logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 11.1

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
மிருதன் 11.1
வானைத் தொடும் பல மாடிகள் கொண்ட, ரன் இந்தியா எனப்படும் வார இதழ் பத்திரிக்கை அலுவலகத்தில் மேனேஜரின் அறையில், “என்ன இஷிதா இது, உங்ககிட்ட இருந்து நான் இன்னும் எதிர்பார்க்கிறேன்மா! நாளைக்கு மார்னிங் ஆர்ட்டிக்கிள் ரெடியாகிருக்கணும். இன்னும் பெட்டரா திங்க் பண்ணுங்க” என்று மேனேஜர் திலீபன் கட்டளையிட்டார்.
‘வர்றதைத் தானே எழுத முடியும்’ என மனதிற்குள் சலித்துக்கொண்ட இஷிதா, அவரிடம், “ஐ வில் ட்ரை மை பெஸ்ட் சார்!” என்று கூறிவிட்டு நேராக தன் அறைக்குள் வந்து கண்களை மூடி சுழல் நாற்காலியில் அமர்ந்த மறுநொடி, அவளது அலைபேசி தன் இருப்பிடத்தைக் காட்ட, அதை எடுத்துப் பார்த்தாள்.
“இவன் ஒருத்தன் லவ் பண்ணிட்டு நம்ம உயிரை வாங்குறான். மேனேஜர் தொல்லை தான் தாங்கலைன்னா, இவன் தொல்லை அதுக்கும் மேல இருக்கு” என்று சலித்தபடி அழைப்பை ஏற்ற இஷிதா, “சொல்லுடா அண்ணா!” என்றாள் தன் நெற்றியை நீவியபடி.
“இஷு, நான் உன் ஆபிஸுக்கு தான் வந்துட்டு இருக்கேன். உள்ளே வரவா? இல்ல, உன் ஆபிஸுக்கு பக்கத்துல இருக்கிற காஃபிஷாப்ல மீட் பண்ணுவோமா?” குரலில் சிறுகோபமும் வருத்தமும் தெரிந்தது.
“இங்கேயே வாடா! நான் வெட்டியா தான் இருக்கேன்” என்று தன் அழைப்பை துண்டித்தாள்.
“இவன் லவ் சக்ஸஸ் ஆகுறதுக்குள்ள நாம நொந்துருவோம் போல” என்றவள் இன்டெர்காமில் ஒரு காஃபியை ஆர்டர் செய்துவிட்டு தலைவலி தைலத்தை எடுத்து தன் நெற்றியில் தேய்த்தவள், நாற்காலியில் சாய்த்தபடி மீண்டும் கண்களை மூடினாள்.

ரிதுராஜிடம் பேசிவிட்டு ஒருவித பதற்றத்துடன் தன் அறையில் அமர்ந்திருந்த மேகா, “என்ன இவர் இப்படி பேசிட்டு போறார், இதுக்குத்தான் என்னை அன்றைக்கு கூப்பிட்டாரா? இப்பவே இஷிதாகிட்ட சொல்லணும். அவளே அவங்க அண்ணாகிட்ட பேசிக்கிட்டும்” என்று வாய்விட்டே கூறியவள் உடனே இஷிதாவுக்கு அழைப்பு விடுத்தாள்.
“இஷிதா, உன்கிட்ட பேசணும்டி!” அவள், ‘ஹலோ’ சொல்லும் முன்பே இவள் ஆரம்பித்திருந்தாள்.
“ம்ம், சொல்லுடி!” தன் கையில் இருந்த ஆவி பறக்கும் காஃபியை பருகியபடியே கேட்டாள். அவள் குரலில், ‘நீயுமாடி?’ என்கின்ற சலிப்பு நன்றாக தெரிந்தது. அழைப்பு ஸ்பீக்கரில் இருக்க, எதிரே இருந்த ரிதுராஜின் முகம், அழைத்தது மேகா என்றதும் பிரகாசமானது.
“உங்க அண்ணா இன்னைக்கு என்ன பண்ணினார் தெரியுமா?” மேகா கோபத்துடன் வினவினாள்.
“சொன்னா தான்டி தெரியும்” கோபத்துடன் கேட்டாள்.
“ஐ லவ் யூ சொல்லிட்டாருடி! அவர்கிட்ட இனிமே இப்படியெல்லாம் பேச வேண்டாம்னு சொல்லிரு, அப்பாக்கு இதெல்லாம் புடிக்காதுடி!” என்றாள் மேகா.
“அவன், உன்கிட்ட தானே சொன்னான். நீயே அவன்கிட்ட சொல்லிரு! அதை விட்டுட்டு ஸ்கூல் பொண்ணு மாதிரி, அம்மா அம்மா அவன் அடிச்சிட்டான்னு என்கிட்ட கம்பிளெயிண்ட் பண்ணிட்டு இருக்க, நீ ஒரு டாக்டர் அதை மறந்துறாதே! இதக்கூட உனக்கு சமாளிக்க முடியாதாடி? போ, நீயே அவன்கிட்ட என்ன சொல்லணும்னு நினைக்கிறியோ அதைச் சொல்லு!” என்று சுடு எண்ணெயில் போட்ட கடுகாக பொரிந்த இஷிதா, மேகாவிடம் இருந்து எந்த பதிலையும் எதிர்பாராமல் அழைப்பையும் வைத்துவிட்டாள்.
இஷிதா சற்று கோபமாக பேசவும் மேகாவிற்கு தான் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. “பேச தைரியம் இருந்தா, நான் பேசமாட்டேனா?” என்றவள், “திரும்ப வந்தா கோபமா முடியாதுன்னு சொல்லிரணும்” என முடிவெடுத்தவள் தன் நோயாளிகளை பரிசோதிக்க ஆரம்பித்தாள்.

இஷிதாவின் அறையில், “என்ன இஷு, இவ இவ்வளவு பேபியா இருக்கா?” ரிதுராஜ் இஷிதாவிடம் ஆச்சரியமாக கேட்டான்.
“ஹாஹா, சொன்னேன்ல! மேகா அப்படித்தான். திடீர்ன்னு பெரிய ஆள் போல தத்துவம் பேசுவா, திடீர்ன்னு குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணுவா! பேஸிக்கா பயந்த சுபாவம். கொஞ்சம் இல்லை நிறையாவே அழுகாச்சி டைப் ரித்து. பட், ரொம்ப நல்ல பொண்ணு” என்றாள் இஷிதா.
“ம்ம், நல்ல பொண்ணுதான். பட், கிட்ட போனாலே ஒருமாதிரியா பார்க்குறா. ஏய், நீ என் தங்கச்சி தான, கொஞ்சம் எனக்காக பேசுறது.”
“டேய் ஓடிரு! வந்துட்டான், பேசணுமாம். இதுவரை உன் வாழ்க்கையில ஏதாவது ஒன்னு நீயா பண்ணிருக்கியாடா? எல்லாத்துக்கும் உனக்கு யாராவது வேணும்” தமையனை முறைத்தபடி திட்டினாள்.
“ஏய், ஏன்டி இப்படி பேசுற?”
“உண்மையத் தான் சொல்றேன். இவ்வளவு நாள் ஓகே. ஆனா இது உன் லைஃப். ஸோ, நீதான் அவளை கன்வின்ஸ் பண்ணணும், புரியுதா! மூஞ்சை இப்படி வச்சிக்காதே! இது ஒன்னு தான் உன்கிட்ட நல்லா இருக்கு” என்றாள்.
“சும்மா இரு இஷு, நீ வேற என் நிலமை தெரியாம” என வருத்தத்துடன் கூறினான் ரிதுராஜ்.
“டேய், இங்கே என்கூட பேசிட்டு இருக்காம, போய் அவகிட்ட மனசு விட்டுப் பேசு!” என்றாள் இஷிதா.
“ம்ம்” என குரலில் சுருதி குறைய கூறியவனுக்கு, மேகாவுக்கு எவ்வாறு தன் காதலை உணர்த்துவது என்பதே பெரிய சவாலாகத் தான் இருந்தது.
“சரி, அந்த ஆளுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவ?” இஷிதா அடுத்த குண்டை தூக்கி அவன் தலைமீதே போட்டாள்.
“இஷு, அது நம்ம அப்பா!” ஆற்றாமையுடன் சொன்னான்.
“உனக்கு மட்டும்தான் அப்பா, கன்னுக்குட்டி எல்லாம். நான் தலைமுழுகி நாள் ஆச்சு. சொல்லு, எப்படியும் மேகா அவங்க வீட்லதான் பேசச் சொல்லுவா! அவ அப்பா நீ அந்த ஆள கூட்டிட்டு வந்தா தான் வீட்டுக்குள்ளயே விடுவாருன்னு நினைக்கிறேன்.”
“இல்லைடி, அப்பா நான் கேட்டு இதுவரை எதுக்கும் நோ சொன்னதில்லை. அதனால மேகா விஷயத்துலயும் நோ சொல்ல மாட்டாருன்னு நினைக்கிறேன். ஆனாலும் கொஞ்சம் உதறலாவே இருக்கு.”
“அதுசரி, உன் அப்பா தானே? அவர்தான் உனக்கு வில்லனே!” என முனங்கியவள் ரிதுராஜிடம், “உனக்கு எதுக்கு தான்டா உதறல? அப்பா ஓகே சொன்னா என்ன, சொல்லலைன்னா என்ன? மேகாவிற்கு ஓகேன்னா நீ அந்த ஆள்ட்ட பேசி மேகா வீட்ல பேசச்சொல்லு! அவர் முடியாதுன்னு சொன்னா மேகாவ கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணு. அதை விட்டுட்டு, எப்பப்பாரு அப்பா, ஆட்டுக்குட்டின்னு சொல்லிட்டு இருக்க!” எரிச்சலுடன் கூறினாள்.
“நீ சொல்லுவ, அதெல்லாம் நடக்குற காரியமா?”
“நீ ஆம்பளை தானே, பொண்ணுங்க பயப்படுறாங்கன்னா ஒரு அர்த்தம் இருக்கு. ஆம்பளை பையன் தைரியமா இருக்க வேண்டாமா? உண்மையாவே நீ லவ் பண்ணிருந்தா, நீதான் கன்வின்ஸ் பண்ணணும். அதை விட்டுட்டு எல்லாத்துக்கும் பயந்துட்டு, ஆனா ஒன்னு சொல்றேன்டா! நீங்க ரெண்டு பேரும் ஜாடிக்கேத்த மூடி தான்” என இஷிதா கோபமாக கூறினாள்.
அதை கேட்டு அழகாய் சிரித்தவன், “இஷு, அப்பா இன்கேஸ் நோ சொன்னா, எனக்காக அப்பாகிட்ட வந்து கொஞ்சம் பேசுவியா?” என ரிதுராஜ் தயங்கியபடி கேட்க,
“அடீங்க ஓடிரு! நீ லவ் பண்ணு இல்லை, சாமியாரா போ! ஆனா இப்போ இடத்தை காலி பண்ணு” என்று இஷிதா எகிற, தன் தங்கையின் கோபம் அறிந்த ரிதுராஜ் அவளிடம் சிக்கிவிடக் கூடாதென்று அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
என்னதான் இஷிதா தன் தமையனிடம் காட்டமாக நடந்து கொண்டாலும், அவன் சென்றதும் ஏனோ அவளுக்கு தமையனை எண்ணி உறுத்தலாகத் தான் இருந்தது. எனவே அவன் காதல் வெற்றியடைய மானசீகமாய் கடவுளை வேண்டிக் கொண்டவளுக்கு, அவளது தந்தை ஒத்துக்கொள்வார் என்னும் நம்பிக்கை சுத்தமாக இல்லை.


 
Last edited:

Author: Naemira
Article Title: மிருதன் 11.1
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top