logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 17.1

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
இருள் சூழ்ந்த வானத்தில் ஆங்காங்கே மிளிரும் நட்சத்திரங்களை வெறித்தபடி நின்றிருந்த கோபாலகிருஷ்ணனிடம், “அந்த வேலன் பேசினதையே நினைச்சிட்டு இருக்காதே கோபி, அவன் பேசியதை மறந்திருடா!” என்று அவருக்கு ஆறுதல் அளித்தார் அவரது நண்பன் நிலவன்.
“கடன் குடுத்திருந்தா என்ன வேணும்னாலும் பேசுவானா? நான் என்ன தூக்கிட்டா ஓடப்போறேன், அசிங்கமா பேசுறான். எவன் பண்ணின தப்புக்கோ நான் அனுபவிச்சிட்டு இருக்கேன்” பணத்தை இழந்த பரிதவிப்பு மற்றும் அவமானத்தின் வலியால் ஆவேசத்தில் பற்களை கடித்த கோபால கிருஷ்ணனுக்கு அவ்வளவு கோபம் வந்தது.
“கொஞ்சம் பொறுமையா இரு கோபி!”
“எப்படி நிலவா? பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன். நெக்ஸ்ட் மந்த் செட்டில் பண்றேன்னு சொல்றேன். அதுக்குள்ள அசிங்கமா பேசுறான். செய்யாத தப்புக்கு எவ்வளவு பெரிய தண்டனை அனுபவிக்கிறேன். ஒரு பேங்க்ல மேனேஜரா இருந்துட்டு எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கேன். சம்பாதிக்கணும் என்கிற வெறியில இப்படி நஷ்டப்பட்டு நிக்கிறேனே! என் பணத்தையும் இழந்து, அந்த சிவகுமார் பண்ணின தப்புக்கு கண்டவன்கிட்ட கையையும் நீட்டிட்டு, இப்போ அந்த வேலன்கிட்ட பேச்சும் கேட்டுட்டு இருக்கேன்!” ஆதங்கத்தில் அவர் முகம் கன்றிச் சிவந்தது.
“சிநேகிதன்னு நினைச்சேன், இப்படி ஒரு துரோகத்தை செய்வான்னு நான் நினைக்கவே இல்லை கோபி. என்னாலதான் உன் பணமெல்லாம் போய் நீயும் இக்கட்டான சூழ்நிலையில மாட்டிக்கிட்ட, என்னை மன்னிச்சிருடா!” என நிலவன் கை கூப்பி கெஞ்சினார்.
அவரது கரத்தை பிடித்து கீழே இறக்கிய கோபாலகிருஷ்ணன், “என்னடா நீ! அவன் ஏமாத்தினத்துக்கு, நீ என்னடா செய்வ? அவன் உன்னையும் தான ஏமாத்திருக்கான். நான் பணத்தை இழந்தேன், நீ உன் உழைப்பை இழந்த!” என்றார் விரக்தியாக.
“திடீர்ன்னு மேகாவிற்கு கல்யாண ஏற்பாடு பண்ணிருக்க, மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும் ரொம்ப பெரிய இடமா தெரியுதே, டிமான்ட் ஏதும் பண்ணினாங்களா? பணத்துக்கு என்னடா பண்ற?” என வினவிய நிலவனின், குரலில் இருந்த அக்கறையை உள்வாங்கிக் கொண்ட கோபாலகிருஷ்ணன்,
“பெரிய இடம்தான், டிமான்ட் எதுவும் அவங்க சைட்ல பண்ணல. அதுக்காக நாமளும் அப்படியே விடமுடியாதுல்ல! நகை, சீரு, சாப்பாடு, மண்டபம்னு எல்லாம் சேர்த்து ஒரு எஸ்டிமேஷன் போட்டேன். ஒரு அமவுண்ட் வந்திருக்கு. மேகாவிற்குன்னு முன்னாடியே ஒரு எல்ஐசி போட்ருக்கேன்னு உன்கிட்ட சொல்லிருந்தேன்ல, அது போன மாசம்தான் முடிஞ்சி பணம் கைக்கு வந்துச்சு.
அந்த பணத்தையும் சேர்த்து, பேங்க்லயும் லோன் அப்ளை பண்ணி, அந்த வேலனுக்கு மொத்த பணத்தையும் இந்த மாசம் செட்டில் பண்ணி, அவனை ஒழிச்சு விடணும்னு நினைச்சிருந்தேன்.
அதுக்குள்ள நான் எதிர்பாராத விதமா மேகா கல்யாணம் கூடி வந்துருச்சு. தெரிஞ்ச குடும்பம்தான். நாங்க டெல்லில இருக்கும் பொழுது அவங்களை தெரியும். ராதிகாவுக்கு ரொம்ப புடிச்சிருக்கு, மேகாவும் சந்தோஷமா இருக்கா! அதான் எப்படியாவது மேகா கல்யாணத்தை எந்த தடையும் இல்லாம முடிச்சிட்டு, வேலன்கிட்ட டைம் கேட்கலாம்னு இருந்தேன். இப்போ இந்த வேலன் இப்படி பண்றான்” என்றார் கோபாலகிருஷ்ணன்.
“சரி வேலன்கிட்ட மறுபடியும் பேசிப் பார்ப்போம். நீ டென்ஷன் ஆகி உன் பீபிய ஏத்திக்காதே!”
“ஒரு வாரம் தான்டா, மேகா கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிருச்சுன்னா, அதுவே எனக்கு ஒரு பெரிய நிம்மதி. பேங்க்ல லோன் போட்டோ, இல்லை வீட்டை அடமானம் வச்சோ, எப்படியோ அடுத்த மாசத்துக்குள்ள அந்த ஆள் குடுத்த கடனை குடுத்திருவேன். மேகா கல்யாணம் வரைக்கும் அந்த ஆள் அமைதியா இருக்கணும்.
ராதிகாவுக்கு வேற இது எதுவுமே தெரியாது. மேகா கல்யாணம் முடிஞ்சதும், எல்லாத்தையும் சொல்லணும். அவ எப்படி எடுத்துக்குவான்னு தெரியல. கல்யாணமாகி இதுவரை எதையுமே மறைச்சது இல்லை, ரொம்ப உறுத்தலா இருக்கு. இது எல்லாத்துக்கும் மேல அந்த சிவகுமாரை எப்படியாவது கண்டுபுடிக்கணும்டா! அத்தனையும் நானும் என் மனைவியும் உழைச்சு சம்பாதிச்சது” ஓங்கி இறங்கிய கோபாலகிருஷ்ணனின் குரல் தழுதழுத்தது.
“எல்லா இடமும் கேட்டு பார்த்துட்டேன் கோபி, அவன் எந்த நாட்டுல இருக்கான்னே தெரியல” என்றார் நிலவன்.
“போலீஸும் எந்த ஆக்ஷனும் எடுக்க மாட்டேங்கிறாங்க. நாளைக்கு ஸ்டேஷன் போய் அந்த இன்ஸ்பெக்டரை பார்த்து கைல ஏதாவது குடுக்கணும், அவங்களுக்கு போடுறதை போட்டாதான் வேலை பாக்குறானுங்க. அந்த இன்ஸ்பெக்டருக்கு மட்டும் கணக்கில்லாம கொடுத்திருக்கேன்டா!” என்றவர் தோள் மீது கை வைத்த நிலவன்,
“சரி கவலைப்படாத! எல்லாத்தையுமே சரி பண்ணிரலாம். டைம் ஆச்சு, நான் கிளம்புறேன். நீ நாளைக்கு ஸ்டேஷன் போகும் பொழுது எனக்கும் ஒரு வார்த்தை சொல்லு. நான் நேரா ஸ்டேஷன் வந்திர்றேன், நீ தனியா போகாதே!” என்றார் நிலவன்.
நிலவன் கூறியதற்கு சரி என்பதாய் தலையசைத்த கோபாலகிருஷ்ணன், அவரை வழியனுப்ப மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

ரிசார்ட்டில் தனது அறையில் உள்ள ரெஸ்ட்ரூமில் இருந்து பூத்துவாலையால் தன் முகத்தை துடைத்தபடி வெளியே வந்த ரிதுராஜ், கதவு தட்டும் சத்தம் கேட்டு மணியை பார்த்தவன், ‘இந்த நேரத்துல யாரா இருக்கும்?’ என்கின்ற சிந்தனையுடன் கதவை திறக்க, வாசலில் ஒரு பக்க கன்னம் வீங்கிய நிலையில் நின்ற தந்தையை கண்டு, அதிர்ந்த ரிதுராஜ், “என்னாச்சுப்பா?” என பதற்றத்துடன் கேட்டான்.
ரிதுராஜை மேலும் கீழும் பார்த்து பயங்கரமாய் முறைத்த கனகராஜ், “ஹாங், கீழே விழுந்துட்டேன்!” என்றபடி அறைக்குள் நுழைந்தவர், தன்னை கேள்வியோடு பார்த்துக் கொண்டிருந்த தன் மகனிடம்,
“ஏர்லி மார்னிங் அஞ்சு மணிக்கு டெல்லி பிளைட், ரிசார்ட் கார் நாலு மணிக்கெல்லாம் உன்னை பிக்கப் பண்ணிக்கும். ஹாஸ்பிடல் அக்கவுண்ட்ஸ்ல கொஞ்சம் ப்ராப்ளம், நீ அங்கே இருக்கணும். உன் திங்ஸ் எல்லாத்தையும் பேக் பண்ணிரு!” என ஒரு தகவலாக கூறியவர், அவன் பதிலை எதிர்பாராது விறுவிறுவென வாசலை நோக்கி நடக்க,
“வாட்? நாளைக்கு டெல்லி போகணுமா?” அதிர்ச்சியுடன் கேட்டான்.
“உன் காதுல சரியாத்தான் விழுந்திருக்கு” என்றவர் வேகமாக அறையில் இருந்து வெளியேற ஆயத்தமாகவும்,
“ஆனா அப்பா இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் இருக்கு” என ரிதுராஜ் தயக்கத்துடன் கூறவும், நின்று கண்களை மூடித் திறந்தவர், அவனது முகத்தில் இருந்த அதிருப்தியை உள்வாங்கிக் கொண்டார்.
“நாளைக்கா கல்யாணம், ம்ம்? அதான் கல்யாணத்துக்கு இன்னும் ஏழு நாள் இருக்கே, அப்புறம் என்ன? அதுவரைக்கும் இங்கேயே வெட்டியா இருந்து டைம் வேஸ்ட் பண்ணுவியா, ம்ம்? ஹாஸ்பிடல் அக்கவுண்ட்ஸ்ல பிரச்சனை இருக்குன்னு சொல்றேன். அதை பத்தி கேட்காம, கல்யாணமாம் கல்யாணம். பொறுமையா இருந்து சால்வ் பண்ணிட்டு வந்தா போதும்” என முடிவாய் கூறியவர் ரிதுராஜை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினார்.

ரிதுராஜிற்கோ, தந்தை கூறியதைக் கேட்டு கவலை இருந்தாலும், அதற்குமேல் அவனால் அவரை எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாமல் போக, மறுநாள் டெல்லி செல்ல ஆயத்தமானான்.

 
Last edited:

Author: Naemira
Article Title: மிருதன் 17.1
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top