும் ஜியாவையும் பார்த்த அவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர்.

இருவீட்டாருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அஸாத்தின் கண்கள் கோபத்தீயில் சூடேறி போய் இருந்தது. ஹாஜராவோ என்ன செய்வதென்று விளங்காமல் கண்களில் நீர் வழிய நின்றுகொண்டிருந்தார்.

ஷங்கர் தன் கண்கள் கலங்க வார்த்தைகள் தொண்டைக் குழியை அடைக்கப் பேச முடியாமல் தடுமாறியவாறே, ஜியாவின் அருகில் வந்து, “உன்கிட்ட நான் இப்படி ஒரு காரியத்தை எதிர்பார்க்கல.” என்று கூறவும், “அங்கிள் இதுல ஜியா மேல எந்தத் தப்பும் இல்ல...” என்று குறுக்கிட்ட ஆஷிக்கை, உன்கிட்ட எதுவும் பேச விரும்பவில்லை என்பது போல தன் கரங்களை உயர்த்தியவர், “நான் என் பொண்ணுகிட்ட பேசிட்டு இருக்கேன்.” என்று அவனது முகத்தைக் கூடப் பார்க்காமல் இறுக்கமாகக் கூற, இதற்கு மேல் பதில் எதுவும் பேச முடியாமல் ஆஷிக் அமைதியடைந்தான்.

"ஏன்டா ஜியா இப்படிப் பண்ணின?” என்றதும் ஜியா தேம்பி தேம்பி அழ,

"உன்கிட்ட கேட்டனே, உங்க முடிவுதான் என் முடிவுனு சொன்னியே. நான் உன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலையே, எல்லாருடைய சம்மதத்தோட கல்யாணம் நடக்கணும்னு தானே சொன்னேன். இதைக் கூட நிறைவேத்த முடியாதவன் உன்னை எப்படிக் கால முழுக்கச் சந்தோஷமா வச்சுக்குவான்? இது ஏன்டா உனக்குப் புரியலை?” என்றதும்,

அஸாத் ஏளனமாக, “என்ன ஷங்கர் உங்க பொண்ணு உங்க பேச்ச மீற மாட்டானு சொன்னீங்க, இப்போ என்னாச்சு? அன்னைக்கு என்ன சொன்னீங்க, உங்க பையன் வேணும்னா உங்க பேச்ச கேட்காம போகலாம், ஆனா என் பொண்ணு அப்படி இல்லனு சொன்னீங்க...” என்று கேட்க,

அஸாத்தின் கேள்வியில் கூனி குறுகிய ஷங்கர், "உன்னை என் மரியாதையா நினைச்சேன், ஆனா உன்னால என் மரியாதைப் போகும்னு நான் ஒருநாளும் நினைக்கல.” என்றதும் ஜியா தேம்பி தேம்பி அழுதவாறு,

"சித்தப்பா ப்ளீஸ், என்னை மன்னிச்சுருங்க.” என்று அவரது காலில் விழுந்து கெஞ்ச, தன் கைகளால் அவளை விலக்கிவிட்டவர் பதில் பேசாமல் இறுகிய மனதுடன் அங்கிருந்து செல்ல, திவ்யாவும் ஒன்று பேசமுடியாமல் தன் கணவருடன் அங்கிருந்து சென்றார்.

ஜியா தரையில் அமர்ந்தபடி அழுது கொண்டிருக்க, ஆஷிக்குடன் இணைந்து ஆயிஷா ஹாஜராவும் அவளை ஒருவகையாகச் சமாதானம் செய்து தங்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஆயிஷா, ஜியாவை வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு செல்ல, கோபமாக இருந்த அஸாத்திடம் ஷாஹித், "கோபப்பட்டு எந்த யூசும் இல்லை அஸாத் சார், இனிமே நடக்கப் போறத பாருங்க. ஆஷிக்கிட்ட இதைப் பத்தி எதுவும் பேசாதீங்க. புள்ளைங்க எதோ அவசரப்பட்டுட்டாங்க, அதுக்காக வேண்டாம்னு ஒதுக்கிற முடியுமா? மறப்போம் மன்னிப்போம்னு இனிமே நடக்கபோறதை பார்ப்போம். நாளைக்குச் சந்திப்போம்.” என்றவர், அவரிடமும் ஹாஜராவிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து தன் குடும்பத்தினரோடு சென்றார்.

அவர் சென்ற அடுத்த நொடி அஸாத், ஹாஜராவிடம் கோபம் தெறிக்க, "இப்படி ஒரு காரியத்தைப் பண்றதுக்குத்தான் உன் பையன சீராட்டி வளர்த்தியா? இவன் கல்யாணத்தை எப்படி எல்லாம் பண்ணணும்னு நான் கற்பனை பண்ணினேன் இப்படி என்னை அசிங்க படுத்திட்டானே.

திருட்டுக் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான், அதுவும் நம்ம ஸ்டேடஸ்க்குக் கொஞ்சம் கூட மேட்ச் ஆகாத பொண்ணு கூட. என் பிஸ்னஸ் பாட்னர்ஸ்கும் என் நண்பர்களுக்கும் நான் என்ன சொல்லுவேன், என் பையன் திருட்டுக் கல்யாணம் பண்ணிகிட்டான்னா சொல்ல முடியும்?

இன்னும் கொஞ்ச நேரத்துல நியூஸ் பேப்பர் டிவினு எல்லா இடத்துலயும் வர போகுது, அத்தனை பேரும் என்னைக் கேவலமா பேச போறாங்க. எல்லாத்துக்கும் நீதான்டி காரணம். அவன் சொல்ற எல்லாத்துக்கும் தலைய ஆட்டி ஆட்டி, இப்போ அவன் எனக்கு ஆட்டம் காட்டிட்டான்.” என்று படபடக்க, "இப்போ என்னாச்சுனு இப்படி என் அம்மாகிட்ட கத்திட்டு இருக்கீங்க, எதுவா இருந்தாலும் ஒன் டு ஒன் என்கிட்ட பேசுங்க.” என்று சிடுசிடுத்த ஆஷிக்கிடம்,

ஹாஜரா, “ஆஷிக் எதுவும் பேசாம உள்ள போ.” என்று அதட்ட,

"மா நீங்க அமைதியா இருங்க, இவர் எதுக்கு உங்ககிட்ட கத்திட்டு இருக்காரு?"

"ஆஷிக் உள்ள போ” என்று மீண்டும் அதட்டிய தாயிடம் ஆஷிக்,

"மா நீங்க உள்ள போங்க.” தன் குரலை உயர்த்த,

"ஆஷிக்!” என்று அழுத்தமாக ஹாஜரா கூறவும்,

நிதானம் அடைந்த ஆஷிக், "ம்மா ப்ளீஸ்...” என்று தன்மையான குரலில் அழுத்தமாகக் கூறியதில், இதற்கு மேல் எதுவும் பேச முடியாதவர் அங்கிருந்து சென்றார்.

அவர் சென்றதும் தன் தந்தையின் அருகில் வந்தவன், "என்ன பண்ண போறீங்க மிஸ்டர் அஸாத்? நீங்க நினைச்சது எதுவும் நடக்கலையே, உங்களுக்கு இப்போ என் மேல ரொம்பக் கோபமா இருக்கும்ல. என்னடா நாம நினைக்கிறது ஒன்னா இருக்கு, நடக்குறது வேற ஒன்னா இருக்கேனு தோனுமே... தோனனும். ஆனா உங்கள பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, ஐ ரியலி மீன் இட். சத்தியமா..."

"என்னடா இப்படிலாம் பேசி நீ பெரிய மனுஷன்னு நிரூபிக்கிறீயா? உனக்கு ஏன்டா புரிய மாட்டிக்குது, நீ என் பையன்னு சொல்லி பாரு, அவன் அவன் பொண்ணு தர க்யுல நிற்பான். ஆனா நீ ஒரு மிடில் க்ளாஸ் பொண்ண கல்யாணம் பண்ணிட்டு அத பெருமையா வேற பேசிட்டு இருக்க. உன் நல்லதுக்காகத்தான் நான் பேசிட்டு இருக்கேன் அதே ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்க?"

"ஆனா அதே மிடில் க்ளாஸ் வீட்ல இப்படி ஒரு குடும்பத்துக்கு என் பொண்ண எப்படித் தர்றதுனு செருப்பால அறைஞ்ச மாதிரி கேட்டாங்களே, அதுக்கு என்ன பதில் வச்சுருக்கீங்க? ஏதோ ஐம்பது கோடி கேட்டேன்னு சொன்னீங்களே, அது ஒன்னும் உங்க பணம் இல்லை. என் தாத்தா பணம்... என் தாத்தா என் அம்மாக்குக் குடுத்த பணம். அது இல்லனா நீங்க இந்த அளவுக்குப் பெரிய ஆளா வளர்ந்திருக்க முடியாது. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நீங்களும் ஒரு மிடில் க்ளாஸ்தான், அதை என்னைக்கும் மறந்துறாதீங்க.

அம்மாக்காகத்தான் நான் உங்கள சகிச்சுக்கிட்டு இருக்கேன், எப்பவும் அப்படியே இருப்பேன்னு நினைக்காதீங்க. இனிமே ஜியா பத்தியோ அவளோட குடும்பத்தைப் பத்தியோ எதாவது பேசுனீங்க, அவ்வளவுதான்!" என்றவன் வார்த்தையால் அவரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றான்.

"என் ரத்தமா போயிட்ட, என்னோட திமிரு உனக்குக் கொஞ்சம் கூட இல்லனா எப்படி? ஆனா அதை நீ என்கிட்டயே காட்டுற பார்த்தியா, அதுதான் என் வெறியை ஏத்துது.” என்று கூறும்பொழுதே அஸாத்தின் கண்களில் கோபம் தெறித்தது.

ஆஷிக்கின் அறையில் ஜியா தன் அழுகையை நிறுத்தாமல் அழுது கொண்டே இருக்க, ஆயிஷா அவளை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும், அது எல்லாம் பயன் அற்றுப் போக, அந்த நேரம் பார்த்து ஆஷிக் உள்ளே வர ஆயிஷா, ஆஷிக்கிடம் ஜியாவை பற்றிக் கூற, பதிலுக்கு ஆஷிக் தான் பார்த்துக் கொள்வதாய்த் தன் விழிகளாலே உறுதி கொடுக்க, சரி என்பதாய் தன் தலையை மெல்ல அசைத்தவாறு ஆயிஷா அங்கிருந்து சென்றாள்.

***

நிலவே 41

அவள் சென்ற பிறகு ஜியாவை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக, "ஹாய் பொண்டாட்டி, மாமா வந்திருக்கேன் கண்டுக்காம அப்படி என்ன ட்ரீம்ஸ்ல இருக்க?” என்று கண்சிமிட்டியவாறே அவளது அருகில் நெருங்கி அமர்ந்தான்.

“சரி, உன் ஹஸ்பண்ட்க்கு என்ன கிஃப்ட் தர போற? வா, அப்படியே கன்னத்துல நச்சுன்னு ஒன்னு குடு பார்ப்போம்.” என்று தன் கன்னத்தைக் காட்ட,

வெடுக்கென்று அவனது அருகில் இருந்து எழுந்த ஜியா, "உனக்கு என்னைப் பத்தி கவலையே இல்லல, எப்பவும் உனக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம் அப்படித் தானே? என் சித்தப்பாவ கஷ்டப்படுத்திட்டேன்னு நான் வருத்தத்துல இருக்கேன், ஆனா இப்போ கூட நீ..." என்று முகத்தைச் சுளித்தவள் மேலும் தொடர்ந்து,

"அதான் நீ ஆசைபட்ட மாதிரியே எல்லாம் நடந்திருச்சுல, அப்புறமும் ஏன் என்னைக் கஷ்டப்படுத்துற. என்னோட கஷ்டத்துல உன்னால பங்கு எடுத்துக்க முடியலைனாலும் பரவாயில்ல, அட்லீஸ்ட் என் எமோஷன்ஸ ஹர்ட் பண்ணாமலாவது இரு.” என்ற அவளது வார்த்தைகள் கணையாய் அவன் மீது பாய்ந்ததில் முகம் வாடியவன்,

"ஜியா உன் எமோஷன்ஸ நான் புரிஞ்சிக்காம இல்லை, உன்னைச் சமாதானப்படுத்ததான் நான் அப்படி..." என்பதற்குள்,

"கிஸ் பண்ண வந்தியா? அப்படிப் பண்ணினா எல்லாம் சமாதானம் ஆகிருமா என்ன? என்ன மாதிரியான மெண்டாலிட்டி இது?” என்று மேலும் தன் வார்த்தைகளைப் பட்டை தீட்டி அம்பாய் எறிய மனம் வெம்பியவன் அங்கிருந்து எழுந்து,

"சாரி” என்று கூறிவிட்டு வேற எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றான்.

அவன் சென்ற பிறகுதான் ஆஷிக்கிடம் கொஞ்சம் அதிகமாகவே கோபம் கொண்டது மனதிற்குப் புரிய, தன்னையே கடிந்து கொண்டவள் மேலும் அழ தொடங்கினாள்.

"அம்மா...” என்று அழைத்தவாறே கீழே வந்தவன், அடுப்பறையில் வேலைக்காரர்களிடம் நாளைக்கு என்கேஜ்மெண்ட்க்கு எந்த மாதிரியான உணவு வேண்டும் என்பதற்கான லிஸ்ட்டை ஹாஜரா கொடுத்துக் கொண்டிருக்க,

"மா எவ்வளவு நேரமா கூப்பிடுறேன், சத்தமே குடுக்க மாட்டிக்கிற?” என்றவாறு அவரை அணைத்துகொள்ள,

வேலைக்காரர்களிடம், “சீக்கிரமா எல்லா ஏற்பாடும் செய்யுங்க.” என்று அன்பாய் கட்டளையிட்டு அனுப்பி வைத்துவிட்டு, தனது கழுத்தில் இருந்த ஆஷிக்கின் கரத்தை தட்டிவிட்டார்.

"ஏன்மா தட்டிவிடுற, கேட்டுகிட்டே இருக்கேன் பதில் பேசாம போற, ஏதாவது பேசுமா."

"என்ன பேசணும்?"

"மா..."

"பேசுற மாதிரியான காரியமா பண்ணிருக்க?"

"மா நீயும் ஆரம்பிக்காத..."

"என்னடா ஆரம்பிக்காத? ஒரே பையன் நீ, உன் கல்யாணத்த எப்படி எல்லாம் பண்ணணும்னு நான் ஆசைபட்ருப்பேன். இப்படித் திருட்டுக் கல்யாணம் பண்ணதான் நான் உன்னைப் பெத்தேன்னா என்ன?"

"மா..."

"எதுவும் பேசாத ஆஷிக், சரி எங்களை விடு. அந்த ஜியா பொண்ண பாரு, முகமெல்லாம் வாடி போய் இருக்கு. அவளை என்ன சொல்லி மிரட்டி கல்யாணம் பண்ணுனியோ, அவ சித்தப்பா கண் கலங்கும் போது எப்படி இருந்தது தெரியுமா?"

"உன் பேச்சு கேட்டு நான் பொறுமையா தானே இருந்தேன், அவரு தானே கண்டிஷன் எல்லாம் போட்டாரு."

"பொண்ணு வீடுனா அப்படித்தான் சொல்லுவாங்க, அப்பாவும் பையனும் ராசியா இல்லாத வீட்ல எப்படிப் பொண்ண தருவாங்க. நாமதான் காத்திருந்து பொறுமையா பேசிருக்கணும். அதை விட்டுட்டு இப்படி ரெண்டு பேரோட குடும்பத்தையும் அசிங்கப்படுத்திட்டியேடா. மனசு ஆறவே மாட்டிக்குது, என்னைப் பத்தி கூட நீ யோசிக்கலல. ஒரு அம்மாவா உன் கல்யாணத்தைப் பத்தி நான் எவ்வளவு கனவு வச்சுருப்பேன்.

உன் களவாணி தனத்துக்கு அந்த ஆதர்ஷும் கூட்டு, எப்பவும் அம்மா அம்மானு வீட்டையே சுத்தி சுத்தி வருவான். இன்னைக்கு எங்க ஆளையே காணும், வரட்டும் அவனுக்கும் இருக்கு."

"மா கல்யாணம்னா நான் ஒன்னும் ஸ்பெஷலா எல்லாம் பண்ணல, சும்மா மாலைதான் மாத்திக்கிட்டேன். ரெண்டு நிமிஷத்துல முடிஞ்சிருச்சு, உனக்கு வேணும்னா இப்பவே மறுபடியும் மாலை மாத்தி காட்டுறேன்."

"நீ எதையும் பண்ண வேண்டாம், முதல்ல ஜியா வீட்ல போய் அவங்களைச் சமாதானப்படுத்து, அப்புறம்தான் அம்மா எல்லாம்...” என்று முடிக்கவும்,

காலிங் பெல்லின் சத்தம் கேட்டு ஹாஜராவும் ஆஷிக்கும் வாசலுக்கு வர, அங்கே ஜியாவின் சித்தப்பாவும் சித்தியும் வந்திருப்பதைப் பார்த்து முகம் மலர்ந்த ஹாஜரா, அவர்களை உள்ளே அழைத்து,

"என்ன நீங்க, காலிங் பெல் எல்லாம் அடிச்சுகிட்டு. உரிமையா வரவேண்டியது தானே? உங்க பொண்ணோட வீடு, உங்களுக்கும் வீடு தானே...” என்றவரின் பேச்சில் உள்ளம் குளிர்ந்த திவ்யா,

"எங்க பொண்ண மன்னிச்சு ஏத்துக்கிட்டதுக்கு ரொம்பச் சந்தோஷம்."

"அட என்ன நீங்க, என்னைக்கு இருந்தாலும் ஜியா எங்க வீட்டு பொண்ணு தானே, இவங்க இப்படித் திடீர்னு பண்ணினது வருத்தம்தான், அதுக்காகப் புள்ளைங்கள எப்படி ஏத்துக்காம இருக்க முடியும்?"

"சரியா சொன்னீங்க."

"அண்ணனுக்கு இன்னும் கோபம் போகல போல?"

"அப்படி எல்லாம் இல்லை.” என்று ஷங்கர் கூறவும், ஹாஜரா தன் மகனை அதிகாரத்துடன், "டேய் என்ன பார்த்துட்டு இருக்க, போ போய் மன்னிப்பு கேளு.” என்று கட்டளையிட,

"இல்லை, தம்பி ஏற்கனவே மன்னிப்பு கேட்டுட்டாரு. ஜியாவை கண்கலங்காம பார்த்துக்குவேன்னு எனக்குச் சத்தியம் பண்ணிருக்காரு. அவர் வந்து பேசுனதுக்கு அப்புறம் பொறுமையா யோசிச்சேன், இவங்க பண்ணினது தப்புதான், நடந்தது நடந்து போச்சு. இனிமே கோபப்படுறத விட அடுத்தடுத்து நடக்கப் போறத பார்த்தா நல்லதேனு நான் என் பொண்ணுக்காக என் பிடிவாதத்துல இருந்து இறங்கி வரதுனு முடிவு பண்ணி இங்க வந்துருக்கேன்.” என்றதும் மகிழ்ச்சியோடு ஆஷிக்கைப் பார்த்து ஹாஜரா கண்களாலே தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

"ஜியாகிட்ட ரொம்பக் கோபமா பேசிட்டேன், அவ ரொம்பப் ஃபீல் பண்ணிட்டு இருப்பா, அவளைப் பார்க்கலாமா?” என்ற ஷங்கரிடம் ஹாஜரா,

"அட என்ன அண்ணன், உங்க பொண்ண பார்க்க உத்தரவு கேட்டுகிட்டு இருக்கீங்க. ஆஷிக் ஜியாவை உடனே கூப்பிடு.” என்றதும் ஷங்கர், "இல்லை நானே போய் பாக்குறேன்.” என்றதும் ஆஷிக் அவர்களை மேலே இருக்கும் தன் அறைக்கு அழைத்துச் சென்று,

"உள்ளதான் இருக்கா, போய் பாருங்க மாமா.” என்று கூறிவிட்டு கீழே வந்து தன் தாயிடம்,

"இப்போ கழுத்துல கை போடலாமா?” என்று புன்னகைத்து அவரிடம், "என்ன கேட்க வர்றீங்கனு புரியுது, ஜியா ரொம்ப வருத்தமாவே இருந்தா. அதான் அவளை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்ததும் ஆயிஷாகிட்ட ஜியாவை பார்த்துக்கச் சொல்லிட்டு ஜியா வீட்டுக்கு போனேன்.” என்று தான் ஜியாவின் சித்தப்பாவை சந்தித்ததைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தான்.

அறையில் ஜியா மெத்தையில் சாய்ந்திருந்தவாறே அழுது கொண்டிருந்தவள், தன்னை மறந்து எப்பொழுது தூங்கினோம் என்று அறியாமல் தூங்கிக்கொண்டிருக்க, அவளது அருகில் வந்து அமர்ந்த ஷங்கர் தன்னை மறந்து துயில் கொண்டிருந்த, தன் மகளின் தலையை மெல்ல கோதி விட, அவரது கை பட்டதும் தூக்கத்தில் இருந்து சட்டென்று எழும்பியவள் தன் அருகில் தன் சித்தப்பா, சித்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியுற்று, தன் கண்கள் கலங்கி அவர்களை அணைத்து கொண்டாள். தேம்பி தேம்பி அழுதவள் தன் செயலுக்காக மனம் வருந்த,

"வேண்டாம்டா, உனக்கும் சேர்த்து மாப்பிள்ளை என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டாரு.” என்று ஆஷிக் தன்னைச் சந்திக்க வந்ததைப் பற்றிக் கூற ஜியா தனக்குள், 'உன்னைப் போய் என் எமோஷன்ஸ காயப்படுத்துறேன்னு சொல்லிட்டேனே, என்னை மன்னிச்சுருடா' என்று மனம் உருகினாள்.

தன் சித்தி, சித்தப்பாவிடம் ஆஷிக் மிகவும் மரியாதையாக நடந்துகொள்ள, ஜியாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவளது பார்வை அவனை விட்டு அகலாமல் இருக்க, அவனோ தன்னவள் தன்னைப் பார்ப்பது அறிந்தும் அறியாதது போல, தன் மாமியாரையும் மாமனாரையும் கவனிப்பதில் கருத்தாய் இருந்தான்.

ஜியா தனக்குள், ‘கொஞ்சம் என்னைப் பார்த்தாதான் என்ன? ரொம்பத்தான் பண்ணிட்டு இருக்கான்.’ என்று செல்லமாய் கடிந்து கொள்ள, அவளது தவிப்பைப் புரிந்துகொண்டாலும். தன்னவளைத் தவிக்க விட்டவாறு தன் காரியத்திலே கண்ணாய் இருந்தான்.

சிறிது நேரம் கழித்து ஷங்கரும் திவ்யாவும் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து செல்ல, ஜியாவின் கண்களோ ஆஷிக்கை நோக்கியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

ஜியா, ஆஷிக்கிடம் மனம் வெந்தவளாய், "சாரிடா, நான் உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். அப்போ இருந்த டென்ஷன்ல உன்னை ரொம்பவே காயப்படுத்திட்டேன், என்னை மன்னிச்சுரு.” என்று கெஞ்ச,

ஆஷிக் எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்ல அவனை வழிமறித்து முன்னால் வந்து நின்றவள்,

"ப்ளீஸ் ஆஷிக் ஏதாவது பேசு."

"என்ன பேசணும்? நான்தான் உன் எமோஷன்ஸ புரிஞ்சிக்காத மிருகமே, சுயநலவாதி நான் என்ன பேச?"

"சாரிபா."

"ஆமா, உன் ஒத்த பார்வைக்காகவும் உன் முத்தத்துக்காகவும் நான் ஏங்கிட்டு இருக்கிறவன்தான். ஆனா அதுக்காக நான் ஒன்னும் கேவலமானவன் இல்லை, உன்னைத் தவிர வேற யாரையும் நான் அந்த மாதிரி எண்ணத்துல ஏறெடுத்தும் பார்த்ததில்லை. நான் அப்படிப் பட்டவனா இருந்திருந்தா இவ்ளோ நாள் ஏன் உனக்காகக் காத்திருக்கணும்?

நான் ஒன்னும் சதை வெறி புடிச்சவன் இல்...” என்பதற்குள் அவனது இதழை தன் கரம் கொண்டு மூடியவள், கண்களில் நீர் வடிய

"சாரிடா, ப்ளீஸ் அப்படிச் சொல்லாத. நீ ஒரு ஜெம்... நான்தான் உன்னைப் புரிஞ்சிக்காம போய்டேன். நான்தான் சொன்னேன்ல, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்குக் கஷ்டம் மட்டும்தான் மிஞ்சும்னு. பார்த்தியா கல்யாணம் ஆன அன்னைக்கே உன் மனச காயப்படுத்திட்டேன்.” என்று தேம்பி தேம்பி அழுதாள்.

'ஐயோ இவ மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாளே' என்று மனதிற்குள் நொந்து கொண்டவன்,

"என்ன, இப்படி எல்லாத் தப்பையும் பண்ணிட்டு மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிருமா?"

"சொல்லு, நான் என்ன பண்ணணும்?” என்று தன் கண்களைத் துடைத்துக் கொண்டு ஜியா கேட்க,

"ம்ம் ஏதாவது பண்ணு, என்னை கூல் பண்ற மாதிரி.” என்று கோபமாய் இருப்பது போல நடிக்க அதைக் கண்டு புன்னகைத்தவள், எம்பி தன்னவனது கன்னத்தில் தன் காதல் முத்திரையைப் பதித்து அவனது நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள்.

தன்னவளைத் தன் மார்போடு அணைத்து கொண்டவன் மென்மையாய் அவளது கேசத்தைக் கோதியவாறே, "எப்பவும் இப்படியே சந்தோஷமா நீ இருக்கணும்."

"சாரிடா, ரொம்பப் பேசிட்டேன், கஷ்டப்படுத்திட்டேன்ல?"

"கஷ்டம் இல்லனு சொல்ல மாட்டேன், ஆனா நீ என்னைக் கஷ்டப்படுத்தினதுக்கு அப்புறமா என் மேல காட்டுற காதல் இன்னும் அழகா இருக்கும். அதுல லவ் பொங்கி வழியும், அதுக்காவே நீ என்னை எவ்வளவு வேணும்னாலும் கஷ்டப்படுத்தலாம்.” என்றவன் அவளது இதழை நோக்கி குனிய அவனைத் தடுத்தவள்,

"ஆயிஷா என்கேஜ்மெண்ட்க்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டியா, ஏதும் விட்டு போகலல?"

"பண்ணியாச்சுனு அம்மா சொன்னாங்க, இருந்தாலும் எல்லாம் சரியா இருக்கானு கிராஸ் செக் பண்ணணும். அப்புறம் கேட்டரிங்ல கொஞ்சம் சேன்ஜ் இருக்கு, பாரு அதை நான் மறந்தே போய்ட்டேன். ஞாபகபடுத்தினதுக்கு ரொம்பத் தேங்க்ஸ்.” என்றவன்,

"வர லேட்டாகும், நீ சாப்பிட்டுட்டு தூங்கிரு. நான் போயிட்டு வரேன்." என்று அவளது நெற்றியில் இதழ் பதித்தவன் புன்னகை தளும்ப அங்கிருந்து செல்ல, தன்னவனின் இதழ் அளித்த ஸ்பரிசத்தில் ஜியா தன்னையே மறந்து காதலில் லயித்திருந்தாள்.

ஏற்கனவே மாளிகை போன்று இருக்கும் ஆஷிக்கின் இல்லத்தில், மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் பூக்களால் அமைந்த வேலைப்பாடுகள் இன்னும் அழகு சேர்க்க, பட்டப்பகலிலும் அவனது இல்லம் விழாக்கோலம் கொண்டிருந்தது. அனைத்து ஏற்பாடுகளும் சரியாக இருக்கிறதா என்று ஆதர்ஷும் ஆஷிக்கும் சரி பார்த்துக் கொண்டிருக்க,

அப்பொழுது வாசலில் வந்த விருந்தாளிகளை இதழோரம் புன்னகைத்தவாறே வரவேற்றுக் கொண்டிருந்த தன் காதல் மனைவி கண்ணில் பட, ஸ்கை ப்ளூ நிற புடவையில் தேவதையெனக் காட்சியளித்த தன்னவளை, உச்சி முதல் பதம் வரை தன் கண்களால் வருடினான்.

சுற்றும் முற்றும் எதைப் பற்றியும் யோசிக்காதவன் காதலும் ஆசையும் போட்டி போட, தன்னவளைத் தன் விழிகளினாலே அள்ளி பருகிக்கொண்டிருக்க,

"டேய் பக்கத்துல ஒரு கன்னிப் பையனை வச்சுட்டு நீ இப்படி எல்லாம் பண்றது கொஞ்சம் கூடச் சரியில்லடா.” என்ற ஆதர்ஷைப் பார்த்து புன்னகைத்தவன், “இதோ வந்திடுறேன்.” என்று கூறிக்கொண்டே அங்கிருந்து செல்ல,

"சும்மாவே நீ அவ்வளவு பண்ணுவ, இதுல கல்யாணம் வேற பண்ணிக்கிட்ட நீ நடத்து...” என்ற ஆதர்ஷ் ஏற்பாடுகளைக் கவனித்தான்.

ஜியாவின் அருகில் சென்று அவளை உரசிக்கொண்டே நின்ற ஆஷிக், யாருக்கும் தெரியாமல் அவளைத் தனியே அழைத்துக்கொண்டு வர,

"டேய் கைய விடு, இப்போ எதுக்கு என்னைத் தனியா கூட்டிட்டு வந்த? அங்க வர்றவங்கள யாரு வரவேற்பாங்க?” என்று கடுகடுக்க,

"என்ன நீ, நான் ஆசையா உன்னைப் பார்க்க வந்தா என்னை விரட்டிகிட்டே இருக்க?” என்று முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள,

"சாரிடா, வேலை இருக்குல..."

"அப்போ நான் முக்கியம் இல்லையா?"

"முக்கியம்தான், சொல்லு என்ன வேணும்?"

"புடவையில அழகா இருக்க.” என்று தன்னைச் சல்லாபமாய் நெருங்கியவனைத் தள்ளிவிட்டவள், தன்னவனின் ஏக்கத்திற்கு வெறும் புன்னகையையை மட்டும் சிந்தி, அவனது ஏக்கத்தைக் கூட்டிவிட்டு அங்கிருந்து செல்ல, “ஏன்டி கெஞ்ச வைக்கிற?” என்று செல்லமாய் கடிந்தவனின் கண்களிலும் வார்த்தையிலும் காதல் வழிந்தது.

ஆஷிக்கின் இல்லத்தில் அனைவரும் மாப்பிள்ளை வீட்டாரின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்க, ஜியா வேலைக்காரர் ஒருவரை அழைத்து, "அண்ணா வர்றவங்களுக்குக் கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் ரெடியா இருக்குல?"

"இன்னும் கொஞ்சம் நேரத்துல ரெடியாகிரும் மேடம்."

"என்ன அண்ணா இப்படிச் சொல்றீங்க? சீக்கிரம், இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்ல இருந்து எல்லாரும் வந்துருவாங்க. சீக்கிரமா பண்ணுங்க.” என்று அவரைப் பணித்துக்கொண்டிருக்க,

கம்பிரமான குரலில், "ஏய் இங்க என்னடா பண்ணிட்டு இருக்க? உள்ளே போய் எனக்குச் சூடா டீ எடுத்துட்டு வா.” என்று அந்த வேலைக்காரனை அதட்டியவாறே வந்த அஸாத்தைப் பார்த்து ஜியா ஒருவித தயக்கத்துடன் புன்னகைக்க,

அவர், "என்ன ரொம்ப அதிகாரமா சுத்திட்டு இருக்க? என்ன எல்லாம் என் பையன் குடுக்குற தைரியத்துல ஆடிட்டு இருக்கியா? சத்தம் வந்துச்சு தொலைச்சுருவேன், என்கேஜ்மென்ட் முடியுற வரைக்கும் நீ என் கண்ணுலயே படக்கூடாது உள்ள போ.” என்று தன் கணீர் குரலில் அரட்டியதில், பயந்து போன ஜியா அழுதுகொண்டே பதில் ஏதும் பேசாமல் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

ஆஷிக் ஆதர்ஷிடம், "என்னடா இந்த ரோஹித் இன்னும் வரல, அவனுக்குப் ஃபோன் பண்ணுனியா, இல்லையா?” என்று கூறிய மறுநொடி,

"இதோ வந்துட்டேன்...” என்று ரோஹித் தன் கைகளை விரித்துப் புன்னகைக்க ஆதர்ஷ், ஆஷிக் இருவரும் அவனைக் கட்டி அணைத்துக்கொள்ள, திடீரென்று எதையோ யோசித்த ரோஹித் வெடுக்கென விலகி ஆஷிக்கிடம்,

"டேய் ஆதர்ஷ் சொன்னதெல்லாம் உண்மையாடா, நீயும் ஜியாவும்..."

"ஆமாடா"

"என்கிட்ட ஒருவார்த்தை கூட உனக்குச் சொல்லணும்னு தோனலல?"

"சாரிடா, எதையும் சொல்லிட்டு பண்ற அளவுக்கு எனக்கு நேரம் இல்லை, எல்லாம் அப்படி அப்படி நடந்து போச்சு புரிஞ்சிக்கோடா."

"போடா, ஏதோ சொல்ற... நீ சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு ஹாப்பிதான்.” என்றவன் ஆஷிக்கின் முகத்தை உற்று நோக்கியவாறே ஆதர்ஷிடம்,

"டேய் ஆதர்ஷ் என்னடா புது மாப்பிள்ளை முகம் ரொம்பச் சிவந்து போய் இருக்கு?” என்று ஆஷிக்கை வம்பிழுக்க, "அதெல்லாம் ஒன்னும் இல்லை...” என்று ஆஷிக் வெட்கப்பட,

ஆதர்ஷ், ஆஷிக்கைப் பார்த்து முறைத்தவாறே, “ம்ம் பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்.” என்று கடுப்புடன் கூற,

"டேய் என்னடா ஆச்சு, இவ்வளவு விரக்தியா சொல்ற?” என்று ரோஹித் புன்னகைத்தான்.

"இருக்காதா, பக்கத்துல என்னை வச்சுட்டு அப்படி ரொமான்ஸ் பண்றான்டா, கடுப்பாகாம எப்படி இருக்கும்?” என்றதும் ரோஹித்தும் ஆஷிக்கும் சிரிக்க,

"ஏன்டா சிரிக்க மாட்டீங்க, என்னைப் பார்த்தா உங்களுக்கு அப்படித் தான்டா இருக்கும்.” என்றதும்,

ஆஷிக், "டேய் போதும்டா, விட்டா அழுதுருவ போல?"

"சும்மா இருடா."

"நாங்க சும்மா இருக்கிறது இருக்கட்டும், முதல்ல அங்க பாரு." என்று ஆதர்ஷின் முகத்தைத் திருப்பி வாசல் பக்கம் காட்ட, அங்கே நடாஷா அவர்களைப் பார்த்துக் கை அசைத்து புன்னகைத்தவாறே அவர்களை நோக்கி வர,

ஆதர்ஷின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். அதுவரை புலம்பியவனின் உதடுகள் புலம்பலை விட்டுவிட்டுப் புன்னகைக்கத் தொடங்கியது.

ரோஹித், "டேய் வழியாத... நார்மலா இரு.” என்று ஆஷிக்கிடம் ஹைஃபை அடித்தவாறு கேலி செய்ய, அசடு வழிந்த ஆதர்ஷ் இருவரின் கன்னத்திலும் நச்சென்று இதழ் பதித்து, "நட்புக்கு எடுத்துக்காட்டே நீங்க தான்டா.” என்று அவர்களைப் பாராட்ட,

ஆஷிக் தனது கன்னத்தைத் துடைத்தவாறே, "இத வெறும் வார்த்தையாலே சொல்லிருக்கலாம்.” என்று கோபமாய் பார்க்க, அதற்கு அவனது கன்னத்தைக் கிள்ளிய ஆதர்ஷ்,

"சரி, அவளை எப்போ இன்வைட் பண்ணின?” ஆர்வமாய் கேட்க,

"எனக்கு இந்த ஐடியா கொடுத்ததே ரோஹித்தான். அவன் சொல்லிதான் நான் பண்ணினேன்.” என்றதும் அவர்களை அணைத்து கொண்டவன்,

"நீங்க தான்டா என் தளபதீங்க, நீங்க ரெண்டு பேரும் என் ரெண்டு கண்ணு மாதிரி. உங்களுக்காக என் உயிரையும் குடுப்பேன்.” என்று சிரித்துக் கொண்டே கூறினான்.

ஆஷிக், "எங்களுக்கு உயிரை குடுத்துட்டு அவளை என்ன ஆவியா வந்து லவ் பண்ணுவியா?” என்று கேலி பேச,

"டேய் பேச்சுக்கு சொன்னா உயிரை குடுனு சொல்லுவீங்க போலையே?” என்று பதறியவனை,

ரோஹித், "இதைவிட நல்ல சான்ஸ் கிடைக்காது, ஒழுங்கா ஈகோ, ஸ்டேட்டஸ் எல்லாம் பார்க்காம அவகிட்ட உன் மனசுல உள்ளதை சொல்ற வழிய பாரு சரியா?” உரிமையாய் கண்டிக்க,

"கண்டிப்பாடா, அவளைப் புரிஞ்சிக்கிறதுக்கு எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பா இருக்கும்.” என்று அவன் கூறவும்,

"எல்லாருக்கும் ஒரு பெரிய ஹாய்!” என்றவாறு அவர்களது அருகில் வந்தவள் ஆதர்ஷை ஒருமுறை பார்த்துவிட்டு ஆஷிக்கிடம், "கங்க்ராட்ஸ் கேப்டன், ஹாப்பி மேரீட் லைஃப்!” என்று தன் கரத்தை நீட்ட திடுக்கிட்ட ஆஷிக், "உனக்கு எப்படித் தெரியும்?” என்பதற்குள்,

"எனக்கா! நான் லேட்டு, நம்ம ஏர்லைன்ஸ்ல உள்ள எல்லாருக்கும், ஏன் இந்த உலகத்துக்கே தெரியும் ஆதர்ஷ் சார். பேஸ்புக்குல நேத்து மார்னிங் அப்லோட் பண்ணிருக்காரு.” என்றதும்,

"நான்தான்” என்று தன் காலரை தூக்கிவிட்ட நண்பனைப் பார்த்து, "நேத்து மார்னிங் தானடா கல்யாணம் ஆச்சு, சன் நெட்வொர்க்கை விட ஃபாஸ்டா இருக்க.” என்று கூற ஆதர்ஷ் அசடு வழிய சிரித்தான்.

"ஆஷிக் சார், உங்க ரசிகைகள் எல்லாரும் உங்க மேல கடும் கோபத்துல இருக்காங்க. நீங்களும் ஜியா மேடமும் டெல்லி வந்ததும் உங்களுக்குக் குடுக்கிறதுக்குப் பெரிய பார்ட்டியே அங்க ஏற்பாடாகிட்டு இருக்கு.” என்றவள், "ஆமா ஜியா மேடம் எங்க, வந்ததுல இருந்து நான் பார்க்கவே இல்லை.” என்று கேட்க,

"அவ உள்ள வேலையா இருக்கா, உள்ள போ. டேய் ஆதர்ஷ் கூடப் போடா. அவங்களுக்கு அவங்களோட ரூமை காட்டு.” என்று கண்ணசைக்க, ஆதர்ஷ் புன்னகைத்தவாறே நடாஷாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான். அவர்களைப் பார்த்து ஆஷிக் சிரித்துக் கொண்டிருக்க ரோஹித் ஆஷிக்கிடம்,

"ஜியா வேலையா இருக்கா ஓகே, தியா கண்ணுலயே காணும். அவ வேலை செய்யுற ஆளெல்லாம் இல்லையே?” என்றதும் ஆஷிக்கின் முகம் சுருங்க,

"உன்கிட்டதான் கேட்டுட்டு இருக்கேன், அவ எங்கடா பார்க்கவே முடியலை?” என்று மீண்டும் கேட்கவும் நீண்ட பெருமூச்சு விட்ட ஆஷிக்,

"ரோஹித். இத்தனை நாள்ல நிறையா நடந்து போச்சு, பிறகு பொறுமையா நான் உனக்கு எல்லாம் சொல்றேன்.” என்று கூற, ஆஷிக்கின் நிலையைப் புரிந்து கொண்டவனாய் ரோஹித். 'சரி' என்பதைப் போலத் தன் தலையை அசைத்தான்.

இன்னும் சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்து விடுவார்கள் என்கின்ற செய்தி வர அவர்களை வரவேற்க ஹாஜரா, அஸாத், ஆஷிக், ஆதர்ஷ், ரோஹித், நடாஷா, பிறகு மற்ற விருந்தாளிகளில் சிலரும் அவர்களின் வருகைக்காக வாசலில் காத்திருந்தனர்.

அங்கே அவர்கள் வாசலில் காத்திருக்க, ஆயிஷாவோ தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு, தன் அறையில் உள்ள பால்கனியின் வழியாகத் தன்னை ஆள போகிறவனின் வருகைக்காக, வழிமேல் விழி வைத்து எதிர்பார்த்து கொண்டிருந்தாள். அவன் இன்னும் சிறிது நேரத்தில் தன்னவனாகப் போகிறான் என்றாலும், இந்த நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் இயல்பான தவிப்புடன் யாருக்கும் தெரியாமல் விழி மலர்ந்து காத்திருந்தாள்.

உன்னை வெகு நேரம் காக்க விடமாட்டேன் என்பது போல, கருப்பு நிற ஆடி கார் ஆயிஷாவின் வீட்டு வாசலில் நுழைந்த தோரணையே, அது மாப்பிள்ளை வீட்டாரின் கார் என்பது ஆயிஷாவுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அனைவரும் சூழ்ந்து கொண்டு அவர்ளை வரவேற்க, ஆயிஷாவால் சமீரை சரியாகப் பார்க்க முடியவில்லை. இருந்தும் தன் முயற்சியைக் கை விடாமல் பார்த்தவளின் கண்களில் முதலில் தென்பட்டது,

காற்றில் அலை பாய்ந்த அவனது கேசம். கலைத்து பார்க்க துடிக்கும் தன் கைகளை ஏளனம் செய்துவிட்டு அவனது கேசத்தை, கலைத்து விளையாடும் தென்றல் மீது ஆயிஷாவிற்குச் சிறு கோபம் வர, அலைபாய்ந்த அவனது கேசம் மெல்ல அவளது உள்ளத்தையும் தன் அலையோடு சேர்த்து அடித்துச் சென்றது.

கலைந்த கேசத்தைச் சரி செய்யும் பொழுது முழுக்கை சட்டைக்குள் இருந்து தென்பட்ட உறுதியான கைகள், பிடித்துக் கொள்ளத் துடிக்கும் தன்னவனின் கரத்தில், செருக்குடன் இருந்த பிளாட்டினம் காப்பு மீது கொஞ்சம் பொறாமை வந்தாலும், நீண்ட அழகான, தன்னை வீணையாய் மீட்ட போகும் அந்தக் கரத்தை அவள் ரசிக்காமல் இல்லை.

கூட்டம் மெல்ல களைய அடுத்ததாய் அவள் கண்ணில் பட்டது, அவளுக்குள் மின்னலை போலப் பாய்ந்த தன்னவனின் காந்த பார்வை. அவனது விழியோடு மயங்கிட துடிக்கும் தன் விழிகளைப் பார்த்து, செருக்குடன் தனக்குப் போக்கு காட்டிவிட்டு தன்னவனின் விழியோடு ஒட்டி உறவாடிய இமை மீது கோபம் வந்தாலும், அவனது காந்த பார்வையில் தன்னைத் தொலைக்க அவள் மறக்கவில்லை.

மேலும் எட்டிப்பார்த்தவளின் கண்களுக்குத் தெரிந்தது, தன்னை வீழ்த்த துடிக்கும் கன்

னக்குழி சிரிப்பு. தன் விரலை விட்டு பார்க்க துடித்த தன்னை எட்டிப்பார்த்து ஏளனமாய்ச் சிரித்துவிட்டு தன்னவனின் கன்னக்குழியில் கொஞ்சிக் குலாவிய அந்த முகப் பரு மீது சிறு கோபம் வந்தாலும், அவனது மாயப் புன்னகையில் அவள் விழாமல் இல்லை. சற்று தன் நுனி காலால் எம்பி பார்த்தவளின் விழிகளில், ஆண்களுக்கு உரிய கம்பீரத்தோடு ஆண் அழகனை போலத் தோன்றிய தன்னவனிடம் கொஞ்சமும் மறுக்காமல் தன்னைப் பறிகொடுத்தாள் என்றால் அது மிகையில்லை.

ஒரு புதுக்கவிதையாய் தன் கண் முன் இருந்தவனைத் தன் விழிகளினாலே, வரி பிறழாமல் பிழையின்றிப் படித்துக் கொண்டிருந்தாள்.

தன்னைத் தழுவும் பல விழிகளைத் தாண்டி ஏதோ இரு விழிகள் மட்டும் தன் உயிர் வரை ஊடுருவி செல்ல துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவன், அதன் திசை நோக்கி தன் பார்வையைச் செலுத்த, தான் பார்ப்பதை கூட அறியாமல் தன் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த ஆயிஷாவைப் பார்த்த மறுநொடியே, தன் நெஞ்சில் பதிந்த அவளது புகைப்படத்தைத் தன் நினைவிற்கு கொண்டுவந்தவனின் உதடு, கண்கள், கன்னக்குழி என்று எல்லாம் ஒன்று சேர்ந்து போட்டி போட்டுக்கொண்டு புன்னகைத்தது. சில நொடிகள் தன்னவளைப் பார்வையால் வருடிவிட்டு அவன் அங்கிருந்து செல்ல,

"ச்ச இன்னும் கொஞ்ச நேரம் இருக்கக் கூடாதா?” என்று ஆயிஷா சிணுங்கிக் கொண்ட நேரம்,

திடீரென்று தன் மீது பட்ட ஒளியால் என்னவென்று கீழே பார்த்தவளின் கண்களில், சமீர் தன் கை கடிகாரத்தைத் தன் பக்கம் உயர்த்திக் காட்ட, அதில் உள்ள கண்ணாடியில் சூரிய கதிர்கள் பட்டு அதன் பிம்பம்தான் தன் மீது படுகிறது என்பதை அறிந்தாள். தான் அவனை ரசித்ததை அவன் கண்டு கொண்டான் என்பதை உணர்ந்தவளின் வதனம் கும்குமமாய் சிவக்க, என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்தவள் அவனை வெறித்துப் பார்க்க, அவனோ வில்லைப் போல வளைந்திருந்த தன் புருவத்தை உயர்த்தி வளைத்து அபிநயம் காட்டி, திடுக்கிட்டவளைத் தன் பார்வையாலே அள்ளி பருகிவிட்டு, ஒரு இமை தட்டி கண்சிமிட்டி தன் வசீகரப் புன்னகையைக் கன்னக்குழி நிரம்பச் சிந்திவிட்டு அங்கிருந்து சென்றான்.

ஆயிஷாவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது. அரேன்ஞ் மேரேஜ் எப்படி இருக்கும் என்று தன் உள்ளத்தில் இருந்த தயக்கம் மாறி, பார்த்த நொடியே சமீர் மீது எல்லை இல்லாத காதல் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுவதை உணர்ந்தாள்.

***


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்

நிலவே 42 & 43
 
Last edited:
Top