logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 8

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
மிருதன் 8

மருத்துவரை ஒரு வழிபடுத்திவிட்டு மேகாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவன், ‘நிற்காதே, நடக்காதே, பேசாதே, ஓய்வெடு!’ என வீட்டிற்கு வந்தும் அவளை படுத்தியெடுக்க, மேகாவுக்குத் தான் அவனை சமாளிப்பது பெரும் சவாலாக இருந்தது.

இஷிதாவை மேகாவுக்கு காவல் வைத்துவிட்டு அக்னி அலைபேசியில் யாரிடமோ பேசியபடி சென்றுவிட, அறையில் இஷிதாவும் மேகாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அந்நேரம் பார்த்து இஷிதாவின் அலைபேசி சத்தமிட, அவள் பேசிவிட்டு வருவதாக கூறி அலைபேசியை எடுத்துக்கொண்டே தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
கொஞ்சம் நேரம் அலைபேசியில் நேரம் கடத்தியவள், பின்பு தன் கையில் இருந்த அலைபேசியை பக்கத்தில் இருந்த டேபிளில் வைத்து விட்டு கண்மூடி படுத்திருந்த மேகாவுக்கு, எங்கேயோ வழி தெரியாத காட்டில் மாட்டிக்கொண்ட உணர்வு.

அப்பொழுது பார்த்து சாற்றியிருந்த கதவைத் திறந்துகொண்டு நுழைந்தான் தீரன். அவன் வரவும் எழுந்து உட்கார்ந்தவள் நிமிர்ந்து அவனை பார்க்க, அவளுடைய இருளடைந்த முகத்தை கவனித்தான்.

“என்னாச்சு வரு? ரொம்ப வலிக்குதா? உன்னை யாரு உட்கார்ந்து இருக்கச் சொன்னா, படுக்கத்தானே சொன்னேன்!” என்றபடி அவள் அருகில் வந்தான்.

அவளுக்குத் தான், ‘ஐயோ’ என்றானது.

“உன்கிட்ட தான் கேட்கறேன்?” குரலில் சற்று கடுமை தெரிந்தது. அவள் தலையை மட்டும் இல்லை என்பதாய் வலப்பக்கமும் இடப்பக்கமும் ஆட்டினாள்.

“நிஜமாவா? பட், உன் முகம் ரொம்ப வாடி போயிருக்கே?” கலக்கத்துடன் கேட்டான்.

“நோ, நல்லா இருக்கேன் சார்!”, ‘சார்’ என்ற வார்த்தை அவனை எட்டி நிறுத்தியது.

“ப்ச், கால் மீ தீரன், கார்லயே சொன்னேன் தானே? இனிமே தீரன்னு கூப்பிடு!” கண்டிப்புடன் கூறினான்.

அது மறுத்துப்பேச முடியாத குரல். ‘சொன்னதை செய்’ என்றது.

“ம்ம்” தலையசைத்தாள். “சரி, இப்போ சொல்லு ஏன் ஒருமாதிரி இருக்க வரு?” குரலில் சட்டென்று மென்மை படர்ந்தது.

“என்னாச்சு வரு? சொல்லு!” என்றான்.

‘உங்களை பார்த்தாலே மூச்சு முட்டுது’ மனதிற்குள் சொன்னவள், “நீங்க கொஞ்சம் வெளிய இருக்க முடியுமா?” என்று கேட்டாள்.

“ஏன்?” அவளை ஆழ்ந்து பார்த்தபடி கேட்டான்.

“ரெஸ்ட் ரூம் போகணும்”

“ரெஸ்ட் ரூம் தானே? போ, நான் இங்கேயே இருக்கேன்.

தலையில அடிபட்ருக்கு ஒருவேளை மயங்கி விழுந்துட்டேனா?” என்றான் அவளது கலவரப்பட்ட முகத்தை பார்த்து. ஆனால் அவளுக்கோ ஆத்திரமாய் வந்தது.


‘ஐயோ’ என வாய்விட்டே கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் கட்டுப்படுத்திக் கொண்டாள். அவள் உணர்வுகளை உள்ளுக்குள் அடக்க அடக்க, அது முகத்தில் பிரதிபலித்தது. அதன் விளைவு கோபத்தில் அவள் முகம் சூடாகிச் சிவந்தது.

அவள் முகத்தை பார்த்து என்ன நினைத்தானோ, “சரி, நீ போ! நான் கூப்பிட்டா சத்தம் குடு, சரியா?” என்றவன் மனமே இல்லாமல் வெளியே சென்றான்.

அவன் சென்றதும் ரெஸ்ட் ரூமிற்குள் சென்று தாளிட்டவளுக்கு அப்பொழுதுதான் சீராக மூச்சு விடமுடிந்தது.

***
அலைபேசியோடு தன் அறைக்குள் வந்த இஷிதா அழைப்பை ஏற்று, “சொல்லுடா ரித்து, எவ்வளவு தடவை ட்ரை பண்றது?” என்று கேட்டாள்.

“சாரி இஷு, ஃபிளைட் லேட் பா! ரொம்ப வெயிட் பண்ணிட்டீங்களா? எங்கே இருக்கீங்க? நான் ரீச் ஆகிட்டேன்” கையில் சிவப்பு ரோஜா மலர் அடங்கிய பூங்கொத்துடன் நின்றிருந்தான் ரிதுராஜ்.

“டேய் அண்ணா, அங்கே ஒரு சின்ன பிரச்சனை, வீட்டுக்கு வந்துட்டோம்” என்று பதிலளித்தாள் இஷிதா.

“என்னாச்சு, என்ன பிரச்சனை? நான் இப்போவே வீட்டுக்கு வரேன்!” என்று கிளம்பியவனை தடுத்தாள்.

“நோ ப்ரோ, ரிலாக்ஸ். இப்போ ஓகே, நீ வரவேண்டாம். நாளைக்கு நானே அவளை அழைச்சிட்டு வரேன்” என்றவள் ஒரு வழியாக ரிதுராஜை சமாளித்து அலைபேசியை அணைக்கவும்,
“என்ன ரிப்போர்ட்டர் மேடம்? அதிசயமா எனக்கு கால் எல்லாம் பண்ணிருக்கீங்க?” என்றபடி அவள் கட்டிலில் வந்து அமர்ந்தான் அஷோக்மித்ரன்.

“இப்படித்தான் ஒரு பொண்ணோட ரூமுக்கு உங்க இஷ்டத்துக்கு வருவீங்களா மித்ரன்?” எரிச்சலுடன் கேட்டாள்.

“பொண்ணோட ரூமுக்கு போகக்கூடாது தான். ஆனா பொண்டாட்டி ரூம்க்கு போகலாம்ல?” ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான்.

“ஷட்டப் அதுக்கு கல்யாணம் ஆகியிருக்கணும்.”

“கல்யாணம் தானே? பண்ணிட்டா போச்சு!” என்று மித்ரன் இஷிதாவை நெருங்கவும், “அது கனவுலையும் நடக்காது மித்ரன்” என்றாள் தீர்க்கமாக.

“ஆஹான், ஏன் நடக்காது? நடத்தி காட்டவா! உனக்கு என் மேல சந்தேகமா இருந்தா, ஒரு சாம்பிள் காட்டவா?” என்றபடி மித்ரன் அவளது இதழ் நோக்கி குனிய, இருவருக்கும் இடையே கரம் நீட்டி அவனை எட்டி நிறுத்தியவள், “முக்கியமான விஷயம் பேசணும்” என்றாள்.

அவள் பார்வையில் என்ன கண்டானோ அவளை விட்டுத் தள்ளி சென்று நாற்காலியில் அமர்ந்தவன், “சொல்லு!” என்றான்.

“பார்ட்டி ஹால்ல இருந்து திடீர்ன்னு எங்கே போனீங்க?”

“பொண்டாட்டி போல விசாரணை பண்ற?” என்றவன் அவள் முறைப்பதை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்து,

“ஏற்கனவே ஒரு மீட்டிங்ல இருந்து அக்னி கூப்பிட்டான்னு தான் மீட்டிங்கை ஹோல்டு பண்ணிட்டு வந்தேன். அப்புறம் அக்னி கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டேன்.”

“ம்ம், நீங்க உங்க இஷ்டத்துக்கு கிளம்பிட்டீங்க! அங்கே உங்க அருமைத்தோழன் என்ன பண்ணினாருன்னு தெரியுமா?”

“ம்ம், தெரியும். டிரைவர் சொன்னாரு, இதுக்கு நீ இவ்வளவு ரியாக்ட் பண்ணத் தேவையில்லை. எல்லா பிரச்சனையும் ஹாண்டில் பண்ணியாச்சு!” என்றான் சாதாரணமாக.

“அப்புறம் இன்னொரு விஷயம். உங்க அக்னி சார் ஆக்டிவிட்டீஸ் எனக்கு சரியா படலையே?” என்றதுதான் தாமதம், அஷோக்கின் முகத்தில் அவ்வளவு கடுமை.

திடீர் வானிலை மாற்றம் போல வந்தது.


“உனக்கு அவ்வளவுதான் சொல்லிட்டேன். அக்னி பத்திப் பேசுற வேலையெல்லாம் வச்சிக்காதே! லவ் பண்ணின பொண்ணுன்னு விடுறேன், இதுவே கடைசியா இருக்கட்டும்” கை முஷ்டி இறுகியது.

“நான் உண்மையத் தான் சொன்னேன். அவர் மேகாகிட்ட நடத்துகிற விதம் சரியா படல” சொன்னதுதான் தாமதம் அவன், அவளை அடிக்க கையை ஓங்கியிருக்க, ஓங்கிய கரத்தை பிடித்தவள் அவனை முறைத்துப் பார்த்து, “என் தரப்பை எப்பவுமே கேட்க மாட்டீங்களா அஷோக்?” என்றாள்.

கண்கள் சட்டென்று கலங்க, பிறகு மிகவும் சிரமப்பட்டு கண்ணீரை உள்ளே இழுத்தவள், இறுக்கமான முகபாவத்துடன் அவனை நோக்க,

“அதுக்கு, உனக்கு முதல்ல தகுதி இருக்கணும்” என்று அவனும் பதிலுக்கு பேச, இஷிதாவுக்கு மனதில் ஒருவித வலி வந்து தாக்கியது.

இந்த முறை கலங்கிய கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் கீழே விழ ஆயத்தமாக, அது விழுவதற்குள் கண்ணீரை தன் கரத்தில் ஏந்தியவன், “என்ன பேச வைக்காதே இஷிதா!” என்றவன், தன் தலையை அழுந்தக் கோதி, “சரி சொல்லி முடி” என்றான்.


அவளும் தன்னை ஆசுவாசப்படுத்தியவள் அக்னி ஹாஸ்பிடலில் நடந்துகொண்ட விதம் அனைத்தையும் பற்றிக் கூற, சத்தமாக சிரித்த அஷோக், “நம்புறது போல ஏதாவது சொல்லு!” என்று கூற,
“உண்மைய தான் சொல்றேன்” என்றாள் இஷிதா.

“ஏய், அவனுக்கு லவ் எல்லாம் தெரியாது, புடிக்காது. ஏன் பொண்ணுங்களையே புடிக்காது. அவன் அப்படியே வளந்துட்டான். ஸோ, அவன் மேகாவ லவ் பண்ண எல்லாம் சான்ஸே இல்லை. மேகா மேல ஒரு சாஃப்ட்கார்னர் வேணும்னா இருக்கலாம், லவ் எல்லாம் ம்ஹூம்!” என்றவன்,
“இன்னைக்கு அவன் கிளம்பிருவான். அதுக்கப்புறம், மேகா யாரோ, அக்னி யாரோ. ஸோ நீ தேவை இல்லாம எதுவும் யோசிக்காதே!” என்று கூறியவன், இஷிதாவை ஒரு கணம் பார்த்து,

“அக்னி ஒன்னும் அவ்வளவு கெட்டவன் கிடையாது. நீ பண்ணின நம்பிக்கை துரோகத்துக்கு உன் இடத்துல வேற யார் இருந்தாலும் அக்னி வேற மாதிரி நடந்திருப்பான். ஏன் அக்னி இடத்துல வேற யாராவது இருந்திருந்தா உன் கதை அவ்வளவுதான். ஆனா நான் காதலிச்சேன் என்கிற ஒரே காரணத்துக்காக உன்னை அவன் கண்டுக்கக்கூட இல்லை. உன் அப்பனுக்காக ஒன்னும் உன்னை அவன் விடல, எனக்காக விட்டான். இனிமே அவனை பத்தி என்ன பேசுறதா இருந்தாலும் கவனமா பேசு!” என்று அஷோக் சொல்லும்பொழுதே,
வெளியே, “ம்ம், இங்கே வை!” என அக்னியின் ஆளுமையான குரல் கேட்க, அஷோக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர, அவன் பின்னாலே இஷிதாவும் வந்தாள்.

***

இங்கே இப்படி இருக்க, அதே நேரத்தில், தன் கையில் இருந்து ரோஜா மலரை வெறித்து பார்த்த ரிதுராஜோ, ‘என்னடா இப்படி சொதப்பிட்டியே! நாளைக்காவது நேரத்துக்கு போகணும்’ என்று எண்ணியவனுக்கு மேகாவின் அழகிய வதனம் கண்ணெதிரே தோன்ற, அவன் இதழ்கள் தானாக புன்னகைத்தது.

***
இதற்கிடையில் தன் பின்னே நிழல் போல சுற்றி வந்த அக்னியை ஒரு வழியாக சமாளித்து ரெஃப்ரஷ் ஆகிடுவிட்டு வருவதாக கூறி குளியலறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்ட மேகாவிற்கு அக்னியின் திடீர்மாற்றம் மிகவும் சங்கடப்படுத்தியது. “ஒரே நாளில் எவ்வளவு தான் சமாளிப்பது?” என்றவளுக்கு அவனது செயல்பாடுகள் தலைவலியைக் கொடுத்தது.

‘பார்க்கிறான், பார்த்துக்கொண்டே இருக்கிறான் தான்! அவன் பார்வை சங்கப்படுத்தத்தான் செய்கிறது. ஆனால் அவனது கள்ளமில்லா பார்வை இதுவரை அவளது விழிகளைத் தாண்டி ஒரு கணம் கூட பயணித்தது இல்லையே!’ ஆனாலும் ஒருவிதமான நெருடல் மனதை போட்டு அழுத்த, ‘ஏன் இப்படி நடந்துக்கிறான்?’ என காரணம் தெரியாமல் மிகவும் குழம்பினாள்.
‘ஒருவேளை செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கிறானா, என்ன?’ என்று மூளை யோசிக்க, அவளோ,

“நன்றியெல்லாம் யார் கேட்டா? இங்கிருந்து சென்றால் போதும்” என வாய்விட்டே கூறியவள், முகத்தை கழுவி கொண்டு இருக்க அப்பொழுது, ‘தடதட’ என கதவு உடைபடும் சத்தம் கேட்டு அந்த அறையே அதிர, முகத்தை கழுவிக் கொண்டிருந்த மேகாவோ பயத்தில் அலறியபடி கதவை திறந்தாள்.

வாசலில், “உனக்கு ஒன்னும் இல்லைல?” என்று கலவரம் சூழ்ந்த முகத்துடன் நின்றிருந்தான் அக்னிதீரன்.
“இல்லை” பயத்தில் தலையை அசைத்தாள்.

‘ஊஃப்!’ பெருமூச்சை வெளியிட்டவன், “ஏன் சத்தமே கொடுக்கல? நான் உன்கிட்ட என்ன சொல்லி அனுப்புனேன்?” கோபத்தில் கண்களை உருட்டினான்.

“தண்ணி விழுந்ததுனால உங்க சத்தம் கேட்கல” உளறித் தள்ளினாள்.

“இன்னும் கொஞ்சம் தட்டியிருந்தா, கதவு கையோட வந்திருக்கும். இதோ லாக் வந்திருச்சு”என்றவன் சாதாரணமாக அதை அவள் கையில் கொடுத்து, “சரி, நீ முடிச்சிட்டு வா! நான், வெளியே வெயிட் பண்றேன்” என்றவன் அறையை விட்டு வெளியேற, மேகா தலையில் கைவைத்தபடி கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.

அவளுக்கு தன்னை நிலைப்படுத்தவே நேரம் தேவைப்பட்டது. ‘இப்படியும் ஒரு மனிதனா?’ தீரனை நினைக்கும் பொழுதே கண்கள் இருண்டு கொண்டு வர, சிறிது நேரம் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திவிட்டு வெளியே வர, மீண்டும் அதிர்ச்சியில் விழிவிரித்து நின்றாள்.

“வா வரு! ஏன் அங்கேயே நின்னுட்ட? வா வா!” அக்னியின் குரல் தற்காலிக சிலையாய் நின்ற மேகாவுக்கு உயிர் கொடுத்தது.


“ஹான்!” என்றவளுக்கு ஏனோ தரையில் வேரூன்றிய காலை அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை.

ஆனால் அவனோ, “வரு வா, எல்லாம் உனக்குத்தான்!” என்று சிரித்தவன் நால்வர் உட்காரும் மேசை முழுவதும் விதவிதமான பறப்பன, ஊர்வன என ஒன்று விடாமல் தெரிந்த தெரியாத அத்தனை உணவு பதார்த்தங்களையும் நிரப்பி வைத்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“முதல்ல என்ன சாப்பிடுற இதுவா? அதுவா?” என்று அனைத்தையும் நீட்ட, “எனக்கு எதுவும் வேண்டாம்” என்றாள் தவிக்கும் குரலில்.

“என்ன வேண்டாம்? ரொம்ப வீக்கா இருக்க நீ! அதான், அடிபட்டதும் ஒருமாதிரி ஆகிட்டே! தூக்கும் பொழுது வெயிட்டே இல்லை. காத்து மாதிரி இருக்க, வா, வந்து சாப்பிடு! முதல்ல மட்டன் சாப்பிடுறியா, நல்லா இருக்கும். இந்தா!” அவனே பரிமாறி அவளிடம் நீட்டினான்.

மாமிச வாசனையே பழகியிறாத மேகாவுக்கு அடிவயிற்றை பிரட்டிக் கொண்டு வர, வாயை மூடிக்கொண்டு வாஷ்ரூமிற்குள் ஓட, அக்னிதான் மிகவும் பதறிப்போனான்.

“ஏய் ரிப்போட்டர் , உன்னைத்தான் இங்கே வா, உள்ள போ! அவளுக்கு என்னாச்சுன்னு பாரு, இன்னும் அவ வரல!” மேகா உள்ளே சென்று முழுவதுமாக ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது, அதற்குள் அக்னி துள்ளி கொண்டு வர,
மித்ரனை, ‘பார்த்தியா?’ என்பது போல் பார்த்துவிட்டு இஷிதா வாஷ்ரூமிற்குள் நுழைந்துகொள்ள, அக்னிக்கு தான் முகம் வாடிவிட்டது.

நேரம் கடந்திருக்க, சோர்வாக காட்சியளித்த மேகாவை, கட்டிலின் மீது இஷிதா அமர வைத்திருக்க, “என்னால முடியலடி!” இஷிதாவின் கரங்களை பிடித்துக் கொண்ட மேகாவின் கண்கள் கலங்கியது.

“எனக்கு தெரியும், அந்த டாக்டர் சரி இல்லை அஷோக். அவன் ஏதோ தப்பான மெடிசின் குடுத்துட்டான். அதான் வருக்கு ஒத்துக்கலை. அவனை!” என ஆக்ரோஷமாக சீறியபடி உள்ளே வந்த தீரனை பார்க்கப் பார்க்க மேகாவுக்கு பயத்தில் முகமெல்லாம் வியர்வை அரும்பியது.

“அக்னி ரிலாக்ஸ், பார்த்துக்கலாம்” என அஷோக் கூறவும், “அவளை பாருடா! எப்படி என்னால ரிலாக்ஸ் ஆக முடியும்? போ, போய் வண்டிய ஸ்டார்ட் பண்ணு!” என அஷோக்கிடம் சீறிவிட்டு மேகாவின் அருகே வந்தவன் மீண்டும் தன் கையில் அவளை ஏந்த முயற்சிக்கவும் அவனை தடுத்தவள்,

“அக்னி ஹாஸ்பிடல் வேண்டாம். ப்ளீஸ், எனக்கு நான்வெஜ் பிடிக்காது. அதுனாலதான் அதை பார்த்ததும் அப்படி ஆகிடுச்சு!” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்,

“டிரைவர்!” என கத்தியவன்,
மேகாவிடம், “என்கிட்ட சொல்லியிருக்கலாமே, பாரு ஒரு செகண்ட்ல எப்படி ஆகிட்ட?” உண்மையாக வேதனை கொண்டான்.

‘எங்கடா சொல்ல விட்ட? முதல்ல என்கிட்ட கேட்டியாடா?’ என மேகா மனதிற்குள் புலம்பினாள்.

அப்பொழுது அவனது கட்டளைக்காகவே காத்திருந்தது போல உள்ளே வந்த டிரைவர், “சார்” என்று பணிவுடன் நிற்க,
“ம்ம், எவ்வளவு நேரம்? போ, டைனிங் டேபிள்ல ஒன்னும் இருக்கக்கூடாது. வருக்கு அதெல்லாம் புடிக்காதாம். உடனே எடுத்துட்டு போ! ஸ்மெல்லே வரக்கூடாது. பக்கவா க்ளீன் பண்ணிருக்கணும்” என்றவன் மேகாவை பார்த்து, “கவலைப்படாதே வரு! இப்போ க்ளீன் ஆகிரும்” என்று கூறினான்.

அவனது இந்த திடீர்மாற்றம், மேகாவுக்கு உள்ளுக்குள் ஒருவித அதிர்வை கொடுக்க வெடவெடத்தபடி அமர்ந்திருந்தாள்.

“எல்லாம் கிளியர் பண்ணியாச்சு வரு, இன்னும் ஸ்மெல் வருதா?”

“இல்லை.”

“அப்புறம் ஏன் ஒருமாதிரியா இருக்க? என்னாச்சு தலைவலிக்குதா? வேற எதுவும் பண்ணுதா?” அவனுடைய பதற்றமும் கேள்விகளும், மேகாவுக்கு ஏதோ சிறிய அறைக்குள் அடைத்து போட்டது போல மூச்சு முட்டிக்கொண்டு வந்தது.

“தீரன், ஐ அம் ஓகே! நான் நல்லா இருக்கேன். யூ ரிலாக்ஸ்” கலவரத்தை மறைத்து கூறினாள்.

“நீ சொன்னா சரிதான் வரு!” என்றவன் அப்பொழுது தான் கொஞ்சம் இயல்பு நிலையை அடைந்திருந்தான்.

இதை அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த அஷோக்கிற்கோ, தீரனின் திடீர் மாற்றத்துக்கான அனைத்து காரணமும் தெளிவாய் புரிய, அவனது இதழில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது.

ஆனால் ஏனோ அது இஷிதாவின் மனதை நெருடியது. என்னதான் தீரனின் கண்களில் தெரிந்த கலப்படமற்ற நேசம் அவளை நெகிழச் செய்தாலும், தோழியை குறித்து மிகவும் கவலைகொண்டாள்.

 
Last edited:

Author: Naemira
Article Title: மிருதன் 8
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top