logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 7

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
மிருதன் 7
கண்ணைக் கவரும் வண்ண விளக்குகள், நாசியைத் தீண்டிய மென்மையான நறுமணம் என, பல அலங்கரிப்பிற்கு நடுவே அமைந்து இருந்தது அந்த நைட் கிளப். பாலர் பேதமையின்றி அனைவரும் மதுக்குவளையுடன் தங்கள் தங்கள் ஜோடிகளுடன் ஆடிக் கொண்டிருக்க, அந்த இடமே டிஜேவின் இசையால் அதிர்ந்து கொண்டிருந்தது.

இதை அனைத்தையும் அங்கிருந்த வட்டமேஜை அருகே போடப்பட்டிருந்த நாற்காலியில், இசைக்கேற்ப தலையை ஆட்டிக் கொண்டே, தன் எதிரே இருக்கும் மேகாவை பார்த்துக் கொண்டிருந்தான் அக்னிதீரன்.

கருப்புநிற ஜீன்சும், கருப்புநிற ஷர்ட்டும், ஷர்ட்டிற்கு மேலாக கருப்புநிற கோர்ட்டும் அணிந்திருந்தவனோ தலையை ஜெல் வைத்து இழுத்து இருக்க, ஒருகரம் அருகில் இருந்த நாற்காலியின் மீது இருக்க, வலதுகையோ, மேகா கரம் தொட்டு போடப்பட்ட கட்டோடு டேபிள் மீது தாளம் போட்டுக்கொண்டிருக்க, அடிபட்ட எந்தவித சோர்வும் இல்லாமல் அமர்ந்திருந்தவனது தோரணையில் ஆளை அசத்தும் கம்பீரம் அப்பட்டமாய் தெரிந்தது.

தீரன் என்றால் சொல்லவா வேண்டும்? கம்பீரத்துக்கு அங்கே குறைவேது! அங்கிருந்த பெண்கள் தொடங்கி அனைவரின் பார்வையும் அவன் மேலே படிந்திருக்க, அவனது பார்வையோ மேகாவின் விழியைத் தாண்டி அங்கும் இங்கும் பேருக்குகூட அசையவில்லை. ஆனால் அவளோ முகத்தில் போட்ட பவுண்டேஷனை தாண்டி வழிந்த வியர்வையை ஒற்றியபடி அமர்ந்திருக்க, இஷிதா தான் கோபத்தில் பற்களைக் கடித்து கொண்டு இருந்தாள்.

அவளுக்கு அக்னியை பார்த்தும் பயம், மேகா மீதும் கோபம். அந்த இடத்தில் ஏதும் பேசவும் முடியவில்லை. ஆக தனக்குள் கனன்று வந்த கோபத்தை தண்ணீரை குடித்து அணைத்து கொண்டவள், “ஏன்டி, இவனையும் இங்கே கூட்டிட்டு வந்த?” மெல்லிய குரலில் மேகாவிடம் பற்களை கடித்தவள், அக்னியை பார்த்து அசடு வழிந்தாள்.

ஆனால் அவன் பேருக்கு கூட அவளை கவனிக்கவில்லை.
“நான் என்ன ஆசைபட்டா கூட்டிட்டு வந்தேன்? வெளியே போய்ட்டு வரேன்னு சொன்னேன். உடனே யாருக்கோ கால் பண்ணினான். கருப்பு கார் வாசலுக்கு வந்துச்சு. அஷோக் வந்தாரு, ரெண்டு நிமிஷம் ரூமுக்குள்ள போனான், டிப்டாப்பா வந்து நிக்கிறான். அட்ரஸ் கேட்டான், சொன்னேன், கூட்டிட்டு வந்துட்டான்” மெதுவாக இஷிதாவுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள்.

“என்னாச்சு, என்ன பேசிட்டு இருக்க வர்ஷினி?” அவளது மிரட்சியான முகபாவத்தை பார்த்தபடி கேட்டான்.

“ரெஸ்ட்ரூம் போகணுமாம் சார்” இஷிதாவிடம் இருந்து பதில் வந்தது.

மேகா, ‘நான் எப்போடி அப்படி சொன்னேன்?’ என்பது போல் தோழியை பார்த்தாள்.
“அதை என்கிட்ட சொல்ல வேண்டியது தானே வர்ஷினி? போம்மா போய்ட்டு வா!” முரட்டு குரலில் காதல் வழிந்தது.

“ம்ம்” மேகா சட்டென்று எழுந்துகொள்ள, “ஒரு நிமிஷம், ஏய், நீயும் கூட துணைக்கு போ!” என்றான் இஷிதாவை அதட்டியபடி.

‘அது என்ன ஏய்?’ இஷிதாவிற்கு கோபம்தான் வந்தது.

ஆனாலும் அவன் சரித்திரம் அறிந்தவளால் அவனிடம் எகிறிப் பேச முடியாமல் போக, தலையசைப்போடு மேகாவுடன் சென்றாள்.

விடாது துரத்தும் அவனது பார்வையில் இருந்து தப்பித்தால் போதும் என்று வாஷ்ரூமிற்குள் புகுந்து கொண்ட மேகாவிற்கு உடல் நடுக்கம் மட்டும் கொஞ்சமும் குறையவில்லை.

“என்னடி இவன்? பீமன் மாதிரி வந்து மொத்த இடத்தையும் அடச்சிட்டு உக்கார்ந்திருக்கான்” பின்னாலே வந்த இஷிதா புலம்பித் தீர்த்தாள்.

“நான் என்ன பண்றதுடி?” மேகா இயலாமையுடன் கூறினாள்.

“எந்திரிச்சு போகவும் முடியல, முறைக்கிறானா என்னன்னு ஒன்னும் புரியல. ஆமா உன்னை ஏன் அப்படி பாக்குறான்?”

“அதான்டி எனக்கும் தெரியல?”

“என்ன தான்டி தெரியும் உனக்கு?” என்று சலித்துக் கொண்டவள்,

“இன்னும் கொஞ்சம் நேரத்துல ரித்து வருவான்டி, அவன் வரும்பொழுது இவன் இருந்தா நல்லா இருக்காது” என்றாள் இஷிதா.

“பயப்படாத இஷு, ரித்து அண்ணா கேட்டா, கனகராஜ் அங்கிள் சொல்லித்தான் அவர் வந்திருக்காருன்னு சொல்லிக்கலாம். உன் அண்ணாகிட்டா நான் பேசிக்கிறேன். நீ பயப்பட வேண்டாம். உன்னை திட்டமாட்டாரு” என்ற மேகாவை ஏற இறங்க பார்த்தாள் இஷிதா.

‘எதே, என் அண்ணனை பார்த்து நான் பயப்படுறேனா? ஓ, அவன் திட்டிருவானோ? இவ வேற, அவன் ஏன் வரான்னு தெரியாம அவனையே அண்ணன்னு சொல்றா! டேய் அண்ணா, இந்த ட்யூப்லைட்தான் உனக்கு வேணுமாடா? சரியான தத்திடி நீ!’ மானசீகமாக மேகாவை எண்ணி தலையிலடித்துக் கொண்டாள் இஷிதா.


பேசிவிட்டு கதவைத் திறந்து கொண்டு இஷிதாவும் மேகாவும் வெளியே வர, அப்பொழுது அவர்கள் அருகில் வந்த பெண் ஒருத்தி இஷிதாவிடம் வந்து, “ஏய் இஷு, உன் கூட வந்திருக்கிறது மிஸ்டர் அக்னிதீரன் தானே?” தொலைவில் இருந்து தீரனை பார்த்தபடியே முகத்தில் ஆர்வம் மின்னக் கேட்டாள்.

“ஆமா!” மேகாவை பார்த்தபடி இஷிதா பதில் கூறினாள்.

“ஐயோ அவரை பத்தி ஏகப்பட்ட மேகசின்ல படிச்சிருக்கேன்டி” முகத்தில் அவ்வளவு பூரிப்பு. “நேர்ல பார்க்க ஹீரோ மாதிரி தாடியெல்லாம் வச்சிட்டு செம ஹாண்ட்சம்மா இருக்காரு!” அவன் குணம் அறியாது அவனை ரசித்தாள்.

“பாம்பு கூடத்தான் அழகா இருக்கும். கிட்ட போனாத்தானே அது வேலைய காட்டும். இவ வேற அவன் குணம் தெரியாம?” என இஷிதா முணுமுணுக்க, மேகா சிரித்தே விட்டாள்.

ஆனால் அதெல்லாம் அந்த பெண்ணின் காதில் எங்கே விழுந்தது. அவள்தான் அவனை பார்வையால் அளவெடுத்துக் கொண்டிருந்தாளே!
“ஆமா, அவரு ரொம்ப பெரிய இடமே! உனக்கு எப்படி அவர் பழக்கம்?” என்று கேட்க, ‘என்னடி சொல்லவா?’ என்பது போல இஷிதா, மேகாவை பார்க்க, மேகாவோ தன் கண்களாலே, ‘வேண்டாம்’ என்று சொல்ல, சிரித்தவள், “அப்பாக்கு ஃப்ரண்ட் டி” என்றாள்.

“ஓ, சரி. எனக்கு கொஞ்சம் இன்ட்ரோ பண்ணி விடறது” என்றவளை ஏற இறங்கப் பார்த்தவள், “அவரு ஒரு மாதிரி டைப் டி, உனக்கு செட் ஆகாது” இஷிதா சமாளித்தாள்.

“உனக்கு பொறாமை, எங்கே நான் அவரை கரெக்ட் பண்ணிருவேன்னு! நீ ஒன்னும் இன்ட்ரோ பண்ணி விடவேண்டாம். நானே பார்த்துக்கறேன்” என்றவள் தன் பர்ஸை திறந்து கொஞ்சம் டச்சப் செய்து, “நான் அழகா இருக்கேன்ல?” என இஷிதாவிடம் கேட்டாள்.

அவளது வதனத்தை பிடித்து இரு கன்னங்களையும் மாறி மாறி பார்த்த இஷிதா, அக்னியின் கரங்களை ஒருமுறை பார்த்துவிட்டு அந்த பெண்ணின் ஒரு பக்கக் கன்னத்தை தனது கையை வைத்து அளந்தவள், “ஓகே” என்று கூற,
அவளோ, “ஏய் என்ன பண்ற? இப்போதான்டி டச்-அப் பண்ணினேன், அதுக்குள்ள கலைச்சிடாதே!” என முகத்தை சுளிக்க,

“அது ஒன்னும் இல்லை, அவருக்கு ஒரு பழக்கம் இருக்கு. கோபம் வந்தா செவுள்லயே சாத்துவாரு, உன் கன்னம் வேற நல்லா மெத்த மாதிரி அளவா அவர்கிட்ட அடிவாங்க செஞ்ச மாதிரியே இருக்கா! அதான் பார்த்தேன்” என்று இஷிதா கூற,

“அவரை பத்தி தப்பா பேசி அவர் இமேஜை டேமேஜ் பண்ணாத இஷிதா, இவ்வளவு பொறாமை உனக்கு வேண்டாம்” என்றவள் முகத்தை திருப்பினாள்.

அந்த பெண்மீது இரக்கம் கொண்ட மேகா, “நீங்க அவர்கிட்ட போகாதீங்க, அவர் கொஞ்சம் வித்தியாசமானவரு!” என்று கூற,
“ஓ, உனக்கு ரொம்ப தெரியுமா? வந்துட்டா, ஆளும் ட்ரஸும், பார்ட்டிக்கு எந்த டிரஸ் போடணும்னு கூடத் தெரியாம, புடவை கட்டிட்டு வந்துட்டு பார்க்கிறத பாரு, நாட்டுப்புறம்!” என்றவள் தன் கூந்தலை மேகாவின் முகத்தில் அடிக்க பின்னால் போட்டபடி சென்றாள்.

“ஏய்!” என இஷிதா கோபத்தில் சீற, அவளை தடுத்த மேகா, “விடுடி!” என்று தோழியை சமாதானப்படுத்த, மேகாவுக்கு தான் அக்னி அந்த பெண்ணிடம் ஏதும் கடினமாக நடந்துவிடுவானோ என்று பயமாக இருந்தது.

“பிரச்சனை வருமோன்னு பயமா இருக்குடி!” மேகா கையை பிசைந்தாள்.

“விடு, நாலு சாத்து சாத்தட்டும். அப்போதான் அவளுக்கு புத்தி வரும்” என இஷிதா ஆர்வத்துடன் அவர்களையே பார்க்க, அக்னியின் அருகே சென்ற அந்தப் பெண், “ஹாய் சார், ஐ அம் மதனா!” இழைந்தபடி தன் கரங்களை நீட்டினாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன், ‘இருந்துட்டு போ’ என்கிற தோரணையில் தன் தோளை குலுக்கிவிட்டு மீண்டும் மேகாவின் வரவையே எதிர்பார்த்துக் கொண்டிருக்க, மதனாவின் தன்மானம் மிகவும் அடிவாங்கியது.

‘பெரிய ஆளு அப்படித்தான் இருப்பாரு!’ என்று தன் மனதை தேற்றியவள் ஒட்டவைத்த புன்னகையோடு, “உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்” என்றபடி அவன் அருகில் இன்னும் நெருங்கி வர, அவளைப் பார்த்தபடி, “ம்ம்” என்றவன் தன் உள்ளங்கையை பார்த்தபடி தன் தாடியை நீவ, அவன் கண்கள் தீவிரமாக மாறியது.


“என்கூட டான்ஸ் பண்ண வர்றீங்களா சார்?” அவனது பார்வையின் அர்த்தம் புரியாமல் கேட்டாள்.

“எடுடி கைய!” ஒருமையில் விளித்தவனின் பார்வை, தன் கோர்ட்டின் மேல், அவள் எதார்த்தமாக வைத்த அவளது கரத்தை பார்த்துவிட்டு, அவளிடம் மீண்டது.

முதலில் திகைத்தவள், பிறகு அவனிடம் இருந்து விலகி நின்றாள். அவனது துஷ்டப் பார்வையை கண்டவளுக்கு பயத்தில் நெஞ்சம் அடைத்தது. ‘அவன் குரலும் அவனது பார்வையும்’ என மனதில் எண்ணியவளுக்கு, அவனை பார்க்கவே அச்சமாக இருக்க, அவமானத்தில் கண்ணீர் கண்களில் இருந்து இறங்க, அவனை பாவமாகப் பார்த்தாள்.

“போ!” இருக்கையில் இருந்து எழுந்தபடி எச்சரித்தான். அரண்டவள் அழுதுகொண்டே சென்றுவிட, அந்தக் காட்சியை கண்ட இஷிதாவுக்கு முகத்தில் திருப்தியான புன்னகை மலர, மேகாவிற்கு, ‘ஒரு பெண்ணிடம் இப்படியா நடப்பது?’ என்கின்ற ஆதங்கத்தில் முகம் வாடியது.

அவர்கள் இருவரும் அழுதுகொண்டே செல்லும் மதனாவை பார்த்தபடி அக்னியின் முன்னால் வந்து அமர்ந்தனர். அதுவரை இறுக்கமாக இருந்த அக்னி, மேகாவை கண்டதும் விடுமுறை கண்ட சிறுவன் போல இறுக்கம் தளர்ந்து புத்துணர்ச்சியுடன் காணப்பட்டான்.

ஆனால் மேகாவோ வழக்கம் போல, ‘இவன் தொல்லை எப்பொழுது முடியும்?’ என்று மனதிற்குள் நினைத்தபடி அமர்ந்திருந்தாள். அவளிடம் மறந்தும் கூட புன்னகை இல்லை. மீண்டும் மூவருக்கும் இடையே கனத்த மௌனம் நிலவ, அதை முதலில் உடைத்தது என்னவோ அக்னிதான்.

“யாரையோ பார்க்கணும்னு சொன்ன, ஆளையே காணோம்?” இரண்டு கரங்களையும் தன் அருகிலிருந்த இரு நாற்காலியில் அகல விரித்து வைத்தபடி கேட்டான்.

“இப்போ வந்துருவாங்க சார்!” நலிந்து ஒடுங்கி அவள் குரல் வெளிப்பட்டது. “ம்ம்” என்று அவன் சொன்ன மறுகணம், அக்னியின் சட்டையை ஒருவன் இறுக்கமாக பற்றியிருக்க, தீரனின் கண்கள் கோபத்தில் சிவந்தது.

“ஏன்டா என் ஃப்ரண்ட திட்டின?” கோபத்தில் அக்னியின் முகத்தை நேருக்குநேராக பார்த்தபடி கத்தினான் அந்த புதியவன்.

அந்த ஆடவனின் இந்த செயலில் மேகாவுக்கும் இஷிதாவுக்கும் பக்கென்று ஆனது. அக்னியைப் பற்றி நன்கு அறிந்திருந்த மேகாவிற்கோ உள்ளுக்குள் திகிலாக இருந்தது. இன்று காலை நடந்த சம்பவம் கண் முன்னால் வந்துபோக அதிர்ந்தே விட்டாள்.

அவ்வளவுதான் அந்த ஆடவன் முகத்தில் இடியென ஒரு அடி விழ, அந்த ஆடவனுக்கு உலகமே தலைகீழாக சுற்றுவது போல பார்ட்டி ஹால் சுற்ற, தீரன் கொடுத்த ஒரே அறையிலே ஓர் ஓரமாக அவன் விழுந்து கிடந்தான்.

தீரனோ, கீழே விழுந்த அந்த ஆடவனை பார்த்தபடியே சிகரெட்டை எடுத்து பற்றவைக்க, அந்த புதியவனோ, ‘விண்விண்’ என்று எரிந்த தன் கன்னத்தை பொத்தியபடி எழுந்து, “பேசிட்டு இருக்கும் பொழுது ஏன் சார் அடிச்சீங்க?” என்று கேட்டான்.


தீரனோ, தான் இருந்த நாற்காலியை பின்னால் தள்ளிவிட்டு எழுந்தவன் எதுவும் பேசாமல் தன் கோர்ட்டை கழற்றி நாற்காலியில் போட்டு, தன் முழுக்கை சட்டையின் பொத்தானை கழற்றி அதை தன் முழங்கை வரை ஏற்றிவிட்டு, தான் அணிந்திருந்த கருப்புநிற கை கடிகாரத்தை சற்று இறக்கி தன் கைக்குள் வைத்து மூடிக்கொண்டு, அவனை எரித்து விடுவது போலப் பார்க்க, அக்னியின் செய்கையில் அதிர்ச்சியுடன் அவன் எச்சில் விழுங்கினான்.

இத்தனைக்கும் தீரன் எதுவுமே பேசவில்லை. ஆனால் பார்த்தானே ஒரு பார்வை! அந்த கொடூரப் பார்வையிலே கீழே விழுந்தவனுக்கு சர்வமும் ஒடுங்கியது. பார்த்தே அவனது உயிரை பாதியாக்கினான். தீரனின் முகத்தில் அப்படியொரு வெறி. சிவந்த விழிகள் அவன் உக்கிரத்தின் அளவைக் கூறியது.

இஷிதாவோ தலையில் கைவைத்தபடி நிற்க, மேகாவுக்கு நடக்க போகும் அனைத்தும் விளங்கியது. ஆனால், ‘என்ன செய்வது?’ என்று சிந்திப்பதற்குள் அந்த ஆடவனின் தாடையை உடைத்திருந்தான் அக்னி.

இவ்வாறு நொடி தாமதிக்காது அந்த ஆடவனை அவன் அடிக்க, முகவாயில் ரத்தம் கசிய நின்றவனைப் பார்த்து கலங்கினாள்.

“தீரன், ப்ளீஸ் விடுங்க” என அலறியபடி அவனை நெருங்கியவள் தீரனின் கரம் பிடித்து இழுக்க, அதீத கோபத்தில் இருந்தவன் அவள் ஸ்பரிசம் பட்டதும் மூச்சு வாங்கத் தன் ஓங்கிய கையை இறக்கிவிட, அந்த ஆடவனோ தீரனிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு அங்கிருந்து ஓடினான்.
ஓடும்பொழுதே அருகில் இருந்த மேகாவையும் கீழே தள்ளிவிட்டு ஓட, அவளோ நிதானம் இன்றி அப்படியே முன்னால் இருந்த நாற்காலியில் மோதி கீழே விழுந்தாள்.
“டேய்!” அக்னியின் கர்ஜனையில் ஓடியவன் பயத்துடன் திரும்பி பார்க்க, தீரன் வேகமாக அவனை நெருங்கவும், மேகா, இஷிதாவின் உதவியுடன் தன் தலையை பிடித்தபடி எழுந்து நின்று அக்னியை தடுக்கவும், அவன் கவனம் மொத்தமும் மேகா பக்கம் விழ, அவனது கண்களில் அப்படி ஒரு தவிப்பு.

“வர்ஷினி வலிக்குதா?” அவளது காயத்தை பார்த்தபடி கேட்டான்.

“அக்னி, ப்ளீஸ் என்னால முடியல!” அவள் அக்னி மேல் உள்ள கோபத்தில் எரிச்சலோடு கூற, அவனோ அவளுக்குத்தான் முடியவில்லை என்று எண்ணி கண் இமைக்கும் நொடியில் மேகாவை கையில் ஏந்திக்கொண்டு ஓடினான்.

மேகாவை தூக்கி காரில் அமரவைத்தவன், தன் பின்னால் தயங்கியபடி நின்ற இஷிதாவைப் பார்த்து, “என்ன யோசிச்சிட்டு இருக்க? ஏறு வண்டில, யூஸ்லெஸ்!” தாறுமாறாய் திட்டினான்.

“ஹாங்... இதோ!” அவனது பேச்சை காதில் போட்டுக்கொள்ளாமல் தோழியின் அருகே ஏறி அமர்ந்தாள். பெண்கள் இருவருக்கும் விழி பிதுங்கியது.

“டேய் என்ன பார்வை? வண்டிய எடுடா!” டிரைவரை அதட்டியபடி மேகாவின் மறுபக்கம் வந்து அமர்ந்தான்.

“என்னாச்சும்மா? ரொம்ப வலிக்குதா! சீக்கிரம் போயிரலாம்” அவனது அதிரடியான செயலில் பயத்தில் முகம் வெளிற இருந்தவளின் முகமாற்றத்தை தவறாக எண்ணிப் பதறியவன், அவளை படுத்தி எடுத்தான்.

டிரைவர் அக்னியின் சீற்றத்தால் பயந்து காரை தாறுமாறாய் ஓட்ட, ஏதோ கொஞ்சமாக குலுங்கியது அவ்வளவுதான். அதற்காக, “டேய், என்ன ஓட்டிட்டு இருக்க? மெதுவா வேகமா போ!” டிரைவரை ஒருவழி பண்ணினான்.

மேகா நடுங்கிப் போயிருக்க, இஷிதாவின் பார்வை அக்னி மீது சுவாரசியமாகப் படிந்தது. அவள் கேள்விப்பட்ட அக்னி, அவள் பார்த்த அக்னி வேறு அல்லவா! அவனது இந்த பரிணாமம் அவளது சிந்தனையை கிளறியது.
கார் மருத்துவமனை வாசலில் வந்து நிற்க, மேகா காரை விட்டு இறங்காமல் இருக்க, அவள் பக்கம் வந்தவன்,

“என்னாச்சு வரு?” என்று கேட்டான்.

“அக்னி எனக்கு வலி...”

“ரொம்ப வலிக்குதா, டாக்டரை இங்க வரச் சொல்லவா?” அவளைப் பேசவிடாமல் படுத்தி எடுத்தான்.

“இல்லை, வரேன்” அவள் கால்களை தரையில் வைக்கவில்லை, அவன் கையில் குழந்தையாய் தவழ்ந்தாள்.

“அக்னி, இறக்கிவிடுங்க ப்ளீஸ்!” குரல் அவன் செவியை அடையும் முன்பே காற்றில் கரைந்தது.

“டாக்டர் எங்கே?” அனைவரையும் பார்த்து கத்தியபடி வந்தான்.

“அச்சோ, அக்னி ப்ளீஸ் மெதுவா!” அனைவரும் அவர்களை பார்க்க, அவளுக்கு தான் அவமானமாக இருந்தது.

“சொல்லுங்க என்னாச்சு?” மருத்துவ ஊழியர் ஒருவர் ஆர்ப்பாட்டமில்லாமல் பொறுமையாகக் கேட்க,

“அடிபட்டு வலியில துடிக்கிறாங்க, சீக்கிரம் வாங்க!” சீறினான்.

“உள்ள கொண்டு வாங்க!” என்றார் பொறுமையாக. மேகா அவன் கரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்டாள்.

“இல்லை, இப்படியே இரு!” உறுதியாக கூறினான்.

அறைக்குள் நுழைந்தவன் அவளை படுக்கையில் படுக்க வைத்து, “டாக்டர் எங்கே?” என்றான் கர்ஜிக்கும் குரலில்.

“டாக்டர் முக்கியமான ஆபரேஷன்ல இருக்காங்க சார், வருவாங்க” என்று அவர் கூறவும் எரிச்சலில் நெற்றியை நீவியவன், மேகாவைப் பார்க்க அவளோ, ‘ப்ளீஸ்’ என கண்களால் கெஞ்ச, “டாக்டர் இங்கே வரணும்” என்றான்.

“சார், முதல்ல ஃபார்ம் ஃபில் பண்ணுங்க, டோக்கன் போடுங்க, இதுதான் இங்கே ரூல்ஸ்” என்று அந்த நபர் சொல்ல,

அவனோ, “எனக்கு ரூல்ஸை உடைச்சுதான் பழக்கம். இப்போ இங்கே உங்க டாக்டர் வரணும், ரைட் நவ்! இல்லை, உன் பல்லு உடையும்” பற்களை கடித்தபடி அடக்கப்பட்ட கோபத்துடன் கூறியதுதான் தாமதம், மறுநிமிடமே மருத்துவர் அந்த அறையில் இருந்தார்.

அவனுடைய செயலைக் கண்டு மேகாவுக்கு சங்கடமாக இருக்க, எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“வர இவ்வளவு நேரமா? வந்து பாருங்க!” கடித்து துப்பாத குறையாக மருத்துவரிடம் பாய்ந்தான்.

“இதோ சார்!” பணிவாக பேசினார். அக்னிதீரன் என்னும் பெயர், சமுதாயத்தில் அவனுக்கு இருக்கும் செல்வாக்கு, அவ்வாறு பேச வைத்தது.

“சார், இது சின்ன அடி தான். இதுக்கெல்லாம் டிரீட்மென்ட் தேவை இல்லை” என்றார் டாக்டர்.

“ஆர் யூ மேட்? உனக்கென்ன பைத்தியமா? அவ முகத்தை பாரு! வலியில எப்படி உக்கார்ந்திருக்கான்னு, நீ ஒன்னும் இல்லைனு சொல்ற?”

“சார், ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க. இல்லைனா அவர் விடமாட்டார்” மேகா டாக்டரிடம் கெஞ்ச, அவரும் நிலைமை உணர்ந்து சின்னதாக ஒரு கட்டு போட்டுவிட, அங்கிருந்து கிளம்புவதற்குள், ‘காயம் எப்பொழுது சரியாகும்? எவ்வளவு நாள் மருந்து சாப்பிட வேண்டும்? வலி இருக்குமா?’ என கேள்விகள் கேட்டு ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு மருத்துவரை ஒருவழி பண்ணிவிட்டுத் தான், அவன் மேகாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கே வந்தான்.

***
 
Last edited:

Author: Naemira
Article Title: மிருதன் 7
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top