Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நிலவே 64, 65 & 66

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
90
நிலவே 64

உடல் அலுப்பு காரணமாய் சற்று நேரம் அசந்திருந்த ஆஷிக், சத்தம் கேட்டு கண் விழித்துப் பார்த்த பொழுது, ஜியா மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.

கண்கள் மேலே சொருக கை, கால்கள் எல்லாம் உதறல் எடுக்க, “ஆஷிக் ஆஷிக்..” என்ற அவனது பெயரையே தடுமாற்றத்தோடு உளறினாள்.

பதறி போனவன் மருத்துவருக்குச் செய்தி தெரிவித்துவிட்டு ஜியாவின் கரங்களைப் பற்றிகொண்டவாறு, “ஒன்னுமில்லைடா..” என்று ஜியாவிற்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தான்.

மருத்துவர் மிகவும் சிரமப்பட்டு ஜியாவின் உடல் நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.

ஜியா, ஆஷிக்கின் கரங்களை இறுக்கப் பற்றிக் கொண்டவாறே, “ஆஷிக்...” என்று அழுத்தமாகக் கூறியவாறு கண்கள் அயர்ந்தாள்.

ஆஷிக்கைத் தனியாக அழைத்த மருத்துவர் அவனிடம், “இனிமே நீங்க பயப்படத் தேவையே இல்லை. அவங்க பேச ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள்தான், ஏன் நாளைக்கு... ஏன் இன்னைக்கே கூட பழைய நிலைமைக்கு அவங்க திரும்புறதுக்கு எல்லா வாய்ப்பும் இருக்கு."

"ஆனா டாக்டர், நல்லா ஆகிட்டான்னா ஏன் இப்படி மூச்சு வாங்க கஷ்டப்படுறா?” என்று முகத்தில் பதற்றம் தொனிக்கக் கேட்க,

ஆஷிக்கின் பயத்தைப் புரிந்துகொண்ட மருத்துவர் அவனை ஆசுவாசப்படுத்தி, “அதீத மனம் அழுத்தம். அவங்க அன்னைக்கு நடந்த சம்பவத்தைக் கூட நினைச்சு பார்த்திருக்கலாம்."

"என்னோட பேரை சொல்லி இப்போ அழுததுக்குக் கூட அதுதான் காரணமா?"

"கண்டிப்பா இருக்கலாம். அந்தச் சம்பவத்தை ஞாபகப்படுத்துற மாதிரி எதோ ஒன்னு இன்னைக்கு அவங்களுக்கு நடந்திருக்கலாம். யாராவது பேசியிருக்கலாம், என்னவா வேணும்னாலும் இருக்கலாம். அதை உங்ககிட்ட சொல்ல முயற்சி பண்ணிதான் உங்க பேரை சொல்லிருக்காங்க. அதுக்கு மேல சொல்ல முடியாம போனதால அவங்க மனசுக்குள்ள அழுத்தம் அதிகமாகி மூச்சு திணறல் வந்திருக்கு.

நீங்க மனசைத் தளர விடாதீங்க ஆஷிக், எல்லாம் நல்லதுக்கே...” என்ற மருத்துவரிடம் பேசிவிட்டு, மீண்டும் அறைக்கு வந்து ஜியாவின் நெற்றியை ஆதரவாய் நீவியபடி, அவளது அருகிலே அமர்ந்து கொண்டான் ஆஷிக். வைத்த கண் வாங்காமல் அவளது முகத்தையே பார்த்து கொண்டிருந்தவனின் விழிகள் தானாகக் கலங்கியது.

நெற்றியை நீவியபடி அமர்ந்திருந்தவனை இருக்கரங்கள் தழுவ சட்டென்று நிமிர்ந்தவன், தியா தன் அருகில் இருப்பதைப் பார்த்து ஜியாவின் தூக்கம் கெட்டுவிடாமல் இருப்பதற்காக அவளுடன் வெளியே சென்றான்.

வெளியே ரோஹித், ஆதர்ஷும் காத்துக் கொண்டிருக்க, அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தவன், "நீங்க இங்க என்னடா பண்றீங்க? நாளைக்கு ஆயிஷாவுக்குக் கல்யாணம், போங்க போய் ரெஸ்ட் எடுங்க.” என்றவனிடம் ரோஹித்,

"நீ ஃபோன்ல ஜியா மூச்சு விடக் கஷ்டப்பட்டான்னு சொன்னதுக்கு அப்புறம், நாங்க மட்டும் எப்படி நிம்மதியா இருக்க முடியும்? அதான் உன் கூடத் துணைக்கு இங்க இருக்கலாம்னு வந்துட்டோம்டா.” என்றவனைப் பார்த்து வெறுமையாய் சிரித்தவன்,

"வாழ்க்கை எப்படி மாறி போச்சு? நாளுக்கு நாள் பயமா இருக்குடா. ஜியா கண் முழிச்சு வரும் பொழுது எப்படி நடந்துக்குவான்னு நினைச்சாலே பயமா இருக்கு. நானே இன்னும் இதை விட்டு வெளிய வரல. அவளை எப்படி நான் வெளியே கொண்டு வரப்போறேன்னு எனக்குச் சுத்தமா தெரியல. ஒரு பேஷண்ட் செத்து போனதுக்கே அவ்வளவு டிப்ரெஸ்ட் ஆனவ, இதை எப்படித் தாங்குவானு நினைச்சாலே பயமா இருக்கு.” என்று ஆரம்பித்தவன் இன்று டாக்டர் கூறியதை பற்றிக் கூற, சிறிது நேரம் சிந்தித்த தியா ஆஷிக்கிடம்,

"ஜியாவோட இந்த நிலைமைக்கு யார் காரணமா இருப்பாங்கன்னு நீ நினைக்கிற?"

"ம்ம்... தெரியல, யார் பண்ணினாங்க, ஏன் பண்ணினாங்க ஐ ஆம் சிம்ப்ளி ப்ளாங்க். அது யாருன்னு நினைச்சு நினைச்சு உள்ளுக்குள்ள வெந்துட்டு இருக்கேன். ஆனா யாரா இருந்தாலும் அவங்க என்னை வேற மாதிரி பார்ப்பாங்க.” என்று கோபமாகக் கூறினான்.

அப்பொழுது தியா, “எனக்கு என்னவோ அது ஜியாக்கு... ஏன் உனக்கு, நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஆளா இருக்குமோன்னு தோனுது.” என்று தன் மனதில் பட்டத்தைக் கூற,

உடனே மறுத்த ஆதர்ஷ், “தெரிஞ்சவங்கன்னா கண்டிப்பா ஜியாவ அந்த இடத்துலயே கொன்னுருப்பாங்க. ஏன்னா ஆஷிக்கத் தெரிஞ்சவங்கன்னா கண்டிப்பா அவன் ஜியாக்காக என்ன வேணும்னாலும் செய்வான்னு தெரிஞ்சிருக்கும். கண்டிப்பா உயிரோட விட்ருக்க மாட்டாங்க. சோ கண்டிப்பா ரேண்டம் பெர்ஸன் யாரோதான் போதையில பண்ணிருப்பாங்க. அவங்க யாருன்னு சீக்கிரம் கண்டுபுடிக்கணும்."

"இல்லை டாக்டர் சொன்னதைக் கவனிசீங்கள்ல, ஜியா தன்னைப் பத்தி எதுவும் சொல்லிறகூடாதுனு தான் அவ உடம்புல ட்ரக்ஸ் இன்ஜெக்ட் பண்ணிருக்காங்க. எதோ ஒரு ரேண்டம் பெர்ஸன் ஏன் இப்படி எல்லாம் பண்ண போறான்? பண்ணினவன், எதோ ஒரு மோட்டிவ்ல தான் பண்ணிருக்கான்.

மெடிசின் பத்தி தெரிஞ்சிருக்குன்னா அவன் ஒரு மெடிக்கல் ஸ்டூடெண்ட்டா இருக்கலாம். மெடிக்கல் ரெப்பா இருக்கலாம்." என்றவளைத் தொடர்ந்து ரோஹித், “ஏன் டாக்டரா கூட இருக்கலாம்.” என்றவன் சில நொடிகள் யோசித்த பிறகு ஆஷிக்கைப் பார்த்து,

“டேய் சமீர் சொன்ன பெங்களூர் இன்சிடென்ட்... செத்துப் போன அந்தப் பொண்ணுக்கு நெருக்கமானவங்க யாரும் ஜியாவ பழிவாங்க இப்படிப் பண்ணிருக்கலாமா?” என்று ஒவ்வொருவரும் தங்களின் மனதில் உள்ளதைக் கூற, ஆஷிக் ஒவ்வொருவரின் கருத்தையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டு ஏதேதோ சிந்திக்கத் தொடங்கினான்.

சிந்திக்கச் சிந்திக்கக் குழப்பம் அதிகரித்ததே தவிர, இறுதி வரை எந்த ஒரு தெளிவும் இல்லாமல் போனது. சோர்வில் நெற்றியை நீவியபடி அமர்ந்தான். அவனது மனவோட்டத்தைக் கணித்த தியா, “நீ ரொம்பக் குழப்பிக்காத, எல்லாம் சரியாகும். ஒன்னு பண்ணலாம், நீ வேணும்னா வீட்டுக்கு போ, ரொம்பவே டயர்டா இருக்க. நானும் ரோஹித்தும் இன்னைக்கு நைட் ஸ்டே பண்றோம்.” என்று அவனை ஓய்வெடுக்குமாறு வலியுறுத்த,

"இல்லை தியா, எப்படியும் நாளைக்கு நான் கல்யாணத்துல கலந்துக்கணும். சோ நைட் பார்த்துக்கறேன், மார்னிங் நீ வந்தா போதும்.” என்று மறுத்தவன் அவர்களைக் கிளம்புமாறு வலியுறுத்திக் கொண்டிருக்க,

ஜியாவின் அறையில் இருந்து எதோ விழுவது போன்ற சத்தம் கேட்க, ஆஷிக்கைத் தொடர்ந்து மூவரும் உள்ளே சென்று பார்த்த பொழுது ஜியா தரையில் வீழ்ந்திருந்தாள்.

ஓடிச் சென்று ஜியாவைத் தன் மடியில் ஏந்தியவன் விழிகளில் பதற்றம் தொனிக்க, “ஜியா... ஜியா...” என்று எழுப்பினான், பதில் இல்லை. கைகளிலும் கால்களிலும் சிறு அசைவு மற்றும் இருந்தது. தன்னவளைத் தன் கரத்தில் ஏந்தி படுக்கையில் கிடத்தியவன், உடல் குளிர்ந்திருக்க காய்ச்சலின் அறிகுறி தெரிய, உடனே மருத்துவரை அழைக்குமாறு தன் நண்பரிகளிடம் கூறிய பொழுது, ஆஷிக்கின் கரத்தை இறுக்கப் பற்றிக் கொண்ட ஜியா மூச்சு வாங்க, வார்த்தைகள் இடம் பிறழ எதேதோ முனங்கினாள்.

"என்ன ஜியா?” என்று பலமுறை கன்னம் தட்டி கேட்ட பொழுது, மருந்தின் வீரியத்தில் மூடத் துடித்த விழிகளைத் தட்டி தட்டி பிரித்தவாறு,

"ச... மீர்... சமீர்... வே... ண்டாம்... வேண்டாம்... ஆயிஷா... நிறுத்திரு ஆஷிக்..." என்று வார்த்தைகள் எதுவும் கோர்வை இல்லாமல் புலம்பினாள்.

‘சமீர் வேண்டாம், ஆயிஷா நிறுத்திரு.’ என்ன, ஏன், எதற்கு என்று விளங்காமல் அனைவரும் குழம்ப, ஆஷிக்கை ஒதுக்கிவிட்டு ஜியாவின் அருகில் வந்த தியா, விரைத்திருந்த ஜியாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு மெதுவாய் ஆறுதலாய் தடவி விட்டவாறு,

"சமீர், ஆயிஷாவோட கல்யாணத்தை நிறுத்த சொல்றியா?" என்று கேட்க,

‘ஆமாம்...’ என்பதாய் ஜியா தன் தலையை மெல்லமாய் அசைக்க, அனைவரையும் பார்த்தவாறு மறுபடியும் ஜியாவிடம்,

"ஏன் அப்படிச் சொல்ற?" என்ற கேள்வி கேட்க, ஜியாவிடம் இருந்து பதில் எதுவும் வரமால் போக,

தன் மனதை ஆறுதல் படுத்தியவாறு, “சமீர் தான் உன்னை..." என்று முடிப்பதற்குள், விழிகளில் நீர் வழிய ஜியா, 'ஆம்' என்பதாய் தன் தலையை அசைத்து, ஆஷிக்கின் கரத்தை இறுக்கப் பற்றிக்கொண்டாள்.

இதைக் கேட்ட நால்வரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க, ஆஷிக்கின் விழிகள் கோபத்தில் சிவந்திருந்தது. 'சமீர்'தான் ஜியாவின் இந்த நிலைக்குக் காரணம் என்பதை நினைக்கும் பொழுதே, அவனுக்குக் கொலைவெறி வந்தது.

இப்பொழுது வரை சமீர் மீது ஆஷிக்கிற்கு இருந்த கோபத்திற்கு எல்லாம் காரணம், அவனிடம் ஜியா இயல்பாக இருப்பதுதான். அவனால் முடிந்த காரியம் தன்னால் முடியவில்லையே என்கின்ற ஆதங்கம்தான், ஆஷிக்கிற்கு சமீர் மீது கோபம் கொள்ளச் செய்தது. ஆனால் சமீர், ஜியாவின் நிலைக்குக் காரணமாக இருப்பான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

அவனை இக்கணமே தன் கையால் அழித்துவிட வேண்டும் என உறுதி கொண்டான். சமீர் ஆரம்பத்தில் இருந்து ஜியாவிற்கும் தனக்கும் உதவியது, ஜியாவிற்காகத் தன்னிடம் கோபப்பட்டது இப்படி அவன் நடித்த ஒவ்வொரு நடிப்பையும் எண்ணி பார்த்தவனின் இதயம், கோபத்தில் தாறுமாறாக எகிற, சமீரை அழித்தே தீர வேண்டும் என்கின்ற வெறியில் அங்கிருந்து புறப்பட்டான். தியாவிடம் ஜியாவை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு ஆதர்ஷ், ரோஹித் இருவரும் அவனைப் பின்தொடர்ந்தனர்.

திருமணம் மண்டபத்தில் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜியாவின் உடல்நிலை சரியாக இல்லாததால் அலங்கார ஏற்பாடுகள் ஒன்றும் அவ்வளவு பிரமிப்பாக இல்லை. நெருங்கிய சொந்தங்களுக்குள் மட்டுமே அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. சமீரின் தாயார் ரஸ்மீன், ஹாஜரா, திவ்யா மற்றும் சில பெண்கள் ஒரு பக்கம் உட்கார்ந்து பேசி கொண்டிருக்க,

ஆயிஷா மட்டும் மணப்பெண்ணிற்கு உரிய எந்தக் கலையும் இல்லாமல், ஜியாவைப் பற்றிய நினைப்பில் வாடிப் போய் இருந்தாள். திருமணத் தேதியை ஒற்றிவைக்குமாறு ஆயிஷாவும் ஹாஜராவும் எவ்வளவோ பேசினர். ஏன் அஸாத் கூட ஜியா நலமாகி வந்த பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் ஆஷிக் தன்னால் ஆயிஷாவின் திருமணத்தில் எந்தப் பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்று எண்ணி பிடிவாதமாக மறுத்துவிட்டான்.

அலைபேசியில் யாரிடமோ பேசியவாறே வந்த அஸாத், ஹாஜாராவை தனியாக அழைத்து, “அந்தப் பொண்ணுக்கு எப்படி இருக்கு?” என்று கேட்க,

"பரவில்லை, ஆனா இன்னைக்குப் ஃபிட்ஸ் வந்துருச்சு. உயிருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.” என்றவரிடம்,

"நான் ஒரு வார்த்தை சொன்னா போதும், உன் மருமகளுக்கு ட்ரீட்மெண்ட் பண்ண வெளிநாட்ல இருந்து டாக்டர்ஸ் லைன்ல வருவாங்க. சொன்னா உன் பையன் எங்க கேக்குறான்? ஆயிஷா கல்யாணம் முடிஞ்சதும் அவன்கிட்ட பேசு. நல்ல நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க, சீக்கிரமா அவளைச் சரி பண்ணிடலாம்."

"சரிங்க, நீங்க ஒரு தடவ போய் பாருங்க.” என்றவரிடம் சரி என்பதாய் தலையசைத்தவர்,

"அவன் ரொம்ப ஒரு மாதிரியா இருக்கான். எதுக்கும் கவலைப்பட வேண்டாம்னு சொல்லு. அவளை நினைச்சு நினைச்சு இவன் தன்னுடைய உடம்பை கெடுத்துக்கப் போறான்.” என்று அவர் பேசிக் கொண்டிருந்த நேரம் ரௌத்திரத்தோடு உள்ளே நுழைந்த ஆஷிக்,

"சமீர்!” என்று அந்த அரங்கமே அதிரும் அளவிற்கு சத்தம் போட, அவனது கோபத்தைக் கண்டு திகைத்துப் போன ஹாஜரா, ஆயிஷா எல்லாரும், “என்னாயிற்று?” என்று கேட்க,

யாருக்கும் பதில் கூறாதவன் மீண்டும், “சமீர்!” என்று உரக்க கத்த, மாடியில் இருக்கும் மணமகனின் அறையில் இருந்து தன் நண்பர்கள் ஜீவா, சுஜித், வருணுடன் மிகத் தோரணையாகச் சமீர் இறங்கி வர,

அவன் வரும் வரை கூடப் பொறுமை கொள்ளாத ஆஷிக், ஆவேசமாக மாடி ஏறி ஒவ்வொரு படிக்கட்டுகளையும் அரை நொடியில் கடந்து சென்று, சமீரின் சட்டையைப் பற்றிக் கொண்டு கன்னத்தில் ஓங்கி குத்தியவாறு, தரதரவென இழுத்துக் கொண்டு கீழே போட்டான். அவனது செய்கையில் அனைவரும் திகைத்து நின்றனர்.

ஜீவா, வருண், சுஜித் மூவரும் ஆஷிக்கைப் பிடித்துக் கொள்ள, அவர்களை சரமாரியாகத் தாக்கியவன் சமீரைத் தாடை, கன்னம் வயிற்று பகுதி என்று மிக கொடூரமாகத் தாக்க, பதிலுக்குச் சமீர் அடிக்க இருவரையும் தடுக்க முடியாமல், அனைவரும் திகைத்துப் போய் நின்றனர்.

***



நிலவே 65

"ஆஷிக் என்ன பண்ற? அவனை விடு...” என்று தடுத்த ஹாஜராவை ஒரு பார்வையிலே அடக்கியவன், கீழே விழுந்து கிடந்த சமீரை காலரை பற்றித் தூக்கி நிறுத்தி, “உனக்கு எவ்வளவு தைரியம்டா? பொறுக்கி ராஸ்கல்!” என்று மீண்டும் அடித்தான்.

ஜீவா பதிலுக்கு ஆஷிக்கைத் தாக்க, ரோஹித் கொடுத்த ஒரு அறையில் கீழே விழுந்தவன், ஆஷிக் அனைத்தையும் அறிந்து கொண்டான் என்று புரிந்தவனாய் கன்னத்தைப் பற்றியவாறு ஒதுங்க,

சுஜித், வருண் இருவரும் தள்ளியே நின்றனர். ரோஹித், ஆதர்ஷ் இருவரும் ஆஷிக்கோடு இணைந்து கொண்டு, தங்களின் பங்கிற்குச் சமீரை துவம்சம் செய்ய, அவர்கள் கொடுத்த ஒவ்வொரு அடியையும் சலிக்காமல் வாங்கிக் கொண்ட சமீர், தன் விழிகளினாலே ஜீவாவிடம் எதோ கூற, எல்லாம் புரிந்தவனாய் ஜீவா தன் அலைபேசியோடு அங்கிருந்து சென்றான்.

"யாராவது தடுத்து நிறுத்துங்க...” என்று ரஸ்மீன் தன் தலையில் அடித்தவாறு கதற, ஆஷிக்கின் ஆக்ரோஷம் யாரையும் அவனிடம் நெருங்க விடாமல் தடுத்தது.

ஆஷிக்கின் ஒவ்வொரு அடியையும் சமீர் எந்தவித உணர்வும் இல்லாமல், ஒரு வகையான அலட்சிய பார்வையோடு ஏற்றுக்கொண்ட விதம், அஸாத்துக்குக் குழப்பமாக இருந்தது. ஆஷிக்கைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்த அஸாத், எதோ தவறு நடந்திருப்பதைப் புரிந்தவராய் மகனைத் தடுக்காமல் அமைதியாய் இருந்தார்.

இதற்கிடையில் ஆதர்ஷும் ரோஹித்தும் சேர்ந்து சமீரைத் தாக்கியது அவருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஹாஜரா, அஸாத்திடம் அவர்களைத் தடுத்து நிறுத்துமாறு கெஞ்சி கொண்டிருக்க,

அந்த நேரம் அங்கு வந்த ஷாஹித், தன் மகன் சமீரை ஆஷிக் ரத்தம் வர தாறுமாறாக அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மிகவும் கொந்தளித்து, ஆஷிக்கைத் தடுத்து நிறுத்தி கோபத்தில் அவனது கன்னத்தில் அறைவதற்காகத் தன் கையை ஒங்க,

ஓங்கிய அவரது கரத்தைப் பிடித்துக் கொண்ட அஸாத், “நோ...” என்றவாறு தன் விரலை உயர்த்தி அசைக்க,

ஷாஹித்தைத் தள்ளிவிட்ட ஆஷிக், சமீரை மீண்டும் தாக்க முற்பட்டான். ஆனால் இந்த முறை அவனைப் பின்னால் இருந்து பிடித்துக்கொண்ட அஸாத்,

"ரிலாக்ஸ் ஆஷிக்!” என்றவாறு அவனது கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தார்.

ஷாஹித் கீழே விழுந்து கிடந்த தன் மகனை கை கொடுத்து தூக்கி நிறுத்தி, "என்ன அஸாத் சார், உங்க பையனும் அவனோட ஃப்ரண்ட்ஸும் என் பையனை இப்படி அடிக்கிறாங்க. நீங்க கை கட்டி வேடிக்கை பார்க்கிறீங்க? என்ன எங்களை அவமானப்படுத்திறீங்களா? என் பையன் என்ன தப்புப் பண்ணினான்?” என்று ஆவேசமாய் கேட்க,

தன் கரத்தில் இருந்து திமிறிக் கொண்டிருந்த தன் மகனை இறுக்கப் பிடித்தவாறே, “அதை உங்க பையன்கிட்ட கூடக் கேட்கலாமே? அவர் ஆஷிக்கை அப்போஸே பண்ணலையே? ஐ நோ அபௌட் மை சன். சமீர் வாயே திறக்காம அமைதியாவே இருக்காரே?” என்று சமீரைக் குற்றம் சாற்ற,

ஒருவித தெம்போடு ஆஷிக்கின் முன்னே வந்த சமீர், "என்னடா சும்மா ஸ்கூல் பையன் மாதிரி உன் அப்பாகிட்ட ஒளிஞ்சிட்டு இருக்க? ரெண்டு பேரோட வந்து அடிச்சா, நீ என்ன பெரிய ஆம்பளையா? உண்மையான ஆம்பளைனா ஒன் டு ஒன் வா, நீ ஆம்பளை தானே?” சமீர் ரெட்டை அர்த்தத்தில் அதிகாரமாய் கேட்க, ஆஷிக்கின் கோபம் எல்லையைக் கடந்தது.

அஸாத்தின் பிடியில் இருந்தவாறு திமிறிய ஆஷிக்கின் சட்டையைப் பிடித்து, தன் பக்கம் இழுத்தவன் அவனது காதில் யாருக்கும் கேட்காதவாறு,

"என்னடா உன் பொண்டாட்டி என் கூட *** தெரிஞ்சி போச்சா?” என்று அருவெறுப்பாகக் கேட்டு, அவனைச் சீண்டிவிட்டு தன் கண்ணைச் சிமிட்டியவாறு விஷ புன்னகை சிந்த, அவன் கூறிய வார்த்தையில் வெறி புடித்தவன் போல மாறிய ஆஷிக், தன் காலால் அவனை எட்டி உதைத்தான்.

ஆழிப்பேரலைக்கு அணை கட்ட முடியுமா? “என்னடா சொன்ன?" என்று மிகவும் ஆக்ரோஷமாக, அஸாத்தின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஆஷிக், கீழே விழுந்து கிடந்த சமீரைத் தன் காலாலே சரமாரியாக உதைத்தான். அவனது கழுத்தை பிடித்துத் தூக்கி நிறுத்திய ஆஷிக், தன் காலால் சமீரின் அடிவயிற்றில் எட்டி உதைக்க,

தன் ஜீவனைப் பாதி இழந்த நிலையிலும் சமீர் ஆஷிக்கின் காதில், “நீ எவ்வளவு அடிச்சாலும் உன் பொண்டாட்டி என்னைக் கூப்பிட்டது உண்மை தான்...” என்று ஜியாவைத் தகாத வார்த்தையால் பேசி ஆஷிக்கின் கோபத்தை மேலும் தூண்டி விட, "சமீர்!” என்று தன் தனல் விழிகளைப் பிதிக்கியவாறு, தன் உதடுகளும் தாடைகளும் ஆடும் அளவிற்குக் கர்ஜித்த ஆஷிக், அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து,

"எல்லாத் தப்பையும் நீ பண்ணிட்டு என் ஜியா மேல பழி போடுறியா? பாவம்டா, அவளை ஏன்டா அப்படிப் பண்ணின? உன்னை நம்புனாளே! எவ்வளவு துடிச்சுருப்பா? அதெல்லாத்துக்கும் நீ பதில் சொல்லியே ஆகணும்...” என்று மீண்டும் அவனைத் தாக்க, ஆஷிக்கைத் தடுத்த அஸாத் உட்பட அனைவரும்,

"சமீர் என்ன தான் பண்ணினான்?” என்று திரும்பத் திரும்பக் கேட்க தன் பொறுமையை இழந்த ஆஷிக்,

"திஸ் ப்ளடி ராஸ்கல் ஹேஸ் ரேப்ட் மை வொய்ஃப்...” என்று இடியை போல முழங்கியதில், அனைவரும் உணர்ச்சி அற்ற சிலையைப் போல அசையாமல் நின்றனர்.

அதே முழக்கத்துடன் ஷாஹித், அஸாத் மற்றும் இதர ஆண்களைப் பார்த்து, “உங்க வொய்ஃப்பை யாரும் ரேப் பண்ணினா பொறுமையா இருப்பிங்களா, இல்லைல? சோ ஸ்டே அவே! குறுக்க வந்தீங்க..." என்று ஆக்ரோஷமாக அவன் கேட்ட கேள்வியில் அனைவரும் ஓரடி விலக,

"யாரு ரேப் பண்ணினா? நான், உன் பொண்டாட்டியவா, இல்லை உன் பொண்டாட்டி என்னையா? அவளா கூப்பிட்டா, நான் தடுத்தேன். அவ கேட்கல, ஆம்பள நான் என்ன செய்வேன்? இங்க பாரு, நீ ஒழுங்கா இருந்தா அவ ஏன் என்னைத் தேடி வர போறா? முதல்ல உன்கிட்ட என்ன பிரச்சனை இருக்குன்னு பாரு. ஏன்டி என்னை விட்டுட்டு சமீர்கிட்ட போனன்னு உன் பொண்டாட்டிய கேளு சரியா?” என்று தரம் கெட்டு போய் அவன் பேசிய மறுநொடி,

ஆஷிக் கொடுத்த ஒரு குத்தில் சமீரின் நாசி குழாயில் இருந்து ரத்தம் வழிந்தோடியது. கொஞ்சமும் இடைவெளி இன்றி ஆஷிக் அவனது நெற்றியில் வேகமாக முட்ட, தலை கிறங்க சமீர் கீழே சரிந்தான்.

மறுநாள் காலை நியூஸ் பேப்பர், டிவி, இன்டர்நெட் என்று ஆஷிக், சமீரை அடித்தது தொடங்கி, சமீர் மயங்கி கீழே விழுந்தது வரை உள்ள வீடியோ ஜீவா மூலமாக காற்று தீயை போல வேகமாகப் பரவியது.

பிரபல தொழிலதிபர் அஸாத்தின் இல்லத் திருமண விழா ரத்து. மாப்பிள்ளை சமீருக்கும் அஸாத்தின் மருமகள் ஜியாவுக்கும் கள்ளத் தொடர்பு. கோபம் தாங்காமல் ஆஷிக், சமீர் மீது சரமாரி தாக்குதல். என்று நியூஸ் பேப்பரில் ஒரு விதமான செய்தி வர,

‘அஸாத்தின் மகன் ஆஷிக், சமீர் தன் மனைவியைக் கற்பழித்து விட்டதாகக் கூறி, சரமாரியாகத் தாக்கும் காட்சி சற்று முன் கிடைத்த வீடியோவில் பதிவாகி இருக்க, சமீர் தனக்கும் ஜியாவிற்கும் கள்ள தொடர்பு இருந்தது உண்மை தான், ஆனால் ஆஷிக் கூறுவது போல ஜியாவை தான் கற்பழிக்கவில்லை என்று அதை வன்மையாக மறுத்த காட்சியும் பதிவாகி உள்ளது.

இப்பொழுது சமீர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, யார் தரப்பில் உண்மை உள்ளது என்பது கூடிய விரைவில் தெரிய வரும், அதுவரை காத்திருங்கள்.’ என்று டிவி சேனல்கள் தங்களின் பங்கிற்கு வித விதமாகச் செய்திகளைப் பரப்பிக்கொண்டிருந்தனர்.

அஸாத் முடிந்தவரை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வதந்திகளைத் தனது கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்.

ஜியா சுயநினைவு அடைந்திருக்கும் இந்த நிலையில் ஆஷிக், ஜியாவிற்கு இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் எந்தப் பிரச்சனையும், தெரிந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருந்தான்.

ஜியாவுக்கு நடந்த கொடுமையை தெரிந்த பிறகு வீடேக் கொந்தளித்துப் போய் இருந்தது. ஆயிஷாவுக்கு ஜியாவை சந்திக்கவே மிகவும் சங்கடமாக இருந்தது.

பிரெஸ் ரிப்போர்ட்டர்ஸ் எல்லாரும் போகும் இடமெல்லாம் பின் தொடர்ந்து கொண்டே இருக்க, அவர்களால் ஜியாவிற்கு எந்தவித மனத்தாங்கல் வந்துவிடக் கூடாது என்று எண்ணியவன், ஜியாவை பத்திரமாகத் தன் இல்லத்திற்குக் கொண்டு வந்தான். வீட்டில் உள்ள அனைவரும் ஜியாவை காயப்படுத்துமாறு இருக்கும் எந்தச் செய்தியையும் அவளிடம் சொல்லாமல், அவள் தவறான எந்த முடிவையும் எடுத்துவிடாமல் இருக்க, அவளை எந்நேரமும் கவனமாகவும் அன்போடும் பார்த்துக் கொண்டனர்.

அனைவரும் அவள் முன்பு இயல்பாக இருப்பது போலக் காட்டிக்கொண்டாலும், ஜியா அந்தக் கோரமான சம்பவத்தில் இருந்து வெளிவர முடியாமல் அதிலே சிக்கிக்கொண்டு, பித்துப் பிடித்தவள் போல யாரிடமும் பேசாமல், எதையோ வெறித்துப் பார்த்தவாறே அமைதியாகவே இருந்தாள்.

இப்படி இருக்க, ஒருநாள் ஆஷிக்கின் வீட்டிற்கே வந்த ப்ரெஸ் ரிப்போர்ட்டர்கள் ஆஷிக்கிடம், “சமீர், ஜியாவை ரேப் பண்ணல, அவங்க ரெண்டு பேருக்குள்ள அஃபேர் இருந்ததுன்னு ஒத்துக்குறாரு. இதைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?” என்று சரமாரியான கேள்விகளைக் கேட்க,

அஸாத் ஏற்கனவே கூறிய அறிவுரைபடி பல்லை கடித்துக் கொண்டு மிகவும் பொறுமையாக இருந்த ஆஷிக், அவர்களது கேள்வியைத் தவிர்த்தவாறு செக்யூரிட்டி கார்ட்ஸை அழைத்து, அவர்களை வெளியே அனுப்புமாறு கட்டளையிட்டு விட்டு வீட்டிற்குள் நுழையும் நேரம் ஒருவன்,

"அப்போ நீங்க, உங்க மனைவிக்கும் அவங்களோட நண்பர் டாக்டர் சமீருக்கும் தொடர்ப்பு இருந்ததுன்னு ஒத்துக்குறீங்களா?" என்று கேட்க,

தன் பொறுமையை இழந்த ஆஷிக், கேள்வி கேட்ட ரிப்போர்ட்டரை சரமாரியாகத் தாக்கி, அவனது கையில் இருந்த கேமராவை உடைத்து போட, இருவருக்கும் இடையே பெரிய தள்ளுமுள்ளே வந்தது.

இந்தக் காட்சி டிவி சேனலில் டெலிகாஸ்ட் ஆக, இதை அனைத்தையும் கால் மீது கால் போட்டவாறு சமீர் ரசித்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது அவனது அறையின் கதவைத் திறந்து கொண்டு வேகமாக வந்த ஷாஹித் சமீரிடம், "ஆஷிக் சொல்றது உண்மையா?” என்று கேட்க,

"என் மேல நம்பிக்கை இல்லையா?"

"எந்த ஒரு கணவனும் இந்த விஷயத்துல பொய் சொல்ல மாட்டான்."

"அப்படியா? நான் ஏன் அவளை ரேப் பண்ண போறேன்? உங்களுக்கு எப்பவுமே என் மேல நம்பிக்கை இல்லை. தப்பு பண்ற ஆஷிக்குக்கு அவங்க அப்பா அவ்வளவு சப்போர்ட் பண்றாரு. ஆனா நீங்க என்னையே குறை சொல்றீங்க...” என்று கடுகடுத்தவாறு கடுமையாக மறுத்தவனிடம்,

"அப்போ அன்னைக்கு ஜியாகூட உனக்குச் சம்பந்தம் இருக்குன்னு சொன்னது..."

"அவ தான் வந்தா, நான் எவ்வளவு தான் விலகி விலகி போறது? நானும் ஆம்பளை தான், நடந்து போச்சு.” என்று சாதாரணமாகச் சொல்ல, அவனது கன்னத்தில் பளார் என்று திரும்பத் திரும்ப அறைந்தவர்,

"அந்தப் பொண்ணே வந்தாலும் உன் சுய கட்டுப்பாடு எங்க போச்சு” என்று கூர்மையாகப் பார்க்க, தன் கணவரைத் தடுத்த ரஸ்மீன், “அவன் எதோ தெரியாம பண்ணிட்டான், என்கிட்ட மன்னிப்பும் கேட்டான். இப்போ தான் ஹாஸ்ப்பிட்டல்ல இருந்து வந்திருக்கான், அவனை விடுங்க.” என்று தன் மகனுக்காகப் பரிந்து பேச,

அவனை இறுக்கமாகப் பார்த்த ஷாஹித், “ஒன்னு சொல்லறேன் நல்லா கேட்டுக்கோ, இப்போ வர நான் அமைதியா இருக்கிறதுக்குக் காரணம், உன் மேல நான் வச்சுருக்க நம்பிக்கை. இது ஒரு பொண்ணோட மானம் சம்பந்தப்பட்ட விஷயம். தப்பு உன்மேல இருந்துச்சு, என்னை நீ வேற மாதிரி பார்ப்ப. உனக்கு ஒரு தங்கச்சி இருக்கா, மறந்திராத!” என்று எச்சரித்தபடி அங்கிருந்து சென்றார்.

ஆஷிக் ரிப்போர்ட்டரை தாக்கிய விஷயம் போலீஸ் வரை பெரிய பிரச்சனையைக் கிளப்ப, அஸாத் தன் பணத்தின் மூலம் எந்தப் போலீசும் ஆஷிக்கை நெருங்காதவாறு பார்த்துக் கொண்டார்.

இப்படி இருக்க ஒரு நாள் ஆஷிக்கிடம் மிகவும் பொறுமையாக அஸாத், "இதுக்கு மேல நீயும் ஜியாவும் இங்க இருக்கிறது சரி இல்லை. விஷயம் எல்லாம் கை மீறி போயிட்டு இருக்கு. இதுல லண்டனுக்கு மூணு டிக்கெட் இருக்கு. நீ, ஜியா, ஆயிஷா மூணு பேரும் கொஞ்ச நாளைக்கு அங்க போங்க, ஜியாவுக்கும் நல்லா இருக்கும்.

இங்க எல்லா நிலைமையும் நான் சரி பண்ணினதும் மறுபடியும் வாங்க. இதை என் ஸ்டேடஸ்க்காகவோ, என் பிஸ்னஸ்க்காகவோ நான் சொல்லல. உனக்காக, உன் மனைவிக்காகச் சொல்றேன், இதையாவது கேளு.” என்று டிக்கெட்டை அவனிடம் நீட்ட, பலவிதமான யோசனைக்குப் பிறகு மறுக்காமல் வாங்கிக்கொண்டான்.

தனது அறைக்கு வந்தவன் ஜியாவின் அருகில் அமர்ந்து கொண்டு, ஆதரவாய் அவளது கேசத்தைத் தடவி கொடுத்தான். அப்பொழுது ஜியா தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு அவனிடம் இருந்து விலக முற்பட, அவளது முகத்தைத் தன் பக்கம் திருப்பியவன் மென் கரத்தை பற்றியவாறு,

"நீ என்னை விட்டு விலகவும் முடியாது, விலகவும் கூடாது, விலகவும் விட மாட்டேன்." என்று மென்மையோடு உறுதியாய் கூற, அவளது கன்னங்களைக் கண்ணீர் துளிகள் நனைத்தது.

ஒரு கட்டத்தில் அஸாத் கூறுவது சரி என்று உணர்ந்தவன், தன் மனைவி மட்டும் தங்கையுடன் லண்டனுக்குச் செல்ல புறப்பட்டான். லண்டனுக்குச் செல்ல ஏர்போர்ட்க்கு வந்தவர்கள் ஃப்ளைட்டுக்காகக் காத்துக் கொண்டிருந்த நேரம் டிவியில் ஓடிய செய்தியைப் பார்த்து,

ஜியாவை கை காட்டி ஒருவருக்கொருவர் பேசி கொண்டிருக்க, அவர்களின் செயலைக் கவனித்தவாறு டிவியில் உள்ளே நியூஸை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கலங்கிப் போனது ரிப்போர்ட்டர்கள் ஏர்போர்ட்டிற்கும் வந்துவிட,

ஆயிஷாவும் ஆஷிக்கும் அவர்களை எவ்வளவோ தடுத்தும், அவர்கள் தங்களின் கேள்விகளால் ஜியாவின் காயப்பட்ட மனதை மேலும் குத்தி கிழித்தனர். அவர்களது கேள்வியில் நிலைகுலைந்தவள், பதில் ஏதும் பேசாமல் அழுதுகொண்டே அங்கிருந்து சென்றாள்.

வீட்டிற்கு வந்து சேர்ந்தவள் யார் கேட்கும் கேள்விக்கும் பதில் கூறாமல், தன் அறைக்குச் சென்று கதவிற்குத் தாழிட்டு கொண்டாள்.

"சமீருக்கும் உங்களுக்கும் தொடர்பு இருந்தது உண்மையா?” என்ற ரிப்போர்ட்டரின் கேள்விகள் அவளை வேதனைப்படுத்த, விழிகளை அழுந்த மூடி அழுதாள்.

மனம் மீண்டும் தன்னை அந்தக் காரிருளுக்குள் அழைத்துச் செல்ல, நெருப்பில் பட்ட புழுவாய் வேதனையில் தவித்தாள். தன்னைத் தானே தன் நகங்களின் மூலம் காயப் படுத்திக்கொண்டவள் தற்கொலை முயற்சியில் ஈடுபட, சரியான நேரத்தில் அங்கு வந்த ஆஷிக், ஜியாவை தடுத்து நிறுத்தி ஆறுதல் படுத்த,

வெகுண்டெழுந்த ஜியா, “தப்பு பண்ணினவன் சொல்றத நம்புறாங்க, பாதிக்கப்பட்ட எனக்கு எந்த நியாயமும் இல்லையா? சொல்லு ஆஷிக்... நீ கூட இவங்ககிட்ட இருந்து ஓடி ஒளியணும்னு தானே நினைக்கிற. ஆக எல்லாரும் சொல்ற மாதிரி நான் தப்பானவ இல்ல?

"அப்படி இல்லைடா..."

"நான் உன்கூட இருக்கிறது உனக்குக் கேவலமா இருக்கா ஆஷிக்?" கரகரத்த குரலில் உடைந்து அழுதாள்.

நொறுங்கிப்போனான். “இல்லை ஜியா, என்னைக்கும் இல்லை...” என்று அவளைத் தன்னோடு இறுக்க அணைத்துக் கொண்டான்.

"என்னை விடு ஆஷிக், எனக்கு யாருடைய கரிசனமும் தேவை இல்லை."

"நான் உன்கிட்ட கரிசனம் காட்டல, இது என்னோட அன்பு ஜியா."

"வேண்டாம்... எனக்கு யாருடைய அன்பும் வேண்டாம் ஆஷிக். அன்பை அனுபவிக்கிறதுக்கு எனக்குத் தெம்பில்லை. எனக்குள்ள இருந்த உணர்ச்சி எல்லாம் செத்து போச்சு. நான் ஒரு நடைப்பிணம்.” வெகுண்டெழுந்து வந்தது உணர்ச்சியற்ற வார்த்தைகள்.

"அப்படிச் சொல்லாத, உன் வலிய என்னால புரிஞ்சிக்க முடியுது." என்று கரம் பிடித்தவனை உதறியவள்,

"இல்லை... உன்னால முடியாது, உன்னால புரிஞ்சிக்க முடியாது. எனக்கு நடந்த கொடுமைய யாராலையும் உணர முடியாது. நீ போயிரு, நான் ஒரு அழுக்கு, குப்பை, அசிங்கம். வேண்டாம் போ... என்னை விடு.” என்று பித்துபிடித்தது போலக் கதறினாள். ஆஷிக் செய்வதறியாது திகைத்தான்.

"எப்படி எல்லாம் இருந்தேன், எல்லாமே போச்சே... நான் என்ன தப்பு பண்ணினேன்? எனக்கு ஏன் ஆஷிக் இப்படியெல்லாம் நடந்தது? செத்து செத்துப் பிழைக்கிறேன் ஆஷிக்...” நொடி பொழுதில் மாறி மாறி அவள் கொட்டிய உணர்ச்சிகளில் கலக்கமுற்றான். 'எமோஷனல் அட்டாக் வர கூடாது, உயிருக்கு ஆபத்தாகும்' மருத்துவரின் வார்த்தைகள் தேளாய் கொட்டியது. ஆறுதல்படுத்த முனைந்தான், உதறி தள்ளினாள்.

"நேர்மையா இருந்தா அவ்வளவு பெரிய தப்பா? பொண்ணா பிறக்குறது அவ்வளவு பெரிய பாவமா? எங்ககிட்ட அது மட்டும் தான் இருக்கா? சாகுறேன்டா! அருவெறுப்பா இருக்கு. கனவோடு டாக்டர் ஆனேன்...” என்று தன் இமைகளை இறுக்க மூடியவாறு திறந்தவள், மேலும் தொடர்ந்து பெங்களூரில் ஆரம்பித்து இப்பொழுது நடந்தவைகள் வரை, தனக்கு நடந்த அத்தனை அநியாயத்தையும் கூறி இதயம் வெடித்துத் தரையில் சாய்ந்து அழுதாள்.

ஜியாவுக்கு நேர்ந்த கொடூரத்தை அவளது வாயாலே கேட்டவனின் ஒவ்வொரு அணுவும் துடித்தது. புயலை அடக்கிய அமைதியோடு அவளது கண்ணீரைத் துடைத்தவன்,

"யாரும் இல்லன்னு என்னைக்கும் சொல்லாத, நான் இருக்கேன். உன் புருஷன் இன்னும் செத்து போகலை. உனக்கு என்ன வேணும் சொல்லு, எது உனக்கு நிம்மதிய தரும்? எது இருந்தா நீ நிம்மதியா இருப்ப?” என்று கேட்க,

அவனைப் பார்த்தவாறே ஜியா, "எனக்கு நியாயம் வேணும். எந்த மீடியா முன்னாடி என்னை அசிங்கப்படுத்துறாங்களோ, அதே மீடியா முன்னாடி அவங்க தலை குனியணும். உன்னால முடியுமா?" என்று அழுத்தமாகக் கேட்டு, அவனது விழியைக் கூர்மையாகப் பார்த்தாள்.

***

நிலவே 66

டெல்லி நீதிமன்றம் என்றும் போலவே இன்றும் பரபரப்பாக இருந்தது. கருப்பு அங்கிக்குள் தங்களைப் புகுத்துக்கொண்டு வெறும் கருப்பு காகிதத்துகாக, தங்களின் மனசாட்சியை கொன்று அதர்மத்தை நிலைநாட்ட துடிக்கும் வழக்கறிஞர்கள் பாதி, வெள்ளை மனம் படைத்து எந்தச் சூழ்நிலையிலும் நீதி தவறாத வழக்கறிஞர்கள் மீதி என்று நீதிமன்றம், பலதரப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருக்கும் மக்களால் நிரம்பி இருந்தது.

அன்றுதான் ஜியா, சமீர் மீது தொடுத்த கற்பழிப்பு வழக்கின் முதல் ஹியரிங்.

ஜியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சமீர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து நீதி மன்றத்தில் குற்றறிக்கை தாக்கல் செய்தனர். இன்றுதான் வழக்கின் முதல் நாள். டெல்லியையே பரபரப்பாக்கிய இந்தச் சம்பவம், அனைவரின் உள்ளத்திலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆஷிக், சமீரைத் தாக்குவது போல உள்ள வீடியோ, அதில் பதிவாகி இருந்த செய்தி, மக்களின் மனதில் சமீர் குற்றமற்றவன் என்றும், ஜியாதான் வேண்டும் என்றே தன் கள்ளக்காதலை மறைக்க, இந்த வழக்கைத் தொடர்ந்து உள்ளாள் என்றும் ஆழமாய் பதிய காரணமாகிவிட்டது.

இப்படி ஒரு தரப்பினர் சமீருக்கு ஆதரவாய் இருக்க, வேண்டுமென்றே ஏன் ஒரு பெண் தன்னைத் தானே இழிவு படுத்திக் கொள்ள வேண்டும்? நிச்சயம் சமீர்தான் குற்றவாளியாக இருக்கக் கூடும் என்று, சில பெண் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் ஜியாவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிருந்தனர். இந்த வழக்கு மக்களின் மத்தியில் மட்டும் இல்லாமல், வக்கீல்கள் மத்தியிலும் பேரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

சமீரின் குடும்பத்தை விட, ஆஷிக்கின் குடும்பம் கூடுதல் வசதி படைத்திருப்பதால், சமீருக்கு மக்களின் மத்தியில் ஜியாவை விட அதிக ஆதரவு இருந்தது.

ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஜியாவின் நடத்தையைக் குறித்து, பல கேள்விகள் ஒரு பக்கம் எழுந்திருக்க,

சமீருக்கு எதிராய் எந்தத் தடயமும் இல்லாத இந்நிலையில், ஜியா நிஜமாகவே வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டாளா என்ற கேள்வி அனைவரின் உள்ளத்திலும் விருட்சம் போல முளைத்திருந்தது.

இப்போதைக்கு ஜியா கற்பழிக்கப்பட்டாள் என்பதை நிரூபிப்பதற்கு ஒரே ஆதாரம் என்றால், ஜியாவிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் விஷ்ணுப்ரியா தான்.

ஒரு வேகத்தில் ஜியா, சமீர் மீது வழக்கு தொடர்ந்து விட்டாலும், அவளுக்குள் தனக்கு வெற்றி கிடைக்குமா என்கின்ற பயம் உள்ளத்தில் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டுதான் இருந்தது.

கார் நீதிமன்றத்தின் வாசலை வந்தடைய, தன் கண்களை மூடியவாறு கைகள் நடுங்க, காரிலே அமர்ந்திருந்த ஜியாவின் கரங்களை ஆஷிக் இறுக்கப் பற்றிக்கொண்டு, 'நான் இருக்கிறேன்' என்று சொல்லாமல் சொல்ல, புது நம்பிக்கை பிறந்தவளாய் ஆஷிக்கின் கரத்தைப் பிடித்தவாறு, ஜியா நீதிமன்றத்துக்குள் ஆயிஷா, ஷங்கர், சரண்யா, ரோஹித், ஆதர்ஷ், நடாஷா, தியா, திவ்யா, ஹாஜராவுடன் நடந்து வந்தாள்.

கோர்ட் வாசலில் வக்கீல்கள் கொஞ்சம் பேர் குழுமி இருக்க, அப்பொழுது தன் காரில் இருந்து தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இறங்கி வந்த சமீரை, பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு,

"இத்தனை நாள் இவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு, உங்க தரப்புல இருந்து இன்னும் எந்தப் பதிலும் வரல. இன்னைக்கு உங்களோட முதல் ஹியரிங், இப்போவாது உங்களுக்கும் ஜியாவுக்கும் இடையில என்ன உறவு இருக்குன்னு தெளிவா சொல்லுவீங்களா?

மக்களோட ஆதரவு எல்லாம் உங்க பக்கம் தான் அதிகமா இருக்கு. நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு மக்கள் எல்லாரும் ஆர்வமாய் இருக்காங்க." என்று தங்களின் கேள்வியைக் கேட்க,

"உண்மைய சொல்ல எனக்கு ரொம்ப நேரம் ஆகாது, ஆனா அது ஜியாவோட வாழ்க்கைய பாதிக்கக் கூடாதுனு தான், நான் என் மேல இவ்வளவு பெரிய பழி வந்த பிறகும் மௌனமா இருந்தேன். ஆனா ஜியாவே அதைப்பத்தி கவலை படாதப்போ நான் என்ன பண்றது?” என்று தன் எதிரே வந்த ஜியாவைப் பார்த்தவாறே கூறி விஷமமாய் சிரித்தான்.

ஜியாவைக் கண்ட பத்திரிக்கையாளார்கள் ஜியாவை சூழ்ந்து கொண்டு, சரமாரியான கேள்விகளை அவள் மீது குமிக்க, சற்று அரண்டு போன ஜியா, கைகள் சிறிதாய் உதற அவளது கரத்தை இறுக்கப் பற்றிக் கொண்ட ஆஷிக், பத்திரிக்கையாளர்களை ஒதுக்கிவிட்டு அவளை அழைத்துச் சென்றான்.

"நாம இப்போ எடுத்திருக்கிற முடிவு ஒன்னும் அவ்வளவு சுலபமானது இல்லை, நிச்சயமா உனக்கு நிறையச் சோதனை வரும். நீ உடைஞ்சி போற மாதிரியான சூழ்நிலை கண்டிப்பா வரும். ஏன் நியாயம் கிடைக்காம கூடப் போகலாம். என்ன ஆனாலும் நான் உன் கூட இருப்பேன், ஆனா எந்த நிலையிலும் உன் நம்பிக்கையையும் உன் தைரியத்தையும் என்னைக்கும் நீ கைவிடக் கூடாது. அதுதான் உனக்குப் பலம்.” என்று ஆஷிக் தன்னிடம் கூறியதை நினைவு படுத்தியவள், ஆஷிக்கின் கரத்தை விட்டுவிட்டு பத்திரிக்கையாளர்களின் அருகே நிமிர்ந்த நடையோடு சென்ற ஜியா, அவர்களின் கையில் இருந்த மைக்கை வாங்கி,

"என்கிட்ட ஆதாரம் வேணும்னா இல்லாம இருக்கலாம், ஆனா போராடுற தைரியம் இருக்கு. இந்தக் கொடூர மிருகத்துக்குத் தண்டனை வாங்கித் தர, நீங்க கேட்குற ஆதாரத்தை விட என் தைரியமே போதுமானது.” என்று சமீரின் கண் பார்த்து மிடுக்காகச் சொன்னவள், அதே நிமிர்ந்த நடையோடு ஆஷிக்கின் கரத்தைப் பற்றிக் கொண்டு அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்க, “நியாயம் நிச்சயம் கிடைக்கும்.” தன் இதழ் இசைத்து தன் விழிகளை மூடி திறந்தான்.

ஜியாவுக்கு நியாயம் கிடைக்குமா? நீதி தேவதையின் கண் இம்முறையாவது திறக்கப்படுமா இல்லை, எப்பொழுதும் போல இன்றும் அவள் இருட்டிலே இருப்பாளா?

ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க முதிர்ச்சியோடு சேர்த்து அனுபவத்தையும் விவேகத்தையும் கொண்ட ஒரு பெண் கோர்ட்டின் உள்ளே வர, குழுமி இருந்த அனைவரும் எழும்பி நின்றனர். பின் உள்ளே வந்தவர் நேராகச் சென்று ஜட்ஜின் இருக்கையில் வந்து அமர, எழுந்திருந்த அனைவரும் தங்களின் இருக்கையில் அமர்ந்தனர்.

சமீர் குற்றவாளியின் கூண்டில் வந்து நிற்க நீதிபதி, ஜியா தரப்பில் வாதாட இருக்கும் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் சம்பத் மற்றும் சமீருக்கு ஆதரவாக வாதாட இருக்கும் டிபென்ஸ் லாயர் அருணா ஆகிய இருவரையும் பார்த்து, "யு கேன் ப்ரோசிட்.” என்று வாதாட அனுமதி அளிக்க,

குற்றவாளி கூண்டில் இருக்கும் சமீரிடம் ப்ராஸிக்யூட்டர் லாயர் சம்பத், "யுவர் ஹானர், குற்றவாளி கூண்டில் நிற்கும் குற்றவாளியான சமீர்...” என்று தொடர்வதற்குள், குறுக்கிட்ட டிபன்ஸ் லாயர் அருணா,

"ஐ அப்ஜக்ட் திஸ் மை ஹானர், எனது கட்சிக்காரர் சமீர் ஒன்றும் குற்றவாளி இல்லை, குற்றவாளியாகக் கருதப்பட்டுள்ளார். எனவே பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் அவரைக் குற்றவாளி என்று அழைப்பதை நான் எதிர்க்கிறேன். மேலும் அவர் சமூதாயத்தில் முக்கியமான பொறுப்பில் இருப்பவர். எனவே இந்த வழக்கு முடியும் வரை அவரை மரியாதையாக நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று வேண்டிக்கொள்ள,

நீதிபதி, “அப்ஜக்ஷன் சஸ்டேண்ட், தீர்ப்பு வரும் வரை அவரைக் குற்றவாளியாகச் சித்தரிக்க வேண்டாம்.” என்று ஆணையிட்டார்.

சம்பத், “எஸ் யுவர் ஹானர், குற்றம் சாட்டப்பட்ட சமீர், எனது கட்சிக்காரர் ஜியாவை மிரட்டி பலவிதமாக அடித்துத் துன்புறுத்தி வலுகட்டாயமாக அவரைப் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் இவர் கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். எனவே எனது கட்சிக்காரர் ஒரு பெண் என்பதை மனதில் கருதி, இதுபோன்று இனிமேல் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் அனைவருக்கும், ஒரு பாடமாக அமையக்கூடிய தண்டனையை அளிக்க வேண்டும் என்று, கணம் கோர்ட்டாரிடம் மிகத் தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்.” என்று தன் தரப்பின் நியாயத்தை எடுத்து வைக்க,

நீதிபதி சம்பத் கூறியவற்றைக் குறிப்பெடுத்துவிட்டு அருணாவிடம், "நீங்க உங்க தரப்பில இருந்து எதாவது சொல்ல விரும்புறீங்களா?” என்று கேட்க,

"எஸ் யுவர் ஹானர், விக்ட்டிம் மிஸ்ஸஸ் ஜியாகிட்ட நான் கொஞ்சம் கேள்வி கேட்கணும்."

"பெர்மிஷன் க்ராண்டட்."

கிளார்க், "ஜியா! ஜியா! ஜியா!” என்றழைக்க, ஒருவித தயக்கமும் நடுக்கமும் சூழ்ந்துகொள்ள, ஜியா சாட்சி கூண்டின் பிடியை இறுக்கப் பிடித்துக் கொண்டவாறு, அகத்தில் தொனித்த பயத்தை முகத்தில் காட்டாது நின்றாள். ஜியாவின் அருகில் புன்னகைத்தவாறே வந்த அருணா, "ஹலோ ஜியா! ஐயம் சாரி, டாக்டர் ஜியா ஆஷிக்! அம் ஐ ரைட்?” என்று கேட்க,

ஆமாம் என்று ஜியா தலையசைக்க, "இதோ உங்க கண்ணு முன்னாடி நிக்கிற என் கட்சிக்காரர் டாக்டர் சமீரை உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"பெங்களூர் ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ணும் பொழுது தெரியும்."

"எத்தனை வருஷமா தெரியும்?"

"ஒரு வருஷமா."

"உங்களோட பழக்கம் எது..." என்று தொடர்வதற்குள் அழுத்தமான குரலில், “வீ ஆர் ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்!” ஜியா கூற,

"நண்பர்னு சொல்றீங்க, அவர் ஏன் உங்கள ரேப் பண்ணணும்?"

"சமீரை என் நண்பனா தான் நான் நினைச்சி பழகினேன். ஆனா அவன் மனசுல என்னைப் பத்தி தப்பான எண்ணம் இருக்கும்னு நான் நினைக்கல."

"மார்ச் எட்டாம் தேதி தானே சமீர் உங்கள் ரேப் பண்ணினதா புகார் குடுத்திருக்கீங்க?"

"ஆமா."

"சரி அன்னைக்கு ரேப் நைட் நடந்ததா இல்லை, ரேப் காலையில நடந்ததா?"

"நைட்"

"எங்க வச்சு நடந்தது?” அருணாவின் கேள்வி ஜியாவை மீண்டும் அந்தக் காரிருளுக்குள் தள்ள,

"ஜீவா வீட்ல...” என்று தன் முகத்தைச் சுளித்தவாறே பதில் கூறினாள்.

"நீங்க ஜீவா வீட்டுக்குப் போனது உங்க கணவருக்குத் தெரியுமா?"

"இல்லை, அந்த நேரம் ஆஷிக் ஊர்ல இல்லை."

"கணவர் ஊர்ல இல்லாத அந்த ராத்திரி நேரத்துல, ஒரு ஆம்பிளையை தனியா சந்திக்க வேண்டிய காரணம் என்ன? அன்னைக்கு நடந்த எல்லாத்தையும் தெளிவா சொல்ல முடியுமா?” என்ற அருணாவின் கேள்விக்கு நீண்ட மூச்சை இழுத்து விட்டவாறு, ஜியா அன்று இரவு ஜீவா வீட்டிற்குத் தான் சென்றதில் இருந்து அனைத்தையும் கூறினாள்.

ஜியாவிடம் அருணா, "சோ நீங்க சமீர் உங்கள ரேப் பண்ணினதை வருண், சுஜித், ஜீவா மூணு பேரும் பார்த்ததா சொல்றீங்க, அப்படித் தானே?"

"ஆமா"

"யுவர் ஹானர் வருண், சுஜித், ஜீவா மூணு பேரையும் விசாரிக்க எனக்கு அனுமதி கொடுங்க."

"பெர்மிஷன் க்ராண்ட்டட்."

"சொல்லுங்க, ஜியா சொல்றதெல்லாம் உண்மையா?"

இல்லை என்று மறுத்த சுஜித்தும் வருணும் தாங்கள் அந்த இடத்தில் இல்லேவே இல்லை என்று சுத்தமாக மறுத்து, தாங்கள் அந்நேரம் சினிமா தியேட்டரில் இருந்ததாகக் கூறி பொய்யான டிக்கெட்டை ஆதாரமாகக் காட்டினர். அவர்களைத் தொடர்ந்து ஜீவா,

"ஜியா சமீரை தேடி என் வீட்டுக்கு வந்தாங்க. சமீரை உடனே பார்க்கணும் சொன்னாங்க. நானும் சமீருக்கு கால் பண்ணி வர சொன்னேன்."

"ஏன் பார்க்கணும்னு நீங்க அவங்ககிட்ட கேட்கலையா?"

"இல்லை, அவங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்கிறதுனாலே நான் கண்டுக்கல."

"அப்புறம் என்ன நடந்தது?"

"சமீர் வந்தான், ஜியாவும் சமீர் கூடத் தனியா பேசணும்னு சொன்னா. நான் என் ரூமை எடுத்துக்கச் சொன்னேன். கொஞ்சம் நேரம் கழிச்சு ரெண்டு பேரும் வெளியிலே வந்தாங்க."

"கொஞ்சம் நேரம்னா எவ்வளவு...?"

"சுமார் ஒரு மணி நேரம் இருக்கும்."

"எப்படி இருந்தாங்க?"

"ஜியா டென்க்ஷனா இருந்தா. சமீர் கொஞ்சம் கோபமா இருந்தான்."

"ஜியா சொல்ற மாதிரி கற்பழிப்பு நடந்ததுக்கான எந்தவித அறிகுறியும் இல்லையா?"

"இல்லை, அந்த மாதிரி எதுவும் இல்லை. சமீர், ஜியாகிட்ட கண்டிப்பா அந்த மாதிரி நடந்துக்க மாட்டான்.” என்று அழுத்தி சொன்னான்.

"சரி, ஜியா உங்க மேல ஒரு பழி சொல்றாங்களே, அதைப் பத்தி என்ன சொல்றீங்க?"

"என்கிட்ட அந்த மாதிரி எந்த வீடியோவும் இல்லை. அவங்க ஏன் அப்படிச் சொல்றங்கன்னு எனக்குச் சுத்தமா தெரியலை.” என்று ஜீவா கூற, "இல்லை...” என்று ஜியா மறுக்க,

"உங்களுக்கான வாய்ப்பு வர்ற வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க." என்ற நீதிபதி, அருணாவைத் தொடர சொன்னார்.

மேலும் தொடர்ந்த அருணா, "உங்களுக்குக் கல்யாணம் ஆகி எத்தனை வருஷங்கள் ஆகுது?"

"மூணு மாசம் ஆகுது."

"நைஸ்! உங்களுக்கும் உங்க கணவருக்குமான உறவு எப்படி?" என்று இரட்டை அர்த்தத்தில் கேட்க,

"எனக்குப் புரியல..."

"கம் ஆன் மிஸ்ஸஸ் ஜியா, வீ ஆர் அடல்ட்ஸ். என்னோட கேள்வி உங்களுக்குக் கண்டிப்பா புரிஞ்சிருக்கும்."

"அது உங்களுக்குத் தேவை இல்லாதது.” என்ற ஜியாவைத் தொடர்ந்து சம்பத், "அப்ஜக்ஷன் யுவர் ஹானர், இது கேஸ்க்குச் சம்பந்தம் இல்லாதா ஒரு கேள்வி."

"அருணா கேஸ்க்குச் சம்பந்தம் உள்ள கேள்விய மட்டும் கேளுங்க.”

"இல்லை யுவர் ஹானர், இது கேஸ்க்கு சம்பந்தம் உள்ள கேள்விதான்."

"அப்ஜக்ஷன் ஓவர் ரூல்ட்!"

"தேங்க் யு யுவர் ஹானர், சொல்லுங்க ஜியா."

"வீ ஆர் லீடிங் ஹேப்பி லைஃப்."

"பொய்! நீங்க உங்க கல்யாண வாழ்க்கையில சந்தோஷமா இல்லை."

"அப்படியெல்லாம் இல்லை..."

"அப்படி இல்லன்னா இதுக்கு என்ன அர்த்தம்?” என்றவாறு அருணா, ஜியாவும் சமீரும் பேசிய உரையாடல் ஒன்றை நீதிபதியிடம் கொடுக்க, அவர் அனைவருக்கும் முன்பாக அந்த ரெக்கார்டிங்கை ஓட விட அதில்,

“என்னால ஆஷிக் கூட ஒரு மனைவியா வாழ முடியாது சமீர்.”

“பழசு எல்லாத்தையும் மறந்துட்டு நீ ஆஷிக் கூட வாழ்ந்து தான் ஆகணும் ஜியா.”

“ஏன் என் நிலைமையில இருந்து யோசிக்க மாட்டிக்கிற சமீர்?"

"கொஞ்சம் மத்தவங்கள நினைச்சு பாரு, உண்மை தெரிஞ்சா உடைஞ்சு போயிருவாங்க. மனசை மாத்திக்கோ ஜியா.” இவ்வாறு ஜியா சமீரிடம் திருமணமான தொடக்கத்தில், டெல்லியில் ஒருநாள் ஆஷிக் கோபித்துக்கொண்டு சென்ற பொழுது உள்ள உரையாடலில் உள்ள, தனக்குச் சாதகமாக உள்ள பகுதியை மட்டும் சமீர் நவீன முறையில் எடிட் செய்து கோர்ட்டில் சமர்பித்தான்.

ஆனால் அந்த உரையாடலின் நோக்கம் ஆஷிக்கிடம், உண்மையை மறைத்து வாழ முடியவில்லை என்று ஜியா, பெங்களூர் சம்பவத்தைக் கருத்தில் கொண்டு கூறியதாகும். சமீர் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான்.

இந்த உரையாடலைக் கேட்ட அனைவருக்கும் ஏதோ ஜியா, ஆஷிக்கை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டது போலவும், அவளுக்குச் சமீர் மீது காதல் இருப்பது போலவும் அவனை, மறக்க முடியாமல் கஷ்டப்படுவது போலவும் சமீர், ஜியாவுக்கு நல்லதை எடுத்து சொல்வது போலவுமான அர்த்தத்தைக் கொடுத்தது.

இதைக் கேட்ட ஜியா பதறிப்போய், "இல்லை... இது பொய்...” என்று உணர்ச்சிவசப்பட,

அருணா, "இதுல இருக்கிறது உங்க குரல் தானே?"

"ஆமா"

"நீங்க தானே பேசுனீங்க?"

"ஆமா”

“அப்போ இதுல எது பொய்?"

"எல்லாம் உண்மை ஆனா, அதற்கான அர்த்தம் வேற. நான் ஆஷிக்கை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். அவன் கூட நான் சேர்ந்து வாழாததுக்குக் காரணம் வேற..."

"வேறன்னா? என்ன காரணம்னு சொல்லுங்க.” என்ற அருணாவிற்கு, ஜியா எந்தப் பதிலும் கூறாமல் தன் கைகளைப் பிசைந்தவாறே நிற்க,

"உங்ககிட்ட தான் ஜியா நான் கேட்குறேன், பதில் சொல்லுங்க.” என்று மீண்டும் தன் குரலை உயர்த்தியதில் தன் நிலைக்கு வந்தவள், சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்தியவாறே பெங்களூரில் நடந்த அனைத்து சம்பவத்தையும் கூற,

தன் இரு கைகளையும் தட்டிய அருணா, “வாவ்! ஜியா ரொம்ப அழகான கதை. ஆனா சட்டத்துக்கு அழகான கதை தேவை இல்லை, உண்மை வேணும்."

"இதுதான் உண்மை!” என்று ஜியா கதற,

"இல்லை, உண்மை என்னன்னு நான் சொல்றேன். நீங்களும் சமீரும் பெங்களூர்ல நட்பா பழகிருக்கீங்க. நட்பு நாளடைவில காதலா மாறிருக்கு. அந்த நேரத்துல உங்க பழைய காதலன் ஆஷிக்கப் பார்த்ததும், அவர் சமீரை விடப் பெட்டரா இருக்க அவரைச் சொத்துக்காகக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. ஆனாலும் உங்களுக்குச் சமீர் மேல உள்ள காதல் தீராம இருந்தனால, அவர் கூட உங்க கணவனுக்குத் தெரியாம ரிலேஷன்ஷிப்ல இருக்க முடிவு செஞ்சி அவரைச் சந்திச்சுருக்கீங்க.

ஆயிஷா கூட நிச்சயம் ஆனதுனால சமீர் உங்களுக்கு எடுத்து சொல்லி, உங்க கணவர் ஆஷிக் கூடச் சேர்ந்து வாழ சொல்லிருக்காரு. ஆனா நீங்க கேட்கல. மார்ச் எட்டாம் தேதி உங்க கணவர் இல்லாத நேரத்துல சமீர சந்திக்கத் திட்டம் போட்ருக்கீங்க. நீங்க கூப்பிட்டா அவர் வர மறுத்திருவார்னு, அவரோட நண்பர் ஜீவா வீட்டுக்கு போய் அவர் மூலமா சமீரை வர சொல்லிருக்கீங்க.” என்று அருணா கூறிய ஒவ்வொன்றையும் மறுத்த ஜியா கதறி அழ, மேலும் பேச வந்த அருணாவைக் குறுக்கிட்ட சம்பத்,

"அப்ஜக்ஷன் யுவர் ஹானர், டிபன்ஸ் லாயர் என் கட்சிக்காரரிடம் சம்பந்தம் இல்லாத கேள்வியைக் கேட்டு, அவரது மனதை காயப்படுத்துகிறார்."

"நான் யாரையும் எதுவும் பண்ணல, சம்பந்தம் இல்லாத எந்தக் கேள்வியையும் நான் கேக்கல."

"அருணா விக்ட்டிமிடம் கொஞ்சம் தன்மையாக நடந்து கொள்ளுங்கள்.” என்று நீதிபதி கூற,

"எஸ் யுவர் ஹானர்! இங்க பாருங்க ஜியா, நீங்க அழுதா உண்மை மாறப் போறதில்லை. நான் சொல்ற எல்லாத்துக்கும் என்கிட்ட சாட்சி இருக்கு.” என்றவள் ஜீவாவை விசாரணைக்காக அழைத்தார்.

"ஜீவா நான் கேட்குற கேள்விக்குச் சரியான பதில சொல்லுங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இதே கூண்டுல நீங்க நிற்கும் பொழுது, சமீருக்கும் ஜியாவுக்கும் பழக்கம் இருக்குன்னு சொன்னீங்க?"

"ஆமா"

"அவங்க பழக்கம் எப்படிப் பட்டது?"

"அடிக்கடி சந்திச்சு சிரிச்சு பேசிக்குவாங்க, ஒன்னா சாப்பிடுவாங்க, வெளியிலே போவாங்க."

"அவங்களோட பழக்கம் வெறும் நட்பு மட்டும் தானா?"

"இல்லை."

"சமீர், ஜீவாவை அப்படிக் கண்டிப்பா பண்ண மாட்டான்னு ரொம்ப உறுதியா சொன்னீங்க, ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?"

"ஏன்னா சமீர், ஜியாவை ரொம்ப விரும்புனான். கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னான். ஆனா ஜியா, சமீரை விட்டுட்டு ஆஷிக்கை கல்யாணம் பண்ணுவாங்கன்னு நான் சத்தியமா நினைக்கல. ஆனா சமீர்கிட்ட ஜியாவ நம்ப வேண்டாம், அவ உனக்கு செட் ஆகமாட்டான்னு எவ்வளவோ சொன்னேன். சமீர்தான் நம்பி ஏமாந்துட்டான்."

"ஏன் அப்படிச் சொல்றீங்க?"

"ஜியா, சமீர பணத்துக்காகத் தான் யூஸ் பண்ணிக்கிட்டு இருந்தா. அவளுக்கு நிறைய ஆம்பளைங்க கூட லிங்க் இருந்தது. எப்பவும் பார்ட்டி, ட்ரின்க்ஸ்னு சுத்துவா. எல்லா ஆம்பளைங்க கூடயும் நெருக்கமா பழகுவா.”

"நீங்க போகலாம் ஜீவா, இப்போ என்ன சொல்றீங்க ஜியா? ஜீவா உங்களுக்கும் நண்பர் தானே?"

"இல்லை, தெரிஞ்சவர்..."

"உங்களுக்கும் சமீருக்கும் இடையே உள்ள உறவை பத்தி தெரிஞ்சவர் சரி?"

"தப்பு! ஜீவா முதல்ல நல்லவனே கிடையாது. அவன் ஏற்கனவே என்கிட்ட அடி வாங்கிருக்கான். அவன் எனக்கு எதிராதான் சொல்லுவான்."

"ஜீவா கெட்டவர்னா ஏன் மார்ச் எட்டு அவரைப் பார்க்க போனீங்க?"

"நான் தான் சொன்னேனே..."

"கதையைக் கேக்கல, உண்மைய கேட்குறேன்.” என்ற அருணா, மார்ச் எட்டு சமீருக்கும் ஜியாவுக்கும் இடையில என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க, நீதிபதியிடம் சமீரை சாட்சி கூண்டுக்கு அழைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள, சமீரிடம் அருணா விசாரணையைத் தொடங்கினார்.

"சொல்லுங்க சமீர், மார்ச் எட்டு என்ன நடந்தது? ஜியா சொல்ற மாதிரி நீங்க அவங்கள மானபங்க..." என்று தொடர்வதற்குள், திட்டமாக மறுத்த சமீர், “சத்தியமா இல்லை... என்னால எப்படி அப்படிப் பண்ண முடியும்? ஜியாவை நான் காதலிக்கிறேன்.” என்றவன் மேலும் தொடர்ந்து,

"ஜியாவுக்கும் எனக்கும் அன்னைக்கு நைட் ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப் நடந்தது உண்மை தான். ஆனா ஜியா சொல்ற மாதிரி ரேப் இல்லை, ரெண்டு பேரோட சம்பந்தத்தோட தான் நடந்தது.” என்று சமீர் சலனம் இல்லாமல் பொய் உரைக்க, உறைந்து போனவள் சீற்றத்துடன் அவன் கூறியதை மறுத்து தன் தரப்பைக் கூற வர, அவளது தரப்பு வரும் வரை நீதிபதி காத்திருக்கக் கூறினார்.

ஆஷிக், ஜீவா மீதும் சமீர் மீதும் தனக்குள் கனன்று வந்த அடக்க முடியாத வெறியை, கடினப்பட்டு அடக்கியவாறு பற்களை நறநறத்தவாறு அமர்ந்திருந்தான்.

"மேல சொல்லுங்க சமீர்.” என்ற அருணாவிடம்,

"அன்னைக்கு ஜியாக்கும் எனக்கும் ஆர்க்யூமென்ட் நடந்தது. ஜியா ஒருகட்டத்துல என்னைப் பிரிய முடியலன்னு அழ ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க காதலோடு என்கிட்ட நெருங்கும் பொழுது, என்னால தடுக்க முடியல, எங்களுக்குள்ள நடந்துருச்சு.

நான் ஆஷிக், ஆயிஷா நினைச்சு ரொம்பக் கில்ட்டியா ஃபீல் பண்ணினேன். சீக்கிரமா அவங்ககிட்ட உண்மைய சொல்ல சொன்னேன், அவ மறுத்தா, நான் கொஞ்சம் கோபமா கிளம்பிட்டேன். அப்படி இருக்கும் பொழுது தான் அவளோட ஆக்சிடென்ட் நியூஸ் கிடைச்சுது. அப்போ சந்திச்சு பேசுனேன். ஆஷிக்கிட்ட உண்மைய சொல்ல சொன்னேன்.

உன்னால முடியலைன்னா நான் சொல்றேன், ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வோம்னு சொன்னேன். இவ பொறுமையா இருக்கச் சொன்னா, நான் கண்டிப்பா சொல்லுவேன்னு சொன்னேன். உடனே அவங்க தப்ப மறைக்க ஆஷிக்கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லி, அவர் என்னை அடிக்க, எனக்கு அது மனசளவுல ரொம்பப் பாதிப்பை ஏற்படுத்திடுச்சு.” என்று கலக்கத்தோடு கூறினான்.

"இதுதான் உண்மை யுவர் ஹானர். என் கட்சிக்காரர் கலங்க மற்றவர். உண்மை குற்றவாளிகள் யாரோ, அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.” என்று அருணா டிபென்ஸ் தரப்பில் உள்ளதை கூறிவிட்டு, தன் இருக்கையில் சென்று அமர்ந்தார்.

பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் தன் விசாரணையை ஜீவாவிடம் இருந்து தொடர்ந்தார்.

“மிஸ்டர் ஜீவா, சமீரும் ஜியாவும் ஒன்னா சாப்பிட்டது, வெளியில போனதை வச்சு இரண்டு பேரும் விரும்புறாங்கனு சொல்றீங்களா? இல்லை, ரெண்டு பேரும் சேர்ந்து அவங்க விரும்புற விஷயத்தை உங்ககிட்ட சொன்னாங்களா?” என்று கேட்க,

"சமீர் சொன்னான்."

"சோ, ஜியா சொல்லல?"

"அது... அது...” என்று ஜீவா இழுக்க,

"சொன்னாங்களா, இல்லையா? ஐ ஜஸ்ட் நீட் அ அன்ஸர்." என்று அழுத்தத்தோடு கேட்க,

"ஞாபகம் இல்லை."

"ஞாபகம் இல்லையா, இல்லை இல்லையா?” என்று கூர்மையாகக் கேட்க,

"சரியா தெரியலை."

"ஜீவா தெரியுமா, தெரியாதா?"

"தெரியாது.” என்றதும் நீதிபதியைப் பார்த்து, “நோட்ஸ் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர்.” என்றவன் மேலும் தொடர்ந்து ஜீவாவிடம், “சோ ஜியா மனசுல என்ன இருக்கு, அவங்க சமீரை விரும்புறாங்களா இல்லையான்னு உங்களுக்குத் தெரியாது.

ஏன் இப்படி இருக்கக் கூடாது, ஜியா, சமீரை நண்பனா நினைச்சுதான் பழகிருக்காங்க. ஆனா சமீர் நட்பை காதலா நினைச்சு இருக்குறாரு. சந்தர்ப்ப சூழ்நிலையால ஜியாவுக்கும் சமீருக்கும் எந்தத் தொடர்பும் இல்லாம போக, ஒரு வருஷம் கழிச்சு ஆஷிக்கோட மனைவியா ஜியாவைப் பார்த்ததும் சமீரால தாங்கிக்க முடியல. அதனால சமீர் தன் வன் உணர்ச்சிக்கு ஜியாவை இரையாக்கிட்டாரு. அதுக்கு நீங்களும் உடந்தை.” என்று சம்பத் கூற,

அவரை இடைவெட்டிய அருணா, “நீங்க சொல்ற மாதிரி ஜியாவை ரேப் பண்ணினாங்கன்னு சொல்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?” என்று கேட்க,

"டாக்டர் விஷ்ணு பிரியா! அவர்தான் ஜியாவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டர்.” என்றதும் அவரைச் சாட்சி கூண்டிற்கு அழைக்க, ஆஷிக் அவனது நண்பர்கள் அனைவரும் மிக எதிர்பார்ப்போடு அமர்ந்திருக்க சம்பத் வழக்கைத் தொடர்ந்தார்.

"ஜியாவை மார்ச் எட்டு அன்னைக்கு ட்ரீட்மெண்ட் பார்த்தது நீங்க தானா?” என்று கேட்க,

"ஆமா"

"அவங்களுக்கு என்ன ப்ராப்ளம்னு சொல்லி அட்மிட் பண்ணினாங்க?"

"ஆக்சிடெண்ட்னு சொல்லி தியா அவங்களோட ஃப்ரண்ட் தான்னு சொல்லி அட்மிட் பண்ணினாங்க. சிவியர் ப்ரெயின் அண்ட் லெக் இஞ்சூரி. கொஞ்சநாள் கோமாவுல இருந்தாங்க. அப்புறமா க்யூர் ஆகிட்டாங்க. இது அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணின மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்.” என்று விஷ்ணு பிரியா, தன் மனசாட்சியைக் கொன்றுவிட்டு கூறிய பொய்யில் ஆஷிக், ஆதர்ஷ், ரோஹித் அனைவரும் திகைத்து போய் இருக்க, ஜியா தனக்கு இருந்த ஒரு ஆதாரமும் தன்னை ஏமாற்றிவிட்டதை எண்ணி மிகவும் மனமுடைந்து போனாள்.

சமீர், டாக்டர் விஷ்ணு ப்ரியாவின் குழந்தையைக் கொன்று விடுவதாகக் கூறி, அவரைத் தன் பக்கம் வரவழைத்ததை எண்ணியவாறு ஜியாவை ஏளன பார்வை பார்த்தான்.

அவனது அந்தப் பார்வையிலே தான் மீண்டும் தோற்று போனதை உணர்ந்தவள், விழியோரமாய் நீர் வழிய எதுவும் கூறாமல் அமைதியாய் நின்றாள்.

ரிப்போர்ட்டை படித்துப் பார்த்த நீதிபதி, அருணாவிடம் சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டுமா என்று கேட்க,

அருணா மருத்துவரிடம், “அப்போ ஜியா தரப்புல சொல்ற மாதிரி அவங்கள யாரும் ரேப் பண்ணல?"

"இல்லை, அதுக்கான எந்த அறிகுறியும் இல்லை. இட் வாஸ் அ ஆக்சிடென்ட்."

"தேங்க் யு விஷ்ணு ப்ரியா." என்ற அருணா நீதிபதியிடம், “யுவர் ஹானர், இவங்க தரப்புல இருந்து வந்த சாட்சியே உண்மைய சொல்லிட்டு போய்டாங்க. ரிப்போர்ட்ஸ் உங்க பார்வையில இருக்கு. கேஸ் க்ளியரா இருக்கு.

எங்க சமீர் தனக்கும் அவருக்குமான ரிலேஷன்ஷிப்பை தன் கணவன் ஆஷிக்கிட்ட சொல்லிருவாரோ, ஒருவேளை சொன்னா எங்க இப்போ வாழ்ந்துட்டு இருக்குற லக்ஸுரி லைஃப்பை இழந்திருவோமோனு பயந்து போய் ஜியா, ஆஷிக்கிட்ட இருந்து தப்பிக்க என் கட்சிக்காரர் மேல போட்ட பிளான் தான் இந்தக் கற்பழிப்பு குற்றச்சாட்டு. ஆஷிக்கும் தன் மனைவியோட பேச்சு நம்பி சமீரை கொடூரமா தாக்கிட்டாரு.

இப்போ இந்தக் கேஸ் கூட வெளிப் பார்வைக்கு, தன்னை நிரபராதின்னு நிரூபிக்க இவங்க போட்ட தவறான குற்றச்சாட்டு. இது ஒரு கிறிஸ்டல் க்ளியர் ஓபன் ஷட் கேஸ் என்பதால், குற்றம் சுமத்தப்பட்ட என் கட்சிக்காரரை நிரபராதி என்று தீர்ப்பளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.” என்று அருணா தன் வாதத்தை முடித்தார்.

நீதிபதி ஜியாவிடம், “உங்க தரப்புல இருந்து நீங்க ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?"

விழிகளை மூடி திறந்தவள் ஆழமான மூச்சை உள்ளே இழுத்தபடி, “எஸ் யுவர் ஹானர்! ஜீவா, சுஜித், வருண் இவங்க மூணு பேரையும் நான் தனி தனியா உங்க முன்னாடி விசாரிக்கணும். அதுக்கு எனக்கு அனுமதி வேணும்.” நேருக்கு நேராக ஜியா கேட்க, நீதிபதியால் மறுக்க முடியவில்லை.

"பெர்மிஷன் க்ரான்டட்!"

சாட்சி கூண்டிற்கு ஜீவா அழைக்கப்பட, ஜியா தன் விசாரணையைத் தொடங்கினாள்.

பயத்தில் தேகம் நடுக்கமுற்றாலும் அதை காட்டிக்கொள்ளாதவள், நேர் பார்வையோடு அவன் முன்பு வந்தாள். சற்று முன்பு தன் முன் கதறியவளின் விழிகளில் திடீரென்று அக்னி தெறிப்பதை ஆச்சரியமாய் பார்த்தான்.

"ஹலோ மிஸ்டர் ஜீவா ஆனந்த், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்குக் கேரக்டர் செர்டிபிகேட் குடுத்தீங்கள்ல, அதை கொஞ்சம் ரிப்பீட் பண்ண முடியுமா?"

"அது...” தடுமாறினான்.

"சமீர் என்னை நம்பி ஏமாந்தது, அந்தக் கதை தான். அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சமீரோட பணத்துக்காக நான் அவரை யூஸ் பண்ணிக்கிட்டேன். நிறைய ஆம்பளைங்க கூட எனக்கு லிங்க் இருந்தது. எப்பவும் பார்ட்டி ட்ரின்க்ஸ்னு சுத்துவேன். இப்படி நீங்க தானே சொன்னீங்க?"

"ஆமா, உண்மை தான். எங்களை மாதிரி பணக்கார பசங்க கூடப் பணத்துக்காகப் பழகுற ஒரு சில பொண்ணுங்க மாதிரி தான் நீயும். நேரத்துக்கு ஒருத்தர் கூட பார்ட்டி, ட்ரின்க்ஸ்னு சுத்துவ. உன்கிட்ட எப்படி நல்ல கேரக்டர் இருக்கும்? அதான் சமீர்கிட்ட எச்சரிக்கையா இருக்கச் சொன்னேன், அவன் ஏமாந்துட்டான். நான் பொய் ஒன்னும் சொல்லல."

"நானும் நீங்க பொய் சொன்னீங்கனு சொல்லலையே டாக்டர் ஜீவா. ஒருசில பொண்ணுங்கன்னு சொன்னீங்களே, பொண்ணுங்க கூட நிறையப் பழக்கமோ? அதான் நான் சோ கால்ட் அந்த, 'ஒரு சில’ பொண்ணுங்கள்ள ஒருத்தின்னு சரியா கண்டுபுடிச்சுட்டீங்க போல?” என்று அவள் விழிகளை விரித்துக் கேட்க குழம்பினான், பதில் தெரியவில்லை.

"என்கிட்ட நல்ல கேரக்டர் இல்லன்னு எதோ சொன்னீங்களே, எதை வச்சு சொன்னீங்க?"

"பல ஆண்களோட நெருக்கமா பார்ட்டி, ட்ரின்க்ஸ்னு சுத்துவீங்க, அதை வச்சு சொன்னேன்."

"நெருக்கமான்னா எவ்வளவு நெருக்கமா ஜீவா?"

"அது..."

"நீங்க நெருக்கம்னு சொல்றது பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் பத்தி சொல்றீங்க சரியா?"

"ஆமா"

"என்னைக்காவது நான் யார்கூடயாவது மேக் அவுட் பண்றத பார்த்தீங்களா ஜீவா?” என்று பற்களைக் கடித்தவாறு அவள் கேட்க,

"அது... இல்லை...” வியர்த்துக் கொட்டியது.

"அப்போ எப்படி எனக்கு மத்த ஆம்பளைங்க கூடத் தொடர்பு இருக்குன்னு சொன்னீங்க?"

"எல்லாரும் பேசுறத வச்சு..."

"அப்போ எதையும் கண்ணால பார்க்கலை?"

"இல்லை."

"நீங்க ஒரு டாக்டர், சுமார் எத்தனை பேஷண்ட்ஸ்க்கு ட்ரீட்மெண்ட் குடுத்திருப்பீங்க?"

"நூறுக்கு மேல..."

"இதுல பெண்களும் உண்டா?"

"ஆமா"

"நோயாளிகளை எல்லார் முன்னாடியும் பரிசோதனை பண்ணுவீங்களா, இல்லை ரூம்ல வச்சு பண்ணுவீங்களா?"

"இல்லை, ரூம்ல வச்சு தான் பண்ணுவேன்."

"நான் கூட உங்கள கேரக்டர் லெஸ்னு சொல்லலாம்ல?” சுருக்கென்று அவள் கேட்ட கேள்வியில் வாயடைத்து நின்றான். வெறுமையாகப் புன்னகைத்தாள்.

"நீங்க சொன்னதை வச்சு பார்க்கும் பொழுது பார்ட்டி, ட்ரின்க்ஸ்னு போற பொண்ணுங்க எல்லாரும், கேரக்டர் சரி இல்லாத பொண்ணுங்க அப்படித் தானே?"

"அப்படின்னு இல்லை..."

"ஆனா நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னீங்களே, ஆமா தானே?"

"ஆமா."

"ஆமா, நான் பார்ட்டி, ட்ரிங்க்ஸ்னு சுத்துற கேரக்டர் லெஸ் பொண்ணு தான். ஆனா அதுக்காக என்னை உன் ஃப்ரண்ட் ரேப் பண்ணுவானா?" அமைதியோடு பற்களைக் கடிக்க,

"ஆனா... அது ஜியா...” அவள் கேட்ட கேள்வியை அவன் மறுக்கவில்லை. நெற்றியை நீவியபடி தடுமாறினான்.

"ட்ரின்க் பண்ற பழக்கம் உண்டா?"

"ஆமா"

"சோ நீங்க ட்ரின்க் பண்ணுவீங்க, ஆனா நாங்க ட்ரின்க் பண்ணினா ரேப் பண்ணுவீங்களா?” தனலை அள்ளி கொட்டியது போல் வாய் திறக்கவில்லை. சமீர் கடுமையாக முறைக்க, தலை கவிழ்ந்தான்.

"அப்ஜெக்ஷ்ன் யுவர் ஹானர்!" என்று அருணா குறுக்கிட,

"அப்ஜெக்ஷ்ன் ஓவர் ரூல்டு.” என்ற நீதிபதியைத் தொடர்ந்து,

ஜியா, "பதில் சொல்லுங்க ஜீவா, உங்க நண்பர் என்னை ரேப் பண்ணலாமா?"

"இல்லை, எனக்குத் தெரியாது."

"என்ன தெரியாது."

"சமீர் உன்னை என்ன பண்ணினான்னு எனக்குத் தெரியாது."

"அப்போ அன்னைக்கு ரூம்ல என்ன வேணும்னாலும் நடந்திருக்கலாம், ரேப் வேணும்னாலும்..."

"எனக்குத் தெரியாது."

"நானும் நடந்திருக்கலாம்ன்னு தான் சொல்றேன்..."

"நடந்திருக்கலாம், நீங்க போகலாம்.” யாரையும் பார்க்காமல் தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.

ஜீவாவைத் தொடர்ந்து வருணையும் சுஜித்தையும் விசாரிக்கத் தொடங்கினாள்.

"மார்ச் எட்டாம் தேதி நீங்க சினிமா தியேட்டர்ல இருந்தீங்க, சரி தானே? ஆமா, எந்த தியேட்டர்னு தெரிஞ்சிக்கலாமா?"

"பாரடைஸ்"

"என்ன மூவி?"

"ஆஷிக்கி டூ"

"நைஸ் பிக்சர். ஆனா மார்ச் எட்டு இன்டெர்நேஷனல் விமன்ஸ் டேல. அன்னைக்கு வேர்ல்டு லெவெல்ல உள்ள எல்லா தியட்டர்ஸ்லயும் அக்டர் மிஸ்ஸஸ் ஸ்ரீதேவியோட லாஸ்ட் பிலிம் ‘மாம்’தானே டெலிகாஸ்ட் பண்ணினாங்க?” புருவம் உயர்த்தினாள். வருண் சித்தமும் அடங்கி நிற்க, சுஜித் தன் கைகளைப் பிசைந்தவாறு,

"ஆமா, ‘மாம்’ படம்தான் போட்டாங்க. அதாவது நாங்க ஆஷிக்கி டூனு நினைச்சு போனோம். அங்க அது போடாதனால நாங்க இன்டர்வெல்ல ஹோட்டலுக்கு டின்னர் சாப்பிட போய்ட்டோம். வருண் ஆஷிக்கி டூ ஞாபகத்துலயே தப்பா சொல்லிட்டான்.” என்று சுஜித் சமாளிக்க,

"நீங்க போங்க.” என்றவள் நீதிபதியிடம், “தட்ஸ் ஆல் யுவர் ஹானர்! எல்லாம் உங்க கண்ணு முன்னாடி இருக்கு. சமீரோட சாட்சி எல்லாமே பொய். அவங்க முன்னுக்கும் பின்னுக்கும் முரணா பேசுறதுல இருந்தே, அவங்க சொல்ற பொய் தெளிவா தெரியுது. எனவே என்னைச் சித்திரவதை பண்ணி கொடூரமா கற்பழிச்ச சமீருக்கு, தகுந்த தண்டனை கொடுங்க.” என்று ஜியா மனமுடைந்து அழ,

ஜியாவை விசாரிப்பதற்காக அனுமதி வாங்கின அருணா அவளிடம், "நீங்க சொல்ற மாதிரியே சமீர் உங்கள ரேப் பண்ணினதாகவே இருக்கட்டும். அதுக்கு என்ன ஆதாரம் இருக்கு மிஸ்ஸஸ் ஜியா? சட்டத்துக்கு முன்னாடி ஆதாரம் தான் தேவை, உங்க கண்ணீர் இல்லை.

யுவர் ஹானர், இவங்களுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் கொடுத்த ரிப்போர்ட்ல தெளிவா ஆக்ஸிடெண்ட்னு இருக்கு. ஜியா சொல்றது பொய் என்பதுக்கு இதைவிடத் தகுந்த ஆதாரம் இருக்க வாய்ப்பில்லை.

நூறு குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டாலும், ஒரு நிரபராதி கூடத் தண்டனை அடைய கூடாது, என்பதைக் கருத்தில் கொண்டு நிரபராதியான என் கட்சிக்காரரை விடுவித்து, அவர் மீது பொய் வழக்கு தொடுத்த மிஸ்ஸஸ் ஜியாவுக்குத் தகுந்த தண்டனை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அருணா, நீதிபதியிடம் வேண்டிக்கொள்ள,

நீதிபதி, சம்பத்திடம் ஆதாரம் பற்றிக் கேட்க, "ஜியா ஒரு பெண், அதுவும் ஒரு மருத்துவர். இப்படி ஊர் உலகத்துக்கு முன்னால் எந்தப் பெண்ணும் தவறான குற்றச்சாட்டு சுமத்தி, தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளமாட்டாள். இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. தங்கள் தரப்பில் உள்ள நியாயத்தை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும்.” என தாழ்மையுடன் கேட்க,

"ஜியா ஒரு பெண் என்பதாலும், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருவதால், பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணிற்கும் அநீதி இழைத்துவிடக்கூடாது என்னும் கருத்தை மனதில் கொண்டு, இன்னும் ஒரு வார கால அவகாசம் இந்த நீதிமன்றம் கொடுக்கிறது.” என்று நீதிபதி அடுத்த வாரத்துக்குத் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

"ஆயிரம் இருக்கட்டும், நைட்டு தனியா ஒரு ஆம்பளை வீட்டுக்கு போயிருக்கா."

"அந்தப் பையன் கூடத் தொடர்பு இல்லாமலா அவ போயிருப்பா?"

"அதான் ஃபோன்ல இவ குரல் தெளிவா கேட்குதே?"

"இது கள்ளக்காதல் விவாகாரம் தான்!"

"நெருப்பில்லாம புகையாது?"

"அழகான புருஷன வச்சுட்டு இவளுக்கு ஏன் இந்த வேலை?"

"மனுஷங்க பொய் சொன்னாலும் ரிப்போர்ட் எப்படிப் பொய் சொல்லும்? அந்த பொண்ணு மேல தான் தப்பு."

"இப்போ உள்ள பொண்ணுங்களை நம்பவா முடியுது?"

இப்படி ஜியாவை சுற்றிக்காட்டி ஒவ்வொருவரும் அமிலமாய் ஊற்றிய வார்த்தைகள் அவளது நெஞ்சை பொசுக்கிவிட, நீதிமன்றத்தில் இருந்த அனைவரின் பார்வையும் விஷப் பாம்பாய் ஜியாவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சை ஏற்ற, அவமானத்தில் கூனி குறுகினாள்.

ஒரு வாரத்தில் சாட்சிக்கு எங்கே போவது? மனமுடைந்து கதறி அழுதவளை, எப்படித் தேற்றுவது என்று புரியாமல் ஆஷிக் தவித்தான். ஜியாவை என்ன சொல்லி சமாளிப்பது என்று அறியாமல் மிகவும் தவித்தான்.

***


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்

நிலவே 67, 68 & 69
 
Last edited:
Top