Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நிலவே 61, 62 & 63

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
நிலவே 61

நாட்கள் வாரங்களாக நீள இருவருக்கும் இடையே உள்ள விரிசல் மட்டும் அப்படியே இருந்தது.

விழிகளும் மனதும் ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டதே தவிர, இவர்கள் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. ஆஷிக்கிற்குத் தான் கொஞ்சமும் தகுதி இல்லை என்கின்ற எண்ணத்தில் ஜியா அவனை விட்டு முடிந்தளவு விலகிருக்கவே விரும்பினாள்.

அவனாக நெருங்க முயற்சி செய்யும் பொழுதும் அவள் இப்படி விலகியிருப்பது அவனது கோபத்தை மேலும் கூட்டியது.

‘நீ உண்மையாவே என்னைக் காதலிக்கிறியான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு ஜியா. ஒரே ஒரு தடவை... அப்படியெல்லாம் இல்லைன்னு என் மனசுல உள்ள எண்ணம் எல்லாத்தையும் பொய்யாக்கு.’ என்று மனதிற்குள் பொருமினான். இதற்கு மேல் பொறுத்துக் கொள்ளாதவன்,

‘அவளுக்கா எப்போ தோனுதோ அப்போ என்கிட்ட பேசட்டும். ஆனா என்ன ஆனாலும் இந்த முறை அவள் பேசாமல் தான் ஒருவார்த்தை கூடப் பேச கூடாது.’ என்பதில் மிகவும் உறுதியாய் இருந்தான்.

இதற்கு மேல் ஆஷிக்கிற்கு எந்தத் துன்பத்தையும் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்த ஜியா, கொஞ்சம் கொஞ்சமாக அவனது வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டு, அவனை விட்டு விலகிவிட வேண்டும் என்று உறுதி எடுத்தாள்.

இவ்வளவு யோசித்தவள் அவனிடம் ஒருமுறை மனதை விட்டுப் பேசியிருந்தால், இனி நடக்கப் போகும் கோர பயங்கரங்களைத் தடுத்திருக்கலாமோ?

ஆஷிக்கிடம் உண்மையைக் கூறவும் முடியாமல், அவனிடம் இருந்து விலகவும் முடியாமல், ஒரு பொய்யோடு நெருங்கவும் முடியாமல், இடையிடையே ஜீவா கொடுக்கும் சித்திரவதையைத் தாங்கிக்கொள்ளவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் மிகவும் வேதனை அடைந்தாள்.

நிம்மதியைத்தான் கொடுக்க மறுக்கிறாய், குறைந்தபட்சம் மரணத்தையாவது கொடு என்று இறைவனிடம் வேண்டினாள். அவரிடம் வலியை தாங்க ஒரு இரும்பு இதயத்தைக் கேட்டிருக்கலாம்! சூழ்ச்சியை அறிய கூர்மையான புத்தியைக் கேட்டிருக்கலாம்! இதற்கே துவண்டு போயிருக்கும் ஜியா, இனி தன்னைச் சூழ போகும் காரிருளில் சிக்குண்டால் என்ன செய்வாள்?

இப்படி இருக்கும் சூழ்நிலையில் வேலையின் நிமித்தமாகம் ஆதர்ஷ், ரோஹித்தின் வற்புறுத்துதலாலும் ஆஷிக், தனது இந்தப் பிரிவாவது ஜியாவின் மனநிலையில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்ற எண்ணத்திலும், இரு மனதோடு ஒருவித நெருடலில் அவளை விட்டு செல்ல மனமில்லாமல், இரண்டு வார பயணமாகப் பைலட்டிற்கான எழுபத்தி மூன்றாவது மாநாட்டில் கலந்து கொள்வதறக்காக லுக்சம்பர்க் என்னும் நாட்டிற்குச் சென்றான்.

அவன் அவளை விட்டுச் செல்லும் பொழுது, அவனது மனதில் சொல்ல முடியாத துயரம் வந்து ஆக்கிரமித்தது. உள்ளம் முழுவதும் ஒருவித பாரத்தோடு அவளை விட்டு செல்ல மனமே இல்லாமல் சென்றான்.

ஜியாவை விட்டுச் சென்றதில் இருந்து அவனது மனம் அவளையே தான் நினைத்துக் கொண்டிருந்தது. அழைப்பு விடுத்தாலும் 'ஹலோ எப்படி இருக்க, சாப்டியா?' என்று கேட்பவன் மீதி உரையாடலை மெளனமாகவே நடத்தினான்.

ஓவென்று கதறி அனைத்தையும் கூறவேண்டும் என்று பலமுறை எண்ணுபவள், அடுத்த நொடியே ஆஷிக் எப்படி நடந்துகொள்ளவான் என்பதை எண்ணி, கவலை அடைந்து அப்படியே மௌனமாகவே இருந்து விடுவாள்.

ஆஷிக் அருகில் இருக்கும் பொழுது அவனிடம் பேசாவிட்டாலும், அவனைப் பார்த்து கொண்டாவது நிம்மதி அடைபவள் இப்பொழுது, அவன் அருகில் இல்லாது போக மிகவும் நிம்மதியை இழந்து காணப்பட்டாள்.

அழுதழுது கன்றி போன முகம், சரியான உறக்கம் இல்லாமல் கருவளையத்தில் சிக்குண்டு வாடி போன விழிகள், போதிய உணவு அருந்தாமல் பாதியாய் வற்றி நலிவுற்ற தேகம் என்று ஒரு கட்டத்தில் மனதிலும் நிம்மதியை இழந்து, நடைபிணமாகவே மாறிப் போயிருந்தாள். வாழ்க்கை மீதே வெறுப்பும் விரக்தியும் வர, சமீரை சந்திப்பதையும் அவனிடம் பேசுவதையும் கூடத் தவிர்த்தவள் வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்தாள்.

பல யோசனைக்குப் பிறகு ஆஷிக்கை விட்டு விலகி தினம் தினம் அவனுக்கு வேதனை அளிப்பதற்குப் பதிலாய், தன்னவனை விட்டு ஒரேடியாகப் பிரிந்து செல்ல சித்தம் கொண்டவள், ரெண்டு வாரம் கழித்து அவன் இங்கே வரும் பொழுது தான் அவனது கண்ணில் படாத தூரம் சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

அதன் பெயரில் சமீருக்கு அழைப்பு விடுத்தவள் தன் முடிவை மூச்சு விடாமல் கூறி முடித்து அவனிடம் உதவி கேட்க, திடமாக மறுத்தவன் எவ்வளவோ காரணங்களைக் கூறி அவளது முடிவை மாற்றி விடப் போராடினான்.

"யாருக்காகவும் வேண்டாம், ஆஷிக்காகவாவது உன் முடிவை மாத்திக்கோ ஜியா.” என்று கெஞ்ச,

"அவன்கிட்ட உண்மைய சொல்லவும் முடியாம, இயல்பா வாழவும் முடியாம குற்ற உணர்ச்சியில தினம் தினம் நானும் வேதனைப்பட்டு, அவனையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கேன். இப்படித் தினம் தினம் அவனைக் கஷ்டப்படுத்துறதுக்கு ஒரேடியா அவனை விட்டு பிரிஞ்சி போறதுதான் சரி. என் முடிவை நான் மாத்திக்க மாட்டேன். ஒரு நண்பனா உன்கிட்ட உதவி கேட்குறேன், முடியலைன்னா சொல்லிரு.” என்று பட்டென்று பேச,

இறுதியில் சமீர், "உன் முடிவு இதுதான்னா உனக்குத் துணையா நான் இருக்கேன். என் ஃப்ரண்ட் ஒருத்தன் மலேசியால அவனோட குடும்பத்தோட இருக்கான். அவன்கிட்ட பேசி நீ அங்க தங்குறதுக்கு ஏற்பாடு பண்றேன். முதல்ல நீ அங்க போ, மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்.” என்று ஜியாவின் முடிவிற்கு அவனும் வேறு வழியில்லாமல் துணை நின்றான்.

நாட்கள் உருண்டோட, ஜியா மலேசியா செல்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சமீர் செய்திருக்க, மார்ச் எட்டாம் தேதி இரவு ஏழு மணியளவில் அவளுக்குப் ஃப்ளைட் டிக்கெட் புக் செய்தவன் விவரத்தை அவளிடம் கூறினான்.

"இன்னும் ஒருநாள் தான் இருக்குல, மார்ச் எட்டு நான் இந்த ஊர்ல இருக்க மாட்டேன். ஆஷிக் அடுத்தநாள் காலையில ஊருக்கு வரும் பொழுது, நான் இங்க இருக்க மாட்டேன். ரொம்ப உடைஞ்சு போயிருவான்.” என்று உடைந்து போன குரலில் கூறியவள்,

மேலும் தொடர்ந்து, "சமீர் நீ எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சிட்ட, கடைசியா உன்கிட்ட ஒரே ஒரு ஹெல்ப் கேட்கிறேன், செய்வியா?"

"என்ன ஜியா, உனக்குச் செய்யாம நான் யாருக்குச் செய்யப் போறேன்? சொல்லு, என்ன பண்ணணும்?"

"மார்ச் ஒன்பதாம் தேதி ஆஷிக் காலையில வீட்டுக்கு வரும்போது, நான் இல்லாட்டா அவன் ரொம்பப் பயந்துருவான். அவனுக்கு நீதான் ஆறுதலா இருக்கணும், அவனைப் பார்த்துக்கோ.” என்று விழிநீர் ததும்பக் கேட்டவளின் கோரிக்கையை மறுக்காமல் ஏற்றுக்கொண்டான்.

ஆஷிக்கின் நினைவிலே ஒவ்வொரு நொடியையும் கடந்தவள், ஏன் ஒவ்வொரு நொடியும் கணப்பொழுதில் கடந்து செல்கின்றன என்று மனதிற்குள் வருந்தினாள். மார்ச் ஏழு ஒரு எட்டு மணியளவில் தொலைக்காட்சியில் அவள் கண்ணில் பட்ட செய்தி, அவளது வாழ்க்கையையே புரட்டி போட காரணமாக அமையும் என்று அவள் நிச்சயம் நினைத்திருக்க மாட்டாள்.

திருப்பிய நியூஸ் சேனல் அனைத்திலும், “இந்த வருடம் ஆல் இந்தியா மெடிக்கல் அசோஷியேஷன் சார்பாகச் சிறந்த இளம் அறுவை சிகிச்சை நிபுணருக்கான விருதை பெறப்போவது டாக்டர் சுஜித் குமார் எம்எஸ்.” என்கின்ற செய்தி, சுஜித்தின் புகைப்படத்தோடு தலைப்புச் செய்தியாக வலம் வர. ஜியாவின் விழிகள் ஆக்ரோஷத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.

மிகவும் கொந்தளித்துப் போனாள். அந்தக் கணமே சுஜித்தை தன் கரத்தாலே கொன்று விடத் துடித்தாள். அவன் தனக்குச் செய்த அனைத்தையும் நினைவு கூர்ந்தவளுக்கு, ஆத்திரம் தொண்டையை அடைத்தது.

அவளது கோபத்திற்குத் தூபம் போடுவது போல அந்த நேரம் பார்த்து ஜீவாவின் அழைப்பு வர, விழிகளில் கோபத்துடன் அலைபேசியை அட்டென்ட் செய்தாள். விஷம் போன்று அவன் கொட்டிய அருவெறுப்பான அதே வார்த்தைகள் செவிகளில் அமிலம் போலப் பாய்ந்தது.

ஆனால் முன்பு போலச் செவிகளை மூடிக்கொள்ளவில்லை. ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாய் கேட்டாள். விழிகளில் நீர் இல்லை, அகத்தில் கலக்கம் இல்லை, முகத்திலும் அசைவில்லை, கைகள் நடுங்கவில்லை, உடல் விறைக்கவில்லை, அவன் கொட்டிய விஷம் அவளது நாடி நரம்பில் பா,ய அதைச் சமயம் பார்த்து அவனுக்குத் திருப்பிக் கொடுக்க, தன் நெஞ்சுக்குள்ளே தேக்கி வைத்தாள். தனக்குள் விறுவிறுவென்று ஏறிய கோபத்தை அடக்கியவாறே,

"நான் உனக்கு வேணுமா ஜீவா?” என்றாள் அமைதியாக, புயலை உள்வாங்கிய அமைதி.

திகைப்புற்றவன் கனவா நிஜமா என்று தனக்குத் தானே சோதனை செய்தான். இருந்தும் சில மணி நிமிடத்திற்கு அவனால் அந்தத் திகைப்பில் இருந்து மீண்டு வர முடியவில்லை. எப்பொழுதும் தன்னிடம் நெருப்பைக் கக்கும் அவளது வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தைகளா?

அவன் அவளை எதிர்பார்ப்பது உண்மையாக இருந்தாலும், அவளிடம் இருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும் என்று அவன் கனவிலும் எண்ணிப் பார்க்கவில்லை. பதில் பேசாமல் அமைதியாய் இருந்தான். சொல்லப் போனால் அவனுக்குப் பதில் தெரியவில்லை. ஏறிய போதை நொடியில் சர்ரென்று இறங்கியிருந்தது.

"நாளைக்கு நாம மீட் பண்ணலாமா, உன் வீட்ல?” என்றாள் மிக இயல்பாக, மொத்தமாக அடங்கிப்போனான்.

"ஜீவா லைன்ல இருக்கியா?” தன்னிலைக்கு வந்தவன்,

"ஹான்! நா... ன்... ஐ மீன் ஜியா...” எழுத்துக்கள் தடம் பிறழ தடுமாறினான்.

"உனக்கு ஓகே தானே?” என்றாள் பற்களைக் கடித்தவாறு.

"கண்டிப்பா ஜியா! உன் கையால செத்துபோணும்னா கூட எனக்கு ஓகே தான்."

"அப்படியா? அப்போ எப்போ, எங்கன்னு டிசைட் பண்ணு.” என்றாள் விஷம புன்னகையோடு.

சிறு அதிர்விற்குப் பின் சிரித்தவன், “காமெடிய கூட எப்படிச் சிரிக்காம சொல்ற?"

"நோ, ஐயம் சீரியஸ்."

"நம்பிட்டேன்."

"நாளைக்கு ஈவ்னிங் பார்க்கலாம்.” வெற்று புன்னகையோடு அழைப்பிற்கு முடிவு கட்டினாள், அவனுக்கும் சேர்த்து முடிவுக்கெட்டும் எண்ணத்தில்.

எந்த தைரியத்தில் அவனைச் சந்திக்க அவன் வீட்டுக்கே வருவதாகக் கூறினோம், என்று இப்பொழுது யோசித்தவளுக்குச் சிறிது அச்சம் தோன்றினாலும், அதை விழுங்கி தின்னும் அளவிற்குக் கோபமும் ஆத்திரமும் பொத்துக்கொண்டு வந்தது.

“நான் ஏன் ஆஷிக்கை விட்டு விலகணும்? தப்பே பண்ணாம என்னை நேசிக்கிறவங்கள விட்டு நான் ஏன் ஓடி ஒழியணும்? சொல்ல போறேன், ஆஷிக்கிட்ட எல்லாத்தையும் சொல்ல போறேன். முடிவு அவனுடையது. ஒரு பொய்யோட வேணும்னா நான் ஆஷிக்கை கல்யாணம் பண்ணிருக்கலாம். ஆனா அதே பொய்யோட நான் அவனை விட்டு விலக மாட்டேன்.

என்ன நடந்தாலும் சரி சுஜித், ஜீவா, வருண் அவங்க மூணு பேருக்கும் கண்டிப்பா தண்டனை வாங்கித் தருவேன். ஆஷிக் என் வாழ்க்கை. சர்ஜெரி என்னோட கனவு. என் வாழ்க்கைய என்னை வாழவும் விடாம, என் கனவை தொடரவும் விடாம என்னை முடக்கி போட்டுட்டு, அவனுங்க மட்டும் நிம்மதியா சுத்தக் கூடாது.

டாக்டர் ரூபத்துல இருக்குற அந்த மிருங்கங்கள நான் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவேன். எந்தத் தப்பும் பண்ணாம நான் அனுபவிச்ச ஒவ்வொரு சித்திரவதைக்கும், அவங்க பதில் சொல்லி தான் ஆகணும். மாளவிகாவுக்கும் அவளோட குழந்தைக்கும் நியாயம் கிடைச்சு ஆகணும்.” ஆக்ரோஷமாக வெளிப்பட்டது வார்த்தைகள்.

"முதல்ல எப்படியாவது ஜீவா மொபைல்ல இருக்கிற விடியோவை டெலீட் பண்ணணும். அந்த விடியோவை மட்டும் நான் டெலிட் பண்ணிட்டா, அதுக்கப்புறம் அவங்க மூணு பேரும் என்கிட்ட இருந்து தப்ப முடியாது.” உறுதியோடு குருதி கொதிக்க முழங்கியவள் அறியாமாட்டாள், தன்னைத் தாக்க இருக்கும் ஆழிப்பேரலையைப் பற்றி.

மாலைப் பொழுதை காரிருள் கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்கிக்கொண்டிருந்த நேரம் அது.

ஏற்கனவே சமீரின் உயிருக்கு ஆபத்து வர, தான் காரணமாகி போனதை எண்ணி பார்த்து வருந்திய ஜியா, இந்தமுறை தனது இந்த முடிவை சமீரிடம் கூறாமல், தானே ஜீவாவை தனித்து எதிர்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

அதன் பேரில் ஜீவாவை சந்திக்கச் சென்றாள். ஜியாவின் வருகைக்காக ஜீவா மிக ஆர்வமாகக் காத்திருந்தான். போகும் வழியெல்லாம் சமீரிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்க, பலமுறை யோசித்த பிறகு வேறு வழியில்லாமல் ஒரு கட்டத்தில் அட்டென்ட் செய்யவும் சமீர்,

"எங்க போன? ஃபோனை எடுக்க எவ்வளவு நேரம்? சரி, நீ ஏர்போர்ட் போய்டியா?” என்றவனிடம்,

நீண்ட பெரு மூச்சை வெளியிட்டவாறே ஜியா, “இல்லை ஜீவா வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்.” என்று கூறியவளிடம் அதிர்ச்சி தொனிக்கும் குரலில் சமீர், “வாட்!” என்று கேட்க, மூச்சு விடாமல் தன் முடிவைக் கூறியவள்,

"ஜீவா வீட்டுக்கு வந்துட்டேன் சமீர். நீ எதுக்கும் கவலைப்படாத, நீ அங்க வரவேண்டாம். ஏற்கனவே நீ எனக்காகப் பண்ணினதெல்லாம் போதும். இது என் பிரச்சனை, இதை நான் தனியாவே ஹேண்டில் பண்றேன். நான் போற காரியத்துல வெற்றி கிடைக்கணும்னு வேண்டிக்கோ.” என்று கூற,

"ஜீவா ரொம்ப ஆபத்தானவன், நீ அங்க தனியா போகாத. நீ கிளம்பி வா, நாம பேசிக்கலாம். இல்லன்னா நான் அங்க வரேன்.” என்றவன், ஜியாவிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் போக, அவள் ஏற்கனவே அழைப்பை துண்டித்ததை எண்ணி மிகுந்த ஆத்திரம் அடைந்தான்.

மீண்டும் அவன் அவளுக்குத் தொடர்ப்புக் கொண்ட பொழுது, அவளது அலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தது. அவனது ஆத்திரம் மேலும் அதிகமானது.

ஜியாவிற்காக ஆர்வமாய் காத்திருந்த ஜீவாவின் கண்கள், எதிர்பார்த்தது போல அவளைத் தன் வீட்டின் வாசலில் கண்டதும் பூரித்துப் போனது. அசடு வழிய அவளை உள்ளே அழைத்தவன், அவள் கொண்ட உள் நோக்கம் அறியாமல் மிகவும் உபசரித்தான்.

"இப்போ கூட என்னால நம்ப முடியல...” என்று புன்னகைத்தவாறே ஜீவா கூற,

தன் பார்வையை டேபிளில் தன் முன்னால் இருந்த அவனது மொபைல் மீது படரவிட்டவாறே, “புடிக்கலையா?” என்று கோபத்தை அடக்கியவாறே கேட்க,

"இல்லை இல்லை...” உடனே மறுத்தவன் மேலும் தொடர்ந்து,

"நான் அந்த எண்ணத்துல சொல்லல. நீ என்னைத் தேடி வருவனு நான் ஒருநாளும் எதிர்பார்க்கல.” என்றான் விழிகள் மலர.

"ம்ம்ம்..." என்றாள் பொய்யான புன்னகையோடு.

"ஐயம் ரியலி சாரி ஜியா!” என்றவாறு அவளது கரத்தைப் பற்றிக் கொள்ள முயற்சித்த நேரம் நாசுக்காக ஜியா, “இப்போ எதுக்கு அது?” என்றவாறு சோபாவில் இருந்து எழுந்து நின்றாள்.

"இல்ல ஜியா, நான் இதைச் சொல்லியே ஆகணும். சத்தியமா நீன்னா எனக்கு அவ்வளவு புடிக்கும். உன்கிட்ட நான் அப்படி நடந்துக்கணும்னு ஒருநாளும் நினைச்சது இல்லை. எல்லாரும் ஃபோர்ஸ் பண்ணி உன்கிட்ட என்னைக் கடுமையா நடந்துக்க வச்சுட்டாங்க.

மாளவிகா விஷயத்துல அந்தச் சுஜித்கிட்ட எவ்வளவோ சொன்னேன். அவன் தான் மெடிக்கல் எத்திக்கிஸ்னு அதை இதைச் சொல்லி என்னை ப்ரைன் வாஷ் பண்ணிட்டான். மாளவிகாவும் அவளோட குழந்தையும் செத்து போவாங்கனு நான் நினைக்கவே இல்லை. அவங்க செத்துப் போனதும் நான் ரொம்பப் பயந்துட்டேன்.

நீ ரொம்பப் பிடிவாதமா வேற இருந்தியா, எங்க போலீஸ் கேசுனு போனா என் கேரியர் போயிருமோனு பயந்து போய், உன்கிட்ட ரொம்ப மோசமா நடந்துக்கிட்டேன். இப்போ மாதிரி நீ மட்டும் அப்போ கொஞ்சம் விட்டு குடுத்திருந்தன்னா, இவ்வளவு பிரச்சனையே வந்திருக்காது. ஆனா இப்போ நீயா என்னைப் புரிஞ்சிக்கிட்டதுல எனக்கு ரொம்பச் சந்தோஷம்.” என்றவன் அதே வக்கிர எண்ணத்தோடு அவளை நெருங்க சுதாரித்துக் கொண்டவள், தன் கையில் இருந்த ஜூஸ் கிளாஸை அவன் மீது தவறுதலாய் சிந்துவது போலச் சிந்தி,

"அச்சச்சோ! சாரி ஜீவா நான் தெரியாம...” என்று பாவமாய் பார்க்க,

"ஜியா இட்ஸ் ஓகே! நீ டென்ஷன் ஆகாத, நான் போய் வாஷ் பண்ணிட்டு வரேன்.” என்றவன் அசடு வழிந்தவாறே அங்கிருந்து சென்றான்.

அவன் சென்றது தான் தாமதம், தான் எதிர்பார்த்த நேரம் கூடி வந்ததை உணர்ந்தவள், உடனே அவனது அலைபேசியைத் தன் வசம் ஆக்கினாள்.

அலைபேசியை அன்லாக் செய்தவள் பேட்டேர்ன் லாக் போட்டிருப்பதைப் பார்த்து, எப்படி அன்லாக் செய்ய வேண்டும் என்று சில நொடிகள் சிந்தித்துச் சிறிதும் தாமதிக்காமல், மீண்டும் அலைபேசியை சைட் பட்டன் மூலமாக லாக் செய்தாள். லாக் செய்தவுடன் அலைபேசியின் கருப்பு நிற தொடுதிரையில் ஏற்கனவே உபோயகப்படுத்திய பொழுது, போட்டிருந்த பேட்டேர்ன் லாக்கின் தடம் வடிவம் மாறாமல் பதிந்திருக்க, வேகமாக அலைபேசியை அன்லாக் செய்தவள், தனது வீடியோவை டெலிட் செய்ய முனைந்த நேரம், அலைபேசியில் எஸ்கே என்னும் நபரிடம் இருந்து அழைப்பு வர, எஸ்கே யாராக இருக்கும் என்று சிந்தித்தவளின் மூளை, ‘சுஜித் குமாரின்’ பெயரை நினைவுபடுத்த, பதறியவள் சட்டென்று அழைப்பைத் துண்டித்து,

நொடி பொழுது கூடத் தாமதிக்காமல் வீடியோவை டெலிட் செய்து கொண்டிருக்க, அவள் எதிர்பாராத நேரம் அங்கு வந்த ஜீவா ஜியாவின் கையில் தனது அலைபேசி இருப்பதைப் பார்த்து, ஜியாவின் இந்தத் திடீர் மாற்றத்துக்கான காரணம் புரிந்தவனாய், விழிகள் சிவக்க அவளது அருகில் வந்தவன், வலுக்கட்டாயமாக அவளது கையில் இருந்து அலைபேசியை வாங்க முற்பட அவனைத் தள்ளிவிட்டவள், அவனிடம் இருந்து தப்பிக்க முற்பட, “ஜியா நில்லு...” என்று கோபத்தில் பற்களைக் கடித்தவாறு, அவள் பின்னால் சென்று கரத்தைப் பற்றி இழுக்க, அவனது கரத்தைக் கடித்து அவனிடம் இருந்து விடுபட்டவள், ஓடிச்சென்று கதவைத் திறந்துகொண்டு வெளியேற முற்பட,

அவளை விடாது துரத்தியவன் அவளது பின்னால் வந்து கழுத்தோடு சேர்த்து இறுக்கி அணைக்க, கடும் பாடுபட்டு பல முயற்சிக்கு பிறகு அவனிடம் இருந்து விடுபட்டவளை, மீண்டும் பிடித்திழுத்துச் சோபாவில் சாய்த்தவன், அவளது கரத்தில் இருந்த அலைபேசியை வாங்க போராடிக்கொண்டிருந்த நேரம்,

பின்னால் இருந்து வந்த இரு கரங்கள் அவனை ஜியாவிடம் இருந்து விலக்கி கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தது.

"சமீர்!" என்று அழைத்தவாறு சமீரின் அருகில் சென்று ஜீவாவின் அலைபேசியைக் காட்டி, “விடீயோவ டெலிட் பண்ணிட்டேன், இப்போவே போலீசுக்குப் போய்க் கம்ப்ளெயிண்ட் குடுக்கலாம்.” என்று விழியில் நீர் வழிந்தவாறு நிம்மதியோடு கூறினாள்.

அதிர்ச்சியில் உறைந்திருந்த ஜீவாவின் சட்டையைப் பிடித்துத் தூக்கி நிறுத்திய சமீர், அவன் எதிர்பார்ப்பதற்குள் மீண்டும் அவனது கன்னத்தில் அறைந்த இடத்திலே மீண்டும் மீண்டும் பொறி கலங்க அறைந்து, அவனது கழுத்தைப் பிடித்து நெறிக்க,

ஜீவா வலியில், “ஆ...” என்று கதறினான்.

சமீரை தடுத்த ஜியா, “விடு சமீர், இவனை எல்லாம் போலீஸ் பார்த்துக்குவாங்க. அவங்க லாக் அப்ல வச்சு உதைக்கும் பொழுது புத்தி தானா வரும். வா சமீர், இப்போவே போலீஸ்கிட்ட போலாம்.” என்று கூறி சமீரை அழைக்க,

சமீர், ஜீவாவின் கழுத்தில் இருந்த தன் கையின் அழுத்தத்தை இன்னும் அதிகரிக்க,

வலியில் துடித்த ஜீவா, “எஸ்கே ப்ளீஸ்டா விடு...” என்று தன்னால் முடிந்த வரை கதறினான்.

அவனது கதறல் ஜியாவின் செவியில் விழ எஸ்கே என்னும் சொல்லை அவள் கிரகித்த நேரம், அவளது கன்னத்தில் விழுந்த ஒற்றை அறையில் பொறி கலங்க தரையில் சுருண்டு வீழ்ந்தாள்.

***



நிலவே 62

டெல்லி ஏர்போர்ட்டில் ரோஹித், ஆஷிக்கிடம், "இன்னைக்கே இப்படி அவசர அவசரமா ஊருக்கு வரணும்னு என்ன கட்டாயம்? இன்னைக்கு ஈவ்னிங் பார்ட்டி அட்டென்ட் பண்ணிட்டு, லேட்டா கிளம்பிருக்கலாம். இப்போ பாரு, நாளையில இருந்து பேக் டு ஒர்க். நல்ல பார்ட்டிய மிஸ் பண்ணிட்டோம்டா."

"நீங்க ரெண்டு பேரும் பார்ட்டிய அட்டென்ட் பண்ணுங்க, நான் மட்டும் கிளம்புறேன்னு தானே சொன்னேன்?"

"நீ ஊருக்கு வந்ததுல இருந்து ஜியா ஜியான்னு சொன்ன. இந்த ஆதர்ஷ், நடாஷா நடாஷான்னு சொல்றான். நான் மட்டும் தனியா பார்ட்டியில என்ன பண்றது அதான் கிளம்பிட்டேன். ஒரு காலத்துல இந்த மாதிரி ட்ரிப்னா நீ எப்படி இருப்ப? ஆனா இந்தத் தடவ நீ ரொம்பக் கடுப்படிச்சுட்டடா."

"அப்போ சிங்கிள்டா, இப்போ அப்படி இல்லை கல்யாணம் ஆகிடுச்சு, ஜியா வீட்ல தனியா இருக்கா. எல்லாத்துக்கும் மேல ஊருக்கு கிளம்பும் பொழுது அவ கூடச் சண்டையோட தான் கிளம்பிருக்கேன். ஒரு மாதிரி கஷ்டமாவே இருந்துச்சு, அதான் மீட்டிங் முடிஞ்சதும் கிளம்பணும்னு சொன்னேன்."

"ஜியாகிட்ட நாளைக்குத் தான ஊருக்கு வருவனு சொன்ன, அப்புறம் ஏன் உடனே கிளம்பணும்னு அவசரப்படுத்தின? இன்னைக்கு வர்றதுக்குப் பதிலா நாளைக்கு வந்திருப்போம். ஒரு நாள்ல என்னடா ஆகிற போது?"

"கல்யாணம் பண்ணி பாரு புரியும்.” என்று ஒரே வரியில் முடித்தவன் ரோஹித்திடம், “அவசரமா கிளம்புனதுல ஜியாகிட்ட நான் வரேன்னு சொல்லல, மொபைல்ல சார்ஜ் இல்லை. உன் மொபைல் குடு."

"அதான் ஊருக்கே வந்தாச்சே, இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு தானே போகப் போற. அப்புறம் ஏன்டா இந்த அலப்பறை பண்ற? உங்க லவ் டார்ச்சர் தாங்க முடியலடா, இதுக்காகவே நான் சீக்கிரம் கமிட் ஆகணும்னு நினைக்கிறேன்." என்றவனைப் பார்த்து சிரித்தவன், அவனது அலைபேசியில் இருந்து ஜியாவிற்குத் தொடர்பு கொள்ள அது சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

"என்னடா ஃபோன் சுவிட்ச் ஆஃப்ன்னு வருது?"

"சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆஃப் ஆகிருக்கும். வீட்டுக்கு போய் மணிக்கணக்கா பேசு. இதோ டாக்சி கூட வந்திருச்சு.” என்றவன் தள்ளி நின்று அலைபேசியில் உரையாடி கொண்டிருந்த ஆதர்ஷை, "டாக்சி வந்துருச்சு ஆதர்ஷ்.” என்று அழைக்க மூன்று பேரும் தங்களின் இல்லத்திற்குச் சென்றனர். போகும் வழியெல்லாம் ரோஹித், ஆதர்ஷை கலாய்த்து சிரித்துக் கொண்டே வர,

ஆஷிக் மட்டும் அவர்களது உரையாடலில் கலந்து கொள்ளாமல் அமைதியாகவே இருந்தான். அவனது மனம் முழுவதிலும் சொல்ல முடியாத ஒரு வலி நிரம்பியிருந்தது. மிகவும் கனமாக உணர்ந்தான்.

***

கசக்கி எறிந்த மலர் போல ஒற்றை அறையிலே தரையில் வீழ்ந்து கிடந்த ஜியா, தனக்கு நடந்ததை உணரும் முன்பே அவளது மென் கரத்தை தனது இரும்பு கரத்தால், மிக வலுவாக பற்றித் தூக்கிய சமீர், சில நொடிகள் அவளது முகத்தைப் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட எறிவது போல, அவளைச் சோபா மீது மிக வேகமாகத் தள்ளி விட்டான்.

"ஆ..." என்றவாறு பொத்தென்று போய் விழுந்தவளிடம் நெருங்கி வந்த சமீர், அவளது வென் பஞ்சு வதனத்தை நன்கு இறுக்கி பிடித்து,

"இன்னும் எவ்வளவு தான் பண்ணுவ? எவ்வளவு தான் நான் பொறுமையா இருக்கிறது? போலீசுக்கு போவியா ம்ம்ம்... போய் தான் பாரேன்...” என்று விழிகள் சிவக்க, நறநறவென்று பற்களைக் கடித்தவாறு கத்தியவனின் முகம், நரகாசுரனை விட மிகவும் கொடூரமாய் இருந்தது.

"சமீர் நீயா இப்படிப் பண்ற?” என்று அழுதவளைக் கண்டு சத்தமாகச் சிரித்தவன் பிறகு இறுக்கமான முகத்துடன், “ஆமா, நான் தான் என்னடி பண்ணுவ?” என்றான் தன் புருவத்தை நிமிர்த்தியவாறு. இத்தனை நாளாகத் தான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறோம் என்பதை நினைத்த ஜியாவின் மனம் ரண வேதனையை அனுபவித்தது.

இதுவரை தான் பார்க்காத சமீர், எப்பொழுதும் சாந்தமாக இருக்கும் அவனுக்குள் இப்படி ஒரு கொடூர அரக்கன் ஒளிந்திருப்பான் என்று அவள் ஒருநாளும் நினைத்ததில்லை. முன்பு அவன் சிந்திய புன்னகை எல்லாம், இப்பொழுது சர்ப்பத்தின் விஷத்தை விடக் கொடியதாகத் தோன்றியது.

‘ஏன் இப்படி ஒரு நாடகம்? ஏன் இத்தனை பெரிய நம்பிக்கை துரோகம்?’ உள்ளத்தில் கேள்விகள் எழ, அவளது விழிகளை உறுத்து பார்த்தவன்,

"அத்தனையும் நான் எழுதின ஸ்க்ரீன் பிளே. ரைட்டரும் நானே, டைரக்டருக்கும் நானே. ஹா ஹா... புரியலையா? உன் துப்பட்டால ஆரம்பிச்சு...” என்றவாறு ஜியா தடுக்கத் தடுக்க அவளது துப்பட்டாவை பற்றியவன் மேலும் தொடர்ந்து,

"நெருப்பு பட்டதே... அந்த சீன்ல இருந்து உன்னோட வீடீயோ ஸீன் வர எல்லாம் நான் நினைச்ச மாதிரியே தான் போச்சு. ஆனா போலீஸ் ஸ்டேசன் ஸீன்ல மிஸ் ஆகிடுச்சு. நீ என்கிட்ட சொல்லாம இந்த ஊரை விட்டு போவனு நான் நினைக்கல.

உன்னை என்கூட வச்சுக்கணும்னுதான் நான் எல்லாப் பிளானையும் பார்த்து பார்த்துப் போட்டேன். நீ சொல்லாம போனதும் அவ்வளவு கோபமா ஆகிடுச்சு. நினைக்காத நாள் இல்லை ஜியா, இங்க இருந்து சொல்றேன்...” என்றவன் தன் இதயத்தைக் காட்ட, தன் முகத்தை வேறுபக்கமாகத் திருப்பிக் கொண்டவள் முகத்தைச் சுளித்தவாறு அமர்ந்திருக்க,

சமீர் ஜியாவின் அருகில் நெருங்கி வர, ஜியா விலகி விலகி போக, "ஏன் ஜியா, தள்ளி தள்ளி போற? ஓ ரொம்பக் கோபப்பட்டுட்டேன்ல, சாரி டியர்! உன்கிட்ட புடிச்சதே உன் அழகோட சேர்ந்த உன் அறிவுதான். பியூட்டி வித் ப்ரைன்ஸ்! ஆனா அந்த அறிவு எப்போலாம் என்னைத் தூக்கி சாப்பிடுதோ, அப்போதான் நான் என் கண்ட்ரோல்ல இருக்கிறது இல்லை.

இப்போ கூடக் கோபம் எல்லாம் இந்த முட்டாள் ஜீவா மேல தான். இவனோட முட்டாள் தனத்தால பாரு, உன்கிட்ட இப்படி நடந்துக்க வேண்டியதா போச்சு.” என்றவன் மேலும் தொடர்ந்து,

"சுஜித்தும் ஜீவாவும் முதன்முதலா உன்னைப் பத்தி சொல்லும் பொழுதே, உன் மேல எனக்கு ஒரு ஈர்ப்பு வந்துச்சு. ஆனா எப்போ உன்னை முதன்முதலா பார்த்தேனோ... நம்பமாட்ட, நான் க்ளீன் போல்ட். லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்!

உன் வழியிலே போய் உன்னை அடையணும்னு நினைச்சேன். எல்லாம் நல்லா போயிட்டு இருந்த அப்போதான், எனக்கு வெளிநாட்ல இருந்து அந்த ஆஃபர் வந்துச்சு. அதுக்காகச் சரியான ஆளை நாங்க தேடிட்டு இருந்த அப்போதான், மாளவிகா பத்தி சுஜித் என்கிட்ட சொன்னான். யாரோட துணையும் இல்லாத மாளவிகா தான் எங்களோட வேலைக்கு, கரரெக்ட்டா இருப்பானு நாங்க டிசைட் பண்ணினோம். அதனால தான் அவளோட கேச எடுத்துக்க நீ யோசிச்சப்ப, நான் உன்னை எடுத்துக்கச் சொல்லி வற்புறுத்தினேன்.

உனக்குச் சந்தேகம் வராம இருக்க, நான் எவ்வளவோ பண்ணினேன். கடைசியில சுஜித்தோட முட்டாள் தனத்தால எல்லாரும் மாட்டிக்கப் பார்த்தோம். அன்னைக்கு நீ அக்குவேறா ஆணிவேறா எல்லாத்தையும் எக்ஸ்பிளைன் பண்ணுணியே... சத்தியமா சொல்றேன், ஒரு செகண்ட் என் உடம்பெல்லாம் உதறிட்டு.

சொல்ல போனா உன் மேல லவ் இன்னும் ஜாஸ்தியாகிடுச்சு. உனக்கு என் மேல சந்தேகம் வர கூடாதுன்னு நினைச்சேன். பழியெல்லாத்தையும் சுஜித், ஜீவா, வருண் மேல போட்டேன். அன்னைக்கு நைட் சுஜித் வீட்டுக்குப் போனது, அவங்க என்னை அடிக்கிற மாதிரி பண்ணினது, எல்லாமே என் பிளான். மாளவிகா செத்ததுல இருந்தே சுஜித் கொஞ்சம் பயத்தோட தான் இருந்தான். அவன் பயம் எனக்குப் பெரிய ஆயுதமாகிடுச்சு.

அன்னைக்கு நைட் நடந்த கலவரத்துல நீ மயங்கிட்ட, ஆதாரத்தை வாங்கினதுக்கு அப்புறம் உன்னை விட்றணும்னு தான் நினைச்சேன். ஆனா இவ்வளவு யோசிச்ச நீ, இதுக்கு மேலயும் பண்ண மாட்டனு என்ன நிச்சயம்? அதான் உன் வாயடைக்க எனக்கு ஒரு ஆயுதம் தேவைப்பட்டுச்சு, அதான் வீடியோ எடுத்தேன். அதை ஜீவாவை வச்சு ப்ளாக்மெயில் பண்ணினேன்.

மானம் போனாலும் பரவாயில்லை, நான் போலீஸ்கிட்ட போகப் போறேன்னு நீ சென்ன அப்போ என்னடானு யோசிச்சேன். என் உயிரை யூஸ் பண்ணிக்க நினைச்சேன். சுஜித்த என்னைக் கொலை பண்ணிருவேன்னு மிரட்ட சொன்னேன், அது வொர்க் அவுட் ஆச்சு. அதுக்கப்புறம் உன்னை எமோஷனலா வீக் ஆக்கி என் கூடவே வச்சுக்கணும்னு நினைச்சேன். அங்கதான் தப்புப் பண்ணிட்டேன், நீ சொல்லாம போயிட்ட.

அப்புறம் எப்போ வருண் உன்னை ஜீவா பார்த்ததைப் பற்றி சொன்னானோ, அப்போ எனக்குக் கோபம் வந்துச்சு. ஆனா அதை மீறி சந்தோஷம் தான் வந்துச்சு. லண்டன்ல இருந்து வந்ததும் உன்னைப் பார்க்க உன் வீட்டுக்கு வந்தேன். நீ மும்பை போயிருக்கிறதா சொன்னாங்க. ஆயிஷாவை பணத்துக்காகத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன்.

அங்க உன்னை நான் பார்ப்பேன்னு நினைச்சு கூடப் பார்க்கலை, அவ்வளவு சந்தோஷப்பட்டேன். ஆனா நீ ஆஷிக்கை கல்யாணம் பண்ணிகிட்டனு தெரிஞ்சதுக்கு அப்புறம் உள்ளுக்குள்ள அவ்வளவு வெறி வந்துச்சு.

உனக்கு ஒன்னு தெரியுமா, அன்னைக்கு உன் ரிசப்ஷனுக்கு சுஜித் வந்தான்ல, அவன் உன்னை மிரட்டுறதுக்கு வந்தான் தான நீ நினைச்ச. அவன் வந்ததே என்னைப் பத்தி உன்கிட்ட சொல்லதான். நீ வருவனு நினைச்சு காத்துக்கிட்டு இருந்தான். என்னை அங்க பார்த்ததும் நடுங்கிட்டான்.

என் தலையில் உள்ள காயம் எல்லாம் என்னோட செட் அப். நான் குடுத்த அடியில உன் திசை பக்கமே வரமாட்டேன்னு ஓடிட்டான். திடீர்னு ரொம்ப நல்லவனா ஆகிட்டான் அந்தச் சுஜித், அதான் அன்னைக்கு நல்லா குடுத்து விட்டுட்டேன்.

உன்னையும் ஆஷிக்கையும் சேர விடக்கூடாதுனு, அப்போ அப்பப்போ உனக்கு ஆறுதல் சொல்ற மாதிரி பழைய விஷயத்தைப் பத்தி, உனக்கே தெரியாம உன் மனசுக்குள்ளையும் உன் மூளைக்குள்ளையும் நான் விதைச்சுட்டு இருந்தேன்.

என் திட்டப்படி நீ ஆஷிக்கை பிரிய போறேன்னு சொன்னப்போ, எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா? உன்கூட என் லைஃப்பை ஸ்டார்ட் பண்ண போறேன்னு ரொம்பச் சந்தோஷமா இருந்தேன். ஆனா இப்போ..." என்று அவன் தொடர்வதற்குள், சமீரின் அலைபேசி சினுங்க எடுத்து பார்த்தவன், தொடு திரையில் ஆஷிக்கின் பெயர் வெளிப்பட எரிச்சல் அடைந்தவன் ஜியாவிடம் அதைக் காட்டி,

"உன் புருஷன்தான், அவன் பேரைக் கேட்டாலே எரிச்சலா இருக்கு. ஏன்டி அவனைக் கல்யாணம் பண்ணின?” என்று பற்களை நறநறக்க, அவனது கரத்தில் இருந்து அலைபேசியை வாங்க ஜியா முற்பட கொடுக்க மறுத்தவன்,

"என்ன துள்ளிட்டு இருக்க?" என்று வெறியோடு பார்க்க,

ஜியா, "என்னை விட்ரு சமீர், நான் ஆஷிக்கிட்ட போகணும்.” என்று காலில் விழாத குறையாகக் கெஞ்ச,

மறுத்தவன், "அவன் எதுக்கு, அதான் நான் இருக்கேனே?” என்று விஷமமாய் நெருங்க, ஆத்திரம் விழிகளில் தொனிக்க சமீரின் கன்னத்தில் அறைந்தவள்,

"ச்சீ...” என்று முகத்தைச் சுளிக்க, வெறி பிடித்தவன் போல உருமாறியவன் அவளை மீண்டும் மீண்டும் கடுமையாக அறைய,

"எஸ்கே வேண்டாம், அவசரப்படாத...” என்று தடுத்த ஜீவாவையும் தள்ளிவிட்ட சமீர் தரையில் சுருண்டு விழுந்தவளைப் பிடித்து, “நான் உனக்கு ச்சீயா?” என்று கொலை வெறியோடு உறுமினான்.

"ஜீவா...” என்றவாறு உள்ளே நுழைந்த வருணும் சுஜித்தும், சமீர் ஜியாவிடம் கடுமையாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

வருண், சமீரின் கோபம் அறிந்தவனாய் எதுவும் பேசாமல் தள்ளியே நிற்க, சுஜித் சமீரின் அருகில் சென்று, “விட்ரு சமீர், ஏற்கனவே பண்ணின தப்புக்கு நாம இன்னும் ஓடிட்டு இருக்கோம். வேண்டாம், அவளைப் போக விடு.” என்று எவ்வளவோ எடுத்து சொல்ல சொல்ல, சமீரின் ஆத்திரமும் கோபமும் ஏறிக்கொண்டே தான் சென்றது.

அவனது இரும்பு பிடியில் இருந்து தன்னை விடுவிக்க எவ்வளவோ முயற்சித்தவள், அவன் கோபத்தில் கேசத்தைப் பிடித்துத் தள்ளியதில், மர டேபிளில் மோதி தலையில் இருந்து குருதி வழிய தன் ஜீவனைப் பாதி இழந்தவளாய், புயலில் சிக்கிய மலர் போலத் தளர்ந்து தரையில் கவிழ்ந்தாள்.

***

வீட்டில் ஜியா இல்லாமல் போக மிகுந்த கவலை அடைந்த ஆஷிக் அவளது அலைபேசிக்கு தொடர்பு கொள்ள, அவளிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் போக, சமீரிடம் தொடர்புகொள்ள அவனிடம் இருந்தும் எந்தப் பதிலும் வரமால் போக மிகுந்த ஐயம் கொண்டவன், தெரிந்த இடம் எங்கும் ஜியாவைத் தேடி அலைந்தான். ஒரு கட்டத்தில் ஜியாவைப் பற்றிய தகவல் எங்கும் இல்லாமல் போக, வேறு வழியில்லாமல் ரோஹித்துக்கும் ஆதர்ஷுக்கும் தகவல் கொடுக்க,

அவர்களும் அவனோடு இணைந்து கொண்டனர். அவளைக் காணாமல் அப்படி ஒரு ரண வேதனையை அனுபவித்தான். அவனது சிந்தனைகளே அவனை வாட்டி எடுத்தது, ‘ஒருவேளை தப்பான முடிவெதுவும் எடுத்திருப்பாளோ?’ என்று என்னும் பொழுதே அவனது கை, கால், உடல் என்று அனைத்து பாகங்களும் உதறியது. ஒரு கட்டத்தில் நண்பர்களின் வற்புறுத்துதலில் போலீசில் புகார் கொடுக்க முடிவெடுத்த ஆஷிக், அவர்களோடு அங்கே சென்றான்.

நொடிகள் கடக்க கடக்க அவனது இதயத் துடிப்பு மிகவும் அதிகமானது. வியர்வையில் குளித்தவன் போல உடல் நடுங்க போலீஸ் ஸ்டேஷனில் விடமால் வழிந்தோடிய விழிநீரை துடைத்தவாறே, வார்த்தைகள் தடுமாற அதிகாரி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லியபடி அமர்ந்திருந்தான்.

***

எழுந்து நிற்கக் கூட முடியாத அந்த நிலையிலும், இச்சையோடு தன்னை நெருங்கிய சமீரிடம் ஜியா, “நீ என்ன நினைச்சாலும் சரி, நான் உனக்குக் கிடைக்க மாட்டேன். என் ஆஷிக்குக்கு மட்டும் தெரிஞ்சா உன்னைச் சும்மா விடாமாட்டான்.” உறுதியாகக் கூற,

'என் ஆஷிக்குக்கு மட்டும் தெரிஞ்சா உன்னைச் சும்மா விடாமாட்டான்.' என்ற வரி அவனைக் கொடிய மிருகமாக மாற்றியது.

"சும்மா விடமாட்டானா? அவன் என்ன பண்றான்னு நானும் பார்க்குறேன்.” என்று நறநறத்தவன்,

பாதி மயக்கத்தில் கிடந்தவளை தரதரவென்று இழுத்துக் கொண்டு, இருட்டறைக்குள் தள்ளி கதவை சாற்றிக் கொண்டான்.

சமீரின் கட்டளைக்கு இணங்க சுஜித்தை, வருணும் ஜீவாவும் ஒரு அறையில் தள்ளி தாழிட, இருளின் வேட்டை தொடங்கியது.

அரை மயக்கத்தில் கிடந்த போதும் ஜியாவின் காதைக் கிழிக்கும் அளவிற்கு வந்த சிரிப்பொலி, அந்த அறையையே அரட்டியது. நவீன பகடை ஆட்டம் ஒன்று தொடங்க போவதை அவளது மூளை எச்சரிக்க, கால்களை இழுத்துக்கொண்டு மீண்டும் எழுந்து நின்றாள். பாவம் நிற்க கூட முடியவில்லை, பார்வையில் தெளிவில்லை.

இருந்தும் தன்னை வேட்டையாட நெருங்கிய மிருகத்திடம் இருந்து, தன்னைக் காப்பாற்ற ஒரு கிருஷ்ணனாவது வருகிறானா என்று மூட துடித்த இமைகளைப் போராடி பிரித்துப் பார்த்தாள். கண்ணில் தெரிந்ததெல்லாம் எக்காள சத்தத்துடன் தன்னை நெருங்கி வந்த அந்த துஷ்டன்தான்.

கோவிந்தா நின்னைச் சரணடைந்தேன் என்று தன் இரு கரங்களையும் விரித்திருந்தால், ஒருவேளை கோவிந்தன் உதவிருப்பானோ!

கற்பகிரகத்தில் கற்பழிக்கப்பட்ட பச்சிளங் குழந்தையைப் பார்த்து, கரையாத கல்லா தனக்காக இறங்கி வரப்போகிறது என்று எண்ணியவள், தன் கைகளை முடிந்த அளவு அக்கயவனிடம் இருந்து போராடவே பயன்படுத்தினாள்.

உயிர் இல்லாத கற்சிலையை நம்புவதை விட, கல் மனம் கொண்ட அந்த அரக்கனிடம் மன்றாடலாம் என்று எண்ணியவள், அக்கயவனின் கால்களைப் பிடித்து, “உன்னை நம்புனனே சமீர், ஏன் இப்படிப் பண்ற? என்னை விட்ரு ப்ளீஸ்...” கெஞ்சினாள்.

தன் கன்னங்களைத் தடவியவாறு சமீர், கால்களில் விழுந்த ஜியாவைப் பார்த்து, “உன்னைக் கஷ்டப் படுத்தணும்னு எனக்கும் எந்த விருப்பமும் இல்லை. என் கூட வா, சொர்க்கத்தைக் காட்றேன். என்னை விட ஒரு நல்லவனை நீ பார்க்க முடியாது, அந்த அளவுக்கு உனக்கு சந்தோஷத்தை குடுக்குறேன். ஆனா ஆஷிக்தான் வேணும்னு சொன்ன, நரகத்தை விடக் கொடுமையான வேதனையை நான் உனக்குக் கொடுப்பேன்.” இலகுவாக கூறினான்.

"இல்லை... என்னால மு... டி... யாது...” என்றாள் உறுதியாக.

"ஏன்?" விழி நோக்கி அறை அதிர கர்ஜித்தான். ஜியாவின் உடல் நடுங்கியது.

“பதில் சொல்லு...” அரட்டினான்.

நா ஒட்டிக்கொள்ள வியர்த்து உடல் விறைக்க, முகத்தைச் சுளித்தாள். மீண்டும் மிருகமானான், கேசத்தைப் பற்றினான், “முகத்தைச் சுளிக்கிற? என்னைப் பார்க்க அவ்வளவு வெறுப்பா இருக்கா? ம்ம்ம்...” சீறினான்.

"ஆஷிக்கை தவிர என் மனசுல வேற யாரும் இல்லை. உனக்கு நான் எப்பொழுதும் கிடைக்க மாட்டேன். உன்னைப் பார்க்கவே அருவெறுப்பா இருக்கு. ஒரு பொண்ணை அடிக்கிறியே, நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? நீ ஒரு மிருகம்...” என்று உணர்ச்சி வெடிக்கக் கத்தினாள். அழ கூடத் தெம்பில்லாமல் விசும்பினாள்.

முழு மிருகமாக மாறினான், “நான் மிருகம் இல்லை... மிருகத்தை விடக் கொடுமையானவன்னு காட்றேன்.” பற்களை நறநறத்தான்.

கேசத்தை வேரோடு இன்னும் இறுக்கி பற்றியவாறு தூக்கினான். மென்மையான வதனத்தைத் தன் விரல்களால் நசுக்கினான். தரதரவென இழுத்து சென்று சுவற்றின் மீது தூக்கி எறிந்தான். எங்கே தனது மூச்சு காற்றுத் தீண்டினால் கூடத் தன்னவளின் மென் தேகம் புண்பட்டுவிடுமோ என்று, தன்னை ஒரு பூவை போலப் பார்த்து பார்த்து காதல் செய்த தன் கணவனின் பெயரை, “ஆ... ஷி... க்...” உச்சரித்தவாறு கண்கள் சொருகி தரையில் சாய்ந்தாள்.

விழிநீரைத் தவிர அனைத்து பாகங்களும் ஊமையாகி போயின. மனிதர்கள் உறங்கிப்போக, அசுரனின் வேட்டை துவங்கியது.

கதறிய வாயும் போராடிய கரங்களும் பிணைக்கப் பட்டன. உதைத்த மலர் பாதங்களைச் சுருட்டுக்கு இரையாக்கினான். தனது வன்பசிக்கு அப்பூவை உண்டான். மிகவும் கொடுமையாக வேட்டையாடினான். வெறி அடங்கியது, வேட்டை முடிந்தது. உண்ட மயக்கத்தில் தளர்ந்து அறையை விட்டு வெளியேறினான்.

மயக்கம் மெல்ல தெளிந்தது, இமைகளைப் பல சிரமத்துக்குப் பிறகு பிரித்துப் பார்த்தாள். கண்களை மெல்ல சுழற்றினாள். கிழித்தெறியப்பட்ட ஆடைகள் எங்கோ ஒரு மூலையிலே கதறிக் கொண்டிருந்தது, எழும்ப முடியவில்லை.

உயிர் போகும் வலி முதுகெலும்பின் வழியே ஈட்டியை போலக் குத்தி துளைத்தது. எழுந்து நடக்க இயலவில்லை, நெருப்பால் சுடப்பட்ட பூ பாதங்களைத் தரையில் ஊன்ற முடியவில்லை. ஆனாலும் நடந்து பார்த்தாள், முடியவில்லை.

இறுதியில் அடிவயிற்றை இறுக்கப் பிடித்துக்கொண்டு தத்தி தத்தி தவழ்ந்தாள். கிழிக்கப்பட்ட ஆடைகளைத் தன் கையில் ஏந்தினாள். ஒருவேளை இரும்பில் ஆடை அணிந்திருந்தால்? என்றது இரும்பாகி போன இதயம். அட முட்டாள் பெண்ணே! இரும்பில் ஆடையா? அதை தனது காமத்தீயால் ஒரு நொடியில் உருக்கிருப்பான் அந்தச் சதை வெறிபிடித்த அரக்கன் என்றது மழுங்கி போன அறிவு.

கண்ணீர் வழிந்தது, ஆங்காங்கே குருதி வழிந்த தன் தேகத்தை ஒருவாறாக மூடிக்கொண்டாள். வலி உயிர் போனது. நடை பிணமானாள்.

என் அங்கத்தைச் சிதைத்த உன் உறுப்பை வெட்டி வீச வேண்டும். வெறிகொண்ட உன் விழிகளைப் பிடுங்கி எறிய வேண்டும். என்னை வதைத்த உன் கரங்களைக் கூர்வாளுக்கு இரையாக்கி பெருக்கெடுத்து ஓடும் உன் குருதியில் என் தேகத்தைக் கழுவி, கொதிக்கும் தனலுக்கு உன்னை இரையாக்க வேண்டும் என்று அவளது உள்ளம் சூழ் உரைத்த மறுநொடி,

அவளது செவி கிழியும் அளவிற்கு எக்காள சத்தம். காதுகளை மூடினாள், ஆனாலும் அந்தச் சத்தம் அவளை விடவில்லை, நிமிர்ந்து பார்த்தாள், உடலே அரண்டது. இடுகாடு போலக் காட்சியளித்தது அவள் நின்று கொண்டிருந்த அறை. அதே இருட்டறை... ஆம், அவளது கற்பை விழுங்கிய அதே அறை மீண்டும் முழங்கியது.

குள்ளநரிகளின் சதியில் சிக்கி சிதைந்து போன முட்டாள் பெண்ணே கேள், ‘சூழ் உரைக்க நீ திரௌபதியும் இல்லை. என் குருதி சிந்தியாவது உன் சபதம் முடிப்பேன் என்று நெருப்பில் அடித்துச் சத்தியம் செய்ய, உன் கணவன் ஒன்றும் வேந்தனும் இல்லை. அப்படி ஒரு யுத்தம் நிகழ்ந்தாலும், அதைக் காவியமாய் ஏட்டில் எழுதி போற்றித் துதிக்க இந்த மண்ணுலகில் எந்த மாந்தரும் இல்லை. மனிதர்கள் உறங்க, தேவதைகளை வதை செய்ய விழிமூடாமல் காத்திருக்கும் அரக்கர்கள் வாழும் இடுகாட்டு பூமி இது.

பேதை என்றால் பூலோகம் தாண்டி அடி பாதாளம் வரை கூடச் சென்று, வேட்டையாட துடிக்கும் வன்புணர்ச்சி கொண்ட ஓநாய் கூட்டங்கள் வாழும் இந்த இடுகாட்டில் ஒவ்வொரு பெண்ணும் தன் மானத்தையும், தன் உயிரையும் காத்துக்கொள்ளத் தனியே தான் போராட வேண்டும். உனது யுத்தத்தையும் நீதான் நடத்த வேண்டும்.

‘இந்த நேரத்தில் இவளுக்கு அங்கு என்ன வேலை?’

‘முயன்றிருந்தால் தப்பித்திருக்கலாம்.’

‘அது என்ன ஆண் நண்பர்கள்? ஒரு ஆண் எப்படி ஒரு பெண்ணிற்கு நண்பனாக முடியும்?’

‘நடந்தது நடந்து விட்டது, அடுத்தக் கதையைப் பார்ப்போம்.’

‘இருட்டில் நடந்ததை இப்படியா வெளிச்சம் போட்டு காட்டுவது?’

‘தவறு இவள் மீதும் இருக்கும்.’ எத்தனை கேள்விகள். இதை அனைத்தையும் தாண்டி நீ போராடி வெற்றி அடைந்தாலும் உன் கழுத்தில் விழப்போவது என்னவோ, 'பழி மாலை' மட்டும் தான். இப்பொழுதும் நீ போராட தான் போகிறாயா? சாட்சியாக எதைக் காண்பிப்பாய்?

இந்த இருட்டு அறையையா? இல்லை சிதைக்கப்பட்ட உன் தேகத்தையா? பதில் இல்லையா, என் கேள்விக்கே?

உலர்ந்து போனாயே பெண்ணே! நீ பார்க்காத மிருகங்கள், பல மனித வேடத்தில் உன்னைக் கேள்விகளாலும் வார்த்தைகளாலும் வதைக்கக் காத்திருக்கின்றதே, அவைகளுக்கு என்ன பதில் சொல்லுவாய்?

போராடி என்ன பயன் என்று தோன்றுமே? அறிவேன் நான்

ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்று தோன்றுமே? அறிவேன்.

உன்னை ஈன்றவள் மீதும் கோபம் வருமே?

உன் மீதே வெறுப்பு வருமே? அறிவேன்.

இதற்கு தான் இந்த வீர முழக்கமா? மூலையில் முடங்க போகும் உனக்குச் சபதம் ஒரு கேடா? நீயும் ஒரு பெண் தானே! உன்னிடம் நான் வேறெதை எதிர்பார்க்க? நானும் ஒரு முட்டாள்தான், உன் சபதம் கண்டு ஒரு கணம் வியந்து விட்டேன், எங்கே நீதான் இந்தக் காரிருளின் விடிவெள்ளி என்று!

போ, போய் ஓர் இருட்டறையில் முடங்கிக் கொள். இல்லை, உன் உயிரை மாய்த்துக்கொள்! சீக்கிரம் ஊமையாகி விடு, அப்பொழுது தானே விழித்திருக்கும் வேட்டை நாய்களால், இன்னொரு பூவை வதைக்க முடியும் என்று, அவளை அந்த இருட்டறை எள்ளி நகையாடியது போன்ற பிரம்மை, அவள் விழி முன் வந்து மறைந்து செல்ல, ரத்தம் உலையெனக் கொதிக்க கதறி அழுதாள்.

விழிநீர் வலிய வலிய கன்றி போன முகம் நெருப்புப் பட்டது போல எரிந்தது. சுவற்றைப் பிடித்தவாறு எழுந்து நின்றாள். நிற்க முடியவில்லை. மீண்டும் கண்கள் சொருகி, சரிந்து விழ போனவளைத் தாங்கி பிடித்தது இரு கரங்கள். அதே கரங்கள்... தன் பெண்மையைச் சிதைத்த அதே கரங்கள், உதறி தள்ளினாள்.

"உன்னை ஒரு பூ மாதிரி பார்த்துக்கணும்னு நினைச்சேன், என்னைப் புயலா மாத்திட்டியே? ஏன் ஆஷிக்க கல்யாணம் பண்ணின? எனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது. கடைசியா கேக்குறேன், என்கூட வந்திரு."

"செத்துப்போனாலும் உன்னை... என்னை..."

'என்னைக்கும் நேசிக்க மாட்டேன்' என்பது போல முகத்தைச் சுளித்தவாறு தலையைக் குறுக்கே ஆட்டினாள்.

"அப்போ செத்து போ... ஆ...” என்று தன் தலையைப் பிடித்தவாறு கத்தியவன் அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்து, அவள் எதுவும் யூகிக்கும் முன் மயக்க ஊசியை அவளது தேகத்தில் செலுத்தினான். வலியுடன் கேள்வியாய் பார்த்தவளுக்கு, பதிலாய் கிடைத்தது அரக்கன் சமீரின் அகோர சிரிப்பொலி மட்டும் தான். வெறித்துக் கூடப் பார்க்க முடியவில்லை மங்கிப்போன விழிகள். சரிந்து வீழ்ந்தாள், உயிரணுக்கள் துடித்தது.

கடவுளுக்கும் கிடைக்காத பரிசு

‘நண்பன்’ எங்கோ படித்த ஞாபகம்

நண்பன் என்று தானே நம்பி வந்தேன்,

உனக்காக உயிர் கூடத் துறப்பேன் என்றாயே!

காவலன் என்று எண்ணினேன், காமுகனாய் மாறியதேனோ?

அன்று ஆதரவாய் வருடிய கரங்கள்,

இன்று என் ஆடைகளைச் சூறையாட துடித்தது.

உறுத்தவில்லையா உன் உள்ளம்?

அன்று நான் இருக்கிறேன் என்று சூழ் உரைத்த இதழ்கள்,

இன்று என் அதரத்தை சிதைக்கச் சித்தம் கொண்டது.

கூசவில்லையா உன் மனம்?

அன்று நம்பிக்கை கொடுத்த விழிகள்,

இன்று முள்ளாய் என் மேனியை சிதைகின்றது.

வலிக்கவில்லையா உன் இதயம்?

கைகள் கூப்பிக் கெஞ்சினேன்,

கரையவில்லையா உன் கல்நெஞ்சம்?

என் குருதியை குடித்து உன் போகத் தாகத்தைத் தீர்த்த

சதை வெறியனே, ஒரு நொடி கூடவா

என் கதறலில் உன் தமக்கையைக் காணவில்லை?

என் பெண்மையை உண்டு உன் காமப்பசியைத் தீர்த்த

பிணந்தின்னியே,

ஒரு கணம் கூடவா என் சிதறலில் உன் தாயை பார்க்கவில்லை.

நீ இன்பமடைய

என் பெண்மையைக் குடித்து உன் காமவெறிக்கு பழிதீர்த்தாய்.

காற்றடைத்த வெறும் கூடாய் நடை பிணமானேன்,

நீ குளிர்காய!

என் தேகத்தை உன் காமத்தீக்கு இரையாக்கினாய்,

காற்றில் பறக்கும் வெறும் சாம்பலாய் ஆனேன்.

என்னை காக்க என் ராமன் இல்லை,

என் மானத்தைக் காக்க எந்தக் கிருஷ்ணனனும் இல்லை,

என்னைக் கவர்ந்து செல்ல ஒரு ராவணன் கூட இல்லை,

உன் காமப் பசிக்கு என் பெண்மையை உண்ண தெரிந்த உன் ஆண்மைக்கு,

உன் வயிற்று பசியைப் போக்கிய உன் தாயும் ஒரு பெண் என்பது மட்டும் எப்படி மறந்து போனது?

என்று தனலில் வீசப்பட்டது போலத் துடித்தவளின் விழிகள், ரணமாக உணர்ச்சியற்ற சதை பிண்டம் போலத் தரையில் கிடந்தாள்.

இன்று சர்வதேச பெண்கள் தினம், என் பெண்மைக்கு இறுதி அஞ்சலி. வீதியோரம் வண்ண விளக்குகள், வீரமான மேடை பேச்சுகள், பல பல விருதுகள்.

ஆண்களே பலே!

கண்ணகியை கல்லாக்கி விட்டிர்கள்

திரௌபதியை துகிலுரித்தீர்கள்

சீதையை உயிரோடு சிதையில் இட்டு இறுதியில் புதைத்தே விட்டிர்கள்

பாரத மாதா மட்டும் வெறும்

பாரதியாய் இருந்தால் அவளையும் பலியிட்டுருப்பீர்கள் அல்லவா?

கயவனே உன்னையும் கல்லால் அடித்து, சிதையில் சிதைத்து, துகிலில் தூக்கிலிட்டு, பூமியில் புதைக்க எத்துணை நொடி எடுக்கும்?

பெண்கள் தினத்தைக் கொண்டாடும் ஆண்களே கேளுங்கள்,

பெண்மையை உண்பதல்ல ஆண்மை, பெண்மையைக் காப்பதுவே ஆண்மை.

என்று அவளது தேகத்தில் இருந்து சிதறிய அவளது ஒவ்வொரு துளி ரத்தமும் கதறியது.

மீண்டும் அலறியது சமீரின் அலைபேசி. இந்த முறை ஆஷிக்கின் பெயரைப் பார்த்த சமீரின் முகத்தில் ஏளன புன்னகை. வாய்விட்டு சிரித்தவன் இரண்டு, மூன்று முறைக்குப் பிறகு அட்டென்ட் செய்து, "என்னாச்சு ஆஷிக், நிறைய மிஸ்ட் கால்ஸா இருக்கு? கொஞ்சம் வேலையா இருந்தேன் கவனிக்கல, எல்லாம் ஓகே தானே?” என்றான் மிக இயல்பாக.

"இல்... லை..." என்று ஆஷிக் தடுமாற, தன் இமைகளை மூடி ரசித்த சமீர்,

"என்னாச்சு ஆஷிக், வாய்ஸ் டல்லா இருக்கு.” என்றான் ஜியாவின் வதனத்தை உரசியவாறு. தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் அவளால் உணர முடிந்தாலும், மருந்தின் வீரியத்தால் உடல் உறுப்பெல்லாம் செயலற்று போக, விழிகள் கலங்கியவாறு சிலையெனச் செயல் அற்றுக் கிடந்தாள்.

"சமீர் ஜியாவ காணும், எங்க தேடியும்...” என்று தொடர்வதற்குள் ஆஷிக்கின் வார்த்தைகள் பின்னிக்கொள்ள,

அவனது குரலில் தெரிந்த அவனது வலியை இமை மூடி ரசித்த சமீர்,

"ஜியாக்கு என்னாச்சு?” என்று புன்னகையை மறைத்து கேட்க,

"ஜியாவ காணும், எல்லா இடமும் தேடிட்டேன் கிடைக்கல. உன்கிட்ட ஏதும் சொன்னாளா?” என்று உடைந்து அழுதான்.

"இல்லை ஆஷிக், நீ இப்போ எங்க இருக்க, நானும் வரேன்."

"இல்லை பார்த்துக்கிறேன், தேவைப்பட்டா சொல்றேன்."

"ஜியா வீட்டுக்கு வந்ததும் சொல்லு, ஏதும் ஹெல்ப் தேவைப்பட்டா உடனே இன்ஃபார்ம் பண்ணு.” என்றவனிடம் சரி என்பதாய் கூறிவிட்டு தன் அழைப்பைத் துண்டித்தான்.

கிழிந்த நாராகக் கிடந்தவளை வெறித்துப் பார்த்தவன் அறையை விட்டு வெளியேறி, தன்னையே கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருந்த தன் நண்பர்களின் அருகில் வந்து, சோபா மீது சாய்ந்து கொண்டு ஒய்யாரமாக அமர்ந்தான்.

அவனிடம் ஜீவா ஏதோ பேச வாயெடுக்க, வெளிப்புறமாகத் தாழிட்ட அறையில் இருந்து சுஜித் விடாமல் கத்தி கொண்டிருக்க, கதவைத் திறந்து விடுமாறு சமீர் தன் கண்களாலே வருணை பணிக்க, வெளியே வந்த சுஜித் மூவரையும் இறுக்கமாகப் பார்த்துவிட்டு நேரடியாக ஜியாவின் அருகே செல்ல, பேச்சு மூச்சுன்றிச் சிலையெனக் கிடந்தவளைப் பார்த்து அதிர்ந்த சுஜித் பதறியவாறே சமீரிடம்,

"என்னடா இப்படிப் பண்ணிருக்க? பேச்சு, மூச்சு இல்லாம இருக்காடா, கொன்னுட்டியாடா?” என்று ஆவேசத்துடன் சட்டையின் காலரை பற்றிக் கொண்டவாறே கேட்க, தன் மீது இருந்த சுஜித்தின் கரத்தை நிதானமாய் எடுத்து போட்டவன்,

"இல்லை, இன்னும் செத்துருக்க மாட்டா. சாகுறதுக்கு இன்னும் நாள் இருக்கு, ஸோ ரிலாக்ஸ்!” என்று அலட்சியமாகக் கூற, வேகமாக உள்ளே சென்று பார்த்த ஜீவாவும் வருணும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

"எல்லாம் முடிச்சுட்ட, உயிரை மட்டும் ஏன் விட்டு வச்சுருக்க? இவ கதைய இங்கையே முடிச்சுரு." என்ற ஜீவாவை பார்த்துச் சத்தமாகச் சிரித்த சமீர், நொடியில் அவனைத் தன் விழிகள் சிவக்க பார்த்து,

"என்ன ஜீவா, தனியா கேம் ஆடுறியா? என்னை மாட்டிவிடப் பார்க்கிறியா?” என்று கேட்க,

"இல்லடா, அப்படி எல்லாம் இல்லை."

"முட்டாள்! எதுக்கும் யூஸ் இல்லாத நீ எனக்கு அட்வைஸ் பண்றியா? செத்தான்னா நாம கண்டிப்பா மாட்டுவோம், கேஸ் மீடியா வரை போகும், ஆஷிக் கண்டிப்பா விடமாட்டான். இவளை ஹைவேஸ்ல எங்கையாவது தூக்கி போடுவோம். இந்நேரத்துக்கு ஆஷிக் கண்டிப்பா போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் குடுத்திருப்பான். போலீஸ் தேடும், இவளை கண்டுபிடிப்பாங்க. செக் பண்ணும் பொழுது ரேப்னு தெரிய வரும்.

ஆனா தெரிஞ்சி எதுக்கு? உணர்ச்சி எல்லாம் செத்து போய் இப்போ கிடக்குற மாதிரி தான் கிடப்பா. கண்டிப்பா ஆஷிக் மீடியாக்குத் தெரிஞ்சா கேவலம்னு குடுத்த கேச அவனே க்ளோஸ் பண்ணிருவான். இவ உயிர் பிழைக்கிறது எல்லாம் ரொம்பக் கஷ்டம். அப்படியே உயிரோட வந்தாலும், என்னன்னு என்னைப் பத்தி சொல்லுவா? சொல்லி எதுக்கு? அவ சொல்லும் பொழுது நான் அவன் வீட்டுக்கு மாப்பிள்ளையா இருப்பேன். ஆஷிக்கால ஒன்னும் பண்ண முடியாது. அதையும் மீறி கோர்ட்டு கேசுன்னு போனாலும், நான் ரேப் பண்ணினதுக்கு என்ன சாட்சி இருக்கு?

கேஸ் போட்ட வேகத்துல க்ளோஸ் ஆகிரும், அசிங்கம் அவங்களுக்குத் தான். அப்புறம் கொஞ்ச நாள் அந்த ஆயிஷா கூட வாழ்வேன், சொத்து கிடைச்சதுக்கு அப்புறம் அவளைக் கழட்டி விட்ருவேன். ஸோ நமக்குப் பிரச்சனை வராம இருக்கணும்னா இவ இருக்கணும்.” என்ற பிறகு புன்னகைத்த ஜீவா,

"செமடா, சான்ஸே இல்லை... எப்படிடா இப்படி யோசிக்கிற?” என்று பாராட்ட,

"எப்படியோ... இவளோட சாப்டர் இதோட முடிஞ்சிருச்சுன்னா அதுவே போதும்.” என்று வருண் நிம்மதி அடைய,

"இந்தப் பாவத்துல என்னால பங்கெடுத்துக்க முடியாது சமீர்.” என்ற சுஜித்தைப் பார்த்து முறைத்த சமீர், தன் விழிகளை மூடி மூச்சை இழுத்து விட்டவாறு மிகவும் சிரமப்பட்டு, தன் கோபத்தை அடக்கி கொண்டு அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்து,

"பங்கெடுத்துக்க முடியாதா? பங்கெடுத்து தான் ஆகணும். பழசு இன்னும் ஞாபகத்துல இருக்கா? இல்லை, முதல்ல இருந்து சொல்லணுமா? நான் பண்ணின எந்தத் தப்புக்கும் சாட்சி இல்லை, ஆனா நீ பண்ணினத்துக்குப் பக்கா ப்ரூப் என்கிட்ட இருக்கு.

சொடக்கு போடுற நேரத்துல உன் இமேஜ் எல்லாத்தையும் காத்துல பறக்க வச்சுருவேன். தி பெஸ்ட் யங் டாக்டர் ஆஃப் தி இயர் டூ தௌசண்ட் எய்ட்டீன் கோஸ் டு, 'மிஸ்டர் சுஜித் கண்ணா' அவார்ட் குடுக்கும் பொழுது சிரிச்சு சிரிச்சு வாங்கினல?

நான் நினைச்சா உன் பேரு, புகழ் எல்லாத்தையும் தரை மட்டமா ஆக்க முடியும். ஸோ மூணு பேருக்கும் சேர்த்து சொல்றேன், என்னை மீறி எதாவது கேம் ஆடுனீங்க... அப்புறம் நான் வைக்கிற செக்ல இருந்து உங்களால தப்பவே முடியாது.” என்று தன் குரலை உயர்த்தியபடி எச்சரித்தான்.

ஜீவாவும் வருணும் சுஜித்தைப் பார்த்து முறைக்க, சுஜித் குற்ற உணர்வில் வேறு வழியின்றி இயலாமையோடு தலை கவிழ்ந்து அமர்ந்தான்.

யாரும் இல்லாத ஹைவேயில் சாலையின் ஓரமாக ஜியாவை கிடத்தியவர்கள் வந்த வேகத்தில் அங்கிருந்து செல்ல, அந்த வழியே வந்த டாக்சி ஒன்று சிறிது தூரம் போனதிற்குப் பிறகு சாலை ஓரமாக, யாரோ கிடப்பதை பார்த்து வண்டியின் வேகத்தைக் குறைத்தவாறு ஜியாவின் அருகில் வந்தது.

***

ஆதர்ஷும் ரோஹித்தும் ஒருவகையாக ஆஷிக்கை ஆசுவாசப்படுத்தினாலும், ஜியாவை இழந்து விடப் போகிறோமோ என்ற ஒருவித தவிப்பு அவனது ஆழ்மனதில் ஆழமாக ஊடுருவிருக்க, அதை எப்படிச் சொல்லுவது என்று விளங்காமல் தவித்தான்.

ஆதர்ஷும் ரோஹித்தும் அவனை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும், அவன் சமாதானம் அடையவில்லை. உயிரற்று வெறும் கூடாய்த் திரிந்தான். பார்க்கும் பெண் எல்லாம் ஆஷிக்கின் கண்ணிற்கு ஜியாவாகவே தெரிய, மனதில் ரண வேதனை அடைந்தான். அவளிடம் சண்டையிட்ட தருணங்கள் எல்லாம் நினைவிற்கு வர, தன்னைத் தானே வருத்தி கொண்டான்.

“எங்க இருந்தாலும் என்கிட்ட வந்திரு ஜியா...!” என்று உணர்ச்சி ததும்பக் கதறினான்.

அவனது அலைபேசி விடாமல் சிணுங்க ஜியாவாக இருக்கும் என்று எண்ணி அலைபேசியை எடுத்து பார்த்தவனின் முகம், இமைக்கும் பொழுதில் சுருங்கி போகச் சட்டென்று கட் செய்தான்.

மீண்டும் அழைப்பு, “டேய் தியாக்கு என்னடா வேண்டும்? நிலைமை தெரியாம அடிச்சுட்டே இருக்கா, எனக்குக் கடுப்பா இருக்கு.” என்று ஆதர்ஷிடம் முறையிட,

அலைபேசியை வாங்கியவன், "டென்ஷன் ஆகாதடா, அவ இன்னைக்கு ஊருக்கு கிளம்புறால அதனால தான் பேசிருப்பா. என் ஃபோன்ல சார்ஜ் இல்லை, அதான் உனக்கு அடிக்கிறா நான் பேசுறேன்.” என்றவன்,

தியாக்கு தொடர்பு கொள்ள, “வாட்! எங்க? இதோ இப்போவே வரோம்.” என்று பதற்றத்துடன் ஆஷிக்கைப் பார்த்தான்.

***

நிலவே 63

ஹாஸ்பிடலில் ரத்த வெள்ளத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் உணர்வற்றச் சிலையெனக் கிடந்த, ஜியாவைப் பார்த்த ஆஷிக்கின் இதயம் படப்படவென்று அடித்தது.

அடிவயிற்றில் ஆரம்பித்து மனதில் முழுவதும் சொல்ல முடியாத வலி கொடிய நஞ்சைப் போல வேகமாகப் பரவி, தொண்டைக் குழியில் வந்து நின்றது வார்த்தைகள் இன்றித் திகைத்து நின்றான்.

அறையை விட்டு வெளியே வந்த டாக்டரிடம், “ஜியா, உள்ள என் வைஃப் எப்படி இருக்காங்க? ஒன்னும் இல்லல...?” என்று வார்த்தைகள் நாவில் சிக்கிக்கொள்ளப் பதற்றத்துடன் கேட்ட ஆஷிக்கை, தன் அறையில் வந்து பார்க்குமாறு சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து நகர, மருத்துவரின் முகத்தில் இருந்த கலவரம் அவனுக்குள் புயலைக் கிளப்பியது.

அவரது அறைக்குச் சென்றான். அவனது முகத்தில் தொனித்த பதற்றத்தை உள்வாங்கிய மருத்துவர், சில நொடிகள் இடைவெளி விட்டு, "மிஸ்டர் ஆஷிக், உங்களுக்குக் கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது?"

"ட்வென்டி நைன் டேஸ் ஆகுது, ஜியா எப்படி இருக்கா?"

"நான் சொல்ல போற விஷயம் ரொம்பக் கடினமானது. ஆனா நீங்க தாங்கிக்கிட்டு தான் ஆகணும், மனசை திடப் படுத்திக்கோங்க.” என்றவர் நீண்ட பெருமூச்சை வெளியிட்டவாறு,

"யுவர் வொய்ஃப் ஹேஸ் பீண் ப்ருட்டலி ரேப்ட்!” என்று கூற, மருத்துவரின் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த, ஆஷிக்கின் முகத்தில் வியர்வைத் துளிகள் வழிந்தோடியது. உடல் விறைத்துப் போக, விரல்கள் நடுங்கியவாறு அமர்ந்திருந்தவனின் விழிகளின் விளிம்பில், கண்ணீர் எந்நேரமும் வழிந்தோட தயாராக இருந்தது.

"மிஸ்டர் ஆஷிக்!” என்று மருத்துவர் அழைக்கவும், விழிநீர் தடையின்றி வலிய மேலும் தொடர்ந்தவர்,

"அவங்களை ரொம்பச் சித்திரவதை பண்ணிருக்காங்க, உடம்பெல்லாம் பல கீறல்கள் இருக்கு. இன்டெர்னல் ப்ளீடிங் அதிகமா இருக்கு. பாடி மார்க்ஸ் வச்சு க்ளியரா என்னால இது ரேப்ன்னு சொல்ல முடியும். ஆனா செமன் ட்ரேஸஸ் எல்லாத்தையும் தெளிவா க்ளீயர் பண்ணிருக்காங்க, ஸோ ப்ரூஃப் இல்லை.

கன்டினியுஸா ரேப் பண்ணிருக்காங்க. எல்லாத்துக்கும் மேல அவங்களோட ப்ளட்ல ஒரு பயங்கரமான ஹெவி எஃபெக்ட் உள்ள போதை மருந்தை இன்ஜெக்ட் பண்ணிருக்காங்க. அதனால தான் இப்படி அவங்க எந்த உணர்ச்சியும் இல்லாம இருக்காங்க. உயிர் மட்டும்தான் இருக்கு, இந்த கண்டிஷன் தொடர்ந்தா ஷி வில் டை.

உடனே சரியான ட்ரீட்மெண்ட் குடுக்கலைன்னா உங்க மனைவி உயிரோட இருக்க மாட்டாங்க." என்று அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவனது இதயத்தைக் குத்தி குத்தி ரணமாக்கியது. நரம்பெல்லாம் புடைக்க, ரத்தம் உலையெனக் கொதித்தது. விழிகள் தீ பிழம்பாக, “நோ...!” என்றவாறு அவரது டேபிளில் உள்ள பொருட்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டவன், வெறி பிடித்தவன் போல நடந்து கொண்டான்.

‘யார்? ஏன்?’ என்று அவன் மனம் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் அவனிடம் பதில் இல்லை, தலை கனத்தது.

கோபம் தலை தூக்க கண்ணில் பட்ட அனைவரையும் சந்தேகத்தோடு பார்த்தான். ஆதர்ஷ், ரோஹித், தியா, நர்ஸ் இப்படி அனைவரும் எவ்வளவோ தடுக்க, தன் நிலையை முற்றிலுமாய் மறந்தவன், ஒரு கட்டத்தில் ரோஹித்தை கீழே தள்ளிவிட்டு ஆதர்ஷையும் அடிக்கக் கை ஓங்கினான்.

அனைவரும் அதிர்ச்சியில் நிற்க, விழிகள் விரிய அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன், ஜியா இருக்கும் அறைக்குள் அத்துமீறி நுழைந்தான். ஆஷிக்கின் அனல் பார்வை அனைவரையும் அவனிடம் இருந்து தள்ளி வைத்தது.

ஆதர்ஷ் தலையில் கை வைத்தவாறு வந்து அமர்ந்தான்.

"எப்படிடா இவனைச் சமாளிக்கப் போறோம்? ஜியாவ யாருடா இப்படிப் பண்ணிருப்பாங்க?” என்ற பொழுதே அவனது விழிகளில் இருந்து கண்ணீர் சுரக்க,

"யாரா இருந்தாலும் அவங்களுக்குத் தண்டனை கிடைச்சே ஆகணும்.” என்று ரோஹித் ஆக்ரோஷமாகக் கூற, தியா அவர்களைச் சமாதானம் செய்தவாறு, “இப்போதைக்கு ஜியா பழையபடி நார்மலாகி வரணும். இல்லனா ஆஷிக்கோட நிலைமை ரொம்ப மோசமாகிரும்."

"ஜியா கூட வேற யாரையாவது பார்த்தியா?"

"இல்லை ஆதர்ஷ், யாரோ ரோட்டோரமா விழுந்து கிடந்த மாதிரி இருந்தது. கீழ இறங்கி பார்த்தப்போ தான், ஜியான்னே தெரியும். உடனே ஹாஸ்பிடல் வந்துட்டேன். எவ்வளவோ ட்ரை பண்ணினேன், ஃபோனை யாருமே எடுக்கலை. டாக்டர் விஷயத்தைச் சொன்னப்போ என் உடம்பெல்லாம் நடுங்கிருச்சு.” என்றவள் மேலும் தொடர்ந்து, "நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க, நீங்களே டென்ஷன் ஆனா ஆஷிக்கையும் ஜியாவையும் யாரு பார்த்துக்குங்க?” என்று அவர்கள் இருவரையும் ஆறுதல்படுத்திக்கொண்டு இருந்தாள்.

கோபத்தில் தகத்தகவென்று எரியும் விழிகளோடு உள்ளே நுழைந்தவனது கோபம் எல்லாம், கசங்கி எறியப்பட்ட மலர் போல உலர்ந்து கிடந்த தன் மனைவியைப் பார்த்ததும் மறைந்து போக, கை கால்கள் நடுங்கியவாறே, அவளது அருகில் மெல்ல மெல்ல நடந்து வந்தான்.

முகத்தில் இருந்த ஆக்ஸிஜன் மாஸ்க், கையில் பொருத்தப்பட்ட நரம்பு ஊசி, தலை, கை, கால்களில் கட்டு என்று அசைவின்றி, விழிகள் மூடிய நிலையில் கிடந்த தன்னவளைக் கண்ட நொடியே, மனதின் ஓரத்தில் கனன்று கொண்டிருந்த கோபம் எல்லாம் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போனது.

கன்றி போய் இருந்த வதனத்தில் தெளிவாகத் தெரிந்த ஐவிரலின் சுவடு, அவனது இதயத்தைக் கசக்கி பிழிந்தது. கழுத்து, கை, கால் என்று கண்ணில் பட்ட பாகங்களில் இருந்த கீறல்கள், அதில் காய்ந்த நிலையில் இருந்த ரத்த கறைகள் அவன் இதயத்தை ரணமாக்கியது. அவளது நெருப்பிடப்பட்ட பாதம், கலைந்த கேசம், நைந்து போன விரல்கள் அவனைச் சுக்கு நூறாக உடைத்தது. பார்த்து பார்த்து காதல் செய்த மனைவி இன்று, கிழிந்த ஓவியம் போலத் தன் கண்முன் கிடப்பதைப் பார்த்தவன் நிலை குலைந்து போனான், விரல்கள் நடுங்கிற்று.

மெதுவாய் கேசத்தை வருடியபடி, “ஜி... யா..." என்று அழைத்தான். அசைவில்லை. நெஞ்சோரத்தில் மின்னல் வந்து பாய, விழிகள் இரண்டும் நீரில் தத்தளித்தது. உள்ளத்தில் உணர்ச்சி குவியல் அடக்க முடியவில்லை கதறினான். “ஜியா...!” என்றவாறு கதறினான். அவனது எதிரொலியே அதீபயங்கரமாய் அவனது காதையேக் கிழித்தது.

ஒரு சில நொடியில் ஜியாவின் கை, கால்கள் எல்லாம் எக்கு தப்பாக அடித்துக்கொள்ள, “ஜியா என்னாச்சு?” என்றவாறு அடக்க முயற்சித்தான், முடியவில்லை. விழிகள் திறந்திருக்கக் கண்ணீர் விடாமல் வழிந்தோடியது.

"டாக்டர்!” என்று உரக்கக் கத்தினான். அவனது குரல் கேட்டு பதறியவாறு அனைவரும் உள்ளே வந்தனர். ஒரு சில நிமிடங்கள் கழித்து மருத்துவர் கொடுத்த சிகிச்சையில், ஜியா பழைய நிலைக்கு வந்தாள்.

ஆஷிக்கை அறையை விட்டு வெளியேறும்படி மருத்துவர் எவ்வளவோ கூறினார், நகரவில்லை. அவனைத் தடுத்த செக்யூரிட்டி கார்ட்ஸ் அனைவரையும் தாறுமாறாகத் தாக்கியவன், மீண்டும் சென்று ஜியாவின் அருகிலே அமர்ந்துகொள்ள ஆத்திரமடைந்த மருத்துவர்,

"உங்க மனைவிக்கு இப்போ வந்தது பேரு ஃபிட்ஸ். அவங்க இருக்கிற நிலைமையில மறுபடியும் ஃபிட்ஸ் வந்தா உயிருக்கே ஆபத்தாகிடும். ஏற்கனவே அவங்க ரொம்பப் பாதிக்கப்பட்டு இருக்காங்க. அவங்களுக்கு ரெஸ்ட் தேவை. இவ்வளவு நேரம் கழிச்சு இப்போ தான் அவங்க கண் முழிச்சே பார்த்திருக்காங்க. அப்படினா உங்களோட செயல் அவங்கள பாதிக்குதுன்னு அர்த்தம்.

உங்க வேதனையை அவங்ககிட்ட காட்டாதீங்க. அவங்களால உங்களுக்கு ரியாக்ட்தான் பண்ண முடியாது. ஆனா நீங்க பேசுறத கேட்க முடியும், நீங்க பண்றத பார்க்க முடியும். உங்க நிலைமை புரியுது, அவங்களோட நிலைமையையும் பாருங்க.

அவங்கள ரெஸ்ட் எடுக்க விடுங்க, புரிஞ்சிக்கோங்க. இப்படி நீங்க பண்ணுனீங்கன்னா அவங்க உயிருக்கே ஆபத்து வரலாம்.” இவ்வாறு எடுத்து கூற,

தன் இறுக்கத்தைத் தளர்த்தியவன் தன்னவளின் கலைந்த கேசத்தை இதமாக வருடி கொடுத்து, உச்சியில் மென்மையாய் இதழ் பதித்தான். ஜியாவின் மூடியிருந்த விழிகளில் இருந்து கசிந்த கண்ணீர் துளிகள், அவனது உள்ளதைக் கசக்கி பிழிந்தது. நெஞ்சைப் பிடித்தவாறே வேகமாக அறையை விட்டு வெளியேறினான்.

'இப்படி நீங்க பண்ணுனீங்கன்னா அவங்க உயிருக்கே ஆபத்து வரலாம்.' என்ற மருத்துவரின் வரிகள் அவனைப் பயமுறுத்தியது. அசைவின்றித் தரையில் அமர்ந்திருந்தான். திகிலடைந்த நிலையில் அவன் எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அமர்ந்திருந்த விதம் அவனது நண்பர்களை அச்சுறுத்தியது.

அருகே வந்த ரோஹித் அவனது தோள்களைப் பற்றியவாறு அவனது அருகே வந்து அமர, மனம் உடைந்து தேம்பி தேம்பி நண்பனின் தோள் மீது சாய்ந்து அழுதான்.

நொடிகள் நிமிடங்களாகக் கடந்திருந்த நிலையில் கண்ணீரைத் துடைத்தவாறு நிமிர்ந்து அமர்ந்த ஆஷிக், மூவரையும் பார்த்து எதையோ சொல்ல வாயெடுக்க, அவன் கூற வருவதைப் புரிந்து கொண்டவர்கள் அவன் எதுவும் பேசுவதற்குள் அவனை இறுக்க அணைத்துக் கொண்டார்கள்.

"யாரா இருந்தாலும் அவங்களுக்குச் சரியான பாடத்தைக் கத்து குடுக்கணும் ஆஷிக்.” என்றாள் தியா தன் விழிகள் கலங்கியபடி.

தியாவைத் தொடர்ந்து ஆதர்ஷ், ரோஹித்தும் இருவரும் ஆஷிக்கிடம், "போலீஸ்கிட்ட...” என்று தொடர்வதற்குள் அவர்களைக் குறுக்கிட்ட ஆஷிக்,

"இல்லை, இப்போதைக்கு ஜியா குணமாகி வந்தாலே போதும். அவளுக்கு எந்தப் பாதிப்பும் இருக்கக் கூடாது. முதல்ல ஜியா சரியாகி வரட்டும். அதற்கு அப்புறம் யாரா இருந்தாலும் சரி, என் ஜியாக்கு குடுத்த அதே வலிய அவங்களுக்கு நூறு மடங்கு அதிகமா குடுப்பேன். அதுவும் ஜியாவ வச்சே செய்வேன்.” என்று அமைதியோடு ஆரம்பித்தவன், இறுதியில் ஆக்ரோஷத்தோடு உறுதிகொண்டான். விழிகள் தனலைக் கக்கியது. தகுந்த சமயத்திற்கு வேண்டி பழிவாங்குவோம் என வெறியைத் தன் நெஞ்சுக் குழிக்குள்ளே அடக்கிக்கொண்டான்.

ஹாஸ்பிடலுக்கு வந்த சமீர் ஆஷிக்கிடம், “ஜியாக்கு என்னாச்சு?” என்று பொய்யான பதற்றத்தோடு கேட்க,

"ஜியாக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு, ட்ரீட்மெண்ட் குடுத்துட்டு இருக்காங்க. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.” என்று ஆதர்ஷ் சமீருக்குப் பதில் கூறினான்.

ஆதர்ஷ் கூறியதைக் கேட்ட சமீரின் பார்வை எல்லாம் ஆஷிக்கின் மீதே பதிந்திருந்தது. கலவரத்தோடு காணப்பட்ட ஆஷிக்கைத் தன் மனம் குளிர ரசித்தவன் மனதிற்குள், ‘செஞ்சதே நான்தான், என்கிட்டவே வா? நான்தான் அவளைச் சாகடிக்கவே இல்லையே? அப்போ உயிரோட தான் இருப்பா. ஆனா உன் நண்பன் தினம் தினம் சாகப் போறான்.’ சிரித்தவன்,

"நான் ஜியாவ பார்க்கணும்.” என்றவாறு சமீர் உள்ளே நுழைய முயல,

அவனைத் தடுத்த ஆஷிக், “யாரும் உள்ள போகக் கூடாது.” என்று முணுமுணுக்க,

"ஏன்? டாக்டர் போகக் கூடாதுன்னு சொல்லிருக்காங்களா?"

"இல்லை, நான் சொல்றேன்."

"நான் ஜியாவோட ஃப்ரண்ட்."

"நான் அவளோட புருஷன், அவுட்!” என்று கர்வத்தோடு கர்ஜித்த ஆஷிக்கைப் பார்த்து,

‘புருஷனா? நீயா? நான் விட்டு வச்ச மிச்சம் தான்டா அவ. உன்னை விட அதிக உரிமை எனக்குத் தான் இருக்கு.’ இவ்வாறு மனதிற்குள் எண்ணியவன் அசட்டை சிரிப்போடு ஆஷிக்கைப் பார்த்து,

"அடிக்கடி சொல்லு ஆஷிக், அப்போ தான் தெரியுது.” என்று ஏளனமாய் பேச, கோபத்தில் ஆஷிக், சமீரின் சட்டையின் காலரை பற்றிக்கொள்ள,

பதிலுக்கு முறைத்த சமீர், “புருஷன்னு சொன்னா மட்டும் போதாது. கொஞ்சமாவது அப்படி நடந்துக்கணும். அவகிட்ட சண்டை போட்டே அவளைப் பாதிச் சாகடிச்சுட்ட. இப்போ வந்து ஸீன் போடுறியா?"

"என்னடா சொன்ன?” என்றவாறு ஆஷிக், சமீரை அடிக்கக் கை ஒங்க, அதற்குள் ரோஹித்தும் ஆதர்ஷும் ஆஷிக்கைத் தடுக்க, “அவனை வெளியே போகச் சொல்லுங்க.” ஆஷிக் கர்ஜித்தான்.

"இப்போ போறேன், ஆனா மறுபடியும் வருவேன்.” என்று பதிலுக்கு முறைத்துவிட்டு உள்ளம் நெகிழ அங்கிருந்து சென்றான்.

"இவனுக்கு யார் சொன்னது?” என்று ஆஷிக் சிடுசிடுக்க,

"நான் தான் சொன்னேன், சமீர் உனக்குக் கால் பண்ணிட்டே இருந்தான், அதான் சொன்னேன்.” என்று தியா தயங்கியபடி கூறினாள்.

"ஏன்டா அவன்கிட்ட இப்படிச் சண்டை போடுற?” என்ற ஆதர்ஷைப் பார்த்து ஆஷிக்,

"தெரியலடா, ஜியாவ யாரும் பார்க்க வேண்டாம் அவ்வளவு தான். எனக்கும் ஜியாக்கும் சண்டை வர்றதுக்குக் காரணமே இவன்தான். எல்லாத்துக்கும் மேல இவன் உள்ள வந்தான்னா ஜியாக்கு ஆக்சிடென்ட் இல்லன்னு கண்டுபுடிச்சுட மாட்டான். யாரும் ஜியாவ பரிதாபமாவோ கேள்வியாவோ பார்க்கிறதுல எனக்குச் சுத்தமா விருப்பம் இல்லை."

"வீட்ல என்ன சொல்ல போற?"

"நானா எதுவும் சொல்ல போறதில்லை. தெரிஞ்சி கேட்டா இவன்கிட்ட சொன்னதைத் தான் சொல்லுவேன். யாரும் அவளை எமோஷனலா ஹர்ட் பண்ணிற கூடாது. அம்மாவும் சரி, ஜியா சித்தியும் சரி எப்படி நடந்துக்குவாங்கன்னு தெரியலை. ஆறுதல் சொல்றேன்னு அவளைக் காயப்படுத்திற கூடாது. ஜியா பழைய மாதிரி என்கிட்ட திரும்ப வரணும்." என்றவனின் இதயத்தில் ஜனித்த வலி விழி வழியே விழிநீராக வழிந்தோடியது.

நாட்கள் உருண்டோடின. ஆஷிக் ஒரு கணம் கூட அகலாது ஜியாவின் அருகிலே அமர்ந்து, அவளை நன்கு கவனித்துக்கொண்டான். அவளுக்கு உணவு பரிமாறுவதில் இருந்து உடைமாற்றுவது தாண்டி ஒரு மனைவிக்கு, கணவன் மட்டுமே செய்யக் கூடிய காரியத்தையும், பிறர் சங்கோஜப்படும் காரியத்தைக் கூட மனநிறைவோடு செய்தான்.

ரணப்பட்ட தேகத்திற்கு மருந்திடும் பொழுது, தன்னவளின் காயப்பட்ட மனதிற்கு மருந்திடவும் அவன் மறக்கவில்லை.

தன் வலியை மறைத்துக் கொண்டு அவள் முன்பு சிரித்தான். அவள் விழிகள் கசியும் பொழுதெல்லாம் கரம் பிடித்து, "உன் ஆஷிக் என்னைக்கும் உன் கூடவே இருப்பேன். சீக்கிரம் என்கிட்ட வாமா...” என்று கூறிக் கொண்டே இருப்பான்.

அவன் மனம் முழுவதும் ஜியா பழைய நிலைக்கு வரவேண்டும் என்கின்ற எண்ணம் மட்டும் தான் நிறைந்திருந்தது.

நாட்கள் உருண்டோடி கொண்டிருக்க ஜியாவின் உடல் நிலையில் மட்டும், எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இப்படி இருக்க ஒருநாள் உணவு வாங்க வெளியே சென்றிருந்த ஆஷிக் அறைக்குள் நுழைந்த நேரம், ஆஷிக் தடுப்பதற்குள் ஜியா படுக்கையில் இருந்து எழுந்திருக்க முயற்சி செய்து கீழே விழுந்து விட, பதறியவன் அவளை மீண்டும் படுக்கையில் படுக்க வைத்து, அவளது தேவையை அவளது கண்ணசைவிலே நிறைவேற்றினான். இந்த விஷயத்தை டாக்டரிடம் அவன் பகிர்ந்த பொழுது,

ஜியாவை பரிசோதித்தவர் அவனிடம், "இதுல பயப்படுறதுக்கு எந்த விஷயமும் இல்லை. இது ஒரு நல்ல இம்ப்ரூவ்மென்ட். கண்டிப்பா அவங்க பழைய நிலைமைக்குச் சீக்கிரமாவே வந்துருவாங்க.” என்று அவர் கூறியது ஆஷிக்கிற்கு ஆறுதலாக இருந்தது.

அவ்வப்பொழுது கை, கால்கள் அசைவது என்று ஜியாவின் உடல்நிலையில் நல்ல மாற்றம் தெரிந்தது.

ஆயிஷா, சமீரின் திருமணத் தேதியும் நெருங்கி வர, ஏற்கனவே பேசியது போலத் திருமணம் விழா டெல்லியில் நடக்க இருந்ததால், ஹாஜராவும் ஆயிஷாவும் இன்னும் ஒருவாரத்தில் ஆஷிக்கின் வீட்டிற்கு வர போகும் செய்தி வர, இதற்கு மேல் மறைக்க முடியாது என்று உணர்ந்தவன், தன் வீட்டாரிடமும் ஜியா வீட்டாரிடமும் ஜியாவுக்கு ஆக்சிடென்ட் ஆகி விட்டது என்று தெரிவித்தான். அவர்கள் அனைவரும் விஷயம் தெரிந்த மறுநாளே ஜியாவைக் காண வந்தனர்.

வீட்டுப் பெரியவர்கள் யாரும் ஆஷிக் கூறிய காராணத்தை ஏற்க சற்றும் தயாராக இல்லை. ஷங்கரும் அடிக்காத குறையாக ஆஷிக்கிடம் ஜியாவைப் பற்றிய உண்மையை மறைத்ததற்காகக் கோபம் கொள்ள, ஹாஜரா அடிக்கவே செய்து விட்டார்.

“இதை மறைக்கத் தான் ஜியா ஊருக்குப் போயிருக்கிறதா பொய் சொன்னியா? இது மறைக்க வேண்டிய விஷயமாடா?” என்று ஹாஸ்பிடலில் வைத்தே அவர் அவனிடம் ஆத்திரம் அடைந்தார். அந்த நேரம் எதேர்ச்சையாக அங்கு வந்த சமீர், எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல, “நல்லா கேளுங்க, என்னைக் கூடப் பார்க்க விடல. என்கிட்ட சின்ன ஆக்சிடெண்ட்னு சொல்லி சமாளிச்சுட்டாரு.” என்று சொல்ல,

"சமீர் உனக்குத் தெரியுமா?"

"தெரியும் அத்தை, ஆனா யாருக்கும் சொல்ல கூடாதுன்னு உங்க புள்ளை ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு. அதனால நான் எங்க வீட்ல கூடச் சொல்லல.” என்றவாறு சமீர், ஆஷிக்கை முறைத்து பார்த்தான்.

ஹாஜராவிற்கு ஆஷிக் மீதுள்ள கோபம் இன்னும் அதிகரித்தது. ஜியாவின் நிலையைக் கண்டு அனைவரின் உள்ளமும் கவலையில் ஆழ்ந்தது.

ஆஷிக், ஜியாவை அவளது தேவை அறிந்து கவனித்துக் கொண்ட விதம், ஆஷிக் மீது மற்றவர்கள் கொண்ட கோபத்தைக் கொஞ்ச கொஞ்சமாய் தணிக்க செய்தது. மருந்து பாதி, அன்பு பாதி என்பது போல இந்த இரண்டும் சரி பாதியாய் ஜியாவிற்குத் தட்டாமல் கிடைக்க, ஜியாவின் உடல் நிலையில் சின்னச் சின்ன மாற்றங்கள் வந்தது.

ஆயிஷாவின் திருமணத் தேதி நெருங்க நெருங்க ஆஷிக்கிற்கு வேலை பளு அதிகமாகியது. ஒரு அண்ணனாக தன் தங்கையின் திருமண ஏற்பாடுகளையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க, முன்பு போல நாள் முழுவதும் ஆஷிக்கால் ஜியாவின் அருகிலே இருக்க முடிவதில்லை.

அதனால் ஜியாவை ஹாஜராவவும் திவ்யாவும் தான் பார்த்துக் கொண்டனர். அதில் ஆஷிக்குக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அதைத் தவிர, அவனுக்கு வேறு வழியும் இல்லை.

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஜியாவைக் காண வருவான். காலம் வேகமாக ஓட ஆயிஷா, சமீரின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்க சமீர், ஜியாவைக் காண மருத்துவமனைக்கு வந்தான். ஹாஜாராவையும் திவ்யாவையும் உணவருந்திவிட்டு வருமாறு சொல்லி, அதுவரை ஜியாவைத் தான் பார்த்துக் கொள்ளுமாறு கூறினான். அவர்களுக்கும் சிறிது ஓய்வு தேவைப்பட, அவன் கூறியதைப் போலவே உணவு அருந்த சென்றனர்.

வக்கிர பார்வையோடு ஜியாவிடம் நெருங்கிய சமீரின் முகத்தில் கோபம், வெறுப்பு, சிரிப்பு, ஆசை என்று விதவிதமான உணர்ச்சி குவியல் நொடிப்பொழுதில் மாறி மாறி வந்து மறைந்து போனது. விழிகள் மூடி உறங்கி கொண்டிருந்தவளை, தன் பார்வையாலே தீண்டியவன் தன் விரல் கொண்டு அவளது மென் வதனத்தை வருட, ஒருவித சங்கடமான உணர்வோடு தன் விழிகளைத் திறந்தவள், கண் முன்னே சமீரைக் கண்டதும் கண்களில் பயம் தொத்திக்கொள்ள, உடலை அசைக்க முடியாமல் விழிகள் கலங்க கலவரத்தோடு சிலையெனக் கிடந்தாள்.

"இதெல்லாம் தேவையா? சரின்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தனா இப்போ ரெண்டு பேரும் நிம்மதியா இருந்திருக்கலாம்.” என்றவன் மேலும் தொடர்ந்து, “எனக்கு நாளைக்குக் கல்யாணம். ஆல் த பெஸ்ட் சொல்ல மாட்டியா?” என்று விஷமத்தோடு சிரிக்க, அவளது இதயம் பயங்கரமாகத் துடித்தது.

கை, கால்கள் எல்லாம் திசை மாறி உதற, சத்தம் கேட்டு அருகில் இருந்த நர்ஸ் உள்ளே வர, பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகே ஜியா பழைய நிலைக்கு வந்தாள். அதற்குள் உணவருந்த சென்றவர்களும் அங்கே வந்துவிட, ஜியாவின் போராட்டத்தைப் பார்த்தவர்களின் இதயம் ஒரு நொடி கலங்கிவிட்டது.

"சமீர் க்ளோஸ் ஃப்ரண்ட்ன்னு சொல்றீங்க, அதான் பார்த்ததும் எமோஷனல் ஆகிட்டாங்க. அவங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க, ரெஸ்ட் எடுக்கட்டும். இப்போதைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.” என்று மருத்துவர் கூறிய பிறகே இருவரும் நிம்மதி அடைந்தனர். மருந்தின் வீரியத்தால் மனதைத் தவிர அனைத்தும் கட்டுக்குள் இருக்க, மனதில் உள்ள எதையும் சொல்ல முடியாமல் கண்கள் மெல்ல மெல்ல சொருக, தன்னையும் மீறி நித்திரைக்குச் சென்றாள்.

தன்னை ரணமாக்கிய அந்தக் கொடூரமான இரவு, அவளது நினைவிற்கு மின்னலைப் போல வந்து அவளது உயிர் வரை சென்று தாக்க, அதீத மன அழுத்தம் காரணமாய் ஜியாவின் இதயம் வேகமாகத் துடிக்க, மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.

***


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்

நிலவே 64, 65 & 66
 
Last edited:
Top