logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 11.2

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
மிருதன் 11.2
“உங்க பேர் என்ன கண்ணா?” மேகாவின் இனிமையான குரலில் நிமிர்ந்து பார்த்த சிறுவன், “நான் ஒன்னும் கண்ணா இல்லை, ஐ அம் மாதவ்!” என தான் போட்டிருந்த கண்ணாடியை சரி செய்தபடி கூறிவிட்டு மீண்டும் ஸ்மார்ட் ஃபோனில் தான் விட்ட பணியைத் தொடர்ந்தான்.
அச்சிறுவனின் அருகில் இருந்த அவனது அம்மாவும் அப்பாவும் சோகமாக, “எப்பவும் இப்படித்தான் ரியாக்ட் பண்ணிட்டு இருக்கான் டாக்டர். கேட்ட கேள்விக்கு பதில் அதைத் தாண்டி அவனா பேச மாட்டேங்கிறான். சிலநேரம் அதுகூட கிடையாது. ரொம்ப பயமா இருக்கு. அடிக்கடி கோபப்படுறான்” எனக் கூறினர்.
அப்பொழுது தன் கரத்தை உயர்த்தி அவர்களை கொஞ்சநேரம் வெளியே இருக்கும்படி செய்கை செய்தவள், அவனது பெற்றோர்கள் சென்றதும், “ஹாய் மாதவ்!” என பேச்சுக் கொடுத்தாள்.
“எஸ்” மொபைலில் விளையாடியபடியே பதில் கூறினான்.
மேகாவோ சிறுபுன்னகையுடன், “என்ன விளையாடுறீங்க? எனக்கும் கொஞ்சம் சொல்லிக்குடுங்களேன்!” என்றபடி அவன் அருகில் வந்து அமர்ந்தவள், கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் பேசினாள், இல்லை அவனை பேச வைத்தாள்.
இரண்டு மணிநேரம் கழித்து அவனது பெற்றோர்களை உள்ளே அழைத்தவள், “உங்க பையனுக்கு ஆட்டிசம் எல்லாம் இல்லை. ரொம்ப லோன்லியா இருக்கான். எல்லாரும் சொல்றதை தான் நானும் சொல்றேன். தினமும் அவன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க, அதுவே போதும். குழந்தைப்பருவம் ரொம்ப முக்கியம். இப்போ அவங்க மனசை பாதிக்கிறதுதான், நாளைக்கு அவங்க எதிர்காலத்திலயும் பிரதிபலிக்கும்.
கொஞ்சம் கொஞ்சமா எலெக்ட்ரானிக் கட்ஜெட்ஸ் எல்லாத்தையும் அவாய்ட் பண்ணுங்க, தானா சரியாகிடுவான். இதுக்கு மருந்து இதுதான். ஒன் வீக் பாருங்க, உங்களுக்கே சேஞ்சஸ் தெரியும். ஸோ, இப்போதைக்கு டெஸ்ட் வேண்டாம்” என்று மேகா அவர்களுக்கு நம்பிக்கை கூற, அவளிடம் விடைபெற்றுக் கொண்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பவும்,
“நீங்க சொன்ன மாதிரி விளையாடினேன். நான் லெவல் வின் பண்ணிட்டேன், பை மேகா!” என புன்னகையுடன் மேகாவிடம் விடைபெற்றவன் அவன் தாய் தந்தையரின் கரம் பிடித்துச் செல்ல, அவனாகப் பேசியதை எண்ணி மகிழ்ந்தவர்களுக்கு இப்பொழுது மகனை சரி செய்துவிடலாம் என்கின்ற நம்பிக்கை துளிர் விட்டிருக்க, மேகாவுக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றனர்.
அப்பொழுது அவள் அருகில் நின்றிருந்த செவிலியரிடம், “மாதவ் ரிப்போர்ட்ஸை பீடியாட்ரிக் டிபார்ட்மெண்ட்க்கு அனுப்பிருங்க!” எனக் கூறினாள்.
“ஓகே மேம், ஓபி முடிஞ்சிருச்சு, நீங்க சாப்பிட போங்க மேம்!” என்று அந்த செவிலியரும் கூற, “ஓகே அக்கா, நீங்களும் ரிப்போர்ட்ஸ் பாஸ் பண்ணிட்டு லன்ச் போங்க” என்றவள், தன் சகதோழிகளுடன் மதிய உணவிற்காக ஹாஸ்பிடல் கேன்டீனிற்குள் நுழைந்தாள்.
உணவருந்திவிட்டு தோழிகளிடம் மேகா சகஜமாக சிரித்து பேசிக்கொண்டிருக்க, அப்பொழுது அங்கே ரிதுராஜ் வர, அவனை அங்கே கண்டதும் அனைவரும் எழுந்து நிற்க, அவர்களை பார்வையாலே அமரச் சொன்னான்.
நேரடியாக மேகா இருக்கும் டேபிளுக்கு வந்து, “மேகா, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என சொன்னதுதான் தாமதம், அவளது தோழிகள் மேகாவை பார்வையாலே கேலி செய்துவிட்டு சென்றுவிட, மேகாவுக்கு தான் சங்கடமாகிப் போனது.
“என்ன சார் வேணும்?” கொஞ்சம் கோபமாகவே வினவினாள்.
“பதில் வேணும்.”
“அதான், அப்போ பேசாமலே போனேனே! அப்பவே உங்களுக்கு புரிஞ்சிருக்க வேண்டாமா, எனக்கு புடிக்கலைன்னு” மனதிற்குள் அவன் வந்தால் என்ன சொல்ல வேண்டும் என்று எண்ணினாளோ அதை திணறாமல், பயம் இல்லாமல் சொல்லிவிட்டாள்.
“நான் கொஞ்சம் மக்கு மேகா, புரியற மாதிரி சொல்லுங்க!” என்றான் கைகளைக் குறுக்கே கட்டியபடி. பார்வை அவளை அளந்தது.
“எனக்கு லவ் எல்லாம் ஒத்துவராது சார்!”
“ஏன், என்னைப் புடிக்கலையா?”
“ஆமா.”
“ஏன்?”
“ஏன்னா புடிக்கலை” என்று எழப் போனவளை,
“ப்ளீஸ் மேகா!” எனக் கெஞ்சி அமரவைத்தவன்,
“என்கிட்ட என்ன புடிக்கலைன்னு சொன்னா, நான் மாத்திக்கப் போறேன்” என்றான்.
“சார், ப்ளீஸ் நீங்க மாத்திக்க எல்லாம் வேண்டாம். நீங்க எப்படி மாறினாலும் எனக்கு உங்களை புடிக்காது.”
“ஏன்?”
“என் அப்பாகிட்ட யாரையும் லவ் பண்ணமாட்டேன். அவர் சொல்ற பையனை மட்டும்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சத்தியம் பண்ணி குடுத்துட்டு தான் சென்னையில இருந்து டெல்லிக்கே வேலைக்கு வந்திருக்கேன். ஸோ ப்ளீஸ் போங்க, எல்லாரும் நம்மளை தான் பார்க்குறாங்க!” என்றவள் சங்கடத்தில் தலை தாழ்த்தி அமர்ந்திருந்தாள்.
“ஒரு நிமிஷம், என் கண்ணை பாருங்க மேகா, ப்ளீஸ்!” கெஞ்சிக் கெஞ்சியே அவள் மனதை கரைக்க பார்த்தான்.
“ம், பார்த்துட்டேன் சொல்லுங்க!” சலிப்பாக கேட்டாள்.
“உங்க அப்பா சரி சொன்னா, என்னை லவ் பண்ணுவீங்களா?”
“அவர் ஓகே சொன்னா, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை சார்.”
“ம்ம், சரி. அப்போ என்னை லவ் பண்ண ரெடியா இருங்க!” என்றவன் ஒற்றை கண்ணை அடித்தபடி அங்கிருந்து செல்ல, இப்பொழுது அனைவரின் பார்வையும் அவள் மீது படிய, ‘என்ன ஏது’ என்று கேட்டு அவளது தோழிகள் அவளை ஒருவழி செய்துவிட்டார்கள்.
“ஒன்னும் இல்லைன்னு எத்தனை தடவை சொல்றது!” மேகா புலம்பினாள்.
“அதெப்படி ஒன்னும் இல்லாம இருக்கும். எம்டியே உன்னை வந்து பார்த்திருக்காங்க! சொல்லு, என்னடி விஷயம்?” கேட்டாள் ரம்யா.
“இருந்தா சொல்ல மாட்டேனா?”
“ரம்யா இவ பொய் சொல்றா, காலையில இவங்க ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் பின்னாடி உள்ள பார்க்ல மீட் பண்ணிகிட்டாங்கன்னு நம்ம சோர்ஸ் சொல்லுது” என்றாள் ப்ரியா.
“இப்போ கூட அவர் போகும் பொழுது கண்ணடிச்சாருடி!” என இன்னொருத்தி கோர்த்துவிட, மேகாவிற்கோ எங்கேயாவது சென்று முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது.
இவ்வாறு அனைவரும் அவளை படுத்தியெடுக்க, வேறு வழியின்றி மேகா நடந்ததை அவர்களிடம் கூறினாள். “ஓஹோ!” என அனைவரும் கோரஸ் பாட, மேகாவிற்கோ ரிதுராஜ் மீது ஆத்திரமாய் வந்தது.
இதற்கு மேல் அங்கிருந்தால் தன் தலை தான் உருளும் என்று சுதாரித்தவள், வேலை இருப்பதாக கூறி, ‘சரியான ராட்சச கூட்டம், எப்படி பேசுதுங்க, பாரு!’ என மென்னகையுடன், தப்பித்தோம் பிழைத்தோம் என அங்கிருந்து வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தவளின் வேகநடை அப்படியே நின்றது.


 
Last edited:

Author: Naemira
Article Title: மிருதன் 11.2
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top