Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நிலவே 53 & 54

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
90
நிலவே 53

உறங்கும் பொழுதும் விழித்திருக்கும் பொழுதும் நொடி பொழுதும் விலகாமல், ஜியாவை முழுதும் ஆக்கிரமித்த ஒரே முகம் என்றால் அது ஆஷிக்கின் முகம் தான். கிளம்பும் பொழுதும் தன்னிடம் ஒழுங்காகப் பேசவில்லை. இந்த ஒரு சின்ன விஷயத்துக்காகத் தன்னை அவன் இப்படித் தண்டிக்கிறானே என்று அவளது கண்கள் கலங்கியது.

தன்னையே சுற்றி சுற்றி வருபவன் இப்பொழுது தன்னை ஏறெடுத்து கூடப் பார்க்காமல் இருப்பது, அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவனது இந்தத் திடீர் மாற்றம் அவளுக்குப் பயத்தைத் திணித்தது. அவன் நெருங்கி வரும்போதெல்லாம் ஜியா விலகி விலகி தான் இருந்திருக்கிறாள்.

ஆனாலும் அவனது இந்தக் கணப் பொழுது விலகலையும் அவளது மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அவனது அருகாமையை அவளது மனம் நாடியது.

அவன் சென்ற நாளில் இருந்து நாம் அவனைப் பற்றித் தான் நினைக்கிறோம், அவன் அப்படி இல்லையே என்று நினைக்கும் பொழுது அடி வயிற்றிலிருந்து வார்த்தையால் கூற முடியாத, ஒருவித உணர்வு நெஞ்சை அடைத்தது. விட்டால், 'ஓ' என்று கதறி அழுதுவிடுவாள்.

ஆஷிக்கிற்கும் அப்படித் தான் ஜியா இல்லாத இடம் அவனை மிகவும் துன்பப்படுத்தியது. தன்னவளின் வாசத்திற்காக அவனது சுவாசம் ஏங்கி தவித்தது. கணப்பொழுதும் அவளது ஞாபகம். அவனது மனம் ஏனோ மிக அதிகமாக அவளுக்காக ஏங்கியது.

இப்படி நாட்கள் நொடிகளாய் கடந்திருக்க மூன்று நாட்கள் ஆன நிலையில் ஆஷிக்கின் அழைப்பை, தன் அலைபேசியின் தொடு திரையில் பார்த்தவளுக்கு, எல்லை இல்லாத மகிழ்ச்சி உள்ளுக்குள் பரவ, “ஆஷிக்!” என்று வாய் நிறைய அழைத்தவாறு ஜியா அழைப்பை அட்டென்ட் செய்ய, தனக்காகத் தன்னவள் தவித்த தவிப்பு, 'ஆஷிக்' என்று தனது பெயரை அவள் உச்சரித்த விதத்திலே அறிந்து கொண்டவன்,

பதில் எதுவும் பேசாமல் சிறிது நேரம் அவளது குரலை ரசித்துவிட்டு, "நாளைக்கு நீ டெல்லிக்கு வர்றதுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன். டிக்கெட்ட மெஸேஜ் பண்ணிருக்கேன். டெல்லி ஏர்போர்ட் வந்ததும் எனக்குக் கால் பண்ணு.” என்று சற்று இறுக்கமான குரலில் கூற,

"நீ எப்படி இருக்க? இன்னும் கோபமா தான் இருக்கியா? நான் அன்னைக்கு உன்னைத் தப்பா..." என்று ஆரம்பித்தவளை இடை மறித்தவன் கோபமாகப் பேச மனம் கேளாது,

"இட்ஸ் ஓகே.” என்று மற்றும் கூற,

"ஆஷிக் நீ இன்னும் என் மேல கோபமா தான் இருக்கியா?” என்று தன் மென் குரலில் கெஞ்சியவளிடம், இதற்கு மேல் பேசினால் இவ்வளவு நாள் போட்ட ட்ராமா எல்லாம் வேஸ்ட் ஆகிரும். அப்புறம் சர்ப்ரைஸ் சப்புன்னு ஆகிரும் என்று உணர்ந்து, தன் உணர்ச்சிகளை மிகவும் கஷ்டத்தோடு கட்டுப்படுத்தியவன்,

"நாளைக்குக் கிளம்புற வழிய பாரு, அப்புறம் டெல்லி ஏர்போர்ட் வந்ததும் ஃபோன் பண்ணு என்ன...” என்று அவளிடம் இருந்து பதில் வருவதற்குள் அழைப்பிற்கு முடிவு கட்டியவன்,

"என்ன வாய்ஸ்டி... இதுக்கே என்னை இவ்வளவு கிறங்கடிக்கிறியே? அப்படியே கொஞ்சி கொஞ்சி என் ஃபீலிங்ஸ தட்டி எழுப்பிட்ட. இனிமே தூக்கம் ஏது? சாரி ஹனி பண். நாளைக்கு ஈவினிங் வர தான். அதுக்கப்புறம் நான் உன்னைப் படுத்தினதுக்கு என்னை நீ வச்சு செய்.” என்றவாறு அப்படியே மெத்தை மீது இருக்கரங்களையும் பின்னந்தலைக்குக் கொடுத்தவாறு சாய்ந்து படுத்தான்.

‘உன்னோட கோபத்தைக் கூட நான் தாங்கிக்குவேன் ஆஷிக், ஆனா உன்னோட மௌனம் என்னை ரொம்ப வதைக்குது.’ என்று எண்ணியவள், ஏர்போர்ட் வந்து இறங்கியதும் ஆஷிக் சொன்னது போல அவனுக்கு அழைப்பு விடுக்க,

"நான் வந்துட்டேன் ஆஷிக்." என்று அவள் ஆர்வமாய் கூற,

"சரி வெளியில வா, அங்க ஒரு..." என்று அவன் கூறவும்,

"நானே வீட்டுக்கு வந்திடுறேன் ஆஷிக், எனக்குத் தான் வழி தெரியுமே?” என்று முந்திக்கொள்ள,

"எனக்குத் தெரியாதா நீ வந்திருவன்னு, நான் சொல்றத செய்.” என்றவன், அவளிடம் அடையாளம் கூறி ஒரு டாக்சியில் ஏறுமாறு கூற,

”டாக்சி புடிக்க எனக்குத் தெரியாதா? அக்கறை இருந்தா வந்து கூப்பிடணும்.” என்று முணுமுணுத்ததை ரசித்தவன், அலைபேசியை ட்ரைவரிடம் கொடுக்குமாறு கூற, அவரிடம் எதோ எதோ பேசியவன் பின்பு ஜியாவிடம்,

"அவர்கிட்ட எல்லாம் சொல்லிட்டேன், அவர் ட்ராப் பண்ணிருவாரு. அவர் ட்ராப் பண்ணினதும் என்னை காண்டாக்ட் பண்ணு.” என்றவன் அழைப்பைத் துண்டிக்க ஜியாவுக்கு உள்ளுக்குள் கஷ்டமாக இருந்தது.

டாக்சி நேராக ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வந்து ஜியாவை இறக்கிவிட, "என்ன இங்க வந்திருக்கீங்க? நான் போக வேண்டிய இடம் வேற...” என்றவளிடம்,

"சார் இங்கதான் மேடம் டிராப் பண்ண சொன்னாங்க.” என்றதும் ஆஷிக்கிற்கு அழைப்பை விடுத்தவள்,

"ஆஷிக், இந்த டிரைவர் வீட்டுக்கு கூட்டிட்டு வரல..." என்று அவள் கூறுவதற்குள் மீண்டும் தடுத்தவன்,

"அவர் சரியா தான் கூட்டிட்டு வந்திருக்காரு. நீ முதல்ல உள்ள போ. பேர சொல்லி ரூம் கீ வாங்கிக்கோ. நான் லைன்ல இருக்கேன்.” என்றதும், அவனது செய்கையின் அர்த்தம் விளங்காமல் ஒருவித தடுமாற்றத்துடன், ரிசெப்ஷனில் தன் பெயரை சொல்லி விசாரிக்க கணினியில் ஆராய்ந்து பார்த்த அந்தப் பெண் ஊழியர்,

"சாரி மேடம், ஜியாங்கிற பேர்ல எந்த புக்கிங்கும் இல்லை.” என்றதும், ஜியா லைனில் இருந்த ஆஷிக்கிற்கு விஷயத்தைக் கூற,

"மிஸ்ஸஸ் ஆஷிக்னு கேளு.” என்று அழுத்தி கூறவும், அவள் சலிப்புடன், “அடிக்கடி சொல்லு ஆஷிக்.” என்று முணுமுணுக்க,

‘குத்தியாடி காட்டற என் ராட்சஷி!’ என்று தனக்குள் புன்னகைத்தவன் அவளிடம், “என்ன?” என்று கடுப்பாகக் கேட்க,

"ஒன்னும் இல்லை.” என்றவள் மேலும் தொடர்ந்து, "ஆஷிக் நீ ஹோடல்லயா இருக்க? ஏன் நாம ஹோட்டலுக்கு...” என்பதற்குள்,

"உள்ளே போ.” என்றவன் மீண்டும் அழைப்பிற்கு முற்று புள்ளி வைக்க, பொங்கி வந்த அழுகையைக் கட்டுப்படுத்தியவள் தன் அறைக்குள் அவனை எதிர்பார்த்து நுழைய, அவன் அங்கே இல்லாது போகக் கட்டுபாடு இழந்து கண்ணீர் கன்னத்தை நனைக்க, அவள் அவனுக்கு அழைப்பு விடுப்பதற்குள் அவளைத் தொடர்பு கொண்டவன்,

"உள்ள போய்டியா?” என்று கேட்கவும்,

"ஆமா நீ இங்க இல்லை, எப்போ வருவ?” என்றவளுக்கு,

"ரெஸ்ட் எடு.” என்றவன் மீண்டும் அழைப்பிற்கு விடை கொடுக்க, அவனது செயலுக்கான விடை அறியாமல் மிகவும் குழம்பினாள். அவன் இல்லாமல் அவளால் அங்கே ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லை, மிகவும் தவித்தாள். அவள் வந்த சில மணி நேரத்தில் கதவு தட்டப்பட,

"ஆஷிக் வந்துட்டியா?” என்றவாறு கண்களைத் துடைத்துக் கொண்டு ஓடி சென்று அவள் ஆர்வமாய் கதவைத் திறக்க, வாசலில் ஒரு பணிப்பெண் நிற்க அவளிடம்,

"இது யார் குடுத்தாங்க? நீங்க வேற யாருக்கோ கொடுக்க வேண்டியதை..." என்பதற்குள் அந்த பெண் ஜியாவின் கையில் அளவில் பெரிய பரிசு பார்சலை கொடுத்துவிட்டு சென்று விட, ஜியாவுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. ஆஷிக்கிற்கு அழைப்பு விடுத்து ஓய்ந்தே போய்விட்டவள், அவனிடம் இருந்து எந்தவித பதிலும் வராமல் போக மிகவும் வேதனை அடைந்தாள்.

பார்ஸலை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தவளுக்கு, இதெல்லாம் ஆஷிக்கின் வேலையாகத் தான் இருக்கும் என்பது புரிந்தாலும் அவன் ஏன் இப்படிச் செய்கிறான்? கோபப்பட்டதுக்காக என்னைச் சமாதானம் செய்யிறதுக்காக இப்படிப் பண்ணிட்டு இருக்கானா? என்னும் பொழுது உதட்டில் புன்னகை ஒட்டிக்கொண்டாலும், அடுத்த நொடி மனம் அவளது மகிழ்ச்சியைக் கெடுக்கும் விதமாய்,

சமாதானம் செய்யணும்னா நேரடியாக வந்து தரவேண்டியது தானே? அப்போ இன்னும் கோபமா இருக்கதுனால தானே இப்படிப் பண்றான். ஏன் ஹோட்டல்ல தங்க வச்சுருக்கான்? மனது என்று வேறு விதமான கேள்விகளை எழுப்ப, தோன்றிய புன்னகை நொடியில் மறைந்து போய் கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பித்தது.

பார்ஸலை பிரித்துப் பார்க்க மனம் சொன்னாலும், அவன் அங்கு இல்லாதது ஜியாவிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

‘சமீர் விஷயத்துக்கே நம்மகிட்ட இப்படி நடந்துக்குறானே, பழைய விஷயம் எல்லாம் தெரிஞ்சா கண்டிப்பா நம்மளை வெறுத்து ஒதுக்கிவிடுவான்.’ என்று என்னும் பொழுது உடல் நடுங்கியது.

ஜியாவிற்கு ஹோட்டலில் இருப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆஷிக்கின் செயலில் இருந்த இந்தத் திடீர் மாற்றம் அவளுக்குள் எங்கே அவனை, தாம் இழந்துவிடுவமோ என்கின்ற அச்சத்தை ஏற்படுத்த,

ஒருவித நடுக்கத்துடன் அமர்ந்திருந்த பொழுது பாத்ரூமில் இருந்து சத்தம் கேட்க, என்னவாக இருக்கும் என்று ஒருவித தயக்கத்துடன் கதவைத் திறந்துகொண்டு அவள் உள்ளே செல்ல, மக் கீழே விழுந்திருந்ததைப் பார்த்து, 'இதுதானா' என்பது போல முகப் பாவனையோடு, அதை எடுத்து அதன் இடத்தில் மீண்டும் வைத்தவள் அங்கிருந்து கிளம்பும் நேரம்,

கதவிற்குப் பின்னால் இருந்து வந்த ஆஷிக், ஜியா சிறிதும் எதிர்பார்க்காத நேரம் அவளைப் பின்னால் இருந்து அணைக்க, அவனது இந்தத் திடீர் செய்கையில், “ஆ...” என்று கத்தியவளின் விழிகளில் கண்ணீர் கட்டி இருக்க,

ஆஷிக் நான்தான் என்பதற்குள்ளே, விழிகள் மூடியவாறு அவன் புறம் திரும்பி அவனது மார்போடு புதைந்தவாறு விசும்பினாள்.

தனது இந்தக் கண நொடி தொடுதலிலே தன்னைத் தன்னவள் அறிந்து கொண்டதில் நாடி சிலிர்த்தவன், ஏங்கி கொண்டிருந்தவளின் முதுகை மென்மையாய் வருடியவாறே, "அழாத... ஈஸிடா, நான்தான் வந்துட்டனே...” என்று ஆறுதல்படுத்த,

அழுது கொண்டே நிமிர்ந்தவள், "ஏன் என்னை விட்டு போன? இவ்வளவு நாளா ஏன் என்கிட்ட பேசல? எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? நான் தான் சாரி சொல்றேன்ல, என்கிட்ட கோபம் மட்டும் படாத ஆஷிக்.” என்று ஒவ்வொரு வரியையும் ஏங்கி ஏங்கி அழுதவாறு பாதி வார்த்தைகள் முழுங்கியவாறு சொன்னவள்,

"சாரி ஆஷிக்...” என்பதற்குள் அவளது இதழை தன் விரல்களால் மூடியவன்,

"சாரி! ஐயம் ரியலி சாரி! உன் மேல உள்ள கோபம் எனக்கு அன்னைக்கே போயிடுச்சுடா.” என்றதும் நம்பிக்கையில்லாமல் தன் விழிகள் விரிய,

"நிஜமாவா!” என்றவளின் விழிகளில், அழுந்த இதழ் பதித்தவாறு ஆமாம் என்பது போல இமை தட்டி மூடினான்.

தன்னவனது மார்பில் சாய்ந்த நொடியில் இருந்து ஜியா உலகத்தையே மறந்து விட்டாள் என்றால் மிகை இல்லை.

அதுவும் அவனுக்குத் தன் மீது எந்தக் கோபமும் இல்லை என்பதை அறிந்த பிறகு, ஜியாவின் ஆனந்த களிப்பிற்கு அளவே இல்லை. அவனது அணைப்பில் அனைத்தையும் மறந்து வேறொரு உலகில் மிதந்து கொண்டிருந்தாள்.

தன் நெஞ்சத்தில் மஞ்சம் கொண்டிருந்த தன் காதல் மனைவியின் சிகையை, மயிலிறகிலும் மென்மையாய் வருடியவன் அவளது காதோரமாய்,

"ரொம்ப மாறிட்டடி.” என்று ஆச்சரியமாய் கேட்க,

"புரியலை...” என்று குழப்பமாய் பார்த்தவளிடம்,

"ஒருவாரம் உன்கிட்ட நான் கோபமா இருந்ததும், நீ என்னை வச்சு செய்வன்னு நினைச்சேன். உன்னை எப்படிச் சமாதானம் செய்வேன்னு பயந்தேன். ஆனா நீ இப்படி என்னை ஒருவார்த்தை கூடத் திட்டாம ஏங்கி ஏங்கி அழுததும் கஷ்டமா போச்சு.

தியா விஷயத்துல எதுவும் கில்ட்டியா ஃபீல் பண்றியா?” என்றவனிடம், பதில் கூறாமல் ஜியா குற்ற உணர்வில் தலை கவிழ நிமிர்த்தியவன்,

‘என்ன?’ என்று விழிகளினாலே கேட்க,

"நம்பிருக்கணும்ல...” என்று குற்ற உணர்ச்சி தளும்ப ஜியா கேட்க,

"நம்புற மாதிரி நடக்க வேண்டியதும் என் கடமை தானே!"

"ஆஷிக்!” என்றவளை இடை மறித்தவன்,

"எல்லாத்தையும் மறந்திரு செல்லம்.” என்றவன் அவளிடம் இருந்து பதில் வராமல் போகவும்,

"ஜியா!" என்று மீண்டும் அழைத்ததில்,

"ம்ம்ம்...” என்று முனங்கியவளிடம்,

"ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்ல?" என்று வருந்தியவனின் நெஞ்சத்தை விட்டு அகலாது இமைகளை மூடியவாறே,

"தியா விஷயத்தைப் பத்தி கேட்டா இல்லை, ஆனா...” என்று இழுத்தவளிடம், “ஆனா...” என்று கேள்வியாய் ஆஷிக் கேட்க,

"இந்த மூணு நாள் பத்தி கேட்டா ஆமா...” என்று தலையை ஆட்டியவள் பிறகு நிமிர்ந்து கணவனின் இமை நோக்கி,

"ஆனா இது புடிச்சுருக்கு.” என்று இதழ் இசைத்தவளைப் பார்த்து,

"எது?" என்று கிறக்கமாகக் கேட்க, முகம் சிவந்தவள் அவனது மார்பில் முட்டியவாறு, “இது...” என்று தலை கவிழ, கவிழ்ந்திருந்த வதனத்தை நிமிர்த்தியவன்,

"கிஃப்ட்ட ஓபன் பண்ணாமலே வச்சுருக்க?” என்று செவி மடலை உரசியவாறு கேட்க,

"நீ ஏன் தரல? நான் யாருக்கோன்னு நினைச்சேன்.” என்றவள் அவனைப் பேச விடாது மேலும்,

"இங்க இருந்து போவோமா ஆஷிக்? ஹோட்டலுக்கு ஏன் வந்திருக்கோம்? வீட்டுக்குப் போலாம்.” என்று சினுங்க,

"ஸ்டார் ஹோட்டல்டி, புடிக்கலையா?"

"ம்ஹும் இல்லை...” என்று தன் தலையை அசைத்தாள்.

"அப்போ புடிச்சுருக்குன்னு சொன்ன...” என்று தன் புருவம் உயர்த்தி கேட்க, “உன்னை மட்டும் புடிச்சுருக்கு.” என்று அவள் குழைவாகக் கூறிய மறுநொடி,

"என்னை மட்டும் புடிச்சுருக்கா?" என்றவாறு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு, தன் செவ்விதழால் அவளது கன்னத்தில் பச்சை குத்தியவன், கூச்சத்தில் சிணுங்கியவளை மேலும் இறுக்கி அணைத்து,

"நான் உனக்குத் தான். முதல்ல உன் புருஷன் உன்னை இம்ப்ரெஸ் பண்ண என்ன கிஃப்ட் வாங்கிருக்கான்னு பாரு...” என்று சொல்ல,

"இம்ப்ரெஸ் ஆகலைன்னா?” என்று புருவம் சுளித்தவளை விழிகளாலே அள்ளி பருகியவன், “முதல்ல பாரு."

"ஆகலைன்னா?” என்று வம்பிழுத்த தன் மனைவியிடம்,

"இம்ப்ரெஸ் பண்ண என்ன பண்ணணுமோ அதைப் பண்ணுவேன்.” என்று கிறக்கமாகக் கூற,

"என்ன பண்ணுவன்னு சொல்லு.” என்று மீண்டும் ஒருவித கர்வத்தோடு புருவம் உயர்த்திய தன் மனைவியின் பாதத்தில், அவள் எதிர்பார்க்காத நேரத்தில் காதலாய் தன் இதழ் கொண்டு கவி எழுதியவன்,

ஒவ்வொரு விரலாய், விட்டு விட்டு தூறும் மழையைப் போல, கணப் பொழுதில் சிவந்து போன தன் மனைவியின் வதனத்தைப் பார்த்து பார்த்து ரசித்தவாறு தன் செவ்விதழ் பதித்தான்.

என் காதலை சொல்ல வார்த்தைகள் இல்லாமல் போக

என் இதழால் சொல்ல நினைத்தேன்

என் செல்ல இதழ் ஒற்றலுக்கே

இப்படி வெட்கத்தால் என்னைத் தின்றால்

முத்தம் இடும் வேளையில்

என்னிடம் எதை விலையாய் கேட்பாய்!

“இதுக்கேவா?” என்று ஒற்றை வார்த்தையில் தன் புருவத்தை அசைத்துக் கிறக்கமாகக் கேட்டவாறே அவளை நெருங்கி வர, தன் மென் கரங்களால் தன்னவனின் மார்பைத் தள்ளியவள்,

"போதும் ஆஷிக், இதெல்லாம் நீ நல்லா தான் பண்ணுவ. சர்ப்ரைஸ் கிஃப்ட்னு வரும் பொழுது தானே உன் சொதப்பல் எல்லாம் தெரியும்.” என்று வாய்விட்டு சிரித்தவள்,

மெதுவாக அந்த பார்சலை பிரிக்க, அதுக்குள்ளே அடுக்கடுக்காக ஒவ்வொரு பெட்டியுடன் ஒவ்வொரு பொருள் இருக்க, அதை ஒவ்வொன்றையும் தன் கண்கள் விரிய பார்த்தவள் ஆச்சரியத்தில் வாயடைத்து போனாள்.

தன்னவளது திகைப்பை ரசித்தவன் மிக நெருக்கமாக அவளது அருகில் வந்து, “சீக்கிரம் ரெடி ஆகி கீழ பீச் பக்கத்துல வந்திரு, காத்துட்டு இருக்கேன்.” என்றவன், அவள் நிமிரும் நேரத்தில் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு அறையில் இருந்து வெளியேறினான்.

***





நிலவே 54

ஆஷிக்கிடம் இருந்து இதைச் சற்றும் எதிர்பார்க்காதவள் சந்தோஷத்தில் தன்னையே மறந்திருந்தாள். ஒருவழியாகத் தயாராகித் தன் அறையை விட்டு ஆஷிக் சொன்ன இடத்திற்கு வந்தாள். பகலை காதல் கொண்டு சிறை வைத்த இரவு வேளையும், மிதமாக வீசிய தென்றல் காற்றும் அவளது மேனியில் சிலிர்ப்பை உண்டாக்க, தன்னையும் அறியாமல் ஒட்டிக்கொண்ட புன்னகையோடு, ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில கடல் அலைகள் பாடிய கவியியை ரசித்தவாறே, ஆஷிக்கைத் தேடி வந்தவளின் விழிகளுக்கு விருந்தளிப்பதுப் போல,

தங்கக் கரையிட்ட பட்டு வேஷ்டி மற்றும் வெள்ளை சட்டையைத் தன் முழங்கை வரை மடக்கிவிட்டு, மணமகன் போலத் தோரணையாக தன்னவள் தன் முன் நடந்து வர,

அவனது கம்பீரத்தோடு கூடிய ஆண்மை அழகில் தன் பெண்மை உருக, அப்படியே நின்ற இடத்திலே தன்னவனை ரசிக்கத் தொடங்கினாள்.

ஆஷிக்கும் விதிவிலக்கல்ல, அரக்கு நிற காஞ்சிபுர பட்டுப்புடவையில், அழகான கழுத்தை ஒட்டி உறவாடிய ஆன்ட்டிக் நெக்லஸ், தான் உரசி உறவாடிய செவிமடலை உரசி கொண்டு ஊஞ்சல் ஆடிய ரூபி கற்கள் பதித்த ஜிமிக்கி, தான் இறுக்கி பிடிக்கத் துடிக்கும் கரங்களை முத்தமிட்டுக்கொண்டிருந்த எமரால்டு வளையல்கள் என, நவரத்தினங்களும் மிஞ்சும் அளவிற்கு அழகு தேவதையாகத் தன் முன்னே விழிகள் மலர்ந்து நின்றவளை, கொஞ்சமும் மிச்சம் இல்லாமல் தன் பார்வையாலே பருகினான். பற்றாகுறைக்குப் பின்னல் இட்ட கேசம், அதில் இருந்த பிச்சி மலரின் வாசம் அவனுக்குள் சிலிர்ப்பை உண்டாக்க, என்றும் இல்லாமல் முதன் முதலாய் ஜியாவை பட்டு புடவையில் பார்த்தவனுக்கு இதயம் எக்குத்தப்பாக எகிறியது.

வைத்த கண் வாங்காமல் விழிகளை உருட்டி அவள் பார்த்த பார்வை, அவனுக்குள் எரிந்து கொண்டிருக்கும் காதல் தீக்கு தூபமிட,

"இப்படித் தள்ளி இருந்து உருட்டி உருட்டி பார்த்தே என்னைக் கொன்னு கடத்துற. இரு, எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு உன்னை என்ன பண்றேன்னு பாரு?” என்று தனக்குளே காதலாய் மிரட்டியவன்,

இன்னும் அவளது அருகில் நெருங்கி வர, அவனது அருகாமை அவளுக்குள் ஒருவித தயக்கத்தையும் நாணத்தையும் ஏற்படுத்த இதயம் படப்பட வென்று அடித்துக்கொள்ள, தன்னவளை ரசித்தவன் அவளை மேலும் காக்க வைக்காது, தன் கையில் மிகச் சிறியதாய் இருந்த ரிமோட்டை அழுத்த, நிலா வெளிச்சத்திலும் சிறியதொரு விளக்கின் வெளிச்சத்திலும், கொஞ்சம் வெளிச்சமாக இருந்த அந்த இடம் மிகவும் பிரகாசமாக ஆனது. ஆஷிக் அளித்த இந்த ஆச்சரியத்தில் தன் கண்கள் விரிய அப்படியே சிலையென நின்று விட்டாள். விழியோரத்தில் கண்ணீர் வழிய ஆஷிக்கைப் பார்த்தவள், “நீ எதையுமே மறக்கலையா ஆஷிக்?” என்று வாய்விட்டு கேட்க, மெலிதாய் புன்னகைத்தவன், 'எப்படி மறப்பேன்' என்பது போலத் தன் புருவம் உயர்த்தினான்.

ஜியாவின் பொற்கரங்களை மென்மையாய் பற்றி அவளை, பல அலங்கார விளக்குகளால், வெள்ளை மற்றும் சிவப்பு நிற ரோஜா இதழ்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தச் சிறிய மண்டபத்துக்குள் அழைத்து வந்தவன், ஒரு உயரமான ஸ்டூலில் மாலை இடப்பட்டிருந்த மறைந்து போன ஜியாவின் தாய், தந்தையின் புகைப்படத்திற்கு அருகே அழைத்து வந்து,

"ஹலோ மாம்ஸ், ஹலோ அத்தை! இங்க பாருங்க, உங்க செல்ல பொண்ண உங்க முன்னாடி கல்யாணம் பண்ணிக்கப் போறேன். உங்களுக்கு ஓகே தானே? டென்ஷன் ஆகாதீங்க மாமா, ஏற்கனவே திருட்டுக் கல்யாணம் பண்ணிட்டு, இப்போ ஸீன் போடறியான்னு கேக்குறீங்களா?

அன்னைக்கு அவசரத்துல பண்ணிட்டேன் மாம்ஸ், முறைக்காதீங்க. நீங்களும் என் அத்தைய தூக்கிட்டுப் போய்த் தானே பண்ணிருக்கீங்க. உங்க பொண்ண என் பொண்டாட்டிய என் உயிரா பார்த்துக்குவேன்.” என்றவன், விழிகளில் கண்ணீர் தளும்பத் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தன்னவளை, தோளோடு அணைத்து உச்சியில் முத்தமிட்டவாறு மேலும் தொடர்ந்து,

"அழாதடி, என் மாமனார் என்னை முறைக்கிறாரு. அத்தை, மாமா நாங்க நல்லா இருக்கணும்னு எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க.” என்றவன், அருகே இருந்த மலர் மாலையை ஜியாவின் கழுத்தில் அணிவிக்க, தன்னையே கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்து,

"போடுடி சீக்கிரம், வேஷ்டி நிக்க மாட்டிக்குது.” என்று கண்சிமிட்ட, லேசாகப் புன்னகைத்தவள் தன்னவனின் கழுத்தில் மாலையைப் போட, ஓம குண்டத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பிற்கு எதிரே வந்து அமர்ந்தவன் அவளிடம்,

"சாரிடா, நைட் எந்த ஐயரும் ஃபிரியா இல்லை. ஆனா நீ ஃபீல் பண்ணாத. எல்லாரும் அக்னி சாட்சியா கல்யாணம் பண்ணுவாங்க, நான் உன்னைக் காற்று, நெருப்பு, வானம், நட்சத்திரம், நிலா, மேகம், கடல், பூமின்னு எல்லார் சாட்சியாவும் பண்றேன்.” என்றவன்,

ரெக்கார்டிங்கில் கட்டி மேளம் முழங்க, ஜியாவின் கழுத்தில் தாலி கட்ட போனவன், பிறகு அவளைப் பார்த்து கண்சிமிட்டிவிட்டு அவளது கழுத்தை சுற்றி, அவளின் இடது புற தோள் வளைவில் முகம் வைத்து உரசியவாறு, தங்களின் காதலின் அடையாளமாய் ஐந்து முடிச்சிட்டவன், ஒவ்வொரு முடிச்சின் பொழுதும் தன் காதலை அவளது கன்னத்தில் தன் இதழைப் பதித்தவாறு வெளிப்படுத்த,

ஜியா, ஆஷிக் தன் மீது அளவில்லாமல் பொழிந்த காதலில் உருகியவாறு அமர்ந்திருந்தாள்.

காதலித்த தொடக்கத்தில் ஒரு வருடம் கடந்திருந்த நிலையில் நடந்த சம்பவம் அவள் விழிகளின் முன்பு வந்தாட, அதை அப்படியே நினைத்து பார்த்தாள்.

***

அலைபேசியில் மும்முரமாய் இருந்த ஆஷிக்கிடம் ஜியா, "ஆஷிக் எப்படியும் நம்ம கல்யாணம் உன் வீட்டு முறைப்படி தான் நடக்கும். ஆனா எனக்கு என் அம்மாவோட ஊர் ஸ்டைல்ல பட்டு புடவை கட்டி, பூ வச்சு, நீ வேஷ்டி கட்டி, அப்புறம் நீ என் கழுத்துல தாலி கட்டணும்.

தாலி சும்மா சைட்ல இருந்து நேரா கட்ட கூடாது. அப்படியே நீ உன் கைய என் கழுத்தோட கொண்டு வந்து வளைச்சு கட்டணும் சரியா? நீ கவனிக்கிறீயா, இல்லையா?"

"ம்ம்... கவனிக்கிறேன், தாலி வளைச்சு கட்டணும் மேல...” என்று தன் அலைபேசியில் மூழ்கியவாறே கேட்க, லேசாக முறைத்தவள் மேலும் தொடர்ந்து,

"அப்புறம் குங்குமமும் அப்படித் தான் வச்சு விடணும். என் அப்பா, அம்மா கல்யாணமும் ரெண்டு தடவ நடந்துச்சு. ஒன்னு அப்பா ஊர் ஸ்டையில் குஜராத்தி மாதிரி. அப்புறம் அம்மா ஊர் ஸ்டையில் சவுத் இந்தியன் மாதிரி. எனக்கு சவுத் இந்தியன் ஸ்டையில் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசையா இருக்கு. நாம பண்ணிக்கலாம் தானே?” என்றவள் ஆசையாகக் கேட்க,

"கல்யாணம் எதுக்குன்னு நான் யோசிச்சுட்டு இருக்கேன், நீ என்னன்னா ரெண்டு தடவ பண்ணணும்னு சொல்ற. தாலி கட்டுறதுக்கு எதுக்குடி வேஷ்டி எல்லாம் கட்டணும்? சவுத் இந்தியன், 'எல்லோ கலர்' ரோப் தானே கவலைய விடு. எல்லோ, க்ரீன், பிங்க், சவுத், நார்த், வெஸ்ட், ஈஸ்ட், சவுத் ஈஸ்ட்ன்னு எல்லா ஸ்டைலயும் உள்ள தாலிய நாளைக்கே நான் வாங்கித் தரேன். ட்ரெஸ்க்கு மேட்சா போடு செல்லம்.” என்று அலைபேசியில் மூழ்கியவாறே கூறியவனைக் கோபம் கலந்த வருத்தத்தோடு பார்த்தவள்,

"நீ எதுவும் பண்ண வேண்டாம்.” என்று எரிச்சலோடு கூற,

"நீ சொன்னா ஓகே செல்லம்.” என்று மேலும் அலைபேசியில் இருந்து விழியை அகற்றாது ஆஷிக் கூற,

ஆஷிக்கிட்ட இந்த மாதிரியான சென்ட்டிமெண்டெல்லாம் வேலைக்காகாது என்று உணர்ந்து, அந்த ஆசையை அன்றோடே தன் இதயத்தில் வைத்து புதைத்தவள் காலப் போக்கில் அதை மறந்தும் விட்டாள்.

***

இன்று இத்தனை வருடங்கள் கழித்து இத்தனை மன சஞ்சலங்களுக்குப் பிறகு கூட, தான் மறந்து போன தனது விருப்பத்தைத் தன் சொந்த விருப்பமாய் எண்ணி, தான் நினைக்க மறந்து போன தன் தாய், தகப்பனின் புகைப்படத்தை வைத்து அவர்களின் ஆசியோடு, தன்னை ஆஷிக் திருமணம் செய்து கொண்டதை எண்ணி மிகவும் நெகிழ்ந்து போனவள், தன்னவனின் நினைவிலே மூழ்கிருக்க,

தன் மனைவியின் கழுத்தை சுற்றி வந்து அவளது நெற்றி வகிட்டில் தன் இதழ் பதித்து விட்டுக் குங்குமம் வைக்க,

அவன் அளித்த முத்தத்தின் ஸ்பரிஸத்தில் நினைவு திரும்பியவள் தன் காதல் கணவனை ஏறிட்டு பார்க்க, அவன் அவளது கழுத்தில் அசைந்த மாங்கல்யத்தைத் தன் கையில் ஏந்தி,

"உன்னால என் ஜியா இன்னைக்குச் சந்தோஷமா இருக்கா.” என்றவாறு அதில் முத்தமிட, அவனது கரையில்லா காதலில் மூழ்கி தானும் கரைந்து போகத் துடித்தாள்.

அம்மிக்கு பதிலாக அவள் முன்பு தனது வலது காலை ஊன்றியவாறு முட்டி போட்டவன், அவளது மெல்லிய பூ பாதத்தைத் தன் வலது தொடை மீது வைத்து, மென் பாதத்தில் தன் முத்திரையைப் பதித்து அவளது கால் விரலில் மெட்டியும் போட்டுவிட்டான்.

அடுத்தக் கட்டமாக மிகவும் மென்மையாக ஆனால் மிக உறுதியாக, தன் காதல் மனைவியின் கரத்தை பற்றியவன், பின்னனியில் கண்ணே கனியே உன்னைக் கை விடமாட்டேன்... என்ற பாடல் இசைக்க, தளிர்விட்டு எரிந்து கொண்டிருந்த அக்னி குண்டத்தை வலம் வர தொடங்கியவன் ஏழு முறை அல்ல, ஐந்து வருட காதல், ஆறு வருட பிரிவுக்குச் சாட்சியாகப் பதினொரு முறை வலம் வந்தான்.

ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் தன் காதல் மனைவியின் நுதலை தன் இதழால் காதல் ஆட பச்சை குத்த, இறுதி சுற்று முடிந்த மறுநொடி, ஜியா தன் கணவனின் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

விடாமல் தேம்பி தேம்பி அழுதவளை ஆறுதலாய் வருடியவன், "பிறந்த நாள் அதுவுமா ஏன்டா அழுதுட்டு இருக்க? உன் முகத்துல சிரிப்பை பார்க்கணும்னு தான் நான் இத்தனையும் செஞ்சேன் ஜியா. நீ தேம்பி தேம்பி அழுறதுக்காக இல்லடா.” என்று அவன் முகம் வாடிப்போக, அதைச் சுத்தமாக விரும்பாதவள் தன் விழிநீரை துடைத்துக் கொண்டு அவன் முன் புன்னகைக்க,

"இதுதான் எனக்கு வேணும், இந்தச் சிரிப்புக்காக எதையும் செய்வேன்.” என்றவன் தன்னவளை தன் மார்போடு சாய்த்துக்கொண்டு,

"ஹாப்பி பர்த்டே பொண்டாட்டி! என்ன என்னோட சர்ப்ரைஸ் எப்படி இருக்கு? இம்ப்ரெஸ் ஆகிட்டீங்களா?” என்று விஷமமாய் புன்னகைக்க, வேறெதுவும் கூறாமல் தன் இதழ் இசைத்தாள் ஜியா.

"நீயும் நானும் சந்தோஷமா இருக்கணும்னு சமீர் ரொம்ப ஆசை பட்டான்ல, அவன்கிட்ட பேசிருவோம். அன்னைக்கு அவன்கிட்ட ஹார்ஷா பேசியிருக்கக் கூடாது.” என்ற ஆஷிக்கைத் தடுத்த ஜியா,

"இல்லை ஆஷிக் வேண்டாம், எனக்காக நீ எவ்வளவு தான் செய்வ?” என்றவளிடம்,

"நான் உனக்கானவன். உனக்குச் செய்யாம வேற யாரு செய்யப் போறேன்?” என்றவன் சமீருக்கு விடீயோ காலில் அழைப்பு விடுக்க, ஆஷிக் அழைப்பு விடுத்த கொஞ்ச நேரத்தில் அட்டென்ட் செய்த சமீரிடம் ஆஷிக்,

"ரொம்ப சாரி சமீர், ஜியாவும் நானும் நல்லா இருக்கணும்னு எவ்வளவு யோசிக்கிற நீ. அது புரியாம உன்னைக் கஷ்டப்படுத்துற மாதிரி பேசிட்டேன் ஐயம் ரியலி சாரி."

"ஆஷிக் அப்படி இல்லை, நீங்க ஜியா மேல இவ்வளவு நம்பிக்கை வச்சுருக்கிறது, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்றவனிடம் ஆஷிக், ஜியாவைத் தன்னோடு இறுக்க அணைத்துக்கொண்டு,

"நீ ஆசைப்பட்ட மாதிரியே நாங்க சந்தோஷமா இருக்கோம் சமீர்.” என்று கூற, ஜியாவின் மலர்ந்த முகத்தைப் பார்த்த சமீர் வழக்கம் போலத் தன் கன்னக்குழி சிரிப்புடன், அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து புதுமண தம்பதியருக்கு, தனிமை கொடுக்கும் பொருட்டுத் தன் அலைபேசியைத் துண்டித்தான்.

ஜியா, ஆஷிக்கின் புஜத்தைப் பற்றிகொண்டவாறே அவனது தோளில் சாய்ந்திருக்க, ஆஷிக் தன் காரை மிதமான வேகத்தில் ஒட்டிக்கொண்டு சென்றான்.

சில மணி நேரத்திற்குப் பிறகு ஆஷிக்கின் இல்லம் வந்தடைய, இல்லை மிஸ்ஸஸ் ஆஷிக்கின் இல்லம் என்றால்தான் சரியாக இருக்கும்.

மிஸ்ஸஸ் ஜியா ஆஷிக் என்று பொறுத்தப்பட்ட பெயர் பலகையைப் பார்த்து நெகிழ்ந்த ஜியா, ஆஷிக்கின் கரங்களை இன்னும் இறுக்கப் பற்றிக்கொள்ள,

புன்னகைத்தவாறே ஆஷிக் காரின் கதவைத் திறந்த நொடி, தன்னவளைத் தன் கரத்தில் ஏந்தியவன் தீராத எல்லையே இல்லாத காதல் பார்வையை வீச, அவனது பார்வையில் அவளும் தொலைந்து போக இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று பின்னி கொண்டது.

அவனது அறைக்குள் நுழைந்த மறுகணம் ஆங்காங்கு தாங்கள் ஒன்றாய் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம், சுவரெங்கும் மாட்டப்பட்டிருக்க, அவனது கரங்களில் இருந்து தானே கீழே இறங்கியவள், ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தன் கடந்த காலச் சுகமான நினைவுகளில் மூழ்கினாள்.

மனம் முழுவதும் காதல் பொங்கி வழிய தன்னை மறந்து நின்று கொண்டிருந்த, தன் காதல் மனைவியின் அழகை ஆசையாய் தன் விழிகளினால் ரசித்தவன்,

அவளது முகத்தில் தொனித்த முக அசைவை வைத்து நிச்சயம். அவ அழுதுட்டே, ‘எப்படிடா ஆஷிக், என் மேல இவ்வளவு லவ் வச்சுருக்கனு மறுபடியும் அழ போறா.’ என்று எண்ணி சிரித்தவன்,

மெதுவாக அவளது பின்னால் வந்து தன் இடக்கரத்தினால் அவளது இடையில் தன் கரங்களைப் பதித்து, தன் வலக்கரத்தினால் தன்னவளின் முதுகினை மறைத்துக் கொண்டிருந்த கூந்தலையும் பிச்சி பூவையும் மெதுவாய் ஒதுக்கியவன், காதலினால் உறைந்து போய் இருந்த தன் மனைவியின் முதுகில் தன் இதழ்களை ஒற்றியெடுத்தவாறு, கழுத்தோரத்தில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

அவனது இதழ்களும் கரங்களும் தங்களின் வேலையைச் செய்ய, தன்னவனது தீண்டலில் மேனி சிலிர்த்தவள் இதயம் தடம் புரள, அவனது மார்போடு புதைந்து கொண்டாள். அவளது வெக்கத்தோடு கூடிய அச்சத்தைக் கண்டு புன்னகைத்தவன், மெல்ல தன் மார்பில் இருந்து அவளைப் பிரித்து, பூவினும் மெல்லிய தன்னவளின் வதனத்தைத் தன் கையில் ஏந்தி, உருண்டு புரண்டு கொண்டிருந்த இரு கரு விழிகள் வீசிய வலையில் சிக்கி தவித்தவன்,

"இந்தக் கண்ணுதானே என்னை உன் மேல பைத்தியமாக்குச்சு, அதுக்காக...” என்றவாறு அதில் முத்தமிட்டவன்,

வெக்கத்தில் சிவந்திருந்த கன்னங்களைப் பார்த்து, “வெட்கப்பட்டே என்னைப் படுத்தி எடுக்கிறியே...” என்று இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தத்தை அள்ளி அள்ளி கொடுத்தான்.

நெஞ்சம் படபடக்க மேலும் கீழும் அசைந்த மூச்சுக் குழாயில் தன் முகம் புதைத்து, “என் மூச்ச அடைச்சு வைக்கிறியே...” என்றவாறு தன் இதழை ஒற்றி எடுத்தவன்,

மேலும் தன் மனைவியைத் தன்னோடு இறுக்க அணைத்தவாறு, மெல்ல அவளது இதழ் நோக்கி குனிந்து, "இது என்னை விட்டு போனதுக்காகவும், இனிமே எப்பொழுதும் போகாம இருக்கிறதுக்காகவும்...” என்றவாறு அழுத்தி, தன் இதழோடு அவள் இதழ் சேர்த்தவன் அப்படியே தன்னவளது இதழ்களுக்குள் தொலைந்து போனான்.

அவனைத் தன்னை விட்டு விலக்க முடியாமல் அவனது முதுகை ஜியா இறுக்கமாகப் பற்றிக்கொள்ள, அவளது பெண்மை உருகி வலிய மென்மையோடு அவளிடம் யுத்தம் நடத்திக்கொண்டிருந்தான். ஆஷிக் பொழிந்த கபடம் இல்லா காதலில் ஜியா எல்லாம் மறந்தவளாய், ஏன் தன்னையே மறந்தவளாய் வேறு ஒரு இன்பமான உலகில் இருப்பது போல, தன் கவலைகள் மறந்து தன் கணவன் பொழிந்த முத்த மழையில் நனைந்து கொண்டிருந்தாள்.

மூச்சு வாங்கும் கட்டாயத்தில் தன்னவளை விட்டு விலக, வெட்கத்துடன் அவன் முகம் பார்க்க முடியாது போக, தவிப்புடன் இதழ் சுளித்துத் தன்னுடைய உணர்வுகளை அடக்கப் போராடிக் கொண்டு இருந்த, தன் காதல் மனைவியின் அழகு கொஞ்சும் முகம் ஆஷிக்கின் உணர்வுகளைத் தட்டி எழுப்ப,

மீண்டும் முத்தப்போரை தொடங்கியவனிடம் இருந்து விலகியவள், தன் கரங்களைப் பிசைந்துகொண்டு தன் இதழை சுளித்தவாறு நிற்க, தன்னை வாரி சுருட்டிய அழகை ரசித்துக் கொண்டிருந்தவனின் பார்வையில் சிவந்தவள், அவனது காதல் பார்வையைக் காண முடியாது, தன் தலையைத் தாழ்த்தி கொண்டவாறு, தன்னவனை விட்டுக் கொஞ்சம் தள்ளி வந்து சுவற்றில் முகத்தைப் புதைத்துக் கொள்ள,

பின்னால் இருந்து அணைத்தவன், "இதுக்கே இப்படி ஓடி ஒளிஞ்சா என்னடா நான் பண்ண?” என்று பாவமாய் கூறியவனின் நெஞ்சை, தன் கரங்களால் மெதுவாகத் தள்ளியவாறு விலகி செல்ல, அவளது கரத்தைப் பற்றி இழுத்து தன் மீது சாய்த்துக் கொண்டவன்,

"கல்யாணம் ஆகி இத்தனை நாள் ஆச்சுடி, இன்னும் என்கிட்ட உனக்கு ஏன் இவ்வளவு வெட்கம்?” என்று அவளது கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்தவாறே கேட்டான்.

"விடு ஆஷிக், நான் போகணும்.” என்று செல்லமாய் கெஞ்சியவளிடம்,

"செல்லம் உன்னை நான் புடிக்கவே இல்லடி...” என்று ஆஷிக் குறும்பாய் சிரிக்க, அவனது மார்பில் முட்டியவாறே தன்னவனின் மார்போடு இன்னும் ஆழமாய் புதைந்து கொள்ள,

"போகலையா? போகணும்னா போ...” என்று விஷமத்தோடு அவன் கேட்க,

‘ம்ஹும்... வேண்டாம்.’ என்பது போலத் தன் தலையை மட்டும் பதிலுக்காக அவள் குறுக்கே அசைக்க,

வாய்விட்டே சிரித்தவன், "கொஞ்சம் வெக்கத்தை விட்டு என்னையும் பாருடி.” என்று ஏக்கமாய் கூறியதில், மெல்ல நிமிர்ந்தவள் சட்டென்று அவனது கன்னத்தில் தன் இதழைப் பதித்து விட சித்தம் அடங்கியவன்,

வெட்கத்தில் முகம் மலர தன் இதழ் இசைத்தவாறு கண்களில் காதல் பெருக, தன் அருகில் நின்றிருந்த தன்னவளை தன் கரங்களில் ஏந்தியவாறு தன் காதல் அத்தியாயத்தை அரேங்கேற்றினான்.

நெற்றியில் ஆரம்பித்த அவனுடைய இதழின் பயணம் ஒவ்வொரு இடத்திலும் தன்னுடைய வேலையைச் செய்து, அவளது பெண்மையை தட்டி எழுப்பிக் கொண்டு இருந்தது.

வெட்கத்தில் முகம் சிவந்து அவனிடம் இருந்து விலக முற்பட்டவளை விலக அனுமதிக்காமல், மேலும் இறுக்கிக் கொண்ட ஆஷிக்,

“எங்கடி போற?” என்றவாறு அவனது இதழ்கள் அவளின் காது மடலில் விளையாடியது.

அவன் கரங்கள் போட்ட கோலத்தில், “ஆஷிக்...!” என்று சிலிர்த்தெழுந்தவள் அவனது காதலில் அடங்கிப்போக, மருண்ட தன்னவளின் விழிகளில் விழுந்தெழுந்தவன், இத்தனை வருடங்கள் தேக்கி வைத்த காதல் அனைத்தையும் அவளிடம் மிச்சம் இல்லாமல் காட்ட, ஆஷிக்கின் நெருக்கம், அவன் பொழிந்த காதல் இதில் எல்லாம் மறந்தவள், தேகம் அனல் அடிக்க அவன் வாரி வழங்கிய முத்தத்தில் வெண்பனியாய் உருகி தன்னவனுக்குள் கரையும் நேரம், டேபிளில் இருந்த அலைபேசி ஜீவா காலிங் என்னும் பெயரை தொடுதிரையில் காட்டியவாறு அதிர, விடாமல் அலைபேசியில் இருந்து வெளிவந்த ஒளியில் ஜியா தன் விழிகளைச் சுழல விட, அவளது உள்ளத்தில் காரிருள் சூழ்ந்து கொண்டது.

***


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்

நிலவே 55 & 56
 
Last edited:
Top