மிருதன் 13
கனகராஜ் பெண் பார்க்கும் படலத்தின் பொழுது சொன்னது போல, சென்னை ஷெல்டர் பீச் ரிசார்ட் வெள்ளை மட்டும் தங்க நிறத்திலான ஆடம்பர அலங்காரத்தில் ஜொலித்தது. வெள்ளை நிற ரோஜா மலர்கள், ஆங்காங்கே தங்க நிறத்திலான செயற்கை அலங்கார வேலைப்பாடுகள், மின்மினி போல மிளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள், காதில் தேனூறிய கடல் அலைகளின் சங்கீதங்கள் என கடல் அலைகள் வந்து வந்து மோதும் தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த மேடை பூரணசந்திரனின் ஒளியில் ரம்மியமாக காட்சியளித்தது.
அங்கே நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ்ந்திருக்க, மேடையில் தங்கநிற பட்டுப் புடவையில் எழில் ஓவியமாய் மேகா நிற்க, அவள் அருகில் அவளது கரங்களை கோர்த்தபடி முகத்தில் மகிழ்ச்சி ததும்ப ரிதுராஜ் நின்றிருந்தான்.
“பதட்டப்படாம ரிலாக்ஸ்சா இரு மேகா!” என மேகாவின் அருகில் நின்ற இஷிதா, அன்று அக்னி தன் விருப்பத்தை கூறி மேகாவை மிரட்டிவிட்டுச் சென்றதில் இருந்து இப்பொழுது வரை அவளுக்கு தைரியம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.
“ம்ம், ஆனா பதட்டமாவே இருக்கே!” மெல்லிய குரலில் கூறியவளுக்கு மணப்பெண்ணுக்குரிய சந்தோஷத்தை மீறி, ஒருவித கலக்கம் இருக்கத்தான் செய்தது.
“அங்கே என் அண்ணனைப் பாரு! எவ்வளவு சந்தோஷமா இருக்கான்னு? நீயும் கொஞ்சம் சிரிச்சு சந்தோஷமா இருடி!” பற்களை கடித்தபடி இஷிதா மேகாவிடம் கூறினாள்.
“ம்ம், சரி” என்றவளால் முழுமையாக சிரிக்க முடியவில்லை.
“மேகா உனக்கு ஏன் இப்படி வியர்க்குது? வா என்கூட!” என்றவள் ரிதுராஜை பார்த்து, “வாஷ் ரூம் கூட்டிட்டு போயிட்டு வந்திடுறேன்” என்றவள் மேகாவை அழைத்துக்கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கினாள்.
அப்பொழுது, “எங்கேம்மா போறீங்க?” என்றபடி மேகாவின் தாய் ராதிகா அவர்களிடம் கேட்க, “ரெஸ்ட்ரூம் போகணும்மா” என்றாள் மேகா.
“இப்போதான் போகணுமா?”
“இப்போதான் ரெஸ்ட்ரூம் போனும் போல இருக்கு. நான் என்ன பண்றது?” என்று இதழ் பிதுக்கிய மகளைப் பார்த்து புன்னகைத்த ராதிகா,
“சின்னப்புள்ளையாவே இரு, சரி போ! வரவேண்டியவங்க எல்லாம் வந்துட்டாங்களாம். இன்னும் ஒருத்தர் தான் வரணுமாம். அவரும் கிட்ட வந்துட்டாராம், அவர் வந்ததும் ஸ்டார்ட் பண்ணிருவாங்க. லேட் பண்ணிராதீங்கடி, அப்புறம் சம்பந்தி கோச்சுக்க போறாங்க!” என்றவர், தோழிகளுடன் கதைத்து கொண்டிருந்த தன் சின்ன மகளைப் அழைத்து,
“மயூரி போ, போய் வெளியே விக்ரம் உன் அப்பா கூட கெஸ்ட் ரீஸிவ் பண்ணிட்டு இருப்பான். அவன்கிட்ட பந்தி ரெடியாகிடுச்சான்னு பார்க்கச் சொல்லு!” என்றவர், அய்யர் அழைக்கவும் அவர் அருகில் சென்றார்.
“ஏன்டி இப்படி நடுங்கிட்டு இருக்க?” என்று கேட்டபடி மேகாவின் முகத்தில் ஆங்காங்கே கண்ணாடி முத்துக்களாய் சுரந்திருந்த வியர்வை துளிகளை மேக்கப் கலையாமல் ஒற்றி எடுத்துக் கொண்டிருந்தாள் இஷிதா.
“அவனை ஏமாத்திட்டோம்டி!” சொல்லும் பொழுதே அக்னியின் கோரமுகம் கண்முன்னே வந்து சென்றது.
“நீ என்ன அவனை காதலிச்சா ஏமாத்திட்ட?” கோபத்துடன் வினவினாள் இஷிதா.
“இல்லை, இல்லை” வேகமாக தலையசைத்து மறுத்தாள் மேகா.
“அப்புறம் என்ன? ஏய், துப்பாக்கியோட வந்து லவ் பண்ணலைன்னா, எல்லாரையும் கொலை பண்ணுவேன்னு சொன்னா யாருக்குத்தான் பயம் வராது? அந்த நேரம் அந்த சைக்கோ கிட்ட இருந்து தப்பிக்க அப்படி சொல்லிட்ட! அதுவும் நீயா சொல்லலையே? நான் சொல்லித்தானே சொன்னே! விடு, பிரச்சனை வந்தா என் பேரை சொல்லு” என்று இஷிதா வெளியே தைரியமாக காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் தீரன் மற்றும் மித்ரனை எண்ணி பயந்துதான் கிடந்தாள்.
“அவர்கிட்ட ரிதுராஜ் கூட எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிருக்குன்னு சொல்லி, கால்ல விழுந்திருந்தா விட்டுருப்பாரோ?” நகத்தை கடித்தபடி சந்தேகமாக மேகா கேட்டாள்.
“ம்ம், தூக்கிட்டு போய் அப்பவே கல்யாணம் பண்ணிருப்பான், இடியட்!” என்று கத்திய இஷிதா, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “அவன், உன்னை கடைசியா பார்க்கும்பொழுது பிஸ்னஸ் விஷயமா ரெண்டு இல்லை மூனு வாரத்துக்கு வெளிநாடு போறேன்னு தானே சொன்னான்?”
“ஆமா.”
“அப்புறம் என்ன? அவன் இன்னும் டெல்லிக்கே வந்திருக்க மாட்டான், ஸோ ரிலாக்ஸ். அவன் ஊருக்கு வரும்போது உனக்கு கல்யாணமே ஆகியிருக்கும்டி! இன்னொருத்தரோட வைஃப் கிட்ட மிஸ் பிஹேவ் பண்ற அளவுக்கு அக்னி சீப் கிடையாது” என இஷிதா பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவர்களது அறையின் கதவு தட்டப்பட, கதவை திறந்த இஷிதா வாசலில் நின்றிருந்த விக்ரமிடம், “என்னடா?” எனக் கேட்டாள்.
“வர வேண்டியவங்க எல்லாரும் வந்தாச்சாம், அக்காவை எல்லாரும் கூப்பிடுறாங்க அக்கா!” என்றான் மேகாவின் தம்பி விக்ரம்.
“கூட்டிட்டு வரேன், நீ போ!” என்று அவனை அனுப்பி கதவைச் சாற்றிய இஷிதா, மேகாவிடம், “என் அப்பாவை எனக்கு சுத்தமா புடிக்காது. ஆனாலும் நான் அவர்கிட்ட பேசினேன். யாருக்காக பேசினேன்? உனக்காக பேசினேன். எதுக்கு ஒரு வாரத்துல அவசர அவசரமா கல்யாணம் வைக்கணும்னு என் அப்பாகிட்ட கண்டிஷன் போட்டேன்? எல்லாம் உன் சந்தோஷத்துக்காக தானே! அப்போ நீ இப்படி டல்லா இருந்தா நல்லாவா இருக்கு? ஸோ ஹாப்பியா இருடி!” என இஷிதா மேகாவை தேற்றினாள்.
“கண்டிஷனா! என்ன கண்டிஷன்? என் கல்யாணத்துக்கு உன் அப்பாகிட்ட, ஏன் கண்டிஷன் போட்ட?” என மேகா இஷிதாவை பார்த்து கேட்க,
“அது வந்து, அது... கல்யாணம் நல்லபடியா சீக்கிரமா முடிஞ்சா, நான் அவர்கிட்ட பேசுறேன்னு கண்டிஷன் போட்டேன்” என இஷிதா, கனகராஜ் சொத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டதை மறைத்து மேகாவிடம் சமாளித்தாள்.
“இப்படியாடி உன் அப்பாகிட்ட நடந்துக்குவ? பாவம்டி அங்கிள்!” என மேகா கனகராஜூக்காக பரிந்து பேசவும்,
“பாவம் பார்த்துதான் நீ இப்போ, இப்படி நிக்கிற!” என்ற இஷிதா, முகம் வாடிப்போய் நின்ற மேகாவிடம்,
“மேகா, கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான்டி இருக்கு. ஸோ இப்ப இருந்து ஒவ்வொரு நிமிஷத்தையும் என்ஜாய் பண்ணு! டென்ஷனே எடுத்துக்காத, எல்லாம் நான் பார்த்துக்கறேன்!” என்று நம்பிக்கை கொடுக்க, இஷிதா கொடுத்த நம்பிக்கையில் சற்று நிதானம் அடைந்த மேகா மகிழ்ச்சியுடன் மேடையை நோக்கி வந்தாள்.
மணமேடையில் ஐயர் மணவோலையைப் படிக்க, கனகராஜும், கோபாலகிருஷ்ணனும் வருகை தந்திருந்த சொந்தங்கள் முன்பு, கையோடு நிச்சயதாம்பூலத்தை மாற்றிக் கொண்டனர். பின்பு கனகராஜின் துணைவி வீணா, மேகாவிற்கு போடவேண்டிய மோதிரத்தை மணமகனிடம் கொடுக்க, அதை வாங்கிய ரிதுராஜ் மேகாவின் மென்விரல் பற்றி நிச்சயமோதிரத்தை காதலாக அணிவித்தான்.
அவன் அணிவித்த மோதிரத்தை மென்னகையுடன் பார்த்த மேகாவிற்கு, திடீரென்று ஏதோ ஒரு நெருடல். மனதிற்குள் ஒருவிதமாய் உறுத்தியது. ஏன் என்று தெரியவில்லை?
ஏனோ அந்த உணர்வை ஒதுக்கியும் வைக்க முடியாமல் போக, மெதுவாய் தன் தலை உயர்த்தி குறிப்பிட்ட திசைநோக்கி திரும்பியவளை, தன்கரம் பிடித்து தடுத்து, “பார்க்காதே மேகா!” என்ற இஷிதாவின் குரல் நடுங்கியது. ஒரு கணம் தோழியின் முகம் பார்த்த மேகா, மீண்டும் அந்த திசையை பார்த்தாள். முதுகுத்தண்டு சில்லிட பனிச்சிலை போல உறைந்து நின்றாள்.
ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருந்த கோபோ லைட்டிங் ஒளி, தன்மேல் விட்டுவிட்டுப்பட, அகோர அரக்கனை போல கண்கள் சிவக்க மேகாவை பார்த்து கொண்டிருந்தான் அக்னிதீரன். அவன் முகம் ரத்தமென சிவந்து கிடக்க, தலையில் ஆரம்பித்து அவன் உடல் மொத்தமும் விரல் விட்டு எண்ணும் நொடிப்பொழுதில் வியர்த்துக் கொட்டியது.
‘இவன் இங்கே எப்படி? ஐயோ என்ன செய்வானோ? சொன்னது போல அனைவரையும் கொன்று விடுவானா! நான் என்ன செய்வேன்?’ என்ன செய்வது என ஒன்றுமே புரியவில்லை மேகாவிற்கு. அவளுக்குள் ஊடுருவி அவளது உயிரை பஸ்மமாக்கும் அவனது உக்கிரப் பார்வையை பார்க்கவே மேகாவுக்கு அச்சமாக இருந்தது.
அந்நேரம் பார்த்து மேகாவின் தாய் ராதிகா மேகாவிடம் மோதிரத்தை நீட்டி, “மாப்பிள்ளைக்கு போட்டு விடும்மா!” என்று கூற, மேகாவோ அக்னியின் பார்வையில் நடுங்கியபடி அமைதியாக நின்றாள்.
இதுவரை நன்றாக இருந்த மேகாவின் முகத்தில் திடீரென்று தோன்றிய கலவரத்தை கண்ட ரிதுராஜ், “மேகா என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்க? ஆர் யூ ஓகே?” எனக் கேட்டான். ஆனால் மேகா அவனைப் பார்க்கவில்லை.
“மேகா!” மீண்டும் அழைத்தான். இந்த முறையும் அவளது கவனத்தை தீரனே சிறை வைத்திருக்க, மேகாவின் கவனம் ரிதுராஜிடம் திரும்பவில்லை.
“மேகா என்னாச்சு?” இந்தமுறை அவளது நாடியை பிடித்து தன் பக்கம் திருப்பிக் கேட்டான் ரிதுராஜ்.
தீரனின் விழிகள் தானாக மூடிக்கொண்டன. அவனுக்குள் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்கியது போல வலித்தது.
“ஹான் சொல்லுங்க!” புரியாமல் விழித்தாள்.
“என்னாச்சும்மா? லுக்கிங் வொரிட்!” ‘கவலையா தெரியிற’ கவலையுடன் கேட்டான்.
“இல்லையே? ஐ அம் ஓகே!” தடுமாறினாள்.
“எல்லாம் ஓகே தானே? வேற எதுவும் இல்லையே? எதுவா இருந்தாலும் சொல்லு!” என்றான் ரிதுராஜ் அவளது கரங்களை பிடித்தபடி.
அதுவரை கண்மூடி இருந்துவிட்டு, அப்பொழுது பார்த்து விழி திறந்த தீரனின் கண்களில் மீண்டும் இந்தக் காட்சி பட்டுவிட, “...” எதையோ சொல்லி பற்களை நறநறத்த தீரனின் உள்ளங்கை அவனது விரல் நகங்கள் அழுத்தியதில் ரத்தம் கசிய ஆரம்பித்தது. இருந்தும் தன் கைவிரல்களை இன்னும் அழுத்தமாக மடக்கியவன் வலிக்க வலிக்க இறுக்கமாக இறுக்கி பிடித்தபடி நின்றிருந்தான்.
“எல்லாம் ஓகே தான், நல்லா இருக்கேன்” என்ற மேகாவின் பார்வை மீண்டும் தீரனின் விழிகளிடம் சரணடைந்தது. மன்னிக்க வேண்டி யாசித்தது. தன்னை விட்டு விடும்படி கெஞ்சியது.
‘தீ தெறிக்கும் கண்கள், கனலைக் கக்கும் விழிகள், உக்கிரப்பார்வை, எரிக்கும் கண்கள்’ என இப்படி ஏகப்பட்ட வரிகளை கதைப் புத்தகங்களில் படித்து சிலிர்த்திருந்த மேகா, இன்றுதான் அதை நேரில் கண்டாள். பலமுறை தீரனின் தகிக்கும் விழிகளை கண்ட மேகாவிற்கு இன்று அவன் பார்வையில் தெரிந்த உக்கிரம் மிகவும் புதிது.
Last edited:
Author: Naemira
Article Title: மிருதன் 13
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: மிருதன் 13
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.