logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 14.4

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
“நிஜமாவா சொல்ற?” அஷோக் நம்பாது மீண்டும் மீண்டும் நண்பனைக் கேட்டான்.
“எத்தனை தடவ கேட்ப? அவளுக்கும் என்னை புடிச்சிருக்குடா! ஆனா என் மேல நிறைய பயம் இருக்கு. அதான் ஒரு தயக்கத்தோடவே இருக்கா! போகப்போக எல்லாம் சரியாகிரும் அஷோக். அவளுக்கு என்னை புடிக்கலையேன்னு மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. இப்போ தான் மனசு லேசா இருக்கு” என்ற நண்பனை அணைத்து வாழ்த்து சொன்ன அஷோக்கால் ஏனோ மேகா சம்மதம் சொன்னதை முழுமையாக நம்ப முடியவில்லை. இருந்தும் தன் சந்தேகத்தை அக்னியிடம் கூறி அவன் சந்தோஷத்தை கலைக்க விரும்பாதவன், அமைதியாக இருந்தான்.

சுத்தமாக சவரம் செய்யப்பட்ட அவனது இயற்கையிலே பொலிவான கன்னங்கள், ‘தன் இதயத்தை கொள்ளை கொண்ட பெண்ணையே சீக்கிரம் மணக்கப் போகிறோம்’ என்கின்ற பூரிப்பில் புதுவித தேஜஸுடன் இன்று மேலும் அழகு கூடியிருக்க, ஆணழகனாய் மேகா முன்பு நின்றிருந்தான் ரிதுராஜ்.
“என்னை லவ் பண்ண ரெடியாயிட்டீங்களா?” கண்களில் குறும்புடன் கேட்டான்.
உதட்டிற்கு வலிக்காமல் புன்னகைத்த மேகாவால் ஏனோ முழு மனதுடன் சிரிக்க முடியவில்லை.
“உனக்கு என்னை பிடிச்சிருக்கா மேகா?”
“அப்பாக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே!”
“ப்ச், அப்பா ஓகே ஆகிடுவாரு. பட், எனக்கு உன் சம்மதம் வேணும்” எதிர்பார்ப்புடன் கேட்டான்.
“பொறுமையா பேசுறீங்க, எல்லார்கிட்டயும் தன்மையா பழகுறீங்க, என் முடிவை மதிச்சு என் அப்பாகிட்ட வந்து பேசிருக்கீங்க. உங்கள வேண்டாம்னு சொல்ல பெரிய ரீசன் ஏதும் இல்லை” ரிதுராஜ் மீது தனக்கு தோன்றிய அபிப்பிராயத்தை கூறினாள்.
“அப்போ புடிச்சிருக்கு” கண்சிமிட்டி கேட்டான்.
“ஆ...” அவள் ஆரம்பிக்கும் பொழுதே, ‘அப்போ என்கிட்ட சொன்னது என்னாச்சு? எத்தனை பேரைத்தான் புடிச்சிருக்குன்னு சொல்லுவ வரு?’ என அக்னி கத்துவது போன்ற பிரம்மை அவள் முன்பு தோன்றி மறைய, அதிர்ச்சியில் வியர்வை சுரக்க நின்றவளை புருவம் சுருக்கிப் பார்த்தான் ரிதுராஜ்.
“என்னாச்சு, ஏன் சட்டுன்னு ஒரு மாதிரி ஆகிட்ட?” என கேட்டான்.
“ஒன்னும் இல்லை, லேசா தலைவலிக்குது” என சமாளித்தாள். ஆனால் அவளுக்கு அக்னியை எண்ணி குற்ற உணர்ச்சியாக இருந்தது.
“ஹாஸ்பிடல் போகணுமா?”
“வேண்டாம், சின்ன தலைவலி தான். ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” என்றாள்.
“சரி வா, ரொம்ப வலிக்குது போல, உன் முகமே ஒரு மாதிரி இருக்கு” என்றவன் மேகாவுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.
அவர்கள் வருவதை கண்ட குடும்பத்தினர் மேகாவிடம் விருப்பத்தை கேட்க, “அப்பாக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான்” என்றவள் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
மேகா அவ்வாறு கூறியதும் அவளது தந்தை கோபாலகிருஷ்ணனின் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம். “நான் சொன்னேன்ல என் சொல்லுக்கு என் பொண்ணு மறுபேச்சு பேச மாட்டான்னு!” மகிழ்ச்சியோடு மனைவியை பார்த்தவர், கனகராஜிடம் கூற,
‘எனக்கும் வாச்சிருக்கே!’ என மனதிற்குள் தன் புத்திரர்களை திட்டியவர், கோபாலகிருஷ்ணனிடம், “அப்போ உங்க முடிவை சொல்லுங்க?” என்றார்.
அப்பொழுது, “பொண்ணு ரொம்ப அழகா இருக்கா ராஜ், நம்ம ரிதுக்கு ஏத்த பொண்ணுதான்” என மெல்ல யாருக்கும் கேட்காமல் வீணா, கணவன் கனகராஜின் காதில் கிசுகிசுக்க, மனைவியை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தவர், “ஆமா வீணா” என்றார். ஆனால் இப்பொழுதும் மகன் மீது கனகராஜிற்கு கோபமாக வந்தது.
‘இவனுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா?’ என மனதிற்குள் திட்டிக்கொண்டார்.
கனகராஜ் இப்படி யோசித்து கொண்டிருக்க கோபாலகிருஷ்ணனோ, ‘தெரிந்த குடும்பம்தான் ஆனாலும் ரொம்ப பெரிய இடமா இருக்கே? சரியா வருமா?’ என்று யோசித்தவர் மனைவியிடம் தனிமையில் பேசிவிட்டு வருவதாக கூறி ராதிகாவை தனியாக அழைத்து, தன் மனத்தில் உள்ளதை கூறினார்.
அவரோ, “நாம ஒன்னும் தேடிப் போலயே, அவங்களே வந்திருக்காங்க, அப்போ ஏன் கவலைப்படுறீங்க?” என்றார்.
“திடீர்ன்னு ஃபோன் பண்ணினாங்க, அப்புறம் வீட்டுக்கு வந்தாங்க, நாளைக்கு என்கேஜ்மென்ட் ஒருவாரத்துல கல்யாணம்னு சொல்றாங்க எப்படிடி? எவ்வளவு வேலை இருக்கு?” என்றவருக்கு ஏனோ கனகராஜ் மீது பெரிய அபிப்ராயம் இல்லை.
“நம்மகிட்ட தான் பணம் இருக்குல்ல, அப்புறம் என்ன? எல்லாம் பண்ணிரலாம். நல்ல சம்பந்தம், தெரிஞ்ச குடும்பம் விசாரிக்க கூட வேண்டாம்” என்ற ராதிகாவுக்கு வாசல் தேடி வந்த நல்ல வரனை விட விருப்பம் இல்லை. ஆனால் கோபாலகிருஷ்ணனுக்கு தான் கொஞ்சம் நெருடலாவே இருந்தது.
“ஒருவாரத்துல எல்லாரையும் எப்படி இன்வைட் பண்றது?” நெற்றியை நீவினார்.
“ஆமா, அப்படியே கூப்பிட்டதும் நம்ம சொந்தக்காரங்க பறந்து வந்துருவாங்க! உங்க வீட்லயும் நம்மளை தலை முழுகியாச்சு, எங்க வீட்லயும் தலை முழுகியாச்சு! உங்களுக்கு ஆபிஸ்ல பத்து ஃப்ரண்ட்ஸ், எனக்கு மியூசிக் ஸ்கூல்ல பத்து ஃப்ரண்ட்ஸ், அவங்களுக்கு ஃபோன்ல சொன்னாலே வந்துருவாங்க!” என்று சலித்துக்கொண்ட ராதிகாவுக்கு நெஞ்சோரத்தில் சொந்தங்களை எண்ணி மிகவும் வலித்தது.
“அதுக்காக பத்திரிகை வைக்காம எப்படி? நல்லாவே வாழமாட்டேன்னு எல்லாரும் சபீச்சாங்க பாரு, அவங்க கிட்ட எல்லாம் என் மூத்த பொண்ணு டாக்டர். அவளுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்னு தலைநிமிர்ந்து சொல்ல வேண்டாமா?” என்றவர்,
“மேகா, மயூரி, விக்ரம் இவங்க மூனு பேரோட கல்யாணமும் தான் என் வாழ்க்கையோட லட்சியம். அதை சீரும் சிறப்புமா பண்ணணும். இப்படி அவசர அவசரமா பண்ண எனக்கு விருப்பம் இல்லைடி! அப்புறம் அவ்வளவு பெரிய மண்டபம் எதுக்குடி? மண்டபம் சிம்பிளா அரேன்ஞ் பண்ணிட்டு, சாப்பாடு திருப்தியா பண்ணலாமே? எனக்கு இந்த பஃபே சிஸ்டம்ல பெரிய உடன்பாடு இல்லை ராதிகா.”
“கிருஷ்ணா, அவங்க மாப்பிளை வீடு, அவங்க சொல்றதை கேட்டு நாம அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும்.”
“அதுக்கு நாம ஒன்னும் அடிமை இல்லை.”
“என்னாச்சு கிருஷ்ணா? ஏன் இவ்வளவு வாக்குவாதம் பண்றீங்க?”
“ஒரு அப்பாவா யோசிக்கிறேன்டி, தப்பா?”
“இதை ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னாடி யோசிச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்” என்ற மனைவியை பார்த்து முறைத்தவர்,
“அப்போ ஒரு காதலனா யோசிச்சேன். என் சந்தோஷத்துக்கு முன்னாடி உன் குடும்பத்தோட கஷ்டம் புரியல, இப்போ அப்பாவா யோசிக்கிறேன், பயமா இருக்கு.”
“என்ன பயம்?”
“மேகா என்னை நம்புறா, என் அப்பா முடிவுதான் என் முடிவுன்னு சொல்றா! அப்போ நான் சரியான முடிவு எடுக்கணும்ல? அந்த பயம்தான்.”
“ரிதுராஜ் நல்ல அன்பான பொறுமையான பையனா தெரியுறான்பா!”
“ம்ம், ஆனா சூட்டிப்பா இல்லையே? அப்பா கண்ணசைச்சா அப்படியே ஆஃப் ஆகிடுறான்.”
“இதெல்லாம் எப்போ பார்த்தீங்க?”
“பார்த்தேன், பார்த்தேன்!”
“ஏங்க, அப்பா பேச்சு கேட்டா ஒரு தப்பா?”
“தப்பில்லை தான். ஆனா எல்லாத்துக்கும் கேட்டுட்டு இருந்தா நல்லா இருக்காது. நான், என் அப்பா பேச்சை கேட்டுருந்தா நீயும் நானும் இப்படி உட்கார்ந்து பேசிட்டு இருக்கமாட்டோம்” என்றவர், “எல்லாம் ஓகேடி! ஆனா ஒரு வாரத்துல கல்யாணம் தான் யோசிக்க வைக்குது.”
“பணம் கையில இருக்கும் பொழுது என்ன யோசனை, சமாளிச்சிரலாம் கிருஷ்ணா! அவ ஜாதகத்துல பிரச்சனை இருக்குப்பா! சீக்கிரமா பண்ணறது நல்லது. தெரிஞ்ச பையன், தெரிஞ்ச குடும்பம் எல்லாத்துக்கும் மேல இஷிதா இருக்கா, பார்த்துக்குவாப்பா!” என்று ராதிகா எடுத்துக் கூறினார்.
மனைவியுடன் கலந்தாலோசித்து விட்டு வெளியே வந்த கோபாலகிருஷ்ணனிடம் இஷிதா, “என்ன அங்கிள்? என்ன முடிவு பண்ணிருக்கீங்க?” எனக் கேட்டாள்.
அப்பொழுது அவளை பார்த்து முறைத்த கனகராஜ், கோபாலகிருஷ்ணனிடம், “சொல்லுங்க சார், உங்களுக்கு எல்லாம் ஓகே தானே?” என, ‘கேட்க வேண்டுமே’ எனக் கேட்டார்.
“எல்லாம் ஓகே, ஒருவாரத்துல கல்யாணம்தான் யோசனையா இருக்கு சார்!”
“அதை ஏன் அங்கிள் யோசிக்கிறீங்க? எல்லாம் அப்பா பார்த்துக்குவாரு! அவருக்கு நிறைய இன்ப்ளூயன்ஸ் இருக்கு. நீங்க சரின்னு மட்டும் சொல்லுங்க, கண்மூடி திறக்குறதுக்குள்ள வேலையை முடிச்சிடுவாரு, என்ன அப்பா?” என்ற இஷிதாவைப் பார்த்து கனகராஜுவிற்கு பற்றி கொண்டுவர சிரித்தபடி மறைத்தார்.
“அதான், என் பொண்ணே சொல்லிட்டாளே! சரின்னு சொல்லுங்க கோபாலகிருஷ்ணன்” என கனகராஜ் கூற, கோபாலகிருஷ்ணனும் சரி என்பதாய் தலையசைத்தார்.
அவர் சம்மதம் தெரிவித்ததும் அனைவரும் மகிழ்கியுடன் இனிப்பை பரிமாறிக்கொள்ள, இஷிதா ரிதுராஜுக்கு இனிப்பை ஊட்டிவிட்டு வாழ்த்துகள் கூறி, மேகாவைக் காண அவளது அறைக்குள் நுழைந்தாள்.

“பயந்துட்டே இருக்காதடி, எல்லாம் நல்லபடியா முடியும்” என்று கூறி இஷிதா மேகாவிற்கு வாழ்த்துகள் கூறி இனிப்பைக் கொடுக்க, ஏனோ அக்னியின் நினைவுகள் அவளை மிகவும் அச்சுறுத்தியது.
அப்பொழுது இஷிதா, மேகாவிடம், “எல்லாம் நல்லா போயிட்டு இருக்கும்பொழுது நீ ஏன் டல்லா இருக்க?”
“அக்னிகிட்ட உண்மைய சொல்லிறலாம்னு தோணுதுடி!”
“கஷ்டப்பட்டு என் அப்பால தொடங்கி, உன் அப்பா வரை எல்லாரையும் சம்மதிக்க வச்சிருக்கேன், நீயே கெடுத்து விட்டுறாத!” இஷிதாவுக்கு மேகா மீது கோபமாக வந்தது.
“அட்லீஸ்ட் ரிதுராஜ் கிட்டயாவது அக்னி பத்தி சொல்லிரவா?” குற்ற உணர்வு அவளை கொத்தித் தின்றது.
“மேகா கடைசியா சொல்றேன், அக்னி கிட்ட இருந்து நீ தப்பிக்கணும்ன்னா, உன் கல்யாணம் முடியுறவரைக்கும் கொஞ்சம் அமைதியா இரு! ரிதுராஜ் கிட்ட நான் பேசிக்கிறேன் ப்ளீஸ்” என இஷிதா முடிவாக கூறினாள்.
“நீ என்ன சொன்னாலும் சரி, இந்த குற்ற உணர்வு நான் சாகுற வரைக்கும் என்னை விட்டு போகாதுடி. தீரன் நம்புறார்டி, எனக்கே என்னை பார்க்க அசிங்கமா இருக்குடி! ரிதுராஜ்க்கு தெரிஞ்சா என்னை பத்தி என்ன நினைப்பாருன்னு இருக்கு” என்றவள் தலைமீது கைவைத்துக் கொண்டு சோர்ந்து அமர, அவளை மேலும் கலவரப்படுத்த அவளது அலைபேசி ஒலித்தது. திரையில் வெளிநாட்டு எண் விழவும் மேகாவுக்கு கண்கள் குளமாகியது.
“எடுத்து பேசுடி!”
“ரிதுராஜ் கூட நாளைக்கு என்கேஜ்மென்ட். அக்னிகூட பேசுனா நல்லா இருக்காது. என் கேரக்டரையே டீகிரேட் பண்ணற மாதிரி ஃபீல் ஆகுது” கண்ணீர் வழிந்தது.
“உன் மனசுல கள்ளம் இல்லைதானே?”
“ஆமா”
“அப்புறம் என்னடி? அக்னி புரிஞ்சிகிட்டா நாம ஏன் இப்படி எல்லாம் பண்ணப் போறோம்? ஸோ, எதை பற்றியும் யோசிக்காதே, அட்டென்ட் பண்ணு. நல்லா இருக்கியா? சாப்பிட்டியான்னு? ரெண்டு கேள்வி கேட்பான். நீ ஆமா இல்லைன்னு ஒரு வார்த்தையிலே பதில் சொல்லப்போற. அட்டென்ட் பண்ணு, நீ எடுக்காட்டா அவன் அடிச்சிட்டே இருப்பான்” என்று இஷிதா அலைபேசியை கொடுக்க, கைகள் நடுங்க அலைபேசியை எடுத்தவள் வழக்கம் போல அமைதியாக இருக்க,
அக்னி தான், “ஹாய் வரு, எப்படி இருக்க?” என ஆரம்பித்தான். தொடர் மீட்டிங் மற்றும் அவ்வளவு வேலைபளுவிலும் உற்சாகமாக பேசினான்.
“ம்ம்” என்றாள்.
“வாய்ஸ் சரி இல்லையே, ஆர் யூ ஓகே?” தொலைவில் இருந்தே கண்டறிந்து விட்டான்.
“ஐ அம் ஓகே!” பயத்தில் நெஞ்சே அடைத்தது.
“ஏதாவது பிரச்சனையா மேகா?”
“இல்லை”
“என்கிட்ட ஏதாவது சொல்லணுமா வரு?”
“அது... இல்லை தீரன்” இஷிதா முறைப்பதை பார்த்து அதோடு நிறுத்திவிட்டாள்.
“சரி, கொஞ்சம் வொர்க் இருக்கு, நான் கிளம்புறேன். பேசணும்ன்னா மெசேஜ் பண்ணு, நான் கால் பண்றேன்” என்றவனுக்கு மேகாவின் குரல் ஏனோ நெருடலை கொடுத்தது.

“ரிலாக்ஸ்சா இரு, ஏதும்னா கூப்பிடு. இப்போ நான் அவங்க கூட கிளம்புறேன்!” என்ற இஷிதா மேகாவிடம் விடைபெற்றுக்கொண்டு தன் குடும்பத்தினருடன் அவர்கள் தங்கியிருக்கும் ரிசார்ட்டிற்கு சென்றாள்.
அக்னியுடைய கவனத்தை திசை திருப்பிவிட்டால், மேகாவை இதில் இருந்து காப்பாற்றிவிடலாம் என்று நினைத்த இஷிதா, அக்னிக்கு இந்த விடயம் தெரிய வரும்பொழுது அவனுடைய எதிரவினை மேகாவை எந்த அளவுக்கு காயப்படுத்தும் என்பதை யோசிக்க தவறிவிட்டாள்.
ஆக இஷிதாவின் கணிப்பும், அசாத்திய நம்பிக்கையும் இந்த இடத்தில் தவறிப்போக, எந்த தோழியின் வாழ்க்கையில் தென்றல் வீசவேண்டும் என இவ்வளவு செய்தாளோ, அதே தோழியின் வாழ்க்கையில் புயல் வீசவும் அவளே காரணமாகிப் போனாள்.

ரிசார்ட்டிற்கு வந்ததும் இஷிதாவை தனியாக அழைத்த கனகராஜ், “உன் இஷ்டத்துக்கு அங்கே வச்சி பேசிட்டு இருக்க! கல்யாணத்துக்கு ஏன் இவ்வளவு அவசரம்? எப்படி எல்லாரையும் நேர்ல போய் இன்வைட் பண்றது?” என்றார்.
“யாரையும் நேர்ல போய் இன்வைட் பண்ண வேண்டாம், ஃபோன்ல கூப்பிடுங்க போதும். எப்படி கூப்பிட்டாலும் சித்தி, மாமா எல்லாரும் வந்துருவாங்க, அது போதும். ரிசெப்ஷனுக்கு எல்லாரையும் கூப்பிடலாம்” என்றவள் அங்கிருந்து கிளம்ப,
“நாளைக்கு என்கேஜ்மென்ட் முடிஞ்சதும் பாதி பேப்பர்ஸ்ல கையெழுத்து போடுவேன்னு சொல்லிருக்க!” என்றவரை கடுமையாக முறைத்தாள்.
“எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு” என கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

“என்ன அக்னி, மேகா ஏதும் சொன்னாளா?” கையை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு வினவினான் அஷோக்.
“இல்லை” என்ற தீரனின் முகம் இறுகி இருந்தது.
“சென்னையில இருக்கிறதையாவது சொன்னாளா?”
“இல்லை”
“இப்போவாச்சு என்னை நம்புறியா?”
“இப்பவும் வரு மேல எனக்கு சந்தேகம் வரல அஷோக். அவ குரல் ரொம்பவே டல்லா இருந்துச்சு. வீட்ல எல்லாரும் வற்புறுத்துவாங்களா இருக்கும். என்கிட்ட சொல்ல பயந்துட்டு அமைதியா இருக்கா!”
“ம்ம், அப்படியும் இருக்கலாம்” என அஷோக் கூறவும், அவன் அலைபேசி உறும எடுத்து பார்த்தவன், “கால் ஃப்ரம் இந்தியா, கனகராஜ் தான் கூப்பிடுறான்” என்றதுமே அக்னியின் முகம் விகாரமாய் மாறியது.
“எடுத்து பேசு!” என்ற அக்னி ஸ்பீக்கர் வழியாக கனகராஜின் குரலை கேட்டபடி சுழல் நாற்காலியில் தலைசாய்த்து அமர்ந்திருந்தான்.
“அஷோக் ஜி, அக்னி சாருக்கு கால் பண்ணினேன், ரீச் ஆகல” என்றார் பணிவாக.
“வொர்க் விஷயமா வெளியூர்ல இருக்கோம், சொல்லுங்க!”
“சார் கிட்ட பேச முடியுமா?” அக்னி, ‘முடியாது’ என கண்ணசைக்கவும்,
“இல்லை கனகராஜ், என்கிட்ட சொல்லுங்க. நான் கன்வே பண்ணிடுறேன்” என்றான் அஷோக்.
“பையனுக்கு வர்ற வெள்ளிக்கிழமை கல்யாணம் வச்சிருக்கேன், பொண்ணு கூட உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணுதான், மேகவர்ஷினி. நாளைக்கு ஈவினிங் என் பையன் ரிதுராஜ்க்கும் மேகாவிற்கும்...” அவர் சொல்லி முடிக்கவில்லை, அஷோக்கின் அலைபேசி தரையில் விழுந்து நொறுங்கி இருந்தது.
மேகாவின் பெயரோடு இன்னொரு ஆடவனின் பெயரையும் சொல்லும் பொழுதே அவன் உள்ளம் கொதிக்க, அலைபேசியை விட்டு விளாசி இருந்தான்.
“இப்போ என்ன சொல்ற அக்னி?” என பற்களை கடித்தபடி அஷோக் கேட்க, “ஷி வில் பீ வெயிட்டிங் ஃபார் மீ!” ‘அவ எனக்காக காத்துகிட்டு இருப்பா’என்று நண்பன் முன்பு மேகாவை விட்டுக்கொடுக்காத தீரன், ‘என்னை ஏமாத்திராத வரு!’ என அந்த நொடி தொடங்கி மனதிற்குள் மந்திரம் போல சொல்ல ஆரம்பித்தான்.

மறுநாள் மண்டபத்தில் ரிதுராஜ் மேகாவின் கரம் பிடித்து மோதிரம் அணிவித்ததும் மனதளவில் தீரன் காயப்பட, மேகா அதை சிறு புன்னகையுடன் பார்த்து ரசித்ததும் மொத்தமாக மரித்துப் போனவனுக்குள் இருந்த மிருகம் விழித்துக் கொண்டது. கண்கள் பளபளக்க, இப்பொழுது இந்தநொடி வெறிபிடித்த மிருகம் போல பார்வையாலே மேகாவை திணறடித்துக் கொண்டிருந்தான்.

 
Last edited:

Author: Naemira
Article Title: மிருதன் 14.4
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top