logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 14.2

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
தங்கையை குறித்த கவலையில் சிறிது நேரம் அமைதியாக இருந்த அஷோக், சில நிமிடங்கள் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தீரனிடம், “அப்போ சீக்கிரமா நாம கனடா போக வேண்டியிருக்கும்னு சொல்லு!” என கூறினான்.
“மே பீ, நாளைக்கு ஈவினிங்கே கூட கிளம்ப வேண்டியிருக்கும்” என்ற தீரன், “எப்படியும் இந்த டிரிப் போயிட்டு வர ரெண்டுல இருந்து மூனு வாரம் வர ஆகலாம்டா! அதுவரை வருவை பார்க்க முடியாது. அதுதான் உறுத்தலா இருக்கு. அங்கே எப்படியும் பிசியா இருப்போம். ஃபோனும் பேசுறதுக்கு கஷ்டம்தான். நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்டா அவளை” என்றவன் வேகமாக அங்கிருந்து கிளம்பினான்.
“இந்த நேரத்துல எங்கே போற அக்னி?” என்று அஷோக் வினவினான்.
“வருவ பார்க்கப் போறேன்!” என்று திரும்பி பார்க்காமலே சொல்ல,
“டேய் நில்லுடா!” என்ற அஷோக்கின் குரல் அக்னியின் செவியில் விழுவதற்குள் அக்னி காரில் ஏறியிருந்தான்.
ரிதுராஜ் மூலமாக கனகராஜ் கூறிய கண்டிஷனைக் கேட்டதும் தமையனை தாறுமாறாய் திட்டி அனுப்பிவிட்டு தந்தை மீது அதீத கோபத்தில் இருந்த இஷிதா, மேகாவிடம் இருந்து அழைப்பு வந்ததும் அவளையும் திட்ட ஆரம்பித்தவள், மேகாவின் அழுகுரல் கேட்டதும் பதறியே விட்டாள்.
பின்பு ஒருவழியாக மேகா, வீட்டில் இருப்பதை அறிந்துகொண்டு வேகமாக வீட்டிற்கு வந்தவள், மேகாவை தேற்ற கடும் பாடுபட்டுப் போனாள். ஏற்கனவே தந்தை மேல் கடும் கோபத்தில் இருந்த இஷிதாவுக்கு விருப்பம் இல்லாத மேகாவை வற்புறுத்தும் தீரன் மேல் கடும் ஆத்திரம் வந்தது.
அந்த ஆத்திரம் மொத்தமும் மித்ரன் மீது திரும்ப, சற்றும் யோசிக்காமல் அலைபேசியை எடுத்தவள், அவன், ‘ஏன்? என்ன?’ என்று கேட்கும் முன்பே பொறிந்து தள்ளினாள். ‘போதும் போதும்’ என பொறுத்து பார்த்த மித்ரனின் பொறுமையும் சில நிமிடங்களில் காற்றில் பறந்தது.
“போதும் இஷிதா, மேகாவுக்கு அக்னிகிட்ட பிரச்சனைன்னா அதை மேகா சொல்லட்டும். நீ அவங்க விஷயத்துல தலையிடாதே! நீ என்ன சொன்னாலும் சரி, நான் அக்னி பக்கம்தான். நீ தேவை இல்லாம உள்ள வராதே! அவங்க கல்யாணத்தை யார் நினைச்சாலும் தடுக்க முடியாது தடுக்கவும் விடமாட்டேன்” என்றவன் அவளிடம் இருந்து பதில் வரும் முன்பே அழைப்பை வைத்திருந்தான்.
ஆக தந்தை மற்றும் தீரன் இருந்த பெயர் பட்டியலில் இப்பொழுது மித்ரனும் இணைந்துகொள்ள, இஷிதாவின் ஆத்திரமும் கோபமும் பல மடங்கு அதிகமானது. ‘என்ன செய்வது?’ என பலவிதமாய் சிந்தித்தாள்.
போலீசிற்கு போகலாம் என்றால் பத்தில் எட்டு பேர் அவனது ஆட்கள். ஆக அவனை எதிர்த்து கொண்டு ஒன்றும் செய்யமுடியாது. அவனுடன் சண்டையிட்டால் தோல்வி தான் மிஞ்சும் என்று எண்ணியவளுக்கு தன் இயலாமை மீது கோபம் தான் வந்தது.
ஆக, ‘எப்படித் தான் மேகாவை அக்னியிடம் இருந்து காப்பாற்றுவது?’ என மேலும் மேலும் பலவிதமாக சிந்தித்தவளின் மனதிற்குள் தோன்றியது எல்லாம் ஒரே ஒரு எண்ணம்தான். அது ரிதுராஜுடன் மேகாவின் திருமணம்.
ரிதுராஜ் நல்லவன் தான். ஆனால் எதற்கெடுத்தாலும் தந்தை தந்தை என்று இருக்கிறானே? ஏனோ தமையன் மீது சிறிய மனக்குறை தோன்றியது. போதாக்குறைக்கு இந்த திருமணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட தந்தை மீது வெறுப்பு இன்னும் அதிகரித்தது.
அந்த சொத்து தனக்கு எவ்வளவு முக்கியம் என தெரிந்தும் தந்தை கூறியதற்கு தலையாட்டிவிட்டு தன்னிடம் வந்து கெஞ்சிய தமையன் மீது பயங்கர ஆத்திரம் வந்தது.
ஆனால் மேகா? அவளை எப்படி இந்த ஆழியில் இருந்து மீட்பது? சரி மேகாவிற்காக தந்தையிடம் பேசலாம் என்றாலும், அதற்கான விலை மிகவும் பெரியதே! அதெல்லாம் வெறும் சொத்துக்கள் அல்லவே! அது அனைத்தும் அவளது தாயின் ஆசைகளும், இறுதி நினைவுகளும் ஆயிற்றே! அதனால் தானே எத்தனையோ இன்னல்கள் வந்தும், இன்னும் அவள் அதை விற்காமல் வைத்திருக்கிறாள்.
சரி போனால் போகட்டும் தன் தாயுடன் கழித்த இனிமையான தருணங்களை சுமந்து கொண்டே வாழ்நாளை கடத்திவிடலாம் என்றாலும் அவளது தந்தை அதற்கெல்லாம் தகுதி உடையவரா என்ன? இல்லையே! அவர் செய்த துரோகத்தை அவளால் எப்படி மறக்க முடியும்? மன்னித்து அனைத்தையும் எப்படி தூக்கிக் கொடுக்க முடியும்?
தன் பள்ளிக்காலத்தில் இருந்து ஹாஸ்டலிலே தங்கிப் படித்த ரிதுராஜிற்கு வேண்டுமானால், படுக்கையில் கிடந்த தாயின் மரணம் பெரிய பாதிப்பை கொடுக்காமல் இருந்திருக்கலாம். அவனும் தந்தை செய்ததை மன்னித்து அனைத்தையும் கொடுத்து, அவரை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், அவளால் முடியவே முடியாதே! தாய் பட்ட துன்பங்களையும், வடித்த கண்ணீரையும் அருகே இருந்து பார்த்தவளாயிற்றே.
கனகராஜை மன்னிப்பது என்பது பல ஜென்மங்கள் கடந்தாலும் இஷிதாவால் முடியாத காரியம். ஆனால் மேகா, சிறு வயது தோழி தான். இருந்தாலும் நட்பு, நட்பு தானே! மேகாவின் தந்தை பணிமாற்றம் பெற்று சென்னை சென்ற பிறகு அலைபேசி மற்றும் முகநூல் முலமாக எப்பொழுதாவது பேசியதோடு சரி. பெரிய போக்குவரத்து இல்லைதான்.
ஆனால், இஷிதா தன் தாயை இழந்து, தந்தையை பிரிந்து, காதலை துறந்து தனிமையில் இறுக்கமாக இருந்த நேரம் சென்னையில் இருந்து இங்கே தனக்கு துணையாய் வந்த ஒரே ஜீவன் ஆயிற்றே!
அவள் இன்று இப்படி ஒரு இக்கட்டான நிலையில் இருக்கும் பொழுது உதவாவிட்டால் தோழி என்று தான் இருந்து எதற்கு? என வெகுவாய் யோசித்தபடி அப்படியே மெத்தையில் சரிந்த இஷிதாவால் நிலையான ஒரு முடிவை எடுக்க முடியவில்லை.
அப்பொழுது பார்த்து வீட்டின் அழைப்புமணி அடிக்கவும் சலிப்பாக தன் அறையை விட்டு வந்த இஷிதா கதவை திறந்ததுதான் தாமதம், “வரு!” என மேகாவின் பெயரை ஏலம் விட்டபடி கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் தீரன்.
“மேகா தூங்கிட்டு இருக்கா, இப்போ பார்க்க முடியாது. போங்க, மிஸ்டர் அக்னி!” என்று இஷிதா கூறவும், அவளை பார்த்து திரும்பினான். ஒரே பார்வைதான் பார்த்தான். அதற்கே இஷிதா இரண்டடி பின்னால் சென்று நின்றாள்.
அவனது கணீர்குரல், அழுதழுதே உறங்கிக் கொண்டிருந்த மேகாவின் காதில் விழுந்ததோ என்னவோ, ஆழமான உறக்கத்திலே, “எதுவும் பண்ணிறாதீங்க!” என அலறியபடி அரண்டு விழித்தாள் மேகா. அவள் அலறும் குரல் கேட்டதும்தான் தாமதம், இரண்டே எட்டில் அவளது அறைக்குள் நுழைந்தான் அக்னி.
ஏற்கனவே பதற்றத்தில் இருந்த மேகா, அவனைக் கண்டதும் பயத்தின் உச்சத்தை தொட்டுவிட, அவளது மருண்ட விழியில் தெரிந்த பயம் கண்டு வேதனை கொண்டவன், “வரு!” என அழைக்க,
“ப்ளீஸ் மிஸ்டர் அக்னி, அவளை டிஸ்டர்ப் பண்ணாம, வெளிய போங்க! இனிமே இங்கே வராதீங்க, எந்த உரிமையில அவளுடைய ரூம்குள்ள போறீங்க?” என இஷிதா கூறியது தான் தாமதம், அக்னிக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை.
“என் வருகிட்ட, நான் பேசிட்டு இருக்கேன். நீ யாரு நடுவுல? உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்?” இஷிதாவின் முகம் பார்த்து திரும்பி நின்றவன் பிஸ்டலை அவளது நெற்றியில் வைத்து அழுத்தியபடி அவளது விழிகளைப் பார்த்து உறுமினான்.
அவ்வளவு தான் பயத்தில் இஷிதாவின் முகம் வெளிறிப் போக அச்சத்தில் அப்படியே உறைந்து நிற்க, படுக்கையில் இருந்து பதறி எழுந்த மேகா அக்னியை நெருங்கி, “ப்ளீஸ், அவளை விட்ருங்க தீரன்!” என கத்திக் கதற ஆவேசமாக மேகாவை பார்த்த தீரன், அவளது கரத்தை இறுக்கமாக பிடித்து, “அப்போ உன் ஃப்ரண்ட நமக்குள்ள வரவேண்டாம்னு சொல்லு!” என கண்கள் சிவக்க காட்டுத்தனமாக கத்தினான்.
“தீரன் ப்ளீஸ்!” மேகாவின் உடல் சோர்வுற்றிருக்க அவனிடம் போராட தெம்பு இல்லாமல் கெஞ்சினாள்.
அப்பொழுது தான் தன் கரத்திற்குள் சிறைப்பட்டிருக்கும் அவளது மென்கரம் வலியில் மெல்ல நடுங்குவதை உணர்ந்தவன், எரிச்சலுடன் அவளது கரத்தை விடுவிக்க, மேகா கண்கள் சொருக அவன் மீதே சரிந்து விழுந்தாள்.
மேகாவின் தலையை தன் மடியில் வைத்துக்கொண்டு, “வரு, வரு கண்ணைத் திற!” அந்த நிலையிலும் கட்டளையிட்டான். அவளிடம் இருந்து எந்த அசைவும் இல்லை.
“ஏய், என்ன பார்த்துட்டு இருக்க? போய் தண்ணி கொண்டு வா!” தாறுமாறாய் இஷிதாவிடம் கத்தியவன் மேகாவிடம் திரும்பி மீண்டும், “வரு, என்னை பாரு!” என கன்னத்தை தட்டியபடி அழைத்தான்.
சில நொடிகள் இஷிதாவையும் அவனையும் தவிக்க வைத்துவிட்டு மெல்ல கண்விழித்தவள், தீரனைக் கண்டதும் சட்டென்று விலகி அருகில் இருந்த இஷிதாவின் கரத்தை பிடிக்க, அவன் நெஞ்சுக்குழிக்குள் வலித்தது.
‘எதைச் சொன்னாலும் துப்பாக்கியை நீட்டும் அக்னியை எப்படி சமாளிப்பது?’ என இஷிதாவுக்கும் புரியவில்லை. அறையில் கனத்த மௌனம் பரவியது. மூச்சு வாங்க மேகா, இஷிதாவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
நேரம் கடந்தது. அவன் அவளை ஆழ்ந்து பார்த்தான். அவளது விழிகளை பார்த்தான், அதில் இருந்து வழியும் கண்ணீரை பார்த்தான். அவள் பார்வையில் தெரிந்த பயத்தை பார்த்தான்.
‘இதற்கு காரணம் நீதான்’ என அது அவனை குற்றம் சுமத்தியது. கண்களை அழுத்தமாக மூடித் திறந்தான். பின்கழுத்தை தேய்த்தான். தலையை அழுந்தக் கோதிப் பார்த்தான், ஒன்றும் வேலைக்காகவில்லை. கைகள் தானாக பாக்கெட்டை தடவியது. நச்சுக்குழலை கையில் எடுத்தவனுக்கு ஏனோ மேகாவிற்கு பிடிக்காததை அவள் முன்பே செய்ய மனம் விரும்பாமல் போக, எடுத்ததை கசக்கி கீழே போட்டவன், அவளது அச்சம் நிறைந்த விழிகளைப் பார்த்து,
“என்னை அப்படி பார்க்காத வரு!” என்றவனுக்கு அவளது பயந்த பார்வை உச்சக்கட்ட கோபத்தை ஏற்படுத்த, “என் உணர்வுகள் உனக்கு புரியவே இல்லையாடி?” என ஆக்ரோஷமாக கத்தினான்.
“ஆ!” காதை மூடி அழுதாள்.
“அக்னி, ப்ளீஸ் கொஞ்சநேரம் வெளிய போங்க, ப்ளீஸ்!” இஷிதா தன்மையாக கெஞ்சினாள்.
இருவரையும் தன் விழிகள் இடுங்கப் பார்த்தவன், மேகாவின் மணிக்கட்டை பார்த்தான். இவனது ஐவிரலின் தடம் பதிந்திருக்க ரத்தமெனச் சிவந்திருந்தது.

“மிஸ்டர் அக்னி ப்ளீஸ், ரொம்ப பயப்படுறா! கொஞ்சநேரம் வெளிய போங்க!” மீண்டும் இஷிதா கூறினாள்.

 
Last edited:

Author: Naemira
Article Title: மிருதன் 14.2
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top