Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

ஆதவன் 12

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
ஆதவன் 12

தனது வாலட்டிலிருந்து கிரெடிட் கார்ட் ஒன்றை எடுத்து வர்ஷாவிடம் நீட்டிய ஆதித்,

"உன்னுடைய பர்சேஸ்க்கு இதை யூஸ் பண்ணிக்கோ" என்றான்.

அவளோ, "இல்ல எனக்கு வேண்டாம்" என சிறு பதற்றத்துடன் உடனே மறுக்க அவளை சலிப்புடன் பார்த்த ஆதித்,

"வேண்டாம்ன்னா வாழ்க்கை முழுக்க என் அம்மா டிரஸ்ஸையே போட்டுக்கிட்டு ப்ளவுஸை அட்ஜஸ்ட் பண்ணிட்டே சுத்திட்டு இருக்க போறியா" என்று கடுப்புடன் கேட்கவும், ப்ளவுஸை கழுத்து வரை இழுத்து விட்டபடி ஆதித்தை ஏறிட்டவள்,

"என் டிரஸ் என் திங்ஸ் எல்லாம் என் அம்மா வீட்ல தான் இருக்கு அதை எடுத்துக்கிறேன்" என்றாள்.

அவனோ, "சரி உனக்கு மத்த தேவையே இருக்காதா அதுக்கு என்ன பண்ணுவ? அதெல்லாம் வாங்குறதுக்கு இந்த கார்டு யூஸ் பண்ணிக்கோ" என்று மறுபடியும் கார்டை நீட்ட, இந்த முறையும் வேண்டாம் என்பதுபோல தலை அசைத்த வர்ஷா, "என்கிட்ட பணம் இருக்கு" என்றாள்.

அதுவரை சாதாரண மனநிலையுடன் அவளிடம் உரையாடிய ஆதித் அவள் பணம் இருக்கு என்றதும் யோசனை வந்தவனாக அவளது விழிகளை பார்த்தவன்,

"இல்லாம எப்படி இருக்கும்?" என்றான் இகழ்ச்சியாக.

அதை கேட்ட வர்ஷா புரியாமல் அவனை பார்க்க, மேலும் தொடர்ந்த ஆதித்தோ, "பணத்தை வாங்கிட்டு தானே அப்படி ஒரு கேவலமான வேலையை செஞ்ச" என பற்களை கடித்த படி சட்டென்று கூறிவிட, இப்பொழுது அவன் எதை குறிப்பிட்டு கூறினான் என்பதை புரிந்து கொண்ட வர்ஷாவுக்கு கண்கள் எல்லாம் கலங்கிவிட, கலங்கிய கண்களை அவனுக்கு தெரியாது மறைத்து கொண்டவள்
அவனுக்கு முகம் காட்டாது திரும்பி நின்று கொண்டு கண்ணீரை துடைத்தாள்.

ஆனால் அவள் கண்கள் கலங்கும் போதே கண்டு கொண்ட ஆதித்திற்கு அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாக புரிய, இன்னும் இங்கே நின்றால் ஏதும் பேசி விடுவோம் என்கிற எண்ணத்தில் வேகமாக வாசல் வரை சென்றவன் பின்பு என்ன நினைத்தானோ ஒரு கணம் நின்று,

"உன் வீட்டுக்கு போகணும்ன்னு சொன்னல, டிரைவர் கிட்ட சொல்லிட்டு போறேன் அவரு உன்னை டிராப் பண்ணுவாரு" என்று அவளைப் பார்க்காமல் கூறிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் கட்டிலில் அமர்ந்தபடி கண்களை துடைத்து கொண்ட வர்ஷாவுக்கு எண்ணமெல்லாம் தனது பெற்றோர்களைப் பற்றி இருக்க, அவர்களைக் காண வேண்டும் என்னும் ஆவலில் தனது அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு புது இடம் என்பதால் இப்பொழுது கொஞ்சம் நெருடலாக தான் இருந்தது, சிறு தயக்கத்துடன் மாடிப்படியில் இருந்து ஹாலுக்கு வந்தவள் யாரும் இருக்கிறார்களா என்று தேடினாள்.

ஆனால் அவளது நேரத்திற்கு ஹாலில் யாரும் இல்லாமல் போகவே, யாரிடம் சொல்லிவிட்டு செல்வது என்று தயங்கியபடி நின்று கொண்டிருந்தாள்.

அப்பொழுது, "சரிங்க ஐயா நாளைக்கு காலையில நானும் என் வீட்டுக்காரரும் உங்கள பார்க்கிறதுக்கு வர்றோம்" என்று அலைபேசியில் ஜோதிடரிடம் பேசியபடி தனது அறையில் இருந்து வெளியே வந்த மகாலட்சுமி தற்செயலாக ஹாலில் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த வர்ஷாவை பார்த்தவர் யோசனையுடன் அவள் அருகில் வர, இதழுக்கு வலிக்காத புன்னகையுடன் அவரை எதிர்கொண்ட வர்ஷா,

"என் வீட்டுக்கு திங்க்ஸ் எடுக்க போகணும்" என்றாள் தயக்கமாக.

"ஆதி சொன்னான் மா, நீ போயிட்டு வா முத்து அண்ணன் வெளியில தான் இருக்காரு அவரு உன்னை டிராப் பண்ணுவாரு" என்று கூறிவிட்டு மஹாலக்ஷ்மி அங்கிருந்து சென்றுவிட, தான் செல்ல வேண்டிய இடத்தை டிரைவரிடம் சொல்லிவிட்டு காரில் ஏறிக்கொண்ட வர்ஷாவின் மனம் முழுவதிலும் அவளது தாய் தந்தையரை பற்றிய யோசனை தான் ஓடிக் கொண்டிருந்தது, தனது அன்னையின் கோபத்தை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த வர்ஷாவுக்கு அவரை எண்ணி தான் கலக்கமாக இருந்தது, இருந்தாலும் நேரில் தன்னை பார்க்கும் பொழுது தனது தாயால் வெகு நேரத்திற்கு தன் மீது கோபத்தை காட்ட முடியாது என்று நம்பியவள் என்ன ஆனாலும் இன்று எப்படியாவது அவர்களை சமாதானம் படுத்தி விட வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.

கிட்டத்தட்ட 20 நிமிட பயணத்தின் முடிவில் சிறு தயக்கத்துடன் காலிங் பெல்லை அழுத்திய வர்ஷா தனது தாய் தந்தையரை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்? அவர்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வது? என்கின்ற பதட்டத்துடன் தனது வீட்டின் வாசலில் காத்திருக்க, அவளை வெகு நேரம் காக்க வைக்காது கதவைத் திறந்த கேசவன் வாசலில் நின்றிருந்த தன் மகளை அதிர்ச்சியுடன் பார்க்க, தன் தந்தையை கண்டதும்,

"அப்பா" என்ற வர்ஷா கண்கள் கலங்க அவர் நெஞ்சில் சாய்ந்து கொள்ள, மகளைக் கண்டதில் கேசவனுக்கும் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது.

ஆயிரம் இருந்தாலும் மகள் ஆயிற்றே கண்கள் கலங்க அப்பா என்று அழைத்து தன் நெஞ்சில் சாயவும் அவரால் விலக்கி வைக்க முடியவில்லை தன் கோபத்தை விட்டு விட்டு அவளது சிகையை வாஞ்சையுடன் தடவினார்.

அப்பொழுது,
"யாருங்க வந்து இருக்கிறது?" என்று கேட்டபடி அங்கே வந்த வேணி வர்ஷாவை ஒரு கணம் பார்த்துவிட்டு தன் கணவரிடம்,

"இவ எதுக்கு இப்ப இங்க வந்திருக்கா?" என்றார் கோபமாக.
தனது தாயின் குரல் கேட்டதும் தன் தந்தையிடம் இருந்து விலகியவள்,

"எப்படிமா இருக்க" என்று கேட்டபடி வர்ஷா தன் தாயை அணைக்க போக, வேண்டாம் என்பது போல தன் கரத்தை உயர்த்தி காட்டி அவளை எட்ட நிறுத்திய வேணி, "வாசலை தாண்டி உள்ள வரக்கூடாது" என்றவர் தன் கணவரை பார்த்து, "எப்படியோ இருந்துட்டு போறோம், இவளுக்கு என்ன வந்துச்சு, பார்க்க புடிக்கலைன்னு சொன்னா புரியாதா" என்று கடுமையாக சொல்ல, வர்ஷாவின் முகம் விழுந்து விட்டது.

உடனே அவளோ,
"ம்மா சாரிமா" என தன் தாயின் கரத்தைப் பிடித்துக் கொள்ள, "விடு" என்றபடி தன் கரத்தை வேகமாக உருவிக்கொண்ட வேணி,

"ஏற்கனவே நீயும் உன் தங்கச்சியும் எங்க மானத்தையெல்லாம் வாங்கிட்டீங்க, உயிர் இருந்தும் நடப்பிணமா தான் இருக்கோம். அதுவும் உனக்கு பிடிக்கலையா உயிரையும் வாங்கிட்டு போலாம்ன்னு வந்திருக்கியா?" என்றார் அடக்கி வைத்த கோபமெல்லாம் வார்த்தையில் வெளிப்பட்டது.

"ஏம்மா இப்படி எல்லாம் பேசுற?" அழுகையுடன் வினவினாள்.

"வேற எப்படி டி பேசுறது லவ் பண்ணி இருந்தா சொல்லி இருக்கலாம்ல. இப்படி சபையில எங்க மானத்தை வாங்கிட்டியே, பிரஜன் அம்மா என்ன எல்லாம் சொன்னாங்க தெரியுமா.
பணத்துக்காக நீ அந்த பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டியாம் நானும் உன் அப்பாவும் பணத்துக்காக உங்களை வச்சி வியாபாரம் பண்றோமாம்" வேணியால் மேலும் பேச முடியவில்லை தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது.

"சாரிமா எல்லாமே என்னால தான்" கெஞ்சினாள்.

"உன் சாரி யாருக்கு டி வேணும், சாரி கேட்டா பட்ட அவமானம் எல்லாம் இல்லைன்னு ஆயிடுமா? உன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தேன் வர்ஷா, ஆனா நீ எல்லாத்தையும் மொத்தமா உடைச்சுட்ட, இப்போ எனக்கு உன்ன பாக்க கூட புடிக்கல, நான் உயிரோடு இருக்கணும்னு நினைச்சன்னா இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காத போ" என்று சத்தமாக கத்திய வேணி நெஞ்சம் படபடக்க வாசல் கதவின் நிலையைப் பிடித்துக் கொள்ள, கேசவனும் வர்ஷாவும் பதறிவிட்டார்கள்.

"என்னாச்சும்மா" என்ற வர்ஷாவை தொடர்ந்து,

"என்னாச்சு வேணி" என்று தன்னைப் பிடித்துக் கொண்ட கணவரிடம்,

"முதல்ல இங்கிருந்து இவள போக சொல்லுங்க" என்று சொல்ல,

"நீ கொஞ்சம் பொறுமையா இருமா" என்றவர்,

"வர்ஷாவை கொஞ்சம் உள்ள விடு, இப்படி வாசல்லையே நிக்க வச்சி கத்தாத, அவளுடைய திங்ஸை எடுக்க தான் வந்திருக்கா எடுத்துட்டு அவளே கிளம்பிடுவா" என்றார் கேசவன்.

அதை கேட்ட வேணி, "பொல்லாத திங்ஸ் திங்ஸை தானே எடுக்கணும்" என்றவர் "அவ உள்ள வரக்கூடாது" என்று கூறிவிட்டு வேகமாக வர்ஷாவின் அறைக்குள் சென்றார்.

வர்ஷாவோ என்னப்பா இது என்பது போல தன் தந்தையை பார்க்க, "உன் அம்மா கோபம் தான் உனக்கு தெரியும்ல அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு வர்ஷா" என்றார் கேசவன்.

ஆனால் அதற்கு தலையை குறுக்காக ஆட்டி மாட்டேன் என்பது போல தனது மறுப்பை தெரிவித்த வர்ஷா, "அம்மா பேசாம நான் இங்க இருந்து எங்கேயும் போக மாட்டேன்" என்றாள் பிடிவாதமாக.

அதே நேரம் திருமணம் முடிந்த பின் பிரஜன் வீட்டிற்கு செல்வதற்காக ஏற்கனவே அடுக்கி வைக்கப்பட்டிருந்த வர்ஷாவின் உடைப்பெட்டியை வேகமாக இழுத்துக் கொண்டு வந்த வேணி அதே வேகத்தில் அதை வெளியே வைத்தவர் தனது கணவரை பார்த்து, "எடுத்துட்டு போக சொல்லுங்க" என்று சொல்ல, அதைக் கேட்ட வர்ஷா,

"நீ என்கிட்ட பேசுற வரைக்கும் நான் வாசல்ல தான் நிப்பேன். எங்கேயும் போக மாட்டேன்" என நாசியை இழுத்தபடி பிடிவாதமாக கூறினாள்.

ஆனால் வேணியோ கொஞ்சமும் இறங்காமல், "அது உன் இஷ்டம்" என்றவர், "வேணி என்ன பண்ணிட்டு இருக்க" என்ற தன் கணவரிடம், "என்ன பண்ணனுமோ அதான் பண்ணிட்டு இருக்கேன்" என்று கூறிவிட்டு வர்ஷாவின் முகத்தைக் கூட பார்க்காது கதவை இழுத்து பூட்டினார்.

தன் தாயின் செய்கையில் வர்ஷாவுக்கோ கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வடிய, "ம்மா கதவை திறமா" என கண்ணீரை துடைத்துக் கொண்டே கதவை தட்டினாள்.

கதவை சாற்றியதும் அப்படியே அதில் சாய்ந்த வேணிக்கு இதுவரை அடக்கப்பட்டு இருந்த வலியும் வேதனையும் கண்ணீராக வெளிப்பட, வாயை மூடிக் கொண்டு அழுதவருக்கு மகளிடம் தான் நடந்து கொண்டதை எண்ணி வருத்தமாக தான் இருந்தது ஆனாலும், பிரஜன் வீட்டினர், சுற்றத்தார், உறவினர் என்று அனைவரது பேச்சாலும் மனதளவில் மிகவும் அடி வாங்கிய வேணியால் வர்ஷா செய்ததை அவ்வளவு எளிதில் மறந்து மன்னித்து ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கோபத்திற்கும் பாசத்திற்கும் நடுவே சிக்கிக் கொண்டு முடிவெடுக்க முடியாது தத்தளித்தவர் இயலாமையுடன் கணவரை பார்க்க, அவருக்குமே என்ன சொல்வதென்று தெரியவில்லை.

@@@@@@@@@@@@@

இதே நேரம் தனது அலுவலக அறையில் அமர்ந்தபடி கணினியில் சில புகைப்படங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆதித் அதிருப்தியுடன் தன் எதிரே அமர்ந்திருந்த ஆகாஷை பார்த்து,

"இவங்க எல்லாருமே 6 ஃபீட் அபோவ் இருக்காங்க டா, ஆனா நமக்கு 5.7 ரேஞ்ச்ல தான் வேணும், பேசாம ஆடிஷன் அரேஞ் பண்ணிக்கலாம்" என்று கூறினான்.

அதற்கு ஆகாஷ், "ஆனா நாம பண்ண போறது பெரிய பட்ஜெட் படம் டா, நியூ பேஸ் செட் ஆகுமா? இப்போலாம் பெரிய ஆர்டிஸ்ட் வச்சு எடுக்கிற படமே ஃப்லாப் ஆகுதே"

"நீ சொல்றது சரிதான் ஆனா இவங்க யாருமே என் மனசுல இருக்குற ஹிஸ்டாரிக்கல் கேரக்டரோட மேட்ச் ஆக மாட்டேங்குறாங்களே" என்றான் ஆதித்.

அதற்கு "அது ஓகே டா ஆனா மகேந்திரன் சார் ஒத்துக்கணுமே" என்றான் ஆகாஷ்.

"அவர்கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ணுவோம் அதுக்கப்புறம் அவர் சொல்ற முடிவை வச்சு மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்." என்ற ஆதித்திடம்,

"சரிடா அப்போ ஆடிஷனுக்கு தேவையான ஏற்பாடு பண்றேன்" என்ற ஆகாஷ் ஆதித்தின் அறையில் இருந்து வெளியேறியதும், ஆதித்தின் அலைபேசி அலறியது.

@@@@@@@@@

இதற்கிடையில்,
"அம்மா நீ என்கிட்ட பேசாம நான் இங்க இருந்து நிச்சயமா போக மாட்டேன்" என்று அழுதபடி கூறிய வர்ஷாவோ பிடிவாதமாக வீட்டு வாசலில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து விட, அந்த வழியே வந்தவர்கள் போனவர்கள் என அனைவரும் அவளை ஒரு மாதிரி பார்த்தபடி செல்ல, சிலரோ,

"இவதாண்டி கல்யாணத்தன்னைக்கு அந்த சினிமாக்காரன் கூட ஓடிப் போனவ, மொத்த குடும்பத்தோட மானத்தையும் வாங்கிட்டு இப்ப எப்படி வந்து உட்கார்ந்து இருக்கா பாரு" என்று வர்ஷா காதுபடவே கூற, அவர்களது வார்த்தையாலும் பார்வையாலும் தனக்குள்ளே ஒடுங்கிப் போனவள் அப்படியே தனது முழங்காலை கட்டிக்கொண்டு அதில் முகம் புதைத்துக் கொண்டாள். வர்ஷாவுக்கு அவ்வளவு அவமானமாக இருக்க,

"ஏன் நிரோ இப்படி பண்ணின" என்று வாய்விட்டு கூறியவளுக்கு கண்ணீராய் வந்தது.

முகத்தை முழங்காலில் புதைத்தபடி வர்ஷா அமர்ந்திருந்ததை ஜன்னல் வழியாக பார்த்த வேணிக்கு ஒரு மாதிரி ஆகிவிட அந்நேரம் அவரிடம்,

"தப்பே பண்ணி இருந்தாலும் அவ நம்ம பொண்ணு வேணி, உள்ள கூப்பிடுவோம் நீ பேச வேண்டாம் நான் பேசி அவளை அனுப்பி வைக்கிறேன். வாசல்ல அவ இப்படி உட்கார்ந்து இருக்கறத என்னால பார்க்க முடியல கஷ்டமா இருக்கு, உனக்கும் கஷ்டமா இருக்குன்னு எனக்கு தெரியும், உள்ள கூப்பிடுவோம் பா" என்று கேட்ட கணவரிடம் சரி என்பதாய் வேணி தலையசைக்க, வேகமாக சென்று கதவை திறந்த கேசவன் வர்ஷாவை அழைக்கும் முன்பு அவளது கரத்தை இறுக்கமாக பிடித்திருந்தான் ஆதித்.

தனது கரத்தை யாரோ பற்றவும் சற்றென்று நிமிர்ந்து பார்த்த வர்ஷா, தன் முன்னே ஆதித்தை கண்டதும் அதிர்ச்சியுடன் அவனை நோக்கியவள், பின்பு தன் அருகே நின்றிருந்த தன் தந்தையை கண்டு எழுந்து நின்று ஒருவித எதிர்பார்ப்புடன் அவரைப் பார்க்க, இப்பொழுது ஆதித்தின் பிடி இறுகியது.

அப்பொழுதுதான் நினைவு வந்தவளாக தன் கரம் அவனது கரத்திற்குள் சிக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தவள், நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவனோ "வா போலாம்" என்றான் அழுத்தமாக.

இதற்கிடையில் ஆதித்தை அங்கே கண்ட கேசவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை சில நொடிகள் அமைதியாக நின்றவர் பின்பு நாகரிகம் கருதி, ரெண்டு பேரும் உள்ள வாங்க என்றார் தயக்கத்துடன்.

அதற்கு அவனோ, "இத நீங்க முதல்லயே பண்ணிருக்கணும்" வர்ஷாவை வெளியே நிற்க விட்டதை பற்றி குறிப்பிட்டு கூறியவன், கேசவனை பார்த்து, "இப்போ வேண்டாம் அது சரியா இருக்காது அப்புறமா ஒரு நாள் கூட்டிட்டு வரேன்" என்றவன், வர்ஷாவின் கரத்தை பிடித்த படி நகர, "ப்ளீஸ்" என்றாள் மெல்லிய குரலில்.

அவனோ, "என்ன" என்று கேட்டபடி அவள் முகத்தை பார்த்துவிட்டு அவளது விழிகளை பார்த்தான், அதில் என்ன புரிந்ததோ, சட்டென்று தன் பிடியை தளர்த்தியவன், "கார்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன், நீ பேசிட்டு வா" என்று கூறிவிட்டு தனது காரில் ஏறிக் கொண்டான்.

@@@@@@

"என்ன ஆச்சு அண்ணா? நீங்க மட்டும் வரிங்க வர்ஷா எங்க?" வர்ஷாவின் உடைப்பெட்டியுடன் வாசலில் நின்ற முத்துவை பார்த்து வினவினார் மகாலட்சுமி.

மகாலட்சுமியிடம் நடந்தது அனைத்தையும் கூறி விட்டு தான் தான் ஆதித்திற்கு அழைத்து நடந்த விஷயத்தை பற்றி கூறியதையும் சொன்ன முத்து,

"சின்னம்மா இப்போ ஆதி தம்பி கூட தான் இருக்காங்க அம்மா" என்றவர் உடைப்பெட்டியை எங்கே வைக்க வேண்டும் என்று கேட்டு அங்கே வைத்துவிட்டு வெளியேறிவிட, தனது அலைபேசியை எடுத்து ஆதித்தின் இலக்கை அழுத்திய மகாலட்சுமி அவன் அழைப்பை ஏற்பதற்காக காத்திருந்தார்.

@@@@@@@@@

வடப் பக்கமும் இடப் பக்கமும் தலை மாறி மாறி சரிந்து விழ, சிகை மறைத்த பாதி வதனத்துடன் சேர்ந்து, இதழ்கள் இரண்டும் பிளவுற்றிருக்க மெல்லிய குறட்டை சத்துடன் சீட் பெல்ட் கூட போடாமல் உறங்கிக் கொண்டிருந்தவள் மேல் ஒரு கண் வைத்தபடி நிதானமாக சாலையை கடந்து ஓரமாக காரை நிறுத்தினான் ஆதித்.
காரில் அவள் ஏறியதுமே சீட் பெல்ட் போட சொல்ல நினைத்தவன் திரும்பி வர்ஷாவை பார்க்க, அவளோ விழிகளில் இருந்து வழியும் விழி நீரை கூட துடைக்காது சாலையை வெறித்தபடி அமர்ந்திருக்க, ஆதித்திற்கு அவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அதே நேரம் அவனுக்கு என்ன சொல்வதென்றும் புரியவில்லை, ஆதித்திற்கு அவளது தாய் தந்தை மீது தான் கோபம் வந்தது.

'அவர்களுக்கு அவள் மீது எவ்வளவு கோபம் வேண்டுமானாலும் இருக்கட்டும் அதற்காக வெளியிலேயே வா நிற்க விடவேண்டுமா? உள்ளே அழைத்தாவது பேசியிருக்கலாமே' என மனதிற்குள் அவளுக்காக ஆதங்கப்பட்டவன், தாய் தந்தை நம்மிடம் பேசவில்லை என்றால் அது எவ்வளவு பெரிய வலியை கொடுக்கும் என்பதை தானும் அனுபவித்து இருப்பதாலோ என்னவோ வர்ஷாவின் நிலையை எளிதில் புரிந்து கொண்டான்.

எனவே சிறிது நேரம் கழித்து அவள் ஆசுவாசமடைந்ததும் சொல்லிக் கொள்ளலாம் என்று எண்ணி ஏதும் பேசாது சாலையில் கவனமானான் ஆதித்.

ஆனால் சற்று நேரத்தில் எல்லாம் சாலையில் வண்டியின் ஓட்டம் அதிகமாக காணப்படவும் சீட் பெல்ட் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட, பெல்ட்டை அணிய சொல்வதற்காக அவன் அவள் பக்கம் பார்க்க, அவளோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

"அழுதுட்டே தூங்கிட்டா போல" என்ற ஆதித்துக்கு அவளை எழுப்பும் எண்ணம் மட்டும் வரவே இல்லை, சாலை நெரிசலைக் கடந்ததும் காரை எங்கேயாவது ஓரமாக நிறுத்தி சீட் பெல்டை போட்டு விடலாம் என்று எண்ணி கொண்டவன், கீழே சரியவிருந்த அவளது தலையை மட்டும் தனது ஒற்றை கரத்தால் நேர்படுத்தி அவள் மீது ஒரு கண் வைத்தபடி சாலை நெரிசலுக்கு இடையே கடினப்பட்டு காரை ஓட்டினான்.

பின்பு சில நிமிடங்கள் கழித்து சாலை நெரிசலை கடந்து வந்ததும் காரை ஓரமாக நிறுத்தி, வர்ஷாவை நெருங்கி அவளுக்கு சீட் பெல்டை அணிவித்து விட்டவன், தற்செயலாக அவளது மூடி இருந்த இமைகளில் ஒரு துளி விழி நீர் மட்டும் விழவா என்பது போல தொடுக்கி கொண்டிருப்பதைக் கண்டு அதை தன் விரலில் ஏந்திக்கொண்டபடி
அவளைப் பார்த்தான்.

தலை அவனைப் பார்த்தபடி சரிந்து இருக்க, சற்று முன்பு இருந்தது போல் அல்லாமல் ஒரு சில முடி கற்றைகள் மட்டும் அவளது நெற்றி ஓரம் விழுந்து கிடந்ததை கவனித்தவன், வர்ஷாவின் உறக்கம் கலையாமல் மெதுவாக அவளது சிகையை காதோரம் ஒதுக்க இப்பொழுது அழுததற்கு சாட்சியாய் கண்ணீர் துளிகள் எல்லாம் காய்ந்து ஆங்காங்கே கோடுகளாய் மாறி, வறண்டு பொலிவிழந்து காணப்பட்ட அவளது முகத்தை பார்த்தான்! பார்த்துக் கொண்டே இருந்தான்! சாதாரண அவனது பார்வை அவனே அறியாது ரசனையாக மாறிய தருணம் அது.

அப்பொழுது கணப்பொழுதில் தோன்றிய ஏதோ ஒரு ஊன்றுதலில் தன்னை மறந்தவன், எதைப்பற்றியும் யோசிக்காது அவளது கன்னத்தை நோக்கி குனிந்த நேரம் தூக்க கலக்கத்தில் வர்ஷா முகத்தை திருப்ப, கன்னத்தில் பதிய வேண்டிய அவனது இதழோ இப்பொழுது அவளது இதழோடு பதிந்துவிட்ட, அந்நேரம் பார்த்து அவனது அலைபேசி வேறு அலற, இதற்கிடையில் நடந்த அந்த நிகழ்வால் பதற்றத்துடன் வர்ஷாவும் விழித்துக் கொள்ள, ஆதித் அதிர்ந்து விட்டான்.

அலைபேசி ஒரு பக்கம் அலறிக் கொண்டே இருக்க, தன்னைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த வர்ஷாவை எவ்வாறு சமாளிப்பது என்று புரியாமல் தவித்த ஆதித்தோ வர்ஷா திணறியபடி எதையோ பேச வரவும் முந்தி கொண்டவன்,

"இப்ப எதுக்கு என்னை கிஸ் பண்ணின" என்றான் பொய்யான அதிர்ச்சியுடன்.

"நானா" இப்பொழுது அதிர்வது அவளாகி போக, ஆனால் அவனோ விடாமல்,

"பின்ன நானா" என்று சற்று கோபமாக கேட்டவன் அவளது மருண்ட விழிகளை பார்த்தபடி,

"நல்லா தூங்கிட்ட டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு சீட் பெல்ட் போட்டு விட்டேன், அந்த கேப்ல கிஸ் பண்ணிட்ட"
என்று கூறவும் அவனிடம்,

"நான் அந்த மாதிரி எதுவும் பண்ணல" என்று வர்ஷா பதற்றத்துடன் கூறினாள்.

அவளது பதற்றத்தை உள்வாங்கிய ஆதித்திற்கே தன் மீது தவறை வைத்து கொண்டு வர்ஷா மீது பழி போடுவது ஒருமாதிரி இருக்க,

"ஓ அப்போ தூக்க கலக்கத்துல உன் லிப்ஸ் தெரியாம பட்டிருக்கும்ன்னு நினைக்கிறேன்" என்று அவளை சமாதானப்படுத்தும் நோக்கில் ஒரு பொய்யை அடித்து விட, அதைக் கேட்ட வர்ஷாவோ 'இப்படியெல்லாமா நடக்கும்' என்று மனதிற்குள் யோசித்தபடி குழப்பத்துடன் அவனைப் பார்க்க அவளது குழப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஆதித்,

"இதுதான் லாஸ்ட் இனிமே இப்படி எல்லாம் பண்ண கூடாது சரியா" என்று தீவிரமான முகபாவத்துடன் அழுத்தமாக சொல்ல, அவனது திடீர் முகமாற்றத்தில் அனிச்சையாக சரி என்பது போல் தலையசைத்தவள் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்துகொள்ள அவளது அப்பாவியான முக பாவத்தை கண்டு ஆதித்திற்கு வியப்பாக இருந்தது.

'இவ என்ன இவ்ளோ அப்பாவியா இருக்கா! இவளா பணத்துக்காக நமக்கு அப்படி ஒரு காரியத்தை பண்ணினா? இவளுக்கும் இவ பண்ணின காரியத்துக்கும் சம்பந்தமே இல்லையே, இவ முகத்தை பார்த்தா நமக்கு கோபம் கூட வரமாட்டிகுது' என்று மனதில் எண்ணியபடி யோசனையுடன் அவளை பார்த்தவன், தனது அலைபேசி மீண்டும் அலறவும் தனது மனதில் தோன்றிய எண்ணத்தை அப்படியே விட்டுவிட்டு அலைபேசியில் கவனமானான்.

@@@@@@

அலைபேசியை ப்ளூடூத்துடன் இணைத்த ஆதித்,
"சொல்லுமா" ப்ளூடூத் வழியாக தன் தாயுடன் பேசியபடி காரை ஓட்டினான்.

"ஆமாம்மா என் கூட தான் இருக்கா முதல்ல தான் அழுதா இப்ப கொஞ்சம் ஓகேவா தான் இருக்கா, வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கோம் வந்து பேசிக்கலாம் பை மா" என்று அழைப்பு அணைத்தவன் ஒரு கணம் வர்ஷாவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு சாலையில் கவனம் ஆனான்.

@@@@@@@@@@@

வர்ஷாவுடன் வீட்டிற்கு வந்தவன் கொஞ்ச நேர ஓய்வுக்கு பின் இரவு உணவை முடித்துவிட்டு தனது அறைக்கு வந்த பொழுது அன்று போல கட்டிலின் நடுவே தலையணைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்ட ஆதித் உடனே வர்ஷாவை பார்க்க, கழுத்து முதல் கால் வரை போர்வையால் தன்னை நன்கு சுற்றிக் கொண்டபடி படுத்திருந்தவள் அவனை கண்டதும் வேகமாக கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள, அவளது பாவனையில் ஆதித்துக்கு ஒரு புறம் சிரிப்பு வந்தாலும், மற்றொருபுறம் தன்னை நினைத்தே கோபம் வந்தது.

வந்த முதல் நாள் துவங்கி தான் அவளிடம் நடந்து கொண்டதை பற்றி எண்ணிப் பார்த்தான்.

முழுதாக ஒருவாரம் கூட முடியவில்லை அதற்குள் நீ அவளை என்னவெல்லாம் செய்து விட்டாய், அதுவும் இன்று தவறை நீ செய்தது மட்டுமல்லாமல் அதை அவள் பக்கம் திருப்பி விட்டாயே? இதுதான் ஒரு பெண்ணிடம் நீ நடந்து கொள்ளும் லட்சணமா என்று அவனது மனம் இடித்துரைத்தது.

ஆனால் அவன் மனம் என்ன இடித்துரைக்க, தான் செய்தது தவறு என்பதைக் கூடவா புரிந்து கொள்ளாத நிலையில் ஆதித் இருக்கிறான், தன் மீது உள்ள தவறுதான் அவனுக்கு ஏற்கனவே புரிந்து விட்டதே, ஆனால் அதை ஒத்துக் கொள்ளும் நிலையில் தானே அவன் இல்லை, என்னவென்று அவன் சொல்லுவான் என் மனதிற்கு தோன்றியது அதனால் முத்தம் கொடுத்தேன் என்பானா அதை சொல்லும் நிலையிலா அவர்களது பந்தம் இருக்கிறது, காதல் திருமணத்தை விட்டு தள்ளுவோம், இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மனம் ஒத்து நடந்த திருமணம் கூட அல்லவே, அதீத கோபத்துக்கும், பலரது கண்ணீருக்கும், சிலரது சாபத்துக்கும் இடையே நடந்த திருமணம் ஆயிற்றே அப்படி இருக்க அவளிடம் எப்படி அவனால் இதை சொல்ல இயலும்.

இந்த உறவைத் அவனே இன்னும் மனதார ஏற்றுக் கொள்ளாத நிலையில், கொஞ்ச நாட்களுக்குள் அதுவும் வெறுக்க வேண்டியவளிடம் ஏன் தான் இவ்வளவு நெருக்கம் காட்டுகிறேன் என்று அவனே குழம்பிக் கொண்டிருக்க அவன் எவ்வாறு சொல்லுவான்.
வர்ஷாவின் விடயத்தில் தான் ஒருவித தழும்பல் நிலையில் இருப்பதை புரிந்து கொண்ட அதித், இனி அவள் விடயத்தில் மனதளவில் தெளிவு பெரும் வரை அவளை விட்டு தள்ளியே இருக்க வேண்டும் என்று காரில் வைத்தே முடிவெடுத்தவன், தனது தலையணையை மட்டும் எடுத்துக் கொண்டு சோபாவில் சென்று படுத்து கண்களை மூடினான்.


அப்பொழுது திடீரென்று கண்களை திறந்த ஆதித் தன்னை அதிர்ச்சியுடன் விழிவிரித்து பார்த்துக் கொண்டிருந்த வர்ஷாவை பார்த்து, "எதையும் யோசிக்காம நிம்மதியா கண்ண மூடி தூங்கு" என்றவன் மீண்டும் கண்களை மூடிக்கொள்ள, ஆதித்தின் பேச்சில் வர்ஷாவின் இதழ் மெலிதாக புன்னகைத்துக்கொண்டது.
 

Author: Naemira
Article Title: ஆதவன் 12
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top