Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நிலவே 6, 7 & 8

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89

நிலவே 6

பப்பில் டிஜேவின் இசைக்கேற்ப இளம் பெண்கள், ஆண்கள் என்று இருபாலரும் தங்கள் நண்பர்களுடன் இணைந்து ஆடிக் கொண்டிருக்க, ஆஷிக்கும் தனது பெண் தோழியுடன் ஆடிக் கொண்டிருந்தான்.

ஆதர்ஷ் தனியே ஒரு நாற்காலியில் அமர்ந்து ஒரு கிளாசில் மதுபானத்தை மெல்ல மெல்ல அருந்தியாவாறே தன் மொபைலில் மூழ்கி இருந்தான். அப்பொழுது அவனருகே வந்து அமர்ந்த ஒரு பெண் தன்னை அவனுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டு அவனிடம் பேசிக் கொண்டிருக்க, அவனும் அவளுடன் பேசிக் கொண்டிருந்தான்.

அப்பொழுது ஆஷிக்கின் அலைபேசி ஒலிக்க, அதில் காவ்யா என்ற பெயர் வர ஆஷிக் பிசியாக ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்தவன் தனக்குள்,

"ஃபோனை ஏன்டா என்கிட்ட தர, இத்தோட சுமார் பத்து தடவை இந்தக் காவ்யா கால் பண்ணிட்டா. உன்னை என் நண்பனா வச்சுட்டு நான் என்னவெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு?” என்று புலம்பியவன் சிறு எரிச்சலுடன் ஃபோனை கட் செய்ய, எதிரே இருந்த பெண் அவனைக் கவனிப்பதை உணர்ந்தவன்,

தன் முகபாவனையை மாற்றிக்கொண்டு வராத புன்னகையை, வற்புறுத்தி வரவைத்து அவளைப் பார்த்து சிரிக்க, பதிலுக்குச் சிரித்தவள், “ஷால் வீ டான்ஸ்?” என்று கேட்டாள்.


"கண்டிப்பா, லெட்ஸ் கோ.” என்றவன் தனது நாற்காலியில் இருந்து எழும்பிய மறுநொடி, தனது ஃபோன் ஒலிக்க மிகவும் எரிச்சல் அடைந்தவன், அந்தப் பெண்ணிடம் வேலை இருப்பதாகக் கூறி விடைபெற்றுக் கொண்டு நேராகச் சென்று ஆஷிக்கை அழைக்க,

இசையின் மழையில் நனைந்து கொண்டிருந்த ஆஷிகோ, "என்னடா?” என்று ஆடியவாறே கேட்க,

எரிச்சல் அடைந்த ஆதர்ஷ், "பார்க்கிங் ஏரியாவுக்கு உடனே வா.” என்று முறைத்தான்.

"சொல்லுடா, நான் பிஸியா இருக்கேன்.” என்று புன்னகையாய் கூற,

"அடீங்க... இப்போ வர போறியா, இல்லையா?” என்று கண்டிப்பாய் கூறியவனிற்கு மறுப்பு கூற முடியாமல் ஆஷிக்,

"போடா வரேன்.” என்று வேண்டா வெறுப்பாய் கூறியவன், தன் தோழிகளிடம், "கேர்ள்ஸ் ஐ வில் பீ பேக்.” என்று கூறிவிட்டு, வெளியே சென்று ஆதர்ஷின் தோளில் தட்டியவாறு அவனது கையில் இருந்த ட்ரிங்க்ஸ் கிளாஸை வாங்கி காரின் மீது ஏறி அமர்ந்துகொண்டு,

"என்னடா, சொல்லு."

"டேய் உன் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் ஏன்டா என் நம்பரை குடுக்குற?"

"உனக்கு யூஸ் ஆகுமேனுதான் குடுத்தேன், ஏன் என்னாச்சு?"

"ம்ம் மண்ணாச்சு... டேய் இந்தக் காவ்யா ஃபோன் பண்ணிட்டே இருக்காடா, அவ தொல்லை தாங்க முடியல. அவகிட்ட பேசி தொலைடா."

"ஐயோ ப்ளீஸ்டா! ஷாப்பிங் போறதுக்காகக் கூப்பிடுவா, நாளைக்குத் தியா மூவிக்குக் கூட்டிட்டு போனு சொல்லிருக்கா. அவகிட்ட என்ன சொல்லி தப்பிக்குறதுனு நானே முழிச்சுட்டு இருக்கேன், இதுல இவ வேறையா? முடியாதுடா என்னால... நீயே எதாவது சொல்லி சமாளிடா."

"எதாவது..."

"ம்ம்... என்னத்தையோ சொல்லி சமாளி.” என்று ஆஷிக் கூற,

ஆதர்ஷ் தன் மனதிற்குள், ‘இப்போ நான் பண்ண போற காரியத்துல இனிமே நீ எந்தப் பொண்ணுக்கும் என் நம்பரை குடுக்க மாட்டடா என் நண்பா.’ என்றவன்,

அந்தப் பெண்ணின் ஃபோன் காலை அட்டெண்ட் செய்து, "ஹாய் காவ்யா, எப்படி இருக்க?”

“எஸ் ஐயம் குட்!”

“ஆஷிக் உன்னை பத்திதான் பேசிட்டு இருப்பான், நீ எப்ப கால் பண்ணுவனு ஏங்கிட்டு இருப்பான். அவன் ஃபோன்ல சிக்னல் இல்லாம இருந்திருக்கும், அதான் அட்டென்ட் பண்ணிருக்க மாட்டான்.

அவன் என் கூடத் தான் இருக்கான், அவன்கிட்ட பேசணுமா? அவன் இவ்வளவு நேரம் என்கூடத் தான் பேசிட்டு இருந்தான், நீ கால் பண்றதுக்குக் கொஞ்ச நேரம் முன்னாடிதான் அவன் ஃப்ரெண்ட் ரீனா வந்தா.

ஆமா ரீனாதான், ரெண்டு பேரும் இதோ பத்து நிமிஷத்துல வந்திருவோம், எதோ முக்கியமா பேசணும்னு சொல்லிட்டு ரூம்குள்ள போனாங்க. ஆனா ரூம்குள்ள போய் அரை மணிநேரம் ஆச்சு...” என்றதும் ஆஷிக் அவனிடம் இருந்து ஃபோனை வாங்க முற்பட, அவனைத் தடுத்த ஆதர்ஷ் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு காவ்யாவிடம், "ரொம்ப நேரமா கதவை தட்டிட்டு இருக்கேன்...” என்று தன் காரின் கதவைத் தட்டியவன்,

"ஆனா ரெண்டும் பேரும் திறக்க மாட்டிக்காங்க, அப்படி என்னதான் ரெண்டு பேரும் உள்ள பண்ணுவாங்கனு தெரில. பேசணும்னு சொன்னாங்க, ஆனா பேச்சு சத்தமே கேட்கல. வேற ஏதும் பண்ணுவாங்கனு நினைக்கிறேன். ஏன் காவ்யா அவங்க உள்ள அப்படி என்னதான் பண்ணுவாங்க?” என்று அந்தப் பெண்ணையே கேட்க,

சட்டென்று ஆதர்ஷின் கையில் இருந்து ஃபோனை வாங்கிய ஆஷிக், "காவ்யா, ஆதர்ஷ் விளையாடுறான்.” என்று கூற, அவளிடம் இருந்து எந்தவித பதிலும் வராமல் போக, அப்பொழுதுதான் அவள் ஃபோனை கட் செய்திருந்தது தெரிய,

ஆஷிக், ஆதர்ஷிடம், "என்னடா ஃபோனை வச்சுட்டா? அறிவிருக்காடா? ஏன்டா இப்படிப் பண்ணின? அவ என்னை என்ன நினைச்சுருப்பா?"

"நான் என்ன சொல்ல வரேன்னு முழுசா கேட்காம வச்சுட்டா, அவ முழுசா கேட்ருக்கணும்டா. ஆஷிக் ரூம்ல இருக்கான், ரீனா வாஷ்ரூம்ல இருக்கானு சொல்ல வர்றதுக்குள்ள ச்ச... இப்படி கட் பண்ணிட்டு போய்ட்டாளே?” என்று ஆஷிக்கைப் பார்க்க,

ஆஷிக் சிரித்தவாறே, "யு ஆர் டிஸ்கஸ்டிங்!” என்று அடிக்க,

அவனைத் தடுத்தவாறே ஆதர்ஷ், "எஸ், ஐ க்னோ.” (yes, i know) என்று கூறி, ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரித்தனர்.

"இனிமே என் நம்பரை குடுப்ப?"

"சத்தியமா மாட்டேன்டா, சரியான சகுனிடா நீ." என்றவாறு ஆதர்ஷின் கழுத்தை விளையாட்டாக ஆஷிக் நெறிக்க, இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஆஷிக்கையே உற்று பார்த்துக் கொண்டிருந்த ஆதர்ஷ் சிறு புன்னகையுடன், "டேய் ஆஷிக்!” என்று அழைக்க, மொபைலில் கேம் விளையாடி கொண்டிருந்தவன், ஆதர்ஷின் பக்கம் திரும்பாமலே,

"சொல்லுடா.” என்று கூறிவிட்டு கேமிலே கவனமாய் இருக்க,

"ரொம்பச் சந்தோஷமா இருக்கப் போல?” என்று ஆதர்ஷ் கேக்கவும்,

"ஓ...” என்று கத்தியவன், ரொம்ப நாளா இந்த லெவலை முடிக்க ட்ரை பண்ணிட்டு இருந்தேன், இப்போ முடிச்சுட்டேன்.” என்று கூற,

"அது இருக்கட்டும் முதல்ல எனக்குப் பதில் சொல்லு, ரொம்ப சந்தோஷமா இருக்கப் போல?"

"ஆமா, ரொம்ப நாள் கழிச்சு இந்த கேமை கம்ப்ளீட் பண்ணிருக்கேன்ல?"

"ஓ... உங்களுக்கு நான் எதைப் பத்தி பேசுறேன்னு தெரியாது?"

என்ற ஆதர்ஷின் பார்வையிலையே, அவன் எதைப் பற்றிப் பேச வருகிறான் என்பதைப் புரிந்துகொண்ட ஆஷிக், சில நொடிகளுக்குப் பிறகு தன் மௌனம் கலைத்து,

"நீ எதைப்பத்தி பேசவரனு எனக்கு நல்லாவே புரியுது மச்சான், நான் ஜியாவை மறக்க முடியாம கஷ்டப்படுறது உண்மைதான். எப்படிடா அவளை மறக்க முடியும்? காதலை எனக்குள்ள முதல் முதலா விதைச்சவடா அவ, என்னைக்கும் அவ இங்க இருப்பா.” என்று தன் இதயத்தைக் காட்டியவன்,

"மத்தவங்க மாதிரி நான் மூவ் ஆன் பண்ணிட்டேன், அப்படி இப்படினு நான் பொய் சொல்ல மாட்டேன். அவ இல்லாம எனக்கு ஒரு வாழ்க்கையே இல்லை என்று இருக்கிற போது, நான் எப்படிடா மூவ் ஆன் பண்ணுவேன்? இருந்தாலும் என்னைப் பத்தி முழுசா புரிஞ்சிக்காம என் ஃபேமிலிய சுட்டிக்காட்டி, என்னைத் தனியா விட்டுட்டு போனவடா அவ.

நினைச்சாலே கோபமா வருதுடா... எவ்ளோ வலிக்குது தெரியுமா? அவளுக்கு வலிக்கலையா? என்னைப் பத்தி ஞாபகமே வராதா? நான் மட்டும் தான்டா ஃபீல் பண்றேன், அவ நல்லாதான் இருக்கா. எல்லாம் அவ பண்ணிட்டு என் மேல தப்பு இருக்குற மாதிரி பேசுறாடா. அதான் தாங்கிக்க முடியல. இப்போ கூட எல்லாத்தையும் மறந்துட்டு அவளோட நான் வாழ தயாரா இருந்தாலும், அவ முடியாதுனுதான் சொல்லுவா, தப்பெல்லாம் என்னோடதுனு சொல்லுவா.

சரியான திமிர் புடிச்சவடா அவ, அவ எனக்கு வேண்டாம்." என்றவன் தன் கண்களின் ஓரம் கசிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, கையில் இருந்த கிளாசை காட்டி, "மச்சான் இந்த ட்ரிங்க்ஸ் மேல சத்தியம் பண்ணி சொல்றேன், அவ எனக்குச் சத்தியமா தேவையே இல்லை.” என்றவன், அந்த க்ளாசில் இருந்த மதுபானத்தை ஒரே நேரத்தில் தன் வாயில் ஊற்றி அந்த காலி கிளாசை தரையில் போட்டு உடைக்க,

ஆதர்ஷ் ஆஷிக்கிடம், "டேய், என்னடா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சத்தியம் எல்லாம் பண்ணின, இப்போ என்னன்னா அந்த க்ளாசையே உடைச்சுட்ட. அப்போ சத்தியத்தையும் உடைச்சுருவியா?” என்று கேட்டு புன்னகைக்க,

"சிரிடா... ஏன் சிரிக்க மாட்ட? எல்லாம் என் விதி!"

"அப்படி இல்லடா, உன் மனசுல இருக்கிற ஈகோவை தூக்கி போட்டுட்டு, அமைதியா திங்க் பண்ணுனு சொல்றேன்."

"ஈகோ... எனக்கு இருக்கா? அவளுக்கு இருக்காடா?"

"நீயா நானானு போட்டி போடாத, உனக்கு வேணும்னா நீ கொஞ்சம் இறங்கிப் போ தப்பில்லை." என்ற ஆதர்ஷிடம்,

"வண்டிய எடுக்குறியா? தூக்கம் வருது.” என்று கூறி, ஆஷிக் காரில் அமர,

ஆதர்ஷ் தனக்குள், ‘எனக்குத் தெரியும்டா, நீ ஜியாவை இன்னும் லவ் பண்றனு. உன் காதல் உண்மையானது, அதுவே உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கும்.’ என்றவன், ஆஷிக்குடன் அவனது இல்லம் சென்றான்.

***

நிலவே 7

காலை பொழுது இனிதாய் மலர, தன் கரங்களைக் கொண்டு சூரிய கதிரை மறைத்தவாறு எழும்பிய ஆஷிக், "டேய் ஆதர்ஷ், என் வீட்ல என்னடா பண்ற? ஓ... நைட்டு நல்லா ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு, போதையில என் வீட்டுக்கே வந்துட்டியா?"

"நான்... போதையில... போடா."

"என்னடா?"

"எரும மாடு, நல்லா பாரு இது என் வீடு. போதையில இருந்தது நீ, டைம் ஆச்சு சீக்கரம் கிளம்பி ரெடி ஆகு.” என்ற ஆதர்ஷ், தன் தலையைத் துவட்டியவாறு கண்ணாடியின் முன்பு நின்று கொண்டிருக்க,

புன்னகைத்தவாறு அவனது அருகில் வந்து அவனது தோளில் கை போட்டவாறே, “அப்படினா நேத்து நைட்டு நீ பாலிவுட் ஸ்டைல்ல என்னை உன் வீட்டுக்குக் கொண்டு வந்திருக்க."

"என்ன உளர்ற?"

"அதான்டா ஹீரோயின் தெரியாம ட்ரிங்க்ஸ் பண்ணிருவாங்க, அப்புறம் போதையில என்னலாமோ பேசுவாங்க. ஹீரோ வேற வழியே இல்லாம தான் வீட்டுக்கு கூட்டிட்டு வருவாரு. அப்புறம் அவங்களுக்குள்ள போடா... எனக்கு வெக்கமா இருக்கு. எதுவும் தெரியாத மாதிரி கேட்ப? ஸ்கூல் படிக்கும் போதே குரூப் ஸ்டடினு சொல்லிட்டு, நாம இதைப் பத்திதான் பேசுவோம்.” என்று கண்ணடித்தவன் மேலும் தொடர்ந்து,

"டேய் வெயிட்... நீ என்னை எதுவும் யூஸ் பண்ணிக்கலையே?” என்று கேட்க, தன் கையில் இருந்த டவலால் ஆதர்ஷ், ஆஷிக்கை அடிக்க,

ஆஷிக், “டேய் விடுடா.” என்று ஓட,

"இனிமே இப்படி பேசுவ?"

"மாட்டேன்... மாட்டேன்...” என்று கூற,

"போ, டைம் ஆச்சு. ரெண்டு பேருக்குமே இன்னைக்கு மார்னிங் ஃப்ளைட் இருக்கு.” என்று கூற,

"போலாம்டா.” என்றவன்,

ஆதர்ஷை தன் பக்கம் திருப்பி, “டேய் மச்சான், இப்போ எல்லாம் நீ நல்லா மெயின்டெயின் பண்ற போல, கட்டு கலையாம இருக்கியேடா?” என்றவன் அவனது இடுப்பில் கிள்ள,

ஆதர்ஷ் சிரித்தவாறே, "டேய் அப்படிப் பண்ணாதடா, கூச்சமா இருக்குடா ப்ளீஸ்...” என்று கூற, ஆஷிக் அவனைச் சீண்டி கொண்டே இருக்க, ஆதர்ஷ் அவனை நோக்கி,

"டேய் உனக்கு வேற வேலையே இல்லையா? யாரோட இடுப்பு கிடைச்சாலும் இப்படிக் கிள்ளுவியா?” என்று கேட்க,

அவ்வளவு நேரம் சிரித்துக்கொண்டிருந்த ஆஷிக் வாடிய முகத்துடன், “ஆமாடா, தப்புதான். இதுதான் எல்லாத்துக்கும் காரணம், மாத்திக்கிறேன்.” என்று கூறிவிட்டு பாத்ரூமிற்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டான்.

ஆதர்ஷ் கதவைத் தட்டியவாறு, "டேய் சாரிடா, நான் அதை நினைச்சு சொல்லலை.” என்று கூற, ஆஷிக், ஜியாவுடன் தனக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பை தனக்குள் நினைத்து பார்த்து,

"இவ்ளோ வலி நீ எனக்குக் குடுப்பனு தெரிஞ்சிருந்தா, நான் உன்னை பார்க்காமலே இருந்துருக்கலாம் ஜியா.” என்றவன், கோபத்தில் தன் முன்னே இருந்த கண்ணாடியை ஓங்கி தன் கரம் கொண்டு அடித்தான்.

தன் கோபம் தீர ஷவரில் தன்னை நனைத்தவன், பின்பு கதவை லேசாகத் திறந்து இருமுவது போல பாவலா செய்ய,

சத்தம் கேட்டு ஆதர்ஷ், "மச்சான் என்னடா?” என்று கேட்க,

ஆஷிக்கோ யாரிடமோ பேசுவது போல, "டவல்...” என்று மட்டும் கூற,

"வா, இங்கதான் இருக்கு வந்து எடுத்துக்கோ."

"கிறுக்காடா பிடிச்சுருக்கு? டவலை தாடா."

"அப்போ மன்னிச்சுட்டேன்னு சொல்லு."

"உன்னோட பெரிய தொல்லையா போச்சுடா."

"இப்போ என் சாரியை ஏத்துக்கப் போறியா, இல்ல நான் உள்ள வரட்டா?" என்ற ஆதர்ஷிடம்,

"டேய் வந்து கிந்து தொலைச்சுறாத, மன்னிச்சு தொலையிறேன்.” என்றவன் சிறிது நேரம் கழித்து டவலை கட்டிக்கொண்டு வெளியே வந்த ஆஷிக்கிடம்,

ஆதர்ஷ், "சாரி மச்சான்.” என்று மன்னிப்பு கேட்க,

ஆஷிக், "விடுடா, எனக்கு உன் மேல கோபம் எல்லாம் இல்லை. எனக்கு என் மேலயே கோபம். சொல்ல தெரியலைடா, அவளைப் பத்தி யாராவது நியாபகப்படுத்துனா எனக்குக் கோபம் வருது. அதே நேரம் அவளைப் பார்த்தால் என்னோட கோபத்தை வெளிகாட்ட முடியல. என் மனசுக்குள்ள சந்தோஷமா இருக்கு. சில நேரம் எனக்கு என் மேலயே கோபம் இருக்கு. ஒருவேளை என் குடும்பத்தைப் பத்தின உண்மையை ஏற்கனவே சொல்லிருந்தா, அவ என்னை விட்டுப் போயிருக்க மாட்டாளோ, தெரியலடா. ரொம்ப கன்ஃபியூஷனா இருக்கு."

"டேய் வாடா, வந்து உக்காரு." என்று ஆஷிக்கை பெட்டில் அமரவைத்த ஆதர்ஷ், அவனது கரத்தைப் பற்றிக்கொண்டு,

"எனக்குத் தெரியும்டா, நீ ஜியாவ எவ்வளவு உண்மையா லவ் பண்ணினனு. நீ எத்தனையோ பொண்ணுங்க கூடப் பழகிருக்க, ஆனா ஜியாவ லவ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து, நீ அவகிட்ட எவ்வளவு நேர்மையா இருந்தனு எனக்குத் தெரியும். நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சதுக்குக் காரணமே நீங்க ஒருத்தர ஒருத்தர் சரியா புரிஞ்சிக்காம போனதுதான். நீ எதுக்கும் வருத்தப்படாத, எல்லாம் சரியா நடக்கும்.” என்று ஆறுதல் கூற, பதிலுக்குத் தன் தலையை மட்டும் ஆட்டிய ஆஷிக்,

"டேய் மச்சான் ராத்திரி குடிச்சுட்டு நான் ஏதும் கலாட்டா பண்ணலைல?"

"அப்படி எதுவும் பெருசா பண்ணல, ஆனா கொஞ்சம் பண்ணின."

"அம்மா என்ன சொன்னாங்க?"

"நீ அதிகமா குடிச்சா என் வீட்டுக்கு வர்றதும், நான் மட்டையானா உன் வீட்டுக்கு வர்றதும் என்ன புதுசா?"

"ஏதும் திட்டுனாங்களா?”

“அவன் குடிச்சா நீ குடிக்கிறது இல்லை, நீ குடிச்சா அவன் குடிக்கிறது இல்லை. என்னைக்காவது ஒரு நாள் நீங்க ரெண்டு பேரும் குடிச்சு ட்ரங் அண்ட் ட்ரைவ்ல மாட்டி போலீஸ்காரங்ககிட்ட உதை வாங்கணும். அதை நானும் அவன் அம்மாவும் பார்த்து ரசிக்கணும். தோளுக்கு மேல வளர்ந்துட்டீங்க உங்கள எங்களால அடிக்க முடியல. அட்லீஸ்ட் அவங்களாவது அடிக்கட்டுமேனு சொன்னாங்க. அப்புறம் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க."

"என்னடா வில்லன் ரேஞ்சுக்கு சொல்லிருக்காங்க?"

"ஆல் மம்மிஸ் அப்படித்தான்டா."

"சரியா சொன்னடா."

"வேலைக்கு வர்றதா ஏதும் ஐடியா இருக்கா இல்ல, இப்படியே பேசிட்டு இருக்கப் போறியா? சீக்கிரமா கிளம்பு, நான் கீழ வெயிட் பண்றேன்.” என்று கூறிய ஆதர்ஷ் அங்கிருந்து செல்ல, சிறிது நேரம் கழித்து இருவரும் ஏர்போர்ட் வந்தடைந்தனர்.

இருவரும் இன்று தங்களுக்கான ஷெட்யூல் என்ன என்று பார்த்துக் கொண்டிருக்க,

ஆஷிக், “ச்ச... என்னப்பா இது?” என்று எரிச்சல் அடைய, அதை வாங்கிப் பார்த்த ஆதர்ஷ், "என்னடா?"

"பாருடா கூட வர்ற கோ பைலட்ல ஆரம்பிச்சு, டாக்டர்ஸ் எல்லாரும் ஆம்பளைங்க, அதுவும் வயசானவங்க. போரடிக்கும்டா... அதுவும் சென்னை வெயில் வேற அங்க அதிகமா இருக்கும். சரி, நீ ரொம்ப ஹாப்பியா இருக்க, உனக்கு எங்க?” என்று ஆதர்ஷின் கையில் இருந்த ஷெட்யூலை வாங்கிப் பார்த்தவன்,

"என்னடா, உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு போ. இன்னைக்குக் கோவா போற, அதுவும் கோ பைலட் நிஷா. கோவா வேற பயங்கரமான ஏரியா, ஒரே மஜாதான்னு சொல்லு. டேய், நீ எல்லாம் அங்க போய் என்னடா பண்ணுவ? நான் வரேன்டா.” என்று சொல்ல,

"என்னடா ஜியா கூட டைம் ஸ்பென்ட் பண்ணணுமா?” என்று ஆதர்ஷ் அவனை வம்பிழுக்க,

"என்ன உளர்ற?” என்று ஆஷிக் மழுப்பினான்.”

"ஓ... சாருக்கு ஜியா கோவா வர்றது தெரியாது, கீழ அவங்க பேரை நீங்க பார்க்கலை?"

"எனக்கு ஃப்ளைட்க்கு டைம் ஆச்சு, பாய்.” என்ற ஆஷிக் அங்கிருந்து ஓடாத குறையாகச் செல்ல, அதைக் கண்ட ஆதர்ஷ் சிரித்தவாறு தன் ஃப்ளைட்க்கு சென்றான்.

ஃப்ளைட்டில் ஆதர்ஷைக் கண்ட இரு கண்கள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க, ஆதர்ஷோ எதையும் காணாமல் ஜியா பையை வைக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அவளது அருகில் சென்று,

"என்கிட்ட குடு, நான் ஹெல்ப் பண்றேன்.” என்று கூறி, அவளது பையை வாங்கிப் பெட்டிகள் இருக்கும் இடத்தில் வைத்து, "சிம்பிள், முடிஞ்சிருச்சு.” என்று கூறிவிட்டு பொதுவாக அவளுடன் பேசிக்கொண்டிருக்க, நடாஷாவின் இரு கண்களோ அவனை ஏக்கமாகப் பார்த்தது.

இதைக் கவனித்த ஜியாவிற்கு நடாஷாவின் கண்களில் காதல் கலந்த ஏக்கம் புலப்பட, சின்னதாகப் புன்னகைத்தவள் எதுவும் கூறாமல் அவனிடம் விடை பெற்றுக்கொண்டு, தன் அறையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

ஃப்ளைட் ஸ்டார்ட் ஆகி ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்க, நடாஷாவின் அருகில் வந்த ஜியா அவளிடம் நட்பாகப் பேசிக்கொண்டிருக்க, திடீரென்று மணியைப் பார்த்த நடாஷா டீ போட ஆரம்பிக்க ஜியா, நடாஷாவிடம்,

"என்னாச்சு, மணியைப் பார்த்த உடனே டீ போடுற? யாருக்கு இவ்வளவு அவசரமா போடுற?"

"ஆதர்ஷ் சாருக்கு மேடம், சார் எப்பவும் ஃப்ளைட் டேக் அப் ஆனா அரைமணி நேரத்துல கிரீன் டீ கேப்பாரு."

"அப்படியா? உங்க ஆதர்ஷ் சார் வேறென்ன எல்லாம் கேட்பாரு?"

"மார்னிங் ஃப்ளைட்னா கிரீன் டீ மட்டும்தான், மதியம்னா டீ சாப்பிட மாட்டாரு, ஜஸ்ட் வெஜ் பர்கர் மட்டும் சாப்பிடுவாரு.” என்று அவள் ஆர்வமாகக் கூற, அதைப் புன்னகையோடு ஜியா கவனிக்க, அப்பொழுது ஜியா தன்னைக் கேலி பார்வை பார்ப்பது புரிந்து கொண்டு, “சரி மேடம், இப்போ வந்திடுறேன்.” என்றவாறு நடாஷா அங்கிருந்து கிளம்பப் போக,

"ஏய் நடாஷா நில்லு, கொஞ்சம் நேரம் கழிச்சு போனா உங்க சார் எங்கையும் போக மாட்டாரு.” என்று அவளைத் தடுத்த ஜியா, "என்ன ஆதர்ஷ பிடிச்சுருக்கா?"

நடாஷா அமைதியாகவே இருக்கவும், "பயப்படாம சொல்லு, நான் அவன்கிட்ட சொல்ல மாட்டேன்.” என்று கேட்க,

"எங்க மேம்? எனக்குப் பிடிச்சு என்ன செய்ய? அவர்தான் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டிக்காரே? அவரு இதனால் வரை என் பேரை கூட ஒழுங்கா சொன்னதில்லை.” என்று சலிப்பாய் கூறியவளை, சில நொடிகள் கண் கொட்டாமல் பார்த்த ஜியா,

"அவன்கிட்ட பேசிருக்கியா?"

"இல்ல, என்ன மேடம் பேச?"

"நீ பேசாதவரைக்கும் இந்த உலகம் உன்னைக் கேட்கணும்னு நீ எப்படி எதிர்பார்ப்ப? நீ பேசு, அது மட்டும் இல்லாம அவனையும் கேட்க வை."

"என்ன பேச?” என்றவளைப் பார்த்து புன்னகைத்தவள்,

"ஏதாவது பேசு, உங்க ஷர்ட் நல்லா இருக்கு, அப்படி எதாவது சொல்லி ஸ்டார்ட் பண்ணு."

"ம்ம் முயற்சி பண்றேன்.” என்றவள் ஜியா கொடுத்த பூஸ்ட்டில் உள்ளே காக்பிட்க்குள் சென்றாள்.

அவளைக் கண்டவன், "எனக்குக் கிரீன்...” என்று கூறுவதற்குள்,

"சார் உங்க கிரீன் டீ.” என்று கொடுக்க,

"உனக்கு எப்படித் தெரியும்?"

"எப்பவும் இந்த டைம்க்கு நீங்க கிரீன் டீ குடிப்பீங்க சார்.” என்ற அவளது பதிலில் வியந்தவன்,

"இம்ப்ரெஸ்ட்! தேங்க்ஸ் ஷாஷா.” என்று கூறியவாறு டீயை பருக, சற்று எரிச்சல் அடைந்த நடாஷா, ஜியா கூறிய வார்த்தைகளைத் தன் நினைவில் கொண்டுவந்து,

"சார் ஐயம் நாட் ஷாஷா, ஐயம் நடாஷா!” என்று சற்று சத்தத்தோடு சேர்த்து அழுத்தமாகக் கூற, அதுவரை தன் வேலையிலே மும்முரமாக இருந்தவன், முதன்முதலாக அவளை நிமிர்ந்து பார்த்தான்.

இதழ் விரிந்த மொட்டு போல விரிந்த கண்களுடன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில், சில நொடிகள் மூழ்கி போயிருக்க, திடீரென்று ஃப்ளைட்டில் டர்புலென்ஸ் ஏற்பட்டு, லேசாக ஃப்ளைட் ஆட, அவனது கையில் இருந்த டீ அவனது சட்டையில் கொட்டி அவனது கையில் பட,

டீயின் சூட்டில், “ஸ்ஸ்...” என்று ஆதர்ஷ் சத்தமிட,

இதைக் கண்டு பதறியவள், உடனே ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸ் எடுத்து வந்து அவனது கையைப் பிடித்து, காயப்பட்ட இடத்தில் லேசாக ஊதிவிட அதில் சில்லென்று சிலிர்த்து போனான்.

மருந்து தடவிவிட்ட பின்பு நடாஷா அவனைப் பார்க்க, அவளது ஸ்பரிசத்தில் லயித்திருந்த ஆதர்ஷ், சில நொடிகள் கழித்து அவளைப் பார்த்து,

"நீ புதுசா? உன்னை நான் இப்போதான் பார்க்குறேன்.” என்று கேட்க, அதில் லேசாகப் புன்னகைத்தவள்,

"நாலு வருஷமா இருக்கேன், நீங்க இங்க வேலைக்கு ஜாயிண்ட் பண்ணின நாள்ல இருந்து, நான் இருக்கேன். நீங்களும் நானும் CJ 216 டெல்லி, போபால், மும்பை ஃப்ளைட்லதான் ஃபர்ஸ்ட் ட்ராவல் பண்ணினோம். உங்களுக்கும் எனக்கும் அதுதான் ஃபர்ஸ்ட் ஃப்ளைட்.” என்று அவள் கூறியதில், சில நொடிகள் திகைத்து இருந்தவன் பின்பு தன் இயல்பு நிலைக்குத் திரும்பி,

"தெரியலை...” என்ற ஒற்றைப் பதிலை மட்டும் என்ன கூறுவதென்று தெரியாமல் கூற,

"ம்ம்... என்னை மாதிரி சாதாரண ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் எப்படிக் கேப்டன் உங்க கண்ணுக்கு தெரிவோம்?” என்ற நடாஷா அங்கிருந்து செல்லப் போக, அவள் கூறியதிற்குப் பதில் எதுவும் கூறாதவன் வெறும், "தேங்க்ஸ்” என்று மற்றும் கூறினான்.

நடாஷா தனக்குள், ‘இப்போ கூடப் பேரை சொல்ல மாட்டிக்காரு, மறுபடியும் மறந்திருப்பாரு.’ என்று நினைக்க, அவளது விழியில் தெரிந்த சிறு எரிச்சல் கலந்த கோபத்தில் அவள் மனதில் உள்ளதை புரிந்து கொண்டவன்,

அவளது கோபத்தை ரசித்தவாறே, தன் இதழ் ஓரம் புன்னகை தளும்ப, "நடாஷா, தாங்க் யு ஸோ மச்!” என்று தன் இரு கண்களையும் லேசாக மூடி திறக்க, அவளும் பதிலுக்குச் சிறு புன்னகையோடு,

"யு ஆர் வெல்கம் கேப்டன் ஆதர்ஷ்!” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அவள் சென்றவுடன், உதட்டில் உள்ள புன்னகை மாறாமல் ஆதர்ஷ், "குட் மார்னிங் லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன், திஸ் இஸ் யுவர் கேப்டன் ஆதர்ஷ் அண்ட் ஆபிசர் நிஷா. நவ் இட்'ஸ் டைம் டு தாங்க் ஆல் ஆஃப் யு ஃபார் ஃப்ளையிங் இன் 'கோ ஆன் ஏர்' ஏர்லைன்ஸ்.

வீ நவ் ரெடி ஃபார் யுவர் டெஸ்டினேஷன் இன் கோவா. வீ ஹோப் தட் யு ஆல் ஹட் அ என்ஜாயபுள் ஃப்ளைட் வித் அஸ். கேபின் க்ரூவ் ப்ரிப்பர் ஃபார் லேண்டிங்." என்று அவன் கூறி முடிக்கவும், நடாஷாவும் ஜியாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்.

***

நிலவே 8

காலை பொழுது நன்றாய் விடிந்திருக்க, டெல்லி விமான நிலையம் வழக்கம் போல மக்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

ஏர்போர்ட்டின் கேன்டீனில் சில ஆண் பைலட்கள் மற்றும் அவர்களோடு சில ஏர்ஹோஸ்டர்ஸ்களும் அமர்ந்து காலை உணவை அருந்திக்கொண்டே பேசிக்கொண்டிருக்க, ஆஷிக், தியா இருவரும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டனர்.

ஆஷிக் வழக்கம் போலக் கலாட்டாவாகப் பேச அனைவரும் சிரித்தனர். அப்பொழுது அவர்களுள் ஒருவனின் பார்வை மட்டும் வேறெங்கோ இருக்க, அவனது பார்வை சென்ற இடத்திற்கே தன் பார்வையையும் சுழல விட்டவனின் கண்களில், ஜியா தன் கை கடிகாரத்தைப் பார்த்தவாறே உள்ளே வருவது தெரிந்தது.

மில்க் ஷேக்கை அருந்தியவாறே ஆஷிக் அவனிடம், "என்னடா சேனலை மாத்திட்ட போல?" என்று கேட்க,

சட்டென்று திரும்பியவன் பதற்றத்தோடு, “என்னடா ஆஷிக்?” என்று வினவ,

"இல்ல ரொம்ப நேரமா அவளையே பார்த்துட்டு இருக்கியே, அதான் கேர்ள் ஃப்ரெண்ட மாத்திட்டியானு கேட்டேன்."

"அதெல்லாம் இல்லடா, சும்மாதான் பார்த்தேன். இவ எல்லாம் நம்ம டைப் கிடையாது. அன்னைக்கு நான் கொஞ்சம் சிரிச்சு பேசுனதுக்கே எரிக்கிற மாதிரி பார்த்தா. ஆனாலும் என்னடா பண்ண, பார்க்காம இருக்க முடியல. அழகா, ஹாட்டா இருக்காளே... கமிட் ஆகிருப்பானு நினைக்கிறேன்.” என்று கூற,

தியா அவனிடம், “ஏய் இவ ஹாட்டா? இதுக்கு முன்னாடி நீ ஹாட்டான பொண்ணுங்களைப் பார்த்ததே இல்லையா? அவ சரியான நாட்டுப்புறம். ஒரு காலத்துல எப்படி இருந்தானு எனக்குத்தான் தெரியும், என்ன ஆஷிக் நான் சொல்றது?"

"ஹண்ட்ரட் ப்ரசண்ட் ட்ரு. இவளை எல்லாம் மனுஷன் பார்ப்பானா?” என்றவனின் கண்கள், அவளையே அங்குலம் அங்குலமாய் அளவெடுக்க, அதைக் கண்ட அந்த பைலட் ஒருமுறை ஆஷிக்கை ஏற இறங்க பார்த்துவிட்டு,

"மனுஷன் பார்ப்பானானு சொல்லிட்டு, நீ அவளையே வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்க?” என்று கூற,

தியாவோ ஆஷிக்கைப் பார்த்து முறைக்க, அங்கே இருந்து தப்பித்தால் போதும் என்று ஆஷிக், “நான் கிளம்புறேன், ஃப்ளைட்டுக்கு டைம் ஆகிடுச்சு.” என்று கூறிவிட்டு ஓடாத குறையாகச் சென்றான்.

ஃப்ளைட்டில் ஏறி காக்பிட்டுக்குள் வந்து அமர்ந்தவனைக் கண்டு ஆதர்ஷ் புன்னகைக்க, பதிலுக்குப் புன்னகைத்தவன் அனைத்தும் சரியாக உள்ளதா என்று சரி பார்த்து, "லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன் திஸ் இஸ் கேப்டன் ஸ்பீக்கிங். யு ஆர் ஆன் தீ போர்ட் ஃப்ளைட் Cj 345 டெல்லி டு ஜெய்ப்பூர் வீ ஆர் ரெடி டு டேக் ஆப். சீட் பெல்ட்ஸ் சைன் ஆர் ஆன், நவ் வீ ரெக்யூஸ்ட் தட் யு கீப் யுவர் சீட் பெல்ட்ஸ் பாஸ்டென், சிட் பக் ரிலாக்ஸ் அண்ட் என்ஜாய் தி ரெஸ்ட் ஆப் யுவர் ஃப்ளைட் தங்க் யு.” என்று ஃப்ளைட் கிளம்புவதற்கான அறிவிப்பை தன் பாணியில் பயணிகளுக்கு மிகவும் அழகாகக் கூறினான்.

அவனிடம் இருந்து அறிவிப்பு வந்ததும் விமானப் பணிப்பெண்கள் அனைவரும், பயணிகள் அனைவரையும் சீட்பெல்ட் அணிய வலியுறுத்திவிட்டு, தங்களின் இருக்கையில் சென்று அமர்ந்துகொள்ள, ஃப்ளைட் ரன்வேயில் இருந்து மேல்நோக்கி ஆகாயத்தைக் கிழித்துக் கொண்டு பறந்தது. ஃப்ளையிட் ஒரு நிலையில் பறக்க தொடங்கியதும் வழக்கம் போல ஆஷிக்,

"குட் மார்னிங், ஐயம் யுவர் கேப்டன் ஆஷிக் அலாங் வித் கேப்டன் ஆதர்ஷ். வீ ஹோப் யு ஆர் ஹாவிங் பிளசண்ட் ஃப்ளைட், வீ ஆர் ஃப்ளையிங் இன் தீ அல்டியுட் ஆப் 37000 ஃபீட் அண்ட் வீ வில் ரீச் ஜெய்ப்பூர் இன் டூ ஹார்ஸ்.

சீட் பெல்ட்ஸ் சையின் ஹஸ் ஆஃப்ட் பை அஸ், ஸோ ஐ சஜஸ்ட் யு டு சிட் பக் ரிலாக்ஸ் அண்ட் எஞ்சாய் தி ஜர்னி அண்ட் வீ ஆல்ஸோ தாங்க் யு ஃபார் சூஸிங் 'கோ ஆன் ஏர்'"

பயணிகளை சீட் பெல்ட்டை கழட்டிக் கொண்டு ஓய்வு எடுக்குமாறு அறிவிப்பு விடுத்தான்.

ஃப்ளைட்டில் பயணிகளுக்கு விமானப் பணிப்பெண்கள் உணவு கொடுத்துக்கொண்டிருக்க, ஆதர்ஷும் ஆஷிக்கும் எப்பொழுதும் போலப் பேசிக்கொண்டாலும், அவர்களது கவனத்தைச் சிதறவிடாமல் விமானத்தைச் செலுத்தினார்கள்.

நேஹா வரிசையாகப் பயணிகளுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருக்க, அப்பொழுது வயது முதிர்ந்த பெண் ஒருவர் அவளிடம் தன் அருகில் வருமாறு கூற, அவள் தன் ட்ரேயில் உள்ள உணவு தீர்ந்து விட்டதாகவும் உணவு எடுத்துக்கொண்டு வருவதாகப் பதிலளிக்க, அதற்குள் அந்தப் பெண் நேஹாவைப் பார்த்து,

"ஃப்ளைட்ல வேலை செய்யிற சாதாரணப் பொண்ணு நீ, உனக்கு அவ்வளவு திமிரா? ஃப்ளைட்ல ஏறி உட்கார்ந்ததுல இருந்து தண்ணி வேணும்னு கேட்டுகிட்டு இருக்கேன், ஒருத்தரும் ரெஸ்பான்ஸ் பண்ணவே இல்லை. வேலை செய்றீங்களா, இல்லை அரட்டை அடிச்சுட்டு இருக்கீங்களா?

அது சரி, குட்டை ட்ரெஸ் போட்டுட்டு முகத்துக்கு மேக்கப் பண்ணவே உங்களுக்கு நேரம் பத்தாது, உங்க தொழிலை பத்தி தெரியாதா என்ன?" என்று அந்தப் பெண்மணி தன் வாய்க்கு வந்தது போல ஏதேதோ கூற,

பயணிகள் அனைவரும் நேஹாவை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்தனர். மிகவும் சங்கடப்பட்ட நேஹா அந்தப் பெண்மனிக்கு குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்துவிட்டு, "மேடம் உங்களுக்குத் தண்ணி வேணும்னா முதல்லயே சொல்லிருக்கலாமே?” என்று கேட்க,

"ம்ம் வேலைய பாரு... ***” என்று நேஹாவுக்கு மட்டும் கேட்குமாறு அந்தப் பெண்மணி தகாத வார்த்தையில் நேஹாவை திட்ட, தன் பொறுமையை இழந்த நேஹா அந்தப் பெண்மனியிடம் கத்தாமல், கோபத்தைத் தன் கண்களில் வைத்துக்கொண்டு மிகவும் அழுத்தமாக,

"நீங்க இப்படிப் பேசி என்னை இல்லை உங்களை நீங்களே தாழ்த்திக்கிறீங்க. உங்களோட வார்த்தைகள்ல இருந்தே உங்களோட கேரக்டர் நல்லா தெரியுது.” என்று கூறிவிட்டு,

பின்பு மிகவும் இயல்புடன் கலந்த புன்னகையோடு, "உங்களுக்கு வேற எதாவது வேணும்னா என்னைக் கண்டிப்பா கூப்பிடுங்க.” என்று தன் வார்த்தையால் அந்தப் பெண்மனியை அறைந்துவிட்டு அங்கிருந்து செல்ல, அந்தப் பெண்மணி மற்ற பயணிகளைப் பார்க்க அவர்களது பார்வை எல்லாம் தன்னை மேலும் சாட்டையால் அடிப்பது போல இருக்க, தன் தவறை அறிந்து வெட்கத்தில் தலை குனிந்தார்.

நேஹா நடந்ததைத் தன் சக பணியாளர்களிடம் கூறி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, அப்பொழுது பார்த்துப் பிஸ்னஸ் க்ளாசில் இருந்து யாரோ கத்துவது போலச் சத்தம் கேட்க, எல்லா ஏர் ஹோஸ்டர்ஸும் அங்கே சென்று என்னவென்று பார்க்க, அங்கே நடாஷா எவ்வளவோ சமாதானம் செய்தும் ஜியா கேட்காமல் ஒரு இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபனின் சட்டையைப் பற்றிக்கொண்டு அவனது கன்னத்தில் பளார் என்று அறைந்து,

"என்னடா பொண்ணுங்கன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா? எவ்வளவு தைரியம் இருந்தா அப்படிப் பேசுவ? பொண்ணுங்கனா என்ன வேணும்னாலும் பேசுவீங்க, அவங்க அமைதியா இருக்கணும் அப்படித் தானே? ஷார்ட் ட்ரெஸ் போட்டா அசிங்கமா பேசுவியா?

ஏர் ஹோஸ்டர்ஸ்னா உனக்கு அவ்வளவு எகத்தாளமா? கொஞ்சம் நேரம் கூட உட்காராம பன்னிரெண்டு மணிநேரம் கால் கடுக்க நின்னுகிட்டு, இதுக்கு இடையில உன்னை மாதிரி ஆளுங்க பண்ற வேலைய கோபம் வந்தாலும் சிரிச்சுட்டே அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு, அவங்க படுற கஷ்டம் எல்லாம் சொன்னா தெரியாது, அனுபவிச்சாதான் தெரியும்.

உன் அம்மாக்கும் தங்கச்சிக்கும் இருக்கிறதுதான் எங்களுக்கும் இருக்கு, உன் அம்மா, தங்கச்சிகிட்ட இப்படிப் பேசுவியாடா?” என்று ஜியா தன்னை மறந்து கோபமாக அவனைத் தன் வார்த்தையால் வதைத்துக் கொண்டிருக்க, நேஹா நிலைமை கையை மீறி போய்விடுமோ என்று பயந்து, கேப்டன்களுக்குத் தொடர்புகொள்ள, ஃபோனை அட்டென்ட் செய்த ஆதர்ஷ் உடனே வருவதாகக் கூறிவிட்டு சம்பவ இடத்துக்கு வரவும்,

நடாஷா சூழ்நிலையை ஒருவகையாகச் சாமாளித்து அந்த நபருக்கு வேறு இடம் மாற்றிக் கொடுத்து, ஜியாவை ஆசுவாசப்படுத்த ஜியாவுக்கோ கோபம் குறைந்தபாடில்லை,

"ஜியா மேம், ப்ளீஸ் காம் டவுன்!"

"நடாஷா இவங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் நாம சும்மா விடக் கூடாது, நீ என்னை ஏன் சமாதானப்படுத்திட்டு இருக்க? அவனை..." என்றவளைத் தடுத்த நடாஷா,

"அவனுக்கு உரிய தண்டனை அவனுக்குக் கிடைக்கும், இதைப் பொறுமையா ஹேண்டில் பண்ணணும் மேம். நீங்க ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதீங்க, பிரச்சனைய என்கிட்ட விடுங்க. நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க ப்ளீஸ்.” என்று கூறிக்கொண்டிருக்க,

"என்ன பிரச்சனை?” என்றவாறு வந்த ஆதர்ஷிடம் நடாஷா,

"கேப்டன் அது ஒன்னும் இல்லை, ஒரு பேசஞ்சர் என்கிட்ட தகராறு பண்ணினாரு, அதான் ஜியா மேடம் டென்ஷன் ஆகிட்டாங்க."

"என்ன தகராறு?"

"இப்போ எதுவும் இல்லை சார், லெட் மீ ஹேண்டில் திஸ்.” என்று அவள் கூறவும், அவனால் வேற எதுவும் பேச முடியாமல் போக,

"ஓகே” இதுக்கு மேல உன் இஷ்டம் என்பது போலத் தன் புருவத்தை உயர்த்திவிட்டு அங்கிருந்து சென்றான்.

காக்பிட்டுக்குள் வந்த ஆதர்ஷிடம் ஆஷிக், "என்னடா பிரச்சனை?" என்று கேட்க, அவன் நடாஷா கூறியதைக் கூற,

"என்ன ஜியா டென்ஷன் ஆனாளா? யார் அவன்? நீ அவனை எதுவும் பண்ணாமலா விட்ட? நான் போய் என்னனு பார்த்துட்டு வரேன்.” என்று ஆஷிக் உணர்ச்சிவசப்பட,

அவனைத் தடுத்த ஆதர்ஷ், "டேய், போய் அவமானப்பட்டு வரப்போறியா? என்னனு கேட்டதுக்கு லெட் மீ ஹேண்டில் திஸ்னு நடுமண்டையில் ஆணி அடிச்ச மாதிரி அந்த நடாஷா சொன்னா. அதுக்கு 'என் வேலைய நான் பார்த்துக்குறேன் நீ மூடிட்டு போ'ன்னு அர்த்தம்.

நடாஷாவே இப்படிச் சொல்றானா ஜியா இதை விடக் கேவலமா சொல்லுவா. ஸோ நீ அமைதியா உட்காரு. இந்த பொண்ணுங்களுக்கு ஜான்சிராணினு நினைப்பு.” என்றவனிடம் ஆஷிக்,

"அது மச்சான், நீ முதல் தடவை ஒரு பொண்ணுகிட்ட மொக்கை வாங்கிருக்கல்ல, அதான் உனக்கு எரிச்சலா வருது. போகப் போகப் பழகிடும்.” என்று சிரிக்க, ஆதர்ஷ் எதுவும் பேசாமல் முறைத்தவாறே அமர்ந்திருந்தான்.

***



அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்


நிலவே 9, 10 & 11
 
Last edited:
Top