logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 19.3

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
காலையில் மேகாவை பார்த்து முறைத்துவிட்டு விறுவிறுவென தன் அறைக்குள் வந்த அக்னி, தன்னை மறந்து தான் தன் அறையில் இருந்து மேகாவை பார்க்க கீழே வந்தது மட்டுமின்றி, மேகாவின் அழகில் தன் சுயம் தொலைத்து, நேரம் போவதே தெரியாமல் ரசித்ததை எண்ணி தன்னையே கடிந்து கொண்டவன், தன் கேசத்தை அழுத்தமாக கோதிக் கொண்டான்.
ஆனாலும் தன்னை நிலைகொள்ள முடியாமல் தனக்குள்ளே தகித்தவன், மீண்டும் வந்து பால்கனியில் நின்றபொழுது அவன் கண்ட காட்சி அவன் கோபத்திற்கு தீனிபோட்டது. பதற்றத்தில் கைகால் நடுங்க நின்றவள் முகத்தில் வர்ணஜாலம் போல வெவ்வேறு உணர்வுகள் மாறி மாறி வந்தது.
‘முதலில் பதறுகிறாள். பின்பு மூச்சை நன்கு இழுத்து விடுகிறாள். ஏன்? ஓஹோ, நான் சென்றதற்காக நிம்மதிப் பெருமூச்சோ! அப்படியென்றால் என்கூட இருக்கிறது அவளுக்கு மூச்சு முட்டிக்கொண்டு வருகிறதோ?’ பற்களை கடித்தான் தீரன்.
பிறகு அவள் முகத்தில் சிந்தனை ரேகை ஓடுகிறது. ‘எதையோ சிந்திக்கிறாள்? அப்படி என்ன சிந்திக்கிறாள் திடீரென்று?’ தன் பார்வையை கூர்மையாக்கினான். முகத்தில் ஒருவித அதிர்ச்சி, மறுநொடியே கோபம்! ‘இந்த குழந்தை முகத்திற்கு இவ்வளவு கோபம் வருமா? அப்படியென்ன கோபம்?’ அவனுக்குள் சுவாரசியம் கூடியது.
உடனே ஒருவித நடுக்கம், ‘பதறுகிறாள் ஏன்?’ தன் பார்வையை கூர்மையாக்கினான். ‘எதையோ செய்யக்கூடாததை செய்தது போல, அவள் முகம் அருவெறுப்பில் அஷ்டகோணலாக மாறியது, ஆனால் ஏன்?’
தீரனுக்கு ஏதோ புரிவது போல் தோன்ற, அவனது தாடை இறுகியது. உடனே தன் கை, கழுத்து என தன் மேனியை தன் கைகளால் அவ்வளவு வேகமாக துடைக்கிறாள். அவளது செய்கையில் மிகவும் அவமானப்பட்டான். தன்னை இழிவுபடுத்துவதாய் எண்ணினான்.
‘ஏன் நான் தொடக்கூடாதோ? என் கரம் உன்மீது பட்டால் தீட்டோ? நீ என்ன பெரிய அழகியா? இல்லை, நான்தான் அருவெறுருக்கத்தக்கவனா!’ கண்களை மூடித் திறந்தவனுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது. ‘இன்னும் என்ன செய்கிறாள் என்று பார்ப்போம்!’ கண்களை விரித்துப் பார்த்தான்.
அவள் தங்கையும் தம்பியும் ஏதோ சொல்கிறார்கள். ஆனால் அதை காதிலே வாங்காமல் எதையோ தேடுகிறாள். குனிந்து டியூபை எடுக்கிறாள். தீரனுக்கு புரிந்துவிட்டது.
“எவ்வளவு தைரியம் இவளுக்கு? பூனை போல் இருக்கிறாள் என நினைத்தால், இவளுக்குள் இவ்வளவு அகங்காரமா?” ஆத்திரமிகுதியில் சுவற்றில் ஓங்கி தன் கையை குத்தியவனுக்கு ஏனோ மேகாவின் செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆக ஏற்கனவே பயங்கர கோபத்தில் இருந்த தீரனுக்கு, மேகா இப்பொழுது ஏதோ தீண்டத்தகாதவனிடம் இருந்து ஓடுவது போல, தீரனின் முகத்தை கூட பார்க்காது பதில் சொல்லிவிட்டு ஓடிச் சென்றது எரிச்சலை அதிகரிக்க, மனம் வேறு மீண்டும் காலை நடந்த நிகழ்வில் கோபம் கொள்ள, “இவள் என்னைப் பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிறாள்?” என்ற அக்னி அதே ஆத்திரத்துடன் மேகாவைத் தேடினான்.
ரெஸ்டாரண்டில் குளுமையான ஜிகர்தண்டாவை சுவைத்துக் கொண்டு ரிதுராஜிடம் பேசியபடி அமர்ந்திருந்த மேகா, அதுவரை இருந்த இறுக்கத்தை விடுத்து கொஞ்சம் இயல்பு நிலைக்கு மாறியிருந்தாள்.
அப்பொழுது பார்த்து ரிதுராஜின் அலைபேசிக்கு அழைப்பு வர, மேகாவிடம் பேசிவிட்டு வருவதாக கூறி சற்று தூரம் ரிதுராஜ் தள்ளிச் சென்றிருக்க, கண்ணில் சன் க்ளாஸும், வாயில் நச்சுக்குழலுமாக அவள் முன்பு வந்து அமர்ந்தான் தீரன்.
மேகா மிரண்டு பார்க்க, அவன் ஒரு கையால் கிளாஸை கழற்றி, நச்சுக்குழலை ஊதி தன் காலில் போட்டு மிதித்துவிட்டு, தலையை கோதியபடி அமர்ந்திருந்த தோரணையில் மேகாவுக்கு நா வறண்டு விட்டது.
சட்டென்று அவள் தன் இருக்கையில் இருந்து எழுந்துகொள்ள, ‘உக்காரு!’ மேகாவின் பதற்றத்தை உள்வாங்கியபடி உட்காரச் சொல்லி, தன் கரங்களை ஆட்டி செய்கை செய்தான். தீரனின் அதிகாரப்பார்வை அவளை உட்கார வைத்தது.
“ஆமா, நீ உன்னை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க? ஹாங்! அழகி, பேரழகி, தேவதை?” இகழ்ச்சியில் தீரனின் இதழ் வளைந்தது. அவனது ஏளனப் பார்வையில் அவள் மிகவும் காயப்பட்டாள். அவன் பார்வை அவளை ஆழத் துளைக்க, சிரிது நேரம் அவளை பார்த்தபடி இருந்தவன் தன் இரு கரங்களையும் கோர்த்து சற்று முன்னால் வந்து,
“நத்திங், யூ ஆர் ஜஸ்ட் நத்திங் மேகா! யாஹ், நான் உன்னை நேசிச்சேன். கல்யாணத்துக்கு ப்ரோபோஸ் பண்ணினேன். நீ என்னை ஏமாத்தின, நான் கோபப்பட்டேன். அதெல்லாம் முடிஞ்சிருச்சு! இப்போ நீ வேற வாழ்க்கைக்குள்ள போகப்போற! ஆமா அன்னைக்கு நான் உன்கிட்ட ரூடா நடந்துக்கிட்டேன் தான். ஆனா அதுக்கப்புறம் என் சைட்ல இருந்து உனக்கு ஏதாவது பிரச்சனை வந்துச்சா, ம்ம்?” என்றான் மர்ம புன்னகை புதைந்து கிடந்த ஏளனக்குரலில்.
அவளோ கண்களில் கண்ணீர் திரையிட அவனை ஏறிட்டு கூடப் பார்க்காமல் தலையை குனிந்தபடி இருக்க, அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக்கொண்டே மேசையில் அழுத்தத்துடன் வேகமாக தட்டியவன், “பதில் சொல்லு!” அதட்டினான்.
சட்டென நிமிர்ந்து பார்த்தவள், “நோ” என்று கூற, அவள் தலை அனிச்சையாக அசைந்தது.
“இங்கே பாரு, மேகா! உன் உணர்ச்சிகளை என்னால புரிஞ்சிக்க முடியுது. பட், நீ நினைக்கிற மாதிரி உன்மேல நான் ஆசைப்பட்டு, இருபத்திநாலு மணிநேரமும் உன் பின்னாடியே சுத்தி சுத்தி வர்ற அளவுக்கு, நீ ஒன்னும் தேவகன்னி கிடையாது. நீ ரொம்ப ரியாக்ட் பண்ற, ரிலாக்ஸ்சா இரு! எனக்கு புரியுது, உனக்கு என்னை மறக்கிறது கஷ்டம் தான். இருந்தாலும், நீ என்னை மறந்துட்டு உன் பியான்ஸே ரிதுராஜ் மேல ஃபோகஸ் பண்ணித்தான் ஆகணும்” என்றது எள்ளல் நிறைந்த அவனது குரல்.
‘அவன் மேல ஃபோகஸ் பண்ணிருவ?’ என சவால் விட்டது அவனது கபடம் நிறைந்த விழிகள். “நீ ரொம்ப ஓவரா அலட்டிக்கிற அளவுக்கு, நீ வொர்த் இல்லை. ஸோ என்னை நினைக்கிறதை விட்டுட்டு உன் பியான்ஸேவ பாரு!’ என்று கூறியவனை மேகா அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“நீங்க தப்பா நினைச்சு... நான், உங்களை அப்படி” அவனுக்கு தெளிவுபடுத்த விரைந்தவளுக்கு வார்த்தைகள் மட்டும் ஏனோ சிக்கல் விழுந்த நூல் போல தொண்டைக்குள் சிக்கிக்கொண்டு வெளிவர மறுத்தது.
“இட்ஸ் ஓகே மேகா, ரிலாக்ஸ்!”
“நீங்க என்னை தப்பா நினைக்கிறீங்க அக்னி! எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் உங்க மேல இல்லை” எப்படியோ சொல்லிவிட்டாள்.
“ஆஹாங்!” அவன் பார்வை அவளை மிகவும் அவமானப்படுத்தியது. கோபம், அவமானம், வலி, இயலாமை என முகத்தில் வெவ்வேறு உணர்ச்சிகள் மாறி மாறி வர, துடித்துப் போன மேகாவின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது.
‘இதை தான் எதிர்பார்த்தேன்? இன்று காலை நானும் இப்படித்தானே அவமானப்பட்டேன்! நான் தொட்டால் உனக்கு அருவெறுப்பாக இருக்கிறதோ! தீண்டத்தகாதவனிடம் இருந்து ஓடுவது போலவா ஓடுகிறாய்? வாங்கியதை நான்கு மடங்காவது திருப்பி கொடுக்காவிட்டால் நான் அக்னிதீரன் அல்லவே!
என்னை நினைக்க மாட்டாயோ? வலுக்கட்டாயமாக உனக்குள் நுழைந்து, ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் உன் உயிர், உன் ஆன்மா, உன் இதயம், அதன் துடிப்பு என அனைத்தையும் என் பெயரையே சொல்ல வைக்கிறேன் பார்!’ என மனத்திற்குள் நினைத்தவன்,
“கொஞ்சம் ஜில்லுனு ஜிகர்தண்டா குடி மேகா! தொண்டைக்கு இதமா இருக்கும்” என்றவன் ஜிகர்தண்டாவை அவளிடம் நீட்டிவிட்டு,
“ஓகே என்ஜாய் யுவர் ட்ரிங்க், அண்ட் அட்வான்ஸ் ஹாப்பி மேரிட் லைஃப்” என வாழ்த்தியவன் அவளது வெளிறிய முகம் கண்டு, திருப்தியான புன்னகையுடன் ரிதுராஜிடம் பேச்சுக் கொடுத்து கொண்டிருந்த அஷோக்கை பார்த்து கண்ணசைத்துவிட்டு வெளியேறினான்.
‘நான் எப்போ இவனை நினைச்சேன், இவனை மறக்க கஷ்டப்படுறதுக்கு?’ என அதிர்ந்து விழித்த மேகா, அவமான உணர்வில் கண்களை துடைத்தபடி அமர்ந்திருந்தாள்.
“சாரி மேகா, அஷோக் பேசிட்டு இருந்தாரு, அதான் வர லேட் ஆகிடுச்சு!” என்றபடி ரிதுராஜ் வந்து அமர, அவன் முன்பு இயல்பாய் இருப்பது போல காட்டிக்கொண்டாள்.
தன் எதிரே இருந்த குளிர்பானத்தை அனிச்சையாக பருக, அதில் இருந்து வந்த வித்தியாசமான வாசனையில் முகத்தை சுளித்த மேகா, ‘ஏன் ஒருமாதிரி ஸ்மெல் வருது?’ என்று எண்ணியவள், ‘நிறைய இருந்துச்சு எப்படி காலியாச்சு?’ என மீண்டும் சிந்திக்க, அதிர்ச்சியுடன் வாயை மூடிக்கொண்டு வாஷ்ரூமை நோக்கி ஓடினாள்.


 
Last edited:

Author: Naemira
Article Title: மிருதன் 19.3
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top