logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 18.1

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
இரவு வேளையும், அதிகாலைப் பொழுதும் ஒன்றோடு ஒன்று சந்திக்கும் அந்த ஏகாந்த வேளையில் வழமை போல கண்விழித்தவள், குளித்து முடித்து, காதில் ஹெட்செட் மூலமாக இளையராஜாவின் மெல்லிசையில் எஸ்பிபி மற்றும் வாணிஜெயராமின் தேனூறும் குரலுக்கு சொந்தமான, அதுவும் தனக்கு மிகவும் பிடித்தமான பாடலில் ஒன்றான,
‘ஒரே நாள் உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான்
ஊஞ்சல் ஆடுது’ என்ற பாடலை கண்மூடி ரசித்தபடி, கையில் சூடான காஃபி கப்புடன் புல்வெளியில் படர்ந்திருந்த பனித்துளியின் சிலுசிலிர்ப்பை தன் பாதத்தில் உணர்ந்தபடி நடைபயின்று கொண்டிருந்தாள் மேகா.
ஆரோக்கியம், கட்டுக்கோப்பான உடல் இது அனைத்தையும் தாண்டி, அவனுடைய வேலை சுமை, அவனின் மனப்பாரம், அவனது அடையாளம் என அனைத்தையும் சொற்ப நேரத்திற்கு மறந்து, இதமான மன அமைதிக்காக தீரன் தன்னை ஈடுபடுத்தி கொள்வது உடற்பயிற்சியில் தான். சொல்லப்போனால் அவனது மன அழுத்தத்திற்கு வடிக்கட்டி தான் இந்த உடற்பயிற்சி.
மேகாவின் இல்லத்தில் ஜிம் வசதி இல்லாததால் தன் அலைபேசியில் பிறமொழிப் பாடல் ஒன்றை கொஞ்சம் சத்தமா ஒலிக்க விட்டபடி தன் அறையின் பால்கனியில் நின்று உபகரணங்கள் இல்லாத சில உடற்பயிற்சிகளை செய்யத் துவங்கியவன், அது முடிந்ததும் பால்கனியில் போடப்பட்டிருந்த தடுப்புக் கம்பியில் தன் கைகளை ஊன்றியபடி கிழக்கு வானை நோக்கி நின்றிருந்தான் தீரன்.
தகிக்கும் அக்னிப்பிழம்பாய் கீழ்வானில் இருந்து பகலவன் உதயமாவதை பார்த்திருந்தவனின், மனமும் அந்த சூரியனைப் போல தகித்துக் கொண்டிருந்தது. அவனது மனதில் பற்றியெரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல, நேற்று இரவு ரிதுராஜுடன் மேகா கை கோர்த்தபடி நின்றிருந்த நினைவு அவனுள் தகித்துக் கொண்டிருக்க, ஏதோ ஒரு உந்துதலில் கீழே பார்த்தவனின் கண்ணில் பட்டது என்னவோ, கண்களை மூடி கன்னக்குழி விழ புன்னகைத்து கொண்டிருந்த மேகா தான். சினத்துடன் அவளை ஏறிட்டான்.
அவளது கூந்தல் இடை தாண்டி பறந்து விரிந்திருக்க, இப்பொழுது அவனது ஆக்ரோஷ விழிகளில் ரசனை குடியேற, பால்கனி சுவற்றில் வாகாக சாய்ந்து கொண்டவன் தன் கைகளைக் கட்டியவாறு அவளை பார்வையிடத் துவங்கினான்.
ஒப்பனைகள் ஏதுமின்றி இயற்கையோடு இயற்கையாக கலந்தபடி ஓவியமாய் நின்றிருந்தவளது அழகு, தீரனின் மனதில் பதிந்து அவனது இளமையை எழுப்பியது. உச்சி துவங்கி நுனி வரையிலான அளவான நெளிவில் இருந்த கூந்தலின் அழகு, அவனது இதயத்தை கொள்ளை எடுக்க, அக்கணமே பெண்ணவளை ஆராயும் ஆராய்ச்சியாளனாக மாறிப்போனான் ஆணவன்.
“என்ன அக்கா காலையிலே உன் ஆள் கூட ரொமான்ஸா?” மேகாவை பின்னால் இருந்து அணைத்தபடி இன்னும் உறக்கம் கலையாத குரலில் கேலி செய்தாள் மயூரி.
தங்கையின் கேலி பேச்சில் சிரித்தவள், “மியூசிக் கேட்டுட்டு இருந்தேன்டி, அவ்வளவு தான்” என்றபடி ஹெட்செட்டை கழற்றிவிட்டு புல்தரையில் அமர, மேகாவின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்ட மயூரி, “அப்போ ரொமான்டிக் மூட்ல இருக்கன்னு சொல்லு!” என்றாள் விழிகளை மூடிய நிலையில்.
“அதெல்லாம் எதுவும் இல்லைடி, மியூசிக் கேட்டது ஒரு குத்தமா?” தங்கையின் சிகையை கோதியபடி சலிப்பாக கூறினாள் மேகா.
“ஒத்துக்க மாட்டியே! ஆமான்னு சொன்னாத்தான் என்ன? கல்யாண பொண்ணுன்னா இப்படித்தான் ஏதாவது கலாய்ப்போம், கொஞ்சமாவது வெக்கப்படுறியா, ம்ம்? எப்பப்பாரு ரோபோ மாதிரி” சலித்துக் கொண்ட மயூரியின் தலையில் நங்கென்று கொட்டினாள் மேகா.
“வாய் கூடிப்போச்சுடி உனக்கு” என்றதும்,
“ஆ... வலிக்குது அக்கா!” என தன் தலையை தேய்த்தபடி எழுந்தவள் மேகாவின் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.
“ஏய் தூக்கம் வந்தா, உள்ள போய் தூங்க வேண்டியது தானே?” என்ற மேகாவின் கரத்தில் இருந்த காஃபி கப்பை பறித்த மயூரி, “நம்ம மதர் இந்தியா எங்கே தூங்க விடுறாங்க? மேகா பாரு, எவ்வளவு பொறுப்பா காலையிலே எந்திச்சி குளிச்சிட்டான்னு திட்டி திட்டியே என்னை எழுப்பி விட்டுட்டாங்க!” தாயை புகார் கூறியபடி காஃபியை அருந்தப் போனாள்.
“ஏய், நான் குடிச்சதுடி, ஆறி வேற போயிருக்கும்” என மேகா சொல்லும் பொழுதே மீதம் இருந்த மொத்த காஃபியையும் குடித்திருந்தாள் மயூரி.
“இருக்கட்டும் எல்லாம் உன் கல்யாணம் வரைக்கும் தான். அப்புறம் இந்த சான்ஸ் எல்லாம் எங்களுக்கா கிடைக்கும்?” என அவள் மடியில் படுத்துக்கொண்டு கண்ணடித்தாள்.
தங்கையின் கையில் வலிக்காது போல கிள்ளியவள், “ஏய் அதெல்லாம் ஒன்னும் இல்லை, கல்யாணம் ஆனாலும் நீ என் தங்கச்சி தான். எப்பவும் என்கிட்ட உனக்கு உரிமை உண்டு” என்றாள்.
“பாப்போம், பாப்போம்!” என்ற மயூரி டிராக் சூட்டும், டீ ஷர்ட்டும் அணிந்துகொண்டு கையையும் காலையும் அசைத்தபடி வந்த விக்ரமை பார்த்து விழி விரித்தவள், “அக்கா, இது என்ன அதிசயமா இருக்கு? என் கைய கொஞ்சம் கிள்ளேன்!” என்றாள் ஆச்சரியமாக.
விக்ரமோ, “குட் மார்னிங் அக்கா!” என்று கூறி மயூரியை பார்த்து, “குட் மார்னிங் சோம்பேறி!” என்றவன், மயூரி பார்க்க கைகளையும் உடம்பையும் வளைக்க,
“டேய், நீயே கடைஞ்செடுத்த சோம்பேறி, நீ என்னை சொல்றியா?” என்ற மயூரி விக்ரமை வம்பிழுத்தாள்.
“ஏய், என் தம்பிய ஏதாவது சொல்லாம உனக்கு இருக்க முடியாதாடி!” என்ற மேகாவின் கையோடு தன் கையை அடித்துக் கொண்டவன்,
“எங்கே நான் எயிட்பேக்ஸ் எல்லாம் வச்சு அழகா ஆகிருவனோன்னு அவளுக்கு என்மேல பொறாமை அக்கா, வேஸ்ட் கேர்ள்!” என்று கேலியாக சிரித்த விக்ரம் தன் பணியை தொடர்ந்தான்.
அலைபேசியில் அழைப்பு வரவும், “ஆமாடி, கல்யாணம் தான். திடீர்ன்னு பிக்ஸ் ஆகிடுச்சு!” என்றபடி மேகா அலைபேசியுடன் ஒதுங்கி விட,
“என்னையா வேஸ்டுன்னு சொல்ற?” என விக்ரமை முறைத்த மயூரி சுற்றும் முற்றும் தேடிவிட்டு கையில் கிடைத்த சேற்றை எடுத்து அவன் சட்டை மீதே அடித்து, விழுந்து விழுந்து சிரித்தாள்.
ஆத்திரம் கொண்ட விக்ரமோ மயூரியை பார்த்து, “ஏய் உன்னை இன்னைக்கு விடமாட்டேன்டி!” என்றவன் பதிலுக்கு சேற்றை கையில் எடுக்க, “முடிஞ்சா புடிச்சுக்கோ!” என்று ஓடியவளை துரத்திய விக்ரம், பதிலுக்கு மயூரி மீதும் சேற்றை எடுத்து வீசினான்.
அது அவளது முகத்திலேயே பட, அதை கண்டு அவன் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க, முகத்தில் உள்ளதை துடைத்து கீழே போட்டவள், இரண்டு கைநிறைய சேற்றுடன் அவனை துரத்தினாள்.
அவனோ மேகாவின் பின்னால் ஒளிந்து கொண்டு மேகாவை உதவிக்கு அழைக்க, முதலில் பதறியவள் பின்பு சுதாரித்து கொண்டு, “மயூரி அதை கீழே போடு!” என்றாள்.
“பாரு, அவன் என் மூஞ்சிலே அடிச்சிட்டான், மரியாதையா என்கிட்ட சாரி கேட்க சொல்லு!”
“டேய், சாரி கேளுடா!”
“சாரி கேட்டா, அடிக்கமாட்டாளான்னு கேளு!” என விக்ரம் மேகாவின் தோளை பிடித்தபடி கேட்க,
“அடிக்க மாட்டாடா, நீ கேளு!” என்றவள், “அவன் சாரி கேட்பான், நீ அதை கீழே போட்டுரணும். ஓகே மயூரி” என்ற மேகா மயூரியை பார்த்து குறும்பாக கண்சிமிட்ட,
பதிலுக்கு தலையசைத்த மயூரி, “சரி சரி, உன் தொம்பிய சாரி சொல்லச் சொல்லு! நான் ஒன்னும் பண்ணமாட்டேன்” என மிடுக்காக கூற, விக்ரம் சாரி சொன்ன மறுகணம், மேகா விலகிக்கொள்ள, மயூரியின் கரத்தில் உள்ள சேறு விக்ரமின் முகத்தை அலங்கரித்தது.
அதை பார்த்து மேகா, மயூரி இருவரும் விழுந்து விழுந்து சிரிக்க, அவர்கள் தன்னை ஏமாற்றியதை அறிந்த விக்ரம், “அக்கா, யூ டூ ப்ருட்!” என்றவன் கையில் கிடைத்த தண்ணீர் டியூபை எடுக்க, மயூரியோ, “அக்கா, நீ காலையிலே குளிச்சிட்டல்ல?” என ஒரு மார்க்கமாய் கேட்க,
“ஆமாடி” என மேகா சொல்லிய மறுகணம் மயூரி, தன் ஒரு கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சேற்றை மேகா மீது வீசினாள்.
“மயூ, என்ன பண்ணி வச்சிருக்க? உன்னை, நில்லுடி!” என சிரித்தபடி தன் பங்கிற்கு சேற்றை எடுத்த மேகா, தன்மீது சேற்றை அடித்துவிட்டு ஓடிச் சென்ற மயூரியை துரத்தியபடி ஓடிவர, கல் தடுக்கி தன் கையில் இருந்த சேற்றை மயூரிக்கு பதிலாக அக்னி மீது பூசியபடி கீழே விழப்போனவள், எப்படியோ தன்னை நிலைப்படுத்திக் கொண்டு விழாமல் நின்றிருந்தாள்.

“கம் ஆன் அக்கா!” என்று தன் கையில் தண்ணீர் டியூபை வைத்தபடி மேகாவை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த விக்ரம், சிரித்துக் கொண்டிருந்த மயூரி என அவர்கள் இருவரும் இதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

 

Author: Naemira
Article Title: மிருதன் 18.1
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top