Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நிலவே 70, 71 & 72

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
நிலவே 70

விஷயம் அறிந்த அஸாத் அலைபேசியில் யாருக்கோ தொடர்பு கொண்டு, “என்னய்யா எல்லாரும் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? என்கிட்ட வாங்குனதெல்லாம் மறந்துபோச்சா? எந்த வழி மறந்தாலும் வந்த வழி மறக்க கூடாது. நான் நினைச்சேன், ஒரே நாள்... உங்கள ரோட்டுக்குக் கொண்டு வர ரொம்ப நேரம் ஆகாது.

அந்த இன்ஸ்பெக்டர் சொல்ல சொல்ல கேக்காம, என் பையனை அரெஸ்ட் பண்ணியே தீருவேன்னு ஒத்தக்கால்ல நின்னு அரெஸ்ட் பண்ணிட்டு போயிருக்கான்." மிரட்டும் தோரணையில் அதிகாரத்தோடு அவர் பேச, தடுமாற்றத்தோடு எதிர்முனையில் இருந்த நபர்,

"அஸாத் சார், நாங்க அப்படி நினைப்போமா? பிரச்சனை கைய மீறி போகுது. எங்களுக்குத் தெரியுறதுக்கு முன்னாடி மீடியாக்கு வந்திருது. இப்போ கூட ஆஷிக்கை அரெஸ்ட் பண்ண சொல்லி ஸ்டேக்ஷன் முன்னாடி பெரிய போராட்டமே நடந்தது. சமாதானம் பண்ணி கூட்டத்தைக் கலைச்சுருக்கேன்.

இப்போ ஆஷிக்கை அரெஸ்ட் பண்றது கூட எல்லாரையும் அமைதி படுத்தத்தான். சமீர் ஹாஸ்பிட்டல்ல இருக்கான், அதான் பிரச்சனை இவ்வளவு தூரம் வந்துட்டு. சமீர், ஆஷிக் மேல போட்ட கேஸ் ரொம்ப நாள் நிக்காது."

"நாளா? இப்போ என் பையனை விடுன்னு சொல்லிட்டு இருக்கேன், என்ன கதை பேசிட்டு இருக்க?"

"அது முடியாது சார், இன்னும் ஒரு வாரத்துக்குக் கோர்ட் லீவ். கவர்ன்மென்ட் ஹாலிடே...” இயலாமையோடு கூறினார்.

"அப்போ என் பையன் ஒருவாரம் ஜெயில்ல இருக்கணுமா?” ஆக்ரோஷமாக கேட்டார்.

"சார், உங்க பையன் வீட்ல எப்படி இருப்பானோ அதே மாதிரி ராஜ மரியாதையோடு இருப்பான், நான் உங்களுக்கு வாக்கு குடுக்குறேன். இந்த அரெஸ்ட் எல்லாம் எல்லாரோட பார்வைக்குத் தான். பிரச்சனை மீடியா, பப்ளிக்னு போகுது, அதனால தான் என்னால எதுவும் பண்ண முடியலை. என்னை நம்புங்க, அவனை நான் பார்த்துக்கறேன்."

"நீ சொன்னதை மீறி எதாவது நடந்தது..." மீண்டும் எச்சரித்தார்.

"நடக்காது!” உறுதியோடு வெளிப்பட்ட குரலில் நம்பிக்கையுற்ற அஸாத்,

"போலீஸ் ஜீப்ல என் பையனை கூட்டிட்டு போயிருக்கான், அந்த இன்ஸ்பெக்டர் அவன் யாரு?"

"வேலைக்குப் புதுசு, அதான் அவனுக்கு உங்களைப் பத்தி தெரியாது. நான் வார்ன் பண்ணிட்டேன்."

"நான் அங்க வரும்பொழுது அந்த இன்ஸ்பெக்டர் அங்க இருக்கக் கூடாது.” கண்டிப்புடன் கூற,

"இருக்க மாட்டாரு, நீங்க வாங்க நாம பேசிக்கலாம்.” என்றவரிடம், தான் உடனே வருவதாகக் கூறிவிட்டு தன் அழைப்பைத் துண்டித்தார்.

கவலையோடு தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஹாஜராவிடம், "ஜியா எங்க?"

"ஆயிஷா கூட இருக்கா."

"சமீர் இவனைக் கரெக்டா ட்ரிகர் பண்ணி, நேரம் பார்த்து பிளே பண்றான். நேத்து காலையில கோர்ட்ல ஆஷிக், சமீர பார்த்து, 'உன் சாவு என் கையில தான்னு' சொன்னதை எப்படித் தனக்குச் சாதகமா எப்படிப் பயன்படுத்திருக்கான் பாரு?"

"என்னங்க ஆகும், எனக்குப் பயமா இருக்கு. ஆஷிக்கை நீங்க கூட்டிட்டு வந்திருவீங்கல்ல?"

"இல்லை..."

"ஏங்க? அந்த ஆள விசாரிச்சா ஆஷிக் மேல தப்பில்லை, சமீர் தான் எல்லாத்துக்கும் காரணம்னு தெரிஞ்சிரும்ல?"

"போலீஸ் எவ்வளவு அடிச்சாலும் ஆஷிக்கோட பேரை சொல்லணும்னு தான் சமீர் அந்த ஆளுக்குக் காசே குடுத்திருப்பான். இப்படி கூலிக்கு வேலை செய்றவனுக்கு ஜெயில் அடி எல்லாம் புதுசா? அந்த ஆள விசாரிக்கிறதெல்லாம் வேலைக்கு ஆகாது.

ஒரு இன்ஜெக்ஷன் போட்டா போதும், எவ்வளவு அடிச்சு சித்திரவதை செஞ்சாலும் அசராம உக்கார்ந்துட்டு இருப்பானுங்க. சமீரோட டார்கெட் ஆஷிக் இல்லை, ஜியாதான். ஆஷிக் ஜெயிலுக்குப் போய்ட்டா அதிகமா கஷ்ட்டபடப் போறது ஜியா தானே அதான்.

எங்க நாம பெயில் வாங்கிருவோம்னு சரியா காத்திருந்து கோர்ட் வேலை செய்யாத நாளா பார்த்து, அதுவும் ஜியா கேஸ் அடுத்த வாரம் வர்ற நேரம் பார்த்து இப்படிப் பண்ணிருக்கான்.” என்று சமீரின் மனவோட்டத்தை அப்படியே கணித்துக் கூறினார்.

"எனக்குப் பயமா இருக்கு..."

"இதைத் தவிர வேற எதுவும் சொல்லிறாத...” கடுகடுத்தவர் பின்பு எதையோ யோசித்தவராய்,

"துவா செய், அதுதான் இப்போதைக்கு ஒரே வழி. ஆஷிக்குக்கு எதுவும் ஆகாது, யார்கிட்ட பேசணுமோ பேசிட்டேன். நான் அவனைத் தான் பார்க்க போறேன். நீ எதையும் நினைச்சு கவலைப்படாத.” என்றவர், ஆஷிக்கை காண ஸ்டேஷனுக்குச் சென்றார்.

போலீஸ் ஸ்டேஷனில் கமிஷ்னரின் அறையில் நின்று கொண்டிருந்த ஆஷிக்கிடம் ஆதர்ஷ், ரோஹித், அஸாத் மூவரும் மாறி மாறி கேள்விகேட்க, ஒருவித எரிச்சலுடன் தன் நெற்றியை நீவியபடி நின்றவன்,

தன்னையே ஊடுருவி பார்த்துக் கொண்டிருக்கும் தன் குடும்பத்தினரின் பார்வையை வைத்தே, அவர்களின் எண்ணத்தை உணர்ந்து,

"இவ்வளவு சொல்லிட்டேன், இன்னும் நீங்க நம்பலையா?” என்று தன் தலையில் கை வைத்தவாறு நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தான்.

"ஐயோ! அப்படிப் பார்க்காதீங்க... நான் அவனை ஒன்னும் பண்ணலை..." என்று சிடுசிடுக்க,

"கோபப்படாத ஆஷிக், ராத்திரி கோபமா கிளம்பி போன. லேட்டா வந்த உன்னைக் காணும்னு நாங்க எல்லாரும் எப்படிப் பதறி போய்ட்டோம் தெரியுமா? எத்தனை தடவ ஃபோன் பண்ணிருப்போம்...” என்று ஆதர்ஷ் ஆதங்கப்பட,

ஆஷிக்கிடம் அஸாத், "கொஞ்ச நாள் பொறுத்துக்கோ, யார்கிட்டயும் பப்ளிக்கா உன் கோபத்தைக் காட்டாத. உனக்கு எங்க அடிச்சா வலிக்கும்னு சமீர் நல்லா தெரிஞ்சி வச்சுருக்கான். உன்னை ப்ரோவோக் பண்ணி பண்ணி அவன் தன்னோட காரியத்தைச் சாதிச்சுக்கிட்டு இருக்கான்.

ஹேவ் சம் சென்ஸ்? உன்னைச் சுத்தி நடக்குற விஷயங்களைக் கண்ணைத் திறந்து பாரு. ஸோ, அவன் பேச்ச கேட்டு நீ டென்ஷன் ஆகாத. கொஞ்ச நாள் பல்ல கடிச்சுக்கிட்டு இரு. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்." என்றவரிடம் ஒப்புதலாய் தலையை அசைத்தான்.

"வாயத் திறந்தும் கூடச் 'சரி' சொல்லலாம் ஆஷிக்...” அழுத்தமாய் கூறியவரிடம்,

"சரி, ஆனா...” என்று கோபத்தோடு தொடர்ந்தவனிடம்,

"ஆனான்னு சொன்னா சரின்னு சொல்றதுக்கு அர்த்தம் இல்லாம போயிரும் ஆஷிக். உன்னுடைய கோபம்தான் உன்னை இங்க நிக்க வச்சுருக்கு. உன் ஃபோனை எப்பவும் ஆன்லயே வச்சுக்கோ. சொன்னதை மறந்திராத...” என்று ஆஷிக்கிடம் அவர் பேசிக்கொண்டிருந்த நேரம் பார்த்து, ஆயிஷாவின் அழைப்பு வர அட்டென்ட் செய்த அஸாத்,

"என்னமா சரி, இதோ கொடுக்கிறேன்...” என்றவர் ஆஷிக்கிடம் அலைபேசியைக் குடுக்க,

"என்னாச்சு ஆயிஷா? நீ பயப்படாத, நான் நல்லா இருக்கேன், ஜியா எப்படி இருக்கா?"

"நீ ஜியாகிட்ட பேசு, அழுதுட்டே இருக்கா... உன்னைப் பார்க்கணும்னு ஒரே கலாட்டா...” என்ற ஆயிஷா, ஜியாவிடம் அலைபேசியைக் கொடுக்க வேகமாக வாங்கியவள்,

ஆஷிக்கின் பெயரை உச்சரித்தவாறே ஏங்கி ஏங்கி அழ, ஆஷிக் மிகவும் சிரமப்பட்டுப் பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு அவளை அமைதி படுத்தினான்.

ஆஷிக்கின் கவலைகள் ஜியாவை சுற்றியே இருக்க, ஜியாவின் நிலைமையும் அப்படித்தான். தன்னால் தான் அவனுக்கு இந்த நிலைமை என்று எண்ணியவளின் உள்ளம் கனத்தது.

நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்தவளின் மனம், எல்லாப் பிரச்சனைக்கும் காரணம் தான் என்று, பழியைத் தன் மீது எடுத்துக்கொள்ள மிகவும் கலங்கினாள்.

அடி மீது அடி... நிமிர்ந்து நின்ற மறுகணமே விழும் ஒவ்வொரு அடியும், அவளை மேலும் மேலும் நிலை குலைய செய்தது. கண்ணீர் விடாமல் கசிய, துடைக்கும் கரங்கள் தன் அருகில் இல்லை, கசந்தது நொடிகள்.

தன்னால்... தனக்காக... தன்னவன் இன்று ஜெயிலில் இருக்கிறான். குற்ற உணர்வுகள் காயப்பட்ட நெஞ்சை மீண்டும் குத்தி கிழித்தது. இதயத்தோடு சேர்த்து கண்களும் கசிந்தது. அந்த இரவு, அதே கொடிய இரவு, நஞ்சு கொடிபோல மீண்டும் அவளது கழுத்தை இறுக்கி சுற்றிக் கொண்டது. அன்று அனுபவித்த ஒவ்வொரு ரண வேதனையும் கண் முன்னே தோன்ற, மூச்சு முட்டியது. கண்களை மிகவும் இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

தேகம் முழுவதும் வியர்வையால் நனைந்தது. விழிகள் மூடிய பின்பும் கூட அவளால் அதை எண்ணாமல் இருக்க முடியவில்லை. தன்னை அணுஅணுவாய் சிதைத்த ஒவ்வொரு நொடியையும் நினைத்து நினைத்து கதறி துடித்தாள். முழங்காலில் முகத்தைப் புதைத்தவாறு அழுதாள்.

குற்றம் செய்தவர்கள் சுதந்திரமாக வலம் வருகிறார்கள், பாவம் அறியாத தான் மட்டும் பழியோடு மூலையில் முடங்கிக் கிடப்பதை எண்ணி கோபம் கொண்டாள். அப்படி என்றால் குற்றம் செய்தவனுக்குத் தண்டனையே கிடையாதா? உள்ளம் குமுறியது. தன்னை அவர்கள் வஞ்சகமாய் ஏமாற்றிய ஒவ்வொரு சம்பவத்தையும் எண்ணி பார்த்தாள். ரத்தம் உலையென கொதித்தது.

அக்கயவர்களது எக்காள சிரிப்பும் ஏளன பார்வையும் ஆத்திரத்தைக் கூட்டியது.

‘சட்டமும் நீதியும் ஊனமாகி போனால், நான் ஏன் முடங்கிக்கிடக்க வேண்டும்?

பாவத்தை ஏன் நான் சுமக்க வேண்டும்? அப்பாவிக்கு நீதி வழங்க இயலாத சட்டம் சுமக்கட்டும்!

பழியை ஏன் நான் ஏற்றுக்கொள்ள வேண்டும்?’ கேட்டது மனம்! “நான் கதறும் பொழுது உறங்கிக்கொண்டிருந்த இந்தச் சட்டம் சுமக்கட்டும்.” என்றாள் கோபம் விழிகளில் திமிர.

“ஆண்மையே வன்மையை நீ மட்டும் தான் அறிவாயா என்ன? ஒரு ஆணுக்கு உயிர் கொடுக்கத் தெரிந்த பெண்ணுக்கு, உயிரை சிதைக்க எத்தனை நொடி எடுக்கும்? ரௌத்திரமாக வெளிவந்தது வார்த்தைகள்.

"வஞ்சகனே! உன்னை வஞ்சித்துத் தான் வதைக்க வேண்டும் என்றால், வஞ்சனை இல்லாமல் வதைக்க நான் தயார். கொடிய மிருகமே! உன்னைக் கொன்று தான் புதைக்கவேண்டும் என்றால் கொலை வெறியோடு கொன்று புதைக்கவும் நான் தயார். கதறி சிதறி அழிந்து போகத் தயாராய் இரு." ஆக்ரோஷமாக முழங்கினாள்.

ஆனாலும் விழிநீர் தன் கன்னங்களை நனைக்க மறக்கவில்லை. கோபமும் ஆத்திரமும் திரண்டு வந்தாலும், ‘என்ன செய்யப் போகிறாய்?’ என்று மனம் கேள்வி கேட்க, பதில் இல்லை.

தவறு செய்ய ஒருவரும் யோசிப்பது இல்லை, ஆனால் தண்டனை கொடுக்க எவ்வளவு யோசிக்க வேண்டி இருக்கிறது? உள்ளம் கலங்கியது. மீண்டும் விழிகள் கசிய, இந்த முறை விழிகளைத் துடைத்தது இரு கரங்கள். ஆம்! தான் தேடிய அதே கரங்கள்.

நிமிர்ந்து பார்த்தாள், தன் முன்னே நின்று கொண்டிருந்த தன்னவனைப் பார்த்தவளின் உள்ளத்தில், ‘கனவோ...?’ என்கின்ற கேள்வி எழ, தன்னவனது மார்பை தொட்டு பார்த்தாள். அசையாமல் புன்னகைத்தான்.

இந்த முறை மறையவில்லை, கனவில்லை, நிஜம்தான்! விழிகள் மலர்ந்தது. வேகமாய் தன் கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள். குலுங்கி குலுங்கி அழுதாள், ஆதரவாய் சிகையைக் கோதினான்.

"நான்தான் வந்துட்டேன்ல, பாரு உன்னைப் பார்க்கணும்னு சொன்னேன், கமிஷ்னரே வீடு வர வந்து விட்டுட்டு போனாரு. விடியற்காலம் கிளம்புனா போதும்."

"போகணுமா?” கவலையோடு கேட்டாள்.

"கொஞ்ச நாள்… இதெல்லாம் ரொம்ப நாளைக்கு நீடிக்காது. உனக்கு நியாயம் வாங்கித் தருவேன். யாரெல்லாம் உன்னைத் தப்பா பேசுனாங்களோ, அவங்க தலை குனிஞ்சு உன்கிட்ட மன்னிப்பு கேட்ப்பாங்க.” உறுதியாய் கூறினான்.

"நம்பிக்கையை இழந்துட்டேன் ஆஷிக்."

"என்னை இழக்கலல?” இதைவிட அவளுக்கு வேறு என்ன வேண்டும்? மார்போடு சாய்ந்து கொண்டாள்!

"எந்த நேரத்துலயும் நம்பிக்கையை விட்றாத, தைரியமா இரு. உனக்கு அநியாயம் நடந்திருக்கு, நீ கீழ விழுந்தாலும் முட்டி மோதி மேல வந்துதான் ஆகணும். யு ஹேவ் டு ஃபைட் யுவர் பேட்டில். இது உன்னோட யுத்தம்! நீதான் சண்டை போடணும். சண்டை போட சொல்லிதான் தர முடியும். உனக்கான சண்டைய நீதான் போடணும்.” என்று சோர்ந்து போன அவளது மனதைத் திடப்படுத்தினான்.

திடீரென்று ஆஷிக்கின் அலைபேசி சிணுங்கியது. அட்டென்ட் செய்தான், “என்னைத் தேடியா? ஓகே, நான் பார்த்துக்கிறேன்.” என்று ஆஷிக் தன் அழைப்பைத் துண்டித்தான். ஜியாவின் முகத்தில் தொனித்த கேள்வியை அறிந்துகொண்ட ஆஷிக் அலைபேசியில் நடந்த உரையாடலைப் பற்றிக் கூற,

"ஏன், அவன் ஏன் உன்னைப் பார்க்க வந்திருக்கான், எனக்குப் பயமா இருக்கு.” பதறினாள், ஆறுதல் அளித்தான்.

***

நிலவே 71

நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்க ஒருநாள் காலையில் டெல்லியில் ஆங்காங்கே, சமீரின் ஆதரவாளர்கள் சமீருக்காகக் கொந்தளிப்பில் இருந்தனர். அதில் இப்பொழுது புதிதாக மனித நேய உறுப்பினரும் சேர்ந்து, அமைதி ஊர்வலம் நடத்திக்கொண்டிருக்க, அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் நிருபரிடம்,

"சமீருக்கு நியாயம் கிடைக்கணும். அவர் அந்தப் பொண்ணை உண்மையா காதலிச்சுருக்காரு. தப்பு அந்தப் பொண்ணு மேல, ஆஷிக் சமீருக்கு சப்போர்ட் பண்றத விட்டுட்டு, அவரோடு மனைவிக்குச் சப்போர்ட் பண்ணிட்டு இருக்காரு. இப்போ கொலை முயற்சி வர போயிருக்காரு. இதுக்கு அவருக்குத் தண்டனை கிடைச்சே ஆகணும்.

சமீர் மாதிரி எத்தனையோ ஆம்பளைங்க ஜியா மாதிரி பொண்ணுங்களால ஏமாந்துட்டு தான் இருக்காங்க. இப்போலாம் பெண்களுக்கு எதிரா நடக்கிற குற்றங்களை விட, ஆண்களுக்கு எதிரா நடக்கிற குற்றம்தான் அதிகம்.

பாலியல் வன்முறைங்கிற ஒரு விஷயத்தை வச்சுட்டு, பெண்கள் இப்படி ஆண்கள் மேல பொய்யான குற்றத்தை சுமத்திட்டு இருக்காங்க. சமீர் உயிருக்கு எந்தப் பிரச்சனையும் வராது, நீதி ஜெயிக்கும். ஆண்களுக்கு எதிரா தவறான குற்றத்தை சுமத்தும் எல்லாப் பெண்களுக்கும் நிச்சயம் இது ஒரு பாடமா இருக்கும்.” இவ்வாறு அந்த இளைஞன் அளித்த பேட்டி டிவி சேனலில் ஒளிபரப்பாக, அதைத் தனது ஹாஸ்பிடலில் தனக்கான ஸ்பெஷல் வார்டில் உள்ள பெட்டில், படுத்துக்கொண்டு கையில் மதுபானத்தோடு கால் மீது கால் போட்டவாறு சமீர் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

"சான்ஸே இல்லைடா, எப்படிடா!? பக்கா பிளான் பண்ணி ஆஷிக்கை உள்ள தள்ளிட்ட! அன்னைக்குக் கோர்ட்ல ஜியா கேட்ட கேள்வில என்ன ஆகுமோன்னு பயந்துட்டே இருந்தேன். இப்போ நாம தான் ஜெயிக்கப் போறோம்னு எனக்கு முழு நம்பிக்கை வந்துருச்சு.” என்ற வருணைத் தொடர்ந்து,

ஜீவா, “நான் நாம மாட்டிக்கப் போறோம்னு நினைச்சேன், ஆனா சரியான நேரத்துல சரியா பிளான் பண்ணி எங்க எல்லாரையும் காப்பாத்திட்ட. அவ மாளவிகா கேஸ் பத்தி கோர்ட்ல வாயத் திறப்பானு நான் நினைச்சு கூடப் பார்க்கல.

அது மட்டும் வெளிய தெரிஞ்சுது அவ்வளவு தான்! நம்ம ப்ரொஃபஷனே போய்டும். இன்னைக்கு ஆஷிக் ஒழிகனு சொல்றவங்க, உண்மை தெரிஞ்சா நம்மள கொன்னு கூடப் போட்ருவாங்க.” என்ற ஜீவாவைப் பார்த்து சமீர் தன் அருகில் வருமாறு செய்கை செய்ய,

"என்னடா?” என்றவாறு அவனது அருகில் வந்த ஜீவாவின் முகத்தில், தன் கரத்தில் இருந்த மதுபானத்தைச் சமீர் ஊற்றினான்.

"முட்டாள்! இது எல்லாத்துக்கும் காரணமே நீதான்! உன்னால எல்லாரும் மாட்ட பார்த்தோம். எனக்குத் தெரியாம ஜியாவை வீட்டுக்கு வர வச்சுருக்க. இதுக்கே உன் கழுத்தை நான் நெரிச்சுருக்கணும்.” என்று கத்திய சமீர், வருணையும் ஜீவாவையும் பார்த்து,

"கேஸ் முடியிற வரைக்கும் உங்க சைட்ல இருந்து எனக்கு எந்தப் பிரச்சனையும் வரக் கூடாது. அந்த ஆஷிக் அவ்வளவு சீக்கிரம் விடமாட்டான். இந்நேரம் கண்டிப்பா ஏதாவது யோசிச்சுட்டு இருப்பான். சுஜித் என்கூடத் தான் இருக்கான், ஸோ அவனால எனக்குப் பிரச்சனை இல்லை. நீங்க ஏதாவது...” என்பதற்குள்,

"உன்னை மீறி நாங்க எதுவும் பண்ண மாட்டோம்.” என்று இருவரும் பதற்றத்துடன் கூற,

சமீர், ஜீவாவிடம், “ஜீவா உனக்கு முதல்ல சொன்னது தான், இப்பவும் என்னை மீறி தனியா ஏதாவது கேம் ஆடணும்னு நினைச்ச... அப்புறம் எல்லாரும் உன்னை நினைக்கிற மாதிரி ஆகிரும்!” என்றவனிடம் மறுப்பாக ஜீவா தன் தலையை அசைக்க,

அப்பொழுது ஹாஸ்பிடலுக்கு சமீரின் உடல்நிலையைப் பற்றி அறிந்துகொள்ள வந்த சில நிருபர்களிடம், "சமீர் உடல்நிலை இன்னும் மோசமாதான் இருக்கு. கத்திக்குத்து ஆழமா இருக்கு. இப்போதைக்கு என்னால எதுவும் சொல்ல முடியாது. ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு.” என்று சுஜித் அளித்த பேட்டியும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.

"சுஜித் செமையா நடிக்கிறான்ல?” என்று சமீர் வாய்விட்டு சிரிக்க, அந்த நேரம் பார்த்து கதவை வேகமாகத் திறந்து கொண்டு வந்த சுஜித், அனைவரையும் பார்த்து முறைத்தவாறு வந்து அமர, அவனது கோபத்திற்கான காரணத்தை அறிந்த சமீர்,

"டேய் இன்னும் ரெண்டு நாள் தானே? இந்தக் கேஸ் முடிஞ்ச அடுத்த நிமிஷம் நான் யாரையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், ஜியாவையும் தான்...” என்று சுஜித்திடம் கூறியவன்,

‘எப்படி என்னால எல்லாத்தையும் விட முடியும்? கேஸ் முடியட்டும் ஆஷிக், ஆதர்ஷ், ரோஹித் இப்படி என் மேல கை வச்ச யாரையும் விட மாட்டேன். ஆஷிக்குக்கு இப்போ கொடுத்ததை விட அதிகமான தண்டனைய நான் குடுப்பேன். அவன் துடிப்பான். துடிக்கணும்...’ என்று மனதிற்குள் எண்ணியவனின் இதழ்கள் விஷமித்தது.

அனைவரையும் பழிவாங்கவேண்டும் என்று எண்ணிய சமீர், தான் மூட்டிய நெருப்பே தன்னைப் பலியாக்க போகும் என்பதை அறியவில்லை!

ஊரே உறங்கிருக்கும் இரவு வேளையில் டெல்லியில் உள்ள, 'நைட் கிளப்' மட்டும் மது, மாது, ஆட்டம், பாட்டம் என்று கலை கட்டியது.

அந்தக் கேளிக்கை விடுதியில் பலவிதமான மதுபானத்திற்கும் அழகான பெண்களுக்கும் பஞ்சமே இல்லை. மதுபானத்தைத் தேவைக்கு மீறி தன் வாயில் சரித்த ஜீவாவும் வருணும் வேறொரு உலகத்தில் தத்தளித்தனர்.

அவர்களைப் போலத்தான் அங்கு இருந்தவர்களும்... ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் அனைவரும் போதையில் மிதந்து கொண்டிருந்தனர். இப்படி அனைவரது விழிகளும் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்க,

இரண்டு விழிகளில் மட்டும் அனல் வீசியது. அதையெல்லாம் கவனிக்க அவர்களுக்கு நேரம் ஏது? அங்கே அலைமோதிய அழகிகளிடம் பணத்தை இறைத்துவிட்டு, தங்களின் ஆசை தீர பாதி இரவை இன்பமாய் கழித்தனர் இருவரும். மூச்சு முட்ட குடித்துவிட்டு அரை போதையுடன் வெளியேறினர்.

மிதந்து கொண்டிருந்த விழிகளால் அரைகுறையாகப் பார்த்தபடி காரை ஒட்டி சென்றனர். கேளிக்கை விடுதி ஊருக்கு சற்று ஒதுக்கப்புறமாக இருப்பதால், விடுதியில் இருந்து நகருக்குள் வருவதற்கு ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத, ஹைவேஸை கடந்துதான் வரவேண்டும்.

அந்த ஹைவே சுற்றி காட்டுப்பகுதி என்பதாலும், அங்கே அடிக்கடி வழிப்பறி நடப்பதாலும், குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அங்கே ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்காது. எனவே அந்தச் சாலையில் வரும் வண்டிகள் அனைத்தும் எண்பது, தொண்ணூறில் பறக்கும்.

ஏற்கனவே போதையில் வேறு இருந்ததால், வருண் ஓட்டிச்சென்ற கார் ஹைவேயில் அதிவேகத்தில் பறந்தது. ஜீவாவும் வருணும் “ஓ... ஊ...” என்று போதையில் கத்தியபடியே பயணித்தனர். அதீத மகிழ்ச்சியில் தத்தளித்த இருவரும், தங்களை நிழல் போலத் தொடர்ந்த, தங்களின் காரின் பின் சீட்டில் இருந்த அழையா விருந்தாளியைக் கவனிக்க மறந்துவிட்டனர்.

சாலையின் ஓரமாகத் தன் விழிகளை மட்டும் காட்டியபடி புர்க்கா அணிந்து கொண்டு, கையசைத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்த மறுநொடி, அதீவேகமாகப் பறந்த வருணின் கார் சடன் பிரேக் அடித்து ஓரடி தள்ளி சென்று நின்றது.

"ஏன்டா நிப்பாட்டிட்ட?" போதையில் உளறினான் ஜீவா.

"ஒரு பொண்ணு லிஃப்ட் கேக்குறாடா...” அரைப் போதையிலும் விரிந்தது வருணின் போதை மிதக்கும் விழிகள்.

பெண் என்றால் பேயே இறங்கும். அப்படி இருக்க இந்த சதை வெறியர்கள் எம்மாத்திரம்? அருவெறுப்பான சிரிப்போடு காரை ரிவர்ஸில் கொண்டு சென்றனர்.

விஷத்தைக் கக்கியது அந்தப் பெண்ணின் விழிகள். தங்களின் எதிரில் நிற்பது தங்களின் உயிரைக் குடிக்க வந்த காலன் என்பதை அறியாது, காம பார்வை வீசினர் அந்த அறிவற்ற கயவர்கள்.

உயிரைக் குடிக்கும் வெறியோடு ஊடுருவி பார்த்தபடி, தன் முகத்திரையை விலக்கினாள் அந்தப் பெண்.

பார்த்த நொடியே பொறி கலங்கியது. நெஞ்சில் இருந்து எழுந்து வந்த பயம் தொண்டையை அடைத்தது. உடல் விறைத்து போக அமர்ந்திருந்தனர்.

ஸ்பெஷல் வார்டில் சமீர், மதுபானத்தைத் தன் வாயில் சரித்தவாறே சுஜித்திடம், "என்னடா ஜீவாவையும் வருணையும் இன்னும் காணும்?"

"நல்லா குடிச்சுருப்பானுங்க, அங்கிருந்து கிளம்புனானுங்களானே டவுட்தான்!"

"ஃபோன்க்கு ட்ரை பண்ணி பார்த்தியா?"

"ரிங் போகுது, அட்டென்ட் பண்ணல."

"ஓ வருவானுங்க... ஆமா காலையில அப்பா வந்தாரே, எதாவது கேட்டாரா? நம்பியிருக்க மாட்டாரே?"

"இல்லை, சமாளிச்சுட்டேன். அம்மாவும் தாஹிராவும் தான் ரொம்ப அழுதாங்க."

"ம்ம்ம்... பார்க்கணும்னு சொன்னாலும் உள்ள விட்றாத, எல்லாம் கெட்டு போயிரும்.” என்றவன், "நீ ட்ரிங்க்ஸ் சாப்பிடலல?” என்று கேட்க,

"இல்லை, வேண்டாம்...” என்றவனைப் பார்த்து தன் புருவம் உயர்த்தியவாறே மதுபானத்தைத் தன் வாயில் சரித்தான்.

தன் அலைபேசி சிணுங்கியதும் சுஜித், “வீட்ல இருந்து ஃபோன், பேசிட்டு வரேன்.” என்று வெளியே செல்ல,

கையில் மதுபானத்தோடு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சமீர் தன் அறையின் கதவு திறக்கப்பட்டதும். வெளியே பார்த்தவாறே,

"என்னடா, அதுக்குள்ள பேசிட்டியா என்ன?” என்று கேட்க, சுஜித்திடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் போகவும்,

"கேட்டுட்டே இருக்கேன்...” என்று முழுப் பானத்தையும் தன் வாயில் சரித்தவாறு திரும்பிய சமீர்,

"ஆ... ஷி... க்... நீ எப்படி இங்க...?” என்று அதிர்ந்த மறுநொடி,

ஜியா தன் கையில் இருந்த இரும்பு கம்பியால் ஓங்கி தலையில் அடிக்கவும், ரத்தம் வழிந்தோட சமீர் கீழே விழுந்தான். தலையே சுற்றியது. போதையின் காரணமாய் உடல் எழுந்து நிற்க மறுத்தது. மலங்க மலங்க விழித்தான்.

"என்ன சமீர், ஷாக் ஆயிட்டியா? நான் எப்படி இங்கனு யோசிக்கிறியா? நான் நினைச்சா நினைச்ச நேரம் எங்க வேணும்னாலும் போகலாம். ரொம்ப போர் அடிச்சது, அதான் நானும் ஜியாவும் உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு வந்துட்டோம்.” என்று விஷமமாய் சிரித்தவாறு ஆஷிக் அவனது அருகில் வந்து அமர்ந்தான்.

தன் தலையைப் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி எழுந்து நின்ற சமீர், ஆஷிக்கைத் தாக்க முற்பட,

அவனது முதுகெலும்பில் ஜியா ஓங்கி அடித்தாள். "ஆ...” என்றவாறு ஜியாவை முறைத்து பார்த்தவன்,

"ஹவ் டேர் யு...!?” என்று அரட்டியவாறு அவளது கழுத்தை நெறிக்க முயல, அவளது கரத்தில் இருந்த இரும்புகம்பி அவனது மணிக்கட்டைத் தாக்கியது. "ஆ..." என்று உதறி துடித்தவனை, இமைத்து பார்க்கும் நொடியில் பலமுறை தன் முழுபலத்தால் ஓங்கி ஓங்கி குருதி தன் முகத்தில் தெறிக்க அடித்தாள்.

"சுஜித்... ஜீவா...” என்று அலறினான். "ஹா... ஹா... இன்னும் சத்தமா...” எக்காளத்தோடு சிரித்தாள்.

அன்று தான் அடித்த ஒரே அடியில் நொறுங்கி கிடந்தவளா இவள்? என்று எண்ணியவன், அந்த நேரத்திலும் வியப்புடன் பார்த்தான். “என்னடா ஒரு மூலையில முடங்கிப் போய்க் கிடப்பேன்னு நினைச்சியா?” என்றவாறே மீண்டும் தாக்கினாள்.

மீண்டும், “சுஜித்... ஜீவா... வருண்...” என்று தன் தொண்டை கிழிய அலறினான்.

ஆஷிக்கும் ஜியாவும் ஏளனமாய் சிரித்தனர். கேள்வியாய் பார்த்தான்.

அவனைப் பார்த்து சிரித்தவாறே, ஜீவாவும் வருணும் தன் கண் முன்னே துடி துடித்து மாண்டு போனதை எண்ணினாள்.

காரில் உடல் விறைத்துப் போய் அமர்ந்திருந்த இருவரும், “ஜி... யா...” என்று உளறியபடி காரை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க, ஜியா சாவியைத் தன் வசம் ஆக்கினாள். அவர்கள் கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடினார்கள். ஆனால் அவர்கள் தப்பிப்பதற்குள்,

பின் சீட்டில் இருந்த ஆஷிக் வேகமாக வெளியே வந்து, தன் இரு வலிய கரங்களால் அவர்களின் கழுத்தை மிகவும் அழுத்தமாக இறுக்கி பிடித்தான்.

உயிர் பயத்தால் அரைப் போதையிலும் போராடினார்கள். ஆஷிக்கின் தீராத வெறியோடு அவர்களால் போட்டியிட முடியவில்லை.

விட்டு விடும்படி கெஞ்சினார்கள், அவன் காதில் விழவில்லை. பழிவாங்கும் உணர்ச்சி கண்களில் தொனிக்க, ஜியா கோபமாக அவர்களைப் பார்த்தாள். பார்வையில் அனல் தெறித்தது.

"ப்ளீஸ் ஜியா, நான் உன்னை என்ன பண்ணினேன்?” முடிந்த வரை மிஞ்சிய வருண் இறுதியில் கெஞ்சினான்.

"சமீர் சொல்லிதான் நான் உன்னை மிரட்டுனேன், ப்ளீஸ்...” ஜீவா தன் பங்கிற்குக் கெஞ்சினான்.

அவர்கள் கெஞ்ச கெஞ்ச ஆஷிக்கின் இறுக்கம் இன்னும் அதிகமானது, இருவருக்கும் மூச்சு முட்டியது.

"நானும் இதே மாதிரி துடிச்சேனே... அப்போ எங்க போன வருண்?” என்றவள், "உன்னைப் பார்த்தாலே எனக்கு அருவெறுப்பா இருக்கு. தேவைப்பட்டா கால்ல கூட விழுவல? 'அதான் எல்லாம் முடிச்சுட்டியே... இன்னும் ஏன் விட்டு வச்சுருக்க?’ கேட்டுச்சு ஜீவா. ஒவ்வொரு தடவையும் நீ என்னைப் பார்க்கும் பொழுது அப்படியே ஆசிட் ஊத்தின மாதிரி என் உடம்பெல்லாம் எரியும். நீ என்கிட்ட பேசும் பொழுது உடம்பெல்லாம் கூசும்.” முகத்தைச் சுளித்தபடி வெளிப்பட்டது வார்த்தைகள்.

"மன்னிச்சுரு ஜியா...” என்று இருவரும் மூச்சு விட சிரமப்பட்டவாறே கெஞ்ச, அவர்களைத் தன் ஆத்திரம் தீரும் வரை ஆஷிக் அடித்தான்.

"ஒரு பொண்ணுக்குக் கொடுமை நடக்கும் பொழுது கைக்கட்டி வேடிக்கை பார்க்கிற எந்த உயிருக்கும், இந்த உலகத்துல வாழறதுக்குத் தகுதியே கிடையாது.” முகத்தில் கோபம் தெறிக்க அவர்களைப் பார்க்க,

இமைக்கும் நொடியில் ஆஷிக் இருவரது கழுத்தையும் ஒரே நொடியில் கீறினான். ஜியாவின் முகத்தில் குருதி தெறிக்க, ரத்த வெள்ளத்தில் தரையில் வீழ்ந்தவர்கள் துடிதுடித்து இறந்து போனார்கள்.

நினைவில் இருந்து திரும்பியவள், அடங்காத ஆத்திரம் தன் நெஞ்சை அடைக்க சமீரைப் பார்த்து,

"ஜீவாவும் வருணும் செத்து போய்ட்டாங்க. என் முன்னாடிதான் துடிதுடிச்சு செத்து போனாங்க.” என்று மிக இயல்பாகப் புன்னகையோடு கூற, சமீரின் முகத்தில் ஒருவித பயம் தொத்திக்கொண்டது.

தரையில் இருந்து எழும்ப முயற்சித்த சமீரை மீண்டும் தலையில் ஓங்கி தாக்கினாள்.

கண்கள் சொருக தரையில் சரிந்தான். அவனது தலை மயிர்கால்களை இறுக்கமாகப் பற்றியவள்,

"உன்னைக் கொலை பண்ண மாட்டேன், ஆனா சாவ விடக் கொடூரமான தண்டனைய நான் உனக்குக் கொடுப்பேன்.” என்றவள் தன் மென் கரங்களால் வன்மையோடு அவனது கன்னத்தில், தன் ஐவிரலின் தடம் பதித்தாள்.

சுமார் இரண்டு மணிநேரம் கழித்துத் தன் கைகளும் கால்களும் கட்டிலில் பிணைக்கப் பட்டிருக்க, மூட துடித்த விழிகளைத் தட்டி தட்டி பார்த்தபடி விழித்த சமீருக்கு,

ஒருவித சொல்ல முடியாத வலி, தன் எலும்புகளைத் துளைத்துக் கொண்டு செல்வது போல உணர்ந்தான்.

ஆனாலும் முழுமையாக விழித்துப் பார்க்க முடியவில்லை. நொடிகள் நகர நகர வலி உயிர் போனது. தன் நிலையை எண்ணி வான் பிளக்க கதறினான். அவனது கதறலில் அறையே அலறியது. கைகளையும் கால்களையும் அசைக்க முடியவில்லை. மிகவும் மோசமான வலி. வலியில் துடித்தவனைப் பார்த்து புன்னகைத்தவாறே நெருங்கி வந்த ஜியா,

"ஆம்பளைன்னு சொன்னல, இப்போ நீ யாரு?" செருப்பால் அடித்தது போல அவள் கேட்ட கேள்வியில் கூனி குறுகினான். கண்ணீர் விழிகளில் வழிந்தது.

"சதை வெறி புடிச்சவனே! ஒவ்வொரு நொடியும் நீ அணுஅணுவா துடிச்சு துடிச்சு சாகணும். இன்னும் நல்லா கத்து, அலறு...” என்றவள் அவன் அணுஅணுவாய் துடித்துக் கதறுவதைத் தன் காது குளிர கேட்டாள்.

அலறி துடித்தான் தாடைகளும் வாயும் கிழிந்து விடுவது போலக் கதறினான். அவனது கதறல்கள் எல்லாம் அவளது காதில் இன்ப கானமாய் ஒலித்தது.

சமீரின் அருகில் சென்றவள் அவனது தலை முடியை இறுக்கப் பற்றி இழுத்தவாறு, "செத்து போகணும் போல இருக்கா?” என்றாள்.

வாயில் வார்த்தைகள் இல்லை, தலையை வேகமாக ஆட்டினான். அசட்டையாகச் சிரித்தவள்,

"நீ சாகக் கூடாது... நான் துடிச்சேன்ல? நீயும் துடிக்கணும். உனக்கும் வலிக்கணும். ஆனா நீ கத்த கூடாது. உன்னை எல்லாரும் அசிங்கப்படுத்தணும், ஆனா நீ சிலை மாதிரி உணர்ச்சி இல்லாம கிடக்கணும். நான் இருந்தனே, அதே மாதிரி...” என்றவள் மேலும் தொடர்ந்து,

"உனக்குப் புதுப் புது மருந்த டெஸ்ட் பண்றதுன்னா ரொம்பப் புடிக்கும்ல...?" என்று விஷமமாய் சிரித்தவாறு, அவன் சுதாரிப்பதற்குள் அவனது நரம்பில் அவன் கதற கதற மயக்க ஊசியைச் செலுத்தினாள்.

நிமிடங்கள் கழிந்த நிலையில் உடல் விறைக்க, கண்களில் நீர்வழிய உணர்ச்சியற்ற பிணம் போலக் கிடந்தான்.

"என் மேனியில் அத்துமீறி

இச்சையோடு எச்சில் வடித்து

மிச்சம் இன்றி என்னை உண்டு

நான் ஆண் என்று மாரு தட்டிய

இரண்டு கால் மிருகமே கேள்,

பல ஆண்களோடு உறவாடும் பெண்

விலைமகள் என்றால்,

உன் விரகப் பசிக்கு என்னை இரையாக்கிய

நீயும் ஒரு விலைமகன் தான்!

பெண்மையை வன்மையாய் சிதைப்பதல்ல ஆண்மை,

பெண்மையை மென்மையாய் மதிப்பதே ஆண்மை.

அன்று என் ஊன் குடித்த அட்டை பூச்சியே!

இன்று நடைபிணமாய் கிடப்பதேன்?

அன்று மாரு தட்டிய உன் ஆண்மை

இன்று வீணாய் போனதேன்?

என் சதையைச் சிதைத்தால் சிதைந்து போவேன் என்று நினைத்தாயோ?

உன்னை வதைத்து புதைக்க வந்த வேள்வியடா நான்!

ஆண்களே! பெண்களின் கருவறை ஒன்றும் நீங்கள்

வந்து வந்து போகும் கழிப்பறை இல்லை.

கொண்டவனாயினும் அனுமதி இன்றி நுழைந்தால் அவனது ஆண்மையை வெறுமையாக்கும் சக்தி பெண்ணுக்கு உண்டு."

என்று அவளது தனல் விழிகள் நெருப்பைத் தெறித்து, கொழுந்து விட்டெறிந்த தன் வேதனை தீக்கு அவனது கதறலை பலி கொடுத்து குளிர்வித்தவாறு ஆஷிக்குடன் ஜியா அங்கிருந்து சென்றாள்.

அவர்களை எதிர்கொண்ட சுஜித், "இந்த வழியா வேண்டாம், பின் கேட் வழியா போயிருங்க.” என்று கூறிவிட்டுத் தன்னை வெறித்துப் பார்த்த ஜியாவிடம்,

"நானும் நல்லவன் இல்லைதான், ஆனா சத்தியமா உனக்கு இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கல. முடிஞ்சா என்னை மன்னிச்சுரு...” என்று சொல்லி கூனி குறுகி நின்றவனைப் பார்த்து,

"எல்லாத் தப்புக்கும் மன்னிப்புக் கிடையாது சுஜித். கருவறையில இருக்கிற குழந்தையை அணுஅணுவா கொன்னுருக்க. மூச்சு முட்டி அது சாகும் பொழுது அவ்வளவு கதறிருக்கும். இப்போ நீ தப்ப ஒத்துக்கிட்டு எனக்கு உதவி பண்ணலாம். ஆனா இதை நீ அன்னைக்கே பண்ணிருந்தனா ஒரு கரு கலைஞ்சிருக்காது, ஒரு தாய் செத்திருக்க மாட்டா. நான் இப்படி...” என்று கூறும் பொழுதே ஜியாவின் தொண்டை அடைத்துக் கொள்ள, விழிகள் கலங்கியவள் மேலும் எதையும் பேசாது ஆஷிக்குடன் அங்கிருந்து சென்றாள்.

***



நிலவே 72

மறுநாள் காலையில் ஜீவா, சுஜித்தின் கொடூரமான மரணச் செய்தி காட்டுத் தீ போல ஊரெங்கும் பரவியது.

ப்ரெஸ் ரிப்போர்ட்டர்ஸ்களைத் தொடர்ந்து பலர் பலவிதமான கேள்விகளை எழுப்பிருந்த நிலையில், ஜீவா மற்றும் வருணின் உறவுக்காரர்கள் அவர்கள் இருவரது மரணத்திலும் யார் மீதும் சந்தேகம் இல்லை என்று தெரிவிக்க, போலீஸ் தரப்பு விசாரணையிலும் சந்தேகப்படும் படி எந்தத் தடயமும் கிடைக்காததால்,

ஹைவேயில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் அதே வழிப்பறி கொள்ளைக்காரர்கள் தான், பணத்திற்காக இவர்களது கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்கள்.

போலீஸ் தரப்பில் தனிப்படை அமைத்து அக்கொள்ளை கும்பலை என்கவுண்டர் செய்தோ இல்லை, உயிரோடோ மிக விரைவாகக் கைது செய்வோம் என்று போலீஸ் கமிஷ்னர் அறிக்கையிட, ஜீவா மற்றும் வருணின் கொலை வழக்கு முடிவுக்கு வந்தது.

அரசு விடுமுறை முடிந்த நிலையில் ஆஷிக்குக்குப் பெயில் கிடைத்திருக்க, வீட்டில் உள்ளவர்கள் ஒருவித மகிழ்ச்சியில் இருந்தாலும்,

மறுநாள் இருக்கும் ஜியாவின் கேஸை பற்றிய சிந்தனையில் அனைவரும் சோகமாய் இருந்தனர். அப்பொழுது ஆஷிக்

"நீங்க எல்லாரும் நிம்மதியா இருங்க. நாளைக்கு கேஸ்ல ஜியா தான் ஜெய்ப்பா. சமீருக்குக் கண்டிப்பா தண்டனை கிடைக்கும். ஜியாவை தப்பா பேசுன எல்லாரும் கூனி குறுகி நிற்பாங்க." என்று நம்பிக்கையாகப் பேச,

ஆதர்ஷ், “அந்தச் சுஜித்தை நீ எப்படி நம்புறனு எனக்குச் சத்தியமா தெரியல. அவன் கண்டிப்பா நமக்கு ஆதரவா சாட்சி சொல்ல மாட்டான்.” என்ற ஆதர்ஷைத் தொடங்கி அனைவரும் இதையே கூற,

தியா, “சரி அவனை ஏன் நம்புற, அதுக்குக் காரணம் சொல்லு?” என்று கேட்க,

சுஜித் தன்னை வந்து சந்தித்தது, ஜியாவுக்கு உதவி செய்வதாக வாக்களித்தது, ஜீவாவும் வருணும் என்ன செய்வார்கள், எங்கே செல்வார்கள் என்னும் செய்தியை தன்னிடம் கூறியது, அதன் பெயரில் தான் ஜீவாவையும் வருணையும் பழிவாங்கியது, சமீரை பழிவாங்க உதவியது என்று சுஜித் தனக்கு உதவிய அனைத்தையும், தன் மனதிற்குள் எண்ணி பார்த்த ஆஷிக், தியா உட்பட அனைவரையும் பார்த்து,

"உங்க கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை, ஆனா அவன் நாளைக்கு சாட்சி சொல்லுவான்.” என்று உறுதியாய் கூறினான்.

பால்கனியில் வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஜியாவின் அருகில் வந்த ஆஷிக்,

"சுஜித் கால் பண்ணினான், சமீர் கண் முழிச்சு ஒரே சத்தமாம். யாரையும் உள்ள விடமாட்டிக்கிறானாம். மறுபடியும் மயக்க மருந்து குடுத்திருக்காம்."

"ஓ...” எதையோ எண்ணியவாறே வந்தது பதில்.

"என்னாச்சு?"

"எனக்கும் சுஜித் நாளைக்கு கோர்ட்ல உண்மைய சொல்லுவான்னு நம்பிக்கை இல்லை."

"மத்தவங்களுக்கு எந்த உண்மையும் தெரியாது. ஆனா உனக்கு என்னாச்சு? அவன் மட்டும் சமீர், ஜீவா, வருண் பத்தி சரியான செய்தி குடுக்கலைனா நம்மளால அவங்கள பழிவாங்கிருக்கவே முடியாது."

"அவன் என்னைக்கோ திருந்திருந்தா இன்னைக்கு இந்தப் பழிவாங்குறதெல்லாம் தேவையே பட்ருக்காதே?"

"அவன் திருந்திட்டான், எல்லாத் தப்பையும் ஒத்துக்கிட்டு ஜெயிலுக்குப் போகத் தயாரா இருக்கான்."

"நம்பிக்கை இல்லை"

"அவன் திருந்தலைன்னா, ஏன் என்னைப் பார்க்க ஜெயிலுக்கெல்லாம் வரணும்?"

"யாரையும் என்னால நம்ப முடியல ஆஷிக்."

"நம்பு, எல்லாம் நாளைக்கு நல்ல படியா நடக்கும்.” என்று ஆஷிக் கூறினாலும், ஜியா ஒருவித கவலையிலே இருந்தாள்.

கதிரவன் புலர்ந்த வேளையில் ஆஷிக்கும் ஜியாவும் நீதிமன்றத்திற்குச் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருக்க, அப்பொழுது அங்கே வந்த தியா அவர்களிடம்,

"நியூஸ் பார்த்திங்களா?” என்று ஒருவித பதற்றத்துடன் கேட்க,

"இல்லை, ஏன்?"

"முதல்ல நியூஸ் பாருங்க.” என்றவாறு நியூஸ் சேனலை ஆன் செய்ய அதில், சமீரின் ஆதரவாளர்கள் அனைவரும் சமீரின் ஹாஸ்பிடலில் அத்துமீறி நுழைந்து, அங்கே அரை மயக்கத்தில் இருந்து தள்ளாடியாவாறு எழுந்து வந்த சமீரை, சரமாறியாகத் தாக்க, போலீஸ்காரர்கள் அவர்களிடம் இருந்து சமீரை மீட்டு கைது செய்து கொண்டு போகும் காட்சி பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

இதைத் தொடர்ந்து செய்தியை வாசிப்பவர், “நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட டாக்டர் ஜியா வழக்கில் திடீர் திருப்பம். உயிருக்குப் போராடி வருவதாகக் கூறிவிட்டு ஹாஸ்பிடலில் சமீர் மது அருந்தும் காட்சி வெளியீடு. சமீரின் ஆதரவாளர்கள் கொந்தளிப்பு! வீடியோவில் பதிவான சுஜித்தின் வாக்குமூலம், திடுக்கிடும் நிஜங்கள்!

நேற்று வரை சமீர் குற்றமற்றவர் என்று அவருக்கு ஆதரவு அளித்த அனைவரும், இன்று அதிகாலையில் சமீரின் நண்பர் இந்த வழக்கில், சமீருக்கு ஆதரவாய் சாட்சி கூறிய டாக்டர் சுஜித் வெளியிட்ட வீடியோ காட்சியைத் தொடர்ந்து,

சமீரின் மருத்துவமனைக்கு அத்துமீறி நுழைந்து அவரைச் சரமாரியாகத் தாக்கினர். சுஜித் வெளியிட்ட வீடியோவில், “சமீர் ஹாஸ்பிடல் பெட்டில் அமர்ந்து கொண்டு மது அருந்துவது போலவும், ஜீவாவும் வருணும் மிஸ்டர் ஆஷிக் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்து, செய்யாத குற்றத்துக்குப் போலீஸில் மாட்டிவிட்டதுக்குச் சமீரிடம் நன்றி தெரிவிப்பது போலவும்,

சமீர் இந்த கேஸ் முடியும் வரை உங்களால எனக்கு வேறு எந்தப் பிரச்சனையும் வர கூடாது என்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.”

அதைத் தொடர்ந்து சுஜித், "என் பேரு சுஜித் குமார் நான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். சமீபத்துல தான் சிறந்த இளம் மருத்துவருக்கான விருதை நான் வாங்குனேன். சமீபத்துல ஜியா, சமீர் மீது கொடுத்த எல்லாம் புகாரும் நிஜம். சமீர், ஜியாவை மானபங்கம் படுத்தும் பொழுது நான் அங்கதான் இருந்தேன்.

ஜியா சொன்னது போல மாளவிகாங்கிற பொண்ண மெடிக்கல் டெஸ்டக்காக, வெளிநாட்ல தடை செய்யப்பட்ட மருந்தை பணத்துக்காக அவளோட உடம்புல செலுத்தி, அவளையும் அவளோட வயித்துல வளர்ந்த குழந்தையையும் நாங்க நாலு பேரும்தான் கொலை பண்ணினோம்.

மாளவிகா மட்டும் இல்லை, மாளவிகாவோட சேர்த்து ஐம்பத்தி ஒன்பது பேரோட உடம்புல புதுப்புது மருந்தை கொடுத்து, டெஸ்ட் பண்ணிருக்கோம். அதுல இருபத்தொரு பேரு ஆண்கள். பத்தொன்பது பேர் பெண்கள். பத்தொன்பது பேர் குழந்தைகள். இதைப் பண்றதுக்கு எங்களுக்குக் கோடிக்கணக்கான பணம் வரும்.

மருந்தை செலுத்துறது மட்டும் எங்களுக்கு வேலை இல்லை, அவங்களோட உடம்புல நடக்குற ஒவ்வொரு மாற்றத்தையும் ரிப்போர்ட்டா நாங்க அனுப்புவோம். இதனால எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்பதுக்காக, ஆதரவற்ற நபர்களைத்தான் நாங்க தேர்ந்தெடுப்போம். இது பெரிய நெட்வொர்க்.

இதுல யார் யார் சம்பந்தபட்ருக்காங்கங்கிற லிஸ்ட், என்ன என்ன மருந்து, யார் யாருக்கெல்லாம் கொடுத்திருக்கோம் இப்படி எல்லா டீட்டையில்ஸையும் நான் கமிஷ்னர்கிட்ட கொடுத்துட்டேன். ஜியா ஒரு நல்ல டாக்டர். அவளோட வாழ்க்கைய நாங்கதான் சீரழிச்சிட்டோம். ஜியாக்கு நியாயம் கிடைக்கணும். இந்த அவார்ட தொட்டு பார்க்கிற தகுதி கூட எனக்குக் கிடையாது.” என்று அவர் கூறிய வாக்குமூலமும் பதிவாகி இருக்க, அனைவரும் கொந்தளித்தனர்.

"சமீர் ஒழிக!” என்று ஆங்காங்கே மக்கள் கோஷம் போட தொடங்கினர் என்று நியூஸ் சேனலில் செய்திகள் வெளியாகியது.

இதைக்கண்ட வீட்டில் உள்ள அனைவரும் ஜியாவுக்கு நியாயம் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

அப்பொழுது ஆஷிக், ஜியாவிடம் தன் அலைப்பேசியை நீட்டி, “சுஜித் வீடியோ கால்ல இருக்கான், உன்கிட்ட தான் பேசணும்னு சொல்றான்."

"என்கிட்ட என்ன பேசணும்?” என்று தயங்கியவளிடம், பேசுமாறு ஆஷிக் சொல்ல, அலைப்பேசியை வாங்கியவள் எதுவும் பேசாமல் அப்படியே இருக்க சுஜித்,

"நான் உண்மைய ஒத்துக்குவேன்னு நீ நினைச்சுருக்க மாட்டல? எனக்குத் தெரியும் ஜியா, நீ என்னைக்கும் என்னை மன்னிக்க மாட்டன்னு. உன்னோட கோபம் ரொம்ப நியாயமானது. நல்ல டாக்டர் ஆகணும். கஷ்டப்பட்டவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைச்சு நானும் டாக்டர்க்கு படிச்சேன், ஆனா எல்லாமே மாறி போச்சு.

பிறக்குறதுக்கு முன்னாடியே என் அம்மாவும் அப்பாவும் நான் டாக்டர்தான் ஆகணும்னு டிசைட் பண்ணிட்டாங்க. டென்த் படிக்கும்போதுல இருந்து நான் ஓடிட்டு இருக்கேன். டென்த்ல நல்ல மார்க் வாங்கணும், அப்போ தான் நல்ல க்ரூப் கிடைக்கும். ட்வெல்த்துல நல்ல மார்க் வாங்கி என்ட்ரன்ஸ்ல ஃபர்ஸ்ட் வரணும், அப்போதான் கவர்மெண்ட் மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைக்கும். இப்படி எவ்வளோ...

நானும் படிச்சேன், ப்ளஸ் டூல தவுசண்ட் ஒன் சிக்ஸ்டி. அஞ்சு மார்க்ல என்ட்ரன்ஸ்ல ஃபர்ஸ்ட் வர முடியல. கவர்மெண்ட் காலேஜ்ல சீட் கிடைக்கல, மெரிட் போச்சு. பிரைவேட் காலேஜ் தான் இருந்தது. அம்பது லட்சம் டொனேஷன் குடுத்தா தான் சீட்ன்னு சொல்லிட்டாங்க. என் அப்பா ஒரு கவர்மெண்ட் எம்ப்ளாய். இப்போ மாதிரி அப்போ கவர்மெண்ட்ல வேலை பார்க்கிறவங்களுக்குச் சம்பளம் கிடையாது. ஒரு பையங்கிறதுனால எனக்குக் குடும்பக் கஷ்டம் தெரியாது. ஆனா அம்பது லட்சம் குடுக்குற அளவுக்கு அப்பாகிட்ட பணம் இல்லன்னு தெரியும். சொத்தையும் அம்மா நகையையும் வித்துப் படிக்க வச்சாரு. பணத்துக்காக அவர் அலைஞ்சது இன்னும் என் கண்ணுக்குள்ள இருக்கு.

உனக்கு ஒன்னு தெரியுமா? ப்ளஸ் டூல ஆயிரத்துக்கு மேல வாங்கின நானும், ஜஸ்ட் பாஸ் பண்ணின சமீரும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம். ஆச்சரியமா இருக்குல? நான் அழுதேன்! அப்போ என் உழைப்புக்கு வேல்யுவ் இல்லல? பணம்தான் எல்லாத்தையும் முடிவு செய்யுது.

சமீருக்கு காலேஜ்ல அவ்வளவு மதிப்பு. அப்பா பெரிய பிஸ்னஸ்மேன். ராஜா மாதிரி இருப்பான். அஞ்சு வருஷ படிப்பு முடிஞ்சதும், நாமளும் இந்த மாதிரி மதிப்பா வாழலாம்னு கனவோட இருந்தேன்.

பெரிய டாக்டரா வரணும்னா எம்பிபிஎஸ் மட்டும் பத்தாது, மேல படிக்கணும்னு சொன்னாங்க. மெரிட்ல படிக்கணும்ங்கிறதுக்காக எம்எஸ்க்குறிய எண்ட்ரன்ஸ் எழுதினேன்.

இரண்டு பேர் ஃபர்ஸ்ட் வந்தோம். மெரிட் சீட் வேணும்னா இருபது லட்சம் கட்டணும்னு சொன்னாங்க. அந்தப் பையன் கட்டிட்டான், என்னால முடியல. அதுக்கப்புறம் எம்எஸ் படிக்கிறதுக்கு அப்பா வீட்டை வித்துப் பணம் குடுத்தாரு. மீதி பணத்தைச் சமீர்தான் எனக்குக் குடுத்தான்.

அங்க படிக்கும் பொழுதுதான் எனக்கும் சமீருக்கும் ஜீவா, வருணுடைய நட்பு கிடைச்சுது. ஒருவழியா முட்டி மோதி படிச்சு வந்தேன். எனக்கு ஒரு ஹாஸ்பிடல்ல வேலை கிடைச்சுது. அந்த ஹாஸ்பிடல் ரொம்ப வித்தியாசமான ஹப்பிட்டல் எப்படின்னா? யாரெல்லாம் நல்லா ட்ரீட்மெண்ட் குடுக்குறாங்களோ, அவங்கள பாராட்ட மாட்டாங்க.

ஆனா யாரெல்லாம் நல்லா சம்பாதிச்சு குடுக்குறாங்களோ, அவங்கள நல்லா பாராட்டி தள்ளுவாங்க. இன்க்ரீமெண்ட் எல்லாம் உண்டு. பணத்துக்கு இருக்கிற மதிப்பு வேற எதுக்கும் இல்லைன்னு தெரிஞ்சிகிட்டேன். நானும் அவங்கள மாதிரியே மாறினேன். நூறு ரூபாயில குணமாக வேண்டிய தலைவலிக்கு எம்ஆர்ஐ ஸ்கேன், காஸ்ட்லி விட்டமின்ஸ், காஸ்ட்லி சிரப் இப்படி ஏழாயிரம் ரூபா வர ப்ரஸ்க்ரிப்ஷன் எழுதுவேன்.

இப்படி இருக்கும் பொழுதுதான் சமீர் மூலமா எனக்கு அதிகம் பணம் சம்பாதிக்கிற வாய்ப்பு கிடைச்சுது. வெளிநாட்ல இருந்து மருந்து வாங்குறது, அவங்க கூடப் பேச்சுவார்த்தை நடத்துறது எல்லாம் சமீரோட வேலை. வருண் அவனுக்கு ஹெல்ப் பண்ணுவான். பேஷண்ட்ஸ்க்கு மெடிசின் போடுறது என்னோட வேலை. ரிப்போர்ட் அனலைஸ் பண்றது ஜீவா பண்ணுவான்.

கொஞ்ச நாளையிலே நிறையப் பணம் கிடைச்சுது. பாதி மெடிசின்ஸ், டெஸ்ட் பண்ணும் பொழுது சக்ஸஸா இருக்கும். பாதி மெடிசின்ஸ்ல எந்த மாற்றமும் இருக்காது. அதிகப்படியா நாங்க மெடிசின் குடுத்த பேஷன்ஸ்ட்க்கு ஹைபீவர் வரும், இல்லைன்னா ஃபிட்ஸ் வரும்.

ஆனா யாரோட உயிருக்கும் பெருசா ஆபத்து இருந்தது இல்லை. எல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்துச்சு. அப்போதான், 'ஹாஸ்ட் டிஆர்' டெஸ்ட் பண்றதுக்கான ஆர்டர் கிடைச்சுது. வழக்கத்தை விட அஞ்சு மடங்கு அதிகமான பணம் தரேன்னு சொன்னாங்க. பிரச்சனை வருமோன்னு பயந்தேன், வேண்டாம்னு சொன்னேன்.

ஆனா சமீர்தான் இதை மட்டும் வெற்றிகரமா முடிச்சுட்டா, எல்லாரும் செட்டில் ஆகிடலாம்னு சொன்னான். சமீருக்கு சொந்தமா ஹாஸ்பிடல் ஆரம்பிக்கணும்னு ஆசை. அப்பாகிட்ட கேட்டா அவர் சொல்ற மாதிரிதான் பண்ணணும்னு கட்டாயப்படுத்துவார்னு, அவரோட உதவி இல்லாம ஆரம்பிக்கணும்னு நினைச்சான்.

எனக்கு, ஜீவா, வருணுக்கெல்லாம் வாழ்க்கையில நல்லபடியா செட்டில் ஆகணும். சமீர் மாதிரி எங்களுக்குப் பெரிய வசதியெல்லாம் கிடையாது, நாங்க சம்பாதிச்சாதான் உண்டு. ஆக, எங்க எல்லாருடைய தேவையையும் இந்தப் பணம் பூர்த்தி செய்யும். அதனால இதோட பின்விளைவு தெரியாம ஒத்துக்கிட்டோம். சமீருக்கும் வருணுக்கும் இது தடை செய்யப்பட்ட மருந்துனு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. ஆனா எனக்கும் ஜீவாவுக்கும் இது தெரியாது. மாளவிகா சாகுறத பார்த்ததுக்கு அப்புறம்தான் எனக்கே தெரியும்.

நான் பயந்துட்டேன். கொஞ்சம் கொஞ்சமா என்னுடைய தப்பு எனக்குப் புரிஞ்சிது. எங்க, டாக்டர் வாழ்க்கையே போயிருமோன்னு பயந்தேன். சமீர்தான் தைரியம் சொன்னான். மாளவிகாவுக்கு யாரும் இல்லாதனால, அவளோட சாவுல பிரச்சனை எதுவும் வரல. நிம்மதியா இருந்தேன், அப்போதான் நீ எல்லாத்தையும் கண்டுபுடிச்ச.

அன்னைக்கு நைட் சமீர் வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் சொன்னான். அவனை அடிக்கிற மாதிரி அடிச்சு உன்கிட்ட இருந்து எவிடென்ஸ வாங்க சொன்னான். எனக்கு என்ன பண்றதுனே தெரியலை. அன்னைக்கு என்னுடைய எண்ணம் முழுக்க அந்த எவிடென்ஸ உன்கிட்ட இருந்து வாங்குறதுல தான் இருந்தது. உன்னை விட்றலாம்னு சொன்னேன். சமீர்தான் இப்படியே விட்டா நீ மறுபடியும் ஏதாவது பண்ணுவனு சொல்லி உன்னை வீடியோ எடுத்தான். அதுக்கப்புறம் நான் அவங்கள விட்டுட்டு தனியா வந்துட்டேன்.

ஒரு வருஷம் கழிச்சு லண்டன்ல உள்ள மெடிக்கல் கான்ஃப்ரன்ஸ்ல சமீரைப் பார்த்தேன். அவன் வருண் கூட ஃபோன்ல உன்னைப் பத்தி பேசிட்டு இருந்தான். எதுவும் தெளிவா இல்லை.

நான் வருணுக்கு கால் பண்ணினேன், குடிச்சுருந்தனால அவன் ஜீவா உன்னைச் சந்திச்சத பத்தியும், நீ ஏர்போர்ட்ல வேலை பார்க்கிறத பத்தியும் என்கிட்ட சொன்னான். உன்னைப் பார்த்து விஷயத்தைச் சொல்றதுக்காக உன் அட்ரஸ வாங்கினேன். உன் வீட்டுக்கு வந்தேன், அதுக்கப்புறம் நடந்தது எல்லாம் உனக்குத் தெரியும்.

இதெல்லாம் என்னை நியாயப்படுத்த சொல்லல. என்ன இருந்தாலும் நான் தப்பு பண்ணினது பண்ணினது தான், மாத்த முடியாது. தப்பு நடக்கும் பொழுது தட்டி கேட்காம இருக்கிறத விடப் பெரிய தப்பு எதுவும் கிடையாது.

ஆனா எல்லார் முன்னாடியும் என் தப்ப ஒத்துக்கிற அளவுக்கு எனக்குத் தைரியமும் இல்லை. அதான் என் ஸ்டேட்மெண்டை ரெக்கார்ட் பண்ணி போலீஸ்கிட்ட குடுத்துட்டு, என் பாவத்துக்கு நானே தண்டனை குடுத்துக்கப் போறேன். மாளவிகாவோட குழந்தை மூச்சு திணறி செத்த மாதிரியே நானும் மூச்சு திணறி சாகப் போறேன். எல்லாருக்கும் தெரிஞ்ச டாக்டர் சுஜித்தாவே, நான் இந்த மண்ணை விட்டுப் போகப் போறேன்.

ஜியா, நான் அப்பாவாகப் போறேன். நான் செத்து போய்ட்டா நான் செஞ்ச பாவம் என் குழந்தையையும் என் மனைவியையும் ஒன்னு செய்யாதுல?” என்றும் சொல்லும் பொழுதே, சுஜித்தின் கண்கள் கலங்கியது, வார்த்தைகள் தடுமாறியது.

"முடிஞ்சா என்னை மன்னிச்சுரு ஜியா!” என்று ஜியாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, அழைப்புக்கு முடிவு கட்டினான், தனக்கும்தான்!

சுஜித்தின் அழைப்பு துண்டிக்கப்பட்ட மறுநொடி ஜியா, ஆஷிக்குடன் முடிந்த அளவு வேகமாகச் சுஜித்தின் இல்லத்திற்கு வந்தாள். அவள் அங்கு வந்த நேரம் அவன் தன் ஜீவனை இழந்திருந்தான்.

அவன் வாயில் நுரை தள்ளி அவன் கிடந்த கோலம் அவளது நெஞ்சை அடைத்தது. அவளை அறியாமலே அவளது விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் அவனது நெற்றியில் விழுந்து தெறித்தது.

அவனது தாயும் தந்தையும் மனைவியும் கதறி அழுதனர். அவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்று அவளுக்குத் தெரியவில்லை. அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல், ஆஷிக்கின் மார்பில் சாய்ந்தபடி அங்கிருந்து சென்றாள்.

தன் தாய், தந்தை என்று யாரையும் பார்க்க விரும்பாத சமீர், தன்னைத் தானே வெறுத்து, தகர்க்கப்பட்ட கோபுரம் போலக் கம்பீரமற்று கூனி குறுகி பித்துப்பிடித்தவன் போல் ஆனான்.

ஜியாவை கற்பழித்துச் சித்திரவதை செய்த குற்றத்திற்கு, அவனுக்குப் பத்து வருடங்கள் கடுங்காவல் தண்டனை அளித்த நீதிபதி, தவறான தடை செய்யப்பட்ட மருந்துகளை நோயாளிகளுக்குச் செலுத்தியதாக அவன் மீது சுமத்தப்பட்ட புகாரை, தீர விசாரித்து இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு உத்தரவு பிறப்பித்தார்

***


அடுத்த அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்

நிலவே 73, 74 & 75
 
Last edited:
Top