Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நிலவே 44 & 45

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
நிலவே 44

தன்னிடம் இருந்து தப்பித்து ஓடிய பகலை, உன்னை விடமாட்டேன் என்பதாய் விடாமல் துரத்தி பிடித்துத் தனக்குள் முழுவதுமாகச் சிறைவைத்திருந்த இரவு வேளை. அந்தப் பகலை போல ஜியாவும் தன்னை விடமாட்டேன் என்று துரத்துபவர்களிடம் இருந்து ஓடுகிறாள்.

"ஜியா ஓடு... நிற்காத...” என்று உயிர்போகும் வலியில் தடுமாறி கூறிய குரல்... மனம் கேட்கவில்லை, நீதியை நிலைநாட்ட வேறுவழியின்றி உயிருக்கு போராடி கொண்டிருந்த, அந்தக் குரலுக்குச் சொந்தக்காரனை திரும்பி திரும்பி பார்த்தவாறு கண்களில் குற்ற உணர்வோடு ஓடினாள். எனக்கு உதவியதால் தானே உனக்கு இந்த நிலைமை என்று உள்ளம் ஒரு பக்கம் அழ,

"அவளை விடாதடா” என்று தன்னைத் துரத்தியவனை மேலும் துரிதப்படுத்த அவனது அரக்க கூட்டாளிகள் கூச்சலிட, மின்னலென வந்தவனிடம் இருந்து தப்பித்தாக வேண்டிய கட்டாயத்தில் வேறு வழியில்லாமல் மனதை கல்லாக்கிக்கொண்டு ஓடினாள்.

சூழ்ந்திருந்த அந்த இருட்டில் திசை அறியாமல் ஓடினாள். வெகு தூரம் ஓடியவள் எதிர்பாராத விதமாக ஒரு பாறையின் மீது மோதி கீழே விழுந்தாள்.

பலமான அடி, எழ முடியவில்லை. இருந்தும் எழுந்தாள், ஆனால் மீண்டும் ஓடுவதற்குள் நெருங்கினான் அந்தக் கொடியவன்.

சிறுத்தையுடன் மான் போட்டியிட முடியுமா? அகப்பட்டாள், அந்தக் கொடிய அசுரனின் கையில்.

அவளைத் தன் முழுப் பலத்துடன் இறுக்கி பிடித்தான். தன்னை அவனிடம் இருந்து விடுவித்துக் கொள்ளத் தன்னை இறுக்கி பிடித்த கரத்தை தன் பற்களுக்கு இரையாக்கினாள்.

விடுவானா! அவனது ரத்தம் கொதித்தது. குறைக்குப் போதை வேறு. அவனுக்குள் இருந்த கொஞ்ச மனிதனும் உறங்கிப்போக, உருமாறினான் நர மாமிசனாய். அவளது பற்கள் பதம் பார்த்த அதே கரத்தால், கொத்தாக அவளது முடியைப் பற்றித் தரதரவென்று இழுத்துச் சென்றான் தன் அறைக்கு.

பலவாறு முயற்சித்தும் அந்தக் கயவனின் கரத்தில் இருந்து விடுபட முடியவில்லை. பூமலரெனக் கெஞ்சியும் பார்த்தாள். வேங்கையயெனச் சீறியும் பார்த்தாள். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. தன் முழுபலத்தால் அவனைத் தள்ள வெகுண்டெழுந்தவன்,

அவளது கேசத்தை இன்னும் உறுதியாய் கைப்பற்றி இழுத்து, அவளை வேகமாகத் தரையில் வீசினான். கசங்கி எறிந்த மலரை போலச் சுருண்டு வீழ்ந்தாள் ஜியா. ஆனாலும் விடவில்லை, மீண்டும் தட்டி தட்டி எழுந்தாள் அதே உறுதி கண்களில் மிளிர. விடவில்லை அந்த மிருகம்.

ஓங்கியடித்தான் அவளது கன்னங்கள் அதிர. அரை மயக்கத்திற்குச் சென்றாள். "ப்ளீஸ்... என்னை விட்டுடு...” என்ற வரிகளை மட்டும் அவள் முணுமுணுக்க,

"ஷட் அப்!” என்றவன், போதை வெறியில் சுவற்றோடு ஓங்கி அவளைத் தள்ள, தலை சுவற்றில் மோதி ரத்தம் விடாமல் வழிந்தோடியது.

"சு... ஜி... த்... ப்ளீ..." என்றவாறு மூச்சு பேச்சு இல்லாமல் தரையில் வீழ்ந்தாள். முரட்டுக் கரத்தில் சிக்கிய கொடிமலர் போலச் சுருண்டு கிடந்தாள்.

"சுஜித் வேண்டாம்...” என்று பிதற்றியாவாறே தன் கனவு கலைய வெடுக்கென்று முகம் எல்லாம் வியர்த்து கொட்ட எழுந்தவளின் கண்கள் குளமாகியிருந்தது.

இன்று சமீர் தன்னிடம் ஜியாவைப் பற்றிக் கூறியதையும், டாக்டர் எவ்வாறு அவளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதையும், பற்றி தன் அறையின் பால்கனியில் நின்று யோசித்துக்கொண்டிருந்த ஆஷிக்கிற்கு, இன்று ஹாஸ்பிடலில் மருத்துவரோட நடந்த உரையாடல் நினைவிற்கு வந்தது.

ஜியா மயக்க நிலையில் இருந்த நேரம், ஆஷிக் பதற்றத்துடன் மருத்துவரிடம், "மூக்குல இருந்து ரத்தம் வந்திருக்கு, என்னாச்சு? என் ஜியா நல்லா தானே இருக்கா?” என்று படபடப்போடு கேட்க,

"இப்போதைக்கு நல்லா இருக்காங்க, உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.” என்ற பிறகே சற்று நிம்மதி அடைந்தான்.

"அவளுக்கு என்னதான் ஆச்சு?"

"பேனிக் அட்டாக். மனசு முழுக்கப் பயம். வெளிய சொல்ல முடியாத எதோ ஒரு விஷயம் அவங்களோட மனசை பயங்கரமா பாதிச்சுருக்கு. அந்தப் பாதிப்புதான் இன்னைக்கு அவங்கள இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்ருக்கு. ரொம்ப டிப்ரெஷன்ல இருக்காங்க. சொல்ல போனா கிட்டத்தட்ட லாஸ்ட் ஸ்டேஜ் மாதிரிதான். டிப்ரெஷன்ல இருந்து அவங்க வெளிய வந்தே ஆகணும். மூக்குல இருந்து வந்த இரத்தம் கூட அதிகப்படியான இரத்த அழுத்தத்தாலதான்.

இதை இப்படியே விட்டா, உயிருக்கே ஆபத்தாகிரும். ரத்தத்துல அழுத்தம் குடுக்கக் குடுக்க, அந்த அழுத்தம் மூளைய பாதிக்கும். ஏன் மூளைக்குப் போற ரத்த நாளங்கள்ல கசிவு ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கு. மறுபடியும் அவங்களுக்கு பேனிக் அட்டாக் வரவே கூடாது.” என்று அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும், ஆஷிக் மனதில் ஆணி அடித்தது போல வலித்தது. பயத்தில் முகம் வியர்த்துகொட்ட கலவரத்தோடு அமர்ந்திருந்தான்.

"இதுக்கு ட்ரீட்மெண்ட் கிடையாதா, சரி பண்ண முடியும் தானே?” என்று கேட்டான் மருத்துவரின் முகத்தைப் பார்த்தபடி.

"மறுபடியும் அவங்களுக்கு அட்டாக் வராம பார்த்துக்குறதுதான் ஒரே வழி. அதைக் கூட உங்களாலதான் செய்ய முடியும். அவங்க பயத்துல எதாவது உளறுனாலும், அது என்ன ஏதுனு கேட்டு டென்ஷன் பண்ணாதீங்க. அதெல்லாம் ஒன்னுமில்லை, நான் உன் கூடவே இருக்கேன்னு அவங்களைக் கம்ஃபோர்ட் பண்ணுங்க, போத் மெண்டலி அண்ட் பிசிக்கலி. அவங்களை நார்மல் ஸ்டேஜ்க்கு கொண்டுவாங்க.

நீங்க அவங்க பக்கத்துல இருந்தா, எல்லாம் ப்ராப்ளமும் அவங்களால ஃபேஸ் பண்ண முடியும்னு அவங்களை நம்ப வைங்க. இதெல்லாம் பண்ணணும்னா நீங்க தைரியமா இருக்கணும். அப்போதான் அவங்களோட பயத்தைப் போக்க முடியும். உங்களோட அரவணைப்புதான் அவங்களுக்குப் பெஸ்ட் ட்ரீட்மெண்ட் அண்ட் பெஸ்ட் மெடிசின்.” என்று மருத்துவர் கூறியதை மனதில் பதித்துக்கொண்டவன் அவரிடம்,

"சர்ஜெரி பண்ணும் பொழுது உயிர் போறது மெடிக்கல் ஃபீல்டுல நார்மலான விஷயம் தானே?” என்று சமீர் கூறியதைப் பற்றி கேட்க,

"நார்மலான விஷயம்தான், ஆனா அது சம்பந்தபட்ட நபர்களைப் பொறுத்தது. ஒரு டாக்டரா இருந்து ஒரு அம்மாவையும் குழந்தையையும் காப்பாத்த முடியாம போய்டேனு அவங்களுக்கு ஒருவித குற்ற உணர்வு. மிஸ்டர் சமீர் சொல்றத வச்சு பார்க்கும் பொழுது உங்க மனைவி, அவங்களோட வேலைய ரொம்ப நேசிச்சுருக்காங்க. பேஷண்ட்ஸ்கிட்ட அன்பா இருந்திருக்காங்க. இந்த மாதிரி சென்சிடிவ் டைப் பெர்சன்ஸ் இப்படி எமோஷனலா பிரேக் ஆகுறது நார்மல்தான்.

இந்த மாதிரி சென்சிடிவ் டைப் பெர்சன்ஸ் டிப்ரெஸ்ட் ஸ்டேட்ல இருக்கும் பொழுது அவங்கள ஹாண்டில் பண்றது ரொம்பக் கஷ்டம். அட்டாக் வரும் பொழுது அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கனு சொல்ல முடியாது. சம் டைம்ஸ் தற்கொலை பண்ணிக்கவும் சான்ஸ் இருக்கு. ஸோ நீங்க ரொம்பக் கவனமா இருக்கணும்.” என்று மருத்துவரின் அழுத்தமான வார்த்தைகள், அவனது இரத்த அழுத்தத்தை எக்கு தப்பாகக் கூட்டியது. 'தற்கொலை பண்ணிக்கச் சான்ஸ் இருக்கு' என்ற அவரது வார்த்தைகள் அவனை வதைத்தது. உறைந்து போய் அமர்ந்திருந்தான். அவனது முகபாவங்களை வைத்தே அவனது நிலைமையை உணர்ந்த மருத்துவர் அவனிடம்,

"மிஸ்டர் ஆஷிக் ஏன், எதுக்குனு யோசிக்காம எப்படி அவங்கள அந்தக் குற்ற உணர்வுல இருந்து, வெளியில கொண்டு வர்றதுனு யோசிங்க. கண்டிப்பா உங்களால முடியும்.” என்று அவர் நம்பிக்கை கொடுக்க,

"ஒரு ஹஸ்பண்டா என் மனைவியைப் பத்தி எதுவும் தெரிஞ்சுக்காம இருந்திருக்கேன்னு நினைக்கும் பொழுது ரொம்பவே கஷ்டமா இருக்கு” என்று மிகவும் வருந்தினான். இப்படி மருத்துவர் கூறியதை எண்ணி பார்த்து என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையைக் கலைக்கும் விதமாய், உள்ளே ஜியா அலறும் சத்தம் கேட்க பதறியடித்தபடி தன் அறைக்குள் சென்றவன்,

படுக்கையில் அரண்டு போய் அமர்ந்திருந்த தன் மனைவியைப் பார்த்து கலங்கி போனான். ஆனாலும் மருத்துவர் கூறியதை எண்ணி பார்த்தவன், தன்னை முதலில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தன் முகத்தில் எந்தவித சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல், படுக்கையில் இருந்து எழும்பி உட்கார்ந்து, தன் இரண்டு முழங்கால்களின் முட்டையும் மடக்கி, தன் குதிக்காலால் ஊன்றி தடதடவென ஆடிக்கொண்டிருந்த தன் கைகளால் வளைத்து இறுக்கி பிடித்தவாறு, தன் முகத்தை மறைத்து விசும்பி கொண்டிருந்த தன் மனைவியின் கேசத்தை மென்மையாக வருடியவாறே அவளது அருகில் வந்து அமர்ந்தான்.

இறுக்கி பிடித்தும் தடதடவென நடுங்கிய மென்மையான தன்னவளின் கரத்தை, மெதுவாக பற்றித் தன் கரங்களுக்குள் அடக்கிய மறுநொடி நிமிர்ந்த பார்த்த ஜியா மூச்சு வாங்க ஏங்கிக்கொண்டே,

"ஆஷிக்...” என்று ஆஷிக்கின் பெயரை திரும்பத் திரும்ப அழைத்தவாறே, "அங்... கநா... ன்... என... க்..." என்று வார்த்தைகள் எல்லாம் குளறியபடி எதையோ பிதற்றியவள், பின்பு எதையோ யோசித்தவளாய் தன் மேல் இருந்த அவனது கைகளைத் தட்டிவிட்டு, விசும்பி கொண்டே அவன் எதிர்பார்ப்பதற்குள் குளியல் அறைக்குச் சென்று கதவிற்குத் தாழிட்டுக்கொண்டாள்.

அவளது இந்தத் திடீர் செய்கையை எதிர்பாராதவன் பதறிப்போய் கதவை பலமுறை தட்டியும் எந்தப் பயனும் இல்லாமல் போக, வேறு வழியில்லாமல் தன் முழுப் புஜ பலத்தையும் கொண்டு பல முயற்சிகளுக்குப் பிறகு, குளியல் அறையின் கதவை உடைத்தவனுக்கு அப்பொழுதுதான் போன உயிர் மீண்டும் வந்தது.

எங்கே உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு ஏதும் விபரீத முடிவை எடுத்துவிடுவாளோ என்கின்ற பயத்தில், கதவை திறந்தவனுக்கு உள்ளே அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது ஒருவித நிம்மதியைத் தந்தாலும்,

அங்கே ஜியா உறைந்து போகும் அளவிற்கு ஷவரில் இருந்து கொட்டி கொண்டிருந்த தண்ணீரில், தொபு தொபு என்று நனைந்து குளிரில் நடுங்கியவாறு தரையில் அமர்ந்திருந்த கோலம் அவனைக் காயப்படுத்தியது.

காதல் மனைவியின் துன்பத்தை எவ்வாறு போக்குவது என்று விளங்காமல், அவன் தவித்த தவிப்பு அவனது இரு கண்களின் கண்ணீரின் வழியே வழிந்தோடியது.

இருந்தும் தன் வலியை மறைத்து கொண்டவன், தன் இதழில் புன்னகை தளும்பத் தன்னவளின் அருகில் சென்று ஷவரை அணைத்துவிட்டு, ஹாங்கரில் தொங்க விடப்பட்டிருந்த துண்டை எடுத்து, ஜியாவின் முன்பு முட்டிபோட்டு அமர்ந்து கொண்டு அவளது தலையைத் துவட்டிக்கொண்டே,

"ஜியா நீ இன்னும் மாறவே இல்லை, மழையில நனையிறது உனக்குப் புடிக்கும்தான். ஆனா இப்படியா நடுஜாமத்துல, அதுவும் அடிக்கிற பனிகாத்துல? தொட்டாலே உறைஞ்சி போயிருவோம் போல, இந்த தண்ணில குளிச்சுட்டு இருக்கிற?" என்று கூற, ஜியாவின் கண்களில் மட்டும் பயத்தின் அளவு குறைந்தபாடில்லை.

பழைய நினைவுகள் அவளது கண்முன் நல்ல பாம்பை போலப் படமெடுத்து அவளைக் கொத்தி தின்ன துடித்துக் கொண்டிருந்தன.

அவளது விழிகளில் இருந்து கண்ணீர் நின்றபாடில்லை. இருந்தும் ஆஷிக் விட்டுக்கொடுக்கத் தயாராகயில்லை. சரிந்த கேசத்தை மெல்ல காதோரத்தில் சொருகியவன், இறகு போல இருந்த தன் மனைவியைத் தன் கரங்களில் ஏந்திக்கொண்டு, குளியல் அறையில் இருந்து வெளியே வந்து இறக்கி விட்டவாறு,

நான் என்றும் உன்னுடன் இருப்பேன் என்பது போல, தன்னவளின் விரல்களைத் தன் விரலோடு பிணைத்துக்கொள்ள, ஜியாவின் முகத்தில் எதோ சிறு மாற்றம் இந்த முறை. அவள் அவனது கரத்தை உதறவில்லை.

ஜில்லென்று காற்று வீசி கொண்டிருந்த, தன் அறையின் பால்கனி பக்கம் தன்னவளை அழைத்து வந்தவன், அங்கே இருந்த நாற்காலியில் அமரவைத்து, சொட்ட சொட்ட நீர் வழிய வீசிய குளிர்ந்த காற்றில் அலைபோலப் புரண்டு அங்கேயும் இங்கையேயுமாய் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிக்கொண்டிருந்த, தன்னவளின் கறுத்தடர்ந்த கேசத்தில் இருந்த சிக்கை அவளுக்குச் சிறிதும் உறுத்தாதவாறு மிகவும் மென்மையாகத் தன் ஐவிரல் கொண்டு அவிழ்த்தான்.

சில்லென்று வீசிய காற்று, ஏற்கனவே நனைந்து உறைந்து இருந்த தன் தேகத்தை மேலும் குளிரூட்டிக்கொண்டிருக்க, அதுபோதாது என்று இறகினும் மென்மையாய் தன்னவனின் வருடல், என்று அனைத்தும் ஒன்று சேர்ந்து கிடைத்ததில் ஓரளவு தெளிவு அடைந்தவள். “ஆஷிக்..." என்று மெல்லிய குரலில் அழைத்ததும்,

அவளது முகத்தைப் பார்க்காமலே தன் இரு கைகளால் அவளது விழிகளில் இருந்து வழிந்த நீரை அவன் துடைக்க, நெகிழ்ந்து போனாள்.

"எப்... படி ஆஷிக்... பார்க்காமலே நான் அழுறேன்னு நீ கண்டு..." என்று அவள் தொடர்வதற்குள்,

தன் வலக்கரத்தால் தன்னவளை வளைத்து பிடித்தவன், தன் இடக்கரத்தை தன்னவளின் வலகரத்தோடு கோர்த்து. மெல்ல தன் நாடியை அவளது உச்சந்தலையில் ஊன்றி, "உனக்கு ஞாபகம் இருக்கா ஜியா...” என்றவாறு புதைந்திருந்த தன் பழைய நினைவுகளைத் தூசி தட்டியவன் மேலும் தொடர்ந்தான்.

"ஒருநாள் பயங்கர மழை, மணி ஒரு பன்னிரெண்டு இருக்கும். உன் வீட்டு முன்னாடி கொட்டுற மழையில நான் சொட்ட சொட்ட உன்னை மாதிரி, அப்போ நானும் நனைஞ்சிட்டு நின்னேன். நான் நிக்கிறது உனக்குத் தெரியாது. நீ வருவனு எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனாலும் நான் நின்னுட்டு இருந்தேன். அப்போதான் நீ ஜன்னல் வழியா வந்து நின்ன. முதல் தடவையா முழுசா உன்னை எனக்குள்ள உணர்ந்தேன். என்னைப் பார்த்துட்டு பதறி போய் கொஞ்சம் கூட எதைப் பத்தியும் கவலைப்படாம, அந்த நடு ராத்திரியில கொட்டுற மழையில சொட்ட சொட்ட நீயும் நனைஞ்சிட்டே என்கிட்ட வந்த.

கொஞ்சம் நேரம் என் கண்ணையே பார்த்த. ஏன் வந்த? என்னாச்சு? இப்படிப் பல கேள்விகள் நீ கேட்பனு நான் எதிர்பார்த்தேன். ஆனா நீ அதெல்லாம் கேட்காம அந்தக் கொட்டுற மழையிலும் என் கண்ணுல வடிஞ்ச கண்ணீரை துடைச்சு இப்படி...” என்று பிணைக்கப்பட்ட தங்களின் கரத்தை உயர்த்திக் காட்டி இது போல என்பதாய்,

“என் கைய இறுக்கமா புடிச்சுகிட்டு என் கண்ணைப் பார்த்து, எதுவா இருந்தாலும் சரியாகிரும். நான் உன் கூடவே இருப்பேனு சொல்லி என்னை இறுக்கமா கட்டி புடிச்ச. அந்த இறுக்கம், அந்த அணைப்புதான் முதன் முதல்ல நான் காதலை உணர்ந்த நேரம்.

உன்னால அந்தக் கொட்டுற மழையிலும் என் கண்ணீரை உணர முடியும் போது, என்னால முடியாதா?" என்று அவன் கூறிய மறுநொடி, ஜியா ஆஷிக்கின் மார்பை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.

அவளிடம் வேறெதுவும் கூறாதவன், "எல்லாம் சரியாகிரும்.” என்று மற்றும் கூறி, தஞ்சமமென்று வந்தவளை தன் மஞ்சம் என்னும் நெஞ்சத்தில் புதைத்துக்கொண்டான்.

***



நிலவே 45

சுட்டெரிக்கும் சூரிய கதிர்கள் ஜன்னல் வழியே ஊடுருவி தன் இமைகளைத் தட்டி எழுப்ப, உறக்கம் இன்னும் மீதி இருக்கும் நிலையில் வலுக்கட்டாயமாக இமைகளைப் பிரித்தெடுத்தவன், தன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி முகத்தை மார்பில் புதைத்துக்கொண்டு, விடமாட்டேன் என்பது போல் தன் வலகரத்தால் தன் கழுத்தை இறுக்கி வளைத்துக்கொண்டு, நேற்று பிறந்த குழந்தையைப் போல ஆழ்ந்த தூக்கத்தில் துயில் கொண்டிருந்த, தன் காதல் மனைவியை கண்டவனுக்குப் படுக்கையில் இருந்து எழுந்திருக்க மனமே இல்லை.

நித்தில தெளிவாய், புதிதாய் உதிர்ந்த முத்து போல மிளிர்ந்து கொண்டிருந்த தன்னவளின் அழகை, ஆஷிக்கால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அதனால் தனக்குத் தடையாய் அவளது நெற்றியில் புரண்டு கொண்டிருந்த கேசத்தை, காதோரத்தில் ஒதுக்கி விட்டவாறு தன்னவளை இமைகொட்டாமல் ரசித்தான்.

சூரிய ஒளியில் புதிதாய் மலர்ந்த மலர் போல மிளிர்ந்து கொண்டிருந்தது அவளது முகம். கொஞ்சமும் தெவிட்டாத அழகு. பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. தேன் ஊறும் பலாவை போல அமுதம் சுரந்துகொண்டிருந்த தன்னவளின் ரோஜா நிற இதழ். விரித்த வலையில் உலர்ந்து போன தன் செவ்விதழை தளிர்த்துக் கொள்ள விரும்பியவன்,

எங்கே தன் தீண்டலினால் தன்னவளின் தூக்கம் கலைந்துவிடுமோ என்று எண்ணி, கனன்று வந்த தன் காதலை கட்டிப் போட்டுவிட்டு, மெல்ல அவளது தூக்கம் கலையாமல் படுக்கையில் இருந்து எழுந்து, உடலை குறுக்கிக்கொண்டு படுத்திருந்தவள் மேல் போர்வையைக் கொண்டு நன்றாகப் போர்த்திவிட்டு, சத்தமின்றித் தன் அறையை விட்டு வெளியே வந்தான்.

ஆஷிக் எப்பொழுது வருவான், ஜியாவின் உடல் நலத்தைப் பற்றிக் கேட்கவேண்டும் என்று ஆர்வமாக காத்திருந்த ஹாஜராவும், ஆயிஷாவும் அவன் வந்ததும் அவனது அருகில் சென்று இருவரும் ஒருசேர,

"ஜியா இப்போ எப்படி இருக்கா?” என்று கண்களில் கவலை தொனிக்க கேட்க, ஆஷிக் அவர்களை ஆசுவாசப்படுத்தியவாறே,

"ஒன்னும் இல்லை, ராத்திரி தூக்கத்துல எதையோ பார்த்து பயந்த மாதிரி கொஞ்சம் நேரம் அழுதுட்டே இருந்தா. மறுபடியும் அந்தச் சம்பவத்தைப் பத்தி நினைச்சு பார்த்திருப்பானு நினைக்கிறேன். ஆனா அதுக்கப்புறம் ரொம்பவே நார்மல் ஆகிட்டா. எனக்கு ஜியாவை அந்தப் பயத்துல இருந்து வெளியில கொண்டு வந்துடலாம்னு ஒரு நம்பிக்கை வந்திருக்கு, நீங்க பயப்படாதீங்க.” என்ற அவனது நம்பிக்கை பேச்சு அவர்களுக்கு நிம்மதியை அளித்தது.

"என்னடா பண்றது, ஜியா மூச்சு பேச்சு இல்லாம மயங்கி கிடந்ததும், சமீர் அவளுக்கு நடந்ததைப் பத்தி சொன்னதும் ரொம்பவே பயந்துட்டேன்."

"நானும்தான் ரொம்ப பயந்துட்டேன். ஆனா சமீருக்கு நான் ரொம்பவே கடமை பட்ருக்கேன். அவர் மட்டும் சரியான நேரத்துல ஜியாவைத் தாங்கி பிடிக்கலைனா மயங்கி போய் கண்ணாடி டேபிள் மேல விழுந்திருப்பா. தலையில கண்டிப்பா அடி பட்ருக்கும்.” என்றதும் ஆயிஷா ஆஷிக்கிடம்,

"ஆமா அண்ணா, சமீர் ரொம்பவே கேர் எடுத்துகிட்டாரு."

"ஃப்ரண்ட்ல, கவலை இல்லாம இருக்குமா?"

"நேத்து முழுக்க ஜியா எப்படி இருக்கானு சமீர் கேட்டுகிட்டே இருந்தாரு. நான் இப்போ அவருக்குப் ஃபோன் பண்ணி நல்லா இருக்கானு சொல்லிடுறேன்." என்ற ஆயிஷாவிடம் ஆஷிக்,

"சரி நீ பேசிட்டு எனக்கிட்ட ஃபோன் குடு, நான் சமீருக்குப் பெர்சனலா தாங்க் பண்ணணும். நேத்து இருந்த டென்ஷன்ல தாங்க் பண்ணாம விட்டுட்டேன்."

"சரி அண்ணா, அவருக்குத்தான் ட்ரை பண்றேன், அட்டன் பண்ணினதும் தரேன்.” என்ற ஆயிஷா சமீருக்கு தன் அலைபேசியின் மூலமாக அழைப்பு விடுத்துக் கொண்டிருக்க,

ஆஷிக் தன் தாயிடம், "நடாஷா எழும்பிட்டாங்களா?"

"இல்லப்பா, அந்தப் பொண்ணும் ராத்திரி முழுக்கத் தூங்காம ஜியாவ நினைச்சு கவலைபட்டுட்டே இருந்துச்சு. லேட்டா தூங்கிருப்பானு நினைக்கிறேன். இப்போ பார்த்தப்போ நல்லா அசந்து தூங்கிட்டு இருந்தா, அதான் எழுப்பாம அப்படியே விட்டுட்டேன்."

"சரிமா, சீக்கிரமா ஜியா இதைவிட்டு வெளிய வரணும், அது மட்டும்தான் இப்போதைக்கு என் மைண்ட்ல ஓட்டிட்டு இருக்கு.” என்று அவன் கூறவும்,

"என்ன மருந்தெல்லாம் குடுக்கணுமோ எல்லாத்தையும் குடுத்து இன்னும் ரெண்டு நாள்ல சரி பண்ணிருக்கணும். ரிசெப்ஷன் அன்னைக்கு கெஸ்ட் முன்னாடி எந்தச் சீனும் நடக்கக் கூடாது. உன் மனைவிக்கு ஸ்டேட்டஸ் மட்டும்தான் இல்லை. ஆனா பிரச்சனைக்கு குறைவே இருக்காது போலயே? லைஃப் முழுக்க டிவிஸ்ட் அண்ட் டர்ன்ஸாதான் இருக்கும் போல, ஆல் த பெஸ்ட்டா.

இந்தப் பொண்ண கல்யாணம் பண்ணதான் இவ்வளவு ஸீன் கிரியேட் பண்ணுனியா?” என்ற அஸாத் தன் புருவத்தைச் சுளித்தவாறு ஏளன பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல,

என்ன சொல்லி இவன் கத்த போகிறானோ என்பது போலத் தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தன் தாயிடம் ஆஷிக், "ஏன் மிரண்டு போய் பார்த்துட்டு இருக்கீங்க, சண்டை எல்லாம் நான் போட மாட்டேன். எனக்கு இவர்கிட்ட சண்டை போடுறத விட முக்கியமான விஷயம் நிறையா இருக்கு.

ஆனா ஒன்னு, எப்படிமா இப்படி ஒரு சாடிஸ்ட் கூட வாழ்ந்துட்டு இருக்கீங்க. உண்மையாவே நீங்க கிரேட்." என்று ஆச்சரியமாகக் கேட்ட தன் மகனின் தலையைக் கோதியவாறு ஹாஜரா,

"இப்படி ஒரு சாடிஸ்ட் கூட நான் வாழ்ந்தனால தானே நீ எனக்குக் கிடைச்ச.” என்று தன் உதட்டில் புன்னகை தளும்பக் கூறி. “எதை பத்தியும் யோசிக்காம இந்த டீ குடி, நான் ஜியாவ பார்த்துட்டு வரேன்.” என்றவர் அங்கிருந்து சென்றார்.

ஜியாவை சந்தித்த நொடியில் இருந்து எதையோ பற்றிச் சிந்தித்தவாறே, தன் இரவையும் தூக்கத்தையும் மறந்தவன் தன்னை அறியாமல் எப்பொழுது தூங்கினானோ தெரியவில்லை. ஆயிஷாவின் தொடர் அழைப்பின் காரணமாகத் தன் நித்திரையில் இருந்து சடாரென்று விழித்த சமீர், ஆயிஷாவின் பத்து மிஸ்ட் காலை பார்த்து,

"என்னாச்சு, ஏன் இவ்வளவு தடவ கால் பண்ணிருக்கா. ஜியா ஏதும்... நோ... நோ... சமீர் இருக்காது. ஜி... யா...” என்று கோபமுற்றவாறே தன் தலையில் கை வைத்தவன், சில நொடிகள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஆயிஷாவுக்குத் தொடர்பு கொள்ள, முதல் ரிங்கிலே அட்டன் செய்யவும் அவள் எதுவும் பேசுவதற்குள் முந்திக்கொண்டவன்,

"என்னாச்சு எல்லாம் ஓகே தானே?" என்று இடைவெளியில்லாமல் கேட்டுவிட்டு அவளது பதிலுக்காகக் காத்திருக்க,

ஆனால் ஆயிஷா, "அஸ்ஸாலாம் அலைக்கும்...” என்று தன் உரையாடலைத் தொடங்க,

தன் புருவத்தை உயர்த்தியவன், “அலைக்கும் அஸ்ஸாலாம்...” என்றுவிட்டு அடுத்த வரி கூறும் முன்,

ஆச்சரியத்துடன் ஆயிஷா, "என்ன ஆகணும்?" என்று கேட்க,

‘கேள்வி கேட்டா பதிலுக்குப் பதிலா கேள்வியே கேக்குறா. சட்டம் படிச்சுருக்கால்ல கேட்கதான் செய்வா.’ என்று மனதிற்குள் முணுமுணுத்தவன், கோபத்தில் முகத்தைச் சுளிக்க இருந்தும் அதை அவளிடம் காட்டிக்காமல்,

"அது ஜியாக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையேனு கேட்க வந்தேன், ஜியா நல்லா இருக்காள்ல?"

"ஆமா நல்லா இருக்கா, அதைச் சொல்லத்தான் நான் இவ்வளவு நேரம் கால் பண்ணினேன். நீங்கதான் அட்டன் பண்ணவே இல்லை. ஜியா நல்லாதான் இருக்கா...” என்ற வரிகளைக் கேட்ட பின்பே நிம்மதி அடைந்தவன்,

"எதுவும் சொன்னாளா..." என்று கலவரம் தொனிக்க கேட்க,

"தெரியலை, ஆனா அண்ணா உங்ககிட்ட பேசணும்னு சொன்னாங்க. நான் அவர்கிட்ட குடுக்குறேன், நீங்க அவர்கிட்டயே பேசிக்கோங்க.” என்று அலைபேசியை ஆஷிக்கிடம் கொடுத்தாள்.

ஆஷிக்கிடம் பேசி முடித்த பிறகு சமீர், "நல்லவேளை ஜியா எதுவும் சொல்லல. ஆனா அவ ரொம்ப நாள் அமைதியா இருக்க மாட்டா. என்னைப் பார்த்ததுக்கு அப்பறம் கண்டிப்பா ஏதாவது ஏடா கூடமா பண்ணுவா. நாமதான் எச்சரிக்கையா இருக்கணும். ஜியாவை கண்டிப்பா சந்திச்சாகணும். தனியா எப்படி மீட் பண்றது?” என்று குழம்பியவனின் கண்களில், கோபம் மட்டும் தனியாமல் அப்படியே எரிந்து கொண்டிருந்தது.

ஹாலில் ஆஷிக், ஜியா இருவரும் பொம்மை போல அசையாமல் நின்று கொண்டிருக்க, ஆடை வடிவமைப்பாளர்கள் ஜியாவையும் ஆஷிக்கையும் அங்குலம் அங்குலமாக அளந்து கொண்டிருந்தனர். அவர்கள் எல்லாரும் பிரத்யேகமாகத் திருமண ஆடைகள், அதுவும் மணமக்களின் ஆடைகளை வடிவமைக்கக் கூடிய புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள்.

ஒருவழியாக அளவெல்லாம் எடுத்து முடிக்க அஸாத் அவர்களிடம், "ரொம்பவே குறைவான நேரம்தான் இருக்கு, பட் எனக்கு இதுல எந்தத் தப்பும் நடக்கக் கூடாது. அவுட்ஃபிட்ஸ் எல்லாம் பெர்ஃபெக்ட்டா இருக்கணும். ஐ டோன்'ட் மைண்ட் அபௌட் ப்ரைஸ். எந்த அவுட்ஃபிட்டும் ட்வெண்ட்டி Lக்கு கம்மியா இருக்கக் கூடாது. அண்ட் வெரி வெரி இம்பார்ட்டெண்ட், எவெரிகாஸ்ட்யும் மஸ்ட் பீ எக்ஸ்க்ளூசிவ். என்னோட பையனையும் என்னோட மருமகளையும் பாக்குறவங்க எல்லாரும் அசந்து போகணும்.” என்று ஒருவித கர்வத்தோடு சேர்த்து அதட்டலாய் கூறினார்.

"எஸ் மிஸ்டர் அஸாத் அஹமத், எவரிதிங் வில் பீ பெர்ஃ\பெக்ட். ஓகே மிஸ்டர் அஹமத், வீ வில் ஸீ யு ஆன் சண்டே மார்னிங்.” என்றவர்கள் அவருக்கு உறுதி கொடுத்துவிட்டு, அஸாத்திடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

ஆஷிக் அஸாத்தைப் பார்த்து முறைத்தவாறே, "மத்தவங்க வேணும்னா உங்கள பெருமையா நினைக்கலாம், ஆனா எனக்கு நல்லாவே தெரியும். இதெல்லாத்தையும் என்னை மட்டம் தட்டுறதுக்காகத் தான் பண்ணிட்டு இருக்கீங்கனு. நீங்க திருந்தவே மாட்டீங்க.” என்று தனக்குள் கூறிக்கொண்டு அஸாத்தை இறுக்கமாகப் பார்க்க,

அப்பொழுது அங்கே வேகமாக வந்த ஆயிஷா, "நடாஷா சீக்கிரமா வாங்க.” என்றவாறு ஆஷிக், ஜியாவின் அருகில் வந்து, “கிளம்பலாம் வாங்க.” என்று உற்சாகம் ததும்பக் கூற,

உடனே ஆஷிக், "ஷாப்பிங் தானே போறோம், அதுக்கு ஏன் இப்படி பறக்குற? என்ன சமீர வர சொல்லிருக்கியா?” என்று தன் கண்ணைச் சிமிட்டியவாறு கேட்க,

உடனே அஸாத் சோபாவில் இருந்து எழுந்து ஆயிஷாவிடம், "நீ சமீர மீட் பண்ணிட்டு இருக்கியா என்ன?" என்று கண்டிப்போடு கண்கள் உருள கேட்க,

"இல்லப்பா...” என்றாள் மெலிந்த குரலில்.

"இந்தக் காலத்துல கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க, மீட் பண்ணிக்கிறது ரொம்பப் பெரிய விஷயம் இல்லதான். ஆனாலும் நீ கல்யாணம் முடியிற வரைக்கும் உன் பழக்கத்தை மொபைல் எஸ்எம்எஸோட முடிச்சுக்கோ. எல்லாரும் இருக்கும் பொழுது மீட் பண்றது ஓகே, தனியா மீட் பண்ண வேண்டாம் சரியா?” என்று ஒருவித கண்டிப்பும் அக்கறையும் கலந்தவாறு கூற,

தன் தந்தையின் பேச்சுக்கு எதிர்பேச்சுப் பேசாமல் ஆயிஷாவும், ‘சரி’ என்பதாய் தன் தலையை ஆட்ட,

உடனே ஆஷிக் ஜியாவிடம், "இப்போ எல்லாம் அட்வைஸ் யாரு வேணும்னாலும் குடுக்கலாம்னு ஆகிட்டுல, ஃப்ரீ ஆஃப் காஸ்ட். அதான் தகுதியே இல்லாதவங்க..." என்று அவன் முடிப்பதற்குள், அவனது கரத்தை நறுக்கென்று கிள்ளியவள் தன் பார்வையாலே, 'ஷட் அப்!' என்பது போலச் செய்கை செய்தாள்.

அஸாத் அவனுக்குப் பதில் கூறுவதற்குள் சுதாரித்துக்கொண்ட ஆயிஷா, "அப்பா நாங்க எல்லாரும் ஷாப்பிங் போறோம், உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்க,

கோபத்தை ஒதுக்கி வைத்தவர் தன் மகளின் தலையை மெலிதாய் வருடிவிட்டு, "உன்னோட சந்தோஷம்தான். சந்தோஷமா போயிட்டு வாங்க. நைட் சீக்கிரமா வந்திருங்க." என்று தன் இதழ் இசைத்தவர்,

ஆஷிக்கைக் கடுமையாகப் பார்த்து முறைக்க, அவனோ உங்களின் பார்வை என்னை எதுவும் செய்யாது என்பது போல அசட்டு சிரிப்போடு பார்க்க, 'யு வில் நெவர் சேஞ்' என்பது போல தன் தலையை உலுக்கிவிட்டு, அலைபேசியைத் தன் காதில் சொருகியவாறு அங்கிருந்து சென்றார்.

***


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்

நிலவே 46 & 47
 
Last edited:
Top