logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 20.1

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
ஆதவன் மெல்ல மெல்ல மேற்கில் சாயத் துவங்கிருக்க இன்னும் ஓரிரு நாழிகை கடந்தால் இருட்டிவிடும் நிலையில், “ஏய் மேகா, மயூரி எங்கே ஆளை காணோம்?” சிவப்புநிற புடவையை பார்த்து கொண்டே வினவினார் ராதிகா.
“ரெஸ்ட்ரூம் போயிருக்காம்மா!” என்ற மேகா கூறவும், “சரி, இந்த புடவை எப்படி இருக்குன்னு பாரு?” என ராதிகா கேட்டார்.
“எடுத்தவரை போதும்மா! வீட்டுக்கு போவோமா? டயர்டா இருக்கு” என மேகா அரை மணிநேரத்திற்குள் பலமுறை கூறிவிட,
ராதிகாவோ, “ஆமா நமக்கு ரொம்ப நாள் இருக்கு பார்த்தியா? ஷாப்பிங் இன்னைக்கு ஒரு நாளைக்கு தான்! ஸோ, என்ன வேணுமோ இன்னைக்கே வாங்கிக்கோ! திரும்ப எல்லாம் வர நமக்கு நேரம் இல்லை” என்றவர் உற்சாகம் குறையாமல் மகளுக்கு வேண்டிய புடவைகளை கவனத்துடன் தேர்வு செய்து கொண்டிருந்தார்.
அக்னியின் செயலில் மிகவும் காயப்பட்டு போன மேகாவுக்கு, ஏனோ அங்கு இருப்பது ஏதோ நெருப்பின் மேல் இருப்பது போல இருக்க, அனைவரிடமும் இயல்பாய் இருப்பது போல காட்டிக்கொள்ள மிகவும் சங்கடப்பட்டுப் போனாள்.
அதே நேரம் ஷாப்பிங் காம்ப்ளெக்சிற்கு வெளியே காரில் சாய்ந்தபடி அலைபேசியில் யாரிடமோ பிஸ்னஸ் விடயமாக தீவிர உரையாடலில் இருந்த தீரன், ஒருவித பதற்றத்துடன் கையில் அலைபேசியுடன் கடைக்குள் இருந்து வியர்த்து வழிய வேகமாக ஓடி வந்த கோபால கிருஷ்ணனை புருவம் சுருக்கிப் பார்த்து, எதிர்முனையில் இருப்பவரிடம் பிறகு பேசுவதாக கூறிவிட்டு தன் அழைப்பை துண்டித்தவன், அவர் அருகே வந்து, “அங்கிள், ஆர் யூ ஓகே?” கோபால கிருஷ்ணனின் வெளிறிய முகம் கண்டு அக்னி வினவினான்.
“ஹான்!” திடீரென்று அவன் அழைத்ததில் பதற்றத்துடன் அவனை பார்த்தவர்,
“ம்ம், ஃபைன்பா!” தன்னை இயல்பாக காட்டிக்கொள்ள முயற்சித்தார்.
“அங்கிள் ஆர் யூ ஷுயர்?” அக்னி கேட்கும்பொழுதே, அவரது அலைபேசி பீப் என்னும் சத்தத்துடன் சிணுங்க, அவரது கரம் தானாக நடுங்கத் துவங்க, முகம் சிவந்தது. ஆத்திரமும், ஒருவித கோபமும், அவரது இயலாமையும் அவரின் நெஞ்சை அடைத்தது.
“அங்கிள் என்னாச்சு? யூ ஆர் நாட் ஓகே!” அவரது முகமாற்றத்தை உள்வாங்கியபடி வினவினான் தீரன்.
“அதுவந்து அக்னி!” அவனிடம் தன் துன்பத்தை முழுமையாக கூற முடியாமல் தயங்கி நின்றவருக்கு, மூச்சு முட்டிக்கொண்டு வர, பேச முடியாமல் திணறினார்.
“அங்கிள், என்கிட்ட சொல்லுங்க!” அவரது விழிகளை நோக்கி கேட்டான் தீரன்.
“அது!” திடீரென்று மிகவும் பலவீனமாக காணப்பட்டார். ‘ஏதோ பிரச்சனை!’ அவனுக்கு புரிந்து விட்டது. ‘ஆனால் அது என்ன?’ என்று குழம்பிய தீரன், “என்னாச்சு அங்கிள்? ப்ளீஸ் சொல்லுங்க!” அவரது கரங்களை பற்றிக்கொண்டு அவன் கேட்டதுதான் தாமதம், தீரனின் கையைப் பிடித்துக்கொண்டு சிறுபிள்ளை போல குலுங்கி அழுதார் கோபாலகிருஷ்ணன்.
அதை சற்றும் எதிர்பார்க்காத அக்னி முதலில் திகைத்தவன், பிறகு தான் இருப்பதாக நம்பிக்கை கொடுத்து அவரிடம் கேட்டான். தன் அலைபேசியை அவனிடம் நீட்டியவருக்கு உடல் மொத்தமும் நடுங்கியது. புருவ மத்தியில் முடிச்சிட அதை வாங்கிப் பார்த்த தீரனின் விழிகள் கோபத்தில் தகிக்க, ‘தன் கடன் பிரச்சனை துவங்கி, தான் வட்டிக்கு பணம் வாங்கியிருந்த வேலன், மேகாவின் நிச்சயதார்த்தம் அன்று தன்னை அழைத்து பணத்தை உடனே பேசிய தேதியில் தரும்படி மிரட்டியது, அவர் மேகாவின் கல்யாண விடயத்தை கூறி கால அவகாசம் கேட்டதும் தவறாய் வார்த்தைகளை விட்டது’ என அனைத்தையும் கூறி முடித்தார்.
இன்று காலையில் இவர், தன் நண்பன் நிலவனுடன் சென்று போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டரிடம் சிவகுமாரை பற்றி பேசிவிட்டு, பின்விளைவுகளை யோசிக்காமல் வேலன் மீது அளித்த புகார் வரை அனைத்தையும் கூறி முடித்த கோபாலகிருஷ்ணன்,
“பயமா இருக்கு அக்னி! அவன் அசிங்கமா பேசியதும், கோபத்துல யோசிக்காம கம்ப்ளையிண்ட் கொடுத்துட்டேன். இப்போ இப்படி பண்ணிருக்காங்க, ஏதாவது பண்ணிருவாங்களோன்னு பயமா...” என்றவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே திடீரென்று நெஞ்சை பிடித்துக்கொண்டு மயங்கிச் சரிந்தார்.
சட்டென்று அவர் விழுந்ததும் முதலில் திகைத்த தீரன், பின்பு சுதாரித்துக் கொண்டு அவரது நெஞ்சில் கை வைத்து வேகமாக அழுத்தம் கொடுத்து, சிபிஆர் முறைப்படி செயற்கை சுவாசத்தை அவருக்கு தொடர்ந்து கொடுத்தான்.
ஒருகட்டத்தில் இருமலுடன் அவரது உடல் தூக்கிவாரிப்போட, லேசாக கண் விழித்தவர் ஒரு தந்தைக்குரிய பரிதவிப்புடன் அவனைப் பார்த்தார். அவர் கண்ணில் தெரிந்த பரிதவிப்பை கண்ட அக்னி, அவரது கரம் பிடித்து, “என்னை நம்புங்க!” என இரண்டே வார்த்தைகள் தான் கூறினான்.
அரை மயக்கத்தில் அவருக்கு என்ன புரிந்ததோ பதில் பேசத் திணறியவர், தன் தலையை மட்டும் அசைத்தார். பின்பு சிறிதும் காலம் தாழ்த்தாது துரிதமாக செயல்பட்டவன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன், காரில் அவரைக் கிடத்தி ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தான்.
ஹாஸ்பிடல் நோக்கிச் சென்று கொண்டிருந்த இடைப்பட்ட நேரத்திலேயே, அவனது மூளை கோபாலகிருஷ்ணனின் பிரச்சனையை பற்றி சிந்திக்கத் துவங்கியிருந்தது. அவர் கூறியதில் இருந்தே பிரச்சனையை கணித்திருந்த தீரன், ஹாஸ்பிடல் போகும் பொழுதே அஷோக்கை அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு விடயத்தை கூறியவன், அஷோக்கிடம் தனக்கு தேவையான சில தகவல்களை சேகரிக்கக் கூறி, விரல் விட்டு எண்ணிவிடும் நொடிப்பொழுதில் பிரச்சனைக்குரிய தீர்வையும் கண்டிருந்தான்.
செல்லும் பாதையில், மாலிற்கு அருகில் உள்ள மருத்துவமனையிலே அவரை அட்மிட் செய்தவன், அஷோக்கிற்கு தொடர்பு கொண்டு அவனிடம் கோபாலகிருஷ்ணனின் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தன்னுடன் தொடர்பிலே இருக்குமாறு கூறினான். அஷோக்கிடம், அவரை வேறு மருத்துவமனைக்கு இடம் மாற்றம் செய்யவதை பற்றிக் கூறிவிட்டு அடுத்தக்கட்ட செயலில் இறங்கிருந்தான்.
அக்னி அவசரத்திற்கு அட்மிட் செய்த மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால், அவருக்கு முதலுதவி மட்டும் கொடுக்கப்பட்டிருக்க, தங்களின் செல்வாக்கு மூலமாக ஒருசில முக்கியமான நபருக்கு தொடர்பு கொண்ட அஷோக், மருத்துவமனையின் டாக்டரிடமும் கலந்தாலோசித்து விட்டு கோபாலகிருஷ்ணனை அடுத்த அரைமணிநேரத்தில் சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனைக்கு இடம் மாற்றி, அக்னியின் சொல்லை செயலாக்கினான்.
இஷிதாவின் மூலமாக விஷயம் கேள்விப்பட்டு பதறித் துடித்த அவரது குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். அப்போலோ மருத்துவமனையில் விஐபிக்கான எமெர்ஜென்சி பிரிவில் அவசரமாக அட்மிட் செய்யபட்ட மேகாவின் தந்தைக்கு தீவிரமான சிகிச்சை வழங்கப்பட்டு கொண்டிருக்க, ராதிகா, விக்ரம் என வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் கண்ணீரில் கரைந்தபடி அமர்ந்திருந்தனர்.
என்னதான் தனது பணி அனுபவத்தில் இது போன்ற ஏகப்பட்ட எமெர்ஜென்சிகளை சந்தித்திருந்தாலும் தன் தந்தையை இந்த நிலைமையில் பார்த்ததும், பதறிய மேகா என்ன செய்வதென்று அறியாமல் திணறியபடி அழுது கொண்டு நிற்க, இஷிதா தான் அவளுக்கு தைரியம் கொடுத்து அவளை தேற்றியிருந்தாள்.

எமெர்ஜென்சி யூனிட்டில் டூயூட்டி மருத்துவர்கள் மட்டுமே இருக்க, ஒரு மருத்துவராக மேகா அவர்களோடு கலந்து டிரீட்மென்ட் குறித்து ஆலோசித்து கொண்டிருக்க, ரிதுராஜும், கனகராஜும் அவள் அருகே இருந்தனர்.

மிருதன் 20.2
 
Last edited:

Author: Naemira
Article Title: மிருதன் 20.1
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top