Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நிலவே 48, 49 & 50

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
நிலவே 48

சூரியன் கண்விழிக்க பொழுது எப்படித்தான் உருண்டோடியதோ? மயக்கும் மாலை பகலை மையம் கொள்ள, அனைவரும் ஆஷிக், ஜியாவின் ரிசப்ஷன் ஏற்பாட்டில் கவனமாய் இருந்தனர்.

எப்பொழுதும் இரவு நேரத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் அந்த நட்சத்திர விடுதி, இன்று மகுடத்திற்கு மகுடம் சேர்ப்பது போலப் பல விலையுயர்ந்த அலங்கார விளக்குகளால், மிகவும் பிரம்மாண்டமாய் காட்சியளித்தது.

அஸாத் வேலையாட்களைத் தன் பாணியில் அதட்டிக்கொண்டிருக்க, அவரது பணியாட்களும் அவருக்கு ஆமாம் போட்டவாறு, அவர் சொன்ன திருத்தங்களைச் சரி செய்து கொண்டிருந்தனர்.

அஸாத் தன் மேனேஜரிடம், “என்ன வேலை பாக்குறாங்க, நான் போய் சொல்ல வேண்டியதா இருக்கு. நீங்க எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? கெஸ்ட் எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க. ஐ டோன்'ட் வாண்ட் எனி சார்ட் ஆஃப் இன் கன்வீனியன்ஸ்.” என்று கடுகடுக்க,

மேனேஜர் மோகனும் வழக்கம் போல எந்தச் சலனமும் இல்லாமல், "எஸ் சார், அரேன்ஞ்மென்ட்ஸ் எல்லாம் ரெடியா இருக்கு. நீங்க வந்து ஒரு தடவை க்ராஸ் செக் பண்ணிட்டீங்கனா, ஆல் செட் சார்.” என்று கூற, அதுவரை டென்க்ஷனாக இருந்த அஸாத், மோகனின் பதிலில் திருப்தி அடைய இதர ஏற்பாடுகளைக் காண சென்றார்.

சந்தன நிறத்திற்கும் தங்க நிறத்திற்கும் பொதுவாக உள்ள நிறத்தாலான லெஹங்காவில், வேறு எந்த அணிகலன்களும் எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் ஜன்னலின் கம்பியை இறுக்கி பிடித்துக் கொண்டு, அந்த பால் நிலவைப் பார்த்தவாறு குழப்பத்தில் மூழ்கிருந்தாள் ஜியா.

சமீர் பேசிய பின்பு ஒரு வகையாகத் தன் மனதை தேற்றி கொண்டாலும், நெஞ்சு குழியின் ஓரத்தில் எதோ ஒரு வலி ஜியாவை துரத்திக் கொண்டுதான் இருந்தது. சொல்ல முடியாத வலி... வாழ்ந்து ஆஷிக்கை கஷ்டப்படுத்தாமல் இறந்து விடலாம் என்று ஒரு மனம் யோசிக்க, இறந்தால் மட்டும் ஆஷிக்கை அது கஷ்டப்படுத்தாதா? அவனது அளவில்லாத காதலைக் கண்டுமா இப்படி யோசிக்கிறாய்? என்று இன்னொரு மனம் கேள்வி கேட்க, குழப்பமும் வேதனையும் ஒன்று சேர்ந்து அவளது மூளையில் மின்னலை போல வெட்டி வெட்டி பாய்ந்ததில், நெற்றி சுருங்கியவாறு கண்களை இறுக்க மூடி இருந்த அவளது வதனத்தை, இரு கரங்கள் மென்மையாய் பிடித்து மிதமாய் அழுத்த அழுத்த,

பேயலையெனத் தன்னைப் புரட்டி போட்டுக் கொண்டிருந்த மன அழுத்தம் எல்லாம், மெல்ல மெல்ல தன்னிடம் இருந்து விலகியதை உணர்ந்தவளின் விழிகளில் அப்படி ஒரு நிம்மதி. விழிகளை மூடியவாறே,

"தாங்க் யு ஆஷிக், பீலிங் பெட்டர்.” என்றவள் அப்படியே தன்னவனின் மார்பில் தன் பின்னந்தலையை வைத்து சாய்ந்தவாறு, தன் வலக்கரத்தால் அவனது கழுத்தை வளைத்துப் பிடிக்க,

எதிர்பார்க்காத நேரத்தில் விழிமூடியவாறே தன் மீது சாய்ந்த தன் காதல் மனைவியை மார்பில் ஏந்தியவன், தன் இருக்கரங்களால் அவளை வளைத்துப் பிடித்துக்கொண்டு அவளது செவிகளோடு உறவாடியவாறு,

"பிடிக்காம விட்ருந்தேன்னா ம்ம்... அவ்வளவு நம்பிக்கையா என் மேல?” என்று கிசுகிசுக்க,

தன் இதழை இசைத்தவாறே, “ஆமா” என்று மீண்டும் தொடர்ந்தவள்,

"என் உயிரை விட...” என்று கூறி விழி மலர்ந்த தன் மனைவியை இமைதட்டாமல் ரசித்தான்.

"என்ன புதுசா பாக்குற மாதிரி அப்படிப் பாக்குற?” என்று தன் இதழ் மலர ஜியா கேட்க,

"அப்படியா இருக்கு, நீ சரியா கவனிக்கலனு நினைக்கிறேன், நான் எப்போதும் உன்னை இப்படித்தான் பார்க்குறேன்.” என்ற மறுநொடி ஜியாவின் முகம் குங்குமமாய் சிவக்க,

"ஷப்பா! என் கண்ணையே என்னால நம்ப முடியலை. எவ்வளவு நாள் கழிச்சு நீ இப்படி வெட்கப்பட்ருக்க தெரியுமா?” என்று அவன் புன்னகைத்ததும்.

மேலும் கன்னம் சிவந்தவள் நாண மிகுதியால் முகத்தை லேசாகத் திருப்ப, அதைக் கண்டு இதழ் மலர்ந்தவன் அவள் சற்றும் எதிர்பார்ப்பதற்குள் நொடிப்பொழுதில், சிவந்திருந்த அவளது கன்னத்தில் தன் இதழ் என்னும் தூரிகை கொண்டு ஓவியம் வரைந்தவன், அப்படியே தன் அலைபேசியில் படம் எடுத்தான்.

இதைச் சற்றும் எதிரிபார்க்காத ஜியா, வெட்கத்தில் வார்த்தை ஏதுமின்றி, “ஆஷ்... ஷிக்...” என்று தடுமாற,

"ஆஷிக்தான்...” என்று சல்லாபமாய் அவளது அருகில் நெருங்கி செல்ல, அவனைத் தன் மென் கரங்களால் தள்ளிவிட்டவள்,

"என்ன வேணும் உனக்கு?” என்று செல்லமாய் முறைத்தவாறே கேட்க,

"என்ன கேட்டாலும் தருவியா?"

"தரேன்."

"என்ன கேட்டாலுமா?” என்று விஷம புன்னகையோடு தன்னை நோக்கி இன்னும் நெருங்கி வந்தவனின் மார்பை தன் கரங்களால் தள்ளியவாறே,

"ஆமா, என்ன கேட்டாலும்...” என்று செல்ல சிணுங்கலுடன் கூற, தன் மார்பில் பதிந்த தன்னவளின் கரத்தை மென்மையாக பற்றி இதழ் பதித்தவன்,

"என்ன கேட்டாலும் தரேன்னு சொன்ன, இப்போ தள்ளிவிடுற?” என்று நெருங்கி வந்து அவளது மூக்கை உரசிக்கொண்டே கூற,

"சொன்னா தானே தெரியும்?” என்று அவள் சிணுங்கியதும்,

"சொல்லிதான் தெரியணுமா?” என்று சல்லாபமாய் கூறியவன் மென்மையாய் அவளது இமைகளில் தன் அதரத்தைப் பதித்தான்.

மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனவளின் விழிகள் பொழிந்த ஊடல் பார்வை அவனது உயிர் வரை ஊடுருவி செல்ல, எல்லை இல்லாத உவகையை அடைந்தான்.

அடித்த குளிர் காற்றையும் தாண்டி அவனது தேகம் தனலாய் எரிய, நூலளவு கூட இடைவெளி கூட இல்லாது தன் காதல் மனைவியைத் தன் வலிய கரங்களால் அருகில் இழுத்து அணைத்தவன், அவளது செந்நிற அதரத்தை நோக்கி குனிய,

"நாங்க எதையும் பார்க்கல...” என்று தன் உதட்டைக் கடித்தவாறே ஆயிஷாவும் சமீரும் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வர,

"சாரி கைஸ், டிஸ்டர்ப் பண்ணிட்டோம். நாங்க அப்புறம் வரோம்.” என்ற சமீரைத் தடுத்த ஆஷிக்,

"ஏய் சமீர் சொல்லுங்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை.” என்று ஜியாவை அணைத்தவாறே கூற,

சமீர் ஆஷிக்கிடம், “டைம் ஆகிடுச்சு, கொஞ்சம் லேட் பண்ணாம சீக்கிரமா வந்துருங்க.” என்று தன் கைக்கடிகாரத்தை உயர்த்திக் காட்டினான்.

"ஓகே சமீர் கிவ் அஸ் டென் மினிட்ஸ்.” என்றதும் ஆயிஷா சிரித்தவாறே,

"சீக்கிரம் அண்ணா, நைட் பங்ஷன்கு இன்னும் டைம் இருக்கு.” என்று கண்சிமிட்டிவிட்டு சமீருடன் கீழே சென்றதுதான் தாமதம்,

ஆஷிக் தன் பிடியை இன்னும் அதிகமாக்கி விலக முனைந்த தன் மனைவியைச் செல்லமாய், “ப்ளீஸ்டி ஒன்னே ஒன்னு...” என்று கெஞ்சியவாறே அவளது அதரத்தை நெருங்கிய மறுநொடி,

"மச்சான் எங்கடா இருக்க?” என்று அழைத்தவாறே ஆதர்ஷும் ரோஹித்தும் வர,

கடுப்பான ஆஷிக், "நான் இங்க இல்லடா.” என்று கோபமாய் கூறியவனைப் பார்த்து வாய்விட்டு சிரித்த ஜியா, அவனது பிடியில் இருந்து சற்று விலகி நிற்கவும் உள்ளே வந்தவர்கள்,

"என்னடா இன்னும் ரெடி ஆகலையா? சீக்கிரம், இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு, என்ன பண்ணிட்டு இருக்க?"

"எங்க, விட்டாத்தானே ஏதாவது பண்ண முடியும்?” என்று ஆஷிக் கடிந்துகொள்ள,

அவர்கள் அது எதையும் காதில் வாங்காது, "ஜியா நீயும் சீக்கிரம் ரெடி ஆகுமா.” என்று ஜியாவிடம் கூறிவிட்டு, ஆஷிக்கை கையோடு அழைத்துச் செல்ல,

அவனோ, “டேய், கொஞ்ச நேரம் நீங்க போங்க, நான் பின்னாலே வந்திடுறேன்.” என்று நழுவ பார்க்க,

"நேரம் இல்லை.” என்றவாறு அவர்கள் அவனது கையை இழுத்துக் கொண்டு செல்ல, ஆஷிக்கோ முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு ஜியாவையேப் பார்க்க, அவளுக்கு அவனது நிலையை எண்ணி சிரிப்பாய் இருந்தது.

தனக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கோட் சூட்டில் வழக்கத்தை விட மிக அழகாகவும் கம்பீரமாகவும் தயாராகி, தன் நண்பர்களுடன் தன் அறையை விட்டு வெளியே வந்த ஆஷிக், வேகமாக சென்று தன் தாயை கட்டி அணைத்து முத்தமிட, இதை அனைத்தையும் சற்று தள்ளி இருந்து கவனித்த அஸாத்துக்கு உள்ளுக்குள் எதோ ஒரு அழுத்தம் பிறந்தது.

எதோ ஒரு வலி கண்களில் வந்து பிறந்தது. ஆனால் அதை எதையும் வெளியே காட்டிகொள்ளாதவர், தன் கோட்டின் பாக்கெட்டுக்குள் தன் இரு கரங்களையும் நுழைத்தவாறே, தன் தலையை உலுக்கிக்கொண்டு ஆஷிக்கின் அருகில் வந்தவர், அவனைத் தலை முதல் கால் வரை ஒரு பார்வை பார்த்து,

இன்னும் அருகே நெருங்கி வந்து, “எல்லாம் ஓகே, ஆனா இன்னும் உனக்கு டை மட்டும் ஒழுங்கா கட்ட தெரியலை.” என்று கூறியவாறே அவனது டையை சரி செய்தவர், “நவ் இட்ஸ் பெர்ஃபெக்ட்!” என்று கூறி புன்னகைக்க, முகத்தில் எந்தவித சலனமும் கொள்ளாத ஆஷிக்,

"தாங்க் யு, காஸ்ட்யும் நல்லா இருக்கு.” என்று கூறிவிட்டு வேறெங்கோ பார்க்க, அவனது தோள்களைத் தட்டி புன்னகைத்த அஸாத்,

“தாங்க் யு அப்பானு சொன்னா ஒன்னும் குறைஞ்சி போயிற மாட்ட ஆஷிக்.” என்று தன்மையாய் எந்தவித அகங்காரமும் இல்லாமல் கூறிவிட்டு அஸாத் அங்கிருந்து செல்ல போக,

"அப்பா... அது ரொம்ப பெரிய வார்த்தை. சும்மா எல்லாம் சொல்லிற முடியாது மிஸ்டர் அஸாத். இதெல்லாம் வாங்கிக் குடுத்துட்டா மட்டும் அப்பா ஆகிற முடியாது. முதல்ல எங்க அம்மாக்கு நல்ல கணவனா இருங்க. அப்புறம் நல்ல மகன் எப்படி இருக்கணும்னு நான் காட்டுறேன்.” என்றவாறு அவன் அவரது முகத்தைக் கூடப் பார்க்காது வேகமாய் அங்கிருந்து செல்ல,

சுருக்கென்று அவன் கூறிய வார்த்தைகள் முதல் முதலாய் அஸாத்தின் நெஞ்சுக்குள் முள்ளாய் குத்தி அழுத்தத்தைக் கொடுக்க, பதில் பேசாமல் அவர் அப்படியே நின்றார்.

***





நிலவே 49

அனைவரும் செல்ல தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவியிடம், “போமா, கெஸ்ட் எல்லாரையும் ரிஸீவ் பண்ணு. டைம் ஆச்சுல போ.” என்றவர் ஹாஜரா முன்பு எதையும் காட்டிக்கொள்ளாமல், இயல்பாய் இருப்பது போல தன் அலைபேசியில் யாரிடமோ பேசியவாறு அங்கிருந்து செல்ல,

எப்பொழுதும் தன்னை வெட்டி விடுவது போல பேசும் தன் கணவர், முப்பது வருடங்களுக்குப் பிறகு தன்னிடம் கனிவாகப் பேசியது, தனலாய் கொதித்துக்கொண்டிருந்த அவரது மனதிற்குள் ஒரு துளி பனித்துளியைத் தெளித்தது போல இருந்தது.

நெருப்பால் சூடு பட்டால் பட்டதுதான், அதை மாற்ற முடியாது. தழும்பு தடம் மாறாமல் அப்படியேதான் இருக்கும். ஆனாலும் மருந்திடாமலா போய்விடுவோம்?

சில மணி நிமிடத்தில் ஜியாவும் தன்னை அலங்கரித்துக் கொண்டு கீழே வர ஆஷிக், ஜியாவின் ரிசப்ஷன் பங்க்ஷன், அஸாத் எதிர்பார்த்தது போல அனைவரும் வியக்கும் வண்ணம் மிகவும் சிறப்பாக நடந்தேறிக்கொண்டிருந்தது.

விருந்தினர்கள் வருவதும் தங்களின் வாழ்த்துகளைக் கூறுவதும் ஒரு பக்கம் நடக்க, தன் காரியமே கண் என்று வழக்கம் போல ஆஷிக் தன் விழிகளினாலே தன் காதல் மனைவியை அள்ளி பருக, வெட்கத்தில் ஜியாவின் முகம் குங்குமமாய் சிவக்க என்று இருவரும் தங்களின் பார்வையினாலே காதலை பரிமாறி கொண்டனர்.

அவர்களுடன் புதிதாய் பூத்த காதல் ஜோடி ஆதர்ஷ், நடாஷாவும் சேர்ந்து, தங்களின் காதல் காவியத்தையும் அரங்கேற்றி கொண்டிருந்தனர். வந்திருந்த அனைத்து விருந்தனருக்கும் பஃபே முறைப்படி உணவு வழங்கப்பட,

ஆஷிக் தன் பள்ளிப்பருவ நண்பர்களுடன் இணைந்துகொள்ள, தனியே நின்று கொண்டிருந்த ஜியாவின் அருகில் வந்த சமீர் தன் முகம் மலர,

"இப்படி ஒரு சந்தோஷத்தை விட்டுட்டுதான் சாகப் போனியா நீ? உங்க ரெண்டு பேரையும் பார்க்கிறதுக்கு எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா?” என்றதும் ஜியா வெட்கத்தில் முகம் தாழ்த்திக்கொள்ள,

"உனக்கு வெட்கப்படக் கூடத் தெரியுமா ஜியா?” என்று சமீர் ஆச்சரியமாய் கேட்க,

"சமீர் இதென்ன கேள்வி?"

"கேட்காம என்ன பண்றது? பெங்களூர்ல நீ எப்படி இருப்ப தெரியுமா? எப்பவும் நிமிர்ந்துதான் பார்ப்ப, பார்வையில எப்பவும் ஒரு திமிரு இருக்கும். என்ன நடை சான்ஸே இல்லை. உனக்குப் பயந்துட்டு எத்தனை பசங்க உன்கிட்ட பேசாம போயிருக்காங்க தெரியுமா? செம போல்டா இருப்ப."

"அவ்வளவு போல்டா இருந்தும் நான் என் லைஃப்ல பார்க்க கூடாத நிறையக் கஷ்டங்களைப் பார்த்துட்டேனே சமீர்.” என்று விரக்தியில் வெளிப்பட்ட வார்த்தைகள் அவனைக் கஷ்டப்படுத்த,

"ஜியா இப்போதான் சந்தோஷமா பேசிட்டு இருந்தோம், அதுக்குள்ள நீ சோக மோட்கு போயிட்ட?"

"எவ்வளவு சந்தோஷம் எனக்குக் கிடைச்சாலும் என்னால பழசை எப்பவுமே மறக்க முடியாது சமீர்.” என்று ஜியா கண்கலங்கியதும் பதறிய சமீர்,

"ஜியா ப்ளீஸ்... அழாத ப்ளீஸ்... யாரும் பார்த்தா பிரச்சனை ஆகிரும்.” என்று ஜியாவை ஒரு வழியாகச் சமாதானம் செய்தவன் மேலும் தொடர்ந்து, “ஜியா இதெல்லாம் சரிபட்டு வராது. நீ இப்படியே இருந்தா எதாவது யோசிச்சுட்டுதான் இருப்ப, நீ மறுபடியும் சர்ஜரி பண்ணணும்."

"சர்ஜரியா? அதுக்கான தகுதியை நான் என்னைக்கோ இழந்துட்டேன் சமீர்."

"பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம் மாதிரி இருக்கு. தப்பு அவங்க செஞ்சாங்க, தண்டனைய நீ அனுபவிக்கிற. என்ன ஜியா இது?”

"சமீர் நான் இன்னும் டாக்டரா வொர்க் பண்றதே என் ஃபேமிலிக்காகத்தான். என் தங்கச்சிய நல்லபடியா படிக்க வச்சு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி குடுக்கணும். சித்தி, சித்தப்பாக்கு நிரந்தரமா ஒரு வருமானம் வர்ற மாதிரி பேங்க்ல கொஞ்சம் அமௌன்ட் போட்டு வைக்கணும். இந்த ரெண்டு கடமையும் முடிஞ்ச அடுத்த நிமிஷம் டாக்டர் வேலையையே நான் விட்ருவேன்.

குற்ற உணர்ச்சி கொல்லுது. என் பேஷண்ட பாதுக்காக்க வேண்டிய கடமை எனக்குத் தானே இருக்கு. அந்தப் பொண்ணு என்னை நம்புனா சமீர்...” என்று சொல்லும் பொழுதே ஜியாவின் கண்களில் இருந்து கண்ணீர் கரை புரண்டு ஓட, கண்ணீரை துடைத்துக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை டேபிளில் வைத்தவள் அங்கிருந்து வேகமாகச் செல்ல, சமீரும் அவளைச் சமாதானம் செய்ய அவள் பின்னாலே சென்றான்.

விருந்தினர்கள் வருவதும் போவதுமாய் இருக்க, அப்பொழுது வெள்ளை நிற பென்ஸ் கார் ஒன்று ரிசப்ஷன் ஹாலுக்குள் கம்பீரமாக நுழைந்தது.

காரின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தவனின் கண்களில் ஆஷிக், ஜியாவின் பெயர் போட்டு அலங்கரிக்கப்பட்ட ஃப்ளக்ஸ் போர்ட் பட, ஜியாவின் பெயரைப் பார்த்தவனின் உதட்டில் திருப்தியான புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள,

தன் கோர்ட்டின் பொத்தானை மாட்டிக்கொண்டு தன் கை கடிகாரத்தைப் பார்த்தவாறே, தன் கையில் ஒரு பொக்கேவுடன் உள்ளே நுழைந்தான். உள்ளே நுழைந்த நொடி முதல் அவனது விழிகள் யாரையோ தீவிரமாகத் தேடி கொண்டிருந்தது.

தன் விழிகளை சுழற்றியவாறே முன்னேறியவன் எதிரில் ஆள் வருவது தெரியாமல் மோத, அப்பொழுது எதிர்முனையில் வேகமாய் வந்த ஆஷிக்கின் கையில் இருந்த குளிர்பானம் தவறுதலாய் அவன் மீது சிந்திய மறுநொடி, “பார்த்து வர கூடாதா?” என்று சிடுசிடுத்தவாறு நிமிர்ந்தவனிடம்,

"சாரி... ஐயம் ரியலி சாரி...” என்று கனிவுடன் ஆஷிக் கூற,

சற்று அமைதி அடைந்தவன், “இட்ஸ் ஓகே!” என்று கூறி அங்கிருந்து செல்ல முனைந்த நேரம்,

"எக்ஸ்கியுஸ் மீ...” என்று தடுத்த ஆஷிக் கீழே குனிந்து அந்த நபரின் பூச்செண்டில் இருந்து தவறுதலாய் விழுந்த வாழ்த்து அட்டையை எடுத்து அவனிடம் நீட்டி,

"இது உங்களோடு தானே?” என்றவாறு கொடுத்ததும்,

சட்டென்று ஆஷிக்கின் கரத்தில் இருந்து வாங்கியவன், தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆஷிக்கிடம், “தேங்க்ஸ்” என்று சொல்ல,

பதிலுக்கு, "யு ஆர் வெல்கம்!” என்ற ஆஷிக் மேலும் தொடர்ந்து, "உங்களோட ஷர்ட் கரையாடுச்சு, ஐயம் ரியலி சாரி. இஃப் யு வாண்ட் ஐ கேன் ஹெல்ப் யு...” என்று கேட்கவும்,

"இட்ஸ் ஓகே, ஐ வில் மேனேஜ்.” என்றவன் தன் கையில் இருந்த அட்டையைச் சுட்டிக்காட்டி, "உனக்குத்தான் நான் கடமை பட்ருக்கேன்." என்பது போல, “தாங்க் யு.” என்று அழுத்தமாய் கூற,

புன்னகைத்த ஆஷிக், “இட்ஸ் ஓகே, அண்ட் பை த வே ஐயம் ஆஷிக்!" என்று தன் கரங்களை நீட்டி தன்னை அறிமுகப்படுத்த,

சில நொடிகள் ஆஷிக்கை உற்று கவனித்தவனின் கண்முன் ‘ஆஷிக், ஜியா' என்கின்ற பெயர் பலகை வந்து மறைய, அவ்வளவு நேரம் முகத்தில் தொனித்த ஒருவித இறுக்கம் மறைந்து போக இதழோரம் தோன்றிய புன்னகையோடு, "சுஜித்... சுஜித் குமார்.” என்று தன்னை அறிமுகம் செய்தான் அவன்.

கீழே விழுந்த அட்டையை ஆஷிக் ஒருமுறை திருப்பிப் பார்த்திருக்கலாமோ? பார்த்திருந்தால் இனிமேல் நடக்கவிருக்கும் விளைவுகளைத் தடுத்திருக்கலாமோ?

‘கம் டூ த பார்க்கிங் லாட் வித் இன் டென் மினிட்ஸ். பை சுஜித் குமார்.’ இதைப் படித்த மாத்திரமே ஜியாவின் முகத்தில் காரிருள் சூழ்ந்து கொண்டது.

ஜீவாவைப் பார்க்கும் போது அவள் அடைந்த அதே பயம் மீண்டும் அவளது உள்ளத்தைத் தன் வசமாக்க, பதில் ஏதும் பேசாமல் சிலையென நின்றவளின், கரத்தில் இருந்த அட்டையை வாங்கிப் படித்த மறுநொடி சமீரின் முகத்தில் உச்சகட்ட கோபம் வெளிப்பட்டது. புருவங்களோடு சேர்த்து வதனமும் சுருங்க, கைகளை முறுக்கியவாறு நின்று கொண்டிருந்தவன்,

உறுதியற்று, முகத்தில் கலையிழந்து விரக்தியே கதியென நின்றிருந்தவளின் கரங்களைப் பற்றிக்கொண்டு தனியே அழைத்து வந்து,

"ஜியா..." என்று பலமுறை அழைத்தற்குப் பிறகு நிமிர்ந்தவள் தன் உதடுகள் நடுங்க,

"நான்தான் சொன்னேன்ல, என்னை அவங்க யாரும் சந்தோஷமா இருக்க விடமாட்டாங்கனு, நான் வாழ்றதே வேஸ்ட்.” என்று தொண்டை விம்ப கூறியவளைப் பார்த்து சமீர் தன் கண்களில் கோபம் தெறிக்க,

"ஷட் அப் ஜியா! முதல்ல இப்படிப் பேசுறத நிறுத்து. நார்மலா இரு, நான் இருக்கேன்ல. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். இந்தப் பொக்கேவ யாரு கொடுத்தது?” என்று கோபமாய் கேட்க,

"வெயிட்டர் வந்து குடுத்தாரு."

"சரி டென்க்ஷனா இருக்காத, நான் பார்த்துக்கிறேன். ஆஷிக் இங்கதான் வாரான், அவன் முன்னாடி சுஜித் பத்தி எதுவும் உளறிட்டு இருக்காத.” என்று அழுத்தமாய் கூறியவன்,

ஆஷிக் தங்களின் பக்கம் நெருங்கியதும் தன்னை இயல்பாகக் காட்டிக்கொள்ள, ஜியாவுக்கு ஆஷிக்கை எதிர்கொள்ளவதே மிகவும் கஷ்டமாக இருந்தது.

"என்னப்பா நீங்க ரெண்டு பேரும் இங்க தனியா வந்து என்ன பண்ணிட்டு இருக்கீங்க? எங்க எல்லாம் தேடுனேன் தெரியுமா?” என்ற ஆஷிக்கிடம்,

"ஓ சாரி ஆஷிக், ஜியா தனியா நின்னுட்டு இருந்தா, அதான் கம்பெனி குடுத்தேன்."

"இட்ஸ் ஓகே, நீங்களும் வாங்க சமீர். என் ஃப்ரண்ட்ஸ நீங்க இன்னும் பார்க்கலைல, நான் உங்களுக்கு அவங்களை இன்ட்ரோ பண்றேன்."

"அது ஆஷிக், எனக்கு முக்கியமான ஒரு கால் பண்ணணும். ஜியாவை அழைச்சுட்டு போங்க, நான் இப்போ வந்திடுறேன்.” என்று ஆஷிக்கை சமாளித்தவன் தன்னைப் பயத்துடன் பார்த்த ஜியாவிற்கு,

‘நான் பார்த்துக்கிறேன்.’ என்பது போல தன் இமைகளை அசைக்க, ஜியாவோ சமீரை திரும்பி திரும்பி பார்த்தவாறு ஆஷிக்குடன் அவனது நண்பர்களைக் காண சென்றாள்.

தன் கையில் இருந்த அட்டையையே வெறித்துப் பார்த்த சமீர், ‘சுஜி... த்... குமார்...” என்று தன் மனதிற்குள் கர்ஜித்தவாறே அங்கிருந்து சென்றான்.

கார் பார்க்கிங் ஏரியாவில் தன் காரின் மீது சாய்ந்தவாறு தன் கைக்கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்த சுஜித், யாரோ தன்னை நெருங்குவது அறிந்து திரும்பி பார்க்க, தன் எதிரே ஜியாவிற்குப் பதிலாய் சமீரைக் கண்டதும் குழப்பம் அடைந்தவன், 'சமீர் இங்க எப்படி' என்கின்ற கேள்வியில் அவனையே பார்க்க, ரௌத்திரம் பொங்க சுஜித்தை நெருங்கிய சமீர்,

"என்ன மிஸ்டர் சுஜித் குமார் எதோ பத்து நிமிஷத்துல வரணும்னு கண்டிஷன் எல்லாம் போடீங்க போல? வந்தாச்சு, ஜியாலாம் வரமாட்டா. என்ன பேசணுமோ என்கிட்ட பேசு.” என்று கர்ஜிக்க,

‘இதை நீ பண்ணிருக்கக் கூடாது ஜி... யா...’ என்றவாறு தனக்குள் கனன்று வந்த கோபத்தோடு சமீரை எதிர்கொண்டான் சுஜித்.

ஜியா, சுஜித்தை சந்தித்திருந்தால் விளைய போகும் வினையை விளையும் முன்பே தடுத்திருக்கலாமோ?

ரிசப்ஷன் எந்தவித சிக்கலும் இன்றி நல்லபடியாக முடிய, வெளியூரில் இருந்து வந்த அனைத்து சொந்தங்களும் கிளம்பி சென்ற பிறகு, ஆஷிக்கின் இல்லத்தில் ஹாஜரா, ரஸ்மீன், திவ்யா மூவரும் அமர்ந்து தங்களுக்குள் எதையோ பேசி சிரித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஷாஹித், ஷங்கர் இருவரும் ஓர் இடத்தில அமர்ந்து பேசிக்கொண்டிருக்க,

"ஹலோ ஷாஹித் சார், ரிசப்ஷன் பிஸில உங்கள கவனிக்க முடியல.” என்ற அஸாத்திடம்,

"அதனால என்னபா, ஷங்கர் சார் எனக்கு நல்லாவே கம்பெனி குடுத்தாரு. பேசுனதுல எனக்கு டைம் போனதே தெரியலை. பேசி பார்க்கும் போதுதான் தெரியுது, இவங்க அப்பா எனக்கு ரொம்ப வேண்டபட்டவங்கனு. அட நம்ம பழைய டெபுட்டி கலெக்டர் ராதா கிருஷ்ணன் சார். இவரு அப்பாதானாம். ரொம்ப நேர்மையான மனுஷன். இங்க இருந்தவரைக்கும் நல்ல பழக்கம். நான் வெளிநாட்டுக்கு போனதுக்கு அப்புறம் டச் விட்டு போச்சு.” என்ற ஷாஹித்துக்கு லேசாகப் புன்னகைத்த அஸாத், வேண்டா வெறுப்பாக அவர்களது சம்பாஷணையில் கலந்து கொண்டார்.

மறுபக்கம் ஆஷிக் தன் நண்பர்களின் கேலி பேச்சிற்கு பதிலளித்தவாறு சிரித்துக் கொண்டிருக்க,

‘நான் பார்த்துக்கிறேன்’ என்று கூறிவிட்டு சுஜித்தைக் காண சென்ற சமீர், வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அவனுக்கு என்ன ஆனதோ? ஏது ஆனதோ? என்கின்ற கவலையில் ஜியா பதற்றத்தோடு விழிகளை மூடிய நிலையில், தோட்டத்தில் இருந்த ஓர் நாற்காலியில் அமர்ந்திருக்க,

அப்பொழுது சமீர், “ஜியா!” என்று அழைத்ததில்,

"வந்துட்டியா சமீர்?” என்று நிம்மதி பெருமூச்சுடன் நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள், சமீர் இருந்த கோலத்தைப் பார்த்து தன்னையும் அறியாமல் நீர் கோர்த்தது.

***





நிலவே 50

தலையில் கட்டு போட்டவாறு தன் முன் வந்த சமீரைக் கண்டு பதறிய ஜியா கண்களில் நீர் தளும்ப,

"எனக்கு ஹெல்ப் பண்ண போய்த் தானே உனக்கு இந்த நிலைமை? சுஜித் தானே இப்படிப் பண்ணினான். எல்லாம் என்னாலதான். அவங்களால எனக்கு நிம்மதி இல்லை, என்னால யாருக்கும் நிம்மதி இல்லை.” என்று ஜியா ஆதங்கப்பட,

ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் அவள் முன்பு மிகவும் சிரமப்பட்டு, கனன்று வந்த தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, “ஜியா ப்ளீஸ் அழாத... அப்படி எல்லாம் ஏதும் இல்லை, இது சின்ன ஆக்சிடென்ட் அவ்வளவுதான். இதைப் பத்தி இப்போ பேச வேண்டாம்." என்று தன்மையாகக் கூற, அவன் கூறிய எதையும் தன் காதில் வாங்காதவள்,

"எப்படிப் பேசாம இருக்க? இன்னும் எவ்வளவு தான் சமீர்... என்னால முடியலை... சுஜித் எங்க? நான் அவனைப் பார்க்கணும், அவனுக்கு என்கிட்ட என்னதான் வேணும்னு கேட்க போறேன். என்கிட்ட மிச்சம் இருக்கிறது இந்த உயிர் தான், அதையும் குடுக்குறேன்.” என்று வழக்கம் போல தன்னையே குற்றம் சாட்டிக்கொள்ள,

"உனக்கென்ன பைத்தியமா? எதுக்கெடுத்தாலும் உயிரை விடுறேன்னு சொல்ற. என்ன சொன்னாலும் ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்கிற? உனக்காகத் தான் நான் இவ்வளவும் பண்றேன், சுஜித்த பார்த்தா மட்டும்...” என்று தன் பற்களைக் கடித்தவாறு ஆக்ரஷத்தோடு தன்னை மறந்து கர்ஜித்தவனைக் கண்டு சற்று அதிர்ந்தவள், ஒருவித பயத்துடன் அவனைப் பார்க்க,

மிரட்சியுடன் தன்னை வெறித்துப் பார்த்த ஜியாவைப் பார்த்த பிறகு தான், தான் அவளிடம் அதிகப்படியான கோபத்தைக் காட்டிவிட்டோம் என்பது சமீருக்கு புரிய, முதலில் தன்னை ஆசுவாசப்படுத்தியவன் நீண்ட பெருமூச்சுடன் ஜியாவை நோக்கி,

"சுத்தி சுத்தி அதே இடத்துக்கு வராத. செத்துட்டா எல்லாம் முடிஞ்சிறாது. அவங்களால உனக்கு எந்தப் பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கறேன். ஒருதடவை என்னால உனக்குக் கஷ்டம் வந்ததெல்லாம் போதும்.

இனிமே வரவிடமாட்டேன்... சுஜித், ஜீவா, வருண் இவங்களோட நிழல் கூட உன்னை நெருங்காம நான் பார்த்துக்கறேன். நீ உனக்குக் கிடைச்சுருக்கிற லைஃப்ல எப்படி சந்தோஷமா இருக்கிறதுன்னு மட்டும் யோசி.

இனிமே நீ எக்காரணத்துக்கொண்டு, சுஜித்தையோ ஜீவாவையோ இல்லை வருணையோ, என் பெர்மிஷன் இல்லாம சந்திக்கவே கூடாது.” என்று கண்டிப்புடன் கூற,

"ஒரு நண்பனா, ஒரு ஆம்பளையா நீ ரொம்ப ஈஸியா சந்தோஷமா எல்லாத்தையும் மறந்துட்டு வாழுன்னு சொல்லிட்ட. ஒரு பொண்ணா, ஒரு டாக்டரா நான் எவ்வளவு குற்ற உணர்ச்சியில தவிச்சுட்டு இருக்கேன்னு உன்னால...” என்பதற்குள் மீண்டும் வெகுண்டழுந்த சமீர்,

"ஜியா!" என்று முழங்கவும், ஆஷிக் அங்கே வரவும் சரியாக இருந்தது.

அவனை அங்கு எதிர்பார்க்காத சமீரும் ஜியாவும் கண்களில் ஒருவித கலக்கத்தோடு பார்க்க, அதை உணர்ந்த ஆஷிக் சூழ்நிலையை மாற்றும் பொருட்டு,

"ஏய் ஜியா, இங்கதான் இருக்கியா? பாரு தாஹிராவும் ஆயிஷாவும் உன்னைத் தான் தேடிட்டு இருந்தாங்க, போ.” என்று அவளை அனுப்பி வைத்தான்.

அவள் சென்றதும் கோபமாய் இருந்த சமீரைப் பார்த்து ஆஷிக், "தலையில அடிபட்ருக்கு, என்னாச்சு?" என்று கேட்க, 'நல்லவேளை வேற எதுவும் கேக்கல.’ என்று மனதிற்குள் நிம்மதி அடைந்தவன்,

"அது ஒன்னும் இல்லை, ட்ரைவ் பண்ணும் பொழுது சின்ன ஆக்சிடென்ட். சின்னக் காயம் தான்...” என்று புன்னகையோடு சமாளித்தவன், ஆஷிக்கிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து செல்ல முனைந்த நேரம் அவனைத் தடுத்த ஆஷிக்,

"சமீர், நீங்க ஜியாவுக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட். ஜியாக்கும் எனக்கும் எவ்வளவோ உதவி பண்ணிருக்கீங்க. அதுக்கு நான் எப்பவும் கடன் பட்ருக்கேன். ஆனா இன்னைக்கு நீங்க ஜியாகிட்ட நடந்துகிட்ட விதம் எனக்குச் சுத்தமா புடிக்கலை. என் ஜியாகிட்ட யாரும் இப்படி ஹார்ஷா பேசுறது எனக்குச் சுத்தமா புடிக்காது.

ஸோ இனிமே ஜியாகிட்ட இப்படி வாய்ஸ் ரேஸ் பண்ணி என்னைக்கும் பேசாதீங்க. பொதுவா எனக்குக் கோபம் அவ்வளவு சீக்கிரம் வராது, ஆனா ஜியான்னு வரும்போது மட்டும் என்னன்னு தெரியலை... நான் என் கண்ட்ரோல்லயே இருக்கிறது இல்லை.” இவ்வாறு ஆஷிக் தன் இதழோரம் தளும்பிய புன்னகை மாறாமல், தன்மையான குரலில் கண்டிப்போடு கூடிய உறுதியோடு கூறி முடித்து, சமீரிடம் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்க,

"கண்டிப்பா ஆஷிக், இனிமே கவனமா இருக்கேன்.” என்று தன் தலையை அசைத்தவாறே கூறிய சமீர், ஏதோ ஒரு யோசனையில் தன்னையும் அறியாமல் தன் புருவத்தைச் சுளிக்க, நெற்றியும் சேர்ந்து சுருங்கியதால் அடிபட்ட இடத்தில் சுளீரென்று வலியெடுக்க,

"ஆ..." என்று லேசாகக் கத்தியவாறு தன்னிலைக்கு வந்தவனிடம் ஆஷிக்,

"என்னாச்சு, ஆர் யு ஓகே?” என்று வினவ,

"அதெல்லாம் ஒன்னும் இல்லை, ஐயம் ஓகே!” என்று தன் அக்மார்க் புன்னகையோடு கூறிய சமீர், ஆஷிக்கிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றான்.

ரோஜா இதழ்களால் ஆன வேலைப்பாடு, ஆங்காங்கே காற்றின் அசைவிற்கேற்ப அசைந்தாடியபடி எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி என்று, என்றுமில்லாமால் மிகவும் ரம்மியமாகக் காட்சியளித்த தன் அறையை ரசனையோடு ஆஷிக் பார்த்துக் கொண்டிருக்க,

‘பூக்களே சற்று ஒய்வெடுங்கள், அவள் வந்து விட்டாள்...’ என்பது போல நாணி கண் புதைய, கைகளைப் பிசைந்து கொண்டு உள்ளே வந்த ஜியா அவனை விட்டு ஓரடி தள்ளி நின்றாள்.

தன் காதல் மனைவியைக் கண்ட ஆஷிக்கோ, “பூக்களே சற்று ஒய்வெடுங்கள் அவள் வந்து விட்டாள்...” என்று பாடியவாறே, மெல்ல நெருங்கி வர அவனது ஒவ்வொரு அடி நெருக்கமும் அவளுக்குள் போர்க்களத்தையே உண்டாக்கியது.

முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட, குனிந்த தலை நிமிராமல் பதற்றம் குறையாமல் அப்படியே நின்றவளின், மென்கரத்தைப் பற்றி மெல்ல வருடியவன், மெதுவாய் தன்னவளின் கரம் பற்றி மெத்தை மீது அமர வைத்தான்.

தன்னவளின் கரத்தைப் பற்றியவாறே அவள் முன்பு மண்டியிட, அவனது இந்தச் செய்கையில் சற்று வியந்தவள் நிமிர்ந்து தன்னவனின் முகத்தைப் பார்க்க, ஜியாவின் மருண்ட பார்வையில் வாய்விட்டு சற்றுச் சத்தமாகத் தன் தோள்கள் குலுங்க ஆஷிக் சிரித்துவிட,

தன் கணவனின் சிரிப்பிற்குக் காரணம் புரியாமல் ஜியா அவனையே கேள்வியாய் பார்க்க, தனது சிரிப்பை அடக்கிக்கொண்டவன், கோவைப் பழம் போலச் சிவந்திருந்த தன்னவளின் இரு கன்னங்களையும் மென்மையாய் கிள்ளி, மூக்கோடு மூக்கு உரசியவாறு தன்னவளின் பிறை நுதலோடு தன் நெற்றியை மிதமாய் முட்டியவன், பனித்துளிபோல வடிந்த வியர்வைத் துளிகளைத் தன் நெற்றியில் தாங்கியவாறு,

"அடியே என் செல்ல பொண்டாட்டி, ஏன்டி இப்படிப் பயந்து போயிட்ட? இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்க பயப்படுவாங்கன்னு கேள்வி பட்ருக்கேன். அது அரேன்ஞ் மேரேஜ்னா ஓகே. முன்னபின்ன சரியா பழகிருக்க மாட்டாங்க. என்கிட்ட என்னடி உனக்குப் பயம்? உன் ஹார்ட் துடிக்கிறது இங்க வரை கேட்குது. இன்னைக்கு ஏற்கனவே தலை வலிக்குதுனு சொன்ன, இவ்வளவு நேரம் நின்னே டயர்ட் ஆகிருப்ப. உன் டயர்ட் மொத்தமும் உன் முகத்துலையே தெரியுது. இதைக் கூடப் புரிஞ்சிக்காதவனா உன் ஆஷிக்?” என்றவன் மேலும் தொடர்ந்து,

"என்னால உன் வலியை நல்லாவே புரிஞ்சிக்க முடியுது ஜியா. உன் கண்ணு முன்னாடி உன்னை நம்புன ரெண்டு உயிரு சாகும் போது, ஒரு டாக்டரா உன்னால அவங்களைக் காப்பாத்த முடியாம போகும் பொழுது எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுதுடா. ஆனா என்ன பண்ண முடியும்? இதுல உன் தப்பு எதுவும் இல்லையே. விதி முடிஞ்சிருச்சு, கஷ்டம் தான் ஆனா நீ இதை விட்டுச் சீக்கிரம் வெளிய வரணும். அதுதான் எனக்கு வேணும்.

இதுக்கு முன்னாடி ஓகே, இனிமே உன் கஷ்டத்தை ஷேர் பண்ணிக்க நான் இருக்கேன். கண்டிப்பா நான் உன்னை இதுல இருந்து வெளியில கொண்டு வருவேன். உன்னோட கடந்த காலம் எவ்வளவு கசப்பா இருந்தாலும் சரி, என்னுடைய அன்பாலையே அந்தக் கசப்பெல்லாத்தையும் உன்னை மறக்கவைப்பேன்.” என்று காதலாய் அவன் கூறியதும்,

ஜியாவின் மனதிற்குள் சொல்ல முடியாத அழுத்தம் ஒன்று ஆக்கிரமித்தது. அந்த அழுத்தம் ஊசியைப் போல அவளது உள்ளத்தை நறுக்கென்று குத்த, குற்ற உணர்வில் தவித்தாள். இப்படிப்பட்ட கணவனிடம் தன்னைப் பற்றின உண்மையை மறைக்கின்றோமே என்று அவளது உள்ளம் ஊமையாய் கதறியது.

தன்னையே கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவியின் நுதலில் காதலாய் தன் இதழைப் பதித்து, “ஐ லவ் யு!” என்றவன், தன்னவளை இறுக்கி அணைத்தவாறு நித்திரைக்குச் சென்றான்.

ஜியாவுக்கோ துக்கம் வந்து அவளது நெஞ்சைப் பிழிந்தெடுக்க, மெல்ல தன் மீதிருந்த தன்னவனின் கரத்தை நீக்கியவள், மெதுவாய் அவனது சிகையைக் கோதியவாறே, "உனக்கு என்னை பத்தின உண்மை எதுவுமே தெரியாது ஆஷிக். உண்மை தெரிஞ்ச அப்புறமும் நீ என்கிட்ட இதே அன்போட இருப்பியான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு. ஒருவேளை நீ என்னை வெறுத்துட்டா, என்னால அதைச் சத்தியமா தாங்க முடியாது.” என்று தன் உதட்டைக் கடித்தவாறு தன் கண்ணீரை அடக்கியவள், தன் விழிகளை அழுந்த மூடிக்கொண்டாள்.

"ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு சோதனை? எவ்வளவு கனவோடு லண்டல எம்.எஸ் முடிச்சேன். சித்தி சொன்ன மாதிரி லண்டன்லயே இருந்திருக்கலாம். என் நாட்டுக்கு சேவை செய்யணும்னு தானே பெங்களூர் வந்தேன். ஏன் அதுவே எனக்கு நரகமா மாறிச்சு.?" என்று அவள் கூறும் பொழுதே, அவளது இதயம் வெடித்துக் கண்கள் இரண்டும் நீராகி, துக்கம் தொண்டையை அடைக்க, வலியை அடக்க முடியாதவளாய் படுக்கையை விட்டு எழுந்தவள், பால்கனியில் இருக்கும் நாற்காலியில் தன் கால்களைக் குறுக்கியவாறு, வானத்தையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தவளை, அவளது கடந்த கால நினைவுகள் பேய் அலையைப் போலத் தாக்க, விழிகளில் கண்ணீர் கசிந்தது.

தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே ஜியா தன் அருகில் இல்லாததை உணர்ந்தவன், உறக்கம் கலைந்து தன் இமைகளை மெல்ல பிரித்தவாறே, தன் அறையைச் சுற்றி பார்த்தவனுக்கு அங்கு ஜியா இல்லாததை உணர்ந்தான்.

"அதுக்குள்ள முழிச்சுட்டாளா? எந்திரிச்சதும் ஒரு ஹக் பண்ணலாம்னு நினைச்சேன்.” என்று முகத்தைச் சுருக்கியவாறு அவளது தலையணை எடுத்து அணைத்தவன்,

தன்னைச் சுற்றி கமழ்ந்து கொண்டிருந்த தன்னவளின் சுகந்தத்தை, தனக்குள் ஆசை தீர சவாசித்தான். ஏனென்று காரணம் அறியாமல் அவனது இதழுக்குள் புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள, தன் சிகையைக் கோதியவாறே குளியலறைக்குச் சென்று குளித்து முடித்தவன், தன் ஈரத்தலையை உலுக்கியவாறே வெளியில் வர அப்பொழுது,

"ஆஷிக்! ஆஷிக்!” என்று முனங்கும் சத்தம் கேட்டு, “ஜியாவோட சத்தம் மாதிரி இருக்கு.” என்றவாறு பால்கனிக்கு வந்தவன், சுள்ளென்று அடிக்கும் சூரிய கதிருக்காக முகத்தை நாற்காலியின் ஒரு முனையில் புதைத்து, அதே நாற்காலியில் கால்களைக் குறுக்கியவாறு, “ஆஷிக்... ஆ... ஷிக்...” என்று முனங்கியவாறு எதோ களைந்து எறியப்பட்ட செடி போல, துவண்டு படுத்திருந்தவளைப் பார்த்து ஆஷிக் மிகவும் கவலையுற்றான். கேசம் கலந்திருக்க, வெண்ணிற வதனமோ சிவந்துபோய்க் கண்ணீர் துளிகள் காய்ந்து, தான் வந்து சென்றதை சுட்டிக்காட்ட அவனுக்குள் வலித்தது.

‘ராத்திரி முழுக்க அழுதுட்டே இருந்தியாமா? உன்னைக் கவனிக்காம நான் மட்டும் நிம்மதியா தூங்கிட்டு இருந்திருக்கேன். சாரிடா...’ என்று தன் விழிகளை அழுந்த மூடியவாறு, தனக்குள்ளே அவளது தூக்கம் கலையாமல் கூறினான்.

"நீ எதுக்கும் கவலைப்படாத, நான் எல்லாத்தையும் சரி பண்ணுவேன். நீ வேணும்னா பாரு, நான் உனக்குக் கொடுக்கப் போற அன்புல நீ உன் பழசு எல்லாத்தையும் மறந்திருவ." என்று உறுதி அளித்தவன், ஜியாவின் உறக்கம் கலையாமல் மெல்ல அவளைத் தன் கரங்களில் ஏந்தி கட்டிலில் படுக்க வைத்து, அவளது உச்சியில் முத்தமிட்டு, சத்தமின்றித் தன் அறையை விட்டு வெளியே சென்றான்.

"வந்துட்டியாடா? ஜியாவையும் வர சொல்லு, பிரேக் ஃபாஸ்ட் ரெடியா இருக்கு.” என்ற தன் தாயிடம்,

"ம்மா, அவளுக்குக் கொஞ்சம் தலை வலி."

"அப்படியா! என்னாச்சு, நான் போய்ப் பார்க்குறேன்.” என்று பதறிய தாயிடம், “ஒன்னும் இல்லைமா, ரெஸ்ட் எடுத்தா சரியாகிரும். கொஞ்ச நேரம் தூங்கட்டும், அவளே வருவா. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு, போயிட்டு வந்திடுறேன்.” என்றவன் தன் தாயிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றான்.

***


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்

நிலவே 51 & 52
 
Last edited:
Top