logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 15.1

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
அவனுக்குள் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்கியது போல வலிக்க, அவர்கள் இருவரின் நெருக்கத்தையும் காணப் பிடிக்காது கண்களை மூடிக்கொண்டான் அக்னிதீரன்.
“எல்லாம் ஓகே தானே, வேற எதுவும் இல்லையே? ஏன் ஒரு மாதிரியா இருக்க? எதுவா இருந்தாலும் சொல்லு!” என்றான் ரிதுராஜ், பதற்றத்தில் இருந்த மேகாவின் கரங்களை பிடித்தபடி.
அதுவரை கண்மூடி இருந்துவிட்டு, அப்பொழுது பார்த்து விழி திறந்த தீரனின் கண்களில் இந்த காட்சிபட்டுவிட, எதையோ சொல்லி பற்களை நறநறத்த தீரனின் உள்ளங்கை, அவனது விரல் நகங்கள் அழுத்தியதில் ரத்தம் கசிய ஆரம்பிக்க, இருந்தும் தன் கைவிரல்களை இன்னும் அழுத்தமாக மடக்கியவன் வலிக்க வலிக்க இறுக்கமாக இறுக்கி பிடித்தபடி நின்றிருந்தான்.
“எல்லாம் ஓகே தான், நான் நல்லா இருக்கேன்” என்ற மேகாவின் பார்வை மீண்டும் தீரனின் விழிகளிடம் சரணடைந்தது. மன்னிப்பை வேண்டி யாசித்தது. தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியது.
‘தீ தெறிக்கும் கண்கள், கனலைக் கக்கும் விழிகள், உக்கிரப் பார்வை, எரிக்கும் கண்கள்’ என இப்படி ஏகப்பட்ட வரிகளை கதை புத்தகங்களில் படித்து சிலிர்த்திருந்த மேகா, இன்றுதான் அதை நேரில் கண்டாள். பலமுறை தீரனின் தகிக்கும் விழிகளை கண்ட மேகாவுக்கு இன்று அவன் பார்வையில் தெரிந்த உக்கிரம் மிகவும் புதிது.
அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள் மேகா. நொடிகள் நகர நகர தீரனின் பார்வையின் வீரியம் அதிகமாக, வெகுநேரமாக அவன் பார்வை நிலைகுற்றியது போல ஒரே இடத்தில் பதிந்திருப்பதை கண்டவள், அவனது பார்வை இருக்கும் திசையை கவனித்தாள்.
ரிதுராஜின் கரங்களுடன் அவளது கரம் பிணைக்கப்பட்டிருந்தது. சட்டென்று உடலில் மின்சாரம் தாக்கியது போல ஓர் உணர்வு. உடனே தன் கரத்தை ரிதுராஜிடம் இருந்து உருவிக் கொண்டவள், அவனிடம் இருந்து சிறு இடைவெளி விட்டு நின்றாள்.
‘கோபம் குறைந்து விட்டதா?’ மெல்ல தீரனைப் பார்த்தாள். அதே பொல்லாத பார்வையை பார்த்தபடி நின்றிருந்தான். அவனது பார்வையின் உக்கிரம் இப்பொழுதும் தன்னை சுடுவது போல உணர்ந்தாள்.
“கைய புடிச்சதுக்கே இவ்வளவு நடுங்குற? இன்னும் எவ்வளோ இருக்கே!” நேரம் காலம் புரியாமல் மேகாவின் காதில் சரசம் பேசினான் ரிதுராஜ். ஏனோ மேகாவால் அவனது பேச்சை ரசிக்க முடியவில்லை. மீண்டும் அக்னியை பார்த்தாள். பார்வையாலே ரிதுராஜை கூறுபோட்டு கொண்டிருந்தான் அந்த கடோத்கஜன். மேகாவிற்கு தூக்கி வாரிப்போட்டது.
“என்ன பராக்கு பார்த்துட்டு இருக்க, மோதிரத்தை மாப்பிள்ளைக்கு போடுடி!” அதட்டினார் ராதிகா.
“ஹான்!” என்றபடி மோதிரத்தை வாங்கியவளின் பார்வை அனிச்சையாக தீரன் பக்கம் திரும்பியது, பார்வையாலே மறுத்தான். இயலாமையுடன் அவனைப் பார்த்தவள், தாய் மற்றும் இஷிதா வற்புறுத்த பட்டும்படாமல் மோதிரத்தை ரிதுராஜுக்கு அணிவிக்க, தீரனின் கண்கள் தானாக மூடிக்கொள்ள, அவன் கை முஷ்டிகள் இறுகி நரம்புகள் புடைத்தெழுந்தது.
பல வருடத்திற்கு முன்பு கிடைத்த அதே ஏமாற்றமும் துரோகமும் மீண்டும் அவன் வாழ்க்கையில் எட்டிப்பார்த்து தீரனை நகைத்தது. ‘தீரா, நீ ஏமாந்துவிட்டாய்!’ உலகமே இவனை நடுவில் நிறுத்தி சுற்றி நின்றுகொண்டு கேலி செய்வது போலவும், இவன் கத்துவது போலவும் ஒருவித பிரமை! உடல் பாறைபோல இறுகி விறைக்க, மூடிய விழிகளை திறந்தவன் தன் பின்னங்கழுத்தை தேய்த்தபடி நின்றிருந்தான்.
மேகா, ரிதுராஜிற்கு மோதிரத்தை அணிவித்த தருணம் தொடங்கி, இருவரும் கையோடு கை கோர்த்தபடி, கண்ணோடு கண் பார்த்தபடி என ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படக்காரர் தன் கேமிராவில் பதித்துக் கொண்டார். தீரனோ அந்தக் காட்சிகளை தன் தணல் விழியால் படம் எடுத்து, தன் நெஞ்சுக்குள் ஆழமாய் பதியவைத்தான்.
“மேடம், சாரோட தோள் மேல சாஞ்சி ஒரு போஸ் குடுங்க!” என புகைப்படக்காரர் சொல்லும்பொழுதே அக்னியின் கழுத்து நரம்பு புடைத்து கொண்டு கிளம்ப, மேகாவிற்கு மூச்சு முட்டிக்கொண்டு வந்தது.
அவள் தயங்கியபடி நிற்பதை பார்த்து ரிதுராஜ் தான், “பாஸ், அதெல்லாம் பிரைவேட் வெட்டிங் ஷூட்ல பார்த்துக்கலாம். மேடம் ரொம்ப வெட்கப்படுறாங்க!” என்று மேகாவை பார்த்து கண்ணடித்து கிண்டலாக கூற, மேகாவோ கலவரம் சூழ்ந்த முகத்துடன் வலுக்கட்டாயமாக சிரித்து வைத்தாள்.
அவள் சிரிக்கிறாள், கன்னம் இரண்டிலும் குழி விழுந்தது. ‘ஓ! வருவுக்கு கன்னத்தில் குழி விழுமா!’ ஆச்சரிமாய் பார்த்தான். அவன் பார்க்க தன்னவளின் முதல் புன்னகை, குழந்தையின் சிரிப்பைப் போல அவ்வளவு அழகாய் இருந்தது. ஆனால், ‘அது உனக்காக சிந்திய சிரிப்பல்ல’ என்று அவனது மனம் அவனை கேலி செய்யும்பொழுது தீரனின் இதயம் பாறையாய் இறுகியது.
அக்னியால் தான் காணும் எதையுமே நம்ப முடியவில்லை. அவனைப் பொறுத்தவரை மேகா உலகமறியாத அப்பாவிப் பெண். பயந்த சுபாவம், மென்மையானவள், கள்ளமற்றவள் இன்னும் பல. ஆனால் அவளைக் குறித்து தன் மனதில் இருந்த பிம்பத்தை ஒரே வெட்கப்புன்னகையில் பொய்யாக்கி விட்டாளே!
எவனோ ஒருவன் அருகில் நிற்கிறாள். அவன் கண்ணோடு கண் பார்க்கிறாள். அவன் அவளது கரம் பிடிக்கிறான். இவள் அசைவின்றி நிற்கிறாள். அவன் ஏதோ சொல்லி கண்ணடித்து சிரிக்கிறான், இவளும் இவனுடன் இழைந்து சிரிக்கிறாள். முகத்தை சுளித்தான். ‘இன்னும் என்னவெல்லாம் நான் பார்க்க வேண்டும்?’ அவன் தாடை இறுகியது.
உச்சக்கட்ட கோபத்தில் நின்ற தீரன் நச்சுக்குழலை ஊதிக்கொண்டே உணர்ச்சி துடைத்த முகத்துடன் மேடையை வெறித்துக் கொண்டிருந்தான். உறவினர்கள் நண்பர்கள் என ஒவ்வொருவராக மேடை ஏறி வந்து ரிதுராஜையும் மேகாவையும் வாழ்த்தி சேர்ந்து புகைப்படம் எடுக்க, புகை ஊதியபடி தன்னையே வெறித்துக் கொண்டிருந்தவனை கண்ட மேகாவிற்குள் ஒருவித திடுக்கிடல்.
அவன் புகை பிடிக்கும் தோரணையே அவளுக்குள் கிலியை உண்டாக்க மேகாவால் அந்த தருணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியவில்லை. அவன் கையில் இருந்த நச்சுக்குழல் காலியாகிவிட்டது. அதை கீழே போட்டு தன் பூட்ஸ் காலால் நசுக்கியவன், அவள் பார்க்க மற்றொன்றை எடுத்து பற்றவைத்தான். ‘இன்னொன்றா!’ தீரன் புகையை இழுத்து வெளியிட வெளியிட, மேகா கதிகலங்கினாள்.
தீரனை அங்கு சற்றும் எதிர்பார்த்திராத இஷிதாவும், எந்தவித பிரச்சனையுமின்றி எப்படி ரித்து, மேகாவின் திருமணத்தை நடத்துவது என குழம்பி தவித்து கொண்டிருக்க, இதில் மித்ரன் வேறு அவளை கொலைவெறியோடு பார்க்க, உள்ளுக்குள் உதறினாலும் அதை மறைத்து அவனை பதிலுக்கு முறைத்தபடி நின்றிருந்தாள்.
“தீரன் சார், அஷோக் ஜி, நீங்க வந்ததுல அவ்வளவு சந்தோஷம். ஜஸ்ட் ஃபோன்ல சொல்லி நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை” என்ற கனகராஜ் குழைந்து நெளிந்து தீரனின் காலில் விழாத குறையாக அவர்களை பார்த்துப் பார்த்து கவனித்தார். கனகராஜுக்கு தீரனின் வருகை ஒருவித இன்ப அதிர்ச்சி தான்.
கனகராஜ் ஒரு தகவலாகத் தான் ரிதுராஜின் திருமண விடயத்தை பகிர்ந்தார். அவர்கள் வருவார்கள் என அவர் கனவிலும் நினைக்கவில்லை. ‘தன்மீது அவர்களுக்கு அவ்வளவு மதிப்பா!’ என எண்ணி மகிழ்ந்த கனகராஜ் அவர்கள் வந்த காரணம் அறியாமல் சிவப்பு கம்பளம் விரித்து அவர்களை வரவேற்றார்.
மித்ரன் மெலிதாய் புன்னகைக்க, தீரன் எதுவும் பேசவில்லை.
“உங்களுக்கு எல்லாம் வசதியா இருக்கா?” வந்தத்தில் இருந்து ஒரு பத்து தடவையாவது கேட்டிருப்பார்.
“எல்லாம் ஓகே மிஸ்டர் கனகராஜ்” தீரன் சார்பாக, அஷோக் பதில் கூறினான்.

“பிரைட் அண்ட் க்ரூம் கூட சாப்பிட போற மாதிரிதான் இருக்கு, வாங்க சார், நாமளும் சாப்பிடலாம், சாப்பிட்டு முடிச்சுட்டு நான் என் பையனுக்கு உங்களை அறிமுகப்படுத்துறேன்” என்றவர் அவர்களை டைனிங் அறைக்கு அழைத்துச் சென்றார்.

 
Last edited:

Author: Naemira
Article Title: மிருதன் 15.1
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top