logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 12.1

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
மேகாவின் வேகநடை, அவள் எதிரே கருப்புநிற காரின் பேனட்டின் மேலே ஏறி அமர்ந்திருந்த அக்னிதீரனை பார்த்தநொடியே சட்டென்று தடைபட்டு, அவளது மென்பாதங்கள் தரையில் வேரூன்ற அசையாமல் விழிவிரித்து நின்றாள்.
வழக்கம்போல கருப்புநிற ஷர்ட், கருப்புநிற டை, கருப்புநிற ஷூ என அவனை தவிர அனைத்துமே கருப்பாகத்தான் இருக்க, நாடியில் கைகுற்றி ரேபன் குளிர்கண்ணாடி அணிந்திருந்த தீரனின் பார்வை மொத்தமும் மேகா மீதே பதிந்திருக்க, அவளுக்குள் தானாக உதறல் எடுத்தது.
அவனோ அவளை பார்த்தபடியே பேனட்டில் இருந்து கீழே குதிக்க, இவளுக்கோ இதயம் வெளிய வந்து விழுந்துவிடும் அளவுக்கு தாறுமாறாய் அடித்துக் கொண்டது.
தீரன் அவளை நோக்கி நடந்துவர, மேகாவுக்கு வழமைபோல கைகள் தானாக நடுங்க ஆரம்பித்திருக்க, முகத்தில் வியர்வைத்துளிகள் ஆங்காங்கே துளிர்க்க, மனதில் இனம்புரியாத பயம் ஆட்கொண்டது.
“இவர் இங்கே என்ன பண்ணிட்டு இருக்காரு? நம்மளை பார்க்கத்தான் வந்திருக்காரா? இப்போ நாம நிக்கணுமா, போகணுமா?” என்று முணுமுணுத்துக்கொண்டே திருதிருவென விழித்தாள்.
“ஹாய் வரு!” அவள் முன்னே தன் கைகளை அசைத்து, அவள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தான்.
“ஹான்... ஹாய், ஹாய்!” இதற்கே அவளுக்கு நா வறண்டது.
“எப்படி இருக்க?” அடர்ந்த மீசைக்குள் இருந்து லேசாக எட்டிப் பார்த்த புன்னகையுடன் கேட்டான்.
“ஹான், நல்லா இருக்கேன்” அவளை ஆராய்ந்து கொண்டிருக்கும் அவனது பார்வை கண்டு சங்கோஜமாக தலை தாழ்த்தினாள்.
அதைக் கண்டு புன்னகைத்த தீரன், தன் ஒற்றை விரலால் அவளது நாடியை தன்னை நோக்கி நிமிர்த்த தன் விரலை நீட்டினான். பின்பு என்ன நினைத்தானோ சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, “வரு!” என்றழைத்தான்.
“ஹான்!” நிமிர்ந்து அவன் கண்களை பார்த்தாள். ஏனோ ஒருநொடிக்கு மேல், அவளுக்குள் ஊடுருவும் அவனது பார்வையை மேகாவால் பார்க்க முடியவில்லை. அவனது பார்வை அவளுக்குள் கிலியை உண்டாக்கியது.
“வரு!” மீண்டும் அழைத்தான். வேறு வழியில்லாமல் நிமிர்ந்து பார்த்தாள். அவனும் பார்த்தான். பார்த்துக் கொண்டே இருந்தவன் தன் கண்களை அவளது விழிகளுடன் கலக்கவிட்டு, “யு ஆர் லுக்கிங் ஸோ பியூட்டிஃபுல் வரு! நீ ரொம்ப அழகா இருக்க வரு!” ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அழுத்தம் கொடுத்து, ரசித்து கூறினான் தீரன். அதிர்ந்து விழித்தாள் மேகா.
“தேங்க்யூ” உதட்டுக்கு வலிக்காமல் கூறினாள். ஏனோ அவன் அவ்வாறு தன்னை சொல்லியது மேகாவிற்கு உவப்பாக இல்லை.
“சொல்லு!” விழிகளால் அவளை பருகியபடியே கேட்டான்.
“என்ன சொல்லணும்?” புரியாமல் கேட்டாள். கைகளின் நடுக்கத்தை மறைக்க, தன் ஆடையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் மேகா.
“நீ இன்னும் என் பேரை சொல்லவே இல்லை” ஏனோ அவள் வாயால், ‘தீரன்’ என அழைப்பதை கேட்க அவனுக்கு அலாதி இன்பம். எதையோ சாதித்த உணர்வு வரும். கர்வத்துடன் மீசை நுனியை முறுக்கிக்கொள்வான்.
“சாப்பிட்டீங்களா தீரன்?” ஏதோ கேட்க வேண்டுமே என கேட்டாள். குரலில் உயிர்ப்பு இல்லை. மேகாவிற்கு பயத்தில் பயப்பந்து உருண்டு நெஞ்சை அடைத்தது. திக்கித்திணறித் தான் பேசினாள்.
“இல்லை, பயங்கரமா பசிக்குது” உதட்டை பிதுக்கினான். தன் இயல்பைத் தாண்டி அவளிடம் சகஜமாக உரையாட தன்னாலான முயற்சிகளைச் செய்தான்.
இந்தமுறை அவனது புன்னகை தவறாமல் அவளது கண்ணில் பட்டது, பயம் மேலும் அதிகமானது. அவன் கோபம் கொள்ளவில்லை, கத்தவில்லை, முறைத்துப் பார்க்கவில்லை, மாறாகச் சிரிக்கிறான். மென்மையாக பேசுகிறான். இருந்தும் மேகாவிற்கு பயம் அதிகம்தான் ஆனது. அவளுக்கு ஏனோ கத்திச் சண்டையிடும் தீரனைவிட, மென்மையாக புன்னகைக்கும் தீரன் மிகவும் ஆபத்தானவனாக தெரிந்தான்.
“கேன்டீன் இருக்கு” அவள் தயங்கியபடி சொல்லி முடிக்கும் முன்பே,
“ம்ஹூம்” மூக்கை சுருக்கி மறுத்தவன், அவளை நோக்கி கை காட்டி, “நீயே சமைச்சு தா, உன் வீட்டுக்கு போவோம்” என்றான்.
“என்ன?” அதிர்ந்தே விட்டாள்.
“என்ன வரு? வா!” உரிமையாக அழைத்தான். இவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.
இவனை எப்படியாவது அனுப்ப வேண்டும் என யோசித்தவள், “ஹாஸ்பிடல்ல வேலை இருக்கு” மருத்துவமனையை காரணம் காட்டி சமாளித்தாள்.
“உன்னை வரியான்னு கேட்கல, வான்னு சொன்னேன்” பழைய தீரன் எட்டிப் பார்த்தான். அவனது அடிக்குரல் கேட்டு மேகாவிற்கோ நெஞ்சில் நீர்வற்றிப் போன உணர்வு. மறுத்துப் பேசாமல் அவன் காரின் பின் சீட்டிற்கு போவதற்காக, கதவை திறக்கச் சென்றாள் மேகா.
அது திறக்காமல் இருக்கவும் அவனிடம், “அன்லாக் பண்ணுங்க தீரன்!” என்று அவன் முகம் பார்த்துக் கூறினாள்.
அவனோ அடக்கப்பட்ட கோபத்துடன் தன் கண்களாலே அவளை முன்னால் வந்து அமரும்படி சைகை செய்ய, அவளோ அவனது பார்வை மாற்றம் கண்டு நடுக்கத்துடன் அவன் அருகில் வந்து அமர்ந்தவள், வீடு வரும்வரை சிலையென அசையாமல் அமர்ந்திருந்தாள்.
‘இவனை எப்படி சமாளிப்பது? இவ்வாறு அடிக்கடி சந்திப்பது எல்லாம் தனக்கு பிடிக்கவில்லை, இது சரியில்லை என எவ்வாறு இவனுக்கு புரியவைப்பது’ என மனதிற்குள் தீவிரமாக யோசித்தவள், ‘என்ன ஆனாலும் சொல்லித்தான் ஆகணும்’ என குருட்டு தைரியத்தில் அவன் பக்கம் திரும்பிய மறுநொடி, கார் சட்டென்று நிற்க, அவள் அவனை கேள்வியாக பார்த்தாள்.
அவனோ அவளை பார்த்துக்கொண்டே காரில் இருந்த துப்பாக்கியை எடுத்து தன் முதுகில் சொருகியவன், “என்ன வரு?” என்று கேட்க, அவனது துப்பாக்கியை பார்த்த மறுகணமே மயக்கம் வராத குறையாக அமர்ந்திருந்தவள், எச்சிலை விழுங்கியபடி, “ஒன்னும் இல்லை” என்பதாய் தன் தலையை அசைத்தாள்.
“அப்போ உள்ள போகலாமா வரு?” என்று அவன் கூறவும் தான் அவளுக்கு தன் வீடு வந்து வெகு நேரமாவது தெரிய, அவள், ‘என்ன செய்வது?’ என்று நெற்றியை நீவியபடி அமர்ந்திருக்க, அவனோ வேகமாக இறங்கி வந்து அவள் பக்கக் கதவைத் திறந்துவிட, அவளும் இறங்கினாள்.

கனகராஜின் அறையில், “ஆர் யூ மேட் ரித்து? இன்னும் பிஸ்னஸ் கூட நீ ஒழுங்கா கத்துக்கலை, அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்னடா அவசரம்?” தன் சுழற்நாற்காலியில் அமர்ந்திருந்தபடி சீறினார் கனகராஜ்.
“டாட்! அதான் மேகாவோட கண்டடிஷன்ஸ் சொன்னேன் தானே, ஐ லவ் ஹெர், ப்ளீஸ் பா!” சின்னப்பையன் போல தன்முன்னே நின்றுகொண்டு கெஞ்சும் மகனை பார்க்கப் பார்க்க அவருக்கு எரிச்சலாக வந்தது.
“அவங்க அப்பா என்னடா பண்ணிட்டு இருக்கார்?” எரிச்சலாக கேட்டார்.
“அவங்க அப்பா பேங்க் மேனேஜர், அம்மா மியூசிக் டீச்சர். ஒரு தம்பி ஒரு தங்கச்சி காலேஜ் படிக்கிறாங்க, சொந்த வீடு இருக்கு. அப்புறம் அவங்க அப்பா ஏதோ சின்னதா பிஸ்னஸ் கூட பண்ணிட்டு இருக்காருன்னு கேள்விப்பட்டேன்” சேகரித்து வைத்த செய்தியை தன் தந்தையிடம் ஒப்பித்தான் ரிதுராஜ்.
“ம்ம், நடுத்தர பிச்சைக்காரங்கன்னு சொல்லு” சகிக்கமுடியாத வார்த்தைகளை இகழ்ச்சியுடன் கூறினார். ரிதுராஜ் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தந்தையை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் என்கின்ற முனைப்பில், அவர் பேசும் வார்த்தைகளை எல்லாம் தலை கவிழ்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்தான்.
“மேகா, ரொம்ப நல்ல பொண்ணுபா!” மெதுவாக கூறினான்.
“ரொம்பவே நல்ல பொண்ணுதான். ஆனா, நான் ஒன்னும் சாரிட்டி டிரஸ்ட் நடத்தலை, இந்த ஹாஸ்பிடல்ல உன்னை நம்பி மொத்த சேவிங்க்ஸையும் இன்வெஸ்ட் பண்ணிருக்கேன். கன்ஸ்ட்ரக்ஷன் பிஸ்னஸ் பண்ற கோகுல்தாஸ் பொண்ணை உனக்கு பேசலாம்னு இருந்தேன். ஆனா நீ நம்ம ஸ்டேடஸுக்கு கொஞ்சம்கூட பொருத்தமில்லாத, என்கிட்ட மாசத்துக்கு வேலைபார்க்குற வேலைக்காரிய புடிச்சிருக்குன்னு சொல்ற”அவருக்குள் இருந்த மருத்துவ வணிகன் எட்டிப்பார்த்தான்.
“அப்பா, ப்ளீஸ்பா!” காலைப் பிடிக்காத குறையாக கெஞ்சினான்.
“இப்போ நான் என்ன பண்ணணும்?”
“அவர் அப்பாகிட்ட போய் பேசணும் டாட்!”
“அதெல்லாம் முடியாது, அந்த கூலிக்காரன் கிட்ட போய் பொண்ணை குடுன்னு கெஞ்ச முடியாது. உனக்கு வேணும்ன்னா நீயே கல்யாணம் பண்ணிக்கோ, இப்போ வெளிய போ!” பற்றுதலே இல்லாமல் கூறினார். அவரிடம் பேசவே அவனுக்கு தயக்கமாக இருந்தது.
ஆனாலும் பேச வேண்டுமே, “அப்பா, நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன். இந்த ஒரு விஷயத்துல மட்டும் ப்ளீஸ்” மீண்டும் கெஞ்சினான்.
‘நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன்’ ரிதுராஜ் விட்ட வார்த்தைகள், கனகராஜின் வணிக மூளைக்கு உயிர் கொடுக்க, “சிட், உட்காரு!” எதிர் நாற்காலியை காட்டி அமரச் சொன்னவர், அவனை ஆழ்ந்து பார்த்து, “இப்போ நான் என்ன பண்ணணும்?” என மீண்டும் கேட்டார்.
“மேகா வீட்ல பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணணும்பா!”
“ஓகே, நல்லாவே பண்ணிரலாம். ஆனா உன்மேல, உன்னை நம்பி இதுவரை இன்வெஸ்ட் பண்ணின எனக்கு என்ன லாபம் இருக்கு ரித்து?” என்றவர், “நான் இதை பிஸினஸா பார்க்க விரும்புறேன்” என்று கூறி, நான் தந்தை இல்லை, மிகச்சிறந்த வியாபாரி என்பதை நிரூபித்துவிட, அவனுக்கு சுருக்கென்று வலித்தது.
“ஆனா அப்பா?” ரிதுராஜ் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“எஸ், இஷிதா சொத்து பத்திரத்துல சைன் பண்ணி எனக்கு குடுத்தா, மேகா வீட்ல நான் வந்து பேசுறேன்” என்றார் உறுதியாக.
அவனோ அதிர்ந்தே விட்டான். “இஷிதா ஒத்துக்க மாட்டாப்பா!” என்றான்.
“லாபம் இல்லாம பிஸ்னஸ் பண்ண நானும் முட்டாள் இல்லை ரிதுராஜ்” என்றவர் ஸ்ட்டதஸ்கோப்பை கழுத்தில் மாட்டிக்கொண்டு சென்றார்.

ரிதுராஜூக்கு தந்தை வார்த்தைக்கு வார்த்தை பிஸ்னஸ் பிஸ்னஸ் என்று கூறியது கஷ்டமாக இருந்தாலும், ‘தனக்காக எவ்வளவோ செய்த தந்தை, நாம் திடீர் என்று காதல் என வந்து நின்றால் அவருக்கும் ஏமாற்றம் இருக்க தானே செய்யும்’ என எண்ணினான். அவரது சுடு சொற்களை பொறுத்துக்கொண்டாலும், ரிதுராஜூக்கு, ‘தன் காதலை ஆரம்பித்த உடனே இத்தனை தடங்கலா!’ என ஆயாசமாக வந்தது.

 

Author: Naemira
Article Title: மிருதன் 12.1
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top