logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 19.1

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
"காலையிலே எங்க போயிருந்தீங்க?” என்ற மனைவியிடம்,
“முக்கியமான வேலைடி! ஃபிரண்டை பார்த்துட்டு வரேன்” என்றவர்,
“எல்லாரும் ரெடிதானே கேப்க்கு சொல்லிட்டேன்” என்றார். அப்பொழுது தன் காரில் ஏறவிருந்த தீரன் சிறு யோசனையுடன் கோபாலகிருஷ்ணனின் அருகில் வந்து, “ஹலோ அங்கிள், எல்லாரும் வெளியில கிளம்புறீங்க போல?” கண்களில் இருந்த சன் கிளாஸை கழற்றியபடி வினவினான் தீரன்.
“ஆமாம்பா, கல்யாண ஷாப்பிங் போறோம், கேப் சொல்லிருக்கேன். இன்னும் வரல” என்றார் கோபாலகிருஷ்ணன் மென்னகையுடன்.
“உங்களுக்கு பிரச்சனை இல்லைன்னா, நான் வேணும்னா உங்களை டிராப் பண்ணவா?”
“இல்லைப்பா, உங்களுக்கு எதுக்கு சிரமம்? நீங்களும் வெளிய கிளம்புறீங்க, உங்க வேலை டிஸ்டர்ப் ஆகிடப் போகுது.”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை அங்கிள். சும்மா சென்னை சிட்டியை சுத்திப் பார்க்கலாம்னு தான் ரெண்டு பேரும் கிளம்பினோம். தனியா போறதுக்கு உங்ககூட வரப்போறோம் அவ்வளவு தான். எங்களுக்கும் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணணும். ஸோ எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லை. வாங்க, நாங்களும் இன்னைக்கு உங்ககூட டைம் ஸ்பென்ட் பண்றோம். புக்கிங் கேன்சல் பண்ணிருங்க!” என்று அக்னி கூற முதலில் தயங்கியவர், பின்பு அக்னியின் முகத்தை பார்த்து, சரி என சம்மதம் தெரிவிக்க, இதை கேட்ட மேகா மற்றும் இஷிதாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
ஆனால் விக்ரமோ துள்ளிக் குதிக்காத குறையாக, “செமப்பா!” என்றவன், “ப்ரோ உங்க கார் செமையா இருக்கு” கண்களில் ஆர்வம் மின்னக் கூறினான்.
“விக்ரம், பேசினது போதும் வண்டில ஏறு!” கோபால கிருஷ்ணனின் குரல் மகனை அதட்டியது.
“இட்ஸ் ஓகே அங்கிள், சின்னப்பையன் தானே!” என்ற அக்னி அவன் ஆர்வத்தை பார்த்து விக்ரமிடம், “நீ டிரைவ் பண்றியா?” என சாவியை நீட்ட, அதை அவன் வாங்க முனைந்த நேரம், “அவனுக்கு டிரைவிங் தெரியாது அக்னி!” என்றார் கோபாலகிருஷ்ணன்.
“அதெல்லாம் தெரியும். அப்பா ஓட்ட விடமாட்டாரு!” அவன் முனங்கலாகக் கூற,
“அதெல்லாம் நம்ம சாம்பியன் ஓட்டுவான் அங்கிள். நான் பக்கத்துல தானே இருப்பேன் பார்த்துகிறேன்” தீரன் சாவியை நீட்டியது தான் தாமதம் விக்ரமின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.
ஏற்கனவே தந்தை சொல்லுக்கு மறுப்பும் தெரிவிக்க முடியாமல், அவனுடன் செல்ல விருப்பமும் இல்லாமல், இஷிதாவுடன் எதையோ முணுமுணுத்தபடி நின்ற மேகாவுக்கு இந்த காட்சி கோபத்தை கொடுத்தது.
“டேய் விக்கி, நோ, சாவிய திருப்பி குடு!” சந்தோஷமாக சாவியை வாங்கி காரின் கதவைத் திறந்து கொண்டிருந்த தம்பியிடம் ரகசிய குரலில் செய்கை செய்தாள்.
“என்ன அக்கா?” அவனும் அதே குரலில் வினவினான்.
‘என்கூட வந்து உக்காரு!’ பற்களை கடித்தபடி செய்கை செய்தாள்.
‘மாட்டேன் போ!’ காருக்குள் எற போனவனின் பின் சட்டையை பிடித்து இழுத்தவள், “சாவிய குடுத்துட்டு, என் பக்கத்துல வந்து உக்காரு!” மெதுவாக அதட்டினாள்.
மேகாவை மேலும் கீழும் பார்த்த விக்ரம், “முடியாது போ!” என கத்திவிட, காரை விட்டு வெளியே இறங்கி வந்து எட்டிப்பார்த்த தீரன், “வண்டிய எடு விக்கி!” என்று கூறி மேகாவை முறைத்துப் பார்த்து, ‘என்ன?’ என்பதாய் தன் புருவம் உயர்த்தினான்.
அவன் பார்த்த பார்வையில் முதுகுத்தண்டு சில்லிட்டு போகத் திணறியவள், ‘ஒன்னும் இல்லை’ என தன் தலையை வேகமாக ஆட்டிவிட்டு, ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என கதவைத் திறந்து காருக்குள் ஏறி அமர்ந்துகொள்ள, அதன் பிறகு காருக்குள் ஏறிய தீரன் கண்ணாடியோடு மேகாவை ஒரு கணம் உறுத்து விழித்துவிட்டு இறுக்கமாக அமர்ந்திருந்தான்.
“ப்ரோ இதுதான் சென்னையிலே...” என ஆரம்பித்து விக்ரம் உற்சாகமாக, காணும் இடங்களையெல்லாம் விவரித்து பேசிய எதுவுமே அக்னியின் செவியில் சென்றடையவே இல்லை. விழிகள் சாலையை வெறித்தபடி இருக்க, எண்ணம் முழுவதும் கண்களை உருட்டி, ‘ஒன்னும் இல்லை’ என தலையை அசைத்த தன்னவளையே சுற்றிச் சுற்றி வட்டமிட்டது.
“உங்க அக்கா என்னடா சொன்னா?” விக்ரமின் பேச்சில் குறுக்கிட்டபடி வினவினான் அக்னி. சாலையை ஒரு கணம் பார்த்துவிட்டு அக்னியை ஏறிட்டவன்,
“அக்காவா?” சாலையில் தன் கவனம் பதித்தபடி கேட்டான்.
“ம்ம்” முகம் கடுகடுவென இருந்தது.
“அது உங்ககிட்ட உக்காரக் கூடாது, சாவிய குடுன்னு சொன்னா!” என தயங்கியபடி கூறினான். ஏனோ அக்னியிடம் அவனால் மறைத்து பேச முடியவில்லை.
“அப்படியா சொன்னா?” தீரனின் முகம் இன்னும் இறுகியது.
“ம்ம், அவளுக்கு உங்களை புடிக்கலைன்னு நினைக்கிறேன்” என மெதுவாக தீரனின் காதில் கூறியவன், “ஆனா எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும், யூ ஆர் மை ரோல்மாடல்!” குதூகலத்துடன் கூறி மகிழ்ச்சியாக புன்னகைத்தான்.
விக்ரமின் புன்னகை முன்பு அக்னியின் கோபம் தோற்றுவிட, தன் இறுக்கம் தளர்ந்து மெலிதாய் புன்னகைத்த தீரன், “அவ்வளவு புடிக்குமாடா?” எனக் கூறி அவன் சிகையை வாஞ்சையுடன் கலைத்துவிட, “ஆமா ப்ரோ!” கண்சிமிட்டி சிரித்தான்.
“ரோட்டை பார்த்து ஓட்டுடா!” என்ற அக்னி, விக்ரம் நன்றாக ஓட்டும்பொழுது பாராட்டி, ஆங்காங்கே தவறு செய்யும்பொழுது சுட்டிக்காட்டி, தட்டிக் கொடுத்துக் கொண்டே வந்தான்.
சில மணிநேர பயணத்திற்கு பிறகு வேளச்சேரியில் உள்ள பிரபலமான கடைக்கு அவர்கள் வந்தடைய, அனைவரையும் கடையின் வாசல் முன்பு இறக்கிவிட்டு, கார் பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு தங்க நகைகள் இருக்கும் ப்ளோருக்குள் அஷோக் மற்றும் விக்ரமுடன் தீரன் நுழைந்தான்.

அங்கே கோபாலகிருஷ்ணன் கடுங்கோபத்தில் நின்றிருக்க, மேகா தன் கரங்களை பிசைந்து கொண்டு நிற்க, ராதிகா தன் கணவரை சமாதானம் செய்து கொண்டிருந்தார்.
“யாரை கேட்டு டெல்லிக்கு போன?” இஷிதா தமையனிடம் அலைபேசியில் தாறுமாறாய் கத்தினாள்.
“அப்பா சொன்னாருடி!”
“ஷட்டப், அப்பா, அப்பா! அவரு சொன்னா நீ கிளம்பி வருவியா? நான் உன்கிட்ட என்ன சொன்னேன், இனிமே அப்பா எல்லாம் ரெண்டாவது தான், மேகா தான் உனக்கெல்லாம்னு சொன்னேன் தானே? இன்னைக்கு தாலி, புடவை எல்லாம் வாங்குறோம்டா! நீ இருக்கணுமா வேண்டாமா? மேகாவிற்கும் ஆசை இருக்கும்ல. அந்த ஆளும் வரல, அவங்களும் வரல. என்னடா எல்லாரும் நினைச்சிட்டு இருக்கீங்க? இங்க மேகா அப்பா செம டென்க்ஷன்ல இருக்காங்க!”
“ஸாரிடி!”
“மரியாதையா அடுத்த பிளைட் புடிச்சு சென்னைக்கு வர, நீ வந்ததுக்கு அப்புறம்தான் தாலியும், முகூர்த்தப்புடவையும் எடுப்போம். மவனே நீ மட்டும் வரல, உன் கல்யாணத்தை பத்தி நான் யோசிக்க வேண்டியிருக்கும்” அலைபேசியில் ரிதுராஜை ஒருவழிபடுத்திக் கொண்டிருந்தாள் இஷிதா.
“தாலியும், முகூர்த்தப்புடவையும் வாங்க பெரியவர்களும் வரல, மாப்பிள்ளையும் இல்லைன்னா எப்படி? கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. சொல்லாம அவர் இஷ்டத்துக்கு டெல்லிக்கு போயிட்டாரு, இது சரியாபடல ராதிகா.”
“அவங்கதான் சம்பந்திமாக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்றாங்களே! அதான், மாப்பிள்ளை வீட்டு சார்பா இஷிதா இருக்காள்ல, முறைக்கு அவதானே நாத்தனார்” சீறும் கணவனை ஏதேதோ சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தார் ராதிகா.
“மாப்பிள்ளை ஊருக்கு போறதை பத்தி உன்கிட்ட சொன்னாரா, இல்லையா?” மனைவியை விடுத்து மகளிடம் சாடினார்.
“மார்னிங் தான் சொன்னாருப்பா! முக்கியமான வேலை இருக்கு சீக்கிரமே வந்திருவேன்னு சொன்னாரு” என்றாள் மேகா.
“ஓ, அதை நான் கேட்டாதான் சொல்லுவியோ?” சட்டென்று கோபாலகிருஷ்ணன் கத்திவிட, மேகாவின் கண்களில் கண்ணீர் திரையிட்டது. அதை ஏனோ அக்னியால் சகித்துக்கொள்ள முடியவில்லை, கோபாலகிருஷ்ணன் மீது அவ்வளவு கோபம் வந்தது.
கோபாலகிருஷ்ணன் மேகாவின் தந்தை, அவருக்கு மகளிடம் இல்லாத உரிமையா? இருந்தும் காதல் கொண்ட அவனது மனம் தன்னவளை யாரும் கடிந்து கொள்வதை சிறிதும் விரும்பவில்லை.
“ரிலாக்ஸ் அங்கிள், இட் ஹப்பன்ஸ். மாப்பிள்ளை வீட்டுகாரங்களோட நிலைமையையும் நாம புரிஞ்சிக்கணும்ல! நான் மிஸ்டர் கனகராஜ் கிட்ட பேசுறேன். ஷாப்பிங் கண்டினியூ பண்ணுங்க!” இடைபுகுந்து அவரது கோபத்திற்கு மடையிட்டான்.
“ஓகேபா!” மாயாஜாலம் அக்னியின் குரலிலா, இல்லை அவன் விழிகளிலா என தெரியவில்லை. ஆனால் கோபால கிருஷ்ணனின் குரலில் திடீர்மாற்றம். கடுமை எங்கோ சென்றிருக்க, எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல் அவன் சொன்னதிற்கு தலையசைத்தார்.
“போ ராதிகா, போய் தாலி பாரு!” என அவர் மனைவியிடம் சொல்லிய மறுநிமிடம்,
“வெய்ட் பண்ணுங்க அங்கிள், அண்ணன் பேசினான். வேலைய முடிச்சிட்டானாம். நெக்ஸ்ட் பிளைட்ல வருவானாம். ஸோ தாலியும், முகூர்த்தப்புடவையும் மட்டும் அண்ணன் வந்ததுக்கு அப்புறம் பார்க்கணுமாம். இப்போ மத்ததை வாங்கிக்க சொன்னான்” அனைவரின் முன்பு தமையனை விட்டுக்கொடுக்காமல், அவனே பேசியது போல இஷிதா அவனது வருகையை உறுதிப்படுத்தினாள்.
யாரிடமோ அலைபேசியில் பேசிவிட்டு அங்கே வந்த அஷோக், ‘என்னடா’ என்பதை போல அக்னியை பார்க்க, அவனோ கண்களால் அமைதியாக இருக்கும்படி கண்ணசைக்க, எரிச்சலுடன் நின்றான் அஷோக்.
“அந்த ஆரத்தை எடுங்க, இந்த நெக்லஸை எடுங்க!” என பெண்கள் மூவரும் ஆர்வமாக நகைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க, மேகாவோ தந்தை கடிந்து கொண்டதை எண்ணி கண்களை துடைத்தபடி நின்றிருந்தாள்.
“என்னடா, அப்பா மேல கோபமா?” மனம் கேளாமல் மகளை ஓரமாக அழைத்து வினவினார்.
“இல்லப்பா” அவள் மறுக்கும்பொழுதே கண்களில் இருந்து கண்ணீர் வழிய, “ஸாரி செல்லம், இதை முன்னாடியே என்கிட்ட சொல்லிருக்கணும்ல, நீ ஏன் சொல்லலை? அதான் அப்பாக்கு கோபம் வந்திருச்சு!” மகளின் கண்ணீரை துடைத்துவிட்டு, மகளை அணைத்துக் கொண்டார்.
“சொல்லக்கூடாதுன்னு இல்லை. நான் இதை பெருசா எடுத்துக்கல, சாரிபா!” கேவலுடன் அவரது அணைப்புக்குள் ஒடுங்கிக் கொண்டாள் மேகா.
இப்பொழுது அக்னியின் கண்களில் கோபம் மறைந்து ஒருவித பொறாமை எட்டிப் பார்த்தது. ‘தன்னவளை அணைக்கும் கரங்களாய் என் கரம் இருந்தால் எப்படி இருக்கும்?’ அணைத்துக்கொள்ள கரங்கள் பரபரத்தது.
‘அவள் தலைசாய்க்கும் தோளாய் என் தோள் இருந்திருக்கக் கூடாதா?’ தவிப்புடன் பார்த்தான். ‘என்னவள் என் நெஞ்சோடு ஒட்டி உறவாடினால், ஆஹா என்ன சுகம்!’ ஆசைகொண்ட அவன் உள்ளம் தவிக்க, ஏக்கத்துடன் அவர்களை பார்த்திருந்தான் தீரன்.


 
Last edited:

Author: Naemira
Article Title: மிருதன் 19.1
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top