logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 2

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
மிருதன் 2

சட்டென்று திரும்பியவனின் அசுர விழிகள் கோபத்தில் தகித்தது.

“என்ன துணிச்சல்? என்னையே தொடுறியா?” என நரம்புகள் புடைக்க கர்ஜித்தவன், ஆத்திரத்தில் தன் கரங்களை அவளது கன்னம் நோக்கி உயர்த்தியிருந்த தருணத்தில், அவனது சிவந்த கண்களை பார்த்தவள் தீரனின் கொடூரப் பார்வையில் நடுங்கிப் போனாள்.

வீசிய குளுமை தென்றலையும் தாண்டி, முகத்தில் வியர்வை துளிர்க்க, “விட்ருங்க ப்ளீஸ்... சாரி ப்ளீஸ்... விட்ருங்க ப்ளீஸ்!” என இதே வார்த்தைகளை தன் கண்களை இறுக்கமாக மூடியபடி அவள் மீண்டும் மீண்டும் உச்சரிக்க, அவன், அவளை அதீத ஆத்திரத்தில் வெறித்துப் பார்த்தான்.

மூடிய இமைகளில் இருந்து கண்ணீர் நில்லாமல் வழிந்து கொண்டிருந்தது. முகத்தில் முத்துமுத்தாய் வியர்வைத் துளிகள், காற்றில் கலைந்த கேசம் வதனத்தை பாதி மறைத்திருக்க, தான் பற்றியிருந்த அவனது கரத்தை தன் இரு கரங்களுக்குள் இன்னும் இறுக்கமாக பிடித்துக்கொண்டு மழையில் மாட்டிக்கொண்ட பூனைக்குட்டி போல பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

அவளது வெளிறிய முகத்தை ஒரு கணம் பார்த்த தீரனுக்கு என்ன தோன்றியதோ, சட்டென்று அவன் முகத்தில் ஒருவித மாற்றம். கடுமையின் அளவு மெல்ல மெல்ல குறைந்திருந்தது.

“ஓகே, காம்டவுன், ரிலாக்ஸ்!” அவளை பயத்தில் இருந்து வெளியே கொண்டுவர ஏதோ தன்னாலான முயற்சியை செய்தான்.

“ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்” இன்னும் சத்தமாக கதறினாள்.

“ஏய், நிப்பாட்டுடி! எரிச்சலா இருக்கு, சரியான கோழை” எரிச்சலில் தலைமுடியை அழுந்தக் கோதி தன்னை சமன்படுத்தினான்.

அவனது அடிக்குரலில் தெரிந்த சீற்றம் கண்டு மேலும் நடுங்கியவள், “சாரி சார், என்னை விட்ருங்க!” என கெஞ்ச,
எரிச்சல் அடைந்தவன்,

“என்னடா இது?” என அஷோக்கை தீப்பார்வை பார்த்துவிட்டு அவளைப் பார்த்தான். ஜன்னி வந்தது போல நடுங்கிக் கொண்டிருந்த அவளது நிலை கண்டு ஆழ்ந்த மூச்செடுத்தவன்,

“அஷோக், இந்த நியூஸென்ஸை முதல்ல வெளிய தூக்கி போடு, ச்ச!” என்றவன் அவளது மருண்ட பார்வையைப் பார்த்து,

“என்ன, என்னை விட மனசில்லையோ, ம்ம்?” என அவளது கரங்களுக்குள் அடைபட்டுக் கிடந்த தன் கரத்தை, தன் கண்களை காட்டிக் கேட்க, நிதர்சனம் புரிந்து பதறியபடி உடனே விலகி நின்றவளை ஏற இறங்கப் பார்த்த தீரனின் தோள்பட்டையில் அவனை நோக்கி வந்த தோட்டா ஒன்று வேகமாகப் பாய்ந்தது.

எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த தாக்குதலை கண்டு அனைவரும் அதிர்ந்திருக்க, அரைநொடியில் தன்னை சமன் செய்த அக்னி, ‘இது கிரண் பாஸ்கரின் வேலை’ என்பதை புரிந்துகொள்ள, அவன் முகம் கடும் பயங்கரமாய் மாறியது.

உடனே தன் ஆட்களுக்கு அவன் கட்டளையிட, அக்னியும் அவனது ஆட்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.

சரமாரியான துப்பாக்கி தாக்குதலில் ஆங்காங்கே குருதி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்க, இதையெல்லாம் கண்ட மேகாவுக்கு தான், தலை சுற்றியபடி கண்கள் இருண்டு கொண்டு வந்தது.

அப்பொழுது அங்கே ஓர் ஓரமாய் இரண்டு காதையும் மூடியபடி அழுது கொண்டிருந்த மேகாவை கண்ட அக்னி, “இவ இன்னும் போகாம என்ன பண்ணிட்டு இருக்கா?” என அஷோக்கிடம் சீறியபடி பற்களை கடிக்க,
அவனோ,

“டென்ஷன்ல மறந்துட்டேன் அக்னி. நான், அவளை பார்த்துக்கறேன். அதுக்கும் முதல்ல பின் கேட்டை கிளியர் பண்றேன், நீ உடனே வந்திரு. உனக்கு ரொம்ப ப்ளீட் ஆகுது” என்றவன் அக்னியை குறிபார்த்தபடி நின்றிருந்த ஒருத்தனை சுட்டுவிட்டு நிமிர்ந்தான்.

அக்னியோ அதேநேரம் மறுபக்கம் பாய்ந்து அஷோக்கிற்கு குறி வைத்திருந்தவர்களை சுட்டுத் தள்ளிவிட்டு மேகாவை பார்க்க, அவளது கழுத்தை வளைத்து பிடித்த ஒருவன் அவள் தலையிலேயே துப்பாக்கியை வைத்து விட்டான்.

அதை கண்ட அஷோக், “டேய் கன்னை கீழே போடுடா!” என்று பதற, அவனோ, “முடியாது, நீங்க எல்லாரும் துப்பாக்கியை கீழ போடலைன்னா இந்த குட்டியோட தலை சிதறும்” எனச் சொல்லிய அடுத்தநொடியே சொன்னவனின் தலை சிதறியிருந்தது.

அவனோ நெற்றிப்பொட்டில் இருந்து குருதி வழிய, மேகாவை விட்டபடி தரையில் மல்லாக்க விழ, மேகாவோ, அஷோக்கை பார்த்துக்கொண்டே அவன் பார்வை செல்லும் திசையை பார்த்தாள்.

அவர்களை நோக்கி துப்பாக்கியை ஏந்தியபடி வந்த அக்னிதீரனோ, மிரட்சியுடன் தன்னையே பார்த்து கொண்டிருந்த மேகாவை பார்த்து, “ஏய் தள்ளு!” என்றவன் மேகாவை குறி பார்த்திருந்தவனின் கையில் சுட்டுவிட்டு நொடிப்பொழுதில் அவளது அருகில் வர, அஷோக் மென்னகையுடன் மற்றைய பக்கம் சுடச் சென்றிருந்தான்.

மேகாவை ஆக்ரோஷமாக பார்த்தபடி நெருங்கி நின்ற அக்னி ஒரு கணம் அவளைப் பார்த்துவிட்டு, மறுநொடியே அவளது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஒரு தூணின் பின்னால் மறைந்து நிற்க, அந்த அகலமான தூணின் பின்னால் அவன் மார்போடு ஒன்றி நின்றிருந்த மேகாவின் இதயம் தாறுமாறாய் துடித்தது.

அந்த கணம் அவளது விழியை நோக்கியவன், ‘என்ன?’ என்பதை போல தன் புருவம் உயர்த்த, அவள் எதுவும் இல்லை என்பதாய் தன் தலையை மறுப்பாக அசைக்க, “ம்ம்” என்றவன் அவளிடம், “நான் சொல்லும் பொழுது பின்பக்கமா ஓடியிருக்கணும், புரியுதா?” என அவளது விழிகளை பார்த்தபடி சொல்ல, அவளும் அவன் விழிகளை பார்த்துக் கொண்டே, “மாட்டேன், பயமா இருக்கு” என்று பயத்தில் அழுதபடி அவனது மார்போடு இன்னும் ஒன்றி நின்றாள்.

எரிச்சல் அடைந்தவன், அவள் தலையில் துப்பாக்கியை வைத்து, “ஏய் நிறுத்து! இனிமே அழுதா, உன்னை சுட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்” என தன் குரலை உயர்த்தாமல், ஆனால் அழுத்தமான குரலில் மிரட்டினான்.

உடனே மடமடவென தன் கண்ணீரை துடைத்தவள் கப்பென்று தன் வாயை தன் இரு கைகளால் மூடிக்கொண்டு, தன்னை முறைக்கும் தீரனை கெஞ்சலாகப் பார்த்தாள்.

அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அப்பொழுது அருகில் கேட்ட துப்பாக்கி சத்தமோ அவனை சுயநினைவிற்கு கொண்டு வந்தது.

சட்டென்று மறைந்திருந்தபடி வெளியே நோக்கி சுட்டவன், மெல்லத் தூணில் இருந்து எட்டிப்பார்க்க, அந்த வினாடியே உறைந்து நின்றான்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அவனது நெஞ்சோடு இடைவெளி இன்றி ஒட்டிக்கொண்ட மேகாவின் உதடுகள், “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்” என முணுமுணுக்க, சட்டென்று தன் உடல் விறைத்து நிமிர்ந்தவன், பெண்ணவளை தன்னிடம் இருந்து விலக்கினான்.

அடுத்த கணமே அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்தவள், “ப்ளீஸ், ப்ளீஸ்! பயமா... பயமா இருக்கு” எனக் கதறினாள்.

“ஏய் என்னடி நீ? எல்லாத்துக்கும் பயந்துட்டு, ச்ச, தள்ளிப்போடி!” என அதட்டியவன் அவளை தள்ளிவிட முயற்சிக்க, அவளோ, “ப்ளீஸ், என்னை விட்றாதீங்க!” என அவனை விட்டுப் பிரியாமல் மேலும் மேலும் நெருங்கி ஒட்டிக்கொண்டாள்.

“ச்ச, இவனுங்களை கூட சமாளிச்சிருவேன். ஆனா இவளை, உஃப்!” என பெருமூச்சை வெளியிட்டவன், அவளது கெஞ்சல் பார்வையை பார்த்தபடியே தங்களை பின்னால் இருந்து நெருங்கும் ஒருவனின் பூட்ஸ் சத்தத்தை வைத்து அவனது காலிலும் மார்பிலும் சுட்டு வீழ்த்தியவன், மேகாவை அழுத்தமாக பார்த்துவிட்டு மீண்டும் தூணில் இருந்து எட்டிப்பார்த்து தன் விழிகளால் வெளியே ஆராய்ந்தான்.

எதிரிகள் தன்னை நோக்கி வருவதைக் கண்டவன் தன் துப்பாக்கியை எடுத்து வேறு திசையில் சுட்டான்.

தோட்டாவின் சத்தம் காதை கிழிக்க, எதிரிகள் அனைவரும் சத்தம் வந்த திசை நோக்கி குழுமுவதை பார்த்தான்.

மேலே படியில் பதுங்கி இருந்த தன் ஆளுக்கு ஏதோ செய்கையால் செய்தி சொல்லி, தலையசைத்துவிட்டு தன் இடையில் இருந்த துப்பாக்கியை எடுத்து லோட் செய்தவன், தன் சட்டையை இறுக்கமாக பிடித்தபடி நடுங்கிக் கொண்டிருந்த மேகாவை ஒரே ஒரு கணம் பார்த்தான்.


 
Last edited:

Author: Naemira
Article Title: மிருதன் 2
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top