- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
நிலவே 55
ஜீவாவின் அழைப்பை பார்த்த மறுநொடி ஜியாவின் உள்ளத்தில் காரிருள் சூழ்ந்து கொள்ள, கருவிழிகள் இரண்டும் விழிநீரில் மிதக்க, தேகம் நடுங்கினாள்.
தன்னைக் காதலாய் மையம் கொண்டிருந்த தன்னவனிடம் இருந்து வேகமாக விலகி, ஆஷிக் நடப்பதை கிரகிப்பதற்குள் தன் அலைபேசியோடு, சட்டென அறையின் கதவை வேகமாகத் திறந்து கொண்டு வெளியேறினாள்.
ஆஷிக், “ஜியா!” என்று அழைக்கவும், அவள் கதவை வேகமாகத் திறந்ததால் அது படார் என்று சுவற்றில் அடிக்கவும் சரியாக இருக்க,
அந்த நேரம் ஜியா சடாரென்று கதவை சாற்றிக்கொண்டு அவன் கூப்பிட கூப்பிட பதில் கூறாமல் அங்கிருந்து சென்ற விதம், ஏதோ அவன் தன் முகத்தில் பளார் என்று அறைந்தது போல உணர்ந்தான்.
ஜியா தன்னிடம் இருந்து விலகிய விதமும் அறையை விட்டு வெளியேறிய வேகமும், ஆஷிக்கிற்கு மிகவும் வேதனையை அளித்தது. அவனது உள்ளம் கடிவாளம் இல்லாத குதிரையைப் போல எதையெதையோ யோசிக்கத் தொடங்கியது.
அவள் அவனது முகம் பார்த்து எதாவது பேசியிருந்தால் கூட இப்படி வருத்தப்பட்டிருக்க மாட்டான். ஆனால் வெடுக்கென்று அவனை விட்டு விலகி வெறியேறிய விதம் அவனை மிகவும் காயப்படுத்தியது. அவளது செய்கையை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவமானமாக உணர்ந்தான்.
‘ச்ச... என்னைத் தப்பா நினைச்சுட்டாளே! இதுக்காக அலையிறேன்னு தான் நினைச்சுருக்கா! கண்டிப்பா அதுவா தான் இருக்கும். அதான் இப்படி ஓடி போறா. நான் அவளோட ஆஷிக் தானே! எனக்கு என் மனைவிகிட்ட உரிமை இல்லையா? இல்லை ஜியாக்கு என் மேல விருப்பம் இல்ல. 'நோ நோ' நல்லா தானே இருந்தா. நான் ஒன்னும் அவகிட்ட என் விருப்பத்தைத் திணிக்கலையே.
நான் என்ன பண்றது, அவ மூலமா எனக்குள்ள வர்ற உணர்வுகளை அவகிட்ட தான் காட்ட முடியும். என்கிட்ட சொல்லிருக்கலாமே... இப்படி ஏன் பண்ணினா?
எதோ மூனாவது மனுஷன்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடுற மாதிரி போய்ட்டா, என் முகத்தைக் கூடப் பார்க்கல.
கண்டிப்பா என்னைத் தப்பா நினைச்சுட்டா, அதான் என் முகத்தைக் கூடப் பார்க்கல.’ என்று அவனது உள்ளம் குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்தது.
அலைபேசியில், "என்ன ஜியா, ஹஸ்பண்ட் கூடப் பிஸியா இருந்தியா?” என்று போதையில் தடுமாறிய ஜீவாவின் குரல், ஜியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த,
"அது..." என்று இழுத்தவளிடம்,
"சொல்லவே இல்லை, கல்யாணம் எல்லாம் பண்ணிகிட்ட." என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க, அது அவளது காதில் இடி விழுந்தது போல இருந்தது.
"இப்போ எதுக்கு கால் பண்ணின?” என்று கனன்று வந்த கோபத்தைக் கட்டுப்படுத்தியவாறு கேட்க,
"எதுக்கு கால் பண்ணினேன் ம்ம்... ஹான்! அன்னைக்கு நீ உன்னால என்ன பண்ண முடியும்னு கேட்டல. அதுக்கான பதில இப்போ குடுத்தா சரியா இருக்கும்னு நினைக்கிறேன். நீ என்ன டார்லிங் நினைக்கிற?” என்று விஷமமாய் புன்னகைக்க, அவன் கூறிய அர்த்தத்தை உணர்ந்து, திகைத்து போனவள் பதில் பேசாமல் சிலையென நின்றாள்.
"ஏதாவது சொன்னியா ஜியா, சாரி எனக்குக் கேட்கல.” என்று வேண்டும் என்றே அவளைச் சீண்ட,
"ஜீவா ப்ளீஸ்..."
"இது பதில் இல்லையே..."
"ஜீவா உன்னைக் கெஞ்சி கேட்குறேன்..."
"ம்ம்ம் கேளு... அதுக்கு முன்னாடி உன்னோட கல்யாணத்துக்கு என்ன கிஃப்ட் வேணும்னு டக்குன்னு சொல்லு."
"ஜீவா நோ..."
"நான் என்ன நினைக்கிறேன்னா, உன் ஹஸ்பண்ட் உன்னோட வீடியோவை பார்த்தான்னா ரொம்பச் சந்தோஷப்படுவான்ல?"
"நோ ஜீவா ப்ளீஸ் வேண்டாம்... அன்னைக்கு நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது, ஐயம் ரியலி சாரி ப்ளீஸ்...” என்று கண்ணீர் வடிக்க,
"ஐ வாண்ட் மோர்... நான் ஸ்டாப் சொல்ற வரைக்கும் சாரி ஜீவா சாரி ஜீவான்னு சொல்லிகிட்டே இரு. மனசு மாறுதானு பார்க்கலாம்.” என்றவன், “ம்ம் சத்தமா... கேட்கல.” என்று அவள் ஓய்ந்து போகும் அளவிற்கு அவளைத் துன்புறுத்தி வக்கிர புன்னகையோடு,
"மன்னிச்சுட்டேன் டார்லிங்!” என்று மொழிந்த வார்த்தைகள் அவளது காதில் அமிலத்தை வாரி இறைத்தது போல இருக்க, முகத்தைச் சுளித்தவள் திரண்டெழுந்த கோபத்தைத் தன் பல் இடுக்கில் அடக்கிக்கொண்டு,
"ஜீவா உனக்கும் மத்தவங்களுக்கு என்ன தான் வேணும்?"
"நீ... ஐ மீன் உன்னோட நிம்மதி. எனக்கு இது போதும், மத்தவங்களுக்கு என்ன வேணும்னு அவங்ககிட்ட தான் கேக்கணும்."
"அதான் இல்லாம பண்ணிட்டீங்களே..."
"அப்படியா? ஆனா நீ கல்யாணம் எல்லாம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கிறத பார்த்தா...” என்று விஷமித்தான்
"நான்தான் உங்க பிரச்சனையே வேண்டாம்னு ஒதுங்கி போறேனே, அப்புறமும் ஏன் என்னை டிஸ்டர்ப் பண்றீங்க?"
"இப்போ ஒதுங்கி தான் போற, ஆனா மறுபடியும் எங்களை நீ மாட்டிவிட நினைச்சா நாங்க என்ன பண்றது? அதுக்குத் தான் அப்போ அப்போ உனக்குப் புரியவைக்கிறேன்."
"ஜீவா சத்தியமா உங்களுக்கு எதிரா நான் எதுவும் பண்ண மாட்டேன். என்னையும் சமீரையும் விட்ருங்க.” என்றதும் விழுந்து விழுந்து சிரித்தவன்,
"உன்னையும் சமீரையும் நான் விடணுமா? ஜியா... ஜியா... லீவ் இட். சமீரை விடுறது இருக்கட்டும், உன்னை நான் எப்படி விடுறது? நீ விட்டுப் போன தடம் இன்னும் என் கன்னத்துல இருக்கே, அதுக்கு என்ன பண்றது?"
"ஜீவா ப்ளீஸ்... உன்னைக் கெஞ்சி கேக்குறேன், தயவு செஞ்சு வீடியோவை குடுத்திரு. நான் உங்க வழிக்கே வரல. என்ன கேட்டாலும் தரேன். ப்ளீஸ்..." என்று கெஞ்சியவளை ரசித்தவன்,
"என்... ன... கேட்டா... லும்... தருவி... யா?” என்று ஒவ்வொரு எழுத்துக்கும் அழுத்தம் கொடுத்து, ஒவ்வொரு வார்த்தையையும் இழுத்து பேச, அவனது வக்கிர மனதை புரிந்துகொண்ட ஜியாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட,
வாய்விட்டு சிரித்து, "என்ன செல்லம், மௌனம் சம்மதமா?” என்றவன்,
"சரி டார்லிங், குட் நைட். உன் ஹஸ்பண்ட கேட்டதா சொல்லு.” என்று அலைபேசிக்கு விடுதலை கொடுத்தான்.
ஜீவாவை எண்ணிய பயத்தில் இருந்த ஜியாவை மேலும் பதறவைக்கும் விதமாய், “ஃபோன்ல யாரு?” என்ற ஆஷிக்கின் குரல் அவளை அதிர்ச்சியடையச் செய்ய, பதறியவள் விழிநீரை துடைத்துவிட்டு திரும்பி ஆஷிக்கைப் பார்க்க, அவனது ஊடுருவும் பார்வையில் தோன்றி மறைந்த கேள்விகளை அறிந்தவள், அவன் முகம் காணாது நிலம் நோக்க,
திரண்டு வந்த கோபத்தையும் எரிச்சலையம் அடக்கிக் கொண்டவன், "உன்கிட்ட தான்...” என்று அழுத்தமாய் கேட்க,
"ஃப்ரண்ட்...” என்ற அவளது பதிலில், திருப்தி அடையாதவன் இருந்தும் அவளிடம் அதைப் பற்றி இப்பொழுது பேச விரும்பாதவன்,
"என்கிட்ட சொல்லிருக்கலாம்.” என்று விரக்தியாகத் தன் கோபத்தை வெளிக்காட்டி, “சரி வெளியிலே ஏன் நிக்கிற, உள்ள வா.” என்று அவளது கரத்தைப் பற்றிக் கொள்ள, ஒருவித சங்கடத்தோடு தன் கரத்தை அவனது பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டவள்,
தலையில் கை வைத்தவாறு, "தலை வலிக்குது, ரெஸ்ட் எடுக்கணும்.” என்று அவனது முகத்தைப் பார்க்காமல் கூற, அதைக் கூடப் பொருட்படுத்தாதவன்,
"என்ன தலை வலிக்குதா? வாடா, நான் தைலம் தேச்சுவிடுறேன், ட்ராவெல்ல டயர்ட் ஆகிருப்ப.” என்று காதலோடு அவளது நெற்றியில் அவன் கை வைத்த மறுநொடி, ஒருவித சங்கோஜத்தோடு அவனிடம் இருந்து விலகியவள், “வேண்டாம், நான் தூங்கணும். ரெஸ்ட் எடுத்தா சரியாகிரும்.” என்று அவனது கையைக் கிட்டத்தட்ட தட்டிவிட்டவாறு அவனது முகத்திற்கு நேராகக் கூறிவிட்டு, அவனிடம் இருந்து விலகி சென்று படுக்கையின் ஒரு ஓரத்தில் அவனுக்கு முதுகாட்டி உடலை குறுக்கிக்கொண்டு படுத்துக்கொண்டாள்.
மிகவும் காயப்பட்டான், அவள் கூறிய விதமும் விலகிய விதமும் அவனைச் சுக்கு நூறாக உடைத்தது
‘எதோ என்கிட்ட இருந்து தப்பிச்சு போற மாதிரி ஓடுறா. நான் என்ன அவ்வளவு கேவலமானவனாவா தெரியுறேன்?’ என்று உள்ளுக்குள் பொறுமியவன், மனதில் கனன்று வந்த கோபத்தை அருகில் இருந்த மேசையின் மீது காட்டிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினான்.
அதைத் தன் கண்கள் மூடியவாறு அவனுக்கே தெரியாமல் கவனித்துக் கொண்டிருந்தவள் அவன் சென்ற மறுநொடி,
"என்னை மன்னிச்சுருடா... என் மேல கொஞ்சம் கூடக் கபடமே இல்லாத அன்பை கொட்டி கொட்டி கொடுக்குற உனக்கு, துரோகம் பண்ண என்னால முடியாதுடா. ஒரு பொய்யோட நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை. உண்மை ரொம்ப வலிக்கும், சொன்னா நீ தாங்கிக்க மாட்ட.” என்று வாய்விட்டு கதறி அழுதாள்.
கோபத்தில் ஹாலுக்கு வந்தவன், ‘நீ என்னை விரும்புறன்னு எனக்குத் தெரியும், அப்போ ஏன் என்னை விட்டு விலகி போற? அப்படி என்ன விஷயம் உன்னை என்கிட்ட நெருங்க விடாம தடுக்குது ஜியா.
நீ வெடுக்குன்னு என்னை விட்டு போகும் பொழுது, உயிரே போற மாதிரி இருக்கு. சொன்னா தானே தெரியும். நான் உன் புருஷன் உன் பிரச்சனைய என்கிட்ட சொல்றதுக்கு என்ன? நான் உனக்காகத் தானே வாழ்ந்துட்டு இருக்கேன். என் கையை உதறும் பொழுது என்னையே நீ வேண்டாம்னு சொல்ற மாதிரி இருக்கு. எதுவா இருந்தாலும் சொல்லிரு ஜியா. சரி பண்ணலாம், ஆனா என்னை விட்டு விலகாத.’ என்று தனக்குள் வருந்தினான்.
இருவருக்கும் நெஞ்சுக்குழிக்குள் கனன்று வந்த வலி ஏதோ பாறாங்கல்லை வைத்தது போலக் கனத்தது.
நீண்ட நேரம் சிந்தனைகளின் இறுக்கத்தில் சிக்கிக்கொண்டு தவித்த ஆஷிக், வெகுநேரத்திற்குப் பிறகு தன்னை அறியாமலே ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றான்.
இரவு வெகுநேரம் கழித்து உறங்கியதால் நேரம் ஆனது கூடத் தெரியாமல் ஆஷிக் தன்னை மறந்து உறங்க, அவனது அருகிலே மண்டியிட்டு அமர்ந்த ஜியா, கலைந்த தன்னவனது சிகையைக் கோதிவிட, மனைவியின் கரம்பட்ட ஸ்பரிசத்தில் லேசாகச் சிலிர்த்தவன் உறக்கத்திலும், “ஜியா!” என்று அழைத்தான்.
ஆழ்ந்த உறக்கத்திலும் தன்னவன் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறான், என்பதை எண்ணி பார்க்கும் பொழுதே உள்ளம் நெகிழ்ந்தவள், தன் இமை விளிம்பில் எட்டிப்பார்த்த கண்ணீரை துடைத்தவாறு தன்னவனின் நெற்றியில் இதழ் பதிக்க, உறக்கம் கலைய பாதி உறக்கத்தில் ஒருவித எரிச்சலோடு, தன் மேல் இருந்த ஜியாவின் கரத்தை விருட்டென்று தட்டிவிட்டவாறு, “ப்ச்...” என்று முகம் சுளித்தபடி எழுந்து அமர்ந்தான்.
அவன் எழுந்து அமர்ந்த வேகமும் அவனது முகத்தில் குடியிருந்த எரிச்சலும், ஜியாவுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
அவளது வாடிய முகத்தைப் பார்த்த பிறகு தான், தன்னை அறியாமல் தான் அவளிடம் நடந்து கொண்ட விதம் நினைவுக்கு வர, “ச்ச... நீயா?” என்று தனக்குள் முணங்கியவன், வருத்தத்தோடு அவளிடம் மன்னிப்பு கேட்க முனைந்த நேரம், அவனது மூளை நேற்று இரவு நடந்தவற்றை அவனுக்கு நினைவுபடுத்த கோபம் கொண்டவன், இறுக்கமான பார்வையை அவள் மீது பாய்த்துவிட்டு தன் அறைக்குச் சென்று விட்டான்.
அவனது செய்கையில் உள்ளம் கலங்கியவள் பிறகு, ‘அவன் இன்னும் கோபமா தான் இருக்கான். எப்படிக் கோபப்படாம இருப்பான். இதுக்குத் தான் நான் உனக்கு வேண்டாம்னு எவ்வளவோ சொன்னேன், நீ தான் கேட்கல ஆஷிக். என்னை மன்னிச்சுருடா, எனக்கே என்ன பண்றதுனே தெரியல. உன்கூடப் பொய்யா வாழ்க்கையைத் தொடங்குறதுல எனக்குச் சுத்தமா விருப்பம் இல்லைடா.’ என்று மனதிற்குள் வேதனை அடைந்தாள்.
குளித்து முடித்துவிட்டு தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே ஆஷிக் வேகமாகக் கீழே இறங்கி வர, அவன் முன்பு தன் சோகத்தைக் காட்டிகொள்ளாத ஜியா மிக இயல்பாக,
"வாவ் ஆஷிக் அதுக்குள்ள ரெடி ஆகிட்ட?” என்றவாறு அவனது கரத்தை பற்றி அழைத்துச் சென்று டைனிங் டேபிளில் அமரவைத்து,
"இன்னைக்கு எல்லாமே உனக்குப் புடிச்சது தான் சமைச்சுருக்கேன். முதல் தடவ பண்ணிருக்கேன்டா, டேஸ்ட் பண்ணி பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லு.” என்று ஆர்வமாய் மலர்ந்த முகத்துடன் தன் மென்கரத்தால் ஊட்டிவிட, அவளது செய்கையில் தன் இறுக்கத்தைத் தளர்த்தியவன், உணவில் உப்பும் காரமும் சரியான அளவில் இல்லாவிட்டாலும், காதலும் அன்பும் நிறைந்து வழிய, கேள்வியோடும் ஒருவித தயக்கத்தோடும் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்து, புன்னகைத்தவாறே சுவைத்தவன், ‘நல்லா இருக்கு’ என்பது போலத் தன் கரத்தை உயர்த்திக் காட்ட அவளது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
"நல்லா இருக்கா? எப்படி இருக்குமோன்னு நினைச்சேன்.” என்றவாறு அடுத்தவாய் ஊட்டிவிடும் நேரம், அவளது கரத்தைப் பற்றியவன் தன் பக்கம் அழைத்து உட்கார வைத்து,
அவளது முகத்தையே சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்து, "என்னை நேத்து சீப்பா நினைச்சுட்டல?” என்று கலக்கத்தோடு அவன் கேட்ட கேள்வியில் கலங்கிப் போனவள் உடனே மறுத்து,
"இல்லை, நிஜமா அப்படி இல்லை ஆஷிக்."
"அப்போ ஏன் நேத்து அந்த மாதிரி நடந்துகிட்ட?"
"அதைப் பத்தி இப்போ பேச வேண்டாம்.” என்று தலை கவிழ்ந்தவளை நிமிர்த்தியவன்,
"இல்லை, பேசணும் அதுவும் இப்பவே...” பிடிவாதம் பிடித்தான். அவள் மௌனமாய் இருக்க மேலும் தொடர்ந்தவன்,
"நேத்து என்கிட்ட நீ அப்படி நடந்துகிட்ட. இப்போ அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி ரொம்ப இயல்பா இருக்க. இதை நான் எப்படி எடுத்துகிறது. மனசை விட்டு என்கிட்ட பேசுடா, உன் பாரம் குறையும். கஷ்டமா தான் இருக்கும், ஆனா இன்னும் அதையே எத்தனை நாளுக்கு நினைச்சுட்டு இருக்கப் போற? அதை விட்டு வெளியில வர்றது தானே புத்திசாலித்தனம். உன்னோட பிஹேவியர் என்னை ரொம்பக் குழப்புது."
"ஆஷிக் நான் நல்லா தான் இருக்கேன், நீ நினைக்கிற மாதிரி இல்லை. நீ முதல்ல சாப்பிடு.” என்று ஜியா தடுமாறிய குரலில் கூற,
"இல்லை ஜியா, இன்னைக்கு நான் விடுறதா இல்லை. எனக்குப் பதில் வேணும்.”அழுத்தமாய் கூற, கண்ணீர் எப்பொழுது வேண்டுமானாலும் வழிய காத்திருப்பது போல விழிகளின் விளிம்பில் எட்டிப்பார்த்தபடி இருக்க,
"சொல்ல போறியா, இல்லையா? உன் அமைதி எனக்குள்ள சூறாவளிய ஏற்படுத்துது.” என்று சுள்ளென்று கத்த, அதிர்ந்தவளின் விழிகளில் இருந்து நீர் அனுமதி இன்றிப் பெருக்கெடுத்து ஓடியதில் எரிச்சல் அடைந்தவன்,
"ச்ச... இதே வேலையா போச்சு, நான் எதோ கொடுமைக்காரன் மாதிரி அழுதுட்டே இருக்க. புருஷன்டி... என்கிட்ட உனக்கு என்ன பயம்? நீ என்னைக் கொல்லாம கொன்னுட்டு இருக்க."
"நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லை ஆஷிக்."
"ஷட் அப்!” என்று கர்ஜித்தவன் அவளது கையில் இருந்த சாப்பாடு தட்டை கோபத்தில் தட்டிவிட்டவாறு, கதவை வேகமாக அடித்துச் சாத்திவிட்டு தன் பணிக்குச் சென்றான்.
***
நிலவே 56
‘ஏங்கி ஏங்கி அழறா. எதோ மூணாவது மனுஷன்கிட்ட பயப்படுற மாதிரி பயப்படுறா. நான் என்ன கொடுமைக்காரனா? நேத்து என்னை விட்டு விலகி போய் கஷ்டப்படுத்துனா, இப்போ அவளாவே நெருங்கி வந்து கஷ்ட்டப்படுத்துறா. அவகிட்ட கோபப்பட்டா எனக்குத் தான் கஷ்டமா இருக்கு.’ என்று கடிவாளமிடாது தறிகெட்டு ஓடிய கற்பனை குதிரையோடு சேர்ந்து தானும் பயணிக்க, மனம் பாறாங்கல்லை விழுங்கியது போலக் கனத்தது. கவலையுடன் அலுவலகம் சென்றான்.
அவன் தட்டை தட்டிவிட்டது, கதவை அடித்துச் சாத்திய விதம் ஜியாவிற்கு இதயத்தில் பலமாக அடித்தது போல இருந்தது.
“இதுக்குத் தான் ஆஷிக் என்னை நீ கல்யாணம் பண்ணிக்காதனு சொன்னேன், நீ தான் கேக்கல. உண்மைய சொல்ல சொல்ற நீ, அதைத் தாங்கிக்குவியானு எனக்குத் தெரியலையேடா?” என்று வாய்விட்டு கதறினாள்.
அந்த நேரம் பார்த்து சமீரிடம் இருந்து அழைப்பு வர கண்ணீரைத் துடைத்தவாறு அட்டென்ட் செய்தவள், அவனுக்கும் சங்கடம் கொடுக்க விரும்பாமல், முடிந்த அளவுக்கு இயல்பாகப் பேச, அவளது கரகரத்த குரலிலும் விட்டு விட்டு வந்த வார்த்தையிலுமே அவள் அழுதிருப்பதைப் புரிந்து கொண்டவன், என்னவென்று விடாமல் கேட்டுக்கொண்டே இருக்க, இதற்கு மேல் வலியை அடக்கிக்கொள்ள முடியாதவள் ஏங்கி ஏங்கி அழுதவாறு,
"ஆஷிக்கிட்ட உண்மைய சொல்லாம ரொம்பக் கஷ்டமா இருக்கு."
"இன்னும் எத்தனை நாள் ஜியா அதையே பேசுவ? மறந்துட்டு புதுசா வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ணு."
"என்னால ஆஷிக் கூட ஒரு மனைவியா வாழ முடியாது சமீர்."
"பழசு எல்லாத்தையும் மறந்துட்டு, நீ ஆஷிக் கூட வாழ்ந்து தான் ஆகணும் ஜியா."
"ஏன், என் நிலைமையில இருந்து யோசிக்க மாட்டிக்கிற சமீர்?"
"கொஞ்சம் மத்தவங்கள நினைச்சு பாரு, உண்மை தெரிஞ்சா உடைஞ்சு போயிருவாங்க. மனசை மாத்திக்கோ ஜியா."
"யாரும் என் நிலைமையில இருந்து யோசிக்கவே மாட்டிக்கிறீங்க." என்று மீண்டும் அவள் ஏங்கி ஏங்கி அழ, அவளை எப்படிச் சமாதானம் செய்வதென்று புரியாமல் சமீர்,
"ஜியா ஏன் அழுதுட்டு இருக்க? ஆஷிக் எங்க இருக்கான், அவன்கிட்ட போன குடு.” என்று கேட்க, அவளிடம் இருந்து கண்ணீர் மட்டுமே பதிலாய் வர,
"நான் கிளம்பி வரேன்.” என்று தன் அழைப்புக்கு விடை கொடுத்தவன், சில மணி நேரத்தில் ஜியாவின் இல்லம் அடைந்தான்.
டைனிங் டேபிளில் தலை சாய்த்தவாறு அழுது கொண்டிருந்த ஜியாவின் அருகில் சென்றவன், கேள்வி எதுவும் கேட்காமல் ஒரு க்ளாசில் தண்ணீரை எடுத்து அருந்துமாறு கொடுக்க, முதலில் மறுத்தவள் பிறகு வாங்கிக்கொண்டாள்.
அவளாக எதுவும் சொல்லும் வரை தான் எதுவும் கேட்க வேண்டாம் என்று சமீர் முடிவு செய்திருக்க, தண்ணீர் அருந்திய பிறகு கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தவள், ஜீவாவின் அழைப்பு தொடங்கி அனைத்தையும் ஒருவித தயக்கத்தோடு கூறியவாறு மீண்டும் ஏங்கி ஏங்கி அழ,
மிகவும் கொந்தளித்தவன், "அந்த ஜீவாவ நான் சும்மா விடப் போறதில்ல, அவன் என்ன தான் நினைச்சுட்டு இருக்கான்? அவன் மேல கம்ப்ளெயிண்ட் குடுக்க ரொம்ப நேரம் ஆகாது. கோபத்துல அவன் எதாவது செஞ்சி அது உன் வாழ்க்கைய கேள்வி குறியாக்கிருமேன்னு தான் பொறுமையா இருக்கேன். ஆனா அவன் என் பொறுமைய ரொம்பச் சோதிக்கிறான்.
சரி ஜீவா தான் இப்படி இருக்கான்னா, அந்த ஆஷிக்குக்கு என்னாச்சு? அவன் ஏன் உன்னைக் கஷ்டப்படுத்துறான்? உன்னை அது இதுன்னு கேட்டு கஷ்ட்டப்படுத்தாம, சந்தோஷமா பார்த்துக்கோன்னு சொல்லியும் உன்னை அழவைக்கிறான்...” என்று வெடித்தவன்,
"நீ அழாத ஜியா, நான் நினைச்சா அந்த சுஜித், ஜீவா, வருண் அவனுங்க மூணு பேரையும் ஜெயிலுக்கு அனுப்பிடலாம். ஆனா அதுக்கப்புறம் உன்னோட நிலைமை அது ஒன்னு தான் என்னைத் தடுக்குது. அவங்க மேல உள்ள பயம் எல்லாம் எனக்கு எப்பவோ போயிட்டு. அவங்க என்னை ஏதாவது பண்ணிருவாங்களோன்னு எனக்குச் சுத்தமா பயம் இல்லை.
என் பயம் உனக்கு எதுவும் ஆகிற கூடாது. ஏற்கனவே அவங்களால உன் வாழ்க்கையில ஏகப்பட்ட பிரச்சனை. இப்போ தான் உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சுருக்கு, அது கெட்டு போறதில எனக்குச் சுத்தமா விருப்பம் இல்லை. ஜீவா மிரட்டுறது கூட சுஜித் சொல்லிதான் இருக்கும். எல்லாத்துக்கும் சுஜித்தான் மெயின் ரீசன். அவனுங்க எல்லாரும் சுஜித் சொல்றத கேட்டுட்டு, ஆடிட்டு இருக்காங்க.” என்று பொரிந்து தள்ள,
"எல்லாம் என் தலையெழுத்து...” என்று ஜியா வேதனை அடைய,
அவளுக்கு ஆறுதல் அளித்தவன் மேலும் தொடர்ந்து, “இவனுங்க இப்படிப் பண்றது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆஷிக் ஏன் புரிஞ்சிக்காம உன்னைக் கஷ்டப்படுத்துறான்? எனக்கு அவன் மேல கோபமா வருது.” என்று பல்லைக் கடித்தான்.
"இல்லை சமீர், என் ஆஷிக் ரொம்ப நல்லவன். அவனை மாதிரி ஒருத்தன இந்த உலகத்துல நாம பார்க்கவே முடியாது. தப்பெல்லாம் என்னுடையது. வாழ தகுதி இல்லாத எனக்கு எதுக்குக் கல்யாணம் சமீர்...” என்று ஆரம்பித்தவள் இறுதியில், வழக்கம் போலத் தன் மரணமே ஒரே தீர்வு என்று பிதற்ற,
அவள் மீது திரண்டெழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டவன், பல மணிநேர முயற்சிக்கு பிறகு அவளை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தான்.
ஜியா கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பிருக்க, ஆஷிக்கின் நிலைமையோ படுமோசம். ஜியாவை கஷ்டப்படுத்திவிட்டு அவன் மட்டும் எப்படி இருப்பான்? வருத்தத்துடன் எங்கையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
ஏர்போர்ட்டில் அனைவரும் அவனுக்கு வாழ்த்துகளைக் கூறிவிட்டு ஜியாவை பற்றிக் கேட்க, அனைவருக்கும் பதில் அளித்தவன், ஏர்போர்ட்டின் காஃபி ஷாப்பில் யாரும் இல்லாத இடமாகப் பார்த்து தனியாக அமர்ந்தவாறு, ஒவ்வொன்றாகச் சிந்திக்கத் தொடங்கினான்.
பலவாறு யோசித்த பிறகு, ‘ஜியா ஏன் என்னை ஒரு மூணாவது மனுஷன் மாதிரி ட்ரீட் பண்றா?’ என்று மனம் அதே இடத்தில் வந்து நிற்க, அவனது கோபம் இன்னும் அதிகம் தான் ஆனது. தன் மனைவியின் விலகலை எந்தக் கணவனால் தான் தாங்கிக்கொள்ள முடியும்? ஆஷிக்கும் விதிவிலகில்லையே? அவளது மனதில் உள்ளதை அறிய முடியாமல் தவித்தான். ஜியாவுக்குத் தன் மீது காதல் இருக்கிறதா என்கின்ற அளவுக்குக் கோபத்தில் தன் சிந்தனைகளைத் தாறுமாறாகப் படரவிட்டான். தலையும் மனமும் கனத்தது. நெற்றியை நீவியபடி அமர்ந்திருக்க,
"ஹாய் புது மாப்பிள்ளை!” என்று தோளை உலுக்கியவாறு அவனுக்கு எதிரே வந்து அமர்ந்த ரோஹித், ஆஷிக்கின் தகத் தகவென அனல் அடிக்கும் சிவந்த விழிகளைப் பார்த்த மாத்திரமே, நண்பன் கோபத்தில் அமர்ந்திருப்பதைப் புரிந்து கொண்டான்.
"என்னடா ஒருமாதிரியா இருக்க? ஜியாகூடச் சண்டை போட்டுட்டியா என்ன?” என்று கேட்க, கனன்று வந்த கோபத்தை நெற்றியில் தேக்கியவன், புருவத்தை நிமிர்த்தியபடி ரோஹித்தின் விழியை நேருக்கு நேராக நோக்கி,
"கல்யாணம் ஆகி ரெண்டு வாரம் ஆனதுக்கு அப்புறம், நீ உன் மனைவிகிட்ட ஆசையா நெருங்கி வரும் போது, அவ எதோ ஒரு பொறுக்கிக்கிட்ட இருந்து தப்பிச்சு போற மாதிரி, உன்கிட்ட இருந்து விலகி ஓடி போய் எதோ ஒரு மூணாவது மனுஷனை பார்க்கிற மாதிரி பார்த்தா நீ என்ன பண்ணுவ?” என்று விழிகளை விரித்துக் கேட்க,
"டேய் இதுக்கா டென்சனா இருக்க? பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி நேரத்துல இயல்பாவே வர்ற பயம்டா."
"அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும்...” என்று கடுப்பான ஆஷிக் மேலும் தொடர்ந்து,
"அதை என்கிட்ட சொன்னா நான் புரிஞ்சிக்க மாட்டேனா என்ன? எதோ அரக்கன்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடுற மாதிரி ஓடுறா. என்னன்னு கேட்டா அரண்டு போய்ப் பாக்குறா. கஷ்டமா இருக்குடா...” என்று ஆத்திரமாய் ஆரம்பித்த அவனது வாதம் இறுதியில் கலக்கத்தில் முடிய, அவனிடம் கேள்வி கேட்டு மேலும் கடுப்படிக்க விரும்பாத ரோஹித், நண்பனின் கரத்தை ஆறுதலாய் பற்றிக் கொண்டு,
"கஷ்டமா தான் இருக்கும் மச்சான். உன் இடத்துல நான், ஏன் யாரா இருந்தாலும் உன்னை விட அதிகமா ரியாக்ட் பண்ணுவாங்க. ஆனா ஜியாவோட நிலைமையையும் நீ கொஞ்சம் யோசிச்சு பாரு. டாக்டர் என்ன சொன்னாங்க, ஜியாவோட மனசை காயப்படுத்துற மாதிரி எந்தச் சம்பவமும் நடக்கக் கூடாது. அவளைக் கவனமா பார்த்துக்கோங்க, உங்க அன்பால மட்டும் தான் அவளைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வர முடியும். மறுபடியும் ப்பேனிக் (panic) அட்டாக் வந்தா அது அவளோட உயிருக்கே கூட ஆபத்தாகும்னு சொன்னாங்களா இல்லையா?” என்று அவன் கூறிய பிறகு, தன் மடத்தனத்தை எண்ணி விழிகளை இறுக்க மூடி திறந்தான்.
"ரொம்பக் கோபப்பட்டுட்டேன்டா, என்னடா பண்றது? பொறுமையை ரொம்பச் சோதிக்கிறா...” என்றவனிடம்,
"அவளுக்கு உன்னை விட்டா யாருடா இருக்காங்க? நீ தான்டா விட்டு கொடுத்து போகணும். நீ உடனே கிளம்பி போ, அவளைச் சமாதானப் படுத்தி எங்கையாவது வெளியில கூட்டிட்டு போ.” என்று ஆஷிக்கிற்கு ரோஹித் ஒரு நல்ல நண்பனாய் விஷயத்தை எடுத்து கூறி புரியவைத்தான்.
அலைபேசியில் இருக்கும் ஜியாவின் புகைப்படத்தைப் பார்த்து, "ரொம்பக் கோபப்பட்டுட்டேன்ல, சாரிடா!” என்றவாறு அதற்கு முத்தமிட்டவன்,
‘உன்னை எப்படிடி சமாதானம் படுத்த போறேன்? நீ அழ ஆரம்பிச்சா நிறுத்த மாட்டியே?’ என்று சிந்தித்தவன், ‘இப்போவே ஃபோன் பண்ணி சாரி கேட்கலாம், இல்லை இல்லை... சர்ப்ரைஸா வீட்டுக்கு போவோம்.’ என்று யோசிக்க அவனது மூளை, “உன் சர்ப்ரைஸ் நேத்து மண்ணைக் கவ்வுனது போதாதா? இன்னும் உனக்கு ஏன் இதெல்லாம்..." என்று எச்சரிக்க, நேரடியாக அலைபேசியில் அழைத்துவிடலாம் என்று முடிவெடுத்தவன், அவளுக்கு அழைப்பு விடுக்க அது கடைசி ரிங் வரை சென்று கட்டாகியது.
‘ஆக, சமாதானம் பண்றது ரொம்பக் கஷ்டமா இருக்கும் போலயே?’ என்று எண்ணியவாறே தன் இல்லம் வந்தடைந்தவன்,
தனது வீட்டின் வாசலில் இருக்கும் காரை பார்த்து, 'எங்கோ பார்த்தது போல இருக்கே, யாரு வந்திருப்பாங்க?' என்றவாறு வீட்டிற்குள் நுழையவும், அதுவரை மெளனமாகச் சமீர் கூறியதற்குத் தன் தலையை மட்டும் ஒப்புதலாய் ஆட்டிக்கொண்டிருந்தவள்,
அவனை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல், தன் சோகத்தை மறைத்து அவனிடம் மிகவும் இயல்பாகச் சிரித்துப் பேச, வாசலிலே நின்று கொண்டிருந்த ஆஷிக்கின் மனதிற்குள் மீண்டும் இருள் சூழ்ந்து கொண்டது.
‘நான் பேசுனாலே விலகி விலகி போற ஜியா. சமீர்கிட்ட மட்டும் இவ்வளவு இயல்பா பேசிட்டு இருக்கா? என்கிட்ட அழுதா, ஆனா சமீர்கிட்ட சிரிச்சுட்டு இருக்கா. அப்போ என்னோட கோபம் அவளைக் கொஞ்சம் கூடப் பாதிக்கலையா?’ என்று கடி நுண் பகழி போல அவனுக்குள் எழுந்த கேள்விகள் அவனது மனதை குத்தி கிழித்தது.
சிலையென அவன் அங்கே அசையாமல் நிற்க, சில நிமிடங்கள் கழித்து வாசல் அருகே பார்த்த ஜியாவின் கண்கள், ஆஷிக்கைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் மலர, “ஆஷிக்!” என்று அவள் அழைத்ததில் தன் நிலைக்கு வந்தவன், சமீரை பார்த்துக் கட்டாயப் புன்னகை சிந்தி அவர்களோடு அமர்ந்து இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தான்.
ஒவ்வொரு உரையாடலிலும் ஜியா, சமீருடன் மிக இயல்பாகவும் மிக மகிழ்வோடும் உரையாடுவது ஆஷிக்கிற்கு ஆச்சரியமாக இருந்தது.
தன்னுடன் அவள் இப்படிச் சிரித்துப் பேசிய தருணங்களை, அதுவும் முக்கியமாகத் திருமணத்திற்குப் பிறகு நடந்த தருணங்களை எண்ணி பார்த்தவனுக்கு, அவள் தன்னுடன் சிரித்து இயல்பாகப் பேசிய தருணங்களை விட, தன்னை விட்டு விலகி சென்ற தருணங்களே அதிகமாக இருக்க, அவனது கோபம் இன்னும் அதிகமானது. உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தவன் வெளியில் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.
பல மணிநேர உரையாடலுக்குப் பிறகு சமீர், அங்கிருந்து கிளம்பும் நேரம் ஆஷிக்கைத் தனியாக அழைத்து, "அன்னைக்கு ஜியாகிட்ட நான் எப்படி நடந்துக்கணும்னு சொன்னீங்க, ஆனா இன்னைக்கு நீங்க எப்படி நடந்துக்கிட்டிங்க ஆஷிக்?" என்று, இயல்பாகத் தனது அக்மார்க் கன்னக்குழி புன்னகையோடு வார்த்தையில் மட்டும் அழுத்தம் கொடுத்து கேட்க, ஆஷிக்கிற்குச் சுளீரென்று இருந்தது.
அவன் பதில் கூறுவதற்குள் மேலும் தொடர்ந்த சமீர், "உங்களோட பர்சனல்ல தலையிடுறேன்னு நினைக்காதீங்க. ஜியா அழும் பொழுது ஒரு நண்பனா எனக்குக் கஷ்டமா இருக்கு. ஜியாவ பார்த்துக்கோங்க.” என்று கிட்டத்தட்ட கண்டிப்புடன் கூடிய அறிவுரையோடு அங்கிருந்து சென்றான்.
‘என் மனைவிகிட்ட நான் எப்படி நடந்துக்கணும்னு எனக்கு அட்வைஸ் பண்ணிட்டுப் போறான். டேய் அவ என் பொண்டாட்டிடா... அவகிட்ட எப்படி நடந்துக்கணும்னு சொல்றதுக்கு நீ யாருடா?’ என்று சமீரின் சட்டை காலரை பற்றிக் கொண்டு கேட்க வேண்டும் என்று அவனது நாவு போட்டியிட்ட அடுத்த நொடி,
அவனது மூளை, ‘அவன் ஜியாவோட ஃப்ரண்ட், அக்கறையில பேசிட்டுப் போறான். ஆனா ஜியா ஏன் அவன்கிட்ட எங்க ரெண்டு பேருக்குள்ள நடந்த ப்ரைவஸிய ஷேர் பண்ணினா? அவளை ஆறுதல் படுத்த நான் இல்லையா? நான் உரிமையா பக்கத்துல வர கூடாது, உரிமையா என்னன்னு கேட்க கூடாது. இப்போ கோபம் கூடப் படக் கூடாதா? திட்டினாலும் நான் தானே திட்டினேன், நானே சமாதானம் படுத்துற வரைக்கும் காத்துகிட்டு இருக்க மாட்டாளா? சமீர்கிட்ட சொல்லி அழுதிருக்கா.
அவன்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்றா. ஆனா என்கிட்ட மட்டும் மனசை விட்டு பேச அவளால முடியலை.’ என்று காட்டுத்தீயை போல வேகமாக நொடிப்பொழுதில் கேள்விகள் அவனது மனதில் பரவ, அவனுக்குள் அடக்க முடியாத கோபம் பொங்கி எழுந்தது.
அதே கோபத்தோடு வீட்டிற்குள் நுழையவும், " எனக்குத் தெரியும் ஆஷிக், நீ வருவன்னு...” என்றவாறு ஆஷிக் தோள்மீது சாய்ந்து கொண்ட ஜியாவை விருட்டென்று விலக்கிவிட்டவன், அவனது செய்கையை அவள் கிரகிப்பதற்குள்,
"உனக்கு நான் ஒரு பொருட்டே இல்லல?” என்று சுள்ளென்று கேட்ட கேள்வியில் பதறியவள், “ஏன் அப்படிச் சொல்ற? நீ எனக்கு ரொம்ப முக்கியம்."
"நடிக்காத... உனக்காக நான் ஓடி ஓடி வந்தா, நீ எதுவுமே நடக்காத மாதிரி சமீர் கூடச் சிரிச்சு பேசிட்டு இருக்க. சமீர்கிட்ட ஃபோன் பண்ணி பேசுனல, ஒரு தடவ என்கிட்ட பேச உனக்குத் தோனுச்சா சொல்லு...” என்று அவளது மென் கரத்தை பற்றி உலுக்கியவன், “என்கிட்ட எப்படித் தோனும், நான் தான் உனக்கு வேண்டாதவனே?" மீண்டும் எய்தான் அம்பு போன்ற கூர்மையான வார்த்தைகளை.
"நீ எப்படிடா எனக்கு வேண்டாதவனா இருப்ப?"
"இல்லை, எனக்கு அப்படித் தான் தோனுது. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில நடந்த விஷயத்தை சமீர்கிட்ட சொல்லி அழுதுருக்க. நான் என்ன உன்னைக் கொடுமையா படுத்துறேன். அவன் என்னைக் கேள்வி கேட்டுட்டுப் போறான். அவன் அப்படிப் பேசுறான்னா நீ என்னைப் பத்தி தப்பா எதோ சொல்லிருக்க."
"நீ தப்பா புரிஞ்சிருக்க ஆஷிக்..."
"இப்போ தான் சரியா புரிஞ்சிருக்கேன்."
"அப்படி இல்ல..."
"அப்படித் தான்... இத்தனை நாள்ல ஒரு நாள் என்கிட்ட இயல்பா இருந்திருக்கியா? உன்கிட்ட ஒரு ஹஸ்பண்டா இருக்கிறத விட முதல்ல நல்ல நண்பனா இருக்கணும்னு, எவ்வளவோ முயற்சி பண்ணிட்டு இருக்கேன். ஆனா நீ என்னை மனுஷனா கூட மதிக்கலை. இதுவரைக்கும் உன்கிட்ட நான் எந்த ஒரு ஒளிவுமறைவும் இல்லாம தான் இருக்கேன். ஆனா நீ அப்படி இல்லை ஜியா. ஆனாலும் நீயா என்கிட்ட பிரச்சனைய சொல்லுவன்னு காத்துகிட்டு இருக்கேன். ஆனா கடைசி வரைக்கும் நான் காத்துகிட்டு தான் இருக்கனும்னு நினைக்கிறன்."
"ஆஷிக் நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட..."
"கண்ணு முன்னாடி நடக்குது ஜியா, என்னால எல்லாத்தையும் பார்க்க முடியுது. சமீர்கிட்ட இருக்கிற மாதிரி நீ என்கிட்ட இயல்பா இருக்க மாட்டிக்கிற. அவன்கிட்ட சிரிச்சு பேசுற, அவன் கூட அவ்வளவு மனநிம்மதியோட இருக்க. ஆனா என்கிட்ட ஒருவித பயத்தோடு தான் இருக்க. உனக்கு நிஜமாவே என் மேல லவ் இருக்கான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு ஜியா. உள்ள வலிக்குது. நீ என்னை வேல்யூவே பண்ணலன்னு நினைக்கும் போது கஷ்டமா இருக்கு.
உன்னைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணி நான் தோத்து தான் போறேன். என்னை ஏன் நம்ப மாட்டிக்கிற? நீ என்னை விடச் சமீர்கூட கம்ஃபர்ட்டபுளா பழகுறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? நீ என்னோட மனைவி, ஆனா உன்னை எப்படிச் சிரிக்க வைக்கணும், உன்னை எப்படி ஆறுதல் படுத்தணும்னு என்னை விடச் சமீருக்கு தான் அதிகமா தெரிஞ்சிருக்கு.
ஏன், இப்போ வரை உன் பிரச்சனைய நீயா என்கிட்ட மனசை விட்டு இன்னும் சொல்லவே இல்லை. சமீர் சொல்லி தானே எனக்குத் தெரியும். ஐயோ இதெல்லாம் நினைக்கும் பொழுதே மூளை எல்லாம் சிதறி போற மாதிரி இருக்கு. சான்ஸ் குடுடி, என்னாலையும் உனக்கு நல்ல நண்பனா இருக்க முடியும். நீ என் ஜியா, உன்னைப் பத்தி நான் தான் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும். ஆனா நான் உன் லைஃப்ல ஒரு ஜடம் மாதிரி தான் இருக்கேன்." என்றவன் விழிகள் கலங்கியபடி விரக்தியோடு ஜியா தடுக்கத் தடுக்க, அவளது கரத்தை தட்டி விட்டவாறு அவள் கூற வரும் எதையும் தன் காதில் வாங்கிக்கொள்ளாது அங்கிருந்து சென்றான். அவனது கலக்கம் இவளையும் கலங்கடித்தது.
"உன்னை எப்படிடா எனக்குப் புடிக்காம போகும்? வாழ்ந்துட்டு இருக்கிறதே உனக்காகத் தானே! உன் கூட இருக்கும் பொழுது கிடைக்கிற சந்தோஷம் வேற யார் கூடயும் எனக்கு என்னைக்கும் கிடைக்காது. எனக்கும் என் பிரச்சனை எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லி உன் மடியில நிம்மதியா தலை சாய்ச்சிக்கணும்னு தான் ஆசை. உண்மைய சொன்னா வலி மட்டும் தான் மிஞ்சும். நீ தாங்கிக்க மாட்ட. ஒருவேளை நான் சொல்லி நீ என்னை வெறுத்துட்டா நான் என்னடா பண்றது.
தினம் தினம் செத்துட்டு இருக்கேன். எவ்வளவோ பார்த்துட்டேன், உன் வெறுப்பை மட்டும் என்னால தாங்கிக்க முடியலை." என்று உடைந்து போய் தரையில் வீழ்ந்து அழுதாள்.
ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு சோதனை. எவ்வளவு கனவோடு லண்டல எம்எஸ் முடிச்சேன். சித்தி சொன்ன மாதிரி லண்டன்லயே இருந்திருக்கலாம்.
என் நாட்டுக்கு சேவை செய்யணும்னு தானே பெங்களூர் வந்தேன். ஏன் அதுவே எனக்கு நரகமா மாறுச்சு? என்று ஏங்கியவளை அவளது கடந்த கால நினைவுகள் பேய் அலையைப் போலத் தாக்க, தன்னை அடித்த அந்தப் பேய் அலையோடு அவளும் அடித்துச் செல்லப்பட்டாள்.
***
அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்
நிலவே 57 & 58

Last edited: