Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நிலவே 42 & 43

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
நிலவே 42

அவள் சென்ற பிறகு ஜியாவை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக, "ஹாய் பொண்டாட்டி, மாமா வந்திருக்கேன் கண்டுக்காம அப்படி என்ன ட்ரீம்ஸ்ல இருக்க?” என்று கண்சிமிட்டியவாறே அவளது அருகில் நெருங்கி அமர்ந்தான்.

“சரி, உன் ஹஸ்பண்ட்க்கு என்ன கிஃப்ட் தர போற? வா, அப்படியே கன்னத்துல நச்சுன்னு ஒன்னு குடு பார்ப்போம்.” என்று தன் கன்னத்தைக் காட்ட,

வெடுக்கென்று அவனது அருகில் இருந்து எழுந்த ஜியா, "உனக்கு என்னைப் பத்தி கவலையே இல்லல, எப்பவும் உனக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம் அப்படித் தானே? என் சித்தப்பாவ கஷ்டப்படுத்திட்டேன்னு நான் வருத்தத்துல இருக்கேன், ஆனா இப்போ கூட நீ..." என்று முகத்தைச் சுளித்தவள் மேலும் தொடர்ந்து,

"அதான் நீ ஆசைபட்ட மாதிரியே எல்லாம் நடந்திருச்சுல, அப்புறமும் ஏன் என்னைக் கஷ்டப்படுத்துற. என்னோட கஷ்டத்துல உன்னால பங்கு எடுத்துக்க முடியலைனாலும் பரவாயில்ல, அட்லீஸ்ட் என் எமோஷன்ஸ ஹர்ட் பண்ணாமலாவது இரு.” என்ற அவளது வார்த்தைகள் கணையாய் அவன் மீது பாய்ந்ததில் முகம் வாடியவன்,

"ஜியா உன் எமோஷன்ஸ நான் புரிஞ்சிக்காம இல்லை, உன்னைச் சமாதானப்படுத்ததான் நான் அப்படி..." என்பதற்குள்,

"கிஸ் பண்ண வந்தியா? அப்படிப் பண்ணினா எல்லாம் சமாதானம் ஆகிருமா என்ன? என்ன மாதிரியான மெண்டாலிட்டி இது?” என்று மேலும் தன் வார்த்தைகளைப் பட்டை தீட்டி அம்பாய் எறிய மனம் வெம்பியவன் அங்கிருந்து எழுந்து,

"சாரி” என்று கூறிவிட்டு வேற எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றான்.

அவன் சென்ற பிறகுதான் ஆஷிக்கிடம் கொஞ்சம் அதிகமாகவே கோபம் கொண்டது மனதிற்குப் புரிய, தன்னையே கடிந்து கொண்டவள் மேலும் அழ தொடங்கினாள்.

"அம்மா...” என்று அழைத்தவாறே கீழே வந்தவன், அடுப்பறையில் வேலைக்காரர்களிடம் நாளைக்கு என்கேஜ்மெண்ட்க்கு எந்த மாதிரியான உணவு வேண்டும் என்பதற்கான லிஸ்ட்டை ஹாஜரா கொடுத்துக் கொண்டிருக்க,

"மா எவ்வளவு நேரமா கூப்பிடுறேன், சத்தமே குடுக்க மாட்டிக்கிற?” என்றவாறு அவரை அணைத்துகொள்ள,

வேலைக்காரர்களிடம், “சீக்கிரமா எல்லா ஏற்பாடும் செய்யுங்க.” என்று அன்பாய் கட்டளையிட்டு அனுப்பி வைத்துவிட்டு, தனது கழுத்தில் இருந்த ஆஷிக்கின் கரத்தை தட்டிவிட்டார்.

"ஏன்மா தட்டிவிடுற, கேட்டுகிட்டே இருக்கேன் பதில் பேசாம போற, ஏதாவது பேசுமா."

"என்ன பேசணும்?"

"மா..."

"பேசுற மாதிரியான காரியமா பண்ணிருக்க?"

"மா நீயும் ஆரம்பிக்காத..."

"என்னடா ஆரம்பிக்காத? ஒரே பையன் நீ, உன் கல்யாணத்த எப்படி எல்லாம் பண்ணணும்னு நான் ஆசைபட்ருப்பேன். இப்படித் திருட்டுக் கல்யாணம் பண்ணதான் நான் உன்னைப் பெத்தேன்னா என்ன?"

"மா..."

"எதுவும் பேசாத ஆஷிக், சரி எங்களை விடு. அந்த ஜியா பொண்ண பாரு, முகமெல்லாம் வாடி போய் இருக்கு. அவளை என்ன சொல்லி மிரட்டி கல்யாணம் பண்ணுனியோ, அவ சித்தப்பா கண் கலங்கும் போது எப்படி இருந்தது தெரியுமா?"

"உன் பேச்சு கேட்டு நான் பொறுமையா தானே இருந்தேன், அவரு தானே கண்டிஷன் எல்லாம் போட்டாரு."

"பொண்ணு வீடுனா அப்படித்தான் சொல்லுவாங்க, அப்பாவும் பையனும் ராசியா இல்லாத வீட்ல எப்படிப் பொண்ண தருவாங்க. நாமதான் காத்திருந்து பொறுமையா பேசிருக்கணும். அதை விட்டுட்டு இப்படி ரெண்டு பேரோட குடும்பத்தையும் அசிங்கப்படுத்திட்டியேடா. மனசு ஆறவே மாட்டிக்குது, என்னைப் பத்தி கூட நீ யோசிக்கலல. ஒரு அம்மாவா உன் கல்யாணத்தைப் பத்தி நான் எவ்வளவு கனவு வச்சுருப்பேன்.

உன் களவாணி தனத்துக்கு அந்த ஆதர்ஷும் கூட்டு, எப்பவும் அம்மா அம்மானு வீட்டையே சுத்தி சுத்தி வருவான். இன்னைக்கு எங்க ஆளையே காணும், வரட்டும் அவனுக்கும் இருக்கு."

"மா கல்யாணம்னா நான் ஒன்னும் ஸ்பெஷலா எல்லாம் பண்ணல, சும்மா மாலைதான் மாத்திக்கிட்டேன். ரெண்டு நிமிஷத்துல முடிஞ்சிருச்சு, உனக்கு வேணும்னா இப்பவே மறுபடியும் மாலை மாத்தி காட்டுறேன்."

"நீ எதையும் பண்ண வேண்டாம், முதல்ல ஜியா வீட்ல போய் அவங்களைச் சமாதானப்படுத்து, அப்புறம்தான் அம்மா எல்லாம்...” என்று முடிக்கவும்,

காலிங் பெல்லின் சத்தம் கேட்டு ஹாஜராவும் ஆஷிக்கும் வாசலுக்கு வர, அங்கே ஜியாவின் சித்தப்பாவும் சித்தியும் வந்திருப்பதைப் பார்த்து முகம் மலர்ந்த ஹாஜரா, அவர்களை உள்ளே அழைத்து,

"என்ன நீங்க, காலிங் பெல் எல்லாம் அடிச்சுகிட்டு. உரிமையா வரவேண்டியது தானே? உங்க பொண்ணோட வீடு, உங்களுக்கும் வீடு தானே...” என்றவரின் பேச்சில் உள்ளம் குளிர்ந்த திவ்யா,

"எங்க பொண்ண மன்னிச்சு ஏத்துக்கிட்டதுக்கு ரொம்பச் சந்தோஷம்."

"அட என்ன நீங்க, என்னைக்கு இருந்தாலும் ஜியா எங்க வீட்டு பொண்ணு தானே, இவங்க இப்படித் திடீர்னு பண்ணினது வருத்தம்தான், அதுக்காகப் புள்ளைங்கள எப்படி ஏத்துக்காம இருக்க முடியும்?"

"சரியா சொன்னீங்க."

"அண்ணனுக்கு இன்னும் கோபம் போகல போல?"

"அப்படி எல்லாம் இல்லை.” என்று ஷங்கர் கூறவும், ஹாஜரா தன் மகனை அதிகாரத்துடன், "டேய் என்ன பார்த்துட்டு இருக்க, போ போய் மன்னிப்பு கேளு.” என்று கட்டளையிட,

"இல்லை, தம்பி ஏற்கனவே மன்னிப்பு கேட்டுட்டாரு. ஜியாவை கண்கலங்காம பார்த்துக்குவேன்னு எனக்குச் சத்தியம் பண்ணிருக்காரு. அவர் வந்து பேசுனதுக்கு அப்புறம் பொறுமையா யோசிச்சேன், இவங்க பண்ணினது தப்புதான், நடந்தது நடந்து போச்சு. இனிமே கோபப்படுறத விட அடுத்தடுத்து நடக்கப் போறத பார்த்தா நல்லதேனு நான் என் பொண்ணுக்காக என் பிடிவாதத்துல இருந்து இறங்கி வரதுனு முடிவு பண்ணி இங்க வந்துருக்கேன்.” என்றதும் மகிழ்ச்சியோடு ஆஷிக்கைப் பார்த்து ஹாஜரா கண்களாலே தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

"ஜியாகிட்ட ரொம்பக் கோபமா பேசிட்டேன், அவ ரொம்பப் ஃபீல் பண்ணிட்டு இருப்பா, அவளைப் பார்க்கலாமா?” என்ற ஷங்கரிடம் ஹாஜரா,

"அட என்ன அண்ணன், உங்க பொண்ண பார்க்க உத்தரவு கேட்டுகிட்டு இருக்கீங்க. ஆஷிக் ஜியாவை உடனே கூப்பிடு.” என்றதும் ஷங்கர், "இல்லை நானே போய் பாக்குறேன்.” என்றதும் ஆஷிக் அவர்களை மேலே இருக்கும் தன் அறைக்கு அழைத்துச் சென்று,

"உள்ளதான் இருக்கா, போய் பாருங்க மாமா.” என்று கூறிவிட்டு கீழே வந்து தன் தாயிடம்,

"இப்போ கழுத்துல கை போடலாமா?” என்று புன்னகைத்து அவரிடம், "என்ன கேட்க வர்றீங்கனு புரியுது, ஜியா ரொம்ப வருத்தமாவே இருந்தா. அதான் அவளை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்ததும் ஆயிஷாகிட்ட ஜியாவை பார்த்துக்கச் சொல்லிட்டு ஜியா வீட்டுக்கு போனேன்.” என்று தான் ஜியாவின் சித்தப்பாவை சந்தித்ததைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தான்.

அறையில் ஜியா மெத்தையில் சாய்ந்திருந்தவாறே அழுது கொண்டிருந்தவள், தன்னை மறந்து எப்பொழுது தூங்கினோம் என்று அறியாமல் தூங்கிக்கொண்டிருக்க, அவளது அருகில் வந்து அமர்ந்த ஷங்கர் தன்னை மறந்து துயில் கொண்டிருந்த, தன் மகளின் தலையை மெல்ல கோதி விட, அவரது கை பட்டதும் தூக்கத்தில் இருந்து சட்டென்று எழும்பியவள் தன் அருகில் தன் சித்தப்பா, சித்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியுற்று, தன் கண்கள் கலங்கி அவர்களை அணைத்து கொண்டாள். தேம்பி தேம்பி அழுதவள் தன் செயலுக்காக மனம் வருந்த,

"வேண்டாம்டா, உனக்கும் சேர்த்து மாப்பிள்ளை என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டாரு.” என்று ஆஷிக் தன்னைச் சந்திக்க வந்ததைப் பற்றிக் கூற ஜியா தனக்குள், 'உன்னைப் போய் என் எமோஷன்ஸ காயப்படுத்துறேன்னு சொல்லிட்டேனே, என்னை மன்னிச்சுருடா' என்று மனம் உருகினாள்.

தன் சித்தி, சித்தப்பாவிடம் ஆஷிக் மிகவும் மரியாதையாக நடந்துகொள்ள, ஜியாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவளது பார்வை அவனை விட்டு அகலாமல் இருக்க, அவனோ தன்னவள் தன்னைப் பார்ப்பது அறிந்தும் அறியாதது போல, தன் மாமியாரையும் மாமனாரையும் கவனிப்பதில் கருத்தாய் இருந்தான்.

ஜியா தனக்குள், ‘கொஞ்சம் என்னைப் பார்த்தாதான் என்ன? ரொம்பத்தான் பண்ணிட்டு இருக்கான்.’ என்று செல்லமாய் கடிந்து கொள்ள, அவளது தவிப்பைப் புரிந்துகொண்டாலும். தன்னவளைத் தவிக்க விட்டவாறு தன் காரியத்திலே கண்ணாய் இருந்தான்.

சிறிது நேரம் கழித்து ஷங்கரும் திவ்யாவும் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து செல்ல, ஜியாவின் கண்களோ ஆஷிக்கை நோக்கியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

ஜியா, ஆஷிக்கிடம் மனம் வெந்தவளாய், "சாரிடா, நான் உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். அப்போ இருந்த டென்ஷன்ல உன்னை ரொம்பவே காயப்படுத்திட்டேன், என்னை மன்னிச்சுரு.” என்று கெஞ்ச,

ஆஷிக் எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்ல அவனை வழிமறித்து முன்னால் வந்து நின்றவள்,

"ப்ளீஸ் ஆஷிக் ஏதாவது பேசு."

"என்ன பேசணும்? நான்தான் உன் எமோஷன்ஸ புரிஞ்சிக்காத மிருகமே, சுயநலவாதி நான் என்ன பேச?"

"சாரிபா."

"ஆமா, உன் ஒத்த பார்வைக்காகவும் உன் முத்தத்துக்காகவும் நான் ஏங்கிட்டு இருக்கிறவன்தான். ஆனா அதுக்காக நான் ஒன்னும் கேவலமானவன் இல்லை, உன்னைத் தவிர வேற யாரையும் நான் அந்த மாதிரி எண்ணத்துல ஏறெடுத்தும் பார்த்ததில்லை. நான் அப்படிப் பட்டவனா இருந்திருந்தா இவ்ளோ நாள் ஏன் உனக்காகக் காத்திருக்கணும்?

நான் ஒன்னும் சதை வெறி புடிச்சவன் இல்...” என்பதற்குள் அவனது இதழை தன் கரம் கொண்டு மூடியவள், கண்களில் நீர் வடிய

"சாரிடா, ப்ளீஸ் அப்படிச் சொல்லாத. நீ ஒரு ஜெம்... நான்தான் உன்னைப் புரிஞ்சிக்காம போய்டேன். நான்தான் சொன்னேன்ல, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்குக் கஷ்டம் மட்டும்தான் மிஞ்சும்னு. பார்த்தியா கல்யாணம் ஆன அன்னைக்கே உன் மனச காயப்படுத்திட்டேன்.” என்று தேம்பி தேம்பி அழுதாள்.

'ஐயோ இவ மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாளே' என்று மனதிற்குள் நொந்து கொண்டவன்,

"என்ன, இப்படி எல்லாத் தப்பையும் பண்ணிட்டு மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிருமா?"

"சொல்லு, நான் என்ன பண்ணணும்?” என்று தன் கண்களைத் துடைத்துக் கொண்டு ஜியா கேட்க,

"ம்ம் ஏதாவது பண்ணு, என்னை கூல் பண்ற மாதிரி.” என்று கோபமாய் இருப்பது போல நடிக்க அதைக் கண்டு புன்னகைத்தவள், எம்பி தன்னவனது கன்னத்தில் தன் காதல் முத்திரையைப் பதித்து அவனது நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள்.

தன்னவளைத் தன் மார்போடு அணைத்து கொண்டவன் மென்மையாய் அவளது கேசத்தைக் கோதியவாறே, "எப்பவும் இப்படியே சந்தோஷமா நீ இருக்கணும்."

"சாரிடா, ரொம்பப் பேசிட்டேன், கஷ்டப்படுத்திட்டேன்ல?"

"கஷ்டம் இல்லனு சொல்ல மாட்டேன், ஆனா நீ என்னைக் கஷ்டப்படுத்தினதுக்கு அப்புறமா என் மேல காட்டுற காதல் இன்னும் அழகா இருக்கும். அதுல லவ் பொங்கி வழியும், அதுக்காவே நீ என்னை எவ்வளவு வேணும்னாலும் கஷ்டப்படுத்தலாம்.” என்றவன் அவளது இதழை நோக்கி குனிய அவனைத் தடுத்தவள்,

"ஆயிஷா என்கேஜ்மெண்ட்க்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டியா, ஏதும் விட்டு போகலல?"

"பண்ணியாச்சுனு அம்மா சொன்னாங்க, இருந்தாலும் எல்லாம் சரியா இருக்கானு கிராஸ் செக் பண்ணணும். அப்புறம் கேட்டரிங்ல கொஞ்சம் சேன்ஜ் இருக்கு, பாரு அதை நான் மறந்தே போய்ட்டேன். ஞாபகபடுத்தினதுக்கு ரொம்பத் தேங்க்ஸ்.” என்றவன்,

"வர லேட்டாகும், நீ சாப்பிட்டுட்டு தூங்கிரு. நான் போயிட்டு வரேன்." என்று அவளது நெற்றியில் இதழ் பதித்தவன் புன்னகை தளும்ப அங்கிருந்து செல்ல, தன்னவனின் இதழ் அளித்த ஸ்பரிசத்தில் ஜியா தன்னையே மறந்து காதலில் லயித்திருந்தாள்.

ஏற்கனவே மாளிகை போன்று இருக்கும் ஆஷிக்கின் இல்லத்தில், மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் பூக்களால் அமைந்த வேலைப்பாடுகள் இன்னும் அழகு சேர்க்க, பட்டப்பகலிலும் அவனது இல்லம் விழாக்கோலம் கொண்டிருந்தது. அனைத்து ஏற்பாடுகளும் சரியாக இருக்கிறதா என்று ஆதர்ஷும் ஆஷிக்கும் சரி பார்த்துக் கொண்டிருக்க,

அப்பொழுது வாசலில் வந்த விருந்தாளிகளை இதழோரம் புன்னகைத்தவாறே வரவேற்றுக் கொண்டிருந்த தன் காதல் மனைவி கண்ணில் பட, ஸ்கை ப்ளூ நிற புடவையில் தேவதையெனக் காட்சியளித்த தன்னவளை, உச்சி முதல் பதம் வரை தன் கண்களால் வருடினான்.

சுற்றும் முற்றும் எதைப் பற்றியும் யோசிக்காதவன் காதலும் ஆசையும் போட்டி போட, தன்னவளைத் தன் விழிகளினாலே அள்ளி பருகிக்கொண்டிருக்க,

"டேய் பக்கத்துல ஒரு கன்னிப் பையனை வச்சுட்டு நீ இப்படி எல்லாம் பண்றது கொஞ்சம் கூடச் சரியில்லடா.” என்ற ஆதர்ஷைப் பார்த்து புன்னகைத்தவன், “இதோ வந்திடுறேன்.” என்று கூறிக்கொண்டே அங்கிருந்து செல்ல,

"சும்மாவே நீ அவ்வளவு பண்ணுவ, இதுல கல்யாணம் வேற பண்ணிக்கிட்ட நீ நடத்து...” என்ற ஆதர்ஷ் ஏற்பாடுகளைக் கவனித்தான்.

ஜியாவின் அருகில் சென்று அவளை உரசிக்கொண்டே நின்ற ஆஷிக், யாருக்கும் தெரியாமல் அவளைத் தனியே அழைத்துக்கொண்டு வர,

"டேய் கைய விடு, இப்போ எதுக்கு என்னைத் தனியா கூட்டிட்டு வந்த? அங்க வர்றவங்கள யாரு வரவேற்பாங்க?” என்று கடுகடுக்க,

"என்ன நீ, நான் ஆசையா உன்னைப் பார்க்க வந்தா என்னை விரட்டிகிட்டே இருக்க?” என்று முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள,

"சாரிடா, வேலை இருக்குல..."

"அப்போ நான் முக்கியம் இல்லையா?"

"முக்கியம்தான், சொல்லு என்ன வேணும்?"

"புடவையில அழகா இருக்க.” என்று தன்னைச் சல்லாபமாய் நெருங்கியவனைத் தள்ளிவிட்டவள், தன்னவனின் ஏக்கத்திற்கு வெறும் புன்னகையையை மட்டும் சிந்தி, அவனது ஏக்கத்தைக் கூட்டிவிட்டு அங்கிருந்து செல்ல, “ஏன்டி கெஞ்ச வைக்கிற?” என்று செல்லமாய் கடிந்தவனின் கண்களிலும் வார்த்தையிலும் காதல் வழிந்தது.

ஆஷிக்கின் இல்லத்தில் அனைவரும் மாப்பிள்ளை வீட்டாரின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்க, ஜியா வேலைக்காரர் ஒருவரை அழைத்து, "அண்ணா வர்றவங்களுக்குக் கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் ரெடியா இருக்குல?"

"இன்னும் கொஞ்சம் நேரத்துல ரெடியாகிரும் மேடம்."

"என்ன அண்ணா இப்படிச் சொல்றீங்க? சீக்கிரம், இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்ல இருந்து எல்லாரும் வந்துருவாங்க. சீக்கிரமா பண்ணுங்க.” என்று அவரைப் பணித்துக்கொண்டிருக்க,

கம்பிரமான குரலில், "ஏய் இங்க என்னடா பண்ணிட்டு இருக்க? உள்ளே போய் எனக்குச் சூடா டீ எடுத்துட்டு வா.” என்று அந்த வேலைக்காரனை அதட்டியவாறே வந்த அஸாத்தைப் பார்த்து ஜியா ஒருவித தயக்கத்துடன் புன்னகைக்க,

அவர், "என்ன ரொம்ப அதிகாரமா சுத்திட்டு இருக்க? என்ன எல்லாம் என் பையன் குடுக்குற தைரியத்துல ஆடிட்டு இருக்கியா? சத்தம் வந்துச்சு தொலைச்சுருவேன், என்கேஜ்மென்ட் முடியுற வரைக்கும் நீ என் கண்ணுலயே படக்கூடாது உள்ள போ.” என்று தன் கணீர் குரலில் அரட்டியதில், பயந்து போன ஜியா அழுதுகொண்டே பதில் ஏதும் பேசாமல் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

ஆஷிக் ஆதர்ஷிடம், "என்னடா இந்த ரோஹித் இன்னும் வரல, அவனுக்குப் ஃபோன் பண்ணுனியா, இல்லையா?” என்று கூறிய மறுநொடி,

"இதோ வந்துட்டேன்...” என்று ரோஹித் தன் கைகளை விரித்துப் புன்னகைக்க ஆதர்ஷ், ஆஷிக் இருவரும் அவனைக் கட்டி அணைத்துக்கொள்ள, திடீரென்று எதையோ யோசித்த ரோஹித் வெடுக்கென விலகி ஆஷிக்கிடம்,

"டேய் ஆதர்ஷ் சொன்னதெல்லாம் உண்மையாடா, நீயும் ஜியாவும்..."

"ஆமாடா"

"என்கிட்ட ஒருவார்த்தை கூட உனக்குச் சொல்லணும்னு தோனலல?"

"சாரிடா, எதையும் சொல்லிட்டு பண்ற அளவுக்கு எனக்கு நேரம் இல்லை, எல்லாம் அப்படி அப்படி நடந்து போச்சு புரிஞ்சிக்கோடா."

"போடா, ஏதோ சொல்ற... நீ சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு ஹாப்பிதான்.” என்றவன் ஆஷிக்கின் முகத்தை உற்று நோக்கியவாறே ஆதர்ஷிடம்,

"டேய் ஆதர்ஷ் என்னடா புது மாப்பிள்ளை முகம் ரொம்பச் சிவந்து போய் இருக்கு?” என்று ஆஷிக்கை வம்பிழுக்க, "அதெல்லாம் ஒன்னும் இல்லை...” என்று ஆஷிக் வெட்கப்பட,

ஆதர்ஷ், ஆஷிக்கைப் பார்த்து முறைத்தவாறே, “ம்ம் பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்.” என்று கடுப்புடன் கூற,

"டேய் என்னடா ஆச்சு, இவ்வளவு விரக்தியா சொல்ற?” என்று ரோஹித் புன்னகைத்தான்.

"இருக்காதா, பக்கத்துல என்னை வச்சுட்டு அப்படி ரொமான்ஸ் பண்றான்டா, கடுப்பாகாம எப்படி இருக்கும்?” என்றதும் ரோஹித்தும் ஆஷிக்கும் சிரிக்க,

"ஏன்டா சிரிக்க மாட்டீங்க, என்னைப் பார்த்தா உங்களுக்கு அப்படித் தான்டா இருக்கும்.” என்றதும்,

ஆஷிக், "டேய் போதும்டா, விட்டா அழுதுருவ போல?"

"சும்மா இருடா."

"நாங்க சும்மா இருக்கிறது இருக்கட்டும், முதல்ல அங்க பாரு." என்று ஆதர்ஷின் முகத்தைத் திருப்பி வாசல் பக்கம் காட்ட, அங்கே நடாஷா அவர்களைப் பார்த்துக் கை அசைத்து புன்னகைத்தவாறே அவர்களை நோக்கி வர,

ஆதர்ஷின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். அதுவரை புலம்பியவனின் உதடுகள் புலம்பலை விட்டுவிட்டுப் புன்னகைக்கத் தொடங்கியது.

ரோஹித், "டேய் வழியாத... நார்மலா இரு.” என்று ஆஷிக்கிடம் ஹைஃபை அடித்தவாறு கேலி செய்ய, அசடு வழிந்த ஆதர்ஷ் இருவரின் கன்னத்திலும் நச்சென்று இதழ் பதித்து, "நட்புக்கு எடுத்துக்காட்டே நீங்க தான்டா.” என்று அவர்களைப் பாராட்ட,

ஆஷிக் தனது கன்னத்தைத் துடைத்தவாறே, "இத வெறும் வார்த்தையாலே சொல்லிருக்கலாம்.” என்று கோபமாய் பார்க்க, அதற்கு அவனது கன்னத்தைக் கிள்ளிய ஆதர்ஷ்,

"சரி, அவளை எப்போ இன்வைட் பண்ணின?” ஆர்வமாய் கேட்க,

"எனக்கு இந்த ஐடியா கொடுத்ததே ரோஹித்தான். அவன் சொல்லிதான் நான் பண்ணினேன்.” என்றதும் அவர்களை அணைத்து கொண்டவன்,

"நீங்க தான்டா என் தளபதீங்க, நீங்க ரெண்டு பேரும் என் ரெண்டு கண்ணு மாதிரி. உங்களுக்காக என் உயிரையும் குடுப்பேன்.” என்று சிரித்துக் கொண்டே கூறினான்.

ஆஷிக், "எங்களுக்கு உயிரை குடுத்துட்டு அவளை என்ன ஆவியா வந்து லவ் பண்ணுவியா?” என்று கேலி பேச,

"டேய் பேச்சுக்கு சொன்னா உயிரை குடுனு சொல்லுவீங்க போலையே?” என்று பதறியவனை,

ரோஹித், "இதைவிட நல்ல சான்ஸ் கிடைக்காது, ஒழுங்கா ஈகோ, ஸ்டேட்டஸ் எல்லாம் பார்க்காம அவகிட்ட உன் மனசுல உள்ளதை சொல்ற வழிய பாரு சரியா?” உரிமையாய் கண்டிக்க,

"கண்டிப்பாடா, அவளைப் புரிஞ்சிக்கிறதுக்கு எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பா இருக்கும்.” என்று அவன் கூறவும்,

"எல்லாருக்கும் ஒரு பெரிய ஹாய்!” என்றவாறு அவர்களது அருகில் வந்தவள் ஆதர்ஷை ஒருமுறை பார்த்துவிட்டு ஆஷிக்கிடம், "கங்க்ராட்ஸ் கேப்டன், ஹாப்பி மேரீட் லைஃப்!” என்று தன் கரத்தை நீட்ட திடுக்கிட்ட ஆஷிக், "உனக்கு எப்படித் தெரியும்?” என்பதற்குள்,

"எனக்கா! நான் லேட்டு, நம்ம ஏர்லைன்ஸ்ல உள்ள எல்லாருக்கும், ஏன் இந்த உலகத்துக்கே தெரியும் ஆதர்ஷ் சார். பேஸ்புக்குல நேத்து மார்னிங் அப்லோட் பண்ணிருக்காரு.” என்றதும்,

"நான்தான்” என்று தன் காலரை தூக்கிவிட்ட நண்பனைப் பார்த்து, "நேத்து மார்னிங் தானடா கல்யாணம் ஆச்சு, சன் நெட்வொர்க்கை விட ஃபாஸ்டா இருக்க.” என்று கூற ஆதர்ஷ் அசடு வழிய சிரித்தான்.

"ஆஷிக் சார், உங்க ரசிகைகள் எல்லாரும் உங்க மேல கடும் கோபத்துல இருக்காங்க. நீங்களும் ஜியா மேடமும் டெல்லி வந்ததும் உங்களுக்குக் குடுக்கிறதுக்குப் பெரிய பார்ட்டியே அங்க ஏற்பாடாகிட்டு இருக்கு.” என்றவள், "ஆமா ஜியா மேடம் எங்க, வந்ததுல இருந்து நான் பார்க்கவே இல்லை.” என்று கேட்க,

"அவ உள்ள வேலையா இருக்கா, உள்ள போ. டேய் ஆதர்ஷ் கூடப் போடா. அவங்களுக்கு அவங்களோட ரூமை காட்டு.” என்று கண்ணசைக்க, ஆதர்ஷ் புன்னகைத்தவாறே நடாஷாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான். அவர்களைப் பார்த்து ஆஷிக் சிரித்துக் கொண்டிருக்க ரோஹித் ஆஷிக்கிடம்,

"ஜியா வேலையா இருக்கா ஓகே, தியா கண்ணுலயே காணும். அவ வேலை செய்யுற ஆளெல்லாம் இல்லையே?” என்றதும் ஆஷிக்கின் முகம் சுருங்க,

"உன்கிட்டதான் கேட்டுட்டு இருக்கேன், அவ எங்கடா பார்க்கவே முடியலை?” என்று மீண்டும் கேட்கவும் நீண்ட பெருமூச்சு விட்ட ஆஷிக்,

"ரோஹித். இத்தனை நாள்ல நிறையா நடந்து போச்சு, பிறகு பொறுமையா நான் உனக்கு எல்லாம் சொல்றேன்.” என்று கூற, ஆஷிக்கின் நிலையைப் புரிந்து கொண்டவனாய் ரோஹித். 'சரி' என்பதைப் போலத் தன் தலையை அசைத்தான்.

இன்னும் சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்து விடுவார்கள் என்கின்ற செய்தி வர அவர்களை வரவேற்க ஹாஜரா, அஸாத், ஆஷிக், ஆதர்ஷ், ரோஹித், நடாஷா, பிறகு மற்ற விருந்தாளிகளில் சிலரும் அவர்களின் வருகைக்காக வாசலில் காத்திருந்தனர்.

அங்கே அவர்கள் வாசலில் காத்திருக்க, ஆயிஷாவோ தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு, தன் அறையில் உள்ள பால்கனியின் வழியாகத் தன்னை ஆள போகிறவனின் வருகைக்காக, வழிமேல் விழி வைத்து எதிர்பார்த்து கொண்டிருந்தாள். அவன் இன்னும் சிறிது நேரத்தில் தன்னவனாகப் போகிறான் என்றாலும், இந்த நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் இயல்பான தவிப்புடன் யாருக்கும் தெரியாமல் விழி மலர்ந்து காத்திருந்தாள்.

உன்னை வெகு நேரம் காக்க விடமாட்டேன் என்பது போல, கருப்பு நிற ஆடி கார் ஆயிஷாவின் வீட்டு வாசலில் நுழைந்த தோரணையே, அது மாப்பிள்ளை வீட்டாரின் கார் என்பது ஆயிஷாவுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அனைவரும் சூழ்ந்து கொண்டு அவர்ளை வரவேற்க, ஆயிஷாவால் சமீரை சரியாகப் பார்க்க முடியவில்லை. இருந்தும் தன் முயற்சியைக் கை விடாமல் பார்த்தவளின் கண்களில் முதலில் தென்பட்டது,

காற்றில் அலை பாய்ந்த அவனது கேசம். கலைத்து பார்க்க துடிக்கும் தன் கைகளை ஏளனம் செய்துவிட்டு அவனது கேசத்தை, கலைத்து விளையாடும் தென்றல் மீது ஆயிஷாவிற்குச் சிறு கோபம் வர, அலைபாய்ந்த அவனது கேசம் மெல்ல அவளது உள்ளத்தையும் தன் அலையோடு சேர்த்து அடித்துச் சென்றது.

கலைந்த கேசத்தைச் சரி செய்யும் பொழுது முழுக்கை சட்டைக்குள் இருந்து தென்பட்ட உறுதியான கைகள், பிடித்துக் கொள்ளத் துடிக்கும் தன்னவனின் கரத்தில், செருக்குடன் இருந்த பிளாட்டினம் காப்பு மீது கொஞ்சம் பொறாமை வந்தாலும், நீண்ட அழகான, தன்னை வீணையாய் மீட்ட போகும் அந்தக் கரத்தை அவள் ரசிக்காமல் இல்லை.

கூட்டம் மெல்ல களைய அடுத்ததாய் அவள் கண்ணில் பட்டது, அவளுக்குள் மின்னலை போலப் பாய்ந்த தன்னவனின் காந்த பார்வை. அவனது விழியோடு மயங்கிட துடிக்கும் தன் விழிகளைப் பார்த்து, செருக்குடன் தனக்குப் போக்கு காட்டிவிட்டு தன்னவனின் விழியோடு ஒட்டி உறவாடிய இமை மீது கோபம் வந்தாலும், அவனது காந்த பார்வையில் தன்னைத் தொலைக்க அவள் மறக்கவில்லை.

மேலும் எட்டிப்பார்த்தவளின் கண்களுக்குத் தெரிந்தது, தன்னை வீழ்த்த துடிக்கும் கன்

னக்குழி சிரிப்பு. தன் விரலை விட்டு பார்க்க துடித்த தன்னை எட்டிப்பார்த்து ஏளனமாய்ச் சிரித்துவிட்டு தன்னவனின் கன்னக்குழியில் கொஞ்சிக் குலாவிய அந்த முகப் பரு மீது சிறு கோபம் வந்தாலும், அவனது மாயப் புன்னகையில் அவள் விழாமல் இல்லை. சற்று தன் நுனி காலால் எம்பி பார்த்தவளின் விழிகளில், ஆண்களுக்கு உரிய கம்பீரத்தோடு ஆண் அழகனை போலத் தோன்றிய தன்னவனிடம் கொஞ்சமும் மறுக்காமல் தன்னைப் பறிகொடுத்தாள் என்றால் அது மிகையில்லை.

ஒரு புதுக்கவிதையாய் தன் கண் முன் இருந்தவனைத் தன் விழிகளினாலே, வரி பிறழாமல் பிழையின்றிப் படித்துக் கொண்டிருந்தாள்.

தன்னைத் தழுவும் பல விழிகளைத் தாண்டி ஏதோ இரு விழிகள் மட்டும் தன் உயிர் வரை ஊடுருவி செல்ல துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவன், அதன் திசை நோக்கி தன் பார்வையைச் செலுத்த, தான் பார்ப்பதை கூட அறியாமல் தன் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த ஆயிஷாவைப் பார்த்த மறுநொடியே, தன் நெஞ்சில் பதிந்த அவளது புகைப்படத்தைத் தன் நினைவிற்கு கொண்டுவந்தவனின் உதடு, கண்கள், கன்னக்குழி என்று எல்லாம் ஒன்று சேர்ந்து போட்டி போட்டுக்கொண்டு புன்னகைத்தது. சில நொடிகள் தன்னவளைப் பார்வையால் வருடிவிட்டு அவன் அங்கிருந்து செல்ல,

"ச்ச இன்னும் கொஞ்ச நேரம் இருக்கக் கூடாதா?” என்று ஆயிஷா சிணுங்கிக் கொண்ட நேரம்,

திடீரென்று தன் மீது பட்ட ஒளியால் என்னவென்று கீழே பார்த்தவளின் கண்களில், சமீர் தன் கை கடிகாரத்தைத் தன் பக்கம் உயர்த்திக் காட்ட, அதில் உள்ள கண்ணாடியில் சூரிய கதிர்கள் பட்டு அதன் பிம்பம்தான் தன் மீது படுகிறது என்பதை அறிந்தாள். தான் அவனை ரசித்ததை அவன் கண்டு கொண்டான் என்பதை உணர்ந்தவளின் வதனம் கும்குமமாய் சிவக்க, என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்தவள் அவனை வெறித்துப் பார்க்க, அவனோ வில்லைப் போல வளைந்திருந்த தன் புருவத்தை உயர்த்தி வளைத்து அபிநயம் காட்டி, திடுக்கிட்டவளைத் தன் பார்வையாலே அள்ளி பருகிவிட்டு, ஒரு இமை தட்டி கண்சிமிட்டி தன் வசீகரப் புன்னகையைக் கன்னக்குழி நிரம்பச் சிந்திவிட்டு அங்கிருந்து சென்றான்.

ஆயிஷாவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது. அரேன்ஞ் மேரேஜ் எப்படி இருக்கும் என்று தன் உள்ளத்தில் இருந்த தயக்கம் மாறி, பார்த்த நொடியே சமீர் மீது எல்லை இல்லாத காதல் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுவதை உணர்ந்தாள்.

***





நிலவே 43

ராஜ உபச்சாரத்தோடு மாப்பிள்ளை வீட்டாரை ஆயிஷாவின் குடும்பத்தினர் உள்ளே அழைத்து வர ஷாஹித், சமீரை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்க, பதிலுக்குத் தனது அக்மார்க் கன்னக்குழி சிரிப்பை சிந்தியவன், இன்முகம் மாறாமல் மற்றவர்களின் கேள்விக்குப் பதில் கூறிக்கொண்டிருந்தான்.

ஆஷிக்கின் காதில் ஆதர்ஷ், "என்னடா இவன் சரியான சாம்பாரா இருப்பான் போலயே, அவங்க அப்பா சொல்றதுக்கெல்லாம் தலையாட்டி பொம்மை மாதிரி தலைய மட்டும் ஆட்டிக்கிட்டே இருக்கான்."

"ஆமாடா, அதான் மிஸ்டர் அஸாத் அன்னைக்கே இவனைப் பத்தி புகழ்ந்து தள்ளினாரே?"

"இந்த மாதிரி தொட நடுங்கி பசங்கள பார்த்தா செம காமெடியா இருக்கு.” என்று கூறும் பொழுது நடாஷா ஆதர்ஷைப் பார்த்து முறைத்தவாறே ஆஷிக்கிடம், "சமீர பார்த்தாலே செம கேரக்டரா தெரியுறாரு. அவருக்கு அழகும் இருக்கு, அறிவும் இருக்கு, தன்னடக்கமும் இருக்கு. பார்த்தவுடனே பிடிக்கக் கூடிய முகம். யுவர் சிஸ்டர் இஸ் ரியலி லக்கி. ரொம்பத் தன்மையா பேசுறாரு, ஆனா இதெல்லாம் சில பேருக்கு எங்க புரியப்போகுது?” என்றவள் ஓரக்கண்ணால் ஆதர்ஷை பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல,

குலுங்கி குலுங்கி சிரித்த ஆஷிக், "என்னடா இன்னும் உன் சண்டை ஒரு முடிவுக்கு வரலையா? சிஸ்டர் இன்னும் கோபமாவே இருக்காங்க."

"டேய் என்ன பண்றதுனே தெரியலை, முறைச்சு முறைச்சு பார்குறா, எரிஞ்சு எரிஞ்சு விழுறா. நானும் எவ்வளவுதான் பொறுமையா இருக்கிறது? இப்போ எப்படிச் சொல்லிட்டுப் போறா பாரு, டார்ச்சரா இருக்கு."

"சாரி சொன்னியா?"

"நான் ஏன் சொல்லணும், அதான் நான் எல்லாத்தையும் மறந்துட்டு போய் பேசுறேனே?” என்றவனை ஏற இறங்க பார்த்த ஆஷிக், "அப்போ உனக்கு டார்ச்சராதான் இருக்கும்.” என்று புன்முறுவலோடு கூறி கேலி பேச,

அப்பொழுது அங்கு வந்த திவ்யா, "தம்பி எப்படி இருக்கீங்க?” என்று ஆஷிக்கைப் பார்த்து கேட்க,

அவரை முகமலர்ச்சியுடன் வரவேற்ற ஆஷிக், "அத்தை வாங்க, எப்போ வந்தீங்க, மாமா ஊருக்கு போறதா என்கிட்ட சொன்னாங்க, சரண்யா எங்க ஆளையே காணும்?"

"சரண்யாக்கு காய்ச்சல், அதான் நான் மட்டும் வந்தேன்."

"ஹாஸ்பிடல் போனீங்களா?”

“இல்லை மருந்து கொடுத்திருக்கேன், இனிமேதான் பார்த்துட்டு கூட்டிட்டு போகணும்."

"ஜியா எங்கபா?"

"ஜியா, ஆயிஷா கூட இருப்பா. நீங்க இருங்க, நான் கூட்டிட்டு வரேன்.” என்றவனைத் தடுத்த திவ்யா, "வேண்டாம்பா, நான் அப்புறம் பார்த்துகிறேன். சரி நான் அம்மாவை பார்த்துட்டு வரேன்.” என்றவர் அவனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு ஹாஜராவை காண சென்றார்.

பலவித உரையாடலுக்குப் பிறகு ஆயிஷாவை அவளது தோழிகள் அழைத்து வர, நிச்சயதார்த்தம் நடந்தேறும் நேரம் ஹாஜராவின் விழிகள் மட்டும் யாரையோ தீவிரமாய்த் தேடிக்கொண்டிருக்க, அப்பொழுது அஸாத் மெல்ல அவரது காதில் யாருக்கும் கேட்காதவாறு,

"என்ன உன் மருமகளைத் தேடுறியா?” என்று கடுகடுத்த குரலில் உதட்டில் சிரிப்பு மறையாமல் கேட்க, அதிர்ச்சியாகி நிமிர்ந்து தன் கணவரைப் பார்த்தவர், அவரது பார்வையிலே அனைத்தையும் புரிந்து கொண்டு, "பாவம்ங்க அந்தப் பொண்ணு."

"அவளைப் பார்த்தாலே எரிச்சலா இருக்கு, அதான் இங்க வர கூடாதுனு சொல்லிட்டேன். என்கேஜ்மென்ட் முடிஞ்சதும் வரட்டும்."

"எல்லாரும் கேட்டாங்கன்னா...” என்றவருக்கு பதில் ஏதும் கூறாமல் இறுக்கமாகப் பார்க்க, இதற்கு மேல் பேசி பயனில்லை என்பது போல, அமைதியான ஹாஜராவின் உள்ளம் ஜியாவை எண்ணி கவலை கொள்ள மறக்கவில்லை. அந்த நேரம் அவரால் அதை மட்டும் தானே செய்ய முடியும்.

இறைவனின் துணையோடு அனைவரின் ஆசியோடு சமீர், ஆயிஷாவின் நிச்சயதார்த்தம் இஸ்லாமிய முறைப்படி மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

பிறகு என்ன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. விருந்தினர் அனைவருக்கும் பஃபே முறைப்படி உணவு மரிமாறப்பட, அனைவரும் தனித் தனியே அமர்ந்துகொண்டு உணவை அருந்தியவாறு தங்களுக்கு வேண்டியவர்களோடு அமர்ந்துகொண்டு உரையாடிக் கொண்டிருந்தனர். எப்பொழுது தனிமை கிடைக்கும் மனம் விட்டுப் பேசலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த சமீர், ஆயிஷாவுக்கு அவர்கள் எதிர்பார்த்தது போலவே சந்தர்ப்பம் அமைய,

சமீரும் ஆயிஷாவும் தங்களின் காதல் அத்தியாயத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்.

ஒருபக்கம் ரோஹித், ஆஷிக் இருவரும் தனி அறையில் அமர்ந்து ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டிருக்க,

இன்னொரு பக்கம் ஆதர்ஷ், நடாஷாவை குட்டி போட்ட பூனையைப் போல வட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

இவ்வாறு அனைவரும் தங்கள் தங்கள் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனால் ஜியா மட்டும் தனது அறையின் ஜன்னல் ஓரமாக நின்றுகொண்டு வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். வீங்கி சிவந்திருந்த முகத்தில் வடிந்தோடிய கண்ணீர் தன் தடத்தை நன்கு பதித்திருக்க, வெட்டுண்ட கொடி போல உலர்ந்து காணப்பட்டாள். முகத்தில் ஆயிரம் கவலைகள் நீ, நான் என்று வரிசை கட்டி நின்றது.

ஒன்றா, இரண்டா எதை எண்ணி கவலை கொள்வாள். எங்குச் சென்றாலும் உன்னை விட மாட்டேன் என்பது போல, தன்னைப் பின் தொடரும் பழைய நினைவுகளுக்காகவா? இல்லை தள்ளிருந்தே தன்னை வேட்டையாட துடிக்கும் அந்த அசுரர்களுக்காகவா? இல்லை என் பையனை மயக்கிட்ட என்று தன்னைத் தேளாய் கொட்டும் வார்த்தைகளுக்காகவா?

எதை எண்ணி கவலை கொள்ளுவாள்? எதை எதிர்த்து போராடுவாள்? எதற்கெல்லாம் மிரண்டு ஓடுவாள்? துணையாய் இருக்க வேண்டிய கண்ணீர் கூட விட்டு விலக, தனிமையில் துணை தேடியவளின் பின்னால் இருந்து வந்த ஒரு குரல்,

"ஜியா, என்னமா அழுதுட்டு இருக்கியா?” அந்த குரலில் அத்தனை மென்மை. காயப்பட்ட தன் மனதிற்கு மருந்திட்டது போல ஒரு உணர்வு. அது யாருடையது என்பதை அவள் கிரகிக்கும் முன்பே, அந்தக் குரலுக்குச் சொந்தக்காரின் கரங்கள் அவளது தோள்களைத் தழுவ, சட்டென்று திரும்பியவளின் கண்களில் இருந்து திடீரென்று கண்ணீர் துளிகள் நிற்காமல் வழிந்தோட, தன் முன்னால் நின்று கொண்டிருந்த தன் அத்தை ஹாஜராவை இறுக்க அணைத்து கொண்டாள் ஜியா.

அவரும் ஒரு தாய் தானே, அவர் முன்னால் அவளால் நடிக்க முடியவில்லை. ஓவென்று அழுதுவிட்டாள்.

மெல்ல அவளது முதுகை வருடி கொடுத்த ஹாஜரா, ஜியா அழுது முடிக்கும் வரை காத்திருந்தார். சிலபல நிமிடங்கள் கழிந்த பிறகு எதோ மனம் லேசான மாதிரி ஒரு உணர்வு, மெல் நிமிர்ந்தவள் எதோ பேச எத்தனிக்க அதற்குள் ஹாஜரா,

"மன்னிச்சுருமா, உன்னைப் பார்த்தாலே தெரியுது அவர் உன்னை எவ்வளவு காயப்படுத்திருக்காருனு மன்னிச்சுருடா. எனக்கு வேற என்ன சொல்றதுனு தெரியலை.” என்று தயங்கியவரின் கரங்களைப் பற்றிக் கொண்ட ஜியா அவரது மனதில் உள்ளதைப் புரிந்தவளாய்,

"இதைப் பத்தி நான் ஆஷிக்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்மா." என்றதும் ஹாஜராவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட, அவரது கண்ணீரை துடைத்த ஜியா, "மா ப்ளீஸ் அழாதீங்க."

"இல்லடா, இது ஆஷிக்குக்கு தெரிஞ்சா...” என்றவரை குறுக்கிட்ட ஜியா,

"ஆஷிக்குக்குத் தெரிஞ்சா தேவை இல்லாம அப்பாகிட்ட கோபப்படுவான், அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் சண்டை வரும். இதைக் கூடப் புரிஞ்சிக்காதவளாமா நான்?” என்ற மறுநொடி ஜியாவை அணைத்து உச்சியில் முத்தமிட்டவர், அவளோடு இயல்பாகப் பேசி கொண்டே கீழே வர, அவர்கள் கலகலவெனச் சிரித்தபடி மாடியில் இருந்து கீழே இறங்கி வருவதைக் கவனித்த ஆஷிக் அவர்களிடம்,

"உங்க ரெண்டு பேரையும் காணும்னு நான் தேடிட்டு இருக்கேன், நீங்க எங்க போனீங்க? சிரிப்புச் சத்தம் பலமா இருக்கு.” என்று கூறியவாறு, அவர்கள் இருவருக்கும் இடையில் சென்று இருவரது தோள்கள் மீதும் கை போட்டவன், கேலியாக அவர்களோடு பேசிக்கொண்டிருக்க அப்பொழுது அங்கே வந்த ஆயிஷா,

"ஜியா இங்கையா இருக்க, உன்னை எங்க எல்லாம் தேடிட்டு இருக்கேன்? என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் சமீர்கிட்ட இன்ட்ரோ பண்ணிட்டேன் உன்னைத் தவிர. அவர்கிட்ட உங்க லவ் ஸ்டோரிய சொன்னேன், உடனே பார்க்கணும்னு சொன்னாரு. நீங்க ரெண்டு பேருமே வாங்க.” என்று ஜியாவோடு சேர்த்து ஆஷிக்கை அழைத்து இல்லை இழுத்துக்கொண்டு சென்றாள்.

நடாஷா சாப்பிட்டு முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பும் நேரம் பார்த்து, அவளது சல்வார் டேபிளில் சிக்கிக்கொள்ள, அதை எடுக்க அவள் திரும்புவதற்குள்,

"லெட் மீ ஹெல்ப் யு...” என்றவாறு சமீர் அவளுக்கு உதவி புரிய முன்வர, அப்பொழுது அங்கே வந்த ஆதர்ஷ், சமீரின் காதில், "பாஸ் இது என் ஆளு, நான் பார்த்துக்கிறேன், உங்க ஆளு உள்ளே வெயிட்டிங்.” என்று கூறி கண்சிமிட்ட, கன்னக்குழி ததும்பப் புன்னகைத்த சமீர், "எஸ் பாஸ், யு கேரி ஆன்.” என்று கூறி பதிலுக்குக் கண்சிமிட்டி தன்னிடம் நன்றி சொல்ல வந்த ஆதர்ஷிடம், "பாஸ் தேங்க்ஸ் அப்புறம், சிஸ்டர் வெயிட்டிங்.” என்றவாறு ஆதர்ஷின் தோளை நட்பாகத் தட்டிவிட்டு அங்கிருந்து சென்றான்.

"ஏய் நான் எடுக்குறேன்.” என்று கூறி நடாஷாவின் அருகில் வர, தன் கைகளை உயர்த்தி வேண்டாம் என்பது போலக் காட்டியவள், தானே எடுத்துவிட்டு ஆதர்ஷைப் பார்த்து தன் கண்கள் சிவக்க முறைத்துவிட்டு அங்கிருந்து செல்ல,

அவளது பார்வை அவனை எதோ செய்ய, அதுவரை தளர்ந்திருந்த அவனது முகம் அவளது ஒற்றைப் பார்வையிலே சருகாய் உலர்ந்து போனது.

உணவு அருந்திய பின்பு அஸாத் தன்னைப் பேட்டியெடுக்க வந்த ப்ரெஸ் ரிப்போர்ட்டர்ஸ்களிடம் ஆயிஷா, சமீரின் திருமணம் மார்ச் 30, மூன்று மாத இடைவெளிக்கு பிறகு டெல்லியில் நடைபெறும் என்பதை அறிவித்து, மேலும் தொடர்ந்து தன் ஒரே மகன் ஆஷிக்கின் திருமணம் வெளிநாட்டில் நடைபெற்றதால், அனைவரையும் கூப்பிட முடியவில்லை. அதனால் வருகிற ஞாயிற்றுக் கிழமை பிரபல நட்சத்திர ஹோட்டலில் மிகவும் விமர்சசையாக அவர்களது திருமண வரவேற்பு விழா நடைபெறும். அனைவரும் வரவேண்டும் என்று அறிவித்துவிட்டு ரிப்போர்ட்டர்ஸ் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும்,

"ரிசெப்ஷன் அன்னைக்கு வந்து தெரிஞ்சிக்கோங்க, இப்போ பார்ட்டிய என்ஜாய் பண்ணுங்க.” என்று கூறி அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

இதைக் கவனித்த ஆஷிக், 'என்னோட ரிசெப்ஷன அரேன்ஞ் பண்றதுக்கு இவர் யாரு?' என்று எண்ணி கோபம் கொண்டவன், ஜியாவிடமும் ஆயிஷாவிடமும் இதோ வந்து விடுவேன் என்று கூறிவிட்டு அஸாத்தை நோக்கி சென்றான்.

ஆஷிக் சென்றதும் ஆயிஷா, "இந்த ஆஷிக் ஏன் இப்படிப் பண்ணிட்டு இருக்கான், சமீர மீட் பண்ணிட்டு எங்கையும் போக வேண்டியதுதானே?” என்று ஜியாவிடம் வசை பாட ஜியா ஆயிஷாவிடம், "விடு, அவனுக்கு எதாவது வேலை வந்திருக்கும், இப்போ உனக்குச் சமீர்கிட்ட என்னை இன்ட்ரோ குடுக்கணும், அப்படித் தானே?"

"ம்ம்"

"இதுக்கு ஏன் ஆஷிக் வரணும், நான் வரேன்.” என்று கூறி அவளைச் சமாதானம் செய்ய இருவரும் சமீரைக் காண சென்றனர்.

ஆஷிக், அஸாத்தை பார்த்து முறைத்தவாறு, "யாரை கேட்டு..." என்று ஆரம்பிக்கவும்,

அஸாத், ஆஷிக்கை ஒரு நொடி பார்த்துவிட்டு தன் மனைவி ஹாஜராவிடம், "இங்க பாரு ஹாஜரா, உன் பையன்கிட்ட சொல்லி வை, ஏற்கனவே அவன் பண்ணின காரியத்தால செம கோபத்துல இருக்கேன். அவனை எதுவும் பேசாம இருக்கச் சொல்லு. என் பிஸ்னஸ் பார்ட்னர்ஸ் எல்லாரும் கேள்வியா கேட்குறாங்க, எரிச்சலா இருக்கு. அவனுங்க வாய அடைக்கத்தான் இந்த ரிசெப்ஷன் ஃபங்ஷன்.

இன்னும் ரெண்டு நாள்ல இவனுக்கும் ஜியாக்கும் ரிசெப்ஷன் பயங்கர க்ராண்டா நடக்கணும். வர்றவங்க எல்லாரும் கல்யாணத்தைப் பத்தி கேட்கவே கூடாது, அந்த அளவுக்கு க்ராண்டா இருக்கணும். எல்லா ஏற்பாடையும் நான் ஆரம்பிச்சுட்டேன், இவன் வாய மூடிட்டு நல்லபடியா இருந்தா போதும். வேற எதுவும் செய்ய வேண்டாம். அதை விட்டுட்டு எதாவது ஆர்ப்பாட்டம் பண்ணினான், எப்போதும் போலப் பொறுமையா இருக்கமாட்டேன் சொல்லிட்டேன்.

இந்த ரிசெப்ஷன்ல என்னோட மானம், மரியாதை எல்லாம் அடங்கிருக்கு, சொல்லி புரியவை.” என்று அவர் மூச்சு விடாமல் உறுதியாகக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

எதையோ பேச வாயெடுத்த ஆஷிக்கைப் பார்த்து முறைத்த ஹாஜரா, "பேசாத, நீ ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் பண்ணிகிட்டல, அப்புறம் என்ன உனக்கு? அப்பா சொல்ற மாதிரி கேட்டு நட, உன்னைக் கெஞ்சி கேட்டுக்குறேன்.” என்று கெஞ்சிய தன் தாயைப் பார்த்து,

"மா என்னமா நீங்க, அவரோட இமேஜ்காகப் பண்ணிட்டு இருக்காரு, அதுக்கு நீங்களும் சப்போர்ட் பண்றீங்க? அந்த ஆளு பேச்செல்லாம் என்னால கேட்க முடியாதுமா. அவரு யாரு, எனக்கு இதெல்லாம் பண்றதுக்கு?” என்ற மறுநொடி ஆஷிக்கைப் பார்த்துக் கை ஓங்கிய ஹாஜரா, சில நொடிகள் கழித்து ஓங்கிய கையைத் தளர்த்தியவாறு,

"இங்க பாரு ஆஷிக், உனக்குப் புடிச்சுருந்தாலும் இல்லைனாலும் அவருதான் உன் அப்பா, இதை மாற்ற முடியாது. நீ கேட்டுதான் ஆகணும். என்னால முடியலை, உங்க சண்டைக்குப் பஞ்சாயத்து பண்ணி பண்ணி நான் ஒஞ்சி போய்ட்டேன். இதுவரைக்கும் வேற இப்போ புதுசா ஜியாவும் நம்ம வீட்ல ஒருத்தியா இருக்கா, அவ முன்னாடி தயவு செஞ்சி எதுவும் பண்ணாத.

உன்னால எந்தப் பிரச்சனையும் வர கூடாது. மீறி வந்தது நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. உண்மையாவே உன் அம்மா மேல உனக்கு அன்பு இருந்தா, நான் சொல்றத கேளு.” என்றவர்,

ஆஷிக்கின் பக்கம் திரும்பி, “உன்னை நான் நம்புறேன். வருத்தப்படுற மாதிரி எதுவும் பண்ணாத. இங்க இருந்து நீ டெல்லி போற வரைக்கும் எந்தப் பிரச்சனையும் பண்ண கூடாது." என்றவர் ஆஷிக்கின் பதிலுக்காகக் காத்திருக்க, தன் தாயின் அருகில் வந்த ஆஷிக், “நீங்க அழாதீங்க, நீங்க அழுதா மட்டும் என்னால தாங்கிக்க முடியாது. என் வாய்க்கு பெரிய ஜிப்பா போட்டுக்குறேன். அவர் பேச்சுக்கே வரமாட்டேன், எல்லாம் உங்களுக்காக.” என்று அவன் கூறவும், ஹாஜரா நிம்மதி அடைந்தவராய் தன் மகனின் தலையை மெல்ல வருடிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

ஆஷிக்கின் கண்களில் இருந்த கோபம் மட்டும் இன்னும் நீங்காமல் அப்படியே இருந்தது.

சமீர் யாருடனோ மும்முரமாகப் பேசிக்கொண்டிருக்க, "ஹாய் சமீர்!” என்றவாறு அவனது பின்னால் இருந்து ஆயிஷா அழைக்க, தன் அலைபேசியை ஹோல்டில் போட்டவன் ஆயிஷாவின் பக்கம் திரும்ப,

"டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று மெலிந்த குரலில் கேட்க,

"ஏய் இல்லை...” என்றவன் தன் மணிக்கட்டை உயர்த்திக் காட்டி, எப்படி இருக்கு என்று தன் புருவம் உயர்த்திக் கேட்க,

"வாவ்! உங்க கைக்கு ரொம்ப அழகா இருக்கு, உங்களுக்குப் புடிச்சுருக்கா?" என்று தன் கண்கள் விரிய கேட்டவளைக் கண்டு தனது அக்மார்க் புன்னகையைச் சிந்தியவன்,

"என் லைஃப்லயே பெஸ்ட் கிஃப்ட்னா அது இதுதான்.” என்றவன் ஆயிஷாவைக் கட்டி அணைத்துக்கொள்ளத் தன் கைகளை விரிக்க, வெட்கப்பட்டவாறே விலகியவள்,

‘ஜியா ரூம்கு வெளியிலதான் நிக்கிறா.’ என்று தன் கைகளைக் காட்டி செய்கை செய்ய, 'அச்சோ!' என்று உதடு சுளித்தவன்,

"ஏன் வெளியில நிக்க வச்சுருக்க, முன்னாடியே சொல்ல மாட்டியா?"

"வர சொன்னேன், அவதான் நீ பார்த்துட்டு வா. நான் வெளியில வெயிட் பண்றேன்னு சொன்னா. நீங்க இப்படிப் பண்ணுவீங்கனு சுதாரிச்சுதான் என்னை மட்டும் அனுப்பிருக்கானு நினைக்கிறன்." என்ற ஆயிஷாவைப் பார்த்து செல்லமாய் முறைத்தவன்,

தனது இடக்கரத்தை தன் கோட்டின் பாக்கெட்டில் நுழைத்து, வலது கரத்தால் தன் தலையைக் கோதியபடி அசடு வழிந்து புன்னகைக்க, அதைப் பார்த்து சிரித்தவாறே ஆயிஷா சமீருடன் ஜியாவிடம் சென்று, "இதுதான் ஜியா, என்னோட அண்ணி. அப்புறம் ஜியா, இதுதான் சமீர்.” இருவருக்கும் அறிமுகம் செய்த மறுநொடி,

அதுவரை மலர்ந்த முகத்துடன் இருந்த ஜியாவின் வதனம் வாடி வதங்கி போக, கண்களில் ஒருவித கலக்கம் சூழ்ந்துகொள்ள விழிகளில் இருந்து கண்ணீர் துளிகள் நிற்காமல் வடிந்தோட, இதழ்கள் துடிக்க, கூனி குறுகி உடல் நடுங்க வார்த்தை வராமல், “ச... மீ... ர்...” என்று எழுத்துக்கள் குளறியபடி நின்றாள்.

ஜியாவின் முகத்தில் கலக்கம் என்றால், சமீருக்கோ அவனது ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு உணர்ச்சியை மாறி மாறி வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

வதனத்தில் இழந்ததை மீண்டும் பெற்ற மகிழ்ச்சி தெரிய, உதட்டில் ஒருவித புன்னகை அதன் அர்த்தத்தைக் கிரகிக்கும் முன்பே, அவனது கண்களில் ஒருவித கோபம் என்று மாறி மாறி அவன் வெளிப்படுத்திய உணர்வுகள் குழப்பத்தை அளித்தது.

"ஹலோ ஜியா, எப்படி இருக்க?” என்று அவன் வினவிய வார்த்தைகள் வேண்டுமானால் யதார்த்தமாய் இருக்கலாம். ஆனால் அவனது குரலில் தொனித்த ஒருவித கோபம் அதை ஜியா மட்டுமே அறிவாள்.

"சமீர் உங்களுக்கு ஜியாவை தெரியுமா?” என்று ஆச்சரியமாய் கேட்ட ஆயிஷாவிடம், ஒருவித அசட்டு புன்னகையோடு,

"தெரியும், எப்படித் தெரியாம இருக்கும்? ரெண்டு வருஷ நட்பாச்சே... சீக்கிரமா மறக்க முடியுமா என்ன?" என்றவன் ஜியாவைப் பார்த்து, “என்ன ஜியா நான் சரியா தானே சொல்றேன்.” என்று கூறி கண்களில் கோபம் தெறிக்க அவளைப் பார்க்க,

சிலையென விறைத்து நின்றவளின் கண் முன்பு அவளைத் துரத்தும் நிகழ்வுகள் வரிசைக்கட்டி நிற்க, முகம் எல்லாம் வியர்த்து கொட்ட வெடவெடத்து போனவள்,

சமீரின் கேள்விக்குப் பதில் கூறாது முகமெல்லாம் வியர்த்து கொட்டியபடி மாடியில் இருந்து வேகமாக இறங்க, இறங்கிய வேகத்தில் ஆஷிக்கின் மீது மோதி நிற்க அவன், “என்ன ஜியா? ஏன் இப்படி ஓடி வர? என்னாச்சு?” என்று அவளது முகத்தில் தெரிந்த பயத்தை உணர்ந்து கேட்டான்.

அவனையே வெறித்துப் பார்த்தவள் மூக்கில் லேசாக ரத்தம் கசிய, கைகள் வெடவெடத்து ஆஷிக் சுதாரிப்பதற்குள் தரையில் சரிந்தாள்.

***


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்

நிலவே 44 & 45
 
Last edited:
Top