- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
ஆதவன் 10
சூரியன் முகம் காட்டத் துடித்துக் கொண்டிருக்கும் புலர்ந்தும் புலராத காலை வேளையில், திடீரென்று உறக்கம் தடைப்பட மிகவும் சிரமப்பட்டு இமைகளைப் பிரித்த ஆதித்திற்கு தன் மீது எதுவோ பாரமாக அழுத்திக் கொண்டிருப்பது போல தோன்றவும் சற்று குனிந்து பார்த்தான்.
முகம் ஆதித்தின் திண்ணிய மார்பில் பதிந்திருக்க, தன் இடது கரத்தை அவனது கழுத்தில் போட்டு, மற்றொரு கரத்தால் அவனின் இடையே வளைத்ததுடன், தன் வலது காலை வேறு அவன் கால்கள் மீது போட்டு, அவனை நகர விடாது, பிளவுற்று இருந்த தன் இரு இதழ்களுக்கு இடையே இருந்து வெளியேறிய மெல்லிய குரட்டை சத்துத்துடன், விலகிய சேலை வஞ்சனை இன்றி வள்ளலாய் ஆண் அவனை வஞ்சிக்க, காற்று கூட செல்ல முடியாத நெருக்கத்தில் ஆதித்துடன் அப்படியே புதைவது போல அவன் மீதே படுத்தபடி ஆழ்ந்த நித்திரையில் இருந்த வர்ஷாவை பார்த்து கண்கள் அகல விரித்தான் ஆதித்.
கிட்டத்தட்ட அவளது நெருக்கத்தில் அவனுக்கு மூச்சு முட்டிக் கொண்டு வர, அவனுக்கு ஒரு விதமான அவஸ்தியாக இருந்தது.
கண்களை மூடி தன்னை சமநிலைப்படுத்த முயற்சித்தவன் தனது மூளையின் கட்டுப்பாட்டையும் மீறி கண்களைத் திறந்தான்.
வருணிக்கா தன் முகத்தில் வீசிவிட்டு சென்ற மாங்கல்யம் இப்பொழுது வர்ஷாவின் கழுத்தில் ஒய்யாரமாய் கிடக்க, மறக்க வேண்டிய நினைவுகள் அனைத்தும் அவன் கண்முன்னே மீண்டும் வந்து போனது.
தந்தையை நினைத்து வருத்தமாக இருந்தது. வருணிகாவை என்னும் பொழுதே கோபமாய் வர, இதற்கெல்லாம் காரணமாய் இருக்கும் வர்ஷாவை நினைத்தவன் அவளை தன்னிடம் இருந்து விலகி விடும் ஆத்திரத்தில் பல்லை கடித்த படி அவள் முகம் பார்த்தான்.
ஆழ்ந்த நித்திரையில் நிம்மதியாக, பிறந்த குழந்தையை போல துயில் கொண்டிருந்தாள். இப்பொழுது அவள் வதனத்திலிருந்த அப்பாவித்தனம் ஆதித்தின் மனதை அசைத்துப் பார்க்க, அந்த நொடி வரை அவள் மீது தான் கொண்டிருந்த கோபம் அனைத்தும் வந்த தடம் தெரியாமல் மறைந்ததை எண்ணி ஆச்சரியப்பட்ட ஆதித் அப்பொழுது தான் நினைவு வந்தவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான்.
தடுப்பாக நேற்று இரவு அவள் வைத்த தலையணை இரண்டும் திசைக்கு ஒன்றாக கிடந்தது, இப்பொழுது ஆதித்தின் இதழ் மெலிதாய் விரிந்து கொள்ள, அவனது பார்வை அவள் முகத்திலேயே நிலைத்திருந்தது.
நேற்றுக்கும் இன்றுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்.
'பழிவாங்குவதற்காகவே தாலி கட்டப்பட்டு அழைத்து வரப்பட்டவள், அதுவும் தன் வாழ்நாள் முழுவதும் என்னால் வெறுக்கப்பட வேண்டியவளை ரசித்துக் கொண்டிருக்கிறேனா!' வியந்தான்.
குழந்தைத்தனமும் வெகுளித்தனமும் நிறைந்திருந்த அவளது வதனமும், அவளது விழிகளும் ஏதோ ஒரு வகையில் அவனை மெல்ல மெல்ல ஈர்க்க, கடந்து செல்லும் நேரத்தைக் கூட அறியாமல் அவளைப் பார்த்தபடியே அசையாமல் படுத்திருந்தான் ஆதித்.
@@@@
தன் கணவர் ராஜேந்திரனுடன் மருத்துவமனைக்கு வந்த ஊர்மிளாவைப் பார்த்ததுமே ஆகாஷுக்கு அவர்கள் வந்ததற்கான காரணம் புரிந்து விட,
'டேய் ஆதித், எல்லாம் பண்ணிட்டு எதுவும் பேசாம உன் இஷ்டத்துக்கு போய் உட்கார்ந்துகிட்ட, ஆனா நான் உன் குடும்பத்துக்கிட்ட சிக்கிக்கிட்டு, அவங்க கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாம திணறிட்டு இருக்கேன்.
நேத்து உன் அப்பா, தாத்தா, பாட்டி எல்லாரும் என்னை ஒரு பாடு படுத்தினாங்க, இப்போ இதோ அடுத்ததா என்னை படுத்துறதுக்கு வந்துட்டாங்க' என்று மனதிற்குள் புலம்பியபடி ஆதித்தை திட்டிய ஆகாஷ் அவர்கள் வருவதைக் கவனிக்காதது போல அலைபேசியில் மூழ்கி விட, ஆகாஷை ஒரு பார்வை பார்த்தபடி அவன் அருகில் வந்த ஊர்மிளா,
"என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க? இப்படி பண்ண போறான்னு உனக்கு முன்னாடியே தெரியும் தானே? ஏன் வீட்ல சொல்லல" வந்ததும் வராததுமாக ஆகாஷை பிடித்துக் கொண்டு கோபமாக வினவினார் ஊர்மிளா.
"சத்தியமா எனக்கு தெரியாது ஆன்ட்டி, அவன் என்கிட்ட இதை பத்தி சொல்லவே இல்ல, அந்த பொண்ணை திட்டிட்டு வருவான்னு தான் நானும் நினைச்சேன். ஆனா கல்யாணம் பண்ணிக்குவான்னு நானே எதிர்பார்க்கல" என்ற ஆகாஷை நம்பாத பார்வை பார்த்த ஊர்மிளா,
"நடிக்காதடா கூடவே இருக்கிறது நீ, உனக்கு எப்படி தெரியாம இருக்கும்? என்ன நெனச்சிட்டு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க" சட்டையை பிடிக்காத குறையாக ஆக்ரோஷமாக சீறினார்.
ஊர்மிளாவின் சீற்றத்தை பார்த்து ராஜேந்திரனும் அவரை அமைதியாக இருக்கும் படி சொல்ல கணவரை ஒரே பார்வையில் அடக்கி விட்டு ஆகாஷிடம்,
"பொய் சொல்லிட்டு இருக்க டா நீ" பாய்ந்தார் கோபமாக.
ஆகாஷ்க்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை, காண்பவர்கள் துவங்கி அனைவரும் அவனிடம்,
'கூடவே இருக்கியே உன் கிட்ட சொல்லாமலா செஞ்சிருப்பான்' என்கின்ற ஒரே கேள்வியை கேட்டு நோகடிக்க,
'எனக்கு எதுவும் தெரியாது' என்று சொல்லியே நொந்து போன ஆகாஷ் பொறுக்க முடியாது,
"நான் தான் பொய் சொல்றேனே அப்ப ஏன் என்கிட்ட கேக்குறீங்க" என்று மாறி கேட்டு விட,
"டேய்" என்று குரலை உயர்த்தி ஏதோ கூற வந்த ஊர்மிளாவை,
"இங்க வந்து என்ன கத்திட்டு இருக்க ஊர்மி?" என்ற தேவராஜின் அழுத்தமான குரல் அடக்கி வைத்தது.
தமையனை கண்டதும் ஊர்மிளா எதுவும் பேசாமல் அமைதியாகிவிட, மேலும் கீழும் மூச்சு வாங்க அடக்கப்பட்ட ஆவேசத்துடன் நின்றிருந்த தன் தங்கையை பார்த்துவிட்டு,
"என்னாச்சு மாப்பிள? இப்ப என்ன பிரச்சனை?" என்று ராஜேந்திரனை பார்த்து கேட்டார் தேவராஜ்.
தேவராஜ் அப்படி கேட்கவும், "அட பிரச்சினை எல்லாம் எதுவும் இல்ல மச்சான்" என்ற தன் கணவர் ராஜேந்திரனை பார்த்து முறைத்து,
"என்ன இல்ல? கொஞ்சம் சும்மா இருங்க" என்று அவர் பேசுவதை இடை வெட்டிய ஊர்மிளா தனது தமையனை பார்த்து,
"உன் புள்ள அவ்வளவு பெரிய காரியத்தை பண்ணி வச்சிருக்கான். ஆனா நீ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல அம்மாவும் ரவி அண்ணனும் சொல்லி தான் எனக்கே தெரியும்" என ஆக்ரோஷமாக சீறிக் கொண்டிருக்கும்போதே தான் இருந்த அறையின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த மகாலட்சுமி,
"என்ன ஆச்சு? ஆதி என்ன பண்ணினான்" என்று கேட்க, தன் தங்கையை முறைத்த தேவராஜ் பின்பு தனது மனைவியை பார்த்து,
"அது ஒன்னும் இல்ல மகா, எல்லாம் பழைய கதையை தான் பேசிட்டு இருக்காங்க, நீ உள்ள வா, டேப்லெட் எல்லாம் சாப்பிட்டியா இல்லையா?" என்று கேட்டார்.
அதற்கு மஹாலக்ஷ்மி, "ம்ம் நான் சாப்ட்டேன் பா" என்று தன் கணவருக்கு பதிலளித்தவர், பின்பு ஊர்மிளாவை பார்த்து,
"அதான் என் பையனை வேண்டாம்ன்னு சொல்லிட்டு போயிட்டீங்கல்ல, அப்புறம் எதுக்கு மறுபடியும் வந்து அவனை குறை சொல்லிட்டு இருக்கீங்க" என சற்று ஆவேசமாக கேட்டுவிட,
"நல்லா இருக்கு அண்ணி நீங்க பேசுறது. பிரச்சனை வந்தா பொண்ணை பெத்தவங்க கோபத்துல ஏதாவது பேச தான் செய்வாங்க. அதுக்காக பெரியவங்க இருக்கும் போது உங்க பையன் அவன் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிட்டு வருவானா?" என்று சட்டென்று ஊர்மிளா கேட்டு விட, அதிர்ச்சியடைந்த ஆகாஷும் தேவராஜும் மீண்டும் மகாலட்சுமிக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று மிகவும் பயந்து போனார்கள்.
ஆனால் மகாலட்சுமியோ எந்த ஒரு அதிர்ச்சியையும் தனது முகத்தில் காட்டாது,
"என் புள்ள தான கல்யாணம் பண்ணிக்கிட்டான் அதுக்கு நீ ஏன் கத்திக்கிட்டு இருக்க?" என்று மகாலட்சுமி ஊர்மிளாவை பார்த்து கேட்டதில் அனைவரும் திகைப்புடன் நிற்க,
எப்பொழுதுமே வார்த்தைக்கு வார்த்தை வாயாடும் ஊர்மிளாவோ இந்த முறை மகாலட்சுமியின் கேள்வியில் வாயடைத்து போனவர் எதுவும் பேசவில்லை.
ஆனால் மகாலட்சுமியோ அதோடு விடாமல்,
"வேண்டாம்ன்னு சொன்னது சொன்னதுதான், இனிமே என் புள்ளைய கேள்வி கேக்குற உரிமை உனக்கு இல்லை. கல்யாணம் பண்ணிக்கிட்டது என் புள்ள, அது என் புள்ளையோட பிரச்சனை, பார்த்துக்கிறதுக்கு அம்மா நான் இருக்கேன், நீ போய் உன் பொண்ணை பாரு" என்று அழுத்தம் திருத்தமாக ஊர்மிளாவை பார்த்து கூறிவிட்டு தன் அறைக்குள் நுழைவதற்காக வேகமாக சென்றவர், பின்பு நின்று திரும்பி ஊர்மிளாவை பார்த்து,
"என் புள்ளைய பத்தி குறை சொல்றது இதுவே கடைசியா இருக்கட்டும்" என்று எச்சரித்து விட்டு தன் அறைக்குள் நுழைந்து கொள்ள,
"இப்ப சந்தோஷமா முகத்திலேயே இனிமே முழிச்சிராத" என்று அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த ஊர்மிளாவை பார்த்து கோபமாக கூறிய தேவராஜ் ராஜேந்திரனை பார்த்து,
"முதல்ல இவளை இங்க இருந்து கூட்டிட்டு போங்க மாப்ள, உங்க கிட்ட நான் அப்புறம் பேசுறேன்" என்று சொல்ல சரி என்றவர் வலு கட்டாயமாக தன் மனைவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
மூச்சு வாங்க அறைக்குள் வந்த மகாலட்சுமிக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. ஊர்மிளாவிடம் முகத்தில் அடித்தது போல பேசி விட்டு வந்தவருக்கு, இப்பொழுது அழுகையாக வந்தது. முகமெல்லாம் வியர்த்திருக்க கண்களில் கண்ணீருடன் நின்றிருந்த மனைவியை பார்த்து பதறிய தேவராஜ்,
"மகா என்னாச்சு?" என்று கேட்டபடி அவர் அருகில் வந்தவர், அதே பதற்றத்துடன் நின்றிருந்த ஆகாஷை பார்த்து,
"டேய் டாக்டரை வர சொல்லு" என்றார் பரிதவிப்புடன். அதற்கு வேண்டாம் என்பது போல ஆகாஷை தடுத்த மகாலட்சுமி தன் கண்ணீரைத் துடைத்து விட்டு,
"என்ன நடந்தது" என்று கேட்டார்.
"அதெல்லாம் இப்ப வேண்டாம் மகா நீ ரெஸ்ட் எடு" என்றார் தேவராஜ்.
"எனக்கு இப்ப தெரிஞ்சாகணும்" என்றார் மஹாலக்ஷ்மி பிடிவாதமாக.
மனைவியின் நிலைமையையும் பிடிவாதத்தையும் கண்ட தேவராஜ்க்கு இதற்கு மேல் மறைப்பது சரியல்ல என்று தோன்றவும் அனைத்தையும் கூறி முடித்தவர்,
"அவன் வாழ்க்கைய கெடுத்த அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம மானத்தையே வாங்கிட்டான் மகா" என்றார் வேதனையாக.
ஆனால் மகாலட்சுமி எதுவும் பேசவில்லை மௌனமாக அமர்ந்திருந்தவர் சில நொடிகள் கழித்து தன் மௌனத்தை கலைத்து,
"ஆதி எங்க ஆகாஷ்?" என்று வினவினார் நிமிர்ந்து ஆகாஷை பார்த்து.
"அவன் கெஸ்ட் ஹவ்ஸ்ல மா" தயங்கியபடி கூறினான்.
"ஆதிய நான் இப்ப பாக்கணும்" என்றார் மஹாலக்ஷ்மி.
"நீ ஒன்னும் அவனைப் பார்க்க வேண்டாம், அவன பாத்து என்ன செய்யப் போற?" என்றார் தேவராஜ் கோபமாக.
"அவன் கிட்ட நான் பேசணும்"
"ஒன்னும் பேச வேணாம், நீ முதல்ல ரெஸ்ட் எடு"
"என்னை கூட்டிட்டு போறீங்களா இல்ல நான் போகவா" என விடாப்பிடியாக நின்ற தன் மனைவியை அழுத்தமாக பார்த்த தேவராஜ்,
'அம்மாவுக்கும் பையனுக்கும் இந்த பிடிவாதத்துக்கு ஒன்னும் குறைவில்லை" என தனக்குள் முணுமுணுத்து கொண்டவர்,
"டாக்டர் கிட்ட நான் பேசிக்கிறேன் டிஸ்சார்ஜ் ப்ரொசீஜர்ஸை மட்டும் முடிச்சிட்டு நீ வீட்டுக்கு போ ஆகாஷ், நான் கூட்டிட்டு போறேன்" என்றார் தேவராஜ்.
@@@@@@
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆதித்தை அசையவிடாமல் சிறை பிடித்து வைத்திருந்த வர்ஷா, சூரியக்கதிர்கள் தன் முகத்தில் பட துவங்கவும் தனது முகத்தை ஆதித்தின் மார்பில் இருந்து மெல்ல நகர்த்தி இப்பொழுது அவன் கழுத்தடிக்குள் புதைத்துக் கொள்ள. அதுவரை விழித்திருந்த ஆதித், அவளிடம் அசைவு தெரியவும் தூங்குவது போல கண்களை மூடிக்கொண்டான்.
வர்ஷாவோ ஓரளவு உறக்கம் களையவும், "ம்ம்" என முனங்கியபடி மெல்ல கண்விழித்தவள் ஏதோ வித்தியாசமாக தோன்ற லேசாக தலை உயர்த்தி, என்னவென்று பார்ப்பதற்காக இமைகளை பிரித்து பார்க்க, தூங்கிக் கொண்டிருக்கும் அதாவது தூங்குவது போல் நடித்துக் கொண்டிருக்கும் ஆதித்தின் முகத்தை தனக்கு மிக அருகில் கண்டு அதிர்ந்த பெண்ணவளின் விழிகள் இன்னும் அகல விரிந்து கொண்டது.
என்ன செய்வதென்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஆப்பொழுது நேற்று அவள் பாதுகாப்புக்காக வைத்த இரண்டு தலையணையும் தரையில் கிடக்க, மேலும் தான் தான் தன் இடத்தை விட்டு நகர்ந்து வந்து அவனை இடித்துக்கொண்டு அவன் மீது படுத்திருக்கிறோம் என்பது புரியவும், தன் செயலை எண்ணி தலையில் அடித்துக் கொண்ட வர்ஷா அவன் முழிப்பதற்குள் எழுந்து விட வேண்டும் என்கின்ற எண்ணத்தில், வேகமாக எழுந்து கொள்ள முயற்சித்த வர்ஷா எதைப் பிடித்து எழுந்திருப்பது என்று தெரியாமல் திணறியபடி நிமிர்ந்து பார்க்க, இதழில் குறும்பு சிரிப்புடன் தன் இரு கரங்களையும் தனது தலைக்கு கீழே கொடுத்தபடி, தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்தை கண்டவள் பதறிவிட்டாள்.
பின்பு கண்கள் படபடக்க அதே பதற்றத்துடன் வியர்வை துளி அரும்ப, வேகமாக எழ முயற்சி செய்து கொண்டிருந்தவளை பார்த்து,
"நேத்து நீங்க கட்டிருந்த சீனப் பெருஞ்சுவர் எங்கங்க காணோம்" பொய்யான பதற்றத்துடன் ஆதித் நக்கலாக கேட்க, அவனது கேலியை புரிந்து கொண்ட பெண்ணவளோ அவனை பாவம்போல பார்த்தபடி, தன் உடை மீது தவறுதலாக ஆதித் படுத்திருப்பது அறியாமல் அங்கிருந்து எழுந்து கொண்டால் போதும் என்கிற வேகத்தில் சிரமப்பட்டு எழுந்தவளோ முழுவதும் எழ முயற்சிக்கும் பொழுது எழுந்துகொள்ள முடியாமல் மீண்டும் ஆதித் மீது தவறுதலாக விழுந்தாள்.
ஆனால் இந்த முறை அவள் விழுந்த வேகத்தில் அவளது இதழ் லேசாக அவனது கீழ் அதரத்தை உரசி அவனின் மார்பில் அழுத்தமாகப் பதிந்தது.
அவளிடமிருந்து இப்படி ஒரு தாக்குதலை எதிர்பாக்காத ஆதித் அதிர்ச்சியுடன் தன்னை மறந்து அவளை பார்த்துக்கொண்டிருந்தவன், தன் கன்னத்தில் பட்டுத்தெறித்த அவளது ஒற்றைக் கண்ணீர் துளியில் சுயம் பெற்றான்.
கண்கள் குளமாக அவன் என்ன பேசுவானோ, தன்னை பற்றி என்ன நினைப்பானோ? என்கின்ற பயத்துடன் கூடிய ஒருவித அவமான உணர்வுடன் இருந்தவளின் விழிகளை பார்த்ததுமே,வர்ஷாவின் மனநிலையை உணர்ந்து கொண்ட ஆதித்,
நிலைமையை சுலபமாக்கி அவளை இயல்பு நிலைக்கு மாற்றும் பொருட்டு, மெதுவாக அவளது தோள்களைப் பற்றி வர்ஷாவை தன்னிடம் இருந்து நகர்த்தி கீழே சரித்துவிட்டு எழுந்து அமர்ந்தவன்,
"என்னடி கிஸ் எல்லாம் அடிக்கிற?" என்று பொய்யான அதிர்ச்சியுடன் வாயில் கைவைத்தபடி கேட்க, அவன் அப்படி கேட்கவும் திணறியவள்,
"அது வந்து வேணும்ன்னு பண்ணல, இது தெரியாம நடந்த ஆக்சிடென்ட்" என்று கண்களில் பயத்துடன் உளறி பார்க்க பாவமாக இருக்கவும்,
"சரி சரி இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும், இனிமே இந்த கிஸ் அடிக்கிற வேலை எல்லாம் வச்சுக்காத புரியுதா" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் அதட்டலாக கூறியவன்,
"ம்ம்" என்று அவள் மெளனமாக தலையசைக்கவும்,
"நேத்து நீ கட்டுன சீன பெருஞ்சுவர பார்த்து நான் கூட என்னமோன்னு நினைச்சேன், ஆனா இப்போ நீ நடந்துக்கிறதை பார்த்தா, உன்கிட்ட இருந்து தான் என்னை காப்பாத்திக்கணும் போல" என்று கேலியான புன்னகையுடன் கூறியவன்,
கட்டிலில் இருந்து எழுந்து கொண்டு தனது அலைபேசியை எடுத்து பார்த்த நேரம், ஆகாஷிடம் இருந்து பல அழைப்புகள் வந்திருக்க, என்னவாக இருக்கும் என்று சிந்தித்தபடி ஆதித் ஆகாஷுக்கு திரும்ப அழைத்த நேரம் காலிங் பெல் சத்தம் கேட்டது.
பெல் அடிக்கும் சத்தம் கேட்கவும் உடனே வர்ஷா, யார் என்று பார்ப்பதற்காக கீழே சொல்லப் போக, அவளை வேண்டாம் என்றபடி தடுத்த ஆதித் தானே சென்று பார்ப்பதாக செய்கை செய்தவன்,
"சொல்லுடா ஆகாஷ்" என நண்பனுடன் அலைபேசியில் பேசியபடி அறையை விட்டு வெளியேறினான்.
@@@@
"நீங்க வரலையா?" தன்னை வாசலில் இறக்கி விட்டு விட்டு காரை நோக்கி செல்லும் தன் கணவரை பார்த்து வினவினார் மகாலட்சுமி.
"எது பேசணும்ன்னாலும் நீயே பேசிக்கோ, நான் வந்தா சண்ட தான் வரும்" என்ற தேவராஜ் காரில் சென்று அமர்ந்துகொள்ள, காலிங் பெல்லை அழுத்திவிட்டு ஆதித்திற்காக காத்திருந்தார் மகாலட்சுமி.
அதே நேரம் வீட்டிற்குள், "என்னடா சொல்ற அம்மா இங்கேயா?" என்று ஆதித் அதிர்ச்சியுடன் ஆகாஷிடம் கேட்க,
"ஆமா டா அதை சொல்ல தான், நான் உனக்கு இவ்ளோ நேரம் கால் பண்ணினேன். நீ எடுக்கவே இல்லை, இந்நேரம் வந்து இருப்பாங்க டா" என்றதும் ஆதித் வேகமாக சென்று கதவில் இருக்கும் சேப்டி லென்ஸ் வழியாக பார்க்க, அவன் நினைத்தது போல மஹாலக்ஷ்மி தான் நின்று கொண்டிருந்தார்.
தாயை பார்த்ததில் உள்ளுக்குள் மகிழ்வாக இருந்தாலும், வர்ஷாவை எண்ணி நெற்றியை நீவியவன், அவசரத்தில் ஆகாஷ் என்ன சொல்ல வருகிறான் என்பதை கூட காதில் வாங்காது,
"சரிடா நான் பாத்துக்குறேன்" என்ற ஆதித் ஆகாஷின் அழைப்பை அணைத்துவிட்டு வேகமாக தன் அறையை நோக்கி ஓட,
ஆகாஷோ, "என்ன சொல்ல வரேன்னு கூட கேட்காம கட் பண்ணிட்டு போறான், சரி அவனாச்சு அவன் அம்மாவாச்சு" என தனக்கு தானே கேள்வியும் கேட்டு பதிலையும் கூறிவிட்டு தன் வேலையில் கவனமாக, வர்ஷாவை தேடிக்கொண்டு தன் அறைக்கு வந்த ஆதித்தோ, அறையில் அவளை காணவில்லை என்றதும் அவளை தேடும் பொருட்டு, சற்றும் யோசிக்காமல் குளியல் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
குளிப்பதற்காக சேஃப்டி பின்னை எல்லாம் எடுத்துவிட்டு, அப்பொழுதுதான் புடவையை பாதி கழட்டி இருந்த வர்ஷா, திடீரென்று வேகமாக கதவை திறந்து கொண்டு ஆதித் வரவும் வெடவெடத்து போனவள் சத்தமாக கத்தி விட, வர்ஷா இருந்த கோலம் கண்ட பிறகு தன் தவறை எண்ணி நெற்றியில் அடுத்த படி திரும்பி நின்று ஆதித் அவள் கத்தவும் வேகமாக அவளை நெருங்கி அவளது இதழை தன் கரம் கொண்டு அடைத்தவன்,
"அம்மா" என்று தான் வந்ததன் காரணத்தை சொல்ல ஆரம்பிக்கவும், ஷவரில் இருந்து வந்த தண்ணீர் அவர்கள் இருவரையும் நினைக்கத் தொடங்கியது.
திடீரென்று ஷவரில் இருந்து தண்ணீர் வேகமாக கொட்டவும், தடுமாறிய வர்ஷா பிடிமானத்திற்காக அவனது டி-ஷர்ட்டின் காலரை இறுக்கமாக பற்றிக்கொள்ள, அவள் விழுந்து விடக்கூடாது என்பதற்காக அவளது வெற்றிடையைப் பற்றியிருந்த ஆதித்தோ உணர்வு குவியலுக்குள் சிக்கியபடி தவித்துக் கொண்டிருக்க, அதை அறிந்திடாத பெண்ணவளோ தண்ணீரின் வேகத்தில் மூச்சு விட சிரமம் ஏற்படவும், அப்படியே தன் முகத்தை அவன் மார்போடு புதைத்திருக்க, மேலும் அவள் வேகமாக மூச்சு வாங்கியதால் விம்மி தணிந்து கொண்டிருந்த அவளது மென்மைகளை அவன் உணரும் அளவிற்கு அவனது தேகத்துடன் உறவாடிக் கொண்டிருந்தவளின் நெருக்கத்தில் அவனுக்குள் தீ பற்றிக்கொள்ள அந்தக் குளிரிலும் அவனது தேகம் சூடேறியது.
விளக்கி வை என மனம் கட்டளையிட்டாலும், உணர்வு குவியலுக்குள் சிக்கிக் கொண்டு தவித்தவனே உணர்வுகளை அடக்க இயலாது தான் பற்றி இருந்த அவளது இடையில் அழுத்தம் கொடுக்க, அவனது பிடியில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து கொண்ட பெண்ணவளோ, நடுக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க, துடிக்கும் ஈர இதழ்கள் போட்ட கொக்கியில் சிக்கி தவித்த ஆதித், தான் ஏன் இங்கே வந்தோம்? தன்னை காண யார் வந்திருக்கின்றார்? இரெண்டு நாட்களாக தான் இருந்த நிலை என்ன? என அனைத்தையும் மறந்து அவளது இதழை நெருங்கிய நொடி பதறிய வர்ஷா, "சார்" என்றாள் சத்தமாக.
"ம்ம் சொல்லு" என்றபடி அவளது இதழை நெருங்குவதிலே ஆதித் கவனமாக இருக்க, "ஆதித் சார்" என்று இன்னும் சத்தமாக வர்ஷா அழைக்கவும், தன்னிலைக்கு வந்தவன் வர்ஷாவை பார்க்க, அவளோ அவனை பார்த்துவிட்டு ஷவரை அணைப்பதற்கு வழி தேடிக் கொண்டிருப்பதை கண்ட ஆதித்,
"இது சென்சார்" என தடுமாற்றத்துடன் கூறியவன் அவளை அங்கிருந்து நகர்த்தி, தானும் நகர்ந்திருந்தான். அவர்கள் ஷவரை விட்டு சற்று தள்ளி வந்ததுமே, ஷவர் தானாக நின்று விட. கண்களை இறுக்கமாக மூடித்திறந்து தன் மனதை நிலைப்படுத்திக் கொண்ட ஆதித்,
"அம்மா வந்திருக்காங்க அவங்களுக்கு நம்மளை பத்தி எதுவும் தெரியாது. கொஞ்ச நேரத்துக்கு நீ கீழ வராத" என்றவன் எந்தவித தயக்கமுமின்றி அவளது தோளை விட்டு நழுவி இருந்த புடவையை எடுத்து மீண்டும் அவளுக்கு அணிவித்தான்.
பிறகு குளிரில் அவள் நடுங்கி கொண்டிருப்பதை பார்த்து,
"அந்த டேப் ஹாட் வாட்டர் தான் யூஸ் பண்ணிக்கோ" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட, பெண்ணவளோ அவனது செய்கையில் சிலை என உரைந்து விட்டாள்.
அதேநேரம் குளியல் அறையில் இருந்து வெளியே வந்த ஆதித், ஒரு நிலை இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த மனதிற்கு மிகச் சிரமப்பட்டு கடிவாளமிட்டவன், தன் தாயை இவ்வளவு நேரம் காக்க வைத்ததை எண்ணி குற்ற உணர்வில் தன்னை தானே கடிந்து கொண்டவன்.
வேகமாக ஈர உடையை மாற்றிவிட்டு ஓடி சென்று கதவை திறந்து அதே வேகத்தோடு தன் தாயை அணைத்துக் கொள்ள, அவனை தன்னிடம் இருந்து வலுக் கட்டாயமாகப் பிரித்து எடுத்த மகாலட்சுமி ஓங்கி அவனது கன்னத்தில் அறைந்திருந்தார்.
அடுத்த அத்தியாயம் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
ஆதவன் 11
Last edited:
Author: Naemira
Article Title: ஆதவன் 10
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ஆதவன் 10
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.