- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
நிலவே 73
இத்தனை நாட்களாக விடாமல் வீசிய புயல் ஓய்ந்ததில் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாய் இருந்தனர். ஆஷிக்கும் ஆதர்ஷும் எதையோ பற்றிப் பேசி சிரித்துக் கொண்டிருக்க,
"என்னடா சிரிப்புச் சத்தம் எல்லாம் பயங்கரமா இருக்கு, என்ன விஷயம்?” என்றவாறு வந்த ரோஹித்திடம்,
ஆதர்ஷ் புன்னகையோடு, "இல்லை, எனக்குக் குழந்தை பிறந்தா ஆஷிக்கும் நீயும் என்ன முறை வருவீங்கன்னு கேட்டேன். இவன் சொன்னான் நீ பெரியப்பா, அவன் சித்தப்பான்னு. அதான் சிரிப்பா இருந்துச்சு...” என்று சொல்ல,
கடுப்பான ரோஹித், "ஆமாடா உன் குழந்தைக்கு நான் பெரியப்பா, இவன் குழந்தைக்கு நான் சித்தப்பா. தியா குழந்தைக்கு நான் மாமா, அப்புறம் மேல சொல்லுங்க. ஆனா கடைசி வரைக்கும் என்னை அப்பாவா மட்டும் ஆக விட்றாதீங்க...” என்று முணுமுணுக்க,
"அதெல்லாம் ஆடி போய் ஆவணி வந்தா நீ டாப்பா ஆகிடுவ...!" என்று ஆதர்ஷ் வம்பிழுக்க,
அங்கு எதேர்ச்சையாக வந்த சரண்யா வாய்விட்டே சிரித்து விட, அவ்வளவு தான் போயும் போய் இவ முன்னாடி அசிங்கப்பட்டுட்டோமே, 'ச்ச...' என்ன நினைச்சுருப்பா என்று எண்ணியவன், தன்னை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த ஆதர்ஷையும் ஆஷிக்கையும் பார்த்து முறைத்துவிட்டு, அங்கிருந்து செல்ல சரண்யாவுக்கு என்னவோ போல் ஆனது.
அவளது முக மாற்றத்தை உணர்ந்து கொண்ட ஆஷிக், "ஏய் சரண், அவன் அப்படித்தான். சட்டுன்னு கோபம் வரும், ஆனா சரியாகிருவான். அவனோட கோபம் பால் பொங்குற மாதிரி, ரெண்டு செகண்ட் கூடத் தாக்கு புடிக்காது."
“சரி மாம்ஸ், நான் சும்மாதான் இங்க வந்தேன், நீங்க பேசிட்டு இருங்க.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றவளின் விழிகள் ரோஹித்தைத் தேடி வட்டமிட்டது.
ஓரமாக இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு அலைபேசியைப் பார்த்து கொண்டிருந்தவனின் அருகில், ஒருவித தயக்கத்தோடு சென்றவள்,
"ஹுக்கும்...” என்று செரும, எட்டிப்பார்த்தவன் அவளைக் கண்டதும் அங்கிருந்து செல்ல போக,
"ஹலோ...!" என்று அவனை அழைக்க, அவள் பக்கம் திரும்பிப்பார்த்தவன், “என்ன?” என்று கேட்டான்.
"சாரி, நான் வேணும்னே சிரி..." என்று அவள் மேலும் தொடர்வதற்குள்,
"இட்ஸ் ஓகே!” என்றவன் அங்கிருந்து செல்ல,
"ஒரு நிமிஷம்!” என்று அவள் அவனை மீண்டும் அழைக்க,
"என்ன?” என்று மீண்டும் புருவம் உயர்த்தியவனிடம்,
"தேங்க்ஸ்... அக்காக்கு ஹெல்ப் பண்ணினதுக்கு...” என்று தன் கரங்களைப் பிசைந்தவளைப் பார்த்து, லேசாய் தன் உதட்டுக்கு வலிக்காமல் புன்னகைக்க,
மேலும் தொடர்ந்த சரண்யா, "எனக்குப் புரியுது உங்க கஷ்டம். இவ்வளவு வயசாகியும் உங்களுக்கு மட்டும் கல்யாணம் ஆகலைன்னா, கஷ்டமாதான் இருக்கும்.” என்றதும் கடுப்பானவன், ஒருவித கோபத்தோடு அவள் அருகில் வந்து,
"என்ன வயசானவனா? என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?” என்று தன் கைகளை உயர்த்திக் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் கலந்தவாறு கேட்க,
திடீரென்று அவன் நெருங்கி வந்து கணீர் குரலில் அப்படிக் கேட்டதும் திடுக்கிட்டவள், என்ன சொல்வதென்று விளங்காமல்
"சாரி சாரி... நான் அந்த அர்த்தத்துல சொல்லல. நீங்க அழகாதான் இருக்கீங்க...” என்று மிரண்டு போய் பார்த்தவளிடம்,
"அது என்ன 'தான்ன்னு' அழுத்தி சொல்ற?" என்று தன் புருவத்தை உயர்த்திக் கேட்க,
"இல்லை... அழகா இருக்கீங்க!” என்று அவள் தன் தலையை ஆட்டியவாறே அவசரமாகக் கூற, அவளது முகப் பாவம் அவனை அறியாமலே அவனுக்குப் புன்னகையைத் தர, சிரமப்பட்டு அடக்கிக்கொண்டவன்,
"என்ன?” என்று தன் புருவம் உயர்த்திக் கேட்க,
"என்கூட ஒரு கப் காஃபி சாப்பிடுறீங்களா?” என்று தன் மனதில் உள்ளதை வாய்விட்டு கேட்டவள், அவன் என்ன சொல்ல போகிறான் என்று ஒருவித தயக்கத்தோடு நிற்க, அவளது முகப் பாவத்தை ரசித்தவன் ஒருவித தீவிரமான முகத்துடன்,
"என் அப்பாகிட்ட சொல்லிருவேன்...” என்று சொல்ல, ரோஹித் தன்னைச் சீண்டுகிறான் என்பதை அறிந்த சரண்யா,
"உங்க அப்பாக்கெல்லாம் எனக்குப் பயம் இல்லை கேப்டன்!” என்று தன் புருவம் உயர்த்திப் பதிலுக்கு அவள் கேலி செய்ய, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்.
இப்படி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க, ஜியா மட்டும் குழப்பத்தில் இருந்தாள். வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியோடு உறவாடி கொண்டிருந்த நேரம், ஜியா மட்டும் தன் அறையின் பால்கனியில் நின்றவாறு எதையோ பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவளது மனதில், ‘இனி அடுத்து என்ன?’ என்கின்ற கேள்வி விடாமல் எழுந்து கொண்டே இருந்தது.
ஜியாவைப் பற்றி நன்றாக அறிந்த யாராக இருந்தாலும், 'அவளது குழப்பமான முகம், நான் ஒரு விஷயத்தைப் பற்றித் தீவிரமாக யோசிக்கிறேன் என்று சுட்டி காட்டும் கண்கள்' இவ்விரண்டையும் பார்த்த கனமே, அவள் மகிழ்ச்சியாக இல்லை என்பதைக் கூறிவிடுவர்.
அவளை இன்னும் ஆழமாய் அறிந்தவர்களாயின், அவள் என்ன யோசிக்கிறாள் என்பதையும் புரிந்து கொள்வார்கள்.
அதனாலோ என்னவோ ஆஷிக் இன்று ஜியாவின் அருகில் வரவே இல்லை. முடிந்த வரை, தனிமையில் அவளைச் சந்திப்பதை தவிர்த்தே வந்தான். அனைவரும் கீழே அமர்ந்து மகிழ்ச்சியோடு உறவாடி கொண்டிருக்க, ஜியா மட்டும் அங்கே இல்லை என்பதை அறிந்த மறுநொடியே ஆஷிக் அறிந்து விட்டான், தனக்காக என்ன காத்திருக்கின்றது என்பதை!
கீழே இருந்தே தன் அறையைப் பார்த்து நீண்ட பெருமூச்சு விட்டவன், ‘எவ்வளவோ நடந்து போச்சுல? எல்லாமே முடிஞ்சு போச்சுல? இனிமே என்ன இருக்கு? என்னால எவ்வளவு கஷ்டம். மொத்த குடும்பத்துக்கும் தலை குனிவு. உன்னை ரொம்பக் கஷ்ட படுத்திட்டேன். நான் முன்னாடியே என்னைக் கல்யாணம் பண்ணிக்காத, கஷ்டத்தை மட்டும் தான் உனக்குக் குடுப்பேன்னு சொன்னேன். நீதான் கேக்கலை. நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவ ஆஷிக்.
இப்போ நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன். நீ நல்லவன், உன்னை மாதிரி ஒரு ஆம்பளை கிடைக்க எந்தப் பொண்ணும் குடுத்து வச்சுருக்கணும். உனக்குப் பொருத்தமான ஒரு பொண்ணா பார்த்து நீ கல்யாணம் பண்ணிக்கோ, அதுதான் உனக்குச் சரி. நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். எங்கையாவது போயிடுறேன். இதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது.
உன் கூட வாழுற தகுதி எனக்குச் சுத்தமா கிடையாது.’ இப்படி ஒவ்வொரு வரியையும் தன் மனதிற்குள் சொல்லிப்பார்த்தவன்.
‘மனசுல நான் சும்மா சொல்லிப் பார்த்ததுக்கே இப்படி இருக்கே. இதை இவ ஏங்கி ஏங்கி அழுதுட்டே சொல்லுவாளே? இன்னைக்கு மட்டும் இவ புலம்பட்டும், நான் யாருன்னு காட்டுறேன்!’ என்று நொடி பொழுதில் பொங்கியவன், முகத்தில் எதையும் காட்டிக்காது அறைக்குள் நுழைந்தான்.
நுழைந்தவனின் பார்வை ஜியாவைத் தேடி வட்டமிட, அவள் அறையில் இல்லை என்றதுமே பாதிப் புரிந்து கொண்டவனின் பார்வை பால்கனியின் பக்கம் திரும்ப, அவள் குறுக்கே உள்ள கம்பியை பிடித்துக் கொண்டு நின்ற விதம் அவனது மூளைக்கு முழு உண்மையையும் புரிய வைக்க, ஊமையாய் அழுதவாறு அவளது அருகில் சென்று நின்றான்.
"வந்துட்டியா ஆஷிக்? ரொம்ப நேரமா காத்துகிட்டு இருந்தேன்.”
அவளது, 'காத்துகிட்டு இருந்தேன்’ என்ற வார்த்தைக்குரிய அர்த்தம் புரிந்தவனுக்கு, கோபம் போட்டிபோட்டுக் கொண்டு வந்தது.
"அப்படியா! நான், நீ தூங்கிருப்பியோனு நினைச்சேன்.” என்று அவன் கூறவும் அவள் வெறுமையாய் சிரிக்க, அந்தச் சிரிப்பிலே நிலை குலைந்தவனிடம் அவள் மேலும்,
"இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் தூக்கம் எப்படி ஆஷிக் வரும்?” போட்ட முதல் பாலிலே அடித்தான் சிக்ஸர். அவன் எதோ பேச வாயெடுக்க,
மீண்டும் விரக்தியோடு, "எல்லாமே முடிஞ்சு போச்சுல! இனிமே என்ன இருக்கு? என்னால எவ்வளவு கஷ்டம்? மொத்த குடும்பத்துக்கும் தலை குனிவு. உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்ல?” தொடர்ந்து போட்ட அத்தனை பந்தும் சிக்ஸர் தான்.
‘ஆஹா ஆரம்பிச்சுட்டாளே! நெக்ஸ்ட் வாட்டர் ஃபால்ஸ் தான்!’ என்று அவன் எண்ணிய மறுநொடி, கண்களில் இருந்து கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. ஏங்கி ஏங்கி அழுதவாறே ஜியா,
"நான் முன்னாடியே என்னைக் கல்யாணம் பண்ணிக்காத, உனக்குக் கஷ்டத்தை மட்டும் தான் உனக்குக் குடுப்பேன்னு சொன்னேன், நீதான் கேக்கலை. நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவ ஆஷிக்.” அவளது கண்களில் வழிந்த கண்ணீர் அவனை எதோ செய்ய,
"அப்படி எல்லாம் இல்லை...” என்று ஆறுதல்படுத்த ஆரம்பித்தவனிடம், 'வேண்டாம்!' என்பது போல் தன் கரத்தை உயர்த்திக் காட்டியவள் மேலும் தொடர்ந்து,
"இப்போ நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன். நீ நல்லவன், உன்னை மாதிரி ஒரு ஆம்பளை கிடைக்க எந்தப் பொண்ணும் குடுத்து வச்சுருக்கணும். உனக்குப் பொருத்தமான ஒரு பொண்ணா பார்த்து நீ கல்யாணம் பண்ணிக்கோ, அதுதான் உனக்குச் சரி. நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், எங்கையாவது போயிடுறேன். இதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது. உன்கூட வாழுற தகுதி எனக்குச் சுத்தமா கிடையாது." என்று விடமால் வடிந்த கண்ணீரைத் துடைத்தவாறே கூற,
"அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. நீ என் வாழ்க்கையில வந்ததை என் வரம்னு நான் சொல்லிட்டு இருக்கேன், நீ என்னன்னா இப்படிப் பேசுற?” என்று சமாதனம் செய்ய முயற்சித்தும், ஜியா வழக்கம் போலச் சொன்னதையே சொல்லி அழ கடுப்பானவன் மனதிற்குள்,
‘சாரிடி, நீ அழுதுட்டு இருக்க. உனக்கு இன்னைக்கு ஆறுதல் சொல்ல முடியலை. இப்போ நான் உனக்கு ஆறுதல் சொல்லி விளக்கம் குடுத்தேன், நீ இப்படித்தான் அப்போ அப்போ புலம்புவ. அது நடக்காது, என்ன ஆனாலும் சரி... இனிமே என்னை விட்டுட்டு போறேன்னு நீ சொல்ல கூடாது. இப்போ நான் சொல்ல போறது உனக்குக் கஷ்டமா தான் இருக்கும் ஆனா சாரி...’ என்று எண்ணியவன்,
"சரி, இதுதான் உன் முடிவுன்னா நான் என்ன சொல்றது? உன் இஷ்டம்டா. இதைப் பத்தி வீட்ல இப்பவே சொல்லிருவோம். இப்போதான் எல்லாரும் சந்தோஷமா இருந்தாங்க. சரி ஓகே, என்ன பண்றது...?” என்று ஆஷிக் எந்தவித சலனமும் இல்லாமல் கூற,
ஜியாவின் முகம் ஆச்சரியத்தில் விரிந்தது. சோகம் மறைந்து சிறு கோபம் எட்டிப்பார்த்தது.
‘அவ்வளவு தானா!?’ என்றது மனம்.
அவள் முகத்தை வைத்தே மனதை படித்தவன், ‘கொட்டி கிடக்குதுடி. எங்க அதான் விடமாட்டிகிறியே...’ இவ்வாறு மனதிற்குள்ளே கேலி செய்தான்.
"சரி வீட்ல சொல்லிறலாம்.” என்றவாறு கீழே செல்ல போனவனைத் தடுத்தவள்,
"உடனே இல்லை, கொஞ்ச நாள் போகட்டும்.” என்று கூற,
“அப்படி வா வழிக்கு...” என்று தனக்கு மட்டும் கேட்குமாறு கூற, அவன் எதுவும் நினைத்து கொள்வானோ என்று எண்ணி,
"அதாவது வீட்ல பாவம் கஷ்டப்படுவாங்க...” என்று அழகாகச் சமாளிக்க,
‘புருஷனை தவிர எல்லாரையும் பத்தி கவலைப்படு. இரு உன்னை வச்சுக்கிறேன்.’ என்று மனதில் வசைபாடியவன்,
"தென் ஓகே உன் இஷ்டம். சரிடா தூக்கம் வருது.” என்று கூறி கட்டிலில் சென்று அவன் படுத்துக்கொள்ள, அன்றோடு ஜியாவின் தூக்கம் போச்சு.
‘ஆஷிக்கின் விலகலை தானே மனம் எதிர்பார்த்தது, அப்படி இருந்தும் ஏன் இந்த வலி? எனக்கு என்ன தான் வேண்டும்?’ என்றது மனம்! அவளிடம் பதில் இல்லை. தேடினாள், பதில் இல்லை. விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்.
எட்டிப் பார்த்தாள் அசைவில்லை, சீராக வெளிவந்த மூச்சு அவன் உறங்கிவிட்டதை உணர்த்தியது.
எத்தனை நாட்கள் உறக்கமின்றி இருந்திருப்பான். நிம்மதியாக உறங்கினான், சிகையை மென்மையாய் கோதினாள்.
'என்னை விட்டா பிரிந்து செல்வேன் என்கிறாய்’ கேட்டது அவனது குழந்தை முகம். கட்டுப்பாட்டையும் மீறி வந்த உணர்ச்சியில் தன்னவனின் நுதலில் இதழ் பதித்தவள், அறையை விட்டு வெளியேறினாள். உறக்கத்தில் ஜியா தன் அருகில் இல்லாததை உணர்ந்த ஆஷிக்,
"எங்கடி போன?” என்று கடிந்துக் கொண்டவன் அவளைத் தேடி வெளியே வர, அப்பொழுது ஆயிஷாவின் அறையில் லைட் எரிவதை பார்த்தவன் ஒருவித யோசனையோடு வந்து கதவைத் தட்டப்போக, அப்பொழுது உள்ளே ஆயிஷா அழும் குரல் கேட்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
ஆஷிக்கைக் கண்டதும் ஆயிஷா தன்னை இயல்பாக இருப்பது போல காட்டிக்கொள்ள,
அவளது மனதை படித்தவன், “சமீரை நினைச்சு அழுதுட்டு இருக்கியா?” என்று கேட்க, கட்டுக்குள் இருந்த கண்ணீர் கரையை மீறி வர, ஆஷிக்கின் தோள் மீது சாய்ந்து அழ தொடங்கினாள்.
ஆதரவாய் அவளது சிகையை வருடியவன் அவள் அழுது முடிக்கும் வரை காத்திருந்தான். அழுகை குறைந்த நிலையில், “சமீர் நல்லவன் இல்லை ஆயிஷா."
"அதான் ஏன்? நான் என்ன தப்பு பண்ணினேன்? சமீர் ஏன் நல்லவனா இல்லை? ஏன் அவன் கெட்டவனா இருந்தான்? ஏன் இப்படி ஒரு காரியத்தைப் பண்ணினான்?” உடைந்து மீண்டும் வெடித்தாள்.
"அவனை நினைச்சு நீ அழுறதை கண்டிப்பா என்னால ஏத்துக்க முடியாது."
"இதுல என் தப்பு என்ன இருக்கு?"
"உன் அன்புக்கு தகுதி இல்லாதவங்க மேல அன்பு வைக்கிறது உன் முட்டாள் தனம். அதைவிட்டு வெளியே வராம இப்படி அழுதுட்டு இருக்கிறது நிச்சயமா உன் தப்புதான். நியாயப்படி நீ சந்தோஷப்படணும், நல்லவேளை உன் கல்யாணத்துக்கு முன்னாடி அவனைப் பத்தின உண்மை தெரிஞ்சு போச்சு.
இல்லைன்னா கொஞ்சம் நினைச்சு பாரு, இப்போ நினைச்சாலும் கஷ்டமா இருக்கு. ஆயிஷா, மனுஷங்க சிலநேரம் கெட்டவங்களா இருக்கிறது சகஜம். ஆனா கெட்டது மொத்தமா மனுஷ ரூபத்துல இருந்தா என்ன பண்றது?
சமீர் கூட அந்த மாதிரி தான். அவனுக்காக நீ அழுதனா அதை விட முட்டாள் தனம் வேற எதுவும் இல்லை. வாழ்க்கை குடுத்த முதல் அடி. இதுல கத்துக்க வேண்டியது நிறையா இருக்கு. மனுஷங்களை படி. நான் சொல்றேன், அப்பா, அம்மா சொல்றாங்கன்னு எதையும் செய்யாத. உன் மனசு சொல்றத கேளு.
இப்படியே இருக்காத. பேசாம நீ ஏன் கொஞ்ச நாள் லா ப்ராக்ட்டிஸ் பண்ண கூடாது? உனக்கு ஒரு நல்ல சேஞ்சா இருக்கும். இன்னும் நிறைய மனுஷங்கள பார்ப்ப, உனக்கும் ஒரு தைரியம் வரும். நான் சொல்றேன்னு இல்லை, நீயே யோசிச்சு சொல்லு. நானே நல்ல லாயரா பார்த்து உன்னைச் சேர்த்து விடுறேன்."
"ம்ம்... சரி ஆஷிக்.” என்று லேசாகத் தன் தலையை ஆட்டினாள்.
"எதுனாலும் நீ என்கிட்ட ஷேர் பண்ணலாம்.” என்றவன், அவள் உறங்கும் வரை அருகிலே அமர்ந்து அவளது சிகையைக் கோதிவிட்டு, அவள் உறங்கிய பிறகு தன் அறைக்கு வந்தான்.
அங்கே இன்னொரு ஜீவன் உறங்காமல் கண்களை மட்டும் உருட்டி உருட்டி பார்த்துக் கொண்டிருந்தது.
***
நிலவே 74
தன்னைக் கண்டதும் ஆஷிக் நிச்சயமாக, 'ஏன் இன்னும் தூங்கலைன்னு' ஏதாவது கேப்பான் என்று எண்ணி அவளாய் காத்திருந்தாள்.
அவளை நெருங்கி வந்த ஆஷிக், “ஜியா!” என்று அழைக்க, “என்ன?” என்றவளிடம்,
"தூக்கம் வருது, கொஞ்சம் லைட் ஆஃப் பண்ணிருடா.” என்று கூறி போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்க ஜியா, ஆஷிக்கைப் பார்த்து முறைத்தவாறே உறங்கினாள், இல்லை உறங்க முயற்சி செய்தாள்.
‘நாம் ஆஷிக்குக்கு சரி தானா? அவன் தன் மீது வைத்திருப்பது காதலா? பரிதாபமா? என்கின்ற கேள்விகள், ஜியாவை ஆஷிக்கிடம் இருந்து தள்ளியே வைத்தது.
அவளது மனதும் மூளையும் தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சி என்று தேவை இல்லாத உணர்ச்சிகள் விரித்த வலையில் சிக்குண்டு கிடந்தது.
அதனாலே ஆஷிக் தன் மீது பொழிந்த காதலை எல்லாம் அவன் தன்னைக் கண்டு பரிதாபப்படுகிறான் என்று எண்ணி, அவனை விட்டு தள்ளி இருப்பதே சிறந்தது என்று தவறான முடிவுக்கு வந்தவள், அவனை விட்டு பிரிந்து தன் சித்தப்பா வீட்டுக்கு செல்வது என்று முடிவு செய்து தன்னைத் தானே தண்டித்துக் கொண்டாள்.
அவள் சித்தப்பா வீட்டுக்குச் செல்வதாகக் கூறியதும் யாரும் அவளைத் தடுக்கவில்லை. அவளது உள் நோக்கம் அறியாது அனைவரும் அவளுக்கும் ஒரு வித்தியாசம் வேண்டும் என்று எண்ணி சரி என்று சொல்ல,
ஆஷிக் மட்டும் கோபமாக இருந்தான். ஆனால் அதை வெளி காட்டிக்கவில்லை. இந்த முறை என்ன நடந்தாலும் பரவாயில்லை, என் காதலின் ஆழம் உணர்ந்து அவளாகத் தன்னைத் தேடி வரவேண்டும். அதுவரை காத்திருப்பது என்று மிகவும் உறுதியாய் இருந்தான்.
இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருப்பது என்பது மிகவும் கொடுமையாக இருந்தது. ஒவ்வொரு நொடியும் கசந்தது. அவனது நினைவுகள் அவளை விடாமல் துரத்தியது.
அவளது துறுதுறு விழிகள் அழகு கொஞ்சும் வதனம் அவனது உறக்கத்தை மொத்தமாகத் திருடி சென்றது. அவன் எடுத்த உறுதி எல்லாம் இரண்டு, மூன்று நாட்களுக்குத் தான் தாக்குப் பிடித்தது. ஆஷிக் தன் நண்பர்களிடம் புலம்பத் தொடங்கினான். ஜியாவும் கிட்டத்தட்ட அதே நிலைமையில் தான் இருந்தாள். ஆனால் என்ன காதலைத் தாண்டி ஒருவித குற்ற உணர்வு, அவளை அவனிடம் நெருங்கவிடாமல் சிறை செய்தது.
இப்படி இருக்க ஒருநாள் ஆதர்ஷ், ஜியாவுக்குத் தொடர்பு கொண்டு, "என்னமா ஜியா உன் இஷ்டத்துக்கு நீ அங்கே போய் இருந்துகிட்ட, ஆஷிக் என்ன ஆனான் எப்படி இருக்கான்னு உனக்குக் கவலையே இல்லையா?"
"ஏன் அண்ணா, என்னாச்சு?"
"அவன் நீ இல்லாம என்னவோ மாதிரி இருக்கான், ரொம்ப நாள் ட்ரிங்க்ஸ் பக்கமே போகாதவன், இப்போ தினமும் குடிக்கிறான். ஒரே புலம்பல், நீ முதல்ல கிளம்பி வா.” என்று அவன் கூறியதைக் கேட்டபிறகு ஜியாவால், அங்கே ஒரு நொடி கூட நிம்மதியாகவே இருக்க முடியவில்லை. உடனே கிளம்பியவள் மறுநாள் சாயங்காலமே ஆஷிக்கின் வீட்டை அடைந்தாள்.
அவன் வீட்டில் இல்லாமல் போக, உடனே ஆதர்ஷுக்கு தொடர்பு கொண்டவள், "அண்ணா நான் வீட்டுக்கு வந்துட்டேன், ஆஷிக் அங்க இல்லை."
"பார்த்தியா, மணி ஆறு ஆகுது வீட்ல அவன் இல்லை. வீட்ல இருக்க வேண்டியது தானே, இல்லைன்னா என்னைப் பார்க்க வரலாம்ல? இந்த நேரத்துல இவனுக்கு வெளியில என்ன வேலை?” என்றவன், அருகில் இருந்த ஆஷிக் தடுக்கத் தடுக்க ஜியாவை இன்னும் கலவரப்படுத்தினான்.
"ஆஷிக் இப்போ எங்க இருப்பான்?” என்று கண்கள் கலங்க அவள் கேட்க,
"வேற எங்க இருப்பான், மணி ஆறு. ஏதாவது ஒரு பார்ல தண்ணி அடிச்சுட்டு, மட்டையாகி உன்னை நினைச்சு கவலை பட்டுட்டு கிடப்பான்." என்றவன்,
"சரி, நீ கிளம்பி நான் சொல்ற இடத்துக்கு வா. அப்போ உனக்குப் புரியும், ஆஷிக் படுற வேதனை.” என்று அவன் கூறிய மறுநொடி, ஜியா ஆட்டோவில் ஆதர்ஷ் சொன்ன இடத்திற்குக் கிளம்பினாள்.
ஆதர்ஷ் ஃபோனை வைத்த மறுநொடி ஆஷிக், “ஏன்டா அவகிட்ட பொய் சொன்ன?”
"ஓ... அப்போ உனக்கு வருத்தமே இல்லை...?"
"அது இருக்கு..."
"ரெண்டு நாளா நீங்க புலம்பவே இல்லை?"
"புலம்புனேன் தான், ஆனா..."
"என்ன ஆனா..."
"டேய் அதுக்கு ஏன்டா பார்ல இருக்கேன், தண்ணி அடிக்கிறேன்னு பொய் சொல்ற. அவளுக்கு அதெல்லாம் சுத்தமா புடிக்காது. இன்னும் என்னை விட்டு விலகி போயிற போறாடா..."
"பொண்ணுங்க சைக்காலஜியே உனக்குத் தெரியலைடா. விலகி போணும்னா ஏன்டா உடனே கிளம்பி வந்து நிக்கிறா. அவ இல்லைன்னா நீ எவ்வளவு ஏங்கி போய் இருக்கன்னு காட்டு, அப்போ தான் உன்னை விட்டு என்னைக்கும் விலகாம இருப்பா."
"அவ என்னை விட்டு விலகி போறது வேற காரணத்துக்கு. அதுக்கு இதெல்லாம் பண்ணணும்னு அவசியம் இல்லை, உக்கார்ந்து மனசை விட்டு பேசுனாலே போதும்."
"டேய் தமிழ், ஹிந்தி, இங்கிலிஷ், கொரியன், போஜ்பூரி, உருது இப்படி எல்லா லாங்குவேஜ் சீரியலையும் நான் பார்த்துட்டேன். ஹீரோ, ஹீரோயின் பிரிஞ்சிட்டா, ஹீரோவோட உயிர் நண்பன் இப்படி ஏதாவது பொய் சொல்லி அவங்களை வர வைப்பான். ரெண்டு பேரும் சந்திப்பாங்க, அப்புறம் ஹீரோயின் காதல பொழிவாங்க, செட் ஆகும்..."
"சொதப்புனா...?"
"நான் பார்த்துக்கறேன் போதுமா? டேய், ஜியா தான் கால் பண்றா, வந்துட்டான்னு நினைக்கிறேன். நீ உள்ள போ. ஒரு ஓரமா தண்ணி அடிச்சுட்டு இருக்கிற மாதிரி, சோகமா முகத்தை வச்சுட்டு உக்கார்ந்திரு. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.” என்ற ஆதர்ஷ் ஜியாவைக் காண செல்ல,
ஒருவித பதற்றத்துடன் வந்த ஜியா ஆதர்ஷிடம், "ஆஷிக் எங்க?"
"உள்ள தான் இருக்கான்."
"சொல்ல சொல்ல கேக்க மாட்டிக்கிறான். நீயாவது வந்து சொல்லுமா...” என்று அவளை உள்ளே அழைத்துக்கொண்டு செல்ல,
அந்த நேரம் பார்த்து நன்கு குடித்துவிட்டு ஒரு பெண் ஆஷிக்கிடம் நடனம் ஆட வருமாறு கேட்டு, அவனது கரத்தைப் பிடித்து வற்புறுத்தி கொண்டிருக்க, ஆஷிக் அந்தப் பெண்ணை விலக்கிவிட, அந்த பெண்ணோ எதையோ புலம்பியபடி மயக்கத்தில் அவன் மீது சாய்ந்து கொள்ள,
இந்தக் காட்சியைக் கண்ட ஜியாவின் கண்கள் தகத்தகவென்று கொழுந்து விட்டு எரிந்தது.
ஜியாவின் கண்களைக் கண்ட மறுநொடியே ஆதர்ஷ், ‘டேய் என்னடா இப்படிச் சொதப்பி வச்சிருக்க?’ என்று தன் தலையில் அடித்துக்கொள்ள, கண்களில் தொனித்த அதே கோபத்தோடு ஜியா ஆஷிக்கின் அருகில் செல்ல, அவளைக் கண்ட மறுநொடி ஆஷிக்கின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
ஆனால் ஜியாவின் விழிகள் சென்ற திசையைக் கண்டவனுக்கு அனைத்தும் விளங்க, உடனே அந்தப் பெண்ணை விலக்கி விட முயற்சிக்க, அதற்குள் அந்தப் பெண்ணை ஒரே இழுப்பிலே ஆஷிக்கிடம் இருந்து பிரித்த ஜியா,
ஆஷிக்கைப் பார்த்து உக்கிரமமாக முறைக்க, தன் மனைவியின் ஆக்ரோஷமான பார்வையைப் பார்த்து ஆஷிக் அவளிடம்,
"அதுவந்த ஜியா நான்...” என்று தன்பக்கம் உள்ள விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பிக்க, அவனைத் தொடர விடாமல் அவனது கன்னத்தில் பளாரென்று அறைந்தவள், அழுதுகொண்டே அங்கிருந்து சென்றாள்.
அஷிக்குக்கு ஆதர்ஷ் மீது வெறி ஏறியது. அவனது பார்வை தன் பக்கம் விழுவதை அறிந்த ஆதர்ஷ், இயலாமையோடு அவனைப் பார்க்க,
"வந்து வச்சுக்கிறேன்டா...” என்று முறைத்த ஆஷிக், "ஜியா நில்லு! நான் சொல்ல வர்றத முதல்லக் கேளு...” என்றவாறு ஜியாவின் பின்னாலே சென்றான்.
வீட்டில் இருந்த தனது எல்லாப் பொருட்களையும் ஒன்று விடாமல் எடுத்து பேக் செய்து கொண்டிருந்தவளைத் தடுத்தவன்,
"ஜியா! ஜியா! ஐ செட் லீசன் டு மீ..."
"எனக்கு எதுவும் கேக்க வேண்டாம்."
"இப்போ எங்க கிளம்புற?"
"என் வீட்டுக்கு போறேன்."
"இதான்டி உன் வீடு நான் சொல்றத கொஞ்சம் கேளு. ஆனா அங்க நடந்தது, நீ பார்த்தது எதுவும் உண்மை இல்லை."
"என்ன பார்க்கணுமோ எல்லாம் பார்த்துட்டேன். ஆதர்ஷ் அண்ணா சொன்னதைக் கேட்டு உன்னைப் பார்க்க வந்தேன் பாரு, என்னைச் சொல்லணும். நான் இல்லைன்னா நீ கஷ்டப்படுவனு நான் நினைச்சேன். ஆனா நீதான் சந்தோஷமா இருக்கியே...?"
"ஜியா நீ என்னை ரொம்பக் கடுப்படிக்கிற. அந்த பொண்ணை எனக்கு யாருனே தெரியாது.”
"ஆமா யாருனு தெரியாம தான் ஒட்டி உரசிக்கிட்டு இருந்திங்களா?"
"என்னடி வேணும்?"
"எதுவும் வேண்டாம்."
"நீ இல்லாம நான் எப்படிடி வாழ்வேன்?"
"அப்படியா! ஆனா அப்படித் தெரியலையே? அதான் அந்தப் பொண்ணு கூட நீ சந்தோஷமா இருந்ததை நான் பார்த்தனே! அந்தப் பொண்ணு கூடவே போ, நான் போறேன்."
"ஐயோ! அவ யாருன்னே தெரியாது."
"போதும்! எதுவும் எனக்குச் சொல்லவேண்டாம், நான் எல்லாம் பார்த்துட்டேன்.” என்றவள் சொன்னதையே சொல்ல,
"ஆமா, எனக்கு அவளைப் புடிச்சுருக்கு. இப்போ அதனால உனக்கு என்ன வந்துச்சு? அதான் நீ என்கூட இருக்க மாட்டனு சொல்லிட்டியே, நான் யாருகூட இருந்தா உனக்கென்ன?” என்றவன் கோபம் கலந்த எரிச்சலுடன் சொல்ல,
மேலும் கதறி அழுதவள் தன் சூட்கேஸை எடுத்துக்கொண்டு வேகமாகக் கிளம்பினாள்.
"ஜியா, ஜியா!” என்றவாறு அவளது பின்னால் சென்று தடுக்க,
அவனைப் பார்த்து, "ஆஷிக் ப்ளீஸ், என்னை விடு.” என்றதும், பிடித்திருந்த அவளது கரத்தை விட்டவன்,
"போறது தான் போற, வீட்டு சாவிய குடுத்துட்டு போ.” என்று கூற,
அவனைப் பார்த்து முறைத்தவள், "டேபிள் மேல இருக்கு, போய் எடுத்துக்கோ."
"ஹலோ இந்த வீட்ல எவ்வளவோ டேபிள் இருக்கு, வந்து எடுத்து தந்துட்டு போ.” என்று கூறிவிட்டு தன் மனைவி தன்னைப் பார்த்து முறைக்கிறாள் என்று உணர்ந்துகொண்டு ஆகாயத்தைப் பார்க்க, அவனைப் பார்த்து முறைத்தவாறே அவள் தன் அறைக்கு வேகமாக நடையைப் போட,
"ஷப்பா!” என்று இழுத்து மூச்சு விட்டவன், அவள் பின்னாலே சென்று கதவிற்குத் தாழிட்டுக் கொண்டான்.
சாவியைத் தேடி எடுத்து அவனது கரத்தில் கொடுத்து, "இந்தா வச்சுக்கோ, நிம்மதியா வாழு.” என்றவள் அங்கிருந்து கிளம்பப் போக,
"அப்படியே என்னோட வாட்ச் எங்க இருக்குன்னு சொல்லிரு.” என்று கூற எரிச்சல் அடைந்தவள்,
பீரோவை திறந்து, "இதோ மிடில் ரேக்ல இருக்கு."
"ஓகே, ஹலோ ஜியா மேடம் எங்க போறீங்க? என்னோட டை, ஷாக்ஸ், ஷூஸ் அப்புறம்...” என்று அவன் தொடர்வதற்குள்,
அவனைக் கைப்பிடித்து அழைத்து, "இதோ இந்த ஷெல்ஃப்ல டை, இங்க ஷாக்ஸ் அந்த கார்னர்ல ஷூஸ்... அப்புறம் உன்னோட டீயோட்ரண்ட் அப்புறம் உன்னோட பெர்ஃப்யூம் அப்புறம் உன்னோட யூனிஃபார்ம்...” என்று அனைத்தையும் கூறியவள் அவனைப் பார்த்து,
"எல்லாம் ஓகேவா? ஹவ் யு டன்!” என்று அங்கிருந்து கிளம்பப் போக,
"என்னோட ஹார்ட்...?” என்று அவன் கூறியதில், அடுத்த நொடி எடுத்து வைக்காமல் அவள் அமைதியாய் நிற்க, மேலும் அவள் அருகில் வந்தவன்,
"என்னோட காதல்?” என்று கூற, தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டவளின் விழிகளில் இருந்து, கண்ணீர் தாரைத் தாரையாக வர,
"என்னோட உயிரு?” இதை எல்லாத்தையும் குடுத்துட்டு நீ எங்க வேணும்னாலும் போகலாம், என்று அவன் சொன்ன அடுத்த நொடி ஜியா, ஆஷிக்கை இறுக்க அணைத்துக் கொண்டாள்.
ஆஷிக் மார்போடு சாய்ந்திருந்தவள் பின்பு எதையோ பற்றி யோசித்து அவனை விட்டு விலகி,
"உனக்கு நான் ரொம்ப போர் அடிச்சுட்டேன்ல?” என்று கேட்க,
"இல்லை ஜியா, ரொம்ப பேர் முன்னாடி அடிச்சுட்ட...” என்று தன் கன்னத்தைத் தடவ, அவனைப் பார்த்து முறைத்தவள் ஏங்கி ஏங்கி அழுதவாறே,
"ஆதர்ஷ் அண்ணா உன்னைப் பத்தி சொன்னப்போ, நான் எவ்வளவு பதறிட்டேன் தெரியுமா? ஆனா நீ பப்ல அந்தப் பொண்ணுங்க கூட டான்ஸ் ஆடிட்டு இருக்க..."
"ம்ம்... அந்தப் பொண்ணு ரொம்ப ஹாட்டா இருந்தா...” என்று அவன் வம்பிழுக்க, அவனது கன்னத்தில் பளாரென்று அறைய,
ஆஷிக் ஏற்கனவே இதை எதிர்பார்த்து இருந்ததால் பெரிதும் அதிர்ச்சி அடையாதவன், அவள் மனதிற்குள் அடக்கி வைத்திருந்த வேதனை இப்படி ஆத்திரமாகவாவது வெளியே வரட்டுமே என்று எண்ணினான்.
"ஹாட்டா இருந்தா டான்ஸ் ஆடுவியா?” என்று அவள் கேட்க,
"ஆமா...” என்று நிமிர்ந்தவனின் மறு கன்னத்திலும் சுளீரென்று அடி விழ, ஆனாலும் அசராமல் மறுபடியும் முதலில் அடித்த கன்னத்தைத் தன்னவள் மீண்டும் அடிப்பதற்கு ஏதுவாகக் காட்ட, இதற்கு மேல் ஆஷிக்கை அடிக்க முடியாதவள்,
அவனை அடிக்க நேர்ந்த தன் நிலையினை எண்ணி நொந்து கொண்டு அவனது மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.
தன்னவளின் கோபத்தைக் கூடத் தாங்க தயாராக இருந்த ஆஷிக் அவளது கண்ணீரைத் தாங்க முடியாமல்,
"ஏய் ஜியா ப்ளீஸ்டா! என் செல்லம்ல! அழாத... வேணும்னா என்னை இன்னும் நாலு அடி கூட அடிச்சுக்கோ. ஏன், நாப்பது கூட ஏன் உதைக்க, மிதிக்கக் கூடச் செய். என்ன வேணும்னாலும் செய், நான் இங்க தான இருக்கேன், என்னை வச்சு செய். ஆனா இப்படி அழ மட்டும் செய்யாதடா, கஷ்டமா இருக்கு...!" இவ்வாறு பதறிக்கொண்டே, ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்த மனைவியை ஆறுதல் படுத்தினான்.
என்ன முயன்றும் அவளது அழுகையை நிறுத்த முடியாமல் போக, ஆஷிக் வேறு வழியின்றி அவளாகச் சமாதானமாகும் வரை காத்திருக்க எண்ணி, தன் நெஞ்சோடு புதைந்திருந்த தன்னவளை ஆறுதல் படுத்தும் நோக்கில், அவளது தலையை மட்டும் ஆறுதலாக வருடி கொண்டிருந்தான்.
ஒருவழியாக அவளாகவே அவனது மார்பை விட்டு விலகி, "நான் உனக்கு ரொம்பக் கஷ்டம் குடுத்துட்டேன்ல? நான் உன் வாழ்க்கையில வந்திருக்கவே கூடாது. நான் போயிடுறேன் ஆஷிக், நீ சந்தோஷமா இரு.” என்று கூற,
கோபமுற்றவன், "என்னடி சொல்ற, போறியா? நீ போனா நான் மட்டும் என்ன செய்ய? ஜியா நான் உன்னை லவ் பண்றேன், நீ எனக்கு வேணும், இதை எப்படி நான் உனக்குப் புரிய வைக்கனு எனக்குச் சத்தியமா தெரியல. உன்னுடைய கடந்த காலத்தை விட்டுட்டு வானு நான் சொல்லல. நீ எப்படி இருக்கியோ அப்படியே வா. ஆனா என்கிட்ட வானு தான் சொல்றேன்.
உன்னை உருகி உருகி நான் காதலிக்கணும் ஜியா, நான் உன்கூட ரொம்ப வருஷம் சந்தோஷமா வாழணும், நம்ம வாழ்க்கையோட ஒவ்வொரு நொடியையும் நான் உன்கூட ரசிக்க விரும்புறேன். வாழ்ந்தா ஆஷிக், ஜியா மாதிரி வாழணும்னு எல்லாரும் சொல்லணும்."
"ஆஷிக், எனக்கும் உன்னை விட்டு விலகணும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனா அந்தக் கொடூரமான சம்பவத்துக்கு அப்புறம் என்னால இயல்பா இருக்க முடியல. என்னையே நான் வெறுக்கிறேன். நான் ஒரு களங்கம், நம்ம குடும்பத்துக்கே ஒரு களங்கம். உன் காதலுக்கு எனக்குத் தகுதியே இல்லை. உன்னைச் சந்தோஷமா என்னால வச்சுக்க முடியாது. கஷ்டத்தை மட்டும்தான் நான் உனக்குக் குடுப்பேன்.” என்று மீண்டும் அவள் அழ,
கோபம் தலைக்கேறிய ஆஷிக், ஜியாவின் கன்னத்தில் அறைய தன் கையை ஒங்க, தன்னைத் தானே கட்டுப்படுத்தியவன் தன் கரங்களால் அவளது முகத்தை ஏந்தி,
"வெறும் ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப் மட்டும் தான் சந்தோஷத்தை தரும்னா, நான் ஏன் இத்தனை வருஷம் காத்திருக்கணும்? வெறும் அடிவயித்து உணர்ச்சிக்காக நான் உன்னைக் காதலிக்கல. என் மனசுல இருந்து உன்னை நேசிக்கிறேன். இதெல்லாம் இல்லாம கூட உன்கூடக் காலம் முழுக்க என்னால சந்தோஷமா இருக்க முடியும். நீ என் கூடவே என்னை விட்டு போகாம இருந்தா, அதுவே போதும்.
உனக்கா எப்போ என்கூட வாழணும்னு தோனுதோ அப்போ பார்த்துக்கலாம். நீ என் நெஞ்சில சாஞ்சி தூங்குற சந்தோஷமே போதும், சாகுற வரைக்கும் நான் நிம்மதியா வாழ்வேன். இங்க பாரு ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கோ, எனக்கு உன்மேல எந்தவித பரிதாபமும் கிடையாது. பரிதாபம் முன்பின்ன தெரியாதவங்க மேல தான் வரும்.
நமக்கு நாமே யாரும் பரிதாபம் பட்டுக்கிறது இல்லை. நீ என்னோட ஜியா, நீ வேறு நான் வேறு இல்லை. நீ எனக்கு உள்ள இருக்க. நீ என் உயிர், நீ இந்த ஆஷிக்கோட ஜியா. ஜியா இல்லாம ஆஷிக் இல்லை, ஆஷிக் இல்லாம ஜியா இல்லை."
"எல்லாம் உண்மை தான் ஆஷிக், ஆனா கடைசியில உன் கையில ரத்த கறைய படிய வச்சுட்டனே! என்னால நீ பாவத்தைச் சுமந்துட்டு இருக்கிறியே! என்னால எப்படித் தாங்கிக்க முடியும்?"
"பாவமா! அவங்க எல்லாருமே பாவிங்க. அவங்கள கொலை பண்றது ஒன்னும் பாவம் இல்ல. அப்படியே அது பாவமா இருந்தாலும் உனக்காக எந்தப் பாவத்தை வேணும்னாலும் நான் செய்வேன். உனக்காக நான் உயிரையும் எடுப்பேன். அதே நேரம் நீ என்னை விட்டு போனா என் உயிரையும் குடுப்பேன். இதுக்கு மேல எப்படி என் மனசை உனக்குப் புரிய வைக்கிறதுனு எனக்குத் தெரியல.” என்று அவன் கவலையோடு கூற,
தன் கண்களைத் துடைத்துக் கொண்டவள் அவனை இறுக்கமாகக் கட்டி அணைத்துக்கொண்டு,
"ப்ளீஸ் ஆஷிக்... அப்படிச் சொல்லாத, நான் புரிஞ்சிக்கிட்டேன். இனிமே உன்னை விட்டு என்னைக்கும் போறேன்னு சொல்ல மாட்டேன், நீ எனக்கு வேணும்.” என்று தன்னவனை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அதீத நெருக்கம் இருவருக்கும் ஒருவித உணர்வை ஏற்படுத்த,
தயக்கம் கொஞ்சம், தவிப்புக் கொஞ்சம், பயம் கொஞ்சம் என அவளது உணர்ச்சிகளை அனைத்தும் அவளது கண்கள் வெளிப்படுத்த, ஆனாலும் இதையெல்லாம் தாண்டி அவளது கண்களில் தனக்காக் தெரிந்த காதலைக் கண்டு உள்ளுக்குள் மகிழ்ச்சியுற்றவன், தன்னவளின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டவனாய் அவளது நெற்றியில் இதழ் பதித்து,
சற்று அவளை விட்டு விலகி சோபாவில் அமர்ந்துகொண்டு, அவளது கைகளைத் தன் கைகளுக்குள் கோர்த்து கொண்டவாறே அவளது கண்களைப் பார்த்து,
"ஜியாமா மணி பத்தாகிடுச்சு, ட்ராவல்ல டயர்ட் ஆகிருப்ப, போய் ரெஸ்ட் எடு. மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.” என்று கூற,
தன்னையே கண் கலங்க பார்த்த தன் காதல் மனைவியை மெல்ல அள்ளி கட்டிலின் மீது கிடத்தி நெற்றியில் முத்தமிட்டவன், சிறு புன்னகையோடு அவளது அருகில் சரிந்து, தனது மார்போடு அவளை அணைத்துக்கொள்ள, தன்னவனது அணைப்பில் நிம்மதியாய் கண்மூடினாள். அவனும் அவளை வருடியவாறே துயில் கொண்டான்.
***
நிலவே 75
மாதங்கள் அழகாக உருண்டோடிருந்த நிலையில் ஆதர்ஷ், நடாஷாவின் திருமணம் அனைவரின் ஆசியோடு சுகமாக முடிந்திருக்க, ஆஷிக், ஜியா வாழ்க்கையிலும் அனைத்தும் சுமூகமாக இருந்தது.
ஆஷிக்கின் காதல் குடும்பத்தினரின் அரவணைப்பு, மருத்துவரின் ஆலோசனை இப்படி எல்லாம் ஒன்று சேர்ந்து கிடைக்க, அவளது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் வந்தது. அடிக்கடி பயப்படுவது, நடக்காததை நடந்துவிடுமோ என்று எண்ணி கற்பனை செய்வது, இப்படி எல்லாப் பிரச்சனைகளும் படிப்படியாகக் குறைந்திருக்க, ஜியா பழையபடி சகஜ நிலைக்கு வந்திருந்தாள்.
ஆஷிக்கின் தூண்டுதலால் அவனது துணையோடு முறையான மெடிக்கல் கவுன்சலிங் எடுத்துக் கொண்டவள், இப்பொழுது சர்ஜெரி கண்டு பயப்படுவதில்லை. தன் மாமனாரின் ஹாஸ்பிடலிலே தன் பணியை நல்லபடியாகத் தொடங்கியிருந்தாள்.
ஆக அவளது வாழ்க்கையில் இழந்ததை எல்லாம் கடவுள் இரண்டு மடங்காக அள்ளி அள்ளி கொடுக்க, ஆஷிக் ஜியாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனாலும் ஜியாவின் மனதில் ஒருவித நெருடல்.
இப்படி தன்னைப் பார்த்து பார்த்து காதல் செய்யும் தன் கணவனை, தன்னை விட்டு தள்ளி வைத்திருப்பதை எண்ணி வருத்தம் கொண்டவள், இனிமேலும் தன்னவனைத் தன்னை விட்டு விலக்கி வைக்க விரும்பாது,
இதுவரை அவன் அள்ளி அள்ளி கொடுத்த காதலுக்கு இணையாக தன்னையே கொடுக்க முடிவு செய்தவள், தன் வாழ்க்கையின் அடுத்த நிலைக்குத் தன் கணவனுடன் பயணிக்க முடிவு செய்தாள்.
தன்னவனைப் பற்றிய சிந்தனையிலே கண்களில் காதலோடும், கடந்த காலத்தில் தனக்கும் ஆஷிக்கிற்கும் நடந்த இனிமையான நிகழ்வினை நினைத்து தன்னையே மறந்து உதட்டில் புன்னகையோடு, அடுப்பில் இருந்த பால் பொங்குவதைக் கூடக் கவனிக்காதிருந்தவளைக் கண்டு, அருகில் வந்த ஆஷிக் சட்டென்று அடுப்பை அணைத்து,
"ஏய் ஜியா என்னடா பால் பொங்கிட்டு இருக்கு, அதைக் கூடக் கவனிக்காம என்ன யோசனையில இருக்க?” என்று வினவ, சட்டென்று அவன் புறம் திரும்பியவள் கேள்வியாய் தன்னைப் பார்த்தவனை காதல் கொண்டு எதிர்நோக்க,
"ஏய் என்ன அப்படிப் பாக்குற? என்னாச்சுப் பிரச்சனை, ஏதும் இல்லையே?" என்று பதற்றத்துடன் அவன் கேட்க,
மனதிற்குள், ‘ஆசையா பாக்குறேன், பிரச்சனையானு கேக்குற? நீ சரியான வாத்துடா!’ என்று செல்லமாகக் கடிந்தவள் சிறு புன்னகையோடு, "அதெல்லாம் எதுவும் இல்லை, நான் நல்லா இருக்கேன்.” என்றதற்குப் பிறகே நிம்மதி அடைந்தான்.
"சரிடா வேலைக்கு டைம் ஆச்சு, நான் கிளம்புறேன்.” என்றவன் மீண்டும் அவள் புறம் திரும்பி,
"ஆமா நீ ஹாஸ்பிடல் போகல?” என்று கேட்க,
"இல்லை, இன்னைக்கு நான் ஹாஸ்பிடல் போகல ஆஷிக்."
"ஓ... சரி, பாய்!” என்று கிளம்பியவனைத் தடுத்தவள்,
“ஆஷிக், இன்னைக்கு வேலை முடிஞ்சதும் கொஞ்சம் சீக்கரம் வந்திரு." என்று கூற,
மீண்டும் பதற்றமுற்றவன், ஜியாவின் நெற்றியை தன் கரம் கொண்டு தொட்டு பார்த்தவாறே, "ஏய் என்னாச்சு, உடம்புக்கு எதுவும் சரியில்லையா என்ன, காய்ச்சல் எதுவும் இல்லை...” என்று கூறியவனது கண்களில் பதற்றம் குடிகொள்ள,
அவனை ஆசுவாசப்படுத்தும் நோக்குடன் அவனது கன்னத்தைத் தன் கைகளில் ஏந்தியவள், அவனது கண்களை நோக்கி தன் மேல் தன் கணவன் கொண்டுள்ள அதீத அன்பை நினைத்து உருகியவளாய் தனக்குள்,
‘நீ என்மேல வச்சுருந்த காதலை எனக்குக் காட்டிட்ட, இப்போ இது என்னோட முறை. இன்னைக்கு நான் குடுக்கப் போற சர்ப்ரைஸ்ல நீ அப்படியே மெய் சிலிர்க்க போற, ஐ லவ் யு ஆஷிக்!’ என்று நினைத்தவள் அவனிடம்,
"எனக்கு ஒன்னும் இல்லை, ஆபிஸ்க்கு போ. சும்மா உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாமேனு தான் வர சொன்னேன், சீக்கிரமா வந்திரு.” என்று அவள் கூற,
புன்னகையோடு, "சரி” என்று தன் தலையை அசைத்தவன் ஆபிஸ்க்கு சென்றான்.
தன் காதல் கணவனைப் பற்றிய சிந்தனையிலே அன்றைய பொழுதினை இனிமையாய் கடத்தினாள்.
அவன் வரும் நேரம் வந்ததும் தன் ஈர கேசத்தை நன்கு துவட்டியவள், ஆஷிக்கிற்குப் பிடித்த வெள்ளை நிற வெண்பட்டு புடவைக்குள் தன்னைப் புகுத்திக்கொண்டு, தன் அங்கம் முழுவதும் தங்கத்தால் அலங்கரித்தாள்.
முதன் முறை தன்னவனுக்காகத் தன்னை இவ்வாறு அலங்கரித்துக் கொண்டவள், கண்ணாடியின் முன் அமர்ந்து தன்னையே பார்க்க, இது தான் தானா என்று தன் பிம்பத்தைக் கண்டு வியந்து போனாள்.
‘ஆஷிக் சரியாகத் தான் சொல்லிருக்கான், உண்மையிலே இதுல நான் அழகாதான் இருக்கேன்.’ என்று தன்னைத் தானே ரசித்துக்கொண்டிருந்தவளை அவளது ஆழ்மனம் தட்டி எழுப்பி,
‘உன்னவன் உன்னை ரசிப்பதற்கும் கொஞ்சம் மிச்சம் வை ஜியா.’ என்று கேலி செய்ய,
தன்னிலைக்கு வந்தவள், தன் கூர்மையான பெரிய விழிகளுக்கு மையிட்டு, கார் மேகம் போன்ற தன் கூந்தலை மல்லிகை பூவால் அலங்கரித்தவள், பார்ப்பதற்கு அந்த நிலவே கீழே இறங்கி வந்தது போல் இருந்தாள். என்றைக்கும் விட இன்று அவன் வர காலத் தாமதம் ஆக, அவள் காத்துக்கொண்டிருக்க, மயக்கும் மாலை பொழுது சென்று இனிக்கும் இரவு வந்தது.
தன் முன்தாவணியைக் கசக்கியவாறே நத்தையாய் உருண்டோடிய நேரத்தைக் கண்டு கடிந்துகொண்டு, சிறு பதற்றத்துடன் குறுக்கே நெருக்கும் நடந்தவளின் காதுகளுக்கு அவனது காலடி ஓசை கேட்க, புள்ளிமானை போல் துள்ளி குதித்து ஓடி சென்று கதவைத் திறந்தாள்.
அலைபேசியில் யாரிடமோ ஆர்வமாய் பேசி சிரித்துக்கொண்டே உள்ளே வந்தவன், தனக்காகப் பார்த்து பார்த்து அலங்கரித்துக் கொண்டு தன் கண்முன் வந்தவளை, ஒரு நொடி கூடப் பார்க்காமல் அவளது கண்களைப் பார்த்து சிறு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு, தன் அறைக்குச் சென்றவன் தன் கழுத்தை நெறுக்கிக்கொண்டிருந்த டையை சற்று தளர்த்திவிட்டு,
அலைபேசியில், “சூப்பர்டா சூப்பர், செம பிளான்!” என்று பேசிக்கொண்டே கபோர்டை திறந்து ஷர்ட்டை எடுத்துக்கொண்டிருக்க,
காதலாய் காத்திருந்தவளுக்கு ஏமாற்றமாய் போய்விட்டது. இருந்தாலும் மனதை தேற்றிக்கொண்டு,
"ஆஷிக்!” என்று அழைத்தவாறு அவனது அருகில் சென்று நின்றவள் அவன் அலைபேசியைத் துண்டிக்கவும்,
இப்பொழுதாவது தன்னைப் பார்ப்பான் என்று ஆவலாய் எதிர்பார்த்திருக்க, அவள் பக்கம் கூடத் திரும்பாமல் யாருக்கோ மெசேஜ் அனுப்பியவாறே ஆஷிக்,
"ஜியா பழைய ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் மீட் பண்றோம், அரை மணிநேரத்துல வெளியில போறேன், சூடா ஒரு டீ மா...” என்று கூறிக்கொண்டே அவன் குளியல் அறைக்குள் நுழைந்துகொள்ள, மீண்டும் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கண்கள் சற்று கலங்க, அங்கிருந்து வேகமாக ஓடியவள் வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு சமையல் அறையின் சுவற்றோடு சாய்ந்து நின்றாள்.
குளித்து முடித்தவன் கண்ணாடியின் முன்பு திரும்பிக்கொண்டு தன் சிகையை அலங்காரம் செய்து கொண்டிருக்க, அவன் பின்புறமாய் வந்து நின்றவள்,
"ஆஷிக் டீ” என்றவாறு நீட்ட, “டேபிள்ல வச்சுருடா.” என்றவாறு தலையைச் சீவிவிட்டு, டேபிளில் இருந்த டீயை தன் கையில் ஏந்தியவனது ஓரக்கண்ணில் பட்டது, ரோஜா பூவால் அலங்கரிக்கப் பட்டிருந்த அவனது பறந்து விரிந்திருந்த மெத்தை.
சற்று தன் கண்களை அறை முழுவதும் சுத்த விட்டவனுக்கு, ஆங்காங்கே காத்தாடியின் காற்றில் பாதி அணைந்து மீதி காற்றில் ஆடியபடி இருந்த மெழுகுவர்த்தி கண்ணுக்கு தெரிய, ஒன்றும் விளங்காமல் இருந்தவன் கால்களின் கீழ் ஏதோ மிதிபடுவது போல உணர,
கீழே பார்த்தவனது கண்களில் பட்டது அவனது பாதத்திற்குக் கீழே கசங்கிய நிலையில் இருந்த ரோஜா இதழ்கள். இப்பொழுது எதோ விளங்கியிருக்க,
இன்னும் தன் பார்வையை விசாலமாக்கியவனின் கண்ணில் பட்டது, அவன் நடந்து வந்த வேகத்தில் கலைந்திருந்த, 'ஐ லவ் யு ஆஷிக்!' என்று, மல்லிகை பூவாலும் ரோஜா இதழாலும் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள், இல்லை ஜியாவின் காதல் என்றுதான் கூறவேண்டும்.
ஐ யு ஆஷிக் மட்டும் சரியாக இருக்க, ஐக்கும் யுக்கும் நடுவில் இருந்த இதய வடிவம் மட்டும் மிகவும் நன்றாகவே கலைந்திருந்தது.
காலையில் ஜியா தன்னைச் சீக்கிரமாக வர சொல்லிய அனைத்தையும் தன் ஞாபகத்துக்குக் கொண்டு வந்தவனது மூளைக்கு, இப்பொழுது அனைத்தும் தெளிவாக விளங்கியிருக்க, ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றான். சில நொடிகளுக்குப் பிறகு கண்ணை நிமிர்த்தியவனுக்கு,
தன் முன்னால் தனக்குப் பிடித்த வெண்பட்டு புடவையில் உறைபனியில் செய்த வெண்சிற்பமாய், நின்றுகொண்டிருந்தவளைக் கண்டவன் ஒரு நொடி தன்னையே மறந்து போய்விட்டான்.
புதுக்கவிதையாய் தன் கண்முன் இருந்தவளை முழுவதும் படிக்க அவனது உள்ளம் ஏங்கியது.
தனக்காக இவ்வளவும் செய்திருக்கும் தன் மனைவியின் முகத்தைக் கூடப் பார்க்காமல், அலைபேசியில் மூழ்கியிருந்தது தன் ஞாபகத்திற்கு வர, தன்னையே கடிந்து கொண்டான்.
கைகளைப் பிசைந்துகொண்டு, எப்பொழுது வேண்டுமானாலும் வர துடிக்கும் கண்ணீரை அடக்கிக்கொண்டிருந்தவளை, அள்ளி அணைக்க அவனது கைகள் துடிக்க, தன்னையே மறந்து அவளது அருகில் வர, அவளோ அவன் தன் அருகில் வருவது அறியாது,
அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் அங்கிருந்து செல்ல, அவளைத் தடுக்கும் எண்ணத்தில் வேகமாக அழைத்தவன் தன் கையில் இருந்த டீ கப்பை தவறுதலாய் கீழே போட, பாதி டீ அவனது கரங்களைப் பதம் பார்த்து கீழே சிந்த,
சூட்டில், "ஆ...” என்று கத்தியவனின் குரலில் திரும்பி பார்த்தவள்,
என்னமோ ஏதோ என்று வேகமாய் அவனது அருகில் வந்து சூடுபட்ட அவனது கையைப் பிடித்து, "என்னடா, பார்த்து பண்ண கூடாது? நான் போய் ஐஸ் க்யுப்ஸ் எடுத்துட்டு வரேன்.” என்று பதறியவாறே கீழே சென்றாள்.
அவனும் அவளது பின்னாலே செல்ல, "ஏன் நீ வந்த? நான்தான் எடுத்துட்டு வரேன்னு சொன்னேன்ல, கைய குடு.” என்று ஐஸ் கட்டியை வைத்தவாறே, அந்தக் காயத்தில் தன் இதழைக் குவித்து ஊதிவிட, தன் காயத்தை மறந்து தன்னவளை தன் கண்களால் ரசிக்கத் தொடங்கினான்.
"ரொம்ப வலிக்குதா?” என்றவாறு மெதுவாய் அவனது கரத்தை நீவிவிட்டவள்,
"இப்போ எப்படி இருக்கு? நான் போய் ஆயின்மென்ட் எடுத்துட்டு வரேன்." என்றவாறு அங்கிருந்து செல்ல முற்பட, அவளது கரம் பிடித்துத் தடுத்தவன்,
"அதான் நீ இருக்கியே...!” என்று கூறி அணைத்துக்கொள்ள, அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் துளிகள் ஆறாய் பெருக்கெடுத்து அவனது மார்பை நனைக்க,
பதறி போய் தன்னைவிட்டு விலக்கியவன், தன் கரம் கொண்டு அவளது முகத்தை நிமிர்த்தி, அவளது கண்ணீருக்கான காரணத்தை அறிந்தவனாய்,
"சாரிடா நான் ஒரு லூசு! ஃபோன்ல பேசிட்டு இருந்த ஆர்வத்துல உன்னைச் சரியாவே கவனிக்கல, மன்னிச்சுருமா!” என்று கெஞ்ச,
"ஒன்னும் வேணாம்!” என்று செல்லமாய் கோபித்தவள், “எவ்வளவு ஆசை ஆசையாய் எல்லாம் பண்ணினேன் தெரியுமா? ஒன்னும் பேசவேணாம், எங்க போணுமோ போ.” என்றவாறு முகத்தைத் திருப்பிக்கொண்டு சோபா மீது அமர்ந்தவளை சமாதானம் செய்யும் நோக்குடன், அவளது அருகில் வந்து அமர்ந்தவன் அவளது கரத்தை பற்றிக்கொண்டு,
"என்ன என் செல்லத்துக்கு என் மேல கோபமா? அந்தக் கோபத்தை எப்படித் தணிக்கனும்னு எனக்குத் தெரியுமே!” என்றவன் குறும்பு பார்வையால் அவளை நெருங்கி வந்து அவள் மீது காதலோடு சரிய,
இமைக்கும் நொடியில் தன் பூ பாதத்தால் அவனது மார்பில் தடம் பதித்து, தன்னிடம் நெருங்கியவனை கண்களில் காதல் மிளிர தடுக்க, தன்னவளது பூப்பாதம் தன் மார்பில் பட்டதும் ஒருவித சிலிர்ப்பு உள்ளுக்குள் ஏற்பட,
கர்வத்தால் கூட ஆண்மையைப் பெண்மையால் கட்டிப்போட முடியும், என்பதை அறிந்தவனின் உதடுகள் அவனையும் அறியாமல் புன்னகைத்தது.
பெண்மையின் திமிருக்கு கூட ஆண்மையைப் பந்தாடும் வலிமை உள்ளது என்பது, கூடலின் போதுதான் ஒரு ஆணுக்கேத் தெரியும். தன் கர்வத்தை விடுத்துத் தன்னவளிடம் சரணடைய தயாரானான் ஆஷிக்.
அவளது குறும்பு பார்வை, காதல் பார்வையாய் மாறி அவளது காலின் பெருவிரல் அவனது மார்பை சுகமாய் தீண்ட, ஒவ்வொரு தீண்டலிலும் வெண்பனியாய் உருகினான்.
இதற்கு மேல் முடியாதவனாய் அவளது பொற்பாதத்தில் தன் இதழை விளையாட விட்டவன், தனது தீண்டலில் கிறங்கிக் கொண்டிருந்தவளின் பாதம் பற்றி மென்மையாய் தன் பக்கம் இழுத்து,
தன்னவளது முகத்தைத் தன் கரங்களுக்குள் அடக்கியவன், தன்னவளது இதழை நோக்கி குனிய, குறும்பாய் அவனைத் தள்ளிவிட்டவாறு ஓடினாள்.
அவனை விட்டு விலகி செல்லமாக அவனைத் தண்டித்தவளைப் பார்த்து, "இப்படியாடி ஒரு மனுஷன சுத்தவிடுவ? ப்ளீஸ்டி! என் குட்டி மால...!” என்று கெஞ்சியவனை,
"ம்ம்... அதெல்லாம் வேலைக்கு ஆகாது.”
“ப்ளீஸ்டா... உன்னைச் சமாதானம் பண்ண என்ன பண்ணணும்னாவது சொல்லு."
"அதை நீயே யோசிச்சுக்கோ.”
"யோசிக்கலாம், ஆனா உன்னை இப்படிப் பார்த்ததும் சத்தியமா முழுப் பைத்தியமாவே ஆகிட்டேன், என்னைத் தெளிய வைக்க உன்னால தான் முடியும்.” என்று சல்லாபமாய் கூறிகொண்டே, தன் அருகில் நெருங்கிவந்து மீண்டும் தன் இதழை நோக்கி குனிந்தவனின் நெற்றியை, தன் நெற்றியால் செல்லமாய் முட்டியவள் சிரித்தவாறே விலகி செல்ல,
தன்னைத் தவிக்க வைக்கும் பெண்மையை உயிர் வரை சென்று, முழுதும் தனதாக்கிக்கொள்ளும் சபதம் எடுத்தான் ஆஷிக்.
"என்னை இவ்வளவு சுத்த விடுறல, எல்லாத்துக்கும் சேர்த்து இன்னைக்கு அனுபவிப்ப பாரு...” என்று செல்லமாய் முறைத்தவனை,
கொஞ்சலாக, "முதல்ல அப்படியே நான் சிலிர்த்து போற மாதிரி ஒன்னு குடு, அப்புறம் பார்க்கலாம்.” என்றவளின் அருகில் வந்தவன்,
அவளது காது மடல்களை உரசியவாறு, "அதைக் குடுக்கத் தான் பக்கத்துல வரேன். ஆனா நீதான் என்னைத் தள்ளி தள்ளி விடுறியே...!” என்று தாபமாய் கெஞ்சியவனிடம்,
"ம்ம்... குடுக்கணும். ஆனா வாயும் கையும் என் மேல படாம...” என்று கூற, சிறு பிள்ளைபோல் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டவன் பாவமாய்,
“அது எப்படி முடியும்? கையும் வாயும் படாமன்னா நான் உனக்கு எதுவும் வாங்கிட்டு வரலையே?"
"பாவம், நீ ரொம்பக் கஷ்டப்படுற, நான் க்ளூ குடுக்குறேன். நீயே கண்டுபுடி, ஆனா என் கண்ணை மட்டும் தான் பார்க்கணும்.” என்றவள் ஆஷிக்கின் ஷர்ட்டின் முதல் மூன்று பட்டன்களை அவிழ்க்க,
தன்னவளின் ஸ்பரிசத்தில், வெந்நீரில் கலந்த சர்க்கரையாய் கரைந்தவன் அவள் முன்பு அதைக் காட்டிக்கொள்ளாமல்,
"இப்போலாம் தனியா இருக்கிற ஆம்பளைக்குப் பாதுகாப்பே இல்லாம போச்சு...” என்று சமாளித்தவனைக் கண்டு ரசித்தவள், அவனது வெற்று மார்பில் தன் விரலால் எழுத, ஏற்கனவே ஜியாவின் காதல் பார்வையில் தேகம் சூடாகி இருந்தவன், தன் மார்பில் தன்னவளது விரல் பட்டதும், இரும்பாய் இருந்தவன் எறும்பாய் கரைந்தது போல,
"என்னை ஒருவழி பண்ணணும்னு முடிவு பண்ணிட்ட..." என்று கிறங்கியவாறு கூறியவனிடம்,
தன் புன்னகையை மட்டும் பதிலாய் கூறியவள் மேலும் தொடர, ஒரு வழியாக இதயத்தின் வடிவத்தை வரைந்து முடித்தவள், பதிலுக்காக அவனது கண்களைப் பார்க்க நிமிர்வதற்குள், அவளது இடையை வளைத்து மிகவும் நெருக்கமாக அணைத்துக் கொண்டவன்,
“இந்த உடம்புல கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உன்னைக் காதலிப்பேன், ஐ லவ் யு!” என்று அவன் கூறி முடிக்கவும், அவனது மார்போடு சாய்ந்து கொண்டாள் ஜியா.
தன்னை முழுமையாகக் கொடுத்தது போல் தன் மார்போடு சாய்ந்த தன் காதல் மனைவியை, மூச்சு வாங்க முகம் எங்கும் முத்தத்தால் தண்டித்தான். எந்தவித எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டவளின் இதழ்களை, வன்மையும் மென்மையும் கலந்தாற்போல் தீண்டினான். அவனது மிதமான காதல், அவளுக்கு இதமாய் இருந்தது. காதுமடல்களை உரசியவாறே,
"ஏன்டி என் மேல இவ்ளோ காதல உள்ளுக்குள்ள வச்சுக்கிட்டுதான், நான் வேண்டாம் வேண்டாம்னு என்னை விட்டு விலகி விலகி போனியா?”
"நான் அப்படித் தான் சொல்லுவேன், நீதான் என்னைக் கன்வின்ஸ் பண்ணி என் மனசுல என்ன இருக்குனு புரிஞ்சிருக்கணும். உனக்கு வேணும்னா நீதான் சமாதானம் செஞ்சி, அப்படி இப்படின்னு பல முயற்சிகள் பண்ணிருக்கணும். தேங்காய் வேணும்னா தென்னை மரம் ஏறிதான் ஆகணும் குமாரு. எங்க அதுக்கெல்லாம் கொஞ்சமாவது அறிவு வேணும், ஆனா சாருக்கு தான் அப்படி ஒன்னு இல்லையே?” என்று குறும்பாய் கூறிய தன் மனைவியை,
தன்னோடு இன்னும் நெருக்கமாக இறுக்கிக் கொண்டே, "ஏன்டி இப்போ தானே உனக்கு மூச்சு திணற திணற ஒன்னு குடுத்தேன். ஆனாலும் எனக்கு அறிவு இல்லனு சொல்றியா? ஏன்டி கிட்ட வந்தா சிணுங்குற, தள்ளி போனா முறைக்கிற. உன்னைப் புரிஞ்சிக்கவே முடியலை. ஐயோ பாவம்னு கொஞ்சம் விட்டு புடிச்சா என்னையே நீ கிண்டல் பண்றியா? உனக்கு இதெல்லாம் பத்தாது, ஹெவியா ஒன்னு குடுத்தாதான் சரி வரும், என்ன குடுத்திருவோமா?” என்று காதலாகக் கூறியவன்,
அவளது இதழில் தன் உணர்ச்சி பொங்க முத்தமிட, அதன் ஸ்பரிசத்தில் உடல் முழுவதும் சிலிர்த்தவள், பதில் ஏதும் கூற முடியாமல் சிணுங்கிக் கொண்டே வெட்கத்தில் தன்னவனது மார்பில் இன்னும் ஆழமாய் புதைந்து கொண்டாள்.
தன்னவளின் தோள்களைத் தன் இதழால் உரசியவாறே, “செல்லம் நீ எவ்வளவு வெட்கப்பட்டாலும் உன்னை நான் இன்னைக்கு விடுறதா இல்லை. அதுவும் நீ இன்னைக்கு என்னை படுத்துனதுக்கு...” என்று காதலாய் கண்டித்தவன்,
தன் விரலை அவளது இடையில் விளையாட விட, தேகம் சிலிர்த்தவள் தன்னவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்க, அவளது சேலையின் நுனியை பற்றிக்கொண்டவன், அதை முழுவதும் தன்வசம் ஆக்கிக்கொள்ள முயற்சிக்க, நாணத்தால் அவன் புறமும் திரும்பயிலாது, செய்வதறியாது, வெட்கமும் பயமும் ஒருசேர இதழில் ததும்பிய புன்னகையுடன் தலை குனிந்து நின்றவளை நெருங்கியவன்,
பின்னால் இருந்து அவளது வெற்று இடையைத் தன் கரங்களுக்குள் சிறை வைத்துக்கொண்டு திணறடிக்க, தன் கண்களை இறுக்க மூடியவாறு மூச்சு வாங்க நின்றாள்.
தன் இதழால் தன்னவளின் கழுத்தைத் தீண்ட, தன்னவனின் சூடான இதழ்கள் தன் மேனியை தீண்டியதும் மெழுகாய் கரைந்தவள், தேகம் சிலிர்த்து அப்படியே அவனின் நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள். தன் மேல் சாய்ந்து கொண்டவளை தன்னோடு சேர்த்து இறுக்கமாக அணைக்க அதில் நெஞ்சம் படபடத்தவள்,
தன்னவனிடம் இருந்து தன்னை விலக்கிக்கொண்டு ஜன்னலின் ஓரம் சென்று மூச்செடுக்க, தன்னவனது தீண்டலில் வெட்கி இதழ் இசைத்தவாறு நிற்க,
காதல் பெருக்கெடுத்து ஓட தன் கண்களால் தழுவியவன், இதழோரம் புன்னகை தளும்ப, அவள் பின்னால் வந்து நின்றான். அவனது மூச்சு காற்றின் வெப்பம், சில்லென்று வந்த காற்றினால் சிலிர்த்திருந்த அவளது மேனிக்கு கதகதப்பாய் இருக்க,
தன்னவன் தனதருகில் இருப்பது அறிந்தும் வெட்கத்தினால் அவன் புறம் திரும்பாமல் அப்படியே சிலையென ஜியா நிற்க,
வாய்விட்டு சிரித்தவன், “ட்ரெயிலருக்கு இப்படி மூச்சு வாங்குற, நான் இன்னும் மெயின் பிக்சருக்கே போகலயே? இவ்வளவு பயத்தை மனசுக்குள்ள வச்சுக்கிட்டு தான் என்னைக் கிண்டல் பண்ணுனியா?” என்றவாறு அவளது வெற்று முதுகைத் தன் இதழால் உரச,
அவளது தேகம் முழுவதும் சிவப்பு ரோஜாவை போல மாறி சிறு நடுக்கத்துடன் இருப்பதைக் கண்டவன், தன்னவளின் தோள்களைப் பற்றித் தன் புறம் திருப்ப, மேலாடை இன்றி வெற்று மார்போடு இருந்தவனைக் கண்டு மேலும் வெட்கி தன் இதழை சுளித்தவாறு நாணி கீழே நோக்க,
அவளது இதழ் விரித்த வலையில் சிக்கி தவித்தவன், தன் விரல் கொண்டு மென்மையாய் தன்னவளின் செவ்விதழை தட்டிய ஆஷிக், அவளது பயம் அறிந்து தன்னவளை விட்டு சற்று விலகி நின்றான்.
சில மணிநேரம் அவர்களுக்குள் அமைதி மட்டுமே நிலவ, பதற்றத்தில் இருக்கும் ஜியாவை இயல்பு நிலைக்குக் கொண்டுவர நினைத்தவன்,
ஜியாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு, "ஜியா, நமக்குள்ள இது நடந்தாலும் இல்லனாலும் உன் மேல எனக்கு உள்ள லவ் என்னைக்கும் குறையாது. நீ உனக்கு விருப்பம் இல்லாத ஒரு விஷயத்தை என்னைக்கும் செய்ய வேண்டாம். நான் உனக்குத் தான், இன்னும் காலம் இருக்கு, பிறகு பார்த்துக்கலாம்டா...!” என்று எந்த ஒரு சஞ்சலமும் இல்லாமல் கூற,
அவளது கண்களில் இருந்து கண்ணீர் தாரைத் தாரையாக வர, பதறியவன் அவளது முகத்தைத் தன் கைகளில் ஏந்தி, “ஏய் ஜியா, சாரி! நான்...” என்று இழுக்க,
தடுமாறும் குரலில், "ஏன்டா இன்னும் எனக்காக என்ன எல்லாம் செய்யப் போற? ஏன், என் மேல இவ்வளவு லவ் வச்சுருக்க...?!” என்று தேம்பி தேம்பி மூச்சு வாங்க அழுதவளைப் பார்த்து,
"ஜியா நீ என் உயிர், நீ அழாத. என் வாழ்க்கையோட அடையாளமே நீதான்!” என்று சமாதானம் செய்ய,
"தேங்க் யு ஆஷிக்!” என்றவள், இமைக்கும் நொடியில் தன்னவனின் இதழை தன் வசமாக்கினாள். மூச்சு திணற திணற அவள் இதழ் அளித்த தண்டனையைச் சுகமாய் ஏற்றுக்கொண்டான்.
"செமடி! ஒத்த கிஸ்ல என்னையே வெட்கப்பட வச்சுட்ட, அப்படியே என்னைக் கொன்னுட்டியேடி...!” என்று ஆஷிக் குறும்பாய் கூறியதில் மேலும் வெட்கத்தில் சிவந்தாள் ஜியா.
"ஆஷிக் கொஞ்சம் சும்மா இருக்கியா, வெட்கமா இருக்குடா!” என்று காதலாய் கொஞ்சிய ஜியாவை,
"அது சரி, இப்போ பயம் எனக்குத் தான்டி...” என்று அவன் கிண்டல் அடிக்க, செல்லமாக அவனது மார்பினைக் குத்தியவள், அவனது இரு கன்னத்தையும் பிடித்துக் கிள்ளி தன் நெற்றியால் அவனது நெற்றியை செல்லமாக முட்டினாள்.
அவளது முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவன் அவளது கண்ணையே பார்க்க, தனது சம்மதத்திற்க்காக தான் தன்னவன் காத்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டு காதல் வழிய, தாபமாக அவனது கன்னத்தில் இதழ் பதித்து தன் சம்மதத்தைத் தெரிவித்தவள் வெட்கத்தில் மீண்டும் அவனது நெஞ்சோடு சாய்ந்துகொண்டாள்.
அதற்கு மேலும் தாமதிக்காதவனாய் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற ஆஷிக், நாண மிகுதியால் தன் இரு கண்களையும் மூடி தன் நெஞ்சோடு தஞ்சம் கொண்ட, தன் மனைவியைத் தன் கண்களாலே வருடினான். தன் கர்வத்தைக் கடத்தி தன் ஆண்மையைத் தூக்கிலிட்ட பெண்மையை தன் இரு கண்களாலே தீண்டினான்.
சிறு நொடி கழித்து மெல்ல பூவின் இதழ் மலர்வது போலத் தன் கண்களைத் திறந்தவள், ஆஷிக் தன்னைக் கண்களாலே வருடிக் கொண்டிருப்பத்தைக் கண்டு மேலும் வெட்கி சிவந்தவள்,
இருக்கைகள் தீண்டாமலும், தேகங்கள் உறவாடாமலும் தனது உயிரை உறைய வைத்த தன்னவனின் காந்த விழிகளைக் கண்டு சிலிர்த்துப் போனாள். தன்னவளின் இதழோடு உறவாடிய உதடுகளோ, அவளது இடையில் வீணையை மீட்ட எடுத்தாள் மறுஜென்மம்.
முத்தத்தால் அவளது தேகத்தை வலம் வந்தவன், தன்னவளின் அழகை மொத்தமாகத் திருடி முற்றிலுமாய், தன்னவளின் பெண்மையை தன் ஆண்மைக்குள் சிறை வைக்க, அவனுக்குள் மொத்தமாகத் தன்னையே கொடுத்தாள் ஜியா.
காலைப்பொழுது இனிதாக விடிய தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டவன், சிறு குழந்தையைப் போலத் தன் கழுத்தை வளைத்துப் பிடித்தவாறு தன் மார்போடு துயில் கொண்டிருந்தவளை, அன்பால் தன் கரங்கள் கொண்டு வருடினான்.
"இந்தக் குழந்தை முகத்தைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு? இந்த முகத்தைப் பார்க்க எத்தனை நாள் தவம் இருந்திருப்பேன், இனிமேல் உன் வாழ்க்கையில உனக்குச் சந்தோஷம் மட்டும் தான் ஜியா.” என்றவாறு நெற்றியில் இதழ் பதிக்க,
தன் மார்பில் படர்ந்து சுகமாக உறங்கிக் கொண்டிருந்த மனைவியைக் கண் கொட்டாமல் ரசிக்க ஆரம்பித்தான்.
ஆஷிக் பொழிந்த காதல் மழையில் சுகமாக நனைந்து கொண்டிருந்தாள் ஜியா. இதற்கு மேல் முடியாதவளாய், "போதும்டா, இப்படியா என்னைப் பழிவாங்குவ...?” என்று கெஞ்சலோடு சிணுங்கியவளை, தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு அவளது காதோரத்தில்,
"இத்தனை நாள் என்னைச் சுத்த விட்டல அனுபவி, வாழ்க்கையில இத்தனை நாள் வீணடிச்சுட்டோமேனு நானே பீலிங்க்ல இருக்கேன். விட்டத மேட்ச் பண்ண வேண்டாம்...? இனிமேல் என்ன சிணுங்குனாலும் வேலைக்கு ஆகாது.” என்று குறும்பாய் கூறியவன், மீண்டும் தன்னவளின் உயிரோடு கலந்தான்.
சிறு குழந்தையைப் போல் தூங்கிக்கொண்டிருந்த தன் கணவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள், மெல்ல அவனது தலையைக் கோதிவிட்டவாறு அவனது நெற்றியில் தன் இதழ் பதித்துவிட்டு,
தன்னவனது மேல் சட்டையை மட்டும் அணிந்திருந்தவள், ஜன்னல் ஓரமாய் நின்று மழையின் சாரலை ரசித்துக் கொண்டிருந்தாள்.
தூக்கத்தில் இருந்து விழித்தவன் தன்னருகில் ஜியா இல்லாததை நினைத்து திரும்பி பார்க்க, ஜியா ஜன்னல் ஓரமாய் நின்று எதையோ நினைத்து புன்னகைத்தவாறு நிற்பதைக் கண்டு, ரசித்தவாறு மெதுவாய் நடந்து அவள் பின்னால் வந்தவன், தன் கரம் கொண்டு தன்னவளை தன்னோடு இறுக்க அணைத்துக்கொண்டு, அவளது காது மடல்களை உரசியவாறு,
"என்னை விட்டுட்டு இங்க என்ன பண்ற?” என்று கேட்டுக்கொண்டே தனது இதழை அவளது தோள்களில் பதிக்க உடல் சிலிர்த்தவள், அவனது வெற்று மார்பில் ஒட்டிக்கொண்டு அவனது இதழின் தீண்டலுக்குச் சிணுங்கியவாறே,
"ஆஷிக்...!"
"ம்ம்...”
"இப்போ நான் கம்ப்ளீட் ஆன மாதிரி ஃபீல் பண்றேன், இந்த உலகத்துல உள்ள எல்லா சந்தோஷமும் எனக்குக் கிடைச்ச மாதிரி ஃபீல் பண்றேன். தாங்க்ஸ்டா, இது போதும் எனக்கு.” என்றவளைப் பார்த்து ஆஷிக்,
"என்ன இது போதுமா? நாம பாதி நாளை அழுதுட்டே வேஸ்ட் பண்ணிட்டோமே, இதை எப்படிச் சரி கட்ட போறோம்னு நான் யோசிச்சுட்டு இருக்கேன். நீ என்ன போதும்னு சொல்லி முடிக்கப் பாக்குற...?” என்று குறும்பு பார்வையோடு அவளது இதழை தன் விரலால் வருட, தன்னவனின் எண்ணம் புரிந்தவளாய் அவனது சீண்டலுக்குச் சிணுங்கியவாறே,
"டேய்! போதும், என்னைக் கொஞ்சமாவது மூச்சு வாங்க விடு.” என்றவளை,
"என்னடா செல்லம் ப்ளீஸ்...!” என்று கெஞ்சியவாறே, மழையின் சாரலில் லேசாக நனைந்திருந்த அவளது செவ்விதழில் தன் இதழ்களைப் பதிக்க, சுதாரித்துக்கொண்டவள் அவனை விலக்கிவிட்டு ஓடி சென்று மனதார புன்னகைக்க, தன்னவளை ரசித்தவன் தன் கரங்களைக் கொண்டு மென்மையாகத் தன்னவளைப் பற்றித் தன் பக்கம் இழுத்து,
"எப்பவும் இப்படியே சிரிச்சுட்டு இருக்கணும், சரியா? தேங்க் யு ஃபார் எவ்ரி திங்!"
"எவ்ரி திங்ன்னா...?” என்று ராகம் போட்டவளைத் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டவன்,
"எவ்ரி திங்ன்னா... இந்தக் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்புக்கு, அப்புறம் உருட்டி உருட்டி பார்க்கிற கண்ணுக்கு, இப்படி எல்லாத்துக்கும்...” என்று தன் மனைவியின் உச்சியில் இதழ் பதித்தவன், தன்னவள் தனக்கு முற்றிலும் சொந்தமாகிப்போன தருணத்தை நினைத்து மகிழ்ச்சியாய் இருந்தான்.
இரண்டு வருடங்கள் இன்பமாய் கடந்த நிலையில் ஆஷிக், ஜீயாவின் வாழ்க்கையில், "நெமி, நெமி... நானே சொல்றேனே... நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க."
"ஹாய் ஃப்ரண்ட்ஸ் நான்தான் ஜியா! உங்களோட அழு மூஞ்சு ஜியா. எல்லாரையும் அழுதே கடுப்பாக்கிட்டேன்ல? உங்களுக்கு ஒன்னு தெரியுமா, இப்போ எல்லாம் நான் அழுறதே இல்லை. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதெல்லாத்துக்கும் காரணம் என் ஆஷிக்! ஆஷிக் மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்கிறதுக்கு நிஜமாவே நான் குடுத்து வச்சுருக்கணும்.
அதுக்காக நான் பழசை பத்தி யோசிக்கிறதே இல்லன்னு சொல்ல முடியாது. ஆனா எப்போ எல்லாம் நான் யோசிக்கிறனோ அப்போ எல்லாம், என் ஆஷிக் என்னை இறுக்கமா கட்டி புடிச்சுக்குவான். தூங்கும் பொழுது கூட என்னைக் கட்டி புடிச்சுட்டு தான் தூங்குவான்.
ஒவ்வொரு நாளும் என்னை ஸ்பெஷலா ஃபீல் பண்ண வைக்க அவனால தான் முடியும். அவனுக்காகவும் அவன் காதலுக்காகவும் இன்னும் எத்தனை வருஷம் வேணும்னாலும் அவன்கூட நான் வாழ்வேன். சின்ன வயசுல நம்ம எல்லாருக்கும் நிலான்னா ரொம்பப் பிடிக்கும். அது நாம எங்க போனாலும் நம்மளையே சுத்தி சுத்தி வரும் பொழுது, நிலா நமக்குத் தான் சொந்தம்னு நினைச்சு ரொம்பச் சந்தோஷப்படுவோம்.
என்னைக்காவது ஒருநாள் அதை நெருங்கி தொட்டு பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்படுவோம். ஆனா நாம வளர்ந்த பிறகு தான், நாம்மளால நிலாவ நெருங்க முடியாது. நிலாவாலயும் நம்மள நெருங்க முடியாது என்கிற நிதர்சனத்தைப் புரிஞ்சுக்குவோம். என்னோட காதல் கூட அப்படித் தான். என் காதல நான் உணர்ந்த நேரம், நான் ரொம்பச் சந்தோஷப்பட்டேன். முதல் முதல்ல நிலாவ பார்த்து சந்தோஷப்படுற குழந்தையைப் போல, நானும் காதலிச்ச நேரம் அவ்வளவு சந்தோஷமா இருந்தேன். என் வாழ்க்கையில எல்லாமே கிடைச்ச மாதிரி நான் உணர்ந்தேன்.
அதுக்கப்புறம் நடந்த கசப்பான நிகழ்வுகள் என் மனசை ரொம்பவே காயப்படுத்திடுச்சு. இனிமே என் வாழ்க்கையில காதல் திரும்பக் கிடைக்குமா? அப்படியே கிடைச்சாலும் என்னால அதை அனுபவிக்க முடியுமானு நான் ரொம்பக் கவலையா இருந்தேன்.
ஆனா என் கவலை எல்லாத்தையும் சரி பண்ணினது என் ஆஷிக். அந்த நிலாவ வேணும்னா என்னால நெருங்க முடியாம இருக்கலாம், ஆனா என் நிலவு, என் காதல், என் ஆஷிக் என் கூடவே தான் இருக்கான்.”
“என்ன நம்ம ஸ்டோரிதான் போயிட்டு இருக்கா?"
"ஆமா ஆஷிக்."
"போதும்டி அவங்களுக்குப் போர் அடிக்கப் போகுது."
"அதெல்லாம் அவங்களுக்கு அடிக்காது ஆஷிக், 'நிலவே என்னிடம் நெருங்காதே' நம்ம கதைக்கு இந்தத் தலைப்பு சரியா இருக்கும்ல? நான் கூட இப்படித் தானே நெருங்காத நெருங்காதனு சொல்லிட்டு இருந்தேன்."
"ஏய், அதென்ன நெருங்காதே?”
"நிலவ சொன்னேன், உன்னைச் சொல்லல."
"அதுவும் சரிதான், அதான் நான் இருக்கனே..."
"டேய், ஷேவ் பண்ணாம என்னை ஹக் பண்ணாதானு எத்தனை தடவ சொல்றது?"
"நேத்துதான் பண்ணினேன் செல்லம்."
"ம்ம்... கூச்சமா இருக்கு."
"சரி என்ன சொல்றா என் ஏஞ்சல்?"
"அப்பா, அம்மாவை டிஸ்டர்ப் பண்ணாதிங்கனு சொல்றா."
"அப்படியா சொன்னா?"
"என்னடி இப்படி உதைக்கிறா?"
"ஆமாடா, நீ பக்கத்துல வந்தாலே உதைக்கிறா. கைய கால வச்சுட்டு சும்மா இரு."
"சரி, சரி... ஒன்னும் பண்ணல, சீக்கிரம் கீழ வா."
"போ, வரேன்.
நான் போறதுக்கு முன்னாடி உங்க எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ். என்னோட எல்லா இன்ப, துன்பத்துலயும் என்கூடவே இருந்ததுக்கு.
அப்புறம் எனக்கு இன்னும் ரெண்டு மாசத்துல குழந்தை பிறக்க போகுது. நானும் ஆஷிக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம். ஆஷிக் பொண்ணுனு சொல்றான், வீட்ல எல்லாரும் பையன்னு சொல்றாங்க. என்ன பேரு வைக்கிறதுனு தெரியலை, நீங்களே ஒரு பேரு சொல்லுங்களேன்.
பாய் ஃப்ரண்ட்ஸ் டேக் கேர்!"
மகிழ்ச்சி தொடரட்டும்...!
*********************
மீண்டும் முதல் அத்தியாயத்தை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யுங்கள்
நிலவே 1
Ongoing தொடர்கதையை படிக்க கீழே உள்ள திரியை க்ளிக் செய்யுங்கள்
உத்தரவின்றி முத்தமிடு

Last edited: