ஆதவன் 25
வர்ஷாவின் ஒரு கரமோ தன் தாயின் கரத்துடன் பிணைக்கப்பட்டிருக்க, அவளது மற்றொரு கரமோ ஆதித்தின் கரத்துடன் பிணைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே நடந்தேறிக் கொண்டிருக்கும் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் திணறிக் கொண்டிருந்தவள், அதித்தை அங்கே கண்டதில் இன்னுமே பதறி போனாள்.
இப்பொழுது தான் எல்லாம் சரியாகிவிட்டதே, இன்னும் ஏன் இந்த பொய்? உண்மையை கூறிவிட வேண்டியது தானே என்று வர்ஷாவின் ஒருமனம் அவளுக்கு எடுத்து கூறினாலும், அவளது இன்னொரு மனமோ தங்கையை காட்டிக்கொடுக்க தயங்கியது.
என்ன ஆனாலும் நான் ஆதித்தின் மனைவி மேலும் இப்பொழுது என் மீது அதீத காதலை வைத்திருக்கிறான் அதனால் மன்னித்துவிட்டான், மகனுக்காக மற்றவர்களும் என்னை மருமகளாக ஏற்றுக்கொண்டார்கள் ஆனால் என் தங்கை என்று வரும்பொழுது இதே மனநிலையுடன் அவர்கள் இருப்பார்களா? ஒருவேளை நிரோஷாவை தவறாக நினைத்துவிட்டால்? என்று எண்ணியவளுக்கு, ஆதித்திடம் இன்னும் உண்மையை மறைப்பது நெருடலாக இருந்தாலும் அவளுக்கு உண்மையை கூறவும் விருப்பமில்லை.
மேலும் தங்கைக்காக பழியை ஏற்றுக் கொண்டது ஏற்றுக் கொண்டதாகவே இருக்கட்டுமே, ஏன் உண்மையை கூறி அவளது வாழ்வில் சிக்கலை ஏற்படுத்த வேண்டும். எங்கோ ஒரு மூலையில் தனக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டு நிரோஷா நிம்மதியாக வாழட்டுமே என்று எண்ணிய வர்ஷா இனி என்ன ஆனாலும் சரி ஏற்றுக்கொண்ட பழியுடனே வாழ முடிவெடுத்தவள் பிரச்சனையை தானே சரி செய்ய வேண்டும் என்கிற தீர்க்கமான முடிவுடன் தன்னவனையும் தன் தாயையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருக்க, வர்ஷாவின் முகத்தில் இருந்த பதற்றத்தை உள்வாங்கிய ஆதித் வேணியை பார்த்து,
"ஆன்டி நீங்க பேசினதை நான் கேட்டுட்டு தான் உள்ள வந்தேன், ஆனா நீங்க இவ்வளவு டென்ஷன் ஆக வேண்டிய அவசியமே இல்லை. நடந்த எல்லாமே பாஸ்ட். வீட்ல கூட யாரும் இப்போ அதை பத்தி பேசுறது இல்லை. ஏன் நாங்க இரண்டு பேரும் கூட இப்போ ஹப்பியா இருக்கோம்." என சொல்லவும், அடக்கப்பட்ட கோபத்துடன் அவனை பார்த்த வேணி, ஆதங்கத்துடன்,
"தம்பி உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல.." என்று பேசிகொண்டிருக்கும் பொழுதே,
"அம்மா ப்ளீஸ்" என்று தனது தாயின் பேச்சை இடை நிறுத்தியபடி தொடர்ந்த வர்ஷா,
"நான் பேசிக்கிறேன்" எங்கே நிலைமை கைமீறி போய் விடுமோ என்கின்ற பயத்தில் தாயை சமாளிப்பதற்காக அவ்வாறு கூறினாள்.
"இன்னும் என்ன பேச போற, எதுனாலும் வீட்ல போய் பேசிக்கலாம் முதல்ல வா" என்று அவர் அழைக்கவும்,
"வர்ஷா ஏன் வரணும்?" அவளது கரத்தை இன்னும் அழுத்தமாக பற்றியப்படி வினவினான் ஆதித்.
அப்பொழுது எதையோ பேச வந்த தாயை, "ம்மா" என்றபடி கெஞ்சுதளாக வர்ஷா பார்க்க,
"வரியா வரமாட்டியா" என்று வேணி வர்ஷாவிடம் அழுத்தமாக வினவினார்.
அவரால் ஊர்மிளா பேசியதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதுவும் வர்ஷாவை பற்றி நன்கு அறிந்தவரால் அவள் மீது சுமத்தப்பட்ட பழியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அதித் துவங்கி வர்ஷாவின் புகுந்த வீட்டினர் அனைவருமே நல்லவர்கள் தான், ஆரம்பத்தில் இருந்தே ஊர்மிளாவை தவிர எல்லாரும் தங்களை மரியாதையாக தான் நடத்துகிறார்கள். சந்திந்துகொண்டது இரண்டு முறை என்றாலும் தேவராஜும் சரி மஹாலக்ஷ்மியும் சரி ஒரு இடத்தில் கூட உங்களை விட நாங்கள் பணம் படைத்தவர்கள் என்று காட்டியதே கிடையாது. அதுவும் ஆதித் வர்ஷா மீதும் வைத்திருக்கும் நேசம் புரியாமல் இல்லை தான், இருந்தாலும் அவர்கள் அனைவரின் மனதிலும் தன் மகளை பற்றி இப்படி ஒரு கீழ் தரமான எண்ணம் இருப்பது சரியல்லவே, இதை ஆரம்பத்திலே சரி செய்யாமல் விட்டால் இந்த கரை காலத்துக்கும் அவளை விட்டு நீங்காதல்லவா?
இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் இதையெல்லாம் சொல்லி அவளை காயப்படுத்திவிட்டால்? அது தன் மகளின் தன்மானத்துக்கும் மரியாதைக்கும் இழுக்காகிவிடும் என்று எண்ணியவர், வர்ஷாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவளிடம் பேசி இந்த பிரச்னையை முழுவதும் சரி செய்து சகல மரியாதையுடன் தன் மகளை அவளது புகுந்த வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்து, வர்ஷாவை தன்னுடன் வருவதற்கு கட்டாயப்படுத்தினார்.
ஒரு பக்கம் தாய், மறுபக்கம் ஆதித் என்று இரண்டு பேருக்கும் இடையே சிக்கிகொண்ட வர்ஷா யார் சொல்வதை கேட்பது என்று தெரியாமல் மிகவும் திணறியவள் தன் தாயிடம்,
"கண்டிப்பா வரேன் மா ப்ளீஸ் ஒரு அஞ்சு நிமிஷம்" என்று மெல்லிய குரலில் கெஞ்சினாள்.
வர்ஷா கெஞ்சவும் பற்றியிருந்த அவளது கரத்தை விட்ட வேணி,
"வெளில வெயிட் பண்றோம் பேசிட்டு வா" என்றவர் மஹாலக்ஷ்மி மற்றும் தேவராஜ் இருவரையும் பார்த்து,
"கொஞ்ச நாள் எங்க பொண்ண எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம்" என்று கேட்க, மறுப்பு சொல்ல முடியாததால் விருப்பம் இல்லாவிட்டாலும் அவர்கள் இருவரும் சம்மதமாக தலையசைத்தார்கள்.
அப்பொழுது தேவராஜ் ஊர்மிளா பேசியதற்காக கேசவன் மற்றும் வேணியிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கவும்,
"என்னங்க நீங்க இதுக்கு ஏன் மன்னிப்பெல்லாம் கேக்குறீங்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை, நல்ல விஷயத்துக்காக வந்தோம் என்னவெல்லாமோ ஆகி போச்சி" என்றார் கேசவன்.
அந்நேரம் மஹாலக்ஷ்மி,
"உங்க மனசை புரிஞ்சிக்க முடியுது சம்பந்தி, ஆனா ஒன்னு வர்ஷா தான் எங்க வீட்டு மருமக அதுல எந்த மாற்றமும் கிடையாது.
அதனால நடந்து முடிஞ்சத நனைச்சி மனச கெடுத்துக்காத்தீங்க, பிள்ளைங்க சந்தோஷத்த மனசுல வச்சு, இனி நடக்கப் போறத மட்டும் யோசிச்சு, நல்ல முடிவா எடுங்க." என்று வேணியை பார்த்து சொல்ல, ஆமோதிப்பதாய் தலையசைத்த வேணி தன் கணவருடன் வெளியேறிவிட, இப்பொழுது வர்ஷாவின் விழிகள் ஆதித்தை பார்த்தது.
ஆதித்தோ தன் தாய் தந்தை மற்றும் வர்ஷாவை ஒரு பார்வை பார்த்தவன் தான் பற்றியிருந்த அவளது கரங்களை விட்டுவிட்டு வேகமாக தன் அறையை நோக்கி சென்று கதவை அடித்து சாற்ற, "டொம்" என்ற சத்ததில் இதயம் அதிர கண்களை மூடி திறந்த வர்ஷா மாடியில் இருக்கும் தங்கள் அறையையே பார்த்துகொண்டிருந்தாள்.
அந்நேரம் அவளது தோள் மீது கரம் வைத்த மஹாலக்ஷ்மி,
"போய் பேசு சரியாகிடுவான்." என்று தன்மையாக கூறியவர் ஊர்மிளாவை எரித்துவிடுவது போல பார்த்துவிட்டு தேவராஜூடன் அங்கிருந்து சென்று விட்டார்.
அப்பொழுது கலங்கிய விழிகளுடன் நின்றிருந்த வர்ஷாவின் அருகே வந்த ஊர்மிளா,
"என் பொண்ணு வாழ்க்கைய கெடுத்துட்டு சந்தோஷமா வாழ்ந்திடலாம்னு நினைச்சியா, நடக்கவே நடக்காது என் பொண்ணோட கண்ணீருக்கு நீ பதில் சொல்லி தான் ஆகணும்" என்று கோபமாக கூறிவிட்டு சென்றுவிட, வலியுடன் ஒரு கணம் அவரை பார்த்த வர்ஷா தயக்கத்துடன் ஆதித்தை காண சென்றாள்.
தாழிடப்படாததால் அவள் கரம் வைக்கவும் கதவு தானாக திறந்துவிட, வர்ஷா உள்ளே சென்றாள்.
ஆதித் கட்டிலின் மேல் அமர்ந்திருக்க அவனது முகம் இறுக்கமாக இருந்தது.
தயக்கத்துடன் அவன் அருகே வந்து நின்றவள்,
"கோபமா?" மெல்லிய குரலில் வினவினாள்.
"கோபப்பட என்ன இருக்கு?" கோபத்துடன் எங்கோ பார்த்தபடி அவன் கூறினான்.
அவளோ, "பொய் சொல்லாதீங்க நீங்க கோபமா தான் இருக்கீங்க எனக்கு தெரியும்" என்றாள்.
அதற்கு அவனோ,
"அதெல்லாம் ஒன்னும் இல்லை" என்று அவள் முகத்தை பார்க்காமல் சொல்லவும்,
"என் முகத்தை பார்த்து பேசுங்க" என்று வலுக்கட்டாயமாக அவனது வதனத்தை பிடித்து அவள் நிமிர்த்தவும்,
"அதெல்லாம் முடியாது"என்று பல்லை கடித்தபடி முகத்தை தூக்கியவனின் மடியில் வந்து வேகமாக அமர்ந்துவிட்டாள் வர்ஷா.
வர்ஷாவின் அதிரடியில் சற்று திகைத்தாலும் தன்னை சமநிலைப்படுத்திக்கொண்டு அவள் மீது ஆழமான பார்வையை ஆதித் பதிக்க, இருவரின் விழிகளுடன் சேர்த்து மூச்சி காற்றும் ஒருவர் மீது ஒருவர் அனலாக மோதி கொண்டது.
வர்ஷா விழுந்து விடாமல் இருப்பதற்காக அவளது இடையே பிடித்துக் கொண்டவன்,
"போறேன்னு பெருசா சொல்லிட்டு கிளம்பாம இங்க என்ன பண்ணிட்டு இருக்க நீ?" தன்னவளின் நெருக்கத்தில் நிற்கவா போய்விடவா என்று விட்டால் ஓடுவதற்கு தயாராக இருந்த கோபத்தை முயன்று இறுக்கமாக பிடித்து வைத்தபடி வினவினான்.
"இப்படி கோபமா இருந்தா எப்படி போக தோணும்" முகத்தைத் தூக்கியபடி வினவினாள்.
"கோபமெல்லாம் ஒன்னும் இல்லை போறதா இருந்தா போ" என்று அவனும் முகத்தை தூக்கவும்,
"இப்போ ஏன் முகத்தை தூக்கி வச்சிருக்கீங்க.?" அவன் கன்னம்பற்றி விழிகளை பார்த்து வினவினாள்.
"என் மூஞ்சே அப்படி தான்" என்றான்.
"ம்ஹூம் இல்லையே என் ஹண்ட்ஸம் ஹஸ்பண்ட் முகம் இப்படி இருக்காதே" காற்றில் அலைபாயும் அவன் சிகையை கோதியபடி அவன் காதில் அவள் கிசுகிசுக்கவும், ஆதித்திடம் அதுவரை இருந்த கொஞ்ச கோபமும் எங்கோ சென்றுவிட, தேகம் சிலிர்த்தடங்க
தன்னவளின் விழிகளை கிறக்கமாக பார்த்தவன்,
காற்று குரலில், "வேற எப்படி இருக்கும்?" அவள் காதுப்பக்க முடியை ஒதுக்கியபடி கேட்டான்.
அவளோ அவன் விழிகளை பார்த்தபடி அவன் இதழை நெருங்கியவள் தன்னவனின் நெற்றியோரம் துளிர்திருந்த வியர்வை துளிகளை மென்மையாக துடைத்து, அங்கே தன் இதழ் குவித்து ஊதவும் நெற்றியில் துவங்கி அவன் உடலெங்கும் பரவிய குளிர்மை இப்பொழுது அவனுக்குள் ஊடுருவி மோக தீயை பற்ற வைத்திருக்க, மெதுவாக கண்களை மூடிக்கொண்டான்.
கண்மூடி அமர்ந்திருந்தவனை பார்த்துக்கொண்டே தன் இதழை அவனது செவி அருகே கொண்டு சென்றவள்,
"இப்போ கோபம் போயிடுச்சா?" என்று கேட்க,
"ம்ம்" கண்களை மூடிய நிலையில் ஆமோதிப்பதாய் தலையசைத்தான்.
"அப்போ கொஞ்சம் சிரிக்கலாமே" அவனது தாடி அடர்ந்த வதனத்தை தன் இரு கரங்களால் பற்றிய படி அவள் கேட்கவும், மந்திரம் சொன்னது போல அவனது இதழ் மெலிதாக விரிந்து கொள்ள அதைக் கண்டு புன்னகைத்தவள்,
"சரி அப்போ நான் போயிட்டு வரேன்" என்றதும் முதலில் தன்னை மறந்து,
"ம்ம்" என்றவன் பிறகு தன்னவள் தன் மடியில் இருந்து எழுந்து கொள்ள பார்க்கவும், சட்டென்று சுதாரித்துக் கொண்டு அவளது இடையை பற்றி, கொஞ்சமும் இடைவெளி இல்லாது தன்னோடு சேர்த்து இறுக்கமாக அணைத்தபடி தனது மடியில் அமர வைத்துக் கொண்டான்.
வர்ஷாவோ அவனது அதிரடியில் திகைத்து விழிக்க, அவளது திகைத்த விழிகளில் முத்தம் பதித்தவனோ,
"என்னடி டெம்ப்ட் பண்ணிட்டு இப்போ ஓடினா விட்ருவேனா" என்று கேட்டபடி தன்னவளின் செவி மடலில் தன் மீசை உரச இதழ் பதிக்கவும், கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் தாக்கத்தால் சட்டென அதித்தின் சட்டையின் காலரை வர்ஷா பற்றி விட்டாள்.
இப்படி ஒரு நெருக்கத்தில் தன்னவளின் இதழை அணைக்காவிட்டால் பெரும் பாவம் என்று எண்ணியவன் பெண்ணவளின் இதழை நெருங்கிய தருணம், அவனது மார்பில் கரம் வைத்து அவனை தடுத்த வர்ஷா,
"அப்பா அம்மா வெயிட் பண்றாங்க" அவன் விழிகள் பார்த்தபடி தவிப்புடன் கூறினாள்.
சட்டென்று வர்ஷாவிடம் இருந்து வந்த விலகல், தாபத்தில் மூழ்கியிருந்தவனுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்க அதைப் புரிந்து கொண்ட பெண்ணவளோ,
"சாரி" என்று கேட்கவும், அவள் உள்ளத்தில் இருக்கும் தவிப்பை புரிந்து கொண்டவன்,
"ச்ச இதுக்கு ஏன் சாரி, மொத்தமா அப்புறம் வாங்கிக்கிறேன்" என்று புன்னகையுடன் கூறி கண்ணடித்தவன் அப்படியே தன்னவளை பின்னிருந்த அணைத்தபடி தன் மார்பில் செய்து,
"என்னடி நீ கண்டிப்பா போகணுமா" அவளது விரல்களை மென்மையாக பற்றியபடி வினவினான்.
"ஒரு நாள் தானே. நீங்களும் இன்னைக்கு நைட் பெங்களூர் கிளம்புறீங்கள்ல. நீங்க ரிட்டரன் ஆகும் பொழுது நானும் வந்துருவேன். ஏற்கனவே பேசினது தானே, நீங்க பெங்களூர் போனதும் என்னை எங்க வீட்டுக்கு போயிட்டு வர சொன்னீங்க தானே." பக்கவாட்டாக திரும்பி அவன் முகம் பார்த்து வினவினாள்.
"உன் வீட்டுக்கு போறதெல்லாம் எனக்குப் பிரச்சனை இல்ல, ஆனா இப்படி ஒரு நிலைமையில போறது தான் எனக்கு விருப்பமில்லை" என்றான்.
"எனக்கும் தான் ஆனா வழியில்லையே நான் போய் தான் ஆகணும். அம்மா ரொம்ப டென்ஷன்ல இருக்காங்க போகலைன்னா இன்னும் வருத்த பாடுவாங்க. ப்ளீஸ் நான் போய் பேசிட்டு வந்துடுவேன்" என்றாள்.
"நீ மட்டும் போய் பேசி என்னடி பண்ண போற. இது நாம ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம் நானும் வரேன் சேர்ந்து பேசி புரியவைக்கலாம்"
"ஆனா இது எல்லாத்துக்கும் காரணம் நான் தானே, நானே சரி பண்றது தானே நல்லது."
"ப்ச் என்ன இது நீ நானு பேசிட்டு இருக்க. இது நம்ம பிரச்சனை நம்ம ரெண்டு பேரும் மட்டுமே சம்பந்தப்பட்ட பிரச்சனை. சேர்ந்து சரி பண்றது தானே நல்லது"
"நீங்க சொல்றது எனக்கு புரியுது. ஆனா இப்போ அம்மா கொஞ்சமும் நிதானம் இல்லாம ரொம்பவே கோபமா இருக்காங்க. இந்த நிலைமையில நீங்க அவங்க கிட்ட பேசுறது சரி வராது. கோபத்துல ஏதாவது உங்களை பேசிட்டாங்கனா நல்லா இருக்காது."
"அதெல்லாம் நான் ஒன்னும் நினைக்க மாட்டேன். ஏன் நம்ம வீட்ல என் பாட்டியும் என் அத்தையும் உன்னை பேசாததா, நீ அதையே நினைச்சி வருத்தப்பட்டுட்டா இருக்க, கடந்து வரலையா அதுபோல தான்."
"நீங்க நினைக்க மாட்டீங்க ஆனா எனக்கு கஷ்டமா இருக்கும். ப்ளீஸ் இந்த ஒரு தடவை மட்டும்" கண்ணை சுருக்கி கெஞ்சவும், பெருமூச்சுடன் அவளை பார்த்தவன்,
"என்ன சொன்னாலும் கேட்க போறது இல்ல, உனக்கு என்ன தோணுதோ அதை பண்ணு. எல்லாம் இந்த அத்தையால வந்தது " என்றவன் அவளது வதனத்தை தன் கரங்களில் ஏந்தி அவள் விழிகளைப் பார்த்து,
"உன் அம்மாகிட்ட பேசும்போது பொறுமையா பேசு. கண்டிப்பா கோபப்படுவாங்க, ஏதும் ஹார்ஷா பேசினா கூட மனசை போட்டு வருத்திக்காத. அம்மா கன்வின்ஸ் ஆகலைன்னாலும் நோ ப்ராப்ளம் பெங்களூர் போயிட்டு வந்து நான் பேசுறேன். ஆனா ஒன்னு மட்டும் மனசில வச்சிக்கோ, இதுனால நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த மாற்றமும் வர போறதில்லை. எல்லாமே சரியாயிடும். நான் இருக்கேன்" என்று கூறி அவளது நெற்றியில் இதழ் பதிக்கவும், கலங்கிய விழிகளுடன்,
"நீங்க ரொம்ப நல்லவர்"என்று தன்னவனின் விழிகளை பார்த்து கூறினாள்.
"இருந்து என்ன பிரயோஜனம் இந்த நல்லவன தவிக்க விட்டுட்டு கிளம்பி போறியே" என்ற ஆதித்தின் சட்டை காலரை பிடித்து தன்னை நோக்கி வர்ஷா இழுக்கவும், அவனது அதிர்ந்த பார்வையை உள்வாங்கியவள் அவனின் இதழில் சொல்லாமல் கொள்ளாமல் தன் இதழால் போர் தொடுக்கவும்,
"சுகர் சிரப்" என்ற அவனது பிரத்யோக அழைப்பு அவளது இதழுக்குள் சென்று ஒழிந்து கொள்ள, ஆதித்தின் இதழை முற்றுகையிட்டு முத்தம் என்னும் வாளால் யுத்தம் புரிந்தவள், அப்படியே தன்னவனை மஞ்சத்தில் வீழ்த்தி அவனது இதழுடன் சேர்த்து அவனையும் சிறை எடுத்து, ஆதித்தை எங்கோ ஒரு மீள இயலாத கருந்துளைக்குள் இழுத்து சென்று கொண்டிருந்தாள் வர்ஷா.
தேடல்களின் முடிவில் தன்னவனை ஆட்சி செய்து நீங்கிய நேரம் அப்படியே தன்னவளை தன் மார்புடன் அணைத்துக்கொண்டவன் அவளது சிகையை வருடி நெற்றியில் முத்தம் பதித்து,
"லவ் யூ டி" என்று சொன்ன கணம், புன்னகையுடன் அவன் மீசையை இழுத்து முத்தம் பதித்தவள் அப்படியே அதைப் பிடித்து இழுத்து விளையாடிக் கொண்டிருக்கவும்,
"ஆ வலிக்குது டி" என்றவனிடம்,
"இது பண்ற சேட்டைக்கு தண்டனை குடுக்க வேண்டாமா? நல்லா வலிக்கட்டும்" என்று ஒற்றை கண்ணடித்தபடி அவன் கன்னம் கிள்ளியவள் மீண்டும் அவனது மீசையை இழுத்து விளையாடினாள்.
தன்னவளின் வார்த்தையில் இருந்த அர்த்தத்தை புரிந்து கொண்டு முறைக்க முயன்று தோற்றுப் போனவன், வர்ஷாவை அப்படியே புரட்டி போட்டு அவள் மேலே படர்ந்து அவளின் இதழில் இதழ் பதித்தவன், அவளது கிறங்கிய விழிகளை பார்த்து, மெல்ல காதோரம் குனிந்து,
"யாரோ என் அப்பா அம்மா வெயிட் பண்றாங்க போகணும்னு சொன்னாங்க, ஆனா பண்றதெல்லாம் பார்த்தா அடுத்த இன்னிங்ஸ்க்கு ரெடி ஆகுறது போல தெரியுதே" என்று கூறி பெண்ணவளின் அதிர்ந்த விழிகளை பார்த்து ஒற்றைக் கண்ணடித்து விஷமமாய் சிரிக்கவும், அவன் மார்பில் அடி போட்டபடி எழுந்து கொண்டவள், தன் தாய் தந்தையை காக்க வைத்ததை எண்ணி தன்னை தானே கடிந்தபடி வேகமாக ஆயத்தமாக,
"ஏய் ஜிப் டி" என்று ஆதித் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, அவசரத்தில் ஜிப்பை கூட கழட்டாது அப்படியே தலைவழியாக சல்வாரின் டாப்சை போட்ட வர்ஷா முழுவதும் அணிந்து கொள்ள முடியாது தடுமாறிக் கொண்டு நின்றாள்.
அதைக் கண்ட ஆதித்தோ, "சொன்னேன்ல" என்றபடி வேகமாக அவள் அருகில் வந்தவன் தன்னவள் ஆடை அணிந்து கொள்வதற்கு உதவி செய்து,
"ரிலாக்ஸ், ஒன்னும் இல்லை" என்றபடி வர்ஷாவின் நெற்றியில் இதழ் பதித்து அவளின் கரம் கோர்த்த்துக்கொண்டு கீழே அழைத்து வந்தான்.
அடுத்த அத்தியாயம் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
ஆதவன் 26
Last edited:
Author: Naemira
Article Title: ஆதவன் 25
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ஆதவன் 25
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.