logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

ஆதவன் 27

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
ஆதவன் 27

தன்னை பார்க்க வந்த தன் தோழியிடம் வர்ஷா அனைத்தையும் கூறி விட, அவள் கூறியதை கேட்ட அவளது தோழி சௌமியாவோ,

"என்னடி இப்போதான் எல்லாம் சரியா போயிட்டு இருந்துச்சு, அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சி சரி இப்ப என்ன முடிவு தான் எடுத்திருக்க?" என்று கேட்க்க,

"எனக்கு தெரியல சௌமி, ரொம்ப குழப்பமா இருக்கு" என்று தளர்ந்த நடையுடன் அவள் அருகில் வந்து அமர்ந்தபடி கூறினாள் வர்ஷா.

வர்ஷாவின் குரலில் இருக்கும் சோர்வை உள்வாங்கிய சௌமியாவோ,

"இதுல குழம்புறதுக்கு எதுவுமே இல்லை வர்ஷா, அதித் துவங்கி எல்லாருமே நல்லவங்களா இருக்குற பட்சத்துல உண்மைய சொல்லுறது தான் சரி. இவ்வளவு தூரம் ஆனதுக்கு அப்புறம் உண்மைய ரொம்ப நாள் மறைச்சும் வைக்க முடியாது.
சோ யாரோ சொல்லி ஆதித்துக்கு தெரியிறதுக்கு பதிலா நீயே சொல்லிடு" என்று வர்ஷாவுக்கு எடுத்து சொல்ல, பதில் ஏதும் சொல்லாமல் வெறுமையாக சௌமியாவை பார்த்த வர்ஷாவோ,

"நீ சொல்றது சரிதான், ஆனா இதை அவர் எப்படி எடுத்துக்குவாருன்னு தான் தெரியல" என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, ஆதித்தின் கருப்பு நிற கார் வர்ஷாவின் வீட்டிற்குள் நுழைந்தது.

ஆதித்தின் காரை கண்டதுமே முகத்தில் அதுவரை இருந்த சோர்வு நீங்கி புன்னகையுடன் எழுந்து கொண்டவள், 'என்ன அதுக்குள்ள வந்துட்டாரு' என்கிற யோசனையுடன் அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்த தருணம், தலையில் போடப்பட்டிருந்த கட்டுடன் காரில் இருந்து கீழே இறங்கிய நிரோஷாவை கண்டதும் அதிர்ச்சி, கோபம், மகிழ்ச்சி என்று வெவ்வேறு உணர்வுகளில் சிக்கிக் கொண்ட வர்ஷா தங்கையை பார்த்த அதிர்ச்சியில் கலங்கிய விழிகளுடன் அசையாமல் அப்படியே நிற்க, சௌமியா தான் வேகமாக நிரோஷாவிடம் சென்றாள்.

இரண்டு மூன்று நொடிகள் செய்வதறியாது அப்படியே நின்ற வர்ஷாவின் விழிகள் இப்பொழுது காரை விட்டு இறங்காது காருக்குள்ளே அமர்ந்திருக்கும் தன்னவனை பார்க்க, வர்ஷாவையே சில கணங்கள் அழுத்தமாக பார்த்த ஆதித்தோ உயர் வேகத்தில் காரை ரிவெர்ஸ் எடுத்தவன் ஒரு வார்த்தை கூட பேசாது அங்கிருந்து வேகமாக சென்றிருந்தான்.

ஆதித்தின் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று வர்ஷாவின் மனதை கலங்கடிக்க அவளுக்கு தொண்டை அடைத்த்துக்கொள்ள மிகவும் சிரமப்பட்டு,

"ஆதித்" என்று அழைக்க வந்த அவளின் குரல் அவனது செவியை எட்டும் முன்பே ஆதித்தின் கார் வர்ஷாவின் வீட்டு வாசலை தாண்டியிருக்க, வர்ஷாவின் நிறைந்த விழிகளில் இருந்து கண்ணீர் வடிந்தது.

@@@@@@

"சாரி வர்ஷா என்னால நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்ட என்னை மன்னிச்சிரு டி" தன்னை கட்டிக்கொண்டு மன்னிப்பு கேட்டு ஆழும் தங்கையை ஆதரவுடன் அணைத்துக் கொண்ட வர்ஷாவுக்கு இது அனைத்துக்கும் காரணமான விநாயக்கின் மீது அவ்வளவு ஆத்திரம் வந்தது.

"மன்னிப்பு கேட்டுட்டா எல்லாம் சரியாகிடுமா, உன்னால நீ பண்ணின தப்பால, பழிய அவ ஏத்துக்கிட்டு எவ்வளவு கஷ்டப்பட்டுட்டா தெரியுமா? அப்படி என்னடி உனக்கு நடிக்கணும்னு வெறி இப்படி ஒரு முட்டாள்தனமான காரியத்தை பண்ணிட்டு வந்து நிக்கிற" என்ற வேணியிடம்,

"அந்த ஆள் அப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லமா, ஆதித் சாரை அந்த ரூம்குள்ள கூட்டிட்டு வந்தா மட்டும் போதும்னு சொன்னான். அந்த நேரம் எனக்கும் அது தப்பா தெரியல, ஆனா ரூம் குள்ள போனதுக்கு அப்புறம் எங்க பின்னாடியே வந்த ரெண்டு பேர் ஆதித் சாரை பின்னால இருந்து தாக்கினதும் தான் நான் ரொம்பவே பயந்துட்டேன். அதுக்கப்புறம் தான் இதெல்லாம் அவங்க செட்டப்புன்னு புரிஞ்சுது.

ஏன் இப்படியெல்லாம் பண்றீங்கன்னு கேட்டேன் அதுக்கு அவங்க என்னையும் அடிச்சுட்டாங்க.
ஒரு வார்த்தை பேச கூடாது மீறி பேசினா உங்க எல்லாரையும் கொலை பண்ணிடுவோம்னு மிரட்டினாங்க. ரொம்பவே பயந்துட்டேன்.

எங்க நான் வெளியில போனா எல்லாத்தையும் சொல்லிடுவேன்னு அந்த விநாயக் என்னை போக விடாம பண்ணிட்டான். என்னை யாரும் தேடக்கூடாது என்கிறதுக்காகவே என்னை மிரட்டி வீடியோ ரெக்கார்ட் பண்ணி உங்களுக்கு அனுப்பி வச்சான்.

ரெண்டு தடவை தப்பிக்க கூட முயற்சி பண்ணினேன் புடிச்சு கட்டி போட்டுட்டாங்க இன்னைக்கு அந்த சமையல்கார அக்காவும், ஆதித் சாரும் இல்லைன்னா மறுபடியும் அவங்க கிட்ட மாட்டியிருப்பேன்.

பயத்துல ஓடி வந்து தெரியாம ஆதித் சார் காருக்கு முன்னாடி விழுந்துட்டேன். முதல்ல அது ஆதித் சார்ன்னு எனக்கு தெரியாது. அவர் கார விட்டு வெளியே வந்ததும் தான் எனக்கு தெரிஞ்சது. அவர்தான் என்னை துரத்திட்டு வந்தவன அடிச்சிட்டு என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாரு.

ஹாஸ்பிட்டல்ல வச்சி எல்லாத்தையும் சொல்லிட்டேன். அவர் ஒரு வார்த்தை பேசல என்னை வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாரு. இப்போ அந்த விநாயக்கோட அடியாளு ஆதித் சார் கிட்ட தான் இருக்கான்.

முட்டாள்தனமா நான் எடுத்த முடிவு எல்லாரையுமே கஷ்டப்படுத்திடுச்சு என்னால மன்னிப்பை தவிர இப்ப வேற எதுவும் கேட்க முடியல.

ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் அம்மா, என்னை தயவு செஞ்சு எல்லாரும் மன்னிச்சிடுங்க." என்று இரு கரங்ககளையும் கூப்பி மன்னிப்பு வேண்டி அழும் தன் பெண் மீது வேணிக்கும் கேசவனுக்கும் கோபத்தை காட்ட முடியவில்லை. நிரோஷாவின் உடல் நிலையையும் அவளது மனநிலையையும் கருத்தில் கொண்டு அவளை ஓய்வெடுக்க கூறியவர்கள், நடந்த சம்பவங்களை எண்ணி மிகவும் வேதனையடைந்தனர்.


@@@@@@

முகம் சிவந்திருக்க, அதீத கோபத்தில், விநாயக்கை கொன்று போடும் ஆத்திரத்துடன் காரை ஓட்டிக்கொண்டு இருந்தான் ஆதித்.

ஆதித்தின் கோபம் புரிந்தாலும், ஆத்திரம் கண்ணை மறைக்க ஏதாவது செய்து விட்டு அது அவனது எதிர்காலத்தை பாதித்து விடக்கூடாது என்று அவனுக்காக உண்மையாக வருந்திய ஆகாஷ்,

"கொஞ்சம் பொறுமையா இரு ஆதித், அதான் விநாயக் அடியாளே எல்லாத்தையும் ஒத்துக்கிட்டானே லீகளா மூவ் பண்ணலாம்" என்று ஆதித்திடம் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே புழுதியை கிளப்பிகொண்டு விநாயக்கின் வீட்டின் முன்பு காரை நிப்பாட்டி, ஹாரனை அலறவிட்டான் ஆதித்.

ஆதித்தை பார்த்து விட்ட வாட்ச்மெனோ இன்டர்காம் மூலமாக விநாயக்கிடம் ஆதித் வந்திருப்பதை கூறி, அவன் அனுமதி அளித்ததும் அவசரமாக ஓடி வந்து கதவை திறக்க, முழுக்கை டீஷர்ட்டை முழங்கை வரை இழுத்துவிட்டு கொண்டு, காரில் இருந்து வேகமாக இறங்கிய ஆதித், பின் பக்க கதவை திறந்து, தன்னிடம் மாட்டிக்கொண்ட விநாயக்கின் அடியாளது சட்டையை பற்றி வெளியே இழுத்து, காரின் கதவை அடித்து மூடி விட்டு ஆகாஷுடன் வேகமாக உள்ளே சென்றவன்,

"விநாயக்" என்று அடித்தொண்டையில் கத்தினான்.

முந்தினம் குடித்த மதுபானத்தின் வீரியத்தால் அப்பொழுது தான் எழுந்திருந்த விநாயக், தன் வீட்டு வாசலில் கோபத்துடன் நின்றிருந்த ஆதித்தை யோசனையுடன் பார்த்தபடி மாடியில் இருந்து கீழே வந்து, "என்னடா" என்று கேட்ட நொடி, ஆத்திரத்துடன் அவனை நெருங்கி இருந்த ஆதித் தான் இழுத்துக் கொண்டு வந்த அவனது அடியாளை அவன் முன்பு நிப்பாட்டினான்.

ஆதித்தின் செயலில் விநாயக் அதிர்ச்சியுடன் நின்றிருக்க,

"எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி ஒரு வேலை பண்ணி இருப்ப" என்ற ஆதித்தோ எதைப்பற்றியும் யோசிக்காது அடுத்த நொடி விநாயகின் நெஞ்சில் எட்டி மிதித்து இருந்தான்.

ஆகாஷ் துவங்கி அங்க இருந்த வேலைக்காரர்கள் வரை அனைவரும் ஆதித்தின் அதிரடியில் அதிர்ச்சியடை, ஆதித் மிதித்ததில் கீழே விழுந்த விநாயகின் விழிகளோ கோபத்தில் சிவந்து இருக்க, விநாயக்கை நெருங்கி வந்து அவனது ஷர்டை பிடித்து இழுத்து எழ வைத்த ஆதித்,

"நிரோஷா இப்ப சேஃபா இருக்கா, அவளும் உன் ஆளும் நீ பண்ணின அத்தனையும் சொல்லிட்டாங்க. இனிமே உன்னால தப்பிக்க முடியாது.

உனக்கு என் கூட பிரச்சனைன்னா என் கூட நேரடியா மோதனும். அத விட்டுட்டு இப்படி எச்ச வேலை பார்த்திருக்க உனக்கே வெக்கமா இல்ல. என்ன ஆனாலும் சரி உன்னை இந்த தடவை நான் விடப்போறது இல்லை.

லீகள் ஆக்சனை ஃபேஸ் பண்றதுக்கு ரெடியா இரு. இந்த தடவை உன் அப்பாவே வந்தாலும் உன்னை காப்பாத்த முடியாது" என்று எச்சரித்துவிட்டு அடிப்பட்டு கிடந்த விநாயகின் அடியாளையும் இழுத்துக் கொண்டு ஆதித் அங்கிருந்து சென்றுவிட, வர்ஷாவின் எண்ணம் முழுவதிலும் இப்பொழுது ஆதித் மட்டும் தான் நிறைந்திருந்தான்.

தன்னவனை உடனே பார்த்தாக வேண்டும் என்று மனம் ஒருபக்கம் துடித்து கொண்டிருந்தாலும்,
தன்னை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அவன் சென்ற விதம், தன் மேல் அவனுக்கு இருக்கும் கோபத்தை வெளிப்படுத்திருக்க, தன்னவனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் வர்ஷா தவிப்புடன் காணப்பட்டாள் .

@@@@@@@

இறுகிப்போன முகத்துடன் வீட்டிற்குள் நுழைந்த ஆதித், தாய் தந்தை என யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லாது நேராக தன் அறைக்கு வந்தவன், குளியல் அறைக்குள் நுழைந்து, வேகமாக கொட்டும் குளிர்ந்த நீருக்கு அடியில் கனத்த மனதுடன் சிலை போல நின்றான்.

விநாயக் மீது இருந்த ஆத்திரத்தை கூட எளிதில் கடந்து வந்தவனால், வர்ஷா தன்னிடம் மறைத்ததை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

ஆரம்பத்தில் பயந்து சொல்லாமல் விட்ருந்தாலும், காதல் உருகி ஒன்றாக இணைந்து வாழ துவங்கிய பிறகாவது சொல்லிருக்க வேண்டும் அல்லவா,

'என்னை ஒரு சதவீதம் கூட நம்பவில்லையா அவள்? நம்பிக்கை இல்லையென்றால் காதல் மட்டும் எப்படி இருக்கும்? ஆக தாலி கட்டியதிற்காக கட்டாயமாக வாழ்ந்தாளா? இல்லையே அவளது ஒவ்வொரு செயல்களிலும் எனக்கான காதலை கண்டு பல முறை சிலிர்த்திருக்கிறனே அப்படியென்றால் அதெல்லாம் பொய்யா? என்று நினைக்க நினைக்க அவனது உடலுடன் சேர்ந்து உள்ளமும் தளர்ந்து போனது.

@@@@@@

ஆதித் வந்து சென்ற சில மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த விநாயக்கின் தந்தை, அவனை ஒரு வழிபடுத்தி விட்டார்.

"முட்டாள் தனமா என்ன காரியம் டா பண்ணி வச்சிருக்க? உன்னால எனக்கு எவ்வளவு அவமானம் தெரியுமா? நான் பார்த்து வளர்ந்த அந்த ஆதித், ஃபோனை போட்டு லீகல் ஆக்ஷன் எடுக்க போறேன் உங்களால முடிஞ்சத பாத்துக்கோங்கன்னு என்கிட்டயே சவால் விடுகிறான். உன்னால சேர்த்து வச்ச மொத்த மரியாதையும் போக போகுது. பையனா போயிட்டியேன்னு இந்த தடவை உன்னை சும்மா விடுறேன். இனிமே இந்த மாதிரி ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணி வெச்சனா என் சைடுல இருந்து உனக்கு எந்த சப்போர்ட்டும் கிடைக்காது. ஒழுங்கா வால சுரட்டிட்டு உன் வேலைய மட்டும் பாரு" என்று எச்சரிக்கை விடுக்க, கோபத்தில், "ஆதித்" என்று கத்திவிட்டு தன் கண்களில் கண்ட பொருட்களையெல்லாம் எடுத்து வீசியவனால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

தன் தந்தையின் நிழலிலே வாழ்ந்து பழகிய விநாயக்கிற்கு, "இனி என்ன பண்ணினாலும் என்னுடைய சப்போர்ட் உனக்கு கிடைக்காது" என்ற தந்தையின் வார்த்தைகள் பேரிடியாக வந்து சேர, இப்பொழுது விநாயக்கின் நிலையோ பல்லு பிடுங்கிய பாம்பின் கதையாகி போனது.

@@@@

ஆகாஷ் மூலமாக அனைத்து உண்மைகளையும் கேள்விப்பட்டதும் மகாலட்சுமிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, வர்ஷா இதை செய்யவில்லை என்று அவரது ஒரு மனம் மகிழ்ச்சியடைந்தாலும், விநாயக்கின் சூழ்ச்சியை அறிந்தவருக்கு ஒரு தாயாக அவரது உள்ளம் கவலை கொண்டது.

ஒருவரின் பெயரை கெடுப்பதற்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்து கீழ்த்தரமாக நடந்து கொண்ட விநாயக்கின் மீது கோபம் வந்தாலும், அத்தனை சூழ்ச்சியும் கடந்து வந்த தன் மகனின் வாழ்க்கை இப்பொழுது சீரானதில் மகிழ்ச்சி அடைந்தவர், நிரோஷாவை பார்த்துவிட்டு வர்ஷாவை அழைத்து வருவதற்காக அடுத்த நிமிடமே வர்ஷாவின் வீட்டிற்கு புறப்பட்டிருந்தார்.

@@@@@@

நடந்த எதையும் பொருட்படுத்தாது வீடு தேடி வந்திருக்கும் மகாலட்சுமியை பார்க்க பார்க்க வேணிக்கு குற்ற உணர்வாக இருந்தது. நேற்று கோபத்தில் நடந்து கொண்டதற்காக இப்பொழுது வருத்தப்பட்டவர்,

"மன்னிச்சிடுங்க சம்மதி நேற்று கோபத்துல ரொம்ப ஒரு மாதிரி நடந்து கிட்டேன்" என்ற வேணி அடுத்து என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் சங்கடத்துடன் அமர்ந்திருக்க,

"மன்னிப்பு எல்லாம் வேண்டாம் சம்மந்தி, என்னால புரிஞ்சிக்க முடியுது. ஒரு அம்மாவா நானுமே உங்க இடத்தில் இருந்திருந்தா இப்படித்தான் பண்ணி இருப்பேன்.
நடந்து முடிஞ்சதை மறந்திடுங்க, எது எப்படியோ எல்லாம் சரியாகி நிரோஷா பத்திரமா வந்ததை நினைச்சு சந்தோஷப்படுங்க.
ஆதித்தும் வர்ஷாவும் இப்படித்தான் சேரனும்ன்னு இருந்தா யார் மாற்ற முடியும். எல்லாமே நன்மைக்கே" வேணியின் சங்கடத்தை புரிந்து கொண்டு வேணிக்கு ஆதரவாக பேசிய மகாலட்சுமி, நிரோஷாவை சந்தித்து,

"அக்கா தங்கச்சி இரண்டு பேரும் பார்க்க அப்படியே ஒரே மாதிரி இருக்கீங்க" என்றவர், "சின்ன வயசுல வித்தியாசம் கண்டுபிடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டு இருப்பீங்கல்ல" என்று வேணியை பார்த்து கேட்டார்.

"அவ்வளவு கஷ்டப்படல சம்பந்தி நிரோஷாவுக்கு வலது பக்க புருவத்தோட ஓரம் ஒரு மச்சம் உண்டு. அதை வச்சு நான் ஈசியா கண்டுபிடிச்சிடுவேன்" என்று வேணி சொல்லவும் மென்மையாக புன்னகைத்துக் கொண்ட மஹாலக்ஷ்மி நிரோஷாவிடம் அவளது உடலை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, கேசவன் மற்றும் வேணியிடம் பொதுவான ஒரு சில விஷயங்களை பேசிவிட்டு, அவர்களிடம் விடை பெற்றவர் வர்ஷாவை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு சென்றார்.

வர்ஷாவின் வீட்டினர் மற்றும் காரில் டிரைவர் இருந்ததை கருத்தில கொண்டு அமைதியாக வந்த மகாலட்சுமி, வீட்டிற்குள் நுழைந்ததும் வர்ஷாவை பிடித்துக் கொண்டவர்,

"பொய் சொல்லக்கூடிய விஷயமா இது வர்ஷா? ஆகாஷ் சொல்லும்போது எனக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருந்தது தெரியுமா?
உன் அம்மா அப்பா எவ்வளவு பாவம். சரி எல்லாத்தையும் விடு, உன்கிட்ட நான் அன்பா தானே இருந்தேன் அவன் கிட்ட இல்லாட்டாலும் என்கிட்டயாவது சொல்லி இருக்கலாம்ல.
ஆதித் என்கிறதுனால சரியா போச்சு, இதே வேற ஒருத்தனா இருந்து அவன் கெட்டவனா இருந்திருந்தா உன் வாழ்க்கையே கேள்விக்குறியா ஆகியிருக்குமே. நினைச்சாலே பதறுது." கோபம் கலந்த ஆதங்கத்துடன் தன் மனதில் இருந்ததை அவளிடம் கூறினார்.

"சாரி அத்தை" விழிகளில் கண்ணீர் திரள உதட்டை கடித்துக் கொண்டாள் வர்ஷா. அவள் அழுததும் மகாலட்சுமிக்கு வருத்தமாக இருக்க,

"சரி சரி ஏன் அழற இப்போ தான் எல்லாம் சரியாகிடுச்சே. இனிமே பெரியவங்க கிட்ட எதையும் மறைக்காத, நல்லவேளை உன் தங்கச்சியும் பத்திரமா வந்துட்டா, நீயும் வீட்டுக்கு வந்துட்ட, இனிமே எல்லாம் நல்லதாகவே தான் நடக்கும்" என்றவர்,

"ஆதித் தான் ரொம்ப கோபமா இருக்கான். யார்கிட்டையும் எதுவும் பேசல சாப்பிட சொன்னதுக்கு வேண்டாம் சொல்லிட்டான். நீ போய் பேசி சமாதானம் பண்ணி சாப்பிடவை. உன்கிட்ட ரொம்ப நேரம் எல்லாம் கோபமா அவனால இருக்க முடியாது." என்றவர் அவள் கையில் உணவு அடங்கிய தட்டை கொடுத்து,

"நீயும் சாப்பிட்ருக்க மாட்ட, இதுல உனக்கும் இருக்கு, ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுங்க" என்றவர் மாடி ஏறி செல்லும் மருமகளை பெருமூச்சுடன் பார்த்தார்.

@@@@@@@@

வர்ஷா அறைக்குள் நுழையும் பொழுது ஆதித் பால்கனி கம்பிகளை இறுக்கமாக பிடித்து கொண்டு வானத்தை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தான்.

வர்ஷா உள்ளே வந்ததை அவளது பாத கொலுசின் மெல்லிய சத்தத்திலே கண்டு கொண்டவன். பக்கவாட்டாக திரும்பி ஒரு கணம் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் மீண்டும் வானத்தை வெறித்துப் பார்த்தபடியே நின்று கொள்ள, தன்னவனின் பாரா முகம் வர்ஷாவுக்கு மன வருத்தத்தை கொடுத்தது.

சில நொடிகள் அப்படியே நின்று கொண்டிருந்தவளுக்கு அவனது மௌனம் ஏதோ செய்யவும் தட்டை டேபிளில் வைத்து விட்டு மெல்ல அவன் அருகில் சென்று,

"எதுவா இருந்தாலும் பேசிடுங்க, இப்படி அமைதியா மட்டும் இருக்காதீங்க" மெல்லிய குரலில் விசும்பலுடன் கூறினாள்.

"நீயும் நானும் சந்தோஷமா சேர்ந்து வாழ ஆரம்பிச்சி எத்தனை நாள் ஆகுது வர்ஷா" அவளது கலங்கிய வழிகளை பார்த்தபடி வினவினான்.

"டிவண்டி சவென் டேஸ்" காற்று குரலில் கூறினாள்.

"இருபத்தி ஏழு நாட்கள்" என்று ஒரு கணம் கண்களை மூடி சிலாகித்து கூறியவன், அடுத்த நொடி விழிகளை திறந்து,

"அப்போ அந்த இருபத்தி ஏழு நாளும் என்னை நம்பாம, என் மேல ஒரு சின்ன அளவு கூட லவ் இல்லாம, தாலி கட்டின ஒரு காரணத்துக்காக தான் இருந்திருக்கல்ல" என்ற சோர்வான குரலில் கேட்கவும், உடனே மறுத்த வர்ஷா,

"நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு பேசிட்டு இருக்கீங்க" என்றாள் கவலையாக.

அதைக் கேட்ட அவனோ, " உன்ன புரிஞ்சுக்க முடியாம பேசிட்டு இருக்கேன் வர்ஷா" தளர்ந்த குரலில் கூறினான்.

"இத்தனை நாள்ல ஒரு நாள் கூடவா என் காதல நீங்க உணரல" கண்ணீரை துடைத்த படி வினவினாள்.

அவளது விழிகளை பார்த்து விரக்தியாக சிரித்தவன்,
"ஒவ்வொரு செகண்டும் உணர்ந்திட்டு தான் இருக்கேன். ஆனா அது பொய்யா உண்மையானு தெரியலையே." என்று அவன் சொன்ன நொடி பெண்ணவள் மொத்தமாக உடைந்து விட்டாள். அவன் மேல் அவள் கொண்ட காதலை அல்லவா பொய் என்று சொல்கிறான். அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

"மொத்தமா என் காதலே பொய்யின்னு சொல்றீங்களா ஆதித்" அழுதுகொண்டே கேட்டாள்.

"வேற என்ன நான் சொல்றது. இதுவரை ஒரு தடவையாவது என்கிட்ட உண்மைய சொல்லி இருக்கியா? உன் தங்கச்சிக்காக இவ்வளவு யோசிச்ச நீ, உண்மை தெரிஞ்சா நான் என்ன பீல் பண்ணுவேன்னு நீ யோசிக்கல." என்றவனிடம், "ஆதித்.." என்று வர்ஷா ஏதோ பேச வாய் எடுக்கவும் பேச வேண்டாம் என்பது போல தன் கரம் உயர்த்தி தடுத்தவன்,

"உனக்கு புரியுதா? நீ வேற ஒருத்தருக்கு நிச்சயம் பண்ணப்பட்ட பொண்ணு, எனக்கு நடந்த துரோகத்துக்கு நீ தான் காரணம்னு நினைச்சு உன்னை நான் வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

நீயும் உன் தங்கச்சிக்காக எந்த தப்பு பண்ணாமலே எல்லாத்தையுமே பொறுத்துக்கிட்ட. உன் தங்கச்சிக்காக விருப்பமே இல்லாம எல்லாத்தையும் ஏத்துக்கிட்ட நீ ஏன் என் காதலையும் விருப்பமே இல்லாம.." என்ற ஆதித்தின் குரல் கரகரக்க, அவனோ முழுவதும் சொல்ல முடியாது திணறிக் கொண்டிருந்த தருணம், ஆதித்தின் தவிப்பையும் அவனது மனப்போராட்டத்தையும் கண்டறிந்த வர்ஷா இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம் என்பது போல, நொடி தாமதிக்காது அவனது இதழை அணைத்த்துவிட்டு விலகியவள் அவன் கண்களை பார்த்து,

"ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.." என்று வாய் வலிக்க கூறி அவன் முகம் முழுவதும் தனது முத்தத்தை விதைத்து,

"என் மனசு முழுக்க நீங்க மட்டும் தான் இருக்கீங்க. கல்யாணம் வேணும்னா என் தங்கச்சிக்காக நான் பண்ணி இருக்கலாம். ஆனா உங்க கூட வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் எனக்காகவும், உங்களுக்காகவும், நம்ம காதலுக்காகவும் மட்டும்தான். சகிச்சுக்கிட்டோ கட்டாயத்துக்காகவும் இல்லை" என்று ஆத்மார்த்தமாக கூறியவள், மீண்டும் அவனது இதழில் தன் இதழை பதித்திருந்தாள்.

பெண்ணவள் கொடுத்த ஆழத்துடன் சேர்ந்து அழுத்தம் கலந்த ஆத்மார்த்தமான முத்தம் அவன் மேல் அவள் கொண்ட காதலை ஒவ்வொரு நொடியும் அவனுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்க, அவனுக்குள் அதுவரை இருந்த மொத்த பாரமும் வந்த சுவடு தெரியாமல் சென்று, இப்பொழுது அவள் கொடுத்துகொண்டிருக்கும் முத்தமும் அவள் பேசிய வார்த்தைகளும் மென்மையாக அவன் மனதை வருடியது.

தான் கொடுத்த முத்தத்தை எதிற்பின்றி வாங்கிக் கொண்டாலும் அவன் பதிலுக்கு முத்தமிடவில்லை என்பதை உணர்ந்து கொண்டவளோ, சிறு பதற்றத்துடன் அவனை விட்டு விலகினாள்.

தன்னை அவன் இன்னும் நம்பவில்லையோ என்கிற பதற்றம் அவளை சூழ்ந்து கொள்ள தன்னவனின் விழிகளை கலக்கத்துடன் பார்த்தவள்,

"என்னை நீங்க இன்னும்..." என்று கூறி முடிப்பதற்குள் அவளது இதழில் தன் விரலை வைத்தவன், "நம்புறேன்டி" என்றபடி அவள் விட்ட முத்தத்தை இவன் தொடர்ந்தான்.

நீண்ட நெடிய முத்தத்தின் முடிவில் மூச்சுவாங்க தன்னவளது இதழை விட்டு பிரிந்து அவளின் நெற்றி முட்டி இளைப்பாறியவன்,

"சாரி டி உண்மைய நீ என்கிட்ட சொல்லாததை என்னால ஏத்துக்க முடியல, ஏதோ நீ என்கிட்ட இருந்து விலகி இருக்கிறது போல ஃபீல் பண்ணிட்டேன். என்னை நீ லவ் பண்ணாம கடமைக்காக தான் என் கூட வாழ்ந்துட்டு இருக்கியோன்னு ரொம்பவே பயந்துட்டேன்.

அந்த பயம் கோபமா வெளிப்பட்டு உன்னையும் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்.

எனிவே இனி இதுபோல ஒரு மனக்கசப்பு நமக்குள்ள வரவே கூடாது.

எனக்கு உன்கிட்டயோ உனக்கு என்கிட்டயோ தெரியாததுன்னு எதுவுமே இருக்க கூடாது.

அதனால இனிமே எதுவாயிருந்தாலும் என்கிட்ட தான் நீ முதல்ல சொல்லணும், அது எவ்வளவு கஷ்டமான விஷயமா இருந்தாலும் மறைக்க ட்ரை பண்ண கூடாது" என்று அவள் கண் பார்த்து சற்று கண்டிப்புடனே ஆதித் சொல்ல, எம்பி அவன் மீசையை பிடித்து இழுத்து அதில் முத்தம் பதித்தவள், "சரி புருஷா" என்று புன்னகையுடன் கண் சிமிட்டி சொல்ல, அவனும் புன்னகையுடன் அவளது நெற்றியை முட்டிக் கொண்டான்.

மூன்று வருடங்கள் கழித்து

"இந்த ஹிப் முமெண்ட் அப்புறம் அந்த லெஃப்ட் லெக் முமெண்ட் மட்டும் கொஞ்சம் சரி பண்ணிக்கோங்க. இப்படி லைட்டா தான் பெண்ட் பண்ணனும்" என்று ஆடி காட்டியவள் அவர்கள் அனைவரும் சரியாக ஆடியதும், டைரக்டரை பார்த்து,

"ஆள் களியர் சார், டேக் போகலாம்" என்று சொல்ல, வர்ஷா சொல்லிய பிழையை திருத்திக்கொண்டு கனகச்சிதமாக அவர்களும் ஆடி முடிக்கவும்,

"சூப்பர் வர்ஷா எல்லா ஷாட்டுமே பர்ஃபெக்ட்டா வந்திருக்கு" என்று சொல்லி அந்தப் படத்தின் இயக்குனர் வர்ஷாவை பாராட்டி, அனைவரையும் பார்த்து பேக்கப் சொல்லிவிட்டு நகர்ந்து விட, கேரவனுக்குள் சென்ற வர்ஷா அடுத்த நிமிடம் அலைபேசியை எடுத்து ஆதித்திற்கு தான் தொடர்பு கொண்டாள்.

இரண்டு மூன்று ரிங்கிற்கு பிறகு வர்ஷாவிடம் இருந்து வந்த வீடியோ கால் அழைப்பை கட் பண்ணி விட்டு ஆடியோ காலில் அவன் அழைக்கவும் உடனே அழைப்பை ஏற்றவள்,

"என்னாச்சு ஏன் வீடியோ கால்ல வரல" என்று கேட்க அதற்கு, "டிரைவிங்ல இருக்கேன் டி. உனக்கு ஷூட் முடிஞ்சிருச்சா" என்று கேட்டான் அதித்.

"மார்னிங் ஷூட் பண்ணிட்டு இருக்கும்போது எதிர்பாராத விதமா லொகேஷன்ல கொஞ்சம் மழை வந்துருச்சு. சோ லேட்டா தான் ஷூட் பண்ணினோம். அதான் நைட் கொஞ்சம் டைம் ஆயிடுச்சு, ஆனா எப்படியோ ஷூட்டிங் எல்லாம் முடிஞ்சிருச்சு. நாளைக்கு ஏர்லி மார்னிங் ஃப்ளைட்" என்றவள்,

"அப்புறம் பாப்பா எப்படி இருக்கா? என்னை ரொம்ப தேடி அடம் பிடிச்சாளா? " என்று கவலையுடன் கேட்கவும்,

"கொஞ்சம் அழுதா, இப்போ ஓகே, ரெண்டு பேரும் நான் டிரைவ்க்கு வந்திருக்கோம். மேடம் தூங்கிட்டாங்க, இப்ப நான் வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கேன். நீ ரூமுக்கு வந்ததும் கூப்பிடு" இன்று அழைப்பை வைத்த ஆதித், தூக்கத்திலே சினுங்கிய தன் மகளை தட்டி தூங்க வைத்தான்.

இரவு பன்னிரண்டு மணி இருக்கும் தனது தோள் பையில் இருந்த கார்டை வெளியில் எடுத்து கதவை திறந்தபடி அறைக்குள் நுழைந்த வர்ஷா, உள்ளே போடப்பட்டிருந்த சோஃபாவில் புன்னகையுடன் அமர்ந்திருந்த தன்னவனை கண்டு இன்பமாக அதிர்ந்தாள்.

ஆதித்தை அங்கே கொஞ்சமும் எதிர்பார்த்திராத வர்ஷாவோ சந்தோஷத்தில் துள்ளி குதிக்காத குறையாக,

"எப்போ வந்தீங்க? சொல்லவே இல்லை" என்று உற்சாகமாக கேட்டபடி அவன் அருகே சென்றவளின் இடை வளைத்து அவள் இதழில் விரல் வைத்தவன், மெத்தையில் நிம்மதியாக துகில் கொண்டிருக்கும் தங்களின் மகளைக் காட்டி, "மெதுவா" என்று காற்றுக் குரலில் செய்கை செய்ய,
மெதுவாக தன் மகள் ஆராதியாவின் அருகே சென்று அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தவள்,

"அம்மாவ மிஸ் பண்ணுனீங்களா டா" என்று கேட்டபடி தன் மகளின் பிஞ்சி பாதத்தை வருடி கொடுக்க,
தன்னவளின் செயலை ரசித்தபடி அவளது காது பக்கம் குனிந்தவன் காற்று குரலில் குரலில்,

"நான் ரொம்ப மிஸ் பண்ணினேன் டி" என்று சொல்லி கழுத்து வளைவில் முத்தம் பதிக்கவும் எழுந்துகொண்ட வர்ஷா, "நானும் தான் புருஷா" என்றவளோ தன்னவனது தாடி அடர்ந்த கன்னத்தை தன் கன்னம் வைத்து உரசி, அவனது மீசையை பிடித்து இழுத்து அதில் தன் இதழ் பதித்தவள், ஆதித் கிறங்கி இருந்த நேரம், அவன் காதில் தன் பற்களை பதித்து அழுத்தமாக முத்தமிட்டாள்.

"ஏய் வலிக்குது டி, உன்னை இப்போ என்ன பண்றேன் பாரு" என்றவனிடம், "என்ன பண்ணுவீங்க?" என்று கூறி வர்ஷா விஷமமாய் சிரிக்கவும்,

"ம்ம் இதோ என்ன பண்ணுவேன்னு காட்டுறேன்" என்றவன் அப்படியே தன்னவளை தன்னுடன் இறுக்கி அணைத்தபடி அவள் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டான்.

சின்ன சின்ன தீண்டல்கள், செல்லச் செல்ல முத்தங்கள் என்று அவன் கொடுத்த இன்பமான அவஸ்தையை ஒரு கட்டத்திற்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாது தவித்தவள்,

"போதும்" என்ற சிணுங்களுடன் கணவனிடமிருந்து விலக பார்க்க, அவனோ அவள் விலக பார்க்கவும் இன்னுமே தன்னோடு இறுக்கமாக பிடித்துக் கொள்ள, ஒரு கட்டத்தில் நிலைத்தடுமாறியவர்கள் மாறி மாறி சிரித்தபடி அப்படியே சோஃபாவில் சரிந்தனர்.

ஒற்றை ஆள் படுக்கும் சோஃபாவில் தன்னவளின் மொத்த எடையையும் சுகமாக தாங்கியபடி படுத்திருந்த ஆதித்தின் மார்பில் நாடிக்குற்றியபடி மெல்ல தன் தலையை உயர்த்தி அவன் முகம் பார்த்தவள், மென்மையாக அவனது தாடி அடர்ந்த கன்னத்தை வருடி, "தேங்க் யூ சோ மச்" என்று கூறினாள்.

ஆதித் எதுவுமே பேசவில்லை, அவளது விழிகளைப் பார்த்தபடியே மெதுவாக அவள் வதனத்தில் சரிந்து விழுந்திருந்த கேசத்தை காதோரம் ஒதுக்கிவிட, வர்ஷாவோ தன்னவனது விழிகளை பார்த்தபடியே, அவன் நெற்றியில் அழுத்தமான முத்தம் பதித்துவிட்டு,

"டான்ஸ் கோரியோகிரஃபரா என்னுடைய முதல் படத்தை இன்னைக்கு நான் சக்சஸ்ஃபுல்லா முடிச்சிருக்கேன்னா அதுக்கு நீங்க மட்டும் தான் காரணம் உங்களோட சப்போர்ட் இல்லைன்னா எதுவுமே சாத்தியம் இல்லை, தேங்க் யூ" என்றவள்,

மெத்தையில் உறங்கும் தன் மகளை பார்த்துவிட்டு மீண்டும் தன்னவனை பார்த்து அவனது இரு கண்களிலும் ஆழமாக முத்தம் பதித்து,

"இது நம்ம பொண்ணையும் என்னையும் பத்திரமா பார்த்திக்கிறதுக்கு, தேங்க்யூ சோ மச்சி" என்றவள் ஆதித்தின் விழிகளை ஆழமாக பார்த்துக்கொண்டே,

"தேங்க்யூ ஆதித், தேங்க்யூ ஃபார் யுவர் லவ், தேங்க் யூ ஃபார் எவரிதிங்" என்றவள் அவன் இதழில் ஆத்மார்த்தமாக முத்தமிட்டு தன்னவன் மேல் தனக்கு இருக்கும் மொத்த காதலையும் காட்டிவிட்டு விலக பார்க்க, அவனோ அவளை விலக விடாது தன்னுடன் இறுக்கமாக அணைத்துக் கொண்டு ,

"உன் காதலை நீ காட்டிட்ட, என் காதலை நான் காட்ட வேண்டாமா" என்றவன் தன்னவளின் இதழை சிறை எடுக்க, இப்பொழுது காதலை காட்டுவது அவளவனின் முறையாகி போனது.


தீப்பிழம்பாய் தகிக்கும் ஆதவனே !
நீ நித்தமும் எரிவது ஏனோ?
கொஞ்சும் மழை நான் !
கொஞ்சம் உன்னை கொஞ்சும் ஆவல் கொண்டேன்?
கொஞ்சவா?
கொஞ்சினால், கோபம் கொண்டு என்னை சுடுவாயா?
இல்லை காதல் பெருகி சிலிர்ப்பாயா? என்ற தன்னவளிடம்,


வெறும் கொஞ்சல் தானா?
ஹம், கஞ்சம் ஏனோ வஞ்சியே?
நான் எரிவதே உன் அணைப்பில் சிலிர்த்து அடங்கிட தானே,
கொஞ்சியே மிஞ்சினாலும் தவறில்லை!
தவறாது என்னை அணைத்து தான் பார்!
காதல் உருகி உன்னுள் அடங்கிவிடுவேன்! என்றான் அவளவன்.

எரியும் ஆதவனாய் அவன் ஆதித் மஹாதேவ்!
அவனை அணைக்கும் ஆலியாய் அவள் வர்ஷா!

இந்த இரு வேறு புள்ளிகளும் காதல் என்னும் மையத்தில் இணைந்து விட இனி என்றும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியே!!


சுபம்!!

மீண்டும் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

All Episodes Link

ஆலியில் நனையும் ஆதவன் ஆடியோ லிங்க்


கதை பிடித்திருந்தால் உங்களது கருத்துகளை பதிவிடுமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


நெமிரா 😍
 
Last edited:

Author: Naemira
Article Title: ஆதவன் 27
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top