logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 14.1

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
அன்று மேகாவிடம் தன் விருப்பத்தை கூறிவிட்டு வீட்டிற்கு வந்த அக்னியால் ஏனோ நிதானமாகவே இருக்க முடியவில்லை. மேகாவின் கண்ணீரில் நனைந்த பரிதாபமான முகம் வந்து வந்து அவனை இம்சித்தது.
பயப்படுகிறாள்! அதுவும், அவனைக் கண்டாலே அவள் கண்களில் இலவசமாக வந்து ஒட்டிக்கொள்ளும் அந்த பயம், ஏனோ தீரனுக்கு பிடிக்கவில்லை. அவள் விழிகளில் தெரிந்த அதே கலவரத்தை பலமுறை மற்றவர்களிடம் பார்த்து ரசித்திருக்கின்றான்.
“மிஸ்டர் அக்னிதீரன், உங்க பேரைக் கேட்டாலே பயமா இருக்கு” இதை பலபேர் தன் காதுபடக் கூறி கேட்டிருக்கிறான். ஏன் சமயங்களில் அஷோக்கே நேரடியாக கூறியிருக்கிறான். உள்ளுக்குள் ரசிப்பான். முகத்தில் ஒரு கர்வப்புன்னகை தோன்றும். பெருமையுடன் மீசையின் நுனியை முறுக்கிக்கொள்வான். அப்பொழுதெல்லாம் உள்ளுக்குள் எதையோ சாதித்துவிட்டதாய் உணர்பவன், இன்று ஏனோ அதை வெறுத்தான்.
“ஏன் வரு? ஏன் இவ்வளவு பயப்படுற? என் அன்பு ஏன் உனக்கு புரியல? என்னை புடிக்கும்னு ஒரு வார்த்தை கூட ஏன் சொல்லலை? நீ இதுவரை காட்டிய அன்பு, கரிசனம் எப்பொழுதும் வேண்டும், எனக்கு மட்டுமே வேண்டும்னு, நான் ஆசைப்படுறது தவறா என்ன? தள்ளித் தள்ளி போற!” என்று வாய்விட்டே கூறியவனுக்கு முசுமுசுவென்று கோபம் வந்தது.
“நான் வேண்டாமா?” என்று கேட்டான். ‘யார் சொன்னது அப்படி? நீங்க எனக்கு வேண்டும்’ என்றல்லவா அவள் சொல்லிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, வேண்டாம் என்கிறாளே!
“எல்லாம் நான் கொடுத்த இடம், இருக்குடி உனக்கு, நான் வேண்டாம் என்றால்? வேறு யார் வேண்டுமாம்?” பற்களைக் கடித்தான்.
“ஏன் வேண்டாம்னு கேட்டா, அப்பாக்கு புடிக்காதாம்! யாருக்கு வேண்டும் அவர் சம்மதம்?” என்றான் நக்கலாக.
“யாராவது நம்ம கல்யாணத்தை தடுக்க முயற்சி பண்ணினா அவங்களை முடிச்சிடுவேன்னு சொல்லிட்டேன். அதுக்கு அந்த நடுங்கு நடுங்குறா! நான்தான் கோபமா இருக்கேன்னு தெரியுதுல! அதென்ன எனக்கு புடிக்கலைன்னான்னு ஒரு கேள்வி. எவ்வளவு துணிச்சல் இருக்கணும்? புடிக்கலைன்னு சொல்லிருவ நீ!” முகத்தை அழுத்தமாக துடைத்தான்.
“அவ்வளவு சொல்றேன், அழுறாளே தவிர புடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லலையே!” அவன் முகம் ஏமாற்றத்தில் சிவந்தது.
“தீரன், உன்னை எனக்கு புடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னா வாயில இருந்து முத்து விழுந்திருமோ? தள்ளித் தள்ளி போறா, அதான் திட்ட வேண்டியதா போச்சு! கத்திட்டு வந்தாச்சு, அப்பவும் நிம்மதி இல்லை. ச்ச, என்ன இம்சைடா இது? இவளை!” என்று கண்களை மூடித் திறந்தவன், இப்பொழுது தன் முரட்டுக் கரத்தை பார்த்தான். அவளது கரத்தின் மென்மையை உணர்ந்தான்.
“அவ்வளவு அழுத்தி புடிச்சிருக்கக் கூடாது, எப்படி தாங்குனா? மணிக்கட்டு அப்படியே சிவந்து போச்சு, வரு!” என்று கத்தியபடி கழுத்தை தேய்த்தவனுக்கு, இந்தமுறை தன்மீதே கோபம் வர, வழமை போல தனது தற்காலிக ஆறாவது விரலை தேடிப்பிடித்து, தன் இதழில் வைத்தான்.
அந்நேரம், “குட் ஈவினிங் அக்னி!” என உற்சாகமாக அக்னியின் தோள்களை தட்டி, கழுத்தை இறுக்கிய தன் டையை தளர்த்தியபடி சுழல் நாற்காலியில் வந்து அமர்ந்தான் அஷோக்.
“ஈவினிங் அஷோக்” என்றான் அக்னி உற்சாகம் இல்லா குரலில்.
“அப்புறம் அக்னி?” என்று ஆரம்பித்த அஷோக்கிடம்,
“டிரிங்க் பண்ணப் போறேன். உனக்கு?” என கேட்டான் சிவப்புநிற திரவத்தை க்ளாசில் சரித்தபடி.
“மேக் இட் டூ!” என்ற அஷோக் புன்முறுவலுடன் தலைசாய்த்து அமர்ந்திருக்க, அவன் அருகே வந்த அக்னி, “ஏன்டா அப்படி பாக்குற?” சிறு கோபத்துடன் கிளாஸை அவனிடம் நீட்டினான்.
“கொஞ்சநாளைக்கு முன்னாடி இருந்த தீரன், எங்கேன்னு தேடுறேன் அக்னி!” கிளாஸை வாங்கி பருகியபடி கேலிக்குரலில் கூறினான் அஷோக்.
“கிடைச்சானா?” ஒரு வார்த்தை சொல்லும்பொழுதே ஒரு க்ளாசில் உள்ள மொத்த திரவமும் தீரனின் வயிற்றை நிரப்பியது.
“எங்கே கிடைச்சான்?” அதே கேலியுடன் அஷோக் உதட்டை பிதுக்கினான்.
“நீ நல்லா தேடுடா, கிடைப்பான்!” என்றான் தீரன் மூன்றாவது கிளாஸை வாயில் சரித்தபடி.
“அவன் மானஸ்தன். இனி கிடைப்பான்னு தோணல அக்னி” என அடக்கப்பட்ட சிரிப்புடன் அஷோக் சொல்ல, “அடீங்க!” என அக்னி கையில் இருந்த காலி கிளாஸை தூக்கி அஷோக் மீது எறிய, அதை லாவகமாக கேட்ச் பிடித்த அஷோக்,
“சரி தரமான சம்பவம் ஒன்னு பண்ணிருக்க. அதை நீயே சொல்லிரு!” என்று கூற,
“தெரிஞ்சிகிட்டே கேட்குற மாதிரி இருக்கே?” அஷோக்கை பார்த்தபடி வினவினான் தீரன்.
“தெரியும்தான்” என்று இழுத்தான் அஷோக்.
“உன் ஆளு, அந்த ரிப்போர்ட்டர் சொன்னாளா?” என்றான் தீரன்.
‘எங்கே சொன்னா? கேவலமா கிழிச்சா!’ என மனதிற்குள் புலம்பியவன், “சொன்னா, சொன்னா!” என்றான்.
“அப்போ ஏன்டா மறுபடியும் கேக்குற?” என்றான் எரிச்சலுடன்.
“நீ சொல்ற மாதிரி வராதுல” மென்னைகையுடன் கூறினான் அஷோக்.
“ம்ம்” என்ற தீரன், தான் ப்ரோபஸ் என்னும் பெயரில் செய்த சாகசங்களைக் கூற,
“இப்படியாடா ப்ரோபோஸ் பண்ணுவ?” என்னதான் இஷிதா கூறினாலும், அக்னி தன் வாயாலே கூறியதும் அஷோக்கிற்கே அதிர்ச்சி ஏற்பட சட்டென்று கேட்டுவிட்டான்.
“எனக்கு என்ன தோணுச்சோ அதை சொன்னேன்!” என்றான் இலகுவாக தன் தோள்களை குலுக்கியபடி.
“கொஞ்சம் சாஃப்ட்டா பேசிருக்கலாமே?” என்றான் அஷோக்.
“இதான் நான்! எனக்கு நடிக்கவெல்லாம் வராது. அவ மூலமா எனக்குள்ள ஏற்படுற ஃபீலிங்ஸை நான் அவகிட்ட தானே சொல்லமுடியும்” என்ற தீரன் அஷோக்கிடம், “வரு, என்னை புடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லலைடா!” வலியுடன் கூறினான்.
“அதுக்காக புடிக்கலைன்னும் சொல்லலை தானே? பாஸிட்டிவா பாருடா!” என்றான் அஷோக். நண்பன் கவலை கொள்வதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“பயப்படுறாளேடா?” தீரனின் குரலில் உற்சாகத்துக்கு பயங்கர பஞ்சமாக இருந்தது.
“உங்களோட முதல் சந்திப்பே சண்டை, துப்பாக்கி, ரத்தம்னு ஒரே ரணகளமா தான் ஆரம்பிச்சது. ஸோ, மேகாவுக்கு பயம் இருக்கத்தானே செய்யும்” மேகாவின் நிலையை எடுத்துக் கூறினான் அஷோக்.
அஷோக் கூறியதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அக்னி, தன் முகத்தை அழுந்த துடைத்து அவன் முகம் பார்த்து, “நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன் அஷோக்” என்றான்.
“சொல்லு அக்னி!” சிவப்பு திரவத்தை அருந்தியபடியே கேட்டான் அஷோக்.
“நம்ம ஃபைனான்ஸ் பிஸ்னஸை லீகலைஸ் பண்ணலாம்னு இருக்கேன். புதுசா இம்போர்ட், எஸ்ப்போர்ட் பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு தோணுது. என் கடந்த காலத்தை மாற்ற முடியாது. ஆனா இனி மேகாகூட நான் வாழப்போற, ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமா வாழணும்னு நினைக்கிறேன். எல்லாமே அவ விருப்பப்படி இருக்கணும் அஷோக். நீ என்ன சொல்ற?” என விழிகள் போதையில் மிதந்தாலும் நிதானமாக அஷோக்கின் முகத்தை பார்த்துக்கொண்டே கேட்டான் தீரன்.
“நீ என்ன பண்ணினாலும் அது நம்ம நல்லதுக்காகத் தான் இருக்கும். ஸோ, நீ என்கிட்ட கேட்கவே வேண்டாம் அக்னி. தீரன் எவ்வழியோ இந்த மித்ரனும் அவ்வழியே!” என அஷோக் சிரிக்க, தீரனும் சிரித்தான்.
அப்பொழுது மாடி அறையில் இருந்து பொருட்கள் உடையும் சத்தம் கேட்க, சட்டென்று இறுக்கமான மித்ரன் கோபமாக எழுந்து நிற்க அவனைத் தடுத்த தீரன், “பொறுமையா இரு, நேத்ராக்கு கொஞ்சம் டைம் குடு!” என்றான்.

“எவ்ளோடா கொடுக்கறது? கிட்டத்தட்ட வருஷம் ஆகப் போகுதுடா, நம்மளை நம்பவே மாட்டாளாடா?” மித்ரன் விரக்தியாக வந்து அமர்ந்தான். குரலில் உயிர்ப்பில்லை. தீரனுக்கும் மித்ரனை பார்க்க கஷ்டமாகத் தான் இருந்தது.

 
Last edited:

Author: Naemira
Article Title: மிருதன் 14.1
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top